எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூவனத்துப் பூவை!

Fa.Shafana

Moderator
அன்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விடாமல் பெய்து கொண்டிருந்தது.

அலுவலகத்தில் இருந்து வந்து குளித்து இலகுவான உடை ஒன்றை மாற்றிக் கொண்டு கீழே செல்ல எத்தனித்த யுகனைத் தடுத்தது அலைபேசி ஒலி.

"ஹலோ சொல்லு மச்சான்" என்றவனுக்கு

எதிர்ப்புறத்தில் இருந்து பதிலாக வந்த செய்தியில் திகைத்து நின்றவன் சில வினாடிகளின் பின்னர் தான் சுயம் பெற்றான்.

படபடக்கும் இதயத்துடன் தடதடவென அவன் படிகளில் இறங்க ஏன் இந்த அவசரம் எனும் விதமாகப் பார்த்துக் கொண்டு நின்ற தன் தாயிடம்

"ஆதித்யாவுக்கு ஆக்.. ஆக்ஸிடெண்ட் ம்மா. இப்போ தான் கால் வந்தது. நான் போய் பார்த்துட்டு வர்றேன்" என்றான்.

"என்னடா சொல்ற? எங்க வெச்சி ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்காம்?"

"அவன் ஆதினிய கூட்டிட்டு வரப் போய் இருந்தான் ம்மா வரும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கும். லொகேஷன் அனுப்புறேன்னு சொன்னாங்க, நான் போய் என்னன்னு பார்த்து கால் பண்றேன்"

"இரு யுகா நானும் வர்றேன்" என்று விட்டு எழுந்து சென்று மேல் சட்டையைப் போட்டுக் கொண்டு அவனுடன் சேர்ந்து கொண்டார் அவனின் தந்தை தமிழ்வாணன்.

தமிழ்வாணன் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் மனைவி சரண்யா தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்.

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் யுவஸ்ரீ. அதே ஊரில் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள்.
இளையவன் யுகன்.

வெளிநாட்டில் எம். பீ. ஏ படித்து விட்டு வந்து சொந்தமாக தொழில் ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறான்.

யுவனுடன் கல்லூரியில் படித்தவன் தான் ஆதித்யா. நடுத்தர வர்க்கத்தினர் தான் என்றாலும் யுகனின் நெருங்கிய நண்பன்.

மழை சற்றே தணிந்திருந்தாலும் வண்டியை வேகமாக செலுத்தும் அளவுக்கு இல்லை.

நண்பனுக்கு என்ன ஆனதோ? என்ற பதற்றம் இருந்தாலும் நிதானமா வண்டியைக் கையாண்டு வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர அப்போது தான் அவசர ஊர்தியும் வந்திருந்தது.

யுவன் தன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி வேகமா ஓடினான்.

சேர்ந்திருந்த பத்துப் பதினைந்து நபர்களை விலக்கிக் கொண்டு முன்னே சென்றான்.

ஆதித்யா அவனது தந்தை, தாய் என மூன்று பேரின் உயிரற்ற உடல்கள் தான் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டு இருந்தன.

அவர்களின் உடல்களைப் பார்த்த நொடி "ஆதீஈஈ" என்று அதிர்ந்து கத்த,

"சார் நீங்க யாரு?" அங்கு வந்திருந்த காவல்துறை அதிகாரி தான் கேட்டார்.

"நான் இவனோட ஃப்ரெண்ட், யுகன். இங்க யாரோ தான் இவன் ஃபோன்ல இருந்து எனக்கு கால் பண்ணி இருந்தாங்க" அழுகையை விழுங்கிய குரலில் கூறினான். ஆதித்யா மட்டும் சென்ற பயணம் என்று எண்ணியிருக்க அவனது பெற்றோரும் சேர்ந்து சென்று விபத்தில் இறந்தது அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது.

"நான் தான் சார் கால் பண்ணேன். அவங்க ஃபோன்ல எமர்ஜென்சி கான்டாக்ட்ல உங்க நம்பர் இருந்தது"
கல்லூரி மாணவன் என்று பார்த்தவுடன் கணிக்கக் கூடிய தோற்றத்தில் இருந்த ஒருவன் சொல்லிக் கொண்டு யுவன் அருகில் வர தமிழ்வாணனும் வந்து விட்டார்.

"எங்க அப்பாவோட கடை தான் அது. காலேஜ் விட்டு வந்து நைட் கடை மூடும் வர இங்க தான் இருப்பேன். இன்னைக்கு மழைல பிசினஸ் அவ்வளவா இல்லைன்னு கடைய மூடலாம்னு பேசிட்டு இருக்கும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆச்சு" அவன் தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

"எப்பிடிப்பா ஆக்ஸிடெண்ட்டாச்சு? நீ பார்த்தியா?" தமிழ்வாணன் கேட்டார்.

"ஆமாங்க சார். கடை வாசல்ல சேர் போட்டு உட்கார்ந்து ரோட்டுல போற வர்ற வண்டிகள தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.

கொஞ்சம் வேகமாத் தான் அந்த கார் வந்துச்சு, ப்ரேக் பிடிக்கல்ல போல சார், திடீர்ன்னு அந்த மரத்துல மோதிடுச்சு" என்று அவன் கூற

"இவன் ஸ்பீடா தான் வண்டி ஓட்டுவான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டானே ப்பா" என்றான் யுகன்.

"மோதின வேகத்துல தலை, நெஞ்சுன்னு அடிபட்டிருக்கும் போல சார். அந்த அம்மாவுக்கு உயிர் இருந்தது. முதல்ல அவங்கள தான் வெளிய எடுத்தோம் ஆனா உடனே இறந்துட்டாங்க.

அப்புறம் முன்னாடி இருந்தவங்க டெட் பாடிய தான் ரொம்ப கஷ்டப்பட்டு வெளிய எடுத்தோம்"

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவசர ஊர்தியும் கிளம்பியது.

விபத்துக்குள்ளான வண்டியில் இருந்த கைபேசிகள் மற்றும் இதர பொருட்களை ஒரு பையில் போட்டுக் கொடுக்க அவற்றை தமிழ்வாணன் வாங்கி தங்கள் வண்டியில் வைத்துக் கொண்டார். முழுமையாக உடைந்து தான் இருந்தன அவை.

அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தான் உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதைத் தொடர்ந்து செல்லவென வண்டியில் ஏறியவனுக்கு தான் சட்டென்று ஆதினியின் நினைவு வந்தது.

"அப்பா, ஆதினிய கூட்டிட்டு வரத் தான் ஆதித்யா போறேன்னு சொன்னான். அப்போ அவ எங்க?" யோசனையுடன் கேட்டு விட்டு மீண்டும் அந்தக் கடை அருகே ஓடினான்.

கூடி இருந்தவர்கள் அங்கே தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அந்த வண்டில மூனு பேர் தான் இருந்தாங்களா?" பொதுவாக அவர்களைப் பார்த்து கேட்க,

"ஆமா, ஏன் கேட்கிறீங்க?"

"இல்ல அவங்க பொண்ணு வெளியூர்ல காலேஜ்ல படிக்கிறா அவளக் கூட்டிட்டு வரத் தான் போனாங்க" யோசனையாகக் கூறிக் கொண்டே அந்த இடத்தை சுற்றி கண்களை சுழற்றினான்.

"அவ இங்க தான் இருக்கணும்னு தோனுது. ப்ளீஸ் கொஞ்சம் தேடிப் பார்க்கலாமா?" என்று அவர்களுடன் யுகன் பேசிக் கொண்டே சற்று நகர்ந்து செல்ல,

தமிழ்வாணன் வண்டி அருகில் சென்று தான் வைத்த பையை எடுத்துப் பார்க்க கைபேசிகள் இருந்தன.

"யுகன் இங்க பாரு" என்று கூறியபடி வந்தார்.

"என்னப்பா?"

"இந்த பேக்ல ஃபோன் இருக்கு. அதுல இது பொண்ணுங்க யூஸ் பண்ற ஃபோன் கவர் மாதிரியே இருக்கு பாரு" என்று ஒன்றை எடுத்து நீட்ட ஆதினி அங்கே இருப்பது உறுதி ஆகிவிட்டது.

"ஆதினி.. ஆதினி.. எங்க இருக்க?" என்று இவன் அழைத்துக் கொண்டே முன்னேற அங்கிருந்தவர்களும் ஒவ்வொரு பக்கமும் தேட ஆரம்பித்தனர்.

அடித்துப் பெய்த மழையால் மின்சாரம் வேறு தடைப்பட்டிருந்தது.

"ஆதினி.. ஆதினி" என்று அழைத்தபடியே தேடத் துவங்கினர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்றுத் தொலைவு வரை நடந்து சென்ற யுகனின் கண்களில் வீதி ஓரமாக இருந்த பெரிய மரம் ஒன்று கண்ணில் படவே ஏதோ உள்ளுணர்வின் உந்துதலால் அங்கே விரைந்தான்.

மூச்சிறைக்க ஓடிச் சென்று மரத்தைச் சுற்றிப் பார்க்க, மரத்தின் பின்புறம் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள் ஆதினி.

மழையில் நனைந்தபடி பிரம்மை பிடித்தவள் போன்று அவள் அமர்ந்திருந்த தோற்றமே அவன் மனதைக் கலங்க வைத்தது.

"ஆதினி.. ஆதினி இங்க பாரு. இங்க பாரு ஆதினி" அருகே சென்று தோள்களில் தட்டி அழைத்தும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

"ஏய்.. ஆதினி இங்க பாரு யுகன் வந்திருக்கேன். இங்க பாருடா. ஏதாவது பேசு" என்று வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்துத் தூக்கி நிறுத்த சுற்றம் உணர்ந்தவள் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.

"வண்டி ஆக்ஸிடெண்ட்.. அவங்க எல்லாம் எங்க? எனக்கு பயமா இருக்கு"
அண்ணா, அம்மா, அப்பா எல்லாரும் வந்திருந்தாங்க. நீங்க அவங்களப் பார்த்தீங்களா? அவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல. எனக்கு பயமா இருக்கு" என்று கூறி முடிய அவன் பதில் கூற நேரம் கொடுக்காமலே மயங்கி அவன் கைகளில் விழுந்தாள்.

"ஆதினி ஏய் என்னாச்சு?"
என்றவனுக்கு அவள் மயங்கி இருப்பது புரிய கைகளில் ஏந்திக் கொண்டு வீதிக்கு வந்தான். தூரத்தில் இருந்து அவனைக் கவனித்தவர்களும் ஓடி வந்து விட்டார்கள்.

"என்னாச்சு யுகன்? இவ எங்க இருந்தா?" என்று அவனது தந்தையும்

"இவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல" என்று அங்கிருந்தவர்களும் மாறி மாறிக் கேட்க,

"அந்த மரத்துக்குப் பின்னாடி பிரம்ம பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்தா. நான் பேசவும் ஆக்ஸிடெண்ட்னு சொல்லிப் பயந்து அழுதவ மயங்கிட்டா" என்று பதில் கூறிக் கொண்டே விரைந்து வண்டியை அடைந்தான்.

"புள்ள மழைல நனைஞ்சும் இருக்கு. சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போங்க சார்" என்றார்கள் அங்கிருந்தவர்கள்.

அவளைப் பின் இருக்கையில் கிடத்தி விட்டு ஓட்டுனர் இருக்கைக்கு வந்தான்.
தமிழ்வாணனும் வந்து ஏறிக் கொள்ள மருத்துவமனையை நோக்கி வண்டி விரைந்தது.

அரசு மருத்துவமனையில் கட்டண அறைப் பகுதியில் ஒரு தனி அறையில் ஆதினியை அனுமதிக்க முதலுதவி அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்து எழுந்தவளிடம் ஏதேதோ பொய்கள் கூறி மறுபடியும் தூங்க வைத்துவிட்டார்கள்.

இரவு பன்னிரண்டு மணியளவில் மருத்துவமனையில் இருந்த தன் தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் யுகன்.

காலையில் கண் விழித்து எழுந்தவுடன் தன் பெற்றோரையும் தமையனையும் தான் கேட்டாள் அவள்.

"அவங்க வேற வார்டுல இருக்காங்கம்மா நீ போய் ஃப்ரஷ்ஷாகிட்டு வா. ஏதாவது சாப்டணும்ல"

"இல்ல ஆண்ட்டி எனக்கு அம்மா, அப்பாவ பார்க்கணும் கூட்டிட்டுப் போங்க பிளீஸ்"

குழந்தை போல கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தவளை சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் சரண்யா.

"யுகன் வந்ததும் டாக்டர் கிட்ட கேட்டுட்டு நாம போகலாம்டா. நீ முதல்ல சாப்பிட வா. உடம்புல அங்க இங்க சிராய்ப்பு இருக்கு, அதுக்கு டேப்லெட் கொடுத்திருக்காங்க. சாப்பிட்டா தான் அதைக் குடிக்கலாம்" என்று கூறி அவளை குளியலறைக்குள் அனுப்பி வைத்தார்.

தமிழ்வாணனுடன் காலையில் வந்த சரண்யாவிடம் ஆதினியைப் பொறுப்புக் கொடுத்து விட்டு, தந்தையும் மகனும் உடல்களை பொறுப்பெடுப்பதற்கான வேலையில் இறங்கி விட்டார்கள்.

விபத்து குறித்த விசாரணைகள், அதற்கான அலுவல்கள் முடிந்து உடல்கள் இவர்களின் கைக்கு வரும் நேரத்தில் சரியாக அவர்கள் குடி இருந்த வீட்டு உரிமையாளர் வந்து சேர்ந்தார்.

"இங்க பாருங்க சார். இவங்க வாடகைக்கு இருந்தாங்கன்னு அங்கயே உடல்கள வைக்கணுமா? ஏன் கேட்குறேன்னா எங்க அம்மா, அப்பா அந்தக் காலத்து ஆட்கள். உடல அந்த வீட்டுக்கு கொண்டு வர விடாதன்னு ஒரேடியாக சொல்றாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியல"
தயங்கியபடி கூறி முடித்தார்.

"இல்லை.. பரவாயில்லை சார், நாங்க எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறோம். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. எங்களுக்கு உங்க நிலமை புரியுது. பெரியவங்க சொல்றாங்க நீங்களும் அவங்கள மீறி எதுவும் செய்ய முடியாதில்லையா? இவங்கள தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க யாராவது கேட்டா எங்க நம்பர கொடுங்க" என்று அலைபேசி எண்களை அவரிடம் கொடுத்தார் தமிழ்வாணன்.

"என் நிலமைய புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்" என்று கூறி விட்டு அவர்களுடனே இருந்து கொண்டார் அவர்.

"நீங்க இங்கயே இருங்கப்பா, நான் போய் ஆதினியையும் அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன்" என்று விட்டு அவள் இருந்த அறையை நோக்கி நகர்ந்தவனுக்கு
அவளிடம் என்னவென்று கூறி சமாளிப்பது என்ற சிந்தனையே மனதில்.

கதவை மெதுவாகத் தட்ட சரண்யா தான் வந்து திறந்தார்.

"என்னாச்சு யுகன்?" என்றவருக்குப் பதில் கூற முன்,

"நான் அப்பா, அம்மாவ பார்க்கணும் என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ்" என்றபடி அவன் அருகில் வந்தாள் ஆதினி.

"அது வந்து ஆதினி.." என்றவனுக்கு வார்த்தைகள் வெளியே வருவேனா என்று சண்டித்தனம் செய்தன.

"என்ன? என்னாச்சு? அவங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல? நீங்க என்ன சொல்ல வந்தீங்க? ஆண்ட்டி என்னன்னு சொல்ல சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு" என்று அவள் அடுக்கிக் கொண்டே போக திணறிப் போனார்கள் தாயும் மகனும்.
 

Fa.Shafana

Moderator
மூவரின் உடல்களும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

யுகன் தனக்கென சொந்தமாகக் கட்டி முடித்திருந்த வீடு அது. தமிழ்வாணன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தது.

புதுமனையில் பூஜைகள் நடைபெற முன்பு அந்த வீட்டில் இறுதி அஞ்சலிக்காக உடல்களை வைக்க வேண்டாம் என அயலவர்கள் எத்தனை தடுத்தும் கேட்காமல் தன் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டான் யுகன்.

வெளியூர் இருந்த ஆதினியின் உறவினர்களுக்கு முன் தினம் இரவே தகவல் தெரிவித்து இருந்தனர்.

அவளது பெற்றோருக்கு கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. தூரத்து உறவினர்கள் தான். அதில் ஒருவர் ஆதித்யா மூலம் யுகனுக்கு பழக்கம். அவரைத் தொடர்பு கொண்டிருந்தான்.

அன்று மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருந்தன.

யாருடனும் பேசாமல் சடலங்களின் அருகே அமர்ந்து அவற்றின் முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள் ஆதினி.

'ஏன் இப்பிடி பண்ணினீங்க? என்னத் தனியா தவிக்க விட்டுட்டு நீங்க மூனு பேரும் சேர்ந்தே போய்ட்டீங்களே! நான் மட்டும் இருந்து என்ன பண்ணப் போறேன்? போகும் போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல?'
மனதிற்குள் மூவரிடமும் மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள்.

சரண்யா வந்தவர்களை கவனிக்க, யுவஸ்ரீ அவளருகில் தான் அமர்ந்திருந்தாள். அனாதரவாக அவள் அமர்ந்திருந்த கோலமும் அழுது வீங்கிய கண்கள் பிரதிபலித்த வலியும் அனைவரையும் அனுதாபமாகப் பார்க்க வைத்தன.

ஆதித்யா மற்றும் அவனது தந்தையுடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று வருவோரைக் கவனிப்பது இறுதிச் சடங்குகளுக்கான வேலைகள் என பம்பரமாகச் சுற்றினாலும் யுகனின் கவனம் ஆதினியிலும் இருந்தது.

மருத்துவமனையில் வைத்து உண்மையைக் கூற வீரிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் மயங்கி விழுந்து, எழுந்தவள் தான் அடுத்து ஒரு வார்த்தை பேசவும் இல்லை கண்களில் அந்த வெறித் பார்வை நீங்கவும் இல்லை.

"அம்மா வேலையா இருப்பாங்க அக்கா, நீங்க ஆதினி கூடவே இருங்க ப்ளீஸ். லோன்லியா ஃபீல் பண்ணுவா. அவ ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் சொல்லல்லை, அவங்க யாரும் வரவும் இல்லை" என்று கூறி இருந்தான்.

யுகன் கூறியதும் வந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள் யுவஸ்ரீ. ஆனால் அதைக் கூட உணராமல் தான் இருந்தாள் ஆதினி.

நேரம் நெருங்க உடல்களை மயானத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகினர்.

அப்போதும் அமைதியாக வெறித்த பார்வையுடன் இருந்தவளைப் பார்த்து அப்படியே விட்டால் அவளது மனநிலை பாதிக்கப்படையும் என்று உணர்ந்து அவளருகே வந்தான் யுகன்.

தோள்களைத் தட்டி அழைத்தும் அவள் பேசாதிருக்கவும், முந்தைய நாள் இரவு போல தூக்கி நிறுத்தினான்.

"ஆதினி" என்று அவளைப் பிடித்து உலுக்கி,

"இங்க பாரு. ஏன் இப்பிடி இருக்க? கடைசியா அவங்க முகத்த பார்க்க வேணாமா உனக்கு? அவங்க நிரந்தரமா நம்மள விட்டுப் போகப் போறாங்க" என்க சுயம் பெற்றவள்
வீரிட்டு அழ ஆரம்பித்தாள்.

அணைத்துக் கொண்டு நின்ற யுவஸ்ரீயிடம் "கொஞ்சம் அழட்டும் விடுங்க க்கா" என்று விட்டுச் சென்றான்.

ஆதித்யாவினதும் அவனைப் பெற்றவர்களதும் இவ்வுலக வாழ்வு முற்றுப் பெற்று ஒரு வாரம் கடந்து விட்டது.

ஆனால் ஆதினி? மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது அவள் தான்.
ஊண் உறக்கம் இன்றியும் இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டும் தான் இருந்தாள்.

வெகு சிரமப்பட்டு சரண்யா தான் ஊட்டி விடுவது. இரண்டு மூன்று கவளம் உண்பதுடன் அடுத்து மறுத்து விடுவாள்.

இறுதிச்சடங்கு முடிய வந்தவர்கள் கலைந்து செல்ல அடுத்த நாளே தமிழ்வாணனின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

ஊரில் இருந்து வந்தவர்கள் ஆதினியை தங்களுடன் செல்ல அழைக்கவும் இல்லை அழைத்தாலும் அவளை அனுப்பி வைக்கும் எண்ணத்தில் யுகன் குடும்பத்தினரும் இல்லை.

அன்று அவளுக்கு மாற்றுடை வேண்டும் என்று யுவஸ்ரீயின் உடைகளைக் கொடுக்க அவை அவளுக்கு அளவில் பெரியதாக இருந்தது.

"யுகன் அவளுக்கு ட்ரெஸ் வேணும். நாம அவங்க வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரலாமா?"

"இல்லை அக்கா வேணாம். பக்கத்துல கடைல ரெண்டு மூனு ட்ரெஸ் இப்போதைக்கு வாங்கிக்கலாம் "

"அவ குடும்பத்தையே காவு கொடுத்திருக்கா இப்போ புது ட்ரெஸ் வாங்கினா இங்க யாராவது ஏதாவது சொல்லுவாங்கல்ல.."

"ஏன்க்கா நீங்க வேற? டெலிவரி அப்போ அம்மா இறந்து போன குழந்தைக்கு பழைய ட்ரெஸ் தேடியா போடுவாங்க இல்லைல்ல? குழந்தைக்கு புதுசா வாங்கி வைச்சத தானே போடுவாங்க? அது போல தான் இதுவும்னு நினைச்சுக்கங்க. இப்போ அவங்க வீட்டுக்கெல்லாம் போக முடியாது அதனால தான் சொல்றேன்" என்றான்.

"சரிடா நான் கடைக்குப் போய் வாங்கிட்டு வர்றேன்"

"வாங்க நான் ட்ராப் பண்றேன்"

"இல்லை நீ இங்க பாரு நான் மாமா கூடப் போய்ட்டு வர்றேன்" என்றவளிடம் பணத்தை எடுத்து நீட்ட அவள் முறைத்துப் பார்த்து,

"இவர் பெரிய ஆள், வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்க பணம் கொடுக்குறார்" என்க

"ஓகே சாரி. ஏதோ ஒரு யோசனைல தெரியாம பணத்த நீட்டிட்டேன் நீங்களே வாங்கிட்டு வாங்க தாயே" என்று விட்டான் புன்னகையுடன்.

வாங்கி வந்த உடை என்ன வகை, என்ன நிறம் என்று கூட தெரிந்திருக்காது ஆதினிக்கு.

சொன்னதை செய்தாள், கொடுத்ததை உடுத்தினாள், ஊட்டி விட்டதை உண்டாள், தூக்கம் கண்களைத் தழுவினால் அவளை அறியாமலே தூங்கி விடுவாள். அந்த ஒரு வாரமாக அதுவே வழக்கமாகி இருந்தது.

அன்று இரவு உணவு வேளை முடிய அங்கே அமர்ந்திருந்த ஆதினியிடம் பேச்சுக் கொடுத்தார் சரண்யா.

"ஆதினி.. ஆதினி"

"ம்ம்ம்.." என்று நிகழ்வுக்கு வந்து திரும்பி அவரைப் பார்த்தாள்.

"நாளைக்கு நான் முக்கியமான ஒரு வேலையா காலேஜுக்குப் போகணும். அங்கிள், யுகன் ரெண்டு பேரும் ஆஃபீஸுக்கு போய்டுவாங்க நீ இங்க தனியா இருக்க வேணாம். மார்னிங் யுவஸ்ரீ வீட்டுக்கு கொண்டு போய் விடுறேன் அங்க இருக்கியா? ஈவினிங் நான் வந்து கூட்டிட்டு வருவேன்" என்றார்.

"ம்ம்ம்.. ஓகே ஆண்ட்டி" என்றவளுக்கு சரண்யா சொன்னது எதுவும் புத்திக்கு உறைக்கவில்லை என்பதே உண்மை.

அடுத்து ஏதாவது பேசுவாளா என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த தமிழ்வாணனுக்கும் சரண்யாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

உதட்டை சுளித்து தோள்களைக் குலுக்கிக் கொண்டு எழுந்து சென்றார் தமிழ்வாணன்.
அதிர்ச்சியில் இருந்து வெளி வர கொஞ்சம் நாளாகும் அது வரை அவள் போக்கில் விட்டுப் பிடிக்கலாம் என்று ஆரம்ப நாட்களில் பேசிக் கொண்டவர்களுக்கு
அவளின் இந்நிலையை என்னவென்று சரி செய்வது எனும் யோசனை இல்லாமலும் இல்லை.

அடுத்த நாள் காலையில் சரண்யா கூறியபடி தயாராகி யுவஸ்ரீ வீட்டிற்குச் சென்றாள். மாலை வரை அங்கே இருந்து விட்டு சரண்யாவுடனே வீடு வந்து சேர்ந்தாள்.

விசை பொம்மை போல இயங்கிவள் ஒரே ஒரு மாற்றமாக

"என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம்ல ஆண்ட்டி?" என்றிருந்தாள்.

"ஏன்டா அப்பிடி சொல்ற? ஒரு சிரமமும் இல்லை. நீ எதையும் யோசிக்காத சரியா?"

"இல்லை ஆண்ட்டி, உங்க வேலைக்கு இடைல மார்னிங் என்ன ட்ராப் பண்ணி இப்போ பிக்கப் பண்ணிட்டு வர்றீங்க பாருங்க இதெல்லாம் சிரமம் தானே? வீட்டுக்கு போயும் வேலை இருக்கும்ல"

"இல்லைடா இன்னைக்கு சேர்வன்ட் வந்திருக்காங்க. எனக்கு காலேஜ் லீவுன்னு அவங்க ரெண்டு, மூனு நாள் ஊருக்கு போய் இருந்தாங்க. வீட்டு வேலை, வெளி வேலை எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க கூடவே சமையலுக்கும் ஹெல்ப் பண்ணுவாங்க. நீ அதெல்லாம் பற்றி ஒன்னும் யோசிக்காத. ஃப்ரீயா இரு. எங்களுக்கு அது போதும்" என்றார்.

அவள் மௌனம் கலைந்து அந்தளவு பேசியதே சற்று நிம்மதியாக இருந்தது அவருக்கு.

ஆனால் அவளுக்கு பத்தோடு பதினொன்றாக அதுவும் மனதிற்கு பாரமாகிப் போனது.

அன்றிரவு தன் அறையில் அலுவலக வேலையாக இருந்தவன் வேலை முடிய சற்று காற்று வாங்கவென மடிக்கணினியை மூடி வைத்து விட்டு உப்பரிகைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.

இதமான குளிர் காற்று வருடிச் செல்ல கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

சற்று நேரம் அப்படியே நின்றவன் உள்ளே செல்லத் திரும்பும் போது தான் கவனித்தான் முற்றத்தில் இருந்த இருக்கையில் ஆதினி அமர்ந்திருப்பதை.

"இந்த டைம்ல எதுக்கு வெளிய போய் உட்கார்ந்திருக்கா?" என்ற முனுமுனுப்புடன் வேகமா இறங்கி அவளை அடைந்தான்.

"ஆதினி தூங்காம இங்க என்னடா பண்ற? டைம் என்னன்னு தெரியுமா?" என்றவனை ஏறிட்டவள் கண்கள் கண்ணீரால் பளபளத்தன.

"என்னடா என்னாச்சு? ஏன் இங்க உட்கார்ந்திருக்க?"

"தூ..க்கம் வரல்லையே" என்றவளுக்கு துக்கம் வந்து தொண்டையை அடைத்தது.

அவளுக்குத் துணையாக அவளருகில் அமர்ந்து கொண்டான். பௌர்ணமியை நெருங்கிய நிலவொளியும் மேனி வருடும் இளந்தென்றலும் என இதமான ஏகாந்த இரவு அது. ஆனால் அருகருகே அமர்ந்திருந்தவர்கள் மனங்கள் புயலில் சிக்கிய சருகாக நைந்து போய் இருந்தன.

கேட்கவும், சொல்லவும், பகிரவும் என நிறைய விடயங்கள் இருவருக்கும் இருந்தாலும் மௌனமே ஓங்கி வளர்ந்தது கடந்து சென்ற அந்த நிமிடங்களில்.

"அன்னைக்கு என்னை கூட்டிட்டு வர அண்ணா மட்டும் தான் வர்றதா சொன்னார். சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அம்மா, அப்பா வர்றத சொல்லாம இருந்தாராம்"

அவளாகவே ஆரம்பித்தாள். அவள் மனதில் இருப்பவை வெளியே வந்தால் கொஞ்சம் மனம் சாந்தமாகும் என்று தெரிந்தும், அவளிடம் கேட்டு வலுக்கட்டாயமாக அவளைப் பேச வைத்து வருந்த வைக்க வேண்டாமென எண்ணி இருக்க அவளாக கூற ஆரம்பிக்கவும் அவனுக்குள் ஒரு ஆறுதல்.

அவளைப் பேசத் தூண்டும் விதமாக,

"என் கிட்ட கூட சொல்லல்லையே. ஆதினிய கூட்டிட்டு வரணும் ரென்ட்டுக்கு கார் ஒன்னு எடுத்தேன்னு மட்டும் தான் சொன்னான்"

"ம்ம்.. ஆனா அண்ணா கூட அம்மா, அப்பாவும் வர ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. லஞ்ச் அங்கயே முடிச்சிட்டு, பக்கதுல கார்டனுக்கும் போய்ட்டு தான் கிளம்பி வந்தோம். ஆனா சந்தோஷமா ஆரம்பிச்ச நாள் அன்னைக்கு அப்பிடி முடிஞ்சிருக்க வேணாம்.

கார்ல ப்ரேக் பிடிக்கல்லைன்னு அண்ணா சொல்லவும், நான் என்னன்னு உணர முன்ன பக்கத்துல இருந்த அம்மா
கதைவை திறந்து என்னைப் பிடிச்சு வெளிய தள்ளி விட்டுட்டாங்க.

கீழ விழுந்த நான் எழுந்து பார்த்தது கார் போய் அந்த மரத்துல மோதினத தான். கண்ணெல்லாம் இருட்டி மயக்கம் வந்திச்சு எனக்கு. அப்புறம் கண் முழுச்சது நீங்க வந்து பேசினது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை.

எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க போகும் போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம். எனக்குன்னு யாருமே இல்லாம தனியா இருக்குறது கொடுமையா இருக்கு.."

என்றவளை மறுத்து யுகன் ஏதோ கூற முற்பட அவளே தொடர்ந்தாள்.

எனக்கு க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு யாருமே இல்லை. நான் சிக்ஸ்த் படிக்கும் போது இங்க வந்துட்டோம். ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ பிரிஞ்சி வந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இங்க ஸ்கூல்ல புதுசா வந்த என் கிட்ட ஆரம்பத்துல யாருமே நெருங்கிப் பழகல்லை. எனக்கும் அதுவே பழகிடுச்சி.

காலேஜ் போனா நிறைய ஃப்ரெண்ட்ஸ் கூட பழகலாம்னு நினைச்சேன். ஆனா அதுவும் முடில"

"ஏன்? அங்க எல்லாருமே புதுசா வர்றவங்க தானே நீ மட்டும் புதுசுன்னு ஒதுக்கி வைக்க முடியாதே!"

"இல்லை ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க தான் போகப் போக அவங்க பழக்க வழக்கங்கள் எனக்குப் பிடிக்கல்லை. கண்டிக்க ஆள் இல்லைன்னு பாய் ஃப்ரெண்ட்ஸ், அடல்ட் வீடியோன்னு அவங்க உலகமே வேறயா இருந்தது.

எனக்கு அதெல்லாம் பிடிக்கவே இல்லை. அவங்க கூட சேர்ந்தா நம்மளையும் அதுக்குள்ள இழுத்து விட்டுடுவாங்கன்னு நானே ஒதுங்கி இருந்தேன்.

அப்போ கூட அம்மா, அப்பா, அண்ணான்னு தான் என் வட்டம் இருந்தது. இப்போ தனியா யாருமே இல்லாத அனாதையா இருக்கேன் பாருங்க. இப்பிடியே செத்துப் போய்டலாம்னு தோனுது"

"ஏய் என்ன பேச்சுப் பேசுற? நீ இப்பிடி நினைக்கிறதே தப்பு. கடைசியா அவங்க உன்னையாவது காப்பாத்தணும்னு நினைச்சு தான் தள்ளி விட்டு இருக்காங்க. நீ தப்பிப் பிழைச்சு வந்து இப்பிடி பேசிட்டு இருக்க"
என்றவன் குரலில் கண்டிப்பு இருந்தது.

"இல்லை உங்களுக்குப் புரியாது. என்னால உங்க எல்லாருக்கும் கூட சிரமம் தானே? மார்னிங் ஆண்ட்டி உங்க அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு காலேஜ் போனாங்க. அதெல்லாம் அவங்களுக்கு வீண் அலைச்சல் தானே? நாங்க இருந்த வீட்டுக்கும் என்னால போக முடியாது. அடுத்து என்ன செய்றதுன்னு புரியவே மாட்டேங்குது எனக்கு" என்றாள்.

கண்ணீர் உடைப்பெடுத்து கன்னத்தில் வழிந்தது.

ஏதேதோ எண்ணங்கள் அவளை ஒன்றுடன் ஒன்று சம்மதம் இல்லாமல் பேச வைக்கிறது என்று புரிந்து கொண்டான்.

"நீ எதுவும் யோசிக்காத ஆதினி. உனக்கு நாங்க இருக்கோம்டா. நீ இப்பிடி சொன்னது தெரிஞ்சா எங்க அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுவாங்க. உனக்கு இது காலேஜ் லாஸ்ட் இயர் தானே, ஃபர்ஸ்ட் உன் படிப்ப முடி அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிக்கலாம் சரியா?

நாளைக்கு நீங்க இருந்த வீட்டுக்குப் போய் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வீட்ட அவங்களுக்கு ஹேண்ட் ஓவர் பண்ற வேலை இருக்கு. இப்போ எழுந்து வா உள்ள போகலாம்"

"அதையும் தான் யோசிச்சிட்டு இருந்தேன்"

"எதையும்?" என்றான் கேள்வியாக.

"சொந்த வீடா இருந்தா அவங்க உடல்கள கடைசியா அந்த வீட்டிலயே வைச்சிருக்கலாம். நானும் அவங்க கடைசியா இருந்த வீட்ல இருந்திருப்பேன்ல"

"இப்போ கூட அப்படித்தான் இருக்கப் போற" என்று விட்டான் அவள் புலம்புவதைக் கேட்க முடியாத ஆற்றாமையில்.

"என்ன?"

"அது.. அந்த வீட்டுக்கு நாங்க போகும் போது நீயும் தானே வருவ" என்று சமாளித்தவன் எழுந்து விட்டான்.

"நீங்க போங்க நான் வர்றேன்"

"இப்பவே ரொம்ப லேட் இதுக்கு மேல முழிச்சிட்டு இருக்காத. வா உள்ள போய் தூங்கு" என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் ஆதினி குடும்பத்தினர் இருந்த வாடகை வீட்டிற்குச் சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்து கொடுத்து விட்டு வர இரவாகியது.

உதவிக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு யுகனும் சரண்யாவும் ஆதினியுடன் சென்றிருந்தார்கள்.

ஆதினியின் உடமைகளையும் இன்னும் சில குறிப்பிட்ட பொருட்களையும் தளபாடங்களையும் எடுத்துக் கொண்டு உடைகள் மற்றும் மீதமிருந்த பொருட்களை எல்லாம் ஆசிரமங்களுக்குக் கொடுக்க சொல்லி ஆதினி கூற அதே போல செய்தார்கள்.
 

Fa.Shafana

Moderator
நாட்கள் அதன் போக்கில் நகர நிதர்சனத்தை வலிக்க வலிக்க ஏற்றுக் கொள்ளப் பழகி இருந்தாள். யுகனின் வீட்டில் கொஞ்சமாக ஒன்ற ஆரம்பித்தாள்.

கலகலத்த பேச்சு, சிரிப்பு என்று இல்லை தான் அவளிடம், அதே நேரத்தில் வெறித்த பார்வையும் நீடித்த மௌனமும் இல்லை. தேவைக்குப் பேசினாள். தேவையைக் கூடப் பேசினாள்.

விடுமுறையை நீடித்திருந்தவள் கல்லூரி செல்லும் நாளும் வந்தது.
அடுத்த இரண்டு நாட்களில் அவள் செல்ல வேண்டும் என்றிருக்க, அன்று மாலை யுகன் அலுவலகம் இருந்து வந்திருந்தான்.

அந்த நேரத்தில் அவனைக் கண்டதும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது அவளுக்கு.
குளித்து உடை மாற்றி வந்தவன் தேநீர் அருந்தி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் அவனருகில் சென்று

"என்னை அந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?" என்றாள்.

அவள் கேட்டதும் புரிந்து விட உடனடியாக,

"ம்ம்.. வா போகலாம்" என்றான்.

சரண்யாவிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். வண்டி வேண்டாம் நடந்தே போகலாம் என்று அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி நடந்தே சென்றனர்.

நுழைவாயிலைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். சற்றே பெரிய வீடு தான். பெருவாரியான வேலைகள் முடிந்து சிற்சில வேலைகள் மட்டுமே மீதமிருந்தன.

அன்று இருந்த மனநிலையில் எதையும் கவனிக்கவில்லை அவள். இன்று நுழையும்போதே ஒவ்வொரு இடமாக பார்வையை ஓடவிட்டாள்.

"அழகான அம்சமான வீடு" என்று கூறிப் புன்னகைத்தாள்.

"இங்க தான்ல கடைசியா அவங்க இருந்தாங்க?" என்று கேட்டு விட்டு
மூவரின் உடல்களும் வைக்கப்பட்டிருந்த முன் கூடத்தில் வெகு நேரமாக நின்றவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் யுகன்.

"இங்க வரணும்னு இன்னைக்கு தான் நினைச்சியா இல்லை முன்னாடியும்.."

அவனைத் தொடரவிடாமல் சட்டென்று பதில் வந்தது.

"டெய்லி நினைப்பேன். ஆனா நீங்க ஆஃபீஸ்ல இருந்து வர லேட்டாகும். அங்கிள், ஆண்டிக்கு வீண் அலைச்சல்னு தான் சொல்லாம இருந்தேன்.
ஆனா காலேஜ் போக முன்ன இங்க ஒரு தடவை வந்துடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். இன்னைக்கு நீங்க சீக்கிரம் வரவும் தான் கேட்டேன்" என்றாள் நீண்ட விளக்கமாக.

"இதுல என்ன இருக்கு ஆதினி சொல்லியிருந்தா நாங்க யாராவது கூட்டிட்டு வந்துருப்போம்ல? நானே பல தடவை கேட்க நினைச்சேன் தான் ஆனா கேட்கல்லை" என்றான்.

சற்று நேரம் வீட்டைச் சுற்றிப் பார்த்து அங்கே இருந்துவிட்டுக் கிளம்பினார்கள்.

"வீட்டுல இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. கார்டன் வேலை எல்லாம் அப்பிடியே இருக்கு. நீ நெக்ஸ்ட் டைம் வரும் போது வேலை எல்லாம் முடிஞ்சிருக்கும்"
என்றான்.

"அப்போ நெக்ஸ்ட் டைம் இங்க தான் வரணுமா?" என்றாள் பதிலுக்கு.

"ம்ம்.. பார்க்கலாம்" என்றதோடு அவள் கல்லூரி செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து பேச்சு திசை மாறியது.

அடுத்த இரண்டாவது நாள் சரண்யாவும் யுகனும் ஆதினியை அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டார்கள்.

அவளுக்கான பொருட்கள் அனைத்தும் வாங்கிக் கொடுத்து பணமும் கொடுத்து விட்டு வந்தனர். தினமும் காலை இரவு என இரண்டு நேரங்களிலும் அழைத்துப் பேசியவர்கள் நேரம் கிடைக்கும் போது அங்கே சென்று அவளைப் பார்த்து விட்டு வருவதும் உண்டு. சில நேரங்களில் குழந்தையுடன் யுவஸ்ரீயும் செல்வாள்.

இப்படியே அவளைத் தங்களில் ஒருத்தியாக உணர வைக்க முழு முயற்சி செய்து இறுதியில் வெற்றியும் கண்டனர். அவளும் தன் கூட்டுக்குள் இருந்து சிறிது சிறிதாக வெளியே வந்திருந்தாள். கல்லூரியில் தினமும் நடப்பவற்றை ஒன்று விடாமல் சரண்யாவிடமும் யுவஸ்ரீயிடமும் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு முன்னேற்றம் இருந்தது.

இறுதித் தேர்வுகள் முடிந்து அவள் மீண்டும் இங்கு வந்து விட்டாள். பெறுபேறுகள் வரும் வரை வீட்டிலே இருந்தவளை ஒருநாள் தடாலடியாக தன் நிருவனத்திற்கு அழைத்துச் சென்றான் யுகன்.

"எத்தன நாளைக்கு வீட்டிலயே இருப்ப? போரடிக்கும்ல? இங்க நாலு பேர் கூட பேசுவ பழகுவ, ட்ரைனிங் பீரியட் மாதிரி நினைச்சுக்க" என்று விட்டான்.

ஆனால் பெறுபேறுகள் வந்த உடனே சான்றிதழ்களை வைத்து தன் நிருவனத்திலேயே அவளது வேலையை நிரந்தரமாக்கி விட்டுத் தான் ஓய்ந்தான்.

அடுத்து சில நாட்களில் அவனது திருமணம் பற்றிக் கேட்ட தமிழ்வாணன் சரண்யாவிடம் பேசிவிட்டு அடுத்த நாள் ஆதினியை அழைத்துக் கொண்டு அவனது வீட்டிற்குச் சென்றான்.

இங்கு வந்த அடுத்த வாரம் அவள் கேட்டதற்கு வீட்டில் வேலை நடக்கிறது வேறு ஒருநாள் கூட்டிச் செல்கிறேன் என்றவன் மறந்தது போல இருக்க அவளும் மறுமுறை கேட்டிருக்கவில்லை.
வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்தது, ஒழுங்குபடுத்திய பின்னர் தான் அவளை இங்கே அழைத்து வர வேண்டும் என்று எண்ணியிருந்தான் அவன்.

இதோ இப்போது அழைத்து வந்தவன் நுழைவாயிலைத் திறந்து விட அத்தனை அழகாக இருந்தது அந்த வீடும் சுற்றுப்புறச் சூழலும்.

முன் முற்றத்தில் புல் வளர்க்கப்பட்டு பூஞ்செடிகள் நடப்பட்டிருந்தன. ஒரு ஓரமாக இருக்கைகளும் ஊஞ்சலும் இருந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். கனகச்சிதமாக அன்றே வீட்டில் தங்கிவிடலாம் எனுமளவிற்கு அத்தனை நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது வீடு.

அவளை முன் கூடத்தில் தாமதிக்க விடாமல் அழைத்துக் கொண்டு மேல் மாடிக்குச் சென்றவன் உப்பரிகையை அடைந்தான். அங்கிருந்து கீழே பார்க்க இன்னும் அழகாக இருந்தது.

"சூப்பரா இருக்கு. வீடு, கார்டன் அதுல ஊஞ்சல்னு ரசிச்சு ரசிச்சு செட் பண்ணி இருக்கீங்க" குதூகலக் குரலில் கூறினாள்.

"ம்ம்.. நான் கட்டிக்கப் போறவளுக்கு பிடிச்ச மாதிரி பார்த்துப் பார்த்து செய்தேன். பூக்கள் நிறைஞ்ச கார்டனும் அதுல ஊஞ்சலும் இருக்கணும்னு அவ அடிக்கடி சொல்லிட்டு இருப்பாளாம். அவளோட அண்ணா என்கிட்ட சொல்லி இருக்கான். அப்படித்தானே? உனக்குப் பிடிக்கும் தானே?" என்று கேட்க அதிர்ந்து விழித்தாள் ஆதினி.

"என்ன.. என்ன சொல்றீங்க?"

அகல விரிந்த விழிகளுக்குள் தன்னை ஆழப் புதைத்துவிடும் எண்ணம் போல் அவனுக்கு! பதில் கூறாமல் அந்த விழிகளையே பார்த்திருத்தான்.

அவனது பார்வையில் தானும் கட்டுண்டு நின்றாள் அவள்.

எத்தனை நிமிடங்கள் கடந்தனவோ வீதியில் சென்ற வாகனம் எழுப்பிய ஒலியில் சுயம் பெற்றனர் இருவரும்.

"சொல்லு ஆதினி. நான் சொன்னது சரி தானே? உனக்கு இதெல்லாம் பிடிக்கும்ல? கூடவே என்னையும் பிடிக்குமா? என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னும் சொல்லு ஆதினி" என்றான்.

பதிலறியா கேள்வியை எதிர் கொண்ட மொழியறியா மழலையாக நின்றிருந்தாள்.

"உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத உங்கிட்ட மட்டும் தான் நான் சொல்லாம இருந்தேன். எங்க அப்பா, அம்மா, அக்கா, மாமான்னு எல்லாருக்கும் தெரியும். உங்க வீட்டுலயும் பேசித் தான் இருந்தோம். உன் காலேஜ் முடிய உன்கிட்ட கேட்டுட்டு கல்யாணம் பண்ணிக்குறேன் அதுவரை யாரும் எதுவும் சொல்லாதீங்கன்னு சொல்லி வெச்சிருந்தேன்.

அதான் இப்போ கேட்குறேன் என்னை கல்யாணம் பண்ணிக்குறியா?" என்க

"அது.. அது எப்படி நான்"

"என்ன நீ?"

"இல்லை எனக்குத் தெரியல்லை"

"என்னைப் பிடிக்காதா உனக்கு?"

"ரொம்பப் பிடிக்கும்" பட்டென்று வந்தது பதில்.

அவள் பதிலில் புன்னகை மலர, "இன்னும் என்ன ஆதினி? அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ல?

இந்த வீடு நம்மளுக்காகத் தான் கட்டுறேன்னும் எல்லாருக்கும் தெரியும். ஆதித்யாக்கிட்ட உன் டேஸ்ட் எப்பிடின்னு கேட்டுக் கேட்டுத் தான் ஒவ்வொன்னும் செய்வேன்.

ஆக்ஸிடெண்டுக்கு முதல் நாள் கூட இங்க வந்துட்டுத் தான் போனான். நீ மறுக்க மாட்டேன்னு எங்க எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைல உன்னோட வீடுன்னு உரிமையா வருவான்.

அதனால தான் வீட்டு ஓனர் வந்து பேசவும், அங்க நம்ம வீட்டுல வைக்காம இங்க வைக்கலாம்னு அப்பாக்கிட்டப் பேசி இங்க எடுத்துட்டு வந்தேன். அவங்க கடைசியா இங்க இருந்தே போகட்டும்னு ஒரு எண்ணம். நீ வாழப் போற வீட்டுல இருந்து அவங்களுக்கு விடை கொடுத்தோம்னு ஒரு திருப்தி இருக்கும்ல?" என்றான்.

அவனையே தான் விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதெல்லாம் சொல்லி உன்னை கட்டாயப்படுத்துறதா நினைக்காத. நினச்சாக் கூடப் பரவாயில்லை. ஆனா என்னால உன்னை யாருக்கு விட்டுக் கொடுக்க முடியாது. நாலு வருஷமா உன்னை லவ் பண்ணிட்டிருக்கேன். நீயும் திருப்பி லவ் பண்ணனும்னு சொல்ல மாட்டேன். என்னை ரொம்பப் பிடிக்கும்னு சொன்னல்ல அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் மஞ்சள் கயிறு மேஜிக் தன்னால லவ் பண்ண வைக்கும்" என்றவனைப் பார்த்து

"என்னாது?" என்றாள் ஆச்சரியமாக.

"ஆமா உண்மைய தான் சொன்னேன். கல்யாணம் பண்றவங்க எல்லாருமே லவ் பண்ணிட்டா கல்யாணம் பண்றாங்க? கல்யாணத்துக்கப்புறம் அதெல்லாம் தானா வரும். அதுவரை நான் மட்டும் லவ் பண்ணிட்டு இருக்கேன்" என்றான் தோள்களைக் குலுக்கிக் கொண்டு.

அவளோ சத்தமாக சிரித்து வைத்தாள் அவனது கூற்றிலும் உடல் மொழியிலும்.

நெருங்கி நின்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் யுகன்.

"உனக்கு சம்மதம் தானே? ஓகே சொல்லிட்டான்னு வீட்டுல சொல்றேன். நெக்ஸ்ட் மந்த் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான்.

"வேணாம்னா விடவா போறீங்க?" என்றாள் மறைமுகமாக சம்மதம் கூறி.

அவளைத் தோளோடு அணைத்து அவள் உச்சியில் முத்தம் வைத்தவன் அணைத்தபடியே கீழே அழைத்துச் சென்றான்.

அவளது பெற்றோர், தமையன், அவனின் தாத்தா என இறந்தவர்களின் படங்கள் வரிசையாக சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததை படிகளில் இறங்கும் போது தான் கவனித்தாள்.

திரும்பி அவனைப் பார்க்க அவன் இதழ்களில் புன்னகை. வந்தவுடன் அவற்றைக் கண்டு கலங்கி நின்றால் பேச வந்ததைப் பேச முடியாது போய் விடும் என்று தானே அவசரமாக மாடிக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

"அவங்க ஆசீர்வாதம் எப்போதும் நமக்கு இருக்கும்டா" என்றவன் பூஜையறைக்கு அழைத்துச் சென்றான்.

"ஃபர்ஸ்ட் டைம் நம்ம வீட்டுக்கு வந்திருக்க விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுட்டு போகலாம்" என்றான்.

அவன் சொன்னதை செய்தவள், "நீங்க டெய்லி இங்க வருவீங்க தானே?" என்றாள் அவனைக் கண்டு கொண்டதாய்.

"ம்ம்ம்.. ஆனா வீட்டு வேலை எல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டு தான் உன்னைக் கூட்டிட்டு வரணும், வரும் போது கல்யாணம் பற்றி பேசணும்னும் நினைச்சிருந்தேன்" என்றான்.

வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு முன் முற்றத்திற்குச் சென்று ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அவளருகில் அமர்ந்தவன் அவள் கையோடு தன் கை கோர்க்க, அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

அவன் மனது மகிழ்ச்சியில் நிறைய காதலாய் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

தனித்து நின்ற தருணத்தில் அவளைத் தவிக்க விடாதவன், காதல் வைத்துக் காத்திருந்த கந்தர்வனவன் கை சேர்ந்தது பூவனத்துப் பூவை!
 
பூவனத்துப் பூவை.....

பூவாய் பூத்திருந்த அவளின் வாழ்வில் புயலாய் வந்தது _ அண்ணன்
பெற்றவர்களின் இறப்பு....
பாதியாய் நொந்து போன
பாவையை யுகன் குடும்பம் பத்திரமாய் பார்த்துக் கொள்ள
பாதியில் விட்ட படிப்பையும் முடித்து புதிதாய் கட்டிய வீட்டுக்குள்
புதிதாய் பூத்த மலராய்
பூத்துக் குலுங்கும் பூவாய் _மீண்டும் புவனத்தில் பூத்த ஆதினி...
யுகனின் கையில் காதலுடன்
யுகம் யுகமாய் வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐
 

Fa.Shafana

Moderator
பூவனத்துப் பூவை.....

பூவாய் பூத்திருந்த அவளின் வாழ்வில் புயலாய் வந்தது _ அண்ணன்
பெற்றவர்களின் இறப்பு....
பாதியாய் நொந்து போன
பாவையை யுகன் குடும்பம் பத்திரமாய் பார்த்துக் கொள்ள
பாதியில் விட்ட படிப்பையும் முடித்து புதிதாய் கட்டிய வீட்டுக்குள்
புதிதாய் பூத்த மலராய்
பூத்துக் குலுங்கும் பூவாய் _மீண்டும் புவனத்தில் பூத்த ஆதினி...
யுகனின் கையில் காதலுடன்
யுகம் யுகமாய் வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐
❤️❤️❤️
உங்கள் கவி வரிகளில் லயித்து நிற்கிறேன் நான். மிக்க நன்றி சகோதரி, அன்புகள் உங்களுக்கு ❤️❤️
 
Top