எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 01

Fa.Shafana

Moderator
அசரீரியாய் ஒலித்த அலைபேசி உயிர் பெற்றவுடன் அதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்தி அத்தனை உவப்பானதாய் இல்லை தான் அவனுக்கு. இருந்தும் சந்தித்துத் தானே ஆக வேண்டும் பெற்றவராச்சே, இல்லை.. இல்லை பிறப்பிற்கு காரணமானவராச்சே. வேறு வழி இல்லை.

எதற்கு இந்தப் பயணம் தொடர்கிறது என்று புரியவே இல்லை அவனுக்கு. பதினெட்டு வருடங்கள் எந்தத் தொடர்பும் இல்லாமல் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்த உறவில் எதற்கு மீண்டும் தடை விலக்கி வழி அமைத்துக் கொள்ள வேண்டும்!

ஒரு மாதத்திற்கு முன்பு அலைபேசியில் வந்து விழுந்த குறுஞ்செய்தி ஞாபகம் வர இகழ்ச்சியாக வளைந்தன அவன் இதழ்கள்.
'அவங்க நியாயம் அவங்களுக்கு. இதுல நாம ஒன்னும் பண்ண முடியாது. கடமைய செய்துட்டு விலகிடலாம். ஆனா அப்படி விலக முடியுமா?' என்று தறி கெட்டு ஓடிய சிந்தனையைக் கலைக்கும் விதமாக அவனது காலைக் கட்டிக் கொண்டன பூந்தளிர் கரங்கள்.

வாஞ்சையுடன் குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டவனுக்கு மீண்டும் தன் தந்தையென பெயர் சொல்லப்படுபவரின் ஞாபகமே. ஒரு குழந்தைக்கு தந்தையாகி விட்டவன் தான் எனினும் சிறு வயதில் இருந்தே மனதில் படிந்த ஏக்கம் வலித்தது இன்றும்.

இரண்டு நாட்களின் பின் காலை எழுந்தவன் ஏதோ ஒரு தவிப்பு மனதில் குடி கொள்ள கனத்த இதயத்துடன் பயணத்தைத் தொடர்ந்தான்.


பதினெட்டு வருடங்களின் பின்னர் அவரை சந்திக்கப் போகிறான் 'அடையாளம் தெரியுமா? பார்த்த உடனே என்ன பண்ணுவார்?' என்று நினைத்தவன் இதழ்களில் வழமை போலவே ஒரு இகழ்ச்சிப் புன்னகை.

பிறப்புக்குக் காரணமானவரை நினைத்தாலே இப்படி ஒரு புன்னகை தான் அவனுக்கு. அடிபட்டு ரணப்பட்ட மனதின் வலி தான் இப்படி இகழ்ச்சியாக வெளிவருகிறது போலும்.

விமான நிலையத்தின் பரபரப்பு அங்கே இருந்தவர்களையும் தொற்றிக் கொள்ள படபடவென்று அடித்துக் கொண்ட மனதை பெரும் பாடுபட்டு அடக்கியவன் அவரை எதிர்கொள்ள ஆயத்தமானான்.

சில நிமிடங்களின் பின்னர் அவனது விழிகளில் விழுந்த பிம்பத்தை சரியாகக் கண்டு கொண்டவன் அவரை நெருங்க, நெறித்த புருவங்களுடன் அங்குமிங்கும் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தார் அவர் கணேஷன்.

"நான் தான் கிருபன். வாங்க போகலாம் என்றவன் பயணப் பையை தன் கைகளுக்கு மாற்றியபடி முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்தார் அவர்.

"எப்படி இருக்க கிருபா?" என்றவரை திரும்பியும் பாராது "வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம்" என்றவன் வீடு வரும் வரை வேறெதுவும் பேசவே இல்லை. அவனுக்குத் தெரிந்து தானே இருந்தது ஒரு கேள்விக்கு பதில் கூறினால் அடுத்தடுத்து கேள்விகள் வரிசையாக வரும் என்று. அவற்றுக்குப் பதில் கூற சரியான இடம் இதுவல்ல என்றும் தெரியுமே!

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு கடைசியாக இங்கே வந்தது. இன்று மீண்டும் வேறு வழியில்லாமல் வந்திருக்கும் வரவு இது. நுழைவாயில் தாண்டிய வண்டி உள்ளே சென்று நின்றது.

அந்த வீட்டைக் கண்களில் நிரப்பியபடியே வண்டியை விட்டு இறங்கினார் கணேஷன்.
இந்த வீடு அவரின் தாய் தந்தை இருவரும் கடைசி வரை வாழ்ந்த வீடு.

பயணப் பையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற கிருபன்
"உள்ள வாங்க. ஏன் அங்கேயே நின்னுட்டீங்க?" என்க
மனதின் தவிப்பு உடலில் இறங்க தளர்ந்த நடையுடன் உள்ளே சென்றார்.

"இப்பிடி உட்காருங்க. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்" என்றவன் உள்ளே செல்ல பிறந்து வளர்ந்த வீடு அன்னியமாகத் தோன்றியது அவருக்கு.

சற்றுநேரத்தில் "கிருபா, லலிதா எங்க?" என்றார் பார்வையை ஓட விட்டபடி.
அதற்குள் தேநீருடன் வந்தவன் அவரிடம் நீட்டி "குடிங்க" என்றான். புரியாமல் விழித்தவர் அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டார். அவருக்கு எதிர்ப்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் தனது தேநீர்க் குடிக்க ஆரம்பிக்க கணேஷன் எதுவும் பேசவில்லை. கோப்பைகளுடன் சமையலறைக்குள் சென்று அலசி வைத்து விட்டு வெளியே வந்தவன்

"நாங்க இப்போ இந்த வீட்டுல இல்ல. நீங்க குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க நான் லஞ்ச் டைம்க்கு வர்றேன்" என்று கூறிவிட்டுச் சென்றான்.

புரியாமல் விழித்தவர் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தார்.
வீட்டிற்குச் சென்றவன் வரவேற்பறையில் இருந்த நீள்விருக்கையில் தொப்பென்று அமர்ந்து விட அவனருகில் வந்தமர்ந்தாள் அவனது மனைவி சுபா.

"மாமா எப்பிடி இருக்கார்?" என்றவளுக்கு மௌனமே பதிலாகக் கிடைக்க "எல்லாம் சொல்லிட்டீங்களா?" என்றாள் அவனது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டே.

"இல்லடி. என்னால சொல்ல முடியல்ல. இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும் மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்னு வந்துட்டேன்" என்றான் கண்களை மூடி இருக்கையின் பின்கட்டில் தலை சாய்த்துக் கொண்டு.
"குடிக்க ஏதாவது தரட்டுமா" என்க
"வேணாம் அங்க டீ போட்டு அவருக்கும் கொடுத்து நானும் குடிச்சிட்டு தான் வந்தேன்"

"சரி போய் ரெஸ்ட் எடுங்க. நான் சமையல முடிக்கிறேன்" என்று சுபா எழுந்து செல்ல உள்ளறைக்குச் சென்று கட்டிலில் துயில் கொள்ளும் தன் மகனை அணைத்துக் கொண்டு தூங்கிவிட்டான் கிருபன்.

கணேஷனுக்கான உணவுடன் சென்றவன் அவருக்குப் பரிமாறி விட்டுத் தானும் அமர்ந்து சாப்பிட மௌனமாகவே கழிந்தது உணவு வேளை.

"ஏன் எதுவும் பேச மாட்டேங்குற கிருபா? நான் லலிதாவப் பார்க்கணும் கூட்டிட்டுட்டுப் போ இல்லைன்னா அவள இங்க அழைச்சிட்டு வா" என்று வயதையும் மீறி கணேஷன் உறும, தன் வயதுக்கே உரிய திமிருடன் பதில் கூற ஆரம்பித்தான் லலிதாவின் மகன்.

"ஏன் பேசாம இருக்கேன்னா, உங்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அம்மாவப் பார்க்கணும்னு சொல்றீங்களே, அவங்கள இத்தன நாளா மறந்து தானே இருந்தீங்க? இருக்காங்களா செத்துட்டாங்களான்னு கூட தெரிஞ்சிக்க ட்ரை பண்ணல்ல நீங்க" என்று கிருபன் குரல் உயர்த்த,

"ஏய் கிருபா என்ன பேச்சு இது?" என்று கணேஷன் கேட்க,

"அம்மா உயிரோட இல்ல. மூனு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்கன்னு சொல்றேன்" என்றவனது குரலிலும் சொன்ன செய்தியிலும் அந்த வீடே அதிர்ந்து தன் தலையில் விழுந்தது போல உணர்ந்தார் கணேஷன்.

அவனின் கூற்றை நம்பவே முடியவில்லை அவரால்.
கணேஷனுக்கு அவரின் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவர் தான் லலிதா.
ஏனோ லலிதாவுடன் மனம் ஒன்றி வாழ முடியவில்லை கணேஷனால். திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். அவர் போகும் போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார் லலிதா.


மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் வந்த கணேஷன் தன் இரட்டைச் செல்வங்களான கிருபன் மற்றும் கனிகாவைக் கூட அன்பாக ஆதரவாக அரவணைத்துக் கொள்ளவில்லை. இரண்டு மாத விடுமுறையில் வந்திருந்தவர் ஒரே மாதத்தில் கிளம்பி இருந்தார். மீண்டும் திரும்பி வந்த போது கிருபனுக்கு பத்து வயது. அது தான் கடைசியாக அவர் இங்கே வந்தது.

"நீங்க அம்மாவையும் எங்களையும் தாத்தா பாட்டிக்கிட்ட விட்டுட்டு போய்ட்டீங்க ஆனா அவங்க எங்கள வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு தெரியுமா?" என்று சில நிமிட அமைதிக்குப் பின் கேட்ட கிருபனை அமைதியாக கணேஷன் பார்க்க

"எங்களுக்கு பத்து வயசா இருக்கும் போது நீங்க வந்தப்போ தான் அம்மாவுக்கும் உங்களுக்கும் சண்ட வந்திச்சு ஆனா அதுக்கு முன்னாடி இருந்தே அம்மா கஷ்டப்பட்டாங்க. நீங்க மாசா மாசா ஒரு தொகைப் பணத்த தாத்தா பேருக்கு தான் அனுப்பிடுவீங்க. அத பாட்டி அம்மாவுக்கு கொடுக்கவேமாட்டாங்க. எங்களுக்கு ஸ்கூலுக்கு எதுவும் வேணும்னா கூட பாட்டிக்கிட்ட கெஞ்சி கூத்தாடித் தான் வாங்கணும். நாங்க வளர வளர செலவு அதிகமாக அம்மாவால சமாளிக்க முடியல்ல கார்மெண்ட் ஒன்னுல வேலைக்கு சேர்ந்தாங்க.

வீட்ட பெரிசாக்கி அழகா கட்டணும் அதுக்கு பணம் சேர்த்துட்டு இருக்குறதா ஒரு தடவ அம்மா கிட்ட சொல்லி இருந்தீங்க. அத மனசுல வெச்சிட்டு அவங்க இது எதையும் உங்க கிட்ட சொல்லல்ல உங்க அம்மா சொல்ல விடவும் இல்ல. உங்க கூட பேசணும் தான் அந்த ஃபோன் வாங்கினாங்க. அதுக்கும் பாட்டி பெரிய சண்டை போட்டாங்க. ஆனா அம்மா கனியோட விசேஷம் மாதிரி முக்கியமான விஷயம் பேச கால் பண்ணினாக் கூட நீங்க பேசாம அவாய்ட் பண்ணுவீங்க. நொந்து போய்டுவாங்க.

எங்களோட ஸ்கூல் கம்படிஷன் பத்தி சொல்றதுக்கு கனியே நிறைய தடவ எடுத்திருக்கா நீங்க பேசவேமாட்டீங்க அப்பிடியே பேசினா கூட முகத்துல அடிச்ச மாதிரி பேசுவீங்க.

அப்புறம் உங்கள விட்டு தூரமாக ஆரம்பிச்சோம். திடீர்னு ஒருநாள் வந்து ரெண்டு வாரம் இருந்தீங்க அம்மா கூட எதுக்குன்னே தெரியாம சண்ட போட்டுட்டு கிளம்பிப் போய்ட்டீங்க. எதுக்கு சண்ட போட்டீங்கன்னு தெரியாம வாரா வாரம் கால் பண்ணியே அம்மா களைச்சுட்டாங்க. அப்புறம் கால் பண்றதையே விட்டுட்டாங்க. இப்பிடியே எங்க காலம் போய்ச்சி.

நானும் கனியும் டென்த் எக்ஸாம் எழுதி ரிசல்ட் வந்தது. கனிய மேல படிக்க வைக்கத் தேவையில்லன்னு தாத்தாவும் பாட்டியும் அம்மா கூட சண்ட போட்டு வீட்டுல பெரிய பிரச்சினை. ஒரு வாரமா சண்டையும் சத்தமும் அவளோட அழுகையுமாத் தான் கழிஞ்சது. பத்து நாள் கழிச்சு அம்மா எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வீட்ட விட்டு வெளியேறினாங்க.

வாடகைக்கு ஒரு வீடு எடுத்துத் தங்கினோம். கார்மெண்ட்ல ப்ரமோஷன் கிடைச்சு சூப்பர்வைசரா இருந்தாங்க. நான் படிச்சிட்டே ஈவினிங் கடை ஒன்னுல வேலை பார்த்தேன். கனி அக்கம் பக்கத்துல இருந்த சின்ன பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுத்தா. ஒரு அளவு நல்ல வருமானம் வந்துச்சி. ரெண்டு பேரும் படிச்சி நல்ல ரிசல்ட் எடுத்து மெரீட்ல காலேஜ் சேர்ந்தோம்.

அப்போ தான் ஒருநாள் உங்க கூட அங்க வேலை பார்த்த ஒருத்தர் நீங்க அங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்குறதா சொல்லி ஃபோட்டோஸ் எல்லாம் அம்மா கிட்ட காண்பிச்சிருக்காங்க.

அம்மாவுக்கு ஏற்கனவே அப்பிடி ஒரு கெஸ்ஸிங் இருந்து தான் இருக்கு ஆனா எங்களுக்கு அது புதுத் தகவல் அன்னைல இருந்து உங்க மேல வெச்சிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பாசமும் மொத்தமா இல்லாமப் போய்டுச்சு" என்று படபடவென பேசிக் கொண்டு இருந்தவன் சற்று நிறுத்தி கணேஷனின் முகம் பார்த்தான். விழி எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

நிறுத்தத்தில் நின்று பயணத்தைத் தொடரும் தொடரூர்ந்து போல மீண்டும் படபடக்க ஆரம்பித்தான் கிருபன்.

"என்ன தான் நீங்க அப்பிடி விட்டுட்டு விலகினாலும் அம்மாவுக்கு விட முடியல்ல போல. கடைசி வரை நம்பர மாத்தாம இருந்தாங்க. அவங்க இல்லைன்னாலும் இந்த ஃபோன் அண்ட் நம்பர் ஆக்டிவ்வா இருக்கணும்னு சொன்னாங்க. எப்போவாவது நீங்க பேசுவீங்க இங்க வருவீங்கன்னு சொன்னாங்க. அதனால தான் நீங்க சிரமமே இல்லாம என் கூட பேசினீங்க இப்போ இங்க வந்தும் இருக்கீங்க" என்று அவரை உணர்வற்ற பார்வை பார்த்தவன்

"காலேஜ் முடிய நல்ல வேலைல சேர்ந்தோம். லோன் போட்டு சொந்தமா வீடு வாங்கி சந்தோஷமா இருந்தோம். ஒருநாள் திடீர்ன்னு அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம போக கனி வேலைய விட்டுட்டு அம்மாவ பார்த்துக்க வீட்டுலயே இருந்தா.
அவளுக்கு கல்யாணம் பண்ணிடவே வேணும்னு அம்மா பிடிவாதம் பிடிக்க மாப்பிள்ளை பார்த்து நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சேன்.


அடுத்து எனக்கு கல்யாணம்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. கனி வீட்டுக்காரர் தான் பொண்ணு பார்த்து கட்டி வெச்சார். என் கல்யாணம் முடிஞ்ச ஆறு மாசத்துல அம்மா இறந்துட்டாங்க" என்றவனைப் பார்த்து

"இப்போ கனி எங்க இருக்கா?" என்றார்.

"நீங்க இருந்த அதே சிங்கப்பூர்ல தான் குடும்பத்தோட இருக்கா ரெண்டு பசங்க இருக்காங்க. உங்க இளைய பையன் ட்ரைனியா போன கம்பெனில தான் வர்க் பண்றா. அவனுக்கு டீம் லீடராக் கூட இருந்தா" என்றான் இகழ்ச்சிக் குரலில்.

அடுத்து எதுவும் கேட்க முடியாமல் அவர் மௌனமாக, கிருபனே தொடர்ந்தான் அவர் கண்களில் தெரிந்த கேள்வியைக் கண்டு கொண்டு.

"எனக்கும் ரெண்டு வயசுல ஒரு பையன் இருக்கான்" என்றவன்

"உங்க ஃபோனக் கொடுங்க, புதிய இந்த சிம்ம அதுல போட்டுக் கொடுக்குறேன்" என்க அவரது கைபேசியை அவனிடம் கொடுக்க அதில் வேலையை முடித்து அவரிடம் கொடுத்து விட்டு கூடவே தன் சட்டைப் பையில் இருந்த வங்கிக் கணக்கு அட்டை ஒன்றையும் அவரிடம் கொடுத்தான்.

அவர் புரியாமல் விழிக்கவும் "சின்ன கடை ஒன்னு விலைக்கு வரவும் எடுத்து வாடகைக்கு விட்டிருக்கேன். அதோட வாடகைப் பணத்த இந்த அக்கவுண்ட்ல போட சொல்லி இருக்கேன். உங்க செலவுக்கு பணம் இதுல இருந்து எடுத்துக்கங்க" என்று கிருபன் கூற என்னவென்று புரியாத உணர்வொன்று கணேஷனைச் சூழ்ந்து கொண்டது.

"வேணாம் கிரு‌‌பா நான் ஏதாவது வேலை.." என்று ஆரம்பித்தவரை பேசவிடாமல் தடுத்து

"இயலாத வயசுல தளர்ந்து போய் வந்து இருக்கீங்க. ஏனோ தானோன்னு உங்கள விட்டு வைக்க நான் ஒன்னும் உங்க சிங்கப்பூர் பொண்டாட்டி ஜான்சி வளர்த்த பையன் இல்ல, லலிதா அம்மாவோட வளர்ப்பு. அவ்வளவு கஷ்டம் கொடுத்த தாத்தா பாட்டிக்குக் கூட இறுதிக் கடமைகளை செஞ்சவன் நான்.

அப்போ ஏன் உங்கள இங்க தனியா விடுறன்னு நீங்க கேட்கலாம். என்னோட சந்தோஷமா நிம்மதியா குடும்பம் நடத்திட்டு இருக்கா என் பொண்டாட்டிக்கு. திடீர்ன்னு வந்து குதிச்ச உங்கள என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அவளோட வர்க் லோட் (வேலைப்பளு) அதிகமாக்க நான் விரும்பல்ல. உங்களுக்கு மூனு வேள சாப்பாடு டைம்க்கு அனுப்பி வைப்பா அது மட்டும் போதும்னு சொல்லிட்டேன்" என்றவன் கிளம்பி விட போகும் அவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

வண்டியில் ஏறப் போனவன் திரும்பி நின்று "நைட்க்கு உங்களுக்கு துணைக்கு ஒருத்தர் வருவார்" என்றவனது குரலே சொல்லியது தான் கடமையில் இருந்து தவறவில்லை என.

"மருமகள.. பேரன.."

"எனக்கு எப்போ தோனுதோ அப்போ கூட்டிட்டு வருவேன்" என்றவன் வண்டியைக் கிளப்பினான்.

ஏதோ ஒரு நிம்மதி மனதை ஆட்கொள்ள கிருபனின் வண்டி நுழைவாயிலைத் தாண்டும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவர் உள்ளே வந்து அமர்ந்தார்.

தன்னிச்சையாக கைபேசியை எடுத்தவர் ஒரு மாதத்திற்கு முன்பு லலிதாவுக்கு என்று நினைத்து அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தார்.


'நான் கணேஷன். எப்பிடி இருக்க லலிதா? இங்க நான் நல்லாவே இல்ல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி வேலைல இருந்து ஓய்வு பெற்றேன். இப்போ ஆறு மாசம் முன்னாடி ஜான்சி இறந்துட்டா. இப்போ இங்க என் பசங்களுக்கு நான் பாரமா இருக்கேனாம் என்ன செய்றதுன்னே புரியல்ல' என்று முடிந்திருந்தது அந்தக் குறுஞ்செய்தி.

ஆனால் அதற்கு எந்தப் பதிலும் வராமல் போக மீண்டும் லலிதாவைத் தொடர்பு கொள்ளாது விட்டு விட்டார். ஆனால் தன்னை முதியோர் இல்லத்தில் விட திட்டமிட்டதை அங்கிருந்த மகன் சொன்ன போது பயந்து போனவர் உடனே அழைக்க கிருபன் தான் அழைப்பை ஏற்றுப் பேசி இங்கே வர வேண்டும் என்று சொன்னவரை வரச் செய்திருந்தான். அனைத்தையும் நினைத்துப் பார்த்தவருக்கு கண்ணீர் சுரந்தது.


"என் பையன் என்னை நல்லாப் பார்த்துக்குவான்" என்று முனுமுனுத்துக் கொண்டே உள்ளே இருந்த கட்டிலில் சாய்ந்து கண் மூடினார்.
 
Last edited:
கடமை தவறேன்.....

கடமையிலிருந்து தந்தை தவறினாலும் கடமையாய் தாயின் சொல் படி கடமையாற்ற மகனாய்....
கடமை தவறேல்........
👏👏👏👏 வாழ்த்துக்கள் சகி 🤩🤩💐💐💐
 

Fa.Shafana

Moderator
கடமை தவறேன்.....

கடமையிலிருந்து தந்தை தவறினாலும் கடமையாய் தாயின் சொல் படி கடமையாற்ற மகனாய்....
கடமை தவறேல்........
👏👏👏👏 வாழ்த்துக்கள் சகி 🤩🤩💐💐💐
நன்றி நன்றி சகோதரி!
உங்கள் கவி வரிகள் பார்த்து மிக்க மகிழ்ச்சி! ❤️❤️
 
Top