எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 34

S.Theeba

Moderator
வரம் 34

சலங்கையொலி போன்ற மெல்லிய சிரிப்பொலி தூக்கத்திலிருந்து அவனை எழுப்பியது. மெதுவாகக் கண்களைத் திறந்தவன் தன்னருகில் மனைவியைத் தேடினான். படுக்கையில் அவளைக் காணாது அதிசயித்துப் போனான். நேரத்தைப் பார்த்தான். ஆறு மணியாகியிருந்தது. 'என்னடா அதிசயம் என் ஷனாவா இவ்வளவு நேரத்துக்கு எழுந்தது. அவளது சிரிப்புச் சத்தமா என்னை எழுப்பியது.' என்று நினைத்தவன் அறையில் சுற்றுமுற்றும் தேடினான். அவளைக் காணவில்லை. மீண்டும் சிரிப்பொலி கேட்கவும் பால்கனியில் அவள் இருப்பதை அறிந்து அங்கே சென்றான். அந்த அதிகாலை வேளையிலேயே குளித்துத் தயாராகியிருந்தாள். பனியில் குளித்த ரோஜாப் பூப்போல அவனுக்குத் தோன்றியது.


நடந்துகொண்டே யாருடனோ அலைபேசியில் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தவள் அதே மலர்வுடன்,
"குட்மார்னிங்" என்றாள்.
"குட்மார்னிங், என்ன விசேஷம். இவ்வளவு நேரத்துக்கே எழுந்து குளித்து ரெடியாகியிருக்காய். எங்கேயாவது போகப் போகின்றாயா?"
"ஹி ஹி... அது... அதுவந்து... நீங்க நேற்று சொன்னிங்களா... எழுந்ததும் எக்ஸர்சைஸ் செய்யலாம் என்று. அதுதான் வேளைக்கே எழுந்து குளிச்சிட்டன். இனிமேல் எப்படி செய்ய முடியும். ஹி..ஹி.."
"பெரிய கில்லாடிதான் நீ." என்றான்.


வர்ஷனாவுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. தன்னைப் பெரும்பாடுபட்டு அடக்கினாள். எனினும் அவள் சிரிப்பைக் கண்டு கொண்டவன் "என்ன சிரிப்பு... புத்திசாலித்தனமாகத் தப்பிவிட்டதாக நினைப்போ?" என்றான் புன்னகையுடன்.
"இல்லை இல்லை. வருணோடுதான் பேசிக் கொண்டிருந்தேன். இன்று எஸ்கேப் ஆன கதையை அவனிடம் சொன்னேனா... அதுக்கு மாமா உன்னையும் வேர்க்கவுட் பண்ண வைச்சு ஜிம்பாய் ஆக்கிட ஆசைப்படுறார் போல என்றான். அதை நினைச்சேன்." என்றாள்.



அவள் சிரிக்கும்போது அவளின் சிறிய இதழ்கள் பிரிந்து வெண்முத்துப் பற்கள் பளிச்சிட்டன. பிரிந்த அவளின் இதழ்கள் அவனை முத்தமிட அழைப்பது போலவே அவனுக்குத் தோன்றியது.


திகைத்துப்போய் அவளையே கிறக்கமாகப் பார்த்து நின்றான். அவனறியாமலே அவன் கை நீண்டது. ஒரு விரலால் அவளது பட்டான உதடுகளை வருடினான். அவனின் இந்த செய்கையால் அவளுக்கு மூச்சடைத்தது. அவனது ஒற்றை விரலுக்கே இத்தனை சக்தியிருக்கின்றதா...?


அந்த நேரத்தில் பூஜை நேரத்துக் கரடி போல அவள் கையில் இருந்த அலைபேசி சிணுங்கியது. அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டவன் தன் விரலை விலக்கிக் கொண்டு படபடவென்று உள்ளே சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


சற்றுமுன் இருந்த உற்சாகமும் சந்தோசமும் வடிந்து போய்விட்டது வர்ஷனாவுக்கு. அவன் தன் உதடுகளை ஒற்றை விரலால் வருடியபோது அவள் உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்ப்பு பரவியதே. அந்த சுகத்தை அனுபவிக்க விடாமல் கரடியாக யார் அழைத்தது என அலைபேசியைக் கோபத்துடன் பார்த்தாள். அது அடித்து ஓய்ந்திருந்தது. மஞ்சுதான் அழைத்திருந்தாள். அவளுக்கு மனதிற்குள் திட்டிக்கொண்டே தானே அழைப்பை ஏற்படுத்தினாள்.


"என்ன மகாராணிக்கு இன்றுதான் நேரம் கிடைச்சுதா? அதிசயமாய் ஹோல் எல்லாம் பண்ணுறாய்"
"கேட்படி கேட்ப. கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆச்சுது. ஒரு தடவையாவது என் நினைப்பு வரலைதானே. காதல் மயக்கத்தில் சொக்கிப் போய் இருப்பது நீதானே."
"நீ மட்டும் இருபத்து நாலு மணிநேரமும் என்னை நினைச்சுக் கொண்டா இருந்தாய். ஒரு நாளைக்குப் பத்துத் தடவைக்கு மேல் எனக்குக் ஹோல் பண்ணினாய்தானே. என் கோபத்தைக் கிளறாதடி."
"செல்லக்குட்டி, நீ புதுசாய் கல்யாணம் ஆகியிருக்காய். உன்னவர் கூட எந்த நேரத்தில் எப்படி ரொமான்ஸ் பண்ணுவாய் என்று எனக்குத் தெரியாதுதானே. கரடியாய் நான் வேறு ஹோல் பண்ணி உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்றுதான்..."
"இப்ப மட்டும் என்ன செய்தாயாம்."
"அச்சச்சோ... வர்ஷூக்குட்டி, இப்பவும் உங்க ரொமான்ஸை டிஸ்டர்ப் பண்ணிற்றனா? நான் வேண்டுமென்றால் இப்போ கட் பண்ணிற்று அப்புறம் ஹோல் பண்ணவா?"
"போடி எருமை... அதவிடு. ஆமா இந்த டைமில் என் நினைவு எப்படிடி வந்திச்சு."
"ஹி ஹி... இன்று... என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க அதுதான்..."
"ஹேய் என்னடி திடீரென? லவ் எதுவும்...?"
"சீ சீ... இது வீட்டில் பேசினாங்க. நேற்று ஈவினிங்தான் அவர்கள் வீட்டுக்கு வரப்போவதையே கூறினார்கள். இன்னும் முடிவாகல."
"அதுதானே, என் மஞ்சுவாவது லவ் பண்ணுவதாவது... லவ் எந்தக் கடையில் எத்தனை கிலோ கிடைக்கும் என்று கேட்பாளே."
"கலாய்க்காதடி. எனக்கும் லவ் பண்ணத் தெரியும். பட், என் மனசுக்குப் பிடிச்சவர் அமையல."
"ம்ம். சும்மா சொன்னேன்டி செல்லம். ஆமா மாப்பிள்ளை எந்த ஊர்?"
"இதே ஊர்தான். சொந்தமாய் இரும்புக் கடை வைச்சிருக்காராம். இன்று நீ வேளைக்கே இங்கே வந்திடனும்."
"ஓகே டி செல்லம். கட்டாயம் வந்திடுறேன்."


காலையுணவு நேரமானதால் எல்லோருமே சாப்பாட்டறையில் கூடினர். குளித்து முடித்து அலுவலகம் செல்லக் கீழே வந்த யதுநந்தனும் எல்லோருடனும் வந்து அமர்ந்தான். எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது இதுதான் சரியான நேரம் என்று நினைத்தவள்,
"அத்தை, மாமா என் ஃபிரண்ட் மஞ்சுவைப் பொண்ணு பார்க்க இன்று ஈவினிங் வாறாங்களாம். போய் வரவா...?"
"அதுக்கென்ன தாராளமாய் போய்வாம்மா... ஈவினிங் எத்தனை மணிக்குப் போகணும்?"
"மஞ்சு வீட்டிற்கு ஐந்து மணிக்குப் போனால் போதும் அத்தை. ஆனால்..."
"என்னம்மா, என்ன விஷயம்? சொல்லு."
"பக்கத்து வீடுதானே என் வீ... அம்மா வீடும். நான் நேரத்துக்கே போய் விட்டு அங்கிருந்து மஞ்சு வீட்டிற்குப் போகவா...?
"இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்கணுமா? உன் விருப்பம் போல போயிட்டு வர வேண்டியதுதானே. தாராளமாக போயிட்டு வாம்மா" என்றார் சந்திரமதி.


தன் கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் என்ன என்று மௌன பாஷையில் கேட்டான். போய் வரவா என்று கண்ணசைவில் கேட்டாள். அவனும் அதற்கு போய் வா என்று கண்ணசைவிலேயே பதிலளித்தான்.


தன் பெற்றோரின் வீட்டிற்கு வந்தவள் எல்லோரையும் ஒரு வழி பண்ணி விட்டாள். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் வருணியனோடு மல்லுக்கு நின்றாள். தன் தந்தையின் மடியில் படுத்துக் கதை பேசினாள். மாலதியின் பின்னாலே சென்று அவளை சமைக்க விடாமல் கொஞ்சுவதும் கிள்ளுவதுமாக சேட்டைசெய்து கொண்டேயிருந்தாள். "கல்யாணமும் ஆச்சு. இன்னும் சில நாளில் ஒரு குழந்தைக்கும் தாயாகப் போறாளாம். ஆனால், இன்னும் குழந்தையாகவே இருக்காளே." என்று அலுத்துக் கொண்டாள் மாலதி.
"நான் கிழவியானாலும் அரசுக்கும் மாலதிக்கும் எப்பவும் குழந்தைதான். நான் சொன்னது சரிதானே அப்பா?" என்றாள்.
"என் வர்ஷூக்குட்டி சொல்வது சரிதான். எப்பவும் நமக்குக் குழந்தைதான் அவள்." என்றார் கலையரசன்.


மாலையில் மஞ்சு வீட்டிற்குச் சென்றவள் அவளை அலங்கரிப்பதில் இருந்து எல்லா வேலைகளையும் ஓடி ஓடிச் செய்தாள். மாலையில் பெண் பார்க்க வந்தவர்களுக்கு மஞ்சுவைப் பிடித்து விட்டது. மஞ்சுவிற்கும் மாப்பிள்ளையை ரொம்பப் பிடித்துவிட்டது. அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. கூடிய சீக்கிரமே நிச்சயதார்த்தத்துக்கும் நாள் பார்த்துச் சொல்வதாகக் கூறிச் சென்றனர். வர்ஷனாவுக்கும் மிகவும் சந்தோஷமாகிவிட்டது. தன் தோழியின் வாழ்வில் சந்தோஷம் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்பது வர்ஷனாவின் பிரார்த்தனை.


எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தவள் யதுநந்தனின் வருகைக்காகக் காத்திருந்தாள். காலையில் அம்மா வீட்டிற்குப் போக அவள் கேட்கவும் காரில் டிரைவருடன் அனுப்பி வைத்தனர். மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்குப் போகும் வழியில் அவளை வந்து அழைத்துச் செல்வதாக யதுநந்தன் கூறியிருந்தான். எனவே அவன் வரும் வரை காத்திருந்தாள்.


இரவு எட்டு மணிக்கு வந்தான் யதுநந்தன். அவர்கள் இருவரையும் அங்கேயே இரவு உணவை உண்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், தான் வர்ஷனாவை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வெளியில் வேலை நிமித்தமாகச் செல்ல வேண்டும் என்றும் இன்னுமொரு நாள் விருந்துக்கே வருவதாகக் கூறி விடைபெற்றான்.


அவன் கூறியது போலவே அவளை வீட்டின் வெளி கேட்டிலேயே இறக்கி விட்டவன், உள்ளே செல்லுமாறு அவளிடம் கூறிவிட்டு அவளிடம் வேறு எதுவுமே பேசாது காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். எங்கே செல்கிறான், எப்போது வருவான் என்று எந்தத் தகவலையும் கூறவில்லை. ஏதோ அவசரம்போல. திரும்பி வந்ததும் கேட்டுக் கொள்வோம் என்று நினைத்தவள் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.


சாப்பிடாமல் சென்றுவிட்டானே என்று மனம் கவலை கொண்டது. வரவேற்பறை சோஃபாவில் அவனுக்காகக் காத்திருந்தவள் தன்னையறியாமல் அங்கேயே உறங்கி விட்டாள். முழிப்பு வந்ததும் இங்கே ஏன் படுத்திருக்கின்றேன் என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் யதுநந்தனுக்காகக் காத்திருந்தது நினைவு வந்தது. நேரத்தைப் பார்த்தாள். அதிகாலை மூன்று இருபது எனக் காட்டியது கடிகாரம். 'அவன் வந்து அறைக்குச் சென்று தூங்கியிருப்பான் போலும். நான் இங்கே தூங்குவதைப் பார்த்ததும் என்னை எழுப்பாமல் சென்று விட்டான்' என்று நினைத்தவள் எழுந்து தங்கள் அறைக்குச் சென்றாள். அங்கே அவனைக் காணவில்லை. அப்படியென்றால் அவன் இன்னும் வரவில்லையா? ஒருநாளும் அவன் இப்படித் தாமதமாக வந்ததில்லையே. பதட்டமானவள் அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள். ஆனால் அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்ன இது என்று எதுவும் புரியாது அயர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டாள். அவனைக் கவனிக்கவும் உணவைப் பரிமாறவும் இவள் இருக்கின்றாள் என்ற நினைவில் தங்கள் மகன் பற்றிய கவலையின்றி நிம்மதியாகத் தூங்கச் சென்றுவிட்டனர் சந்திரமதியும் ஈஸ்வரும். அவர்களை எழுப்பி அவன் இன்னும் வரவில்லை என்ற தகவலைக் கூறுவோமா என்று யோசித்தவள் அவர்கள் அறை நோக்கிச் சென்றாள். இடையிலேயே, நிம்மதியாக உறங்கும் அவர்களை ஏன் குழப்ப வேண்டும். யதுவுக்கு ஏதாவது முக்கிய வேலையோ என்னவோ. முடிந்ததும் வந்துவிடுவான் என்று தனக்குத்தானே சமாதானம் சொன்னவள் திரும்பித் தங்கள் அறைக்கு வந்தாள்.


நேரம் செல்லச் செல்ல அவளின் பதட்டம் பயமாக மாறியது. நேரம் நான்கு பதினைந்து ஆகவும் பயம் அதிகரித்துவிட்டது. சிவாவுக்கு அழைத்துப் பார்ப்போம் என்று அவள் அலைபேசியை எடுத்தாள். அந்த நேரத்தில் அவளது அலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. தெரியாத எண்ணாக இருக்கவும் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தாள். ஒருவேளை யதுதான் தன் அலைபேசியில் சார்ஜ் இல்லாததால் வேறு எண்ணிலிருந்து அழைக்கின்றான் போலும் என்று நினைத்தவள் அழைப்பை ஏற்று "ஹலோ யது" என்றாள்.
 
Top