கோதை பால்கனியில் அமர்ந்து தனது மகள் துளசியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
"துளசிமா பையன் பெயர் சூர்யா வயசு இருபத்தி எட்டு ஐடி துறையில் வேலை பார்க்கிகிறார். வயசு வித்தியாசம் சரியா இருக்கும்.
விசாரிச்ச வரைக்கும் பையன பத்தி நல்ல விதமா சொல்றாங்க. போட்டோ பாருடா உனக்கு பிடிச்சு இருந்தா பேசலாம். உன்னோட விருப்பம் தான் அம்மாக்கு முக்கியம். உன்னோட அப்பா இருந்தா உன்னோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி எப்படி நல்ல வாழ்க்கை அமைச்சு தருவாரோ அதே மாதிரி உன் அப்பா இல்லாத குறை தெரியாத அளவுக்கு அம்மா உனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்வேன் டா தங்கம்"
"அம்மா இதை நீங்க என்கிட்ட சொல்லனுமா? எனக்கு உங்கள நல்லா தெரியும். உங்களுக்கு தெரியும் எனக்கு எது நல்லது கெட்டதுனு. நான் போட்டோ கூட பார்க்க மாட்டேன். நீங்க பார்த்தா போதும். உங்களுக்கு பிடிச்சா சொல்லுங்க நான் கல்யாணம் செஞ்சுப்பேன்"
"அம்மா உன்னைவிட எனக்கு யாரு நல்லது நினைக்க போறாங்க"
கோதை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கோதையின் கணவர் சக்திவேல் மிகவும் நல்லவர். மனைவியை அன்பு கடலில் நனைத்து பிரியமாக இருந்தார்.
அவர்களின் அன்புக்கும் காதலுக்கும் சாட்சியாக பிறந்த அன்பு மகள் துளசியின் மேல் இருவரும் உயிரையே வைத்திருந்தனர்.
தனியார் கம்பெனியில் மேனேஜர் பதவியில் இருந்த சக்திவேல் மனைவி மற்றும் மகளை எந்த குறையும் இல்லாமல் நன்கு கவனித்துக்கொண்டார்.
சக்திவேல் அடிக்கடி கோதையிடம் நமக்கு ஒரு பொண்ணு போதும் நம்மளோட ஒட்டுமொத்த அன்பு அக்கறை எல்லாம் நம்ம பொண்ணுக்கு தான் கொடுக்கணும்.
அவளை நல்ல படிக்க வைக்கணும் நல்ல இடத்தில் கல்யாணம் செஞ்சி கொடுக்கணும் என்பார்.
"உங்க பொண்ணுக்கு மூணு வயசு தான் ஆகுது அதுக்குள்ள இவ்வளோ யோசிக்கணும்மா?" என்பார் கோதை சிரித்து கொண்டே.
கோதை மற்றும் சக்திவேல் தம்பதிகளின் திருமண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே.
துளசியின் மூன்றாவது வயதில் ஒரு வாகன விபத்தில் சக்திவேல் இறந்துவிட்டார்.
சக்திவேல் மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் காதல் மனைவி கோதையிடம் "எனக்கு தெரியும் அவ்வளவு தான் நான் சாக போறேன்னு"
கோதையின் கண்களில் தாரை தாரையாக நீர் வடிந்தது.
"எனக்கு தெரியும் என்னோட இறப்பை உன்னால் தாங்க முடியாதுனு.
ஆனால் நீ வாழ்ந்து தான் ஆகணும். நம்ம பொண்ணு துளசிக்கு அம்மாவா அப்பாவா இருந்து நீதான் அவள நல்லா பார்த்துக்கணும். என்னை தேடி அழுவா ஆனா வளர வளர புரிஞ்சுப்பா.
அவளுக்காக நீ வாழனும்" என்றவர் கண்டிப்பாக கோதை துளசிக்கு தாயாக தந்தையாக நல்லபடியாக கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கையில் உயிர் நீத்தார்.
கோதையால் சக்திவேலின் இறப்பை தாங்கவே முடியவில்லை. வெறும் நான்கே ஆண்டு திருமண வாழ்க்கை. கையில் மூன்று வயது பெண் குழந்தை.
இருபத்தி ஐந்து வயதில் மூன்று வயது குழந்தையுடன் இளம் விதவை. மூன்று நாட்கள் அழுது தீர்த்துவிட்டார்.
துளசிக்காக வாழணும் திடமான மனதுடன் எழுந்தவர் முகத்தை கழுவி அடுத்து என்ன என யோசித்தார்.
வருமானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர் கையில் இருந்த சேமிப்பில் தையல் இயந்திரம் வாங்கி பிளவுஸ் மற்றும் சுடிதார் தைத்து தர தொடங்கினார்.
இரவு முழுவதும் துணி தைப்பவர் பகல் பொழுது துளசியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனது படிப்பை தொடர்ந்தார்.
பல இன்னல்கள் தூக்கமின்மை, படிப்பு,வேலை தந்தையை தேடி அழும் மகள் இளம் விதவை பல கழுகு கண்கள் மற்றும் ஓநாய்களிடமிருந்து தன்னை பாதுகாத்து படித்து கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்துவிட்டார்.
கோதையை பொருத்த மட்டில் முடியாது என்று எதுவும் கிடையாது. அவரது உயிர் மூச்சு தன் மகள் துளசி மட்டுமே மகளை பொறுப்போடு கண்ணும் கருத்துமாக வளர்த்தார்.
துளசியும் நன்கு படித்து தாய் சொல் தட்டாத மகளாகவே இருந்தாள். அவளை பொருத்தவரை அவளின் அம்மா அப்பா ஹீரோ ஹீரோயின் கடவுள் எல்லாமே கோதை தான்.
கோதையின் வார்த்தைக்கு துளசியின் அகராதியில் மறுபேச்சு கிடையாது.
துளசி தூங்கியவுடன் எழுந்து சக்திவேலின் மாலையிட்ட புகைப்படம் அருகே சென்ற கோதை "நம்ம துளசி கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா. அவ வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்.
நீங்கதான் தெய்வமா இருந்து எங்களை வழி நடத்தணும். நீங்க எங்க கூட இல்லாதது மட்டும் தான் குறை" என நினைத்தபடி அங்கிருந்து அகன்றார்.
திருமணத்துக்கு முதல் நாள் 'துளசிம்மா மண்டபத்துக்கு கிளம்பணும் அதுக்கு முன்னாடி அப்பாகிட்ட வேண்டிக்கோ" என்றார் கோதை.
துளசி மற்றும் சூர்யாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. திருமணம் முடிந்த துளசி நேரே சூர்யாவின் வீட்டிற்கு சென்றுவிட்டாள். எல்லா பெண்களை போல பல வண்ண கனவுகளுடன் கணவன் வீட்டில் அடி எடுத்து வைத்தாள் துளசி.
சூர்யா துளசி தம்பதிகள் வாழ்க்கையை இனிதே துவங்கினர். துளசியின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது. உண்மையில் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாக துளசி நினைத்தாள்.
அடிக்கடி அன்னையை சென்று பார்த்துவிட்டு வருவாள். ஆறு மாதம் வரை வாழ்க்கை அமைதியாக சென்றது.
அன்று கிச்சனில் வேலை முடித்துவிட்டு பெட்ரூமில் நுழைந்தவள் திகைத்தாள் கண்கள் பார்த்த காட்சி சரி தானா என கண்களை கசக்கி பார்த்தாள்.
ஆம் அவள் ஆருயிர் கணவன் சூர்யா குடித்துக் கொண்டிருந்தான்.
துளசி பதறிப்போய் "என்னங்க நீங்க குடிப்பீங்களா?" என கேட்டது தான் தாமதம் சுருண்டு போய் தரையில் விழுந்து கிடந்தாள்.
ஆம் சூர்யா துளசியை அறைந்துவிட்டான். துளசியால் நம்பமுடியவில்லை தன் கணவன் தன்னை அடித்து விட்டானா?
என்னதான் நிச்சயம் செய்த திருமணம் என்றாலும் திருமணம் முடிந்து அவனுடன் காதல் வாழ்க்கை வாழ ஆரம்பித்தவளால் தாங்க முடியவில்லை.
"ஆமாடி.. நான் குடிப்பேன் சிகரெட் பிடிப்பேன். அதை கேட்க நீ யாரு?" என கோபத்தோடு கத்தினான் சூர்யா.
கண்களில் வடிந்த நீரை துடைக்க கூட தோன்றாமல் திகைத்து நின்றாள் துளசி. தன்னிடம் அதிர்ந்து கூட பேசாமல் தன்னை உள்ளங்கையில் வைத்த தாங்கிய தாயின் முகம் தோன்றியது. அமைதியாக சென்று பால்கனியில் நின்றாள்.
இதுவே தொடர்கதை ஆனது. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் துளசியை அடிக்க தொடங்கினான் சூர்யா.
தாய் தன் முகத்தை வைத்தே தன் வாழ்க்கை சரி இல்லை என கண்டு கொள்வார் என்பதால் அங்கு செல்வதை தவிர்த்தாள்.
ஒரு கட்டத்தில் தன்னால் முடியவில்லை என்றபோது மாமியாரிடம் வந்து அனைத்தையும் தெரிவித்தாள். அவர் கூறிய பதில் மேலும் அதிர்ச்சி அடைந்தாள்.
'ஆம்பளைன்னா அப்படி இப்படி தான் இருப்பான். நீதான் பொறுமையா இருந்து அவனை திருத்தணும். அத விட்டுட்டு சும்மா தொட்டதுக்குலாம் என்கிட்ட வராதே. இஷ்டம் இருந்தா இங்க அமைதியா இரு இல்லன்னா போய்கிட்டே இரு" என்றார் கோபமாக.
துளசிக்கு அடுத்து என்ன என ஒன்றும் புரியவில்லை. அன்னையால் இதை தாங்க முடியாது அவங்க அமைச்சு குடுத்த வாழ்க்கை சரியில்லன்னா தாங்கமாட்டாங்க. "என் கஷ்டம் என்னோட போகட்டும்" என அனைத்து கவலைகளையும் தனக்குள் விழுங்கி கொண்டாள்.
திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை வெறும் ஆறு மாதம் மட்டுமே அனுபவித்தாள். அதன்பின்பு வெறும் அடி உதை தான்.
தாய் அலைபேசியில் அழைக்கும்போது சிரித்து பேசி நடித்துவைத்துவிடுவாள். மூன்று வருடம் இப்படியே சென்றது.
ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தாள் கூட இரண்டு ஆண்டுகளாக தன்னை விலகி நிற்கும் கணவனை பற்றி துளசிக்கு ஒன்றும் புரியவில்லை.
கணவனிடம் சென்று பேசவோ எதுவும் கேட்கவோ பயமாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அடிக்கும் கணவனிடம் என்ன பேச?
இதில் குழந்தை இல்லை என படுத்தி எடுக்கும் மாமியார் மாமனார். கணவன் தன்னை நெருங்காமல் குழந்தை எங்கிருந்து வரும். மேலும் அன்னையிடம் சென்று வரதட்சனை வாங்கிட்டு வா என சில நாட்களாக கொடுமைபடுத்த தொடங்கினர்.
மன சஞ்சலம் தாங்காமல் அன்னைக்கு அலைபேசியில் அழைத்தாள். மகளின் குரலில் ஏதோ சரியில்லை என தோன்றியது தாய் உள்ளத்திற்கு. தாய் அறியாத சூல் உண்டா? என்ன பிரச்சனை என கேட்டும் சொல்ல மறுத்துவிட்டாள் துளசி.
"துளசிமா என்ன கஷ்டம் என்ன பிரச்சனை நாளும் அம்மா இருக்கேன். அதை மட்டும் என்னைக்கும் மறந்திடாதே" என்றவாறு முடித்தார் கோதை.
அன்று கணவன் தன் அலைபேசியை மறந்து வீட்டில் விட்டு செல்ல ஏதோ தோன்ற அதை எடுத்து ஆராய்ந்த துளசி திகைத்தாள். கணவன் தன்னை விட்டு விலகி இருப்பதன் காரணம் கண்டு கொண்டாள்.
தெரிந்துகொண்ட விஷயத்தை அவளால் தாங்கவே முடியவில்லை. அலைபேசியில் இருந்த புகைப்படம் மற்றும் மெசேஜ்களை பார்த்து தன் கணவன் வேறு சில பெண்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்டாள்.
அனைத்தையும் தாங்கிக் கொண்டவளால் கணவனின் துரோகத்தை தாங்க இயலவில்லை. ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். கணவன் வரும்வரை அமைதியாக இருந்தவள் அவன் வந்ததும் பொங்கி விட்டாள்.
"பாவி ஏன்டா இப்படி செஞ்ச? நீ செஞ்ச எல்லா அக்கிரமத்தையும் அநியாயத்தையும் தாங்கிகிட்டேன் எதுக்கு உன் கூட சந்தோஷமா வாழவா? இல்லவே இல்லை. இதெல்லாம் என் அம்மாவுக்கு தெரியக்கூடாதுனு தான் எல்லாத்தையும் நான் தாங்கிட்டேன். ஏன் என்னை ஏமாத்தின?" என கேட்ட துளசியை பெல்டால் அடித்து துவைத்தான்.
"ஆமாம் நான் அப்படித்தான். எனக்கு இப்படி வாழ தான் பிடிச்சிருக்கு" என்பவனிடம் என்ன பேசி என்ன செய்ய.
ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறியவள் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் நடுவே விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்து விட்டாள் திடீரென காதில் அன்னை சொன்ன "அம்மா இருக்கேன் உனக்கு என்ன பிரச்சனை நாளும் அம்மா இருக்கேன்" என்ற தாயின் நினைவில் பேருந்தை விட்டு ஒதுங்கி நின்றாள்.
"கடவுளே நான் என்ன காரியம் செய்ய பார்த்தேன். நான் இல்லாட்டி அம்மா என்ன பண்ணுவாங்க" என யோசித்தவள் நேரே தாய் வீட்டை நோக்கி சென்றாள்.
கலைந்து சிவந்து முகமெல்லாம் வீங்கி தழும்புகளோடு வந்து நின்ற மகளைக் கண்டு பெற்ற வயிறு பதறி துடித்தது. அன்னையை அணைத்துக் கொண்டு கதறிய துளசி நடந்த அனைத்தையும் கூறி கதறி துடித்தாள்.
கோதையால் தன் மகளுக்கு நடந்த அநியாயத்தை ஜீரணிக்கவே இயலவில்லை. "வா' என துளசியின் கையை பிடித்து நேரே சூர்யாவின் வீட்டுக்கு சென்றார்.
"அம்மா அம்மா வேண்டாம்மா ப்ளீஸ்மா நாம போயிடலாம்" என்ற மகளை தன் கண்டிப்பான பார்வையால் அடக்கினார்.
சூர்யாவின் வீட்டுற்குள் கோபமாக நுழைந்த கோதை பளார்பளாரென சூர்யாவை அடித்தார் தடுக்க வந்த சூர்யாவின் அம்மாவை தள்ளி விட்டார்.
"பாவி என்னடா என்ன செஞ்சு வெச்சிருக்கே என் பொண்ண. அவளுக்கு கேக்க யாரும் இல்லைனு நெனச்சியா ஆம்பள இல்லாத வீடு என்ன வேணும்னாலும் பண்ணலாம் நினைச்சியா?"
"இவ்ளோ கொடுமை பண்ணியிருக்க என் பொண்ண. மாமியார் வீட்ல வரதட்சனைனு பிச்சை கேட்கிற உனக்கே இவ்வளவு திமிரு"
"ஊர் மேஞ்சுகிட்டு தருதலையா இருக்க நீ என் பொண்ண அடிச்சியா" என அங்கு ஓரமாக இருந்த பெல்ட்டை எடுத்து சூர்யாவை அடி விளாசினார்.
இடையில் புகுந்த சூர்யாவின் தாய் 'நீயெல்லாம் ஒரு பொம்பளையா? ஆம்பள அவனைப் போட்டு இப்படி அடிக்கிற. ஆம்பளனா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான் ஒழுங்கா அனுசரிச்சு வாழனும்னு உன் பொண்ணுக்கு சொல்லாம இப்படி பேய் பிடிச்ச மாதிரி ஆடுற" என்றவர் முகத்தில் காறி உமிழ்ந்த கோதை.
" பையன ஒழுங்கா வளர்க்க துப்பில்லை நீதான் முதல் குற்றவாளி" என்று அவளையும் நாலு சாத்து சாத்தியவர் "இப்ப கை வை பார்க்கலாம் என் பொண்ணு மேல இப்ப கையை வைடா" என்றார் ஆத்திரத்துடன்.
"தப்பு பண்ணிட்ட பெரிய தப்பு பண்ணிட்ட. என் பொண்ணுக்கு நான் இருக்கேன் அம்மாவா அப்பாவா எல்லாமுமா நான் இருக்கேன்" என்றவர் மகளின் கையை பிடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
எப்போதும் போல தன் தாயை பிரமிப்புடன் நோக்கிய துளசியின் தலை கோதி தூங்க வைத்தார். மகள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு கணவரின் புகைப்படம் அருகே வந்து அழுதார் கோதை.
" தப்பு பண்ணிட்டேன் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேன். நல்ல விசாரிச்சு கல்யாணம் செஞ்சி வச்சிருக்கணும்" என அழுதார்.
அழுது கொண்டிருந்த அன்னை அருகே தெளிவான முகத்துடன் வந்த துளசி "அம்மா இது உன் தப்பு இல்ல நடக்கணும்னு இருந்துச்சு நடந்திருச்சு அவ்வளவுதான் விடு" என தேற்றினாள்.
கோதை மற்றும் துளசி போராடி விவாகரத்து பெற்று சூர்யா மற்றும் அவனின் பெற்றோருக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். மகளும் தாயும்
தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகினர்.
ஆனாலும் இந்த சமுதாயம் சும்மா இருக்குமா?
பக்கத்தில் ஒரு வளைகாப்பு விழாவுக்கு அழைப்பு வரவே தாயும் மகளும் அங்கே சென்றனர்.
வளைகாப்பு விழாவில் சந்தனம் பூச சென்ற துளசியை தடுத்த அங்கிருந்த பெண்மணி "நீயே ஒரு வாழா வெட்டி புருஷனை பிரிஞ்சு இருக்க நீ அவள ஆசீர்வாதம் செஞ்சி விளங்கின மாதிரி"
என்ற கோபமான குரலில் துளசியின் கண்களில் நீர் கோர்த்தது.
வாங்கம்மா இங்கிருந்து போகலாம் என்றவாறு திரும்பி நடந்தாள் துளசி.
" ஒரு நிமிஷம் துளசி" என்றவாறு அங்கிருந்த அனைவரையும் தீர்க்கமாக பார்த்தார் கோதை.
துளசியை அவதூராக பேசிய பெண்மணியை நோக்கி "விழாவிற்கு நாங்களா வரலை எங்கள கூப்பிட்டாங்க நாங்க வந்தோம். ஒரு பொண்ணுனு கூட பாக்காம இப்படி பேசுறீங்க"
"ஒரு பெண்ணோட திருமண வாழ்க்கை சரி இல்லைன்னா அவ புருஷனும் மாமியாரும் அவள கொடுமை படுத்தினாலும் சரி அவனுக்கு வேற பல பெண்களோட தொடர்பு இருந்தா கூட பரவாயில்லை அவன சகித்துக்கொண்டு அவனோட வாழனும். ஆனா அவன பிரிஞ்சு அந்த பொண்ணு நிம்மதியா வாழ்ந்திட கூடாது அப்படித்தானே"
"ஒரு பொண்ணு கல்யாணம் செஞ்சி அந்த வீட்டுக்கு வாழத்தான் போறாளே தவிர அங்க இருக்க எல்லாரையும் திருத்துவதற்காக அவ பிறப்பு எடுக்கல"
"அந்தப் பொண்ணு அவளுக்கு நடக்கிற கொடுமை தாங்காம தற்கொலை பண்ணிகிட்டா கூட உங்களுக்கு பரவாயில்லை. வரதட்சனை கேட்டு அவளை துன்புறுத்தி கொலை செஞ்சா கூட பரவாயில்லை ஆனா அதே பொண்ணு அவனைப் பிரிந்து தன்னம்பிக்கையோடு வாழனும் நெனச்சா அவளை ஏத்துக்க மாட்டிங்களா?"
"என்னை பொருத்தவரை என் பொண்ணு எனக்கு பத்திரமா உயிரோட கிடைச்சுட்டா. எனக்கு அது போதும். அவ ஆசைப்பட்ட கண்டிப்பா அவளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுப்பேன்."
"ஒரு பொண்ணு தனக்கு நடக்கிற அநியாயத்தில் இருந்து மீண்டு வாழனும்னு நினைக்கிறானா அவளை வாழ விடுங்கள்.நமக்கு பெத்தவங்க இருக்காங்க நமக்கு எதுனாலும் அவங்க பாத்துப்பாங்க என்ற நம்பிக்கையை கொடுங்க கண்டிப்பா தற்கொலை முடிவை எடுக்க மாட்டாங்க"
"இவ்வளவு விளக்கம் நான் உங்களுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்லை ஆனாலும் ஏன் சொல்றேன்னு தெரியுமா?"
"இங்க கூட்டத்துல நிக்கிற எத்தனையோ பெண்களுக்கு இதுபோல கொடுமை நடக்கலாம். அவங்கள ஏத்துக்காம சகிச்கிகிட்டு பொறுத்து போக சொல்ற எத்தனையோ பெத்தவங்க இருக்கலாம். அவங்கள்லாம் நாங்க இருக்கோம் அப்படின்ற நம்பிக்கையை கொடுங்க உங்க பொண்ணுங்க எவ்வளவு கஷ்டம்னாலும் உங்ககிட்ட தான் வருவாங்க. தப்பான முடிவுக்கு போக மாட்டாங்க"
"வாழவே முடியாத கட்டத்துல பெத்தவங்க இருக்காங்கனு அவங்களுக்கு தோணணும் தற்கொலை பண்ணிக்கணும்ணு தோணகூடாது"
அங்கிருந்த பெண்களை சுற்றி பார்த்தார் அவர்களின் கண்களில் வேதனையின் சாயல் தெரிந்தது. ஏன் துளசியை அவமானபடுத்திய பெண் கூட துளசியின் கையை பிடித்து மன்னிப்பு கேட்டார்.
கோதை மகளின் கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்த சென்றார். எப்பவும் போல பிரமிப்புடன் தன் தாயைப் பார்த்தாள் துளசி.
"அம்மா நீங்க எனக்கு அம்மாவா கிடைக்க நான் புண்ணியம் செஞ்சிருக்கணும்" என்று தாயை அணைத்துக்கொண்டாள் துளசி.
தனித்து வாழும் பெண்களை என்றும் கீழாக நினைக்காதீர்கள்.
உங்கள் வீட்டு பெண்ணிற்கு ஒரு அநியாயம் கொடுமை நடக்கும் பொழுது சகித்துக்கொண்டு வாழ சொல்லாதீர்கள். பெண்களுக்கு தைரியம், நம்பிக்கை அனைத்தையும் கற்றுக்கொடுங்கள்.
உங்கள் மகளை என்றும் சுயமரியாதையை இழந்து வாழ சொல்லாதீர்கள்.
சமுதாயம் அக்கம்பக்கத்தினர் உற்றார் உறவினர்கள் என்ன பேசுவார்கள் என யோசித்து உங்கள் விலைமதிப்பில்லாத மகளை இழந்து விடாதீர்கள்.