எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இரத்தத்தின் இரத்தமே! -கதைத்திரி

Status
Not open for further replies.

ஒற்றுமை ஒன்றே கொண்ட சொத்தாய் வாழும் நான்கு சகோதரிகளுக்கும், ஒற்றுமை என்றால் காடு, மலை தாண்டி ஓடும் நான்கு சகோதரர்களுக்கும் இடையில் திருமணம் நடக்க, சகோதரிகள், தங்கள் கணவர்களை ஒற்றுமை சங்கிலியால் பிணைத்தார்களா? இல்லை சகோதரர்கள் தங்கள் மனைவிகளுக்கு இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை உடைத்து தனித்தனியே பிரித்து அழைத்துச் சென்றனரா? அன்பு, காதல், கோபம் என பல உணர்வுகளைக் கொண்ட குடும்ப நாவல்​

 
Last edited:

அத்தியாயம்--1​

மஞ்சளும் சிகப்பும் கலந்து கிழக்கு வானம் ஜொலிக்க ஆரம்பிக்க, மேகமெத்தையில் கடலின் மேல் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த கதிரவன் எழுந்திரிக்க தயாரானான்.​

வழக்கம் போல் தான் வளர்க்கும் சேவல் கூவி, தன்னை எழுப்புவதற்கு இடம் கொடாமல் இன்றும் அதிகாலையிலே எழுந்து வீட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு அதன் அழகை இரசித்தவர், குளித்து தலை துவட்டிக் கொண்டிருந்த நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தான் ஏரியா பால்காரன்.​

நடக்கும் நிகழ்வுகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம், இது சுமாராக இன்றிலிருந்து ஒரு இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்னால் நடக்கும் நிகழ்வுகள் என்று.​

பால்காரர் வேலன் சைக்கிள் மணி சத்தம் கேட்டு வழக்கமாக பால் வாங்கும் சொம்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் பரமேஸ்வரி.​

ஆடி மாத செவ்வாய் அதிகாலை வேளை, பச்சை நிற காட்டன் புடவையில், கஸ்தூரி மஞ்சளில் ஜொலித்த மாசுமரு இல்லாத முகம் தெய்வகடாட்சம் என்ற வார்த்தைக்கு உருவம் கொடுக்க, நடுநெற்றியில் சற்றே பெரிய பொட்டு, காதில் நடுத்தர குடும்பத்திற்கு அடையாளமான சிறிய ஜிமிக்கி கம்மல், கை நிறைய கண்ணாடி வளையல்கள் என தான் வணங்கும் அம்மனுக்கு போட்டியாக வந்து நிற்கும் பரமேஸ்வரியைப் பார்த்து எப்போதும் போல தன்னையும் அறியாது கைகூப்பினான் வேலன்.​

இது அவனுடைய தினசரி வாடிக்கை, நான் உங்களை விட சிறியவள் அதனால் இப்படிச் செய்து என்னை சங்கோஜப்படுத்தாதீர்கள் என்று ஒருமுறைக்கு பலமுறை பரமேஸ்வரி சொல்லிப் பார்த்துவிட்டார். வேலன் கேட்பதாய் இல்லை, என் குலசாமி மனித உருவம் எடுத்தது மாதிரி இருக்கீங்க உங்களைக் கையெடுத்து கும்பிடுவதில் தவறு இல்லை என்று முடித்துவிடுவான். சொல்லிப் பார்த்து சலித்த பரமாவும் அதற்குப் பிறகு உங்கள் விருப்பம் என்பதாய் ஒதுங்கிக் கொண்டார்.​

"அம்மா இன்னைக்கு உங்க வீட்டில் தான் முதன் முதலா பால் ஊத்துறேன்" புன்னகையோடு சொன்னான் வேலன்.​

" அது ஏன் அப்படி" அவர்கள் இருப்பது ஒரே காம்பவுன்டிற்குள் இருக்கும் முப்பது வீடுகள் கொண்ட ஒரு சிறிய காலனி. தன் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் அதற்கு முன்னால் பல வீடுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும். அப்படி இருக்க இவர் சொல்வதன் உள்ளர்த்தம் தான் என்ன? என்பதாய் யோசித்தார் பரமா.​

" காரணம் இருக்கு மா! காலங்காத்தால தூக்கக் கலக்கத்தில், கறந்து வைச்ச பாலைத் தூக்கிக்கிட்டு சைக்கிளை மிதிச்சு வரும் போது கஷ்டமா இருக்கும். ஒருநாள் கூட நிம்மதியா தூங்க முடியலையே, மனிதனின் தேவையே மூன்று வேளை சாப்பாட்டும், நல்ல தூக்கமும் தானே! எதுக்குடா இந்தப் பிழைப்புன்னு வேதனையா இருக்கும்.​

ஆனா, சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி பச்சைத் தண்ணியில குளிச்சி மங்களகரமா மஞ்சள் பூசி குங்கமத்தால பொட்டு வைச்சு அம்மன் சிலை மாதிரி உங்களைப் பார்க்கும் போது புது தெம்பு கிடைக்குதும்மா.​

கவலை சோர்வு எல்லாம் மறந்து புதுசா பிறந்த குழந்தை மாதிரி மனசு ஒருமாதிரி புத்துணர்ச்சியா மாறிடும். அதுவும் இல்லாம இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல். என் தங்கைக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணுவதற்காக அவர் வீட்டைப் பார்க்கப் போறோம். உங்க முகத்தைப் பார்த்துட்டு போனா எல்லாம் நல்லதா நடக்கும் என்பது என்னோட நம்பிக்கை" வேலன் சொல்லவும் பெரிதாகப் புன்னகைத்த பரமா,​

" ஏற்கனவே பச்சைத் தண்ணில குளிச்சிருக்கேன். இப்படி நீங்களும் ஐஸ் வைச்சா என்ன ஆகுறது. போங்க வழக்கம் போல காலனியில் உள்ள எல்லாரையும் எழுப்பி பாலைக் கொடுங்க" சிரித்தவாரே சொல்லிவிட்டு வழக்கமான வேலைகளைப் பார்க்க வீட்டினுள் நுழைந்தார்.​

அடுத்த தெருவில் இருக்கும் பேக்டரி ஒன்றில் தான் அந்தக் காலனியில் இருக்கும் ஆண் பெண் என பலரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் பரமேஸ்வரியின் கணவரும் ஒருவர்.​

ஆறு மணி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம் வந்த பரமா, " என்னங்க நான் சொன்னது நியாபகம் இருக்கு இல்ல. இன்னைக்கு இரண்டாவது ஷிப்டும் சேர்த்து பார்க்க வேண்டாம். கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க. அப்ப தான் நாம நேரமே அங்க போயிட்டு பாப்பா ஸ்கூலில் இருந்து வரதுக்குள்ள திரும்பி வர முடியும்" வெட்கமும் தயக்கமும் கலந்த குரலில் கணவனை கண் நிமிர்ந்து பார்க்காமல் தரை பார்த்து பேசினார்.​

மனைவியின் முகத்தை தன் கரம் கொண்டு நிமிர்த்தி, தன்னைக் காண வைத்து, " கண்டிப்பா வந்திடுவேன் பரமா, உன்னை விட அந்த வேலையா எனக்குப் பெருசு..." என கன்னம் கிள்ள வந்தவரை "பாப்பா இருக்கா" என்று கண்களாலே எச்சரித்தார் பரமேஸ்வரி.​

சின்ன சிரிப்புடன் அவர் நகர,​

" பாப்பா என்ன பண்றீங்க... எழுந்திட்டீங்களா? போய் முகம் கழுவிட்டு பல் தேய்ச்சிட்டு வாங்க. அம்மா காபி போட்டு தரேன்." நான்கு வயது மகள் ரஞ்சினியை கொஞ்சினார் பரமேஸ்வரி.​

" நான் அம்மா கூட பேசமாட்டேன்..." முகத்தை திருப்பியது நண்டு.​

" அச்சச்சோ! ஏன்டா அப்படி, அம்மா என்ன தப்புப் பண்ணேன், எதுக்காக என் தங்கம் என்கிட்ட பேசாது"​

" அம்மாவும் அப்பாவும் பாப்பாவுக்குத் தெரியாம ஏதோ இரகசியம் பேசுறீங்க. அது பாப்பாவுக்குப் புடிக்கல..." என்று தன் மழலை மொழியில் சொன்னாள் சிவரஞ்சனி.​

" அச்சச்சோ பாப்பா கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல டா. இன்னைக்கு சாயங்காலம் நீ வந்ததும் அம்மாவும் அப்பாவும் பாப்பாகிட்ட கண்டிப்பா சொல்றோம், என்ன"​

" ப்ராமிஸா..."​

" ப்ராமிஸா.." என்று சத்தியம் செய்து, குழந்தையின் விளையாட்டு சண்டைக்கு தீர்வு கண்டுபிடித்த த்ருப்தியில் அன்றாட அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார் பரமேஸ்வரி.​

அன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்த தன் ஆசை மகளை அள்ளி அணைத்து லேசான முத்தம் பதித்து தன் மடியில் அமர வைத்தவாறே, "ரஞ்சினி செல்லம், அப்பா உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன் டா... " மகளை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார் குடும்பத் தலைவன் ரமணிச்சந்திரன்.​

" என்னப்பா விஷயம்..." மழலை மொழியில் கேட்ட தன் செல்ல மகளை ஆசையாய் பார்த்தவர், " உனக்கு தம்பிப் பாப்பா பிறக்கப் போகுது டா கண்ணா..." மகளின் தலை தடவி சொன்னவரிடம் இருந்த சந்தோஷம் இப்போது சிறுபெண்ணையும் தொற்றிக் கொண்டது.​

" ஐ... தம்பிப் பாப்பாவா..." ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் தன் மடியில் இருந்து குதித்து முட்டைக் கண்ணை வைத்து முழித்துப் பார்த்த மகளைப் பார்த்து நிறைவாய் சிரித்தார் ரமணி.​

" அம்மா... அம்மா நிஜமாவா அம்மா... எனக்கு தம்பி பிறக்கப் போறானா..." அப்பா சொல்லில் த்ருப்தி அடையாதவளாய் தன் அம்மாவிடம் கேட்டாள் ரஞ்சினி.​

" ஆமா டா செல்லம்! தம்பியை நீ நல்லாப் பார்த்துப்ப தானே..."​

" நான் என் தம்பியை நல்லாப் பார்த்துப்பேன்" எனச்சொல்லி சிரித்தாள் குழந்தை. ஒரு புது உயிரின் வரவால் அந்தக் குடும்பத்தில் சந்தோஷ அலைகள் தாண்டவமாடியது.​

அடுத்து வந்த நாட்களில் ரஞ்சினி ஒரே அடம், " நீங்க என்கிட்ட பொய் சொல்லிட்டீங்க, தம்பிப் பாப்பா வரப்போறான்னு சொல்லி முழுசா நாலு நாள் ஆச்சு. ஆனா இன்னும் வரல. எப்பதான் வருவான் என்னோட தம்பிப் பாப்பா, எப்ப என்னோட விளையாடுவான்" கேள்விக் கணைகளை விடாமல் தொடுத்ததோடு, பிஞ்சுக்கைகளால் தன் மார்பில் அடிக்கும் தன் மகளைக் கிச்சுச்கிச்சு மூட்டி சிரிக்க வைத்து அப்போதைக்கு சமாளிப்பார் ரமணி.​

பரமேஸ்வரி தான் குழந்தையின் மனநிலைக்கு இறங்கிஅவளுக்கு நடப்பை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.​

"இன்னும் எட்டு மாதம் ஆகுமா" பெருங்கவலை கொண்டாள் சிறுமி. அவளின் ஏக்கத்தைப் பார்த்து கணவன் மனைவி இருவரும் சிரித்துக் கொள்வர்.​

ரஞ்சனி சாட்சாத் பரமேஸ்வரியின் பிரதிபலிப்பு. வயதுக்கு மேலான பொறுமையும், பொறுப்பும் கொண்டவள். மற்ற குழந்தைகளைப் போல சின்னச்சின்ன சேட்டைகள் கூட செய்ததில்லையே என்ற கவலை பெற்றவர்கள் இருவருக்கும் இருந்தது. வரப்போகும் தம்பியை நினைத்து சிறுமிக்குள் மறைந்திருந்த சிறுமி வெளியே வந்துவிட வேறென்ன வேண்டும் அவளைப் பெற்றவர்களுக்கு.​

" அடியேய் ரஞ்சினி என்ன பண்ணிட்டு இருக்க நீ..." கேள்வியோடு அருகே வந்தார் எதிர்வீட்டுப் பெண்மணி.​

" அம்மா வயித்துக்குள்ள தம்பிப் பாப்பா இருக்கான். அம்மா நிறைய வேலை செஞ்சா தம்பிக்கு வலிக்கும் இல்ல அதான் நான் செய்யுறேன்" என்றவள், பிஞ்சுக் கைகளால் வீட்டு முற்றத்தை சுத்தம் செய்யத் தெரியாமல் ஏனோ தானோவென்னனு ஏதோ செய்தவள், தண்ணீரைத் தெளிக்கத் தெரியாமல் தெளித்து, பாதி இடம் கூட நனையாமல் இருக்க கோலம் போடுகிறேன் என்று அமர்ந்துவிட்ட பிறகு, கோலம் போடத் தெரியாததால் தனக்குத் தெரிந்த A,B,C,D ஐ கோலமாவால் வீட்டு முற்றத்தில் எழுதிவிட்டு ஏதோ பெரிதாக சாதித்ததைப் போல சந்தோஷமாக உள்ளே சென்றாள் குழந்தை.​

மசக்கையில் அதிகம் துவண்டு போனார் பரமேஸ்வரி. அவரின் கரு தாங்கிய வயிறும் இரண்டு மாதங்களிலே ஐந்தாறு மாதம் போல பெரிதாக காலனி முழுக்க அவரைப் பற்றிதான் பேச்சாக இருந்தது.​

என்னவோ ஏதோ என்ற பயத்தில் ஸ்கேன் செய்து பார்த்த கணவன் மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக நான்கு குழந்தைகள் பரமேஸ்வரியின் கர்ப்பத்தில்.​

குழந்தைச்செல்வம் என்பது வரம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை தான். ஆனால் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் போது அதுவும் பாரமாகத் தான் தெரியும். அப்படி பாரமேறிய மனதுடன் தான் வீடு வந்து சேர்ந்தனர் கணவன் மனைவி இருவரும்.​

மாலை இருவருக்கும் நடுவில் பயங்கரமான வாதம். கணவன் நடப்பை எடுத்துச்சொல்லி கருவைக் கலைக்கச் சொல்லிவிட தாய் மனமோ அதற்கு இசைய முடியாமல் போராடியது.​

" பரமா எனக்கு மட்டும் நம்ம உயிரை கொல்ல ஆசையா என்ன! நாலு குழந்தையை எப்படி நம்மளால வளர்க்க முடியும். ஒருவேளை எல்லாமே பெண் குழந்தைங்களா இருந்துட்டா!​

கொஞ்சம் யோசிச்சு பாரு, ஐந்து பொண்ணுங்க. என்னால முடியாதும்மா. பிறக்காத குழந்தையால நமக்குள்ள பிரச்சனை வேண்டாம் புரிஞ்சிக்கோ... " முடிந்தவரை தன்மையாகவே எடுத்துச் சொல்ல முயன்றார் ரமணி.​

" என்னங்க, உங்க சம்பாத்யத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கனம் பண்ணி புள்ளைங்களை நான் வளர்க்கிறேன். முடியலையா யாருக்காவது தத்து கொடுத்திடுவோம்.​

ஆனா நாம பிறக்க வைப்போம் னு நம்பி என் வயித்துக்குள்ள வந்து இருக்கிற உயிர்களை கொல்ல வேண்டாங்க" தன் பங்கிற்கு சரிக்கு சரியாய் தானும் பேசினார், பரமேஸ்வரி.​

பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற இதுவரை நடக்காத ஒன்று தன் வீட்டில் நடப்பதைப் பார்த்து பயந்து போன ரஞ்சினி அழ ஆரம்பித்தாள். அவள் அழுகை அவளின் பெற்றோரை அப்போதைக்கு சமாதானப்படுத்த, சண்டையை நிறுத்தினர் இருவரும்.​

" அச்சச்சோ அப்புறம் என்ன ஆச்சு அத்தை" ஆர்வம் தாங்க முடியாமல் கதை சொல்லிக் கொண்டிருந்த தன் மாமியார் செண்பகவல்லியிடம் கேட்டார் நிறைமாத கர்பிணியாய் இருந்த ராதா...​

" ஹீம்... என்னத்தை சொல்றது... பிறக்காத அந்தக் குழந்தைங்களால அந்த வீட்டில் தினம் தினம் பிரச்சனை தான். விடாம போராடி, குழந்தைங்களைப் பெத்துக்க, அரை மனசா ரமணியை ஒத்துக்க வைச்சா பரமேஸ்வரி.​

நாலு பிள்ளைகளில் ஒன்னாவது ஆணா இருக்காதான்னு ஏங்கிப் போய் பொண்டாட்டியை தனியார் லேபுக்கு கூட்டிக்கிட்டு போய் ஸ்கேன் எடுத்துப் பார்த்த ரமணிகிட்ட, அவன் ஒரு மாச சம்பளத்தை மொத்தமாக வாங்கிக்கிட்டு அத்தனையும் பொம்பளைப் புள்ளைங்கன்னு உண்மையை ஒடைச்சி சொல்லிட்டான் ஒருத்தன்" என்றுவிட்டு அந்நாளின் நினைவில் இன்று பெருமூச்சுவிட்டார் அந்த வயோதிக பெண்மணி.​

" அடக் கடவுளே! பாவம் அந்த அம்மா, கடைசியா என்ன தான் ஆச்சு" உண்மையான கவலையுடன் கேட்டார் ராதா...​

"ரமணிக்கு தூக்கமே வரல, ஐந்து பொண்ணுங்களை எப்படி கரை சேர்பது என்ற கவலை. அதோட ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டி தன்னைப் புரிஞ்சிக்கலையேங்கிற கோவம். அவனைச் சுற்றி இருக்கும் எல்லோரும் அவனைப் பார்த்து சிரிப்பாங்களேங்கிற தாழ்வு மனப்பான்மை, எல்லாம் சேர்ந்து அவனைத் தூங்கவே விடல... கடைசியா ஒரு முடிவெடுத்தான்..." என்றவர் நிறுத்தவும், மாமியாரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராதா, " எனக்குத் தெரியும், ரமணி கண்டிப்பா நல்ல முடிவு தான் எடுத்து இருப்பாரு..." நம்பிக்கையாய் கூறினார்.​

" அதுதான் இல்லடிம்மா! தன்னால நிச்சயம் இந்த பாரத்தைத் தாங்கிக்க முடியாதுன்னு பொண்டாட்டி புள்ளையை விட்டுட்டு தூக்கில் தொங்கிட்டான் படுபாவி"​

" அடக்கடவுளே! இப்படியா பண்ணனும், குழந்தைங்களை கொடுத்த கடவுள் அதை வளர்க்க வழி செஞ்சு கொடுக்க மாட்டாரா!​

பாவம் அந்த அம்மா புருஷன் சாவுக்கு அவங்க தான் காரணம் னு துடிச்சி போய் இருப்பாங்க..." ராதா பரமேஸ்வரியின் துடிப்பை உணர்ந்தது போல் சொல்லவும் செண்பகவல்லிக்கு மனம் தாங்கவில்லை.​

"ஆமா துடிச்சிப் போயிட்டா தான் அந்த பாதகத்தி. நாங்க அத்தனை பேர் அவளுக்கு ஆறுதல் சொன்னோம். ஒருத்தர் கிட்டையும் ஒரு வார்த்தை கூடப் பேசல. அவளும் ஏதும் தப்பான முடிவு எடுத்திடக் கூடாதுன்னு காலனியில் இருந்த ஒரு வயசான பாட்டி ரமணியோட காரியம் முடியுறவரைக்கும் தினம் இராத்திரி அவ கூடவே இருந்தாங்க.​

இப்ப ரமணியோட கவலை அவளுக்கு வந்திடுச்சு. ஐந்து பொண்ணுங்களை தனி ஒருத்தியா எப்படி காப்பாத்துறதுன்னு யோசிச்சு வழி கிடைக்காம புருஷன் பின்னாடியே போயிடலாம் னு நினைச்ச அந்த புண்ணியவதி, புருஷனோட காரியம் முடிஞ்ச உடனே அப்பா அப்பான்னு ஏக்கத்தில் அழுதுக்கிட்டு இருந்த ரஞ்சினிக்கு விஷம் கலந்த பாலைக் கொடுத்துட்டு தானும் குடிச்சிட்டா" சொல்லிவிட்டு புடவை முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார்.​

" அய்யோ அம்மா... எதுக்காக இந்த கதையை அவகிட்ட சொல்லிட்டு இருக்கீங்க... அதுவும் அவ மாசமா இருக்கிற இந்த நேரத்தில்... " கோபித்தவாறே அருகே வந்து அமர்ந்தார் செண்பகவல்லி ஈன்றெடுத்த ஒற்றை மகனும், ராதாவின் கணவனுமாகிய வடிவேலு.​

" காரணம் இல்லாம இல்ல டா! உனக்கு ஏற்கனவே இரட்டைப் பிள்ளைங்க இருக்கு. இப்ப திரும்பவும் இரட்டைப் பிள்ளைங்க. அந்த ரமணியும் அவன் பொண்டாட்டியும் பண்ணிக்கிட்ட மாதிரி நீங்க பண்ணிடக் கூடாதுன்னு தான், பழசை நினைவு படுத்துறேன்.​

என்ன பார்க்கிற, ஏற்கனவே இரண்டு இப்ப இன்னும் இரண்டான்னு நீ வருத்தப்பட்டு கேட்டதா ராதா என்கிட்ட சொன்னா...​

வருமானமே இல்லாத காலத்துல பத்து புள்ளைங்களை பெத்து கரை சேர்த்தவங்க டா நாங்க. காலம் மாற மாற நீங்க ஒன்னு இரண்டோட நிறுத்திக்கிறீங்க.​

அதையும் மீறி சிலருக்குத் தான் ஆண்டவன் பிள்ளைச் செல்வத்தை அதிகமாக் கொடுப்பான். அதுக்கு கூட ஒரு கொடுப்பினை வேணும் டா. அந்தக் கொடுப்பினை உங்க இரண்டு பேருக்கும் கிடைச்சிருக்கு, ஆண்டவனோட ஆசிர்வாதத்தை உதாசீனப் படுத்திடாதீங்க!​

ஏற்கனவே இரண்டு ஆண் பிள்ளைங்க, இப்ப பிறக்கப் போறது எந்தக் குழந்தையா இருந்தாலும், முழு மனசோட அதை ஏத்துக்கிட்டு வளருங்க டா. என் பேரப் பிள்ளைங்களை ஏதும் பண்ணிடாதீங்க உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்." கிட்டத்தட்ட கதறும் நிலைக்குச் சென்றுவிட்டார் மூதாட்டி.​

" அய்யோ அம்மா! அது ஏதோ ஒரு குழப்பத்தில் சொன்னது... என்னோட சக்திக்கு நாலு பிள்ளைங்க என்ன, நாற்பது பிள்ளைங்களைக் கூட நான் ஆளாக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க, உங்க நான்கு பேரப்பிள்ளைங்களும் நல்ல படியா இந்த வீட்டில் வளருவாங்க, அதுக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்" முழு மனசுடன் வாக்குறுதி கொடுத்தார் வடிவேலு.​

"அத்தை பரமேஸ்வரிக்கும் அவங்க குழந்தைக்கும் என்னாச்சு..." ராதா அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க அந்நாளின் சோக நினைவுகளுக்கு பயணித்தார் அவளின் மாமியார்.​

 

அத்தியாயம்--2​

" பாலைக் குடிச்ச கொஞ்ச நேரத்தில் எல்லாம் அந்த ரஞ்சினிப் பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திருக்கு... அதை மடியில் போட்டுட்டு அம்மாக்காரி அழும் போது அரை மயக்கத்தில் இருந்த அந்த பாப்பா,​

' அம்மா எனக்கு என்னமோ பண்ணுது மா! நானும் அப்பா மாதிரியே சாமிகிட்ட போயிடுவேனா, தங்கச்சி பாப்பாங்க பிறந்ததும் அவங்க கூட விளையாடனும் னு ஆசைப்பட்டேன். அவங்களுக்கு நாலு பெயர் கூட நான் யோசிச்சு வைச்சிருந்தேன்.​

வளர்ந்து பெரிய பொண்ணாகி உங்களையும் அவங்களையும் நல்லாப் பார்த்துக்க ஆசைப்பட்டேன்... ஆனா முடியாது போலயே' மான்னு சொல்லி அழுது இருக்கு.​

விதி வேலையைக் காட்ட, பரமேஸ்வரி குடிச்ச பாலில் இருந்த விஷம் வேலை செய்யும் முன்னாடியே, மசக்கை வாந்தி வர, அதோட சேர்த்து விஷமும் வெளிய வந்திடுச்சு. வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளைகள் வாழ ஆசைப்படுவதை புரிஞ்சுக்கிட்ட பரமேஸ்வரி, மடியில் மயக்கமா கிடந்த தன்னோட மூத்த பொண்ணைக் காப்பாத்த முயற்சி பண்ண நேரத்தில மயக்கம் வர அவளும் விழுந்திட்டா.​

காலையில் பால்காரன் ரொம்ப நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால பக்கத்து வீட்டில் உள்ளவங்களை கூப்பிட்டான்.​

" அடிப் பாதகத்தி உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் ஒருநாள் இருந்திட்டு வரதுக்குள்ள என்னடி பண்ணித் தொலைச்சன்னு" அவளோட வீட்டில் தங்கியிருந்த பாட்டி ஒப்பாரியை ஆரம்பிக்க சிலர் அந்த வீட்டுக் கதவை உடைச்சாங்க...​

செத்துப் போன ரஞ்சினியை மடியில் போட்டுக்கிட்டு சித்தபிரம்மை புடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்த பரமேஸ்வரியோட உருவம் இன்னமும் என் கண்ணுக்குள்ள அப்படியே நிற்குது" என்ற செண்பகவல்லியின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய அவர் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார் மருமகள் ராதா.​

"அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத பொண்ணு! புருஷன் கூட அவ்வளவு அன்பா அனுசரணையா குடும்பம் நடத்தும் அழகில் அந்த மொத்தக் காலனியோட கண்ணும் அவங்க மேல தான் இருக்கும். புருஷன் பொண்டாட்டி எப்படி இருக்கணும் என்பதற்கும் அவங்க நல்ல ஒரு உதாரணம், கடைசியில் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணமாகிப் போயிட்டாங்க!" திக்கித் திக்கி பேசிய தன் மாமியாரைப் பார்த்ததும், " சொல்லக் கஷ்டமா இருந்தா வேண்டாம் அத்தை விட்டுடுங்க!" அவர்களுக்கு என்ன ஆனது எனத் தெரிந்துகொள்ள ஆசை இருந்தும் அதை மறைத்தார் ராதா.​

ராதாவின் தலையில் கை வைத்து ஆதரவாகத் தடவி விட்டவர் மேற்கொண்டு தொடர்ந்தார்.​

"ரஞ்சினி சாவுக்கு அவ கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வரல. பொண்ணை நாமளே கொன்னுட்டேமோங்கிற குற்றவுணர்ச்சி மட்டும் தான் இருந்தது.​

இந்த சம்பவத்துக்கு அப்புறம் உடம்பையும் மனசையும் இரும்பாக்கிக்கிட்டா, கிடைச்ச சின்ன சின்ன வேலையை செஞ்சிக்கிட்டு இருந்தா. திடீர்னு ஒருநாள் வீட்டு வாடகையை மொத்தமா கொடுத்துட்டு வீட்டைக் காலி பண்ணிட்டு எங்கேயோ போயிட்டா. அப்படி போகும் போது அவளுக்கு ஆறு மாசம், பார்த்தா ஒன்பது மாசம் மாதிரி வயிறு இருக்கும்.​

கொஞ்ச நேரம் சேர்ந்தாப்பில் நிற்க முடியாது, உட்கார்ந்து எழுந்திரிக்க முடியாது, சின்ன சின்ன வேலைகள் செய்வது கூட கஷ்டம், ஒத்தை ஆளா எல்லாத்தையும் சமாளிச்சா, ஒத்தப் பிள்ளையை கொன்னாச்சு இந்தப் பிள்ளைங்களை பெத்து வளர்க்கிறது தான் மூத்த பொண்ணுக்கு செய்யுற நியாயமா இருக்கும் னு நினைச்சாளோ என்னவோ அவளோட ஒவ்வொரு செயலிலும் வைராக்கியம் அதிகமா இருக்கும். இந்நேரம் எங்க இருக்காளோ என்ன பண்றாளோ தெரியல" பெருமூச்சுவிட்டார் மூதாட்டி.​

" ஏன் அத்தை அந்த பொண்ணும் அவங்க வயித்தில் இருக்கிற குழந்தைங்களும் கண்டிப்பா நல்லா இருப்பாங்க இல்ல..." கவலையுடன் ராதா வினவ அந்தக் கவலை தனக்குள்ளும் இருந்தாலும் அதை மறைத்து, " கண்டிப்பா நல்லா இருப்பாங்க மா... அவ அங்க இருந்து போகும் போது, அவளோட கண்ணில் ஒரு தீட்சண்யம் தெரிஞ்சது. எப்படியாவது தன்னோட பொண்ணுங்களை வளர்த்து ஆளாக்கியே தீருவேன் அப்படின்ற வைராக்கியம் தெரிஞ்சது.​

என்ன அந்த தைரியம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திருந்தா அந்தப் பொண்ணு ரஞ்சினி அநியாயமா உயிரை விட்டு இருக்காது. இனி இழக்கிறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்குன்னு எப்ப ஒருத்தங்களுக்கு தோணுதோ அப்ப கிடைக்கிற ஒரு தைரியம் அவங்க வாழ்நாள் முழுக்க போதுமானதா இருக்கும்.​

அப்படி ஒரு தைரியத்தோட தான் பரமேஸ்வரி அங்க இருந்து கிளம்பினா. இப்ப அந்த பொண்ணு எங்க இருக்காளோ என்னவோ! நம்ம பூர்வீக சொத்து நமக்கு தான்னு கோர்ட்டில் தீர்ப்பு வந்ததும் நானும் பொண்ணு வீட்டில் இருந்து இங்க வந்திட்டேன்.​

இது நடந்து இப்ப மூணு மாசம் ஆகுது. அப்ப இந்நேரத்துக்கு அவ நிறைமாச கர்ப்பிணியா இருப்பா. என்ன பண்றாளோ" கவலையுடன் பேசினார் செண்பகவல்லி.​

ராதா தங்களை விட்டு சற்று தொலைவில் தொட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தன் முதல் இரட்டையர்களையும், எப்பொழுது வேண்டும் என்றாலும் வெளிவரத் தயார் என்ற நிலையில் தன் வயிற்றுக்குள் இருக்கும் இன்னொரு இரட்டையர்களையும் நினைத்து பெருமூச்சுவிட்டார். ஆண்டவன் கணக்கிற்கான விடை அப்போதே அவருக்குத் தெரிந்ததோ என்னவோ!​

சில ஆண்டுகளுக்குப் பிறகு...​

" ஹாய் ஹலோ குட்மார்னிங்... உங்க எல்லாரையும் ஹெவ் எ குட் டே பிரோகிராமுக்கு அன்புடன் வரவேற்பது நான் உங்கள் வைஷ்ணவி. தினம் தினம் வித்தியசாமன ஒரு குடும்பத்தை தான் நாம இந்த நிகழ்ச்சியில் சந்திச்சிக்கிட்டு இருக்கோம்.​

அதே மாதிரி இன்னைக்கும் ஒரு வித்தியாசமான குடும்பத்தைப் பத்தி தாங்க பார்க்க போறோம்.​

இந்தக் குடும்பத்தில் மொத்தம் நாலு பேருங்க. நாலு பேரும் சிஸ்டர்ஸ்.​

இதில் என்னடா வித்தியாசம் இருக்குன்னு கேட்கிறீங்களா. வித்தியாசம் இருக்குங்க. இந்த குடும்பத்தை சேர்ந்த இந்த நாலு பேரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவங்களாம். உங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு இல்ல. முதன் முதலா இவங்களைப் பத்தி தெரிய வந்தப்ப எங்களுக்கும் ஆச்சர்யமா தாங்க இருந்தது.​

அதே ஆச்சர்யத்தோட வாங்க அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்..." மூச்சுவிடாமல் பேசிவிட்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் வைஷ்ணவி.​

வெளிப்புறம் திண்ணை வைத்துக் கட்டிய பழங்காலத்து வீடு, வாசலை நிறைத்திருந்த கோலம் கண்டு வைஷ்ணவியின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அவளுக்கெல்லாம் சுட்டுப்போட்டால் கூட கோலம் வரையை கை வளையாது.​

நிலைப்படியைத் தாண்டி உள்ளே வர மெல்லிய சப்தத்தில் கிருஷ்ண லீலைகள் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. தூசி என்ற பெயருக்கு கூட அங்கு இடமில்லை. தேவைக்கதிகமான ஒரு பொருளும் இல்லை என்பதால் அந்த சின்ன வீடு கூட தாராளமாகத் தெரிந்தது.​

சுவற்றில் சில பெண் குழந்தைகளின் படங்கள் இருக்க வைஷ்ணவியின் கட்டளையின் பேரில் வேகவேகமாக அதை ஃபோகாஸ் செய்தான் கேமராமேன்.​

" அடடே வைஷ்ணவி வாங்க வாங்க" ஆள் அரவம் உணர்ந்து வெளியே வந்து வரவேற்றாள் ஒருவள். நேர்வகுடெடுத்து நீண்ட கூந்தலை பின்னலிட்டு, அதில் சிறிதாய் மல்லிகை பூ சூடி இருந்தவள் கழுத்தில் ஒரு கவரிங் செயின், கையில் கண்ணாடி வளையல்கள், காதில் சிறிய தங்க கம்மல், மடிப்பு கலையாத பழைய காட்டன் புடவை சகிதத்திலும் அழகாகவே காட்சியளித்தாள். அவள் தோற்றமே அவளுடைய எளிமையையும் பண்பையும் காட்டியது.​

" வணக்கம் மிஸ், எங்களோட நேயர்களுக்கு உங்க பேரைச் சொல்லுங்க. அதோட நீங்க எத்தனாவது சிஸ்டர் என்றும் சொல்லிடுங்க" வைஷ்ணவி சொல்லவும், சிறிதாய்ப் புன்னகைத்தவள்,​

" என் பேர் ஊர்மிளா, நான் மூணாவது பொண்ணு" அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் சாம்பிராணி கரண்டியுடன் அவளைக் கடந்து செல்ல முயன்றவள் ஜடையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தி, " இவ என் பாசமான தங்கச்சி தேவகி, உங்களுக்குப் புரியும் படி சொன்னா எங்க வீட்டோட கடைக்குட்டி, செல்லமான இளவரசி..." தங்கையின் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள் ஊர்மிளா.​

துறுதுறுவென ஒருநிமிடத்தில் ஆயிரம் உணர்வுகளைக் காட்டிக் கொண்டிருந்த தேவகியின் கண்கள் கேமராவைப் பார்த்ததும் பல அபிநயம் பிடித்தது.​

" ஊர்மி, என்ன சத்தம் யாரு கூட டேசிக்கிட்டு இருக்க..." என்றவாரு வந்தாள் அழகு நிறைந்த சாந்தமான முகத்துக்கு சொந்தக்கார பெண்ணொருத்தி.​

" இவங்க யாரு பர்ஸ்டா செகண்டா..." வைஷ்ணவி கேட்கவும், குழப்பத்துடனும் கேமராவைக் கண்டு லேசான பதட்டத்துடனும் வந்தவளின் இடையில் கிள்ளி துள்ளவிட்டு ரசித்து முடித்தவள், " எங்க இரண்டாவது அக்கா, பெயர் ருக்மணி... அப்பாவியான அழகி..." என்றவள் தமக்கையை தோளோடு அணைத்து பயம் போக்கினாள்.​

" அக்கா, இங்க ஒரு நிமிஷம் வாங்களேன். அன்னைக்கு வந்தாங்க இல்ல டீவி சேனல் ல இருந்து, அவங்க வந்திருக்காங்க..." ருக்மணி அழைக்க வந்தாள் மூத்தவள்.​

ஆர்ப்பாட்டமில்லாத அழகி, சாந்தம் தவழும் சந்தன மேனியுடையவளின் முகத்தில் எச்சரிக்கை உணர்வு பொங்கி வழிந்தது. அது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக இருக்கும் எவருக்கும் தானாக ஒட்டிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவும் இல்லை.​

" இவங்க தான் எங்க மூத்த அக்கா... பேரு லீலாவதி..." என்றனர் முவரும் கோரஸாக.​

" என்ன கோரஸ் எல்லாம் பலமா இருக்கு... நீங்க கொடுக்கிற பில்டப்பை வைச்சுப் பார்த்தா இவங்க தான் இந்த வீட்டோட ஹீரோயினா..." தன் பாணியில் புன்னகையுடன் கேட்டாள் வைஷ்ணவி.​

" இல்லவே இல்ல, அக்கா தங்கச்சி நாங்க நாலு பேருமே இந்த வீட்டோட ஹீரோயின்ஸ் தான்" தங்கைகளை விட்டுக் கொடுக்காமல் உடனே பதில் வந்தது லீலாவிடம் இருந்து.​

"அப்படி சொல்லுக்கா..." என்றவண்ணம் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள அவர்கள் பிரிவதற்கு முன்னர் வேக வேகமாக அவர்களை ஃபோகஸ் செய்தான் கேமராமேன்.​

" என்ன அத்தை கேமராவோட நிறைய வண்டிங்க இருக்கு. சினிமா ஷீட்டிங் ஏதாவது நடக்குதா என்ன..." இவர்கள் நால்வரின் வீட்டுக்கு, எதிர்வீட்டில் விருந்தாளியாக வந்திருந்த பெண் ஒருத்தி தன் அத்தையிடம் வினவினாள்.​

" அடியேய் நீ வெளியூரில் இருந்து வந்ததால உனக்குத் தெரியல, அந்த வீட்டில ஒரே பிரசவத்தில் பிறந்த நாலு பொம்பளைப் புள்ளைங்க இருக்காங்க. அவங்களைப் பேட்டி எடுக்கத் தான் டீவி சேனல் காரங்க வந்து இருக்காங்க." என்றார் அவளுடைய அத்தை.​

" அம்மாடியோவ் ஒரே பிரசவத்தில் நாலு பொண்ணுங்களா? அவங்க அம்மா எப்படித் தான் தாங்கினாங்களோ தெரியல!" என்றாள் அந்தப் பெண் ஆச்சர்யத்துடன்.​

" எங்களுக்கும் தாங்க தெரியல. அப்பா செத்துப் போய், மூத்த பொண்ணையும் இழந்துட்டு, அநாதையா அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இந்த ஊருக்கு வந்த எங்க அம்மாவுக்குள்ள அப்படி என்ன வைராக்கியம் இருந்துச்சோ தெரியல.​

இந்த வீட்டில் அவங்களோட பழைய ப்ரண்டு ஒருத்தங்க இருந்தாங்க. அம்மா, அப்பா, புருஷன், புள்ளைன்னு எல்லாத்தையும் விபத்தில் பலி கொடுத்த தனிக்கட்டை. அவங்க தான் எங்க அம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்து தங்க வைச்சிருந்தாங்க.​

உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்லவாங்க. நாங்க நாலு பேரும் சுகப்பிரவசம். அதுவும் இந்த வீட்டில் தான் பிறந்தோம். எங்க அம்மாவோட ப்ரண்டு பொன்மணி அத்தை சில பாட்டிங்க சேர்ந்து தான் பிரசவம் பார்த்து இருக்காங்க.​

முதல்ல நான் லீலா, எனக்கு அடுத்து மூணு நிமிஷம் கழிச்சு ருக்குமணி, அடுத்த ஐந்து நிமிஷத்தில் ஊர்மிளா, அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் தேவகின்னு வரிசையா பிறந்தோம்.​

பொன்மணி அத்தைக்கு எங்களை பார்த்துக்கிறது மட்டும் தான் வேலை. அம்மா பக்கத்தில் இருந்த ஒரு மில்லில் வேலை பார்த்தாங்க.​

நாலு குழந்தைங்க என்பதால் பால் நிறைய சுரக்கும் அம்மாவுக்கு. காலையில் நிறைய பால் எடுத்து டப்பாவில் அடைச்சு அத்தைகிட்ட கொடுத்துட்டு தான் வேலைக்கு போவாங்க, வேலை நடுவிலும் சிலசமயம் வந்து பசியாத்திட்டு போவாங்க. இருந்தாலும் அடிக்கடி பால் கட்டி ரொம்ப வேதனையை அனுபவிப்பாங்களாம்! அதைச் சரியா கவனிக்காம விட்டு அது மார்பகப் புற்றுநோயில் வந்து முடிய ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க. அத்தையின் பெயரில் இருந்த இன்னொரு வீட்டை வித்து அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தாங்க, ஆனா காப்பாத்த முடியல.​

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வயசுக்கு வந்து உட்கார்ந்த நேரம் அது. எங்களைப் பார்த்துக்கிறதுக்காக அத்தை அதே மில்லுக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க.​

எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமும் கிடையாது ரொம்ப துக்கமும் கிடையாது. அவ்வளவு கஷ்டத்திலும் எங்களையும் வேலைக்கு போக சொல்லாம அரசுப் பள்ளியில் படிக்க வைச்சாங்க பொன்மணி அத்தை.​

எங்க வீட்டில் புது துணி இருக்காது, விளையாட்டுப் பொருட்கள் இருக்காது, திண்பண்டங்கள் இருக்காது, ஆனா தினமும் மூணு வேளை சாப்பாடு கண்டிப்பா இருக்கும்.​

அத்தை இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறிப் போனாங்க. அப்ப நான் குடும்பத்துக்கு மூத்தவளா என்னோட மேல்படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். இராத்திரியில் எங்க பாதுகாப்புக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கண் முழிச்சி இருப்போம். இதுதாங்க எங்க வாழ்க்கை..." சுருக்கமாய் தேவயானதை மட்டுமே சொன்னாள் லீலா.​

" எனக்கு ஒரு சந்தேகம் லீலா! இரட்டை குழந்தைகள் என்றாலே அச்சு அசல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கு, அப்படி இருக்கும் போது உங்க நான்கு பேரில் ஒருத்தருக்கு கூட உருவ ஒற்றுமை இல்லையே ஏன்!"​

" எங்களுக்கு கூட அதுக்கான காரணம் தெரியாது. ஆனா நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்க விலங்கியல் ஆசிரியர் தான் அதுக்கான விளக்கத்தை சொன்னாங்க.​

இரட்டைக் குழந்தைகளோட உருவாக்கத்துக்கு இரண்டு வழி இருக்கு. முதலாவது, ஒரு கருமுட்டை ஒரு உயிரணு சேர்ந்து உருவான கரு பிளவுபட்டு இரண்டு துண்டாகி இரண்டு குழந்தைகளா வளர்வது. அவங்க தான் ஒத்த இரட்டையர்கள், (Identical twins). அவங்களோட உருவம் தொடங்கி DNA வரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புகள் அதிகம். கைரேகை ஒன்று தான் அவர்களை துல்லியமா வித்தியாசப்படுத்திக் காட்டும். இவங்க பெரும்பாலும் ஒரே பாலினத்தில், அதாவது இரண்டு ஆண் குழந்தைகளாவோ, இல்லை இரண்டு பெண் குழந்தைகளாகவோ பிறக்க தான் வாய்ப்புகள் அதிகம்.​

அதுவே, இரண்டு வெவ்வேறு கருமுட்டை ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, இரண்டு வேறுபட்ட உயிரணுக்களோடு சேர்ந்து கருவுற்று இரண்டு குழந்தைகளா வளர்வது (Fraternal twins) அதாவது, Non identical twins னு சொல்லுவாங்க.​

இந்த வகையில் பிறக்கும் குழந்தைகள் இரண்டும் ஒரே பாலாகவும் இருக்கலாம், இல்ல ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை இருக்குமோ அவ்வளவு தான் இப்படிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளிடமும் இருக்கும்.​

இதே மாதிரி தான் மூன்று, நான்கு, ஐந்து பிள்ளைகள் உண்டாவதும். வெளிநாட்டில் ஒரே நேரத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்று பேர் Identical triplets ஆகவும் மற்ற இரண்டு பேர் Non identical twins ஆகவும் பிறந்திருக்காங்க. இயற்கையோட பல அதிசயங்களில் இதுவும் ஒன்னு.​

நாங்க நாலு பேரும் தனித்தனியே நான்கு கருமுட்டைகளும், நான்கு உயிரணுவும் சேர்ந்து, நான்கு தனித்தனி கருவா உருவாகி, ஒரே கர்ப்பப்பையை பகிர்ந்து வளர்ந்தவங்க. அதனால் தான் நான்கு பேரும் உருவ ஒற்றுமையில் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கோம்" நீண்ட விளக்கம் கொடுத்தாள் லீலா...​

" சூப்பர் லீலா, இந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது... அப்புறம் இன்னொரு சந்தேகம், அறிவியல் படி முதலில் உருவான கரு கடைசியாப் பிறக்கும், கடைசியா உருவான கரு முதலில் பிறக்கும் னு சொல்லுவாங்க!​

அப்படிப் பார்த்தா உங்க தங்கை தேவகி தான் எல்லோருக்கும் மூத்தவங்களா இருக்கணும், இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க" பெரிய விஷயத்தை கேட்டுவிட்டோம் என்ற நினைப்பில் அவர்களைப் பார்க்க, ஒரே நேரத்தில் சிரித்து வைத்தனர் சகோதரிகள் நால்வரும்.​

" என்னங்க சிரிக்கிறீங்க!" வைஷ்ணவி குறைப்பட்டுக்கொள்ள,​

" ஆன்மீகத்துப்படி முதலில் ஜெனிக்கும் குழந்தை தான் மூத்தவங்கன்னு சொல்லுவாங்க. மகாபாரதம் எடுத்துக்கோங்க. தர்மனுக்கு முன்னாடியே கௌரவர்கள் அத்தனை பேரும் காந்தாரியோட கர்பப்பையில் உருவாகிடுவாங்க. ஆனா முதலில் பிறந்ததால் தர்மன் தான் எல்லோருக்கும் மூத்தவராகிப் போனார்.​

ஆன்மீகத்தை நம்புறவங்க அதன்படி நடக்கட்டும், அறிவியலை நம்புறவங்க அதன்படி நடக்கட்டும். இங்க எங்க வீட்டில் நாங்க நாலு பேருமே ஒன்னு தான். எங்களுக்குள்ள நீ உயர்வு, நீ தாழ்வு, நான் சொன்னதை தான் நீ கேட்கணும் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது!" பெருமையுடன் சொன்னாள் லீலா. இன்னும் சில பல கேள்விகள் கேட்டு பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினாள் வைஷ்ணவி.​

" அத்தை எனக்கு அந்தப் பொண்ணுங்களைப் பத்தி தெரிஞ்சிக்கணும் போல இருக்கு. கொஞ்சம் சொல்றீங்களா??" எதிர்வீட்டுப் பெண் கேட்கவும் சொல்ல ஆரம்பித்தார் அந்தப் பெண்மணி.​

" மூத்தவ லீலா! சரியான சமத்து பொண்ணு டி அவ, வேலைக்கு போய் சம்பாதிச்சு அவ குடும்பத்தை ஒத்த ஆளாக் காப்பாத்துறா. பொறுப்பு ரொம்பவே அதிகம். அவளுக்கு அவ தங்கச்சிங்க தான் உலகம்.​

அவங்களைப் பத்தி யாராவது ஒரு வார்த்தை தப்பா சொன்னாலும் பத்திரகாளியா மாறிடுவா. ஆம்பிளைங்களை ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டா! அவங்க பார்த்தாலும் கண்டுக்க மாட்டா.​

எல்லார்கிட்டையும் பேசுவா, ஆனா ரொம்ப ஒட்ட மாட்டா. தான் பட்டினியா கிடந்தாவது தங்கச்சிங்களை சாப்பிட வைப்பா. முக்கியமான விஷயம் டி எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் கடன் னு பணமோ பொருளோ கேட்டு எந்த வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டா. ரொம்ப ரோஷக்காரி. அதே நேரத்தில் ரொம்ப பாசக்காரியும் கூட!​

இரண்டாவது ருக்குமணி. அக்கா சொல்லு தான் அவளுக்கு வேதவார்த்தை. தன்னோட அக்கா தனக்கு எப்படி ஒரு வழிகாட்டியோ, அதே மாதிரி அவ அவளோட இரண்டு தங்கச்சிங்களுக்கும் வழிகாட்டியா இருப்பா. ரொம்ப அழகு. ஆனா கொஞ்சம் பயந்த சுபாவம் அவ்வளவு தான்.​

மூணாவது ஒருத்தி இருக்காளே ஊர்மிளா. சரியானவடி அவ, சரியான மூளைக்காரி. நாலு பேருல ரொம்ப தைரியமானவ. அக்காங்க அவளுக்கு தெய்வம் மாதிரி. தங்கச்சி குழந்தை மாதிரி.​

ஒரு தடவை அவளோட அக்கா லீலாவை ஒருத்தன் பஸ் ல வைச்சு வேணும் னே இரண்டு தடவை இடிச்சிட்டான்னு வெளுத்துக் கட்டிட்டா அவனை. ரொம்பத் துடுக்குத்தனம் நிறைஞ்சவ ஆனா ரொம்பவே நல்ல பொண்ணு.​

கடைக்குட்டி தேவகி. அக்காங்களைத் தவிர வேற ஒன்னும் தெரியாது. ஆனா படிப்பில் சரியான கெட்டிக்காரி அவளோட வகுப்பில் எப்பவும் அவ தான் முதல் ரேங்க். மேல படிக்க ஆசை இருந்தும் அக்காங்களை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு அமைதியா இருக்கா."​

" நாலு பேரும் ஒன்னா ஒரே நாளில் பிறந்தவங்க தான், ஒரே வயசு தான். ஆனா அவங்களுக்குள்ள எத்தனை வித்தியாசம்." அந்தப் பெண் அதிசயித்துக் கேட்டாள்.​

" உண்மை தாண்டி. ஒரே வயசு தான் ஆனாலும் குணங்கள் வேற வேற தானே. அதனால் தான் இத்தனை வித்தியாசம். ஆனா அதையும் தாண்டி இவங்களுக்குள்ள பல ஒற்றுமையும் இருக்கு.​

பொண்ணுங்க நாலு பேரும் புடவையைத் தவிர வேற எதுவும் கட்டமாட்டாங்க. நாலு பேருக்குமே நல்ல நீளமான முடி. நாலு பேரும் நல்லா சமைப்பாங்க. எல்லாத்துக்கும் மேல நாலு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பப் பாசம் வைச்சு இருக்காங்க...​

ஒருத்தரை விட்டு ஒருத்தர் இவங்களால இருக்கவே முடியாது. இவங்களோட ஒற்றுமை தான் இவங்களோட மிகப்பெரிய பலம். மொத்த தெருவோட கண் திருஷ்டியும் அவங்க மேல தான் தெரியுமா? அவங்க நாலு பேரும் சண்டை போட்டு ஒருநாளும் பார்த்தது இல்லை, அந்தளவுக்கு ஒற்றுமை அவங்களுக்குள்ள.​

கல்யாண வயசும் வந்திடுச்சி. எந்தப் புண்ணியவானுங்க இவங்களை கட்டிக்கப் போறானுங்களோ தெரியல..." என்றவாறு பெருமூச்சு விட்டார் அவர்.​

" அந்தப் புண்ணியவானுங்க யாருன்னு எனக்குத் தெரியுமே" என்று நிறுத்திப் புன்னகைத்தாள் அந்த உறவுக்காரப் பெண்.​

 

அத்தியாயம்--3​

" என்னடி சொல்ற" உறவுக்காரப் பெண் சொன்னதை, தான் சரியாகத் தான் காதில் வாங்கினோமா இல்லை தவறாக எதுவும் விழுந்துவிட்டதா? சரியாகத் தெரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை கேட்டார் அவர்.​

"அத்தை நான் வேலை பார்க்கிற கம்பெனி ஓனருக்கு மொத்தம் நாலு பசங்க, ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம். ஒற்றுமைன்னா என்ன விலைன்னு கேட்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகவே ஆகாது.​

நாலு பேர் படிச்சதும் வேற வேற கோர்ஸ், செய்யுறதும் வேற வேற வேலை. அவங்க அப்பாவுக்காக மட்டும் தான் ஒரே வீட்டில் ஒன்னா இருக்காங்க.​

அவங்க எப்பவுமே குறையாத ஒற்றுமையோட இருக்கணும் என்பது எங்க முதலாளியோட நிறைவேறாத ஆசைகளுள் ஒன்னு.​

என்ன பண்ணியும் அவரோட பசங்களை ஒற்றுமையா வைச்சிக்க அவரால முடியல. வரப்போற மருமகளுங்களை வைச்சாவது அதை செஞ்சே ஆகணுமேங்கிற கனவோடவும் கவலையோடவும் இருக்காரு.​

நீங்க பார்த்து யாரைக் காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயார். ஆனா நாலு பொண்ணுங்களும் வேற வேற குடும்பமா இருக்கணும் னு எங்க சாருக்கு ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டுட்டாங்க அவரோட நாலு பசங்களும்.​

ஆனா எங்க சார், என்ன ஆனாலும் தன்னோட குடும்பத்தை பிரிக்க நினைக்காத பொண்ணுங்க தான் தனக்கு மருமகளா தன் கோட்டைக்கு இராணியா வேணும் னு தேடிக்கிட்டு இருக்காரு.​

இப்ப அவர் காதில் இந்த பொண்ணுங்களைப் பத்தி சொன்னேன்னு வைச்சிக்கோங்க. அப்படியே லட்டு மாதிரி தூக்கிட்டு, ச்சீ கூட்டிக்கிட்டு போய் அவரோட பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாரு..." எதையோ நினைத்து பூரிப்போடு சொன்னாள் பெண்.​

" எல்லாம் சரிதான் டி, கல்யாணத்துக்கு அப்புறம் பசங்க நாலு பேரும் தனித்தனியா போறேன்னு இவங்க நாலு பேரையும் பிரிச்சுட்டா என்ன பண்றது!"​

" யாரு இவங்களையா? கனவில கூட நடக்காது... நீங்க சொன்னதை வைச்சு நானே இவ்வளவு உறுதியா சொல்லும் போது உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் அத்தை" சரியா இடத்தில் தட்டி அவரை அமைதிப்படுத்தினாள், கோடிங் பிழையைக் கண்டுபிடித்து அதை தீர்க்கும் கெட்டிக்காரியான பெண்.​

" ஆமா, ஆமா! நீ சொல்றது சரிதான். இந்தப் பொண்ணுங்களை யார் நினைச்சாலும் பிரிக்க முடியாது தான். நீ உங்க முதலாளிகிட்ட இவங்களைப் பத்தி சொல்லு, ஆனா அதுக்கு முன்னாடி அந்தப் பசங்க எப்படிப் பட்டவங்கன்னு மறைக்காம என்கிட்ட சொல்லு, தாய் தகப்பன் இல்லாத பொண்ணுங்க, அதுவும் தங்கமான பொண்ணுங்க! நல்லது பண்றேன்னு நாம ஏதாவது பண்ணப் போய் அது அவங்களுக்கு பிரச்சனையா முடிஞ்சிடக் கூடாது" உண்மையான அக்கறை தெரிந்தது அவரிடம்.​

" அத்தை, அம்மா இல்லாத பெரிய வீட்டுப் பசங்கன்னா ஏதாவது சின்ன சின்ன குறை இருக்கத் தான் செய்யும். அதே மாதிரி தான் இவங்களும்.​

தனியா சுதந்திரமா இருக்கணும், தன்னை யாரும் எதுக்காகவும் கேள்வி கேட்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க, அந்த ஒன்னைத் தவிர்த்தா அவங்க நாலு பேரும் தங்கமான பசங்க தான்.​

அதுவும் பொண்ணுங்க விஷயத்தில் அப்படியே அந்த ஸ்ரீராமன் தான். பொண்டாட்டியை அடக்கி ஆழ நினைக்கிறவங்க கிடையாது. என்ன ஒன்னு கொஞ்சம் கோபக்காரங்க. அதை இவங்க தான் பொறுத்து போகணும்"​

" என்னடி பேச்சு எல்லாம் பலமா இருக்கு! அவங்களைப் பத்தி எத்தனை தகவல் உனக்கு எப்படி தெரியும். நீ அவங்க அப்பா கம்பெனியில் தானே வேலை பார்க்கிற!"​

" அய்யோடா! என் அத்தைக்கு அவங்க தம்பி பொண்ணு மேல எவ்வளவு பாசம், அத்தை எங்க கம்பெனியில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் அவங்க நான்கு பேரையும் தெரியும்! அப்படித்தான் எனக்கும் தெரியும்.​

எங்க சார், ஒரு பொட்டு நகை கேட்காம, வரதட்சணை பணம் கேட்காம, இவங்களை அவரோட வீட்டு மகாலட்சுமியா கூட்டிக்கிட்டு போவாரு.​

தங்கத்தட்டில் வைச்சித் தாங்குவாரு, இவங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடும். எல்லாத்தையும் விட இவங்க நாலு பேரும் ஒன்னா ஒரே வீட்டில் மருமகளா இருப்பாங்க. என்ன சொல்றீங்க அத்தை, நான் எங்க சார் கிட்ட பேசட்டுமா" ஒருவித ஆர்வம் அவள் கண்களில் மின்னியது.​

" நீ சொல்றது நல்ல விஷயம் தானே! நம்மளால அந்தப் பொண்ணுங்களுக்கு நல்லது நடந்தா சந்தோஷம் தான். நீ உன் முதலாளிகிட்ட இவங்களைப் பத்தி சொல்லி இங்க வர வை. அவர் லீலா கிட்ட பேசட்டும். மத்ததெல்லாம் கடவுள் விட்ட வழி..." என்றபடி உள்ளே சென்றுவிட்டார் அவர்.​

உடனடியாக கோயம்புத்தூர் சென்றவள், மனைவி ராதா அன்னை செண்பகவல்லி என இருவரையும் எமனுக்கு தாரை வார்த்துவிட்டு தான் பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தினம் தினம் அல்லாடிக் கொண்டிருக்கும், தன் ஓனர் வடிவேலுவிடம் இந்த நான்கு பெண்களைப் பற்றியும் அவர்களின் குணங்கள் பற்றியும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினாள். குறிப்பாக அவர்களுடைய ஒற்றுமையை மேற்கோள் காட்டி பேசினாள்.​

ஒரே பிரவசத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் அதுவும் இருபத்திநான்கு வயதில்... மூளையில் ஏதோ பொறி தட்ட, " அவங்களோட அம்மா பெயர் என்னன்னு உனக்குத் தெரியுமா மா??" அவள் சொல்லப்போகும் பதில் தனக்கு சாதகமாக இருக்க வேண்டுமே என்று அந்த மிகக்குறுகிய நேரத்திற்குள் தனக்குத் தெரிந்த அனைத்து சுவாமிகளிடமும் வேண்டுதல் வைத்தார் வடிவேலு.​

சிறிது நேரம் யோசித்தவளுக்கு ஒருவழியாக பெயர் நினைவு வர,​

" பரமேஸ்வரி... இதுதான் அவங்க பேர்... என்னோட அத்தை இதைத் தான் சொன்னாங்க..." என்றாள் வேகமாக.​

வடிவேலுவின் மொத்த பாரமும் இறங்கியது போல் ஆனது. தனக்காக இவ்வளவு பெரிய உதவி செய்தவளுக்கு சன்மானமாக ஒரு இலட்ச ரூபாய் கொடுக்க முகமெல்லாம் பல்லாக வாங்கிக்கொண்டாள் அவள்... அவள் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்க, எதிர்பார்ப்பு நிறைவேறிய சந்தோஷம் அவளிடத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. வடிவேலு அதற்குப் பிறகு அவளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கூட தனக்கு என்ன நன்மை என்று எதிர்பார்க்கும் ரகம் இவள் என்பது தெரியுமாதலால் அமைதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.​

இரண்டாம் பிரசவத்தில் ராதா இறந்துவிட, செண்பகவல்லி தான் தன்னுடைய நான்கு பேரன்களையும் வளர்த்தார். இல்லை இல்லை வளர்க்க முயற்சித்தார்.​

ஒரு இணைக்கும் மற்றொரு இணைக்கும் இடையே ஒரு வருடம் மட்டுமே இடைவெளி இருக்க நால்வருமே கண்ணின் இமையாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டிய குழந்தைகள் தான்...​

செண்பகவல்லி எப்படியோ தன்னால் இயன்ற அளவு அவர்களின் பத்தாம் அகவை வரை பார்த்துக்கொண்டார். அப்பொழுதே அவர்களுக்குள் ஏழாம் பொருத்தம் தான்.​

அவர்களின் ராஜா காலத்து பெரிய வீடு முழுக்க ஓடி ஓடி சண்டையிட்டு கீழே விழுந்து உருண்டு மல்லுக்கு நிற்கும் பேரன்களைப் பிரித்து விடுவதிலே அவருக்கு உடலின் ஜீவன் அனைத்தும் வற்றிவிடும்.​

முதுமை அவரை அமிழ்த்த தாதிப் பெண்ணொருவர் பணிக்கு சேர்க்கப்பட்டார். தினமும் ஒரு சண்டை, அடிதடி என நடக்க, பொறுக்க முடியாமல் நான்கு தாதிப் பெண்கள் பணியமர்த்தப்பட்டனர் அந்த வீட்டில். அப்பொழுதில் இருந்து வீட்டில் சண்டைகள் குறைந்தது. அதில் நிம்மதியான வடிவேலு மகன்களை கவனிக்க மறந்துவிட்டார்.​

தாங்கள் தனித்தனியாக இருப்பது தான் நன்றாக இருக்கிறது ஒன்றாக இருந்தால் பிரச்சனை தான் என்னும் எண்ணம் அந்த கணத்தில் இருந்து அவர்கள் நால்வரின் மனதில் ஆழமாய் வேரூன்றிவிட்டது. அதுவே அவர்கள் தனித்தனித் துறையை தேர்ந்தெடுக்கவும் முழுக்காரணமாக அமைந்தது.​

தனியாக சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி புது வாழ்க்கை வாழ ஆசைகொண்டு, ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரை உடன் வரும்படி அழைத்த போது, வடிவேலு பேயாட்டம் ஆடி விட்டார்.​

தான் உயிரோடு உள்ள வரை தன்னுடைய நான்கு மகன்களும் தன்னுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாய் சொல்லிவிட தனையன்களால் மறுக்க முடியவில்லை.​

அவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை அவர்கள் தங்களுடைய அப்பாவான வடிவேலுவின் மீது வைத்திருந்த பாசம் தான். அது அவர்களுக்குள்ளும் வர வேண்டும் என்பது தான் வடிவேலுவின் ஆசை கனவு எல்லாமே.​

பெருமூச்சுடன் பழைய நினைவில் இருந்து தன்னைத் தானே மீட்டுக் கொண்டவர், மிகுந்த சந்தோஷத்தோடு நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்து பெண்களிடம் திருமணம் பற்றி பேசுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.​

அவர்கள் வீடு இருக்கும் தெருவைக் கண்டறிந்தவர் தன்னுடைய விலை உயர்ந்த காரை ஓரமாக நிறுத்திவிட்டு எளிமையான உடையுடன் உள்ளே இருந்து இறங்கினார். அவர் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அது அனைத்தையும் போராடி ஒதுக்கி வைத்தவர், வந்த காரியம் நல்ல படியாக முடிய வேண்டும் என இறைவனுக்கு ஒரு பலமான வேண்டுதலை வைத்துவிட்டு நகர்ந்தார்.​

வண்டிக்கும் அதன் உள்ளிருந்து இறங்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே என்று தெருவில் நின்றிருந்த சிலர் யோசித்துக் கொண்டிருக்க அவர்களிடமே சென்று சகோதரிகளின் வீட்டு முகவரியைக் கேட்டறிந்தார்...​

குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அவர்களுடைய வீட்டின் கதவை வடிவேலு தட்ட ஊர்மிளா வந்து கதவைத் திறந்தாள்.​

" யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்" வாங்க, வணக்கம் என்பது போன்ற மரியாதையான சொற்கள் ஏதும் இன்றி நேரடியாக விஷயத்திற்கு வந்தவளை மலைப்பாகப் பாரத்தாலும் சமாளித்து, " நான் உங்கப்பா ரமணியோட பால்ய சிநேகிதன் பேரு வடிவேலு. என்னை உங்களுக்குத் தெரியாது, ஆனா உங்களையும் உங்க அம்மாவையும் எனக்கு நல்லாத் தெரியும்" தயங்கியவாறே சொன்னார் வடிவேலு...​

" ஆனா இத்தனை வருஷம் இல்லாம இப்ப எதுக்காக வந்து இருக்கீங்க..." மீண்டும் முகத்தில் அடிப்பது போன்ற இன்னொரு நேரடிக் கேள்விக்கணையால் நொந்து தான் போனார் வடிவேலு.​

" அதை வீட்டுக்குள்ள போய் பேசலாமா?" குரலில் லேசான ஏக்கம் தெரிந்தது.​

" சார், என்ன நீங்க! இது நாலு வயசுப் பொண்ணுங்க இருக்கிற வீடு. நீங்க பாட்டுக்கு உள்ள போய் பேசலாம் னு சொல்றீங்க..." உறுமினாள் ஊர்மிளை...​

" மா, எனக்கு உங்க அப்பா வயசு மா" சற்றே ஆதங்கத்துடன் சொன்னார் வடிவேலு.​

" அது எங்களுக்குத் தெரியும். ஆனா ஊர் வாய்க்குத் தெரியாதே. இங்க பாருங்க சார், நீங்க எங்க அப்பாவோட ப்ரண்டா இருக்கலாம், அதுக்காக எல்லாம் உங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போக முடியாது. நாங்க பெருசா நினைக்கிறது எங்களோட சுயகௌரவம் மட்டும் தான். அதுக்கு சின்னக் களங்கம் ஏற்படுவதைக் கூட என்னால தாங்கிக்க முடியாது.​

எதுவா இருந்தாலும் இப்படி திண்ணையில் உட்கார்ந்து பேசலாம். நீங்க உட்காருங்க, நான் தண்ணி எடுத்துட்டு வரச் சொல்றேன்! அதைக் குடிச்சிட்டு வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க" முகத்திற்கு நேராக மனதில் தோன்றுவதை தயங்காமல் சொல்லும் பெண்ணை வடிவேலுக்கு மிகவும் பிடித்துப் போனது.​

" அம்மாடியோவ், இவ என்ன கொழுத்திப் போட்ட சிவகாசிப் பட்டாசா இந்த வெடி வெடிக்கிறா, இவ தான் நம்ம சீனப் பட்டாசு மகனுக்கு சரியா இருப்பா. அவன் மூணாவது இவ எத்தனாவது பொண்ணுன்னு தெரியலையே.​

எத்தனையாவது பொண்ணா இருந்தா என்ன, இவதான் நம்ம மூணாவது மருமக... " என்று உள்ளுக்குள் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தவரை லீலாவின் சத்தம் கலைத்தது. வேலை முடிந்து அப்பொழுது தான் வீட்டிற்கு வந்தாள் அவள்.​

" ஊர்மி யாரு இவரு, எதுக்காக சத்தம் போட்டு பேசிக்கிட்டு இருக்க. உன் சத்தம் தெருமுனை வரை கேட்கிது" சற்றே கோபமான தொணி இருந்தது லீலாவின் குரலில்.​

" அக்கா, இவரு நம்ம அப்பாவோட ப்ரண்டாம். இத்தனை வருஷம் கழிச்சி நம்மளைப் பார்க்க வந்து இருக்காரு..." என்றாள் பொறுமையாக, அதே நேரம் அவளுடைய சொல்லில் எரிச்சல் எக்கச்சக்கமாய் மண்டிக் கிடந்தது...​

" என்ன பட்டாசா வெடிச்சவ அக்காவைப் பார்த்ததும் இப்படிப் பம்முறா. அக்கா மேல அவ்வளவு மரியாதையா? இந்தக் கலியுகத்தில் இப்படிப்பட்ட பொண்ணா..." மனதிற்குள் ஊர்மிளாவை நினைத்து ஆச்சர்யப்பட்டவர் லீலாவைப் பார்த்து கரம் கூப்பினார்.​

" அம்மாடி என்னோட பேரு வடிவேல்... உங்க அப்பா ரமணி இருந்த காலனியில் தான் என்னோட தங்கச்சி இருந்தா. அவளைப் பார்க்க வரும் போது உங்க அப்பாவோட நல்ல பழக்கம்." என்று பலவற்றை மறைத்து, சிலவற்றை மட்டும் சொன்னார்.​

" அப்படியாங்க, ரொம்ப சந்தோஷம். நான் லீலாவதி, இவ என் தங்கச்சி ஊர்மிளா..." தன்னை அறிமுகப்படுத்தியவரிடம் மரியாதைக்காக தன்னையும் தங்கையையும் அறிமுகப்படுத்தினாள் லீலா.​

" இவ்வளவு சொல்றா, ஆனா இவளும் உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்றாளே..." வடிவேல் மனதில் நினைத்ததை அப்படியே லீலா சொல்ல திகைத்துப் போனார் அவர்.​

"இவ்வளவு சொல்றா, வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட மாட்றாளேன்னு யோசிக்கிறீங்களா சார்! ஊர்மியே சொல்லி இருப்பா, இது நாங்க நாலு பொண்ணுங்க மட்டும் வாழுற வீடு.​

இது கலிகாலம் சார், நாம மட்டும் நல்லவங்களா இருந்தா பத்தாது. நம்மமைச் சுத்தி இருக்கிறவங்களும் நல்லவங்களா இருக்கணும். ஆனா அதுக்கு வாய்ப்பு ரொம்பக் கம்பி.​

முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்குத் தான். அது மாதிரி தான் பொண்ணுங்க வாழ்க்கையும்.​

அப்பா அம்மா இல்லாத எங்க மேல நாளைக்கு எந்தக் கறையும் படிஞ்சிடக் கூடாது இல்லையா? அதனால் தான் நாங்க இப்படி நடந்துக்க வேண்டியதாப் போச்சு..." என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.​

அதற்குள் ஒரு கையில் ஒரு பாய், விசிறி இன்னொரு கையில் காபி டம்ளருடன் வந்தாள் ருக்மணி.​

" வாங்க சார்... வந்து உட்காருங்க..." வரவேற்றவள் திண்ணையில் பாயை விரித்து அவர் அமரவும், காபி டம்ளரை அவர் கையில் கொடுத்தாள்.​

அவருக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை வீட்டு வாசலிலே அமர வைப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் தெருவில் உட்கார்ந்து கொண்டு எப்படி சம்பந்தம் பேசுவது என்பது தான் யோசனையாக இருந்தது. பேச வந்த விஷயமும் பெரிய விஷயம் என்பதால் அதை எப்படி பேசுவது என்றும் லேசான பதட்டத்தில் இருந்தார்.​

" இத்தனை வருஷம் கழிச்சு எங்களைத் தேடி வந்து இருக்கீங்க... சொல்லப் போனா எங்களைத் தேடி சொந்தம் னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்த முதல் ஆள் நீங்க தான்...​

உங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் உபசரிக்காம திண்ணையில் வைச்சுப் பேசிட்டு, நீங்க வந்த விஷயம் தெரிஞ்சதும் வெளியே அனுப்ப வேண்டிய நிலைமை. அதுக்காக நீங்க எங்களை மன்னிக்கனும் சார்..." பட்டுத்துணி போன்ற மென்மையான வார்த்தைகள் ஆனால் அதில் இருந்த எச்சரிக்கையை நன்றாகவே உணர்ந்தார் வடிவேலு.​

" எதுக்காக வந்தன்னு சீக்கிரம் சொல்லிட்டு வெளிய போடாங்கிறதை எவ்வளவு நாகரிகமா சொல்லுது இந்தப் பொண்ணு. சொல்லும் வாய்க்கும் வலிக்காம, கேட்கும் காதுக்கும் வலிக்காம பேசக் கூட திறமை அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைப்தில்லை.​

நான் முடிவு பண்ணிட்டேன், இவ தான் என் வீட்டு மூத்த மருமக! என் குலத்தைக் காப்பாத்த போற குலவிளக்கு..." மனதினுள் நினைத்துக் கொண்டவர் தான் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்தார்.​

அடுத்தகணமே, ஆரம்பத்திலே நான்கு பேரையும் நான்கு மகனுக்கு கேட்டு பிரச்சனை ஆகிவிட்டால், முதலில் மூத்த மருமகளுக்கு மட்டும் தூண்டில் போட்டு பார்ப்போம், அவள் வந்துவிட்டால், அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழையும் குழந்தைகளைப் போல மற்றவர்களும் பின்னாலே வந்துவிடப் போகிறார்கள் மனதில் நினைத்தவராய் பேசவந்ததை மாற்றிப் பேசினார் அவர்.​

ஆனால், அன்று அவர் வாயில் சனி புகுத்திருந்தது போலும்! மொத்தமாக சொதப்பி லீலா மற்றும் தங்கைகளிடம் மொத்தமாக கெட்ட பெயர் எடுத்து திரும்ப வேண்டிய நிலையை அவரே உருவாக்கி கொண்டார்.​


 

அத்தியாயம்--4​

" என் மூத்த பையன் பேரு செல்வராஜ், வயசு இருபத்தியேழு டாக்டரா இருக்கான். அவனுக்கு கல்யாணம் பண்ணலாம் னுயோசனை, அதனால தான்" என்று லேசாக இழுத்தார் வடிவேலு.​

இவர்கள் தான் தன்னுடைய மருமகள்கள் என்று ஆணித்தனமாக முடிவு செய்து விட்டாலும் ஏனோ ஒரு தயக்கம். நினைத்த எதையும் நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இவருக்கு கீழே ஆயிரம் பேர் இருக்க, தன்னுடைய மகன்களுக்காக என்று இறங்கி வந்தவருக்கு, பெண்களிடம் அவர்களுக்கு ஏற்ற வகையில் பேசத் தெரியவில்லை. அதனாலேயே தயங்கி தயங்கி தான் வந்தது வார்த்தைகள்.​

" ஏன் சார் தயங்குறீங்க! எங்களில் யாரோ ஒருத்தரை உங்க பையனுக்காக பார்க்க வந்து இருக்கீங்க, அப்படித் தானே" தந்தையின் நண்பர் என்று வடிவேலு சொல்லும் போதே ஓரளவு காரணத்த யூகித்திருந்த லீலா இப்பொழுது கிட்டத்தட்ட அதை உறுதிப்படுத்திக் கொண்டு, எதுவும் தெரியாதவள் போல் அவரை எதிர்கேள்வி கேட்டாள்.​

வேலைக்கு என்ற பலரை நேர்முகத் தேர்வில் கேள்விகள் கேட்கும் போது, ஏதாவது ஒரு சூழ்நிலையில் தனக்கு எதிரே இருப்பவர்கள், பயத்தில் பதில் சொல்ல தயங்கும் பொழுது இவருக்கு அவ்வளவு எரிச்சல் வரும். கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் கூட இல்லாதவர்கள் எதற்காக வேலை தேடி வர வேண்டும் என்று உள்ளுக்குள் பொங்குவார்.​

இப்பொழுது அதே நிலையில் அவர் இருக்க, பயத்தில் தொண்டை காய்ந்தது அவருக்கு. இன்னும் சற்று நேரத்தில் கை கால் நடுக்கம் கொண்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அமைதியான பெண் லீலாவிடமிருந்து வந்த வார்த்தைகளில் இருந்த ஆளுமை அவரை கட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும்.​

பெருமூச்சுவிட்டு நிதானித்தவர்,​

" உங்களில் யாரையோ இல்லை மா. உன்னைத் தான் என் மூத்த பையனுக்கு கேட்க வந்திருக்கேன். வீட்டில் அப்பா அம்மா இருந்திருந்தா அவங்ககிட்ட பேசலாம். ஆனா அதுக்குத் தான் கொடுத்து வைக்கலையே. அதான் நேரடியா உங்கிட்டையே பேசுற நிலைமை..." வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்தீ ஒருவழியாக சொல்லி முடித்தார் வடிவேலு.​

" ஊர்மி, அக்காவுக்கு கல்யாணம்..." சந்தோஷத்தில் சிறு குரலில் கத்தினாள் ருக்மணி.​

" ஏய்! அமைதியா இரு..." தங்கையை அடக்கிய லீலா, " மன்னிக்கனும் சார், எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லை. சொல்லப் போனா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லன்னு சொல்லலாம்" அமைதியாக அழுத்தமாக வெளிவந்தது அவள் வார்த்தைகள்.​

" ஏன் மா அப்படிச் சொல்ற... ஒருவேளை வேற யாரையும் விரும்புறியா?" கேட்டுவிட்ட பின்னர் தான், எதற்காக டா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டோம் என்று தோன்றியது வடிவேலுவுக்கு.​

" ஹலோ எங்க வந்து யாரைப் பத்தி என்ன பேசுறீங்க! கொஞ்சம் பார்த்துப் பேசுங்க" பற்களைக் கடித்தவண்ணம் சொன்னாள் ஊர்மிளா...​

" அய்யய்யோ சிவகாசிப் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாளே! சும்மாவே கை கால் எல்லாம் நடுங்கிது இதில் இவ இப்படிக் கத்தினா கன்பார்ஃம் மயக்கம் தான்" அவர் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்,​

"நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை சார், எனக்கு முன்னாடி ரொம்பப் பெரிய கடமை இருக்கு. என் மூணு தங்கச்சிங்களுக்கும் நல்ல இடமா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கணும்.​

அவங்களோட நல்லது கெட்டதில் கலந்துக்கணும்! அம்மா அப்பா இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமாங்கிற வருத்தம் எப்பவும் அவங்க வாழ்க்கையில் வந்திடக் கூடாது. இது எல்லாம் நடக்க, நான் கல்யாண பந்தத்தில் இருந்து ஒதுங்கி இருக்கணும்" சொன்ன பிறகு தான், இத்தனை விளக்கம் இவருக்கு தேவை தானா என்ற யோசனையே வந்தது அவளுக்கு.​

" நீ சொல்றது எல்லாம் சரிதான் மா! தங்கச்சிங்களுக்கு அக்கா அடுத்த அம்மா மாதிரி தான், ஒத்துக்கிறேன்!அதுக்காக நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்.​

நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரலன்னு சொன்னாக் கூட பரவாயில்லை. ஆனா, நீ நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கனும்..." தந்தையின் இடத்தில் இருந்து கட்டளை போல் குரல் உயர்த்தினார் வடிவேலு.​

" சார், அப்படி ஒரு எண்ணம் இதுவரைக்கும் எனக்குள்ள வந்தது இல்ல. இனிமேல் வருமான்னும் தெரியாது. அதோட நீங்க வந்த காரியம் தான் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சே அப்புறம் என்ன..." வேகவேகமாக பேசியவள் சற்றே தடுமாறி நின்றாள்.​

" வெளில போன்னு நேரடியா மட்டும் தான் சொல்லல..." என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவர்...​

"உங்க எல்லாரையும் பத்தி நல்லா விசாரிச்சேன் மா. எனக்கு உங்க நாலு பேரையும் ரொம்பப் புடிச்சிப் போச்சு. இந்த சம்பந்தத்தை விட எனக்கு மனசு இல்லை.​

வேணும் னா ஒன்னு பண்ணுவோம், உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் உன் தங்கச்சிங்களையும் எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடலாம். அவங்களுக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்! என்ன சொல்ற" எப்படியாவது அவள் சம்மதம் சொல்லிவிட வேண்டுமே என்ற தவிப்பு தான் அவரிடத்தில் அதிகம் இருந்தது.​

" சார், என் தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை. அதை எப்படி நான் உங்க தலையில் இறக்க முடியும். அதோட நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷன், மாமனார், மாமியார் அவங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு என் சொந்தக் குடும்பத்தை பத்தி மட்டும் தான் என்னோட யோசனைகள் சுத்தும்.​

அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நான் மாட்டிக்கிட்டா என் குடும்பத்தையும், என்னோட தங்கச்சிங்களையும் ஒரே மாதிரி பார்த்துக்க முடியும் னு எனக்குத் தோணல.​

என்னோட வாழ்க்கை தான் முக்கியம் னு நான் சுயநலமா போயிட்டா என் தங்கச்சிங்களோட நிலைமை என்ன ஆகுறது. அதனால ப்ளீஸ் இதை இப்படியே விட்டுடுங்க. உங்க பையனுக்கு கண்டிப்பா வேற பொண்ணு கிடைப்பா" என்றாள் லீலா.​

" இல்லை மா! என் பையனுக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணைத் தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன். உன்னைக் கண்ணு முன்னாடி வைச்சிக்கிட்டு இன்னொரு பொண்ணைத் தேட எனக்கு மனசு வரல.​

நீ தப்பா எடுத்துக்கலன்னா நான் ஒரு யோசனை சொல்றேன். எனக்குத் தெரிஞ்ச மூணு தங்கமான பசங்க இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் தட்டாம கேட்பாங்க. அவங்களோட விவரத்தைக் கொடுக்கிறேன் நீயும் நல்லா விசாரிச்சு பாரு.​

உனக்கு சம்மதம் என்றால் நான் உன்னோட தங்கச்சிங்க மூணு பேருக்கும் என் தலைமையில் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உன் தங்கச்சிங்க கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட உன் கல்யாணத்தை வைச்சுக்கலாம்.​

என்ன சொல்ற! நான் இவ்வளவு தூரம் சொல்றேன் உன் நிலையில் இருந்து நீயும் கொஞ்சம் இறங்கி வரலாமே மா" சற்று கவலையுடனே கேட்டார் அவர்...​

" அக்கா, ப்ளீஸ் கா! அவரு தான் இவ்வளவு தூரம் சொல்றார் இல்ல. அப்பாவோட ப்ரண்டுன்னு வேற சொல்றார். மாப்பிள்ளை டாக்டரா இருக்காராம்.​

உங்களை நல்லா பார்த்துப்பாரு அக்கா. எங்க மூன்று பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நீங்க ஆசைப்படுவது மாதிரி, உங்களுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா!​

உங்க அளவுக்கு எங்களுக்கு வெளியுலகம் தெரியாது. உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற அளவு திறமையும் கிடையாது. எப்படியாவது எங்க அக்காவுக்கு நல்ல வரன் அமையணும் னு கடவுள் கிட்ட வேண்டிக்குவோம். அதுக்கு பலனா தான் தானா தேடி வந்திருக்கு இந்த இடம். கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க அக்கா" கடைக்குட்டி தேவகி கெஞ்ச, லீலாவிற்கு கோவம் வந்தது...​

" ஏய்! உங்க மூணு பேருக்கும் அறிவுங்கிறது கொஞ்சமாவது இருக்கா இல்லையா? இல்ல இருந்தும் வேலை செய்யாம போச்சா. தினம் தினம் பொண்ணுங்களுக்கு நடக்கிற கூத்தை பார்த்தும் கேட்டும் இருக்கீங்க தானே. அவ்வளவு ஏன் நீங்க வேலைக்கு போன இடத்தில் நடந்த கூத்தை மறந்துட்டீங்களா என்ன?​

யாரோ ஒருத்தர் வந்து நான் உங்க அப்பாவோட ப்ரண்டுன்னு சொல்றாரு, அதுவும் எப்ப, சரியா நம்மளைப் பத்தி டீவியில் வந்த நாலு நாளில். உன் தங்கச்சிங்களை கட்டிக்கொடுக்கிறேன், உன்னை என் டாக்டர் பையனுக்கு கட்டி வைக்கிறேன் எங் கூட வந்திடுன்னு சொல்றார்.​

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. இவர் சொல்றது எல்லாம் உண்மைன்னு எப்படி கண்ணை மூடிக்கிட்டு நம்புறீங்க. கொஞ்சம் கூட சுயமா யோசிக்க மாட்டீங்களா?​

இவரு இவ்வளவு பெரிய உதவியை நமக்கு பண்ணனும் னு என்ன அவசியம் வந்திருக்கு சொல்லுங்க.​

நம்மகிட்ட பணம், நகை நட்டுன்னு ஒன்னுமே கிடையாது. இந்த பழைய வீடு ஒன்னு தான் இருக்கு. அப்படி இருக்க எப்படி இவர் சொல்ற அந்த ஆளுங்க உங்களை கல்யாணம் பண்ணி நல்லபடியா பார்த்துப்பாங்க.​

என் தங்கச்சிங்க ரொம்ப புத்திசாலிங்க எல்லாத்தையும் புரிஞ்சிப்பாங்கன்னு நம்பி உங்களைத் தனியா விட்டுட்டு நான் தினமும் வேலைக்குப் போறேன். ஆனா நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே டி..." அவர்களைப் பார்த்து கத்தி முடித்த லீலா,​

"சார் இங்க பாருங்க, நீங்க சொன்னது எல்லாம் உண்மையோ பொய்யோ அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. ஆனா நீங்க சொல்ற எந்த விஷயத்திலும் எங்க யாருக்கும் உடன்பாடு கிடையாது. அதனால தப்பா எடுத்துக்காம வந்த வழியே திரும்பிப் போயிடுங்க..." கத்தாத குறையாக சொல்லி முடித்தாள் லீலா.​

" ஏன் மா ஊர்மிளா நீயாவது உன்னோட அக்காவுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா? என்னைப் பார்த்தா ப்ராடு பண்றவன் மாதிரியா தெரியுது" சற்றே சோகமாகக் கேட்டார் வடிவேலு.​

" இந்த எடுத்துச் சொல்ற பிஸினஸே இங்க கிடையாது. எங்க அக்கா என்ன சொல்றாங்களோ அது தான் முடிவு. அதனால தப்பா எடுத்துக்காம தயவுசெஞ்சி கிளம்புங்க..." என வீதியைக் காட்டினாள் அவள்.​

" ச்சே... பொண்ணு பார்த்து பேசி முடிக்க வந்து இப்படி ஆகிடுச்சே... அதுசரி முன்ன பின்ன இதெல்லாம் பழக்கம் இருந்தா தானே என்ன பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு தெரியும். அதான் இப்படி ஏடாகூடமா முடிஞ்சிடுச்சி.​

பொண்ணுங்க பணத்து மேலும், பகட்டு வாழ்க்கை மேலும் ஆசைப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க கூடாதுன்னு இப்படி சிம்பிளா வந்தேன். ஒருவேளை இதுவே அவங்க பார்வையில் என்னை ரொம்ப கீழ காட்டிடுச்சோ" மனதில் நினைத்தவண்ணம் குனிந்து தன் உடையைப் பார்த்தவருக்கு அங்கிருந்து தோல்வியுடன் திரும்ப மனம் ஒப்பவே இல்லை.​

அக்காவை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சிட்டா அவளைக் காரணம் காட்டி தங்கச்சிங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம் னு நினைச்சேனே. இப்படி எல்லாமே சொதப்பிடுச்சே" பலவித யோசனைகளுக்கு நடுவே வந்த வழியே கிளம்பினார் வடிவேலு.​

" அக்கா, நீங்க உள்ள வாங்க" ஊர்மி லீலாவின் கரம் பற்றி உள்ளே அழைத்து வர ருக்கு சூடான தேநீரோடு வந்து அதை லீலாவிடம் கொடுத்தாள்.​

" ஏன்டிம்மா, வீடு தேடி வந்த அந்த பெரிய மனுஷனை நல்லா அவமானப்படுத்தி அனுப்பிட்டீங்க போல.." என்றவாரு வீட்டுக்குள் வந்தார் அந்த எதிர்வீட்டுப் பெண்மணி.​

" அய்யோ அக்கா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. அவங்க எங்க அக்காவை பொண்ணு கேட்டு வந்தாரு. அதில் இஷ்டம் இல்லைன்னு அமைதியா சொல்லி அனுப்பிட்டோம் அவ்வளவு தான்..." ஊர்மிளா அக்காவுக்காக பஞ்சாயத்திற்கு வந்தாள்.​

" போடி போடி இவளே! அவரு இங்க வந்தது உங்க அக்காவை மட்டும் பொண்ணு பார்க்க இல்ல, உங்க நாலு பேரையும் அவரோட நாலு பசங்களுக்கு பார்க்க தான்" என்றவர் தன் முன் நிற்கும் பெண்களின் குழம்பிய முகங்களைப் பார்த்து மேலும் தொடர்ந்தார்.​

"வந்தவர் எதுக்காக உங்க அக்கா நொக்கா கல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசினாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா அவரோட நோக்கம் உங்களை மாதிரி ஒற்றுமையான அக்கா தங்கச்சியை அவரோட பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு அது மூலமா அவங்களை என்னைக்கும் ஒற்றுமையா பார்க்கணும் என்பது தான்" கையில் கிடைத்த அமிர்தத்தை தண்ணீர் என நினைத்து தட்டி விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் பேசினார் அவர்.​

" ஆனா இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்" சரியாக கேட்டாள் லீலா.​

" ஆங் இதையெல்லாம் நல்லா வக்கனையா கேளு. ஆனா வீடு தேடி வந்த பெரிய மனுஷனை வீட்டுக்குள்ள கூட வரவிடாம துரத்திடு அனுப்பிடு, என்ன பொண்ணோ போ" என அங்கலாய்த்தவர்,​

"அவரோட கம்பெனியில் தான் என் தம்பி பொண்ணு வேலை பார்க்கிறா. அவ சொல்லித் தான் அவருக்கு உங்களைப் பத்தி தெரியும்" லீலாவின் கேள்விக்கு பதிலைச் சொன்னவருக்கு ஆதங்கம் மட்டும் மட்டுப்படவே இல்லை. அவர்கள் இழந்தது எத்தனை பெரிய பொக்கிஷத்தை என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்,​

"அவர் எவ்வளவு பெரிய பணக்காரருன்னு தெரியுமா? அப்படிப்பட்டவரு உங்க கிட்ட இருக்கிற நல்ல குணத்தை மட்டுமே பார்த்து, வரதட்சணைன்னு ஒரு பைசா கூட வேண்டாங்கிற உறுதியோட உங்களை அவரோட வீட்டு மருமகளாக்க நினைச்சாரு! ஆனா நீங்க...​

இங்க பாரு லீலா, யானையாவது தன் தலையில் மட்டும் தான் மண்ணை வாரிப் போடும். ஆனா நீ உன்னோட அவசரப் புத்தியால உன் தங்கச்சிங்களுக்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டுட்ட.​

இதுக்கு மேல அவரு உங்களை மருமகளா ஏத்துப்பாரான்னு எனக்குத் தெரியாது. இனி மேலும் உங்க வாழ்க்கை தொட்டுக்கோ துடைச்சிக்கோன்னு தான் போகணும் னு இருந்தா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்.​

உன்னை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா இந்த விஷயத்தில் ரொம்ப முட்டாளாகிப் போயிட்ட லீலா" மனத்தாங்கலை கொட்டி முடித்து வந்த வேலை முடிந்த தோரணையில் அவர் சென்றுவிட லீலாவிற்கு என்னவோ போல் இருந்தது...​

" நான் அப்பவே நினைச்சேன் அக்கா. என்னடா ஆளு பார்க்கிறதுக்கு ரொம்ப சிம்பிளா இருக்காரு. ஆனா உடம்பு பாதாம் பிஸ்தான்னு நல்லா சாப்பிட்டு வளர்ந்த மாதிரி பளபளன்னு இருக்கேன்னு நினைச்சேன். இப்ப தான புரியுது வேஷம் போட்டு வந்து இருக்காரு..." ஊர்மிளா சொல்லவும்,​

" ஆமாக்கா! இதுதான் விஷயம் அப்படின்னா நேரடியா சொல்லி இருக்கலாமே. அதை விட்டுட்டு எதுக்காக அதையும் இதையும் பேசணும். ஏதோ தப்பு இருக்கு கா. அவரு போனது கூட நல்லது தான். விட்டுத்தள்ளு"ருக்மணியும் ஊர்மிளாவுடன் சேர்ந்து கொண்டு சமாதானப் படுத்தினாள்.​

" அக்கா நீ அவரை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவா நடத்தல. அதனால நீ எதைப் பத்தியும் யோசிக்காத. ப்ரீயா விடு" என்றாள் தேவகி.​

" நீங்க எல்லாம் எதுக்காக இப்படி மல்லுக்கட்டிப் பேசுறீங்கன்னு எனக்குப் புரியுது. உங்களுக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கை என்னால போயிடுச்சேன்னு, நான் வருத்தப்படுவேன்னு தானே யோசிக்கிறீங்க.​

எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லவே இல்ல. அவர் பெரிய பணக்கார இடம் னு பொன்னி அத்தை சொன்னாங்களே அந்த ஒரு விஷயம் போதும் அவரோட சங்காத்தமே வேண்டாம் னு நாம ஒதுங்குவதற்கு. அதனால இதை இத்தோட மறந்துட்டு போய் வேலையைப் பாருங்க!" இவ்வளவு தான் பேச்சு என்பதாய் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.​

தங்கைகளிடம் என்னவோ பெரிதாய் பேசிவிட்டாள். ஆனால் உள்மனம் அவளைப் போட்டு படுத்தி எடுத்தது. அவளால் பொன்னி அத்தை என்று அழைக்கப்பட்ட எதிர்வீட்டுப் பெண்மணி சொன்ன உன் தங்கச்சிங்களுக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துட்ட என்ற ஒற்றை வசனம் அவள் நிம்மதியைப் பறிக்க போதுமானதாக இருந்தது.​

அதோடு தாய் இறப்பதற்கு சில காலங்கள் முன்பு, அவரிடம் எங்களைப் போல் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்த வீட்டை எங்கேயாவது பார்த்து இருக்கிறீர்களா? எனக் கேட்டவளுக்கு "உங்க அப்பாவோட ப்ரண்டு ஒருத்தர் வடிவேலுன்னு பேரு. நாங்க தங்கி இருந்த காலனியில் அவரோட தங்கை இருந்தாங்க, அவங்களைப் பார்க்க வரும் போது உங்க அப்பாவுக்குப் பழக்கம்.​

அவருக்கும் உங்களை மாதிரி நான்கு பிள்ளைகள் என்ன ஒன்று அடுத்தடுத்த வருடத்தில் பிறந்த இரண்டு இரட்டைப் பிள்ளைகள். முதல் இணை இரண்டு ஆண். அடுத்த பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னர், உங்க அப்பா இறந்து போய் நான் இங்கே வந்துவிட்டேன்! அவர்கள் ஆணா பெண்ணா தெரியாது" என பரமேஸ்வரி சொன்னது இன்றும் நினைவில் நின்றது லீலாவுக்கு.​

ஆக இன்னைக்கு வந்தவர் சொன்னது அத்தனையும் உண்மை, அவர் வந்த நோக்கமும் தவறானது இல்லை. நான் தான் முட்டாள் தனமா நடந்துக்கிட்டேன் போல.​

அவர் சொன்ன மாதிரி என் மூன்று தங்கைகளும் ஒரே வீட்டில் வாழ்ந்தா அதை விட எனக்கு பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்க முடியும், என யோசித்தவளுக்கு அப்போது கூட தன்னுடைய திருமணத்தைப் பற்றி நினைக்கத் தோன்றவில்லை.​

அவரிடம் நான் ஒருமுறை பேசிப் பார்த்தால் என்ன! பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்களாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? அதோடு அவர் கேட்டதும் உடனடியாக என் தங்கைகளை கொடுக்கப் போகிறேனா என்ன!​

இந்த யோசனை சரிவருமா சரிவராதா என்ற சின்ன சிந்தனை, அதற்கு ஒரு பேச்சுவார்த்தை அவ்வளவு தானே என தனக்குள் சொல்லிக் கொள்ளும் போது தான், ஒருவேளை வடிவேலுவும் இப்படி யோசித்து சோதனை செய்து பார்த்திருப்பாரோ என்ற எண்ணம் வந்தது.​

அவர் யார் எங்களை சோதனை செய்ய என்ற கோவம் எல்லாம் அவளுக்கு வரவில்லை. காலத்துக்கும் மகன்களோடு வாழப்போகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கே வந்தாள்.​

நெடுநேரம் யோசித்தவள், என் தங்கச்சிங்களுக்கு ஒரு நல்லது நடந்தா அதுக்காக நான் என்ன வேண்ணாலும் பண்ணுவேன்" மனதோடு போராடி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவள் வெளித்திண்ணையில் வடிவேலு எதற்கும் இருக்கட்டும் என நினைத்து வைத்துவிட்டுச் சென்ற அவரோட விசிட்டிங் கார்டை எடுத்தாள்.​

லீலாவின் செயலுக்கு காரணம் கேட்டனர் அவள் தங்கைகள்.​

"இதில் இருக்கிற விலாசத்துக்குப் போய், அவர்கிட்ட பேசப் போறேன். எல்லாம் சரியா அமைஞ்சா சீக்கிரமே என்னோட தங்கச்சிங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுப்பேன்..." புன்னகையுடன் சொன்னாள் லீலா...​

" என்னது தனியாப் போறியா? அதுவும் அவ்வளவு தூரம். முடியாது முடியாது. உன்னை அவ்வளவு தூரம் தனியா எல்லாம் அனுப்ப முடியாது.நீ போக முடிவு பண்ணிட்டா எல்லோரும் சேர்ந்து போகலாம்..." என்றாள் ருக்கு. மற்றவர்களும் அதையே சொல்ல இறுதியாக ஒப்புக்கொண்டாள் லீலா.​

இரண்டு நாட்கள் கழித்து ஒருநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து, இருப்பதிலே நல்ல உடையாக தேர்ந்தெடுத்து உடுத்திக்கொண்டு பஸ் ஏறி கோயம்புத்தூர் வந்து சேர மதியம் ஆகி விட்டிருந்தது அவர்கள் நால்வருக்கும்.​

ஹோட்டலில் சாப்பிட்டால் பணம் அதிகம் செலவாகிவிடும் என்று பயந்து தண்ணீரைக் குடித்துவிட்டு பட்டினியாகவே அலைந்தனர் நால்வரும்.​

ஒருவழியாக அந்த கார்டில் இருந்த அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து ராதா​

கன்ஸ்ட்ரக்ஷன் என்று இருந்த அந்த போர்டைப் படித்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் நால்வரும்.​

என்ன தான் நால்வரும் அவர்களிடம் இருப்பதிலே சிறந்த உடை அணிந்திருந்தாலும் அதுவும் பழையதாகத் தான் இருந்தது. அவர்களின் தோற்றம் அவர்களின் நடுத்தர வர்க்கத்தின் நிலையை படம் போட்டுக் காட்ட வாட்ச்மேன் ஒருவன் ஓடி வந்து, " ஹலோ ஹலோ யாரும்மா நீங்க... ஏதாவது டொனேஷன் கினேஷன் கேட்டு வந்தீங்களா? அதுக்கெல்லாம் இங்க வரக்கூடாது... போங்கம்மா அந்தப் பக்கம்..." என்றான் எடுத்த எடுப்பில்.​

வருங்கால மருமகள்களுக்கு வாசனையாய் கிடைத்தது வரவேற்பு.​

 

அத்தியாயம்--5​

"அடேய் தேங்கா மண்டையா யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற! என் அக்கா மட்டும் வடிவேல் சாரோட பையனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிச்சுட்டாங்கன்னு வைச்சிக்க, இப்ப நீ பேசின இந்த வார்த்தைக்காக ரொம்ப அனுபவிப்ப! அனுபவிக்க வைப்பா இந்த ஊர்மிளா" உள்ளுக்குள் கருவினாள் ஊர்மிளை.​

" இங்க பாருங்க சார், என்ன ஏதுன்னு விசாரிக்காம நீங்களே ஒருத்தரை ஜட்ஜ் பண்றது ரொம்பத் தப்பு. நாங்க ஒன்னும் பணஉதவி கேட்டு வரல. எங்களுக்கு அது தேவையும் இல்லை.​

இரண்டு நாள் முன்னாடி மிஸ்டர் வடிவேல் எங்களைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருந்தார். கொஞ்சம் தவறான புரிதலால என்னென்னமோ நடந்திடுச்சு. அதனால அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்க தான் வந்தோம். இனிமேலாவது கொஞ்சம் பார்த்து சுதாரிப்போட நடந்துக்கோங்க!" தான் கேட்ட கேள்வியால் ஏற்பட்ட கோபத்தையும் காட்டி, இனிமேல் இதைப் போன்ற தவறையும் செய்யாது இருங்கள் என்று இலவச அறிவுரை வேறு வழங்குகிறாளே யார் இந்தப் பெண் என்பதாய் வியந்து பார்த்தார் அவர்.​

" தேவகி, எல்லாத்தையும் எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அமைதியா இரு" லேசாக தங்கையை அடக்கிய லீலா வாட்ச்மேனை நோக்கி,​

" இங்க பாருங்க சார் உங்க வடிவேல் சார்கிட்ட லீலாவதியும் அவளோட மூணு தங்கச்சிங்களும் வந்திருக்காங்க. வர சொல்லவான்னு கேளுங்க!​

நீங்க போய் கேட்டுட்டு வர வரைக்கும், நாங்க வேணும் னா இங்கேயே வெயிட் பண்றோம்..." பொறுமையாகவே சொன்னாள்.​

வாட்ச்மேன் கேட்ட கேள்வியில் உண்மையில் அவள் அதிர்ந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும். அவசியம் ஏற்படாத வரை பிறந்த ஊரைக் கூடத் தாண்டாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய வளர்ந்த குழந்தைகள் அவர்கள் நால்வரும்.​

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இவ்வளவு தூரம் வந்து விட்டனர். முதன் முதலாக கிடைத்த வரவேற்பு முகம் சுழிப்பது போல் அமைந்தாலும், உடையை வைத்து மனிதரை எடை போடுவது காவலாளியின் குணமாக இருக்கலாம். அதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும், கோபப்பட வேண்டும் என்று தன்னைத் தானே சமாளித்துக்கொண்டாள். அது எவ்வளவு நேரம் தாங்கும் என்பது அவளுக்குமே தெரியாது! அந்த நாள் அவளுக்கு பல சோதனைகளை அள்ளித்தரக் காத்திருந்தது பாவம் அவளுக்கு எப்படித் தெரியும்.​

" பெரிய முதலாளி இன்னைக்கு வர மாட்டாராம் மா. அவருக்கு உடம்பு சரியில்லைன்னு இப்ப தான் அவரோட மூத்த பையன் டாக்டர் தம்பி வந்து சொன்னாரு.​

அந்தத் தம்பி உள்ள தான் இருக்காரு. அவரைப் போய் வேண்ணா பார்க்கிறீங்களா" என்றவண்ணம் வந்தார் இன்னொரு வாட்ச்மேன்.​

டாக்டர் தம்பி என்று சொன்னதும் லீலாவைத் மற்ற மூவருக்குள்ளும் ஒருவித உற்றாகம் பிறந்தது. அக்காவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் எப்படிப்பட்ட ஆண்மகனாக இருப்பான் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது அவர்களிடம்.​

மூன்று தங்கைகளுக்கும் இந்த இடம் பொருந்தி வருமா வராதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லீலா வந்திருக்க, இவர்களோ வடிவேல் சொன்ன செல்வராஜ் என்ற ஒருவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இவ்வளவு தூரம் வந்திருந்தனர். ஏனோ அவன் தான் தங்கள் மாமன் என சொல்லி வைத்தது போல மூவருக்கும் ஒரே நேரத்தில் அழுத்தமாய் தோன்றியது.​

தொலைக்காட்சியில் வரும் பல மொழி சீரியல்கள் தவிர, பெரிதாக வேறு ஒன்றும் அறியாத பெண்கள் மூவரும் தங்கள் மாமன் எந்த ஹீரோவைப் போல் இருப்பான் என பலவகை கற்பனையில் மூழ்கினர்.​

கற்பனை உலகத்தில் லீலாவுக்கு மணக்கோலம் பூட்டி மணமேடையில் வைத்து முகம் இல்லாத ஒருவன் கையால் தாலி கட்டிக்கொண்டு, அனைவரும் ஒரே வீட்டில் இருப்பதில் துவங்கி லீலாவின் குழந்தை வரை யோசித்து விட்டனர். லீலா அறியாத அவள் சகோதரிகள் மூவரின் பலநாள் ஏக்கம் இவை.​

லீலா வேலைக்கு என்று வெளியில் சென்ற உடன் ஆரம்பிக்கும் இந்த வகைப் பேச்சுச்கள். அக்காவை கட்டிக்கொள்ள போகிறவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், தங்களுடன் எப்படிப் பழக வேண்டும், தாங்கள் தங்களுடைய மாமனை எப்படியெல்லாம் கிண்டல் செய்ய வேண்டும், இதுதான் நாள் முழுக்க வீட்டில் இருக்கும் அவர்கள் நேரம் போவதற்காக பேசும் பேச்சுகளாக இருக்கும். என்னவோ தினமும் பேசினாலும் சலிக்காது அவர்களுக்கு. அக்கா லீலா அத்தனை முக்கியமானவள் அவர்களுக்கு. தங்களின் நெடுநாள் கனவு நிஜமாகப் போகும் தருணம் என ஆனந்தத்தில் அவர்கள் இருக்க லீலாவோ அதிகமாக தயங்கினாள்.​

வடிவேல் வந்து சென்ற அந்த இரண்டு நாட்கள் இடைவெளியில் தான் வேலை பார்க்கும் மில் ஓனர் உதவியுடன் பல ஆட்களைப் தொலைபேசியில் பிடித்து வடிவேலுவின் குடும்பத்தைப் பற்றி பல தகவல்களை சேகரித்து இருந்தாள். அனைவரும் சொல்லி வைத்தது போல் அவரையும் அவர் பெற்ற நான்கு பிள்ளைகளையும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளித் தீர்த்தனர்.​

உங்கள் குணம் பிடித்திருந்தது அதனால் பெண் கேட்டு வந்தேன் என வடிவேலு சொல்லி இருந்தால் கூட பணக்கார சம்பந்தம் வேண்டவே வேண்டாம் என முடிவுக்கு வந்திருப்பாள். ஆனால் வடிவேல் நாடி வந்தது இவர்களின் ஒற்றுமையைக் கண்டு அல்லவா! அது ஒன்று தான் அவளை மதில்மேல் பூனையாக நிற்க வைத்தது.​

அவளுடைய ஓனர் கூட, " நல்ல இடம் மாதிரி தான் தெரியுது லீலா! பணக்காரங்கன்னு பார்க்காத, அவங்களும் நம்மைப் போல மனிதர்கள் தான். உனக்கு இந்தத் தகவல்கள் முடிவு எடுக்க போதுமானதாக இல்லாமல் போனால் நேரில் போய் பார்த்துட்டு முடிவு எடு.​

ஆரம்பத்திலேயே கண்டதையும் யோசிச்சு முட்டுக்கட்டை போடுவதை விட சரியா தவறான்னு தெரிஞ்சுக்கும் வரை போராடிப் பார்த்துட்டா பின்னாடி எந்தக் குற்றவுணர்ச்சியும் தேவை இருக்காது பாரு!" என்றிருந்தார். அவருடைய வார்த்தைகள் சரியெனத் தோன்றவும் தான் தங்கைகளை அழைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்திருந்தாள்.​

இப்போது வடிவேலை பார்க்க முடியாதா? என மனம் சஞ்சலம் அடைந்த வேளையில், அந்த கேட்டை நோக்கி ஒரு கார் வந்தது.​

" இதோ சார் வந்துட்டாரு மா..." சந்தோஷத்துடன் சொன்னான் இரண்டாம் வாட்ச்மேன். அவனுக்கு ஜோசியம் தெரிந்து இவர்கள் தான் வருங்கால முதலாளிகள் என்று புரிந்து கொண்டானோ என்னவோ அவ்வளவு பணிவுடன் நடந்து கொண்டான் பெண்களிடம்.​

சற்று சோர்ந்து போன கண்களுடன் இவர்கள் நால்வரையும் கார் கண்ணாடி வழியே பார்த்த வடிவேலுவிற்கு கண்டிருந்த காய்ச்சல் போன இடம் தெரியவில்லை. ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பாகீரதனின் சந்தோஷத்தை ஒத்திருந்தது பெண்களை இங்கே வரவழைத்திருந்த வடிவேலின் சந்தோஷம்.​

வேகமாக காரில் இருந்து இறங்கியவர், " அம்மாடி லீலா! நீங்களா? நீங்க எப்படி இங்க, அதோட ஏன் இங்க நிக்கிறீங்க நேரா உள்ள வர வேண்டியது தானே" வாய்பேச பழகும் சிறு குழந்தையின் ஆர்வம் இருந்தது அவரின் வேகமான வார்த்தைகளில்.​

" பார்த்தியா எங்க அக்காவுக்கு கிடைக்கிற மரியாதையை!" என்ற லுக்கில் வாட்ச்மேனை பார்த்தாள் ஊர்மிளா.​

" அவன் ஏதாவது சொன்னானா மா. உள்ள விட மாட்டேன்னு பிரச்சனை பண்ணானா? சொல்லு இப்பவே அவன் சீட்டை கிளிச்சிடுறேன்..." என்றார் கோபத்துடன். ருக்கு அவன் சொன்னதை சொல்லப் போக ஊர்மிளா அவள் கரம் பற்றித் தடுத்தாள்.​

" அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களைப் பத்தி கேட்டதுக்கு உடம்பு சரியில்லை ஆபீஸ்க்கு லீவுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு அவ்வளவு தான்" என்று வழக்கமான ஹீரோயின் போல பெருந்தன்மையுடன் பேசினாள் லீலா.​

"ஓஓ... சரி சரி வாங்க, உள்ள வாங்க, அட வாங்கம்மா, ஏன் தயங்குறீங்க! இது உங்க ஆபீஸ் மாதிரி. வாங்க, கூச்சப்படாம வாங்க..." என்று நொடிக்கொரு வாங்க போட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் வடிவேல். அவருடைய இந்த ராஜ வரவேற்பு பெண்களுக்கு ஒருமாதிரி அசௌகர்யத்தைக் கொடுத்தது.​

மெயின் கதவைத் திறந்ததும் சில்லென்ற ஏசி காற்று முகத்தில் அடித்தது. ஏசியை டீவியில் மட்டுமே பார்த்திருந்த நால்வரும் அந்த பெரிய பில்டிங்கையும் அதில் வேலை செய்பவர்களின் மார்டன் உடையையும் பார்த்து தாங்கள் மட்டும் அந்த சூழ்நிலையில் தனித்து நிற்பது போல் உணர்ந்தனர்.​

அவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை தான். உடையிலும் பேசும் மொழியிலும் தான் நாகரிகம் இருப்பதாக நினைக்கும் ஆள் அல்ல அவர்கள். இப்படிச் சொல்வதை விட, இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும் அளவிற்கான சூழ்நிலையை இதுவரை அவர்கள் கடந்து வந்ததில்லை என்பதே உண்மை.​

மிகவும் எளிமையாக உண்மையைச் சொல்லப் போனால், தங்களின் அம்மாக்களைப் போல உடையணிந்து, காலம் காலமாக பல ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக வகுத்து வைத்திருக்கும் அனைத்து குணங்களையும் கச்சிதமாக உள்வாங்கி வந்திருக்கும், பரிட்சையம் இல்லாத நான்கு பெண்களையும் அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்ததோடு, அவர்களுடைய முதலாளி அந்தப் பெண்களிடம் இந்த அளவு பவ்யத்தோடு நடந்து கொள்வதைப் பார்த்து அவர்களுக்குள் என்ன உறவாக இருக்கும் என்று யோசிக்கவும் ஆரம்பித்தனர்.​

தனது கேபின் அருகே சென்றவர் உள்ளிருந்து ஆசை மகனின் கோபக்கனல் நிரம்பிய சத்தம் கேட்கவும் நேக்காக மருமகள்களை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்.​

ஏசியும், தாங்கள் இப்போது இருக்கும் தங்களுக்கு பொருத்தம் இல்லாத சூழ்நிலையும் அவர்களுக்கு நடுக்கத்தைத் தர முந்தானையால் பிறர் கவனம் அதிகம் கவராமல் கைகளை மூடிக்கொண்டனர்.​

" அடடே குளிருதா... இரும்மா நான் ஏசியை ஆப் பண்ணிடுறேன்" என தானே அதைச் செய்தவர் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவர்களை அமரச் செய்தார்.​

நல்லதாக நான்கு ஜூஸ் போட்டுக் கொண்டு வரச் சொல்லி உத்தரவு பிறப்பிக்க, இந்த சூழ்நிலையை நிறைய தமிழ் சினிமாக்களில் தவறாகக் காட்டி இருப்பதால் பயம் கொண்ட ருக்மணி லீலாவின் கரத்தைப் பிடித்துக்கொள்ள. லீலாவின் மீதான அவள் பிடியையும் மருண்ட பார்வையையும் வைத்தே அவளுடைய உள்ளத்தை கனித்தார் வடிவேலு.​

தன் குணத்தை தவறாக நினைக்கிறார்களே என்ற சங்கடம் எல்லாம் அவரிடம் இல்லை. நாள்தோரும் இதைப் போன்ற பல சம்பவங்கள் நடக்கிறது தானே. அதைக் குறித்து கவனமாக இருக்கிறார்களே என அந்த நிலையிலும் அவர்களின் பொறுப்பை தான் உள்ளுக்குள் மெச்சினார்.​

வடிவேல் இப்படித்தான், எதையும் நல்ல வகையில் மட்டுமே யோசிப்பார். ஆனால் அவர் பெற்று வைத்திருக்கும் இரத்தினங்கள் அவரைப் போல இருக்குமா எனக் கேட்டால் நிச்சயம் கிடையாது தான்.​

ட்ரேயில் ஆபீஸ் அசிஸ்டண்ட் வைத்து விட்டுப் போன ஜூஸ் கிளாஸ் ஒவ்வொன்றில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெற்று கண்ணாடி குவளையில் ஊற்றி அதைத் தானே குடித்தார்.​

" தப்பா எடுத்துக்காதீங்க மா, நேத்து நைட்டில் இருந்து காய்ச்சல், வாயெல்லாம் ஒரே கசப்பு. நான் எனக்கும் சேர்த்து ஜூஸ் கொண்டு வரச்சொன்னேன்னு என்னோட மூத்த பையனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான். அதான் இப்படிப் பண்ணேன்.நீங்க குடிங்க மா..." உங்களின் பயம் எனக்கு புரிந்தது, அதை போக்க வேண்டியது என்னுடைய கடமை. அதே நேரம் என் மீதான உங்கள் பயத்தை நான் புரிந்து கொண்டேன் என சொல்லி உங்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தவும் விருப்பம் இல்லை என்பதை சொல்லால் அல்லாமல் செயலால் காட்டினார்.​

அவர்களும் பயம் நீங்கியவர்களாக ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட தாங்கள் ஒருவர் எடுத்ததை, மற்றவருக்கு கொடுத்து நால்வரும் ஆளுக்கு ஒன்றாக பெற்றுக் கொண்டதைப் பார்த்த வடிவேலுவுக்கு மனமெல்லாம் நிறைந்தது. தான் எதிர்பார்த்தை ஒற்றுமையை விட இவர்களிடம் அதிக ஒற்றுமை இருக்கிறதே இது போதுமே எனக்கு என்பதாகத் தான் இருந்தது அவரின் எண்ணங்கள்.​

அவர் என்னவோ இது அனைத்தையும் சாதாரணமாகத் தான் செய்தார். ஆனால் இவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் லீலாவின் மனதில் அவர் மீதான மரியாதையை அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.​

சற்று நேரம் பொறுமையாய் இருந்த வடிவேலு மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார். " நீங்க இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்கன்னா நான் எதுக்காக உங்க வீட்டுக்கு வந்தேன்னு உங்களுக்குத் தெரிய வந்திருக்கணும்" அவர் லேசாக இழுக்க தானாக தலையசைத்தனர் பெண்கள் நால்வரும்.​

"என்னடா இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரன் நம்ம வீட்டு பொண்ணுங்களை மருமகளாக்க நினைக்கிறானேன்னு சந்தேகம் வருதா மா..." என்க மீண்டும் ஒரு தலையசைப்பு பெண்களிடம்.​

அதைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவர், " நாங்க பரம்பரை பரம்பரையா பணக்காரங்களா வாழ்ந்த குடும்பம் மா. என்னோட கொள்ளுக்கு கொள்ளுத்தாத்தா ஒரு ராஜா கிட்ட அமைச்சரா வேலை பார்த்தவர். ரொம்ப விசுவாசி. அவரோட விசுவாசத்துக்கு பரிசா ராஜா அவருக்கு நிறைய பரிசு கொடுத்து இருக்கார்.​

ஒரு முறை ராணியோட பிரசவத்தில் ரொம்ப சிக்கல் ஏற்பட்டு ராணி பிழைக்கிறதே கஷ்டம் னு சொன்னப்ப, எங்க கொள்ளுப்பாட்டி தான் ராணியையும் அடுத்த வாரிசையும் காப்பாத்திக் கொடுத்தாங்களாம்... ராஜாவுக்கு பல ராணிகள் இருந்தாலும் அந்த ராணின்னா அவ்வளவு இஷ்டமாம். அதனால தாத்தா பேரில் ஏகப்பட்ட சொத்துக்கள் ராஜா ராணி இரண்டு பேரும் போட்டி போட்டு வாங்கிக் கொடுத்திருக்காங்க.​

ராஜா ஆட்சிக்காலம் முடிஞ்சு வெள்ளையர்கள் காலம் வந்தப்ப குறிப்பிட்ட இடத்தை தவிர ராஜ வம்சத்தோட சொத்துக்கள் அத்தனையையும் பறிமுதல் பண்ணாங்க.​

எங்களோட சொத்துக்களையும் அபகரிக்க நினைச்சு இருக்காங்க. ஆனா எங்க தாத்தா கொஞ்சம் கவனமா வாய் வழியா சொன்ன வார்த்தைகள் எல்லாத்தையும் ராஜா ஆட்சியிலே பட்டயமா மாத்திட்டார்.​

எங்ககிட்ட இருந்த ராஜா சொத்துக்களை திரும்பக் கொடுக்கச் சொல்லி ஆர்டர் போட்டாங்க. நாங்க முடியாதுன்னு கோர்டுக்கு போனோம். இரண்டு தலைமுறையா கேஸ் நடந்தது. இந்த முறை வெள்ளையர்களுக்கு பதில் நம்ம சொந்த அரசாங்கத்தை நாங்க எதிர்க்க வேண்டி இருந்தது.​

முதன் முறையா எங்க அப்பா தலைமுறையில் எங்க குடும்பம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அந்த நேரத்தில் நாங்க எங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்கு வாழ்ந்தோம். அப்படி என்னோட தங்கச்சி காலனி வாழ்க்கை வாழ்ந்தப்ப தான் உங்க அப்பாவோட பழக்கம்.​

அப்புறம் கேஸ் எங்க பக்கம் தீர்ப்பாகிடுச்சி. எங்க இடத்தை எப்படியாவது அபகரிக்க நினைச்சவங்களுக்கு நல்ல பாடம் கிடைச்சது. அப்படி கிடைச்ச சொத்தில் வந்தது தான் மா இந்தக் கம்பெனி, இதோட சேர்த்து இன்னும் சில கம்பெனிகள் எல்லாம்.​

என் பசங்க நல்லபடியா வாழனும் அதுக்கு இன்னும் இன்னும் பணம் வேணும் னு பம்பரமா நான் சுத்திக்கிட்டு இருந்ததில் என் பசங்களை கவனிக்கத் தவறிட்டேன்.​

ஒழுக்கமான பிள்ளைகள் தான். ஆனா ஒற்றுமையில்லாத பிள்ளைகள்.​

வயசான காலத்தில் நாலு பசங்களும் நாலு திசைக்கும் எனக்குக் காவலா இருப்பாங்கன்னு பார்த்தா எப்படா வெட்டிக்கிட்டு ஓடலாம் னு பார்க்கிறாங்க.​

தசரத சக்கரவர்த்தி மாதிரி என்னோட உசுரே என் பசங்க தான் மா. அவங்க நாலு பேரும் ஒன்னா ஒற்றுமையா இருக்கிறதில் தான் என்னோட சந்தோஷம் நிம்மதி எல்லாமே இருக்கு.​

சாகப்போற கடைசிக் காலத்தில் பசங்க பேரப்பிள்ளைங்களோட சிரிப்பு சத்தத்தை காது நிறைய வாங்கி அதை இதயத்தில் நிறைச்சு சந்தோஷமா சாகணும். சாகும் போது துளி கூட சோகமே இல்லாத மனுசன் னு என்னை எல்லாரும் சொல்லணும். அதுதான் மா என்னோட ஆசை.​

அது நிறைவேற உங்களை மாதிரி பொண்ணுங்க தான் எனக்கு மருமகள்களா வரணும். உங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கு. அந்த ஒற்றுமையை நீங்க உங்களைக் கட்டிக்க போறவங்களுக்குள்ளும் கொண்டு வந்துட்டீங்கன்னா அதுவே எனக்குப் போதும் மா.​

என்னடா அவர் பக்கத்தில் உள்ள நியாயத்தை மட்டுமே பேசுறாரே தவிர நம்மளுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமா கஷ்டமான்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்கிறாரேன்னு நீங்க நினைக்கிறது எனக்குப் புரியாம இல்ல.​

என்னோட பசங்களை நிச்சயமா உங்களுக்குப் பிடிக்கும். நான் வயசுல பெரிய மனுஷன் எல்லா சூழ்நிலையிலும் நடுநிலையா இருக்கிறது தான் எனக்கு அழகு. என் பசங்களோட எதிர்காலத்துக்காக மட்டும் உங்ககிட்ட வரல..​

எப்படி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் பசங்களோட வாழ்க்கை சிறப்பா அமையுமோ அதே மாதிரி என் பசங்களைக் கட்டிக்கிட்டா உங்க வாழ்க்கையும் அற்புதமா அமையும் மா.​

சிலப் பணக்காரப் பசங்ககிட்ட இருக்கிற எந்தக் கெட்ட பழக்கமும் என் பசங்களுக்குக் கிடையாது மா. இதை நான் பெருமையா ஏன் கர்வமா கூட சொல்லுவேன்.​

உங்களோட ஆசைக்காக எதுக்காக இஷ்டம் இல்லாமல் அவங்க நாலு பேரையும் ஒன்றாக வைத்திருக்க ஆசைப்படுறீங்க அவங்க இஷ்டப்படி இருக்க விடலாமேன்னு நீங்க கேட்கலாம்! என் பசங்களுக்கு விவரம் தெரியாது மா, உண்மையான சந்தோஷம் எது பொய்யான சந்தோஷம் எதுன்னு புரியாம இருக்காங்க. அதை அவங்களுக்கு தெரியப்படுத்துவது ஒரு அப்பாவா என்னோட கடமை தானே!​

எத்தனை நாள் வேண்ணாலும் டைம் எடுத்துக்கோங்க. நாலு பேரும் சேர்ந்து நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க..." என்று தன் நீண்ட பிரசங்கத்தை முடித்துக்கொண்டார் வடிவேலு...​

லீலாவிற்கு முடிவெடுப்பதில் சற்று தயக்கம் இருந்தது. ஆனால் தங்கைகள் மூவரின் முகத்திலும் பேரார்வம் இருந்தது. அக்காவானவள் என்ன சொல்வாளோ என்று பயந்து போய் அமைதியாய் இருந்தனர்.​

அவர்களுடைய உண்மையான ஆவல் மூத்தவளான லீலாவிற்கு அமைய இருக்கும் நல்ல வாழ்க்கையைப் பற்றி தான். இந்த இடத்தில் முதல்முறையாக தன் தங்கைகளை தவறாகக் கணித்த லீலா அவர்கள் மூவருக்கும் நால்வரின் திருமணத்தில் சம்மதம் என்று தவறாக நினைத்துக்கொண்டாள்.​

அப்பொழுது கூட நால்வரும் இறுதி வரை ஒன்றாகவே இருப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்பதற்காகத் தான் திருமணத்திற்கு ஆவல் கொண்டுள்ளார்கள் மற்றபடி என் தங்கைகள் இந்த பணம் பகட்டிற்கு ஆசைப்படுபவர்கள் அல்ல என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவளிடம்.​

நான்கு ஆண்களைப் பற்றிய விசாரணையின் முடிவும் நல்லபடியாகவே வந்திருக்க, பணத்தை மதிக்காமல் குணத்தையும் ஒழுக்கத்தையும் மதிக்கும் வடிவேலுவின் குணமும் பிடித்துப் போக இதற்கு சம்மதித்தால் தான் என்ன என்றே தோன்றியது லீலாவுக்கு.​

என்ன நடந்தாலும் நால்வரும் ஒன்றாகத் தானே இருக்கப் போகிறோம். அவர்களுக்கு ஒன்று என்றால் எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்னும் நம்பிக்கையுடன், வடிவேலுவின் வேண்டுகோளிற்கு மேற்கொண்டு அவகாசம் கேட்காது சம்தித்தாள் லீலா.​

" ஹேய் அக்கா சம்மதம் சொல்லிட்டாங்க" தேவகி கத்திய கத்தில் அந்தக் கட்டிடமே அதிர்ந்தது என்று கூட சொல்லலாம்.​

" தேவகி, என்ன நீ!" லீலா சற்றே கோபம் கொள்ள... கலகலவென நகைத்த வடிவேல், " அட என்னம்மா நீ என்ன சின்ன மருமக அப்படி என்ன பண்ணிட்டான்னு அவளை அதட்டுற. சந்தோஷத்தில் சின்னதா சத்தம் போட்டா அவ்வளவு தானே.​

என் பசங்க நார்மலா பேசினாலே இந்தளவுக்கு சத்தம் வரும். அதிலும் உன் வருங்காலப் புருஷன் இருக்கான் பார். எவ்வளவு சாந்தமானவனோ அவ்வளவு கோவக்காரன். இவன் எல்லாம் எப்படி டா டாக்டரா இருக்கான்னு நானே பல தடவை ஆச்சர்யப்பட்டு இருக்கேன்." சந்தோஷ மிகுதியில் உண்மையெல்லாம் உளர ஆரம்பித்தார் வடிவேல்.​

" அப்ப உங்க பையனுக்கு ரொம்பக் கோவம் வருமா? கோவம் வந்தா அக்காவை அடிப்பாரா?" அடுத்தடுத்து கேள்விகள் வந்தது தேவகி ருக்கு இருவரிடம் இருந்தும்.​

" அய்யோ அடிப்பாரு அடிப்பாரு. என் அக்கா மேல என்னைக்காவது கையை வைச்சாரு அந்த கையை அடிச்சே உடைச்சிடுவேன். அப்புறம் அவர் இன்னொரு டாக்டர் கிட்ட தான் போய் வைத்தியம் பார்த்துக்கணும்" சிறுத்தையாய் சீறினாள் ஊர்மிளா.​

அவருடைய இடத்தில், அவர் முன்னால் அமர்ந்து கொண்டு அவருடைய பையனைப் பற்றியே தவறாகப் பேசுகிறாளே இவளை என்ன செய்வது என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் லீலா.​

அம்மாடி பொண்டாட்டி மேல கையை வைக்கும் அளவுக்கு என் பையன் இன்னும் வரல மா. அப்படி ஒருவேளை அவன் உங்க அக்காவை அடிச்சிட்டா நீங்க மூணு பேரும் சேர்ந்து அவனை அடி வெளுத்துக் கட்டுங்க நான் கண்டுக்க மாட்டேன்..." பெருந்தன்மையுடன் வடிவேலு சொல்ல அங்கே சிரிப்பொலி தாண்டவமாடியது.​

மீட்டிங் ஹாலிற்குள் இருந்து சிரிப்பு சத்தம் அதுவும் பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்கவும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புவதற்கு என்று கேபினை விட்டு வெளியே வந்த வடிவேலுவின் மூத்த சீமந்தப் புத்திரன் சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து வந்தான்.​

அவன் வருகையை கண்ணாடி கதவின் வழியாக கண்டுகொண்டவர்,​

" அம்மாடி உங்க மாமாவைப் பார்க்க ஆசைப்பட்டீங்க இல்ல! உங்க ஆசையை நிறைவேத்த எவ்வளவு வேகமா வரான்னு பாருங்க" சின்னப்புன்னகையுடன் வடிவேலு சொன்னவுடன் லீலாவைத் தவிர மற்ற மூவரின் கண்களும் அவன் தரிசனத்தைப் பெற ஆவல் கொண்டன.​

அவனுக்கு சொந்தமாகப் போகிறவளுக்கோ உடலும் உள்ளமும் பதட்டத்தில் நடுங்கியது. அந்த நேரம் வரை தங்கைகளுக்கு திருமணம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு செல்வாவின் வருகை அறிவிக்கப்பட்டதும் தான் தனக்குமே திருமணம் என்ற நினைப்பு வந்தது. ஒருநொடியில் உடலில் ஏதோதோ மாற்றங்கள் நடக்க, உயிருள்ள சிலையாகிப் போனாள்.​

கண நேரத்தில் தான் மறந்துவிட்ட மிகப்பெரிய விஷயம் நியாபகம் வந்தவராய், "கடவுளே இதை நான் மறந்துட்டனே. அம்மாடி என் மருமகள்களா உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். நீங்க நாலு பேரும் அக்கா தங்கச்சின்னு தெரிய வந்தா என் பசங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க.​

அதனால கல்யாணம் முடியுற வரைக்கும் உங்களைப் பத்தின உண்மை அவனுங்களுக்கு தெரியக் கூடாது. நல்லா இருப்பீங்க மூணு பேரும் எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கோங்க. ம்ம்ம் சீக்கிரம் அவன் வந்திடப் போறான்" அவசரப்படுத்தினார் வடிவேலு.​

முதலில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக நாங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் தான் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால் படபடக்கும் இதயத்துடன், கை கால்கள் நடுங்க வியர்த்து விறுவிறுக்க அமர்ந்திருந்தவரின் தோற்றம் அவர் கேட்டுக்கொண்டதை செய்யத் தூண்ட,​

மூவரும் ஒருசேர ஒரு பெரிய இருக்கையின் பின்னே மறைந்து கொண்டனர்.​

" ஒளிஞ்சிக்கிறதுல கூட ஒற்றுமையா! என் மருமகள்களுக்கு என் கண்ணே பட்டுடும் போல" நினைத்தாலும் அதுவும் பெருமையாகவே இருந்தது வடிவேலுவிற்கு. அந்த நொடியில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் செல்வராஜ்.​

ஐந்து அடி எட்டு அங்குலத்தில் மாநிறத்தில், கண்ணை உறுத்தாத நீல நிற உடையுடன் எதிர்வீட்டுப் பையன் போல் சாதாரணமாக அதே நேரம் மிகவும் இலட்சணமாக இருந்தான்.​

" அப்பா நீங்களா? நீங்க எதுக்காக இங்க வந்தீங்க. உங்களை நான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு தானே வந்தேன். உங்களுக்கு ஹை பீவர் இருக்கு பா. அம்மாவை ஏமாத்திட்டு விளையாடப் போற சின்னப் பையன் மாதிரி, நான் வீட்டை விட்டு வெளிய வந்த உடனே என் பின்னடியே வந்துட்டீங்களா" அவன் கத்திய கத்தில் பயந்து போய் எழுந்து நின்றாள் லீலா.​

அதே நேரம் சோபாவின் பின்னில் இருந்து ஒவ்வொரு தலையாக லேசாக எட்டிப் பார்த்தது. செல்வாவின் தோற்றம் அவர்களை ஈர்த்தது என்பது போல் மூவரின் முகத்திலும் ஒரு த்ருப்தி பாவம் தோன்றியது.​

தங்களின் அக்காவிற்கு சரியான துணை என்பதாய் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு மீண்டும் மறைந்து கொண்டனர்.​

தந்தையுடன் இருக்கும் பெண்ணை அப்பொழுது தான் கவனித்தவனாக,​

" ஸ்சாரிப்பா ஏதோ மீட்டிங்கில் இருந்தீங்க போல, நான் கவனிக்கல. ஆனாலும் நீங்க பண்ணது ரொம்பப் பெரிய தப்புப்பா" என்றான் இம்முறை சற்று தணிவாக அதே நேரம் அதில் லேசான கண்டிப்பும் இருந்தது.​

" செல்வா, இன்னைக்கு இந்தப் பொண்ணை வரச் சொல்லிட்டேன் டா. இந்தப் பொண்ணும் ரொம்ப தூரத்தில் இருந்து என்னைப் பார்க்க வந்துட்டா! கொஞ்ச நேரம் தானே பேசிட்டு உடனே வீட்டுக்கு வந்திடலாம் னு நினைச்சு வந்தேன்" தவறு செய்துவிட்டு தகப்பனிடம் மாட்டிக்கொண்ட குழந்தை போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார் வடிவேல்.​

" யார் இவங்க" மகன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கப் போகிறார் என லீலா யோசித்துக் கொண்டிருக்க அவரோ எதையும் யோசிக்காமல், " இவளைத் தான் செல்வா உனக்கு மனைவியா நான் தேர்ந்தெடுத்து இருக்கேன்..." வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயைப் போல விஷயத்தை ஒரே போடாக போட்டு உடைத்தார்.​

அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடி செல்வா லீலா இருவரின் கண்களும் ஒருமுறை தொட்டு மீண்டது.​

" ஹே அங்க பாருங்களேன் அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் மொமண்ட். சும்மா சொல்லக்கூடாது ஜோடிப் பொருத்தம் அமோகமா இருக்கு!" மனதின் சந்தோஷத்தை மெல்லிய வார்த்தைகளாய் வெளியிட்டு இருந்தாள் ஊர்மி.​

" அப்பா, என்ன பா திடீர்னு..." அவனுடைய அதிகாரக்குரல் காற்றில் கரைந்து போய்விட மென்மையான குரலில் கேட்டான் செல்வா.​

" செல்வா இந்தப் பொண்ணு பேரு லீலாவதி. பிஎஸ்சி கம்யூட்டர் படிச்சிருக்கா. ஒரு சின்ன கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலை செய்யுறா? அம்மா அப்பான்னு யாரும் கிடையாது.​

எனக்கு தெரிஞ்சவங்களோட சொந்தக்காரப் பொண்ணு. பொண்ணைப் பத்தி விசாரிச்சதில் எல்லாரும் ரொம்பவே நல்லவிதமா சொன்னாங்க. அதான் நேரில் வரச்சொன்னேன்.​

விசாரிச்சப்ப கிடைக்காத ஒரு த்ருப்தி இந்தப் பொண்ணை நேரில் பார்த்து பேசுறப்ப வந்துச்சு டா. நான் முடிவு பண்ணிட்டேன் இவ தான் என்னோட மூத்த மருமக. நீ என்னடா சொல்ற" என்றார் நேரடியாக, லீலாவுக்கு தான் சங்கோஜமாக இருந்தது. தன்னை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட பேச்சுகள் தேவை தானா! பொதுவாகவே நோ சொல்ல முடியாத சூழ்நிலையில் முக்கியமான கேள்விகள் கேட்கக் கூடாது என்று நினைப்பவளுக்கு வடிவேல் தன் மகனிடம் இதைத் தனியாகப் பேசி இருக்கலாம் என்றே தோன்றியது.​

" அப்பா எதுக்கு பா என்கிட்ட கேட்கிறீங்க. உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்க, நான் அதுக்கு கட்டுப்படுறேன்..." என்றான் செல்வா நல்ல பிள்ளையாக.​

" லீலா நீ என்னம்மா சொல்ற" அவனை வைத்துக் கொண்டே லீலாவிடம் கேட்டார் வடிவேலு.​

முதல் நொடி தவித்தாலும், " அம்மா அப்பா இல்லாத எங்களுக்கு இனி நீங்க தான் எல்லாம் னு நம்பி வந்து இருக்கோம். நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டு செஞ்சா போதும். மத்தபடி நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் கட்டுப்படுறேன்" சுற்றி வளைத்து தன் சம்மதத்தை சொன்னாள் லீலா.​

" அச்சச்சோ! அக்கா மாமாவைப் பார்த்ததும் இப்படி ப்யூஸ் போயிட்டியே. வார்த்தைக்கு வார்த்தை நாங்க நாங்கன்னு சொல்லி இப்படி எல்லாரையும் மாட்டி விட்டுட்டியே..." மெல்லிய குரலில் அக்காவை வறுத்தெடுத்தாள் ஊர்மிளா.​

அதே நேரத்தில் டேபிளில் இருந்த ஐந்து காலி டம்ளர்கள் செல்வாவின் கண்களுக்கு தட்டுப்பட்டது.​

 

அத்தியாயம்--6​

"அம்மா அப்பான்னு யாரும் இல்லைன்னு சொன்னீங்க! அப்புறம் எதுக்காக இத்தனை எம்ப்டி கிளாஸஸ். உண்மையை சொல்லுங்க ஜூஸ் நீங்க குடிச்சீங்களா?" விடாக்கண்டனாய் கேட்டவனைப் பார்த்து விழிவிரித்தவர், அவசரத்தில் மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டனே தனக்குள் நினைத்து புன்னகைத்து,​

" இவ்வளவு நாளா என் மருமகளைப் பார்த்துக்கிட்டவங்க இவளை மொத்தமா என்னோட பொறுப்பில் விட்டுட்டு போயிட்டாங்க..." வாய்க்கு வந்த எதையோ சொல்லி சமாளித்தார்.​

" விட்டுட்டு போயிட்டாங்கன்னா..." என்ன அர்த்தம் என்பது போல் புருவங்கள் விரிய, அகன்ற நென்றி இன்னும் விரிய பார்த்தான் செல்வா.​

அமாவாசைக்கு பிறந்த பையன் கேள்வி மேல கேள்வியா கேட்டு சாவடிக்கிறானே, மனதிற்குள் தான் பெற்ற ரத்தினத்தை செல்லமாகத் திட்டிக்கொண்டே, என்ன காரணம் சொல்லலாம் என தீவிரமாக யோசித்தார். அவருடைய பயம் அவருக்கு, இன்றிலிருந்து நான்கு திருமணங்களும் நல்லபடியாக நடந்து முடியும் வரை, ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து தான் வைக்க வேண்டும்.​

கொஞ்சம் சிதறினாலும் தான் பெற்ற நான்கு மக்கள், தன்னை நம்பி வந்திருக்கும் நான்கு பெண்கள் என என்வரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதனால் கூடுதல் பொறுப்பு வந்து சேர்ந்தது அவரின் தோள்களில்.​

" அப்பா நான் உங்ககிட்ட தான் பேசுறேன்" உரக்க குரல் கொடுத்து தன்னைப் பெற்றவரை சுயநினைவுக்கு கொண்டு வந்தான் செல்வா.​

" அடேய் அவசரத்துக்குப் பிறந்தவனே, எல்லாத்திலும் உனக்கு அவசரம் தானா? அப்பா ஒரு விஷயத்தை நம்மகிட்ட சொல்லத் தயங்குறாருன்னா அதில் ஏதாவது விஷயம் இருக்கும் னு யோசிக்க மாட்டியா?" வாய்க்கு வந்ததை உளறியவருக்கு சட்டென்று மகனை சமாளிக்க சரியான விஷயம் ஒன்று சிக்கிக்கொள்ள புன்னகையில் விரிந்தது அவரின் இதழ்கள்.​

நிமிர்ந்து உட்கார்ந்தவர் செல்வாவின் கண்ணோடு கண் பார்த்து, "கல்யாணத்துக்கு அப்புறம் இல்லை, இப்ப இருந்தே என் மருமக நம்ம வீட்டில் தான் இருக்கப் போறா. இதைத் தான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கத்தில் இருந்தேன்" செல்வா நம்பும்படியாக சொல்லிவிட்டோம் என்ற தற்பெருமையில் இருந்தவர் அதிர்ந்து உறைந்து போய் இருந்த லீலாவைக் கவனிக்கவே இல்லை.​

" இவ்வளவு தானா இதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா! என்னவோ போங்க. நான் ஹாஸ்பிட்டலுக்குப் போறேன்..." என்று கிளம்பப் பார்த்தான் அவன்.​

" அடி மெட்டல் மண்டையா! படிக்க மட்டும் தான் உன் மூளை வேலை செய்யுமா? நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு உன் கண் எதிரில் இருக்கா, இனிமேல் உன் கூட உன் வீட்டில் தான் இருக்கப் போறான்னு சொல்றேன். கொஞ்சம் கூட எதிர்வினையே காட்டாமல் இருக்க. நீ மனுஷன் தானா இல்ல ரோபோவா" உள்ளுக்குள் வறுத்து எடுத்தாலும் வெளியே, "டேய் என் மருமககிட்ட ஏதாவது பேசிட்டு போடா. நீ பாட்டுக்கு கிளம்பி யோயிட்டன்னா அவ என்ன நினைப்பா" மென்மையாக மகனுக்கு எடுத்து சொன்னார்.​

அதில் ஒருநொடி தடுமாறியவன் லீலாவின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவளோ என் கைவிரல்கள் தான் எவ்வளவு அழகு என்பதாய் அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.​

அவளுடைய தயக்கத்தை உணர்ந்தவன், " கல்யாணத்துக்கு அப்புறம் காலம் முழுக்க ஒன்னா தானே இருக்கப் போறோம். அப்ப பேசிக்கிறோம். சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க" லீலாவைப் பார்த்தே சொல்லி முடித்தவன், அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் வேக எட்டுக்களுடன் அறையைக் காலி செய்தான்.​

அவன் சென்றுவிட்டான் என்பது உறுதியானதும், ஒளிந்திருந்த இடத்தில் இருந்து பெண்கள் மூவரும் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.​

" என்ன மா, என் வீட்டு சீமாட்டிகளா? உங்க பெரிய மாமன் எப்படி இருக்கான். உங்க அக்காவுக்கு சரியா இருப்பானா?" கேள்வி கேள்வியாக இருந்தாலும் என் மகனைப் போல் யாரும் இல்லை என்ற கர்வம் அவருடைய முகத்தில் நன்றாகவே தெரிந்தது.​

" சூப்பரா இருக்காரு மாமா... அக்காவுக்கு ஏத்த ஜோடி. அக்காவைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சிட்டா வாயில் இருக்கிற முத்து உதிர்ந்திடுமா! அப்படி பேசாத ஊர்மி, மாமா கோபத்தில் கூட அழகா தான் இருக்காரு..." இவன் தான் தங்களுடைய மாமன் என்று உறுதி செய்துவிட்ட தோரணையில் தேவகி, ஊர்மி, ருக்கு மூவரும் வரிசையாக தங்கள் மன கருத்துக்களை சொல்ல, செல்வாவை ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடும் உரிமை பெற்ற லீலாவோ அமைதியாகவே இருந்தாள்.​

" என்ன மா எல்லாரும் அவங்க அவங்க கருத்தைச் சொல்லிட்டாங்க. கட்டிக்கப்போறவ நீ இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்க..." சற்று முன்னர் வரை, தன் மகனைப் பார்த்த படபடப்பில் இருந்த பெண் இப்போது ஆழ்கடலின் அமைதியுடன் அமர்ந்திருப்பதை கவனித்து, லேசான முக சுருக்கத்துடன் கேட்டார் வடிவேலு.​

" நீங்க இப்படி பண்ணலாமா மாமா!" வயதில் பெரியவர், மாமனாராகப் போகிறவர் என்ற தடுமாற்றம் தோன்றினாலும் மனசஞ்சலத்தை தனக்குள்ளே வைத்திருக்க வேண்டாம் என நினைத்து கேட்டே விட்டாள் பெண்.​

" இப்ப இருந்து நீ எங்க வீட்டில் தான் இருக்க போறன்னு உன்கிட்ட கூட கேட்காம, உன் முடிவை நானே எடுத்துட்டேனேன்னு தோணுதா?" தன் வயதின் அனுபவத்தில் மிகச் சரியாக பெண்ணின் மனதைப் படித்திருந்தார் வடிவேலு.​

அவள் அமைதியாக இருப்பதை வைத்தே இதுதான் விஷயம் என்று கணித்தவர், " உங்க அப்பா ஸ்தானத்திலிருந்து பார்த்துப்பேன்னு நான் சொன்னது சும்மா இல்லம்மா! அது என் ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள்.​

உன் அப்பா உனக்காக ஒரு முடிவெடுத்தா, அது நல்லதா கெட்டதா? அதை நிறைவேற்ற முடியுமா முடியாதான்னு யோசிப்பியா? இல்ல இப்படித் தான் என் விஷயத்தில் தலையிடுவீங்களான்னு அவர்கிட்ட கேட்பியா" வடிவேல் இப்படிக் கேட்டதும் லீலாவின் தலை தொங்கிவிட்டது.​

"எந்த உறவா இருந்தாலும் அங்க நம்பிக்கை பிராதானமா இருக்கணும். என் பையன் கிட்ட அப்படி சொல்லியிருந்தாலும் நான் நிச்சயமா உன்கிட்ட இதுக்கு சம்மதமான்னு கேட்டிருப்பேன்! நீ முடியாதுன்னு சொல்லி இருந்தா நிச்சயம் அதை ஏத்துக்கிட்டும் இருந்திருப்பேன்.​

லீலா, இன்னொருத்தங்க நம்ம கிட்ட காட்டும் உரிமையை, நாம எந்த விதத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் மா எல்லாமே இருக்கு.​

நம்ம இரண்டு குடும்பத்துக்கும் நடுவில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு உனக்கு சஞ்சலத்தை கொடுக்கும் தான், எனக்கு இது புரியாம இல்லை.​

ஊர், உறவு என்ன பேசும்! ஒருவேளை வரப்போகும் கணவனே நம்மிடம் இருக்கும் பணத்திற்காகத் தான் இவள் நம் மனைவியாக வந்தாளோ என நினைத்துவிட்டால் என்ன செய்வது இந்த மாதிரி பல சந்தேகங்களும், கவலைகளும் உனக்குள்ள இருக்கலாம். ஆனா இதுக்கு என்னால செய்ய முடிந்த ஒன்றே ஒன்று என்னையும் என் பசங்களையும் நம்புன்னு சொல்வது மட்டும் தான்.​

கேட்க ஆள் இல்லாத ஏழை வீட்டுப் பெண்களை மருமகள் என்ற பெயரில் கூட்டிக் கொண்டு போய் தங்கக்கூண்டில் சிறை வைத்து விடுவார்களோ! அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு, அவர்கள் சொற்படி வாழ்ந்து, நாம் நம் சுயத்தை இழக்க வேண்டியது வருமோ என்ற பயம் உனக்குள்ள இருக்கலாம். அதை சந்தேகம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஒன்னு புரிஞ்சுக்கோ இது எதுவுமே கொஞ்சம் கூட தவறே கிடையாது. எல்லாமே மனித இயல்பு தான்.​

கோபம், அழுகை, சந்தோஷம், வீரம், சபலம், சந்தேகம், பொறாமை என எல்லாமே கலந்தது தான் மனிதன்.​

பல நேரங்களில் இந்த உணர்வுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில நேரங்களில் நம்மையும் மீறி, வெளிவரத்தான் செய்யும். அது தப்பு கிடையாது. ஆனா அது அளவோடு இருக்கணும், அளவை மீறினா ஆபத்து தான்.​

இப்ப மாதிரி எந்த சூழ்நிலையிலும், எந்த விஷயத்திலும் உனக்குள்ள எந்த சஞ்சலம் வந்தாலும் அதை அப்பப்ப கேட்டு தெளிவுபடுத்திக்கோ! கட்டிக்கிட்ட புருஷனிடமோ அவன் குடும்பத்தினரிடமோ உனக்கு இல்லாத உரிமையா என்ன? இது நம்ம குடும்பம் என்ற நினைப்பு வந்துவிட்டால் இந்த ஏற்றத்தாழ்வு பெருசாத் தெரியாதும்மா.​

ஒரு நாட்டோட ராஜாவுக்கு நிச்சயம் பண்ணது சாதாரண குடும்பத்துக்கு பெண்ணா இருக்கலாம், ஆனா அவ ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் அவ ராணி. அதுக்கு ஏத்த மாதிரி அவளுக்கு சுமையும் பொறுப்பும் கூடத்தான் செய்யும். அதற்கு ஏற்றமாதிரி அவள் கொஞ்சம் தன்னை மாத்திக்க தான் வேணும். அந்த இடத்தில் நான் என் இயல்பை மாத்திக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ இல்லை எனக்காக கணவன் இறங்கி வந்தால் ஆகாதா? என்ற போர்க்கொடி பிடிப்பதும் சரியாக இருக்காது.​

ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பு. அதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா அமைதியா நகர்வதற்கு வாழ்க்கை நேர்கோடு கிடையாது. அது இன்பம், துன்பம் கலந்த மேடு பள்ளம் நிறைந்த தார்ச்சாலை மாதிரி.​

பொண்டாட்டி விட்டு கொடுக்க வேண்டிய இடங்கள் சில இருந்தா, புருஷன் விட்டுக் கொடுக்க வேண்டிய இடங்கள் சில இருக்கும். இந்த உலகில் எல்லாவற்றையும் விட கஷ்டமான பாடம் குடும்பம் நடத்தும் வித்தை தான்.​

சரியான புரிதலும், நம்பிக்கையும், உள்ளுக்குள் வரும் சந்தேகத்தையும் பயத்தையும் இணையிடம் தைரியமாக சொல்லும் உரிமைஉணர்வும் அவசியம் இருக்கணும்.​

புருஷனே உனக்கு தான் சொந்தம் என்று ஆன பிறகு அவன் செல்வத்தின் மீதோ, அவன் குடும்ப உறுப்பினர்களின் மீதோ உனக்கு உரிமை கிடையாதா?" தனக்குத் தெரிந்தவரை லீலாவின் சங்கடத்தை போக்க முயற்சித்த வடிவேலுவின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். லீலாவின் முகம் இப்போது கொஞ்சம் பிரகாசமாக இருந்தது.​

" இப்ப சொல்லும்மா லீலா, என் மூத்த மருமகளா என் வீட்டுக்கு வர சம்மதமா" நிச்சயம் சம்மதம் சொல்லிவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் முகம் மலர்ந்த புன்னகையுடன் கேட்டார் வடிவேல்.​

" நான் சொல்றதுக்கு என்ன மாமா இருக்கு. உங்க பையனுக்கு என்னைப் பிடிச்சா அது போதும்" என்றுவிட்டு தலைகுனிந்தாள். அதுநாள் வரையிலும் அவளுக்குள் தோன்றாத மணவாழ்க்கை கற்பனைகளில் சில அவளுக்குள் எட்டிப் பார்க்க நிலவு கண்ட தாமரையாய் முகம் தாழ்த்தினாள் லீலா.​

அவள் வெட்கம் புரிந்து, " உன்னை மாதிரி ஒருத்தியை யாருக்குத் தான் பிடிக்காம இருக்கும் சொல்லு. என் பையன் ரொம்பக் கொடுத்து வைச்சவன்" என்றவர், "சரி சரி வாங்க கிளம்பலாம்" என்றபடி தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்தார். எங்கே எதற்காக நாங்கள் அக்கா தங்கை என்ற விஷயத்தை உங்கள் மகன்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று கேட்டுவிடுவாளோ என்ற பயம். அதை விளக்குவதற்குள் உடலில் இருக்கும் ஆவி அணைந்துவிடும் என்ற மலைப்பும், அவர்களுக்குள் இருக்கும் அன்பின் அழகை எடுத்துச் சொன்னால் பெண்கள் பயந்துவிடுவார்களோ என்ற பயமும் அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது. லீலா சமயத்தில் அதை மறந்திருப்பது அவருக்கு சாதகமாக அமைந்து போனது.​

வடிவேல் கிளம்புவதைப் பார்த்ததும் இவர்களுக்கு எங்கே நம்மை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவாரோ என்ற பயம். அதனால், " எங்க மாமா" நால்வரும் கிட்டத்தட்ட கோரஸாகக் கேட்டனர்".​

"என்னம்மா எங்கன்னு கேட்கிறீங்க. நான் பெத்த தங்கத்தில் ஒன்னைத் தானே பார்த்து இருக்கீங்க. மத்த மூணைப் இன்னும் பார்க்கலையே.​

ஏன் மா ஊர்மி, ருக்கு, தேவகி உங்க அக்கா புருஷனை மட்டும் பார்த்தா போதுமா உங்க உங்க புருஷனை பார்க்க வேண்டாமா." வடிவேலு கேட்க இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பெண்கள்.​

பெண் பார்க்கும் படலம் போல இதென்ன மாப்பிள்ளை பார்க்கும் படலம் என நினைத்தவர்களுக்கு இது சங்கோஜமாக இருந்தது.​

" மாமா ப்ளீஸ் மாமா. இது எதுவும் வேண்டாமே, எங்க போட்டோ காட்டினா போதாதா" அப்பாவியாய் கேட்டாள் ருக்கு.​

" அட என்னம்மா நீ, அக்கா கட்டிக்கப் போறவனை பார்க்க இருந்த ஆர்வத்தில் பாதியாவது நீ கட்டிக்கப் போறவன் மேல இல்லாம இருக்க. உன்னைக் கட்டிக்கிட்டு தெய்வா என்ன பாடு படப் போறானோ தெரியலையே..." சன்னச்சிரிப்பு சிரித்தார் பெரியவர்.​

" இரண்டாவது மாமா பேரு தெய்வாவா. ரொம்ப நல்லா இருக்கு மாமா..." என்றனர் ஊர்மிளா தேவகி இருவரும். தெய்வத்தின் ருக்மணியோ அமைதியாகவே இருந்தாள்.​

" ருக்கு எதுக்காக இப்படி பயப்படுற. நீ கட்டிக்கப் போறவரைத் தானே பார்க்கப் போற. அப்புறம் என்ன டா. அக்கா இருக்கேன். பயப்படாதே." லீலா சொல்ல ருக்கு தலையைத் தலையை ஆட்டினாள்.​

" அட என்னம்மா நீ! உன் வருங்காலப் புருஷன் அதான் என்னோட இரண்டாவது மகன் தெய்வராஜ் ஒரு போலீஸ்காரன்.. போலீஸ்காரன் பொண்டாட்டி கொஞ்சமாச்சும் தைரியமா இருக்க வேண்டாம்." வடிவேலு சொன்ன அடுத்த நொடி...​

" ஹே! மாமா போலீஸா, சூப்பர். நான் இதுவரைக்கும் போலீஸை பக்கத்தில் கூட பார்த்ததில்லை. ருக்கு அக்காவின் உபயம் இனி தினமும் பார்க்கலாம்" உற்றாகத்துடன் சொன்னாள் தேவகி.​

"முதல் மாமா டாக்டர், இரண்டாவது மாமா போலீஸ்! வாரே வா... இனி காலத்துக்கும் வைத்தியமும் இலவசம், காவலும் இலவசமா" என்ற ஊர்மிக்கும் தன் இரண்டாம் மாமனைப் பார்க்கும் ஆசை வந்தது. ஆசையில்லாமல் போவது எல்லாம் தங்களுக்கு வரப்போகும் துணையைப் பார்ப்பதற்கு மட்டும் தான் போல.​

மற்ற மூவரும் தெய்வா போலீஸ் என்பதில் சந்தோஷம் கொள்ள ஒருத்தி மட்டும், " அக்கா! எனக்கு போலீஸ் எல்லாம் வேண்டாம் அக்கா. உனக்குத் தான் தெரியுமே எனக்கு போலீஸ்னாலே பயம். எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் அக்கா." ருக்கு எதையோ நினைத்து பயந்தவளாக லீலாவைக் கட்டிக்கொண்டு விசும்பினாள் ருக்கு.​

" சரி விடும்மா! இப்ப என்ன உன்னால போலீஸ் காரனை கல்யாணம் பண்ணிக்க முடியாது, அவ்வளவு தானே. உன்னைக் கட்டாயப்படுத்தி எதுவும் நடக்க வேண்டாம். என்னோட மத்த..." வடிவேலு வார்த்தையை முடிப்பதற்குள் இடையிட்டாள் லீலா.​

" மாமா, நீங்க பேசும் போது குறுக்க பேசுறதுக்காக மன்னிச்சிடுங்க. இவ ரொம்ப பயந்தவ. ஒரு தடவை யாரோ ஒரு போலீஸ்காரன் யாரையோ அடிக்கிறதைப் பார்த்து பயந்து போலீஸ்காரங்க என்றாலே தப்பானவங்க என்ற பிரம்மை இவ மனசில் ஒட்டிக்கிச்சு.​

அது விலகணும், இவளோட பயமும் குறையணும் அதுக்கு உங்க இரண்டாவது பையன் சரியா வரும். அதோட பேச்சுக்கு கூட ஜோடியை மாத்தாதீங்க" உறுதியாகச் சொன்னாள் லீலா.​

" அக்கா சொல்றது தான் சரி. ருக்குக்கா நீ தெய்வா மாமாவை தான் கல்யாணம் பண்ணக்கனும். போலீஸ் னா கையில் இலத்தியோடவும் துப்பக்கியோடவுமே எப்பவும் இருக்க மாட்டாங்க.​

வீட்டுக்கு வந்திட்டா அவங்களும் நம்மை மாதிரி சாதாரண மனுசங்க தான். மத்த எல்லாத்தையும் விடு, நாங்க மூணு பேரும் இங்க தானே இருக்கப் போறோம் அப்புறம் என்ன பயம். உன்னை மாமா ஏதாவது திட்டினாங்கன்னு வைச்சிக்க ஒரே குரல் ஊர்மின்னு கூப்பிடு நான் அவரை உண்டு இல்லைன்னு ஆக்கிடுறேன்." என்றாள் ஊர்மிளா.​

அடுத்து தேவகி, வடிவேல் மீண்டும் லீலா என ஆளாளுக்கு ஒன்று சொல்லி அவளை எப்படியோ சம்மதிக்க வைத்து அவளுடைய வருங்காலக் கணவனைப் பார்க்கவென்று அவன் இருக்கும் காவல் நிலையத்திற்கே புறப்பட்டனர்.​

" அக்கா எனக்கு பயமா இருக்கு கா... நீயும் என் கூட வாயேன்" கேட்ட ருக்குவை பரிதாபமாகப் பார்த்தாள் லீலா.​

சில நிமிடங்களுக்கு முன்னர் தான் எதற்காக நாங்கள் நால்வரும் அக்கா தங்கைகள் என்ற விஷயத்தை அவர்களிடம் சொல்லக்கூடாது என்று லீலா கேட்டு, அதையும் இதையும் சொல்லி எப்படியோ சமாளித்து முடித்தார் வடிவேலு. அதற்கே உயிர் போய் உயிர் வந்தது அவருக்கு.​

" ருக்கு மாமா சொன்னதை மறந்துட்டியா! கல்யாணம் முடியுற வரைக்கும் நாம அக்கா தங்கச்சிங்கன்னு அவங்களுக்கு தெரியக் கூடாது. அதனால இப்ப நாங்க உள்ள வர முடியாது. இங்க காரில் தான் இருப்போம் நாங்க. அதோட மாமா உன்கூடவே இருப்பாரு பயப்படாம போய் பார்த்துட்டு வா..." தங்கைக்கு தைரியம் கொடுத்தாள் லீலா.​

" அக்கா ப்ளீஸ் கொஞ்சம் சிரி. மாமா இப்படியே உன்னைப் பார்த்தா உனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னு நினைச்சிக்க போறாரு." என்றாள் தேவகி.​

சரியென்று தலையைத் தலையை ஆட்டிவிட்டு, குலசாமியை வேண்டிக்கொண்டு வடிவேல் பின்னால் நடுங்கும் கரத்தை முந்தானையில் மறைத்துக்கொண்டு காவல் நிலையத்தின் உள்ளே சென்றாள் ருக்மணி.​

அவள் நேரமோ என்னவோ சரியாக அவள் உள்ளே நுழையும் நேரம்,​

" ஏன்டா! உனக்கு என்ன தைரியம் இருந்தா ஏமாத்திப் பிழைக்கிறதை தொழிலா வைச்சிருப்ப. அடுத்தவங்களை ஏமாத்தி நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாம் னு நினைக்கிறியா?​

உன்னை மாதிரி ஆளுங்களைக் கண்டாலே எனக்குப் புடிக்காது. உன்னை அடிக்கிற அடியில் இனிமேல் நீ யாரையும் ஏமாத்த கனவில் கூட நினைக்கக் கூடாது" என கையில் மாட்டிய ஒருவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் தெய்வா.​

அவனை யாரோ என்று நினைத்தே நடுங்கிக் கொண்டிருந்த ருக்குவிடம்,​

" அம்மாடி ருக்கு இவன் தான் மா என் இரண்டாவது பையன் தெய்வா" என வடிவேலு காட்டவும் விழிகள் பிதுங்கி வெளியே வரும் அளவு அதிர்ச்சியுடன் அதிசயித்தவள் அவன் திரும்பி இருவரையும் பார்த்ததும் பயத்தில் மயங்கியே விழுந்துவிட்டாள்.​

 

அத்தியாயம்--7​

" அட! ருக்கு, ருக்மணி ஐயோ என்னம்மா ஆச்சு உனக்கு" இன்னும் துண்டிக்கப்படாமல் இருந்த அழைப்பின் வழியே வடிவேலுவின் சத்தம் கேட்டு உள்ளே ஓட முயற்சித்த லீலாவைத் தடுத்துப் பிடித்து நிறுத்தினாள் ஊர்மிளா. லீலா தவிப்புடன் அவளைப் பார்க்க வேண்டாம் என்பதாய் தலையசைத்தவள் தன் கரங்களின் மீதிருந்த தமக்கையின் கரங்களில் லேசான அழுத்தம் கொடுத்து விடுவித்தாள்.​

வடிவேலுவின் குரலில் கவனம் கலைந்து திரும்பிய தெய்வா அவர் அருகே வந்து, "நீங்க எங்க இங்க, காலையில் உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு செல்வா கத்திக்கிட்டு இருந்தான். இப்ப எப்படி இருக்கு" என நெற்றியில் கை வைத்துப்பார்த்தான். உடல் சூடு எப்போதும் போல் தான் இருந்தது. அவர் தான் எதிர்கால மருமகள்களைப் பார்த்ததில் இருந்து பத்து வயது குறைந்ததைப் போல் சுற்றுகிறாரே! சாதாரண சளிக்காய்ச்சல் அவரை என்ன செய்துவிடும். அதற்குப் பிறகு தான் அவர் கால் அருகே தரையில் மயங்கிய நிவையில் இருந்த ருக்குவின் மீது பார்வையை பதித்தான்.​

"ஆமா யாரு இந்தப் பொண்ணு. என்னாச்சு இவங்களுக்கு! மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க. கழுத்தில் தாலி வேற இல்லை. யார் மேலையும் கம்ப்ளைண்ட் கொடுக்க கூட்டிக்கிட்டு வந்தீங்களா?" பொறுப்பான காவல் ஆய்வாளனாக விசாரித்தான் தெய்வா.​

" அட அவசரத்துக்குப் பிறந்தவனே! உன் வாயில் வசம்பு வைச்சுத் தான் தேய்க்கணும். இவ என் இரண்டாவது மருமக டா. உன் கல்யாணத்துக்கு நான் பார்த்து இருக்கிற பொண்ணு" கத்திவிட்டு தவிப்பாய் ருக்குவைப் பார்த்தார்.​

" அப்பா என்னப்ப திடீர்னு சொல்றீங்க" அழகாக வெட்கம் வந்தது முரட்டு தெய்வராஜிற்கு.​

" அதெல்லாம் ரொம்ப நாளா பார்த்துட்டு தான் இருந்தேன். கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்தப் பொண்ணை உனக்குன்னு முடிவு பண்ணேன். சரி உன்னைக் காட்டலாம் னு கூட்டிட்டு வந்தா, நீ அரக்கன் மாதிரி கையில் மாட்டின ஒருத்தனைப் போட்டு அந்த அடி அடிக்கிற. எனக்கே பயமா இருந்தது. பாவம் பயந்த சுபாவம் உள்ள பொண்ணு டா. அதான் மயங்கிடுச்சு" லீலாவிற்கு என்ன பதில் சொல்வது என இப்பொழுதே தவிக்க ஆரம்பித்திருந்தார் பெரிய மனிதர்.​

தெய்வாவின் கண்கள் ருக்மணியின் முகத்தை மென்மையாய் வருடியது. சாந்த சொரூபிணியாய் கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் அம்மன் சிலை உயிர்பெற்று வந்தது போல் இருந்தவளைப் பார்த்ததும் இன்னதென்று இனம்புரியாத பரவசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சீறிப் பாய்ந்தது. இதெல்லாம் முழுதாக ஒரு நிமிடம் மட்டும் தான்.​

அடுத்த நிமிடம் முகத்தை பழையபடி கடுமையாய் மாற்றியவன் டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் சற்று வேகத்துடன் தெளித்தான்.​

விழித்தவள் இரு கரம் கொண்டு சில நொடிகளுக்கு கண்ணை கசக்கிவிட்டு எதிரே இருப்பவனைப் பார்த்தாள்.​

அவனைப் பார்த்ததும் அவன் அந்தக் கைதியைப் போட்டு அடித்த அடி நினைவுக்கு வர, "ஐயோ, நா... நான் எதுவும் பண்ணல, என்னை அடிச்சிடாதீங்க..." கைகளை முகத்திற்கு நேரே வைத்து அவன் பார்வையில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முயன்றாள்.​

" ஹலோ, ஹலோ... நான் எதுக்குங்க உங்களை அடிக்கப் போறேன். எதுக்கு இப்ப தேவையில்லாம என்னைப் பார்த்து பயப்படுறீங்க. நான் என்ன பேயா பிசாசா! உங்களை மாதிரியே இரண்டு கை, இரண்டு கால் இருக்கிற சாதாரண மனுஷன்..." இதைச் சொல்லும் போது தெய்வாவிற்கு லேசாக சிரிப்பு வந்தது, மீசை அடர்ந்த இதழுக்குள் மறைத்துக் கொண்டான்.​

" மாமா ப்ளீஸ், நான் வெளியே இருக்கேன்" என்றவள் அவர் பதில் சொல்லும் நேரம் வரை கூட காத்திருக்க விரும்பாமல், கடலைத் தேடி ஓடும் ஆறாக சகோதரிகளிடம் ஓடினாள்.​

" என்னப்பா என்னைப் பார்த்து இந்த ஓட்டம் ஓடுறாங்க!" புன்னகையுடன் சொன்னவனை முறைத்தவர், " உன் முரட்டுத்தனத்தை குறைச்சுக்கோன்னு பல முறை சொல்லி இருக்கேன். ஏன்னு இப்ப புரியுதா? ஏற்கனவே போலீஸ்காரங்க மேல ஏதோ ஒரு விதமான பயத்துல இருந்த பொண்ணு, நீ போலீஸ் னு சொன்னதும் ஓடப் பார்த்துச்சு.​

ஈரத்துணி போட்டு கோழியை அமுக்குற மாதிரி அதையும் இதையும் சொல்லி இங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா நீ தேன் கூட்ட கல்லால் அடிச்ச மாதிரி அந்தப் பொண்ணை தலைதெறிக்க ஓட விட்டுட்ட. இனிமே அந்த பொண்ணு சம்மதிக்குமோ என்னவோ! ஆண்டவா இவனுங்களுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கவே எனக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடு" என வேண்டிக்கொண்டார்.​

கசங்கிய உடை, தலைமுடி அனைத்தையும் சரி செய்துகொண்டே, "பத்து வருஷம் போதுமா? எனக்குப் பிறக்கப்போற குழந்தை வளர்ந்து, அவங்க கல்யாணத்தைப் பார்க்கிற வரைக்கும், நீங்க ஆரோக்கியமா இருக்க வேண்டாம். அதனால மறுபடியும் கடவுள் கிட்ட வேண்டுதலை மாத்தி வேண்டிக்க ஆரம்பிங்க, நான் போய் உங்க மருமகளை சமாதானப்படுத்துறேன்" என்றவனை மறித்தார் வடிவேல்.​

" எனக்குன்னு பார்த்த பொண்ணு தானே! நான் போய் பார்க்கிறேன்" நிதானமாகவே சொன்னான்.​

" டேய் பாவம் டா சின்னப் பொண்ணு, ரொம்ப பயந்திடுச்சு. இப்ப நீ போனா இன்னும் பயந்திடுவா. அவளுக்கு பக்குவமா எடுத்துச்சொல்லி இன்னொரு நாள் உன்கூட பேச வைக்கிறேன், என்ன" அப்பா நாளை உனக்கு நிச்சயம் ஐஸ் வாங்கித் தருகிறேன் என்ன என சின்னக்குழந்தையை ஏமாற்றுவது போல தெய்வாவை ஏமாற்றப்பார்த்தார். அவன் வித்தகனுக்கே வித்தகன், தந்தையின் செயலுக்கான காரணம் புரியாதவனா என்ன?​

"இந்தக் கதை எல்லாம் என்கிட்ட நடக்காது. இவங்க தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணி என்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லி தானே கூட்டிக்கிட்டு வந்தீங்க. அப்புறம் எதுக்கு என்னைப் பார்த்து இப்படி ஓடுறாங்க. என்னைப் பார்த்தா குழந்தைங்களை புடிச்சிக்கிட்டு போற பூச்சாண்டி மாதிரியா இருக்கு.​

நானே போய் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வரேன். மோர் ஓவர் கல்யாணத்துக்கு அப்புறம் என்னைப் பார்த்து அவங்க பயந்தா அப்பவும் நீங்களா வந்து சமாதானப் படுத்துவீங்க? அது அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க.​

அவங்களை சமாதானப்படுத்த இப்ப இருந்தே பயிற்சி எடுத்துக்கிறேன்" என்று தன் முழு சம்மதத்தை மறைமுகமாக சொல்லிவிட்டு ருக்குவைத் தேடிச்சென்றான் தெய்வா.​

தெய்வா தினமும் எத்தனையோ பெண்களை கடந்து வருபவன். அவன் மேல் மரியாதை கொண்டவர்களாக, அவன் மேல் ஆசைப் படுபவர்களாக, சில நேரம் அவன் மீது கோபப்படுபவர்களாக கூட அவன் பல பெண்களைப் பார்த்திருக்கிறான், தினம் தினம் பார்த்துக்கொண்டும் இருக்கிறான்.​

ஆனால், அவனைப் பார்த்து இந்தளவு பயம் கொள்ளும் பெண்ணை இதுவரை பார்த்ததும் இல்லை. அவன் பார்த்த பழகிய பெண்களில் இருந்து தனித்து தெரிந்தாள் தெய்வா. ருக்குவைப் போன்ற அழகியையும் அவன் இதுவரை பார்த்தது இல்லை. ஈரெதிர் துருவங்கள் இணையும் என்ற இயற்பியல் கோட்பாடு தங்கள் விஷயத்திலும் நடந்ததை நினைத்து சங்கோஜப்பட்டுக்கொண்டே நடந்தான்.​

அவள் அழகிலும், குழந்தைத்தனமான பயத்திலும் முதல் அறிமுகத்திலே தன்னைத் தொலைத்துவிட துடித்தான். அவனுக்கு அவன் மீது உள்ள நம்பிக்கையை விட தகப்பன் மீது நம்பிக்கை அதிகம். அதனால் அவர் தேர்ந்தெடுத்த பெண்ணின் மீது தன் நம்பிக்கையை அழுத்தமாகவே பதித்து விட்டான். பெண்கள் மறைக்கும் உண்மை வெளிவரும் தருணம் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்பட போவது இவன் தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.​

ருக்கு... ருக்குமணி அவள் பெயரை லேசாகப் புன்னகைத்த இதழ்களுடன் சொல்லிப்பார்த்தான். பெயரே தித்தித்தது. அவள் தன் மனைவியாகப் போகிறவள், ஆதலால் இனி அவள் தன்னைப் பார்த்து பயம் கொள்ளக்கூடாது என்ற உரிமை பொங்கி எழவும் தான் அவளைத் தேடி தானே வந்தான்.​

கால்கள் ஸிக்ஸேக்கில் பின்னிக்கொள்ள நடப்பதே ஏதோ பறப்பது போல் இருந்தது. முகத்தில் பூத்த புது புன்னகையுடன் சுற்றியும் முற்றியும் தன்னவளைத் தேடியவன் அவள் எங்கும் இல்லாததைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் தன் அப்பாவின் வண்டியில் புடவை முந்தானை ஒன்று வெளியே தெரிய கதவு அடைக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று அறிந்துகொண்டு காரின் அருகில் சென்றான்.​

ஆனால், உண்மையில் அது லீலாவின் புடவை முந்தானை. ஸ்டேஷனுக்குள் இருந்து அழுகையுடன் ஓடி வந்தவள் வாகனத்தின் கதவைத் திறந்துகொண்டு போராடி தன் பாசமான அக்காவிற்கும் தைரியமான தங்கை ஊர்மிளாவுக்கும் இடையே அமர்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள். இந்த ஆர்ப்பாட்டங்களில் லீலாவின் புடவையோடு சேர்த்து காரின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது.​

" அக்கா, எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் கா. எனக்கு அவரைப் பார்க்கவே பயமா இருக்கு. உள்ளே ஒருத்தனைப் போட்டு அந்த அடி அடிக்கிறார். அந்த அடியில் ஒரு அடி என் மேல விழுந்தாக் கூட நான் அங்கேயே செத்திடுவேன் அக்கா.​

ப்ளீஸ் கா! மாமாகிட்ட சொல்லுங்க, எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்" மிட்டாயை எதிரியிடம் பறிகொடுத்த குழந்தையின் நிலையில் பதறி அழுபவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட லீலா அவள் முதுகைத் தேய்த்து விட்டு ஆசுவாசப்படுத்த துவங்கினாள்.​

அந்த நேரம் கார் கதவின் கண்ணாடி தட்டப்பட பின்சீட்டில் இருந்த மூவர் முன்சீட்டில் இருந்த தேவகி என நால்வரும் ஒரே நேரத்தில் பதற்றமாகினர்.​

இவர்களின் நல்லநேரம் இவர்களால் வெளியே நிற்பவனைப் பார்க்க முடிந்தது, ஆனால் அவனால் உள் இருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை.​

" யார் இந்த போலீஸ்" ஊர்மி யோசனையாக கேட்க, " இவர் தான் நான் சொன்ன ரவுடி போலீஸ்" சகோதரிகள் உடன் இருக்கும் தைரியத்தில் நான்கு வார்த்தை சேர்ந்தார் போல வந்தது ருக்குவிற்கு.​

" ஹேய்! என்ன பேச்சு இது, அவர் உன்னைத் தேடி தான் வந்து இருக்கார் போல! போய் அவர்கிட்ட பேசு..." என்ற லீலாவிடம் கண்டிப்பான தந்தையின் தோரணை இருந்தது.​

" என்ன அக்கா விளையாடுறியா?" என்னால முடியாது, மரியாதை காற்றில் பறந்தது.​

" ப்ச்... அக்கா அங்க பாரு மாமா எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே நிக்கிறாருன்னு. நீ என்னமோ வில்லன் ரேன்ஞ்சுக்கு பில்டப் பண்ண. ஆனா மாமாவைப் பாரு எவ்வளவு அழகா கியூட்டா ரொமேன்டிக் ஹீரோ மாதிரி இருக்காரு..." போலீஸ் மாமனின் தோற்றம் பிடித்துப்போக, ருக்குவிற்கு அருகில் அவன் நின்றால் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்குமே, கற்பனையே இனிப்பு சாகரத்தில் அவளை மூழ்கடிக்க தேவகிக்கு தெய்வாவை பிடித்துவிட்டது. ஆனால் மணப்பெண்ணே இதைக் கெடுத்துவிடுவாள் போலவே என்ற கடுப்பில் பேசினாள்.​

" அப்ப அவரை நீயே கட்டிக்கோ போ..." சாதாரணமாக பேசிய ருக்கு அறிய மாட்டாள், என்ன தான் கோபமானவனாக இருந்தாலும் சகோதரர் நால்வரில் தெய்வா தான் சரியான லவ்வர் பாய் என்று.​

" ருக்கு! என்ன பேச்சு இது, அக்கா நான் சொல்றேன். அவர்கிட்ட போய் பேசு. பயப்படாம பேசு. அதுக்கு அப்புறமும் உனக்கு கல்யாணம் வேண்டாம் னு தோணுச்சுன்னா நான் மாமா கிட்ட பேசுறேன். உன்னோட சம்மதம் இல்லாம அக்கா உனக்கு எதையும் கொடுக்க மாட்டேன். இப்ப போய் பேசு..." ஒருவழியாக சமாளித்து, தண்ணீர் குடிக்க வைத்து, அழுத அவள் முகத்தை அழுந்த துடைத்து, தலைமுடியை ஒதுக்கி பொட்டை நேர்படுத்தி வெளியே நிற்கும் தெய்வாவின் கவனம் சிதறும் நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள் லீலா.​

அந்நேரத்தில் சரியாக அவனுக்கு ஒரு போன் வர அதை எடுத்துக்கொண்டு சற்று தூரம் நகர்ந்தான். அந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி தாங்கள் இருப்பது வெளியே தெரியாமல் ருக்குவை வெளியே அனுப்பி வைத்தாள் லீலா.​

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் திரும்பிய தெய்வா ருக்குவைப் பார்த்ததும் புன்னகைத்தபடி அவள் அருகே வந்தான்.​

அவன் அருகே வந்ததும் அவள் இதயம் தன் துடிப்பை அதிகமாக்க சேலை முந்தானையை முன்னால் கொண்டு வந்து தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கசக்கினாள். தலை வேறு பூமியைப் பார்த்தவாறு நின்று கொண்டு நிமிர்வேனா என அடம்பிடித்தது.​

" ரொம்ப நெர்வஸா இருக்கீங்களா? நான் வேணும் னா காரில் இருந்து தண்ணீர் எடுத்துத் தரவா" பேச்சை ஆரம்பித்த தெய்வா காரின் முன்பக்க கதவில் கை வைக்க, பதறிப்போன ருக்கு, 'இல்ல' என கத்திவிட்டு,​

" அதுவந்து, வந்து... நான் என்ன சொல்ல வந்தேன்னா எனக்கு தண்ணீர் வேண்டாம்..." என்றாள் திக்கித்திணறி. இரண்டே வரி தான் இதைச் சொல்வதற்கே சிலமுறை புதிதாய் பிறந்த சிசுவைப் போல் தடுமாறினாள் பெண்.​

தன் அருகாமையில் அவளுடைய தடுமாற்றத்தை இரசித்த தெய்வா,​

" நானும் நெர்வஸா தாங்க இருக்கேன். எனக்குத் தண்ணீர் வேணும்." என்றவாறு காரை நெருங்கினான்.​

" இல்ல, அதுவந்து, ஆங் காரில் தண்ணீர் இல்லை..." எப்படியும் தன் சகோதரிகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற நினைப்பில் பயத்தை குறைத்து பேச்சை வளர்த்தாள்.​

" நீங்க சரியா பார்த்து இருக்க மாட்டீங்க. அப்பா காரில் எப்பவும் தண்ணீர் வைச்சிருப்பாரு." என்றவண்ணம் காரின் முன்பக்க கதவைத் திறந்தே விட்டான் தெய்வா.​

" போச்சு டா நாம மாட்டினோம்." என்பது போல் காரில் இருந்த இவர்கள் மூவரும் முழிக்க ஆரம்பித்தனர்.​

 

அத்தியாயம்--8​

எங்கே தெய்வா தன்னுடைய சகோதரிகளைப் பார்த்துவிடுவானோ என்ற பயத்தில், அதுநாள் வரை செய்யாத ஒரு செயலை செய்தாள் ருக்கு, அதுதான் திருட்டுத்தனம்.​

" அம்மா" லேசான அலறலுடன் தன் காலைத் தூக்கிக்கொண்டு,​

ஓடுமீன் ஓட உறுமீன் வருமென காத்திருந்த கொக்கைப் போல, தெய்வா தன்னிடம் வந்துவிட வேண்டும் என்ற தவிப்புடன் அவன் இருக்கும் திசையைப் பார்த்தாள் அவள்.​

ஊசி முனையின் மீது ஒற்றைக்காலில் தவம் செய்து சிவனை கணவனாய் பெற்றார் பார்வதி. அதே போல் இங்கே ஒற்றைக்கால் தவத்தில் தெய்வா என்னும் கொடுவா மீசைக்காரனை தனக்கே தெரியாமல் மொத்தமாய் தன்னுள் சுருட்டிக் கொண்டிருந்தாள் பெண்.​

" என்னாச்சு... என்னாச்சுங்க..." இவன் பதறியபடி அவளை நோக்கி வந்த இடைவெளியில் உள்ளிருந்த தேவகி கார் கதவை சாத்திவிட்டாள். அதன் பிறகே நிம்மதிப் பெருமூச்சு வந்தது சகோதரிகளிடம்.​

" அக்கா பாரேன். ருக்கு அக்காவுக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா என்ன! எவ்வளவு நேக்கா மாமாகிட்ட இருந்து நம்மைக் காப்பாத்திட்டா" ஆச்சர்யத்துடன் சொன்னாள் தேவகி.​

" ருக்கு திறமைசாலி, என்ன கொஞ்சம் பயம் தான் அதிகம், இவரோட வாழப் போற வாழ்க்கையால அவளோட பயம் தெளிந்து என் பழைய ருக்குவா கிடைச்சா நல்லா இருக்கும்" என்ற லீலாவிடம் இருந்து லேசான பெருமூச்சு. ஊர்மி தேவகி இருவரும் அவள் தோளில் கை வைக்க சின்னதாய் புன்னகைத்து நான் நலம் என சைகையால் வெளிப்படுத்தினாள்.​

" என்னாச்சுங்க.. என்னாச்சு..." பதறிப்போய் தன்னிடம் ஓடிவந்த தெய்வாவிடம் பப்பி பேஸைக் காட்டி,​

" எறும்பு கடிச்சிடுச்சி" என்றாள் குழந்தையைப் போல். அவளின் குழந்தைத் தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.​

அவளை இரசித்ததில் தண்ணீர் குடிக்காமலே அவன் தாகம் தீர்ந்ததைப் போல் அமைதியாய் அவளையே பார்த்தவண்ணம் அவன் நின்றிருக்க அவளோ நிலத்தைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள்.​

" ஆச்சு" என்ற ஊர்மிளா திரும்பி தன் சகோதரிகள் இருவரையும் பார்த்து கண்ணடித்தாள்.​

" என்ன ஆச்சு" லீலா கேட்க, சின்னப்புன்னகையுடன், "இரண்டு பேரும் சிலை மாதிரி நின்னு ஐந்து நிமிஷம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தாங்கன்னா புதுசா இரண்டு சிலை நிப்பாட்டி இருக்காங்க. நமக்கு ரொம்ப வசதியா இருக்கும் னு காக்கா குருவி எல்லாம் குடும்பத்தோட இந்தப்பக்கம் வந்திடும்" சொல்லிவிட்டு சன்னமாய் சிரித்தாள்.​

" என்னங்க" தயக்கத்தை விடுத்து ருக்கு தான் முதலில் அவனை அழைத்தாள்.​

" சொல்லுங்க" ஹஸ்கி வாய்ஸ்ஸில் அவளைப் போலவே சொன்னவன் லேசாக செருமி நிதானத்துக்கு வந்தான்.​

ருக்கு தன் வருங்கால மனைவி என வடிவேல் சொன்ன நேரத்தில் இருந்து தன்னுள் எழுந்த மாற்றங்களை தன்னாலே நம்ப முடியாமல் ஒரு மாதிரி பூரிப்புடன் இருந்தான் தெய்வா. புவிஈர்ப்புவிசையை எதிர்த்து, உடல் இறகை விட லேசாகிப் போன காரணத்தால் காற்றில் மிதப்பது போல் தோன்றவும், பிடறி முடியை கலைத்துவிட்டு கீழிறங்கி வந்தான். இம்மாதிரியான அனுபவங்கள் புதிதாகவும் இருந்தது பிடித்திருக்கவும் செய்தது.​

" மாமா எங்க" அவள் கேட்ட ஒற்றைக் கேள்வியில், புஸ்ஸ்... பஞ்சர் ஆன டயரைப் போல பெருமூச்சுவிட்டவன்,​

" நீங்க என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தீங்க. நமக்குள்ள பேசிக்கிறதுக்கு நிறைய இருக்கு. அப்படி இருக்க தேவையில்லாம அவரை ஏன் தேடுறீங்க.​

வயசானவரு, உடம்பு சரியில்லாதவரு, சுகர் பேஷண்ட் வேற, எங்கேயாவது உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருப்பாரு. அவர் அப்படியே இருக்கட்டும். நாம நம்மைப் பத்தி கொஞ்சம் பேசிக்கலாமே" தன் ஒட்டுமொத்த ஆசையை ஒன்று திரட்டிக் கேட்டான் தெய்வா.​

ருக்குவிற்கு இவன் புதிதாய் தெரிந்தான். உண்மையில் கோவத்தில் உள்ளே ஒருவனை மிதி மிதியென்று மிதித்த அவன் தான் இவனா! உள்ளே காட்டிய முகம் உண்மையா? இல்லை இந்த முகம் உண்மையா? யோசனையுடன் அவள் அவனையே பார்க்கவும், லேசாக வெட்கத்துடன் புன்னகைத்தவன் தொடர்ந்தான்.​

" நான் அழகுன்னு எனக்குத் தெரியும். ஆனா நீங்க இப்படி என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா நான் பேரழகன் என்ற நினைப்பு வருது" என்றபடி கலைந்திருந்த தலைமுடியை கலைத்து மீண்டும் சரிசெய்தான்.​

" அது தான் உண்மையும் கூட" என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் ருக்மணி. அவளுடைய அந்த நினைப்பு அவளுக்குள் வெட்கத்தை பூக்கச் செய்ய அவள் கன்னங்கள் இரண்டும் ரோஸ் பவுடர் பூசியது போல் சிவப்பாகியது.​

" ஐயோ, ஐயோ இவ்வளவு அழகா நீங்க!" சொக்கியே போய்விட்டான் தெய்வா. பெண்களே பேரழகு தான், தன்னவனிடம் வெட்கப்பட்டு நிற்கும் பெண்கள் தேவலோக அரம்பையர்களை விட அழகு, என என்றோ ஒருநாள் ஒரு கவிதை படித்த நினைவு வந்து அது உண்மை தான் போல என நினைக்க வைத்தது தெய்வாவை.​

" நா.. நான்... போகணும்... மாமா... மாமாவை வரச் சொல்லுங்க" என்றாள் திக்கித்திணறி.​

" சொல்லிடுறேன், சொல்லிடுறேன்! சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னதா சொல்லிடுறேன்" என்றான் தெய்வா.​

" நான் ஒன்னும் அப்படி சொல்லவே இல்லையே" வேகமாய் ருக்கு இடையில் வரவும், வார்த்தையால சொன்னா தான் ஆச்சா, நீங்க வாய்திறந்து சொல்லல தான், ஆனா உங்க கன்னம் இரண்டும் பதில் சொல்லிடுச்சி" என்றான் அவள் வெட்கத்தை இரசிக்கும் கலாரசிகனாய்.​

அவன் முகம் பார்க்க நாணி அவள் திரும்பி நின்று கொள்ள அவள் பின்னழகும் அவனை இம்சிக்கவே செய்தது. காதல் பைத்தியம் பிடித்தால் இணையின் வெட்டிப்போட்ட நகக்கண் கூட பொக்கிஷமாய் தெரியுமாம். தெய்வாவும் வெற்றிகரமாக பார்த்த சில நொடிகளில் காதல் புதைகுழியில் விழ அது இன்னும் இன்னும் அவனை ஆழமாய் உள்ளிழுக்குமே தவிர, அதில் இருந்து அவனை தப்பிக்க விடவே விடாது.​

"இங்க பாருங்க ருக்கு, உண்மையை சொல்றேன் எனக்கு உங்களை அப்படியே ஹக் பண்ணிக்கனும் னு தோணுது.​

இந்த மாதிரி நினைப்பு எல்லாம் எந்தப் பொண்ணு மேலையும் இதுவரைக்கும் வந்ததே இல்லை. என்னை ரொம்பவே சோதிக்கிறீங்க. பெட்டர் நான் இப்ப போய் அப்பாவை வரச் சொல்றேன்" என்றுவிட்டு புதுவித துள்ளலுடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் தெய்வா.​

அங்கே ஆர்வமாய் பப்ஜி ஆடிக் கொண்டிருந்தார் வடிவேலு. அவரை எழுப்பி நிற்க வைத்தவன், " அப்பா அப்பா அப்பா, எனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்ககிட்ட கொடுத்ததை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன். தேவதை மாதிரி ஒரு பொண்ணை எனக்காக செலக்ட் பண்ணி இருக்கீங்க! தேங்க் யூ சோ மச் அப்பா.​

எனக்கு அவங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு பண்ணுங்க" உற்றாகமாய் சொன்னான் தெய்வா.​

" டேய் என் மருமக சொக்கத்தங்கம் டா. அவளை யாருக்குத் தான் பிடிக்காது. ஆனா அவளுக்கு அம்மா அப்பான்னு யாரும் கிடையாது. அவங்க எல்லாம் தவறிப்போய் ரொம்ப வருஷமாகுது. இனிமே நீயும் நானும் தான் அவளுக்கு எல்லாமே" என்ற வடிவேலு, அடுத்து ஏதோ சொல்ல வர அதைக் கேட்பதற்கு அவன் அங்கே இல்லை.​

மீண்டும் ருக்குவைத் தேடி ஓடி வந்தவன், காரில் ஏறுவதற்கு தயாராக நின்ற பெண்ணைப் பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தான்.​

பட்டப் பகலில், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் தானே வேலை செய்யும் ஸ்டேஷன் வாசலில் இப்படி செய்கிறோம் என்ற நினைப்பு துளியும் இல்லாமல் அவளை தன்னோடு மேலும் மேலும் இறுக்கினான்.​

இதுவரை பழக்கமில்லாத ஒன்று என்பதால் அவள் மேனி நடுங்கத் துவங்கியது. தன்னை அணைத்திருந்தவன் பிடியில் இருந்து வெளிவர துடித்தாள், அதை உணர்ந்து அவளை தன்னை விட்டு விலக்கியவன், " உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க. இனி உங்களுக்கு எல்லாமே நான் தான். உங்களை எனக்கு மனைவியா தேர்ந்தெடுத்ததுக்காக கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பாவை பாராட்டினேன்.​

ஆனா இப்ப எனக்கு அவரைத் திட்டணும் போல இருக்கு. ரொம்ப ரொம்ப திட்டணும் போல இருக்கு. உங்களை ரொம்ப நாளுக்கு முன்னாடியே என்னோட வாழ்க்கையில் கொண்டு வந்து இருக்கணும் அவரு. தப்புப் பண்ணிட்டாரு.​

சரி இனியும் ஒன்னும் கெட்டுப் போகல. இந்த உலகத்தில் எந்த ஒரு பொண்ணும் உங்க அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டா. அந்த அளவுக்கு நான் உங்களைப் பார்த்துப்பேன். என்னை நீங்க நம்பணும்" என்றுவிட்டு அவள் எதிர்பாரா நேரம் நெற்றியில் மென்முத்தம் பதிக்க அவள் சிலையாய் சமைந்துவிட்டாள்.​

உங்களோட அனுமதி இல்லாம நடந்திடுச்சேன்னு தப்பா நினைக்க வேண்டாம், என் மனசில் நான், நீங்க என்ற ஒருமை நிலை மாறி பன்மை வந்ததற்கான அடையாளம் இது. அதனால இதில் தப்பில்லை" என அவள் கன்னத்தில் மென்மையாகத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.​

அவன் கொடுத்த அந்த ஒற்றை நெற்றி முத்தம் ருக்குவை மட்டும் அல்ல, அவளுடைய மூன்று சகோதரிகளை அவளுடைய வருங்கால மாமனாரை தெய்வாவுடன் வேலை பார்க்கும், அவனை முற்றிலும் தெரிந்த சிலர் என அனைவருக்குமே அதிர்ச்சியாய் தான் இருந்தது.​

ருக்கு எப்படி காரில் வந்து அமர்ந்தாள் கார் எப்போது கிளம்பியது என எதுவுமே அவளுடைய மனதில் பதியவில்லை. பிரம்மை பிடித்தவள் போல் மூச்சுவிடும் பொம்மையாய் அமர்ந்திருந்தாள்.​

" என் பையனைத் தப்பா நினைக்காத லீலா. எனக்குத் தெரிஞ்சு அவன் எந்த பொண்ணுகிட்டேயும் இப்படி நடந்துக்கிட்டது இல்ல. ஏன் அப்படி செஞ்சான்னு தெரியாது, ஆனா அவன் செஞ்சதில் எந்தவிதமான தப்பான நோக்கமும் இருக்காது" மகனுக்கு பரிந்துகொண்டு வந்தார் வடிவேலு.​

" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மாமா. நடக்கிறது எல்லாம் சரியா தப்பா! இதனால என் தங்கச்சிங்க சந்தோஷமா இருப்பாங்களா மாட்டாங்களா? ஒன்னுமே புரியல." என்றாள் லீலா குழம்பியவளாக.​

" அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு தோணுது அக்கா" என இதுவரை பொம்மையாய் இருந்த ருக்மணி வாயைத் திறந்தாள்.​

" ருக்கு அக்கா நீ சுயநினைவோட தானே இதைச் சொல்ற..." கிண்டலாய் கேட்டாள் ஊர்மிளா. பிறப்பில் இருந்தே சற்று பயந்த சுபாவம் கொண்டவளான அவள், நடுவில் நடந்த ஒரு சிறிய பிரச்சனையால் தொட்டால் சுருங்கும் தொட்டாச்சிணுங்கியைப் போல தொட்டதற்கெல்லாம் பயம் தான் அவளிடத்தில். அப்படிப்பட்டவள் இன்று தைரியமாகப் பேசவும் சந்தோஷமாக கிண்டல் அடிக்கத் தோன்றியது அவளுக்கு.​

" எனக்கு அவர் தான் சரியா இருப்பாருன்னு தோணுது. அவர் என்னைக் கட்டிப்பிடிச்சப்ப, உடனே ஏத்துக்க முடியாம இருந்தாக் கூட தப்பாத் தோணல.​

உண்மையைச் சொல்லப் போனா ஒரு பாதுகாப்பான உணர்வு வந்துச்சு. என் அக்காவுக்கு அப்புறம் ஒருத்தர்கிட்ட எனக்கு அப்படி ஒரு உணர்வு வந்ததுன்னா அது இவர்கிட்ட தான். அவரோட தொடுகை தப்பான நோக்கத்தில் இல்லை. எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் முழு சம்மதம்" என்றாள் ருக்கு.​

" அப்ப சரி, இரண்டாவது ஜோடி சேர்ந்தாச்சு. அடுத்து நம்ம சிவகாசிப் பட்டாசு ஊர்மிளா அக்கா தான். மாமா என் மூணாவது மாமா பேரு என்ன. அவரை நாம எப்ப பார்க்கப் போறோம்." ஆசையாய் கேட்டாள் தேவகி.​

" அவன் இப்போதைக்கு ஊரில் இல்லம்மா, அதனால நாலாவது ஆளைத் தான் நாம அடுத்து பார்க்கப் போறோம். அதாவது உன்னோட வருங்காலப் புருஷனை." வடிவேலு சொல்ல தேவகி கப்சிப்பென்று ஆகிவிட்டாள்...​

" சந்தோஷம்" என்றாள் ஊர்மிளை சற்று கடுப்புடன்.​

" என்ன என் மூணாவது மருமகளே என் பையனை பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா. அவன் அவனோட ப்ரண்டு கல்யாணத்துக்காக திருநெல்வேலி வரைக்கும் போய் இருக்கான் சீக்கிரம் வந்திடுவான்" சொல்லிவிட்டு சிரித்தார் வடிவேலு.​

கார் ஒரு தனியார் கலைக்கல்லூரி முன் நிற்க, " மாமா உங்க பையனைப் பார்க்கப் போறோம் னு சொல்லிட்டு காலேஜிக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க" குழப்பத்துடன் கேட்டாள் லீலா.​

" அப்ப அவர் இங்க தான் படிக்கிறாரா? இன்னும் படிச்சு முடிக்கலையா? ஒருவேளை ஒவ்வொரு செமஸ்டரும் இரண்டு இரண்டு தடவை படிக்கிறாரோ.​

தேவகி கல்யாணத்துக்கு அப்புறம் நீ தான் அவருக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்து பாஸ் பண்ண வைக்கணும் போல உனக்கு ஏத்த ஆளு தான்" கிண்டலடித்தாள் ஊர்மிளை.​

வடிவேலு சற்று சிரிப்புடன், " அவன் படிப்பை முடிச்சிட்டான் மா, இங்க ப்ரபொஸரா இருக்கான்" என்றார் சற்றே பெருமையாக.​

பிள்ளைகளிடத்தில் ஒற்றுமை இல்லை என்ற ஒற்றைக் குறையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற கர்வம் அவரிடம் எப்பொழுதும் உண்டு. ஒருவன் டாக்டர், இரண்டாமவன் போலீஸ் நான்காமவன் வாத்தீ, பெருமைப்படாமல் இருந்தால் தான் அதிசயம்.​

" ஓகோ, வாத்தியாரா அப்ப தினமும் நம்ம தேவகிக்கு டியூசன் தான். அப்படி பண்ணாத, இப்படிப் பண்ணாத, அங்க போகாத, இங்க போகாத, அப்படி இருக்காதே, இப்படி ட்ரஸ் பண்ணாத, எக்ஸ்ட்க்ட்ரா எக்ஸ்ட்க்ட்ரா... அப்படித்தானே மாமா..." ஊர்மிளா சிரிக்க லீலாவும் ருக்குவும் சேர்ந்து சிரித்தனர்.​

"இந்த வார்த்தைகளை மத்த மூன்று பசங்க சொல்வதற்கு கூட நூற்றில் ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கு. ஆனா என் கடைக்குட்டி கண்டிப்பா சொல்ல மாட்டான். தேவகி உனக்கு கஷ்டமே இருக்காது, அவனை சமாளிக்கிறது ரொம்ப சுலபம்.​

உன் அக்கா தங்கச்சிகளோடு சேர்த்துப் பார்த்தா, நீ தான் அதிகம் கொடுத்து வைச்சவ" தன் இளைய மகனை பாராட்டி பேசும் அதே வேளையில் மற்ற மூன்று மகன்களையும் அவர் கைவிடவில்லை. இது தான் வடிவேல்.​

காலேஜ் கேண்டினிற்கு தன் முன்றாவது மகனை வரச்சொல்லிவிட்டு ஒரு டேபிளில் தேவகியுடன் அமர்ந்திருந்தார் வடிவேலு.​

அவர்களைப் பார்க்கும் தூரத்தில் சந்தேகம் வராத வகையில் அமர்ந்திருந்தனர் மற்ற மூவரும். தாங்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி யார் வந்தாலும் சற்று படபடப்பாகவே உணர்ந்தாள் தேவகி.​

கடைசியில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியபடி கேண்டினிற்குள் வந்தான் அவன், வடிவேலுவின் கடைக்குட்டி சிங்கம். தர்மா என்றழைக்கப்படும் தர்மராஜ்.​

" தர்மா" வடிவேல் கைகாட்டி அவனை தன் அருகே வரவழைத்தார்.​

" அப்பா" என்றவண்ணம் அவர் அருகில் அந்தப் பெண்ணையும் உடன் அழைத்துக்கொண்டே வந்து அமர்ந்தான் அவன்.​

வடிவேலுவிற்கு சற்று சங்கடமாக இருந்தது. " தேவகி தன் மகனை தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதே. மகனுக்கு காதல் என்ற ஒன்று இருந்தால் அதை நிச்சயம் என்னிடம் சொல்லி விடுவான். அதற்கு நான் மறுக்கப் போவதும் இல்லை. இந்தப் பெண் அவன் காதலியாக இருக்க வாய்ப்பு குறைவு தான்,​

இருந்தாலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தேவகியின் முன்னாலே நடக்க வேண்டுமா?" என மனதிற்குள் பலவிதமான போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் அவர்.​

" அப்பா" இதோடு மூன்றாம் முறையாய் அழைத்துவிட்டான் தர்மா.​

" ஆங் சொல்லுடா" தன் சிந்தனையில் இருந்து மீண்டவராக பேசினார் வடிவேலு.​

" இல்லப்பா ஏதோ பேசனும் னு அவசரமா வரச் சொன்னீங்களே, என்னன்னு கேட்டேன்..." பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தான்.​

" உன் அண்ணனுங்க மூணு பேருக்கும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து இருந்தேன். அவங்களும் நான் காட்டின பொண்ணைப் புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்க.​

அடுத்து நீ தான், உனக்குப் பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னாடி உன் மனசில் ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம் னு நினைச்சேன். அதனால் தான் உன்கிட்ட பேச வந்தேன்" மெதுவாக தூண்டில் போட்டார்.​

அவர் சொன்ன விஷயத்தையும், அப்பாவிற்கு அருகில் கொஞ்ச கொஞ்சமாக டென்சன் ஆகிக் கொண்டு, தன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டேன் என பிடிவாதமாய் அமர்ந்திருக்கும் அழகான இளம் பெண்ணையும் பார்த்தவன் விஷயத்தை ஓரளவு யுகித்தனவாக சற்று விளையாட எண்ணினான்.​

" அப்பா நீங்க கேட்கிறதால சொல்றேன். என்னோட ஸ்டூடண்ட் ஒரு பொண்ணு நேத்து எனக்கு ப்ரப்போஸ் பண்ணா. அழகி தான், ஆனா சின்னப்பொண்ணு இல்ல அதனால வேண்டாம் னு சொல்லிட்டேன்.​

ஆனாப் பாருங்க, மழை விட்ட பின்பும் தூவானம் விடாத கதையா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதோ இவங்க என் ஸ்டூடண்ட்டோட அக்கா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க.​

இப்படி நான் எங்க போனாலும் ஒரே அன்புத் தொல்லைகள் அப்பா." என்று எதிர் இருக்கும் பெண்ணான தேவகியின் பதட்டத்தை நன்றாக ஏற்றிவிட்டு தான் யூகித்தது சரி தான் என்று ஊர்ஜீதப்படுத்திக் கொண்டவன் பின் மெதுவாக.​

" ஆனா, நான் நீங்க சொல்ற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தெளிவா சொல்லிட்டேன்...​

நீங்க பொண்ணு பாருங்க! அது யாரா இருந்தாலும், இதோ உங்க பக்கத்தில் ரொம்ப நேரமா அமைதியா அதே நேரத்தில் டென்ஷனா இருக்காங்களே இந்தப் பொண்ணைக் காட்டி இவ தான்டா உனக்கு நான் பார்த்து வைச்சிருக்கிற பொண்ணுன்னு சொன்னீங்கன்னா கூட சந்தோஷமா தாலி கட்ட நான் தயார்.​

ஏன்னா நான் என்னை விட உங்களை அதிகமா நம்புறேன். எனக்கு ஏத்த மாதிரி ஒரு வாழ்க்கைத் துணையைத் தான் நீங்க எனக்கு செலக்ட் பண்ணுவீங்க, இதோ இவங்களை மாதிரி, சரிதானங்க!​

பை த வே, என்னை மாப்பிள்ளை பார்க்க நான் வேலை பார்க்கிற காலேஜிக்கே வந்து இருக்கீங்க. குட், உங்களோட பேரு என்னன்னு சொல்ல முடியுமா" அப்பாவிடம் பேச்சை ஆரம்பித்து தேவகியிடம் முடித்தான் தர்மா.​

தேவகி அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல தலைநிமிர்த்த, சகோதரிகள் நால்வரின் புகைப்படத்துடன் கூடிய வாரஇதழ் ஒன்று "ஈ" என்று பல்லைக் காட்டிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த அந்த மேஜேயிலே இருந்ததைக் கண்டாள்.​

 
Status
Not open for further replies.
Top