எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 17

S.Theeba

Moderator
அன்று பட்டமளிப்பு விழா முடிய இரவு ஒன்பது மணியாகிவிட்டது. அன்றுடன் பலர் தத்தம் ஊர்களுக்குப் பயணமாகி விடுவார்கள். எனவே இனி என்று காண்போமோ என்ற கவலையில் கூட்டம் கூட்டமாக நின்று பிரியாவிடை பெற்றுக்கொண்டனர். சிலர் அழுதுகொண்டே விடைபெற்றனர்.

தமிழினியனின் நண்பர்களும் ஒருவருக்கொருவர் விடைபெற்றுத் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல நேர்ந்தது. ஒருவரையொருவர் கட்டியணைத்து விடைபெற்றனர். தத்தம் குடும்ப உறுப்பினர்களுடன் புறப்பட்டனர். காயத்திரியின் வீட்டிலிருந்து யாரும் வராததால் கார் டிரைவருக்காக காத்து நின்றனர். டிரைவர் வந்து காயத்திரிக்கு அழைப்பெடுக்கவும் தன் நண்பர்களிடம் கண்கலங்க விடைபெற்றுச் சென்று விட்டாள்.

குடும்பத்தினர் எல்லோரும் இருந்ததால் காயத்திரியின் காதல் விவகாரம் குறித்தும் அவள் இன்று ஏனோ அழுது கொண்டிருந்தாள் என்பதையும் தமிழினியனாலும் ஈசனாலும் மற்றைய இருவரிடமும் சொல்ல முடியவில்லை.

மறுநாள் காலையில் முதல் வேலையாக நண்பர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு காயத்திரியைக் காணப் போக வேண்டும் என்று நினைத்த தமிழினியன் தன் தாய், தங்கையுடன் வீட்டுக்குச் சென்றான்.

இரவு தூங்கமுடியாமல் காயத்திரியின் அழுத முகமே கண்முன்னாடி தோன்றி அவனைக் கவலை கொள்ள வைத்தது. அவளுக்குக் ஹோல் பண்ணிப் பேசுவோமா என்று நினைத்தவன் நேரத்தைப் பார்த்தான். இரவு ஒரு மணியாகியிருந்தது. அவள் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருப்பாள் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கியவன் காலையில் எழும்போது எட்டு மணி ஆகிவிட்டது. எழுந்தவுடனே காயத்திரியின் நினைவே அவனை ஆட்கொண்டது. இன்று கட்டாயம் அவளை சந்தித்து பேச வேண்டும். அவள் காதலிப்பவனைக் குறித்து முழுமையான தகவல்களைக் கேட்டு அறிய வேண்டும். எதுவானாலும் அவள் சந்தோசமாக வாழ வேண்டும் என நினைத்தவன், முதலில் அவளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு மற்றவர்களிடமும் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். காயத்திரியின் எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தினான். அவளது அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. யோசனையுடன் ஈசனை அழைத்தான்.
"சொல்லு மாப்பிள்ளை"
"காயத்திரிக்கு ஹோல் பண்ணினன்டா. அவள் போனை ஓஃவ் பண்ணி வைச்சிருக்காள்."
"ஆமாடா, நானும் காலையில் எழுந்ததும் உடனேயே அவளுக்கு ட்ரை பண்ணினன். அப்பவே போன் ஓஃவ்தான்"
"என்னடா செய்வோம். எதுக்கு போனை ஓவ் பண்ணி வைத்தாள் என்று புரியலையே. ஒருநாளும் அவள் ஓவ் பண்ணுவதில்லையே… ம்ம்.. அவள் நேற்று அழுதது மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு. அவளைப் பார்த்துப் பேசணும்டா"
"ஆமா மாப்பிள்ளை. நீ புறப்பட்டு வா. நேற்று லக்ஷ்மனிடமும் அனிதாவிடமும் விஷயத்தைச் சொல்லவில்லை. இரண்டு பேரிடமும் சொல்லி விட்டு நாம எல்லோருமாச் சேர்ந்து காயத்திரி வீட்டுக்குப் போவோம்."
"ஓகேடா, நான் இப்பவே வாறன். நீ ரெடியாயிரு" என்று கூறிவிட்டு அலைபேசியை நிறுத்தியவன் உடனேயே தயாராகி கீழே வந்தான். காலை டிபன் சாப்பிட அழைத்த தாயாரிடம் இப்போது பசிக்கவில்லை என்றும் வெளியில் ஃபிரண்ட்ஸை பார்த்துவிட்டு வந்து சாப்பிடுவதாகவும் கூறினான். நிலாவை பாலா அழைக்க அவர் தங்கள் அறைக்குள் செல்லவும் அப்போது அங்கே வந்தாள் சாவித்திரி.
“அண்ணா, அவசரமாய் போறிங்களா? உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்று இழுத்தாள்.
“சாவி, நான் ஈசனை ரெடியாகி நிற்கச் சொல்லிட்டேன். அப்புறமா பேசுவோம்” என்றபடியே வெளியே நடந்தான்.
“அண்ணா, காயத்திரிக்கா..” என்று ஏதோ சொல்ல வந்தவள் காற்றோடுதான் பேசிக் கொண்டிருந்தாள். அவன் வெளியே சென்று விட்டான். திரும்பி வந்ததும் உடனேயே அண்ணாவிடம் அந்த விசயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

தமிழினியன் நேராக ஈசனிடம் சென்றான். அனிதாவையும் லக்ஷ்மனையும் ஈசன் வீட்டிற்கு உடனேயே வரவழைத்து விவரத்தைக் கூறினர். அவர்களுக்கும் அது அதிர்ச்சியான விடயம் தான். நம்ம காயுவா லவ் பண்ணுகிறாள். அதுவும் நம்ம யார்கிட்டேயும் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்திருக்காளே என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனாள் அனிதா.
“சரி சரி விடு. முதலில் அவளைப் போய் நேரில் பார்த்து கேட்போம்” என்றான் ஈசன். நால்வரும் காயத்திரி வீட்டுக்குச் சென்றனர்.

காயத்திரியின் வீடு. அது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் மாளிகை என்பதால் எப்போதும் ஒரு பரபரப்பு இருக்கும். வெள்ளை உடையில் தங்கள் கட்சிக் கொடியின் நிறங்கள் கொண்ட சால்வையை தோளில் போட்ட ஆண்களும் பெண்களும் அங்கும் இங்கும் நடந்து திரிவார்கள். அமைச்சர் இங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்களுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. அன்றும் அதே போலவே அந்த மாளிகை பரபரப்பாக இருந்தது. வீட்டின் உள்ளேயும் சிலர் அங்காங்கே இருந்து பேசிக் கொண்டிருந்தனர். வீட்டிலிருந்த பணியாளர் ஒருவரிடம் காயத்திரியை கூப்பிடுமாறு சொல்லிவிட்டு சோஃபா ஒன்றில் சென்று அமர்ந்தனர் நால்வரும். சொற்ப நேரத்திலேயே பதட்டத்துடன் அங்கே வந்தார் கமலன். அந்த வீட்டினைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பவர் தான் கமலன். ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். அமைச்சர் சகுந்தலா தேவியின் வலது கை என்றே சொல்லலாம். காயத்திரி அவரை அங்கிள் என்றே அழைப்பாள்.

இவர்கள் நால்வரையும் நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தவர். "வாங்க தம்பி, உங்களோடு பேசனும் என்று தான் ட்ரை பண்ணினன். இந்த அனிதா பொண்ணோட ஃபோன் நம்பரைத்தான் தேடிக் கொண்டிருந்தன்." என்று கூறினார். நண்பர்கள் அடிக்கடி அங்கே வந்து போவதால் அவர்களைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும்.
"என்ன அங்கிள், ஏன் இப்படி ரென்சனாய் இருக்கிறிங்க? என் நம்பர் எதுக்கு தேடுனிங்க? ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்டாள் அனிதா.
“ஆமா காயு எங்க அங்கிள்? அவளைக் கூப்பிடுங்களேன்” என்றான் தமிழினியன்.

குழப்பமான பாவனையுடன்
“தம்பி, உங்ககூடத் தானே ஃபங்ஷனில் பாப்பா நின்றிச்சு”
“ஆமா அங்கிள் ஃபங்ஷன் முடிஞ்சு எல்லோரும் ஒன்றாதான் புறப்பட்டோம்” என்றாள் அனிதா.
"ஆனா பாப்பா நைட் வீட்டுக்கு வரலை. இதோ இந்த டைம் வரை இன்னும் வீட்டிற்கு வரலையே."
"என்னது வரலையா?" என்று நால்வரும் கோரஸாக அதிர்ந்து கேட்டனர்.
"நைட் எங்க கூடதான் நின்றாள். டிரைவர் வந்திட்டார் என்று சொல்லிப் புறப்பட்டாளே. அவள் போனதும் தான் நாங்க புறப்பட்டதே. நீங்க என்னடான்னா இன்னும் அவள் வரலை என்று சொல்லுறிங்க" என்றான் தமிழினியன்.
"இல்லையே தம்பி, நேற்று காலையில் காலேஜில் இறங்கியபோதே பாப்பா டிரைவரிடம் சொல்லி அனுப்பிச்சுதாம் உங்ககூட வீட்டுக்கு வாறன் என்று. அவரை வரவேண்டாம் ஃபங்ஷன் முடிய நைட் ஆகும் என்றும் சொல்லிச்சாம். அதனால டிரைவர் பிக்கப் பண்ணப் போகல. நைட் ரொம்ப லேட்டாகவும் பாப்பா வரலைன்னு ஹோல் பண்ணன். அப்போ ஃபங்ஷன் முடிஞ்சதும் உங்ககூட சேர்ந்து டின்னர் பார்ட்டிக்கு போனதாகவும் லேட் ஆனதால் அனிதா வீட்டில் தங்கிட்டு மோர்னிங் வாறதாகவும் சொல்லிச்சே"
"என்னது என் வீட்டிலயா? இல்லையே அங்கிள்."
"நாங்க டின்னர் பார்ட்டியே வைக்கல. ஃபங்ஷன் முடிஞ்சதும் நாங்க கிளம்பிற்றோம். அவளும் டிரைவர் வந்திற்றார் என்று சொல்லி விட்டுத் தானே சென்றாள்." என்றான் லக்ஷ்மன்.

உடனேயே டிரைவரை அழைத்து விசாரித்தார் கமலன். ஆனால், அவன் காயத்திரி வரவேண்டாம் என்று சொன்னதால் மாலையே வீட்டுக்குச் சென்று விட்டேன் என்றான். எல்லோருக்கும் குழப்பமாகவே இருந்தது.

கமலனுக்குப் பயம் ஏற்பட்டது. "பாப்பாவுக்கு ஆபத்து எதுவுமோ? யாராவது கடத்தியிருப்பாங்களோ? மினிஸ்டரிடம் நான் இதை எப்படிச் சொல்லுவேன்" என்று தனக்குத் தானே புலம்பினார். எப்படியாவது சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் காயத்திரியின் தாயாருக்கு அழைப்பை ஏற்படுத்தி விவரத்தைச் சொன்னார். கமலனிடம் சிறிது நேரம் கத்தியவர் உடனேயே தன் நண்பரான பொலிஸ் கமிஷனருக்கு அழைத்துப் பேசினார். அவரும் விரைந்து செயற்படுவதாக உறுதியளித்தார்.

அதுவரை நேரம் அங்கேயே நின்றிருந்த நண்பர்கள் நால்வருக்கும் வேறு ஒரு சிந்தனை மனசுக்குள் ஓடியது.

"அங்கிள் நாங்களும் எங்களுக்குத் தெரிந்த இடங்களில் அவளைத் தேடுறோம். அவள் வந்திட்டாலோ அல்லது எங்கயாவது நிற்கிறாள் என்று தகவல் வந்தாலோ எங்களுக்கு உடனேயே தெரிவியுங்கள்" என்று கூறிய ஈசன் தன் அலைபேசி இலக்கத்தையும் அவரிடம் கொடுத்தான்.

நால்வரும் புறப்பட்டு வெளியேறி வந்ததும் ஓரிடத்தில் நின்றனர்.
"காயூ எங்கடா போயிருப்பாள்?" என்று கவலையுடன் கேட்டாள் அனிதா.
"எனக்கு ஒரு சந்தேகம். அது ஒருவேளை உண்மையா இருக்குமோ தெரியல" என்றான் ஈசன்.
"எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு மாப்பிள்ளை." என்றான் தமிழினியன்.
"எதையடா சொல்றிங்க"
என்று வினவினான் லக்ஷ்மன்.
"அதுதான்டா, நேற்று பார்த்தோமே அவன் கூடப் போயிருப்பாளோ" என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் ஈசன்.
"அப்படி நடந்திருக்குமாடா?" என்று புலம்பினாள் அனிதா.
"அவன் அட்ரசைத் தேடிக் கண்டுபிடிக்கணும். அவனைப் பிடிச்சால் சரி." என்றான் தமிழினியன்.

நால்வரும் ஒருவழியாக அன்று மாலையே அவனது முகவரியைத் தேடிக் கண்டுபிடித்தனர். அங்கே சென்றபோது அவன் இல்லை. அவன் எங்கே சென்றான் என்று அருகில் இருந்தவர்களுக்கும் தெரியவில்லை.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றனர் நண்பர்கள்.

மறுநாள் காலை ஈசனின் இலக்கத்திற்கு அழைத்தார் கமலன். காயத்திரி கோபியுடன் தான் சென்றுவிட்டாள். அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. வேறு மாநிலத்திற்குத் தான் சென்றுள்ளார்கள் என்ற தகவலைத் தெரிவித்தார். ஈசனும் தன் நண்பர்களிடம் விவரத்தைக் கூறினான். அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவள் தங்களுக்குத் தெரியாமல் காதலித்தது மட்டுமல்லாது இப்போது அவனுடன் செல்லும் போது கூட ஒரு வார்த்தை கூறவில்லையே என்ற கவலை அவர்கள் ஒவ்வொருவரையும் வேதனைப்படுத்தியது.

அவள் சென்றது சென்றதுதான். அவளைப் பற்றிய தகவல் அதன்பிறகு தெரியவில்லை. அவளும் தன் நண்பர்களை அழைத்துப் பேசவுமில்லை.

அவளது தாய் தன் அரசியல் வாழ்வுக்கு இழுக்காகிவிடுமோ என்று கருதி தன் மகள் உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்றுவிட்டாள் என்று எல்லோரிடமும் கூறிவிட்டார். அதன் பிறகு அவளைத் தேடவும் முயற்சிக்கவில்லை.

நண்பர்கள் அவ்வப்போது அவளது இலக்கத்திற்கு அழைத்துப் பார்ப்பார்கள். ஆனால், அவளது அந்த எண் எப்போதும் செயலிழந்தே இருக்கும்.

அடுத்த வருடம் அனிதா திருமணமாகி நியூயோர்க் சென்றுவிட்டாள். அதே வருடத்தின் இறுதியில் ஈசனுக்கும் ரதிவாணிக்கும் திருமணமாகிவிட்டது. லக்ஷ்மனுக்கும் பெண் பார்க்கிறார்கள்.

தமிழினியன் தன் முயற்சியால் அமுதத்தை உருவாக்கித் திறம்பட நடத்தி வந்தான். அபிராமியைக் கண்டு காதல் கொண்டவன் அவளிடம் அதனைச் சொல்வதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.

அதற்கிடையில் அவனின் பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகக் கூறி அபிராமியின் புகைப்படத்தைக் காட்டினர். சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போன தமிழினியன் தனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தான்.

அன்றிலிருந்து ஐந்தாவது நாள் அவனது தொலைபேசிக்கு புது இலக்கம் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது.
 
Top