எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 7

S.Theeba

Moderator
காரின் பின்னிருக்கையில் தமிழினியனின் அருகில் அமர்ந்திருந்த அபிராமிக்கு மூச்சு விடவும் சிரமமாய் இருந்தது. அவன் அழுத்தத்துடன் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தான். அவளுக்குத்தான் பெரும் ஆயாசமாய் இருந்தது. ஆனாலும் அவன் தன் கழுத்தில் தாலி கட்டியதுமே இனி வாழ்வு முழுவதும் அவனது அன்புக்காகவே வாழ வேண்டும் என்று முடிவு எடுத்தாள். ஆனால் பதிலுக்கு அன்பை வழங்க வேண்டியவனோ இப்போதே முறைத்துக் கொண்டு இருக்கானே?

சிறிதளவு தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் மனம் முழுவதும் காதலால் நிறைந்திருந்தது. தாலி கட்டியதால் வந்த காதல் அல்ல இது. அவன் புகைப்படத்தை பார்த்ததுமே மனதில் ஆழமாக பதிந்தான். நேரில் முதல் தடவையாக அவனைக் கண்டதும் காதல் என்னும் ஜீவநதி அவளுள் ஊற்றெடுத்தது. இதனை யாரிடம் சொன்னாலும் கேலிதான் பண்ணுவார்கள். அவனே கல்யாணம் வேண்டாம் என்கிறான், இதில் காதல் எங்கே பிறக்கும் என்பார்கள். ஆனால், அதுதான் நிஜம். காதல் எதிர்ப்பாலாரின் சம்மதத்தோடு பிறப்பதில்லையே..

அவன் அழுத்தமாய் அமர்ந்திருந்ததும் அந்தக் கம்பீரத் தோரணையும் அவளுக்குப் பிடித்திருந்தது. அதனையும் ரசிக்கவே செய்தாள்.

தொடர்ந்து அவனை ரகசியமாய் ரசித்தவளுக்கு உள்ளூரப் பயமாகவும் இருந்தது. தான் பார்ப்பதை அவன் கண்டுவிட்டால் அதற்கு ஏதாவது குட்டு வைத்து விடுவானோ என்று எண்ணியபடி தன் சிந்தனையிலேயே கரைந்தாள்.

‘இதோ மனதிற்கு பிடித்தவனின் அருகில், அவனது மனைவியாய், சரிபாதியாய் அமர்ந்திருக்கிறேன். இன்று அவனது வெறுப்பில் தொடங்கிய இந்தப் பந்தம் ஆயுசு வரை தொடருமா... கல்யாணம் வேண்டாம் என்றவன் இன்று எந்தவித பேச்சுமில்லாமல் என் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான். மேற்கொண்டு என்ன முடிவெடுக்கப் போகின்றானோ? அல்லது முடிவை எடுத்துவிட்டுத்தான் இருக்கானோ? என் வாழ்க்கையில் எப்படியான விளைவுகளைச் சந்திக்கப் போகின்றேனோ? இறைவா எதையும் தாங்கும் மன வலிமையைத் தா' என்று தனக்குள்ளேயே முனகியபடி இருந்தாள்.

மண்டபத்தில் இருந்து வீடு வந்து சேரும் வரை வழியில் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. ஏன் திரும்பி அவளை நேராகக் கூடப் பார்க்கவில்லை. கடைக்கண்ணால் ஓரிரு தடவை பார்த்தான். அதுவும் ஒருசில விநாடிகள் மட்டுமே.

வீடு வந்து சேர்ந்தனர். சில உறவினர் அவர்களது வீட்டில் தங்கியிருந்தனர். அந்த நேரத்திலும் உறவுக்கார பெண்கள் இருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தான் வாழப்போகும் வீட்டிற்குள் வலது காலை வைத்து உள்ளே வந்த அபிராமி நிலாவின் சொற்படி பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கும்பிட்டாள். 'இறைவா நான் வாழ வந்திருக்கும் இந்த வீட்டில் எப்போதும் சந்தோசமும் நிம்மதியும் நிறைந்திருக்கணும்' என்று மனமார்ந்த பிரார்த்தனை செய்தாள். தம்பதிகளாய் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள்.

அத்துடன் தன் கடமை முடிந்தது போல் தமிழினியன் தன் அறைக்குச் சென்று விட்டான். அபிராமி என்ன செய்வது... எங்கே செல்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள். அவள் அருகில் நின்ற சாவித்திரி "அண்ணி, என்ன யோசிக்கிறிங்க? இது உங்க வீடு... இனி நீங்கதான் இந்த வீட்டின் மகாராணி. நீங்க நில் என்றால் நிற்கணும்.. போ என்றால் போகணும்… ம்ம்.. என் பாடுதான் ரொம்பக் கஷ்டம்." என்றவள் ஒரு கையை மடக்கி இடை வரை குனிந்து,
“உத்தரவிடுங்கள் அண்ணியாரே.. ம்கூம்.. மகாராணியாரே இந்த அடிமை தங்களுக்கு என்ன சேவகம் செய்யணும்?” என்றாள். சொல்வதறியாது திகைத்துப்போய் நின்றாள் அபிராமி. அங்கே வந்த நிலா சாவித்திரியின் காதைக் திருகி விட்டு
“சரியான வாலு..” என்றார்.
“என்ன அண்ணி நான் சும்மா சொல்லவில்லை. நீங்கதான் இந்த வீட்டின் மகாராணி. அம்மா, நான் சொல்வது கரெக்ட் தானே” என்று சொல்லியபடி அவளைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவளின் பேச்சில் சிரித்துவிட்டு "அபிராமி, இந்தக் கல்யாண சடங்குகளால் நீயும் ரொம்பவும் களைச்சுப் போயிருப்பாய். அசதியாய் அது.. அது தப்பா எடுத்துக்காதம்மா. இன்று சாவித்திரி றூமில் ரெஸ்ட் எடும்மா. நாளை தான் சடங்குக்கு நாள் குறிச்சிருக்கம்....." என்று வருத்தமும் பரிவுமாக இழுத்தார் நிலா.
"சரி அத்தை" என்று லேசான புன்னகையுடன் கூறியவள் சாவித்திரியுடன் சென்று தங்கினாள். இரவு தூங்கினதை விட சாவித்திரியுடன் சேர்ந்து கதை பேசியதே அதிகம். இருவரும் பல விசயங்களை பற்றி பேசியதில் விடிவதற்குள் நல்ல நண்பிகளாக மாறிவிட்டனர்.

மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு, பூஜையறைக்குச் சென்று விளக்கேற்றியவள் கண்மூடி இறைவனிடம் வேண்டினாள்.

ஓரிரு உறவுகளைத் தவிர மற்ற அனைவரும் காலையிலேயே தங்கள் ஊர்களுக்குச் சென்று விட்டனர். நிலாவைத் தேடி சமையலறைக்குச் சென்றாள். அங்கே காலை உணவு தயாராகிக் செய்துகொண்டிருந்தது. ரேவதியம்மா சட்னிக்கென தேங்காயை பத்தை போட்டுக் கொண்டிருந்தார். டீ போடுவதற்கு பால் காய்ச்சிக் கொண்டிருந்த நிலா அவளைக் கண்டதும் " வாம்மா.. நம்ம வீட்டில எல்லோருமே டீதான் குடிப்பார்கள். உனக்கு காஃபி போட்டுத்தரவா?" என்று கேட்டார். "இல்லை அத்தை, எனக்கும் டீ தான் பிடிக்கும்" என்று விட்டு சமையலில் தானும் உதவி செய்யத் தொடங்கினாள். வந்த முதல் நாளே அவள் இவ்வளவு பாந்தமாக சமையல் வேலை செய்வதைப் பார்த்து நிலாவுக்கு திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டன. ரேவதியம்மா அதை வாய்விட்டே கூறினார்.
“நிலாம்மா.. உனக்கு வந்த மருமகள் உன்னைப் போலவே நல்ல தங்கமான குணமுள்ள பொண்ணுதான். அம்மா அபிராமி உன் மாமியாரப் போலவே நீயும் கொடுத்து வச்சவதான். நிலாம்மாவுக்கு எப்படி ஒரு குணமான மாமியார் கிடைச்சாங்களோ, அப்படியே உனக்கும் கிடைச்சிருக்கம்மா… ஏன் நான் பார்த்து வளர்ந்த பயல் இனியன். அவனைப் போல ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்மா” என்றவர் சந்தோசத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அன்று காலை உணவுக்குக் கூட தமிழினியன் கீழே வரவில்லை. கூப்பிடச் சென்ற சாவித்திரியிடம் தன் அறைக்கே கொண்டு வருமாறு கூறிவிட்டான்.

மதியமும் அவன் வரவில்லை எனவும் தானே அழைத்து வருவதாகக் கூறிவிட்டு நிலா மேலே சென்றார். அங்கே டீலர் ஒருவரிடம் இம்போர்ட் விசயமாகப் பேசிக்கொண்டிருந்தவன் தாயைக் காணவும் பேச்சை சுருக்கமாக முடித்துவிட்டு தாயிடம் வந்தான்.
“என்னம்மா?”
“அதைத்தான் நானும் கேட்கிறேன். என்னப்பா பிரச்சினை உனக்கு? காலையில் இருந்து வெளியவே வராம அறைக்குள்ளேயே இருக்காய்.”
“ஒன்றுமில்லையம்மா.. நம்ம சுப்பர் மார்கெட்டுக்கு கொஞ்ச திங்ஸ் அவசரமா இம்போர்ட் பண்ண வேண்டியிருக்கம்மா.. அது தொடர்பா டீலர்ஸோட நிறைய பேசவேண்டியிருந்ததம்மா. அதுதான் வெளியவே வரமுடியல.”
“என்னவேணா இருக்கட்டும்.. உன்னையே நம்பினேன் வந்த பொண்ணு பாவம் தனிய் கீழே இருக்காள். அவள உன் ரூமுக்கும் நைட் வரை அனுப்ப முடியாது. நீயாவது கீழே வந்து அவகூட பேசிட்டு இருக்கலாமே”
'என்னது.. என்னை நம்பி வந்தவளா? என் சொல்லை மீறி வந்தவள்' என்று தனக்குள்ளே நினைத்தவன்,
“ஓகேமா நீங்க போங்க நான் இப்போ வந்திடுறன்” என்றான்.

சிறிது நேரத்திலேயே கீழே வந்தவன் அவள்கூட எதுவும் பேசாது அவள் அருகில் வந்து அமர்ந்தான். தம்பதிக்கு விருந்து சாப்பாட்டை நிலாவும் சாவித்திரியும் கலகலவென பேசியபடி பரிமாறினர். அவர்களின் குதூகலம் அபிராமியை சந்தோஷப்படுத்த பக்கத்தில் இருந்தவனின் பாராமுகம் பற்றி கவலையின்றி உணவை உண்டாள்.

அன்று மாலை அபிராமியின் வீட்டிலிருந்து அவளைப் பார்க்க எல்லோரும் வந்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் அபிராமிக்கு நீண்ட காலம் விரிந்திருந்தது போல ஏக்கம் உண்டாக ஓடிப்போய் தந்தையைக் கட்டி அணைத்தாள். அவளது தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார். அருகில் இருந்த தாயின் கையை எட்டிப் பிடித்தவள்
“அம்மா..” என்றாள்.
அந்த ஒரு வார்த்தையே ஓராயிரம் அன்பைப் பறைசாற்ற அந்தத் தாயின் உள்ளம் பாசத்தில் நிரம்பியது.
அவர்களை வரவேற்று பாலா தம்பதியினர் அவர்களை உட்கார வைத்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அபிராமியை அவள் குடும்பத்துடன் பேசவிட்டு எழுந்து சென்றனர்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தமிழினியன் அவளின் அருகில் ஒட்டினாற் போல் அமர்ந்து அவர்களை இன்முகத்துடன் வரவேற்று விட்டு இயல்பாகப் பேசினான்.

காலையிலிருந்து அவள் இந்த வீட்டில் இருக்கிறாள் என்ற சிந்தனையின்றி, அவள் அருகே வராதவன் இப்போது இப்படி ஒட்டியபடி இருக்கானே என்று குழம்பினாள்.

அவர்கள் ஒட்டியபடி இருந்ததைப் பார்த்ததும் பெற்றவர்களுக்குப் பெரும் சந்தோசமாக இருந்தது. ஆனால் அபிராமிதான் திண்டாடிப் போனாள். அவனது அருகாமையும் அவன் அடித்திருந்த ஃபர்பியூம் வாசனையும் அவளைக் கிறங்கடித்தது.

சிறிது நேரத்தில் அவனும் அவளை தனியாகப் பேசவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றனர்.

அப்பொழுது குமார் "குட்டிமா... நீ சந்தோசமாய் இருக்கிறாய் தானே...?" என்று குரல் தழுதழுக்க கேட்டார். எழுந்து அவரருகில் வந்து அமர்ந்தவள் அவரது கைகளை ஆறுதலாகப் பிடித்து அவரது தோளில் சாய்ந்தபடி "எனக்கென்னப்பா.. நான் ஜம்முனு நல்லாத்தான் இருக்கேன். இங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை. ரொம்ப நல்ல குடும்பம். எல்லோருமே என்மீது ரொம்பக் பாசமாய் இருக்காங்க. அதிலும் அத்தை என்னைத் தாங்குறாங்க. உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம்." என்றாள்.
“மாப்பிள்ளை…” என்று இழுத்தார் சரோஜா.
“அவருக்கென்னம்மா.. அவர் என்மீது உயிராய் இருக்காராம்மா”
"ரொம்பப் பெரிய இடம். அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ளடி. கல்யாணத்திற்கு வந்திருந்த உங்க அப்பாவின் பெரியம்மா மகள் என்ன சொல்லிற்று போனாள் தெரியுமா? பெரிய இடத்தில் சம்பந்தம் செய்திருக்கோமாம்.. பெரிய இடங்களில் எல்லாம் எவ்வளவோ பிரச்சினை வருமாம். நாளைக்கு ஒரு பிரச்சினை என்றால் என்ன செய்வீர்கள் என்று ஏதேதோ சொல்லுறாங்க.." என்று மனத்தாங்கலாக கூறினார் சரோஜா. "அச்சோ அம்மா, என்ன நீங்க... அவங்க பொறாமையில் சொல்லுறாங்க. நான் இங்க ராணி மாதிரி வாழுவன்" என்று அவருக்கு ஆறுதல் சொன்னாள்.
“சித்தா.. நீங்க வரல” என்றான் ஸ்ரவன்.
அவனைத் தூக்கி கொஞ்சியவள்
“குட்டியோட விளையாட கட்டாயம் வருவேன்” என்றாள்.

ஒருவாறு எல்லோரும் சந்தோசமாகப் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

இரவானதும் சாவித்திரி தன் அண்ணியை அலங்கரித்தாள். வெள்ளை நிறத்தில் பெரிய சிவப்பு ரோஜாக்கள் போட்ட மெல்லிய ஷிபான் சேலை அணிவித்து, தளரப் பின்னிய கூந்தலில் ஒரு கூடைப் பூவையே சரமாகத் தொடுத்தது போல் மல்லிகைச் சரங்களை வைத்துவிட்டாள். அளவான ஒப்பனை செய்துவிட்ட சாவித்திரி சற்று தள்ளி நின்று தன் அண்ணியை ரசித்துப் பார்த்தாள்.

"அண்ணி, நீங்க சிம்பிளா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கிங்க. உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள். இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த நிலா "அண்ணியை ரசிச்சது போதும்... நீ போய் படிக்கிற வேலையைப் பாரு" என்றார்.

அவள் சென்றதும் தன் பங்குக்கு அவளுக்கு திருஷ்டி கழித்து நெட்டி முறித்தவர் அபிராமியை அழைத்துச் சென்று அவளது கணவனின் அறையைக் காட்டி விட்டு சென்றுவிட்டார்.
 

Nagajothi

Member
அருமை ???, அபிராமிக்கு பிடித்த திருமணம் ஆனால் இனியனுக்கு தன் சொல் கேட்காமல் அவள் தன்னை திருமணம் செய்தது பிடிக்கவில்லை அபி இனி என்ன செய்ய போகிறாள்
 
Top