#டீஸர்_3
ஹாய் செல்லம்ஸ்.. இதோ #ஊடல்_சேர்த்து_காதல்_கோர்ப்போம் கதையோட அடுத்த டீஸர்..
இங்க நம்ம குந்தவையோட லவ்வர உங்களுக்கு மிகப் பெருமையோடு வழங்குகிறேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிருங்க..
#டீஸர்_3
அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளின் உள்ளக் கொதிப்பு தாங்காது படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த குந்தவையோ, கடைசியாக தனது மொபைலை கையில் எடுத்தாள்.
தான் பல நாட்களாக பின்தொடரும் வலைப்பூ எழுத்தாளர் ஆத்மனின் வலைப்பூ பக்கத்திற்கு சென்றாள்.
ஆத்மன், travel blogger என்பார்களே.. அதுபோல அவன் பயணம் செய்யும் இடங்களைப் பற்றியெல்லாம் அழகழகாக குட்டிக் குட்டி கட்டுரைகளாக எழுதுபவன். அவனது அந்த கட்டுரைகளை எல்லாம் படிக்கையில், குந்தவைக்குத் தானே அந்த இடங்களிலெல்லாம் பயணம் செய்து நேரில் பார்ப்பது போன்ற பிரம்மை உருவாகும்.
சாதாரண ஒரு பேருந்துப் பயணத்தைக் கூட அவன் எழுத்தில் படிக்கையில் குந்தவைக்கு மழைக்கால மண் தரை போல உள்ளெள்ளாம் சிலுசிலுவென இருக்கும்.
ஆனால்.. சில நாட்களாக ஆத்மனின் வலைப்பூவில் பயணக்கட்டுரைகளுக்குப் பதிலாக காதல் கவிதைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
அதில் குந்தவைக்கு ரகசிய போதையும் கூட!
இதோ இப்பொழுது கூட ஏதோ புதிதாக ஒன்றை எழுதியிருக்கிறான்.
"அவள்.. என்னை என்னென்னவோ செய்துகொண்டிருக்கும் அவள்.. இன்று அவள் தோழியிடம் கூறிய அந்த ஒற்றை வார்த்தை எனது நெஞ்சுக்குள் ஏதோவொன்றை ஆழமாகக் கவிழ்த்தது.
' ஒரு பெண், தன் எதிரில் நிற்கும் ஆணை, அவன் கண்ணைப் பார்த்து பேசவெண்டுமாம்.
அவள் அப்படிப் பேசினால்.. எதிரில் இருக்கும் ஆணினால் அவளது பார்வையைத் தாண்டி வேறெங்கும் தப்பாகப் பார்க்க இயலாதாம்.
என்னவொரு சத்தியமான வார்த்தைகள் அவை!
ஆம்.. எனக்கும் அவள் அஞ்சனம் பூசிய விழிகளைத் தாண்டி வேறெங்குமே பார்வையைக் கொண்டுசெல்ல இயலவில்லையே! ஆச்சரியமான உண்மை தான்..
ஆனால் இப்பொழுது என் ஜென்ம லட்சியமே.. என்னைப் பித்தனாக்கியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டியது போல், அஞ்சனமிட்டு எல்லை வகுத்திருக்கும் அவளது கண்களைத் தாண்டாது.. ஜென்ம ஜென்மாமாய் அந்த கருப்பு, வெள்ளைச் சாகரத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கவேண்டுமென்பது தான்." என்று படித்துமுடிக்கையில் குந்தவைக்கு உடலெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது!
இது.. இந்த வார்த்தைகள் அவள் அன்று மாலையில் தன் தோழியிடம் உதிர்த்தது!
அதையே இந்த ஆத்மன் தனது வலைப்பூவில் எழுதியிருக்கவும்.. இங்கு தான் அவன் எங்கோ வெகு அருகில் இருந்துகொண்டு தன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு வெகுவாக எழுந்தது.
அந்த எண்ணம் எழுந்த அதே கணம் ஆத்மனின் காதலை எண்ணி நெஞ்செல்லாம் படபடவென அடித்துக்கொள்ள.. உடலெல்லாம் வேர்த்து வழிந்தது பெண்மைக்கு.
இதோ.. அவனது எழுத்தில் இவள் மயங்கிக் கொண்டிருக்கும் இப்பொழுது கூட அவன் தன்னைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான் என்ற எண்ணம் வெகுவாக எழ, விரைவாகச் சென்று வீட்டுக் கதவைத் திறந்து, அந்த நள்ளிரவின் மையிருளுக்குள் துழாவினாள்.
அங்கு யாரும் இல்லாததைக் கண்டு பெருங்குழப்பத்துடன் அவள் உள்ளே வந்து கதவடைக்க.. அவள் வீட்டு வேப்பமரத்தின் பின்னிருந்து ஜன்னல் வழியாக இவ்வளவு நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம் மெல்ல வெளியே வந்து தனது பைக்கை சத்தமில்லாது உருட்டிக் கொண்டு வெளியே சென்றது!