எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 17

S.Theeba

Moderator
குழந்தையை அநாதை இல்லத்தில் சேர்க்க எடுத்துச் செல்வதாகத் தனம் கூறவும் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து பேச்சற்று நின்றாள் நிஷாந்தினி. அவளது உடலும் மனமும் அச் செய்தியில் உணர்விழந்தது போல நின்றன. அவள் உறைந்து போய் பேச்சற்று நிற்கவும் அவளை ஏற இறங்கப் பார்த்த தனம், கனகவல்லியிடம் ஜாடையாகக் கண்ணைக் காட்டவும் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் அசையவும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்து அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டதும் உணர்வைப் பெற்றவள் கனகவல்லியைப் பார்த்து “நில்லுங்கள்..” என்று கத்தினாள். அவளது கத்தலில் திடுக்கிட்டு அப்படியே நின்று விட்டார் கனகவல்லி.
“ஏய் இப்போ எதுக்கடி கத்துகின்றாய்? அவரை எதுக்கடி நிற்கச் சொல்கிறாய்?” என்று ஆங்காரமாய் கேட்டார் தனம்.
“அ.. அத்தை எதுக்குக் குழந்தையை இப்போது அநாதை இல்லத்திற்கு கொண்டு போறிங்க?”
“என்னடி இது கேள்வி. ஒரு அநாதைக் குழந்தையை அங்கேதானே கொண்டு போய் போடனும்”
“அ… அத்தை இக்குழந்தை அநாதையா?”
“இல்லையா பின்னே… பிறக்கும்போதே தாயை முழுங்கி விட்டுத் தானே வந்தது. அப்போ இது அநாதை தானே”
“அத்தை பாப்பாவுக்கு நீங்கதானே பாட்டி”
“பாட்டியா? அடியே உன் அக்காவையே நான் வேலைக்காரியாத்தான் இந்த வீட்டில் வச்சிருந்தேன். அவளுக்குப் பிறந்த இந்த சனியன் எனக்குப் பேர்த்தியா?”
“அத்தை ஒரு குழந்தையை இப்படி வார்த்தைகளால் பேசாதிங்க. பாப்பா உங்க மகனுக்கும் குழந்தைதானே”
“நல்லா சொன்ன போ… அவனுக்கு இப்போ ஒரு குழந்தை தேவையே இல்லை. நானே அவனுக்கு நல்லதா ஒரு பொண்ணு பார்த்திட்டு இருக்கேன். அவனே பாவம் தனியா இருக்கான். என் மகனுக்கு ஒரு பணக்காரியாப் பார்த்து கட்டி வைச்சாத் தான் எனக்கு நிம்மதி.”
என்ன சொன்னாலும் அதற்கு எதிரான பதிலை சொல்கிறாரே என்று கலங்கி நின்றாள்.
“அத்தை பாப்பாவுக்கு யார் இல்லாவிடினும் நான் இருக்கேனே. ஒரு சித்தியாய் நான் இருந்து அவளை வளர்க்கிறேனே”
“அதுதானேடி இப்போ இங்கே பிரச்சினை. நாளை மதியம் உனக்கு கல்யாணம். நீ பாட்டுக்கு இந்தக் கருமத்தை தூக்கிச் சுமந்து கொண்டு திரிகிறாய். ராசுவுக்கு இதெல்லாம் பிடிக்கல. அதுதான் கொண்டு போய் விடச் சொல்லிட்டேன்”
“அத்தை…”
“இதோ பார். நீ என்ன சொன்னாலும் இதைக் கொண்டு போய் அநாதை இல்லத்தில் விடத்தான் போகின்றேன். பேசாம நீ கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வாழ்றதைப் பார்.”
அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்று விட்டாள். தனம் கூறிய செய்தி, அது செய்தியல்ல இடி. ஒரு குழந்தையை அதுவும் தன் இரத்த உறவுள்ள தன் பேர்த்தியான இந்த மழலையை அநாதை இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்திருக்காரே இவருக்கெல்லாம் பாசம் என்றால் என்ன என்று தெரியாதா? எப்படித்தான் மனதில் ஈரமின்றி இப்படியெல்லாம் பேசமுடியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் இப்போது சிந்தித்து கொண்டு இருப்பதால் பயன் இல்லை. முதலில் குழந்தையை கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்வதென்று யோசித்தாள். தற்காலிகமாக தற்போது தடுத்துவிட்டு அப்புறம் யோசித்து முடிவெடுக்கலாம் என்று நினைத்தவள்
“அத்..தை, நாளை மதியம் தானே கல்யாணம். அதுவரையேனும் பாப்பாவை என் கூட வைத்திருக்கேனே. பிளீஸ்.. நாளை மதியம் நீங்கள் நினைப்பது போல் செய்யுங்களேன்” என்று கெஞ்சுதலாகக் கேட்டாள்.
சற்று நேரம் யோசித்தவர்
“சரி, சரி… நாளை காலை பத்து மணி வரைக்கும் உன் கூட இருக்கட்டும். அதற்கு மேல் ஒரு நிமிஷம் கூட விட மாட்டேன். சரிதானே” என்றவர் குழந்தையை வாங்கி அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குள் ஓடியவள் கதவை சாத்திவிட்டு அதனை அணைத்தபடி அழுது நின்றாள்.

அன்று இரவு அவளுக்குத் தூக்கமின்றிய இரவாகக் கழிந்தது. தன்னியல்பாய் குழந்தையை மெல்ல வருடியபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். நடக்கவிருக்கும் கல்யாணம் அவளை அச்சுறுத்துகின்றதென்றால், குழந்தையை நினைத்தால் அவளால் அமைதி கொள்ள முடியவில்லை. இவ்வளவு நாளாக அனுபவித்த துயரங்களும் வலிகளும் போதாதென்று இன்னும் இன்னும் அனுபவிக்க நேரிடுகின்றதே என்று பல மணி நேரம் அழுது கரைந்தாள்.
அதிகாலை ஆகும் போதே அவளுக்கு ஒரு யோசனை உதயமானது. பேசாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், போக்கிடம் அற்ற அநாதையாக நிற்பவள் எங்கே தான் செல்வது என்ற மிரட்சியும் உண்டானது. முதலில் வெளியேறுவோம்… அப்புறம் கடவுள் விட்ட வழியில் பயணிப்போம் என்று முடிவு எடுத்தவள் குழந்தைக்குத் தேவையான சில அத்தியாவசிய பொருட்களையும் தனக்கென ஒரு சில பொருட்களையும் சிறிய பயணப் பைக்குள் வைத்தாள் அதிகாலை நான்கு மணியளவில் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

கால் போன போக்கில் நடந்து கொண்டேயிருந்தாள். வெளியே வந்தாயிற்று. இனி எங்கே செல்வதென்ற கேள்வி அவள் முன் மலையாய் எழுந்து நின்று மருட்டியது. பதில் தெரியாத கேள்வியோடு நேற்று காலையிலிருந்து எதுவும் உண்ணாதால் ஏற்பட்ட சோர்வும் அவள் கால்களைத் தள்ளாட வைத்தது. சிரமத்துடன் அடியெடுத்து வைத்து நடந்தாள்.

கடவுளும் அவ்வளவு கல்நெஞ்சக்காரர் அல்ல. அவளின் தொடர் சோதனைகளிலும் வேதனைகளிலுமிருந்து சற்றே ஓய்வு கொடுக்க விரும்பிய கடவுளும் அவள் மீது இரக்கப்பட்டு உதவி செய்ய முன்வந்தார்.

எங்கே செல்வதெனத் தெரியாமல் கால் போன போக்கில் அந்த அதிகாலைப் பனிக் குளிரில் நடந்து கொண்டிருந்தவளை அழைத்தது அந்த பளிச்சிடும் விளக்குகள். இருட்டை மழுங்கடித்து பகல் போல ஜெகயோதியாய் பல மின்விளக்குகளால் ஒளிபெற்றிருந்தது அந்த மத்திய பஸ் நிலையம். ஆள் நடமாட்டமும் குறைவின்றியே காணப்பட்டது. அவள் மனதிற்கு ஏதோ ஒரு தைரியதைக் கொடுக்கவும் உள்ளே சென்றாள். அங்கே அந்த அதிகாலையில் பல ஊர்களுக்குப் புறப்படவென பஸ்கள் தயாராக நின்றன. அங்கு நின்ற பஸ்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் மனம் உந்த அங்கே நின்ற திருநெல்வேலிக்கான பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

அங்கே தனக்கென யாருமில்லை என்று புரிந்த போதும் அவளால் வேறு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அங்கே மட்டுமல்ல, இந்தியாவின் எந்த ஊரிலும் அவளுக்கு யாருமில்லை என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

குழந்தையை மார்போடு அணைத்தபடி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை ஒரு கரம் மெதுவாகத் தட்டவும் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். பக்கத்து இருக்கையில் முகம் முழுவதும் ஆச்சரியத்துடன் கூடிய சந்தோசத்துடன் அமர்ந்திருந்தாள் தாரணி. அவளைக் கண்டதும் நிஷாந்தினி சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள். ஆற்றில் அடித்துக் கொண்டு செல்பவனுக்கு ஒரு மரக்கட்டை கிடைத்தால் எவ்வாறு சந்தோசத்துடன் அதைப் பற்றுவானோ அவ்வாறே தாரணியைக் கண்டதும் மனதில் ஒரு நம்பிக்கை நிஷாந்தினியின் மனதில் துளிர் விட்டது.
தாரணியும் நிஷாந்தினியும் சிறு வயது முதலே நல்ல நண்பிகள். நிறைய நாட்களின் பின்னர் இன்றுதான் மீண்டும் சந்திக்கின்றார்கள்.

நிஷாந்தினியின் கையில் குழந்தையைக் கண்டதும்
“என்னடி, எனக்கே சொல்லாமல் கல்யாணம் பண்ணிற்றாய்.ஒரு குழந்தை வேறு… அவ்வளவு வேண்டாதவளாய் போயிற்றேனா நான் உனக்கு? குழந்தை பிறந்து எவ்வளவு நாளாச்சு? ஆமா உன் புருஷன் என்ன பண்ணுறார்? அவரும் உன் கூட வந்திருக்கிறாரா? எங்கே காணவில்லை?” என்று கேட்டபடி பார்வையால் சுற்றும்முற்றும் அலசினாள்.
அதுவரை நேரமும் தன் வேதனையில் உழன்று கொண்டிருந்தவளை சற்று நிதானப்படுத்தியது தாரணியின் படபட பேச்சு.
“அம்மாடி… என்னடி ஒரு ஹாப்பே விடாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்லுவது?”
“ஆனால், நீ மாறிட்டியேடி… எனக்கு ஒரு ஹோல் பண்ணி சொல்லக் கூட உனக்குத் தோணலையே”

அலுப்பாகப் பெருமூச்சொன்றை வெளிவிட்டாள் நிஷாந்தினி.
“என்னவென்று உனக்கு நான் சொல்வது.. என் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்கள், இன்று நான் அநாதையாய் தனித்து நிற்பது என்று எதைச் சொல்ல”
அவள் சொல்ல வருவது என்னவென்று தெரியாவிட்டாலும் தன் ஆருயிர் தோழி தாங்கவொண்ணாத் துயரால் வாடுகின்றாள் என்பதை உணர்ந்த தாரணி தன் நண்பியின் தோள்களை ஆறுதலாக அணைத்து நின்றாள். அந்த அணைப்பு நிஷாந்தினிக்கு சற்று மனநிம்மதியைத் தந்தது. சற்று நேரம் கண்களை இறுக மூடி இருந்தாள்.
சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்

“நான் உறவென்று நினைத்த எல்லோருமே என்னை விட்டு போய்விட்டார்கள். என் அம்மா, என் அக்கா என எல்லோருமே என்னை ஏமாற்றிவிட்டு என்னையும் இந்தக் குழந்தையையும் அநாதையாய் தவிக்க விட்டுப் போய்விட்டார்கள்” என்று கண்ணீருடன் கூறினாள்.
“அநாதை என்று ஏன் சொல்கிறாய்? உனக்கு நான் இல்லையா? இனி உன் வாயிலிருந்து அநாதை என்ற வார்த்தை வரக்கூடாது.” என்று கண்டிப்புடன் கூறினாள் தாரணி.
“ஆனால் இந்தப் பாப்பா? இதன் அப்பா…?” என்று கேள்வியை முடிக்க முடியாமல் திணறினாள்.
விரக்தியுடன் சிரிப்பொன்றை உதிர்த்த நிஷாந்தினி தன் வாழ்வில் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒன்று விடாமல் தாரணியிடம் கூறினாள்.
“இதென்னடி அநியாயம். உலகத்தில் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?” என்று கொதித்துப் போய் கேட்டாள் தாரணி.
அவள் பதில் சொல்ல வாயெடுக்கவும் காலை உணவுக்கென கடையொன்றில் பஸ் நிறுத்தப்பட்டு எல்லோரும் இறங்கத் தொடங்கினர்.

தாரணி “பாப்பா எழுந்ததும் என்ன கொடுப்பது? பால் எதுவும் வாங்கணுமா?” என்று கேட்டாள்.
“இல்லை… பாப்பாவுக்கு பால்மா கொண்டு வந்திருக்கேன். பிளாஸ்கில் சுடுதண்ணீர் கொண்டு வந்தேன். அதுவும் ஆறியிருக்கும். சுடுதண்ணீர் மட்டும் எடுக்கணும்” என்றாள்.
“ஓகே.. நீ பிளாஸ்கைத் தா. நான் எடுத்திட்டு வாறேன்.” என்று அவளிடம் சொல்லிக் கொண்டு கீழே இறங்கிய தாரணி சுடுதண்ணீரோடு இரு உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் போத்தலுமாக வந்தாள். நிஷாந்தினியிடம் ஒன்றைக் கொடுத்தவள்
“நீ நன்றாக சாப்பிட்டு எத்தனையோ நாள் ஆனது போல் இருக்காய். முதல்ல இதைச் சாப்பிடு. பசியோடு இருக்கும் வயிறு நம் மனசையும் பலவீனமாக்கி விடும். நம் கவலைகளை பூதாகரமாக்கிவிடும். இட்லி தான் வாங்கிக் கொண்டு வந்தேன், சாப்பிடு.” என்றவள் குழந்தையைத் தன்னிடம் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டாள்.

சில தினங்களாகவே நிஷாந்தினி சரியாகச் சாப்பிடவில்லைதான். அதிலும் நேற்று முழுவதும் பட்டினி. ஆனாலும் அவளால் அந்த உணவை உண்ண முடியவில்லை. சிரமப்பட்டு உண்டாள்.
 

rajisriram

New member
hi story super a poguthu. but romba chinna epi a iruku pa. konjam perusa kodutha padikka nalla irukkum. atleast daily oru epi kodunga pa. naan daily vanthu site visit pannitu poven. story vanthu irukkanu parka
 
Top