எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 20

S.Theeba

Moderator
தன் கடந்தகால நினைவுகளில் இருந்து மீண்ட நிஷாந்தினி சுற்றும்முற்றும் பார்த்தாள். பௌர்ணம் நிலவு நடுவானில் இருந்து கீழிறங்க ஆரம்பித்திருந்தது. வெகு நேரமாய் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்ததால் சுற்றுச்சூழலைக் கவனிக்கத் தவறிவிட்டாள். ஆற்றங்கரை என்பதால் குளிர்மை அதிகரித்து அவளது மேனியை நடுங்கச் செய்தது. நெடுநேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்தவள் எழுந்து உள்ளே சென்றாள்.
படுத்திருக்கும் மகளின் அருகில் சென்று அமர்ந்தவள் அவளது தலையை கோதி விட்டாள். நெஞ்சத்தின் வலிகள் கண்ணீராய் வழிந்து கன்னங்களையும் ஈரமாக்கின.

‘எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. தினம் தினம் அவனை மறக்க நினைத்து அவன் நினைவிலேயே வாழ்ந்து முடித்தாகி விட்டது. அவன் இப்போது தனது மனைவி பிள்ளையுடன்… ஓஓ.. அவனுக்கு இப்போது எத்தனை பிள்ளைகளோ? ஒன்றா, இரண்டா? யாரிடம் கேட்டு அறிவது. அவன் தன் குடும்பத்துடன் வரவில்லை போலும்… தாரணியின் வெடிங்கில் அவன் மட்டும் தானே நின்றான். யாரைக் கேட்டால் தெரியும்? தாரணியிடம்.. ம்கூம்… அவளுக்கு அவனைத் தெரிந்திருக்காது. அவள் ஹஸ்பன்டின் ஃபிரண்ட் தானே. அவருக்கு அவன் ஃபேமிலி பற்றித் தெரியும்தானே… அடியே பைத்தியமா நீ. அவரிடம் எப்படிப் போய் கேட்பாய்' என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

'அவனுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தால் உனக்கென்ன? அதைத் தெரிந்து நீ என்னதான் செய்யப் போகின்றாய்? இந்த ஆராய்ச்சியெல்லாம் உனக்குக் தேவையே இல்லை. நீயுண்டு உன் சுபிக்குட்டி உண்டு என்று வாழப் பார்' என்று மனச்சாட்சி இடித்துரைத்தது.

தன் மகளின் அருகில் படுத்தவள் உறங்க முயன்றாள். மனக்கண் முன் அவனது உருவமே தோன்றி இம்சித்தது. மிகச் சிரமப்பட்டு அதிகாலையிலேயே உறக்கம் அவளைத் தழுவியது.

அங்கே கட்டிலில் இருந்து தன் கடந்தகால நினைவுகளை அசை போட்ட தனஞ்சயனின் மனமும் கனத்திருந்தது. உடலும் உள்ளமும் புழுக்கமாக உணரவும் எழுந்து பால்கனிக்குச் சென்றான். பால்நிலவும் அவனைக் கண்டதும் மேகத்துக்குள் மறைந்து கொண்டது.
‘அவளுக்குத் தான் என்னைப் பிடிக்காமல் போனது. இந்த வான்மதிக்கும் என்னைப் பிடிக்கலையா?’ என்று தனக்குள் புலம்பினான். சிறிது நேரம் இலக்கின்றி வானத்தையே வெறித்தவன் அலுப்புடன் உள்ளே சென்று படுத்தான்.

மறுநாள் காலையில் அவனது தூக்கத்தைக் கட்டிலில் கிடந்த அலைபேசி ரீங்காரமிட்டுக் கலைத்தது. தூக்கக் கலக்கத்துடன் அழைப்பை ஏற்று,
“ஹலோ” என்றான்.
“ குட்மோர்னிங்டா” என்றான் தாரணியின் கணவனான திவாகர்.
“குட்.. மோ..ர்னிங்”
“டேய் தனா ஒன்பது மணியாச்சுடா. இன்னும் தூங்குறியாடா. புது மாப்பிள்ளை நானே ஆறு மணிக்கே எழுந்தாச்சு. நீ என்னடா இன்னும் தூங்குகிறாய்”
“இப்போ நான் தூங்கினால் உனக்கென்னடா பிரச்சினை. புதுமாப்பிள்ளையாய் லட்சணமாய் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணுவாயா? அதைவிட்டு என்கிட்ட வம்பு பண்ணுறாய். என்னைத் தூங்க விடுடா”
“டேய் தனா உன் கல்லூரி விசயமாய்தான் பேச எடுத்தேன். உனக்கு தேவையில்லை என்றால் விட்டிடு”
“சரி, சரி சொல்லுடா”
“இந்த ஊரில் பெரிய தனக்காரர் மயில்வாகனம் ஐயா என்பவர் இருக்காராம். அவர் ஊரிலேயே ரொம்ப செல்வாக்கானவராம். திருநெல்வேலியில் எல்லா இடத்திலும் அவருக்கு நல்ல பெயராம். நீ காலேஜ் கட்டப் போகும் இடத்தில் ஏதோ சிக்கல் என்றாயே… அவரிடம் பேசினால் அவரே முன்னின்று பேசி அதை சரிப்படுத்திடுவாராம்”
“ஓகே இது நல்ல நியூஸ்தான். ஆமா அவரை நான் எப்படி மீட் பண்ண? எனக்கு அவரையோ அவர் வீடு இருக்கும் இடமோ தெரியாதேடா?”
“நான் அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்று ஈவினிங் ஃபைவ்வுக்கு ரெடியாயிரு. தாரணியின் கஸின் ஒருத்தன். அவன் பேரு வரதன். அவன் வந்ததும் அவன் கூடப் போயிடு. அவனே உன்னை அவருக்கு இன்ரடியூஸ் பண்ணி விடுவான். ஓகேயா?”
“ஓகேடா... “ என்றான்.
அன்று வேறு எந்த வேலையும் இல்லாததால் பிற்பகல் வரை ரூமுக்குள்ளேயே பொழுதைப் போக்கினான்.
சரியாக ஐந்து மணிக்கு வந்துவிட்டான் வரதன். அவனுடன் தனது காரிலேயே அந்த ஊரிலேயே மிகப் பெரிய மாளிகையான மயில்வாகனம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றான். எவ்வளவு பணமிருந்த போதும் அதன் பகட்டு சிறிதும் இன்றி மிக எளிமையாக இருந்தார். கதர் வேட்டி சட்டையில் நெற்றி நிறைந்த திருநீறும் சந்தனப் பொட்டுமாகப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அறிமுகம் இல்லாமலேயே அவர் மீது மிகுந்த மரியாதை உண்டானது. தன்னை அறியாமலேயே கைகள் வணங்க பவ்வியமாக நின்றான் தனஞ்சயன். ஐயாவிற்கும் இவனைப் பார்த்ததும் பிடித்து விட்டது. வரதன் இவனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அவரது பேச்சும் கனிவும் இவனுக்கு தன் காரியம் நிறைவேறும் என்ற பூரண நம்பிக்கையை ஏற்படுத்தியது. நிச்சயம் தனது சிக்கலை அவர் தீர்த்து வைப்பார் என்றே உணர்ந்தான்.

ஐயா அவனிடம் விடயத்தைக் கேட்டறிந்தார். அவன் வாங்கியிருக்கும் நிலப்பரப்பின் உரிமையாளர் எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. அந்த சொத்துக்கு இன்னுமொரு வாரிசு தான் என்றும், தனக்கும் அதில் பங்கு தர வேண்டும் என்றும் புதிதாக ஒருவர் இவனிடம் வந்து நிற்கின்றார். இவன் அந்த இடத்துக்கான முழுத் தொகையையும் கொடுத்து விட்டான். இவனுக்கு எழுதிக் கொடுத்தவர் தன்னால் மற்றையவனுக்கு எதுவுமே கொடுக்க முடியாது என்கின்றான். வழக்கு விவகாரம் என்று போனால் அவனது காலேஜ் கட்டடப் பணிகளை ஆரம்பிக்க நீண்ட காலம் ஆகும். எனவே அதனை சுமுகமாகப் பேசித் தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொண்டான். அதற்கான ஏற்பாடுகளைத் தான் மேற்கொள்வதாகக் கூறிய ஐயா மேலும் அவனைப் பற்றி விசாரித்து அறிந்தார்.
இன்னும் பத்து நாட்கள் வரை அவன் தங்க வேண்டி இருக்கும் எனவும் தன் வீட்டிலேயே அவனைத் தங்குமாறு கூறினார். அவன் மறுத்த போது வற்புறுத்தி அவனை சம்மதிக்க வைத்தவர் உடனேயே அவனுடன் தன் வீட்டில் பணிபுரிபவனை அனுப்பி அவனது பயணப் பைகளை எடுத்து வரச் செய்தார்.

அன்று மாலை வழமை போலவே மயில்வாகனம் ஐயாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் நிஷாந்தினி. தினமும் மாலையில் அவரின் மகள் லதாவின் பிள்ளைகள் இருவருக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கிறாள். தனது மகள் சுபிக்ஷாவையும் அழைத்து வருபவள் லதாவின் கடைக்குட்டிப் பையனுடன் விளையாட விட்டு பாடம் எடுப்பாள்.

நேரடியாக வரவேற்பறைக்குள் நுழையாமல் பின்பக்கமாகச் சென்று அங்கிருந்த தோட்டத்தில் சுபியை விளையாடவிட்டு உள்ளே சென்று வகுப்பெடுக்க ஆரம்பித்தாள். தனஞ்சயன் அந்த வீட்டில் இருப்பதை அவள் அறியவில்லை.

தனஞ்சயனுக்கென மாடியில் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர். அறையில் சிறிது நேரம் இருந்தவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையின் பால்கனிக்கு வந்தான். தனது மானேஜரிடம் அன்றைய நிலவரங்கள் குறித்து பேசிவிட்டுத் தன் தாய்க்கு அழைத்து நலம் விசாரித்தான். சுபத்திராவும் திவாகரின் கல்யாணம் குறித்துக் கேட்டுவிட்டு வழமையாகத் தான் கேட்கும் கேள்விக்கு வந்து நின்றார்.
“தனா, உன்னுடன் படித்தவர்கள் எல்லாம் கல்யாணம், பிள்ளை குட்டி என்று செட்டிலாகி விட்டார்கள். நீ மட்டும் இப்படியே இருக்காயே?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“எனக்கு இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம் அம்மா” என்றான்.
“ஏன் தனா, இப்பவும் அவளையே நினைச்சிட்டு இருக்காயா?” என்று கவலையுடன் கேட்டார்.
ஆம் அவருக்குத் தனஞ்சயனும் நிஷாந்தினியும் காதலித்த விடயம் தெரியும். மிருணாளினி செய்த காரியத்தால் மிகவும் வேதனைப்பட்டவருக்கு இன்னுமொரு அதிர்ச்சியாக மிருணாளினி நிஷாந்தினியிடம் சென்று பேசிய விடயத்தை கவிப்பிரியா கூறினாள். மாமியாரைத் திட்ட முடியாத கோபத்தையெல்லாம் மகளிடம் கொட்டியவர், மகனிடமும் அது குறித்து பேச முயன்றார். நிஷாந்தினியுடனான காதல் குறித்து அவனிடம் கேட்டதுமே அது முடிந்து போன அத்தியாயம் என்று முடித்துவிட்டான்.
மீண்டும் ஒரு தடவை கேட்டபோது அவள் அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்துவிட்டாள் என்றதும் மன வேதனையுடன் அப்பேச்சை விடுத்தார்.
ஆனாலும் அவ்வப்போது வேறு நல்ல வரன் வரும்போதெல்லாம் அவனிடம் கல்யாணம் பற்றிப் பேசுவார். ஆனாலும் அவன் பிடிகொடுக்காது நகர்ந்துவிடுவான். ஒரு தாயாக மகனது வாழ்வு குறித்த கவலை அவரை ரொம்ப வருத்தியது.

இன்றும் அவன் திருமணத்தைத் தட்டிக் கழிக்கவும் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை அவனிடம் கேட்டார்.
தாயார் அப்படிக் கேட்கவும் நேற்று மகளுடன் நின்ற நிஷாந்தினி அவன் மனதை இம்சித்தாள்.
“அம்மா அவள் திருமணமானவள். அவளைப் பற்றி நினைத்து இப்போ என்ன ஆகப்போகுது. எனக்கு தற்சமயம் கல்யாணம் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்” என்றான்.
அவன் பேசிக் கொண்டே எதேச்சையாகப் பின்பக்கத் தோட்டத்தைப் பார்த்தான். அங்கே தனது மகளைக் கைபிடித்து அழைத்துக் கொண்டு செல்லும் நிஷாந்தினியைக் கண்டான். நேற்று திருமண வீட்டில் இருந்து திடீரென மாயமானவள் இன்று இங்கே செல்கின்றாளே என்று எண்ணியவன், அவளுடன் பேசும் ஆசையில் தாயிடம் பிறகு பேசுவதாகக் கூறி அழைப்பை நிறுத்திவிட்டு வேகமாக வெளியே வந்தான். ஓட்டமும் நடையுமாகப் பின்பக்கம் சென்று பார்த்தான். அதற்குள் அவள் சென்று விட்டாள்.
ஏமாற்றத்துடன் திரும்பி அவன் உள்ளே வரவும் மயில்வாகனத்தின் மகளும் மருமகனும் அவனை எதிர்கொண்டனர். அவன் மிக வேகமாகப் பின்பக்கம் சென்றதால் என்னவோ ஏதோ என்ற பதட்டத்துடன் அவர்களும் பின்னே வந்துள்ளனர்.
“என்ன தம்பி ஏதாவது வேண்டுமா?” என்று அக்கறையாகக் கேட்டாள் லதா.
“இல்லை அக்கா”
“அதுவந்து நீங்க அவசரமாகப் போகவும் என்னவோ என்ற பதட்டத்தில் வந்தோம்”
“இல்லை அக்கா, பின்பக்கம் செல்பவர் எனக்குத் தெரிந்தவர்கள் போல இருக்கவும்தான் சென்று பார்த்தேன்”
“யார் தம்பி?”
“அது வேறு யாரோ… பின் வழியாக ஒரு பெண்ணும் குழந்தையும் செல்கின்றார்களே அவர்கள் யார் அக்கா?” என்று சும்மா கேட்பது போலக் கேட்டான்.
“அவங்க நம்ப பசங்களோட டீச்சர். நிஷாந்தினி டீச்சர். டியூஷன் கொடுக்க வாறவங்க”
'அப்படியென்றால் இவள் அமெரிக்கா போகலையா?' என்று மனதில் எழுந்த கேள்வியை அடக்கியபடி
“ஓஓ.. அவங்க ஹஸ்பன்ட் என்ன பண்ணுறார்?” என்று எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டான்.
“அவர் வெளிநாட்டில் வேலை செய்கிறாராம்”
'ம்ம்.. அப்போ அவர் அங்கேயே இருக்க, இவள் இங்கு வந்திட்டாளோ' என்று எண்ணியவன் அதற்கு மேல் கேட்டால் தப்பாக எண்ணிவிடுவார்கள் என்று நினைத்து அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டான்.
இதே ஊரில்தான் அவள் வசிக்கின்றாள். ஊருக்குப் போவதற்குள் அவளுடன் ஒரு தடவையேனும் பேசிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
ஏன் பேசவேண்டும்? என்ன பேச வேண்டும்? என்ற எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை.

மறுநாள் சொன்னது போலவே மயில்வாகனம் ஐயா இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். புதிதாக பங்கு கேட்டவன், அது பரம்பரைச் சொத்தென்றதால் அதில் தனக்கும் உரிமை இருக்கென்றான். ஆனால், அவர்களது குடும்பத்தை நன்கு அறிந்திருந்த ஐயாவுக்கு அது விற்பனை செய்தவனின் தந்தை சுயமாக சம்பாரித்தது என்று தெரிந்திருந்தது.
அதற்கேற்ப அப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைத்தார்.

நிலப்பிரச்சினை தீர்ந்ததும் அடுத்த கட்டப் பணிகளைத் திட்டமிட்டு ஆட்களை நியமித்தான். தன் சார்பாக தன் உதவியாளரை வரவழைத்து சகல பொறுப்புகளையும் ஒப்படைத்தான். தான் அடிக்கடி வந்து பார்வையிடுவதாகவும் சகல வேலைகளும் எந்தத் தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டான். அவனது வேலைகள் காரணமாக அவனால் நிஷாந்தினியைச் சந்திக்க முடியவில்லை

அன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் நிஷாந்தினி. வரும் வழியில் ஒருவர் ரோட்டோரமாய் விழுந்து கிடக்கவும் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் அருகில் சென்றாள். அங்கே கிடந்தவன் குடி போதையில் உளறியபடி இருந்தான். அவன் என்னதான் குடித்திருந்தாலும் அவன் எழுந்திருக்க முடியாமல் கிடந்தது அனுதாபத்தை உருவாக்க அவனைத் தூக்க முயன்றாள். அவனோ இவளை இழுத்து இறுக அணைக்க முற்பட்டான். அவனது செயலால் திகைப்புற்றவள் அவனிடமிருந்து விடுபட முயன்றாள். சுபிக்ஷாவும் என்ன நடக்கின்றதெனப் புரியாமல் தாயை இழுக்க முயன்று கொண்டிருந்தாள்.

அவளது நல்லகாலமோ அவ்வழியால் நகரத்திற்கு வேலை விடயமாகச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த தனஞ்சயனின் கண்களில் இவர்கள் பட்டனர்.

காரை விட்டுப் பாய்ந்து இறங்கியவன் ஓடிச் சென்று அவளை அவனிடமிருந்து மீட்டான். அவனோ இன்னும் போதையில் உளறிக் கொண்டே இருந்தான்.

சற்றுத் தள்ளி வந்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தன்னை அந்தக் குடிகாரனிடமிருந்து மீட்டது தனஞ்சயன் என்பதை அறிந்த நிஷாந்தினி ஒரு பக்கம் வியப்பும் இன்னுமொரு பக்கம் ஒரு ஆறுதலையும் உணர்ந்தாள்.
அவன் எதுவும் பேசாது இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள்,
“அது… அது… இவர் விழுந்து கிடந்தாரா… உதவி செய்யலாம் என்று..” என்று தடுமாற்றத்துடன் கூறினாள்.
கோபத்துடன் உறுத்து விழித்தவன் அவள் அருகில் வந்தான். இவளுக்கு அவன் அருகே வந்தமை உள்ளூர உதறலைத் தந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் நிமிர்ந்து அவனைத் தைரியமாகப் பார்த்து நின்றாள்.
“உனக்கு அறிவில்லை… யாருக்கு உதவி செய்வதென்று ஒரு வரைமுறை இல்லையா?” என்று காட்டமாகக் கேட்டான்.
அவனது கேள்வி இவளுக்குள் ஒரு நிமிர்வையும் கோபத்தையும் உருவாக்கியது.

“மனிதர்களைப் படிக்கும் திறன் இன்றுவரை எனக்கு வரவில்லை என்பது உண்மைதான்” என்றாள் குத்தலாக.
 
Top