எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 21

S.Theeba

Moderator
மனிதர்களைப் படிக்கும் திறமை இன்னும் தனக்கு வரவில்லை என்று நிஷாந்தினி குத்தலாகக் கூறவும் சுருக்கென்று கோபம் தலைக்கேறியது அவனுக்கு. ஏளனம் பார்வையொன்றை அவள் மீது வீசியவன்,
“நீயா மனிதர்களைப் படிக்கவில்லை? நீ அப்போதே அதில் சூப்பரா பாஸ் பண்ணியிருந்தாயே… அதனால் தான் அன்று..” என்று மேற்கொண்டு எதையோ மனதில் நினைத்துக் கொண்டு பேசத் தொடங்கியவன் அவள் கையைப் பிடித்தபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்த அவளின் மகளைக் கண்டதும் தான் பேச நினைத்ததை விடுத்தான்.

அவள் தாயின் அருமை பெருமைகளை இப்போது சொல்லப் போய் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் ஒருவேளை இந்தக் குழந்தைக்கும் இருந்து விட்டால்… வேண்டாம் என்று எண்ணியவன் அவளை விடுத்து அவளின் மகளைப் பார்த்தான். அதன் வசீகரிக்கும் கண்கள் அவனையும் ஈர்க்க அக் குழந்தையின் உயரத்துக்குக் குனிந்தவன் அதனை நோக்கி மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தான்.
“ஹாய் குட்டி… பயந்திட்டிங்களா? இனி உங்களுக்கு எந்தப் ப்ராப்ளமும் இல்லை” என்றான்.
“ஹலோ அங்கிள் நான் குட்டி இல்லை பெரிய பெண் தெரியுமா?. என் நேம் சுபிக்ஷா” என்று பெரிய மனிதத் தோரணையில் கூறினாள் அவளின் செல்லக் குழந்தை.

அதன் பேச்சும் செயலும் அவன் மனக்கண்முன் முதல்முதல் நிஷாந்தினியைப் பார்த்தபோது இதே போன்றே அவள் பேசியது நிழலாடியது. நினைவுகளின் தாக்கத்தால் சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளும் அதே நினைவுச் சக்கரத்திலேயே சுழன்றபடி இவனையே பார்த்து நின்றாள்.

பார்வையை அவளிடமிருந்து பிரித்தெடுத்தவன்,
“ஓகே குட்டி… சாரி சாரி பெரிய பொண்ணுதான் நீங்க”

“ம்ம்.. அங்கிள் நான் ஒன்னும் பயப்படலை. அம்மாதான் பயந்திட்டாங்க” என்று தன் தைரியத்தை எடுத்தியம்பினாள் சுபிக்ஷா.

நிஷாந்தினியால் எதுவும் பேச முடியாமல் போய்விட்டது.
“ஓகே… தங்யூ… தங்யூ” என்று அவன் முகம் பாராமலே கூறிவிட்டு,
“சுபி வா… நாங்கள் போவோம்” என்று மகளுடன் நடக்க ஆரம்பித்தாள்.

“வெயிட்… வா…, உன்னை ட்ராப் பண்ணுறேன்” என்று அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. எனவே,
“இல்லை சா.. சார்… உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்கள் போய்க்கொள்கிறோம்” என்றாள்.
“எனக்கு எந்த சிரமமும் இல்லை. நானும் மயில்வாகனம் ஐயாவின் வீட்டுக்குத் தான் போகிறேன். அதனால்…”
“பரவாயில்லை சார். எங்களுக்கு வழியில் சில வேலைகளும் இருக்கு. நாங்கள் போய்க்கொள்வோம்” என்று உரைத்துவிட்டு மகளுடன் விறுவிறுவென நடந்து சட்ட சென்றாள் நிஷாந்தினி.

மிடுக்காக நடந்து செல்லும் அவளையே இமைகொட்டாது பார்த்து நின்றான்.

மாலை ஐயாவின் பேரப் பபிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கச் சென்றவளுக்கு மனம் பெரும் தவிப்பில் இருந்தது. இங்கேதானே வருவதாகக் கூறியிருந்தான். இவன் ஏன் ஐயா வீட்டிற்கு வந்தான்? இவனுக்கு ஐயாவை எப்படித் தெரியும்? ஓகே வந்தவன் திரும்பிப் போய்விட்டானா? போன்ற கேள்விகள் அவள் மூளைக்குள் நாட்டியமாடின.

இவற்றிற்கெல்லாம் பதிலை எப்படி அறிந்து கொள்வது எனத் தெரியாமல் திண்டாடினாள்.

அப்பொழுது அவளது குழப்பத்தைத் தீர்த்து வைப்பதற்காக அந்தக் கடவுளே மனமிரங்கி உதவி புரியும் நோக்கில் வந்தது போலவே வகுப்பு எடுக்கும் இடத்திற்கு வந்தாள் லதா.

“நிஷா டீச்சர், கிளாஸ் முடிஞ்சுதா?”
“ஆமாக்கா, இப்போதான் முடிக்கிறேன்”
“நல்லது. வருண், வினிதா ஓடிப்போய் சுபிக்குட்டியோடு விளையாடுங்க”என்று தன் பிள்ளைகளை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் இவளிடம் பேச ஆரம்பித்தாள்.
“அப்பவே வந்து பேச நினைச்சன் டீச்சர். ஆனால் கிளாஸ் குழப்பக்கூடாது என்றுதான் முடியுமட்டும் காத்திருந்தேன். டீச்சர் உங்க ஹஸ்பன்ட் எப்போ ஊருக்கு வாறாராம்?” என்ற கேள்வியில் தொண்டையில் ஏதோ வந்து சிக்கிக் கொண்டது போன்று உணர்ந்தாள் நிஷாந்தினி.

அவளது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிபிதுங்கிப் போய் தடுமாறி நின்றாள். அவளது திகைப்பைக் கண்டுகொண்ட லதா பதட்டத்துடன்

“சாரி டீச்சர்.. அது வந்து.., நீங்கதான் சொல்லியிருந்ததா ஞாபகம். வாற பொங்கலுக்கு வருவார் என்று. அதுதான் கேட்டேன்… என் தம்பி சங்கர் வெளிநாட்டுக்கு போயே ஆகணும் என்று பிடிவாதமாக இருக்கான் என்று உங்களுக்குத் தெரியும்தானே டீச்சர். அவனுக்கு விசா எடுக்க உங்ககிட்ட பேசியிருந்தேனே… அதுதான்… அவர் வந்தால் விசா பற்றி பேசுவோம் என்று”

“அது… அது… ஓஓஓ.. அவர் வந்திடுவார்.. வருவார். வந்ததும் கட்டாயம் பேசுவேன்கா..” என்று அவள் தடுமாறவும்,
“ஸாரி டீச்சர், உங்களுக்குக் கஷ்டம் என்றால் வேண்டாம் டீச்சர்”
“இல்லை… இல்லை எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. நிச்சயம் உங்க தம்பிக்கு விசா எடுத்திடலாம்”என்றவள் உள்ளூர பெரும் குற்ற உணர்வில் தவித்தாள்.
நிஜத்தில் இல்லாத, கற்பனையில் மட்டும் உருவான அந்தக் கணவனிடம் எப்படி விசா பெற்றுக் கொடுக்குமாறு கேட்க முடியும்? வீண் ஆசையை இவர்களுக்கு உண்டாக்குகிறேனோ என்ற உணர்வே அவளைத் தவிப்புற வைத்தது.
“அப்புறம் டீச்சர், நாளை அப்பா அம்மாவின் கல்யாண நாள். அதற்காக சின்ன விருந்தொன்றை ஏற்பாடு செய்திருக்கோம். சுபிக்குட்டியும் நீங்களும் கண்டிப்பாக வரவேண்டும் டீச்சர்”
அவளது அழைப்பை ஏற்று கட்டாயம் வருவதாகக் கூறியவள் அப்போது தான் கேட்க நினைத்ததைக் கேட்டாள்.

“இன்று உங்க வீட்டுக்கு புதிதாக விருந்தாளி யாரும் வந்தாங்களா அக்கா. இல்ல தருண் குட்டி தான் சொன்னான்” என்று வெகு சிரமத்துடன் அவனைப் பற்றி அறிந்து கொள்ள இயல்பு போலக் கேள்வி எழுப்பினாள்.

“யாரு?” என்று யோசித்தாள் லதா.
“தருண் குட்டி ஒரு டோல் வைத்திருந்தான். ஒரு அங்கிள் வந்ததாயும் டோலை அவர்தான் தந்ததாயும் சொன்னானா அதுதான்…”
“”ஓஓ.. அந்தத் தம்பியக் கேட்கிறிங்களா? அவர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார். நம்ம திருநெல்வேலி ரவுனில் காலேஜ் ஒன்று கட்டப் போகின்றாராம். அது சம்பந்தமான வேலையாய் வந்தாராம். நம்ம வீட்டில்தானே அந்தத் தம்பி தங்கியிருக்கு. ஐந்தாறு நாளாக இங்கதானே இருக்கார்” என்று நிஷாந்தினியின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள் லதா.

இவளுக்கு இது புதுத் தகவல். அவன் திருமணத்திற்கு வந்ததும் மறுநாளே புறப்பட்டு சென்றிருப்பான் என்றே எண்ணியிருந்தாள்.

அவன் திடீரென வந்தான், தன் வேலை முடிந்ததும் சென்றே விட்டானே. என்னைப் பற்றி எதுவும் நினைக்கவில்லையா என்று உள்ளே மருகினாள்.
அவன் ஏன் உன்னை நினைக்க வேண்டும். நீதான் பைத்தியம் மாதிரி அவனையே நினைத்துக் கொண்டு வாழ்கிறாய் என்றால், அவனும் உன்னை நினைக்க வேண்டுமா? அவன் காதல் இப்போது… ம்கூம் எப்போதுமே உன்னிடம் இல்லை. அப்படியிருக்கும் போது நீ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போயிருப்பாயே என்று மனச்சாட்சி அவளுக்கு இடித்துரைத்தது.

இன்று மதியம் மீண்டும் அவனைக் கண்டதும் விழிகள் நம்ப மறுத்த போதும் உள்ளம் உண்மை எடுத்துரைக்க அந்த உள்ளத்தின் ஒரு ஓரத்தில் காதல் கொண்ட மனதின் மெல்லிய சந்தோஷம் எட்டிப் பார்த்தது. ஆனால்… உடனேயே அந்த சந்தோசத்தைத் தானே தட்டி அடக்கியும் வைத்து விட்டாள்.

‘இங்கு வந்து பார்த்தால் அவன் இங்கேதான் இத்தனை நாளாக இருந்திருக்கானாம். நானும் அது தெரியாமல் தினமும் இங்கே வந்து சென்றிருக்கேனே.. அவன் என்னை இங்கே கண்டிருப்பானா? இப்போதும் இங்கே தான் இருப்பானோ?‘

ஐந்து வருடங்களின் முன்னர் என்னையும் என் காதலையும் வேண்டாம் என்று உதறித் தள்ளியவனுக்கு இன்று நான் முக்கியமாய் இருப்பேனா? அதுதான் நான் இங்கே இருப்பது தெரிந்தும் காணாதவன் போல இருந்திருக்கான்.
வாழ்வில் இழக்கக் கூடாதவற்றையெல்லாம் இழந்து நின்ற போது வாழ்வே வெறுமையானது. சகல வெறுமையையும் மீள் நிரப்பும் சக்தியாக இருந்தது என் மகள் மட்டும் தானே.
'ஆனாலும் இன்றும் மனம் அவனையே நாடுதே. அவன் பாப்பு என்று அழைக்கும் அந்த அழைப்புக்காக மனம் ஏங்கித் தவிக்கின்றதே. இந்தப் பாழாய் போன மனதிற்குத் தெரியலையா? அவன் இப்போது இன்னுமொருத்தியின் கணவன். அவனை மனதார நினைப்பதே துரோகம் என்று இந்தக் காதல் கொண்ட மனதிடம் யார் தான் சொல்வது? என்று புலம்பியபடி இருந்தாள்.

அன்று இரவு வெகுநேரம் கண்விழித்து அவனையே எண்ணிக் கொண்டு இருந்தவளை உறக்கம் தழுவ வெகு நேரமாகிவிட்டது.

மறுநாள் மாலை மயில்வாகனம் ஐயா வீட்டிற்குப் போகும்போது இனம்புரியாத ஒரு பரவசம் அவளுள். இன்று அவனைக் காண முடியுமா? என்ற ஏக்கம் எழுந்தது.

மாலையில் ஐயாவும் அவரது மனைவியும் மங்களகரமாக அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அங்கே தனஞ்சயன் ஐயாவின் மகனான விவேக்குடன் பேசியபடி ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான். உள்ளே சென்ற நிஷாந்தினி பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.
தம்பதி இருவரும் சேர்ந்து “அடுத்து உன் புருஷனுடன் சேர்ந்து தம்பதியாய் வந்து ஆசீர் வாங்கணும்” என்று மனதார அவளுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

அவன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் இதனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளைத் தொடர்ந்து சுபிக்ஷாவும் பெரியவர்களின் காலில் விழுந்தாள். அதனைப் பார்த்து பெரியவர்கள் உள்ளம் குளிர்ந்து போனது. குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்து ஆசீர் வழங்கினர்.

எல்லோரும் சந்தோசத்துடன் உரையாடிக் கொண்டிருந்தனர். தனஞ்சயன் விவேக்குடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் மாடிப் படியருகே அமர்ந்து லதாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் மீதே மொய்த்துக் கொண்டிருந்தன. அவள் மீது ரசனையாய் மொய்த்துக் கொண்டிருந்த தன் கண்கள் மீதே கோபம் கொண்டான். இன்றும்கூட அவள் தன்னைத் தடுமாற வைப்பதை உணர்ந்தான். திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும் தோற்றத்தில் எந்தவித மாற்றமுமின்றி, சற்றே அழகு கூடித் தெரிகின்றாளே எப்படி? என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டான். அவனது ஆராய்ச்சி சற்று நேரம் நீடித்தது. அவன் வாய் மட்டுமே எதிரில் இருந்தவருடன் உரையாடியது. மனமும் விழியும் அவளையே கபளீகரம் செய்தது.

அவள் திரும்பி இவனைப் பார்க்கவுமே அவன் நிகழ் உலகிற்கு வந்தான்.
'டேய் மடையா, என்ன பண்ணிக்கிட்டு இருக்காய். அவள் இப்போது உன்னவள் இல்லை. இனி எப்போதுமே உன்னவளாக முடியாது. அவளைப் போய் ரசிக்கின்றாயே' என்று தனக்குத் தானே குட்டொன்றை வைத்தவன் அவளிடமிருந்து தன் கண்களை வலிந்து மீட்டெடுத்தான்.

அதுவரை நிஷாந்தினி இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாள். உள்ளூரக் குறுகுறுக்கவும் திரும்பி அவன் இருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் சட்டென்று திரும்பியது புரிந்தது. அதற்குமேல் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அடிக்கடி அவனைக் கடைக்கண்ணால் பார்த்தாள். ஆனால், அவன் திரும்பவேயில்லை. அப்படியானால் நான்தான் அவன் பார்த்ததாகப் பிரம்மை கொண்டேனோ என்று தன் நிலை உணர்ந்து தன்னைக் தானே திட்டிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து வாவேக்கிடம் சொல்லிக் கொண்டு தனது அறைக்குச் செல்ல எழுந்தான் தனஞ்சயன். நிஷாந்தினியைப் பார்த்தும் பார்க்காத மாதிரி மாடி ஏறத் தொடங்கினான். அவன் மாடி ஏறுவதை அப்போதுதான் கண்ட லதா,
“தம்பி ஒரு நிமிடம் இங்க வாங்களேன்” என்று அவனை அழைத்தாள். மறுப்பேதும் சொல்லாது அவனும் இறங்கி அவர்கள் அருகில் வந்தான்.
“நிஷா, இவர்தான் நான் சொன்ன தனஞ்சயன். நம்ம ரவுனில் காலேஜ் கட்டப் போறாராம். தம்பி இவங்கதான் நிஷா. பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கிற டீச்சர்” என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். அவள் லதாவின் பேச்சுக்காக எழுந்து அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்காது அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள். அவன் எந்தப் பதிலும் இன்றி சிறு தலையசைப்புடன் திரும்பிச்செல்ல முயன்றான்.

“தம்பி நீங்க சாப்பிடாமல் மேலே போறிங்க. வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அழைத்தாள் லதா.

“அக்கா நான் அப்புறமாய் சாப்பிடுறேனே”
“இல்லையில்லை.. எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதில் தான் சந்தோசம் வாங்க” என்றுவிட்டு உணவு பரிமாறும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றாள்.

மிகப் பெரிய ஹாலில் தலைவாழை இலை போட்டு எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.

ஓரிடத்தில் தனஞ்சயனை உட்கார வைத்த லதா சற்றுத் தள்ளித் தான் அமர்ந்து கொண்டு இருவருக்கும் இடையில் நிஷாந்தினியை அமருமாறு கூறினாள். அவன் அருகில் அமர சங்கடப்பட்டவள்

“அக்கா நான் அப்புறம் வந்து சாப்பிடுறேனே. சுபிக்குட்டிக்கும் சாப்பாடு ஊட்டி விடனும்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. சுபிக்குட்டிக்கும் தருணுக்கும் நான் அப்போதே சாப்பாடு கொடுத்திட்டேன். நீங்க உட்காருங்க” என்றவள் அவளது கைகளைப் பற்றி உட்கார வைத்தாள்.

நிஷாந்தினி கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவனும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை சங்கடத்தை உண்டாக்க நெளிந்தபடி பரிமாறப்பட்ட உணவைக் கொறித்தபடி இருந்தாள்.

அவளது பதட்டத்தைக் கவனித்துகொண்டிருந்தவன் அவள் காதருகில் குனிந்து,
“நான் உன்னைக் கடித்து விழுங்க மாட்டேன். ஏன் இந்தப் பயம்?” என்று மிக மெல்லிய குரலில் கேட்டான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்
“எனக்கு எதற்குப் பயம்?” என்று சண்டைக் தோழியாய் சிலிர்த்து நின்றாள்.

“ஓஓ பயம் இல்லை” என்று நக்கலாகக் கேட்டான்.
 
Top