எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 7

S.Theeba

Moderator
காதல் 7

அந்த வெள்ளை நிற லம்போர்கினி கார் சாலையில் சத்தமின்றி வழுக்கிக்கொண்டு சென்றது. காரினுள் அதைவிட அமைதி நிலவியது.தனஞ்சயன் ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தபடி ஓட்டினான். அவளோ அவன் காரை ஓட்டுவதில் கவனமாக இருப்பதாக எண்ணிக் கொண்டு அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அன்று அவன் அணிந்திருந்த இளநீல நிற சட்டையும் கருநீல பாண்டும் அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. அளவாக கத்தரிக்கப்பட்டு அடர்த்தியாய் இருந்த மீசையும் அழுத்தமான உதடுகளும் அலையலையாய் படிந்திருந்த சிகையும் அவனை ஆணழகனாக்கின. இந்தக்
காரை ஓட்டுவதில் கூட என்ன ஒரு லாவகமும் கம்பீரமும்.

தன்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். கண்கள் அவனை அப்படியே உள்வாங்கி நெஞ்சம் என்னும் கூட்டில் சிறைப்படுத்தின. 'இவன் ஏன் இவ்வளவு அமைதியாக வாறான்? பேசுறது அவ்வளவு கஷ்டமான வேலையா? துரைக்கு என்கூடவெல்லாம் பேசினால் முத்து உதிர்ந்து விடுமோ?' என்று மனதிற்குள் திட்டியபடியும் இருந்தாள்.


அவள் தன்னை ரசிப்பதைக் கண்டவனின் உள்ளமோஆனந்தக் கூத்தாடியது. சிறிது நேரம் அவளை இரசிக்க விட்டு அதில் இன்பம் கண்டவன், தானும் அவளை அணு அணுவாய் ஓரக்கண்ணால் ரசித்தான். அவளுடன் பேசுமாறு மனம் தூண்டவும் “என்ன பார்வையெல்லாம் பலமாயிருக்கு?” என்றான்.
அவன் திடீரென கேட்கவும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வளவு நேரம் அவன் பேசவில்லை என்று குறைபட்டவள் இப்போது பேச்சை மறந்து நின்றாள். 'அச்சச்சோ, நாம பார்த்ததை அவன் கண்டு கொண்டானே. இப்போ அவன் கிட்ட என்ன சொல்ல முடியும்' என்ற படபடப்பு உண்டானது. நாணத்தால் வார்த்தைகள் தடுமாற பதில்கூற முடியாது தவித்தாள். வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க ஜன்னலோரம் திரும்பிக் கொண்டாள்.

அவளது வெட்கத்தை ரசித்தவனுக்கு அவளை சீண்டி பார்க்கும் ஆசை உண்டானது.
“என்ன பாப்பா, பதிலையே காணோம்?” என்றான்.
அவன் மீண்டும் பாப்பா என்று அழைக்கவும் அவளுக்கு சுள்ளென்று கோபம் உண்டானது. 'இவன் இன்னும் என்னைப் பாப்பா என்று அழைக்கிறானே, நானானால் இவன்மீது மையல் கொண்டு இவனையே நினைத்துக் கொண்டிருக்கின்றேனே” கோபத்தோடு ஏமாற்றமும் ஒன்றுசேர வெடுக்கென்று திரும்பியவள்
“நான் ஒன்னும் பாப்பா இல்லை. என் பேரும் பாப்பா இல்லை”
“சின்னக் குழந்தைகளைப் பாப்பா என்றுதானே கூப்பிடுவாங்க”
“ஹலோ சேர் நான் ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை. காலேஜில் செகண்ட் இயர் படிக்கிறேன்.. தெரியுமா?”
“ஓகோ, ஓகோ நான் பாப்பா என்று தான் கூப்பிடுவேன்”
“எனக்கு எங்க அம்மா அழகாக நிஷாந்தினி என்று பேர் வைச்சிருக்கார்” என்று கூறினாள். படபடப்புடன் பேசும் அவளது தவிப்பை ரசித்தவன், “நிஷாந்தினி அழகான நேம்தான். இருந்துட்டு போகட்டும். பட் எனக்கு எப்பவும் நீ பாப்பாதான். எனக்குப் பிடிச்சதா பாப்பு என்று கூப்பிடுவேன்” என்றான்.
“அப்புறம் என் நேம் தனஞ்சயன். சோ, நீயும் சேர் என்று கூப்பிடாமல் உனக்குப் பிடிச்சமாதிரி கூப்பிடு. பட், எல்லோரும் தனா என்றுதான் அழைப்பார்கள். நீ டிஃபரண்டா கூப்பிட்டால் ஓகே.”
“எப்படி…?”
“மாமா… அத்தான்… உன் இஷ்டம்” என்றான். அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இவன் சொல்வதன் அர்த்தம் நான் நினைப்பது தானா என்று ஒருவித தயக்கமும் உண்டானது.

ஆச்சரியத்தில் விரிந்த அந்தக் கண்கள் அவனை அப்படியே உள்ளிழுத்து சிறைப்பிடித்தது போன்ற உணர்வு அவனுக்குள் உண்டானது. காரை ஓரம் கட்டி நிறுத்தினான். திரும்பி அவளைப் பார்த்தான்.
“பாப்பு…” என்று மிக மிக மென்மையாக அழைத்தான். அந்தக் குரல் அவளை அப்படியே கவிழ்த்து போட்டது. “ம்..” என்ற ஒற்றைச் சொல் மட்டுமே அவளால் கூற முடிந்தது. ஆனால், அவனுக்கு அந்த ஒற்றை எழுத்தே போதுமானதாய்இருந்தது. “பாப்பு… பிளீஸ்” என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்.
“எ.. என்ன…?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“ப்ளீஸ் பாப்பு, கொஞ்சநேரம்”
என்றவன் சிறிதுநேரம் அப்படியே கண் மூடி இருந்தான்.

இந்த அணைப்பு அவனுக்குள் இருந்த காதல் உணர்வை இன்னும் தூண்டின. அவனுக்குள் பெரும் இன்ப அவஸ்தையே உருவானது.

இதற்குமேல் தன்னால் அவளில்லாமல் வாழ முடியாது என்பதை உணர்ந்தவன், தனது கண்களைத் திறந்து அவள் கண்களுக்குள் ஊடுருவினான்.
“பாப்பு… உன் கண் என்னை அப்படியே முழுங்குதடி. இவ்வளவு காலத்தில் எத்தனையோ பேரழகிகளைக் கூட சந்தித்திருப்பேன். பட் அவர்கள் யாரிடமும் எனக்கு இந்த உணர்வு தோன்றவில்லை. அப்படியே ஆளைக் கட்டிப் போடுறடி. நீ எனக்கு வேணும் பாப்பு…ஐ லவ் யூ. பாப்பு..” என்றான்
அவனது அணைப்பும் வார்த்தைகளும் அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.செய்வதறியாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை அன்று கோயிலில் பார்த்தபோது பெரிதாக எனக்கு எதுவும் தோணலை தான். ஆனால் அதன் பிறகு உன்னை நினைக்காத நேரமேயில்லை. ஃபிறைடே உன்னைத்தேடி அந்தக் கோயிலுக்கு வந்தேன். பட் காணல. இன்று உன்னைப் பார்த்ததும் இனி உன்னைத் தவறவிடக் கூடாதென்று முடிவெடுத்து விட்டேன். நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லடி. ஐ லவ் யூ பாப்பு..” என்றவன் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
சிறிது நேரம் அந்த அணைப்பின் இதத்தை அனுபவித்தவன் “பாப்பு.. ஏன் எதுவும் பேசாமல் இருக்காய்? இது பிடிக்கலையா?” என்று சிறிது தடுமாற்றத்துடன் கேட்டான். அந்தத் தடுமாற்றம் எங்கே அவளுக்குத் தன்னை பிடிக்காமல் போய்விடுமோ என்ற அவனது பயத்தை வெளிப்படுத்தியது. அவனது அந்த தவிப்பைக் காண அவளால் முடியவில்லை. ஆனால், அவனது அணைப்பில் இருக்கும் போது அவளால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை முடியவில்லை. எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்தினாள்.
அவளது அந்த ஒரு முத்தமே அவனை உன்மத்தம் கொள்ள வைத்தது. அவளது கன்னங்களை தன் கைகளில் ஏந்தியவன் அவளது முகவடிவைத் தன் வலது கையால் அளந்தான்.
“பாப்பு, பிளீஸ் சொல்லுடி. உன் வாயால் சொல்லி கேட்கணும். ஐ லவ் யூ சொல்லு”
வெட்கத்தில் கண்களை மூடி இருந்தவள் மெதுவாகக் கண்களைத் திறந்து அவன் முகத்தைப் பார்த்தபடி,
“ஐ லவ் யூ மாமா” என்றாள்.
அவள் அப்படி சொன்னதும் அவன் ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல உணர்ந்தான். சந்தோசத்தில் அவளது எலும்பு நொறுங்கும் அளவுக்கு இறுக்கி அணைத்து உடனேயே விடுவித்தான்.
தன் தலையை அழுந்தக் கோதியவன்
“ம்கூம்… இதற்கு மேல் இங்கேயே நின்றால் இருவருக்குமே ஆபத்து பேசாமல் புறப்படுவோம்” என்றவன் ஓர் உல்லாசப் புன்னகையுடன் காரை மீண்டும் ஓட்டத்தை தொடங்கினான்.

அவளைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டவன், தன்னைப் பற்றியும் சுருக்கமாகக் கூறினான்.

அவளது வீடு இருக்கும் தெரு முனையிலேயே இறக்கிவிடுமாறு அவள் கூறவும் காரை நிறுத்தினான். அவள் இறங்க முன்னர் அவளது வலது கையைப் பற்றி உள்ளங்கையில் முத்தம் ஒன்றை வைத்தான்.
இறங்கியவள் அவனுக்கு கையசைத்து விடைபெற்று தனது வீடு நோக்கி நடைபோட்டாள். அவள் வீட்டிற்குள் செல்லும் வரை காரில் இருந்தபடி பார்த்திருந்தவன், பின்னர் உல்லாசமாக சீட்டியடித்தபடி தன் வீடு நோக்கி காரை செலுத்தினான்.


மிகவும் சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்தவளை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக வரவேற்றாள் சுபாஷினி. அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக கூறி தங்கையை இனிப்புடன் வரவேற்றாள்.
 

Attachments

  • PhotoEditor_202181215141175.jpg
    PhotoEditor_202181215141175.jpg
    312.6 KB · Views: 0
Last edited:
Top