எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே1

S.Theeba

Moderator
ஹாய் நட்புக்களே

இது எனது புதிய தொடர். வாசித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

காதல் 1

இரவின் சோர்வைப் போக்க அதிகாலையிலேயே குளித்த பெண்ணைப் போல பனித்துளிகளால் குளித்திருந்தன புல்வெளிகள். காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் அப் பனித்துளிகள் மேல் பட்டு அதன் அழகை மேலும் மெருகூட்டின. இரவின் குளிர்மையிலும் அதிகாலையின் பனியிலும் சிலிர்த்து நின்ற மரங்கள் பார்க்கும் இடமெல்லாம் பரவசத்தைத் தந்தன. தோட்டங்களுக்கு இடையே சலசலத்து ஓடிய சிற்றாறு அவ்வூரின் குளிர்மைக்கு மிகப் பெரிய துணையாயிருந்தது.
சோலையூர் என்னும் தன் பெயருக்கு சற்றும் குந்தகம் ஏற்படுத்தாமல் காணும் இடமெல்லாம் பச்சைப் பசேலென காட்சி தந்தது அவ்வூர். வயல்வெளிகளும் மரக்கறிச் செய்கைகளும் தென்னந் தோப்புகளும் பரந்து விரிந்திருந்தன. தோட்டங்களைத் தாண்டி உள்ளே சென்றால் பல சிறு வீடுகளும் ஆங்காங்கே ஒன்றிரண்டு மாடி வீடுகளும் காணப்பட்டன. அரண்மணை போன்ற தோற்றத்தை தரும் மிகப்பெரிய வீடு ஒன்று ஊரின் மத்தியில் காணப்பட்டது. அதுவும் பழமை மாறாது புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. அது அந்த ஊரின் பெரிய தனக்காரர் என் அழைக்கப்படும் மயில்வாகனம் ஐயாவின் வீடு. இப்போது நாம் அந்த வீட்டிற்குள் போகப் போவதில்லை. அந்த வீடு அமைந்திருந்த தெருவுக்கு அடுத்த தெருவில் உள்ள சிறிய வீடொன்றிற்குள்ளேயே நாம் செல்லப் போகின்றோம்.
வீட்டிற்குள் நுழையும்போதே நம் கதையின் நாயகி நிஷாந்தினியின் குரல் நம்மை வரவேற்றது. “சுபிக்குட்டி எழும்புடி டைம் ஆச்சு. ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா? நேற்றும் உன்னால் ஸ்கூலுக்கு லேட் ஆயிடுச்சு.இன்னைக்கு எனக்கு மன்த்லி எக்ஸாம் வேறு இருக்கு” என்று அழாக்குறையாக வரவேற்கிறது அந்தக் குரல்.
அப்போது பாயில் போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அந்தக் குட்டி உருவம் மெல்லப் போர்வையைப் கீழிறக்கியது “ப்ளீஸ்மா இன்னும் கொஞ்ச நேரம்… என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்கம்மா ப்ளீஸ்… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறேனே” என்று கூறி விட்டு மீண்டும் போர்வையால் மூடிக்கொண்டது. போர்வையை இழுத்து எடுத்த நிஷாந்தினி “சுபிக்குட்டி டைம் போதாது எழும்புடா. இன்று உனக்குப் பிடித்த குளிப் பணியாரம் செய்து வைத்திருக்கேன். ரெடியாயிற்று சாப்பிடுவோம் வாடா” என்று அவளுக்கு ஆசை காட்டி ஒருவாறு எழுப்பி வீட்டிற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் குளியலறைக்குள் அழைத்துச் சென்றாள்.
அவர்கள் திரும்பி வருவதற்குள் அவர்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம்…
நிஷாந்தினி அழகுக்கு இலக்கணம், தங்கப் பதுமை, சுண்டினால் இரத்தம் தெறிக்கும் நிறம், மெல்லிடையாள்… இப்படியெல்லாம் சொல்லத்தான் எனக்கும் ஆசை. ஆனால், நம் நாயகி நீங்கள் நினைக்கும் அளவுக்கு இல்லை கறுப்பும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறம். பூசினாற்போன்ற உடல்வாகு. இடைவரை நீண்ட கூந்தல். அவளது கண்கள் மட்டும் காண்போரை கவர்ந்திழுக்கும். இருபத்தாறு வயது நிரம்பிய பாவையவள்.
சுட்டிப் பெண்ணான குட்டித் தேவதை சுபிக்ஷா. நிஷாந்தினிக்கு நேர் எதிர். இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம் கொழுகொழுவென கன்னக் குழியழகுடன் சுருள் சுருளான கேசத்துடன் இருந்தாள். இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து வயதில் காலடி எடுத்து வைக்கவுள்ளாள்.

இருவரும் தயாராகி வெளியில் வந்து தமது வசந்தமாளிகையை-அவர்களின் வீட்டைப் பூட்டிவிட்டுத் தமது பள்ளியை நோக்கி நடைபோட்டனர். நிஷாந்தினி அவ்வூரின் பள்ளியில் கணித பாட ஆசிரியராகப் பணிபுரிகின்றாள். சுபிக்ஷா அதே பள்ளியில் முதலாம் வகுப்பில் கல்வி பயில்கின்றாள்.
நிஷாந்தினி எளிய காட்டன் புடவையொன்றை நேர்த்தியாக அணிந்து தனது கூந்தலை அழகான ஒரு கொண்டையாக மாற்றியிருந்தாள். காதில் சிவப்புக் கல் பதித்த சிறிய தோடு ஒன்றும், வலது கையில் ஒரு கைக்கடிகாரம். முகத்தில் சிறிதளவு பவுடரும் நெற்றியில் சாந்துப் பொட்டும்… இதுவே அவளது அலங்காரம்.

அந்த சிறிய வீதியில் இருவரும் இயற்கையை இரசித்தபடி சென்றனர். வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் பட்டு சுகந்தமாக வீசும் தென்றல் அவர்களைத் தழுவிச் செல்ல கதைபேசியபடி நடை போட்டனர்.

அப்போது அவர்களை கடந்து பள்ளிக்கு சென்ற பையனைக் கண்ட சுபிக்ஷாவிற்கு அவனுடன் வம்பு பண்ணும் எண்ணம் தோன்றவும் “ஹாய் விஷ்வா… ஒரு டீச்சர் வாறாங்க. அவர்களுக்கு விஷ் பண்ணனும்னு உனக்குத்தான் தெரியலையா?”
“சாரி டீச்சர். குட்மோர்னிங்…”
நிஷாந்தினியும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு சுபிக்ஷாவை முறைத்துப் பார்த்தாள். அதனை சிறிதும் சட்டை செய்யாத சிறியவள் “ஆமா விஷ்வா.. நேற்று கோம்வேர்க் செய்யலைன்னு வெளியே நிக்க வைச்சாங்களாமே. உண்மையா?”
அவன் பதில் சொல்லாமல் தடுமாறவும் நிசாந்தினி பையனை பள்ளிக்கு செல்லுமாறு அனுப்பிவைத்தாள். “மற்றவர்களின் கஷ்டத்தையோ இயலாமையையோ நாம் சொல்லிக்காட்டி அவர்களை மேலும் கஷ்டத்திற்கு ஆளாக்கக் கூடாது” என்று தன் செல்லப் பெண்ணிற்கு புத்தி சொன்னவளுக்கு இதயத்தின் ஓர் ஓரத்தில் சுருக்கென்று தைத்த ஓர் உணர்வு. அதனை வலிந்து அடக்கிவிட்டு., மீண்டும் மகளுடன் பேசியபடி நடந்தாள்.
பள்ளியில் பாடம் இல்லாத நேரத்தில் ஓய்வறையில் அமர்ந்து அடுத்த பாடவேளைக்கான குறிப்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் தாரணி. நிஷாந்தினியின் மிக நெருக்கமான நண்பி. இன்று நிஷாந்தினி இயல்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு ஊன்றுகோலாகத் துணை நின்ற தோழி இந்தத் தாரணி தான். அவளும் அதே பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியர்.
“ஹாய் நிஷா, குட்மார்னிங்..”
“குட்மார்னிங் தாரணி. வெட்டிங்கிற்கு இன்னும் ஒருவாரம் தானே இருக்கு. மேடம் லீவு போடாமல் ஸ்கூலிலேயே சுத்துறிங்க?”
“நாளையில் இருந்து நான் லீவுதான். நிஷா கட்டாயம் முதல்நாளே நீயும் சுபிக்குட்டியும் வந்திடனும். நிச்சயத்திற்கு நீ வரல. கல்யாணத்தில் என்னை ஏமாத்திடாதே. உன்னை எதிர்பார்த்திருப்பேன்.”
“கட்டாயம் வருவோம். ஆமா தாரணி, உன் வுட்பி ஊருக்கு வந்திட்டாரா?”
“அவர் புதன்கிழமை வந்திடுவாராம்.” என்று சொன்னவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.
“ஐயோடா நம்ம தாரணி கூட வெட்கப்படுதே..” என்றவள் மேலும் அவளைக் கேலி செய்து அவளின் சந்தோசத்தில் தானும் அகமகிழ்ந்து போனாள்.

தன் நண்பியின் மணநாளில் தான் சந்திக்கப் போகும் அதிர்ச்சியால் இந்த சந்தோஷம் பறிபடப்போவதை அறியவில்லை அவள்…
 
Last edited:
Top