அத்தியாயம் 1
அதிகாலை வேளையில் பிரதான வீதியில் அமைந்திருந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் வாயிலில் ஆதித்யன் வெட்ஸ் அனுராதா (Adhithyan Weds Anuradha) என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பலகையில் எழுதியிருந்தது.
வாசலிலேயே சிரித்த முகமாகவே அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் செந்தில்நாதன். அவர் முகத்திலிருந்த சிரிப்புக்கு காரணம் இன்று அவருடைய ஒரே மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
செந்தில்நாதன் அன்பானவர் அனைவரையும் சமமாக நடத்துபவர். வாழ்க்கையில் பல கஷ்டங்கள் கடந்து இந்த திருமண மண்டபத்தை இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவர் இப்பொழுது சென்னையில் மூன்று மண்டபங்களின் உரிமையாளராக மாறி இருக்கிறார். தான் முதலில் ஆரம்பித்த இந்த திருமண மண்டபத்திலேயே தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்த நினைக்கும் காரணம் இந்த மண்டபத்துக்கும் அவர் மகள் அனுவுக்கும் ஒரே வயது.
மகளின் திருமணத்தைப் பற்றி எப்பொழுதுமே பெற்றோருக்கு கனவுகள் உண்டு. தன் ஆசை மகளுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்த செந்தில் மண்டபத்தை சுற்றி பார்வை செலுத்தியவர் கடைசியாக மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு பட்டு வேட்டியில் கம்பிரமாக அமர்ந்து இருக்கும் தன் வருங்கால மாப்பிள்ளையைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தார்.
“என்னங்க என்ன மணமேடைய பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கீங்க?” என கணவரைப் பார்த்துக் கேட்டார் கவிதா.
“இல்லம்மா சும்மா தான் டெகரேஷன்ஸ் எல்லாம் எப்படி இருக்குனு பாத்துட்டு இருக்குறன்” என்றவரை, அப்படியா? என்று ஓர் நம்பா பார்வை பார்த்தார்.
மனைவி தன்னை நம்பவில்லை எனப் புரிந்ததும் உண்மையை கூறினார் அவர், “இல்ல மா மாப்பிள்ளை பத்தி மத்தவங்க பேசுறதை கேக்கும் போது அவளோ சந்தோஷமா இருக்கு என் பொண்ண..” என சொல்ல வந்தவரை மனைவி முறைத்துப் பார்த்ததும் தன் தவறைத் திருத்திக் கொண்டு, “நம்ம பொண்ண ஒரு நல்லவர் கிட்ட ஒப்படைக்கிறத நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு கவி” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர் கண் கலங்கியது.
“ஆமாங்க.. எனக்கும் சந்தோஷம் தான். சரி சின்ன பையன் மாதிரி கண் கலங்காம வாங்க மீரா உங்கள கூப்பிடுறா” என்று கணவரிடம் கூறி அவரை திசைதிருப்பினார்.
கைக்குட்டையால் கண்களை துடைத்த செந்தில் கவிதாவின் சித்தப்பா மகள் மீராவைத் தேடிக் கிளம்பினார்.
கணவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்த கவிதா முகூர்த்த நேரம் நெருங்குவதை உணர்ந்து மகளைக் காண விரைந்தார்.
அறையில் அடர் சிவப்பு வண்ண முகூர்த்தப் பட்டு உடுத்தி மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் மகளை ரசித்துக் கொண்டே கண்ணாடி மேசை முன் அமர்ந்து இருந்தவளை நெருங்கி நின்று “ என் கண்ணே பட்டிடும் செல்லம்.. அவ்வளோ அழகா இருக்க” என்று கூறி நெட்டி முறித்தார்.
அனு கண்ணாடியில் தெரிந்த அன்னையின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தவள் அறையின் வாசலில் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.
“பெரியம்மா.. அக்காவ அழைச்சிட்டு வர சொல்லி ஐயர் சொன்னாரு” என்று வந்து அழைத்தாள் தேன்மொழி, மீராவின் மகள். மகளை அழைத்துக் கொண்டு வந்து மணமேடையில் அமர வைத்த கவிதா கணவரின் அருகில் நின்று கொண்டார்.
தன் அருகில் அமர்ந்திருந்த ஆதியை மெல்லத் திருப்பிப் பார்த்த அனு ‘எப்படி இந்த கல்யாணம் நடக்குதுனு எனக்கே தெரியல. இதோ என் பக்கத்துல இருக்ககுறவன இப்ப தான் மூணாவது வாட்டி பாக்குறன். எல்லாம் இந்த அம்மம்மாவால வந்தது’ என்று முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அம்மம்மாவை மனதுக்குள் திட்டிக் கொண்டு ஆதித்யன் உடனான தன் முதல் சந்திப்பைத் தான் நினைத்துப் பார்த்தாள்.
இரண்டு மாதங்களுக்கு முன் -
காபி ஷாப்பிற்கு வந்து அன்னை கொடுத்த எண்ணிற்கு பல முறை அழைத்தவள் யாரும் எடுத்த பாடு இல்லை என்றதும் கண்களை மூடி சிந்தித்துக் கொண்டிருந்தாள் அனு.
கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே
பாட்டு சத்தத்தில் கண்ணை விழித்தவள் பார்த்தது ஆதி முகத்தைத் தான். "ஐ அம் சாரி நீங்க வந்தத பார்க்கல.. ஐ அம் அனுராதா" என சிரித்த முகமாக தன்னை அறிமுகம் செய்தாள். “நோ இஸ்ஸுஸ் நான் ஆதித்யன்” என அவனும் பதிலுக்குக் கூறினான்.
‘இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வச்சதுக்கு சாரி கேப்பான்னு பார்த்தா.. இவன் நான் சாரி சொன்னதுக்கு நோ இஸ்ஸுஸ்ன்னு சொல்லுறான்.. இத வச்சே அப்பாகிட்ட உன்னை பிடிக்கலன்னு சொல்லுறேன் பாரு..’ என்று நினைத்தவள், பேச ஆரம்பிக்கவும் உடனே அனுவுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பை ஏற்றாள், அந்த பக்கம் என்ன சொன்னார்களோ பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அனுவுடைய கண்கள் கண்ணீர் சொரிந்தன. என்ன நடந்தது என புருவத்தை உயர்த்தி ஆதி வினவ "எமெர்ஜென்சி ஐ ஹவ் டு லீவ்"(emergency I have to leave) என்றவள் அவன் பதிலுக்கு சொல்ல வருவதைக் கேட்காமல் காரைக் கிளப்பிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டுக்குள் வந்தும் “அம்மா.. அம்மா.. எங்க இருக்கிங்க?” என்று அழைத்துக் கொண்டே அம்மம்மாவின் அறை நோக்கிச் சென்றாள். கட்டிலில் சோர்வாக படுத்துக் கிடந்த அம்மம்மாவின் அருகே நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கி “இப்ப எப்படி இருக்காங்க.. எப்படி விழுந்தாங்க?’’ என்று வினவினாள்.
காலையில் அனு கிளம்பிய பிறகு குளியலறையில் விழுந்தவரைத் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவர்கள் மருத்துவருக்கு அழைத்தனர். மகளை நச்சரித்து பேத்தியை வீட்டுக்கு சீக்கிரம் வரவைக்கச் சொன்னார். அவரின் நச்சரிப்புத் தாங்காமல் கடைசியாக மகளை அழைத்து விட்டார் கவிதா. மருத்துவர் சோதித்துப் பார்த்து பெரிய அடி ஒன்றும் இல்லை எனக் கூறி ஓய்வு எடுத்தால் போதும் என்றார். அவர் சென்று ஐந்து நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிட்டாள் அனு.
நடந்த அனைத்தையும் தாய் சொன்ன பின்பு அப்பாவியாக முகத்தை வைத்திருந்த பாட்டியை முறைத்துப் பார்த்தாள். “ கவிதா பாரு புள்ள களைச்சு போய் வந்திருக்கு எனக்கும் அனுக்கும் ஜூஸ் எடுத்திட்டு வா” என்று மகளை வேலை சொல்லி அந்த இடத்தை விட்டு துரத்தினார் அனுவின் அம்மம்மா செல்வி.
அம்மா அறையை விட்டு செல்லும் வரை காத்து இருந்துவள் “உண்மையாவே கீழ விழுந்தீங்களா..? எதுக்கு இப்படி பண்ணுணிங்க..? சொல்லுங்க அம்மம்மா” என்று கோவமாகக் கேட்டாள் அனு.
இதுக்கு மேல் பொய் சொன்னால் பேத்தி விட மாட்டாள் எனப் புரிந்து, 'இல்லை' என்று தலையை ஆட்டி உண்மையைச் சொல்லத் தொடங்கினார்.
“ அனு குட்டி.. மாஸ்டர்ஸ் கால்யாணம் பண்ணிட்டு கூட படிக்கலாம்டா. நான் உயிரோட இருக்கும் போதே உன்னோட கல்யாணத்த பார்க்கணும்னு ஆசைப்படுறன்டா.. அம்மம்மாக்காக கால்யாணத்துக்கு சம்மதம் சொல்லு செல்லம்” என்று பேத்தியிடம் கெஞ்சி கேட்டார்.
அனுவுக்கு சின்ன வயதில் இருந்து அம்மம்மா என்றால் உயிர். அவர் தன்னிடம் இப்படி கெஞ்சிக் கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வாள். அம்மம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு “சரி நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுறன். இந்த கேவலமா ஐடியாவ அந்த தேன் தானே குடுத்தா” என்று கேட்டதுக்கு ஆமாம் என தலை அசைத்தார்.
சரியாக அந்த நேரம் “அம்மம்மா ஜூஸ்” என்று அறையில் நுழைந்தாள் தேன்மொழி. அக்காவைப் பார்த்தும் எதுவும் தெரியாதவள் போல “அக்கா இங்க என்ன பண்ணுற, அத்தானை பார்க்க போகல?” என்று கேட்டவளை அடிக்கத் துரத்தினாள் அனு. வீட்டை சுற்றி ஓடி கடைசியாக வசமாக அனுவிடம் சிக்கிக் கொண்டாள் தேன்மொழி.
தங்கையின் காதைத் திருகியவள் “ அம்மம்மாக்கு ஐடியாவா கொடுக்குற..? அவங்க ஹெல்த்தோட விளையாடாத. உண்மையா அடிபட்டிருந்தா என்ன பண்ணி இருப்ப?” என்று கோபமாகக் கேட்டாள்.
“சாரி க்கா, அம்மம்மா தான் ஏதாச்சும் ஐடியா சொல்ல சொன்னாங்க அதுதான். இனிமே இப்படி பண்ண மாட்டேன் “ என்று காதைப் பிடித்து மன்னிப்புக் கேட்பவளை மன்னித்தாள் அனு.
தேன்மொழி, சித்தியின் மகள் என்றாளும் தன் சொந்த தங்கையாவே நடத்துவாள் அனு. ஒரு அக்காவாக பாசத்தையும் கண்டிப்பையும் காட்ட அவள் தவறியதே இல்லை. தேன்மொழி கூட அனுவை தன் சொந்த அக்காவாகவே பார்த்தாள்.
“சரி நானே இன்னும் கன்ஃப்ர்ம் பண்ணல அதுக்குள்ள என்ன அத்தான் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட என்ன விஷயம்?” என்று தங்கையைக் கேட்டாள்.
“இல்ல கா.. அவருக்கும்.. அப்பாவுக்கும்.. (அனுவின் சித்தப்பா) ஒரே பெயரா அதனால தான்” என்று சொன்ன தங்கையை “அடிப்பாவி” என்று மறுபடியும் அடிக்கத் துரத்தினாள்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த அனு ஆதித்யனைத் திரும்பிப் பார்த்தாள். தன்னைப் பார்த்து புன்னகைக்கும் ஆதியிடம் பதிலுக்கு தானும் புன்கைத்தாள். சரியாக அந்த தருணத்தில் போட்டோகிராஃபர் அதை அழகாக படம் பிடித்தார்.
ஐயர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று மாங்கல்யத்தை ஆதியின் கையில் கொடுத்தும் மங்கள வாத்தியம் முழங்க பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு மாங்கல்யத்தை அனுவுக்கு அணிவித்து அவளை தன்னுடைய சரிபாதி ஆக்கினான்.