எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சரண்யா விஸ்வேஸ்வரன் - நீல மழைச்சாரல் - கதை திரி

Status
Not open for further replies.
நாயகன் - அர்ஜுன் ஆதித்யன்

நாயகி - வித்ய யாழினி

அத்தியாயம் 1

அதிகாலை நேரம் லேசான மழைச்சாரல் முகத்தில் மோத... சுருள்சுருளான கேசம் மழைக்காற்றுக்கு ஏற்றவாறு நெற்றியை மென்மையாய் வருடிச் செல்ல… அந்த மலை பிரதேசத்தின் குளிரையும் பொருட்படுத்தாமல் உடல் விறைக்க தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அர்ஜுன்.

அர்ஜுன் ஆதித்யன் , தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரின் முன்னனி தொழிலதிபர்களுள் ஒருவன். ஆதி மெஷின் ஒர்க்ஸ் என்னும் ஜவுளி துறைக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம் அர்ஜுனின் தாத்தாவினால் தொடங்கப்பட்டு, அர்ஜுனின் தந்தை ஆதிகேசவின் காலத்தில் நிலையான வளர்ச்சியை அடைந்தது.

இன்று அர்ஜுன் கைக்கு நிறுவனம் வந்த பிறகு இந்தியாவில் நூற்பு ஜவுளி இயந்திரங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக தொடர்ந்து முன்னேறி வருகிறது. தொழில் என்று வந்துவிட்டால் தூக்கம் பசி மறந்து அதில் மூழ்கிவிடுபவன் இன்று தன் உயிரானவளை தொலைத்துவிட்டு, அதே தொழில் என்ற ஒன்று இருப்பது கூட மறந்து தன் உயிரில் கலந்தவளை தேடி அலைகிறான்.

கேரள வயநாடு மழைப் பிரதேசத்தின் ரம்மியமான எழில் கொஞ்சும் அழகு அவன் மனதை குளிர்விக்கவில்லை. மாறாக ஏதோ ஒருவித மன அழுத்தத்தையே கொடுத்தது.

வேண்டாம் என்று ஒதுக்க நினைத்த ஒன்றை இப்படி உயிர் துடிக்கும் வலியுடன் தேட நேரிடும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

மனதின் அழுத்தம் தாளாமல், "எங்கடி இருக்க... ரொம்ப பயமா இருக்கு உனக்கு என்னாச்சோன்னு " என்று வாய்விட்டு புலம்பியவன் கண்களில் வழிந்த கண்ணீரை தன் புரங்கையால் துடைத்துக்கொண்டான்.

கடைசியாக அவளை பார்த்தபோது "இனி நீயா என்ன தேடி வர வரைக்கும் நான் உன்ன பார்க்க வரமாட்டேன் " என்று கலங்கிய கண்களுடன் கூறிச் சென்றவள் முகமே அவனை வாட்டி எடுத்தது. 'உன்னத் தேடி தான்டி அலையறேன்... ஆனா கண்டுபிடிக்க முடியலையே... ' என்று அவளை காணாத விரக்தியில் தவித்தான்.

சிறிது நேரம் அவள் ரசிக்கும் மழைத்தூறலில் நின்றவன் பொழுது விடிவதை உணர்ந்து உடை மாற்றிக்கொண்டு வந்தான். எப்போதும் இருக்கும் கம்பீரம் தளர்ந்து கலைந்த கேசமும், தாடி அடர்ந்த முகமுமாக கண்களில் ஓர் சோர்வுடன் இருந்தான். கடந்த ஒரு மாதமாக அந்த ஊர் முழுவதும் எத்தனையோ வழிகளில் தேடிப் பார்த்துவிட்டான் பலன் என்னவோ பூஜ்யமாக தான் இருந்தது.

இன்றும் அவளை தேடவே விரைவாக வெளியே கிளம்பியவனை தடுத்தது அவன் நண்பன் பிரதீஷின் வருகை. எப்படியும் அர்ஜுன் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று அறிந்தே தன் வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்திருந்தான்.

பிரதீஷ் அர்ஜூனின் கல்லூரி நண்பன், இங்கு அர்ஜுன் வந்த காரணத்தை அறிந்தவன் அவனுக்கு அனைத்து வழிகளிலும் உதவியாக இருந்தான்.

" என்ன மச்சான் இது… சாப்பிடாம இப்படியே இருந்தா உடம்பு தான் கெட்டுப் போகும். சாப்பிட்டு போலாம் இரு இன்னிக்கு நானும் வரேன் " என்றான் அர்ஜுனின் சோர்வு உணர்ந்து. பிரதீஷ் என்ன பேசினான் என்று கூட உணராது, "ம்ம்ம்…" என்ற முனங்கல் மட்டுமே பதிலாக கொடுத்தான்.

பெயருக்கு ஏதோ சாப்பிட்டுவிட்டு இருவரும் முதலில் யாழினியை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரி கிருஷ்ணனை சந்திக்கச்
சென்றனர். அவர் பிரதீஷின் குடும்ப நண்பர் என்பதால் விசாரணை சற்று சுறுசுறுப்பாக சென்றாலும் பெரிதாக அவர்களாலும் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அர்ஜுன், " எப்படி சார் இவ்ளோ நாளா ஒரு சின்ன விஷயம் கூட தெரியாம… மனசு ரொம்ப பதட்டமாவே இருக்கு. ரிசார்ட்ல இருந்து கிளம்பி போனவ கார் ஒரு இடத்துல மரத்துல மோதி நிக்குது ஆனா அவ… " என்றவன் குரல் கரகரத்து ஒலித்தது. அவன் நிலையை உணர்ந்த கிருஷ்ணனும், " அர்ஜுன் ரிலாக்ஸ்… பயப்பட ஒன்னும் இல்லனு சொல்ல முடியாது தான்… பட் கொஞ்சம் பாசிட்டிவா யோசிப்போம்... யாழினி கிடைச்சுருவாங்க " என்றார் அவனை தேற்றும் விதமாக.

அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் ஓர் பெருமூச்சுடன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான். அவர்களும் தான் தேடாத இடம் இல்லையே விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஊர்கள், மருத்துவமனைகள் என்று அனைத்து இடங்களையும் புரட்டி பார்த்துவிட்டார்கள் எங்கும் யாழினியை கண்டுபிடிக்க முடியவில்லை.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஊர் எல்லைகள் அடைக்கப்பட்டிருக்க,
அவளை கடத்தியிருந்தால் கூட வெளியில் எங்கும் கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவாக இருந்தது.

மேலும் சிறிது நேரம் கிருஷ்ணனிடம் சில விவரங்களை பேசி தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் சென்றதும் கிருஷ்ணன் தன் கீழ் வேலை செய்யும் அதிகாரியை அழைத்து, "யாழினி கேஸ் விஷயமா பக்கத்து கிராமங்களை விசாரிக்க சொன்னனே என்னாச்சு இன்னும் எந்த ரிபோர்ட்டும் வரல. ஈவினிங்க்குள்ள விசாரிச்சுட்டு எனக்கு சொல்லுங்க " என்று உத்தரவிட்டுவிட்டு அழைப்பை துண்டித்தார். அவருக்கும் சற்று கலக்கம் இருக்க தான் செய்தது இரு பெண்பிள்ளைகளின் தந்தையாய்.

காவல் துறை ஒருபுறம் விசாரித்துக்கொண்டிருந்தாலும், அர்ஜுனும் ப்ரதீஷும் அன்று முழுவதும் யாழினி பற்றி ஏதும் தகவல் கிடைக்க கூடுமா என்று அலைந்துகொண்டு தான் இருந்தனர். மாலை வேலை சற்று சோர்வாக உணர்ந்த பிரதீஷ், " மச்சான் ஒரு காபி குடிக்கலாம் அந்த கடைல நிறுத்து " என்றான்.

அர்ஜுனுக்கும் சற்று தலைவலியாக இருக்க காரை அந்த மலை பாதைலிருந்த தேநீர் கடையில் நிறுத்தினான். இருவரும் கடையில் காபி வாங்கிக்கொண்டு அமர்ந்தனர். அர்ஜுன் காபியை ஒரு மிடரு அருந்தவும் தலைவலி கொஞ்சம் மட்டுபட்டது போல் இருக்க மெல்ல சுற்றுபுரத்தை கவனிக்க தொடங்கினான்.

அங்கு கடைகாரரிடம் ஒரு பெண், "என்ன அண்ணா நான் சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்திங்ளா " என்று கேட்டுக்கொண்டிருந்தாள். பார்க்க மலை கிராமத்தை சேர்ந்தவள் போல் இருந்தாள். கடைக்காரரும் அவள் கேட்டதை எடுத்து கொடுத்துக்கொண்டே, "என்ன செல்லி எதுக்கு இந்த பிஸ்கட் எல்லாம் இது எல்லாம் சாப்பிட மாட்டீங்களே " என அவளை துளைக்கும் பார்வையுடன் கேட்கவும் அவள் சிறிது தடுமாறித்தான் போனாள்.

மெல்ல தன்னை சுதாரித்துக்கொண்டு, "ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வந்துதிருக்காங்க அதுக்கு தான் " என்று சமாளிக்க பார்த்தாள்... அப்போதும் அவருக்கு சந்தேகம் தீரவில்லை போலும் , " உங்க ஐயா அவ்ளோ சீக்கரம் இது எல்லாம் வாங்க ஒத்துக்க மாட்டாரே " என மீண்டும் கேட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் , " அப்படி இல்லை அது… அது… இந்த சொந்தகாரங்க கொஞ்சம் வெளியூர்ல இருந்து வந்துருக்காங்க " என்று திணறியபடி எது ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தாள்.

ஆம், அவள் ஏதோ மறைத்து பேசி சமாளித்துக்கொண்டிருப்பது போல் தான் தெரிந்தது அர்ஜுனுக்கு. அதுவரை ஏதோ அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் இப்பொது சிறிது உற்று கவனிக்க தொடங்கினான்.

மீண்டும் கடைக்காரர் ஏதோ கேட்க வரவும் அவர்களை இடை மறைத்த அர்ஜுன் தன்னிடம் இருந்த வித்ய யாழினியின் புகைப்படதை செல்லியிடம் காட்டி, " இந்த பொண்ண எங்கயும் பார்த்து இருக்கீங்களா " என கேட்டான்.

செல்லி, யாழினியின் படத்தை பார்த்ததும் முதலில் திகைத்து விழித்து… பின், அர்ஜுன் தன்னை கவனிப்பதை உணர்ந்து தன் முக மாற்றத்தை சரி செய்துகொண்டாள். ஆனால், அவளையே அளவிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனின் கண்களுக்கு அது தப்பாமல் விழுந்தது.

ஏதும் தெரியாதவள் போல் யாழினியின் படத்தை அவனிடம் இருந்து வாங்கி அப்போது தான் நன்றாக பார்ப்பது போல் பார்த்துவிட்டு, " இல்லைங்க பார்த்தது இல்லை… யார் இவுங்க " என்றாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக்கொண்டே இருந்த அர்ஜுன் , " நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு " என்றான். ' கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு ' மீண்டும் மனதில் சொல்லி பார்த்தவனுக்கு ஏதோ சுகமான உணர்வு மனதில் தோன்றியது. ' ஆமாம், அவள் எனக்கானவள் என்னுடையவள் மட்டுமே ' என்ற எண்ணம் அவன் மனதில் உறுதி பூண்டது.

அவன் சொன்ன பதில் கேட்டும் குழப்பம் தெளியாத செல்லி, " ஓ… சரிங்க. இவுங்களுக்கு என்னாச்சு எப்ப இருந்து காணோம்… போலீஸ் கிட்ட சொல்லலையா… இவுங்க அம்மா அப்பா எங்க இருக்காங்க " என்று விசாரித்தாள். தன் மேல் சந்தேகம் கொண்டு அவள் கேட்கும் கேள்விகளை எண்ணி அவளை மனதிற்குள் மெச்சியவன், " ம்ம்ம் போலீஸ்ல சொல்லியிருக்கோம்… அவுங்க அப்பா கோயம்பத்தூர்ல இருக்காங்க… ஒரு மாசத்துக்கு மேல தேடிட்டு இருக்கோம்மா ஏதும் தெரிஞ்சா சொல்லும்மா " என்றான் அவளுக்கு புரியும் விதமாக.

அவளிடம் சொல்லும் போதே கண்கலங்கினாலும் அதை மறுபுறம் திரும்பி வெளியிடாமல் மறைத்துக்கொண்டவன்… அவளை ஏறிட்டு பார்க்க அவள் ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தெரிந்தது. மேலும் அவளை குழப்பத்தில் ஆழ்த்த விரும்பாதவன், " சரிமா பார்த்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு " என்று தன் விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தவன்… மேலும், "இது இந்த கேஸ் பார்த்துக்கர போலீஸ் நம்பர்… அவுங்களுக்கு கூட சொல்லு " என்று கிருஷ்ணனின் எண்ணையும் கொடுத்தான்.

இரண்டையும் வாங்கிக்கொண்டவள் யோசனையுடனே அவனிடம் ஒரு சிறு தலையசைபுடன் கிளம்பிச் சென்றாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவன் தோள் தொட்டு அழைத்த பிரதீஷ், "என்னடா அந்த பொண்ணுக்கு தெரியும்னு நினைக்கிறயா என்ன " என்றான். அர்ஜுன் காரணம் இல்லாமல் ஏதும் செய்ய மாட்டான் என்று அவனுக்கு நன்கு தெரியுமே.

பிரதீஷ் கேட்டதிற்கு யோசனையுடனே, "இருக்கலாம் மச்சான்… " என்றான்.

" அப்போ அங்கிள் கிட்ட சொல்லுவோம்… அந்த பொண்ண விசாரிச்சு பாப்போம் " என்றான் நம்பிக்கை துளிர்விட… அவனும் தான் இந்தனை நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கிறான் எந்த வித தகவலும் யாழினி பற்றி தெரியவில்லையே.

இவர்களை முதலிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரர்,
" சார் அவசர படாதீங்க… அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் ஆனா ஊருக்குள்ள போக அனுமதி வாங்கனும்… கொஞ்சம் கட்டுப்பாடான இடம் " என்று தகவல் அளித்தார். அவருக்கு வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக ஒருவரை பற்றி கணிக்க முடிந்தது. அதுவே செல்லியின் தடுமாற்றம் மற்றும் அர்ஜுனின் உண்மையான வருத்தத்தையும்… அவர் அவன் கண்களை வைத்தே கணித்திருந்தார்.

அவர் சொன்னதை கேட்டு பிரதீஷ், "அப்போ எப்படி விசாரிக்க… ஊருக்குள்ள எப்படி போகனும் " என அவரிடம் விசாரித்தான். அதற்கு அவர், "பக்கத்து எஸ்டேட்ல ராம்ன்னு ஒருத்தர் இருக்கார் அவர பார்த்து பேசுங்க… அவர் தான் அங்க போக கூடிய ஒரே ஆள் " என்று அவரை பற்றிய தகவல்கள் அளித்தார்.

அப்போதே கடைக்காரர் கொடுத்த விலாசத்தில் அவரை தேடி விரைந்தனர். போகும் வழியில் கிருஷ்ணனுக்கு அழைத்து விடையத்தை தெரிவித்துவிட்டு சென்றனர். ராமின் இருப்பிடம் அடைந்தவர்களை வரவேற்றது என்னவோ அவர் உதவியாளர் தான். ராம் வெளியே சென்றிருக்க அவர் உதவியாளரிடம் தங்களை பற்றிய தகவல்களை அளித்துவிட்டு வந்தனர்.

பின்பு கிருஷ்ணனுக்கு மீண்டும் அழைக்க அவர் நாளை அவரே நேரில் சென்று பேசிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இன்னும் பழமை மாறாத பழங்குடி இன மக்களும் பூமியில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சாட்சி... செல்லி வாழும் வனப்பகுதியை சேர்ந்த மக்கள். வெளிநபர்கள் உள்ளே வந்தால் வனபகுதியை அசுத்தப்படுத்தி அவர்கள் வனத்தை அபகரித்து விடுவார்கள் என்று அச்சம் கொண்டு வெளியிலிருந்து வரும் யாரையும் அவர்கள் பகுதிக்குள் அனுமதிப்பது இல்லை.

செல்லியின் ஊர் மக்கள் நம்பும் ஒரே நபர் ராம். அவர் பலமுறை அங்கு சென்றும் வந்துள்ளார். எனவே அவர் உதவியை நாடினர்.

கிருஷ்ணனிடம் பேசிவிட்டு பிரதீஷ்யை அவன் வீட்டில் விட சென்ற போது… அவன் வீட்டினரின் அன்பு கட்டளையால் அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு தான் கிளம்பினான்.

இரவு படுக்கையில் எப்பொழுதும் தூக்கமின்றி தவிப்பவனுக்கு இன்று ஏதோ கலவையான உணர்வு… தன் சந்தேகம் சரியானதா இல்லை தேவையற்று சிந்திக்கிறோமா என்று பல குழப்பங்கள் மனதை வாட்டியது.

ஒரு பெண்ணிடம் இருக்கும் சாதாரண வளையல்களை வைத்து தான் யோசிக்கும் கோணம் சரியாக இருக்குமா என்ற ஐயம் எழத்தான் செய்தது. இருந்தும் எதை தின்றால் பித்தம் தீரும் என்று திரிபவனுக்கு இது எப்படியும் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

இருந்தும் ஏதோ வெறுமை உணர்வு தோன்ற காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். களைத்து ஓயும் வரை எங்க எங்கோ அழைந்தவன் மனம் ஒரு நிலை இல்லாமல் சோர்ந்து போக... நடுநசி நேரம் சாலையின் ஓர் ஓரமாக தன் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங் வீல்லில் தலை கவிழ்த்து படுத்துக்கொண்டான். எத்தனை நேரம் அப்படி இருந்தானோ... போன் ஒலிக்கவும் அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன், " ம்ம்ம், வினித் சொல்லு " என்றான்.
மறுபுறம் இருந்த அவன் பி எ வினித் , " சார் எவ்ளோ நேரமா கால் பண்ணறேன் எங்க இருக்கீங்க " என்று சற்று கவலையுடனே வினவினான். அவன் கேள்விக்கு அர்ஜுனிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, வினித் சற்று பதட்டமாக, " சார் சார்.... " என்று பல முறை அழைத்த பிறகே அர்ஜுன், " ம்ம்ம்... இருக்கேன்" என்றான் முனங்களான குரலில்.

வினித் " சார் அங்க இருந்து பிரதீஷ் சார் கால் செஞ்சு இருந்தார். உங்களுக்கு கூப்பிட்டு நீங்க எடுக்கலைன்னு எனக்கு கூப்பிட்டார்... உங்கள ஸ்டேஷன் வர சொன்னார் " என்றதும் எழுந்து அமர்ந்தவன், " வேற ஏதாச்சும் சொன்னாரா " என்றான் சோர்வு நீங்கி ஆர்வம் மிக.

வினித், " அங்க இருக்க ஓர் மலை கிராமத்துக்கு போகணும் என்று சொன்னார். நீங்க எதுக்கும் நேர்ல போய் பாருங்க… எப்படியும் யாழினி கிடைச்சுருவாங்க " என்றான் அர்ஜுனின் கவலை உணர்ந்து.

" சரி வினித் நான் பாத்துட்டு கால் பண்ணறேன் " என்று அவன் பதிலை எதிர் பாராமலே கிளம்பிவிட்டான்.

சற்று பதற்றத்துடன் காவல் நிலையதுக்குள் நுழைந்தவனை எதிர்கொண்ட உயர் அதிகாரியிடம், "என்னாச்சு சார் விது கிடைச்சுட்டாளா எங்க இருக்கா… நான் இப்போவே பார்க்கணும் " என்றான் பதற்றத்துடன்.

மழைத்தூறும்… ?

அத்தியாயம் 2

அதிகாலை நேரம் பதற்றத்துடன் காவல் நிலையத்துக்குள் நுழைந்து யாழினியை பற்றி விசாரித்தவனை அமரவைத்த அதிகாரி, " அர்ஜுன் ப்ளீஸ் ரிலாக்ஸ் கிருஷ்ணன் சார் இப்போ வந்துருவாரு... காட்டுக்குள்ள போறதுக்கான ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டார். யாழினி வில் பி பைன்... " என சமாதானம் செய்தார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கவும் சிறிது நேரத்தில் கிருஷ்ணனும் பிரதீஷும் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கதக்க நபருடன் வந்து சேர்ந்தனர்.

கிருஷ்ணன் அவரை மற்றவர்களிடம் , " இவர் தான் மிஸ்டர். ராம், சமூக ஆர்வலர்... நம்ம மேப்பாடி மலைக்கு அழைச்சுட்டு போக போறது இவர்தான் " என்று அறிமுகம் செய்து வைத்தார். பின் அர்ஜுனையும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கவும் அவர், " ஹலோ... அர்ஜுன் கவலை வேண்டாம் அவுங்க அங்க தான் இருக்காங்கன்னு நினைச்சீங்கன்னா, அவுங்க பாதுகாப்பா இருக்காங்கன்னு அர்த்தம் " என்று நம்பிக்கையூட்டினார்.

பின் கிருஷ்ணனின் அறிவுரைப்படி பிரதீஷ் அர்ஜுனை சாப்பிட வைத்து அழைத்து வந்த பிறகு... ராமுடன் அர்ஜுன், பிரதீஷ், கிருஷ்ணன் மற்றும் இன்னொரு பெண் அதிகாரியும் மேப்பாடி நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.

வனப்பகுதியை அடைந்தவுடன் அதற்கு மேல் வாகனங்கள் செல்லாது என்பதால் நடந்து செல்ல தொடங்கினர். முதலில் ராம் சிறிது தூரம் சென்று எந்த ஆபத்தும் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டே இவர்களை அழைத்துச்சென்றார்.

ஆங்காங்கே காணப்பட்ட சாண குவியல்களை கண்டவர்கள் அது யானைகளின் வழித்தடம் என புரிந்துகொண்டனர். உச்சி வரை முட்கள் கொண்ட காட்டு தேக்கு மரங்கள் போன்றவை காணப்பட்டன. ஓர் நீரோடை அருகில் அனைவரும் ஓய்வு எடுக்க அமர… அர்ஜுன் தனித்து அமர்ந்து கொண்டான். அங்கு சூழ்ந்திருந்த இயற்கையை ரசிக்கும் மனநிலை அவனுக்கு இப்பொது இல்லை.

அவன் மனமோ, ' எப்படிடி இங்க வந்த… எனக்கு என்னவோ மனசு கிடந்தது அடிச்சுக்குது… இப்போ நீ இங்க பாதுகாப்பா இருந்தாலும் ஏன் நீ இங்க வந்த… உனக்கு எதும் கெட்டதா நடக்காம இருக்கனும் ' என்று பலவித யோசனையில் மூழ்கி போனான். கண்மூடி பாறையில் சாய்ந்து கொண்டவன் கண்களிக்குள் தன்னவளின் குறும்பு சிரிப்பே மின்னிச் சென்றது.

*****

வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து, அடர்ந்து வளர்ந்திருந்த அந்த மரங்களின் நடுவே கிடைத்த இடைவெளியில் தன் ஒளியை பரபிக்கொண்டிருந்தது அதிகாலை நேர சூரியனின் செங்கதிர்கள்.

அவ்வொளி அவ்வனத்தின் நடுவே இருந்த ஓர் குடிசையின் ஜன்னல் வழியாக பரவி அங்கு தூக்கதிர்க்கும் விழிப்பிற்கும் நடுவே போராடிக்கொண்டிருந்த இரு செந்தாமரை போன்ற விழிகளின் மேல் விழுந்தது.

மெல்ல இமை திறக்க முயன்றவளுக்கு…இரவில் தூங்காமல் அழுது கரைந்ததன் விளைவால் கண்களில் எரிச்சல் ஊசி குத்துவது போல் இருக்க… இமைகளின் வீக்கம் அவற்றை ஒன்றுடனிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாமல் சண்டித்தனம் செய்தது.

விரக்தியில் பெருமூச்சு எடுத்தவள்… தன் உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்றை உரசி நன்றாக சூடு வர தேய்த்து கண்களின் மேல் ஒன்றி எடுக்க எரிச்சல் சற்று குறைந்தது போல் தோன்றியது. பின் மெல்ல தன் இமைகளை திறந்தாள் வித்ய யாழினி.

உடல் முழுவதும் ஏதோ அசதி பரவ அதை விரட்டும் முயற்சியில் எழுந்து அமர்ந்தாள். காலின் வலி இன்று குறைந்தது போலிருக்க… தன் படுக்கையின் பக்கவாட்டிலிருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

ஜன்னலின் வழியாக சூரிய ஒளி முகத்தில் படவும் அங்கு திரும்பி பார்த்தவளுக்கு… அங்கு வெளியே தெரிந்த மரங்கள் நேற்றைய இரவு காற்றில் பேய்யாட்டம் போட்டது நியாபகம் வர உடலில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பலவித எண்ணங்கள் கண்முன் தோன்றி மனதை கலங்க செய்தது.

கண்மூடி தன் துக்கத்தை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டாள். தன்னுள் குடிகொண்ட வெறுமையை விரட்டும் வழியறியாமல் கண்ணீரில் கரைய தொடங்கியவளை குடிசையின் கதவு திறக்கும் சத்தம் தடுத்து நிறுத்தியது.

குடிசையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த செல்லி யாழினியின் முகத்தில் குடிகொண்டிருந்த வேதனை கண்டு மனம் வருந்தினாலும் அதை மற்றவளிடம் வெளிகாட்டிக் கொள்ளாமல், " அக்கா எழுந்துட்டீங்களா… வாங்க என் கை பிடிச்சு மெல்ல எழுந்துக்கோங்க முகம் கழுவிட்டு வந்து சாப்பிடுவோம்" என்று சொல்லிக்கொண்டே யாழினி எழ உதவினாள்.

யாழினிக்கு தேவையான உதவிகளை செய்தவள் பின் அவளுக்கு காபியும் முதல் நாள் வாங்கி வந்த தீன்பண்டங்களையும் கொடுத்தாள். அதை கண்ட யாழினி புருவம் சுருக்கி மெல்லிய குரலில், " இது எல்லாம்… " என்று வார்த்தையை இழுத்தவளை பார்த்து மெலிதாக சிரித்த செல்லி, "ஆமா அக்கா உங்களுக்கு இங்க எதும் சரியா புடிக்கல போல நல்லாவே சாப்பிடறது இல்ல… அதான் ஐயா கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன்… இங்க யாரும் இப்படி வெளி பொருள் எல்லாம் வாங்கி சாப்பிட ஐயா ஒதுக்க மாட்டார் இங்க இயற்கை எங்களுக்கு தரது தான் எங்க உணவு… ஆனாலும் நீங்க கஷ்டபடறத பாத்து எனக்கு தான் மனசு கேட்கல அதான் வாங்கிட்டு வந்தேன் " என்றாள் யாழினியின் கஷ்டம் உணர்ந்து.

அந்த பாசத்தில் தன் தந்தையின் நியாபகம் மேலோங்க… கலங்கிய கண்களுடன் செல்லியை ஏறிட்டவள், "ரொம்ப நன்றி செல்லி இதுக்குனு இல்லை எல்லாத்துக்கும் " என்றாள்.

"அச்சோ என்ன அக்கா இதுக்கு போய்... " என்றவாரே யாழினியின் கண்களை துடைத்துவிட்டவள்… அவளிடம் தயங்கியவாரே, "அக்கா இவுங்கள உங்களுக்கு தெரியுமா? " என்று கேட்டுக்கொண்டே அவளிடம் அர்ஜுன் கொடுத்த சீட்டை நீட்டினாள்.

குழப்பத்துடன் அதை வாங்கி பார்த்தவள் அதிலிருந்த 'அர்ஜுன் ஆதித்யன்' என்ற பெயரை பார்த்ததும் உடலில் ஓர் சிலிர்ப்பு ஓடி மறந்தது. அப்பெயரை மெல்ல வருடிக்கொடுத்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர அதை கட்டுப்படுத்தும் வழியறியாது தன் கீழ் உதட்டை பற்களால் கடித்து கொண்டாள். அதையும் மீறி கேவல் வெளிப்பட்டுவிட முழங்காலில் முகம் புதைத்து அழ தொடங்கினாள். அவள் அழுகை கண்டு பதற்றமடைந்த செல்லி, " அக்கா என்னாச்சு இவுங்கள தெரியுமா… ஐயா கிட்ட சொன்னேன் அவரு உங்களை கேட்டுட்டு சொல்லலாம்னு சொன்னாரு… உங்களுக்கு சரினா சொல்லலாம் இல்லனா பரவால்ல… " என்றாள் அவளை சமாதானம் செய்யும் விதமாக.

செல்லி கேட்டதுக்கு எந்த பதிலும் இல்லாமல் அமர்ந்திருந்தவள் அழுகை மட்டும் குறையவில்லை. யாழினியின் செய்கையே நேற்று அவள் சந்தித்தவன் அவளுக்கு எவ்வளவு பிரியமானவன் என்று செல்லிக்கு உணர்த்திவிட… யாழினியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் அவள் தோள் தொட்டவளை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள். மெல்ல அவளை சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டுட்டு வெளியே வந்து அங்கிருந்த கிழங்குகளை எடுத்து சுத்தம் செய்து அடுப்பு மூட்டி சமைக்க தொடங்கியவளுக்கு சில நாட்களுக்கு முன் யாழினியை முதல் முதலில் பார்த்த நாள் கண்முன் தோன்றியது…

அன்று…
வயநாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேப்பாடி மலைப்பகுதி. அங்கு வசித்த பெரும்பான்மையான பழங்குடியினர் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வனப்பகுதியை விடுத்து அரசாங்க குடியிருப்புகளுக்கு மாறிவிட்டனர். இப்பொது அங்கு வெறும் மூன்று குடும்பங்களே வசித்து வருகின்றனர். அதில் செல்லியின் குடும்பமும் ஒன்று.

அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் இயற்கையை ஒன்றியதாகவே இருக்கிறது. அங்கு கிடைக்கும் தேன், கிழங்கு, பழவகைகள் மற்றும் அங்கிருக்கும் சிறு மிருகங்களை வேட்டையாடியும் உண்டு தங்கள் வாழ்வை நகர்த்திவருகின்றனர்.

ஆண்கள் வேட்டைக்கும், தேன் எடுக்கவும் சென்றால் பெண்கள் தேவையான பழங்கள் கிழங்குகள் கொண்டுவருவர். அப்படித்தான் அன்றும் செல்லியும் பெண்களுடன் ஒன்றாக சென்றிருந்தாள். காட்டில் கிழங்குகளை சேகரித்தவர்கள் பக்கத்திலிருந்த நீரோடையில் நீர் அருந்த சென்றனர்.

அங்கு பக்கத்திலிருந்த பாறைக்கு பின் யாரோ வலியில் முனங்கும் சத்தம் கேட்டது. அங்கு விரைந்து சென்று பார்த்தவர்களுக்கு அங்கமெல்லாம் நடுங்கிவிட்டது. ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளானாள் என்று கேள்விப்பட்டாலே மனம் பதறும் அப்படியொரு நிலையில் உடல் முழுதும் காயங்களுடனும் தலையில் பலத்த அடியுடனும் கசங்கிய பூபோல் கிடந்த யாழினியை கண்டவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றிபோன உணர்வு. அப்படியே அசைவற்று நின்றவர்களில் முதலில் சுதாரித்த செல்லி ஓடிச்சென்று அவள் தலையை மடியில் ஏந்திக்கொண்டு, " அக்கா அக்கா… முழிச்சு பாருங்க… " என்று கன்னம் தட்டி அழைத்துப் பார்த்தாள்.

யாழினியிடம் எந்த பதிலும் இல்லாமல் போக செய்வதறியாது தவித்தனர். காட்டிலிருந்து அவசரமாக மருத்துவமனை அழைத்து செல்வது இயலாத காரியம். ரத்த வாடைக்கு வரும் மிருகங்களின் அச்சுறுத்தல் வேறு அங்கு மேலும் தாமதிக்க முடியாது போக... தங்கள் இடத்துக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து உதவிக்கு ஆண்களை வர சொல்ல இரு பெண்களை அனுப்பிவிட்டு…செல்லி அங்கிருந்த மற்றோரு பெண்ணுடன் சேர்ந்து யாழினிக்கு சிறு சிறு முதலுதவிகளை செய்தாள்.

அதற்குள் அவர்கள் உதவிக்கு ஆட்கள் வந்துவிட… அவர்களுடன் சேர்ந்து யாழினியை தங்கள் குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் தலைவர் வெளுத்தாவின் உதவியால் அவளுக்கு மருத்துவம் செய்யப்பட்டு யாழினி காப்பாற்றப்பட்டாள். அவளின் பாதுகாப்பு கருதி அவள் உடல்நிலை சரியாகும் வரை எந்த விபரத்தையும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.

யாழினியின் தேவைகளை செல்லியே பார்த்துக்கொள்ள... அங்கு வந்த பதினைந்து நாட்கள் கழித்தே கண்விழித்தாள் யாழினி. கண்விழித்த முதல் இரண்டு நாட்கள் சரியாக மயக்கம் தெளியாமல் சிறிது நேரம் விழித்திருப்பவள் மீண்டும் கண் மூடிக்கொள்வாள். வலது நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமும், உடலில் சிராய்ப்புகளும்… வலது காலிலும் அடிபட்டிருக்க நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.

சிறிது சிறிதாக நினைவு திரும்ப ஆரம்பித்த நிலையில் தன்னை பார்த்துக்கொண்ட செல்லியை தவிர மற்றவர்களை நெருங்க விடாமல் சற்று மூர்க்கதனமாக நடந்து கொண்ட நாட்களும் உண்டு.

இப்படியே நாட்கள் செல்ல… மெல்ல அங்கிருந்த இயற்கையுடன் ஒன்ற ஆரம்பித்தாள். சட்டென பெய்யும் மழை, குளிர்ந்த காற்று, ஆர்ப்பரிக்கும் நதியில் தெரியும் முழு நிலவு என்று மனதை அமைதியடைய செய்தாலும்… தனக்குள் அவள் தவித்துக்கொண்டிருப்பது இரவில் அவளுடன் துணைக்கு உறங்கும் செல்லிக்கு நன்கு புரிந்தது.

இன்றுவரை அவளிடம் யாரும் எதும் கேட்டு தொந்தரவு செய்யவில்லை. அவளின் தேவைகள் அனைத்தும் செல்லி மட்டுமே பார்த்துக்கொண்டாள். இதுவே இருவருக்குள்ளும் சிறு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

மெதுவாக அவளிடம் பேச்சு கொடுத்து அவள் பெற்றோரை பற்றி தெரிந்துகொள்ள முயன்றால் மௌனத்தை கடைபிடிக்க தொடங்கிவிடுவாள். என்னதான் மற்றவர்களிடம் விலகி இருந்தாலும்… அங்கிருக்கும் குழந்தைகளிடம் ஒதுக்கம் காட்டாமல் அவர்களுடன் நேரம் செலவிடுவாள்.

இவற்றை மனதில் உருபோட்டவாரே வேக வைத்த கிழங்கை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு நிமிர அங்கு ராம்… அர்ஜுன் மற்றும் வேறு இருவருடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அவர்களை கண்டதும் ஓடிச்சென்று யாழினியை பார்க்க… அவள் நல்ல உறக்கத்திலிருப்பது தெரிந்தது. வெளி ஆட்களுடன் நின்று பேசும் பழக்கம் இல்லாததால் அவள் அங்கு யாழினியுடன் இருந்துவிட்டாள்.

ராம் பரிச்சியமானவர் என்பதால் வந்திருப்பவர்கள் மேல் நம்பிக்கை உருவானாலும், முதலில் அவர்கள் வெளுத்தாவிடம் பேசிவிட்டு வரட்டும் என்று பேசாமல் இருந்து விட்டாள்.

ராமும் சற்று தொலைவிலேயே அவர்களை நிறுத்திவிட்டு , " நான் போய் இந்த ஊர் தலைவர் வெளுத்தா கிட்ட பேசிட்டு வரேன் அப்றம் நீங்க எல்லாரும் வரலாம்" என்று கூறி வெளுத்தாவை பார்க்க சென்றார்.

ராமிற்கு சிறு வயது முதலே இங்கு வாழும் மக்கள் பழக்கம் என்பதால் எந்தவித தடையுமின்றி உள்ளே சென்றார். சென்றவர் சிறிது நேரத்திலே திரும்பி வந்து தன்னையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனிடம் தயங்கியவாரே , "யாழினி இங்க தான் இருக்காங்க…நல்லா இருக்காங்க… ஆனா… " என்று அவர் சொன்ன செய்தியில் அப்டியே சரிந்து மண்டியிட்டு அமர்ந்தவன் நிலத்தில் ஓங்கி குத்திக்கொண்டு கத்தவும்… அதிர்ச்சியில் இருந்த மற்றவர்கள் தங்கைகளை மீட்டுக்கொண்டு அவனை நெருங்கி சமாதானம் செய்ய எடுத்த எந்தவொரு முயற்சியும் பயனில்லாமல் போனது.

பிரதீஷ் அர்ஜுன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து அவனை அணைத்துக்கொண்டே, " மச்சான் பொறுமையா இருடா… ப்ளீஸ் கண்ட்ரோல் யூவர் செ ல்ப்… அமைதியா இரு … " என்று அவனை கொஞ்சம் கொஞ்சமாக நிதானப்படுத்த முயன்றான்.

அர்ஜுனோ, " முடியலடா அவளுக்கு எதும் ஆக கூடாதுனு இவ்ளோ நாள் விடாம ஒரு ஒரு நிமிஷமும் வேண்டிகிட்டது எதுக்கும் பயனில்லையே… அ… அவ ஒரு குழந்தை மாதிரிடா எப்பிடிடா மனசு வந்துச்சு அவளை உயிரோட சாகடிக்க…" என்று அழுது புலம்ப அவனை படாத பாடுபட்டு கட்டுக்குள் கொண்டு வர பெரும் போராட்டம் நடத்தவேண்டியதாய் போனது.

கிருஷ்ணன், " இப்படி அழுதுட்டு இருந்தா இனி அடுத்தடுத்த சூழ்நிலைகளை எப்படி சமாளிக்க… எந்திருச்சு வாங்க அர்ஜுன் " என்று சிறு கண்டிப்புடன் சொன்னார். அவருக்கும் மனம் பாரமாக தானிருந்தது இருந்தும் சுற்றியிருப்பவர்கள் கொடுக்கும் தைரியம் தான் அப்பெண்ணுக்கு தேவை என்றுணர்ந்து அர்ஜுனிடம் கண்டிப்பு காட்டினார்.

தலைகவிழ்த்து பெரும்மூச்சுகளை எடுத்து தன்னை நிதானித்துக்கொள்ள முயன்றவன் . பின் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர… பிரதீஷ் அவன் தோள் தொட்டு, " மச்சான் வா போய் பாப்போம் " என்று அழைக்கவும் எழுந்து அவர்களுடன் அங்கிருந்த குடிசை பகுதியை நோக்கி சென்றான்.

அவர்களை எதிர்கொண்ட வெளுத்தா, "அந்த பொண்ணு செல்லிய தவிர எங்க யாரையும் பார்க்க விருப்பப் பட்டது இல்லை அதனால அவுங்களுக்கு நெருக்கமானவுங்க மட்டும் போய் பாருங்க " என்றவர்… பின் செல்லியை அழைத்து அவர்களுக்கு உதவ சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த பாறையில் ராமுடன் அமர்ந்துகொண்டார்.

மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள செல்லியுடன் நடந்த அர்ஜுன், " எப்படி இருக்கா " என்றான் மெல்லிய குரலில்.
" ம்ம்ம் முதல் இருந்ததுக்கு இப்போ பரவால்ல அண்ணா… கொஞ்சம் நேரம் முன்னாடி தான் நீங்க கொடுத்த சீட்டை அவுங்க கிட்ட காட்டினேன்… ரொம்ப அழுதாங்க… இப்போ தான் தூங்கறாங்க… " என்றாள்.

அவள் தன்னை நினைத்து அழுதாள் என்று கேட்டவனுக்கு மனம் துடித்துபோனது. குடிசையை நெருங்கியதும் அவன் கால்கள் இரண்டும் பெரும் பாரம் கொண்டு நகர மறுத்தது. எத்தனை நாள் தேடல்… உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவளுக்காக அவன் ஓடாத நேரமில்லை. ஆனால் இந்த நிமிடத்தை எதிர்கொள்ளும் தைரியம் அவனிடம் சுத்தமாக இல்லாமல் போனது.

கடினப்பட்டு தன் நடுங்கும் கரம் கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் கண்டது வாடிய கொடிபோல் கிடந்தவளையே… இத்தனை நாட்களில் உடல் மெலிந்து கொஞ்சம் நிறம் மங்கி… அவள் முகத்தில் குடியிருக்கும் குறும்புத்தனம் சுத்தமாக துடைக்கப்பட்டு ஓர் முதிர்ந்த தோற்றம் தெரிந்தது.

அவளை நெருங்கி அவள் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தவன்… அவள் வலது நெற்றியிலிருந்த காயத்தை மெல்ல தன் விரல் கொண்டு வருடிக்கொடுத்தான். காயங்கள் வெளியில் மெல்ல ஆர தொடங்கினாலும் அவள் மனம் கொண்ட காயத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் கலங்கி நின்றான்.

❤️❤️❤️
 
அத்தியாயம் 3

இப்பொது அர்ஜுனின் கண்முன் இருக்கும் யாழினிக்கும் இதற்கு முன் அவன் கடைசியாக கண்ட யாழினிக்கும் தோற்றத்தில் பலவித மாற்றங்கள். உடல் சற்று அதிகமாகவே மெலிந்து, பால் நிறம் சற்று மங்கி, கண்களைச் சுற்றி கருவளையம் என்று பார்க்க வேறு யாரோ போல் தெரிந்தாள்.

அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டவன் , கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் அவள் கரங்களில் பட்டுத் தெறித்தது. அதில் துயில் கலைந்து எழுந்தவள் கண்டது எதிரில் அமர்ந்து கண்கள் கலங்க அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனை தான்.

முதலில் அதிர்ந்து விழித்தாலும், செல்லி அவளிடம் அவன் பெயர் கொண்ட அட்டையை கொடுத்த போதே அவன் இங்கு வரக்கூடும் என்று எதிர்பார்த்தாள் தான். ஆனால், இவ்வளவு சீக்கரதில் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை.
அவனை கண்ட மாத்திரத்தில் முட்டிக்கொண்டு வந்த அழுகையை தன்னுள் புதைக்க முயன்று தோற்று போனாள்.

அவன் பற்றியிருந்த கரத்தில் சிறு அழுத்தம் கொடுக்க தன்னை கட்டுபடுத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். எப்போது அவனை காண நேரிட்டாலும் ஒளிரும் அவள் கண்கள் இன்று உயிர்ப்பு இழந்து காணப்பட்டது. வார்த்தைகள் அற்ற மௌனத்தில் சில நொடிகள் கழிய… இருவருக்குமே அதை கலைக்க மனம் இல்லை. நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த அவள் அருகாமையை எண்ணி… பற்றிய கரத்தை விடாமல் அவன் அமர்ந்திருக்க… யாழினிக்கோ இத்தனை நாட்கள் இழந்த பாதுகாப்பு உணர்வு அர்ஜுனிடம் கிடைத்தாலும்… அவனை பார்க்காமல் வேறெங்கோ பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

பின் அவளே, " அப்… அப்பா… எப்படி இருக்காரு " என்று தடுமாறியவாரே கேட்டாள். அவர் யாழினியை காணாது உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்க… அதை அவளிடம் இப்போதைக்கு மறைக்க நினைத்தவன், " ம்ம் இருக்கார்… உன்ன பிரிஞ்சு எப்படி இருப்பார்… கொஞ்சம் உடம்புக்கும் முடியாம இருக்கார் " என்றான் கொஞ்சம் உண்மையை மறைத்து.

அவன் சொன்னது கேட்டு பதறியவள், "என்னாச்சு அப்பாக்கு உண்மைய சொல்லுங்க… அவருக்கு ஒன்னும் இல்லையே எனக்கு அவர் மட்டும் தான் இருக்காரு… ப்ளீஸ்… " என்று தன் தந்தையை நினைத்து அழ ஆரம்பிக்கவும் அவள் முகம் பற்றி அவள் கண்ணீரை தன் இரு பெருவிரல்கள் கொண்டு துடைத்தவன், " அவருக்கு ஒன்னும் இல்ல அதான் நான் இருகேன்ல தைரியமா இரு " என்று அவன் கூறிய சமாதான வார்த்தைகள் அப்படி ஒன்றும் அவளை நிம்மதியடையச் செய்யவில்லை. தன் கண்களை மூடி திறந்தவள் அவனை ஓர் வேற்றுப் பார்வை பார்க்க… அவனுக்கு சுருக் என்று இருந்தது.

" அப்படி பார்க்காதடி கஷ்டமா இருக்கு " என்று குரல் கரகரக்க அவன் ilசொன்னதும் தன் பார்வையை வேறு பக்கம் மாற்றிக்கொண்டாள்.

தன் தந்தையை எதிர்கொள்ளும் அளவுக்கு அவளிடம் திடமில்லை. 'தன்னால் அவர் மனம் வருந்துவதை எப்படி தாங்க இயலும் '... 'இல்லை அவர் கண்ணு முன்னாடி இருந்து கஷ்ட்ட படுத்த கூடாது ' என்று யோசித்தவள் அர்ஜுன் வெளியே செல்ல கதவை அடைந்த நேரம், " நான் எங்கயும் வரல " என்று அவள் குரல் அழுத்தமாக ஒலிக்க சோர்வுடன் கண்களை மூடி திறந்தவன் அவளை திரும்பி பார்த்து, "விது… நான் ஆல்ரெடி நொந்து போயிருக்கேன்… உன்ன போராடி சமாதானம் செய்ற நிலையில நான் இப்போ இல்ல… சோ, தேவையில்லாததை யோசிக்காம கிளம்ப ரெடி ஆகு " என்று அவள் மறுத்து பேச இடமளிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

அவன் என்னவோ சுலபமாக சொல்லிவிட்டான் தான்… ஆனால் அவள் மனமோ இனி எதிர்காலம் தனக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ என்றெண்ணி
நிலையில்லாமல் தவிக்க தொடங்கியது. பலதையும் நினைத்து குழம்பியவளுக்கு கடைசியில் தலைவலி தான் வந்தது.

வெளியே வந்தவன் கிருஷ்ணனிடம், "அங்கிள் இப்போதைக்கு அவ கிட்ட இது பத்தி ஏதும் கேட்க வேண்டாம்… மெதுவா பாத்துக்கலாம் எனக்கு அவ ஹெல்த் தான் இப்போ ரொம்ப முக்கியம்… ப்ளீஸ் " என்று கேட்டுக்கொள்ளவும்… கிருஷ்ணன், " புரியுது அர்ஜுன் டேக் யுவர் டைம்… ஆனா தப்பு செஞ்சவுங்க தண்டைனையில இருந்து தப்ப விடக்கூடாது " என்று உறுதியாக சொன்னவர், அவன் தோள்களில் தட்டிக்கொடுத்தார்.

பின் அர்ஜுன் வெளுத்தாவிடம், "ரொம்ப நன்றிங்க அய்யா… நீங்க காப்பாத்தினது என் உயிர… இந்த உதவிய நன்றின்னு ஒரு வார்த்தைல அடைக்க விரும்பல உங்களுக்கு என்ன உதவினாலும் செய்ய தயாரா இருக்கேன்" என்று கூறியவன் அவருக்கு கையெடுத்து கும்பிட… அவன் கைகளை பற்றிய இறக்கிய வெளுத்தா, "இதுலாம் ஒன்னும் இல்லை தம்பி மனுஷனா பிறந்த எல்லாரும் செய்றத தான் நாங்களும் செஞ்சு இருக்கோம். இங்க இயற்கையோட நாங்க நிம்மதியா இருக்கோம் நீங்க எங்களுக்கு உதவி செய்ய நினச்சா காடுங்களோட வளத்தை அழிக்கர எந்த செயலும் செய்யாதீங்க தம்பி. தப்பா எடுத்துக்காதிங்க தம்பி நான் கொஞ்சம் இப்படி தான்…" என்று சொல்லவும்… அர்ஜுன் அவர் மனதை புரிந்து கொண்டு, " கண்டிப்பா அய்யா… " என்று அவருக்கு வாக்களித்தவன், "அப்போ நாங்க யாழினிய கூட்டிட்டு கிளம்பலாமா? " என்று கேட்டான்.

" அந்த பொண்ணுக்கு கால்ல அடிபட்டுருக்கு இப்போ தான் சரியாகிட்டு வருது… இங்க இருந்து கூட்டிட்டு போக, ரொம்ப தூரம் நடந்து போக வேண்டி இருக்கும். இன்னும் ஒரு நாலு நாள் இங்கயே இருந்துட்டு போறது நல்லதுனு நினைக்கறேன், யோசிச்சு முடிவு எடுங்க" என்று வெளுத்தா கூறவும் சிறிது யோசனைக்கு பின் அர்ஜுன், "அப்போ இங்க இருந்து கிளம்பரவரை நானும் இங்கயே தங்க அனுமதி கிடைக்குமா… அவ கொஞ்சம் மனசு சரி இல்லாம இருக்கா கூட இருந்தா ஆறுதலா இருக்கும் " என்று வெளுத்தாவிடம் அனுமதி வேண்ட அவரும் அர்ஜுன் அங்கு தங்க ஒத்துக்கொண்டார்.

பின் பிரதீஷிடம், " டேய் இப்போதைக்கு விது வீட்டுக்கு எதும் சொல்ல வேண்டாம். ம்ம்ம்… வேணும்னா நான் பாக்க போயிருக்கேன் நல்லா இருக்கானு மட்டும் சொல்லு வேற எதும் சொல்ல வேண்டாம். நாங்க இங்க இருந்து வந்த அப்றம் நேர்ல போய் பாத்துக்கலாம்… நாளைக்கு என்னோட டிரஸ் கொஞ்சம் கொடுத்து விடு… " என்று சொன்னவன்… கிருஷ்ணனிடம், "அங்கிள் ரொம்ப தேங்க்ஸ் எங்களுக்காக கேஸ் எடுக்காமயே இவ்ளோ தூரம் ஹெல்ப் பண்ணி இருக்கீங்க… உங்க உதவி இல்லாம இவ்ளோ தூரம் வந்துருக்க முடியாது ரொம்ப நன்றி அங்கிள்… அப்பறம் ஆல்ரெடி சொன்னது போல அவ கொஞ்சம் நார்மல் ஆனதும் இத விசாரிக்கலாமா ப்ளீஸ் " என்று கேட்டான். அவருக்கும் அதுவே சரியென பட ஆமோதிப்பாக தலையாடியவர், "ஓகே டேக் கேர் அர்ஜுன் நாங்க கிளம்பறோம் " என்று மற்றவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அர்ஜுன் அங்கு வந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் தேவைக்கு தவிர யாழினியுடன் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்கே பேசினால் இங்கிருந்து கிளம்ப மறுத்து ஏதும் வாக்குவாதம் செய்வாள் என்று அமைதியாகவே இருக்க நினைத்தான்.

ஆனால் யாழினியின் அருகாமைக்காக அவன் மனம் ஏங்க… அவள் செல்லியை உதவிக்கு அழைக்கும் போது எல்லாம் அர்ஜுனே வந்து உதவ நின்றான். ஒருமுறை அவள் கால்ளுக்கு எண்ணை தேய்க்க முயன்றவன் மேல் கோவம் கொண்டு, "இப்போ எதுக்கு இது எல்லாம் பண்ணுறீங்க… என்னை கண்டாலே ஆகாதுல உங்களுக்கு விடுங்க என்னை " என்று அவன் கைகளுக்குள் இருந்த கால்களை இழுக்க முயல… விடாமல் பிடித்துக்கொண்டவன் அவளுக்கு எந்த பதிலும் அளிக்காமல், அவளை ஆழ்ந்து ஓர் பார்வை பார்க்க... அவன் பார்வையின் வீச்சு தாங்காமல் முகத்தை திருப்பிக்கொண்டாள். பின் அவனும் அவள் கால்களுக்கு எண்ணை தேய்த்து விட்டு விலகிச்சென்றான்.

படுக்கையை விட்டு எழும்போது எல்லாம் அவள் முன் நீட்டப்படும் அவன் கரங்களை முறைத்துப் பார்த்து , "செல்லி… செல்லி …" என்று கத்திக் கொண்டே தான் எழுவாள். அவனும், "செல்லி என்ன நீ வச்ச ஆளா… நீ கூப்பிட்டதும் ஓடி வந்து வேலை செய்ய " என்று குட்டு வைத்துவிட்டே அவள் தேவைகளை கவனிப்பான்.

அவள் தான் இருத்தலை கொல்லி ஏறும்பாக தவித்துக்கொண்டிருந்தாள்… அவளுக்கும் என்ன முடிவு எடுப்பதென்று தெரியவில்லை. இங்கேயே இருப்பது சாத்தியமற்ற ஒன்று என்று தெரிந்து தான் இருந்தது இருந்தும் வீட்டிற்கு சென்று தன் சுற்றத்தை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்றும் அவளுக்கு பெரிய மனக் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.

ஓர் நாள் மாலை பொழுது அர்ஜுனுக்கும் நேரம் போகாமல் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது செல்லி அவனை நோக்கி வருவதை கண்டவன் குழந்தைகளை விடுத்து தனித்து வர அவனிடம் வந்த செல்லி, " உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் " எனவும்… அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் , "சொல்லுமா… " என்றான்.

செல்லியும் சற்று தயங்கியவாரே, "இல்ல உங்களுக்கு எப்படி என் மேல சந்தேகம் வந்துச்சு… பார்த்த உடனே வந்து கேட்டிங்களே அவுங்கள தெரியுமான்னு… அதான் எப்படினு " என்று கேட்டாள்.

அதற்கு மெலிதாக சிரித்த அர்ஜுன், " உன் கைல இருக்க விது ஓட வளையல் தான் " என்று அவள் கையை கண்களால் சுட்டிக் காட்டியவன், " அவ கைல இத அடிக்கடி பாத்து இருக்கேன்… நீ கடைக்கு வந்த அப்போ சும்மா எதார்த்தமா தான் உன்னை பாத்தேன்... அந்த கடைக்காரர் கேட்டதுக்கு நீ சரியா பதில் சொல்லல, அப்பறம் தான் கவனிச்சு பார்த்தேன்… இந்த டிசைன்தான் அவ போட்டுருப்பானு… அப்பவும் உன்ன தப்பா நினைக்க தோனல ஆனா உனக்கு விது இருக்கும் இடம் தெரிஞ்சு இருக்கும்னு ஒரு குருட்டு நம்பிக்கைல தான் வந்து பேசுனேன் … எப்படியோ அது சரியாக இருக்கவும் அவ கிடைச்சுட்டா " என்றான்.

அவனுக்கு ஆமோதிப்பாக தலையாட்டிய செல்லி, " ம்ம்ம்… இத வற்புறுத்தி தான் என் கைல போட்டு விட்டாங்க… இது அவுங்க அம்மாவோட தாம். வேண்டாம்னு சொன்னதுக்கு ரெண்டு நாள் பேசாம சாப்பிடாம ரொம்ப அடம் பிடிச்சாங்க அதான் போட்டுகிட்டேன்… இப்போ நினச்சா அது கூட ஒரு விதத்துல நல்லதா போய்டுச்சு… " என்றாள் சிறு புன்னகையுடன்.

அவனும் மெலிதாக சிரித்தவன், "ஆமாம் பிடிவாதக்காரி " என்று சொன்னவனுக்கும் கண்கள் சிறிது கலங்கி விட்டது. மேலும் சிறிது நேரம்
பேசிவிட்டு செல்லி தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் அவன் தங்கியிருந்த குடிலுக்கு பக்கத்திலுள்ள ஓர் சிறு பாறை மேல் அமர்ந்தவன், தன் மன உளைச்சலை மறக்க… அங்கு இருந்த இயற்கை சூழலையும் மெல்ல மறைந்து கொண்டிருந்த செங்கதிரவனையும் ரசிக்க ஆரம்பித்தான். இருந்தும் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த கோவம் என்னும் நெருப்பு அதிகமானதே தவிர குறையவில்லை. தன்னவளின் நிலைக்கு காரணமானவனை எரிக்கும் வரை அது அணையாது.

அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளியிருந்த பக்கவாட்டு குடிலின் ஜன்னல் வழியே அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் வித்ய யாழினி. அலையலையான அடர்ந்த சுருண்ட கேசம், குளிர் காற்றில் அவன் நெற்றி தொட்டு விளையாட… மாலை நேர சூரிய ஒளி அவன் முகத்தில் பட, அது அவனுக்கு தனி தேஜஸை கொடுத்தது.

அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் கண்களில் நீர்கோர்க்க, "இனி எனக்கு உன்ன இப்படி பார்க்க கூட உரிமை இல்லை அஜூ " என்று தொண்டை அடைக்க தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அவள் கண்கள் விட்டு கண்ணீர் கன்னம் தொட … அதை அவன் மனம் உணர்ந்த நொடி அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது. சற்றென்று அவள் புறம் அவன் திரும்பவும், அதை உணர்ந்தவள் அங்கிருந்து விலகி நின்று கொண்டாள்.

இருந்தும் அவளை கண்டுகொண்டவன் இதழ்கள் மெல்ல புன்னகை பூத்தது. அவன் அமர்ந்திருந்த பாறையில் கைகள் இரண்டையும் தலைக்கு கொடுத்து வானை பார்த்து படுத்துக்கொண்டவன் நினைவு அவர்கள் முதன் முதலில் சந்தித்த நாளுக்கு சென்றது.

அதே நேரம் படுக்கையில் கண்கள் மூடி சாய்ந்திருந்தவளின் நினைவுகளும் பின்நோக்கி சென்றது.

❤️❤️❤️

அத்தியாயம் 4

எட்டு மாதங்களுக்கு முன்...

மாலை நேரம் கல்லூரி முடிந்ததும், வேகமாக வாகனம் நிறுத்தும் இடத்திற்கு விரைந்தனர் வித்ய யாழினியும் அவள் தோழி ரித்திகாவும்.
மேகம் கருத்து மழை இதோ கொட்டி விடுவேன் என்று இடி இடித்து தன் வருகையை உணர்த்திக்கொண்டிருந்தது.
சாவியை தன் வண்டியில் பொறுத்திக் கொண்டே ரித்திகா, " யாழ் செம்ம மழை வரப்போகுது பேசாம என் கூட வா எங்க வீட்டுக்கு அஞ்சு நிமிஷத்துல போய்டுலாம்... உன் வண்டிய நாளைக்கு எடுத்துக்கலாம், மழை நின்ன அப்றம் என் அப்பாவை கொண்டு உன் வீட்ல விட சொல்லறேன் " எப்படியும் யாழினி வீடு செல்ல பதினைந்து நிமிடமாவது ஆகும் அதற்குள் மழை வந்து விடும் என்று அவளை ரித்திகா தன்னுடன் அழைத்தாள்.

யாழினியோ, " இல்லடி இன்னிக்கு வீட்டுக்கு சீக்கரம் போகனும் அப்பாக்கு வேற லைட் பீவர்ன்னு வீட்ல இருக்கார். நான் போகலான ஒழுங்கா சாப்பிட மாட்டாங்க, நான் இப்படியே கிளம்பறேன் " என்று ரித்திகாவின் பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

சிறிது தூரம் கூட சென்றிருக்க மாட்டாள் மழை பிடித்துக்கொண்டது. இருப்பினும் சமாளித்து ஓட்ட முயன்றவள் மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கவும் வண்டியயை ஓரமாக நிறுத்திவிட்டு, பக்கத்திலிருந்த ஓர் கடையின் முன் சென்று நின்றுகொண்டாள். அந்த கடை வேறு பூட்டப் பட்டிருக்க அங்கு அவளை தவிர வேறு யாரும் இல்லை.

" அச்சோ நல்லா மாட்டிக்கிட்டேனே இது எப்போ தான் நிக்கும் தெரியல... அப்பா வேற என்ன செய்றாரோ... ப்ளீஸ் மழை என் செல்லோ ல சீக்கரம் நின்று " என்று மழையிடம் கெஞ்சி கொண்டிருந்த வேலை... அங்கு யாரோ வரும் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தாள்.

நெடுநெடு என உயரம், கடையின் கூரை தலைக்கு முட்டவே சிறிது தலையை தாழ்த்தியவாறு மழையில் நனைந்திருந்த கேசத்தை தட்டி விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன் . அவனது பக்கவாட்டு தோற்றம் மட்டுமே அவளுக்கு தெரிய, ' அழகன் தான் ' என்று மனதில் சொல்லிக் கொண்டவள்... வெளியில் மழையை கவனிப்பது போலிருந்தாலும் அவனை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நெடியவன் அர்ஜுன் ஆதித்யன் , அங்கு வந்தது முதல் கையை திருப்பி கடிகாரத்தை பார்ப்பதும், மழையில் நனைந்திருந்த கேசத்தை தட்டிவிட்டுக் கொண்டு வெளியே மழையை கவனிப்பதுமாக இருந்தானே தவிர இவளை ஒருமுறை கூட திரும்பிப் பார்க்கவில்லை.

' பார்டா கோட் சூட் போட்ட நல்லவன... ம்ம்க்கும் ' என்று மனதில் நினைத்தவள் அவனை ரசிப்பதை நிறுத்தவில்லை. அந்த வயதுக்கே உரிய உந்துதலில் கடைக்கண்ணால் அவனை ரசித்துக்கொண்டும் இருந்தாள்.

அப்போது அவனுக்கு ஓர் அழைப்பு வரவே எடுத்து பேசியவன், " யா சொல்லு வினித்..." என்று கூறவும் மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ இவன் மீண்டும், " ம்ம்ம்… கடைக்கு போய்ட்டு வரதுக்குள்ள இங்க செம்ம மழை... கார் எடுக்க ரோடு கிராஸ் பண்ணனும்... ஒரு டென் மினிட்ஸ் பாத்துட்டு கிளம்பறேன்... " என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் வெளியே மழையில் தன் கவனத்தை செலுத்தினான்.

இங்கு அவன் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் சேமித்துக் கொண்டிருந்தவளோ, 'ஏது டென் மினிட்ஸ் ல கிளம்பிடுவானா... அச்சோ... பேர் கூட தெரியலையே... ' என்று மனதோடு புலம்பிக் கொண்டிருந்த வேலை, அவன் சட்டென்று அவள் புறம் திரும்பி பார்க்க... இப்படி திடீர்ரென்று தன்னை பார்ப்பான் என்று தெரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வேறெங்கோ வேடிக்கை பார்ப்பது போல் நடித்தாள்.

அவள் நடிப்பை கண்டுகொண்டவனோ இருபுறமும் தலையாட்டி விட்டு திரும்பிக்கொண்டான். அவளை பார்த்ததுமே சின்ன பெண் என்று நினைத்தானே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. அவள் தன்னையே கவனித்து கொண்டிருப்பதை உணர்ந்தவனுக்கு சிறு கோவம் கூட உருவானது.

அடுத்த முறை அவள் அவனை ஓரக்கண்ணால் பார்க்கும் வேலை அவளை திரும்பிப் பார்த்து கண்ணாலேயே கண்டன பார்வை வீச யாழினிக்கு சிறு பயம் ஏற்படவே பேசாமல் நின்று கொண்டாள். ' ஆத்தா இனி அவன் பக்கம் திரும்ப கூடாது என்ன முறை முறைக்குறான் ' என்று மனதில் நினைத்தவாறு திரும்பி நின்று கொண்டாள்.

அப்போது அங்கு எதோ குழந்தை அழும் சத்தம் கேட்கவும், வேறு யாரோ மழைக்கு ஒதுங்க வருகிறார்கள் என்று முதலில் சுற்றியும் பார்த்துவிட்டு இருவரும் நின்றுவிட... மீண்டும் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் நிற்கமல் கேட்கவும் யாழினி குழம்பி போய் சுற்றியும் யாரும் இருக்கிறார்களா என்று தேடினாள்.

அர்ஜுனோ மழை சத்தத்தில் அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று கூர்ந்து கவனித்து விட்டு சத்தம் வந்த திசை நோக்கி ஓட... யாழினியோ முதலில் தயங்கினாலும் பின் அவனை தொடர்ந்து சென்றாள்.

கடைக்கு பின்னால் சென்றவர்கள் குழந்தையின் சத்ததம் அங்கு அதிகமாக கேட்கவும்... அங்கு உபயோக படுத்தபடமால் இருந்த ஓர் பெரிய சிமெண்ட் குழாய்யில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்து அங்கு மண்டியிட்டு குனிந்து பார்த்த யாழினி, " அச்சோ... " என்று வாய்விட்டு சத்தம் போட்டு அதிர்ச்சியில் அப்படியே மண்டியிட்டவாறு அமர்ந்து விட்டாள்.

அவளை நோக்கி வந்த அர்ஜுன், " ஹே என்னாச்சு... ஹே... " என்று அவளிடம் கேட்கவும் அவள் அந்த குழாய்யை நோக்கி கை நீட்டினாள். அங்கு குனிந்து பார்த்தவனுக்கும் அதிர்ச்சியே, அதற்குள் தொப்புள் கொடியுடன் கிடந்த ஓர் ஆண் குழந்தையை கண்டு.
யாழினியை போல் அல்லாமல், " ஹே தள்ளு... " என்று அவளை நகர சொல்லிவிட்டு வேகமாக குழாயினுள் சென்றவன் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளிவந்தான்.

சற்று மேடான இடத்தில் குழாய் இருக்கவே முதலில் மழைநீர் அதனுள் புகவில்லை. நேரம் ஆக ஆக மழை வலுக்கவும் தண்ணீர் உள்ளே சென்று உறக்கத்திலிருந்த குழந்தையை நனைக்கவும் குழந்தை அழுதுள்ளது என்று யூகித்தவன், அவனையே அதிர்ச்சியுடன் பார்த்து விழித்து கொண்டிருந்தவள் தோளிலிருந்த துப்பட்டாவை உருவி எடுக்க அவள், " என்ன பண்ணுறீங்க... " என்று திட்டவந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள் அவன் குழந்தையை அவள் துப்பட்டாவில் சுற்றுவது கண்டு.

அவன் கைகள் நடுங்க குழந்தையை அதில் சுற்றி முடித்ததும், ஓர் பெருமூச்சு எடுத்துக்கொண்டான். குழந்தை இன்னும் அழுதுகொண்டிருக்கவே அவளிடம் குழந்தையை நீட்டி, " குழந்தைய ஒரு நிமிஷம் பிடி " எனவும் முதல் முறை இப்படி பச்சிளம் குழந்தையை எடுப்பதால் கொஞ்சம் தடுமாற்றதுடன் வாங்கிக்கொண்டாள்.

அவளிடம் குழந்தையை கொடுத்தவன், மழை இன்னும் அப்படியே பெய்துகொண்டிருக்கவும்… தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி அதை இரு கையிலும் விரித்து பிடித்தவன் அவளிடம், "குழந்தைய இதுல வை " என்று வாங்கிக்கொண்டு குழந்தையை அதில் கதகதப்பாக வைத்து பிடித்துக்கொண்டான். அதன் பின்பே குழந்தையின் அழுகை சிறிது குறைந்தது.

மேலும் அவளிடம் , " மழை இப்போதைக்கு நிக்கிற மாதிரி தெரியல என் கார் ஆப்போசிட் சைடுல இருக்கு வா குழந்தைய ஹாஸ்பிடல் கொண்டு போகனும் " என்று அழைக்கவும் முதலில் சற்று தயக்கம் இருந்தாலும் பின் குழந்தையின் நிலையை நினைத்து அவனுடன் சென்றாள்.

சாலையை கடக்கும் போது குழந்தை மழையில் நனையாமல்லிருக்க தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டே வந்தவன் காரை திறந்து யாழினியை முதலில் அமர சொன்னவன்... அவள் அமர்ந்ததும் குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு வந்து காரை இயக்கினான்.

செல்லும் வழியில் அவன் பி எ வினித்திற்கு அழைத்து விவரம் சொல்லியவன்... பின்,தான் செல்லவிற்கும் மருத்துவமனையின் பெயரை கூறி அங்கு காவல்துறையினருடன் வர சொல்லிவிட்டு சாலையில் கவனத்தை பதித்தான். யாழினிக்கோ முதல் கட்ட அதிர்ச்சி நீங்கி மெல்ல குழந்தையை ஸ்பரிசித்தவளுக்கோ கண்களில் நீர் சுறந்தது.

அவளை ஒருமுறை திரும்பி பார்த்த அர்ஜுன் என்ன பேசுவது என்று தெரியாமல் மீண்டும் சாலையில் கவனத்தை செலுத்தினான். அவனுக்கோ குழந்தையை இப்படி விட்டு சென்றவர்கள் மேல் காட்டுக்கடங்காத கோவம் ஒருபுறம், குழந்தைக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற பதட்டம் ஒருபுறம் என்று இருவேறு மனநிலையிலேயே மருத்துவமனையை அடைந்தான்.

அங்கிருந்த மிக பிரபலமான மருத்துவமனையில் குழந்தையை பற்றிய விவரம் சொல்லி சேர்த்த பிறகு தான் அர்ஜுனுக்கு மனம் சற்று அமைதி அடைந்தது . குழந்தையை ஐ சி யூ வில் அனுமதித்து விட்டு வெளியே தளர்வாக அமர்ந்து இருந்தவனிடம் வந்த யாழினி சற்று தயங்கிய வாரே நிற்கவும், அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்னவென்பது போல் புருவத்தை ஏற்றி இரக்க… அவள் சற்று தயங்கிக்கொண்டே , "கொஞ்சம் போன் தரீங்களா ப்ளீஸ் வீட்டுக்கு சொல்லனும்… என் போன் அங்க வண்டில இருக்கு " என்று கேட்டாள். அவனுக்கும் அப்போது தான் அவள் நினைவு வந்தது, " ஓ சாரி… " என்று அவளிடம் தன் கைபேசியை எடுத்து கொடுத்தான்.

அதை வாங்கிக்கொண்டு சற்று தள்ளி நின்று தன் தந்தைக்கு அழைத்து சுருக்கமாக விடையத்தை கூறியவள், "நீங்க எனக்கு வெயிட் பண்ணாம சாப்பிடுங்க...இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்… " என்று கூறி வைத்தவள் அவனிடம், "தேங்க்ஸ் " என்று கைபேசியை கொடுக்க… அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே வாங்கிக்கொண்டான்.

கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து அவன் அமர்ந்திருக்க அவள் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள். அவன் முகம் எந்த வித உணர்வையும் பிரதிபலிக்காமல் பாறை போல் இருக்க… மனதில் குழந்தையை தவிர வேறு எந்த வித சிந்தனையும் ஓடவில்லை. யாழினிக்கோ குழந்தையை நினைத்து மனம் படபடப்பாக இருந்தது.

குழந்தையை பரிசோதித்துவிட்டு மருத்துவர் வெளியே வரவும்… கண்மூடி அமர்ந்திருந்தவன் அவர் வரவை உணர்ந்து எழுந்து வந்தான்.
" ஒன்னும் ப்ராப்ளம் இல்லை பேபி ஸ் டூ வெல்… மழையில நனஞ்சதால லைட்டா பீவர்… மத்தபடி ஒன்னும் இல்லை " என்று மருத்துவர் சொல்லவும் தான் அவன் மனதின் தவிப்பு அடங்கியது. அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இருவரும் ஒருமுறை உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தனர்.

சிறிது நேரத்தில் வினித்தும் இரு காவல் துறையினருடன் வந்து சேர… காவல் துறையினரிடம் நடந்தவற்றை கூறியவன் வினித்திடம், " ஓகே வினித் நான் கிளம்பறேன் இங்க எல்லாம் பார்த்துக்கோ… என்ன ஹெல்ப் கேட்டாலும் செஞ்சு கொடு அண்ட் வேணும்னா குழந்தை பத்தி தகவல் தெரியும் வரை குழந்தைய நம்ம காப்பகத்துல வச்சு பாத்துக்கலாம் " எனவும் வினித், " ஓகே சார் நான் பார்த்துக்கறேன்… உங்க மீட்டிங் நாளைக்கு மார்னிங்க்கு மாத்திட்டேன் சார் " என்று சொல்லவும் அவனிடம் சிறு தலையசைப்புடன் யாழினியின் புறம் திரும்பி பார்க்க அவள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
" வண்டி எடுக்க வரலையா " என்று அவன் குரல் பக்கத்தில் கேட்கவும் தான் திட்டுகிட்டு எழுந்தவள், " சாரி போலாம் " என்றாள்.

" ம்ம் வா " என்றுவிட்டு அவன் முன்னே வேகமாக நடக்க அவளும், ' என்ன இவன் இவ்ளோ நேரம் கூட இருக்கேன் ஏதும் கண்டுக்கறானா… முசுடு… அவன் வேலை தான் முக்கியம்… மெதுவா போனா தான் என்ன… கால் இங்க இருந்து நாலு கிலோமீட்டர்க்கு போனா எப்படி பொல்லொவ் பண்ண ' என்று அவனை தாளித்துக்கொண்டே பின்னால் ஓடினாள்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பிய நேரம் மழையும் நின்றிருந்தது. காரில் அவனுடன் பயணித்தவளுக்கோ அவன் ஒவ்வொரு ஆசைவும் மனதில் பதிந்து போய் இருக்க… அவன் நினைவே மனம் முழுதும் நிறைந்து இருந்தது. சற்று மன தைரியம் உடையவள் என்பதால் குழந்தைக்கு ஆபத்து இல்லை என்றதும் அவள் அதிலிருந்து வெளிவந்து விட்டாள்.

ஆனால் அர்ஜுனோ முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இருந்தான். அவனுக்கு கோவம் எந்த அளவுக்கு வருமோ அதே அளவுக்கு இளகிய மனம் கொண்டவன். அதனாலயே அவனுக்கு இன்றைய சம்பவம் மனதில் எதோ பாரம் ஏறிய உணர்வாக இருக்க, யாழினியை பற்றி பெரிதாக அவன் ஏதும் சிந்திக்கவில்லை.

யாழினியை அதே கடை முன் இறக்கி விட்டவன், "தேங்க்ஸ்… கூப்பிட்டதும் ஹெல்ப்க்கு வந்ததுக்கு"எனவும்…

" இதுல என்ன இருக்கு யாரா இருந்தாலும் இப்படி ஒரு நிலையில ஹெல்ப் பண்ணாம இருக்க மாட்டாங்க " என்றவள் அவனிடம் சிறு தலையாசைப்புடன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டாள்.

அர்ஜுன் சிறிது தூரம் சென்றவன் அவளை தனியே போகவிட்டது எதோ போல் இருக்கவே காரை திருப்பிக்கொண்டு அவள் சென்ற திசையில் கொஞ்ச தூரம் செல்லவும் அவள் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவள் வீடு செல்லும் வரை பின் தொடர்ந்தவன் அவள் உள்ளே சென்றதும் தான் வீடு திரும்பினான்.

வீடு தான் மாளிகை போல் இருந்ததே தவிர… அங்கு உறவென்று அவனுக்கு யாரும் இல்லை. சோர்ந்து வருபவனை அரவணைக்க தாயும் இல்லை… ஆசானாய் இருந்து அவன் தளரும் நொடிகளில் தோள் கொடுக்க தந்தையும் அங்கு இல்லை.

வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு மேலும் மனதில் பாரம் ஏறிய உணர்வு. தன் அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி வந்தவன், உள்ளேயே இருக்க முடியாமல் மொட்டை மாடிக்கு வந்து நின்றான்.மனதில் இருப்பதை யாருடனும் பகிர்ந்து கொள்ள கூட முடியாத நிலை அவனுக்கு.

இங்கு யாழினியோ தந்தை சக்திவேலுடன் வளவளத்துக் கொண்டே அவர் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள். அவரும் அவளுக்கு தலையை துவட்டிக்கொண்டே பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

" ஏன் ப்பா அந்த குழந்தை பாவம்ல பாக்கவே அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு… எப்படிப்பா குழந்தைய இப்படி விட்டுட்டு போறாங்க… "

அவரோ அவள் தலையயை வருடி கொடுத்துக்கொண்டே, " என்ன நடந்துச்சுன்னு இன்னும் சரியா தெரியாதேமா என்ன நிலையில விட்டுட்டு போனாங்கன்னு தெரியாதே போலீஸ் எப்படியும் நாளைக்குள்ள கண்டுபிடிச்சுருவாங்க… நீ அதெல்லாம் நினச்சு மனச குழப்பிக்காத… நல்ல வேளை நீ சொன்ன அந்த தம்பி அங்க வராம இருந்து இருந்தா உன்னால தனியா ஏதும் செஞ்சு இருக்க முடியாது… சரி வா சாப்பிட்டு படு " என்று அவரே அவளுக்கு உணவை பரிமாறி உண்ண வைத்தார்.

அறைக்கு வந்தவள் ரித்திகாவுக்கு அழைக்க… இருபதாவது முறையாக இவள் அழைப்பை துண்டித்திருந்தாள் அவள். யாழினி மழையில் வீடு வந்து சேர்ந்தாளா என்று பலமுறை அவள் கைபேசிக்கு அழைத்து ஓய்ந்திருந்த ரித்திகா… அவள் எடுக்கவில்லை என்றதும் சக்திவேலுவிற்கு அழைத்து விவரம் தெரிந்து கொண்டாள்.

இருந்தும் தன்னிடம் யாழினி பேசவில்லை என்ற சிறு கோவமே அவள் யாழினியின் அழைப்பை எடுக்காததற்கு காரணம். " சரி இவள நாளைக்கு பாத்துக்கலாம் " என்று விட்டவள்… படுத்து கண்களை மூட இன்று அவள் மனம் கவர்ந்த கள்வனே அவள் கண்ணிற்குள் வந்து இம்சை செய்ய...
அவன் நினைவுகளுடனே தூங்கி போனாள்.

அத்தியாயம் 5

காலை நேரம் அடுப்பில் தோசை ஊற்றிக் கொண்டிருந்தவள் இடையை ஓர் இரும்பு கரம் வளைத்து பிடித்தது. அதில் அதிர்ந்தவள் யாரென்று திரும்பிப் பார்க்க… அவள் திரும்பிய நொடி அவள் இதழ்களில் தன் இதழை பொருத்தியிருந்தான் அர்ஜுன். முதலில் விலக முற்பட்டவள் பின் அவன் இதழ் தந்த தித்திப்பில் மெல்ல அவனுக்கு இசைந்து கொடுக்க அங்கே மெல்லிய இதழ் யுத்தம் அரங்கேரியது. உணர்ச்சியின் பிடியில் அவள் இடையில் அவன் அழுத்தம் கொடுக்க… கையில் இருந்த கரண்டியை நழுவ விட்டாள். தன் கரம் கொண்டு அவன் சட்டையை இருக பற்றிக்கொண்டாள்.

இருவரும் தங்களை மறந்திருந்த நேரம் தூரத்தில் குழந்தையின் அழுகுரல். அவன் முத்தத்தில் தன்னை மறந்திருந்தவள் முதலில் அதை உணரவில்லை. மேலும் மேலும் அக்குரல் நெருங்கி வர, அது அவள் செவியை துளைப்பது போல் இருந்தது. அதில் பதறி தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தாள் வித்ய யாழினி.

அவள் உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருந்தது. கனவில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது மனதிற்கு என்னவோ போல் இருக்க… கண்களை மூடி தன்னை சரி படுத்திக்கொண்டு பின் மெல்ல சுற்றுப்புறத்தை உணர தொடங்கினாள்.
' ஊப்… கனவா… கன்றாவி டா இப்படியுமா கனவு வரும்… இருந்தாலும் கிஸ் சீன் நல்லா தான் இருக்கு ல ' என தனக்குள் சிரித்துக் கொண்டே தன் கைபேசியை எடுத்து நேரத்தை பார்க்க காலை ஏழு மணி என காட்டியது.

" அச்சோ நேரம் ஆகிடுச்சே… ஹாஸ்பிடல் போய் குழந்தைய பாத்துட்டு வேற போகணும்… ஓடு யாழ் ஓடு… சீக்கிரம் ரெடி ஆகு " என்று புலம்பிக் கொண்டே விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி கொண்டை போட்டாள், குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் தயாராகி வந்தவள் அங்கு தனக்காக காத்திருந்த தந்தையுடன் சேர்ந்து உணவருந்த அமர்ந்தாள். சக்திவேலும் அவள் தட்டில் இரண்டு இட்லியை எடுத்து வைத்து சாம்பார் ஊற்றியவர் , " என்ன மேடம் சீக்கிரம் ரெடி ஆகி வந்திருக்கீங்க " என்று கேட்டார்.

அவளோ தட்டிலிருந்த இட்லியை முகம் சுருக்கி பார்த்தவள், " ஹாஸ்பிடல் போய் குழந்தைய பாத்துட்டு போலன்னு சீக்கிரம் ரெடி ஆனேன்… ஆனா இன்னிக்கு டிபன் இட்லினு தெரிஞ்சு இருந்தா அப்படியே பின்பக்கமா ஓடிப் போயிருப்பேன்… " என்று புலம்பிக் கொண்டே இட்லியை பிட்டு உண்ண ஆரம்பித்தாள்.

சக்திவேலும் மெலிதாக சிரித்துக்கொண்டவர், " இட்லி உடம்புக்கு நல்லது தானே சாப்பிடு டா… வள்ளி இன்னிக்கு அவுங்க சொந்தத்துல கல்யாணம் ன்னு நேரத்துல வந்து சமைச்சு வச்சிட்டு போய்ட்டா… எனக்கும் இன்னிக்கு ஒருத்தர பார்க்க திருப்பூர் வரை போற வேலை இருக்கு… நைட் அப்பா டின்னருக்கு வெளிய கூட்டிட்டு போறேன் இப்போ சாப்பிடு " என்று அவளை சமாதானம் செய்தார்.

" தேங்க் யூ அப்பா… " என்று புன்னகையுடன் அவர் மீசையை இருபுறமும் முறுக்கி விட… அவர் கண்கள் கலங்க அவளையே பார்த்திருந்தார். இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான் யாழினி சிறு சிறு விஷயங்களில் கூட இறந்து விட்ட அவர் மனைவி நித்யாவை நினைவுபடுத்தி விடுவாள்.

விவசாய குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சக்திவேலுக்கு சொந்தமாக தொழில் செய்ய ஆசை. தன் படிப்பை முடித்ததும் முதலில் தொழில் கற்றுக்கொள்ள வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர், பின் தானே மின் மோட்டார் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்.

S V பம்ப்ஸ் , மோட்டார் நிறுவனம் முதலில் பெரிய அளவில் நடத்த முடியாவிட்டாலும்… சக்திவேலின் அயராத உழைப்பால் வளர ஆரம்பித்தது. இந்நிலையில் தான் நித்யா என்னும் பெண்ணை காதலிக்க தொடங்கினார் . நித்யாவின் வீட்டில் இவர்கள் காதலை ஏற்க மறுக்க தன் பெற்றோரின் சம்மதத்துடன் நித்யாவை மணந்து கொண்டார்.

இனிமையாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் மேலும் இனிமை சேர்க்க நித்யா கர்ப்பமானார். மனைவியின் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார் சக்தி. நித்யா தன் பெற்றோரை நினைத்து வருந்தும் வேளைகளில் அவருக்கு தாயாய்மாறிப் போனது என்னவோ சக்திவேல் தான். நித்யாவும் அவர் மேல் பிரியம் மிகும் நேரங்களில் அவர் மீசையை தன் கரம் கொண்டு முறுக்கி விட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார். இன்று யாழினி செய்தது போலவே.

யாழினி பிறந்து அதிக உதிரப் போக்கினால் கோமா நிலைக்கு சென்ற நித்யா சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். இதில் சக்திவேல் மிகவும் மனமுடைந்து விட்டார். தாய் தந்தையின் உதவியுடன் யாழினியை வளர்த்தவர், சொந்தங்கள் வற்புறுத்தியும் மறுமணம் செய்ய மறுத்து விட்டார்.

அன்றிலிருந்து இன்று வரை யாழினி மட்டுமே அவர் உலகம் ஆகிப் போனாள். அவள் மேல் பாசம் அதிகம் வைத்திருந்தாலும் சிறு கண்டிப்பும் உடையவர். இன்றும் தன் மனைவியை நினைத்து கண் கலங்கிய தன் தந்தையை கண்டு யாழினி, " அப்பா… " என சற்று அழுத்ததுடன் அழைத்து வருந்த கூடாது என்று தலையை ஆட்டி காட்டவும் தன்னை சரி செய்து கொண்டார்.

பின் இருவரும் உணவை முடித்துக் கொண்டு வெளியே வர சக்திவேல், "யாழ் இன்னைக்கு அப்பாவே உன்னை ட்ராப் பண்ணிட்டு ஈவினிங் நானே காலேஜ்க்கு வந்து கூப்பிட்டு வரேன் இன்னைக்கும் மழை வர மாதிரி இருக்கு வா " என்றார்.

"அப்பா நான் என் வண்டில போறேன் நீங்க வேற திருப்பூர் போகணும் சொன்னீங்களே… நானே போயிட்டு வந்துருவேன் " இப்போதே அர்ஜுனை காண மனதில் இருக்கும் ஆவலை மறைத்துக் கொண்டு.

" ஆமா பேசாம குழந்தைய ஈவினிங் போய் பார்ப்போம்… ஸ்கூட்டில போக வேண்டாம் நேத்து மாதிரி எங்கயும் மழைல மாட்டிப்ப… போலாம் வா " சாதாரண வார்த்தைகள் தான் ஆனால் மறுத்து பேச முடியாது . முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவருடன் காரில் அமர்ந்தாள்.

என்றும் இல்லாமல் இன்று அமைதியாக எதோ யோசனையில் வந்தவளை புருவம் சுருக்கி பார்த்தவர், " என்ன மேடம் அமைதியா வரீங்க " என்றார்.

" ஏன் அப்பா எனக்கும் ஒரு மினி கூப்பர் வாங்கி கொடுத்தீங்கனா நானும் மழையில நனையாம போய்ட்டு வருவேன் ல " அவள் சொன்னது வாய்விட்டு சிரித்தவர், " எது மினி கூப்பரா ஏன் மழையில நனையாம போய்ட்டு வர மாருதி 800 போதாதா " என்று கேட்டார்.

" போங்க அப்பா டோவினோ இப்போ லேட்டஸ்டா மினி கூப்பர் தான் வாங்கி இருக்கார் எனக்கும் அதே வாங்கி தாங்க ப்ளீஸ் " என்று அவர் தாடை பிடித்து கெஞ்சினாள்.

" டோவினோ… யார் அது அந்த சுருட்டை முடி யோட எந்நேரமும் இன்ஸ்டா ல லைவ் பார்ப்பியே " என்று யோசிப்பது போல் கேட்கவும்… " அப்பா… சுருட்டை முடியா அது எவ்ளோ அழகா இருக்கு அவருக்கு… இனி இப்படி பேசாதீங்க அவர் உங்க மருமகனா வந்துருக்க வேண்டியவர்… ஜஸ்ட் மிஸ் " என்றவள் காதை பிடித்து திருகியவர், " உனக்கு வாய் கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு "

"ஆ… அப்பா விடுங்க வலிக்குது ஆ… இனி இப்படி பேச மாட்டேன் காத விடுங்க " என்று கத்தவும் தான் அவள் காதை விட்டார்.

பின் சிரித்துக் கொண்டே, " சரி உனக்கு பிடிச்ச காரே வாங்கிடலாம் ஆனா பைனல் எக்ஸாம் முடிச்சுட்டு நம்ம கம்பெனி பொறுப்ப எடுத்த அப்புறம் தான் ஓகே " என்றார். அவளுக்கும் அது சரி என்று படவே, "சூப்பர்… நான் ரெடி ப்பா " என்றாள் உற்சாகமாக.

அவளை காலேஜில் விட்டுவிட்டு சக்திவேல் சென்று விட, யாழினியும் வெளியில் தனக்காக காத்திருந்த தன் தோழிகளுடன் சேர்ந்து வகுப்புக்கு சென்றாள். ரித்திகா மட்டும் அவளுடன் முகம் கொடுத்து பேசாமல் இருக்க அவளை சமாதானம் செய்யும் பொருட்டு யாழினி , "என்னடி பேச மாட்டியா? " என்று கேட்க… ரித்திகா, " பின்ன நீ சொல்ல சொல்ல கேட்காம போய்ட்ட இங்க நான் வீட்டுக்கு போய்ட்டியானு கேட்க கால் பண்ணா பதிலே இல்ல கால் செஞ்சு தகவல் சொல்ல தோணுச்சா உனக்கு " என்று பொரிந்து தள்ளினாள்.

" போன் வண்டியிலேயே மாட்டிக்கிச்சு டி… அப்புறம் உன் கூட வந்து இருந்தா அந்த பேபிக்கு ஹெல்ப் செஞ்சு இருக்க முடியுமா… அதான் கடவுளா பாத்து என்ன அனுப்பி இருக்கார் அங்க "

" ஆமா நீ மட்டும் தனியா இருந்து இருந்தா என்ன செஞ்சு இருப்ப… கூட ஆள் இருந்த நாள பரவாயில்லை ஏதும் அங்க ஆபத்து வந்து இருந்தா "

" அதான் என் ஹீரோ இருந்தாரே… அவரே என்ன காப்பாத்தி இருப்பார் " என்றாள் சிறு வெட்கத்துடன்.

ரித்திகாவோ தோழி மேல் இருந்த கோபம் மறந்து, " அடிக் கள்ளி அப்படி யாரடி பார்த்த " என்று கேட்டாள்.
பெருமூச்சு விட்டவள் " யாருன்னு லா தெரியாதுடி இனி தான் கண்டுபிடிக்கணும்… " என்றாள். ரித்திகாவும், " அவ்ளோ தானே புடிச்சுருவோம் " என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் வகுப்பு பேராசிரியர் வரவும் தங்கள் அரட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இங்கு அர்ஜுனோ அலுவலகத்துக்கு கிளம்பி தயாராகி வந்தவன் உணவு மேசைக்கு வந்து அமர… சமையலறையில், " அந்த ஜூஸையும் கொண்டு போய் டேபிள் மேல வை… என் பேரன் நான் இல்லாம சரியாவே சாப்பிட்டிருக்க மாட்டான் " என்று வேலை ஆட்களை அதட்டிக் கொண்டிருந்தார் மீனாட்சி .

அவர் குரல் கேட்டதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து உதட்டோரம் சிறு புன்னகை மலர்ந்தது அர்ஜுனுக்கு. மூன்று வருடங்களுக்கு முன் தாய் தந்தை இருவரையும் ஓர் விபத்தில் பறிகொடுத்தவனுக்கு தாய் வழி பாட்டியான மீனாட்சியே அனைத்துமாகி போனார். அர்ஜுன் மனம் வாடக்கூடாது என்பதற்காக தன் வேதனையை மறைத்துக் கொண்டு அவனுக்காகவே வாழ்கிறார்.

மாதம் ஒருமுறை தன் சொந்த கிராமத்துக்கு சென்று அங்கிருக்கும் விவசாய நிலங்களையும் சொந்தங்களையும் பார்த்துவிட்டு வருவார். நேற்று ஊருக்கு சென்றவர் இன்று அதிகாலை தான் திரும்ப வந்திருந்தார்.

அர்ஜுன் வந்து அமர்ந்ததும் உணவு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அவர் வர அர்ஜுன் , " அம்முச்சி எப்போ வந்திங்க… நாளைக்கு நானே வந்து கூட்டிட்டு வரேன்னு சொன்னேன் ல … " என்று கேட்க..

" இல்லப்பா நான் இல்லனா நீ சரியா சாப்பிட மாட்ட… வேலையும் முடிஞ்சுது அதான் சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன் " என்றார்.

அவனுக்கு உணவு பரிமாறியவர், "ஏன்ப்பா நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு, நல்லா குடும்பம் உனக்கு சரியான சொல்லு பேசி முடிப்போம் " என்று சொல்லவும் அர்ஜுன் ஒரு நொடிக்கும் குறைவாக யோசித்தவன், " சரி அம்முச்சி உங்க விருப்பம் போல பாருங்க " என்று சம்மதித்தவன் உணவை முடித்துக் கொண்டு முதலில் ஹாஸ்பிடலில் குழந்தையை பார்க்க சென்றான்.. மருத்துவர்கள் மேலும் குழந்தை ஒரு வாரம் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூற…

அலுவலகம் கிளம்பி சென்றான் அங்கு வேலைகள் அவனை அக்டோபஸ் போல இழுத்துக் கொண்டது.

மாலை நேரம் சக்திவேல் சொன்னது போல் யாழினியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

அதன் பிறகு இடையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் குழந்தையை சென்று பார்த்துவிட்டு வந்தவள் கண்ணில் அர்ஜுன் படவே இல்லை. ஒரு வாரத்திற்கு பிறகு குழந்தை ஓர் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்ட தகவல் மட்டுமே கிடைத்தது யாழினிக்கு.

இதற்கு இடையில் அர்ஜுனின் நியாபகம் வந்தாலும் அவளின் படிப்பு முடியும் நிலையில் இருக்க அதில் கவனம் செலுத்தியவள் அவன் நினைவுகளை சற்று ஒதுக்கி வைத்திருந்தாள்… அர்ஜுனை மறுபடியும் சந்திக்கும் வரை.

ஒரு நாள் தோழிகளுடன் சேர்ந்து மாலுக்கு சென்றிருந்தாள் யாழினி.

அடுத்த அடி எடுத்து வைக்கலாமா வேண்டாமா என்று தன் வலது காலை முன்னே எடுத்து செல்வதும் பின் வேண்டாம் என்று திரும்ப நகர்த்துவதுமாக இருந்தாள் வித்ய யாழினி.அவளுடன் வந்த தோழிகள் இவள் தன் கைபேசியில் தந்தையுடன் மூழ்கி இருந்ததால் தாங்கள் முன்னே செல்வதாக கூறிச் சென்றுவிட...

இவளோ, ' ச்ச இந்த போன் வராம இருந்துதிருந்தா அவுங்களோடவே போயிருக்கலாம்... சாமி முருகா நீ தான் என்ன காப்பாத்தனும் ' என்று மனதோடு அந்த மருதமலை முருகனுக்கும் தன் முன் இருந்த நகரும் படிக்கட்டுக்கும் , அவள் கரங்களை தலைக்கு மேல் தூக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு... தன் பக்கத்தில் யாரேனும் வருகிறார்களா என்று கீழ் கண்களால் பார்த்து கொண்டு காத்திருந்தாள் . அவளுக்கு நகரும் படிக்கட்டுகள் என்றால் பயம். அதை பயன்படுத்த யார் துணையாவது வேண்டும்.

அவள் வேண்டுதல் முருகனுக்கு எட்டியதோ என்னவோ பக்கத்தில் யாரோ தன் காலை படிக்கட்டில் பதிக்கவும் இவள் அந்த கால்களுக்கு சொந்தகாரனின் கரங்களை பிடித்துக் கொண்டு அவனுடன் படிக்கட்டில் ஏறி விட்டாள் .

வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் கால்களை எப்படி மேலே சென்றதும் சரியாக எடுத்து வைப்பது என்று மனதில் உழன்றவாறு இருந்தாள் . அவள் பற்றியிருந்த கரங்களுக்கு சொந்தக்காரனோ முதலில் அதிர்ந்தாலும், அவள் முகத்திலிருந்த பயத்தை கண்டு ஓர் மென் சிரிப்புடன் அவள் நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டே அவளுடன் பயணித்தான்.

மேலே வந்ததும் அவள் சற்று தடுமாற அவளை பத்திரமாக படிக்கட்டிலிருந்து அழைத்து வந்தான் அவன் . படிக்கட்டிலே பார்வையைப் பதித்து இருந்ததால் யாருடைய கரம் பற்றி வந்தோம் என்று கவனிக்க வில்லை அவள். மேல் தளம் வந்ததும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு திரும்ப அங்கு அவள் அர்ஜுனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

" ஹே அஜூ நீங்களா ... வாவ் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை இங்க பார்ப்பேன்னு ... " என்று தன் மனதை மறைக்காமல் குதுகளித்தாள் . அர்ஜுன் தான் சற்று அதிர்ச்சியுடன், " வாட் அஜூவா எக்ஸ்க்யூஸ் மீ யார் நீ... " என்று அவளை தெரிந்தும் தெரியாதவன் போல் கேட்க...

" ஏது என்னை மறந்துட்டீங்களா அன்னிக்கு மழை... நீங்க... நான்... குழந்தை... " என்று ஏதோ சொல்ல வரும்முன் அவள் தோழி ரித்திகா அங்கு வந்துவிட்டாள்.

" இங்க என்ன செஞ்சிட்டு இருக்க, ஓ இன்னிக்கு இவர் ஹெல்ப் ஓட மேல வந்துட்டீயா... சரி வா படம் ஆரம்பிக்க போறாங்க " என்று அவளை இழுத்து சென்றாள்.

அவள் தன்னையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்வதையே பார்த்தவன், அப்போது தான் அவளை நன்கு கவனித்தான். நடு நெற்றியில் சிறு கீற்று போல் குங்குமம், தோளை தாண்டி வளர்ந்திருந்த முடியை சிறு கிளிப்பில் அடக்கி, கணுக்கால் வரை அணிந்திருந்த பூக்கள் அச்சிட்ட மாக்ஸி பிராக் என்று தேவதை போலவே காட்சி அளித்தாள். 'இவளுக்கு எப்படி நம்ம பேர் தெரிஞ்சுது... ம்ம்ம்... எதுக்கும் உஷாரா இருடா அஜூ ... ' என்று அவளை போலவே தன்னை அஜூ என குறிப்பிட்டதை நினைத்து தலை கோதி தனக்குள் சிரித்துக் கொண்டே அவ்விடம் நீங்கினான்.

படம் முடிந்து வெளியே வந்தவர்கள் அங்கிருந்த புட் கோர்ட்குள் நுழைந்தனர். மற்ற தோழிகள் ஓர் மேசையில் அமர்ந்துவிட, தங்களுக்கு தேவையானதை வாங்க யாழினியும் ரித்திகவும் சென்றனர்.

அப்போது அங்கு மற்றொரு மேசையில் தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்த ரித்திகா யாழினியின் தோளை சுரண்டினாள். என்ன வாங்கலாம் என்று தீவிர சிந்தனையில் இருந்தவள் கோபமாக , "என்னடி ... " என்றாள்.

ரித்திகா , " ம்ம், அங்க பாரு உனக்கு எஸ்கலேட்டரில் ஹெல்ப் பண்ண ஹேண்ட்சம் " என்க... அவள் சொன்ன திசையில் கண்களை சுழற்றியவள் கண்களில் விழுந்தான் தன் நண்பர்களுடன் அங்கு அமர்ந்திருந்த அர்ஜுன்.

அர்ஜுன் அருகில் அமர்ந்திருந்த கார்த்திக் வெட்கப்பட்டுக்கொண்டே , " மச்சான் டக்குனு பாக்காத... உன் ரைட் சைடு ல ஒரு பொண்ணு என்னையே உத்து பாக்குது டா " என்றான்.

அவனை ஒரு பார்வை மேலிருந்து கீழ் பார்த்தவன் மெதுவாக திரும்பி அவன் சொன்ன திசையில் பார்க்க அங்கு வித்ய யாழினி இவனை பார்த்து தன் இரு விழிகளையும் சிமிட்டி சிரிக்க "ஐயோ இவளா... " என அதிர்ந்து முகத்தை மறைத்தவாறு திரும்பி அமர்ந்து கொண்டான்.

அங்கு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு , " மச்சான் அப்போ அது என் தங்கச்சியா"

" டேய்ய்... நீ வேற சும்மா இருடா " என்று அவனை அதட்டிய அர்ஜுன் அதன் பின் அவள் பக்கம் திரும்பவில்லை. அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த மற்ற இரு நண்பர்களும் , " டேய் என்னடா எங்களுக்கு தெரியாம... ம்ம்ம்... " என்று கேட்க... கார்த்திக், " அது வந்... " என்று வாயை திறக்கும் முன் அர்ஜுன், " சீக்கிரம் கிளம்பலாம் நேரம் ஆச்சுன்னு சொல்லிட்டு இருதேன்... " என்று ஒருவாறு சமாளித்து வைத்தான்.

கிளம்பும் போது அவள் அமர்ந்திருந்த மேசையை கடக்க நேரிட, அவளை பார்க்காத போல சென்றவனை கண்டு குறும்பு மேலிட... அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் , "அஜூ பேபி... " என்று அழைத்துவிட்டு உணவில் கவனம் செலுத்துவது போல் அமர்ந்து கண்களை மட்டும் உயர்த்தி அர்ஜுனை பார்த்தாள் . அவள் அவனை பார்ப்பதை கண்டவன் தன் ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டும் தோரணையில் பத்திரம் சொன்னவன் அவளை முறைத்து கொண்டே வெளியேறினான்.

❤️❤️❤️

அத்தியாயம் 6

அர்ஜுன் அங்கிருந்து சென்றதும், அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு முகம் வாட அமர்ந்திருந்தாள் யாழினி. அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த ரித்திகா, " ஹலோ மேடம் இவர் தான் அந்த ஹீரோ வா " என்று யாழினியின் தோளில் இடித்தாள்.

அவள் இடித்ததில் வலி உண்டான இடத்தை தேய்த்து விட்டுக்கொண்டே, "அம்மா… ஏண்டி இந்த இடி இடிக்கிற… " என்று வலியில் முகம் சுருக்கியவளை கண்டுகொள்ளாத ரித்திகா, "இப்போ இடிச்சது ரொம்ப முக்கியம்" என்றவள் பொய்யாய் முறைத்துக் கொண்டே, "சொல்லு அதானே உன் ஹீரோ… " என்று யாழினியை உளுக்கினாள்.

அதை கேட்டு மென் சிரிப்பை உதிர்த்தவள், " ம்ம் ஆமா ஆமா அவரே தான் " என்று சொன்ன யாழினி, " சரி என்கூட வா அவுங்க பின்னாடி போய் இம்ப்ரெஸ் பண்ணலாம் " என்று அழைக்கவும் ரித்திகாவுக்கு சிறு பயம் உண்டானது

" இல்லடி எனக்கு உன் ஹீரோ பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கு டி" என்றாள் மலுப்பளாக. " அப்போ நீ வரல… சரி இரு நான் தனியா போறேன் " என எழுந்து செல்ல முற்பட்டவளின் கையை பிடித்து தடுத்த ரித்திகா, "இரு வரேன் " என்று அவளுடனே எழுந்து மற்ற தோழிகளிடம் தாங்கள் இருவரும் கிளம்புவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளி வந்து அர்ஜுன் எங்கு சென்றான் என்று தேடினர்.

சுற்றிலும் தேடியவர்கள் கண்ணில் அர்ஜுனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் ஒரு கடையின் முன் நின்று கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பது தெரிய அந்த கடையின் அருகே சென்று பார்க்க. அங்கு அர்ஜுன் இருப்பது தெரிந்தது. யாழினி உள்ளே செல்ல முற்பட,

வர மறுத்த ரித்திகாவின் கை பிடித்து இழுத்து சென்றாள் . கடையின் உள்ளே வந்ததும் அவர்களை எதிர்கொண்ட கடை ஊழியர், " வெல்கம் மேம் யாருக்கு டிரஸ் பார்க்கறீங்க " என்று கேட்டார். அவர்கள் நுழைந்தது என்னவோ ஆண்கள் ஆடையகமாக இருக்க, அப்போது தான் கடையை சுற்றிலும் பார்த்தவர்கள் திரு திரு என விழித்தனர்.

"மேம் " என்று அவர் மீண்டும் அழைக்க… சுதாரித்துக் கொண்ட யாழினி, "அ… அது அது இவ பிரதர்க்கு தான் " என்று ரித்திகாவை கைகாட்டி கூற… அதிர்ந்த ரித்திகா, 'எனக்கு எங்க டி அண்ணன் தம்பி இருக்கு ' என்னும் பாவனையில் யாழியை பார்த்து வைத்தாள்.

பின், அர்ஜுன் இருந்த பக்கம் சென்றவர்கள் அங்கிருந்த ஆடைகளை பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டு அர்ஜுனையே கவனித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் உள்ளே வந்த போதே கண்டு கொண்ட அர்ஜுனோ அவர்களை பார்த்தும் பார்க்காதது போல் இருந்து கொண்டான்.

கடை ஊழியரோ மறுபடியும், " மேம் ஷர்ட் சைஸ் தெரியுமா… தெரிஞ்சா சொல்லுங்க எடுக்க ஈஸியா இருக்கும் நான் ஹெல்ப் பண்ணறேன் " என்று அவர்கள் தடுமாற்றத்தை பார்த்துக்கொண்டே கேட்கவும் இருவரும் என்ன அளவு சொல்வதென்று குழம்பி நின்றனர்.

பின், அங்கு நண்பர்களுடன் நின்று உடைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனை அந்த ஊழியரிடம் சுட்டிக்காட்டிய யாழினி, "அங்க இருக்காருல அவரோட சைஸ்ல எடுத்து காட்டுங்க… இவளோட அண்ணா பார்க்க அவர போலவே இருப்பார் " அதை கேட்டு மீண்டும் அதிர்ந்த ரித்திகா, " அடியேய் அவர் உன் ஹீரோவா இருக்கலாம் ஆனா எனக்கு அண்ணன் போலன்னு எல்லா சொன்ன மண்டைய பொளந்துருவேன் " என்று யாழினியின் காதில் முணுமுணுக்க… அவளை திரும்பிப் பார்த்து இதழ்களை விரித்து சிரிப்பது போல் காட்டிய யாழினி ,

" அப்போ டோவி எனக்கு மட்டும் தான் ஓகே வா "

"ஏது போடி அது எல்லா செல்லாது… இரு காயுட்ட சொல்லறேன் " என்று தங்களை போலவே அந்த கதாநாயகனின் மேல் பிடித்தம் கொண்ட மற்றோரு தோழியை ரித்திகா இழுக்க… " அம்மாடி வேண்டாம் அவ கிட்ட சொல்லாத அப்பறம் ஓட்டியே ஒருவழி ஆக்கிடுவா ப்ளீஸ்… ஆனா என்னை கட்டிக்கிட்டா உனக்கு அண்ணா தானே..." என்று யாழினி இறங்கி வரவும் தான் ரித்திகா சமாதானம் அடைந்தாள்.

"சரி சரி… பொழச்சு போ " என்று இவர்கள் சண்டை ஓய்வுக்கு வரவும் அந்த ஊழியர் அர்ஜுனுக்கு உதவி கொண்டிருந்த ஊழியரிடம் இருந்து அவன் உடையின் அளவை தெரிந்து கொண்டு வந்திருந்தான். அவன் சொன்ன அளவில் அர்ஜுனை பார்த்துக் கொண்டே அவனுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்தவள் அதனை பில் போட்டு வாங்கிக் கொண்டாவள், அர்ஜுனை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே வெளியேற…

அதை கவனித்த கார்த்திக் அர்ஜுனின் காதில், "டேய் அந்த பொண்ணு உன்னையே பார்க்குது டா " என்று ரகசிமாக சொல்லவும், கார்த்திக்கை முறைத்த அர்ஜுன், "சின்ன பொண்ணு விடு நம்ம சைடுல இத என்கரேஜ் பண்ண வேண்டாம்… கண்டுக்காம விடு திரும்ப பார்க்கவா போறோம் " என்று சொன்னான்.

அதுவும் சரிதான் என்று கார்த்திக் சரி என்று தலையாட்ட, வெளியில் ரித்திகா, " ஏன் யாழ் இப்படியே வந்துட்டோமே இவுங்கள திரும்ப எப்படி மீட் பண்ணறது. பேர் அட்ரஸ் எதும் தெரியாதே " என்று வினவ… அவளை பார்த்து யாழினி கண்கள் இரெண்டையும் சிமிட்டி சிரித்தவள், "ஆல் டீடெயில்ஸ் ஐ க்நொவ் " என்றாள். அவள் காதை பிடித்து திருகிய ரித்திகா, " கள்ளி எப்படி டி ஹாஸ்பிடல்ல கேட்டு தெரிஞ்சுகிட்டயா " என்று கேட்க… இல்லை என்று தலையாட்டிய யாழினி, " அன்னிக்கி ஹாஸ்பிடல்ல இருந்து அஜூ போன்ல அப்பாக்கு கால் பண்ணி பேசி இருந்தேன் அத வச்சு தான் ஹா ஹா சிம்பிள் " என்று தன் உடையில் இல்லாத காலரை தூக்கி விட்டுகொண்டாள்.

" ம்ம்க்கும் " என்று ரித்திகா சலித்துக்கொள்ள அவளை பொய்யாக முறைத்து பார்த்த யாழினி, "போடி… இந்த நம்பர எடுக்க போய் அப்பாகிட்ட மாட்டிகிட்டேன் தெரியுமா " என்று கொசுவத்தி சுருள் போல் தன் ஆள்கட்டி விரலை மேலே காற்றில் சுற்றி ரித்திகாவிற்கு தன் பிளாஷ் பேக்கை ஓட்டி காட்டினாள்.

அர்ஜுன் விஷயத்தை முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவளுக்கு நாட்கள் நகர ஏனோ அவன் நியாபகங்கள் அவ்வப்போது வந்து இம்சை செய்யவும். அவன் பேர் கூட தெரியாமல் எப்படி என்று யோசிக்கும் போது தான் அவன் எண் எப்படியும் தந்தையின் கைபேசியில் பதிவாகியிருக்கும் என்பது நியாபகம் வந்தது. முதலில் அதிலிருந்து அவன் எண்ணை எடுக்க நினைத்தவள் அவர் கைபேசியை எடுக்க தந்தையின் அறைக்கு சென்றாள்.

அங்கு அவர் இல்லை என்றதும் அவர் கைபேசியை தேடி எடுத்தாள். அது அவர் வீட்டில் உள்ளவர்களுக்கும் சொந்தங்களுக்கும் என்று தனியே வைத்திருக்கும் ஒன்று என்பதால் அதில் பல நாட்கள் முன்பு அழைத்து இருந்தாலும் அர்ஜுனின் எண்னை தேதி நேரம் வைத்து இலகுவாக கண்டுபிடித்து விட்டாள்.

அதை தன் கைபேசியில் பதிவு செய்து கொண்டு வெளியே வரவும் அவள் தந்தை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவரை சற்றும் அங்கு எதிர்பாரதவள் திருட்டு பிள்ளை போல் விழித்துகொண்டு நிற்க… சக்திவேல் மகளை விசித்திரமாக பார்த்தவர், "என்னமா என்னாச்சு ஏன் இப்படி முழிக்கற? " என்று கேட்கவும் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள் , " ப்பா… அது… நீங்க எங்க போனீங்க? " இதுவரை தந்தையிடம் பொய் சொல்லாதவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவரிடமே கேள்வியை திருப்பினாள்.

மகளை புருவம் சுருக்கி பார்த்தவர், "நான் தண்ணி எடுத்துட்டு வர போனேன்… நீ தான் பதட்டமா இருக்க… இந்தா தண்ணி குடி " என்று அவளிடம் பாட்டில நீட்ட சிறு தடுமாற்றதுடன் வாங்கியவள் சிறிது நீர் அருந்தினாள். ஒரு சில நாட்கள் அன்னையின் நினைவு வந்தால் தந்தையின் அறைக்கு வந்து உறக்கும் பழக்கம் உண்டு யாழினிக்கு. அதற்கு தான் வந்திருப்பாள் என்று நினைத்தவர், "நீ எதோ டிஸ்டர்ப்ட்டா இருக்க போல இங்கயே அப்பா கூட தூங்கு " என்று அவளை கையோடு அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைத்து போர்த்திவிட்டார்.

' அப்பாடி இப்படியே மெயின்டைன் பண்ணுவோம் ' என்று நினைத்தவள் பேசாமல் படுத்துக்கொண்டாள். சிறிது நேரம் அமைதியாக கண்மூடி படுத்து இருந்தவள் அருகில் தந்தையின் சீரான மூச்சு அவர் உறங்கிவிட்டதை உணர்த்த மெல்ல போர்வைக்குள்ளிருந்து தன் கைபேசியை எடுத்தவள் ' ட்ரு காலர் ' செயலியில் தந்தையின் கைபேசியிலிருந்து எடுத்த எண்ணை பதிந்தவள் அதன் மூலம் அவன் பெயரை தெரிந்து கொண்டாள்.

முதல் முறை அவன் பெயரை கைபேசியின் திரையில் கண்டவளுக்கு உள்ளிருந்து எதோ ஒரு வித புது உணர்வு மேலேழுந்தது. தன் தளிர் விரல்கள் கொண்டு அவன் பெயரை தீண்டியவள், "அர்ஜுன்… " என்று மெல்ல சொல்லி பார்த்தாள். தன் கைபேசியில் 'அஜூ' என்று அவன் எண்ணை சேமித்துக்கொண்டாள்.

பின், கைபேசியை அணைத்து விட்டு கண்களை மூடி படுத்தவளுக்கு தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது. திரும்பி தன் தந்தையை பார்க்க அவர் நன்றாக உறங்கி கொண்டு இருந்தார். மீண்டும் கைபேசியை எடுத்தவள் அதில் பேஸ் புக் செயலியில் அர்ஜுனின் கணக்கை தேடி எடுத்து அதில் அவன் படம் ஒன்றயும் சேமித்துக்கொண்டாள்.

சிறிது நேரம் அவன் முகவடிவையே கைபேசியின் திரையில் பார்த்துக்கொண்டே அவள் படுத்து இருந்தவள் அப்படியே தூங்கி போக பக்கத்தில், ' க்கர்ர்ர்… க்கர்ர் ' என்று சத்தம் கேட்டு அடித்து பிடித்து எழுந்து கொண்டாள். சுற்றியும் பார்க்க அவள் தந்தை நன்றாக குறட்டை விட்டு உறங்கி கொண்டு இருந்தார்.

அதை கண்டவள் பதட்டம் குறைந்து சோர்வாக அமர்ந்தவள், " ஊப்… அப்பா… அப்பா… " என்று மெல்லிய குரலில் அழைக்க அவர் எழவில்லை. சரி என்று நினைத்தவள் மெல்ல எழுந்து அவள் அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்தவள் தன் கைபேசி தந்தையின் அறையில் இருந்ததை மறந்தும் போனால்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவள் கண் இமைகளை பிரிக்காமலே தன் கைபேசியை தேட அது கைக்கு அகப்படாமல் போனது. கண்களை கசக்கி விட்டுகொண்டே எழுந்து அமர்ந்தவளுக்கு அப்போ தான் அதை தந்தையின் அறையில் வைத்துவிட்டது நியாபகம் வந்தது. பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் குளித்து உடைமாற்றிக்கொண்டு கீழே சென்றாள்.

கீழே வந்தவள் தந்தை உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் கண்டவள் அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவள், " குட் மார்னிங் ப்பா " என்றாள். அவரிடமிருந்து, " ம்ம்… " என்ற பதில் மட்டுமே இருக்கத்துடன் வந்தது. அதில் அவள் அவரை திரும்பி பார்க்க நாற்காளியில் சாய்ந்து அமர்ந்து கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அங்கு மேசை மேல் இருந்த யாழினியின் கைபேசியையே முகத்தில் ஓர் இருக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

என்னவாக இருக்கும் என்று புரியாமல் அவள் அமர்ந்து இருக்க வள்ளி அவர்களுக்கான காலை உணவை எடுத்து வர… உணவு வேலை அமைதியாக கடந்தது. யாழினிக்கு பெரிதாக பயம் இல்லை என்றாலும் இதுவரை தந்தையிடம் எதையும் மறைத்து பழக்கம் இல்லாதவளுக்கு மனதில் சிறு உறுத்தல். எனவே, அமைதியாகவே அவள் இருக்க சாப்பிட்டு கைகழுவி விட்டு வந்த சக்திவேல், " அதான் எக்ஸாம்ஸ் முடிஞ்சுதே எப்போ பொறுப்பா வேலைக்கு வர? " என்று வினவினார்.

சற்று கண்டிப்பான குரல் தான் அதை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. " நீங்க எப்போ சொன்னாலும் சரிப்பா " என்று முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.
" ம்ம் குட் நாளைக்கே போலாம் சும்மாவே வீட்ல இருந்தா இப்படி தான் தேவையில்லாத விஷயங்கள்ள மனுசு போகும் " என்று சொன்னவர் கைபேசியை அவள் முன் வைத்துவிட்டு சென்றார்.

அவர் சென்ற பிறகு அதன் திரையை உயிற்பித்ததுமே அர்ஜுனின் படம் விழுந்தது. அதை கண்டவள் நெற்றியில் தட்டிக்கொண்டள். கண்டிப்பாக தந்தை பார்த்து இருக்க கூடும் என்று உணர்ந்தாள்.

இவை அனைத்தையும் யாழினி ரித்திகாவிடம் சொல்ல ரித்திகா, "என்னடி நிஜமா பாத்துட்டாரா… கேடி என்ன வேலை எல்லாம் பாத்து இருக்க " என்று யாழினியின் கையை கிள்ள… " அம்மா… " என்று அலறியவள், " அவர் போட்டோ மட்டும் தான் பார்த்து இருப்பார்… இதுவரைக்கும் எதும் கேட்கல பார்த்துக்கலாம் வா " என்றாள்.

" ஆர் யூ சீரியஸ் இன் திஸ்? " என்ற ரித்திகாவின் கேள்விக்கு, " ம்ம் எஸ் " என்ற பதில் யாழினியிடம் இருந்து வந்தது.

ரித்திகா, " ஓகே டி ஆனா அர்ஜுன் அக்சப்ட் பண்ணிப்பார்ன்னு நம்பிக்கை இருக்கா " என்றாள்.

" என்ன பசங்க தான் பொண்ணுங்க பின்னாடி சுத்தி லவ் பண்ணுவாங்களா… மாத்தி நம்ம அவுங்க பின்னாடி போவோம் " என்று யாழினி சிரிக்கவும்… எல்லா பக்கமும் தலையை ஆட்டிய ரித்திகாவிற்கு இவ என்ன கூத்து பண்ணப் போராளோ என்று மனதில் பீதியே உண்டானது.

❤️❤️❤️
 
Status
Not open for further replies.
Top