அத்தியாயம் :17
சற்று முன்பு நடந்த நிகழ்வு மீண்டும் நினைவிலாட கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதற்கு மேல் ... ? அவள் எதையும் யோசிக்க தயாராக இல்லை. தண்ணீரை திறந்து விட்டு, முகத்தை நீரால் அடித்து கழுவினாள்.
கலைந்திருந்த தலையை சரிசெய்து விட்டு, அடுத்து தாவணியை பார்க்க!
பின் செய்திருந்ததோடு பிடித்து இழுத்ததால்! நடுவில் கோடு போல கிழிந்திருந்தது. அதை மறைத்தார் போல மீண்டும் சரிசெய்து பின் குத்தி விட்டு, மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள்.
முகம் சிவந்து அழுதிருப்பது நன்றாக தெரிந்தது. இப்படியே எப்படி செல்வது? அங்கிருந்த சோப்பு போட்டு மீண்டும் முகத்தை கழுவி விட்டு, டவலால் முகத்தை நன்றாக துடைத்த போது, இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்பது போல தோன்ற! ஸ்டிக்கர் பொட்டை எடுத்து மீண்டும் வைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.
அறைக்கு வெளியே இராணா கயல் மற்றும் அவள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்க, டக்கென்று அறைக்கதவை திறந்தவள். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், " வா கயல் போகலாம் " என்று படிகளை நோக்கி சென்றாள்.
"அக்கா லிப்ட் இந்த பக்கம் இருக்கு?" என்று கயல் சத்தமிட,
அதை காதில் வாங்காதது போல! படிகளில் வேகமாக இறங்கி சென்றாள். "வரேன் சார். வாங்க டி " என்று இராணாவிடம் விடை பெற்று, தனது தோழிகளுடன் படிகளை நோக்கி ஓடினாள் கயல்.
நேராக நிச்சயதார்த்தம் நடக்கும் ஹாலிற்கு வந்தவள். அங்கே அவர்கள் வீட்டு விருந்தாளிகளுடன் பேச்சு கொடுத்தபடி நின்றிருந்தாள். பிறகு, சாப்பிட அனைவரையும் அழைத்துச் சென்றவள். விருந்தினர்களை சிறிது நேரம் கவனித்து விட்டு, மெல்ல மேடையில் ஏறினாள்.
நேத்ரனிடம் வந்தவள். " வாழ்த்துக்கள் டா. வாழ்த்துக்கள் பவித்ரா " என்றதும்.
"தேங்க்ஸ் அல்லி " என்று பவி கூற, நேத்ரன் பதில் கூறாமல் அவளை முறைத்தான். நேத்ரன் முறைப்பை கண்டு, சிரித்து மழுப்ப முயன்றாள். "இவ்வளவு நேரம் எங்க போன அல்லி?" என்று ஆதங்கமாக கேட்க!
அவளது முகம் சரியில்லாததை கண்டு, மனம் துணுக்குற!
"என்னாச்சு? ஏன் முகம் டல்லாயிருக்கு?" என்றான் நேத்ரன்.
வாணி, அல்லி உள்ளே வரும் போதே அவளை கவனித்து விட்டார். அழுதிருந்த கண்களும், உயிர்பில்லா சிரிப்பும், தன்னை சமாளித்தபடி விருந்தினர்களை கவனிப்பது போல நிற்பதையும் அவர் பார்த்துக் கொண்டு தானே இருந்தார். சூழ்நிலை கருதி அவர் வாயை இறுக மூடி நின்றாலும், மகளின் முகம் அவரை பதைபதைக்க தான் செய்தது.
" ஒன்று மில்லை நேத்ரன். லேசாக தலைவலி , தைலம் தேய்த்தேன் அது கண்ணில் பட்டு ஒரே எரிச்சல். அதோடு, அது நெற்றியில் தேய்த்ததில் தோளெல்லாம் ரொம்ப எரியுது. இப்பத்தான் முகத்தை கழுவி விட்டு வந்தேன். அதனால் முகம் அப்படி தெரியுது போல!" என்றாள்.
ஆனால் அவள் சொல்வதை நேத்ரன் மற்றும் வாணி நம்புவதாக இல்லை. அவர்களது சந்தேகப்பார்வையை கண்டு கொண்டவள்.
"சரி நேத்ரன். நான் சென்னை கிளம்பறேன். இன்றைக்கு மட்டும் தான் எனக்கு லீவ் கொடுத்தாங்க. அப்பாத்தாவுடன் வேனில் வீட்டில் போய் இறங்கிக்கிறேன். வரேன் மா. வரேன் நேத்ரன்" என்றபடி நகர,
"இரு அல்லி. நானும் வரேன் " என்று வாணியும் உடன் கிளம்பினார்.
"பரவாயில்லை மா. நான் அப்பத்தாவுடன் போகிறேன்" என்றாள்.
"புவனாவுக்கு ஸ்வீட்ஸ் கொண்டு போ" என்றவர். "நேத்ரன், நான் அல்லியுடன் வீட்டுக்கு போகிறேன்" என்றவர். "வரேன் பவி " என்று மருமகளிடன் கூறி விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கி, ராஜியை நோக்கி சென்றவர்.
ராஜியுடன் அவரது உறவினர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உடன் கவினும் சில பெண்களும் நின்றிருந்தனர். அங்கே சந்தோஷ மனநிலையில் பேசிக் கொண்டிருந்தனர்.
"சம்மந்தி " என்று வாணி அழைக்க, ராஜி திரும்பி பார்த்தவர். வாணி நிற்பதை கண்டு, முதலில் வாணியிடம் " சொல்லுங்க சம்மந்தி " என்றவர். அல்லியும் நிற்பதை கண்டு, " வா மா அல்லி. இவ்வளவு நேரம் எங்கே மா உன்னை காணும்?" என்றார் கரிசனையாக.
"இங்.. க தான் டைனிங் ஹாலில் இருந்தேன் " என்றவள். " நீ பேசிட்டு வா மா. நான் வெளியில் வெயிட் பண்றேன் " என்று வாணியிடம் கூறி விட்டு,
"வரேன் மேடம். வரேன் கவின் சார் " என்றவள். மற்றவர்ளிடமும் "வருகிறேன் " என்று பொதுவாக சொல்லிவிட்டு வாயிலை நோக்கி சென்றாள். வாணியும் , " அல்லி சென்னை கிளம்புகிறாள். நான் அனுப்பி விட்டு வருகிறேன்" என்று அவளுடனே விடைபெற்று சென்றார்.
வாணி, அல்லியுடன் செல்வதால்! அப்பத்தாவை கயலை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினர். ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். வாணி எதுவும் பேசவில்லை. கேட்கவும் இல்லை. அதே சமயம் வீடு வரும் வரை அவளை பற்றியிருந்த கையை விடவும் இல்லை.
கதவை திறந்ததும் நேராக அறைக்குச் செல்ல முயன்றவளை, " அல்லி நில்லு!" என்றார் வாணி.
'இப்போ என்ன?' என்பது போல் அவரை திரும்பி பார்த்தாள். ஓய்ந்து போன தோற்றம். அவர் மனதை பிசைய,
"என்னாச்சு டி? ஏன்? என்னவோ போல இருக்க?" என்று அவள் கன்னத்தை வருடி, கண்களில் பரிதவிப்போடு கேட்க,
மனம் வெதும்ப, அவள் கண்களிலிருந்து கண்ணீர் கடகடவென கொட்டியது. இதுவரை அவள் அழுதே பார்த்திராதவர். " என் சாமி? என்னாச்சு டா? உனக்கு ஒன்னுமில்லையே.. ? " என்று அவரது கண்கள் பதற்றமாக அவளை ஆராய்ந்தது.
அதற்கு மேல் முடியாமல் , " என்னை இனிமேல் எதற்கும் கூப்பிடாதே மா. உன்னோட வற்புறுத்தலால் ஒவ்வொரு தடவை வந்து அவமானப்படுறேன். இன்றைக்கு.. இன்றைக்கு என்றவள்.. பவித்ரா அறையில் நடந்த அத்தனையும் சொல்லி விட்டாள். அந்த பெண்மணி திருடி என்றது முதல் தாவணியை பிடித்து இழுத்து அப்போது இரணதீரன் வந்து காப்பாற்றியது வரை!
என்னை சபைக்கு கூப்பிட்டு, என் நகையை திருடிட்டான்னு சொல்வேன்னு சொல்றாங்க?" என்றவள். ஆள் மயக்கி என்று சொன்னதை மறைத்து விட்டாள். பெற்ற தாயாக இருந்தாலும் அவளால் அவர் கூறிய அபாண்டத்தை கூற முடியவில்லை.
"கடைசியில் அவங்க பேத்தி, அந்த நகையை போட்டுட்டு வருது " என்ற போது வாணி அதிர்ச்சியில் நின்றிருந்தார்.
" என்னால இதற்கு மேல முடியலை மா . உங்க இஷ்டத்துக்கு கிளம்பி வா என்கிறதும். லீவு போடுன்னு சொல்றதும். எனக்கு மூச்சு முட்டுது. திடீர் திடீர்னு நீங்க முடிவெடுத்து அதற்கேற்றது போல ஆட்டு விக்கிறீங்க. தயவு செய்து என்னை விட்டிடுங்க... ஒரு பொண்ணு கிளம்பி தனியாக வரேன். என்ன தான் அங்கே ஏறி இங்கே இறங்கினாலும், இங்கே வந்து சேரும் வரை என் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?
சில சமயம் வழியிலேயே லேடீஸ் எல்லாம் இறங்கிடுவாங்க! நான் மட்டும் தான் இருப்பேன். மற்ற எல்லாருமே ஆண்களாக இருக்கும் போது, என்னோட மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?. உங்களுக்கு அதெல்லாம் புரியாது மா. ஏனென்றால் நீங்க அந்த மாதிரி நிலையில் நின்றதில்லை.
சொன்னால் கூட, ஏன்? உலகத்திலேயே நீ மட்டும் தான் பஸ்ஸில் வருகிறாயா? வேறு யாரும் வருவதில்லையா? எல்லாரும் கெட்டவங்க மாதிரி பேசுறன்னு சொல்வீங்க? நான் சொல்றது அத்தனையும் மனஉணர்வுகள் பற்றியது! சொன்னாலும் உங்களுக்கு புரிய போவதும் இல்லை " என்று விரக்தியாக பேசியபடி தனது அறைக்கு சென்று விட்டாள்.
வாணி, மகளின் பேச்சில் அப்படியே விக்கித்து போய் நின்றார். அல்லி சொல்வதும் சரிதானே! இவர் நினைத்த நேரத்தில் கிளம்பி வா! என்பதும். அங்கே சென்னையில் பஸ் ஏறினால்! இத்தனை மணி நேரத்தில் இங்கே வந்து விடுவாள் என்று பயணக் கணக்கை போட்டாரே தவிர, மகளின் மன நிலையை அறிய முடியாமல் போய் விட்டார்.!
வேறு உடை மாற்றிக் கொண்டு, பயணப் பையுடன் வந்தவள். " நான் கிளம்பறேன் மா. கல்யாணம் எப்படியும் சென்னையில் தான் வைப்பாங்க. நீ பத்திரிக்கை ரெடியானதும் எனக்கு இரண்டு அனுப்பி விடு. புவனா அக்காவுக்கும் ஹவுஸ் ஒனருக்கும் வைக்கனும். பிறகு, நேராக நான் மண்டபத்துக்கு வந்து விடுவேன். அங்க வா! இங்கே வா னு என்னை கட்டாயப்படுத்தாதீங்க " என்றவள் .
அப்படியே நின்றிருந்த வாணியிடம், " புவனாவுக்கு ஸ்வீட் தரேன்னு சொன்னீங்களே என்னாச்சு?" என்றாள்.
அப்போது தான் சுயத்துக்கே வந்தவர். முகம் சிவந்து சிடுசிடுவென நின்றிருந்த அல்லியை கண்டு, " அம்மாவை மன்னிச்சிரு மா " என்றார் கண்ணீர் மல்க . அதில் மகள் பட்ட கஷ்டம், அதை தாயாக புரிந்து கொள்ளாத , தனது இயலாமை! என்று அவரது உணர்வுகளை முகம் அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.
" விடு மா " என்றவள். " எனக்கு பசிக்குது. என்ன சாப்பாடு இருக்கு?" என்றாள்.
" சாதம் இருக்கு. உனக்கு பிடிச்சு ஈரல் பிரட்டல் இருக்கு. எடுத்துட்டு வரேன் " என்றவர். கண்ணை துடைத்தபடி வேகமாக அடுக்களைக்குள் சென்றார்.
வாணியை பார்க்க! அல்லிக்குமே பாவமாக இருந்தது. சாதாரணமாக பேசும் போது, சற்று அதட்டல் கண்டிப்பு அவர் பேச்சில் இருக்கும். இந்த மாதிரியான மன உணர்வுகளை சொல்லும் போது, தவறு செய்த குழந்தை போல விழிப்பார். இது போன்ற நிகழ்வுகளை அவர் வாழ்நாளில் அறிந்து கொண்டதுமில்லை. புரிந்ததுமில்லை.
நேத்ரனிடம் எதையும் வெளிப்படையாக பேசியதில்லை. எப்போதுமே அதை செய். இதை செய்! என்று அவனை தகப்பன் போல கண்டித்து கொண்டிருப்பாள். கயல் அவளுக்கு குழந்தை போல! அன்பு நிறையவும், கண்டிப்பு குறைவாகவும் இருக்கும். உணர்ந்து சொல்ல வேண்டுமானால் அந்த வீட்டின் ' தகப்பன் சாமி ' அல்லி. அவளறியாமல் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் அவளது மனக் கவலையை குறைக்க, ஆறுதல் சொல்ல, அவளை அரவணைக்க, அவளை குழந்தை போல் தேற்ற! அவளது தலை சாய்ந்து கொள்ள ஒரு தோள்! இது வரை அவளுக்கு கிடைத்ததில்லை.
வாணி சாப்பாடு கொண்டு வர, மல்லுக்கட்டி அதை சாப்பிட்டு கொண்டிருந்தாள். வாணியை திசை திருப்பவே, அவள் உணவு கேட்டதும். ஆனால் இப்போது இருக்கும் மனநிலையில் உள்ளே இறங்கவில்லை.
எதையோ? யோசித்தடியே உணவு உண்டு முடித்தவள். வாணி கொடுத்த ஸ்வீட்சை எடுத்துக் கொண்டு, " வரேன் மா. நேத்ரனிடம் இப்போதைக்கு இது பற்றி எதுவும் பேசிக் கொள்ள வேணாம் " என்றபடி வாசலுக்கு வர, அப்போது சரியாக உயர்ரக கார் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்து கவின் இறங்க, " வாங்க சார். உள்ளே போங்க . எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆச்சு " என்று மெல்ல நழுவ முயன்றாள்.
" சாரி அல்லி. அண்ணன் எல்லா விசயமும் சொன்னாங்க. பெரியம்மா சார்பா நாங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் " என்றவன். " அம்மாவும் வந்திருக்காங்க " என்றபடி பின்னால் உள்ள கதவை திறக்க, ராஜி அமர்ந்திருந்தார்.
அவரின் உதவியாளர் வீல் சேரை கீழே இறக்க, அதில் கவின் ராஜியை தூக்கி அமர வைத்தான். " வாங்க மேடம் " என்றவளுக்கு மிகவும் சங்கடமான நிலை
" வாங்க தம்பி. வாங்க சம்மந்தி " என்ற வாணிக்கு முன்பிருந்த அன்பு இப்போது அவர்களை வரவேற்கும் போது இல்லை. பெயருக்கு அவர்களை வரவேற்றார்.
அல்லியின் கையை பற்றிக் கொண்டவர். " எங்க அக்கா நடந்து கொண்ட விதத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மா. அவங்க இப்படி நடந்து கொள்வாங்கன்னு நான் நினைத்து கூட பார்க்கவில்லை " என்று ஏதேதோ சமாதான வார்த்தைகள் கூறினார்.
" ப்ளீஸ். அதை பற்றி பேச வேண்டாமே! அதை மறக்க எனக்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். நீங்க உள்ளே போங்க. அழைத்துக் கொண்டு போங்க கவின் சார் " என்றவள். " நான் வரேன் மா. சென்னை போய்ட்டு போன் பண்றேன் மா " என்றபடி வேகமாக திரும்பியவள். எதன் மீதோ வேகமாக மோதி விட்டாள்.
" ஆ!" என லேசாக முணங்கும் போதே! அவளது உள்ளுணர்வு அது இரணதீரன் என்று அடித்து கூறியது. அவனே தான்! நிமிர்ந்து பார்க்க முடியாமல், " சாரி " என்றவள்.
"உள்ளே போங்க " என்றபடி நகர முயல
"எங்கே சென்னைக்கா?" என்றான்.
"ம்ம்ம். ஆமாம் " என்ற போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
"அல்லி உன் செல்போன் எங்கே?" என்றார் வாணி.
'சார்ஜ் போட்டதை எடுக்க மறந்திருந்தாள். " சார்ஜ் போட்டேன்.. " என்றபடியே உள்ளே வர, கவின் மற்றும் ராஜி உள்ளே வந்தனர்.
செல்போனை எடுத்துக் கொண்டு வந்தவள். " நான் வருகிறேன் " என்று பொதுவாக விடைபெற, " இராணா சென்னை தான் மா. போகிறான். நீ அவன் கூடவே போம்மா " என்றார் ராஜி .
" இல்லை.. நான் பஸ்ஸிலேயே போய் விடுவேன். எதற்கு அவங்களுக்கு சிரமம் " என்று மறுக்க முயன்றாள்.
" நானா சுமக்கிறேன். வண்டி தானே சுமக்க போகிறது. நீங்க வாங்க " என்றான் வாயிலில் நின்றபடி
" வேண்டாம் " என்றாள்.
" நீங்க சொல்லுங்க அத்தை. நானும் சென்னை தான் போகிறேன். பத்திரமாக அவங்க வீட்டில் டிராப் பண்ணிடுறேன். நைட் கிளம்பி இங்கே வந்துவிட்டு, திரும்பவும் உடனே கிளம்பறது கஷ்டம் தானே!. அதோடு, என் மேல் நம்பிக்கை இல்லையென்றால் வேண்டாம் " என்று சேர்த்து சொல்ல!
மறுக்க முடியாமல், " தம்பி கூட போ அல்லி. ரொம்ப சோர்வாக தெரியரே. போனதும் போன் போடு " என்றார்.
எதையும் பேசவோ மறுக்க முடியாமல், ஆமோதிப்பாக தலையசைத்தபடி விடைபெற்று சென்றாள்.
இராணாவின் தனி வாகனம். ஓட்டுனர் ஏறி அமர, பின்னால் உள்ள இருக்கையில் ஒரு புறத்தில் அல்லியும், மறு புறத்தில் இராணாவும் அமர்ந்தனர். வுண்டி சென்னையை நோக்கி பயணமானது.
அல்லி, அமைதியாக கண்ணை மூடி அமர்ந்து கொண்டாள். அவனிடம் ஏதும் பேச வேண்டி வருமோ? என்று நினைத்து தான் கண்ணை மூடினாள்.
உள்ளே இருந்த இதமும் மெல்லிய இசையும் மனதை வருட, சற்று நேரத்தில் அல்லி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள். மாலை நேரம் சிற்றூண்டிக்காக வண்டி ஒரு மோட்டலில் நின்றது. டிரைவர் இறங்கி விட, இராணா அவளை எழுப்பாமல் அவளது முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
பிறகு நேரமாவதை உணர்ந்து, "அல்லி மலர் " என்று மெதுவாக அழைத்தான்.
அவளிடம் எந்த அசைவும் இல்லை. இப்போது சற்று சத்தமாக " அல்லி மலர் " என்று அழைக்க, அப்போதும் அசைவு இல்லை.
புருவத்தை சுருக்கியவன். அவளை தொட, நெருப்பு போல உடம்பு கொதித்தது. " ஹேய்.. அல்லி " என்று நெருங்கி அவளது கன்னத்தை தட்ட,
" ம்ம்ம் " என்று முணங்கியவள். அப்படியே மயங்கி அவன் தோளில் சரிந்தாள்.
டிரைவரை அவசரமாக அழைத்தவன். மருத்துவமனைக்கு போக சொன்னான். அங்கே நின்றிருந்தவர்களிடம் மருத்துவமனை எங்கே என விசாரித்து, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கிளீனிக்கிற்கு அழைத்துச் சென்றனர்.
அதுவரையுமே அவளை எழுப்ப முயன்றான். எந்த வித சிறு அசைவுமே இல்லை. சூடான மூச்சுக்காற்று மட்டும் வந்து கொண்டிருந்தது.
மருத்துவமனை வந்திருக்க, டிரைவர் ஸ்டெக்சரை எடுக்க முதலில் ஓட, அது வரை காத்திராமல் அவளை பூ போல கைகளில் ஏந்தியபடி காரிலிருந்து இறங்கி, மருத்துவமனை உள்ளே சென்றான்.
எதிரில் பெண் மருத்துவர் வர, அவரது அறைக்கு அழைத்து சென்று, அங்கிருந்த படுக்கையில் படுக்க வைக்க செய்தனர்.
அல்லியை பற்றிய தகவல்கள் கேட்க, அவனுக்கு தெரிந்த வரை பதிலளித்தான். " ஜீரம் ரொம்ப அதிகமாக இருக்கு. அதில் தான் மயங்கிட்டாங்க. ஊசி போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சுடும். ஜுரமும் குறைந்தவுடனே நீங்க அழைச்சிட்டு போகலாம் " என்ற விட்டு மருத்துவர் சென்று விட்டார்.
அவர்களுக்கு சிறிய அறை சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஊசி போடப்பட்டிருக்க, இப்போது சிலைன் இறங்கிக் கொண்டிருந்தது. முழுதாக இறங்கிய பின்னரே மெல்ல கண்ணை விழித்தாள் அல்லி.
அவள் அருகில் இருந்த சேரில், எதையோ இழந்தது போல பரிதவிப்புடன் அமர்ந்திருந்ததை கண்டவள். புருவ சுழிப்புடன்.. " என்னாச்சு?" என்றாள் மெல்ல
அதுவரை சிந்தனை இங்கே இல்லாமல், பார்வை மட்டுமே அவள் மேல் பதித்தபடி அமர்ந்திருந்தவன். அவளது குரலில் தான் சுயத்துக்கு வந்தான்.
" என்ன.. ஏதாவது வேணுமா?" என்றான் படபடப்பாக
"ம்ஹூம்.. என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா! எதை.. யோ இழந்த மாதிரி உட்கார்ந்திருக்.. கீங்க?" என்றாள் திக்கி திணறி, தொண்டை வரண்டு போய் இருந்தது. அவளால் பேச முடியவில்லை. இருமல் வந்தது. லேசாக இரும,
வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணியை மெல்ல அவளது தலையை மட்டும் தனது கைகளால் தூக்கி, நீரை பருக கொடுத்தான். இரண்டு மடக்கு குடித்த பிறகே, அவளுக்கு சுற்றம் உறைத்தது. அவள் முகம் அவன் நெஞ்சோடு சாய்ந்திருக்க, அவ்வளவு நெருக்கமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.
தண்ணீர் புரையேற, போதும்! என்று தலையை ஆட்டியவள். மெல்ல நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, அவன் நெஞ்சில் கை வைத்து மெல்ல அவனை தன்னிடமிருந்து விலக்கினாள். அவள் விலக்கிய கை அவன் நெஞ்சில் இருக்க! அவளையும் அவள் கையையும் மாரி மாரி பார்த்தவன். கண்ணோடு கண் பார்த்து முறைக்க, மெதுவாக அவளது கையை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டவள்.
" சா.. சாரி.. வேண்டுமென்றே தொடலை " என்று அவள் தொட்டதற்காக முறைக்கிறான் போலும் என்று நினைத்து விளக்கம் கொடுக்க முயன்றாள்.
"தேவையில்லை. நீ சாரி சொல்லனுமென்றால் நிறைய சொல்ல வேண்டியிருக்கும்" என்றவனை புரியாமல் பார்த்தாள்.
காரில் வரும் போது, ஜீர மயக்கத்தில் என் நெஞ்சில் தான் சாய்ந்து இருந்த" என்றதும் அவள் கண்கள் சாசர் போல விரிந்தது. அப்புறம் என்னால நகர கூட முடியலை. உன் கை எடுத்து விட்டால் என் மேல படக்கூடாத இடத்தில் எல்லாம் உன் கை பட்டுடிச்சு " என்றதும்..
" என்ன?" என்றாள் அவள் அதிர்ந்து போய்
"மயக்கத்தில் உள்ள உன்னை என்ன சொல்ல முடியும். நீயும் தெரியாமல் போட்டுட்ட .. " என்றவன். அவள் எதும் புரியாமல் யோசிப்பதும் திருதிருவென முழிப்பதையும் கண்டு, சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டவன்.
"எதற்கு சொல்கிறேன் என்றால்? உன் கை என் மேல் தெரிந்தும் தெரியாமல் பட்டதற்கோ? என் கை உன் மேல் தெரிந்தே பட்டதற்கெல்லாம் சாரி சொல்ல வேண்டாமே! " என்றான்.
எல்லா பக்கமும் தலையை உருட்டினாள். அவன் சொன்னது எதுவும் தற்போது மூளைக்கு உறைக்கவில்லை.
மருத்துவர் வர, அவளுக்கு ஜீரம் குறைந்திருப்பதை கண்டு, மருந்து எழுதி கொடுக்க, அதை பெற்றுக் கொண்டு வந்தனர். மலரை அவரது வீட்டருகே இறக்கி விட,
"ரொம்ப தேங்க்ஸ் சார் " என்று காரிலிருந்து இறங்கினாள். தானும் உடன் இறங்கியவன். அவளது பேக்கை கையில் எடுத்துக் கொண்டு, "இங்கே தான் தங்கி இருக்கீங்களா?" என்றான்.
"ம்ம். மாடியில் " என்றாள்.
" சரி. வாங்க " என்று படியில் ஏற பின்னால் அல்லியும் ஏறினாள். வாசலருகே நின்றவன்.
"சரி. நான் கிளம்பறேன் . வீட்டுக்கு போன் செய்து சென்னை வந்ததை சொல்லி விடு " என்றான்.
"ம்ம்ம் " என்றாள்.
"ஒ.கே. பை. நான் சொன்னதை மறந்துடாதே" என்று விடைபெற
"என்ன சொன்னீங்க? " என்றாள் புரியாமல்
அது தான்! உன் கை என் மேல் தெரிந்தும் தெரியாமல் பட்டதற்கோ? என் கை உன் மேல் தெரிந்தே பட்டதற்கெல்லாம் சாரி சொல்ல வேண்டாம்! " என்றவன். கிளம்பி விட்டான்.
இப்போதும் குழப்பமாக யோசித்துக் கொண்டிருந்தாள். தெளிவாக யோசிக்கும் போது.... ? என்னவாகுமோ!
அல்லி மலர்க் கொடி வருவாள்..