எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 2

Sathya theeba

New member
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ...
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ...
(தீபாவளி)


வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோலக் காற்றைத் கிழித்துக் கொண்டு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது அந்தப் புகையிரதம். மேடு பள்ளம், மலை, குகை என்று பேதமின்றி எங்கும் புகுந்து வந்தது. தடதடக்கும் அந்த ரயிலின் ஓசைக்குச் சவால் விடும் அளவிற்கும் அதன் ஓசைக்குப் பின்னணி இசைபோலவும் ஒலித்த அவளது இதயத் துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்டது.

அந்தப் புகையிரதத்தின் ஜன்னலில் தலைசாய்த்திருந்தாள் அவள். மனதில் இருந்த பாரம் தலையை அழுத்துகின்றதோ எனும் அளவுக்குத் தலை பாரமாக இருப்பதாக உணர்ந்தாள். கண்களில் வருவேனென அடம்பிடித்த கண்ணீரை சிரமத்துடன் உள்ளிழுத்துக் கொண்டு கனத்த இதயத்துடன் வெளியே தெரிந்த மரங்களையும் மலைகளையும் எந்தவித உணர்ச்சியுமின்றிப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

தன் அடையாளங்களை தொலைத்து விட்டு யாருமற்ற அநாதையாய் இன்று இந்தப் புகையிரதத்தில் பயணம் செய்கின்றாள். இன்று அவள் வாழ்க்கை கோபுர உச்சியிலிருந்து குப்புற நிலத்தில் விழுந்தது போல ஆகிவிட்டது. இப்போது நடப்பது கனவா? அல்லது இதுநாள்வரை கண்டதுதான் கனவா? இது விதி தனக்கு மட்டும் இப்படி ஒரு தலைகீழ் வாழ்க்கையே எழுதியது ஏனோ எனத் தலைவிதியை நொந்து கொண்டாள்.

பழைய நிகழ்வுகளின் தாக்கம் அவள் மனதை வெகுவாக அழுத்தியது.

முந்திய நிலையத்தில் புகையிரதம் நின்ற போது, எதிரே அமர்ந்திருந்த பெரியவர் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானார்.

கொழும்பில் அவர் ஏறியதிலிருந்து இந்த நேரம்வரை ஜன்னல் வழியே வெறித்த பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்த அவளைக் கவனித்திருந்தார்.
இடையில் அவளிடம் பேச முற்பட்ட போது அதை அவள் கவனத்தில் எடுக்கவே இல்லை.
இப்போது இறங்கப் போகும் நேரம் அவர் மனதில் ஒரு நெருடல் தோன்றவும் அவளருகில் வந்தார்.

"பிள்ளை நீ இறங்கலையா?"
என்று கேட்டார்.
திடுக்கிட்டுத் திரும்பி அவரைப் பார்த்தவள் என்ன பதில் சொல்வது என சற்றுத் தடுமாறினாள். பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு "இல்லை ஐயா, இன்னும் இரண்டு ஸ்டேஷன் கழித்தே நான் இறங்கணும்" என்றாள்.
" இல்லையே பிள்ளை.. இன்னும் ஒரு ஸ்டேஷன்தான் இருக்கு. அதுதான் கடைசி ஸ்டேஷன். இந்த ட்ரெயின் அங்கேயே நின்றிடும்" என்றவர்.
"நீ எங்கம்மா போகணும்?" என்று கேட்டார்.
"சாரி ஐயா, நான் அடுத்த ஸ்டேஷனுக்கு தான் போகணும்" என்று தட்டுத்தடுமாறி பதிலளித்தாள். ஊரின் பெயரையும் உரைத்தாள்.
"ஓகோ.. அதே ஊர்தான்" என்றவருக்கு ஏதோ மனதுக்குள் தோன்றவும்,
"உன்னை அங்கே யாராவது அழைத்து போக வருவார்களாம்மா?" என்று கேள்வி கேட்டார்.
'என்னைத் தேடி யார் வரப்போகின்றார்கள். நான்தான் யாருமற்று அநாதையாய் அலைகிறேனே' என்று மனதுக்குள் அழுதவள் அதை வெளியில் காட்டாமல்,
"ஐயா அங்கே எனக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னைக் கூட்டிப் போக வருவார்கள்" என்று கூறினாள்.
"சரி பிள்ளை.. என்னைத் தேடி என் மகன் வந்திருப்பான். நான் கிளம்புறேன்மா" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

மீண்டும் புகையிரதம் புறப்பட்டு விட்டது. இதோ இன்னும் சில நிமிடங்களில் அடுத்த நிலையம் வந்துவிடும். இந்தப் புகையிரதப் பயணத்தின் கடைசி நிலையம் அதுதானாம். அத்துடன் இந்தப் பயணம் முடிந்துவிடும். அதன் பிறகு....? விடை தெரியாத பல கேள்விகள் அவள் முன் நின்று மருட்டியது.

நான் என்ன நம்பிக்கையில் அங்கே செல்கின்றேன்? நான் அங்கே செல்வது சரியா? எல்லாத்தையும் விட அங்கே என்னை ஏற்றுக் கொள்வார்களா? எந்தக் கேள்விக்கும் அவளிடம் விடை இல்லை.

இவற்றிற்கு மட்டுமா விடை தெரியவில்லை. அவள் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான்.
ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் பயணம் செய்து இவ்வளவு தூரம் வந்துவிட்டேனே என்று மனதிற்குள் புலம்பினாள்.

அந்தப் புகையிரதத்தின் வேகம் மெல்ல மெல்லக் குறைவது தெரிந்தது. இதோ நின்றேவிட்டது. தன்னுடன் கூட எடுத்து வந்திருந்த சிறு பயணப் பையை மட்டும் எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தாள்.

சூரியன் மெல்ல மெல்லத் தனது வெளிச்சக் கதிர்களை மலைகளின் பின்னால் மறைத்துக் கொண்டிருந்தான். பகலில் பச்சைப் பசேலென காட்சி தரும் மலைகள் எல்லாம் இருட்டில் பெரும் பூதங்களாகி மிரட்டின. பகல் வேளையிலேயே நுவரேலியாவில் குளிர் உடலை ஊடுருவும். இப்போது குளிர் உடலை ஊசிபோலக் குத்தியது.

அவளுக்கு இக்குளிரெல்லாம் சாதாரணம் தான். இதைவிட உறைபனியைக் கூடக் கண்டிருக்கின்றாள் தான். ஆனால் இப்போது அவளது மனம் சோர்வடைந்த காரணமோ என்னவோ இந்தக் குளிரையே தாங்க முடியாது கைகளை இறுகக் கட்டிக்கொண்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். கொழும்பில் இருந்ததைப் போல அந்த நிலையத்தில் அலையலையெனக் கூட்டம் இல்லை. புகையிரதத்தில் இருந்து இறங்கிய வெகு சிலர் தமக்கெனக் காத்திருந்த வாகனங்களிலும் அங்கு நின்றிருந்த ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்தியும் தத்தம் வீடு நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அந்த இடம் அதிகம் குப்பை தூசு இல்லாமல் சுத்தமாக இருந்தது. பகல் வேளையில் அவ்விடம் மிகவும் அழகாக இருக்கும். இருட்டிவிட்டதால் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் மிதமான அழகுடன் காணப்பட்டது.

அவள் சுற்றுமுற்றும் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே எல்லோரும் சென்றுவிட்டனர். அங்கங்கே ஒருசிலர் மட்டுமே தென்பட்டனர். அப்போதுதான் நடப்புக்கு மீண்டும் வந்தவள் இந்த இருட்டு நேரத்தில் எங்கே செல்வது என்று திகைத்தாள்.

அவள் பயணம் செய்யத் தொடங்கிய இந்த இரண்டு நாட்களிலும் இரண்டு கப் டீயும் ஒரேயோரு சான்ட்விச்சும் மட்டுமே சாப்பிட்டிருந்தாள். பசியில் கால்கள் சற்றுத் தடுமாறின. அங்கேயிருந்த கதிரையில் சென்று அமர்ந்தாள். அந்த நிலையத்தில் சிறிய ஹோட்டல் ஒன்று திறந்திருந்தது. ஆனால், அங்கே சென்று சாப்பிட அவளுக்குத் தோண்றவில்லையே.

தன்னுடன் கொண்டு வந்திருந்த அந்த சிறிய பையைத் திறந்து அதனுள் வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். அதிலிருந்த முகவரியையும் சரிபார்த்தாள். இதே ஊர்தான். இந்தக் கடிதத்தை நம்பி இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இந்த நேரத்தில் எப்படி இதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்குச் செல்ல முடியும். நின்றிருந்த ஒன்றிரண்டு ஆட்டோக்களும் ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டன. கண்கள் இருட்டவும் கண்களை மூடித் தலையைச் சரித்துத் தன்னை ஆசுவாசப்படுத்தினாள். இதுவரை நேரமும் அவளிடம் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் நேரம் செல்லச் செல்ல அவளை விட்டுச் சென்று கொண்டிருந்தது.
தெரியாத இடத்தில் வந்து மாட்டிவிட்டேனோ என்று கலங்கினாள்.

இரண்டு வாரங்களின் முன்னர் அவள் வாழ்வை புரட்டிப்போட்ட சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடியது. நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவு அடுக்குகளில் வலம் வந்தன.

கனடாவின் ரொரண்டோ மாநிலத்தில் மிகப் பிரசித்தமான ஹோட்டல் 'சீகுயின்ஸ்'. எப்போதுமே பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் அக் ஹோட்டல் இன்று இன்னும் பன்மடங்கு பிரமிப்பைக் கூட்டியது.

கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ண விளக்குகள், பலூன்களும் என அலங்காரம் அமர்க்களமாய் இருந்தது. ஹோட்டலின் உள்ளே இருந்த விழா மண்டபமும் மேடையும் அதிக அலங்காரத்தில் பளிச்சிட்டன. பணத்தை வாரியிறைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அம்மாநிலத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இருந்து பெரிய பெரிய பதவிகளில் இருக்கும் பெரிய மனிதர்களும் பணக்காரர்களும் என தத்தம் சொகுசுக் கார்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அந்த ஹோட்டலின் பணியாளர்கள் அனைவரும் காலில் சக்கரம் கட்டாத குறையாக சுழன்று சுழன்று அவர்களுக்கெல்லாம் சேவையாற்றி கொண்டிருந்தனர்.

ஏஎஸ்பி என ரொரன்டோ வர்த்தக வட்டாரத்தில் அறியப்பட்டவர் அன்பானந்தம் சூரியப்பிரகாஸ். புளூ வேல்ஸ் இம்போர்ட்ஸ் அன்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் பங்குதாரரும் சீகுயின்ஸ் எனும் ஏழு நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளருமான சூரியபிரகாஷின் ஒரே வாரிசு ஆதிரா. அவளுக்கு இன்று இருபத்து மூன்றாவது பிறந்ததினம். அது மட்டுமன்று அவரது தொழில்முறை பங்குதாரரான தர்மேந்திராவின் மகன் சர்வேஷிற்கும் ஆதிராவுக்கு திருமணம் செய்யப் பெரியோர்கள் முடிவெடுத்திருந்தனர். அதனை அறிவித்து நிச்சயம் பண்ணும் நிகழ்வும் அன்றே நடத்த ஏற்பாடாகியிருந்தது.
பெண்ணின் பிறந்தநாளையும் நிச்சயத்தையுமே இவ்வளவு பிரமாண்டமாகக் கொண்டாடும் ஏஎஸ்பி திருமணத்தை எவ்வாறு நடத்துவார் என்பதே வந்தவர்களின் பேச்சாயிருந்தது.

சற்று நேரத்திலேயே அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. படகு போன்ற காரில் அழகுக்கே இலக்கணமாக வந்து இறங்கினாள் ஆதிரா. அவளைக் கண்டதும் அந்த ஹோட்டலில் நின்ற அனைவருமே எழுந்து நின்று கைதட்டி அவளை வரவேற்றனர்.
நீலத்தில் வெள்ளை நிறக் கற்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட அந்த முழு நீளக் கவுணில் அவள் தேவதையாக ஜொலித்தாள். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒப்பனையாளர்கள் அவளை அலங்கரித்து இருந்தனர். உயரே தூக்கி போடப்பட்ட மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட கொண்டையில் வெள்ளை நிறக்கற்கள் பதிக்கப்பட்ட சிறிய கிரீடம் சூட்டப்பட்டிருந்தது.
கழுத்திலும் கையிலும் வைரங்களால் இழைக்கப்பட்ட நகைகள் ஜொலித்தன.

ஐந்தடிக்கும் சற்றுக் குறைவான உயரம். அளவாக செதுக்கப்பட்ட உடலமைப்பு. உப்பிய கன்னங்களும், பெரிய, நீண்ட கண்களும் பார்ப்போரை ஈர்த்துவிடும்.
காரிலிருந்து இறங்கியவளைக் கையைப் பிடித்து விழா மேடைக்கு அழைத்துச் சென்றார் சூரியபிரசாத். மிக ஆரவாரமாக சகல வைபவங்களும் நடந்தன. சர்வேஷும் மேடைக்கு அழைக்கப்பட்டு இருவரின் திருமணச் செய்தியும் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை நடத்தவும் திட்டமிட்டனர்.
அங்கே வந்திருந்தவர்களுள் மகிழ்ச்சியில் சிலரும் பொறாமையில் உள்ளம் கொதிக்க பலரும் கைதட்டி அச்செய்தியை ஆமோதித்தனர்.

ஆதிராவுக்கு சர்வேஷை சிறுவயது முதல் தெரியும் அவ்வளவே. குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகளில் அவனை அடிக்கடிக் கண்டிருக்கிறாள். ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்பாள். அதற்கு மேல் அவனைப் பற்றி அவள் தெரிந்திருக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துத் தந்தை கேட்டபோது மறுப்பதற்கு அவளுக்குக் காரணம் இருக்கவில்லை. அவர் என்ன முடிவெடுத்தாலும் தான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறினாள். உடனேயே ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

ஆதிராவின் தாய் மலர்விழி. சூரியபிரகாஷ் இந்தியாவின் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன்னரே கனடா வந்துவிட்டது.

அவர் தனது நிறுவனத்துக்கு ஏற்றுமதி தொடர்பான விடயமாகப் பேச இலங்கை வந்திருந்த போது மலர்விழியைக் கண்டு காதல் கொண்டு மணந்தார். தன்னுடனேயே கனடாவுக்கும் அழைத்து வந்துவிட்டார். மலர்விழி தனது குடும்பத்தை எதிர்த்துத் திருமணம் செய்ததால் யாரும் அவருடன் பேசுவதில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள்? யார்? என்பது கூட ஆதிராவுக்குத் தெரியாது.
ஆதிராவுக்கு இரண்டு வயது இருக்கும் போதே மலர்விழி இறந்துவிட்டார். அவர் இறந்த செய்தியைக் கூட அவரது உறவினர்கள் சட்டை செய்யவில்லை என்று பின்னாளில் கேள்விப்பட்டிருக்கிறாள் ஆதிரா.

தந்தை வழியில் இவளுக்கு உறவென்று சூழ பலர் இருந்தாலும் எல்லோருமே பாசத்தை விடப் பணத்தையே அதிகம் தேடி ஓடினர். எனவே இவளும் தந்தையைத் தவிர வேறு யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கக் கற்றுக் கொண்டாள். சூரியப்பிரகாஷூம் அவளைப் பூவைப் போலவே பாதுகாத்து வளர்த்தார். அவளது உலகமே தந்தையைச் சுற்றி மட்டுமே இருந்தது.

நிச்சயம் செய்யப்பட்டு ஒருவாரம் கடந்திருந்தது. அன்று காலையில் எழும்போதே ஆதிராவின் மனதில் என்னவென்று தெரியாமல் ஒருவித பதற்றம் ஏற்பட்டது. மனது நிலைகொள்ளாமல் தவித்தது. தந்தையுடன் பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று தோன்றவும் சூரியபிரகாஷைத் தேடி அவரது பகுதிக்குச் சென்றாள். அங்கே நின்ற அவரது மெய்க்காவலர், அவர் அதிகாலையிலேயே வெளியே போய்விட்டதாகவும் தங்கள் யாரையும் அவருடன் கூட வரவேண்டாம் என்று கூறிவிட்டுத் தனது கார் டிரைவரை மட்டும் அழைத்துச் சென்றதாகவும் கூறினான்.
எங்கே அப்பா அவ்வளவு அவசரமாகப் போயிருப்பார் என்று யோசித்தாள். அந்த டிரைவரும் இங்கே பல வருடங்கள் வேலை செய்வதால் அவரது பாதுகாப்புக் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று எண்ணினாள். எதற்கும் தந்தைக்கு அழைப்பை எடுத்துப் பார்ப்போம் என்று எண்ணமிட்டவள் தனது அலைபேசியிலிருந்து அழைப்பை மேற்கொண்டாள். ஆனால் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. சற்று மனம் கவலையுற்ற போதும் சற்று நேரம் கழித்துப் பார்ப்போம் என்று எண்ணமிட்டவள் அப்படியே விட்டுவிட்டாள்.

அப்போது சர்வேஷ் அவளுக்கு அழைப்பை மேற்கொண்டான்.
"ஹாய் ஸ்வீட்டி, என்ன செய்கிறாய்?"
"டாட் ஆபிஸுக்கு இன்று வரச் சொன்னார். அதுதான் ரெடியாகிட்டு இருக்கேன்"
"ஹேய் இன்று என் பிரண்ட் ஜெலன்ஸ் பேர்த்டே. 'சங்கறிலா'வில் பார்ட்டி வைக்கிறான். கம் வித் மீ ஸ்வீட்டி"
"சாரி சர்வேஷ், இன்று தான் நான் ஃபெர்ஸ்ற் டே ஆபிஸ் போகப் போறேன். சோ, சாரி உன் கூட என்னால் ஜொயின்ட் பண்ண முடியாது."
"என் பிரண்ட்ஸை உனக்கு இன்ரடியூஸ் பண்ணி வைக்கலாம் என்று நினைத்தேன். இட்ஸ் ஓகே... ஃபாய்..." என்றுவிட்டு .
வைத்துவிட்டான்.

காலை ஒன்பது மணியாகிவிட்டது. வெளியில் சென்ற தந்தையைக் காணவில்லை. சூரியபிரகாஷ் என்றாலே நேரத்தில் மிகவும் கவனமானவர் என்பது ஊரறிந்த தகவல். ஒன்பது மணிக்கு செல்ல வேண்டிய இடத்தில் எட்டு ஐம்பதுக்கே நிற்பார். ஆனால், இன்று ஒன்பது மணியாகிவிட்டது. ஆபிஸ் செல்லும் டைம் வந்துவிட்டதே. அவர் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என்று உள்ளூரக் கவலை கொண்டாள் ஆதிரா.

அவள் கடந்தகால வாழ்வின் நினைவுச்சங்கிலி பக்கத்தில் கேட்ட குரலால் திடீரென அறுபட்டது.
அருகில் நின்றிருந்த அந்தப் பெண்,
"அக்கா, ரொம்பப் பசிக்குது. சாப்பாடு ஏதும் இருந்தால் தாறிங்களா?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.
அவளிடம் உணவில்லாததால் தன்னிடமிருந்த பணத்தில் எடுத்து உணவை வாங்கி சாப்பிடுமாறு கூறி கொடுத்தாள்.

சுற்றுமுற்றும் பார்த்தாள். இருட்டிவிட்டிருந்தது. அந்தப் பெண்ணும் கடகடவென அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். அங்கே வேறு யாருமே இல்லை. இப்போது ஒரு ஆட்டோவைக் கூட அங்கே காணவில்லை. இப்போது என்ன செய்வது என்று திகைத்துப் போனாள்.

எப்போதும் அவள் துணிச்சல்காரிதான். எந்த நேரத்திலும் எந்தக் காரியத்திலும் தனித்து நின்று செயற்படக் கூடியவள். ஆனால் இப்போது அவள் மனம் உடைந்து போயுள்ளாள். அதனால் தைரியத்தை இழந்து நிற்கின்றாள்.

சற்றுத் தள்ளித் தெரிந்த கழிவறைக்குச் சென்றவள் அங்கிருந்த குழாயில் முகத்தைக் கழுவி விட்டு அங்கே பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்.

பயணம் செய்ததால் கலைந்திருந்த கேசமும் நலுங்கியிருந்த உடையும் அவள் அழகைக் குறைத்துக் காட்டவில்லை. எப்போதும் சிரிக்கும் கண்கள். ஆனால் அந்தக் கண்களில் இப்போது கலக்கம் குடிகொண்டிருந்தது.

வெளியே வந்தவளுக்கு மிகவும் பசித்தது.அங்கே திறந்திருந்த பல கடைகள் பூட்டப்பட்டுவிட்டன. ஒரேயொரு கடை மட்டும் பாதி பூட்டியும் பூட்டாமலும் இருந்தது. விறுவிறுவென அக்கடையை நோக்கி ஓடினாள்.
அங்கே கடையைப் பூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த ஒரு பெரியவரைக் கண்டதும்,
"எக்ஸ்கியூஸ்மி சேர், எனக்கு ஒரு பிஸ்கட் பக்கற்றும், கோக் ஒன்றும் தர முடியுமா?" என்று கேட்டாள்.
அவர் எதுவும் கூறாது அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தார்.
அதற்கான பணத்தை கொடுத்தவள்,
அவரிடம் தான் போக வேண்டிய இடத்திற்கு எப்படிப் போவதென விவரம் கேட்டாள். அவர் சிங்களவர் அவருக்குத் தமிழ் பேசத் தெரியவில்லை. அவள் கேட்டதும் அவருக்குப் புரியவில்லை. ஆங்கிலமும் அவருக்குத் தெரியவில்லை. முதலில் பிஸ்கட், கோக் என்ற சொற்கள் புரிந்ததால் அதனை எடுத்துக் கொடுத்திருக்கார். இவளுக்கு சிங்களமும் தெரியாது. அதனால் அவரிடம் விவரம் கேட்க முடியாமல் தடுமாறினாள். இறுதியில் எதுவும் செய்ய முடியாது தான் முதல் இருந்த இடத்திலேயே திரும்ப வந்து அமர்ந்தாள். பிஸ்கட்டையும் கோக்கையும் தன் பசியாற உபயோகித்தவள் அடுத்து என்ன செய்வதென யோசிக்கத் தொடங்கினாள். நிமிடங்கள் கரைந்தன. ஆனால் அதற்கான விடைதான் அவளுக்குக் கிடைக்கவில்லை.

எப்போது தூங்கிப் போனாள் என அவளுக்கே தெரியவில்லை. யோசித்து யோசித்து களைத்துப் போன மூளை தூக்கத்துக்கு கெஞ்சியது போலும் தன்னை மறந்து தான் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தலை சாய்த்து தூங்கி விட்டாள்.

ஆழ்ந்த நித்திரை இல்லாததாலோ என்னவோ அருகில் மனதுக்கு ஒவ்வாத வாசனை வீசவும் மனம் எச்சரிக்கை செய்தது. அந்த வாசனை அவளுக்கு பிடிக்காமல் போகவும் அருவருப்புடன் மூக்கை சுளித்தாள். அது அவள் நாசிக்கு மிக அருகில் வரவும் கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். அவள் முகத்துக்கு மிக நெருக்கமாக ஒருத்தனின் முகம். அதிலும் அவன் நன்கு குடித்துவிட்டு வந்திருப்பதால் குடலைப் புரட்டி வாந்தி வரும் அளவுக்கு அவனிடமிருந்து நாற்றம் வீசியது.

திடுக்கிட்டு அவனைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். அவள் தள்ளிய வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தவனை இன்னுமொருவன் தூக்கி விட்டான்.
இருவரும் இவளையே பார்த்துக் கொண்டு, இல்லையில்லை இழித்துக் கொண்டு நின்றார்கள்.

"கோபி பட்சி நல்ல அழகா இருக்குல்ல"
"டேய் குணா நான்தான் காட்டினேன். எனக்குத்தான் ஃபர்ஸ்ட்டு"
"டேய் பட்சி வெளியூர் போல இருக்கு."
"எந்த ஊராய் இருந்தா நமக்கென்ன. குணா நமக்குத் தேவை ------"
அவர்களின் குளறல் பேச்சிலேயே அவளுக்கு பயம் உண்டானது. உதவிக்கு யாராவது வருவார்களா என்று பார்த்தாள். தூரத்தில் தெரிந்த அந்த ஹோட்டலைக் கூடப் பூட்டிவிட்டார்கள். ஆள் நடமாட்டத்திற்கான அறிகுறியே எங்கும் இல்லை. மிரட்சியுடன் அங்கே நின்றவர்களைப் பார்த்தாள்.

அவள் சுற்றும்முற்றும் தேடியதையும் பயந்து நடுங்குவதையும் கண்டவர்கள் விகாரமாகச் சிரித்தபடி நக்கலாக,
"என்னா கண்ணு சுத்தி யாறுமே இல்லையா? இந்த நேறத்துக்கு இங்க யாரும் வரமாட்டாங்க.. பயப்படாத நான், அப்புறம் இதோ நிற்கிறானே குணா ரெண்டு பேருமே ஒனக்கு இருக்கம்."

"ஹலோ சார், யார் நீங்க ..."

"இங்க பாரு கோபு.. நம்மகிட்ட போன்லயா பேசுது இந்தப் பொண்ணு... ஹலோவாம்... ஹிஹி.. நாங்க உனக்கு சார் இல்ல கண்ணு... மாமாவ்..." சொல்லியபடி அவளுக்கு மிக அருகில் வந்த ஒருவன் அவள் தோளில் கை வைத்தான்.

அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் அவர்களின் எண்ணத்தை அவளுக்கு எடுத்துரைத்தன. அவள் மிகவும் தைரியசாலிதான். ஆனாலும் புது இடம் அவளை சற்றே பயமுறுத்தியது.
இந்த இடத்தில் இப்போது யாருமே இல்லை. தொடர்ந்து இங்கேயே நிற்பது சரியில்லை என்ற உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையில் அவன் கையைத் தட்டி விட்டவள் அங்கிருந்து கால்போன போக்கில் ஓடத் தொடங்கினாள்.

முன்னே தெரிந்த பனிமூட்டத்தால் மூடியிருந்த தார் சாலையில் எந்த இலக்குமின்றி ஓடத் தொடங்கினாள்.
அவளைத் துரத்திக்கொண்டே அந்தத் தடியர்களும் பின்னால் வந்தார்கள்.

இவள் ஓடிய வீதியோ சிற்றூர் ஒன்றுக்குச் செல்லும் பாதை. எனவே வீதியிலும் ஆள்நடமாட்டமே இல்லை.
 
Last edited:
Top