எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நினைவே நீயே - கதைத் திரி

Status
Not open for further replies.

Fa.Shafana

Moderator
நினைவு 01

நிலவு தன் ஒளியைத் தந்து இரவை அழகாக்க, நட்சத்திரங்கள் கண் சிமிட்டி தம் இருப்பை உறுதி செய்ய மனதில் எந்த ரசிக்கும் எண்ணமும் இல்லாமல் வானத்தை பார்வையால் பருகிய வண்ணம் இருந்தாள் அவள்.

"அம்மு.. அம்மு.. அம்மு..!" என சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க அவள் தாய் கலா இவளை அழைத்துக் கொண்டிருந்தார்.

"ஆ அம்மா இதோ வர்றேன் என்றவாறே மாடிப்படி இறங்கிச் சென்றாள்.

"அம்மு எல்லாம் ரெடி பண்ணிட்டியா? அவங்க ஏர்லி மார்னிங் வந்துடுவாங்க மா" என்றவருக்கு,

"ஆமாம்மா எல்லாம் ரெடி பண்ணிட்டேன். மூனு ரூமையும் சாந்தா அக்கா கிளீன் பண்ணிட்டாங்க. நான் தேவையான எல்லாம் எடுத்து வெச்சிட்டேன் ம்சமா" என்று பதிலளித்தாள்.

"ரெண்டு வருஷத்துக்குப் பிறகு வர்றாங்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?"
என்று கலா சொல்ல,

"அதான் உங்க முகமே சொல்லுதே என்று சொன்னாள் அம்மு"

"இருக்காதா பின்ன வர்றது அவ அண்ணன் குடும்பமாச்சே" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் வந்தார் பார்த்தீபன். அவரைப் பார்த்து சிரித்தவாறே,

"அம்மு எல்லா வேலையும் முடிஞ்சிருச்சி மா நீ மேலே போய் தூங்குடா" என்று கலா சொல்ல எங்கே தனிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவள் தன் அறை நோக்கிச் சென்றாள்.

அறைக் கதவை மூடி பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று இரவு வானை பார்த்து தன் மன அழுத்தம் தீரும் வரை அழுது கொண்டிருந்தாள்.
இன்னும் ஏன் இப்பிடி அழுது கொண்டு இருக்கிறேன் மறக்க முடியாது என்று தெரிந்த பிறகு ஏன் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறேன் என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு அழுது அழுது கரைந்தவள் அப்படியே பால்கனியிலேயே தூங்கிவிட்டாள்.

அவள் அறையின் பால்கனி அவளின் கை வண்ணத்தில் பூக்கள் பூக்கும் சிறு சோலையாகத் தான் இருந்தது.
மனமாற்றத்துக்காக அவள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்தாள்.
அதில் இப்போது அவள் தூங்கும் பால்கனியும் ஒன்று.

அவள் வீட்டிலும் வெளி முற்றத்திலும் நிறைய மாற்றங்கள் வந்தன ஆனால் அவள் எதிர்பார்த்த மனமாற்றம் தான் வராமல் போக்குக் காட்டியது. நடு இரவில் ஏதோ ஒரு சிறு ஒலியில் கண் விழித்துப் பார்க்க தான் முழங்காலில் முகம் புதைத்து அப்படியே தூங்கி இருப்பது தெரிய மெதுவா எழுந்து சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

நாளையே விடியல் என்னவெல்லாம் தனக்கு வைத்திருக்கும் என்ற நினைப்பில் தூங்கிப் போனாள்.

காலை ஆறு மணிக்கு விழிப்பு வர எழுந்து சென்று குளித்து உடை மாற்றி கீழே சென்றாள்.

"குட் மார்னிங் ம்மா
குட் மார்னிங் சாந்தாக்கா!"

"குட் மார்னிங் அம்மு!!" என்று புன்னகைத்த சாந்தாவின் மனதிலும் படபடப்பு இருக்கத் தான் செய்தது.
புத்தம் புது மலராய் வந்து நின்றவளின் முகம் தாங்கி நிற்கும் புன்னகை வாடிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற பெரும் தவிப்பு அவளுக்கு ஆனால் அந்த தவிப்பிற்கு அவசியமே இல்லை என்பது போல் இருந்தது அம்முவின் குரலில் இருந்த குதூகலம்.

"அப்பா எங்கே மா ஸ்டேஷன் போய்ட்டாரா?"

"ஆமா அம்மு நடேசன மட்டும் அனுப்ப அவருக்கு மனசு கேக்கல போல அதான் அவரும் கூடப் போய்ட்டார்" என கலா புன்னகையுடன் கூற
இவளும் புன்னகைத்து,

"நேற்றே எனக்கு தெரியும் மா அப்பா போவார்னு" என்றவள்,
"டிஃபன் ரெடி பண்ணிட்டீங்களா?" என்று கேட்டவளுக்கு ஏதோ ஞாபகம் வர, "அம்மா அண்ணா எங்க?" என்றாள்.

"அவன் கீழ வரல்லையே" என்று கலா சொல்ல,

"அய்யோ அம்மா இன்னைக்கு அவனுக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. காலைல எழுப்பி விடச் சொன்னான்" என்று கூறிக் கொண்டே அர்ஜுன் அறைக்கு ஓடினாள்.

அவள் இப்போது இருப்பதைப் பார்த்தால் முன்தினம் இரவு அழுது கரைந்தது இவளா என்றே தோன்றும்..

கதவை இருமுறை மெதுவாகத் தட்ட எந்த வித சத்தமும் இல்லை அவன் இன்னும் எழும்பவில்லை எனத் தெரிய
கதவைத் திறந்து உள்ளே சென்று,

அண்ணா.. அண்ணா.. குட் மார்னிங் அண்ணா"
என்று அவனைத் தட்டி எழுப்பினாள்.

"குட் மார்னிங் அம்மு" என்று பதில் சொன்னவனைப் பார்த்து,

"ஹேவ் எ நைஸ் டே" என்றாள்.

"யெஸ் அம்மு, இட் வுட் பீ எ நைஸ் டே பிகாஸ்.. என் செல்லம் அம்முவோட முகத்தில தானே முழிச்சேன்" என்று அவளின் நெற்றியில் தன் நெற்றி கொண்டு முட்டிச் சிரித்தான்.

அவளும் சிரித்துக் கொண்டு,
"நல்லா அசந்து தூங்கிட்ட போல? டைமாச்சு ரெடியாகிட்டு வா" என்றாள்.

"ம்ம்.. நைட் ரொம்ப லேட்டாத் தான் தூங்கினேன் அதான் அம்மு ய. சரி அத்த மாமா எல்லாம் வந்துட்டாங்களா?"

"இன்னும் இல்ல. அப்பா கூட்டிட்டு வரப் போய் இருக்கார்"

"ஓஹ் ஓகே நான் குளிச்சிட்டு வர்றேன்டா"
என்று சொல்லி குளியலறைக்குள் புகுந்து கொண்டான் அர்ஜுன்.

அவனின் படுக்கையை ஒழுங்கு படுத்திவிட்டு கீழே வர வண்டியும் வந்து நின்றது.

"அம்மா இங்க வாம்மா. அத்த மாமா வந்துட்டாங்க" என்று கூறிக் கொண்டே வெளியே போக,

"அம்மு எப்பிடி மா இருக்க? பார்த்து எவ்வளவு நாளாச்சு?"
என்று அவளைக் கட்டிக் கொண்டார் அவளின் அத்தை தாரணி.

"ம்ம்.. நான் நல்லா இருக்கேன் அத்த, நீங்க எப்பிடி இருக்கீங்க? வாங்க மாமா எப்பிடி இருக்கீங்க?"

"ஏன் நாங்க உன் கண்ணுக்கு தெரியல்லையோ?" என்று சண்டைக்கு வந்தான் கண்ணன்.

"அய்யோ சும்மா கத்தாத அர டிக்கெட்டுக்கு எல்லாம் பேர் லிஸ்ட் போட முடியாது, போடா" என்று அவனைத் தள்ளிவிட்டாள்.

"அம்மு உன்ன விட ஒரு வருஷம் பெரியவன் நான் அத மறந்துடாத" என்று வம்பிழுத்தான் கண்ணன்.

"சரி தான் போடா" என அவனின் தலையைத் தட்டிவிட்டாள் இவள்.

"வந்த உடனே ரெண்டு பேரும் ஆரம்பிச்சுட்டாங்களா?"
என்று கேட்டு கொண்டே வந்தனர் கலாவும் அர்ஜுனும்.

"ஆமா அண்ணா பாரு இவன. என்கிட்ட வம்பு பண்ணான் அப்புறம் நான் கடிச்சி வெச்சுடுவேன்" என்று சொல்ல எல்லோரும் அவள் கூறியதில் சிரித்து வைத்தனர்.

"ஹாய் அம்மு.." என்று சொல்லி அவளைக் கட்டிக் கொண்டாள் அவ்வளவு நேரமும் அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது விட்டு அப்போது தான் வண்டியை விட்டு இறங்கிய கவிதா.

"ஹாய் கவி.. எப்பிடி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன். நீ அவன கடிக்க முன்னாடி எனக்கும் சொல்லிடு நான் உனக்கு கம்பெனி தர்றேன்" என்றாள் கவி.
அவர்கள் இருவரையும் விரட்டிக் கொண்டு ஓடினான் கண்ணன்.

"வாங்க ண்ணா வாங்க ண்ணி" என்று கலா வரவேற்க இவர்களின் குறும்புகளை ரசித்துக் கொண்டே எல்லோரும் வீட்டிற்குள் சென்றனர்.

"அம்மு.." என்று அழைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றார் கலா.

"ஆ.. ம்மா வர்றேன்"

"இந்த காப்பிய எல்லாருக்கும் குடு நான் வர்றேன்"

"சரிம்மா"
என்று எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்குச் சென்றாள்.
எல்லோருக்கும் காப்பி கொடுத்துவிட்டு அர்ஜுன் அங்கு இல்லாம இருக்க அவனின் அறைக்குச் சென்றாள்.

"அண்ணா காப்பி"

"தா அம்மு"

"டைம் பாருன்னா நீ இன்னும் கிளம்பல்லயா?"

"யெஸ் அம்மு நான் ரெடி"

"ஓகே.. நீ வா நான் போறேன்" என்று சொல்லி கீழே சென்றாள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த அர்ஜுன்,
"அத்த மாமா எனக்கு இன்னைக்கு இம்பார்டண்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு. நான் ஏர்லியா ஆஃபிஸ் போகணும், ஈவினிங் ஏர்லியா வர ட்ரை பண்றேன்"
என்றான்.

"அதுக்கு என்ன ப்பா நீ போய்ட்டு வா. நாங்க இருப்போம்" என்றார் கருணாகரன்.

"அம்மா அப்பா வர்றேன்" என்றவன் சமையலறைப் பக்கம் பார்வையைத் திருப்பி,
"அம்மு.." என்றான்.

"இதோ வர்றேன்.." என்று கூவிக் கொண்டே அவனுக்கான உணவுடன் வந்தாள்.

"ஆஃபீஸ் போய் இத சாப்பிட்டு தான் நீ அடு்த்த வேல பாக்கணும் சொல்லிட்டேன்" என்றாள் சிறு கண்டிப்புடன்.

"ஓகே டா" என்று அதை வாங்கிக் கொண்டு,
"பை அம்மு என்ஜாய் யுவர் டே வித் அவர் கசின்ஸ். ஈவினிங் ஏர்லியா வர்றேன்" என்றான்.

"பை அண்ணா, ஆல் த பெஸ்ட் ஃபார் த மீட்டிங்" என்று விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கலாவின் அண்ணன் கருணாகரன்,
"நம்ம புள்ளைங்க எல்லாம் குடும்பம், தொழில்னு அழகா பேலன்ஸ் பண்றாங்க மச்சான். நாம தான் தொழில்னு வந்தா மற்ற எல்லா விஷயங்களையும் மறந்துவிடுவோம்" என்றார்.

தொடர்ந்து கலாவைப் பார்த்து, "அர்ஜுன் போல இப்படி ரிலாக்ஸா நான் புறப்பட்டதும் இல்ல,
அம்முகிட்ட அவன் பேசின மாதிரி நான் ஒருநாள் கூட மார்னிங் டைம் கலாகிட்ட பேசினதும் இல்ல.
சுடு தண்ணில கால வெச்சிட்ட மாதிரி தான் பரபரப்பா இருப்பேன்" என்றார்.

"அப்படி இருந்ததால நீங்க என் மேலே பாசம் வைக்காம இல்லயே அண்ணா?
உங்க கை மேலே சின்ன வயசுல வந்த குடும்பப் பொறுப்பு தானே உங்களை அப்படி இருக்க வெச்சது? என்றார் கலா.

"ம்ம்.. என்றாலும் இவன பார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு மா.
குடும்பம் மேல அவன் வெச்ச பாசத்தப் பாத்து
பெருமையா இருக்கு"

"போய்ட்டு வரேன் என்று மட்டும் சொல்லாம, முக்கியமான மீட்டிங் இருக்கு நான் போகணும்னு அவசரமா போறதுக்கான காரணத்தக் கூட எங்ககிட்ட சொல்லிட்டுத் தான் போறான் அண்ணி" என்றார் தாரணி சிறு புன்னகையுடன்.

"அந்தப் பக்குவம் இந்த தலைமுறை கிட்டயே இருக்குது. எங்க கதிர் அண்ணா கூட எவ்வளவு நிதானமா வேலைகளை மேனேஜ் பண்றார்" என்று கவி சொன்ன அந்தக் கணம்
அம்முவின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.

இன்றைய விடியல் அவளுக்கு அவனின் பெயரை மட்டுமே கொடுக்க
அவன் வராமல் போனது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை அவளுக்குத் தந்தது.

முதலில் அவன் வரவில்லை என்று தெரிந்ததும் கவலைப்பட்டவள்,
சிறு ஆறுதலும் அடைந்தாள்.
அவன் கூறிய ஒரு வார்த்தை தான் அந்த ஆறுதலுக்கு காரணம்.

ஆனாலும் காதல் கொண்ட மனமோ அவன் முகத்தைப் பார்க்க ஆவல் கொண்டது. வரவே மாட்டானோ என்ற தவிப்பும் இருக்கத் தான் செய்தது.
இப்படிக் கலவையான உணர்வில் அவள் சிக்கித் தவிக்க சில வினாடிகள் சுற்றி இருந்தவர்களை மறந்தாள்.

"அம்மு.." என அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க கவி கைகளைப் கட்டிக் கொண்டு இவளை முறைத்தபடி நின்றிருந்தாள்.

"என்ன கவி சொல்லு?"

"எத்தன முறை சொல்றது ரூம்க்கு கூட்டிட்டு போடி"

"ஓஹ்.. சாரி வா வா" என்று கவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

அவர்களின் பின்னாலே கண்ணனும் அவனின் பயணப்பையைத் தூக்கிக் கொண்டு வர, அப்போது தான் அவர்கள் வீட்டில் ஓட்டுநராக இருக்கும் நடேசன் மற்றவர்களின் பைகளை எடுத்து கொண்டு வீட்டுக்குள் வந்தான்.

"அப்படியே என்னோட பேக்கையும் எடுத்துட்டு வந்து தா ண்ணா பிளீஸ்" என்று கவி கெஞ்ச,

"சரி நான் இத வெச்சிட்டு வந்து உன்னோடத எடுத்துட்டு வந்து தர்றேன்" என்றவன்,
"அம்மு என் ரூம் எது? என்றான்.

"இதோ இருக்கு இது உன் ரூம்,
என் ரூம் பக்கத்துல கவி ரூம், அத்தைக்கும் மாமாவுக்கும் கீழ ரூம் ரெடியா இருக்கு" என்றவள் திரும்பி,
"கவி நீ ஃப்றஷாகிட்டு வா
நான் கண்ணன் கூட கீழ போய் பேக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்"
என்று சொல்லி கீழ போனாள்.

கண்ணன் இரண்டு பைகளைத் தூக்க, இவளும் தூக்கப் போக
"அம்மு நீ இரு, நான் தூக்கிட்டு போய் மேல வைக்கிறேன்" என்று சாந்தா வந்தாள்.
"சரிக்கா தாங்க்ஸ்" என்று சொன்னவள் முன்னறைக்குள் சென்றாள்.

"டைமாச்சு எல்லாரும் சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்" என்று கலா அழைக்க
எல்லாரும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தனர்.

புதைத்து வைத்த நேசத்தின் சாயல் அவள் கண்களில் கூட இல்லை, தனிமையில் மட்டுமே கண்ணீர்த்தடம் பதித்துச் செல்லும் அவன் நினைவுகளை என்னவென்று மறப்பாள் அவள்!!
 

Fa.Shafana

Moderator
நினைவு 02


அந்தி சாயும் வேளையில் எல்லோரும் வெளி முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டு குடும்பங்களும் சேர்ந்து இருக்கின்றன.
மற்றவர்களுக்குப் போல் அல்லாது அம்முவிற்கு அவை யுகங்களாகிப் போன வருடங்கள்....

பெரியவர்கள் ஒருபுறம் இருக்க
கண்ணன், கவி, அம்மு, சாந்தா எல்லோரும் சேர்ந்து ஒருபுறம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

சாந்தா, அம்மு வீட்டில் பல வருடங்களாக இருக்கிறாள்.
அவளுக்கு இருந்தது கணவன் மட்டுமே அவனும் ஒரு விபத்தில் இறந்து போக ஒரு காப்பகத்தி‌ற்கு வந்தாள். அங்கு இருந்த ஒருவரிடம், பார்த்தீபன் ஏற்கனவே வேலைக்கு ஆள் தேவை என்று சொல்லியிருக்க உடனே பார்த்தீபனுக்கு அழைத்துச் சொல்ல அன்று முதல் அவளின் இருப்பிடம் இந்த வீடு என்று ஆகிப் போனது. பல வருடங்கள் இங்கேயே இருப்பதால் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறிப் போனாள்.

அம்மு மற்றும் அர்ஜுன் மேல் ஒரு அக்காவைப் போல பாசமும் வைத்திருந்தாள்.

"அம்மு எங்க அர்ஜுன் அத்தான் காலைல போனவர் இன்னும் காணோம் ஆபீஸ்லயே தூங்கிடுவாரோ?" என்றான் கண்ணன்.

"இன்னைக்கு மீட்டிங் ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டு தானே போனான்.
அதனால தான் லஞ்சுக்கும் வரல்ல இப்போ வந்துடுவான் பாரேன்" என்று அம்மு சொல்லும் போது அர்ஜுனின் வண்டி உள்ளே வந்தது..

புன்னகை முகமாக இறங்கியவன் அவர்களிடம் வந்து,
"அம்மு இந்த ஸ்வீட்ஸ எல்லாருக்கும் குடு" என்று அவள் கையில் கொடுத்தான்.

அவள் நிமிர்ந்து கேள்வியாய் பார்க்கவும்,
"யெஸ் அம்மு மீட்டிங் சக்ஸஸ், ப்ராஜக்ட் எனக்குத் தான்" என்றான்.

"ஹே!!" என்று கூக்குரலுடன் எழுந்து, "கங்க்ராட்ஸ் அண்ணா" என்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

"ரொம்ப சந்தோஷம் பா" என்று கலா அவனின் கைகளைப் பற்றிச் சொல்ல,
அதே சந்தோஷத்துடன் பார்த்தீபன் அவனைக் கட்டிக் கொண்டு, "ஜெயிச்சுட்ட டா" என்றார்.

அவன் மிகப் பெரிய அளவிலான அரசாங்க செயற்திட்டம் ஒன்றைக் கைப்பற்றி இருந்ததை அறிந்து கொண்ட கருணாகரன் குடும்பத்தினரும் அவனிடம் வந்து தமது வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்தார்கள்.

"சாரி மாமா இந்த மீட்டிங்னால தான் காலைல நீங்க வந்த உடனே போய்ட்டேன்" என்றான்.

"அதனால என்னப்பா நீ ஒன்னும் கவலைப்படாம இரு நாங்க என்னவோ வெளி ஆளுங்க போல எத்தன தடவ தான் சாரி கேட்ப?
நாங்க உன்ன தப்பா எடுத்துக்குவோமா?
உன்ன நினைச்சா பெருமையாகவும் சந்தோஷமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் தான் இருக்கு" என்றார் அவர்.

"சரிப்பா நீ போய் ஃப்றஷ் ஆகிட்டு வா காப்பி சாப்பிடலாம்" என்ற தாயின் சொல்லுக்கு தலையாட்டி உள்ளே போனவன்
திரும்பி....
"ஆமா மாமா அவன் எப்போ வர்றதா சொன்னான்?" என்றான்.

"அவனுக்கு கொஞ்சம் வேலைகள் இருக்குறதால எல்லாம் முடிச்சுட்டு இன்னும் ஃபைவ் டேஸ்ல வருவான்பா"

"ஓஹ்..! வரட்டும் அவனுக்கு இருக்கு, என்ன செய்றேன்னு பாருங்க.."

"நீ என்ன வேணும்னாலும் செய்யலாம் நான் ஒண்ணும் சொல்லமாட்டேன், சொல்லவும் முடியாது"
என்று கூறிச் சிரித்தார் பாஸ்கர். அவரோடு சேர்ந்து மற்றவர்களும் சிரிக்க,
ஒருத்தி மட்டும் திகைத்து நின்றாள்.

அது அவன் வருவான் என்று தெரிந்ததாலா? இல்லை அவன் வராமல் இருந்தது தன்னால் தான் என்ற குற்ற உணர்வு மனதை பிசைந்ததாலா?

சாந்தாவின் அம்மு என்ற அழைப்பிற்கு திரும்பியவளின் கண்ணில் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அதைக் கண்டு கொண்டவள் அவளின் தோள் தொட்டு, கண்களால் மற்றவர்களைக் காட்டி, வேண்டாம் என்பது போல் தலையாட்டினாள்.

சுதாகரித்துக் கொண்ட அம்மு சாந்தாவுடன் சமையலறைக்குச் சென்று இனிப்புப் பண்டங்களை ஒரு தட்டில் வைத்து அர்ஜுனிற்க்கு காப்பியையும் வைத்து எடுத்து வந்தாள்.

அவளின் மனதில் புதைத்து வைத்த காதல் சாந்தாவிற்கு தெரியும் அதனால் தான் அவள் அம்முவின் கண்ணீரைக் கண்டு கொண்டது.

தட்டுடன் வெளியே போனவள் எல்லோருக்கும் கொடுத்து தானும் எடுத்துக் கொண்டாள்.
காப்பியை எடுத்த அர்ஜுன் அவளின் அருகில் அமர்ந்து கதை பேச, அவளுக்கு சற்று முன் இருந்த மன அழுத்தம் மாறி கொஞ்சம் சகஜமானாலும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டு தான் இருந்தது.

"அத்த, மாமா இன்னும் வனு வீக்ல நான் இருக்கிற வேல எல்லாம் முடிக்க ட்ரை பண்றேன். அதுக்கு அப்புறம் டூ டேஸ் ஃப்ரீயா இருப்பேன், நாம சேர்ந்து வெளில போகலாம் அது வர எனக்கு உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றது கஷ்டம்" என்றான் அர்ஜுன்.

"அதுக்கு என்னப்பா பரவாயில்ல விடு.
உனக்கு இருக்குற வேலைக்கு நீ இவ்வளவு ரிலாக்ஸா இருக்குறதே பெரிசு. நாங்க இங்க தானே இருப்போம், நீ ஒன்னும் கவலைப்படாம உன் வேலைகளை முடி" என்றவர்,
"பார்த்தீ.. நாளைக்கு ஈவினிங் நாம நம்ம தினேஷ் வீட்டுக்கு போகலாம்" என்றார்.

கருணாகரன் அப்படிக் கூறவும் கண்ணன் அம்முவைப் பார்த்து குறும்பு சிரிப்பு சிரிக்க அவள் முறைத்து வைத்தாள்.
அதைக் கவனித்த கவிதா,
"ஏய் அம்மு இங்க என்ன நடக்குது அவன் சிரிக்க நீ முறைக்குற?"
என்று காதில் கிசுகிசுக்க
அதைக் கேட்டு அம்மு மீண்டும் கண்ணனைத் தான் முறைத்தாள்.
அவன் சிரித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட்டான்.

"அம்மு...."

"அது ஒன்னும் இல்ல கவி, உன் அர டிக்கட் அண்ணனுக்கு என் கையால அடிபட ஆசையா இருக்குப் போல அதான் அதுக்கு வழி செய்றான்"

"இல்ல.. இல்ல.. நீ பொய் சொல்ற. உங்களுக்குள்ள என்னமோ இருக்கு"

"ஆமா.. ஆமா ரெண்டு கிலோ மிளகாய்த்தூள் இருக்கு அத வெச்சி உனக்கு அல்வா செஞ்சி தர்றேன்"

"அய்யோ அம்மா மிளகாய் அல்வாவா?
ஆள விடு நான் உன்கிட்ட ஒன்னும் கேட்கல்ல" என்றாள்.

அவளை அணைத்துக் கொண்ட அம்மு
"இது நல்ல பிள்ளைக்கு அழகு, வா நாம ரூமுக்கு போகலாம் என்று அழைத்துப் போனாள்.

பார்த்தீபன் மற்றும் கருணாகரன் ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து ஒன்றாகவே படித்தவர்கள். இவர்களுக்கு கல்லூரியில் அறிமுகமானவரே தினேஷ்.

கல்லூரியில் ஒன்றாகவே படித்தவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். தொழில் ஆரம்பிக்க சொந்த ஊரைவிட்டு தினேஷ் இருந்த பெருநகருக்கு வந்த பார்த்தீபன் ஆரம்பித்த தொழில் ஏறுமுகமாகவே இருக்க கருணாகரனின் தங்கை கலாவை விரும்புவதை க் கூறி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் முடிந்த அடுத்த மாதமே கருணாகரனின் திருமணம் தாரணியுடன் நடைபெற்றது.

அடுத்த வருடத்தில் இரண்டு வாரங்கள் வித்தியாசத்தில் பார்த்தீபன் கலா தம்பதியருக்கு அர்ஜுனும், கருணாகரன் தாரணி தம்பதியருக்கு கதிரும் பிறக்க குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பானது.

கருணாகரன் ஊரிலேயே தொழில் செய்து கொண்டிருந்தார்.

கருணாகரனின் தங்கையை பார்த்தீபன் திருமணம் செய்து கொண்டு இவர்கள் குடும்பம் ஒன்றாகிவிட்டாலும் தினேஷை நட்புக் கரம் கொண்டு சேர்த்துப் பிடித்துக் கொண்டனர்.

தினேஷின் மகன் விக்னேஷ் மற்றும் கண்ணன் ஒத்த வயதில் இருக்க அவர்களுக்கு ஒரு வருடம் இளையவர்கள் அம்முவும் கவிதாவும்.

நட்பினால் இணைந்த மூன்று குடும்பத்தினரும் மகிழ்வுடன் நிறைவுடனுமே இருக்க
தினேஷின் மனைவி சில வருடங்களுக்கு முன்னர் திடீரென இறந்துவிட ஓய்ந்து போனவருக்கு பார்த்தீபன் மற்றும் கருணாகரனின் நட்பே வலு சேர்ப்பதாய்..

வருடங்கள் இப்படியே ஓடிவிட அர்ஜுன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பார்த்தீபனுக்கு தொழிலில் உதவி செய்து கொண்டே தன் மேற்படிப்பைத் தொடர்ந்தான்.
மேற்படிப்பை முடித்தவனுக்கு தொழிலில் நெளிவு சுளிவுகளை கையாளும் பக்குவமும் வந்திருக்க மகனின் கையில் தொழிலை மொத்தமாக ஒப்படைத்தார் பார்த்தீபன்.

அதே நேரம் கதிர் மேற்படிப்பைத் தொடர வெளியூர் சென்றிருந்தான்.
படிப்பை முடித்து விட்டு வந்தவன் தனியாக தொழில் செய்யத் தடுமாற அவனுக்குத் துணையாக கூடவே இருந்து கொண்டார் கருணாகரன். சில மாதங்களிலேயே கதிரும் தொழிலை சிறந்த முறையில் கையாள ஆரம்பிக்க கண்ணனையும் தொழிலில் இழுத்துக் கொண்டு தந்தைக்கு ஓய்வு கொடுத்தான். அவனை வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்பைத் தொடர உத்தரவிட்ட கதிர் வெளியே விடுதியில் தங்கிப் படிப்பதை சற்றும் விரும்பவில்லை. அதனாலேயே அருகில் இருந்த கல்லூரியில் மேற்படிப்பை முடித்தான் கண்ணன்.

"உன் நல்லதுக்குத் தான் சொல்றேன் கண்ணா. வீட்டில இருந்தே காலேஜ் போ. டைம் கிடைக்கும் போது கம்பெனிக்கு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு. படிச்சு முடியும் போது தொழிலையும் கத்துக்கிட்டிருப்ப" என்றவனை மறுக்கத் தோன்றவில்லை கண்ணனுக்கு.

அம்முவும் கவிதாவும் குடும்பத்தில் செல்லப் பிள்ளைகள். அவர்கள் வைப்பது தான் சட்டம் விடுமுறைகளைக் கழிப்பதாகட்டும் பண்டிகைகளைக் கொண்டாடுவதாகட்டும் எல்லாவற்றுக்கும் இந்த இருவரின் முடிவே முன்னிற்கும்.

மூத்தவர்களைப் போலவே
இளையவர்களும் ஒற்றுமையாகவே இருக்க தானும் நண்பன் என்ற பந்தம் கடந்து அந்தக் குடும்பத்தில் ஒருவனாக, உரிமையுள்ளவனாக ஒன்றிவிட எண்ணிய தினேஷின் மகன் விக்னேஷ், அம்முவின் மேல் காதல் என்று சொல்லி கண்ணனின் மூலம் சம்மதம் கேட்க அன்றிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி உருவானது.

காதலை சொல்லிவிட்டு வெளிநாட்டுக்குப் பறந்த விக்னேஷ் அங்கே இருக்கப் பிடிக்காமல் ஒரே வருடத்தில் திரும்பியும் வந்துவிட்டான்.
தன் தந்தை தினேஷின் தனிமை வேறு அவனை யோசிக்க வைத்தது. வெளிநாட்டில் இருந்து வந்தவன் அர்ஜுனிடம் போய் வேலை கேட்க புரியாமல் விழித்தான் அர்ஜுன்.

"அப்பாவோட கம்பெனில நான் வர்க் பண்ணப் போறேன்னு சொன்னா அடுத்த நிமிஷம் தொழில மொத்தமா என் கைல கொடுத்துட்டுவார் அர்ஜுன். அம்மாவோட இறப்பிற்குப் பிறகு அவர் ஒடிங்கிப் போகாம இருக்க ஒரே காரணம் அந்தக் கம்பெனி தான். அதான் கொஞ்ச நாள் இங்க வர்க் பண்ணிட்டு.." என்றவனை ஏறிட்டு

"ம்ம்.. உன்னோட பாயின்ட் ஆப் வீவ் சரி தான். ஆனா நீ இங்க வர்க் பண்ணிட்டே அவருக்கும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணனும்" என்றான் அர்ஜுன்.

"அதான் என்னோட இடத்துல இருந்து நீ பண்றியே அர்ஜுன் அது போதும். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வரும் வர எனக்கு நல்ல கைடன்ஸ் வேணும் அதான் உன்கிட்டேயே வந்துட்டேன்" என்றான் மனதை மறையாது.

தன் தங்கை மீது அவன் ஒரு கண் வைத்தது தெரிந்தாலும் மூத்தவனாக அவனை அரவணைத்துக் கொண்டவன் தொழிலைக் கற்றுக் கொடுத்தான். அவனது மனதில் ஏற்பட்ட சலனத்தை முன்னிறுத்தி அவனுக்கு உதவி செய்வதை தவிர்க்க முடியாதே. தங்கையிடம் காதல் சொன்னவன் தமையனிடம் தொழில் கற்க வந்திருக்க கபடமில்லா அவனைப் புறக்கணிக்கவும் முடியுமோ.
அவன் கொண்டது காதலே இல்லை உரிமைப் போராட்டம் தான் அம்முவின் மீது அப்படி ஒரு எண்ணம் உருவாகக் காரணமே என சரியாக் கண்டு கொண்டிருந்தான் அர்ஜுன்.
அம்முவின் முடிவு விக்னேஷின் மனதை மாற்றிவிடும் என்ற திடமும் இருந்தது அவனிடம்.

தினேஷின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த அம்மு முன்னெல்லாம் அடிக்கடி அவரை பார்க்கச் செல்வாள். ஆனா விக்னேஷ் காதல் என்று சொன்ன நாள் முதல் அங்கே தனியே செல்வதை முற்றிலும் தவிர்த்தாள்.
தன் பெற்றோருடன் அல்லது தமையனுடன் மட்டுமே அங்கே செல்பவள் அதிக நேரம் இருக்காமல் கிளம்பியும் விடுவாள். ஏன் அப்படி என்ற தினேஷின் கேள்விக்கு படிப்பைக் காரணமாகக் கூறினாள்.

பல வருடங்களாக தன் மனதினுள் காதலை பூட்டி வைத்திருந்தவளுக்கு விக்னேஷ் காதலை வெளிப்படுத்திய போதுதான், தானும் மனதைத் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம் எழ..

பல மாதங்கள் தயங்கித் தயங்கி இருந்தவள் தன்னவன் என காதல் கொண்டவனிடம் உரிமையாக மனதை வெளிப்படுத்த அவனோ சீற்றம் கொண்டு வெடித்து, வார்த்தை எனும் கல் கொண்டு சுக்குநூறாக சிதற வைத்திருந்தான் பாவையவள் கண்ணாடி மனதை..

அன்றிலிருந்து இன்று வரை கண்ணீரில் கரைக்க விளைகிறாள் தன் காதல் மனதை..
அதுவோ கடலில் விழுந்த கல்லாக அடி ஆழம் வரை ஊடுருவி அவளை இன்னும் இன்னும் இம்சித்தது.






 

Fa.Shafana

Moderator
நினைவு 03

இரவு சாப்பிட்டுவிட்டு எல்லோரும் தம் அறைகளில் தஞ்சம் புகுந்தனர்.

கவிதா அம்முவின் அறையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

இடையில் திடீரென,
"பிளீஸ் அம்மு சொல்லேன். தினேஷ் அங்கிளோட பெயர் சொன்னதக் கேட்டு கண்ணன் ஏன் உன்னப் பார்த்து சிரிச்சான்? சொல்லு அம்மு" என்று மறுபடியும் கேட்க ஆரம்பித்தாள்.

"அத அவன்கிட்ட போய் கேளு. ஏன் என்கிட்ட கேக்குற?"

"அப்போ நீ ஏன் அவன பார்த்து மொறச்சன்னு சொல்லு" கேள்வியை மாற்றிக் கேட்டாள்.

"கவி நீ அடி வாங்கப் போற"

"சொல்லு அம்மு.."


"அய்யோ கடவுளே!!
இவகிட்ட இருந்து என்ன காப்பாத்து"


"நான் கேள்வி கேட்டா நீ ஏன் அம்மு கடவுள தொல்ல பண்ற? கேள்விக்கு பதில் சொன்னா நான் பேசாம போய்டுவேன்ல?

"எனக்கு நினைக்கவே பிடிக்காத விஷயத்த ஏன்டீ மறுபடியும் மறுபடியும் கேக்குற..?"

"ஓகே அப்போ நான் கண்ணா கிட்டயே கேட்டுகிறேன்"

"போய் கேளு போ.
என்ன ஆள விடு.."

"அவன் சொல்லமாட்டானே...." என்று இழுவையாகக் கூற

"தெரியுதுல்ல.. இன்னும் ஏன் நீ அதையே புடிச்சு தொங்கிட்டு இருக்க?"

"ஆர்வக் கோளாறு தான் வேற என்ன?"

"போடி இவளே!!"

"அப்போ நீ சொல்லமாட்ட தானே? நான் கோவமா என் ரூம்க்கு போறேன்.." சொன்னவள் இம்மியளவும் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

"போம்மா.. போ..
உனக்கு ஒரு கும்புடு
உன் கோளாறுக்கு ஒரு கும்புடு"

இவர்கள் பேசியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தான் கண்ணன்.

"என்ன ரெண்டு பேரும் சேர்ந்து கலவரம் பண்றீங்க போல?"


"டேய் நல்லவனே!!
ஈவினிங் நீ பண்ணின வேல தான். இப்போ இவ என்னை கேள்வி கேக்குறா
நீயே உன் உடன்பிறப்புக்கு பதில் சொல்லு, என்னால முடியல்ல. உன் சேட்டைக்கும், அவ ஆர்வ கோளாறுக்கும் இடையில நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்"

"யாரு..? நான் சேட்ட பண்ணினேனா? நீ சொல்லுவ அம்மு.. பாவமேன்னு ஹெல்ப் பண்ண வந்தா சேட்டன்னா சொல்லுற? உன்ன கவனிச்சுக்கிறேன் இரு.."

"கண்ணா.... நீ ஒண்ணும் ஹெல்ப் பண்ண தேவையேயில்ல
என்ன சும்மா இருக்கவிட்டாலே போதும் புரியுதா?" என்றவள் எழுந்து சென்று ஜன்னல் அருகே நின்று கொண்டாள்.

"ஹ்ம்.. எனக்குப் புரியுது
புரிய வேண்டியவங்க புரிஞ்சிக்கறாங்க இல்லயே..
அதுக்கு என்ன செய்ய?"

"டேய் அண்ணா!!
என்னடா நடக்குது இங்க?"
என்றாள் கவிதா கண்ணனையும் அம்முவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே.

"உனக்குக் காரியம் ஆகணும்னா மட்டும் தான் நான் அண்ணான்னு
ஞாபகமே வரும்ல உனக்கு?"

"இல்ல டா. என்னமோ விளையாட்டுக்கு நீ அம்முவ கேலி பண்றன்னு தான் நான் நினச்சேன். ஆனா அவ கண் கலங்குறத பார்த்தா அப்படி தெரியலையே.."

கவி சொல்லவும் கண்ணன் அம்முவின் தோள் தொட்டு அவனின் பக்கம் திருப்பினான். அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் கண்டு,

"ஏய் அம்மு!! இதுக்கு போய் கண் கலங்கிட்டு இருக்க?"

"அய்யோ.. பிளீஸ் கண்ணா என்ன விடு. உனக்கு இது சின்ன விஷயமா இருக்கலாம் ஆனா எனக்கு அப்படி இல்ல.. நான் இவ்வளவு சொல்லியும் புரிஞ்சிக்கமாட்டியா?
எனக்கு மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?
யாருக்காகவோ என்கிட்ட பேசிட்டுப் போன நீ என்னப்பத்தி கொஞ்சம் கூட யோசிச்சியா? இல்லைல்ல?"
என்று
கண்ணீர் வழிய வழிய அவள் பேசியதைப் பார்த்து கண்ணணும் கவிதாவும் ஸ்தம்பித்துப் போய் நின்றார்கள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என்ன என்று கேட்டு அம்முவை இன்னும் கஷ்டப்பட வைக்க விருப்பமும் இல்லை. ஆனால் ஏதோ ஒரு சிக்கல் இருவருக்கிடையே இருக்கிறது என்று மட்டும் நன்றாக விளங்கியது.

கண்ணனுக்கோ செய்வதறியாத நிலை.

சில நிமிட அமைதிக்குப் பிறகு அம்மு அறையின் பால்கனியில் போய் நின்றாள்.

அவளைத் தொடர்ந்து கவிதாவும் கண்ணனும் போய், எல்லோருமாக சேர்ந்து அங்கேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

அம்மு எப்போதும் போல நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சி செய்தாள் என்றால்
அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனை வெட்டவா குத்தவா என்பது போல் முறைத்துக் கொண்டிருந்தாள் கவி.

அம்முவின் கண்ணீர் கண்டு அவள் மனதில் எழுந்த கவலை கண்ணனின் மேல் கோவமாக மாறி இருந்தது.

இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

ஒரு மயான அமைதி நிலவிய சில நிமிடங்களின் பின், பெருமூச்சு ஒன்றை விட்டவள்
கவி என்று அழைத்து
"நீ உன் ரூமுக்கு போய்த் தூங்கு. அத்த, மாமா யாராவது உன் ரூமுக்கு வந்து பார்த்து நீ இல்லைன்னா இங்க தான் வருவாங்க. போகும் போது உன் அண்ணாவையும் கூட்டிட்டுப் போய்டு என்றாள்.

"இல்ல அம்மு இன்னைக்கு நான் உன்கூட தூங்க.."

அவள் பேசி முடிக்க முன்னர்,
"பிளீஸ் கவி இன்னைக்கு வேணாம்.. அத்தையோ, மாமாவோ உன்னைத் தேடி வந்தாங்கன்னா, என்கிட்டயும் பேசுவாங்கல்ல?
நான் இப்போ யார்கிட்டயும் பேச விரும்பல்ல.
சொன்னா புரிஞ்சிக்க கவி,
நீயாவது என்னைப் புரிஞ்சிப்பன்னு நம்புறேன்.."
என்றாள் வானத்தை வெறித்தபடியே.

"ஹ்ம்ம்.. ஓகே அம்மு"
என்றவாறு கண்ணனிடம் திரும்பி 'வா' என்று கண் காட்டினாள்.

"சாரி அம்மு நான் உன்ன ஹர்ட் பண்ணணும்னு சொல்லல்ல. பிளீஸ் இப்படி பேசாம இருக்காத. என்னைப் பாறேன்" என்று
அவள் தாடையைத் தொட்டு அவன் புறம் திருப்ப, குனிந்து கொண்டவளின் தலையை நிமிர வைத்து அவள் கண்களைப் பார்த்து,

"மன்னிச்சிடு பிளீஸ்" என்றான்.

ஆயிரம் முறை சாரி என்ற வார்த்தையைச் சொன்னாலும் ஒரு முறை மன்னிச்சிடு என்று சொல்வது மேல். அது ஏனோ ஆத்மார்த்தமாக மனதின் அடி ஆழத்தில் இருந்து மட்டுமே வரும் என்று ஒருமுறை அம்மு தான் கண்ணனிடம் சொன்னது.
அதையே வைத்து உளப்பூர்வமாக மன்னிப்பைக் கேட்டு நின்றான்.

அவள் ஒன்றும் பேசாமல் இருக்க அவளின் முகமோ ஒரு நொடி மாறி "சரி" என்று அவனுக்குக் கூறியது.

வாய்பேசாவிட்டாலும் அவளின் முக மாற்றம் அவனுக்கு மனதின் பாரம் சிறிதளவு குறைய வழி செய்தது.

எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டான்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் கவிதா. கண்ணனிடம் தனியாகப் போய் என்ன நடந்தது என்று கேட்பதா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது அவளுக்கு.


அவன் வெளியே போன பிறகு அம்முவிடம் வந்தவள்,

சாரி அம்மு. நானும் ஒரு வகையில உன்ன ஹர்ட் பண்ணிட்டேன். உன்ன ஹர்ட் பண்ணி அழ வெச்சிட்டேன்.
சாரி அம்மு" என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

"பரவாயில்ல விடு கவி.
நீ போய்த் தூங்கு நாம காலைல பார்க்கலாம். நான் கொஞ்சம் தனியா இருக்கணும். குட் நைட்" என்றாள் கண்களுக்கு எட்டாத புன்னகையுடன்.

"ஓகே.. குட் நைட் அம்மு"
என்ற கவி அவள் அறைக்குச் சென்றாள்.

கண்ணன் அவன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கு அர்ஜுன் நின்று கொண்டிருந்தான்.

'இவர் ஏன் இந்த நேரம் இங்க வந்தார்?
அம்மு ரூம்ல நாங்க பேசிட்டு இருந்தது கேட்டிருப்பாரோ..?'
என்று நினைத்தபடியே
"ஹாய் அத்தான்" என்றான்.


"ஹாய் டா.. என்ன இந்த டைம்ல உன் ரூம்ல, நான் என்ன பண்றேன்னு யோசிக்கிற போல?" என்று கண்ணனை ஆழ்ந்து பார்த்து,

"நான் உன்னோட ரூமுக்கு வரல்ல, அம்முவோட ரூமுக்குத் தான் வந்தேன். அங்க நீங்க பேசிட்டு இருந்தீங்க அதான் அ‌ப்படியே இங்க வந்துட்டேன்" என்க

'ஆஹா.. அப்போ அம்மு அழுதழுது பேசினதையும் கேட்டிருப்பார் போலயே..
கண்ணா இன்னைக்கு நீ சட்னி தான். அம்மு அழ நான் தான் காரணம்னு தெரிஞ்சுது நான் செத்தேன்.

கடவுளே!! இரண்டு வருஷத்துக்குப் பிறகு இன்னைக்குத் தான் வந்திருக்கோம்,
நாளைக்கே போற மாதிரி எதுவும் நடந்துடக் கூடாது' என்று நினைத்து அவசர வேண்டுதல் ஒன்று வைத்தவனிடம்,

"என்னடா கண்ணா.. நான் பேசிட்டு இருக்கேன் நீ என்னவோ யோசிச்சிட்டு இருக்க.?" என்றான் அர்ஜுன்.

"இல்ல அத்தான், ஒண்ணும் இல்ல நீங்க சொல்லுங்க.."

அர்ஜுன், கண்ணனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க,
அவன் முகத்தில் வந்து போன கோலங்கள் இவனின் பார்வையில் இருந்து தப்பவில்லை.

அவனருகில் வந்த அர்ஜுன் அவனின் தோள் தொட்டு,

"ரூம்ல என்ன நடந்தது நீங்க என்ன பேசினீங்கன்னு எதுவுமே எனக்குத் தெரியாது. பட் நீ அம்மு கிட்ட மன்னிப்புக் கேட்டது மட்டும் தான் எனக்குக் கேட்டுச்சு. அப்போ தான் நான் அங்க வந்தேன். நீ கேட்ட விதம் உன் குரல் எல்லாம் வெச்சு பார்க்கும் போது எனக்கு என்னவோ நீ அம்முவ ரொம்ப ஹர்ட் பண்ணிட்டன்னு மட்டும் தோனுது. நான் அதுக்கு கோவப்படல்ல, ஆனா அவ ஹர்ட் ஆகி இருப்பான்னு நினச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்குடா.

நீங்க எல்லாரும் சேர்ந்திருக்கும் போது விளையாட்டுக்குன்னு எது பண்ணினாலும் பரவாயில்ல, என்ன கலாட்டா பண்ணினாலும் பரவாயில்ல பட் அதுவே மத்தவங்கள ஹர்ட் பண்ணாம இருக்கணும் இல்லையா?
அதைத்தான் சொல்ல வந்தேன். நான் இத அம்முவுக்காக சொல்லல்ல. அம்மு யாரயாச்சும் ஹர்ட் பண்ணினா நான் அவளுக்குக் கூட இப்படித் தான் சொல்லி இருப்பேன்.
எனக்கு நீ, கவி, அம்மு மூனு பேரும் ஒன்னு தான் வேற வேற இல்ல" என்றான் இன்னதென்று பிரித்தறிய முடியாத குரலில்.

"சாரி அத்தான் தப்பு என் மேல தான். இனிமேல் இப்படி நடக்காம நான் பார்த்துக்குறேன்" என்று கூறியவன் அர்ஜுனை அணைத்துக் கொண்டான்.
சற்று முன் பயந்து போய் நின்ற அவனுக்கு அந்த அணைப்பு ரொம்ப தேவையாக இருந்தது.

"சரி டா நீ தூங்கு. குட் நைட்" என்று கூறி கதவைத் திறந்து வெளியே வந்து மீண்டும் அம்முவின் அறைக்
கதவைப் பார்த்து கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தவன் பால்கனி போய் நின்று கொண்டான்.

இரவு வானில் பவனி வரும் நிலாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நினைவுகள் சில வருடங்களுக்கு முன் போய் நின்றது.

மின்னலென வந்து சென்ற மதிமுகம் தன்னிலை இழக்கச் செய்தது அவனை.

''தேவையா உனக்கு இது? எதுக்கு இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கிற? சொன்னா புரிஞ்சிக்கமாட்டியா நீ?"

"நான் ஒன்னும் உன்ன டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். ஆனா உனக்காகவே வெயிட் பண்ணுவேன்னு தான் சொல்றேன். நீ அம்முவுக்காகத் தானே இப்பிடி சொல்ற அஜு? அம்முவோட லைஃப் செட்டில் ஆகும் வர நான் வெயிட் பண்றேன். நம்ம அம்முவுக்கு நான் இதக் கூட செய்யமாட்டேனா?"

"கிறுக்கு மாதிரி உளறாத. அதுவரை வெயிட் பண்ண முடியுமா உனக்கு? வயசு ஏறிட்டே இருக்குன்னு உங்க வீட்டுல.."
என்றவனைக் கை நீட்டித் தடுத்து

"வீட்டுல அம்மா அப்பாவ நான் பார்த்துக்குறேன். எனக்கு உன் முடிவு தான் வேணும். ஏன் எனக்கு மட்டும் தான் வயசு ஏறுமா, உனக்கு இறங்குதா என்ன? வயசாகிட்டா என்னை நீ கட்டிக்கமாட்டியா? இப்பிடி உன் பின்னால சுத்திட்டு இருக்குற என்னை விட வேற ஒருத்திக்கு தாலி கட்ட உன்னால முடியுமா அஜு?"
என்றவள் சர்ரென்று எழுந்து விறு விறுவென அறையை விட்டு வெளியேறியது இன்றும் மனக்கண்ணில் காட்சியாய் விரிந்தது அர்ஜுனிற்க்கு.

"அராத்து எப்பிடி டி இருக்க?''
என்றவன் முனு முனுப்பிற்கு

'ரொம்ப நல்லா இருக்கேன் அஜு, நீ இருக்கும் போது எனக்கு என்ன?' என்ற குரல் அவன் காதுக்குள் ஒலித்தது.

தலையைக் குலுக்கிக் கொண்டு சுயம் பெற்றவன் அவளைப் பற்றிய சிந்தனையுடனே கட்டிலில் வந்து விழ நினைவுகளுடன் நித்ராதேவியும் அவனை அணைத்துக் கொண்டது.

அம்முவோ தன் அறையில் இருந்து கொண்டு அவளின் காதல், காதலன், காதலை அவள் சொல்லி அவன் நிராகரித்துப் போனது என ஏதேதோ நினைவுகளில்
சஞ்சரித்துக் கொண்டு இந்த இரவையும் தூங்கா இரவாக்கி கொண்டிருந்தாள்.

எந்த ஒரு சிறு விடயமும் அவளுக்கு அவன் நினைவுகளை மட்டுமே கொடுக்க, மறக்கவும் முடியாமல் யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்துப் போகிறாள்.

அவளுக்குள் புதைந்து போன அவள் காதல் அதனால் களைப்படைந்து போன அவள் உள்ளம் இதை எல்லாம் மீறி அவளுக்குத் தூக்கம் வரும் என்றால்..
அது அவளை அறியாமல் கண்கள் களைப்படைந்து வந்தால் தான் உண்டு.

சொல்லாத காதல் செல்லாக்காசு. இவள் காதலை சொன்ன நொடி முதல் அவளின் காதலோ இதயத்துக்கு பாரமாகி‌‌ப் போன ஒரு புதையல்.
 

Fa.Shafana

Moderator
நினைவு 04

நேரம் தவறாத
கதிரவன் அவன் வேலையை செவ்வனே ஆரம்பித்தான்.

காலை எழுந்து குளித்து உடை மாற்றிய அம்மு நேராக சென்றது அர்ஜுன் அன்றைக்குத் தான்.
கதவைத் தட்டி, "அண்ணா அண்ணா" என்று அழைக்க,

"வா அம்மு குட் மார்னிங் டா.."

"குட் மார்னிங் அண்ணா..
நான் உன் கூட கொஞ்சம் பேசணும்...."
சிறிதாக தயங்கி நின்றாள்.

"ஹ்ம்..... சொல்லு அம்மு, என்கிட்ட என்னடா தயக்கம்?"
என்று புன்னகையுடன் கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்தான்...

"இன்னைக்கு ஈவினிங் மாமா தினேஷ் அங்கிள் வீட்டுக்கு போக இருக்கார்.."

"ஆமா.."

"அவரும் அப்பாவும் மட்டுமா போக போறாங்க..?"

"இல்லடா.. எல்லாரும் போகணும்னு தான் அப்பா என்கிட்ட சொல்லிட்டு இருந்தார். ஆனா அம்மு நீ ஒன்னும் யோசிக்காம போ.
எல்லாம் நான் பார்த்துக்குறேன்"

"இல்லண்ணா..
நான் சொல்ல வந்தது வேற.."

"என்ன டா சொல்லப் போற? அங்க போகமாட்டேன்னா? அங்கிள் பாவம் மா
ரொம்ப நாள் நீ அவர பார்க்கப் போகல்ல. லாஸ்ட் வீக் என்கிட்ட கூட சொன்னாரு டா. உன்ன பார்க்கணும் போல இருக்கு வீட்டுக்கு வர டைம் இல்லைன்னு, அதனால நீ போய் பாத்துட்டு வந்திடு"

"ஹ்ம்... ஆமாண்ணா நான் போகத் தான் போறேன் ஆனா.. அதுக்கு முன்னாடி ஒரு வேல செய்யப் போறேன்.. அத செய்யட்டுமான்னு கேட்கத் தான் உன்கிட்ட வந்தேன்" என்று தயங்கி அர்ஜுனிடம் நின்றாள்.

அவள் கண்களை உற்றுப் பார்த்த அர்ஜுன், "என்ன அம்மு என்ன செய்ய போற? நீ யோசிக்காம அவசரமா ஒரு முடிவும் எடுக்கமாட்ட, அப்படி இருந்தும் அத சொல்றதுக்கு ஏன் இப்படி தயங்குற?"

"அது வந்து....
நான் விக்னேஷ் கிட்ட பேசலாம்னு...." என்று இழுத்து நிறுத்தியவள், "அப்படி பார்க்காத பிளீஸ் எனக்கு பயமா இருக்குண்ணா" என்றாள் அர்ஜுனின் கூர் பார்வையில்.

"ஏய் அம்மு ரிலாக்ஸ்
என்ன பேசப் போற? என்ன முடிவு பண்ணியிருக்க? நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன்"

"ம்ம்... அது எனக்குத் தெரியுமே! அதனால தானே இப்போ உன்கிட்ட பேச வந்தேன்"

"சரி இப்போ சொல்லு அவன்கிட்ட என்ன சொல்லப் போற?"

"அண்ணா.... மாமா இங்க வரும் போது தினேஷ் அங்கிள்க்கு பேசி சொல்லி இருக்கார். அது தெரிஞ்ச உடனே விக்னேஷ் கண்ணனுக்கு பேசி, மறுபடியும் கேட்டுப் பாரு என்ன சொல்றான்னு பார்ப்போம்னு சொல்லி இருக்கான். நேற்று வந்த உடனே கண்ணன் என்கிட்ட சொல்லிட்டான். நான் அதைப்பற்றி பேசாதன்னு கண்ணன் கிட்ட நெறைய டைம் சொல்லிட்டேன்.

பட் இவன் நான் சொல்றத கேட்டாலும், விக்னேஷ் திரும்பத் திரும்ப கேட்கச் சொன்னா இவன் என்ன பண்ணுவான் பாவம். அதனால நான் யோசிச்சது என்னன்னா..

சாட்சிக்காரன் கால்ல விழறத விட சண்டைக்காரன் கால்ல விழுவது மேல்னு சொல்லுவோம்ல? அதைத் தான் நானும் செய்யப் போறேன்"

"என்ன அம்மு சொல்ற? விக்னேஷ் கால்ல விழ போறியா?" என்றான் குறும்பு இழையோட.

"அய்யோ அண்ணா காமெடி பண்ணாத பிளீஸ்.. நான் விக்னேஷ் கிட்டேயே சொல்லப் போறேன்னு சொன்னேன்" என்றாள் சிணுங்கிலாக.

"அப்பாடா அம்மு இப்போ தான் எனக்கு மூச்சே வந்துச்சு. நீ போய் அவன் கால்ல விழுந்தா என் கௌரவம் என்ன ஆகிறது?" என்றான் மீண்டும் குறும்பாக.

"அண்ணா....
போ நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். நான் கீழ போறேன்"

"ஏய் அம்மு குட்டி
நான் சும்மா விளையாட்டுக்குத் தானே சொன்னேன்.. ஓகே.. ஓகே.. இப்போ சொல்லு நீ என்ன சொல்லப் போற? நான் என்ன பண்ணனும்?"

"என் முடிவு தான் உனக்கு தெரியுமில்ல, அதையே தான் சொல்லப் போறேன்"

"வெரி குட் டா அம்மு..
நான் இதைத் தான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்.
அவன் யார்கிட்ட கேட்டுவிட்டாலும் உன் முடிவ நீயே அவன்கிட்ட சொல்லிட்டா எந்தப் பிரச்சினையும் இல்லைல்ல. பட் அத நீயே முடிவு பண்ணட்டும்ன்னு தான் நான் சும்மா இருந்தேன்"

என்றவனை ஏறிட்டு,
"ஏய் அண்ணா..
நீ இந்த விஷயத்துல சும்மாவா இருந்த? உண்மையச் சொல்லு" என்க,

"அம்மு நீ என்னையவே மெரட்டுறியா?"

"பின்ன நீ பண்ணினது ஒன்னும் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியாண்ணா?
நான் அப்பா அம்மாக் கூட அங்கிள் வீட்டுக்கு போற டைம்க்கு எதாவது சொல்லி விக்னேஷ வீட்டில இருந்து வெளிய அனுப்புறது. அங்கிள் என்னைக் கூட்டிட்டு வரச் சொன்னா அவன் இல்லாத டைம் பார்த்து கூட்டிட்டுப் போறதுன்னு எல்லாம் எனக்கு தெரியும்.

இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்னு தான் நான் அவன் கூட பேச நினைச்சேன். நான் என் முடிவ தெளிவா நேரடியா சொல்லிட்டேன்னா எனக்கும் ரிலாக்ஸா இருக்கும்ன்னு ஃபீல் பண்ணேன். அதுக்கப்புறம் அவனும் என்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டான்னு நம்புறேன்.."

"ம்ம்ம்.. யெஸ் டா...
நானும் அப்படித் தான் நினைக்கிறேன். இதோ என் ஃபோன் இருக்கு
இப்பவே அவன்கூட பேசு"

"இல்லண்ணா.. வேணாம்"

"வேணாமா..? ஏன் அம்மு..?"

"உனக்கு இது தெரியும்னு விக்னேஷ்க்கும் கண்ணனுக்கும் தெரியாதுல்ல அத அப்படியே நாமளும் மெயின்டெய்ன் பண்ணுவோம். இல்லைன்னா என் அண்ணன் வில்லன் ஆகிடுவான்"
என்று சொல்லி குறும்பாகக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்.

"கொஞ்சம் முன்னாடி மெரட்டின இப்போ கலாய்க்குறியா?"

"என் செல்ல அண்ணாவ நான் கலாய்ப்பனா..?"

"அப்போ நீ என்ன பண்ணின?"

"சும்மா.. சும்மா..
அதெல்லாம் சும்மா ண்ணா"

"சரி இப்போ என்ன பண்ணப் போற? என் ஃபோன் வேணாம்னா எப்படிப் பேசுவ..?"

"அதான் நம்ம சாட்சிக்காரன் இருக்கானே ண்ணா? நான் கண்ணனோட ஃபோன்ல இருந்தே பேசறேன்.
விக்னேஷோட பேசணும்ன்னா கண்ணனே ஃப்ரீ டைம் பார்த்து சொல்லுவான்"

"உனக்கு ஃபோன் ஒன்னு வாங்கித் தர நினைச்சாலும் நீ வேணாம் சொல்ற. அப்படி என்ன உனக்கு ஃபோன் மேல கோவம்? எல்லாரும் ஃபோன் இல்லைன்னு தான் புலம்புவாங்க, இங்க
உனக்கு ஃபோன் வாங்கித் தர்றதுக்கு
நான் புலம்ப வேண்டியிருக்கு.."

"சரி அத
விடு ண்ணா..
என் ஃபோன் கதைய அப்புறம் பார்ப்போம். இப்போ விக்னேஷ் கதைய பார்ப்போம்" என்று அவனது பேச்சை இடை நிறுத்த,

"ம்ம்.. ஓகே டா அப்போ நீ பேசி அவன்கிட்ட உன் முடிவ சொல்லிடு. அதுக்குப் பிறகும் இதே போல செஞ்சாங்கன்னா அவனுங்க ரெண்டு பேருக்கும் இருக்கு"

"ஓகே ண்ணா.. நீ ரெடியாகிட்டு வா நான் கீழ போறேன்" என்று கூறி தெளிவான முகத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

'நேற்று இரவு கண்ணன் பேசுனது, நான் அவன்கிட்ட பேசும் போது அவனோட முகம் மாறினது எல்லாம் பார்த்தா கண்ணன் இதைத் தான் பேசி இருப்பான் போல

விக்னேஷ் பற்றிப் பேசவும் ஹர்ட் ஆகி இருப்பா, அதுக்கு தான் கண்ணன் மன்னிப்புக் கேட்டு இருப்பான். அம்மு நைட்டு ஃபுல்லா யோசிச்சு இன்னைக்கு இப்படி தெளிவான முடிவு எடுத்திருக்கா' என்று எப்போமும் போல சரியாகக் கணித்தவன்,

"கடவுளே! இந்த விஷயத்துல மாதிரி மற்ற எல்லாத்துக்கும் கூடிய சீக்கிரம் ஒரு முடிவ அவ மனசுல உருவாக்கி அவ மறைச்சு வெச்சுட்டு இருக்குற கவலைகளை அவளவிட்டு தூரமாக்கிடு.

கடந்த காலத்த அம்மு இன்னும் நினைச்சுட்டு தான் இருக்கா. எங்களுக்காக வெளிய சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்குற மாதிரி நடிக்கிறா. அவ மனசுல இருக்குற வலி சில நேரம் அவ கண்ணுல தெரியும்.
அ‌ந்த விஷயத்துல மட்டும் என்னால ஒன்னும் பண்ண முடியாம இருக்கேன். நீ தான் அவளுக்கு துணையா இருக்கணும்"

என அம்முவுக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டு தயாராகச் சென்றுவிட்டான் அர்ஜுன்.

அம்முவும் கவிதாவும் வெளி முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான் தாமதமாக எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்த கண்ணன்
அவர்களைப் பார்த்து,
'நைட் என்னமா அழுதா, இப்போ நான் போய் பேசினா என்கூட பேசமாட்டாளே!
இன்னும் என் மேல கோவமா தானே இருப்பா. எப்படி இவகிட்ட போய் பேசுறது? அய்யோ.. கடவுளே!'
என்று நினைத்தவன்
மனத்தில் விக்னேஷை திட்டிக் கொண்டு இருந்தான்.

'உன்னால தான் விக்கி இவ என் கூட பேசாம இருக்கா. என் கைல மாட்டுவல்ல அப்போ இருக்கு உனக்கு. நைட் எவ்வளவு கலவரம் நடக்குது, நீ என்னன்னா ஃபோன் கூட எடுக்க மாட்டேங்குற. காலைல ஆபீஸ் போறதுக்கு முன்னாடியாச்சும் எடுத்து ஏன்னு கேட்டியா? போடா டேய்.. உனக்கெல்லாம் எங்க அம்மு கிடைக்கவேமாட்டா'

ஏதோ ஒரு உணர்வில் பின்புறம் திரும்பிப் பார்த்த அம்மு,
"கவி அங்க பாரு நேத்து எங்கூட அவ்வளவு வாய் பேசினான், இன்னைக்கு அங்கேயே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கான். அவன இங்க கூப்பிடு நான் அவன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"கண்ணா இங்க வாயேன்"

"ஏன்? எதுக்கு?"

"அம்மு தான் வர சொல்றா.."

அப்படியா என்பது போல் அவளைப் பார்க்க, அவள் தலையாட்டி "வா" என்று அழைத்தாள்.

அடுத்த நொடி அவளின் அருகில் வந்தவன்,

"சாரி அம்மு நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். சத்தியமா இதுக்கப்புறம் அந்த விஷயமா நான் ஒன்னும் பேசவேமாட்டேன். என்னை நம்பு பிளீஸ்" என்க


"ஹ்ம்.... பரவாயில்ல கண்ணா. நான் இப்போ உன்கிட்ட பேசணும்னு சொன்னது அதைப் பற்றித்தான்" என்றாள்.

"என்னது அத பத்தியா?" அதிர்ச்சிக் குரலில் அவன் கேட்க,

"ஆமா.... நான் அவன்கூட பேசணும். அவனுக்கு ஃப்ரீ டைம் எதுன்னு உனக்குத் தெரியும் தானே? அந்த டைம்ல உன் ஃபோன்ல கால் பண்ணிக் குடு நான் பேசறேன்" என்று அவள் கூற

கண்ணையும் வாயையும் திறந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்த கண்ணன்,

"டேய்.. வாயில ஈ போய்ப் போகுது.."
என்ற கவிதாவின் சத்தத்தில் சுயநினைவிற்கு வந்தான்.

"என்ன அம்மு சொல்ற?
நெஜமாவே நீ அவன்கூட பேசப் போறியா? என்னால நம்பவே முடியல்ல"

"கண்ணா.... ரொம்ப சந்தோஷப்படாத. நான் பேசத் தான் போறேன் உன்கிட்ட சொன்னத அவன்கிட்ட சொல்லப் போறேன் அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்ல"


"அதானே!! நானும் என்னவோ உன் மனசு மாறிடுச்சுன்னு நினைச்சு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்" என்க

இவர்களின் பேச்சில் ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி இருந்த கவிதாவின் பக்கம் திரும்பிய அம்மு

"கவி என்ன நடந்ததுன்னு இப்போ சொல்றேன் வா என்கூட. என் ரூமுக்குப் போகலாம் இங்க நாம பேசுறத யாராச்சும் கேட்டுடப் போறாங்க"
என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

"கண்ணா நீயும் வா.."

மூன்று பேரும் அவள் அறையின் பால்கனியில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.

"ஹ்ம்.. சொல்லு அம்மு என்ன நடந்தது யாரப் பற்றி பேசி நீங்க ரெண்டு பேரும் சண்ட போட்டிங்க?"

"வேற யாரும் இல்ல தினேஷ் அங்கிள் மகன் விக்னேஷ் தான். த்ரீ இயர்ஸ் முன்னாடி நாங்க ஊருக்கு வரும் போது தினேஷ் அங்கிள், விக்னேஷ் எல்லாரும் தானே வந்தாங்க?
அப்போ அங்க ஊர்ல வெச்சு விக்னேஷ் என்ன லவ் பண்றதா இவன்கிட்ட சொல்லி இருக்கான்"

என்றவளை இடை வெட்டி,
"என்னது விக்கி அண்ணாவா? நான் இத எதிர்பார்க்கவே இல்ல" அதிர்ந்து சொன்னாள் கவிதா.

"ஆமா அந்த வெண்ணெய்யே தான்"
கடுப்பாக வந்தது அவன் குரல்.

"டேய்.. சும்மா இரு ண்ணா.
நான் கேட்கும் போது ஒன்னும் சொல்லல்ல தானே இப்போ ஏன் குறுக்க பேசுற?
நீ சொல்லு அம்மு"

"இல்ல கவி நான் தான் அவன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லியிருந்தேன் அதான் அவன் உன்கிட்ட சொல்லல்ல"

"சரி அப்புறம் என்ன நடந்தது? அத சொல்லு அம்மு.." என்றாள் கவிதா.


"நானும் விக்னேஷ் கிட்ட இருந்து அப்படி ஒன்ன எதிர்பார்க்கவே இல்ல. இவன் வந்து சொல்லவும் எனக்கு கோவம் வந்துருச்சு. அப்பவே இவன் கிட்ட சொல்லிட்டேன் இதப் பற்றி இனி பேசவே கூடாது, அப்படிப் பேசினா நான் இவன் கூட பேசமாட்டேன்னு.

ஆனா நான் நெனச்ச மாதிரி அது அன்னைக்கே முடியல்ல. தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. லாஸ்ட் டைம் நீங்க வந்தப்போ கூட இவன் அதப் பற்றிப் பேசி என்னைக் கடுப்பாக்கிட்டான்.

எனக்கு விக்னேஷ அப்படி ஒரு உறவா பார்க்கவே முடியல்ல. அதச் சொன்னா அவனுக்கும் புரியல்ல, இவனுக்கும் புரியல்ல. நான் என்ன பண்ண முடியும்?

இப்போ கூட நீங்க இங்க வர்றது தெரிஞ்ச உடனே இவனுக்குப் பேசி என்கிட்ட மறுபடி கேட்டுப் பாருன்னு சொல்லிருக்கான். நேற்று வந்ததும் இவன் என் ரூமுக்கு வந்து அதைத் தான் பேசினான். அதுவும் முழுக்க முழுக்க அவனுக்கு சார்பா. நான் என்னவோ அவன காதலிச்சி கழட்டி விட்ட மாதிரி பேச்சு வேற பேசினான்.

அவன் பாவமாம்
எனக்காக என் முடிவுக்காக காத்துட்டு இருக்கானாம்.
அப்பவே நான் இவன் கிட்ட சொன்னேன் பிளீஸ் டா மறுபடியும் இதைப் பற்றி பேசி என்ன கஷ்டப்படுத்தாதன்னு.
எங்க இவன் கேட்டா தானே? அந்தக் கவலைல தான் நான் நைட் அழுதேன்" என்று கடகடவென பேசி முடித்தவள் பெருமூச்சொன்றை விட்டு,

"இதுவர விக்னேஷ் நேரடியா என்கிட்ட இதைப் பற்றி கேட்கல்ல நானும் அவன் கிட்ட பேசவே இல்ல.
இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டத் தான் நான் அவன்கூட பேசணும்னு சொல்றேன்.

நான் பேசி என் முடிவ சொன்னா அவன். அடங்குவான் அப்படியும் இல்லாம அதுக்கு பிறகும் விடல்லைன்னா அண்ணா கிட்ட சொல்லிட வேண்டியது தான்" என்றாள்.

"அய்யோ.. அம்மு அத்தான் கிட்ட சொல்ல போறியா?"

"இப்போ இல்ல. இன்னைக்குப் பேசி என் முடிவ நானே சொன்ன பிறகும் அவன் இந்தப் பேச்ச விடல்லைன்னா தான் அண்ணா கிட்ட சொல்லுவேன்.
கட்டாயம் சொல்லுவேன்.

அதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் என்ன டிஸ்டர்ப் பண்ண முடியாது. டிஸ்டர்ப் பண்ண அண்ணா விடமாட்டான்"

'ஹ்ம்.. நேத்து ராத்திரி நான் மன்னிப்பு கேட்டது காதுல விழுந்ததுக்கே என்னைய கதி கலங்க வெச்சிட்டாரு. இந்த அழகுல இவ இத சொல்லிட்டான்னா இந்த கண்ணன நாடு கடத்தி விட்டுட்டு தான் அடங்குவார்.
அய்யோ விக்கி என்ன இப்படித் தனியா மனசுக்குள்ளயே புலம்ப வெச்சிட்ட படுபாவி'

"டேய்.. என்னடா யோசிக்கிற?"

"என்னத்தச் சொல்ல கவி எந்த நாட்டுக்கு டிக்கெட் போடலாம்ன்னு தான் யோசிக்குறேன்"

"ஏன் டா..?"

"வேற என்னவாம்?
இவ அத்தான் கிட்ட சொல்லிட்டான்னு வை இந்த கண்ணன் செத்தான். அந்தக் கடவுளால கூட காப்பத்த முடியாம போய்டும்"

"இத நீ முதல்லயே யோசிச்சிருக்கணும்ல?"

"அய்யோ கவி நான் விக்கி கிட்ட ஸ்டார்ட்லயே சொல்லிட்டேன். இதெல்லாம் சரி வராது விட்டுடுன்னு ஆனா அவன் கேட்டாத் தானே. கடைசில அவனுக்கு சப்போர்ட்டா என்னையவே பேச வெச்சுட்டான். அப்படி உருகி உருகி காதல் வசனம் பேசுவான்.
இப்போ நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்"
என்றவன் திரும்பிப் பார்க்க அம்முவும் கவிதாவும் அவனை முறைத்துக் கொண்டு நின்றார்கள்.



 

Fa.Shafana

Moderator
நினைவு 05


காலை நேரே பரபரப்பு அடங்கி ஆசுவாசமாக
ஆபீஸில் தன் அறையில் இருந்த விக்னேஷ்க்கு அப்போது தான் ஞாபகம் வந்தது கண்ணன் இரவு பலமுறை அழைத்து இருந்தது.

'ஐயோ இவனுக்கு காலைல பேசணும்னு இருந்தேன் மறந்துட்டேன்' என நினைத்துக் கொண்டு தன் அலைபேசியை எடுத்தவனுக்கு கண்ணனின் குறுந்தகவல்..

'அம்மு வாண்ட்ஸ் டு டாக் டு யூ'

இதை விக்னேஷ் எதிர்பார்க்கவில்லை.
சில நிமிடம் வேலை நிறுத்தம் செய்த அவன் மூளை அவனின் காதலைத் தவிர வேறு எதையும் யோசிக்க மறந்தது.

மூன்று வருடங்களுக்கு முன் வெளிநாடு செல்ல சில நாட்களுக்கு முன்பு கண்ணன் மூலம் அவளிடம் தன் மனதை சொன்னது, அதன் பின்னர் ஒரு வருட வெளிநாட்டு வாசம்.
இப்பொழுதும் அர்ஜுன் கம்பெனியில் தான் வேலை செய்கிறான். இந்த இரண்டு வருடங்களில் மிகக் குறைந்த தடவைகள் தான் அம்முவை பார்த்திருப்பான்.
அதிலும் மற்றவர் யாரும் கவனிக்காத வகையில் இவனுடன் பேசுவதை அம்மு அழகாக தவிர்த்தும் இருந்தாள்.

விக்னேஷ் அம்முவை தனியாக சந்திக்கவோ பேசவோ சந்தர்ப்பம் இலகுவில் அமையவில்லை.

அர்ஜுன் அமையவிடவில்லை என்பது அர்ஜுன், அம்முவைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

தன் நினைவில் இருந்து மீண்டவன் அடுத்த நொடி கண்ணனை அழைத்திருந்தான்.

"ஹலோ.. குட் மார்னிங் விக்கி"

"குட் மார்னிங் டா.
சாரி டா கண்ணா இப்போ தான் மெசேஜ் பார்த்தேன்.
எங்க டா அம்மு. என்கிட்ட பேசணும்னு சொன்னாளா?"


"ஓஹ்.. அப்போ அந்த மெசேஜ் பார்த்து தான் கால் வந்திருக்கு.
நைட் எத்தன தடவ கால்
பண்ணேன் ஏன்னு ஒரு வார்த்த கேட்கணும்னு தோனல்லல்ல?"

"அம்மு பேசத் தான் நைட்டும் கால் பண்ணிருப்ப. நான் எடுக்காம விட்டதால இப்போ மெசேஜ் பண்ணிருக்க அப்பிடித் தானே?"

"ஓஹ்.. உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா சார்? ஓவர் கற்பனையில தத்தளிக்காதிங்க. நைட் நான் தான் முக்கியமான விஷயம் பேச கால் பண்ணேன்"

''அப்போ நான் ஃபோன் அட்டென்ட் பண்ணல்லன்னு இப்படி மெசேஜ் அனுப்பி இருக்க அப்படி தானே?"

"அய்யோ உன் அறிவு!
விக்கி விக்கின்னு உன்ன எல்லாரும் கூப்பிட்டு உன் அறிவு எங்கேயாவது விக்கிகிச்சு போல.
அப்படி சீப்பான வேல எல்லாம் நான் செய்யமாட்டேன். நிஜமாவே அம்மு பேசணும்னு சொன்னா. என்ன மேட்டர்னு சொல்லட்டுமா?"

"அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல, நீ இப்போ அம்மு கிட்ட ஃபோனக் கொடு நான் பேசறேன். அவ கூட பேச கிடைச்ச சான்ஸ நீ கெடுத்து விட்டுடுவ போல"

'ஆமா நாங்க தான் கெடுக்கணும். காதல் கீதல்னு அவளுக்கு வெறுப்ப ஏத்தி வெச்சுட்டு பேச்சப் பாரு'
என மனதோடு பேசிக் கொண்டவனிடம்,

"கண்ணா.. என்னடா சைலன்ட் ஆகிட்ட? அம்மு கிட்ட கொடு நான் பேசணும்"

"கொஞ்சம் வெயிட் பண்ணு விக்கி. நான் கார்டன்ல இருக்கேன், அவ உள்ள இருக்கா போய் கொடுக்குற வர ஒன்னும் பேசாத"

சொன்னவன் அம்முவைத் தேடி உள்ளே போக, அலைபேசி வழியே காத்திருந்த விக்னேஷிற்கு
பொறுமை காற்றில் பறந்தது.

"அம்மு.." கதவைத் தட்ட

"ம்ம்.. வா கண்ணா கதவு லாக் பண்ணல்ல"

கதவைத் திறந்து உள்ளே பார்க்க கவிதாவுடன் ஏதோ கை வேலை (க்ராஃப்ட் வர்க்) செய்து கொண்டிருந்தாள்.

"அம்மு.. விக்கி லைன்ல இருக்கான்
பேசு"

அலைபேசியைக் கொடுத்தவன் கவிக்கு கண்ணால் சைகை கட்டினான் வெளியே வா என.

"கவிய கூட்டிட்டு எங்க போற கண்ணா?"

"இல்ல அம்மு நீ பேசு நான் என் ரூமுக்குப் போறேன்"

"நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க, ரகசியமா பேச ஒண்ணும் இல்ல நான் பால்கனில போய் பேசிட்டு வர்றேன்"

"ஓகே.. பேசு"

"ஃபோன் போட்டு கொடு கட்டாகி இருக்கு"

அழைப்பை ஏற்றவன் "ஹலோ.. ஹலோ.. அம்மு..
சொல்லு அம்மு ஃபோன் பண்ணிட்டு பேசாம இருக்க?"

"என்ன சொல்லணும் விக்னேஷ்?"

அவளின் விக்னேஷ் என்ற அழைப்பே அவனை மனதளவில் தூர நிற்க வைத்தது.

விக்கி நீண்டு விக்னேஷ் ஆகி இருக்கிறதே. அவனை விட்டு அவள் தூரம் தான் சென்றுவிட்டாள்
தான் நினைத்தது போல சந்தோஷமான செய்தி சொல்ல அவள் அழைக்கவில்லை என அவன் ஆழ்மனம் அவனுக்கு சொல்லிவிட

ஒருமுறை கண்களை இறுக மூடித் திறந்தான்,
"நீ என் கிட்ட என்ன பேசணும்னு ஃபோன் பண்ணின அம்மு அதச் சொல்லு"

அவன் குரல் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை தொலைத்திருந்தது. அதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள்.

"ஆமா.. விக்னேஷ்,
கண்ணன் மூலமா நீங்க கேட்ட விஷயம் தான். நான் எத்தன தடவ சொல்லிட்டேன் ஆனா நீங்களும் சரி கண்ணனும் சரி அத விடறதா இல்ல அதனால நானே உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்"

"அம்மு நீ நம்ம ஃபேமிலிய நினைச்சு தயங்குறியா? நான் அப்பா கிட்ட சொல்லி அங்கிள் கிட்ட பேச சொல்ல தான் இருக்குறேன். அதுக்கு முதல்ல எனக்கு உன் விருப்பம் என்னன்னு தெரியணும் அதான் உன்கிட்ட கேட்டேன்"

"இல்ல விக்னேஷ் அதெல்லாம் ஒன்னுமில்ல. என்னால அந்த இடத்தில உங்கள வெச்சி பார்க்க முடியல்ல. நீங்க எத்தன தடவ கேட்டாலும் எத்தன வருஷம் ஆனாலும் என்னோட முடிவு இது தான்"

"ஏன் அம்மு அப்படி சொல்ற..?"
அவனின் குரல் உள் இழுத்து கொண்டது

"நான் உன்கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன் அதே போல உன்னையும் சந்தோஷமா பார்த்துப்பேன். என் மேல உனக்கு நம்பிக்க இல்லையா அம்மு?"

"பிளீஸ் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க, உங்க மேல நம்பிக்க இல்லாம இல்ல விக்னேஷ். என் மனசுல உங்களுக்கான இடம் காதல் இல்லைன்னு தான் சொல்றேன். உங்கள நான் எந்த விதத்தில டிஸ்டர்ப் பண்ணினேன்னு எனக்கு புரியல்ல. அதுக்கு சாரி கேட்டுகுறேன். என்னை மன்னிச்சிடுங்க"

"ஹேய்.... அம்மு அப்படில்லாம் ஒன்னும் இல்ல நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்ல"

"இல்ல விக்னேஷ்.. சின்ன வயசுல இருந்தே நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து தான் வளர்ந்திருக்கோம். மாமா குடும்பம் ஊர்ல இருந்தாலும் லீவு வந்தா நாம அங்க போறதும் இல்லன்னா அவங்க இங்க வர்றதும்னு தானே இருந்தோம்.

சின்னவங்க பெரியவங்க ஒன்னா இருந்துட்டு இப்போ கொஞ்ச நாளா உங்க குடும்பத்த விட்டு நான் என்னை தூரமாக்கிக்கிட்டேன்.
அது உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் எதனால? நீங்க சொன்ன காதல்னால தானே? இப்படித் தூரமா இருக்குறது எனக்கே கஷ்டமா இருக்கு விக்னேஷ்.
அங்கிளக் கூட என்னால முன்ன மாதிரி பார்க்க வர முடியல்ல"

"என்னை அவ்வளவு வெறுக்குறியா அம்மு?"

"வெறுப்பு இல்ல தயக்கம் விக்னேஷ். எப்போ, எப்படி உங்க மனச டிஸ்டர்ப் பண்ணினேன், நான் என்ன தவறா நடந்துகிட்டேன்னு எனக்கு சுத்தமா புரியல்ல அந்தத் தயக்கம். குற்ற உணர்வுன்னு கூட செல்லலாம்"

"நீ ஒன்னும் அப்படி தப்பா நடந்துக்கல்ல அம்மு. எந்தத் தயக்கமும் குற்றம் உணர்வும் உனக்கு வேணாம். நான் தான் உன்னைப் புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன்.

உன் கூட சந்தோஷமா இருக்கணும் ஆசைப்பட்டேன். உங்க ஃபேமிலில உரிமைப்பட்டவனா இருக்க ஆசைப்பட்டேன்
ஆனா அதுல உன் விருப்பத்த யோசிக்க மறந்துட்டேன். கேட்ட உடனே நீ மறுத்தாலும் கொஞ்சம் நாளைக்கு அப்புறம் ஓகே சொல்லுவன்னு நினைச்சு நான் தான் தப்பு பண்ணிட்டேன்.

உன்ன ஹர்ட் பண்ணியிருந்தா எக்ஸ்ட்ரீம்லி சாரி அம்மு.
நான் இதுக்கப்புறம் இதப் பற்றிப் பேசி உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். நீ ஃப்ரீயா இரு"

"தேங்க்ஸ் விக்னேஷ் என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு. நான் ஃபோன கண்ணன் கிட்ட கொடுக்குறேன்"

"ஓகே அம்மு பை.."

கண்ணனிடம் அலைபேசியைக் கொடுத்தவள் விட்ட வேலையை செய்யத் தொடங்கினாள்.

விக்னேஷுடன் பேசிக்கொண்டு வெளியே வந்து கண்ணன் அவனின் அறைக்குள் நுழைந்தான்.

"நைட் எதுக்கு கண்ணா கால் பண்ணின?"

"உனக்கு இப்பவாச்சும் கேக்க தோனுச்சே?" என்று சலித்துக் கொண்டவன்," நீ மறுபடி கேட்க சொன்னத வந்த உடனே நான் அம்மு கிட்ட சொன்னா அவ முடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டா. மறுபடியும் நைட் அதப் பேச ஆரம்பிக்க ரொம்ப அழுதாடா"
என்று நடந்ததைக் கூறியவன்,

"அதுக்குத் தான் உன்கிட்ட இத விட்டுடு. அம்மு ஹர்ட் ஆகுறதப் பார்க்க கஷ்டமா இருக்குன்னு சொல்லலாம்ன்னு கால் பண்ணினேன், நீ எடுக்கல்ல.
காலைல அம்முவே வந்து உன்கூட பேசணும்னு சொன்னா. இப்போ அம்மு சொன்னத நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். அவளுக்கு விருப்பம் இல்லன்னா விட்டுடு விக்கி கட்டாயப்படுத்தி அவள கஷ்டப்படுத்தாத"

"ஆமா கண்ணா நானும் அத தான் அம்மு கிட்ட சொன்னேன் இனிமேல் இதப் பற்றி பேசவேமாட்டேன்.
ஏதோ மனசுல ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு இன்னைக்கு அம்மு பேசின பிறகு அது இப்போ இல்ல. சரி நான் பிறகு உன்கிட்ட பேசுறேன்"

"ஓகே.. விக்கி பை"

பேசி முடிந்து அலைபேசியை சில நொடி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் சிறிது நேரம் கண் மூடி அமர்ந்திருந்தான்.

அம்முவுடனான அவனின் காதல் முற்றுப் பெற்றுவிட்டது. இதன் பிறகு அவள் இவனுடன் சாதாரணமாகக் கூட பேசுவாளா இல்லாவிட்டால் இந்த மூன்று வருடங்கள் தவிர்த்தது போல தவிர்த்து விடுவாளா என்பது கூட அவனுக்கு சந்தேகமாய் இருந்தது.

அவன் சிந்தனையைக் கலைக்க அவனின் வேலைகள் அழைக்க அதில் மூழ்கிவிட்டான்.

மாலையில் எல்லோரும் தினேஷ் வீட்டுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருக்க அம்முவின் அறைக்கு வந்த கண்ணன்,

"நீ வரமாட்டன்னு நினைச்சேன் ஆனா நீ என்னடான்னா முதல் ஆளா ரெடி ஆகிட்ட போல?" என்றான்.

"நான் ஏன் வராம இருக்கணும்? அங்கிளப் பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா?" ஒன்றுமே நடவாதது போல் அப்பாவியாகக் கேட்டாள்.

"நாம போற நேரம் விக்கியும் இருப்பானே அதான் கேட்டேன் அம்மு"

"யாரோ ஏதோ மனசுல வெச்சிட்டு சுத்துறாங்க அதுக்கு நான் பழியா?"

"ஹ்ம்.. அதுவும் சரி தான்"

"உனக்கு ஒன்னு தெரியுமா கண்ணா? அண்ணாவும் அங்கிள் வீட்டுக்குப் போய் ரொம்ப நாளாச்சு அதனால நாம போற நேரம் அண்ணாவும் அங்க வருவான். சோ.. நான் கவலைப்படவே தேவையில்ல" என்று கூறிச் சிரித்தாள்.

"நீ விவரமான ஆள் தான் போ. நான் போய் ரெடியாகிட்டு வர்றேன்" என்றான் அவன்.

தினேஷ் வீட்டில்..

இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன் நண்பன் குடும்பத்தினரையும் பல நாட்கள் கழித்து அம்முவையும் காண அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

"ஏண்டா கருணா ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் உனக்கு இங்க வர டைம் கிடைச்சது போல?"

"ஆமாடா. கவியோட காலேஜ், கண்ணன் வேல விஷயமா அலையன்னு ரெண்டு வருஷம் பறந்துடுச்சு"

"கண்ணன் நம்ம கதிர் கம்பெனில தானே வேல செய்றதா இருந்தான்?"

"ஆமா அங்கிள், அண்ணா கம்பெனில தான் வேல பாக்குறேன். ஆனா நான் தனியா எல்லாம் செய்தாத் தான் சீக்கிரமே வேலை பழகலாம்னு நிறைய வேல தருவார். ஹெல்ப் கூட பண்ணமாட்டார். என்னால முடியலன்னு அவருக்கு ஃபீல் ஆனா மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவார்.

அண்ணன் கம்பெனில வேலைக்கு சேர்ந்து எல்லாரையும் வேலை வாங்கணும்னு நான் பிளான் போட்டா, அவர் என்னை வெச்சு செய்றார். அவர்கிட்ட மாட்டிகிட்டு நான் முழிக்கிற முழி எனக்கும் அந்த கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும்" என்று சொல்லி வராத கண்ணீரைத் துடைக்க,

"ஓஹ்.. நீ இங்க வந்தும் இதையே தான் புலம்புற இரு உன்ன கோர்த்து விடுறேன்"

"அம்மா.. தாயே.. கவி குட்டி!! உன் அண்ணன் பாசத்த காட்டப் போய் எனக்கு ஆப்பு வெச்சிடாத செல்லம் என்னால தாங்க முடியாது" என்று கண்ணன் கெஞ்ச, அந்த இடமே சிரிப்பலையில் நிறைந்தது.

"அது சரி தானே கண்ணா நீ வேலை பழகினாத் தானே மத்தவங்கள வேலை வாங்கலாம்"

"போ அம்மு.. நீயும் எங்கண்ணன் சொல்ற மாதிரியே சொல்ற"

"அம்மு சொல்றதுல என்னடா தப்பு?" என்று கேட்டுக் கொண்டு விக்னேஷ் மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

அவனின் குரல் கேட்டு அம்மு மெதுவாக கவிதாவின் பக்கம் திரும்பி ஏதோ பேச ஆரம்பித்தாள்.

"ஏன்மா அம்மு.. நீ கூட இந்த அங்கிள மறந்துட்டல்ல? எத்தன நாளாச்சு நீ இங்க வந்து? நான் அர்ஜுன் கிட்ட கூட ஃபோன்ல பேசும் போது உன்ன கூட்டிட்டு வர சொன்னேன். அவனுக்கும் நிறைய வேலைன்னு விக்கி சொன்னான்"

தினேஷ் பேசத் தொடங்கியதுமே கண்ணனும் விக்கியும் அம்முவைப் பார்க்க, அதை உணர்ந்தும் அவள் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்து தினேஷிடம் பேசினாள்.

"மறக்கல்ல அங்கிள் நீங்க சொன்னது தான் அண்ணாவுக்கு நிறைய வேல. அப்பா இங்க வந்த ரெண்டு முறையும் நான் கொஞ்சம் வேலையா இரு‌ந்தேன் அதனால தான் வர முடியல்ல. இனிமேல் அடிக்கடி‌ வந்து உங்கள பார்க்குறேன் அங்கிள்" என்று கூறியவளின் விழி ஒரு நொடி விக்னேஷை தழுவி மீண்டது.

அதைக் கண்டு கொண்டவன், 'என்னை இக்னோர் பண்ணத் தான் இங்க அதிகம் வராம இருந்திருக்கா. ரெண்டு மூன்று முறை அப்பாவைப் பார்க்க வந்தவ அவசரமாக கிளம்பியும் விடுவா. இன்னைக்கு நேரடியா என்கிட்ட பேசிட்டதுனால அடிக்கடி வர்றேன்னு சொல்றா. நான் ஒரு முட்டாள். காதல்னு குழப்பி விட்டு இவ இங்க வர்றதக் கூட கெடுத்து வெச்சுட்டேன்' என யோசித்துக் கொண்டிருந்தவன்,

"டேய் நல்லவனே என்ன யோசனை பலமா இருக்கு?" என்ற கண்ணனின் குரலில் நடப்பிற்கு வந்தான்.

"ஒன்னும் இல்லடா சும்மா ஏதோ ஒரு.. சரி அத விடு"

இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் அம்மு சொன்னது போலவே அர்ஜுன் அங்கு வந்துவிட்டான்.

"ஹாய் அங்கிள் எப்படி இருக்கிங்க?"

"வா.. ப்பா அர்ஜுன். உன்ன எல்லாம் பார்க்க ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குல்ல?"

"இல்ல அங்கிள் நியூ ப்ராஜக்ட் ஒன்னுல கொஞ்சம் பிசியா இருக்கேன். விக்கி சொல்லி இருப்பானே. அது கைக்கு வரும் வர வேலை தான், இப்போ எடுத்துட்டேன். இ‌ன்னு‌ம் ரெண்டு மூனு நாள் வேலை இருக்கும் அதுக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீ ஆகணும். அத்த, மாமா வந்ததுக்கும் அவங்க கூட இருக்க முடியல்ல"

"ம்ம்.. நான் சொன்னா எங்க கேக்குறாரு? எப்போ பார்த்தாலும் உன்னப் பற்றித்தான் பேசிட்டு இருப்பார் அர்ஜுன்" என்ற விக்னேஷைத் தொடர்ந்து,

"ஆமா அர்ஜுன் விக்கி சொன்னான் தான். ஆனாலும் என்னவோ உன்னையும் அம்முவையும் பார்க்கணும்னு நினைச்சா பார்த்தே ஆகணும்பா இல்லனா மனசு கேக்காது. ஆனா இப்பல்லாம் அது முடியாம போகுதே. என்னால முன்ன மாதிரி வெளிய எங்கேயும் போகவும் முடியல்ல கம்பெனி விட்டா வீடுன்னு இருக்கேன்" என்றவரிடம்

"சாரி அங்கிள் இனிமேல் இப்படி நிறைய நாள் வராம இருக்கமாட்டேன் அடிக்கடி வர ட்ரை பண்றேன்"

"நீ மட்டுமில்ல அம்முவையும் கூட்டிட்டுத் தான் வரணும் சரியா?"

"கண்டிப்பா அங்கிள்"

"என்னே ஒரு பாசப் பிணைப்பு? மேலெல்லாம் புல்லரிக்குது அங்கிள்" என்ற கண்ணன் புறம் திரும்பி,

"ஏன்டா.. உனக்கு பொறாமையா இருக்கா? நீ எப்பவுமே தூரமாத் தான் இருப்ப வருஷத்திற்கு ஒரு தடவ, ரெண்டு தடவ வருவ ஆனா இவங்க அப்படி இல்லடா அடிக்கடி வந்து என்னைப் பார்த்துட்டு போவாங்க" என்றவரின் கூற்றில்

"ஆமா அத கெடுத்து வெச்சது உங்க மகன் தான். அப்படி தானே விக்கி?" என்று மற்றவரைப் பார்த்துக் கொண்டு விக்கியின் காதில் கிசுகிசுக்க,

"டேய்.. சும்மா இரு டா. நானே தப்பு பண்ணிட்டேன்னு ஃபீல் பண்றேன் நீ வேற"

"ஓஹ்.. சார் ஃபீல் பண்றீங்களா? ஓகே.. ஓகே.."

அம்மு எல்லோருடனும் கலகலத்துப் பேசினாலும் யாரும் கவனிக்காதவாறு விக்னேஷைத் தவிர்த்தாள்.

எல்லோரும் சிரித்துப் பேசி சிற்றுண்டி உண்டு தினேஷ் வீடே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் அங்கு சில மணிநேரங்கள் இருந்து விட்டுக் கிளம்பினார்கள்..

அம்மு, கவிதா, கண்ணன் மூவரையும் தன் வண்டியில் ஏற்றி வந்து வீட்டில் அர்ஜுன்,

"அம்மு நைட் நான் வர கொஞ்சம் லேட்டாகும் அம்மா கிட்ட சொல்லிடு" என்றான்.

"சரி ண்ணா நான் சொல்றேன். நீ கவனமா போய்ட்டு வா. அப்புறம் அண்ணா வேலை இருந்தும் எனக்காக தானே நீ அங்கிள் வீட்டுக்கு வந்த?" அவர்கள் இருவரும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டு கேட்டாள்.

"யெஸ் டா அம்மு.. நீங்க போற டைம் விக்கி அங்க தான் இருப்பான்னு தெரியும்.
ரொம்ப நாள் கழிச்சு அத்தை மாமா எல்லாரும் போறதால அவன வேலை கொடுத்து வெளிய அனுப்பவும் முடியாது. நீ சங்கடப்படாமலும் இருக்கணும் சோ நான் அங்க வர்றது தான் கரெக்ட் அதான் வந்தேன் டா"

"எனக்குத் தெரியும். நீ வருவேன்னு கண்ணன் கிட்ட சொன்னேன்" என்று கூறி புன்னகைத்தாள்.

"என் வேலைய இன்னக்கு இல்லைன்னா நாளைக்குக் கூட செய்து முடிப்பேன் ஆனா உன்ன அப்படி என்னால விட முடியாது அம்மு மா. எனக்கு உன் சந்தோஷம், நிம்மதி தான் முக்கியம். உனக்கு பிறகு தான் மத்ததெல்லாம்"

"எனக்கு தெரியும் என் அண்ணா எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான்னு" என்று மீண்டும் அவள் புன்னகைக்க,

அர்ஜுனும் ஒரு அர்த்தப் புன்னகையுடன்,
"சரி டா நான் கிளம்பறேன் அம்மா கிட்ட சொல்லிடு" என்று கூறி கிளம்பிவிட்டான்.

அர்ஜுனை அனுப்பிவிட்டு வந்தவள் கவிதா மற்றும் கண்ணனுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டாள்.

என்ன தான் எல்லோருடனும் சிரித்துப் பேசி நேரத்தைக் கழித்தாலும் மனதின் ஓரத்தில் அவள் காதலின் சிந்தனை ஓடிக் கொண்டு தான் இருந்தது.




 

Fa.Shafana

Moderator
நினைவு 6

இரண்டு நாட்கள் கடந்து அன்றைய காலைப்பொழுது அழகாக விடிலைத் துவக்கி இருந்தது. காலையில் எழுந்து குளித்து முடித்து கீழே இறங்கப் போனவளைத் தடுத்தது கீழே இருந்து தாரணியின் குரல்.

"அம்மு! கண்ணன எழுப்பி விட்டுட்டு வாடா. மாமா வெளிய போகணும்னு கூப்பிடுறாங்கன்னு சொல்லு"

"ம்ம்ம்.. சரி அத்த" என்றவள் திரும்பிச் சென்று அவனது அறைக்கதவை மெதுவாகத் தட்ட எந்தப் பதிலும் கிடைக்காமல் போனது. மீண்டும் ஒருமுறை தட்டியவள் தானே திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

"கண்ணா.. டேய் கண்ணா.. எழுந்துருடா. மாமா வெளிய போக உன்ன வர சொல்றாங்க டா" என்றவளின் குரலுக்கு சற்றும் விழித்துக் கொள்ளாமல் தலை முதல் கால் வரை இழுத்து மூடியபடி போர்வைக்குள் உறங்கியவன் தோள் தொட்டு "டேய் தூங்கு மூஞ்சி எழுந்து வாடா" என்றாள் குரலை சற்று உயர்த்தி.

அதற்கும் எதிர்வினை இல்லாது போக வேண்டுமென்றே அவன் சீண்டுவது புரிய அருகில் இருந்த தலையணையே எடுத்து அடிக்க முயன்ற நொடி அவள் மணிக்கட்டை பற்றியிருந்தது ஒரு கதகதப்பான கரம்.

"குட் மார்னிங் கண்ணா" என்று தன் கரம் பற்றி இருந்த அந்த விரல்களின் கதகதப்பில் குனிந்து நோக்கியவள் திகைத்து விழித்தாள் அந்த நீண்ட நெடிய விரல்களை வைத்தே தன்னவனைக் கண்டு கொண்டவள்.

'அத்தான்' என்று அவனை அழைப்பதற்கு தொண்டை வரை வந்த வார்த்தை தொண்டைக்குழியிலே சிக்கிக் கொள்ள அழைக்காமல் வந்து விழுந்தது கண்ணீர்த்துளிகள்.

"குட் மார்னிங் ஆத்மிகா" என்று ஆழ்ந்த குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் புன்னகையில் மலர்ந்திருந்த அவன் முகத்தைக் கண்டு தன் கைகளை உதறிவிட்டு பதறிக் கொண்டு ஓட எதிரே வந்த கண்ணனின் மேல் மோதி நின்றாள்.

"எங்கடி இவ்வளவு அவசரமா ஓடுற?" என்று கேட்டவனிடம் தன் கண்ணீரை மறைக்க வேண்டி தலை குனிந்தவள்

"பிசாசு நீ எங்கடா போய் இருந்த?" என்றாள் சடுதியில் தன் குரலை சரி செய்து கொண்டு.

"அண்ணா ஏர்லி மார்னிங் ஃபார் எ க்லாக் தான் வந்தான். அவன் தூங்கும் போது அங்க குளிச்சா டிஸ்டர்ப்பா இருக்கும்னு கவி ரூம்ல குளிக்க போனேன்" என்று தன் தலையை துவட்டிக் கொண்டே கூறியவனிடம்

"அவர் வந்தது எனக்கு தெரியாது. நீன்னு நினைச்சு அவர எழுப்பி விட்டுட்டேன்டா"
என்றாள் முனகலாக.

"அதுக்கா இப்படி அடிச்சு பிடிச்சு ஓடி வந்த?"
என்று சிரித்துக் கொண்டே கேட்டவனுக்கு பதில் கூறாது "மாமா உனக்காக வெயிட் பண்றாங்க சீக்கிரம் போ" என்றவள் தன்னறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

அவளுக்கு தன்னை நிதானப்படுத்தவும் மனதை சாந்தப்படுத்தவும் அவளவனை எதிர் கொள்ளவும் நேரம் தேவையாக இருந்தது.

'எப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி ரியாக்ஷன் கொடுக்குறார். நடந்ததெல்லாம் மறந்துட்டாரா, சொன்ன வார்த்தைகள எல்லாம் மறந்துட்டாரா? ஆனா என்னால எதையுமே மறக்க முடியாம இருக்கே! சரி தான் நேசவிதை விழுந்தது என் மனசுல தானே? துளிர்த்து வந்த காதல பிடுங்கி எறிஞ்சிட்டு போனவருக்கு அதெல்லாம் மறக்குறது ஈஸி தான் போல!' என தனக்குள்ளே உழன்றவள் வெற்றுப் புன்னகை ஒன்று முகத்தில் படர,

"எனக்கும் ஆசையா தான் இருக்கு அத்தான், நடந்த எல்லாத்தையும் மொத்தமா மறந்துட்டு முன்னாடி இருந்த மாதிரி சந்தோஷமா இருக்கணும்னு. ஆனா அது அவ்வளவு ஈஸி இல்ல எனக்கு. நான் என்ன செய்தாலும் எங்க போனாலும் எல்லாமே உங்களைத்தானே எனக்கு ஞாபகமூட்டுது. என்னோட பெயர் கூட உங்களை ஞாபகமூட்டும் போது எங்க இருந்து நான் உங்களை மறக்குறது?" என்று சன்னமாக முனுமுனுத்துக் கொண்டவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரண்டு தடவை கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த கவிதாவை எதிர் கொண்டாள் முகம் கழுவிவிட்டு வந்தவள்.

"அம்மு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாளைக்கு நைட் வர இருந்த கதிர் அண்ணா இன்னைக்கு மார்னிங் வந்துட்டார்" என்று குதூகலித்தவளிடம்

"ஆமா கவி.. அவர் வந்தது தெரியாது எனக்கு கண்ணன்னு நினைச்சு அவர எழுப்பி விட்டுட்டேன்" என்றவள் அறையை விட்டு வெளியேற அவளைப் பின் தொடர்ந்து வந்த கவிதா
"ஈவினிங் நாம எல்லாரும் வெளிய போகலாம் அம்மு" என்றாள்.

"ம்ம்.." என்றவள் கீழே இறங்கி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

"ஏன் அம்மு ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்ட கலாவின் குரலில் சட்டென்று திரும்பியவள் "தலைவலியா இருக்கு ம்மா" என்று சமாளிக்க "காஃபி ஒன்னு குடி சரியாகிடும்" என்றவருக்கு ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு "அண்ணா கிளம்பிட்டானா?" என்று கேட்டாள்.

"காலைலயே கிளம்பி போய்ட்டான் அம்மு, நீ எழுந்ததும் கால் பண்ண சொன்னான் டா" என்ற கலாவின் பதிலையும் சாந்தா நீட்டிய காப்பியையும் பெற்றுக் கொண்டு கலாவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்து அர்ஜுனை அழைத்திருந்தாள்.

"ஹலோ அம்மு குட் மார்னிங் டா" என்றான் சரியாகக் கணித்து.

"குட் மார்னிங் ண்ணா" என்றவளின் குரல் பிசிறியதை நொடியில் கண்டு கொண்டவன்

"என்னோட அம்மு ரொம்ப தைரியமானவன்னு நம்புறேன்" என்றான்.

"ம்ம்.." என்ற முனகலைத் தவிர வேறு எதுவும் பதில் வரவில்லை அவளிடமிருந்து.

"இன்னைக்கு கண்டிப்பா நான் உன் கூட இருந்திருக்கணும் ஆனா ஆஃபீஸ்ல சில முக்கியமான வேலைகள் இருக்குடா. அதான் ஏர்லியா வந்துட்டேன். அவன்கூடயும் பேசல்ல. வரும் போது அவன் தூங்கிட்டு தான் இருந்தான். இன்னைக்கே வந்து குதிப்பான்னு யாருக்குத் தெரியும்? நீ மேனேஜ் பண்ணிப்ப தானே?" என்றான் படபடவென்று.

அவனது படபடப்பில் தெளிந்தவள் "ஐயோ ண்ணா.. நீ ஒன்னும் யோசிக்காத. உன் வேலைய முடிச்சிட்டு ஆறுதலா வா. நான் இருந்துப்பேன்" என்றாள்.

"அவன்கூட பேசாமலே இருந்தா மத்தவங்க கவனிக்க சான்ஸ் இருக்கு அம்மு. உனக்கு நான் சொல்லித் தான் புரிய வைக்கணும்னு அவசியமில்ல. ஆனா பேசுறது உனக்கு கஷ்டமாவும் இருக்கும் தான் என்ன பண்றது நீ இதக் கடந்து வரணுமே டா? எப்பவும் இதே போல ஒழிஞ்சிருக்க முடியாது. பார்த்து நடந்துக்க டா" என்றவனது குரல் ஏகத்துக்கும் தவித்திருந்தது.

"நீ கவலைப்படாத ண்ணா. நான் மேனேஜ் பண்ணிடுவேன்" என்றவள் "அம்மா கூப்பிடுறாங்க ஃபோன வைக்குறேன். நீ ஒன்னும் யோசிக்காத ண்ணா" என்று அழைப்பைத் துண்டித்தாள்.

காலை உணவுக்கு அனைவரும் அமர்ந்திருந்த வேளை படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்த கதிரின் பார்வை இம்மியும் வேறெங்கும் நகராது அவளையே துளைத்துக் கொண்டிருக்க அவனது பார்வை தந்த உணர்வில் படபடவென்று அடித்துக் கொண்ட நெஞ்சத்தை மறைத்து உணர்ச்சியற்ற பார்வையொன்றை அவன் புறம் வீசிவிட்டு தலை குனிந்து கொண்டாள்.


வார்த்தைகளை சாட்டையாய் சுழற்றி அவள் உணர்வுகளை பலமாக அடித்து வலிக்க வைத்து விட்டுச் சென்றவன் இன்று விழி வீச்சில் அவள் இதயத்தை துளைத்துக் கொண்டிருக்க அவன் பார்வையில் அவளுக்கு கோபம் துளிர்க்க கூடவே சுய பச்சாதாபமும் கிளை விட்டது.

'எதுக்கு இப்பிடி பார்த்துட்டு இருக்கார்? இன்னும் என் மனசுல அந்தக் காதல் இருக்கான்னு ஆராய்ச்சி பண்றாரோ? காதல் இருக்கு இதய சமாதியில அடங்கிப் போய் இருக்கு, ஒவ்வொரு முறையும் வெளிய வந்து பேயாட்டம் போட்டுட்டு என்ன டயர்டாக்கிட்டு மறுபடியும் போய் அடைஞ்சிடும்னு இவருக்கு தெரியுமா என்ன?' என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவள் அறியாமலே கண்ணீர் கசிந்து விட சட்டென்று தன்னிலை அடைந்தவள் இயல்புக்கு மீண்டிருத்தாள்.

"வா ப்பா கதிர்.. உட்காரு" என்று அவனுக்கு தன் முன்னால் இருந்த இருக்கையை பார்த்தீபன் காண்பிக்க
அமர்ந்து கொண்டான் அவன்.

கலகலப்பாக முடிந்தது காலை உணவு வேளை.
ஆனால் கதிருடன் அவள் பேசாமல் தவிர்த்ததை கண்ணனைத் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை.

"அண்ணா.. ப்ளீஸ் ண்ணா" என்ற கவிதாவை ஏறிட்டவன்

"இன்னைக்கு முடியாது கவி. நாளைக்கு போகலாம் டா" என்று தன் வண்டியில் ஏறிய கதிர் அதை உயிர்ப்பிக்க காலால் தரையில் உதைத்தவள் அவனைப் பார்த்து உதடு சுழித்துவிட்டு உள்ளே சென்றாள்.

''என்ன மேடம் உங்க பருப்பு உங்க அண்ணா கிட்ட வேகல்லை போலயே?"
என்று கிண்டலடித்த கண்ணனின் தலையில் கொட்டியவள்

"நானே கடுப்புல இருக்கேன் வாய வெச்சிட்டு சும்மா இருக்கமாட்டியா நீ? எவ்வளவு ஆசையா மால்லுக்கு போகலாம்னு கேட்டேன் முடியாதுன்னு சொல்லிட்டு அவர் போறார்னா நீ கிண்டல் பண்றியா?" என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கருணாகரன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

"அவன், அர்ஜுனப் பார்க்கப் போறான் கவி. ரெண்டு வருஷமாச்சுல்ல அவங்க மீட் பண்ணி? அதான் ஈவினிங் அர்ஜுன் வரும் வர காத்திட்டு இருக்க பொறுமை இல்லாம இப்பவே கிளம்பிட்டானா டா. அதான் நாளைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான்ல? நாளைக்கு போ டா" என்றார் வாஞ்சையாக.

"அண்ணா ஏதோ முக்கியமான வேல இருக்குன்னு சொல்லி இருந்தான் மாமா. ஆஃபீஸ்ல இருக்கானா வெளிய எங்கேயாவது போய் இருப்பானான்னு தெரியாது" என்ற அம்முவிற்கு தவிப்பாகவும் இருந்தது கதிரை சந்திக்கும் போது தன் அண்ணன் ஏதாவது பேசிவிடுவானோ என்று.

"ஆஃபீஸ்ல அர்ஜுன் இல்லைன்னா கதிர் கால் பண்ணி கேட்டுப்பான் அம்மு. அவங்க ரெண்டு பேருக்கும் இடைல நாம போனா நமக்கு தான் நோஸ் கட்" என்றவர் தொலைக்காட்சியில் கவனமானார்.

அர்ஜுனின் அலுவலகத்தில் நுழைந்தவன் வரவேற்பில் நின்ற பெண்ணிடம் சென்று "குட் மார்னிங்.. ஐ ஆம் கதிர்.." என்ற நொடி கம்பீரமான அந்தக் குரலில் நிமிர்ந்து

"குட் மார்னிங் சார்.. அர்ஜுன் சார் மீட்டிங்ல இருக்கார். நீங்க வந்தா அவரோட ரூம்ல வெயிட் பண்ண சொல்லி இருக்கார்" என்ற அந்தப் பெண்ணின் கூற்றில் முதலில் திகைத்தவன் பின் தன்னை அவன் எதிர்பார்த்திருக்கிறான் என்று கண்டு கொள்ள உதடுகளில் புன்னகை பூத்தது.

"ஓகே.. தேங்க் யூ" என்று அதே புன்னகையுடன் கூறியவன் அர்ஜுனின் அறையை நோக்கி நகர்ந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே எதுவும் மாறாமல் இருந்த அந்த அறையில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் அமர்ந்த கதிர் தன் கைபேசியில் கவனமாக அவனறியாமலே நேரம் கடந்திருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து தன்
அறைக்குள் நுழைந்த அர்ஜுன் நேராக வந்து நின்றது கைபேசியில் மூழ்கி இருந்த கதிரின் முன்னால் தான்.

அவனை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன் ''சோ உனக்கு இங்க வர்றதுக்கு ரெண்டு வருஷம் தேவைப்பட்டிருக்குல்ல மச்சி?" என்றான்.

அவன் குரலில் நடப்பிற்கு வந்த கதிர் "டேய் மச்சான்.." என்று துள்ளியெழுந்து அர்ஜுனை அணைத்துக் கொள்ள மாறி அணைக்காமல் நின்றிருந்தான் அர்ஜுன்.

சில நொடிகள் கடந்து அவனை விட்டு விலகி நின்றவன் "என் மேல கோவமா இருப்பன்னு தெரியும் டா. ஆனா நான் ஏன் வராம இருந்தேன்னா.."
என்றவனை முடிக்க விடாமல்

"எப்பிடி இருக்க மச்சி? பிசினஸ் எல்லாம் எப்பிடி போகுது?" என்றான் அர்ஜுன் சலனமே இல்லாத குரலில்.

"என்னடா இவ்வளவு கூலா பேசுற? என் மேல கோவமா இருப்பன்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனா நீ என்னடான்னா.." என்ற கதிரிடம்

உரிமை இருக்குற இடத்துல தானே கோவத்த காட்ட முடியும்? உரிமை இல்லாத இடத்துல காட்டப்படும் கோவத்துக்கும் மதிப்பு இல்ல மச்சி" என்றான் வெற்றுக் குரலில்.

"என்னடா ஏதோ மாதிரி பேசிட்டு இருக்க?" என்றவன் "சாரி டா.. நான் உன் கிட்ட பேசி உண்மைய சொல்லி இருக்கணும்" என்ற கதிரை ஏறிட்டு

"கடந்து போனதையும், நடந்து முடிஞ்சதையும் பேசி பிரயோஜனம் இல்ல மச்சி விடு" என்று அமர்ந்து கொண்ட அர்ஜுன் அலுவலக உதவியாளரை அழைத்து பழச்சாறு எடுத்து வரப் பணித்தான்.

அர்ஜுனின் நடவடிக்கைகளை உற்று கவனித்த கதிரிற்கு அவன் தன் மேல் உள்ள உச்ச பட்ச கோவத்தினால் தன்னைத் தவிர்ப்பது புரிய அமைதியாக இருந்துவிட்டான்.

உதவியாளர் எடுத்து வந்த பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அறையின் ஜன்னலருகே சென்று பருகிக் கொண்டிருந்தவன் அர்ஜுன் திடீரென

"என்னோட அம்மு எந்த விதத்துல குறைஞ்சு போய்ட்டா டா. எதுக்கு அவள வேணாம்னு சொன்ன?"
என்றான் உணர்ச்சி துடைத்த மரத்துப் போன குரலில்.

அர்ஜுனுக்கு இது தெரிந்திருக்கிறது என்பது அதிர்ச்சி எனில் அவன் எடுத்த எடுப்பில் இப்படிக் கேட்டு வைத்தது பெரும் அதிர்ச்சியாக சிலையென சமைந்துவிட்டான் கதிர்.

"சொல்லு டா எதுக்கு அப்பிடி சொல்லிட்டு அவளுக்கு நரகத்த கண் முன்னாடி காட்டிட்டுப் போன? நடைப் பிணமா அவள நடமாட விட்டுட்டல்ல? அவ மனசார சிரிச்சி ரெண்டு வருஷமாகுது டா" என்றான் ஆற்றாமைக் குரலில்.

கதிர் ஏதோ சொல்ல வரவும் கை நீட்டித் தடுத்தவன் "நீ அம்முக்கிட்ட பொய் தான் சொல்லியிருக்க. உன்னோட இந்தக் கண்கள்ல அவளுக்கான காதல நான் பார்த்திருக்கேன்" என்றான்
கதிரின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

திடுக்கிட்டு விழித்தவன்
"சொல்றேன் மச்சான். அவ இல்ல டா. நான் தான் குறைஞ்சு போய்ட்டேன். நீங்க எல்லாரும் நினைக்குற மாதிரி நான் நல்லவனா இருக்கல்ல மச்சான்" என்று சொன்ன கதிர் அடுத்து சொன்ன வார்த்தையில் அதிர்ந்து விழிப்பது அர்ஜுனின் முறையானது. அடுத்த நொடி பாய்ந்து வந்து அவனது கழுத்தைப் பிடித்தவன் பொய் சொல்லாத கதிர் என்றான் உறுமலாக.

 

Fa.Shafana

Moderator
நினைவு 07

"ஐ வாஸ் எ ட்ரக் எடிக்ட்" என்று கதிர் சொன்ன வார்த்தையைக் கிரகிக்கவே சில விநாடிகள் தேவைப்பட்டது அர்ஜுனிற்க்கு. அடுத்த நொடி பாய்ந்து வந்து அவனது கழுத்தைப் பிடித்தவன் "பொய் சொல்லாத கதிர்" என்று உறும

அவனது கைகளைப் பற்றி தன்னை விடுவித்துக் கொண்டவன், "நான் எதுக்கு மச்சான் பொய் சொல்லணும்? அதுவும் இப்பிடி ஒன்னு சொல்லி எதுக்கு என் இமேஜ கெடுத்துக்க என்ன அவசியம் எனக்கு?" என்றான் அர்ஜுனைப் பார்த்தபடியே.

"ஆனா எப்பிடி உனக்கு இந்தப் பழக்கம்? உன்ன எவ்வளவு நம்பி இருக்கோம் நாங்கெல்லாம் ஆனா நீ.." என்றவன் குரல் ஆற்றாமையாக ஒலித்தது.

"கெட்ட சகவாசம் தான் மச்சான். எம்.பி.ஏ படிக்க காலேஜ் ஜாயின் பண்ணின டைம் கூட இருந்தவனுங்க ட்ரக்ஸ் எடுப்பானுங்க" என்றவனின் குரல் தயக்கத்துடன் வந்தது.

அர்ஜுன் தன்னை முறைப்பதைக் கண்டு, "இப்போ அந்தப் பழக்கம் இல்லடா விட்டுட்டேன். டாக்டர் கிட்ட ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்துக்கிட்டேன் மச்சான்" என்றவன்

"நான் தப்பானவன் மச்சான். அதான் என் ஆத்மிகாவுக்கு சரியா வரமாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவ வந்து காதலிக்கிறேன்னு சொல்லுவான்னு நானே எதிர்பார்க்கல்ல. நான் தப்பானவா இருக்கும் போது எதுக்கு என்னை லவ் பண்ணனும் அறிவில்லாதவன்னு அந்த நிமிஷம் அவ மேல வந்த கோவம், என் லைஃப்ல அவ இல்லைங்குற தவிப்பு எல்லாம் சேர்த்து அவகிட்ட கோவமா பேசிட்டேன்" என்றவனை ஆழ்ந்து பார்த்து

அவனது என் ஆத்மிகா என்ற விளிப்பில் புன்னகை மலர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, "அவ வந்து பேசும் போதும் நீ ட்ரக்ஸ் எடுத்திருந்திருப்ப, ஆம் ஐ கரெக்ட்?" என்றான் அர்ஜுன்.

"யெஸ்.. மச்சான்.. அந்த டைம் இங்க வந்திருந்த ரெண்டு நாளும் நைட்ல மட்டும் தான் ட்ரக்ஸ் எடுத்தேன்" எ‌ன்று கதிர் கூற

சட்டென்று ஞாபகம் வந்தவனாக "அதான் டே டைம்ல தூங்கிட்டே இருந்திருக்க, நாங்களும் டயர்ட்ல தூங்குறன்னு முட்டாள் மாதிரி நினைச்சிட்டு இருந்திருக்கோம்" என்றான் ஆற்றாமைக் குரலில்.

அதற்குப் பதிலளிக்காமல் தவிர்த்தவன்,
"அன்னைக்கு அம்மு என் மனச ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டா அவ எனக்கு இல்லைங்குற நினைப்பே நரகமா இருந்திச்சி மச்சான் அதான் மார்னிங் ஊருக்குக் கிளம்பிட்டு இருந்த நான் ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டேன். யூஸுவலா டே டைம்ல அந்த அளவு எடுக்கவே மாட்டேன் அன்னைக்கு என்னை கன்ட்ரோல் பண்ணிக்க அது தான் வேணும்னு தோனிச்சி. நான் ட்ரக்ஸ் எடுத்த
அடுத்த நிமிஷம் அம்மு கதவத் தட்டிட்டு உள்ள வந்துட்டா, அவ ரூம்ல வந்து நிக்கவும் போதைல மனசுல இருந்த காதல மறைக்க முடியாம எங்க அவகிட்ட தப்பா நடந்துப்பேனோன்னு பயம் வந்து அதே கண் மண் தெரியாத கோவமா மாறிடிச்சி" என்றான்.

"நீ அவகிட்ட என்ன பேசினன்னு ஞாபகம் இருக்கா மச்சி?" என்று கேட்ட அர்ஜுனிடம் மறுப்பாகத் தலையசைத்து

"அவ வந்ததும் பேசினதும் ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் நான் கோவமா திட்ட ஆரம்பிச்சேன் ஆனா என்னல்லாம் சொன்னேன்னு சத்தியமா ஞாபகம் இல்லடா" என்றவன் "அந்த நிமிஷம் நான் நானாகவே இல்லையே எப்பிடி மத்தது ஞாபகம் இருக்க?" என்று அர்ஜுனிடமே கேட்டு வைத்தான்.

"நீ அம்முவ ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கடா"

"என்ன சொல்லி திட்டினேன்னு சொன்னாளா?"

"இல்ல.. இதுவரை அத என்கிட்ட சொன்னதே இல்ல. ஆனா அத்தான் ரொம்பப் பேசிட்டார் ண்ணா எனக்கு வலிக்குதுன்னு அவ அன்னைக்கு கதறின கதறல் இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டு இருக்குடா"

"ஆனா அவ மனசுல இன்னும் நான் இருக்கேன்ல மச்சான்?" என்று புன்னகைத்தவனைப் புரியாமல் பார்த்தான் அர்ஜுன்.

'அவ்வளவு ஈஸியா அவ உணர்வுகள இவன் கிட்ட வெளிக்காட்டி இருக்கமாட்டாளே?' என்று நினைக்கும் போதே,

"மார்னிங் நான் வந்ததும் அவள ரூம்ல போய்ப் பார்த்தேன் டா. தூங்கிட்டு இருந்தா, பக்கத்துல போய் ஆத்மிகான்னு மெதுவா கூப்பிட்டேனா தூக்கத்துல சிரிச்சிக்கிட்டே அத்தான்னு சொல்லி எட்டி என் கையப் பிடிச்சுட்டா கனவுன்னு நினைச்சிருப்பா போல" என்று இழகிய குரலில் கூறியவனை முறைத்த அர்ஜுன்

"ஒரு பொண்ணோட ரூம்க்கு அவ தூங்கும் போது போய் இருக்க நீ. தப்புடா.." என்றான் பட்டென்று.

"ஒரு பொண்ணுன்னு யாரையோ சொல்ற மாதிரி சொல்ற. அவ என்னோட ஆத்மிகா. இந்த கதிரோட ஆதாரமே அவ தான் மச்சான். அவ என் லைஃப்ல வேணும்னு தான் ட்ரக்ஸ் பழக்கத்த விட ட்ரை பண்ணேன். ட்ரீட்மென்ட், கவுன்சிலிங் எல்லாம் போய் மனுசனா மாறி வந்திருக்கேன். அதனால தான் இத்தன நாளா இங்க வராம இருந்தேன். இப்போ ஆத்மிகாவோட அத்தானா மட்டுமே வந்திருக்கேன்" என்றான் பொங்கி வந்த நேசத்தை கண்களில் தேக்கி வைத்து.

"இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இவ்வளவு பேசுறவன் ஏன்டா முன்னமே வரல்ல. வந்து அவக்கிட்ட உண்மைய சொல்லி இருக்கலாம்ல. அதுக்கப்புறம் அவ என்ன முடிவு எடுக்குறாங்குறது வேற. நீ ட்ரக்ஸ் எடுக்குறத சொல்லி இருந்தாக் கூட அம்மு இவ்வளவு ஹர்ட் ஆகி இருக்கமாட்டா. அப்போ கூட உன்ன வெறுத்து இருக்கமாட்டா உன் கூடவே இருந்து இதுல இருந்து நீ வெளிய வர ஹெல்ப் தான் பண்ணி இருப்பா. ஆனா என்னவோ எல்லாம் பேசி அவள ஹர்ட் பண்ணிட்டுப் போனவன் இன்னைக்கு தான் திரும்ப வந்திருக்க. எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா இடைல அந்த விக்கி வேற"

"விக்கி என்ன பண்ணான் மச்சான்? அவளுக்கு நல்ல லைஃப் கிடைக்கும்னு நினைச்சு தான் விட்டு விலக முடிவு செஞ்சேன்" என்றவனை தொடர்ந்து பேச விடாமல் இடையிட்ட அர்ஜுன்,

"பைத்தியமே தான் நீ" என்றான் முறைத்துக் கொண்டே, அத்தோடு

"அவ்வளவு ஈஸியா உன்னை மறக்கவும்மாட்டா, வேற யாரையும் ஏத்துக்கவும்மாட்டா. அவளுக்கு அவ்வளவு காதல் உன் மேல" என்றவன் ஞாபகம் வந்தவனாக

"நீ தான் அவள ரொம்ப நா‌ளா லவ் பண்றல்ல அத ஏன்டா சொல்லாம இருந்த? என்றான்.

"அவ படிப்பு முடிய சொல்லலாம்னு இருந்தேன். அதுக்கு முன்ன எதுக்கு அவ மனசக் கெடுக்கணும், எங்க போகப் போறா? என் ஆத்மிகா தானேன்னு ஒரு நம்பிக்கை" என்று படபடவென பேசிக் கொண்டு வந்தவன்,

"ஆனா அதுக்கு முன்னாடி நான் தடம்புரண்டுட்டேன் மச்சான்" என்றான் உள்ளே போன குரலில்.

செய்தது பெரும் தவறென்ற குற்ற உணர்வு அவளை வதைக்கிறதென புரிந்து கொண்ட அர்ஜுன் அவனை சீண்டுவிட எண்ணி

"காலேஜ் போனவ அங்க யாரையாவது லவ் பண்ணிட்டு வந்திருக்கணும்டா, அப்போ இப்பிடி என் ஆத்மிகான்னு பேசுவியா நீ? என்றான்.

"டேய் நீ அவளுக்கு அண்ணன்டா அத ஞாபகம் வெச்சிக்க" என்றவனிடம்

"அவளோட இந்த அண்ணன் கிட்ட தான் நீ இப்போ பேசிட்டு இருக்க அத மறந்துட்டியா?" என்றான் இவனும் விடாமல்.

"ஓகே.. வட் நெக்ஸ்ட்? அம்மு கூட பேசுனியா?"

இல்லையென்றவன் காலையில் நடந்ததைக் கூறி என்னைப் பார்த்து அரண்டு ஓடினா மச்சான், அழுதிருப்பான்னு தோனிச்சிடா" என்க

"இந்த ரெண்டு வருஷமா அதத் தான் மனசுக்கு வஞ்சகம் இல்லாம செய்றா" என்ற அர்ஜுன் இத்தனை நாட்களில் அவளின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவனுக்கு தெரிந்தளவில் கூறியிருந்தான்.

"தப்புப் பண்ணிட்டேன்ல மச்சான், ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன்ல" என்றவன் அமர்ந்து தலையைக் கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு குனிந்து நிலத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீ தான் இத சரி பண்ணணும் மச்சி. அவகிட்ட பேசு, சண்ட போடுவா, அழுவா இந்த ரெண்டு வருஷமா அனுபவிச்ச வலிய உன் மேல கோவமாத் தான் காட்டுவா ஆனா உன்ன புரிஞ்சிப்பா. அவ்வளவு லவ் இருக்கு" என்றவன்

"சரி வா வீட்டுக்குப் போகலாம்" என்றான் அர்ஜுன்.

வண்டியின் அருகே சென்றவனை மறித்து "நைட் தனியாத் தான் ட்ரைவ் பண்ணிட்டு வந்தியா? லைட் நைட், ரொம்ப தூரம் தனியா வர்றது சேஃப் இல்ல மச்சி. கூட யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்றவனிடம்

"இல்ல மச்சி கம்பெனி ட்ரைவர கூட்டிட்டு தான் வந்தேன். மார்னிங் தான் கிளம்பிப் போனான் இங்க யாரோ உறவுக்காரங்க இருக்காங்க அங்கேயும் போகலாம்னு தான் வந்தான்" என்ற கதிர் தன் வண்டியில் ஏற அர்ஜுனும் தனது வண்டியில் ஏறி அதை உயிர்ப்பித்தான்.

அன்றிரவு உணவு வேளை முடிய தோட்டத்தில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார் அனைவரும்.

தினேஷைக் அழைத்துக் கொண்டு விக்னேஷும் வந்திருந்தான்.

அர்ஜுன் அருகே அமர்ந்திருந்த தினேஷ்
"அர்ஜுன்.." என்று மெதுவாக அழைக்க,

"ஆ.. சொல்லுங்க அங்கிள்" என்றான் அவன்.

"எனக்கு மனசுல பட்டத சொல்றேன் ஒன்னும் நினைக்காத"

"என்ன அங்கிள் புதிர் போடுறீங்க? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க"

"நம்ம அம்முவுக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சா நல்லா இருக்கும்னு தோனுது"
என்றார் பட்டென்று.

அதை சற்றும் எதிர்பாராதவன் புன்னகைத்து "பார்க்கலாம் அங்கிள். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ கடவுளோட சித்தம் இருந்தா கண்டிப்பா நடக்கும் தானே?" என்க,

"கண்டிப்பா அர்ஜுன். பார்த்தி கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனா கருணா கூடவே இருந்ததால ஒன்னும் சொல்ல முடியல்ல அதான் உன்கிட்ட சொன்னேன். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சி இதப் பேசி சங்கடம் வந்துடாம இருக்கணும்ல? அவளுக்கு எது நல்லதுன்னு உனக்குத் தெரியாததா என்ன? அதான் உன்கிட்டயே சொல்லிட்டேன் என்றார்"

மெலிதாகப் புன்னகைத்தவன் "நான் பார்த்துக்குறேன் அங்கிள்" என்றான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க தொழில் விடயமாக இருக்குமென்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டனர்.

வீட்டிற்கு செல்லும் வழியில் "அர்ஜுன் கிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க" என்றான் விக்னேஷ்.

நட‌ந்ததை தினேஷ் கூற நம்ப முடியாத பார்வை பார்த்தவன்

'என் அப்பாவுக்கே நான் அம்முவிக்கு சரியா வர மாட்டேன்னு தெரிஞ்சிருக்கு, இல்லைன்னா அவரோட பிள்ளை நான் இருக்க கதிர அம்முவுக்கு பேசுவாரா?' என்று நினைத்து குறுநகை சிந்தினான்.

"ஏன் ப்பா உங்களுக்கு அப்பிடி ஒரு எண்ணம் வந்தது?"

"ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சி பார்த்தேன்ல அதனால கூட அப்பிடி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். அதோட
அம்மு, அர்ஜுனோட கைகளுக்குள்ள வளர்ந்தவ. அவளுக்கு அவனையே மாதிரி பொறுப்பா, மத்தவங்க மேல கேரிங்கா இருக்குற கதிர் லைஃப் பாட்னரா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் மனதில் உள்ளதை உள்ளபடி.

அவர் சொல்வதில் உள்ள நிதர்சனம் புரிய சம்மதமாக தலையசைத்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டான்.
தனக்கானவள் அவளில்லை என்ற புரிதல் அவனுள் ஆழப் பதிந்தது.

கதிரைத் தவிர்க்க எண்ணி அவனுக்குப் போக்குக் காட்டியவள் அறியவில்லை தன்னிலை மறந்தாலும் அவன் மேல் கொண்ட நேசம் மாறாதென்று!

பெண்ணவளின் காதலை யாசித்தவனுக்கு அவளுடன் கை சேர வாய்ப்பிருந்தும் தயங்கி நிற்கும் ஒரு தருணமதை காலம் பரிசளிக்கும் நாள் மிக அருகில்.






 
Status
Not open for further replies.
Top