எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலா காயும் வேளை - டீசர்

Status
Not open for further replies.

NNK18

Moderator
டீசர் 1



காலையில் நடந்த களேபரத்தில் ஏற்கனவே வேலைக்கு செல்ல தாமதமாகியிருக்க, இதில் செல்லும் வழியில் ஏற்பட்டிருந்த விபத்து வேறு தோழிகள் இருவருக்கும் எரிச்சலை உண்டு பண்ணியிருந்தது.



“எல்லாம் உன்னால தான் டி. காலையிலேயே எக்குத்தப்பா கனவு கண்டு கத்தி... ப்ச், உன்னால தான் லேட்டு.” என்று தன்னருகே நின்றிருந்த தோழியை பிரத்யூஷா இடிக்க, வலித்த கையை தேய்த்துக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தாள் சஞ்சீவனி.



இரண்டு நொடிகள் என்றாலும் அவளின் கண்சிமிட்டா பார்வையில், “இப்போ எதுக்கு என்னை இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்த்துட்டு இருக்க?” என்று எரிச்சலாக வினவினாள் பிரத்யூஷா.



“உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே. சீக்கிரம் வயசாகுற மாதிரி ஃபீலிங் இருக்கா என்ன?” என்று சம்பந்தமே இல்லாமல் சஞ்சீவனி வினவ, புருவம் சுருங்க அவளை நோக்கி திரும்பினாள் பிரத்யூஷா.



கண்களின் வழியே அவளின் கேள்வியை புரிந்து கொண்டவளாக, “இல்ல இப்போ ரீசண்ட்டா நீ எனக்கு அம்மாவா மாறிட்டு வர மாதிரி எனக்கு தோணுது. நீ என்ன நினைக்குற?” என்று தோளை குலுக்கியபடி வினவினாள் சஞ்சீவனி.



“இது மட்டும் ரோடா இல்லாம இருந்துச்சுன்னா, உன்னை புரட்டி போட்டு மிதிக்கலாம்னு நினைக்குறேன் சஞ்சு.” என்று பல்லைக் கடித்தபடி கூற, “கூல் கூல் பிரத்யூ.” என்று தோழியை சமாதானப்படுத்தியவள் எதேச்சையாக திரும்ப, அவள் கண்ணில் நொடிக்கும் குறைவாக விழுந்தவனைக் கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டாள்.



அவள் வாயிலிருந்து வெளிவராத குரல் மனதிற்குள் மட்டும், ‘இது அவன் தானா?’ என்றது.




*****



தன் சுகமான உறக்கத்திற்கு ஊறு விளைந்ததால் மெல்ல கண் மலர்த்தி பார்த்தாள் அவள். எப்போதும் தலைக்கு மேலே தொங்கும் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு பதில் கும்மிருட்டாக இருந்த வானத்தையே கண்டாள் அவள்.



உண்மையில் அது வானம் என்றெல்லாம் தெரியவில்லை. இருட்டாக இருந்ததாலும், இரவின் பனியை உணர்ந்ததாலும் அவளின் மூளை அப்படி எடுத்துக்கொண்டது!



சட்டென்று உண்டான அசாதாரண சூழலின் காரணமாக தூக்கத்திற்கு சொக்கிய கண்கள் நன்றாக விழித்துக் கொள்ள, தன் பெரிய கண்களை சுழற்றினாள்.



எங்கும் இருள் மயமாக இருக்க, அந்த குளிரிலும் பெண்ணவளிற்கு வியர்க்க துவங்கியது.



அப்போது அவள் பின்கழுத்தில் சூடான மூச்சுக்காற்றை உணர, வெளியே குதித்து விடும் அளவிற்கு துடித்த இதயத்தை மெல்ல கட்டுப்படுத்தி பின்னே திரும்பிப் பார்த்தாள்.



அவளின் கண்களுக்கு வெகு அருகில் மின்னிய அந்த பழுப்பு நிற கண்களை கண்டதும் தூக்கிவாரிப்போட, அதே வேகத்தில் பின்னே சாய்ந்தாள்.



அந்த கண்களுக்கு கீழே வெள்ளையும் சிவப்புமாக தெரிந்த கோரப்பற்கள் அடுத்து அவளின் பார்வையில் விழ, பயத்தில் கத்துவதற்கு கூட சத்தம் எழும்பவில்லை அவளிற்கு.




அப்போதென்று பார்த்து, வானத்தில் பளீரென்று முதல் மின்னல் மின்ன, அந்த வெளிச்சத்தில் எதிரே தெரிந்த முழு உருவத்தை கண்டவளின் குரலுக்கு இம்முறை தொண்டைக்குழி வழிவிட்டது போலும். அவளின் குரல் அந்த இடத்தையே அதிரச் செய்யும் அளவிற்கு இருந்தாலும், அதே சமயம் ஒலித்த இடியின் சத்தத்தில் அமிழ்ந்து மறைந்து போனது.

உங்க கருத்துகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பதிவிடவும்.


நிலா காயும் வேளை - கருத்து திரி
 
Last edited:

NNK18

Moderator
டீசர் 2



தன் தோழியிடம் வம்பு வளர்த்து, அவள் வெளியே விரட்டி விட, சஞ்சீவனியும் சிரித்துக் கொண்டே உள்ளறையிலிருந்து வெளியே வந்தாள்.



அப்போது, “எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் வென்னிலா லாட்டே அண்ட் ஒன் கோல்ட் காஃபி பிளீஸ்.” என்ற கம்பீரக் குரல் அவளை தடுத்து நிறுத்த, அக்குரல் நன்கு பரிச்சயப்பட்டது போல பட்டென்று அவளின் மூளைக்கு தெரிந்து போனது வந்தது அவனென்று.



அங்கு வேறு யாரும் இல்லாததால், அவனை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவளையே சேர, ஒருவித பதட்டத்துடன், அவனை நிமிர்ந்தும் பார்க்காமல், “டென் மினிட்ஸ் சார்.” என்றாள்.



அவள் சாதாரணமாக இருந்திருந்தால், அவனும் கடந்து சென்றிருப்பானோ என்னவோ. அவளின் பதட்டமான உடல்மொழியை கண்டு கொண்டவன், சிறு புருவச்சுழிப்பை மட்டும் வெளிப்படுத்தி, “இட்ஸ் ஓகே. ஐ வில் வெயிட்.” என்று அவள் மறுமொழி கொடுப்பதற்கு இடம் கொடுக்காதவனாக, அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு அதே இடத்தில் நின்றான்.



‘ஐயையோ, இங்கேயே நிக்க போறானா!’ என்று அதிர்ந்தவள், அவனிடம் அதை சொல்லவும் முடியாமல், தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.



மனதிற்குள் பலவித கேள்விகள் எழ, அதற்கு இடையே கைகள் அதன் வேலையை சரியாக செய்து வந்தன.



அவள் கூறிய பத்து நிமிடங்களில் இரு பானங்களையும் தயாரித்தவள், அப்போதும் குனிந்த தலை நிமிராமல் அவனிடம் நீட்ட, அவனோ அதை வாங்காமல் இருந்தான்.



‘என்னடா இது?’ என்ற கேள்வியுடன் அனிச்சை செயலாக அவனை நிமிர்ந்து பார்க்க, அதற்காகவே காத்திருந்ததை போல, அவள் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டான்.



அப்போது தான் அவனை நேருக்கு நேர் பார்த்ததை உணர்ந்தவள், சட்டென்று டிஸ்யூ பேப்பரை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.



அவள் தன்னை நிமிர்ந்து பார்த்ததிலிருந்து, அங்கிருந்து வேகமாக நகர்ந்தது வரை தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தவனிற்கு அவளை பார்த்த நினைவும் எழ, ‘இவகிட்ட ஏதோ வித்தியாசமா தெரியுது. எதுக்கு என்னை பார்த்து பயந்து ஓடனும்? ஹ்ம்ம், இதையும் என்னன்னு கண்டுபிடிக்குறேன்.’ என்று சொல்லிக் கொண்டான்.




அவனிடமிருந்து தப்பித்து (!!!) சென்றவளோ, ‘என்னைத் தேடி தான் வந்துருப்பானோ?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

உங்க கருத்துகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பதிவிடவும்.

நிலா காயும் வேளை - கருத்து திரி
 
Last edited:

NNK18

Moderator
டீசர் 3



அந்த இடம் முழுவதுமே சேற்றினால் நிரம்பியிருந்தது. மேலும், கும்மிருட்டாக இருந்த இடத்தில், எங்கு கால் பதித்து, எப்படி நடப்பது என்றே சஞ்சீவனிக்கு புரியவில்லை.



அப்போது சர்வஜனனின் ஜில்லென்ற கரம் அவளின் கரத்தை இறுக்கமாக பற்ற, ஜிவ்வென்று உள்ளுக்குள் வெப்பம் பரவுவதை உணர்ந்தாள் அவள். ஆனால், அந்த ஜிவ்வென்ற உணர்வு எதனால் என்று யோசிக்கும் முன்னரே அவனின் குரல் அவளின் சிந்தனையை கலைத்திருந்தது.



“இங்க பாதை வழுக்குற மாதிரி இருக்கு. சோ, கேர்ஃபுல்லா நட.” என்று கூறியவன், முன்னே நடக்க, அவளோ அவன் கைப்பாவையை போல சுயவுணர்வின்றி அவன் பின்னே நடந்தாள்.



அவன் எதற்கோ நிற்க, அதை உணராமல், அவன் மீதே மோதிக் கொள்ள, அதில் அவளுக்கு என்னவாகிற்று என்று பார்ப்பதற்காக திரும்பினான் சர்வஜனன்.



சரியாக அதே சமயம், கருநிற வானத்தில் மின்னல் வெட்டி அந்த இடத்தை நொடிப்பொழுது வெளிச்சமாக்க, இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர்.



அவனின் பழுப்பு விழிகளிலேயே அவளின் விழிகள் நிலைத்து விட, அவனின் பார்வையோ, பாவையின் இளஞ்சிவப்பு அதரங்களில் நிலை கொண்டிருந்தது.



அப்போது திடீரென்று அந்த இடத்தில் கேட்ட உறுமல் சத்தத்தில் இருவரும் தங்கள் மோன நிலையிலிருந்து வெளிவந்தனர். வெவ்வேறு திசையில் திரும்பி இருந்தாலும், இருவரின் மூச்சுக்காற்று ஓசை கூட மற்றவர்களுக்கு தெளிவாக கேட்டது. காரணம், அத்தனை அருகில் நெருங்கி நின்றிருந்தனர்!



முதலில் தெளிந்த சர்வஜனன், அவளை நோக்காமல், “இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பனும். எதுவா இருந்தாலும் மார்னிங் வந்து பார்த்துக்குறேன்.” என்று கூற, அவளோ பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை.



அதை உணர்ந்து கொண்டவனாக, முன்போலவே அவளின் கரத்தை பற்றியபடி நடந்தான்.



ஆனால், சற்று நேரத்திலேயே, அந்த உறுமல் சத்தம் இவர்கள் செல்லும் வழியில் கேட்பது போலவும், நொடிகள் கடக்க, அந்த சத்தம் நெருங்கி வருவதை போலவும் இருக்க, முன்னேறி செல்வது ஆபத்து என்பதை அறிந்து, சட்டென்று அவளுடன் அருகிலிருந்த பாறைக்கு பின்னே மறைந்தான்.



அந்த பாறை சற்று பெரிதாக இருக்கவே, இருவரையும் கச்சிதமாக மறைத்தது.



சஞ்சீவனிக்கு நடப்பது கனவா நனவா என்றே புரிபடவில்லை. அப்போது அவளின் மூளை ஏதோ செய்தியை அனுப்பி அவளை சுயத்தை அடைய பணித்தது.



மூளை கூறிய செய்தியில் சட்டென்று கீழே பார்க்க, சர்வஜனனின் கரமோ அவளின் அபாயகரமான இடத்தை சுற்றி அணைவாக பிடித்திருந்தது.



அவனுக்கு அந்த யோசனையே இல்லை போலும். ஆனால், பெண்ணவளோ கூச்சத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். வாய் திறந்தும் கூற முடியாத நிலை அவளுக்கு!



அவள் நெளிவதை சற்று தாமதமாகவே புரிந்து கொண்ட சர்வஜனனோ, “ஷ், யாரோ இல்ல எதுவோ இந்த பக்கமா தான் வர மாதிரி இருக்கு. சோ, கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்று சூழ்நிலை புரியாமல் அதட்ட, சஞ்சீவனியோ எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.



அவளின் முகபாவனையை பார்த்தவன், “என்னாச்சு? எதுக்கு இப்படி முழிக்குற?” என்று வினவ, அவளோ கண்களால் அவன் கரத்தை நோக்க, அவனும் அப்போது தான் அவன் கரத்தை, அது இருக்கும் இடத்தையும் கண்டான்.



“ஓஹ் சாரி” என்று வேகமாக கரத்தை இழுத்துக் கொண்டவன், மற்றைய புறம் திரும்பிக் கொண்டான்.



இருவருமே படபடப்பில் இருந்ததை அவர்களின் உடல்மொழியே மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.




இருவரின் அந்நிலையை கலைத்தது அருகில் கேட்ட சத்தம். அதைக் கேட்டு, லேசாக மறைவிலிருந்து எட்டிப் பார்த்தவர்கள் கண்டது....

உங்க கருத்துகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பதிவிடவும்.

நிலா காயும் வேளை - கருத்து திரி
 
Last edited:

NNK18

Moderator
டீசர் 4


கைகளையும் கால்களையும் சங்கிலியால் கட்டப்பட்டு, இருவரால் இழுத்து வரப்பட்டான் அவன். மேலாடை இல்லாமல், கால்சராயும் பல இடங்களில் கிழிந்த நிலையில் பரிதாபமாக இருந்தான். ஆனால், அவன் வாயை சுற்றிலும் படிந்திருந்த காய்ந்த இரத்த தடம் வேறு கதை கூறியது.



அவனைக் கண்டதும் விவகார சிரிப்புடன் அவனை நெருங்கிய பாஸ், “அட ராகேஷ் சார், இடம் எல்லாம் உங்களுக்கு வசதியா இருக்கா?” என்று வினவியவன், அவன் கையிலும் காலிலும் இருந்த சங்கிலியை பார்த்து போலியாக வருந்தியபடி, “அட யாரது உங்களை சங்கிலியால கட்டிப்போட்டது?” என்றான்.



அதற்கு சிரித்த மற்ற இருவரையும் நோக்கி, “இடியட்ஸ், இவரு யாருன்னு தெரியுமா? இந்த ஏரியால மிகப்பெரிய பிஸினஸ்மேன்.” என்றவன், இப்போது அந்த ராகேஷிடம் திரும்பி, “அதுமட்டுமில்லாம, என்னோட இத்தனை வருஷ கனவை நனவாக்க எனக்கு உதவியா இருக்கப்போறவர்.” என்று இதழை வளைத்தான்.



ராகேஷோ, “பிளீஸ் பிளீஸ் ஜி... என்னைக் கொன்னுடுங்க. என்னால இப்படி... இல்ல இப்படி என்னால வாழ முடியாது... இது நரக வேதனை! ஐயோ, நான் என்ன பண்ணிட்டேன்! ஆஹ், உடம்பெல்லாம் வலிக்குதே...” என்று கதறினான்.



அவன் கத்தியதை ஒரு புருவ சுழிப்புடன் பார்த்த அந்த பாஸ், எரிச்சலில் அவன் சங்கிலியை பிடித்து அருகில் இழுத்து, “உஷ், இப்போ என்ன பண்ணிட்டோம்னு இப்படி கத்திட்டு இருக்க? என்னத்துக்கு வாழ்றோம்னே தெரியாம வாழ்ந்தியே ஒரு வாழ்க்கை, அதை எடுத்துட்டு இப்போ வாழ்றதுக்கான காரணத்தை உனக்கு கொடுத்துருக்கேன் ராகேஷ். நியாயமா நீ எனக்கு விஸ்வாசமா தான இருக்கணும்?” என்று கூறி சிரித்தவன், “அப்பறம் என்ன காரணம்னு தெரியுமா? என்னோட அல்டிமேட் எய்முக்கு ஹெல்ப் பண்ணி, எனக்கு சேவை செய்றது.” என்றவன், இப்போது அந்த கட்டிடமே அதிரும்படி நகைத்தான்.



உங்க கருத்துகளை கீழே இருக்கும் கருத்து திரியில் பதிவிடவும்.


நிலா காயும் வேளை - கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top