எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீலவானம் கதையின் கருத்து திரி

Andal Arugan

Moderator
நீலவானம் கதைக்கான உங்கள் கருத்துக்களை இந்த திரியில் பதியவும்.
நன்றி
ஆண்டாள் அருகன்
 

PonsRathi

New member
இன்னும் ஒரு episode பாக்கி‌ இருக்கே.. அதுக்கப்புறம் சூர்யா என்ன சொல்லுவார்-னு தான் எனக்கு ஒரு 6 மாசமா குழப்பம்.
 

PonsRathi

New member
கதை விமர்சனம்

கதையின் பெயர்: நீலவானம்

எழுத்தாளர் : ஆண்டாள் அருகன்


நிறைய எழுத்தாளர்களின் கதைகள் இளமையான மாந்தர்களை வைத்தே புனையப்படும் வேளையில், நமக்கு மிக நெருக்கமானவர்களை பற்றி படிப்பது போல் ஒரு கதை. விவாகரத்தான ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையிலான மெல்லிய பூங்காற்று போல் கதை.

இவரின் கதை மாந்தர்களில் பெண்களை இயல்பாய், தைரியமாய், வக்கிரங்களை துச்சமென கடக்கும் மனிதர்களாய் காட்டுவது அத்துணை அழகு.

சூரியன் வாலறிவன்

படித்தவன், பண்பானவன், நல்லவன் என்பதெல்லாம் தாண்டி அவனுக்கென்று ஒரு குணம் உண்டென்றால், அவன் ஒரு சமத்துவவாதி. ஆண் பெண் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன். நல்லது என்று அவனுக்கு தோன்றினால் அதனை மிகத்தெளிவான திட்டமிடலுடன் நடத்திவிடும் பேரன்பாளன். பேரனாக, மகனாக, தகப்பனாக, கணவனாக, காதலனாக, உற்ற தோழனாக என்று பன்முகங்களையும் அழகாய் கையாளுபவன். மகள் மீராவிற்காக முதல் மனைவி பவித்ராவை தக்கவைக்க நினைக்கும் இடத்திலும் அத்துணை நிதானம். எல்லா ஆண்களும் அவ்வாறு இருப்பார்களா என்றால் பதில் இல்லை என்னிடம். ஆனால் ஆண்டாள் அருகனின் கதாநாயகர்கள் எப்பொழுதும் சமநிலை கொடுத்தே பழக்கப்பட்டவர்கள் என்பது என் எண்ணம்.

வான்மதி

வான்மதி விஸ்வநாதனாக இருந்து, வான்மதி கார்த்திக்காக மாற்றப்பட்டு, மனவிருப்பதுடன் வான்மதி சூரியன் வாலறிவனாக மாறியவள். அவளுக்கென ஏதும் கொள்ளக்கூடாது என்ற கொள்கையோடு வளர்க்கப்பட்ட சிறுகுழந்தை, தன்னை உணர்ந்து கொண்டதே மிக கொடிய வேளையில்தான். அதன் பின்பு சிறகடிக்கும் கழுகுதான் அவள். நேர்த்தியாய் மருத்துவத்தொழில் பார்பதாகட்டும், விஜியிடம் தோழமை உணர்வை உணர்வதாகட்டும், வாலறிவனின் மதிமா-வாக உருகுவதாகட்டும், எல்லா இடத்திலும் அவள்,அவளாகவே நீக்கமற நிறைத்துள்ளாள். தன் சுயம் இழக்காமல் வாழும் பெண்கள் நம் தேசத்தில் மிகவும் சிறுசதவிகிதம் பெண்களே. சூரியனின் மதியவள், அவனின் பாசமான சோடா பாட்டில், ப்ரியங்களுக்குரிய நேசகி.

கதையில் மிகவும் சுவாரசியமாக இருந்த சில குறிப்புக்கள்.

பொன்னம்மாள் பாட்டி - அவர் வயதிற்கு பெண்ணியம் சொல்வதெல்லாம் அத்துணை அருமை. அதிலும் விடிகாலையை அன்னையின் மடிக்கு எண்ணி பார்க்கும் அந்த வசனங்கள் எல்லாம் பெரிதும் சிலிர்ப்பை ஏற்படுத்தியவை.

பவித்ரா - காதலுக்காக திருமணத்திற்கு முன்பே போராடாமல், வாலறிவனை நோகச்செய்த்தவள். ஆனால், அவளை கூட தப்பாக ஒரு இடத்திலும் காட்டாமல், அவளுக்கு நியாயமானவளாக காட்டியது பெரிய விஷயம். எங்கே மீரா வாலறிவன் மகள் அல்ல என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்துகொண்டே படித்தேன்.

விஜயன் - நண்பன் என்றால் அப்படி ஒரு நண்பன். துணையாக, உயிர் காப்பவனாக, போட்டும் கொடுப்பவனாக, எப்போதும் கூடவே இருந்து நாம் வைத்து செய்வதற்கு வாகாய் இருப்பவனாக என்று விஜயன் பல ரகம். படித்தவர்களுடன் ஒட்டிக்கொண்டு மனம் சொல்வதை செய்ய முடியாத ஒவ்வொருவரும் விஜயனின் பிம்பங்கள். சிரிப்பான், சிரிக்க வைப்பான், நமக்கு முன்னமே நம்மை காப்பான் என விஜயன் ஒரு நல்ல தோழன்.

அதிவீரர், கிருஷ்ணவேணி, ரத்தன் என சிலரை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தாலும் ஒரு முழுமையான, நிறைவான கதை.

பெற்றோரின் நம்பிக்கை பிள்ளைகளிடத்தில் இல்லாத போது, என்னவெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அழுத்தமாக எடுத்துரைத்த கதை.

கலீல் ஜிப்ரானின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

`உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்தவர்களே அன்றி உங்களுக்காக வந்தவர்களில்லை`

குடும்பம், கவுரவம், சமூகம், உறவு என்பன போன்ற காரணங்கள் துன்பங்களை அனுபவித்து, தன்னை தானே செதுக்கிக்கொண்ட உள்ளங்களின் பயணமே நீலவானம்.

நேரமிருந்தால், கண்டிப்பாக படிக்கலாம்.

உண்மையான பெண்ணியம் என்ன என்பதை கூட கற்றுக்கொள்ளலாம்.​
 
Top