எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன்….14

நிலாச் செய்தி…

புளுட்டோ கிரகத்தின் ஐந்து நிலாக்களின் பெயர்கள் பின்வருமாறு, சாரன், ஹட்ரா, நிக்ஸ், கெர்பராஸ் மற்றும் ஸ்டிக்ஸ்.

இதுவரை பச்சையன்…

மர்மமான முறையில் வீட்டில் அடிபட்டு , ஆஸ்பத்திரியில் விமலா அட்மிட் ஆகியிருக்கிறாள் என கேள்விப்பட்டு நிலாமகளும் தோழிகளும் சென்று பார்க்கின்றார்கள். பச்சையனை அனைவரும் சந்தேகப்பட , நிலா அவன் தங்கியிருந்த இடத்திற்கு செல்கிறாள். இனி…

பச்சையன் ……….14

நிலாமகள் பச்சையனை விசாரித்து விட்டு வெளியே வந்து வசந்தி அருகில் நிற்கவும் , வசந்திக்கு போன் வரவும் சரியாக இருந்தது. தூரத்தில் பச்சையன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.

வசந்தி போனில் சிறிது நேரம் பேசிவிட்டு நிலாவிடம் திரும்பினாள்.

“ மாலா போன் பண்ணியிருந்தா. விமலாவோட அப்பா , அம்மா கிராமத்துல இருந்து வந்துட்டாங்க. போய் பார்த்துட்டு வந்து ஒரே அழுகையாம். சமாதனப்படுத்தி கூட்டிகிட்டு வந்து பார்த்துக்கறா. எதிர்த்த வீட்டு பெண்ணுகிட்ட யாருக்கும் தெரியாம நேத்து ராத்திரி வந்தது பச்சையன் போட்டோவை காட்டி வந்தது அவன்தானா கேட்டாளாம்”.

சொல்லி விட்டு வசந்தி நிறுத்த, நிலா மகளுக்கு ஆர்வம் கலந்த கோபம் எட்டிப் பார்த்தது.

“ வேற யாரு ? அவர்தானா….சாரி அவன்தானா ? “

“ அவன் இல்லையாம். பக்கத்துல ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல வேலை பார்க்கறவனாம். இரண்டு நாளைக்கு முன்னாடி இவ போனப்ப அங்க ஏதோ பிரச்சனையில அங்க வேலை பார்த்த இவன்கூட சண்டை போட்டிருக்கா. அவன் திரும்பி வந்து கத்தியிருக்கான். அவ்வளவுதான்”.

கோபத்தில் ஓடிப்போன நாய்க்குட்டி திரும்ப வந்து மெதுவாய் எட்டிப் பார்ப்பது போல நிலா மகளுக்கு வந்தது பச்சையன் இல்லை என்றவுடன் ஒரு நிம்மதி ஏற்ப்பட்டு மெதுவாய் காதல் எட்டிப் பார்க்க முயற்சித்தது. முகத்தில் ஒரு நிம்மதி வந்து உட்கார, ஒரு நிமிடத்தில் திணறினாள். பின் சுதாரித்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்த வசந்தி கவனிப்பதற்குள் நிலா சுதாரித்துக் கொண்டாள்.

“ சரி அவர்.. அவன் வரலைன்னா அப்புறம் எப்படி விமலாவுக்கு எப்படி அவ்வளவு பெரிய காயம் உண்டாச்சு ? ஒரே குழப்பமா இருக்கே “

வசந்தி நிலாவை உற்று நோக்கினாள். நிலாவின் முக மாறுதலை அவள் கவனிக்காமல் இல்லை. நட்புக்கும் காதலுக்கும் இடையில் அவள் அவதிப்பட்டதை இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவர் என சொல்லுவதும் பின் மாற்றி அவன் என்று சொல்லி சமாளிப்பதும் கண்கூடாக கண்டுகொண்டாள். அவளின் நிலை கண்டு பரிதாப்பட்டாள்.

நிலா தடுமாறினாள். காதலர்கள் ஒருவரை ஒருவர் விளையாட்டாக ஏமாற்றலாம் அல்லது காதலிப்பது போல கூட ஏமாற்றலாம். ஆனால் உண்மையான காதல் யாரையும் ஒருபோதும் ஏமாற்றாது . மேலும் செல்லாமல் , கீழும் விழாமல் அந்தரத்தில் தொங்கும் நிலைதான் நிலாவுக்கும்தான்.

“ நிலா குழம்ப வேண்டாம். நட்பை மறக்கடிக்கற காதல் உன்னை பாடாபடுத்தறது தெரியது. இந்தொரு விசயத்தை வைச்சு பச்சையனை எப்படி எடை போடறது ? நிதானத்துக்கு வா. பொறுமையா இரு. வா இப்ப, விமலா வீட்டுக்கு போவோம். அந்த போனை தேடுவோம் “

இருவரும் கிளம்பினார்கள் இடைவெளி விட்டு.

விமலா வீட்டுற்கு சென்று அங்கு கவலையில் ஆழ்ந்திருந்த அவள் அப்பா, அம்மாவை ஆறுதல்படுத்தினார்கள் .

மாலா, நிலா , வசந்தி மூவரும் மெதுவாக அருகே இருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள்.

“ எதுவும் வேற தகவல் வந்துச்சா ? “

நிலா கேட்க மாலா தலையை இடதும் வலதுமாக ஆட்டி உதட்டைப் பிதுக்கினாள்.

வசந்தி சற்று தள்ளி இருந்த கட்டிலை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்படியே அவள் பார்வை சற்று தள்ளிப் போனது. கட்டிலுக்கு வரும் வழியில் சுவரில் ஒரு சுவரோடு பதிக்கப்பட்ட இரண்டு அடுக்கு அலமாரி தெரிந்தது. மேல் தட்டில் சிறிய சாமி படங்களும் , பூஜை பொருட்களும் , தட்டுகளும் , ஒரு ஓரத்தில் சிறிய பூஜைக்குரிய ஒரு எண்ணெய் பாட்டிலும் இருக்க அவள் பார்வை நிலைத்தது.

இதே நேரத்தில் நிலா மகளுக்கு போன் வர எடுத்துப்பார்த்தாள்.

“ மேடம் செல்போன் ரிப்பேர் கடையிலிருந்து பேசுறேன். காலையில நீங்க உங்க அம்மா போனை தண்ணியில விழுந்துருச்சுன்னு கொடுத்துட்டு போனீங்க. முடிஞ்ச அளவு முயற்சி பண்ணியாச்சு ஒண்ணும் பண்ண முடியலைமா “

செல்போன் கடையிலிருந்து பேசியவுடன்தான் நிலாமகளுக்கு தான் ரிப்பேருக்கு அம்மா போனை கொடுத்து வந்ததது ஞாபகம் வந்தது. விமலா ஏதாவது செய்தி அம்மாவுக்கு அனுப்பியிருந்தால் பார்க்கலாம் என நினைத்தவளுக்கு , அவள் நினைப்பில் மண் விழுந்தது.

வசந்தியை திரும்பி பார்க்க அவள் பார்வை வேறு இடத்தில் இருப்பதை கண்டு அந்த பக்கம் பார்த்தாள். வசந்தி மீண்டும் பார்க்க ஏற்கனவே பார்த்த எண்ணெய் பாட்டிலுக்கு பின்னால் இன்னொரு பாட்டில் மூடி இல்லாமல் சாய்ந்து கிடப்பதை பார்த்து மேலிருந்து பார்வையை கீழே இறக்கினாள். நிலா மகள் வசந்தியை பார்க்க, அவள் எதுவும் சொல்லாமல் மீண்டும் பார்த்த இடத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“ நிலா போன் விமலாவோட போன் எங்கேயும் தொலைஞ்சு போயிருக்காது. இங்கதான் எங்கயாவது கிடக்கும்”.

“ என்ன சொல்ற வசந்தி ?” நிலா அதிர்ச்சியுடன் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ உண்மைதான் நிலா. விமலா நேத்து அவன் கூட சண்டை போட்டுட்டு மறுபடி வீட்டுக்குள்ள வந்துருக்கா. பதட்டத்துல போனை எடுக்கறப்ப அவளோட கை தட்டி மேலிருந்த எண்ணெய் பாட்டில்கள் இரண்டுல ஒண்ணு தட்டி எண்ணெய் கொட்டி தடுமாறி வேகமா விழுந்துருக்கா. அப்ப கையிலிருந்த போன் எகிறி பறந்து விழுந்துருக்கலாம். விழுந்த வேகத்துல போன் விழுந்து ஆப் ஆகியிருக்கலாம் அல்லது பேட்டரி சார்ஜ் தீர்ந்து ஆப் ஆகியிருக்கலாம். பொறுமையா தேடுவோம்”.

நிலா ஆச்சரியப்பட்டாள். வசந்தியின் கூர்மையான அறிவை கண்டு திகைத்து அதிசயத்தாள். விமலாவிற்கு அடுத்தப்படியாக எல்லாவற்றையும் கவனிக்கும் நிதான அறிவைக் கண்டு மகிழ்ந்தாள்.

“ எப்படிடி உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது ? நீயெல்லாம் போலீஸ்ல இருக்க வேண்டியவ “

“ போதும் , போதும் இது என்னை பாராட்டுற நேரம் இல்லை. ஆக வேண்டியதை பாரு “.

இருவரும் ஆளுக்கொரு திசையில் தேட ஆரம்பித்தனர். நேரம் கடந்து கொண்டு இருந்தது. நிலா மகளின் போன் அடிக்க ஆரம்பித்தது. எடுத்துப் பார்க்க புது தரைவழி இணைப்பு போன் நம்பராக இருந்தது. அணைத்து விட்டு மீண்டும் தேட ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கழித்து வசந்தி கையை உயர்த்தினாள். நிலா பார்க்க அவள் கையை நீட்டிய திசை நோக்கி நிலாவின் பார்வை போனது. அங்கே டிவி பெட்டிக்கு பின்னால் சுவர் மூலையில் விமலாவின் போன் கிடந்தது. வசந்தி போனை எடுத்துப் பார்க்க உயிர் இல்லாமல் கிடந்தது. எடுத்து பக்கத்தில் இருந்த சார்ஜரை எடுத்து வயரை மாட்டினாள்.

மறுபடி நிலாவின் போன் அடிக்க எடுத்துப் பார்த்தாள்,அதே நம்பர். வசந்தி இவளைப் பார்க்க இவள் மீண்டும் போன் இணைப்பை துண்டித்தாள்.

“ யாருன்னே தெரியலை, போன் வந்துகிட்டே இருக்கு “ நிலா வசந்தியிடம் சொல்ல, வசந்தி பரவாயில்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

ஐம்பது சதவீதம் சார்ஜ் ஏறினாலே போதும் , விமலா அனுப்பிய அல்லது அனுப்ப நினைத்த செய்தி என்ன என்று தெரிந்து விடும் என்ற ஆர்வத்தில் இருவரும் காத்திருந்தார்கள்.

நிலா மகளுக்குள் காதலும், நட்பும் மாறி மாறி வந்து கொண்டு இருந்தது. தனக்குள் தடுமாறினாள். தனக்காக , தன் காதலுக்காக மகிழ்ந்த தோழிகளையும், விமலாவிற்காக அலையும் தோழிகளையும் நினைத்து உள்ளுக்குள் குமைந்தாள்.

இதுவரை நடந்த எல்லாவற்றையும் கவனித்த மாலா மெதுவாக நிலா அருகில் வந்தாள். நிலா அருகில் அமர்ந்தாள்.

“ நிலா உன் முகம் குழப்பத்துல இருக்கறது நல்லா தெரியுது. கவலைப்படாத எல்லாம் சரியாயிரும். உன்னுடைய பிரச்சனை எனக்கு புரியுது”.

நிலா மென்று முழுங்கினாள்.

“ இல்லை மாலா, எதுவும் குழப்பம் இல்லை. விமலா கண்டிப்பா நல்லாகி வந்துருவான்னு எனக்குத் தெரியும். நானோ அல்லது என்னோட காதலோ இப்ப முக்கியம் இல்லை. விமலாதான் முக்கியம் .நட்புதான் முக்கியம். என்னோட காதல் கூட…….”

அதற்கு மேல் பேச முடியாமல் திடீரென அழ ஆரம்பித்தாள். விம்மல்கள் வரிசையாக வெடிக்க ஆரம்பித்தன. வசந்தி நிலாவை ஆதரவாக அணைத்துக் கொள்ள , மாலா அவளை முதுகில் தட்டி , தலையை தடவி ஆறுதல்படுத்தினாள்.

சற்று நேரம் அமைதி நிலவியது.

காதல் என்பது வேண்டாம் என்று தட்டிவிட்டால் பறக்கும் தூசி இல்லை, விடாப்பிடியாக நமை துரத்தும் நிழல் அது. காதல் வரும் வரை எவருக்கும் எதுவும் தெரியாது. வந்த பின் எவரையும் கண்ணுக்குத் தெரியாது.

நிலா அழுகையை நிறுத்தினாள் .

“ என்னால முடியலைடி. . என்னை நான் கட்டுப்படுத்த பார்க்கறேன். ஆனா காதல் என்னை கட்டுப்படுத்த பார்க்குது. காதல் முன்னாடி இழுக்குது, நட்பு பின்னாடி இழுக்குது. நகர முடியாம தவிக்கறேன். சுயநலமா நான் யோசிக்கறேன், வாழ்றேன்னு நினைக்கறப்ப எனக்கு வெட்கமா இருக்கு. பழகியவளா அல்லது பழக வந்தவனா ? முடிவு எடுக்க முடியாம தவிக்கறேன் “

வசந்தி ஆறுதல்படுத்தினாள்.

“ நிலா பொறுமையா இரு. எது நடக்குமோ அது நல்லபடியாக நடக்கும்”.

நிலாவின் செல்போன் மீண்டும் அடிக்க எடுத்தப் பார்த்தாள். அதே போன் நம்பர். வசந்தி எட்டிப் பார்த்து விட்டு சொன்னாள்.

“ எடுத்துப் பேசுடி, யாருன்னு பார்ப்போம் “.

நிலா போனை எடுத்து காதுக்கு கொடுத்தாள். மறுமுனையில் வசீகரமான குரல் ஒன்று வழிந்தோடியது.

“ நான் பச்சையன். உன்னிடம் தனியாக பேச ஆசைப்படுகின்றேன். பேசலாமா ? “

ஸ்பீக்கரில் வந்த குரலைக் கேட்டு நிலா சிலையானாள்.

விமலா பிழைப்பாளா ? காதல் பிழைக்குமா ?

காத்திருங்கள். இனி…….
 
Top