தீ 4
காலையில் ஆராத்யா எழுந்து பார்த்தபோது ஹர்ஷா அருகில் இல்லை…. வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுபவள், அதுதான் அவர்கள் வீட்டு வழக்கம்… இப்போது நேரம் ஒன்பதை தாண்டியிருந்தது…
அடித்துப் பிடித்து எழுந்தவள் கொண்டையிடுவதற்காக தலைமுடியை கைகளில் அள்ளியெடுத்தபோது தான் உணர்ந்தாள்…. ‘எங்க போச்சு….’ என்று பதட்டமாக தேடியவள் அங்கிருந்த சைட் டேபிளில் தன்னுடைய ஆறடி கூந்தலை கண்டதும் பதறித்தான் போனாள்….
“ஹையோ!!! நைட் என் தலையில தானே இருந்துச்சு… இங்க யாரு வெச்சிருப்பா….. அவனா!!!!! கடவுளே!!!! முடி அவுந்து விழுந்தது கூட தெரியாம பக்கி மாதிரி தூங்கிருக்கமே… அவன் என்ன நினைச்சிருப்பான்…..” தனக்குத்தானே புலம்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தவள் நேரமாகவே குளித்து தயாரானாள்….
அழகிய டிசைனர் சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு அளவான ஒப்பனையுடன் கீழே இறங்கி வந்தவளை எதிர்கொண்டது கௌசல்யாவின் தீப்பார்வை….
“அம்மா!!!…” என்று ஆசையாக நெருங்கியவளை மஞ்சுளா அறியாமல் தொடையில் கிள்ளி கால் கிலோ சதையை எடுத்துவிட்டாள் அவளது அன்னை…..
ஆராவுக்கு வலியில் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது…
“புதுசா கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த பொண்ணு எழுந்திருக்கிற நேரமாடி இது…. புருஷன் எழுந்திருச்சு கிளம்பி போனது கூட தெரியாம இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருப்பியா….”
“இல்லம்மா…..” அவள் ஏதோ சொல்லவர “வாய மூடு….” என்று சீறினாள் கௌசல்யா…. “என்னடி இது ட்ரெஸ் சின்ன குழந்தைங்க மாதிரி … ஓடு ஓடு முதல்ல போய் புடவைய கட்டிக்கிட்டு வா…. போ….” அவளை அடிக்காத குறையாக விரட்டி விட மனதுக்குள் கௌசல்யாவை அர்ச்சித்துக் கொண்டே புடவை கட்ட சென்றாள்…
அவள் புடவை கட்டிக் கொண்டு வந்ததும் கௌசல்யா வீடு திரும்பும் வரை மகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருக்க மஞ்சுளாவின் பார்வை அவர்கள்மேல் சுவாரஷ்யமாக படிந்தது….
‘இவங்க பட்டிக்காட்டு ரூல்ஸ் எல்லாம் அடுத்தவங்க முன்னாடி கடைபரப்புறாங்களே…..’ ஆராத்யாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது…. ‘ஒரு சுடிதார் போட்டது தப்பா கோபால்….’
ஒருவழியாக பெற்றவர்கள் கிளம்பிய பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது… அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் இந்தப்பக்கம் அறைக்குள் சென்றவள் கடுப்புடன் புடவையை களைந்து கொண்டிருந்தாள்…
“பொதுவா பொண்ணுங்களுக்கு கல்யாணமாகி போனதும் பொறந்த வீட்டு ஆளுங்க வந்தா சந்தோசத்துல வானத்துல பறக்கிற மாதிரி இருக்கும்னு சொல்லுவாங்க…. எனக்கு மட்டும் பூமிக்கு அடியில பொதைச்சு வெச்சா மாதிரி மூச்சு முட்டுதே…..”
தனக்குள் பேசியபடி உடைமாற்றும் அறைக்குள் நின்று கொண்டிருந்தவள் ஹர்ஷா வந்ததை அறியவில்லை…
இவள் இருப்பது தெரியாமல் அவனும் தன் சட்டை பொத்தான்களை அகற்றியபடி உள்ளே நுழைய எதேர்ச்சையாக நிமிர்ந்தவள் அவனை கண்டு பயத்தில் அலற அவளை உணர்ந்து பார்வையை அவள் பக்கம் திருப்பாமலே “ஐம் சாரி……” என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டான்….
“லூசு…. லூசு…. மூளை கெட்டவளே…. ட்ரெஸ் சேன்ஞ் பண்ணும்போது கதவ சாத்திக்கனும்கிற அறிவு கூட உனக்கு இல்லாம போச்சா… நல்லவேள அவன் பாக்கல… இல்லனா ஷேம் ஷேம் பப்பி ஷேமா ஆகிருக்கும்…..” மீண்டுமொருமுறை தன்னைத் தானே திட்டிக் கொண்டாலும் ஏனோ கணவனின் இந்த செயல் அவளுக்கு மிகவும் பிடித்துதான் இருந்தது….
கட்டிய மனைவியான தன்னையே ஏறெடுத்தும் பார்க்காமல் கண்ணியமாக விலகி செல்பவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும்…. அந்த நொடி தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தாள் ஆராத்யா….
அவள் தயங்கித் தயங்கி கூச்சத்துடன் வெளியே வந்து பார்த்தபோது அவன் இல்லை…. வந்தவன் மீண்டும் திரும்பி சென்றுவிட்டான் என்றாள் மஞ்சுளா….
அதன்பிறகு ஆராத்யா எதை செய்தாலும் பார்த்து பார்த்து செய்தாள்…. இதுவரைக்கும் இரண்டு முறை அவன் முன்பு முட்டாள்தனமாக நடத்து கொண்டாயிற்று…. இனியும் அப்படியெதுவும் ஆக கூடாது என்று கவனமாக இருந்தாள்….
அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக அவளுக்கு மிகவும் போரடித்தது… மஞ்சுளாவுடன் எவ்வளவு நேரம்தான் பேசிக் கொண்டிருப்பது…..
தன் நண்பர்களுக்கும் அழைத்து பேசினாள்…. வீடியோ காலில் ஆண், பெண் என பாகுபாடில்லாம் அனைவருடனும் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள்….
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுதான் அழைப்பை துண்டித்தாள்…..
அவளது வீட்டில் இப்படியெல்லாம் ஃபோனில் வெகுநேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது…. இவள் ஃபோனை வைத்துக் கொண்டிருப்பதை கண்டாலே கௌசல்யா ஒருவழி பண்ணி விடுவாள்….
ஏனோ இப்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிப்பதுபோல் உணர்ந்தாள் ஆராத்யா… எத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இத்தனை ஆண்டுகள் வளர்ந்திருக்கிறோம் என்று நினைத்தவளுக்கு தான் திருமணத்திற்கு சம்மதித்தது சரியான முடிவுதான் என்று தோன்றினாலும் அதற்கு விலையாக அவள் கொடுத்தது தன்னுடைய படிப்பை அல்லவா….
இத்தனை நேரம் இருந்த உற்சாகம் மறைய மீண்டும் சோர்ந்து போனாள் ஆராத்யா……
ஆனால் அந்த கவலைக்கு அவசியமே இல்லை என்பதுபோல் அன்று மாலையே அவளது கணவன் கூறினான்…. விழிவிரிய அவனை நம்ப முடியாமல் பார்த்தவளை கண்டதும் அவளது முகத்துக்கு நேராக சொடுக்கிட்டவன் “ஹலோ… நீ இப்படியே உன் கண்ண விரிச்சி பார்த்து பார்த்து என்ன ஒரு வழி பண்ணிடுவ போலயே…..” என்றான் “உன் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணலாம்னு சொன்னேன் பட் இங்க இல்ல… ஹைதராபாத்ல…..”
“ஹைதராபாத்தா…..” மீண்டும் விழி விரித்தாள் அவள்….
“ஆமாடா ஆரு…. அத்தை உன்கிட்ட சொல்லல….”
“ம்ஹூம்….” இல்லையென்பது போல் தலையாட்டியவளுக்கு தன் நண்பர்களை விட்டு வேறு இடத்துக்கு செல்லவேண்டும் என்பது நினைத்துப் பார்க்கவே மிகவும் கடினமாக இருந்தது….
ஆனால் தீபிகா வேறு சொன்னாள்….
“மச்சி உனக்கு கிடைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய சான்ஸ் தெரியுமா…. இந்த மாதிரி வொய்ஃப படிக்க வெக்கனும்னு நினைக்கிற ஆம்பளைங்கலாம் ரொம்ப ரேர்…. இத்தன நாளா நீ உன் வீட்டுல கஷ்டப்பட்டதுக்கு கடவுளா பார்த்து உனக்கு இப்படி ஒரு நல்ல ஹஸ்பன்ட கொடுத்திருக்காரு மச்சி…. யூர் ரியலி லக்கி….
“படிக்கனும்தானே ஆசைப்பட்ட…. இங்க படிச்சா என்ன அங்க படிச்சா என்ன…. எங்கள பத்தியெல்லாம் கவலபடாத ஆரா…. ஆளாளுக்கு வெத்தல டப்பா சைஸ்ல ஃபோன் வெச்சிருக்கோம்ல…. எப்போ வேணும்னாலும் நம்ம இஷ்டத்துக்கு பேசிக்கலாம்…. நீ எதையும் போட்டு குழப்பிக்காம ஹேப்பியா கிளம்பு…….”
தீபிகாவுடன் பேசிய பிறகு ஆராத்யாவுக்கு சற்று தெளிவு பிறந்தது….
இரவு உணவின் போது மஞ்சுளா, ப்ரதாப் இருவரும் மறுவீட்டு விருந்துக்கு செல்வது பற்றி கூறியபோது நாளை அமைச்சர் வீட்டில் தனக்கும் ஆராவுக்கும் விருந்துக்கு அழைத்திருப்பதாக சொன்னவன் அவனே சத்தியமூர்த்திக்கு அழைத்து நாளை மறுநாள் அவர்கள் வீட்டுக்கு வருவதாக கூறினான்….
அதில் ஆராத்யாவுக்கு எந்த வருத்தமும் இல்லை…. ஏற்கனவே மஞ்சுளாவுக்கு முன்னால் மானத்தை வாங்கியாயிற்று… இப்போது ஹர்ஷாவின் முன்னாலும் பிறந்த வீட்டினரால் அவமானப்பட அவளுக்கு சுத்தமாக இஷ்டமில்லை….
**********************************************
லாவெண்டர் வண்ண புடவையில் அதற்கு பொருத்தமான அணிகலன்களும் மிதமான ஒப்பனையுடன் தயாராகி வந்தவளை ரசனை பார்வையுடன் எதிர்கொண்டான் ஹர்ஷவர்த்தனா…..
“யூர் சோ அடோரபிள் ஆரா….” என்க,
அதில் கன்னம் சிவக்க “தேங்க்ஸ்…” என்றவளை புன்னகையுடன் பார்த்தவன் “போலாமா…..” என்றுவிட்டு முன்னே நடக்க அவனை பின்தொடர்ந்தாள் ஆராத்யா….
அவளுக்காக கார் கதவை திறந்துவிட்டவன் அவள் ஏறி உட்கார்ந்ததும் காருக்கு வெளியே வழிந்து கிடந்த அவளது புடவை முந்தானையை உள்பக்கமாக எடுத்துவிட்டவன் அவள் சங்கடத்துடன் நெளிந்ததை பொருட்படுத்தாமல் கதவை சாத்திவிட்டு மறுபக்கம் வந்து காரை எடுத்தான்….
அமைச்சரின் வீட்டை அடைந்ததும் அவர்களது தடபுடலான வரவேற்பை கண்டு மிரண்டுதான் போனாள் ஆராத்யா…. அதே சமயம் வாயெல்லாம் பல்லாக அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்ற அமைச்சரை கண்டு அவளுக்கு சிரிப்பாக கூட இருந்தது….
தேர்தல் சமயங்களில் எல்லாம் மேடைகளில் எதிர்கட்சிகளை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டுக் கொண்டிருப்பவர் இப்போது ஹர்ஷாவிற்கு கூழைகும்பிடு போட்டுக் கொண்டு நிற்பதை தன் நண்பர்கள் பார்த்தால் எப்படியெல்லாம் கலாய்ப்பார்கள் என்று நினைத்தவளுக்கு சிரிப்பை அடக்கிக் கொள்வது பெரும்பாடாகத்தான் இருந்தது…
அமைச்சரின் மனைவி, மகன், மருமகள் மற்றும் மகள்கள் என அனைவரும் மணமக்களை வரவேற்று உபசரித்தனர்….
வரவேற்பு, பொதுவான நலவிசாரிப்புகள் எல்லாம் முடிந்தவுடன் விருந்து பரிமாறப்பட்டது…
சுவையான நான்வெஜ் விருந்தை ஆரா ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் எதேர்ச்சையாக திரும்ப அமைச்சரின் மகள்கள் இருவரும் தட்டை பார்த்து சாப்பிடாமல் ஹர்ஷாவை பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்… போதாதைக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த அவரது மருமகள் வேறு கவனிக்கிறேன் பேர்வழியென்று ஹர்ஷாவின் ப்ளேட்டில் ஒவ்வொரு உணவாக வைத்து நிரப்பிக் கொண்டிருந்தாள்…..
திரும்பி கணவனை பார்த்தாள்.… அமைச்சரின் மகன் எதையோ கூற அதை கவனித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன்…..
‘எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷனையே இப்டி வெறிச்சு பார்ப்பாளுங்க…..’ சுர்ரென்று கோபம் தலைக்கேற அதன் பிறகு உணவு தொண்டைக் குழியை தாண்டி இறங்கவில்லை…. இப்போதே அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டும் போல் தோன்றியதில் முள்ளின்மேல் இருப்பதை போல் அமர்ந்திருந்தாள் அவள்….
அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவ செல்லவும் அவன் பின்னாலேயே அமைச்சரின் மருமகளும் சிறிய டவலுடன் செல்ல வேகமாக அவளை நெருங்கிய ஆராத்யா “கொடுங்க…. நானே அவர்கிட்ட கொடுத்திர்ரேன்….” என்றாள்…
“ஐயோ இல்லைங்க பரவால்ல…. நானே கொடுத்திர்ரேன்….” அவள் ஹர்ஷாவை நோக்கி முன்னேற போனாள்….
“இல்ல இல்ல நானே கொடுத்துக்கிறேன்… கொடுங்க….” என்று ஆராத்யா அவள் கையிலிருந்த டவளை பற்ற முயற்சிக்க “ஐயோ நீங்க கெஸ்ட்ங்க… இதெல்லாம் நாங்கதாங்க செய்யனும்…..” அவள் ஹர்ஷாவிடம் செல்வதிலேயே குறியாக இருக்க,,
“ஏய் நில்லுடி….” அவளது கையை பிடித்து தடுத்தாள் ஆராத்யா…. “அதான் நான் கொடுக்கிறேன்னு சொல்றேன்ல… கொடு…..” கொத்திப் பறிக்காத குறையாக அவளிடமிருந்து டவலை பிடுங்கிக் கொண்டு சென்றவளை ‘ஙே’ என்று பார்த்திருந்தாள் அமைச்சரின் மருமகள்…
கை கழுவிவிட்டு திரும்பிய ஹர்ஷாவிடம் அதனை நீட்ட “தேங்க்ஸ்டா…..” என்றபடி வாங்கிக் கொண்டான் அவன்….
தானும் கை கழுவிக் கொண்டு வந்தவள் அவனுக்கு அருகில் ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள்…
அவன் தன்னை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்தாலும் அதனை கவனியாதது போல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்….
அங்கிருந்து திரும்பியதும் வீட்டுக்கு செல்லாமல் வேறு எங்கோ காரை செலுத்தினான் ஹர்ஷவர்த்தனா….
கடற்கரை சாலையில் வெகுதூரம் சென்றபின் அவள் கண்களில் தென்பட்டது அந்த கண்ணாடி மாளிகை போன்ற வீடு….
அவனது பீச் ஹவுஸாம்…
வாயிலில் நின்ற காவலாளி ஹர்ஷாவை கண்டதும் வேகமாக கேட்டை திறந்துவிட கார் வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது….
காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்….. சுவரே இல்லாது போல திரும்புகிற பக்கமெல்லாம் கண்ணாடியாலான அந்த வீட்டின் எந்த அறைக்குள் இருந்து பார்த்தாலும் கடலை தெளிவாக பார்க்க முடியும்….
வைத்த கண் வாங்காமல் கடலை, அதன் அலைகளை, தொடுவானத்தை ரசித்துப் பார்த்தாள் ஆராத்யா…. அவளது வீட்டில் கடற்கரைக்கு செல்வதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. “கண்ட கண்ட கழிசடைங்க வர்ர இடம்…. அங்கெல்லாம் போகக்கூடாது…..” என்றுவிடுவார் சத்தியமூர்த்தி…
அதற்காக எல்லாம் அவள் போகாமல் இருந்தது கிடையாது…. தலையில் முக்காடும் முகத்தை மறைக்கும் கூலர்ஸும் அணிந்து கொண்டு நண்பர்களுடன் பலமுறை சென்று வந்திருக்கிறாள்தான்….. ஆனால் இந்த அளவுக்கு சுதந்திரமாக யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லாமல்… இப்போதுதான் முதல் தடவை ரசித்துப் பார்க்கிறாள்….
“ஆரா….” என்ற ஹர்ஷாவின் குரல் நெருக்கத்தில் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளின் கையை பற்றி கொண்டவன் “கம் வித் மீ…..” என்று தன்னுடன் அழைத்து சென்றான் அவன்….
அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு அவளை கொண்டு வந்து நிறுத்த “ஆ….”வென்று வாயைப் பிளந்தாள் ஆராத்யா…..
மிக பிரம்மாண்டமான நீச்சல் தடாகம் மொட்டை மாடியை ஆக்கிரமித்திருந்தது…. இவ்வளவு பெரிய நீச்சல் குளத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை… மேலே பரந்து விரிந்திரிந்த ஆகாயம், கீழே கடல், இரண்டுக்கும் நடுவில் ஸ்விம்மிங் பூல் அவளுக்கு ஏதோ சொர்க்கத்தில் மிதப்பதை போல் தோன்றியதில் உள்ளே குதித்து குத்தாட்டம் போட வேண்டும்போல் இருந்தது….
அதற்கு அவள் கட்டியிருக்கும் சேலை ஒரு தடை என்றால் ஹர்ஷாவின் முன்னிலையில் அப்படி எதுவும் செய்து சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்ள முடியாமல் ஏக்கத்துடன் பார்த்திருந்தாள்…
அங்கு இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தவன் திரும்பி வரும்போது ஸ்விம்மிங் டிரங்க்ஸுடன் வர அவனது அகன்ற தோள்களும் இறுகிய மார்பும் எய்ட் பாக் வயிறும் படிக்கட்டு தேகமும் கண்டு சற்று நேரம் வாயை பிளந்து கொண்டு நின்றவள் அவன் பார்வை தன்னை நோக்கி திரும்பவும் ‘நான் ஒன்னும் பார்க்கலப்பா..’ என்பது போல் நொடியில் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்…
அவன் நீச்சல் குளத்தில் குதிக்கும் சத்தம் காதில் விழ மீண்டும் ஓரக் கண்ணால் பார்த்தாள்… ஒரு கைதேர்ந்த நீச்சல் வீரனைப் போல் அவன் லாவகமாக நீச்சலடித்துக் கொண்டிருக்க அவளால் கண்ணை வேறு பக்கம் திருப்பவே முடியவில்லை…
‘இப்டியே இவன சைட் அடிச்சிக்கிட்டு இருந்தா…. சுத்தம்…. நம்ம லட்சியத்தில மண்ணள்ளி போட்டுடுவான் போலயே…. இனிமே இவன் பக்கமே திரும்ப கூடாது….”
ஒரு முடிவுடன் இருந்தவளின் தவத்தை கலைக்கவென அவள் முகத்தில் வந்து விழுந்தன நீர்த்துளிகள்….
அவன்தான்…
“கமான் ஆரா…” என்றான்…
“ம்ஹூம்….” மாட்டேன் என்பது போல் தலையசைத்தாள் அவள்…
“ப்ச்.. வான்னு சொல்றேன்ல….”
அவள் மறுக்கவே நீச்சல் குளத்திலிருந்து ஒரே தாவலில் வெளியே வந்தவன் “கூப்டா வரமாட்ட…” என்றபடி குனிந்து அவளை தூக்கிக் கொண்டு அவள் எவ்வளவு கெஞ்சியும் காதில் வாங்காமல் நீருக்குள் இறங்கினான்…
“ஹையோ விடுங்க ப்ளீஸ்…. நான் வேற ட்ரெஸ் எதுவும் கொண்டு வரல…” என்று சொன்னவளிடம் “என்னோட ட்ரெஸ் இருக்கு போட்டுக்கலாம் வா….” என்று நீருக்குள் தள்ளிவிட்டான்…
அதில் சேலை தடுக்கி தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டவளுக்கு அவன் மீது கோபம் வந்தாலும் குளுமையான அந்த மாலைப் பொழுதில் இளஞ்சூடான நீர் உடலுக்கு இதமாக இருக்க முன்புறம் இருந்த படிகளில் ஏறி நின்று கொண்டாள்….
அவன் விட்டால்தானே அவளையும் தன்னுடன் சேர்த்து இழுத்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான்…. ஏதோ ராட்சத சுழலுக்குள் சிக்கியதைப் போல சற்று நேரம் மூச்சு முட்ட தவித்தவள் பின்பு அவளும் அவனது விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்….
வெகுநேரம் நீரில் விளையாடிவிட்டு இருவரும் வெளியேறினார்கள்…
இத்தனை நேரம் நீருக்குள் இருக்கும்போது தெரியாத குளிர் இப்போது வெளியே வந்ததும் ஊசியாய் உடலை துளைக்கவும் மாற்றுடை கூட இல்லாமல் தண்ணீரில் நனைந்த தன் மடத்தனத்தை எண்ணி அவள் நொந்து கொண்டிருக்க அவள் முன்னால் ஒரு உடையை நீட்டியவன் “போய் சேன்ஞ் பண்ணிட்டு வா….” என்றான்…
உடையுடன் கூடவே விலையுயர்ந்த பாடி லோஷனும் இருந்தது…
அவளுடைய சைஸில் கனகச்சிதமாக இருந்த அந்த உடைய கண்டவளுக்கு “இவ்ளோ நேரமா நம்மளும் கூடதானே இருந்தோம்… இது எப்போ வாங்கினான்…” என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது….
ஒருவழியாக அவள் உடைமாற்றி வெளியே வந்ததும் காபி மேக்கரிலிருந்து சூடான காபியை அவளிடம் நீட்டியவன் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் அவளது கைப்பிடித்து கடற்கரை நோக்கி அழைத்து சென்றான்….
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லாமல் கடலோரமாக கையில் சூடான காபியோடு இப்படி அவன் கைகோர்த்து நடப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது…
அவனை பார்த்தாள்…. கருப்பு நிற வெஸ்ட்டும் வெள்ளை நிற ஷார்ட்ஸும் அணிந்து காற்றில் முடி பறக்க படுகம்பீரமாக தன் அருகில் பட்டும் படாமல் ஒட்டியும் ஒட்டாமல் நடந்து வந்து கொண்டிருந்தவன் தனக்கு மட்டுமே சொந்தமான தன் கணவன் என்பதில் அவள் உள்ளம் பூரித்தது…
அவன் நிறைய பேசினான்…. அவனுடைய தொழில், படிப்பு, வாழ்க்கை முறை என ஒரு மனைவியாக அவள் தன்னை பற்றி எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென அவன் நினைத்தானோ அத்தனையும் சொன்னான்….
வெகுநேரம் பேசிக்கொண்டே நடந்தவர்கள் மாலை மறைந்து இருள் பரவ ஆரம்பிக்கும் வேளையில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ள வாகாக அவள் மடியில் தலைவைத்து படுத்தவன் “நான் மட்டும்தான் பேசிட்டிருக்கேன் நீ எதுவுமே சொல்லமாட்டேங்கறீயே….” என்றான்…
“என்ன சொல்ல….” என்றாள் அவள் தயக்கத்துடன்…
“நான் இவ்வளவு நேரமா என்ன பத்தி சொன்னேன்ல… அப்படி நீயும் சொல்லு உன்ன பத்தி, உன் ஃபேமிலி, உனக்கு பிடிச்சது பிடிக்காதது எல்லாம்….”
ஆராவும் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்….
பொதுவாக பெண்கள் யாரையாவது மிகவும் நம்பி விட்டாலோ அல்லது யாரையாவது மனதுக்கு பிடித்துவிட்டாலோ மடை திறந்த வெள்ளமாக அவர்களிடம் அனைத்தையும் கொட்டி விடுவார்கள்….
ஆராவும் அப்படித்தான் அவனிடம் தன்னை பற்றி, தன் குடும்பத்தை பற்றி என ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் அவனது உந்துதலில் தடையற்று அனைத்தையும் கூற ஆரம்பித்தாள் அவளுடைய தில்லாலங்கடி வேலைகளை தவிர…..
அத்தனையும் கவனமாக கேட்டுக் கொண்டான் அவன்… அவ்வப்போது அவன் முகத்தில் யோசனை படிந்ததையும் சில சமயங்களில் அவன் விழிகள் இடுங்கியதையும் இருள் சூழ்ந்துவிட்டதால் பாவம் அவள் கண்டு கொண்டிருக்க வாய்ப்பில்லை…
**********************************************
நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடன் படித்த நண்பர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய ஆர்யன் தான் வரும்வரை தூங்காமல் காத்துக் கொண்டிருந்த அன்னையை கடிந்து கொண்டான்…
அவர் கொடுத்த சூடான பாலை அருந்திவிட்டு தன்னறைக்கு வந்து சேர்ந்தவன் உடலெல்லாம் கசகசவென்று இருக்கவே ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வந்தான்…
வழக்கம்போல் தூங்கச் செல்லுமுன் தன் அலைப்பேசியை எடுத்து பார்க்க தான் ஆராத்யாவின் திருமணம் பற்றி ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பிய செய்தியை இப்போதுதான் மனைவி பார்த்தருப்பதற்கான நீல நிற அடையாளத்தை கண்டதும் ஆர்யனுக்கு பற்றிக்கொண்டு வந்தது…
ஆராவின் திருமணம் அவர்களது குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியமான நிகழ்வு… அதற்கு கூட வரமுடியாமல் எங்கே போய் தொலைந்தாள்… அண்ணன் மனைவி என்ற முறையில் இவளல்லவா முன்னால் நின்று அனைத்தும் செய்திருக்க வேண்டும்….
இவள் எங்கே என்ற எத்தனை பேரின் கேள்விகளுக்கு அவனும் அவனுடைய குடும்பத்தினரும் பதில் சொல்ல முடியாமல் எப்படியெல்லாம் தவித்துக் கொண்டிருந்தார்கள்….
இவள் என்னடாவென்றால் சாவகாசமாக திருமணமாகி இரண்டு நாட்களின் பின்தான் அவன் அனுப்பியை செய்தியையே படித்திருக்கிறாள்….
எப்போதும் போல சனியன் எப்படியோ போய் தொலைகிறது என அவனால் இருக்க முடியவில்லை….
அவளை வேண்டாம் என்று வெறுத்து விலகியவன் அவன்தான்… அதே சமயம் முற்றிலுமாக ஒதுக்கி வைக்க முடியாமல் அவனுடைய குடும்பமும் சூழ்நிலைகளும் தடையாக இருந்தது….. முன்னொரு காலத்தில் அவளுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை….
ஆனால் அவள் செய்த காரியம்…. அவனது இறுதி மூச்சு வரை அவனால் அந்த பாவத்தை மன்னிக்கவே முடியாது…
இன்னும் எத்தனை ஜென்மங்களுக்கு அந்த பாவமும் பழியும் தன்னையும் தன் குடும்பத்தையும் துரத்தப்போகிறதோ என நினைத்தவனுக்கு அதன்பிறகு அந்த இரவு சிவராத்திரியாகித்தான் போனது……
மறுநாள் ஆராவும் ஹர்ஷாவும் வருவதால் வீடே பரபரப்பாக இருந்தது… அதிகாலையிலிருந்தே சமையல் வேலைகளெல்லாம் தடபுடலாக ஆரம்பமாகியிருக்க சத்தியமூர்த்தி அதைப்பார் இதைக் கவனி என வீட்டு ஆட்களையும் வேலையாட்களையும் ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தார்…
மணமக்கள் இருவரும் வந்து சேர்ந்ததும் பத்மாவதி ஆரத்தியெடுத்து வரவேற்றார்… ஹர்ஷா வீட்டுக்குள் செல்லுமுன் டிரைவரை பார்த்து ஜாடை காட்ட கார் டிக்கியிலிருந்து உடைகள் நிறைந்த பைகள், நகை பெட்டிகள் என விதவிதமான பொருட்களை வரிசையாக வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் அவன்….
‘இது எப்போ??’ என்பதுபோல் புரியாமல் பார்த்தாள் ஆராத்யா… இந்த பொருட்கள் எல்லாம் எப்போது காருக்குள் வந்து சேர்ந்தது என்பதே அவளுக்கு தெரியவில்லை… ‘இதுக்குத்தான் டிரைவரை கூட்டிக்கிட்டு வந்தானா….’ என நினைத்துக் கொண்டாள்…
சத்தியமூர்த்தியிலிருந்து அவர்கள் வீட்டு நாய்க்குட்டி வரை அத்தனை பேருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தான் அவன்…. அதுவும் கோடிக்கணக்கில்….
பத்மாவதி கௌசல்யா இருவருக்கும் லட்சங்கள் பெறுமதியான பட்டுப் புடவைகளும், வைர நகை செட்களும்…. சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஆர்யனுக்கும் அதேபோல் உடைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், மோதிரங்கள்….
நகுலனுக்கு கூடுதலாக ஐஃபோன், லேப்டாப்…. அதேபோல் ப்ரியங்கா, திவ்யங்காவுக்கும் உடைகள், நகைகள் என ஒரே நாளில் ஒட்டுமொத்த குடும்பமும் ஃப்ளாட்டாகி விட்டார்கள்….
இத்தனையும் செய்துவிட்டு எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகவும் சகஜமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவனை மற்றவர்கள் பிரமிப்புடன் பார்த்திருக்க ஆரா மட்டும் பிரமிப்பையும் தாண்டிய முக்தி நிலைக்கு சென்றுவிட்டாள்…
அவள்தான் நேற்று கடற்கரையில் அவனிடம் கூறினாள்…. என்னதான் பணக்காரராக இருந்தாலும் அவளுடைய பெரியப்பாவுக்கு வீண் செலவுகள் பிடிக்காது…. பெரியம்மா அதிக விலையில் பட்டு சேலை வாங்கியதற்காக பயங்கரமாக திட்டு விழுந்தது…. நகுலன் ஐஃபோன் கேட்டு பெரியப்பா சத்தம் போட்டது என இன்னும் நிறைய சொல்லியிருந்தாள்…
அதற்காக இப்படியா…. ஒரே இரவுக்குள் இத்தனையும் வாங்கி குவித்திருக்கிறான்…. அவனுடைய இந்த வேகத்தில் அவளுக்கு லேசான பயம் கூட வந்தது…
சமயறைக்குள் பத்மாவதியும் கௌசல்யாவும் அவர்கள் வீட்டு மாப்பிள்ளையை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்…
“புது டிசைன் வைர நெக்லஸ் வாங்கனும்னு எவ்வளவு நாளா கேட்டுட்டு இருந்திருப்பேன்…. அப்புறம் பார்க்கலாம் அப்புறம் பார்க்கலாம்னு தட்டி கழிச்சிட்டே இருந்தாரு…. இப்போ மாப்ள வாங்கிட்டு வந்திருக்க நகையெல்லாம் பார்த்து உங்க கொழுந்தனாருக்கு மயக்கமே வந்துடும் போல இருக்கு கா…..”
“இங்க மட்டும் என்ன…. பட்டுப்புடவை விலை அதிகமா வாங்கிட்டேன்னு எப்படி சத்தம் போட்டாரு… இப்போ பார்த்தியா…”
கணவன்மாருக்கு முன்னால் வாயே திறக்காமல் பம்மிக் கொண்டு இருப்பவர்கள் இப்படி பேசுவதை கேட்டு ஆராவுக்கு சிரிப்பு வந்தது….
இவர்களே இப்படியென்றால் இளையவர்களை சொல்லவும் வேண்டாம்…. நகுலன், ப்ரியா, திவ்யா மூவரும் “அத்தான், அத்தான்…” என்று அவனுடனே ஒட்டிக்கொண்டு திரிந்தார்கள்…
தன் குடும்பத்தார் ஹர்ஷாவை கவனித்த கவனிப்பில் ஆராவுக்கே அவன்மீது பொறாமை வந்துவிடும் போல இருந்தது…. அந்தளவுக்கு அவனை தாங்கி, தூங்கி தலையில் வைத்து கொண்டாடினார்கள்….
ஒருவழியாக அன்றைய விருந்துபசாரம் அனைத்தும் முடிந்து மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக விடை பெற்றுக் கொண்டிருந்த நேரம் அந்த வீட்டு வாசலில் கிரீச்சென்ற சத்தத்துடன் கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கி வந்தவளை முதலில் கவனித்தது பத்மாவதிதான்…..
“காவ்யா!!!” என்ற அவரது குரலில் ஆர்யனின் உடல் இறுகியது… இனி அவள் வந்துவிடுவாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்…. அதனால்தான் இன்றே கிளம்புவதற்காக தன்னுடைய பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு அப்போதே தயார் செய்து வைத்திருந்தான்…
தன் வேக நடையுடன் வீட்டுக்குள் நுழைந்தவள் அத்தனை நேரம் பயணம் செய்து வந்திருந்த போதிலும் அவள் முகத்தில் துளிக்கூட களைப்பின் சாயலே இல்லை… அன்றலர்ந்த தாமரை போல் பளிச்சென்று அழகாக இருந்தது…. அந்த விழிகளில் மட்டும் லேசான பதட்டம் அவ்வளவுதான்….
“வாம்மா காவ்யா….” பத்மாவதியை தொடர்ந்து ஒலித்த கிருஷ்ணமூர்த்தியின் கணீர் குரலில் மற்றவர்களும் அவள் பக்கம் திரும்பி பார்க்க அவள் கண்கள் என்னவோ ஆர்யனைத்தான் தேடியது…
சற்று தூரத்தில் தனக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லையென்பது போல் விறைப்புடன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த கணவனை கண்டவளின் அழகு வதனத்தில் வேதனையின் சாயல் நொடிக்கும் குறைவான நேரத்தில் தோன்றி மறைந்தது….
மறுநொடியே தன் முகத்தை மாற்றிக் கொண்டவள் மற்றவர்களை நோக்கி பார்வையை திருப்பினாள்… வேதனையுடன் மகனை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பத்மாவதி, நான் ஆர்யனின் அப்பாவாக்கும் என்பதுபோல் அவனுக்கும் மேலாக விறைப்புடன் நின்றிருந்த சத்தியமூர்த்தி, ஒன்றும் அறியாதவர்கள் போல் நடுநிலைவாதிகளாக நின்றிருந்த கிருஷ்ணமூர்த்தி, கௌசல்யா…..
அடுத்து அவளது பார்வை இவர்களை தாண்டி ஆராவை நோக்கி சென்றது… கழுத்தில் புதுத்தாலியுடனும், புதுமணப் பெண்களுக்கே உரித்தான நாணத்துடனும் தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்….
அவளைத் தாண்டி நகுலனுடன் பேசிக்கொண்டு தனக்கு முதுகு காட்டியபடி நெடுநெடுவென்று நின்றிருந்த ஆராவின் கணவன் மீது காவ்யாவின் பார்வை ஆராய்ச்சியுடன் படிந்தது…. ‘யார் இவன்…..’ என்ற யோசனையுடன் பார்த்துக் கொண்டே நின்றவள் அடுத்த நொடியே நகுலனிடம் விடைபெற்றுக் கொண்டு சிறு புன்னகையுடன் திரும்பியவனைக் கண்டதும் மின்னல் தாக்கியதுபோல் அப்படியே நின்றுவிட்டாள்….
அழுத்தமான நடையுடன் அவள் நின்றிருந்த திசை நோக்கி அவன் முன்னேறிவர உடனே கிருஷ்ணமூர்த்தி வீட்டு பெரியவராக “மாப்ள இது எங்க ஆர்யாவோட வொய்ஃப் காவ்யா….” என்று ஹர்ஷாவுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தார்…. “காவ்யா கூட ஹைதராபாத்தான்….” என்க,
“ஆஹான்…..” என்றவனின் பார்வை தீர்க்கமாக அவள் முகத்தில் படிந்தது….
“காவ்யாம்மா…. இதுதான் நம்ம ஆராவோட வீட்டுக்காரர்…” என்று கௌசல்யா அவளிடம் கூற உறைந்து போய் நின்றிருந்த சிலைக்கு உணர்வு வந்தாலும் பேசுவதற்கு வாய்தான் வரவில்லை….
எவனிடமிருந்து தப்புவதற்காக யார் கண்ணிலும் படாமல் எந்த தொடர்பும் இல்லாமல் எங்கோ மறைந்திருந்துவிட்டு வந்தாளோ அவன் அவளுடைய புகுந்த வீட்டில்!!! அதுவும் அந்த வீட்டு மாப்பிள்ளையாக தன் எதிரில் வந்து நிற்பானென அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை…..
தன்னை விழுங்க வந்திருக்கும் அந்த ராட்சஷனை ரத்தப் பசையற்று வெளிறிப்போன முகத்துடன் பார்த்திருந்தாள் காவ்யா…. காவ்யவர்ஷினி….
குளிரும்……