எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 13

S.Theeba

Moderator
வரம்13

ஆராத்யா ஹோட்டலின் கீழ்த் தளத்தில் அமைந்திருந்தது அந்த றெஸ்ரோரன்ட். அதன் வழியாக வெளியேறுவதற்கு முயன்ற யதுநந்தனுக்கு பின்னால் கேட்ட ல் ஆர்ப்பாட்டமான சிரிப்பொலி கவனத்தை ஈர்க்கவும் திரும்பிப் பார்த்தான். பார்த்ததும் திகைத்துப்போய் நின்று விட்டான். அங்கே நின்றவளைக் கண்டதும் திகைப்பூண்டை மிதித்தாற் போல நின்றுவிட்டார். இவள் இங்கே எப்படி? என்று யோசித்தவனுக்கு உண்மையிலேயே அவள் தானா? அல்லது வேறு யாராவதோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவனது மனமோ இது எல்லாம் உனக்கு அவசியமற்றவை எனவேஅங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டது. திரும்பிச் செல்ல முயன்றான்.

தன் நண்பர்கள் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டமாகப் பேசியபடி இருந்தவள் முதலில் அவனைக் காணவில்லை. அவள் அருகில் இருந்த ஒருத்தி அவனைக் கண்டதும் "ஹேய்.. வாட் எ ஹான்ட்சம் மேன்." என்றாள். யாரைச் சொல்கிறாள் என்று அவளுடன் இருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இவன் யாரைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றானோ அவளும் அவனைக் கண்டதும் முதலில் அதிர்ச்சி அடைந்தாள். ஆனால், உடனேயே இயல்புக்கு வந்தவள், மந்தகாசப் புன்னகையுடன் அவனை நோக்கி ஓடி வந்தாள்.

தன் அழகை மெருகூட்ட அவள் செய்திருந்த அதிகப்படியான ஒப்பனையும் நவநாகரீக ஆடையும் அவளது நடையும், அவளுக்குத் தன் அழகின் மீது ரொம்பவும் கர்வமுள்ளது என்பதைப் பறைசாற்றியது.
அவளுடன் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் வந்திருந்தனர். அவர்கள் அனைவருமே அவளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல் அலங்காரம் செய்திருந்தார்கள். ஆண்கள் முடியை வளர்த்து அதற்கு நிறப்பூச்சு பூசியிருந்தனர்.

அவன் அருகில் வந்தவள் எந்தவித தயக்கமும் இன்றி அவனை அணைத்து "நந்து பேபி, உன்னை நான் இங்கே மீட் பண்ணுவன் என்று நினைக்கல. சோ ஸ்வீட்..., நீ முன்னைவிட இப்போ ரொம்ப ஹான்ட்சமாய் மாறிட்டாய்." என்றாள். அவளை அநாயாசமாக விலக்கி தள்ளி நிறுத்தியவன், தன் உடையில் தூசி படிந்தது போல தட்டிவிட்டான்.

அருகில் நின்றிருந்த அன்பழகன் அவள் செய்கையையும் பேச்சையும் பார்த்துக் கொண்டு இருந்தான். 'பாஸூக்கு ரொம்ப வேண்டியவ போல.' என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான். யதுநந்தன் அவளை விலக்கி நிறுத்தவும் அவனது முகத்தைப் பார்த்தவன் 'பாஸ் முகம் ஏன் இப்படி கடுகடுன்னு இருக்கு? ஒரு அழகான பெண் அணைத்தால் சந்தோசப்பட்டு அனுபவிக்கனும். அதைவிட்டு ச்ச…‘ என்றும் மனசுக்குள் புலம்பினான்.

“நந்து பேபி… எப்படி இருக்காய்?” என்று கேட்டவளிடம் அதற்கான பதிலைக் கூறாது,
"ஆமா.. நீ எப்போது இங்கே வந்தாய். உனக்குத்தான் இங்கு செட் ஆகாதே" என்று நக்கல் தொனியில் அவளிடம் கேட்டான் யதுநந்தன்.
"நந்து பேபி, நான் இங்கே வந்து ரூ வீக்ஸ்தான் ஆகுது. கொஞ்சம் கஸ்ரம்தான். பட், அங்கே தனியா இருக்க ஃபோர் அடிச்சுது. சோ, இங்க வந்திட்டன்"என்றாள். மேற்கொண்டு எதுவும் பேசாது வெளியேற முயன்றான் யதுநந்தன். அவனை செல்லவிடாது அவன் கையை எட்டிப் பிடித்தவள் "வெயிட் பேபி... நான் என் புது ஃபிரண்ட்ஸூக்கு உன்னை இன்வைட் பண்ணல" என்றாள். திரும்பி தன் கூட வந்தவர்களை அருகில் அழைத்தவள் அவர்களிடம், "ஹாய்ஸ்... திஸ் இஸ் யதுநந்தன். கீ இஸ் மை எக்ஸ் ஹஸ்பன்ட்" என்று அறிமுகப்படுத்தினாள் ஹரிணி.

அதுவரை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்ற, அவள் தோழிகளில் ஒருத்தி - முதலில் அவனைக் காட்டியவள்- அவன் அருகில் வந்து கையைப் பிடித்து, "ஹாய், நான் மிருதுளா. யூ ஆர் வெரி ஹான்ட்ஸம்" என்றாள்.
அவனோ கையை அவளிடமிருந்து எடுத்துவிட்டு, எதுவுமே பேசாது அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றவள் மனதில் புதிதாகத் திட்டம் ஒன்று உருவானது.

???

தன் அலுவலகத்துக்கு வந்த யதுநந்தனுக்கு எரிச்சலாக இருந்தது. அன்பழகனிடம் தான் சொல்லும் வரைக்கும் யாரையும் அறைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்தான். கண்ணை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் சிவானந்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, தன் ஆபிஸூக்கு உடனே வருமாறு கூப்பிட்டான்.

சிவானந்த் அரைமணி நேரத்திலேயே வந்துவிட்டான். யதுநந்தன் ஒருவித தவிப்போடு இருப்பதைப் பார்த்ததும்,
"ஏன் மச்சி, ஏதாவது பிராப்ளமா? ஏன் இப்படி இருக்காய்?"
"மச்சி, இன்று நான் ஹரிணியைப் பார்த்தேன்."
"ஹரிணியா...? அவள் எப்போது இந்தியா வந்தாள்?"
"ரூ வீக் ஆச்சுதாம்."
"நீ அவகிட்டே பேசினியா?"
"ம்ம்.. அவளை எதேச்சையா ஆராத்யாவில சந்திச்சன். அவள் மாறவேயில்ல."
"எப்படி மாறுவாள். அது அவள் பிறவிக் குணம். அவள் இந்தியா வந்தால் உனக்கென்ன? நீயேன் இப்படி இடிவிழுந்த மாதிரி உட்கார்ந்திருக்காய்?"
"மச்சி இலக்கியா..."
"டேய் மச்சி... பப்பிம்மாவ... பத்துநாள் குழந்தையா இருந்தவள, வேண்டாம் என்று தூக்கித் தந்திட்டுப் போனவள்டா... நீ பப்பிமாவோட லண்டனில் இருந்த அந்த ஒரு மாதமும் ஒருநாள் கூட வந்து பார்க்கல. இப்போ மட்டும் பாசம் எங்கேயிருந்து அவளுக்கு வரப் போகுது."
சிவானந்த் அப்படிக் கேட்கவும் தன் கதிரையை விட்டு எழுந்த யதுநந்தன் யன்னலருகே சென்று வானத்தைப் பார்த்து நின்றான்.
 
Top