எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 18

S.Theeba

Moderator
வரம் 18

காலை கண்விழிக்கும்போதே சிறு பதட்டம்-படபடப்பு மனதில் எழுந்தது. ஏன் என்று புரியாமல் குழம்பினான் யதுநந்தன். தன் அருகில் சிறு ரெடிபியரை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் மகளை பார்த்தான். அவளின் ஆப்பிள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவன், அவளது தலையை மென்மையாகத் தடவி விட்டான். "லக்கிம்மா... என்றும் நீ எனக்குத்தான் சொந்தம். உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று வாய்விட்டே புலம்பினான். தான் ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.

எழுந்து காலைக்கடன்களை முடித்தவன், ஆஃபிஸ் செல்ல ஆயத்தமாகி கீழே இறங்கி வந்தான். வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் மூழ்கியிருந்தனர் ஈஸ்வரும் சந்திரமதியும். மாடியிலிருந்து இறங்கி வந்தவன் சோஃபாவில் அமரவும், எழுந்த சந்திரமதி
"நந்தும்மா, டிபன் எடுத்து வைக்கவா?"
"இல்லம்மா. எனக்கு பசியில்ல. டீ மட்டும் போதும்." என்றான்.
சந்திரமதி அவனுக்கு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதனை அருந்தியபடி தீவிர சிந்தனையில் இருந்தான்.
"நந்தும்மா... ஏன் அப்செட்டாய் இருக்காய்?" என்று கேட்டதாயிடம்
"ஒன்றுமில்லை. கொஞ்சம் தலைவலியா இருக்கு. டீ குடிச்சா ஓகே ஆயிடும்மா" என்றான்.
அப்போது இலக்கியாவுடன் வந்தாள் பானுமதி. "அண்ணா, நெக்ஸ்ட் சன்டே இலக்கியா குட்டியின் பேர்த்டே. செலிஃபிரேஷனுக்கு ரெடி பண்ணனும்."
"ஆமாண்டா... இந்த பேர்த்டேயையும் வழமை போலவே தாஜ் ஹாலில் பண்ணிடுவோம். பானுக்குட்டி, நீயும் அம்மாவும் சேர்ந்து பங்சன் ஏற்பாடுகளைப் பாருங்கள். இன்வைட் பண்ண வேண்டியவங்களுக்கு பண்ணிடுங்க."
"ஒகே அண்ணா."
"அப்புறம், பானுக்குட்டி இன்று லக்கிய ஸ்கூலில் கொண்டுபோய் விடுறாயா? ட்ரைவர் சாந்தனைக் கூட்டிட்டு போய் வா. எனக்கு மீட்டிங் ஒன்று இருக்கு."
"ஓகே அண்ணா." என்றாள் பானுமதி.
எல்லோரிடமும் விடைபெற்று வெளியில் வந்து தன் காரருகில் வந்தவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

அங்கே வெளி கேட்டில் காரிலிருந்து இறங்கினாள் ஹரிணி. வாடகைக்கு அமர்த்தி வந்த காரிற்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தவள், தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அவன் அருகில் வந்தவள் "ஹாய் நந்து பேபி, என்ன திகைத்துப்போய் இருக்காய்? என்னைக் கண்டதில் அவ்வளவு சந்தோஷமா?.. முதல்முறையாக நம்ம வீட்டுக்கு வந்திருக்கேன். வரவேற்க மாட்டாயா? எங்கே ஆன்டி, முறைப்படி ஏதோ செய்வாங்களே. அதைப் பண்ணச் சொல்லு நந்து பேபி" என்றாள்.
அவளை நேர் பார்வை பார்த்தவன், ஆழ்ந்த குரலில் "எதுக்கு?" என்றான்.
"என்ன நந்து பேபி இப்படிக் கேட்கிறாய்? நம்ம வீட்டுக்கு நான் வராமல்..."
"இது உன் வீடில்லை… என் வீடு" என் வீடு என்பதை அழுத்திச்சொன்னான்.
அவளும், தானும் சளைத்தவள் இல்லை என்பதுபோல "இருக்கட்டும். அதனால் என்ன?" என்றாள்.
அவன் தன்னை உள்ளே அழைக்க மாட்டான் என்பதை உணர்ந்து தானே உள்ளே கடகடவெனச் சென்றாள்.


அவள் தடாலடியாக உள்ளே நுழையவும் வேகமாக அவள் முன்னே வந்தவன் வழிமறித்து நின்றான்.
"உனக்கு இந்த வீட்டில் எந்த வேலையும் இல்லை. நீ போகலாம்." என்றான்.
"ஏன் பேபி...? எனக்கு இந்த வீட்டில் நிறைய வேலை இருக்கு."
"இல்லை. நமக்குள் லீகலா டிவோர்ஸ் ஆச்சு. உனக்கு இந்த வீட்டில் என்ன வேர்க் இருக்கப் போகுது. கெட் அவுட்..."
"என் மகள் இந்த வீட்டில்தானே இருக்காள். அப்போ நான் வரவேண்டியது இந்த வீட்டுக்குத்தானே. சோ, நான் இங்கதான் இருப்பேன்."
"மகளா? உனக்கா? இடியட்... அவளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை."
"அதை நீ சொல்லக் கூடாது. கோர்ட்டே முடிவு செய்யட்டும்." என்றவள், நேராக இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர், சந்திரமதியிடம் சென்று "அங்கிள், ஆன்ரி நீங்களே சொல்லுங்கள். தன் மகள் இருக்கின்ற வீட்டில்தானே தாயும் இருக்கணும். சரிதானே, சொல்லுங்கள்" என்றாள்.

வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென ஒருபெண் உள்ளே வரவும் யாராய் இருக்கும் எனப் புரியாது பார்த்தனர். சந்திரமதி யார் எனக் கேட்க வாய் திறக்கவும் அந்தப் புதுப்பெண்ணின் பின்னால் வந்த யதுநந்தன் அவளை வழிமறித்து நிற்க அவனுக்குத் தெரிந்தவள் என்றே நினைத்தனர்.

ஏனெனில், அவர்கள் யாருக்கும் ஹரிணியைத் தெரியாது. அவன் லண்டனில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பியபோது அவளின் நினைவாக எதுவுமே இருக்கக் கூடாது என்று எதையும் எடுத்து வரவில்லை. ஒரு ஃபோட்டோ கூட இல்லை. எனவே, அவளை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அவன் அவளுடன் பேசும்போதும் ஆழ்ந்த குரலிலேயே பேசினான். அவன் பேசியது எதுவும் இவர்களுக்குக் கேட்கவில்லை. எனவே, திடீரென அவள் வந்து அப்படிக் கேட்கவும் திகைத்து நின்றனர். யார்? யாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றாள்? என்றே புரியாமல் குழம்பினர். பானுமதி மட்டும் வாய் திறந்து "நீங்க யார் என்று தெரியவில்லை." என்றாள். அவர்களது தடுமாற்றத்தைப் புரிந்தவள் போன்று
"ஓ... சாரி, நான் யார் என்றே உங்களுக்குத் தெரியலையா? இதோ இங்கே நிற்குதே.. கியூட் கேர்ள். அதன் அம்மா நான்தான். ஐ ஆம் ஹரிணி." என்றாள்.

அவள் அப்படிக் கூறவும்தான் உண்மை நிலவரம் புரிந்தது மூவருக்கும். பானுமதி அருகில் நின்றிருந்த இலக்கியாவை பார்த்தவள் "வாவ் மை பேபி... கம் கியர்" என்று அவளை அழைத்தாள் ஹரிணி.

சாதாரணமாகப் புதிதாக யார் தங்களை அறிமுகப்படுத்தினாலும் எல்லோரிடமும் எந்த சங்கோஜமும் இன்றி உடனேயே ஒட்டிக்கொள்ளும் சுபாவம் படைத்தவள்தான் இலக்கியா. ஏனோ ஹரிணி இரு கைநீட்டி அழைத்தும் அவளிடம் செல்ல விருப்பமின்றிப் பானுமதியின் கால்களின் பின்புறம் ஒதுங்கினாள் குழந்தை. "பேபிம்மா... நான் தான் உன் மம்மி... அம்மா... கம், கம்" என்று அழைத்தாள்.

அதுவரை கோபத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த யதுநந்தன் "ஸ்ராப் இட் ஐசே..." என்று கத்தினான். இந்தக் குரலுக்கெல்லாம் அசைபவளா ஹரிணி. எந்த முக மாறுதலும் இன்றி மீண்டும் குழந்தையிடம் பேசமுயன்றாள்.
"எதுக்கு இப்போ நீ இங்கே வந்திருக்க?" என்று கேட்டான்.
"நான் என் குழந்தையோடு இருக்கணும். இவ்வளவு காலம் அவளைப் பிரிந்து இருந்தது போதும். இனிமேலும் என்னால் அவளை விட்டு வாழ முடியாது. நான் இங்கேதான் இருப்பேன்."
"உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது."
"அதை கோர்ட் முடிவு பண்ணட்டும்."
"ஓகே. கோர்ட் முடிவு செய்த பிறகு அதைப்பற்றி பார்ப்போம். இப்போது நீ போகலாம்."
"என்ன நந்து பேபி, நான் வந்த டைம் தொடக்கம் என்னை போ, போ என்று விரட்டுகின்றாய். நம்ம லவ்..."
"ஏய்,..” என்று தன்னை மறந்து கத்தியின், “லவ்வா? யாருக்கு? யார் மீது?"
"உனக்குத்தான். என் மீது… இன்னும் என் மீதான லவ் உனக்குக் குறையவில்லை. அது எனக்குத் தெரியும். அத்தோடு ஒரு பெண் குழந்தைக்கு அம்மா ரொம்பத் தேவை. இதை நான் கோர்ட்டில் வாதாடி என் குழந்தையை வாங்கிப்பேன்."
"உன் மீது லவ்வா? யார் சொன்னது? நான் இப்போது வேறு ஒருத்திக்குச் சொந்தம். நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிராக லவ் பண்ணுகின்றோம். சீக்கிரம் கல்யாணம் பண்ணப் போகின்றோம்."
"பொய் சொல்லாத பேபி."
"பொய் இல்லை உண்மை. சோ, உனக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. கெட் அவுட்." என்றவன் அவளது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியில் விட்டான். அவளது சூட்கேஸையும் தூக்கி வெளியில் போட்டான்.
"நந்து, இதை நான் சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் கேஸ் போட்டு என் குழந்தையுடன் நான் இங்குதான் வந்து இருப்பேன். நீ வேற எவளையும் மேரேஜ் பண்ணவும் விடமாட்டேன்." என்று கத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் ஹரிணி.

அவள் செல்லவும் ஓய்ந்து போய் பொத்தென்று சோஃபாவில் வந்து விழுந்தான் யதுநந்தன். இதுவரை நேரமும் அவனே பேசட்டும் எனப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அவன் அருகில் வந்து அமர்ந்தனர். ஈஸ்வர் அவன் தோளில் கை வைத்து ஆறுதல் படுத்தினார். பானுமதியின் பின்னால் எதுவும் புரியாத குழந்தையாய் நின்றிருந்த இலக்கியா, தன் தந்தையின் அருகில் வந்து அவன் மடி தொட்டு "அப்பா..." என்று அழைத்தாள். அதுவரை நேரமும் தன்னை சமனப்படுத்தக் கண்ணை மூடியிருந்தவன் தன் மகளின் குரல் கேட்கவும் அவளை அள்ளி அணைத்தான். அதுவே அவனுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.
 
Top