எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 28

S.Theeba

Moderator
வரம் 28

யதுநந்தனுடைய பெற்றோரிடம் பேசிய சிவானந்த் அங்கிருந்து நேராகத் தன் தந்தை சீராளனிடம்தான் வந்தான். வர்ஷனாவை யதுநந்தன் விரும்புவதைக் கூறியவன், வர்ஷனாவின் பெற்றோரிடம் பேசும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தான். சீராளனுக்கும் மிகவும் சந்தோஷமே. வர்ஷனாவை அவருக்கு நன்கு தெரியும். மிகவும் நல்ல பெண். யதுநந்தனும் அவரது மகனைப் போலத்தான். இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால்..., என்று யோசித்தவர், "வர்ஷனாவின் விருப்பம்தான் இதில் ரொம்ப முக்கியம். மூன்று வயதுக் குழந்தைக்குத் தாயாக அவள் சம்மதிக்க வேண்டும். அதன்பிறகுதான் மேற்கொண்டு பேசமுடியும்" என்று கூறிவிட்டார். அவளையும் அவர் மகளாகவே எண்ணியுள்ளார். அவளுக்கு சம்மதமென்றாலே அது சரிவரும் என்றும் கூறினார்.


அவளது விருப்பத்தைத் தெரிந்து கூறுவதாகச் சொன்னவன் அலுவலகத்துக்குச் சென்றான். அங்கே வர்ஷனாவின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டவன் அதனைத் தன் தந்தையிடம் உடனடியாகத் தெரிவித்தான்.


சீராளனும் உடனேயே புறப்பட்டு வர்ஷனாவின் வீட்டிற்கு வந்தார். அலுவலகம் சென்றிருந்த கலையரசனை விடுப்பு எடுத்து வருமாறு கேட்டவர், அவர் வந்ததும் அவரிடமும் மாலதியிடமும் விவரத்தைக் கூறினார்.


ஆரம்பத்தில் இருவருக்கும் இந்தத் திருமணத்தில் சம்மதமில்லை. தங்கள் மகளை ஏற்கனவே கல்யாணம் ஆனவனுக்குக் கொடுக்க அவர்கள் மனம் ஒப்பவில்லை. அதிலும் ஒரு குழந்தை வேறு என்று அவர்கள் மனம் கலங்கியது.


ஆனால், சீராளனும் விடவில்லை. யதுநந்தனின் குணத்தைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அத்துடன் வர்ஷனாவும் அவனை விரும்புவதைக் கூறினார். பலவாறு பேசி அவர்களை சம்மதிக்க வைத்தவர், அன்றே பெண் பார்க்கும் நிகழ்வையும் நிச்சயதார்த்தத்தையும் நடத்த ஒழுங்கு செய்யுமாறு கூறிவிட்டு ஈஸ்வருக்கும் அழைப்பெடுத்து விவரத்தைக் கூறினார்.


வர்ஷனாவிடம் விவரம் கேட்போம் என்று சொன்னதற்கு, அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இன்றைய நிகழ்வு இருக்கட்டும் என்று சீராளன் கூறிவிட்டார். அப்படி ஒரு திட்டத்தையும் சிவானந்த் தான் தந்தையிடம் கூறியிருந்தான்.


வர்ஷனாவின் பெற்றோருக்கு மனதில் சிறு கவலை இருந்தாலும் தங்கள் மகளின் ஆசைக்காக அதை மறைத்து கடகடவென்று அன்றைய நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மாலதிதான் மஞ்சுவுக்கு அழைப்பெடுத்து விவரம் கூறினார். மஞ்சுவிற்கும் அளப்பெரிய சந்தோஷம். தன் உயிர் நண்பியின் காதல் கைகூடுவதை எண்ணி சந்தோஷப்பட்டாள்.


நடந்த நிகழ்வுகளை வர்ஷனாவிடம் கூறிமுடித்த மஞ்சு "இப்போ என் செல்லம் ரொம்ப ஹாப்பி தானே.." என்று கேட்டாள். "ம்ம்" என்று அவள் தலையாட்டவும் மாலதியும் கலையரசனும் அறைக்குள் நுழைந்தனர். அவர்களைக் கண்டதும், "அம்மா... ஜாங்கிரி, சமோசா எல்லாம் மிச்சம் இருக்குதானே. நான் ஒரு கை பார்த்திட்டு வாறன்." என்று நாசூக்காக வெளியேறினாள் மஞ்சு.


வர்ஷனாவின் அருகில் வந்தமர்ந்த கலையரசன் அவளது தலையை ஆதூரத்துடன் தடவினார். "வர்ஷாம்மா... உனக்கு சந்தோஷம்தானே... நீ ஆசைப்பட்டபடிதான் இந்தக் கல்யாணம் நடக்குது."
"தங்ஸ்பா..."
"எதுக்கம்மா தங்ஸ். நீ சந்தோஷமாய் இருந்தால் போதும்."
தன் தந்தையை கட்டியணைத்தவள் "மாலு..." என்று தன் தாயிடம் சென்று அவளையும் கட்டியணைத்தாள். அவளது சந்தோசத்தை பார்த்ததும்
பெற்றவர்களின் மனதில் இருந்த சிறு கவலையும் காணாமல் போனது.


அடுத்தடுத்த நாட்களில் கல்யாண வேலைகள் மிக மும்முரமாக நடந்தன. கல்யாணத்திற்கு வேண்டிய ஆடைகள், நகைகள் வாங்குதல் என சகல வேலைகளையும் இரு வீட்டாரும் சேர்ந்தே செய்தனர். எளிமையாக கருமாரியம்மன் ஆலயத்திலேயே கல்யாணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். எனவே, நெருங்கிய உறவினர்களை மட்டுமே இரு வீட்டாரும் அழைத்தனர்.


கலையரசனும் மாலதியும் நேரில் சென்று ராதாவையும் கல்யாணத்திற்கு அழைத்தனர். ஆனால், ராதா தன் மகனிற்கு வர்ஷனாவைத் தரமறுத்த கோபத்தில் இருவரையும் அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.



வர்ஷனாவிற்குத் தான் ஆசைப்பட்டவன் தன் மணாளனாகப் போகின்றான் என்ற சந்தோஷம். இருந்தாலும் மனதில் சிறு வருத்தமும் எட்டிப் பார்த்தது. நிச்சயம் செய்த அன்று யதுநந்தன் தன் கூட சகஜமாகப் பேசவில்லையே. யாருக்கோ வந்த விருந்து என்பது போலல்லவா பேசினான். எதற்காக அப்படி இருந்தான்? என்ற கேள்வி அவள் மனதில் தோன்றியது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் முகத்தில் புன்னகையுடன் நடமாடினாள். சிவானந்தும் அடுத்த வாரமே கல்யாணம் என்பதால் அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டான்.


அன்று திருமண ஆடைகள் எடுப்பதற்கென எல்லோரும் பிரபலமான புடவைக்கடை ஒன்றுக்குச் சென்றனர். இவர்கள் தரப்பில் கலையரசன், மாலதி, தங்கா, வர்ஷனா, மஞ்சு ஆகியோரும் யதுநந்தன் வீட்டிலிருந்து ஈஸ்வர், சந்திரமதி, பானுமதி, இலக்கியா, சிவானந்தின் தாய் சீதா ஆகியோரும் வந்திருந்தனர். யதுநந்தன் வரவில்லை. மிக அவசியமான வேலை இருப்பதால் சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறியிருந்தானாம்.


மஞ்சுவும் பானுமதியும் சேர்ந்து வர்ஷூ இந்த சேலையைப் பாரு, அண்ணி இது நல்லாயிருக்கா, இது சூப்பராயிருக்கு என்று அந்தப் புடவைக் கடையையே புரட்டி எடுத்து விட்டனர். வர்ஷனாவிற்குக் கல்யாணப் புடவையைத் தாங்களே எடுப்பதாகக் கூறிவிட்டனர். இலக்கியாவும் அவர்கள் கூடவே இருந்துவிட்டாள். பெரியவர்கள் அவர்கள் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்ததும் அவர்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டனர். மற்றவர்களுக்கான ஆடைகளை அவர்கள் தேர்வு செய்தனர். கடையிலேயே இலக்கியா அவளுடன் நன்கு ஒட்டிவிட்டது. வந்ததும் "ஹாய் ஆன்ரி" என்ற குழந்தையிடம் "குட்டியா, நான் ஆன்ரி இல்லை அம்மா. அம்மா என்றுதான் இனி என்னை நீங்க கூப்பிடுவிங்களாம்" என்று சொன்னவள் குழந்தை சந்தோஷத்துடன் அம்மா என்று அழைப்பதைக் கேட்டு பெரும் உவகை கொண்டாள்.


கல்யாணப் புடவையைத் தெரிவு செய்வதில் நாட்டம் காட்டாது வேண்டாவெறுப்பாக நின்றுகொண்டிருந்தாள் வர்ஷனா. புடவைகளைப் பார்ப்பதை விடுத்து இலக்கியாவுடன் கதைபேசிக் கொண்டிருந்தாள். அவளின் அக்கறையின்மையை அவதானித்த மஞ்சு "ஏன்டி டல்லா இருக்க?"
"ஒன்றுமில்லை"
"எனக்குத் தெரியுமே. அண்ணா வரவில்லையென்றதும் அண்ணி முகம் சோகமாயிற்று. நான் கவனிச்சேன். டோன்ற் வொர்ரி அண்ணி. அண்ணா வந்திடுவான்." என்றாள் பானுமதி.


அவள் தன்னைக் கண்டு கொண்டாளே என்று வர்ஷனாவுக்கு வெட்கமாகிவிட்டது. உண்மையிலேயே இன்று கடைக்கு வரும்போது மாப்பிள்ளையும் அவரது வீட்டினரும் வருகின்றார்கள் எனவும் அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தன் யதுவைப் பார்க்கப் போகும் சந்தோஷத்துடன் இன்றாவது அவன் தன்னுடன் சகஜமாகப் பேசுவான் என்று எண்ணியிருந்தாள். ஆனால், அவன் வரவில்லை எனவும் அவளுக்கு வெறுப்பாகி விட்டது. 'யதுவுக்கு என் மேல் விருப்பம் இல்லை. அதுதான் என்னைப் பார்க்க அவன் ஆசைப்படவில்லை' என்று மனதுக்குள் புலம்பினாள். தன் மனதைப் பானுமதி கண்டு கொண்டதும் வெட்கப்பட்டவள், ஒருவாறு அவர்களை சமாளித்து விட்டாள்.


நீண்ட நேரமாகியும் அவர்களால் எந்தப் புடவையையும் தெரிவுசெய்ய முடியவில்லை. இவர்கள் மூவரும் புடவைகளுக்குள் மூழ்கியிருந்த போது,
"மச்சி, இவங்க இன்றைக்கு புடவையை செலக்ட் பண்ணி முடிக்கப்போறதில்லை. விட்டால் நாளைக் காலை வரை இங்கேயே இருந்திடுவாங்க. உன் பொண்டாட்டிக்கு நீயே செலக்ட் பண்ணு." என்ற குரல் கேட்கவும் மூவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே யதுநந்தனும் சிவானந்தும் நின்றிருந்தனர். தன் யதுவைக் கண்டதும் வர்ஷனாவின் முகம் மலர்ந்தது. அருகில் வந்தவன் அங்கேயிருந்த புடவைகளை நோட்டம் விட்டான். ஒரு சில புடவைகளை எடுத்து வர்ஷனாவின் மேல் வைத்துப் பார்த்தான். இறுதியில் சந்தன நிறத்தில் அரக்கு நிற கரையிட்ட, தங்க நிற ஜரிகை இழையோடிய புடவையைத் தெரிவு செய்தான். "உனக்குப் பிடிச்சிருக்கா?" என்று அவளிடம் கேட்டான். அவளுக்கோ அவன் தன்னைப் பிடிச்சிருக்கா என்று கேட்டது போல் தோன்றியது. "பிடிச்சிருக்கு" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள். அவள் கண்களோ இமைக்காமல் அவனையே பார்த்திருந்தன. அவள் பார்வையைப் புரிந்து கொண்டவன் கண்களாலேயே அவளிடம் என்ன என்று வினவினான். அவன் கண்ணசைவில் தடுமாறித் தன்னையே தொலைத்தவள் தன் தலையைத் தாழ்த்தி வெட்கத்தை மறைத்துக் கொண்டாள். வர்ஷனாவின் புடவையின் நிறத்திலேயே இலக்கியாவிற்கும் பட்டுப் பாவாடை சட்டையை வர்ஷனா தெரிவு செய்தாள்.


பெரியவர்களும் எல்லோருக்குமான ஆடைகளைத் தெரிவு செய்து வந்ததும் அருகிலிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். எல்லோரும் அங்கே கலகலப்பாகப் பேசிச் சிரித்தபடி தமக்கு வேண்டிய உணவுகளை வரவழைத்தனர்.


யதுநந்தனின் குடும்பத்தினர் தம் வசதிவாய்ப்பைப் பறைசாற்றும் விதத்தில் எந்தவிதப் பேச்சோ செய்கையோ இல்லாது பழகியதைப் பார்த்த கலையரசனும் மாலதியும் பெரும் நிம்மதியை உணர்ந்தனர். தங்கள் மகள் நல்ல ஒரு குடும்பத்திற்கு மருமகளாகப் போவதை எண்ணி மகிழ்ந்தனர்.


சிவானந்தும் மஞ்சுவும் பானுமதியும் கூட்டாகச் சேர்ந்து வர்ஷனாவையும் யதுநந்தனையும் கேலி பண்ணியபடி இருந்தனர். வர்ஷனா வெட்கத்தில் உணவை உண்ண முடியாது தடுமாறினாள். இலக்கியாவை அழைத்துத் தன் மடியில் அமர்த்தியவள் அவளுக்கு ஊட்டி விட்டாள். இதனைப் பார்த்த ஈஸ்வர், சந்திரமதி தம்பதிக்கும் மனதில் பெரும் திருப்தி ஏற்பட்டது.


ஆனால், ஹோட்டலில் இவற்றையெல்லாம் தூரத்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் கண்களில் கோபமும் பொறாமையும் கொழுந்துவிட்டு எரிந்தன.
 
Top