எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 32

S.Theeba

Moderator
வரம் 32

தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்த யதுநந்தன் மிகவும் சிரத்தையாக அன்பழகன் கொடுத்து விட்டு சென்றிருந்த ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் புதுதாக ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தான். அதுதொடர்பான ஆவணங்களையே காலை முதல் சரிபார்த்துக் கொண்டிருந்தான். தலைவலிப்பதுபோல் தோன்றவும் பியூனை அழைத்து டீ கொண்டுவருமாறு பணித்தவன் தலையைப் பின்னால் சரித்து சிறிது நேரம் கண்களை மூடினான். மூடிய கண்களுக்குள் அவனின் ஷனா காலையில் உதடு சுழித்துப் பழிப்புக் காட்டிய சம்பவம் தோன்றி அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.



காலையில் வழமை போல் எழுந்ததும் குழந்தைபோல் தூங்கிக்கொண்டிருந்த தன் ஷனாவையே சிறிதுநேரம் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். குனிந்து அவள் வாயிலிருந்து விரலை நீக்கியவன் தன் விரலால் அவளின் உதட்டை மெதுவாகத் தடவினான். அந்த உதடுகளைச் சிறைபிடிக்குமாறு அவனது உதடுகள் கெஞ்சின. கைகள் அவளை அள்ளியணைக்கத் துடித்தன. ஆனால், இன்னும் அவள் காதல் மீதான உறுதி தனக்கு வரவில்லையே என்று புலம்பியது அவன் மனம். அவனது தாபத்துக்கு அணை போட்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எழுந்து தன் வழமையான வேலைகளில் ஈடுபட்டான்.


சிறிது நேரத்திலேயே உறக்கத்திலிருந்து எழுந்தாள் வர்ஷனா. காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கீழே சென்று சந்திரமதிக்கு சின்னச் சின்ன உதவிகளைச் செய்தவள், தன் கணவனுக்கு டீயை எடுத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தாள்.


உடற்பயிற்சிகளை முடித்தவன் அறையிலிருந்த தொலைக்காட்சியில் பிபிசி செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் டீயைக் கொடுத்து விட்டு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்தவள் தானும் தொலைக்காட்சியைப் பார்த்தாள். எனினும் அவனை அடிக்கடித் திரும்பிப் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்தவன் தொலைக்காட்சியிலேயே தனது பார்வையைப் பதித்தபடி,
"என்ன விஷயம்... சொல்லு?" என்றான்.
என்னைப் பார்க்காமலேயே ஏதோ பேச வருகின்றேன் என்பதை எப்படிப் புரிந்துகொண்டான் என்று திகைப்பாக அவனைப் பார்த்தாள். அவன் மீண்டும் "ம்ம்.. என்ன சொல்ல வேண்டும்? ஏதோ விஷயம் இருக்கு போல சொன்னால் நானும் தெரிஞ்சுக்குவன்?"என்று கேட்கவும்
"அதுவந்து... எனக்கு வீட்டிலே எந்த வேலையும் இல்லை."
"அதுக்கு...?"
"லக்கிக் குட்டியும் ஸ்கூலுக்குப் போயிடும்."
"ம்ம்"
"பானுக்காவும் ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுறாங்க. அதனால் அடிக்கடி ரெஸ்ட் எடுக்குறாங்க."
"ஆமா"
"அதனால்..."
"அதனால்...?"
"இங்க பாருங்க. எனக்கு இப்படி வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்கலை. வீட்டில எந்த வேலை செய்யப் போனாலும் அதுக்கென்று ஒருத்தர் இருக்கார். அத்தையும் என்னை எந்த வேலையும் செய்யவிடுறதில்லை"
அதுவரை நேரமும் தொலைக்காட்சியையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவன், அப்போதுதான் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
"இப்போ அதுக்கு நான் என்ன செய்யணும் என்கிறாய்?"
"இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் பிந்துகோஸ் மாதிரி ஆகிடுவன். பரவாயில்லையா?" என்று அவள் கேட்கவும்
அவளை மேலும் கீழும் ஒரு தடவை பார்த்தான்.
'மொழு மொழுன்னுதானே இருக்கா. பார்த்தாலே ஒரு கிக்கு ஏறுதே. அணைத்தால் எவ்வளவு சொஃப்ராக, இதமாக இருக்கும்' என்றான். மனதிற்குள்தான். வெளியில்,
"இப்போ மட்டும் ஸீரோ சைஸ், கொடியிடை என்று நினைப்போ?"
"அப்படியென்றால்... நான் குண்டாயிருக்கனா?" என்று குழந்தை போல் சிணுங்கினாள்.
"நான் சொல்லித்தான் தெரியணுமா?"
உர்ரென்று அவனை முறைத்தவள் முகத்தைத் திருப்பி உட்கார்ந்தாள். அவளின் இந்தச் செய்கை அடம்பிடிக்கும் சின்னக் குழந்தை போலவே அவனுக்குத் தோன்றியது.
"இப்போ உனக்கென்ன ப்ராப்ளம். நீ குண்டாகாமல் இருக்கணும். அவ்வளவுதானே."
"ம்ம்" என்று தலையாட்டினாள்.
"ஓகே... நாளையிலிருந்து நான் வேர்க்கவுட் பண்ணப் போகும்போது உன்னையும் எழுப்பி விடுகிறேன். நீயும் எக்ஸர்சைஸ் பண்ணு. ப்ராப்ளம் சால்வ்"


வர்ஷனா படிப்பு முடிந்ததுமே வேலைக்கும் சேர்ந்து விட்டாள். அவளுக்கு ஒருநாள் கூட சோம்பியிருக்கப் பிடிக்காது. லீவு நாட்களில் கூட எதையாவது இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பாள். காலையில் மட்டுமே தூக்கத்திலிருந்து எழுந்துக்கக் கஷ்டப்படுவாள். எழுந்துவிட்டால் சும்மா இருக்க அவளால் முடியாது. இங்கே வந்ததிலிருந்து எந்த வேலையும் இல்லாமல் இருப்பது மிகவும் போரடித்தது. இன்று அவனிடம் வேலைக்குப் போவது குறித்துப் பேசவேண்டும் என்று தீர்மானித்திருந்தாள். அது குறித்துக் கேட்கவே இவ்வளவும் பேசினாள். ஆனால், அவள் எதிர்பார்த்தது ஓன்று அவனது பதில் வேறு. அவன் சொன்ன தீர்வைக் கேட்டதும் அடச்சீ என்றானது அவளுக்கு.
"என்ன ஓகேதானே?" என்று அவன் கேட்கவும்
"ம்ம்" என்று வேண்டாவெறுப்பாய் தலையாட்டினாள். கூடவே அவன் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்திருக்கின்றான் தன்னைப் பார்க்கவில்லை என்பதால் உதட்டைச் சுழித்துப் பழிப்பும் காட்டினாள். சரியாக அந்த நேரத்தில் அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அச்சச்சோ என்று நாக்கைக் கடித்தவள் எழுந்து வெளியில் ஓடி வந்துவிட்டாள்.


காலையில் நடந்த அந்தச் சம்பவத்தை எண்ணும்போது யதுநந்தனின் உதடுகள் தானாகவே புன்னகையை சிந்தியது. மேசையில் பிரேமிட்டு வைத்திருந்த தங்களது திருமணப் புகைப்படத்தைக் கையிலெடுத்துப் பார்த்தான். அதில் தன்னவளைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்த போது,
"ஹாய் மச்சி" என்றபடி உள்ளே நுழைந்தான் சிவானந்த். அவன் கையில் வைத்திருந்த படத்தைப் பார்த்ததும்,
"என்ன மச்சி, புது மாப்பிள்ளை.. புது பொண்டாட்டி.. கலக்கிற மச்சி. பொண்டாட்டிய பார்க்க ரொம்ப ஏக்கமாயிருக்க போல."
"வாடா, நீ என்ன இந்த டைமில் இங்கே வந்திருக்க. உன்ஆபிஸில் வேர்க் இல்லை போல."
"வேலையெல்லாம் தலைக்கு மேலே இருக்கு. இப்ப கூட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் உன்னை தேடி வந்தேன். ஃபோனில் பேசினால் சரி வராது. அப்பாவிடம் கேட்டால் இது கூட இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா என்று திட்டுவார். அதுதான் உன்னைத் தேடி வந்தேன் மச்சி..."
என்றவன் தன் தொழில் தொடர்பான சந்தேகங்களை யதுநந்தனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டான். அவனுக்கும் டீ வரவழைத்து இருவரும் பேசியபடி குடித்தனர்.


"அப்புறம் ஏதாவது அவசரமான வேர்க் இருக்கா"
"ஏன் மச்சி"
"இன்னுமொரு முக்கியமான விஷயமும் சொல்லணும் அதுதான்"
"வேர்க் கொஞ்சம் இருக்குதுதான். இதை நீ வந்ததும் கேட்டிருக்கணும். உன் வேலையெல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் கேட்கிற. நீ சொல்லு அதை அப்புறம் பார்க்கிறேன்."
"உன் வெடிங் அன்றைக்கு கொஞ்ச நேரத்திலேயே காணாமல் போயிட்டன் என்று கேட்டாயே..."
"ஆமா மச்சி அதை அன்றைக்கே கேட்டேன். பட், நீ பிறகு சொல்வதாக கூறினாய். நானும் அப்புறம் அதை மறந்துவிட்டேன். ஆமா எங்கே போனாய்?"
சிறிது தயங்கினவன்,
"அன்று உன் மொபைலை நீ என்னிடம் தானே தந்திருந்தாய்"
"'ஆமா மச்சி.. அதுக்கென்ன?"
"நீ மொபைலைத் தந்து சிறிது நேரத்திலேயே உன் மொபைலுக்கு ஒரு ஹோல் வந்தது." என்று சொல்லத் தொடங்கினான்.


தொலைபேசித் திரையில் அன்னௌன் நம்பர் என்று தெரியவும்,
'யாரோ நந்தனுக்குத் தெரிந்தவர்கள் போல. அவனை விஷ் பண்ணத்தான் ஹோல் பண்ணுறாங்க' என்று நினைத்து அழைப்பை ஏற்றான் சிவானந்த். அந்தப் பக்கத்தில் ஒரு பெண்மணி பதட்டமாய் பேசினார்.
"ஹலோ நான் துர்கா ஹொஸ்பிடலில் இருந்து பேசுறேன், நீங்க யதுநந்தனா? உங்களுக்கு வேண்டப்பட்டவங்க ஒருத்தர் சீரியஸாக எங்க ஹொஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கார். உங்களிடம் பேசணும் என்று பேஷன்ட் ரொம்பவும் கேட்கிறார். நீங்க உடனேயே இங்கே வரமுடியுமா?" என்றார். தாலி கட்டப் போகின்ற நேரத்தில் இந்த விடயத்தைப் கூறி யதுநந்தனைக் குழப்புவது சரியாகப் படவில்லை. அத்தோடு அவனுக்கு மிகமிக நெருங்கியவர்கள் எல்லாம் இங்கேதானே நிற்கிறார்கள் என்று யோசித்தவன், "ஓகே மேடம் வருகின்றேன்" என்று பொதுப்படையாகச் சொல்லி விட்டு வைத்துவிட்டான்.


யதுநந்தனிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் இதைப் பற்றிச் சொல்வது சரியில்லை என்று அமைதியாக இருந்துவிட்டான். எனினும், அந்த வைத்தியசாலையின் அருகில் வசிக்கும் தன் நண்பனை அழைத்து விவரம் கூறியவன், அங்கே சென்று சம்பந்தப்பட்ட நபரைப் பார்த்து அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யுமாறும் திருமணம் முடிந்ததும் தான் அங்கே வருவதாகவும் கூறினான். சிறிது நேரத்தில் மீண்டும் அந்த நண்பனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. இவன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் அங்கே இன்று புதிதாக எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை என்றும், வைத்தியசாலையில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினான். இதைக்கேட்டதும் சிவானந்துக்குக் குழப்பமாக இருந்தது.


கோயில் அருகில் இருந்த மண்டபத்தின் அறையில் தயாராகிய யதுநந்தன் வெளியே சென்று தன் குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். அதிகாலையிலிருந்து மணவறை அலங்காரம் செய்ததால் மிகவும் சோர்வாக உணர்ந்த சிவானந்த் அந்த அறைக்குள் புகுந்து அங்கே கிடந்த பெஞ்சில் படுத்துக் கண்களை மூடினான். அந்த அறைக்குள் சிறிது நேரத்திலேயே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. ஆனால், சோர்வால் கண்களைத் திறந்து பார்க்கவில்லை.


மீண்டும் கண்களைத் திறந்தவன் திகைத்துப் போனான். ஏனெனில் அவனது கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் சிறிய கட்டில் ஒன்றில் படுத்திருந்தான். அறையின் கதவுகள் வெளிப்பக்கத்தில் பூட்டப்பட்டிருந்தது. மயக்கமாக்கிக் கடத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் எதுக்கு...? புரியவில்லை அவனுக்கு. பேச்சுக் குரல் கேட்கவும் அவதானித்தான். "இந்நேரம் கல்யாணத்தை நிறுத்தியிருப்பாங்க இல்லடா?"
"மாப்பிள்ளை இல்லாமல் எப்படிடா கல்யாணம் நடக்கும்?"
"அதுதானே. நம்மகிட்டதானே மாப்பிள்ளை இருக்கிறார். அப்புறம் எப்படி நடந்திடும்"
"ஆமாடா அவங்க இப்போ வருவாங்களா?"
"நானு ஃபோன் பண்ணன். கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்களாம்."


'இவனுகள் என்னைப் பற்றித்தான் பேசுகிறான்கள். மாப்பிள்ளை என்றால்... ஓகோ.. நந்தன் என்று நினைச்சு என்னைக் கடத்திட்டான்கள். யாரோ சொல்லித்தான் கடத்தியிருக்காங்கள். யாராய் இருக்கும்...? இப்போ என்ன செய்வது' என்று யோசித்தான். தப்புவதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று சிந்தித்தவன்,எதுவும் புரிபடாது நடப்பது நடக்கட்டும் என்று அப்படியே இருந்துவிட்டான்.


பிற்பகல் நான்கு மணியாகிவிட்டது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் பசி வாட்டி எடுத்தது. 'யாருடா நீங்க? ஏன் என்னைக் கடத்தி வைச்சிருக்கிங்க?' என்று வாய்விட்டே புலம்பினான். பொறுமை இழந்து கத்த வாயைத் திறந்தபோது வெளியில் பேச்சுக் குரல் கேட்கவும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதுகொடுத்துக் கேட்டான்.
"வாங்க மேடம், நீங்க சொன்னமாதிரி காரியத்தக் கச்சிதமாய் முடிச்சிட்டம்."
"கிழிச்சிங்க... யாரையடா கடத்தி வந்திங்க?"
இந்தக் குரலைக் கேட்டதும் எங்கேயோ கேட்ட குரல் போல சிவானந்துக்குத் தோன்றியது.
"நீங்க சொன்ன மாதிரி மாப்பிள்ளையைக் கடத்திட்டோம்."
"டேய்... எனக்கு வர்ற கோபத்துக்கு..."
"என்ன மேடம்...?"
வேறு ஒரு பெண் குரல் கேட்டது. "ரிலாக்ஸ் ஹரிணி... டேய் எருமைகளா... உங்களை நம்பி இந்த வேலையைத் தந்தனே என்னைச் சொல்லணும். மாப்பிள்ளைக்குப் பதிலா வேற யாரையோ கடத்தி வந்திட்டிங்க. அங்கே அவனுக்கு மேரேஜ் முடிஞ்சுது. எங்க திட்டம் எல்லாமே வேஸ்ட்" என்றாள்.
'ஓகோ... இது ஹரிணியின் வேலையா? இவளுக்கு எப்படி இங்கே ரௌடிகள் எல்லாம் பழக்கமானாங்க?' என்று தனக்குள் பேசியவன், மீண்டும் அவர்களின் பேச்சை செவிமடுத்தான்.
"இல்லை மேடம், அங்கே நம்ப சக்குதான் நின்று வேவு பார்த்தான். மாப்பிள்ளை றூமுக்குள் இருக்கார் என்று அவன் சொன்ன பிறகுதான் நாங்க உள்ள போய் தூக்கினோம்."
"நீயும் ஃபோன் பண்ணி சொதப்பிட்டாய். இவனுகளும் ஆளமாத்தித் தூக்கி வந்திட்டானுகள். எல்லாம் என் நேரம்" என்று ஹரிணி புலம்புவது கேட்டது.
'அப்போ ஹோல் வந்ததும் இவளோட வேலைதானா'


அவள் உள்ளே வந்து கடத்தி வந்தது யாரை என்று பார்க்கவேயில்லை.
"அவனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா?"
"இன்னும் இல்லை."
"குட், இப்படியே தூக்கிப் போய் வெளியில் எங்கயாவது விட்டுட்டு வந்திடுங்க. கடத்தின விஷயம் அவனுக்குத் தெரியாமலேயே போகட்டும்"
"சரிங்க மேடம்." என்றதைத் தொடர்ந்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. சிவானந்த் மயக்கத்தில் இருப்பவன் போல் படுத்துவிட்டான். அவனைத் தூக்கியவர்கள் ஒரு காரில் அவனைக் கொண்டு சென்றார்கள். ஆட்கள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் அவனைத் தூக்கிக் கிடத்தி விட்டுச் சென்றுவிட்டார்கள். கார் செல்லவும் எழுந்தவன் வழியில் சென்றவர்களைக் கேட்டுத் தன் வீடு வந்து சேர்ந்தான்.
 
Top