எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 38 (இறுதி அத்தியாயம்)

S.Theeba

Moderator
வரம் 38

யதுநந்தன் சாப்பிட்டு முடித்ததும், சிவானந்தை அனுப்பி விட்டுத் தன் அறைக்கு வந்தான். அங்கே இலக்கியாவுடன் சேர்ந்து வர்ஷனாவும் தூங்கிவிட்டிருந்தாள். அசதியும் டாக்டர் எழுதிக் கொடுத்திருந்த மாத்திரைகளின் வீரியமும் சேர்ந்து அவளைத் தூக்கத்துக்குத் தள்ளியிருந்தது. இருவரும் தூங்கும் அழகைக் கொஞ்சநேரம் பார்த்திருந்தவன், இருவருக்கும் போர்வையைப் போர்த்திவிட்டான். அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த பானுமதி
"அண்ணா, நான் இலக்கிக் குட்டியக் கூட்டிட்டுப் போக வந்தேன். ஓ... குட்டி தூங்கிட்டாளா...? அண்ணா இவளைத் தூக்கிட்டு என் ரூமில் கிடத்திட்டு போறிங்களா?"
"இல்ல பானுக்குட்டி, லக்கி இன்று எங்களோடே படுக்கட்டும். நீ போய் தூங்கு டா..."
"ஓகேண்ணா... அப்புறம் அம்மா சொல்லச் சொன்னாங்க. நாளைக் காலையில் கருமாரியம்மன் கோயிலுக்குப் போகணுமாம். அண்ணியக் காணல என்றதும் வேண்டுதல் வச்சாங்களாம். நாளைக்கே போய் வேண்டுதலை நிறைவேற்றிட்டு வந்திடலாமாம். உங்களை ஏர்லி மோர்னிங்கே எழுந்து ரெடியாகட்டாம்."
"ஓகே டா, குட்நைட்..."
"குட்நைட் அண்ணா" என்றுவிட்டுச் சென்றாள்.



மறுநாள் காலை வீட்டினர் அனைவருமே தயாராகிக் கோயிலுக்கு வந்தனர். சந்திரமதி கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்வதற்கும் மதியம் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். வர்ஷனாவும் தீச்சட்டி எடுக்கும் தனது வேண்டுதலையும் நிறைவேற்றினாள்.


மதியம் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் மட்டுமல்லாது, அருகிலிருந்த ஏழை எளியவர்களுக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.


யதுநந்தன் அங்கிருந்து வர்ஷனாவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றான். அங்கே தீக்காயத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த தனது பணியாளர்களை நலம் விசாரித்தவன், அவர்கள் குடும்பத்திற்கும் வேண்டிய உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்தான்.


திரும்பி வரும் வழியில் வர்ஷனாவுக்குச் சில தகவல்களைக் கூறினான்.
"ஃபக்டரியில் நேற்று நடைபெற்ற குழப்பத்திற்கு காரணமும் ஹரிணிதான். ஏற்கனவே அங்கே இரு குழுவினருக்கு இடையில் இருந்த முறுகலை அறிந்து கொண்டிருக்கிறாள். அதில் ஒரு சிலரை பணத்தாசை காட்டி சாதாரண முறுகலைப் பெரும் கலவரமாக மாற்றச் செய்தாள். அதில் ஒருவனைக் கொண்டுதான் ஃபக்டரியில் தீப்பற்ற வைத்திருக்கிறாள். சம்பந்தப்பட்டவர்களை யெல்லாம் பிடித்தாயிற்று. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தியே உன்னையும் கடத்தத் திட்டமிட்டிருக்கிறாள்."
அவன் சொன்னதைக் கேட்டதும் பெரும் திகைப்பாக இருந்தது அவளுக்கு. அத்தோடு நேற்றிலிருந்து யது தன் கூடவே இருக்கின்றான். இதெல்லாம் எப்படி...? என்று அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் "எனக்குத்தான் உயிர் கொடுப்பான் தோழனாக சிவா இருக்கின்றானே. நான் எள் என்றால் எண்ணையுடன் வந்து நிற்பான். அவனை நண்பனாகப் பெற நான் எத்தனை ஜென்மங்கள் தவம் இருந்தேனோ தெரியலை." என்று உள்ளுணர்வோடு தன் நண்பனை நினைத்து உருகி நின்றான்.


இரவு சாப்பிட்டு முடித்ததும் தந்தையுடன் சிறிது நேரம் தொழில் தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தான். முடித்துவிட்டுஅறைக்குள் வந்தவன் வர்ஷனாவைக் காணாது தேடினான். அவள் பால்கனியில் வெளியே தோட்டத்தைப் பார்த்தபடி ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்தாள். குளியலறை சென்று உடம்பு கழுவி வந்தான். அப்போதும் அங்கேயே நின்றிருந்தாள். அவன் வந்ததைக்கூட அவள் அறியவில்லை.


அவள் பின்னே சென்று நின்றவன் அவளை அணைத்து நின்றான்.
எதிர்பாராத இந்த அணைப்பில் திடுக்கிட்டவள் தன் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் காது மடல் அருகே மெதுவாய் குனிந்து,
"என்ன பயம்? என் ஷனாவை என் அனுமதியின்றிக் காற்றுக் கூடத் தீண்ட முடியாது. தெரியுமா?"என்றான். "ம்ம்.." என்று ஒற்றைச் சொல்லிலேயே பதிலளித்தாள்.



அவளைத் திருப்பித் தன்னைப் பார்க்க வைத்தவன், அவள் கண்ணோடு கண் நோக்கினான்.
"என்னடா என்ன யோசனை?"
"உங்ககிட்ட ஒன்று சொல்லணும்."
"எதுவாயிருந்தாலும் உள்ளே வந்து சொல்லு." என்று அவளை உள்ளே அழைத்து வந்தான்.


கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவன், அவளைத் தன்னருகில் அமர்த்தித் தன் மார்போடு அவளை சாய்த்துக் கொண்டான். அவள் தலைமீது தன் கன்னத்தை வைத்தவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,
"ஷனா... என்னவோ சொல்லணும் என்றாயே" என்றான்.
அவளால் பதில் சொல்ல முடியவில்லை. வெற்று மார்பில் அவன் அணைத்திருந்ததும் அவன் மார்பு ரோமம் ஏற்படுத்திய குறுகுறுப்பும் சேர்ந்து அவளைத் தடுமாறச் செய்திருந்தது. அவள் எதுவும் பேசவில்லை என்றதும்
"என்னடா?" என்று அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான். அதில் தெரிந்த வெட்கத்தையும் தடுமாற்றத்தையும் பார்த்தவன் உல்லாசச் சிரிப்புடன் "ஓகே நீ பேசி முடிக்கும் வரைக்கும் டிஸ்ரன்சை மெயின்டெய்ன் பண்ணுறேன். பட், கொஞ்ச நேரம்தான்" என்று அவளை விட்டு சற்று விலகியிருந்தான். அப்படியும் அவள் கைகளில் ஒன்றைத் தன் கைகளில் பிடித்தவன் "ரொம்பவும் தள்ளியெல்லாம் இருக்க முடியாது. இவ்வளவுதான். இப்போ சொல்லு."
"யது... நான் சொல்வதைக் கேட்டுக் கோபப்படக் கூடாது. சரியா...?"
"ஓகே ஓகே. கோபப்படமாட்டேன் சொல்லு."
"ஹரிணி திரும்பத் திரும்பத் தப்புப் பண்ணக் காரணம் என்ன? பணம்தானே... இப்போ தண்டனையை அனுபவிச்சிட்டு வந்த பிறகு அவள் வாழ்வதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் திரும்பவும் தப்புப் பண்ணவே தோன்றும்..."
"அதனால்..."
"அதுவந்துங்க... அவளுக்கென ஒரு தொகையைக் கொடுத்திடுவோம். அவள் ஜெயிலில் இருந்து திரும்பி வந்து அந்தப் பணத்தைக் கொண்டு நல்லபடியாக வாழ்ந்தாலும் சரி. அல்லது அதையும் அழிச்சிட்டு திரும்பவும் தப்புப் பண்ணினாலும் சரி. இனி அவள் லைவ். பட், நமக்கு எந்த கில்டி ஃபீலும் இருக்காதில்லையா...? பிளீஸ்" என்று சொல்லிவிட்டு அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.
"ம்ம்... நீ சொல்வதும் சரிதான். அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை நான் செய்கிறேன்." என்றான்.


"வேற எதுவும் சொல்ல இருக்குதா?"
"இல்லை. அதைத்தான் யோசிச்சிட்டிருந்தன். இப்போ எனக்கு எந்தக் கவலையும் இல்லை."
"அப்புறம் என்ன இங்கே வரவேண்டியது தானே" என்று கைகளை விரித்து அழைத்தான். அவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்ததும், அவள் உதடுகளைத் தன் உதடுகளால் சிறைபிடித்திருந்தான். சிறிது நேரம் கழித்தே அதற்கு விடுதலை தந்தான்.


"ஷனாம்மா... உன்னைக் காணும்னு நான் தவிச்ச தவிப்பிருக்கே. அதைச் சொன்னால் உன்னால் புரிந்து கொள்ள முடியாது. என் காதலை முழுமையாக அப்போதுதான் உணர்ந்தன். என் ஷனா எங்கே போனாளோ? எப்படித் தவிக்கிறாளோ என்று துடிச்சுப் போயிட்டேன்."


"என் காதலை நான் உணரத்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கும் போல. என் மேல் எவ்வளவு நம்பிக்கையும் அன்பும் வச்சிருந்திருக்க. இலக்கியாவுக்காகத்தான் உன்னை மணப்பதாக நினைத்தேன். அப்படித்தான் அன்று எனக்கு நானே எண்ணியிருந்தேன். ஆனால், என் காதலுக்காகவும் உன் அருகாமை எப்போதும் எனக்கு வேண்டும் என்பதாலும்தான் நான் அந்த முடிவெடுத்தேன் என்று இப்போது புரிகின்றது."


"ஒரு உண்மை சொல்லட்டுமா? நீ என் பக்கத்தில் இருக்கும் நேரம் எல்லாம் நான் எவ்வளவு தவித்துப் போயிடுவேன் தெரியுமா?
தினமும் காலையில் எழுந்ததும் நீ தூங்கும்போதே உன்னைக் கிஸ் பண்ணுவேன். அது தவறினால் அன்றைய நாளே எனக்கு வெறுக்கும்."
"எனக்குத் தெரியுமே."
"என்ன...?
"நீங்க தினமும் மோர்னிங் கிஸ் தாறது." என்றவள் தினமும் நடக்கும் கூத்தை அவனுக்குக் கூறினாள்.
"அடி கள்ளி..." என்றவன் அதற்கு மேல் அவளைப் பேசவிடவில்லை. அவனும் பேசும் நிலையில் இல்லை.


அவர்களின் சந்தோசம் வாழ்வில் என்றும் நிலைக்க வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.


முற்றும்.



? ? ?



இரண்டாவது கதையாக எழுதத் தொடங்கினாலும் முதலாவதாக முடிவுற்றதால் இதுவே எனது முதல் கதையாகின்றது.



என் எழுத்தில் குறையிருந்தாலும் என் கதையில் குறையிருந்தாலும் பெரும் மனது பண்ணி என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்.



இப்போதுதான் எழுதத் தொடங்கியதால் வரவேற்பு இருக்குமோ என்ற பயத்தில் குறைவாகவே எழுதினேன். அதற்கு ஆதரவு தந்த என் அன்புள்ளங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இன்னும் கதை எழுத ஆசைதான். உங்கள் ஆதரவைப் பொறுத்தே அது அமையும்.
உங்கள் ஆதரவு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கின்றேன்.



என்றும் நன்றியுடன் சத்யா தீபா.
 
Top