எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK - 24 நறுமுகையே மலர்ந்திடு - கதைத்திரி

நிலா 24

New member
ஹாய் ப்ரெண்ட்ஸ்

நான் உங்கள் நறுமுகை நிலா 24. நான் நிறைய கதை படிப்பேன். திடீர்னு கதை எழுதணும்னு ஒரு ஆசை. ப்ரஷா சிஸ் கிட்ட சொன்னேன். அவங்க ஓகே சொல்லி உடனே த்ரேட் ஓபன் பண்ணி கொடுத்துட்டாங்க. எல்லாரும் டீசர், கவர் பிக், மீம்ஸ்னு போட்டு கலக்கிட்டு இருந்தீங்க.

மீ பாவம்.. பச்ச மண்ணு வேற. உங்க மீம்ஸ் எல்லாம் பார்த்து பயந்து போய் தான் இதுவரை இந்த கதைக்கு நான் டீசர் போடவே இல்லை. ஆனாலும் எத்தனை நாளைக்கு தான் பயந்து ஓட முடியும். கதையை இன்று ஆரம்பிச்சாகணும்ல.

கதையின் தலைப்பு – நறுமுகையே மலர்ந்திடு

நாயகன் – உதயாதித்தன்
நாயகி – வெண்மதி


கூட்டுக் குடும்பத்திற்குள் நடக்கும் உறவுகளின் பாச போராட்டக் கதை.

அத்தியாயங்கள் வியாழன், வெள்ளிக்கிழமை தினங்களில் தவறாமல் வந்து விடும்.
 

நிலா 24

New member

inbound436971556652974748.jpg

பகுதி 1



புலர்ந்தும் புலராத காலை பொழுதில் வாசல் பெருக்கி கோலம் போட அமர்ந்தாள் வெண்மதி. வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே தலைக்கு குளித்து வெள்ளை துண்டை தலையில் கட்டி இருந்தவளின் கைகள் கோலத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டு இருந்தது. சற்று நேரத்திற்கு எல்லாம் கோலத்தை போட்டு முடித்தவள் எழுந்து நின்று அதன் அழகை ரசித்து பார்த்தாள். வெண்மதியின் உதடுகள் திருப்தி உடன் விரிந்தது.

மாநிறம், பிறை நெற்றி, ட்ரிம் செய்யப்படாமலே வில்லாக வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிறத்தில் சிறிய வட்ட பொட்டு, வசீகரிக்கும் விழிகள், அளவான நாசி, செந்நிற அதரங்கள் உடையவள் தான் வெண்மதி.

ஆறு மணிக்கு துயில் களைந்து தன் அறையில் இருந்து வெளியே வந்த கங்கா ஹாலுக்கு வர, அங்கே சிவானந்தன் தினசரி பத்திரிக்கையை படித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்து இருந்த பார்வதி பாக்கை இடித்துக் கொண்டு இருந்தார். அவர்களிடம் வந்த கங்கா “மாமா.. அத்தை..” என்று அழைக்க, அவர்கள் இருவரும் ஒரு சேர மூத்த மருமகளை ஏறிட்டு பார்த்து புன்னகையித்தார்கள்.

“என்னம்மா.. இப்போ தான் எழுந்து வர்றீயா??” என்று பார்வதி கேட்க

“ஆமா அத்தை..”

“பெரியவன் நேத்து ராத்திரி எப்போ வீட்டுக்கு வந்தான்??” என்று சிவானந்தன் தனக்கே உரிய கணீர் குரலில் கேட்க,

“மில்லுல கொஞ்சம் வேலை இருந்துச்சாம். ராத்திரி 1.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார் மாமா” என்ற கங்கா “இருங்க.. நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று கூறி சமையலறைக்கு சென்றார்.

அங்கு வெண்மதி நின்று சமைத்து கொண்டு இருந்தாள். “மதி.. நீ என்ன பண்ற இங்கே? உன்னை கிச்சனுக்கே வர கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல்ல??” என்று இடுப்பில் கை வைத்து கடுமையானக் குரலில் வினவினார்.

வெண்மதி சின்ன சிரிப்புடன் அவர் அருகே வந்து அவரது கையில் ஒரு மாத்திரையை கொடுத்தவள் “இந்தாங்க.. முதல்ல காலையில எழுந்திரிச்சதும் போட வேண்டிய மாத்திரையை போடுங்க. அப்புறமா கத்துங்க” என்றாள்.

கங்காவும் வெண்மதியை முறைத்துக் கொண்டே மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை குடித்தவர் “உனக்கு இன்னைக்கு எக்ஸாம் இருக்குன்னு தானே கிச்சனுக்கு வராதேன்னு சொன்னேன். இங்கே சமையல்கட்டுல நிக்குற நேரம், புக்கை எடுத்து நாலு பக்கம் படிச்சி இருக்கலாம்ல்ல” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

“டென்ஷன் ஆகாதீங்க கங்காம்மா.. நான் முன்னாடியே எக்ஸாமுக்கு படிச்சிட்டேன். எக்ஸாம் அன்னைக்கு புக்கை எடுத்து அரக்க பரக்க படிக்க வேண்டிய அவசியம் எல்லாம் எனக்கில்லை” என்று கூலாக பதில் அளித்தாள் வெண்மதி.

அதை கேட்ட பிறகு தான் கங்காவின் முகத்தில் புன்னகையே வந்தது. “கங்காம்மா.. நான் டிபனுக்கு இட்லி ஊத்தி வச்சிட்டேன். சட்னி அரைச்சிட்டேன். சாம்பார் தாளிச்சிட்டு இருக்கேன். 15 நிமிஷத்துல சாம்பாரும் ரெடி ஆகிடும். இந்தாங்க நீங்க டீ எடுத்துட்டு போங்க” என்று அவரது கையில் டீ கோப்பைகள் அடங்கிய ட்ரேவை கொடுத்தாள் வெண்மதி.

அதனை வாங்கிக் கொண்ட கங்கா “நான் செய்ய ஏதாவது வேலை விட்டு வச்சி இருக்கீங்களா அம்மணி..” என்று கிண்டலாக கேட்க

வெண்மதியோ யோசிப்பது போல கன்னத்தில் விரல் வைத்து தட்டியவள் குறும்பு புன்னகையுடன் கங்காவை பார்த்து “ம்ம்.. இருக்கே..” என்றாள்.

“என்ன வேலை..” கங்கா சிரித்து கொண்டே கேட்க

“பெரிய மாமாவை எழுப்பி டீ கொடுக்கணும்” என்று வெண்மதி கூற, கங்கா அவளது தலையில் வலிக்காத வண்ணம் ஒரு கொட்டு வைத்தார்.

“என் கிட்ட மட்டும் கூட கூட பேசு. மத்தவங்க கிட்ட எல்லாம் வாயே திறக்காதே” என்று கங்கா சலிப்பாக சொல்லி விட்டு செல்ல, அதற்கும் புன்னகை புரிந்தாள் வெண்மதி.

வீட்டில் உள்ள எல்லோருக்கும் டீ கொடுத்து விட்டு கங்கா பின்பக்கம் செல்ல, அங்கே அவரது தங்கை யமுனா துணிகளை கையால் துவைத்துக் கொண்டு இருந்தார்.

“யமுனா.. வாஷிங் மேஷின் ரிப்பேரா.. துணி எல்லாம் கையால துவைச்சிட்டு இருக்க” என்று வினவ

“இல்லக்கா.. இதெல்லாம் ஆதியோட துணி. நேத்து எங்கேயோ பசங்களோட கிரிக்கெட் விளையாட போனான். அங்க என்ன கூத்து நடந்துச்சோ.. தெரியல. துணி எல்லாம் ஒரே சேறும் சகதியுமா இருக்கு” என்று யமுனா கூற, தங்கையின் கையில் இருந்த துணியை ஒரு பார்வை பார்த்தவர்

“துணி எல்லாம் கிழிஞ்சி இருக்கு.. யார்க்கிட்டயும் சண்டை எதுனா போட்டு இருப்பானோ..” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வீட்டு வாசலில் யாரோ கத்தும் சத்தம் கேட்டது.

“ஏய் ஆதி.. வெளியே வாடா..” என்று அந்த தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன் கத்த,

சிவானந்தன் புருவ முடிச்சுடன் தன் மனைவியைப் பார்த்து “யாரது கத்துறது..” என்று கேட்டார்.

அதற்கு பார்வதி பதில் சொல்லும் முன்பு சிவானந்தனின் மூத்த மகன் சூர்ய பிரகாஷ், இளைய மகன் சந்திர பிரகாஷ் இருவரும் ஹாலுக்கு வந்துவிட்டார்கள். அதே நேரம் கங்காவும் யமுனாவும் பதட்டத்துடன் வாசலை நோக்கி செல்ல, அவர்களை தன் ஒற்றை உஷ்ணப் பார்வையால் நிறுத்தினார் சூர்ய பிரகாஷ்.

“டேய் ஆதி.. உள்ளே என்னடா பண்ணிட்டு இருக்கே.. வெளியே வாடா” என்று எம்.எல்.ஏ மீண்டும் குரலை உயர்த்தி கத்த, இப்போது சூர்ய பிரகாஷ் - கங்காவின் மக்களான அகிலன், முகிலன், கோகிலா மற்றும் சந்திர பிரகாஷ் – யமுனாவின் இளைய மகள் தாரா ஆகியோருடன் வெண்மதியும் குழப்பத்துடன் வந்து நின்றார்கள்.

“அப்பா யாரது கத்துறது..” என்று அகிலன் கேட்க, சூர்ய பிரகாஷ் எதுவும் சொல்லாமல் வீட்டு வாசலுக்கு போனார்.

அவரை தொடர்ந்து அனைவரும் வாசலுக்கு செல்ல, அங்கே கோபத்தில் கொந்தளித்துக் கொண்டு இருந்தார் எம்.எல்.ஏ பாண்டியன்.

அவர்களை பார்த்ததும் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்ட பாண்டியன் “யோவ் சந்திரா.. உன் புள்ளைக்கு எம்பூட்டு தைரியம் இருந்தால் என் புள்ளையை அடிச்சி அவன் மண்டையை உடைச்சி இருப்பான். எங்கேய்யா போனான் உன் மவன்.. கூப்பிடுய்யா அவனை..?” என்று எகிற, சந்திர பிரகாஷின் பார்வை எம்.எல்.ஏ. மகனின் மீது படிந்தது.

தலையில் கட்டுடன் முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே சிவந்து வீங்கியும் போய் இருந்தவனைக் கண்ட சந்திர பிரகாஷ் ஆத்திரத்துடன் திரும்பி மனைவி யமுனாவை முறைத்து பார்த்தார்.

யமுனா பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு அக்காவின் பின்னே ஒளிந்து கொண்டவர் மெல்லிய குரலில் ‘இவர் வேற என்னையவே முறைக்குறாரே.. போய் இவர் பெத்த மவராசனை முறைக்க வேண்டியது தானே..’ என்று முணுமுணுக்க, அது யார் காதில் கேட்டதோ இல்லையோ, கங்காவின் காதில் தெளிவாக கேட்க, அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கங்கா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க, சூர்ய பிரகாஷ் எம்.எல்.ஏவின் மகனை கூர்ந்து நோக்கினாரே தவிர எதுவும் பேசவில்லை.

“சந்திரா என்னடா இது..” என்று தந்தை சிவானந்தன் பல்லை கடிக்க, அவருக்கு பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.

சந்திர பிரகாஷ் மனைவியை நோக்கி “யமுனா.. போய் ஆதியை வர சொல்லு..” என்று கோபத்தில் வார்த்தைகளை மென்று துப்ப, யமுனா விட்டால் போதும் என்று வீட்டிற்குள் ஓடிவிட்டார்.

நேரே மகனின் அறைக்கு சென்ற யமுனா தூங்கிக் கொண்டு இருந்த மகனின் தோளை உலுக்கி “டேய் ஆதி.. எந்திரிடா..” என்று அடிக்குரலில் கத்த, உதயாதித்தன் கைகளை மடக்கி சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் கடிகாரத்தை பார்க்க, அது காலை 7.30 மணி என்று காட்டியது.

“ப்ச்.. ஏன்ம்மா இவ்ளோ சீக்கிரம் என்னை எழுப்புறீங்க? அதான் காலேஜ் போக இன்னும் டைம் இருக்கே” என்று சலித்துக் கொண்டே மீண்டும் படுக்க போக,

அவனை பிடித்து தடுத்த யமுனா “நேத்து நீ பண்ணிட்டு வந்த காரியத்தால குடும்பமே கொந்தளிச்சு போய் இருக்கு. உன் அப்பா வேற என் மேல கொலவெறியில இருக்கார். உனக்கு இப்போ தூக்கம் ஒன்னு தான் கேடு. எழுந்து வாடா” என்றார் ஆத்திரமாக.

“ஓஹ் எம்.எல்.ஏ. சார் வந்து இருக்காரா..” என்று வெகு நக்கலாக கேட்டவன் “நேத்து நைட்டே வருவாருன்னு எதிர்ப்பார்த்தேனே.. இப்போ தானா வந்து இருக்கார்” என்று கேட்டுக் கொண்டே கட்டிலை விட்டு எழுந்து கொள்ள,

யமுனாவோ “அடப்பாவி..” என்று வாயில் கை வைத்துக் கொண்டார்.

உதயாதித்தனின் இடுப்பில் சார்ட் மட்டும் இருக்க, அப்படியே வெளியே போக போனவனை பார்த்து “கருமம்.. கருமம்..” என்று தலையில் அடித்துக் கொண்ட யமுனா

“டேய் எருமை.. தூங்கி எழுந்து அப்படியே வெளியே போய் தொலைக்காதே. மேல் சட்டை எதுவும் போட்டுக்கிட்டு வா” என்று சொல்லி விட்டு செல்ல, அவனோ கட்டிலில் கழட்டி போட்டு இருந்த கையில்லாத பனியனை எடுத்து அணிந்து கொண்டு வீட்டு வாசலுக்கு வந்தான்.

உதயாதித்தனை பார்த்த பாண்டியன் ஆத்திரத்துடன் அவன் மேல் பாய போக, அகிலனும் முகிலனும் பாண்டியனை தடுக்க போக முதல் சூர்ய பிரகாஷ் பாண்டியனை பிடித்து பின்னால் இழுத்தவர் பாண்டியனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.

இந்த காட்சியை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நிற்க, உதயாதித்தனின் உதடுகள் மட்டும் புன்னகையித்தது.

“எங்கே வந்து யார் மேல கை வைக்க பார்க்குற.. தொலைச்சிடுவேன்..” என்று சூர்ய பிரகாஷ் ஒற்றை விரலை நீட்டி எம்.எல்.ஏ. பாண்டியனை எச்சரித்தார்.

“யோவ்.. உங்க வீட்டு பையன் தான்ய்யா முதல்ல என் பையன் மேல கையை வச்சது. அதுக்கு நியாயம் கேட்டு வந்தால் எம்.எல்.ஏ.ன்னு கூட பார்க்காமல் என் மேலேயே கையை வைப்பீயா..” என்று பாண்டியன் ஆத்திரத்துடன் பல்லை கடிக்க

“ஆதி..” என்று கணீர் குரலில் அழைத்தார் சூர்ய பிரகாஷ்.

“பெரியப்பா..” என்றபடி அவர் முன்னே வந்து நின்ற உதயாதித்தன் சிறிதும் பயமின்றி அவரை நேருக்கு நேர் பார்த்தான்.

“நீ இந்த பையனை அடிச்சீயா?” என்று சூர்ய பிரகாஷ் கேட்க, அடுத்த நொடியே “ஆமா.. அடிச்சேன்” என்றான் உதயாதித்தன்.

உடனே திரும்பி அடிப்பட்ட காயத்துடன் நின்று இருந்த எம்.எல்.ஏவின் மகனைப் பார்த்த சூர்ய பிரகாஷ் “என் பையன் ஏன் உன்னை அடிச்சான்?” என்று கேட்க,

அவனோ அதிர்ச்சி உடன் வெண்மதியின் அருகில் நின்று இருந்த தாராவை ஒரு பார்வை பார்த்தவன் திருதிருவென்று முழித்துக் கொண்டே “அது.. அது.. நான் ரோட்டுல சும்மா நின்னுட்டு இருந்தேன். அப்போ இவனாவே வந்து என்னை அடிச்சான்” என்று திக்கி திணறினான்.

சூர்ய பிரகாஷோ மேற்கொண்டு எதுவும் கேட்காமல் எம்.எல்.ஏ.வை அழுத்தமாகப் பார்த்தவர் “இப்போ தெரியுதா.. தப்பு யார் மேலன்னு..” என்று கேட்க, பாண்டியன் தன் மகனை முறைத்தார்.

“என் பையன் தப்பு பண்ணி இருந்தால் என் முகத்தை நேருக்கு நேர் பார்த்து இருக்க மாட்டான். உன் பையன் மேல தப்பு இருக்குறதால தான் அவன் இப்படி திக்கி திணறி நிக்குறான்” என்று அவர் உறுதியாக கூற, பாண்டியன் நறநறவென்று பற்களை கடித்தார்.

உண்மையில் எம்.எல்.ஏ. மகன் தான் பள்ளி வாசலில் நின்று மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து கொண்டு இருந்தான். நேற்று உதயாதித்தனின் தங்கையான தாராவையும் அவன் கிண்டல் செய்து இருக்க, அழுது கொண்டே வீட்டிற்கு வந்தவள் அண்ணனை போனில் அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்.

அதன் பிறகு தான் உதயாதித்தன் எம்.எல்.ஏ மகனை தேடி சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து அவனது மண்டையை உடைத்தான்.

சூர்ய பிரகாஷ் பாண்டியனிடம் “நீ இந்த தொகுதி எம்.எல்.ஏன்னா பெரிய கொம்பா.. என் வீட்டு வாசல்ல வந்து நின்னு சவுண்ட் விடுவீயா.. நான் ஒரே ஒரு போன் போட்டால் போதும், உன்னோட பதவி காலி ஆகிடும்” என்று எச்சரித்து விட்டு வீட்டிற்குள் செல்ல, அவரை தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே சென்றார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் அருகில் உள்ள கிராமம் ‘சின்ன தாங்கல்’ (கற்பனை பெயர்). இங்கு பெரும் செல்வாக்கு பெற்ற குடும்பம் தான் சிவானந்தனின் பெரிய குடும்பம். அந்த காலம் தொட்டு இப்போது வரை தோட்டம் தொரவு வைத்து பண்ணையம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அரிசி மண்டி, மில், கார்மென்ஸ் போன்ற தொழில்களையும் செய்து வருகிறார்கள்.

பெரிய குடும்பம் சூர்ய பிரகாஷ் என்றால் சுற்றுவட்ட பகுதியில் தனி மரியாதை. கிட்டதட்ட பதவியில் இல்லாமலேயே அப்பகுதியை ஆட்சி செய்து கொண்டு இருப்பவர் சூர்ய பிரகாஷ். அவரின் கண் முன்னாடியே அவரது மகனை அடிக்க சென்றால் சும்மாவா விடுவார்.

நறுமுகை மலர்வாள்..

கருத்துத்திரி


https://www.narumugainovels.com/index.php?threads/nnk-24-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.673/
 
Last edited:
Top