எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

NNK-49. விடியாமல் தான் ஒரு இரவேது - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK42

Member

Episode 1:​

எழிலகத்தின் முன்னே வந்து கிரீச்சிட்டு நின்றது அந்த கறுப்பு நிற யுனிகார்ன் பைக். அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த சாலையில் அருகில் இருந்த எவரையும் கண்டு கொள்ளாது பைக்கை நிறுத்திய வேகத்தில் எழிலகத்திலும் நுழைந்து இருந்தான் பாரி வேந்தன். (பைக்கா? ஹீரோ கிட்ட கார் இல்லையானு யோசிக்காதீங்க………. ஹீரோக்கு பைக் போதும்னு சொல்லிட்டார்). எதுக்குத் திரும்பி பாரியப் பார்த்தாங்க? பைக் சத்தம் மட்டும் காரணம் இல்லை……..சார் கெட்டப் அப்படி……….​

மாநிறத்தை விட சற்றே கூடுதல் நிறம். பனை மரத்தில் பாதி வளர்ந்தது போல் ஆறடிக்கும் சற்றே குறைவான உயரம்………சிக்ஸ் பேக்லாம் இல்லை……..உயரத்துக்கு ஏற்ற உடம்பு……..நடை, பாவனைகளில் மிதமிஞ்சிய அலட்சியம்………. தோள் வரை வளர்க்கப் பட்டிருந்த அடர்த்தியான நீளமான முடி…….. கறுப்பு நிற வளைவுகள் கொண்ட மெட்டல் கிளிப்பில் அடங்கியிருந்தது. (நம்புங்கள்……. இது நாயகன் அறிமுகம் தான்). அடர்ந்து காடு போல் வளர்ந்து இருந்த தாடிக்குள் தேடும் நிலையில் இருக்கும் முகமும் ரேபான் குளிர் கண்ணாடியின் உபயத்தால் முற்றிலும் மறைக்கப் பட்டிருந்தது.​

அவன் எழிலகத்தில் நுழைந்த வேகத்தில் அங்கே வரவேற்பில் பேசிக்கொண்டிருந்த மூன்று பெண்களின் கவனமும் பாரியிடம் திரும்பியது. வரவேற்பில் அமர்ந்து இருந்த சங்கமித்ரா தன் எதிரில் நின்று இருந்த பெண்களிடம் இருந்து கவனத்தைத் திருப்பிப் புதியவனிடம் “என்ன சார் செய்யணும்? சொல்றிகளா?…….” என்று மென்குரலில் கேட்டிருந்தாள்.​

“நான் ஏற்கனவே அருண் கிட்ட பேசிட்டுத் தான்வே வந்தேன்” என்றான் பாரி சங்கமித்ராவை ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே……….​

பாரிக்கு சங்கமித்ராவின் உணர்ச்சியற்ற பார்வை ஒரு சுவாரசியத்தைக் கொடுத்தது. அங்கே நின்றிருந்த மற்ற இரு பெண்களின் கவனமும் ஒரு ஆர்வத்துடன் பாரியிடமே இருக்கும் பொழுது……….தன்னிடம் நேர் கொண்ட பார்வையில் பேசும் சங்கமித்ராவின் நிர்மலமான முகம் பாரியை ஈர்த்தது.​

“அருண் ஒரு ச்சோலி பார்த்துக்கிட்டு இருக்காப்ல……..பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்……..அதுவரைக்கும் நீங்க அங்கன உட்காருங்க………” என்று எதிர் திசை சோபாவைக் கை காட்டியிருந்தாள் சங்கமித்ரா. மித்ராவின் கவனம் பெண்களிடம் திரும்பியதும் அவர்களும் விட்ட பேச்சைத் தொடர்ந்தனர்.​

“யக்கா…… பிளீஸ்…….. யக்கா………. நீங்களே வாரிகளா யக்கா?...... எனக்கு நீங்க செய்றது தான் யக்கா பிடிக்கிது……. பிளீஸ்…….. யக்கா………” என்று ஒரு பெண் சங்கமித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “யக்கா நீங்கதேன் வெரசா ச்சோலி முடிச்சிடுவீகல்ல…….. ச்சோலி ஆனதும் சுருக்கா எங்க ஐயா பிளசருல( அம்பாசிடர்) நீங்க வந்துடலாம்க்கா…….. யக்கா…….. பிளீஸ்……. யக்கா………” என்று வார்த்தைக்கு வார்த்தை பிளீஸ் போட்டு அவளின் தங்கை போல் இருந்த மற்றொரு பெண்ணும் சங்கமித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.​

மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தில் பெண்களை சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டு இருந்தான். அவன் ஏன் அவர்களைக் கவனிக்கிறான் என அவனுக்கேப் புரியவில்லை………. இங்கு அவன் சங்கமித்ராவை இதற்கு முன்னர் கண்டதும் இல்லை. பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வந்ததில் இருந்தேக் கடந்த இரு வருடங்களாக இரு பாலருக்கும் பொதுவான இந்த எழிலகம் அழகு நிலையத்திற்கு தான் முடி மற்றும் தாடியைத் திருத்த வருகிறான்.​

வரவேற்பில் வேறு ஒரு பெண் தான் கண்டிருக்கிறான். இந்தப் பெண் புதியவளாக இருந்தாள் பாரிக்கு. அவளின் தோற்றமும் அவனுக்குப் புதிராகத் தான் இருந்தது. வரவேற்பில் இருக்கும் பெண் நன்கு பளிச்சென்ற மேக்கப் செய்த தோற்றத்துடன் இருப்பாள். ஆனால் இவளோ எந்த விதப் பூச்சும் இல்லாமல் கழுவித் துடைத்த முகத்துடன் சாந்தமாக அலட்டல் இல்லாத மென் புன்னகையுடன் நின்று இருந்தாள்.​

“இல்லை ம்மா…….முடியாது……..நான் பொண்ணு அலங்காரச் சோலி யாருக்குமே செய்றது இல்லை………லக்ஷ்மி யக்கா வருவாக……அவுக ச்சோலி தெளிவா செய்வாக………. வெரசாவும் முடிச்சிடுவாக……….அவுங்கதேன் வருவாகம்மா…….” என்று சங்கமித்ரா சற்று அழுத்தமாகவே அந்தப் பெண்களிடம் கூறி முடித்தாள்.​

அந்த இரு சிறு பெண்களின் முகமும் சற்று வருத்தத்தை வெளிப்படுத்த……….இருவரில் சிறியவளாக இருந்தவள் கொஞ்சம் துடுக்காக “யக்கா……. நீங்க வாரதுனா வாங்க……. இல்லைனா நாங்க வேற பியூட்டி பார்லர் கண்டுக்கிறோம்கா” என்றாள். அப்பொழுதும் அதே மென்புன்னகையுடன் “சரிப்பா………. உங்க தோதுக்குப் பர்த்துக்கோக” என்று சொல்லி விட்டு சங்கமித்ரா ஒரு சிறிய குறிப்பேட்டில் எதையோ குறிக்கத் தொடங்கினாள்.​

சற்று பெரியவளாக இருந்த பெண் சிறியவளிடம், “ ஏட்டி……செத்த நேரம் ச்சரவு இழுக்காம இருக்கியா தாயி……… நீ பேசாம இருந்தா பிறகாட்டி வீட்டுக்குப் போறப்ப மக்ரூன் வாங்கித் தாரேன்” என்று கடுகடுத்தவாறேக் கூற சிறியவளின் கண்கள் அப்பொழுதே மக்ரூனை எண்ணி விரிந்தன. மக்ரூன் பெயரைக் கேட்டதுமே நாவில் எச்சில் ஊற அமைதியாக ஒதுங்கி நின்று விட்டாள் சிறியவள்.​

“யக்கா! சாரிக்கா! அவ சொன்னதுக்கு நான் மாப்பு கேட்டுக்குதேன் க்கா………. கோவிச்சுக்காதீக………யக்கா சாரி!!!! பிளீஸ் நீங்களே வாங்கக்கா” என்று பெரியவள் மீண்டும் கெஞ்சலைத் தொடங்க………. சங்கமித்ரா தன் முகத்தில் உறைந்த மென்சிரிப்பைத் தொலைத்து அழுத்தமாக “ நான் பொண்ணு அலங்காரச் சோலி எப்பவுமே செய்றதில்ல………. லக்ஷ்மி யக்கா தான் வருவாக…….. இஷ்டம்னா இப்போ முன்பணம் கொடுத்துட்டுப் போங்க………. இல்லைன்னா உங்க வசதிக்குத் தோதா வேற இடம் பாத்துக்கோக” என்று சற்று கோபம் கலந்த அழுத்தத்துடன் முடித்து விட்டு மீண்டும் தான் குறித்துக் கொண்டு இருந்த சிறிய நோட்டுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டாள். அந்தப் பெண்களின் முகத்தைப் பார்த்துப் பேசினால் தான் எந்த நிமிடமும் உடைந்து விடும் அபாயம் இருப்பதால் கலங்கிய கண்களைக் குனிந்து மறைத்துக் கொண்டாள்.​

பெண்கள் இருவரும் சற்று வாடிய முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு……….பெரியவள் கொஞ்சம் சலிப்புடனேத் தன்னுடைய கைப்பையைத் திறந்து பணத்தை எடுத்து சங்கமித்ராவிடம் கொடுத்தாள். “லக்ஷ்மி யக்காவ வெரசா அனுப்பி விடுங்கக்கா” என சங்கமித்ராவிடம் சொல்லி விட்டுப் பெண்கள் இருவரும் வெளியேறினர்.​

அவர்களுக்குப் பதில் மொழி கூட கூறாது………. தலையை மட்டும் அசைத்து விட்டு விட்டால் போதும் என்பது போல் பார்லரில் தனக்கென இருக்கும் சிறு அறைக்குள் வேகமாகச் சென்று விட்டாள். நடந்தவற்றைச் சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்த பாரிக்கு சங்கமித்ராவின் செயல் புதிராகவும்……. வியப்பாகவும்……. கோபத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது.​

அவன் பெங்களூருவில் பணி செய்த பொழுது அங்கு இருக்கும் பார்லருக்குச் செல்லும் பொழுது பார்த்து இருக்கிறான். அங்கு அவனின் நண்பர்கள் திருமணத்துக்கு முன் பார்லர் செல்லும் பொழுது இவனும் உடன் சென்றிருக்கிறான். இவர்கள் பார்லருக்குச் செல்லும் தேவைகள் குறைவாக இருந்தாலும் அங்கே சென்று மணமகன் என்று சொல்லி விட்டால்……….. பார்லரில் இருப்பவர்கள் மேலும் என்ன என்ன செய்தால் இன்னும் அழகை மெருகூட்டலாம் என்று கூறி சில பல வேலைகளை மேலும் செய்து விட்டு மணப்பெண், தவிர வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களே சிறப்பாக அலங்காரம் செய்வதாகக் கூறி அதற்கு சில பல தள்ளுபடிகள் அறிவித்து தலைமுடியை அலசி விடுவதில் இருந்து………கை கால் நகங்களை சுத்தம் செய்து……..கை, கால், முகத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை அகற்றி………. புருவங்களைத் திருத்தி……….ஃபேஷியல், ப்ளீச் செய்து………. மெகந்தி இட்டு……….மணப்பெண் அலங்காரம் செய்து……..சேலை கட்டி விடுவது வரை அவர்களே சிறப்பாக செய்வதாகக் கூறி முழுக் குடும்பத்துக்கும் பேசி முடித்து விடுவர்.​

கல்யாண பட்ஜெட்டில் அழகு நிலையத்துக்கும் ஏனைய திருமணச் செலவுகள் போல ஒரு பெரிய தொகை ஒதுக்கப் படும். அப்படி இருக்க சங்கமித்ராவின் செயல் பாரிக்கு மிகவும் அலட்சியமாகத் தோன்றியது. அழகு நிலையம் வைத்துக் கொண்டு மணப்பெண் அலங்காரம் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவளைக் கண்டு “இவளுக்கு என்ன கோட்டியாப் பிடிச்சிருக்கு?” என்று கேட்கத் தோன்றியது.​

பழைய பாரி வேந்தனாக இருந்திருந்தால் அதை நேரடியாகவே சங்கமித்ராவிடம் கேட்டிருப்பான். அச்சிறு பெண்கள் இருவரும் சங்கமித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே புகுந்து சங்கமித்ராவை உண்டு….. இல்லை…… என ஒரு வழி செய்து இருப்பான்.​

ஆனால் இவன்? இந்தப் பாரி வேந்தனின் அவதாரமும் புதிது அல்லவா!!! இப்பொழுது இருக்கும் பாரி அவனுடைய சுயத்தையேத் தொலைத்தவனாயிற்றே……….. சங்கமித்ராவைச் சொடக்கிட்டு அழைக்கத் துடித்த விரல்களைக் கட்டுப் படுத்தித் தன் தலை முடியை அழுந்தக் கோதினான். தன்னுடைய கவனத்தைத் தன் அலைப்பேசிக்கு உள்ளேயே புதைக்க முயன்றான். அவனுடைய முயற்சிகளை சங்கமித்ராவின் நிர்மலமான முகம் சுக்கலாக நொறுக்கியது. பாரி வேந்தனின் இயல்பான குணம் பூந்தொட்டியில் இருந்து சீற்றமாக வெளிவந்து சிதறும் மத்தாப்புப் போல் பொங்கிக் கொண்டு இருந்தது.​

தனது சுயம் வெளிவருவது பிடிக்காமல் கோபம் எனும் முகமூடி அணிந்து வேகமாக அங்கிருந்து வெளியே செல்வதற்காக எழுந்தான். சரியாக அதே நேரத்தில் அருண் வேறு ஒரு வாடிக்கையாளர் உடன் உள்ளிருந்து வெளியே வந்தவன் பாரியிடம் வந்து “சாரி அண்ணாச்சி…….செத்த நேரம் லேட் ஆகிடுச்சு…….உள்ள வாங்க……….என்ன செய்யணும் அண்ணாச்சி?” என்று சற்று பணிவுடன் கேட்டான்.​

அருணின் கேள்வியில் தன்னுடைய உணர்ச்சிகளைக் களைந்து விட்டுத் தன் தாடியைத் திருத்த அருணுடன் உள்ளே சென்றான். பாரியின் மனதில் அவனின் சுயம் சங்கமித்ராவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என முட்டி மோதிக் கொண்டிருந்தது. தனது எண்ணவோட்டங்களை வெளிப்படுத்தாமல் வெகு அலட்சியமாக இருக்கையில் அமர்ந்தான். தனது தாடியை நீவிக் கொண்டே “ட்ரிம் பண்ணுவே” என்று கூறி விட்டுக் கால் மேல் கால் போட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். “ஆங்….ச்சரிங்க அண்ணாச்சி” என்று பதிலளித்த அருண் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.​

சங்கமித்ரா தன் அறையில் வழக்கம் போல் தன் கைப்பையில் இருக்கும் மார்பிளால் செய்த சிறு தவழும் குழந்தைக் கிருஷ்ணர் சிலையை எடுத்துத் தன் கரத்தில் வைத்துக் கொண்டு வெடித்து அழத் தொடங்கினாள். வார்த்தைகள் அற்ற அவளது அழுகையின் காரணம் பகவான் ஶ்ரீகிருஷ்ணருக்குத் தெரியாதா என்ன? அவளது மனக் குமுறல்களை அழுகையில் கரைத்துக் கொண்டிருந்தாள்.​

சிறிது நேரம் நீடித்த இந்தக் கண்ணீர் ஶ்ரீகிருஷ்ணரின் குழந்தைச் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைந்து சங்கமித்ராவின் அழுகையும் குறைந்தது. அழுகை குறைந்து மித்ராவின் மனத்தை கோபம் எனும் புயல் ஆட்கொண்டது. ஆனால் இந்தக் கோபப் புயலால் வார்த்தைகளை மழையாய்ப் பொழிந்தாள் கிருஷ்ணரிடம் சண்டை எனும் பெயரில். சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் சிலை மித்ராவின் மனதில் அமைதியையும், சிறு நம்பிக்கையையும் நூலிழையாய்க் கடத்திக் கொண்டிருந்தது.​

இது எப்பொழுதும் மித்ராவின் வழக்கமே. அவளது உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துவது ஶ்ரீகிருஷ்ணர் சிலையிடம் மட்டுமே. அவளுக்கு ஶ்ரீகிருஷ்ணர் சிலை அல்ல…….அவளது உற்ற நட்பு……..​

 
Last edited:

NNK42

Member

Episode 2:​

பாரி அருணிடம் பேச்சை வளர்க்கத் தாடியை ட்ரிம் செய்து விட்டுத் தலை முடியையும் மசாஜ் செய்து மெருகூட்டப் பணித்தான். இந்த இரண்டு வருடங்களில் பாரி எழிலகத்துக்கு வரும் பொழுது அருணிடம் தேவையற்ற எதையும் பேசியது கிடையாது. பாரியின் நடை, உடை, பாவனைகளில் இருக்கும் மிதமிஞ்சிய அலட்சியம் எவரையும் சற்று விலகியே நிற்க வைக்கும்.​

பாரியின் குடும்பப் பின்னணியும் பாரியிடம் இருந்து எட்டி நிற்க ஒரு காரணமே……….பாரியின் குடும்பம் நான்கு தலைமுறைகளாகவேத் தூத்துக்குடியில் கடல் சார்ந்த வணிகத்தில் கோலோச்சி வரும் குடும்பம். நான்கு தலைமுறைக் குடும்பங்கள் என்பதால் இப்பொழுது குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருந்தது. அவர்கள் செய்யும் தொழில்களும் அதற்கு ஏற்றார் போல் பெருகி இருந்தன.​

ஆனால் அவர்களுக்குள் நிறைய கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை வகுத்துக் கொண்டு ஒருவர் தொழிலை மற்றவர் எந்த விதத்திலும் கெடுக்காது அவர்கள் குடும்பத்துக்குள் எந்த விதமான தொழில் போட்டி, பொறாமை இல்லாது சுமூகமாகவே நடத்திச் சென்றனர். அதனால் பாரியின் குடும்பத்திற்கு என்று பெரும் மதிப்பும், மரியாதையும் இருந்தது.​

பாரியின் தோற்றத்தில் இருந்த ஆளுமையும், மிதமிஞ்சிய அலட்சியமும் அருணுக்கப் பாரியிடம் எப்பொழுதும் சிறு அச்சமே. பாரி எழிலகத்துக்கு வருகிறேன் எனத் தெரிவித்து விட்டால் அருண் அவன் வந்து செல்லும் வரை மிகுந்த பரபரப்பாகவும், கூடுதல் கவனத்துடன் தான் இருப்பான். பாரிக்கும் அருணிடம் பேச்சுக் கொடுக்க கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.​

ஆனால் பாரிக்குத் தெளிவு படுத்திக் கொள்ள நிறைய கேள்விகள் இருந்தன. இச்சந்தர்ப்பத்தில் அருணிடம் பேச்சுக் கொடுத்துப் பதில்களைப் பெற அவனது மனது அவனை முடுக்கிக் கொண்டிருந்தது. சங்கமித்ராவின் அழகிய முகம் பாரியின் மனதை என்னவோ செய்தது.​

“நீங்க பொண்ணு அலங்காரச் சோலி எல்லாம் செய்ய மாட்டீகளாவே?” என்று தன் கண்களைத் திறக்காமல் கேள்வியை மட்டும் கேட்டான் பாரி. அருண் ஒரு கணம் கேள்வி தன்னிடம் தான் கேட்கப்பட்டதா என்ற குழப்பத்தில் விழித்தான். பாரியின் காதில் ப்ளூ டூத் வேறு அணிந்து பல மொபைல் அழைப்புகளிலும் பேசிக் கொண்டு இருந்ததால் அருண் தன் வேலையை நிறுத்தி விட்டுத் தனக்கான கேள்வி தானா? என்ற யோசனையுடன் பாரியைப் பார்த்தான்.​

பாரியும் அருணின் அமைதியில் சட்டென விழிகளைத் திறந்து பதிலுக்காக புருவத்தை உயர்த்தினான். “ஆங்……. அது…….. அண்ணாச்சி பொண்ணு அலங்காரச் சோலிக்கு தோதான இடம் நம்மது தான்………. ச்சோலி சிறப்பா இருக்கும் அண்ணாச்சி” என்று பதட்டத்தில் ஆரம்பித்து பெருமையுடன் முடித்தான்.​

“பின்ன எதுக்குவே அந்தப் பிள்ளைக தவிச்சுட்டு இருந்துச்சுக?” என்று கேட்டு விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் பாரி. அருண் தன்னுடைய வேலையைத் தொடர்ந்து கொண்டே “ அய்ய (அவர்கள்) மித்ராக்கா தான் பொண்ணு அலங்காரச் ச்சோலி பார்க்கத் தோதான ஆளு……. அவுக தான் வரணும்னு கேட்டாக………மித்ராக்கா பொண்ணு அலங்காரச் சோலி பார்க்க மாட்டாகன்னு தான் அங்கன சடவு அண்ணாச்சி” என்று முடித்தான்.​

(இதத் தான மக்கா ஃபர்ஸ்ட் எபிசோட்லயும் பேசுனாக….. ரெண்டாவதுலயும் ரிப்பீட்டா!!! எலேய்!!! அடுத்த சீனுக்கு வெரசாப் போங்கயா….) இது பாரியின் மைண்ட் வாய்ஸ். பாரியோடது மட்டும் இல்லை……. எங்களோடதும்ன்னு நீங்க புலம்பறது எனக்கு கேட்குது)​

அருண் அமைதியாகத் தன் பணியைத் தொடர்ந்திடப் பாரி மேலும் அருணிடம் பேச்சுக் கொடுத்தான். “பியூட்டி பார்லர் ச்சோலிக்கு வந்துட்டுப் பொண்ணு அலங்காரம் செய்ய மாட்டாகன்னா என்னவே இது கோட்டித்தனமால்ல இருக்கு…….. இய்யல(இவர்களை) எல்லாம் எதுக்கிவே ச்சோலிக்கு வச்சிருக்கீக………ஒரு ச்சோலின்னு வந்துட்டா அதுல இருக்க எல்லாமே செய்யத் தெரியணும்வே” என்று பொதுவாகச் சொல்வது போலப் பேசிப் பாரி அருணின் வாயைத் திறக்க வைத்தான்.​

அருணும் “அது சரிதேன் அண்ணாச்சி……. அக்கா இங்கன ச்சோலி பார்க்கிறவக இல்ல அண்ணாச்சி……. இந்தக் கடையே அவுக இது தான்………. அவுக மாப்பிள்ளை இறந்துட்டாருல………. அதால அக்கா விசேஷ வீட்டுக்குச் சோலிக்கு வரதுக்கு யாரும் பிரியப்படறது இல்ல அண்ணாச்சி. மித்ராக்கா எல்லாமே சிறப்பாச் செய்வாக…….. அதேன் அந்தப் புள்ளைக அவுக வரணும்னு பிடிசாதனை பண்ணுதுக…….. இவுக போனா வீட்ல பெரியவுக ஏசுவாக……. ஏசிச் சோலியும் பார்க்க விடாமத் திருப்பி அனுப்பிடுவாக அண்ணாச்சி” என்று வருத்தமாகக் கூறினான்.​

இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்த பாரிக் கேட்ட விஷயத்தில் அதிர்ச்சியாகி சட்டென நிமிர்ந்து அமர்ந்தான். “என்னவே சொல்ற? இது யாரோ போலீஸ் உத்தியோகம் பார்க்கிறவக வீட்ல தானல நடத்துறாகனு சொன்னாக……. அவுக வீட்டுக்காரர் போலீஸாவே?........உத்தியோகம் பார்க்கிறப்போ இறந்துட்டாராவே?” என்று அருணிடம் படபடவெனக் கேள்வி கேட்டான் பாரி.​

தான் ஒருவரைப் பற்றி விசாரிப்பது போல் அல்லாமல் பொதுவானப் பேச்சுப் போல பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த பாரி அதிர்ச்சியிலும், பதட்டத்திலும் நேரடியாகவே விசாரிக்கத் தொடங்கினான். “மித்ராக்கா அவுக ஐயா தான் அண்ணாச்சி போலீஸா இருந்து ரிடையர் ஆனவுக………. மித்ராக்கா மாப்பிள்ளைப் பத்தி யாரும் நல்லவிதமாச் சொல்லி நான் கேட்டது இல்ல அண்ணாச்சி………அவுக வாழ்க்கைல எக்கச்சக்க கஷ்டப் பட்டிருக்காகன்னு சொல்லக் கேட்டுருக்கேன்…….. இந்தக் கடையாலத்தேன் அவுக இப்போ செத்த நிம்மதியா இருக்காகன்னு அவுக ஐயா சொல்லுவாரு” என்று கூறி விட்டுத் தன் வேலையைத் தொடர அனுமதி கேட்கும் விதமாகக் கைகளில் க்ரீமைத் தடவிக் கொண்டு கைகளை நீட்டி நின்றிருந்தான் அருண்.​

சைகையில் அருணைப் பணியைத் தொடரச் சொல்லி விட்டு மறுபடியும் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். பாரியால் அவன் கேட்ட விஷயங்களை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மேலும் அருணைக் குடைவதும் அநாகரிகமாகத் தோன்ற அமைதியாகி விட்டான். மனதில் மெதுவாக மித்ரா என உச்சரித்துப் பார்த்தான். முதலில் பாரியை ஈர்த்தது மித்ராவின் அ லட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான முகம் தான்.​

அவன் அறிந்தவரை மிகவும் அழகான பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் முனைப்பாக இருப்பார்கள். அவர்களிடம் ஒருவிதமான அலட்டலும், கர்வமும், திமிரும் இருக்கும். ஆனால் அவனின் எண்ணங்களின் விதிவிலக்காக மித்ரா இருந்தாள். அவள் முகத்தில் ஆழ்ந்த அமைதியேத் தெரிந்தது. அதில் தான் அவளைக் கவனிக்கத் தொடங்கினான் பாரி. மித்ராவைப் பேரழகி என்று கூறினால் கூட அது சற்று குறைவாகத் தான் தோன்றும்……….வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகுப் பெட்டகம் அவள்.​

மித்ராவின் அமைதி அவளுக்கு மேலும் மகுடம் சூட்டியது……….அந்த மகுடம் சூட்டிய பேரழகில் பாரி வேந்தன் வீழ்ந்து விட்டானா? வீழ்ந்து விட்டான்னு சொல்ல முடியாது. ஆனாலும் பாரியின் மனதில் சிறு சலனத்தை உண்டாக்கி விட்டாள் பெண்ணவள்.​

பாரி எழிலகத்தில் இருந்து வெளியேறும் பொழுது மித்ரா மீண்டும் கண்களில் தென்படுகிறாளா? என்று சுற்றும் முற்றும் பார்த்தான். மித்ரா கண்படவில்லை. வரவேற்பில் தற்போது வேறு ஒரு பெண் அமர்ந்து இருந்தாள். ஆனால் பாரிக்கு மட்டும் மித்ராவின் முகமே மனதில் தோன்றியது.​

எழிலகத்தில் இருந்து வெளியேறிய பின் பாரி மித்ராவை மறந்து விட்டான் என்றே சொல்லலாம். அவனது வேலைகள் அவனை முழுவதுமாக இழுத்துக் கொண்டன. பாரி எப்பொழுதும் அதிவேகம் தான். பாரியின் தந்தை அருணாசலம் உப்பளங்களும், தூத்துக்குடி துறைமுகம் அருகில் இரண்டு குளிர் வசதிக் கிடங்குகளும், கடல் மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலையும் நடத்தி வருகிறார்.​

அருணாசலத்தின் மனைவி துர்கா. துர்காவும் கணவரின் தொழில்களை மேற்பார்வை செய்து வந்தார். அருணாசலம் தொழில் விஷயத்தில் மிகவும் கறாரானவர். எல்லா விதத்திலும் முழுநிறைவையும், திருப்தியையும் எதிர்பார்ப்பவர். அனைத்திலும் அவருக்கு ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவரது மனைவியும் அவருக்கு ஏற்றவாரே அமைய அவரது குடும்ப வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் எந்த விதப் பெரிய பிரச்சினைகள் அற்று சுமூகமாகச் சென்று கொண்டிருந்தது.​

இவர்களின் மக்கள் செல்வங்கள் இருவர் அருள் வேந்தன், பாரி வேந்தன். இருவருக்கும் இரண்டு வருட வித்தியாசமே. இருவரின் தோற்றத்திலும் சில வேறுபாடுகள் தான் இருக்கும். ஆனால் குணம் மற்றும் பழக்கவழக்கங்களில் இருவரும் எதிரெதிர் துருவங்களே. இருவருக்குள்ளும் நல்ல நட்பும் இருந்தது.​

பாரி மிகவும் துறுதுறுப்பு ……..அருள் மிகவும் அமைதி. பாரிக்குத் துணிச்சல் அதிகம். அருளுக்கு நிதானம் அதிகம். அருள் தந்தைக்கு நெருக்கமானவன். பாரி தாய்க்கு நெருக்கமான வன். படித்து முடித்ததும் தந்தையுடன் தொழில்களைக் கவனிக்க வந்து விட்டான் அருள். பாரியையும் அவ்வாறு வருமாறு அருணாசலம் அழைக்க அவன் மறுத்து விட்டு பெங்களூருவில் ஒரு கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்து விட்டான்.​

ஒரு வருடம் தான் பணிக்குச் சென்றிருப்பான். அடுத்ததாக வேலையை விட்டுவிட்டு தரகு அடிப்படையில் பல பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரி பாகங்கள் முதலியவற்றை ஒரு நிறுவனம் ஒன்றைத் தொடக்கி அதன் பெயரில் கை மாற்றினான். வேலையை விட்டதும் தூத்துக்குடிக்கு வந்து குடும்பத் தொழிலைப் பார்க்கச் சொன்ன தந்தையிடம் மறுப்புத் தெரிவித்து விட்டுத் தன் திறமையை மட்டும் மூலதனமாகக் கொண்டு சம்பாதித்துக் கொண்டு இருந்தான்.​

பாரி சம்பாதிப்பதில் மட்டும் கில்லாடியாக இல்லாமல் அதை பத்திரப்படுத்தி வேறு தொழில்களில் முதலீடு செய்வதிலும் கைதேர்ந்தவனாக இருந்தான். நினைத்த நேரத்தில் நினைத்த வேலையைச் செய்வான். எப்பொழுது எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என்பதை எவராலும் கணிக்க இயலாது. அருணாசலம் தனது தொழில்கள், பூர்விக சொத்துக்கள் முதலியவற்றில் இருந்து பெறும் ஒரு மாத வருமானத்தை அவன் இப்பொழுது ஒரு வாரத்தில் சம்பாதித்து விடுவான்.​

அருணாசலம் துர்காவின் வளர்ப்பில் அவன் ஒரு நாளும் ஒழுக்கம் தவறியது இல்லை. சட்டத்திற்குப் புறம்பான தொழில்களுக்கும் பெரிய கும்பிடு போட்டு விடுவான். கையில் நான்கு மொபைல்கள் வைத்திருப்பான். அவனது வணிகம் முழுவதும் மொபைலிலேயே முடித்து விடுவான். டாக்யூமன்ட் ஸ், பேப்பர் வேலைகளை நடுச்சாமத்தில் செய்து கொண்டு இருப்பான்.​

பாரியின் வேலைகளை அவனே செய்து விடுவான். அவனுக்கென்று அசிஸ்டெண்ட் கூட கிடையாது. ஆனால் செய்வது அனைத்தையும் அருளிடம் கண்டிப்பாகப் பகிர்ந்து விடுவான். அருணாசலம் அருளின் மூலம் பாரி செய்யும் அனைத்தையும் தெரிந்து கொள்வார். பாரியும், அருணாசலமும் நேரடியாகப் பேசிக் கொள்வது மிகவும் குறைவு. அவன் தவறு செய்வது இல்லை என்றாலும் அவனது நடை, உடை, நடவடிக்கைகள் அருணாசலத்தின் இரத்த அழுத்தத்தை எகிற வைக்கும். இருவரும் பேசிக் கொண்டால் சண்டை நிச்சயம். துர்காவுக்கு மகன் செய்பவை அனைத்தும் விளையாட்டுத்தனமாகத்தான் தெரியும். அருள் மிகவும் பொறுப்பு, நிதானத்துடன் இருப்பதால் துர்காவுக்கு பாரியின் செயல்கள் குறும்பாகத் தான் இருக்கும். துர்காவும், அருளும் பாரியின் குறும்பிற்கும், அருணாசலம் பாரியின் சண்டைக்கும் பரம விசிறிகள்.​

திடீர் என்று ஆடி, பென்ஸ், ஜாகுவார் போன்ற ஆடம்பர கார்களை வாங்குவான். கொஞ்ச நாள்கள் பயன்படுத்துவான். சில நேரம் வீட்டில் வைத்திருப்பான். ஒரு சில நாட்களில் விற்றும் விடுவான். கார், பைக், மொபைல், சைக்கிள் இவை அனைத்துமே எப்பொழுது எதை வாங்குவான்…….. எதைப் பயன்படுத்துவான்…… எதை விற்கிறான்……. என்று அனுமானிக்கவே முடியாது. உடை விஷயமும் அப்படி தான். சில நாட்கள் தொடர்ந்து வேஷ்டி சட்டையில் காட்சி அளிப்பான். சில நாட்கள் வெறும் ஆர்ம் கட் ஜிம் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் மட்டுமே அவனது உடையாக இருக்கும். அப்பொழுது எல்லாம் பாரிக்கும் அருணாச்சலத்துக்கும் போர் நிச்சயம்.​

தலை முடியும் அவ்வாறே. அவனது முகத்தைத் தலை முடிக்கும் தாடிக்கும் ஊடாகத் தேடும் நிலையில் சில நாட்கள்…… சில நாட்கள் போனிடெயில்…….சில நாட்கள் தோள் வரை நீண்டிருக்கும் முடி, சில நாட்கள் பெண்கள் அணிவது போல் மேலாக வாரி இழுத்து கிளிப் அணிந்து, சில நாட்கள் மொத்தமாக வழித்து விட்டு, சில நாட்களில் க்ளீன் ஷேவ்………. அருணாசலம் கேலியாக மனைவியிடம் கூறுவார் “இன்னும் உம் பிள்ளை புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் மட்டும் தான்வே வைக்கல……. அதை ஏன் விட்டு வச்சிருக்கான் னு தெரியல”.​

துர்காவும் பதிலுக்கு “ஆங்…. ஆமா…….பாரி அப்படி வச்சி நான் ஒரு நாள் கூட காண்கல…….. அவன் வந்ததும் அவன்கிட்ட சொல்லுதேன்” என்பார். அருணாசலம் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விடுவார்.​

சமையல் கூட சில நேரம் செய்வான். வீட்டு வேலைகள் அனைத்தும் கூட துர்காவுக்குச் செய்து கொடுப்பான். துர்காவுடன் கடைகளுக்குச் செல்வான். அருணாசலம், அருள் ஏதேனும் வேலை சொன்னாலும் செய்து கொடுப்பான். தவறுகளை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டான். கோபம் மிக மிக அதிகம். கையும் நீண்டு விடும் பாரி கோபத்தில் இருக்கும் பொழுது. ரசனையான ஆள். வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்பவன்.​

அவன் இஷ்டப்படி தொழில் செய்து தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தவனை இரு வருடங்களுக்கு முன் அருளின் திருமணத்தைக் காரணம் காட்டி துர்கா தான் தூத்துக்குடியிலேயேத் தங்க வைத்தார். அருள் திருமணத்திற்குப் பின் பாரியும் தொழிலுக்கு வந்தால் அருளின் வேலைப் பளு குறையும் என்று பாரியை வரவழைத்தார். குடும்பத் தொழில்களை ப் பார்த்தாலும் தான் செய்பவற்றையும் செய்து கொண்டு தான் இருந்தான் பாரி.​

திருமணம் என்ற பெயரில் அருள் வாழ்க்கையில் விழுந்த இ(அ) டியில் இருந்து குடும்பத்தினர் அனைவரையும் இப்பொழுது மீட்டெடுத்துக் கொண்டிருப்பதும் பாரியே.​

 

NNK42

Member
Episode: 3



வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த சங்கமித்ராவின் தந்தை செண்பக மூர்த்தியின் மொபைல் ஒலி எழுப்ப அழைப்பை ஏற்றார். “சொல்லுமா மித்ரா……… குட்டிப் பயலக் கூப்பிடத் தான் மா கிளம்பிட்டிருக்கேன்” என்று மித்ரா பேசும் முன்னே பதில் அளித்திருந்தார் மூர்த்தி.



“ஐயா……. நானே ஸ்கூலுக்குக் கூப்பிடப் போறேன். கடைல அருண் மட்டும்தேன் ச்சோலி பார்க்க இருக்காப்ல………. அதால நீங்க வந்து ரிசப்ஷன்ல செத்த நேரம் பார்த்துக்கிறிகளா? நான் பிறகாட்டி வாரேன்” என்று மெதுவாகக் கேட்டிருந்தாள் மித்ரா. தன் மகளின் குரலிலேயே எதுவோ சரியில்லை என்று உணர்ந்த மூர்த்தியும் “சரி மா…….வரேன் மா” என்று இருந்தார்.



மித்ரா வரவேற்பில் நின்றிருந்த அனிதாவிடம் “நீ இப்போ மெகந்தி போடக் கிளம்பினாதான் கருக்கலுக் குள்ள வீட்டுக்குப் போக முடியும். வெரசாக் கிளம்புமா” என்று சொல்லி விட்டுத் தான் அழுததை மறைக்க மறுபடியும் முகத்தைக் கழுவச் சென்றாள். தன் குரலிலேயேத் தந்தை தன்னை அறிந்திருப்பார் என்று புரிந்து இருந்தாலும் ……….. அநாவசியமாக எவர் விசாரிப்பிற்கும், பரிதாபத்துக்கும் ஆளாக விரும்பாத மித்ரா அழுததை மறைக்க மெனக்கெடலானாள்.



மூர்த்தி தன் மனைவி உமாவிடம் “ம்மா நான் கடைக்குப் போய்ட்டு வரேன்………. மித்ரா செத்த நேரம் பையன வெளியக் கூப்பிட்டுப் போய்ட்டு வரட்டும்…….. அந்தப் புள்ள குரலே சரியில்ல தாயி……….. நாமளே அந்தப் புள்ள வாழ்க்கையக் கெடுத்த மாதிரி ஆகிப் போச்சு” என்று புலம்பி விட்டுக் கிளம்பினார். மூர்த்தியின் புலம்பலைக் கேட்ட உமாவும் கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டுத் தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.



மித்ரா தந்தையின் வருகையை உறுதிப்படுத்தி விட்டுப் பார்லரில் இருந்து வெளியேறித் தனது ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள். வண்டி ஓட்டும் பொழுதேப் பின்னோக்கிச் சென்ற மனதினைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடினாள். பழைய நினைவுகளால் மீண்டும் கலங்கத் துடித்தக் கண்களை இமைகளைச் சிமிட்டி மறைத்தாள். தன் மனதைத் திசை திருப்ப இஷானைத் தன் மனக் கண்ணின் முன் கொண்டு வந்தாள்.



இஷான் தான் மித்ராவின் செல்ல மகன். ஐந்து வயதாகும் இஷானின் குறும்பில் தான் மித்ரா வீட்டினர் தங்கள் கவலைகளைத் தொலைக்கின்றனர். பெயருக்கேற்ப மிகவும் சேட்டை செய்வான் இஷான். இஷான் வீட்டில் இருக்கும் பொழுது அனைவரின் கவனமும் அவனிடம் மட்டும் தான் இருக்கும். வேறு சிந்தனைக்கே இடமிருக்காது. அவன் பின்னால் ஓடுவதற்கு இரண்டு வேளை அதிகமாக உண்ண வேண்டும். அவன் ஒரு இடத்தில் சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்கள் கூட அமர மாட்டான். உற்சாகப் பந்தாய் எம்பிக் குதித்துக் கொண்டே இருப்பான். இவனுக்கு வாய் வலிக்கவே வலிக்காதா எனும் அளவுக்குப் பேசுவான். அவன் பேசும் மழலையைக் கேட்கும் வீட்டினருக்குக் காதுகள் வலிப்பதே இல்லை. அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் வீட்டினர் தான் விழி பிதுங்கி நிற்க வேண்டும்.



உருவத்தில் அச்சு அசலாக மித்ராவைப் போல் கொள்ளை அழகு இஷான். அவனைப் பார்த்ததுமேக் கட்டி அணைத்துத் தூக்கி முத்தமிடக் கைகள் பரபரக்கும்.



இஷான் செண்பக மூர்த்தியின் குடும்பத்தில் அனைவருக்கும் மாயக் கண்ணனே. மித்ரா ஒருவாறாகத் தன் மகனைப் பற்றிய சிந்தனையில் பழைய நினைவுகளைத் தொலைத்து இஷான் படிக்கும் பள்ளிக்கு விரைவாக வண்டியைச் செலுத்தினாள். அங்கு அவன் மிகப் பெரும் கலவரமே நடத்தி முடித்து இருந்தான். மித்ரா பள்ளிக்குள் நுழையும் பொழுது பார்த்தது அழுது அழுது முகம் எல்லாம் சிவந்து இன்னும் தேம்பிக் கொண்டே ஆசிரியையின் கைப் பிடித்து வந்த இஷானைத் தான்.



இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால் அந்த ஆசிரியை அழுது விடுவார் போல இருந்தார். மித்ராவைப் பார்த்ததும் இஷான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு மித்ரா அருகில் சென்று அவளின் கால்களைக் கட்டிக் கொண்டு விட்ட அழுகையைத் தொடர்ந்தான். மித்ராவைப் பார்த்ததும் சிறிது பெருமூச்சுடன் அந்த ஆசிரியை “மேம்……. இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் யூனிபார்ம் இவுகளுக்குக் கொடுத்தோம். நாலு கலர் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள். இஷானுக்கு சிவப்பு கலர் கொடுத்தேன். அவன் நீலம்தேன் பிடிக்கும்னு அதேன் வேணும்னு கேட்டான். சரினு மாத்திக் கொடுத்தேன். என்னோட அம்மாக்கு பச்சை கலர் பிடிக்கும். அதுவும் வேணும்னு கேட்டான். ஒரு கலர் டீசர்ட்தேன் கொடுப்பேன். நாலுல ஒன்னு மட்டும் எடுத்துக்கோ அப்படினு சொன்னேன். அம்மா எனக்குப் பிடிச்சதும் வாங்கிக் கொடுப்பாங்க….. அவுகளுக்குப் பிடிச்சதும் வாங்கித் தருவாக……அதால ரெண்டுமே எனக்கு வேணும்னு ஒரே அடம்…….இவனைப் பார்த்து இன்னும் ச்செல பிள்ளைகளும் அதே மாதிரி கேக்க ஆரம்பிச்சுட்டாக……….எப்படி சொன்னாலும் கேக்கல. நீங்களே விவரம் ச்சொல்லுக பயலுக்கு” என்று சற்று சிரிப்புடன் கூறி விட்டுச் சென்றார்.



இஷான் அழுகையால் வந்த படபடப்பு மறைந்து காரணத்தை அறிந்ததும் மித்ராவுக்கு சிரிப்பு வந்தது. மகனின் உயரத்திற்கு ஏற்பக் குனிந்து “எலேய் அது யூனிபார்ம்வே……..ஏதாவது ஒரு கலர்லதேன் கொடுப்பாக……….” என்று மித்ரா கூற மித்ராவின் மைந்தனோ “நீ மட்டும் கடைக்குப் போனா உனக்குப் பிடிச்சது, எனக்குப் பிடிச்சது எல்லாம் வாங்கித் தர……. ஐயாவும் (மூர்த்தியை மித்ரா அழைப்பது போல் இஷானும் அழைத்துப் பழகி விட்டான்) அப்படித்தேன் வாங்கிக் கொடுப்பாக……..” என்று தன் அம்மாவிடமும் தனது அடத்தைத் தொடர்ந்தான்.



“ராசா……. நல்ல துணி சவுட்டு ரேட்டுக்குக்(கம்மி விலை) கிடைச்சா நானும், ஐயாவும் நிறைய ட்ரெஸ் வாங்குவோம்………உனக்குப் பிடிச்சது…….எனக்குப் பிடிச்சது…….. ஐயாக்குப் பிடிச்சது எல்லாம்தேன் வாங்குவோம். இது அதில்லலே…….. இது யூனிபார்ம்………ஸ்கூல்ல ஒன்னுதேன்……..ஒரு கலர்தேன் கொடுப்பாக………” என்று மித்ரா பொறுமையாக இஷானிடம் எடுத்துக் கூறினாள். இஷான் விடாமல் “ அப்போ அது கொள்ளை(அதிக) விலையா……. அதேன் எல்லாக் கலரும் கொடுக்க மாட்டாகளா” என்று தன் பிடியில் கேள்வியைத் தொடர்ந்தான். மித்ரா விழி பிதுங்க “ கொள்ளை விலை இல்லைடா…….. ஆனா ஒரு கலர்தேன் கொடுப்பாக……அதேன் ரூல்…….” என்று சொல்லி இஷானைப் பிடித்துக் கொண்டேத் தன் ஸ்கூட்டியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.



“ரூல்னா என்னம்மா?” என்று கேட்டிருந்தான் இஷான். என்ன சொல்லி விளங்க வைப்பது என்று தெரியாமல் சில விநாடிகள் தாமதித்த மித்ரா தூரத்தில் இருந்த ட்ராஃபிக் சிக்னலைப் பார்த்து மண்டையில் பல்ப் எரிய “சிக்னல்ல ரெட் கலர் லைட் எரிஞ்சா என்ன செய்யணும்?” என்று இஷானிடம் கேட்க………. அவனும் சமர்த்தாக “வண்டியை ஸ்டாப் பண்ணனும்” என்று ராகமாகக் கத்த………. மித்ராவும் “வாவ்! சூப்பர்! குட் பாய்! ஏன் ஸ்டாப் பண்ணனும்னா அதேன் ரூல்……..அதால தான் ஸ்டாப் பண்றோம்” என்று வேகமாகக் கூறி விட்டு அவன் மீண்டும் கேள்வி கேட்கும் முன் “எக் பப்ஸ் சாப்பிடப் போலாமா……” என்று கேட்டுச் சிறுவனின் கவனத்தைத் திசை திருப்பி இருந்தாள்.



எழிலகம் சென்று வந்த பின்னர் பாரியின் மனதைச் சிறு நெருஞ்சி முள்ளாய்த் தைத்திருந்தாள் மித்ரா. தந்தையின் தொழில்கள் மற்றும் தன்னுடையது என்று வேலைகள் முழுதாக அவனை இழுத்துக் கொண்டாலும் அவ்வப் போது மித்ராவின் நினைவு பாரிக்கு வந்து போகும். பாரி இன்று அருளுடன் குற்றாலம் வந்திருந்தான். குற்றாலம் மெயின் அருவி அருகில் அவர்களுக்குத் தோட்டத்துடன் ஒரு வீடு இருந்தது. தோட்டத்தில் இருவரும் அமர்ந்து லேப் டாப்பிற்குள் புதைந்திருந்தனர்.



அமர்ந்து இருந்த நிலையிலேயேத் தலையைத் திருப்பிக் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தான் பாரி. “இன்னும் எத்தனை நாளைக்கு வேந்தா இப்படி ஓடிக்கிட்டே இருக்கப் போற?” என்று கூர்மையாக அருளிடம் கேட்டிருந்தான் பாரி. வீட்டில் அருள் வேந்தனை வேந்தன் என்றும், பாரி வேந்தனை பாரி என்றும் தான் அழைப்பர்.



வேந்தன் தன்னை ஒரு முறை குனிந்து பார்த்து விட்டு சுற்றும் முற்றும் ஒரு முறைப் பார்த்து விட்டு “சேர்ல உட்கார்ந்து இருக்கேன்வே………. ஓடுறேங்கிற…………. கண்ணு தெரியலையா? என்ன ஆச்சுலே?” என்று பதட்டமாகக் கேட்பது போல் சிறு புன்னகையுடன் கேட்டான்.



பாரித் தன் வாய்க்குள் இரண்டு விரல்களை விட்டு வாயின் இரு புறமும் விரல்களால் இழுத்துப் பிடித்து ஈ என்று தன் அனைத்துப் பற்களையும் காட்டினான். “துரை ஒரே சிரிப்பாணியாப் பேசுறீக(கோவை சரளா மாடுலேஷன்ல வாசிங்க மக்கா)…………. நல்லா சிரிச்சுப்புட்டேன்வே போதுமா” என்று ஆங்கிலேயர் பாணியில் வேந்தனுக்குக் குனிந்து வணக்கம் வைத்து வினவினான்.



பாரியின் பதிலில் வாய் விட்டு சிரித்து விட்டு “குளிக்கப் போகலாம் பாரி……. கிளம்பி வா” என்று சொல்லித் தன்னுடைய லேப் டாப், மொபைல் முதலியவற்றை வீட்டினுள் வைக்கச் சென்றான் வேந்தன். வேந்தனது செய்கையில் வந்த கோபத்தைப் பாரித் தன் இடுப்பில் இருபுறமும் கைகளை வைத்துத் தலையை இருபுறமும் அசைத்து வாயைக் குவித்து ஊதினான்.



வேந்தனைத் தொடர்ந்து பாரியும் குளிக்கச் செல்ல ஆயத்தமாகி வந்தான். இருவரும் பத்து நிமிட நடையில் இருந்த அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினர். பாரி வேந்தன் மீதிருந்த கோபத்தால் கழுத்தில் போட்டிருந்த துண்டை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்டு மௌனமாக நடந்து கொண்டு இருந்தான்.



பாரி ஏதேனும் பேச்சுக் கொடுப்பான் என்ற நம்பிக்கையில் வேந்தன் பாரியின் முகத்தை அடிக்கடித் திரும்பிப் பார்ப்பான். வேந்தனின் செயல் புரிந்தும் பாரித் தன் கோபத்தை அமைதியில் வெளிப்படுத்தினான். பாரியை அறிந்து இருந்த வேந்தனும் பாரியின் மௌனத்தை உடைக்கத் தன் மௌனத்தை உடைத்தான். வேந்தன் தன் வலது கையால் பாரியின் இடது கையை இழுத்து அனைத்துப் பிடித்தான்.



பின்னர் மெதுவான குரலில் வேந்தன் பேச ஆரம்பித்தான். “பாரி உனக்கு நம்ம ஃபேமிலி பேக்ரவுண்ட் எப்படி என்னன்னு நல்லாவேத் தெரியும். எனக்கும் அந்தப் பெருமை எல்லாம் எக்கச்சக்கமா இருக்குவே………ஆனா அதெல்லாம் ஒரே நாள்ல என்னால தலைகுப்புற விழுந்துட்டு………. நா ஒரு பொண்ணு சூசைட் பண்ற அளவுக்கு டார்ச்சர் கொடுக்கிற ஆளா? அவ்ளோ பெரிய சாடிஸ்டாடா நானு” என்று தன்னை மீறி வெடிக்கத் தொடங்கிய கோபத்தில் சத்தமாக அதட்டிய வேந்தனிடம் பாரி இடைமறித்தான். “ டேய்………கோட்டித்தனமா உளராதவே………. நீ என்ன செஞ்ச………. நீ எதுவுமே செய்யல……. அதேன் உன் மேல தப்பில்ல………. அவதேன் வேற எவன்கூட போகறதுக்குப் போட்ட நாடகத்துல அவளே பலியாகிட்டா……. இதுல உன் தப்பு என்னவே இருக்கு……….” என்று பாரி பொறுமையாகவே வேந்தனிடம் பேசினான்.



“பாரி………. அவ செஞ்சது தப்புனாலும் அவ செத்து நல்லவ ஆகிட்டாடே……... உசுரோட இருக்க நா தான்லே தண்டனை அனுபவிக்கேன். வெளிய என்ன எல்லாம் பேசுறானுக தெரியுமா? நா ஆண்மை இல்லாதவனாம்டே………நா அதுக்கு லாய்க்கில்லாம அவளை டார்ச்சர் பண்ணேன்……..அதேன் அவ செத்துட்டா…….. அப்படில்லாம் பேசுறானுக……….. நீ என்ன சொல்லுத? பேசறவன் எதனாலும் பேசுவான்………..நமக்கு தான் உள்ள என்ன நடந்துட்டுனு தெரியும்னு சொல்லுவ…….. அதுவும் செரிதேன்…….. நா தப்பு எதுவும் செய்யல……. செய்யாம இந்தப் பலி எல்லாம் சுமக்கிறப்போ வலிக்குதுவே………. எனக்கு விவரம் தெரிஞ்சு நா வீட்ல அம்மா, ஐயா கிட்ட கூடத் தப்பு செஞ்சு ஏச்சுப் பேச்சு வாங்கினது இல்ல……. அப்படி இருக்க இவளோ பெரிய தப்ப என் மேல சொல்றப்போ ரொம்பவே வலிக்குதுடே……..இதுக்காக நா மூணு நாள் ஜெயில்ல வேற இருந்திருக்கேன்ல……….முடியலடா………..செத்துடலாம் போல இருக்குடா” என்று தன் இடது கையால் மார்பை நீவிக் கொண்டே கண்கள் கலங்கப் பேசிய வேந்தனைக் காணச் சகிக்காமல் இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான் பாரி.



















 
Status
Not open for further replies.
Top