இலக்கின்றி ஓடும் வான் மேக முகிலனை போல்,
உன் காதல் தேடி தொலைந்தேனே ஓர் கானல் நீராய்..
பேரூந்தின் ஜன்னல் வழியே அமர்ந்திருந்தவளின் விழிகளோ நீல வான வீதியிலே வெள்ளை கூட்டமாய் ஓடிச் சென்ற வான் முகில்களை வெறித்திருக்க அவள் எண்ணங்களோ அவள் வீட்டைச் சுற்றியே வலம் வந்தது.
என்ன சொல்வாள்? எப்படி அவர்களைச் சமாளிப்பாள்? அத்தனை இலகுவில் இவள் சொல்வதை காது கொடுத்து கேட்கக் கூடியவர்களாக அவர்கள்.. இல்லையே.. சாதா பேச்சுக்கே இவள் ஒரு வார்த்தை வாய் திறக்க விடாத கூட்டம் இத்தனை பெரிய விசயத்தை அவளை கூற விட்டுவிடுவார்களா? நினைக்கும் போதே அவள் உடலோ பயத்தில் நடுநடுங்கித் தான் போனது.
ஏன் எதற்கு இந்த அவல நிலையில் பெண்ணாய் அதுவும் இந்தக் குடும்பத்தில் பிறந்ததை தவிர அவள் செய்த தவறு தான் என்ன? எப்போதும் போலவே இதோ இந்த ஒரு கேள்வி அவள் மனதில் எழ வேதனையோடு கண் மூடிக் கொண்டவள் பாரமாய் கணத்த நெஞ்சை அழுத்திவிட அவள் கைகளில் சிக்கிக் கொண்டது அவளது வாழ்நாள் சிறை வாழ்க்கைக்கான அத்தாட்சி.
ஆம் சிறை வாழ்க்கையே.. பிறந்த இடம் தந்திடாத மகிழ்ச்சியை புகுந்த இடம் நுழைந்தேனும் பெற்றுக் கொள்ளலாம் என சராசரிப் பெண்களைப் போல ஆசைகளும் கனவுகளையும் சுமந்திருந்த பெண்ணவளின் கனவை கருகச் செய்தது அவள் மனம் உயிராய் நேசிக்கும் மணாளன் அணிவித்த மாங்கல்யம் அவளைப் பொறுத்த வரை தூக்குக் கயிறு.
அத்தனை வேதனையிலும் அவன் புன்னகை முகம் மனக்கண்ணில் தோன்றி அவள் இதழ்களிலும் சிறு மலர்ச்சியை கொடுத்தது.
அந் நொடி அவள் மனம் உணர்ந்தது எல்லாம் வலிக்க வலிக்க காயம் தருபவனும் அவனே வலித்த இடங்களில் மருந்தாகிப் போபவனும் அவனே என்பதை தெள்ளத் தெளிவாய் உரைக்க அதற்கு மேல் யோசிக்க முடியாது இமை மூடி ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்துக் கொண்டாள் பெண்.
எத்தனை நேரம் கடந்ததோ தன்னருகே அதுவும் தனக்கு மிக நெருக்கமாய் யாரோ அமர்ந்ததிலே அரை தூக்கத்திலிருந்தவளோ பட்டென விழி திறந்து தன்னருகே பார்த்திட அவளையே விழியசையாது பார்த்திருந்தான் அவன்.
முதலில் விழித்தவள் பின் விழிகள் விரிந்திட அவனையே அதிர்ந்து பார்க்க அவனோ அமைதியாய் அவளையே தன் விழிகளால் படம்பிடித்துக் கொண்டான்.
சாதாரண எளிய புடவையில் உச்சிவகுட்டில் செந்நிற குங்குமம் வீற்றிருக்க கழுத்தில் தான் அணிவித்த ஒற்றை மாங்கல்யம் மாத்திரம் தொங்க அமர்ந்திருந்தவளிடம் தாலி தவிர்த்து வேறு ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாததும் அவள் அணிந்திருந்த புடவையும் கூட என்றோ ஓர் நாள் அவள் உழைப்பில் வாங்கியதும் என்றும் அக்கணம் அவன் நினைவுகளில் எழுந்து ஆட்டுவிக்க ஆழிப் பேரலையாய் பொங்கிய கோபத்தை கைமுஷ்டி இறுக்கி கட்டுப்படுத்தியவனோ அவளை பார்த்தான்.
தன் உடலோடு ஒட்டி உரசியிருந்த அவன் உடலின் இறுக்கத்தை உணர்ந்தவளுக்கு அவன் கோபத்தின் வீரியம் புரிய அவளறியாமலே அவள் உடல் பயத்தில் நடுங்கியது.
அவள் நடுக்கத்தை உணர்ந்தவனும் அவளைச் சுற்றி தன் கரத்தை அணைவாய் போட்டு பிடித்தவன் அடுத்து வந்த ஒரு மணி நேர பயணத்தையும் அவளருகாமையிலே மௌனமாய் கழித்தான்.
அவன் மௌனம் அடுத்து ஒரு பிரளயத்தை உண்டு பண்ணும் என்பதை அறிந்தவளும் அமைதியாய் அவனோடு அந்த பயணத்தை தொடர்ந்தாள்.
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்து பயணிகள் ஒவ்வொருவராய் பேருந்தை விட்டு கீழிறங்கிய போதிலும் அவனோ அசையாது அமர்ந்திருக்க அவன் பார்வையோ முன்னே வெறித்திருந்தது.
அவன் அசையாத தோற்றமும் வெறித்த பார்வையும் அவளுக்குள் நடுக்கத்தை பிறப்பித்தாலும் என்ன சொல்வது என புரியாது குழந்தையாய் முழித்தவளுக்கு உதவிக் கரம் நீட்டவென அங்கு வந்து சேர்ந்தார் பேருந்து நடத்துனர்.
"என்னம்மா இறங்கலையா நீங்க?" என்றவரின் கேள்விக்கு அவள் பதிலளிக்கு முன்னே தானிருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றவனின் ஆறடிக்கு சற்று மேலான உயரத்தினால் அவன் தலை பேருந்தின் மேற் பிடிமானக் கம்பியில் தட்டிவிடுமோ என அஞ்சியவளாய் "பார்த்துங்க" என பதறியவள் குரலில் திரும்பி அழுத்தமாய் அவளைப் பார்த்தவன் பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொண்டவள் தானும் எழுந்து கொள்ள அவனோ தன் நெஞ்சு வரை இருந்தவளை குனிந்து ஓர் பார்வை பார்த்தவன் அவள் கரத்தோடு கரம் கோர்த்து அவளை அழைத்துக் கொண்டு கீழிறங்கினான்.
புற்றீசல்கள் போல அந்த பேருந்து நிலையமோ மக்களால் செறிந்து வழிந்தது. சன நெருக்கத்தினுள்ளும் தன் கரம் கோர்த்தவளை பாதுகாப்பாய் அழைத்து வெளியே வந்தவன் அங்கிருந்த ஆட்டோ ஒன்றை கை தட்டி அழைக்க அதற்கு முன்பே அவர்கள் முன் வந்து நின்றது ஓர் வண்டி.
அதிலிருந்து இறங்கியவரோ இவனை ஆச்சர்யமாய் பார்த்து "ஹலோ நீங்க பாக்சிங் சாம்பியன் மிஸ்டர் ஆருத்ர பைரவன் தானே" வியப்பாய் கேட்டவர் அவன் பதிலளிக்கும் முன்னரே அவன் தான் என உறுதிப்படுத்திக் கொண்டவராய் தன்னை அறிமுகம் செய்தார்.
"ஹலோ நான் ராகவேந்தர்.. உங்களோட பிக் பேன்.." என்றவர் அவனிடம் கைகுலுக்க கரம் நீட்டிட அவனும் அலட்டலின்றி கரத்தை பற்றிக் கொண்டவன் சிறு புன்னகையோடு "ஹலோ ராகவேந்தர்.. நைஸ் டூ மீட் யூ" என்றான் அழுத்தமும் உறுதியும் நிறைந்த கம்பீரக் குரலில்.
தானும் புன்னகைத்தவர் "யூ ஆர் வெரி டேலண்டட் போய்.. ஒரு வீரனாவும் ஒரு பிஷ்னெஷ் மேனாவும் ரொம்ப சீக்கிரத்திலே டாப் லெவலுக்கு வந்திருக்கிங்க.." என்றவரோ அவன் மீது இருக்கும் பிரமிப்பை வார்த்தைகளால் கொட்டிக் கொண்டிருந்தார்.
இருக்காதா பின்னே, அவன் அவர் சொல்வது போலவே பாராட்டுக்குரியவனே.. பாக்சிங் ரிங்கினுள் எதிராளியை வீழ்த்தும் வல்லமை படைத்தவன் அவன் அதே போலவே அவனது தொழில் வட்டத்திலும் தன்னை எதிர்க்கும் எதிராளியை நியாயமாகவே மண்ணைக் கவ்வ வைத்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டவனும் அவனே.
அவரின் பாராட்டை சிறு புன்னகையோடு ஏற்று நின்றிருந்தவனை விழியகலாது பார்த்திருந்தாள் பெண்ணவள்.
'எத்தனை அழகு தன்னவன் சிரிக்கும் போது.. ஏன் என்னிடம் மட்டும் இந்த புன்னகை முகம் பூக்க மறுக்கிறது.. அப்படியென்ன பாவியாகிப் போனேன் நான்' அவள் உள்ளத்துக் கேள்விகளுக்கு பதில் தெரியாதவளாய் அவனையே பார்த்து நின்றவளை
அப்போது தான் கவனித்தார் அவர்.
அவளது எளிய தோற்றம் அவரை முகம் சுளிக்க வைத்தது. அதுவும் அவர் போற்றியவனின் செல்வ உயரத்திற்கு சம்மந்தமே இல்லாத தோற்றத்தில் அவனோடு ஒற்றி நின்றவளைக் கண்டு முகம் கோணலாக அவளை அளவிடும் பார்வை பார்த்தவர் பின் அவனிடம் "இது யாரு சேர் உங்க வேர்க்கரா? என்றவர் அவளிடம் "ஹேய் பொண்ணு பப்ளிக் ப்ளேஸ்ல மேனர்ஸ்ஸே இல்லாம இப்பிடி ஒட்டிக்கிட்டு நிக்கிற அறிவில்ல உனக்கு?" என அவளை நேரடியாகவே திட்டிவிட .. அவரின் இத்தகைய பேச்சை எதிர்பாராதவள் திகைத்து கலங்கி நின்றிருந்தவள் விருட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனோ அவர் கேள்வில் சற்று முன் இதழில் குடி கொண்ட புன்னகையை தொலைத்தவனாய் தன்னை பார்த்து நின்றவளை ஓர் முறை முறைத்தவன் எதிரில் நின்றவரிடம் "மைண்ட் யுவர் பிஷ்னெஸ்" என காட்டமாய் திட்டிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு விறுவிறுவென அங்கே நின்றிருந்த ஆட்டோவில் ஏறிக் கிளம்பியிருந்தான்.
போகும் அவனை புரியாமல் பார்த்து நின்றவருக்கோ அவன் பேசி சென்ற வார்த்தைகள் அவமானமாய் போனதில் குமுறிய உள்ளத்தை கட்டுப்படுத்தியவராய் அங்கிருந்து சென்றார் ராகவேந்தர்.
ஆட்டோவில் ஏறியமர்ந்தவனுக்கோ உள்ளுக்குள் எரிமலைக் குமுறலாய் கொந்தளிக்க அதை அடக்க பெரும் பாடு பட்டவன் அருகே கோழிக் குஞ்சென ஒடுங்கியிருந்தவளை பார்த்து அவள் பயம் கண்டு மேலும் கோபம் பொங்கியெழ அவளை பாராது திரும்பிக் கொண்டவன் ஆட்டோ ட்ரைவரிடம் தான் போக வேண்டிய இடத்தை கூறிட அடுத்த அரை மணிநேரத்தில் அந்த சிறு வீட்டின் முன் வந்து நின்றது வண்டி.
வண்டியிலிருந்து இறங்கியவன் ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு விருட்டென வீட்டிற்குள் நுழைந்த வேகமே அவனது கோபத்தின் அளவை பறைசாற்ற திக்கென்ற நெஞ்சத்தோடு கால்கள் பின்ன அவனை பின் தொடர்ந்தாள் பெண்.
வீட்டின் ஹாலில் போடப்பட்ட இருக்கையில் கைகளிரண்டையும் பரப்பி தலை சாய்த்து கண்மூடியிருந்தவன் காதுகளோ துல்லியமாய் அவள் தனை நெருங்கி வருவதை உணர்ந்து விழி மலர்த்தி அவளைப் பார்த்தான்.
விழிகள் சிவந்து அவன் கோபத்தை பறைசாற்ற அவளுக்கோ பேச நா எழாமல் போனது..
"நா..நான்" முயன்று பேச வாய் திறந்தவள் அடுத்து அவன் பேசிய வார்த்தையில் கண்ணீர் மளுக்கென்று நீரை சிந்த அவனை வெறித்தாள்.
அவனோ அவள் பார்வையை அசராது எதிர் கொண்டவன் "ம்ம் சொல்லு என்னால உனக்கு எந்த யூஸ்ஸும் இல்லன்னு வேற வழி தேடிக் கிளம்பிட்டியா?" என மீண்டும் வார்த்தையை வாளாக்கி அவள் நெஞ்சில் சொருகினான் ஆணவன்.
பூவை மனம் அவன் கேள்வியில் தீயிலிட்டதாய் கருகி சாம்பலாகிட மீண்டும் கேட்டான் "ம்ம் சொல்லு எதுக்காக வீட்ட விட்டு போன.. அப்போ நான் சொல்ற போல என்னால எந்த பெனிபிட்ஸ்ஸும் உனக்கில்லன்னு வீட்ட விட்டு கிளம்பிட்ட ஆம் ஐ கரெக்ட்" என வினவியவனின் குரலின் அழுத்தம் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை உணர்த்த.. அவனிடம் வாய் பேச முடியாதவளாய் இல்லை எனும் ரீதியில் கண்ணீர் கன்னங்களோடு தலை குனிந்து தலையாட்டி வைத்தாள் பெண்.
அசையாது அவளைப் பார்த்தவன் எழுந்து அவளை நெருங்கி வந்தவன் ஒற்றை விரல் கொண்டு அவள் தலை நிமிர்த்தி அவள் கலங்கிய விழியோடு விழிகலந்து "நீ எனக்கானவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள். நீயாவே என்ன விட்டு போக நினைச்சாலும் அதுக்கு நான் விடமாட்டேன். மரணம் வரை நீ எப்போவுமே மிஸிஸ். அகிலாண்ட நாயகி ஆருத்ர பைரவன் தான்" அழுத்தமாய் ஆணித் தரமாய் அவன் பெயரோடு அவள் பெயர் கோர்த்து அவர்களுக்கான ஜென்ம பந்தத்தை உறுதியிட்டு கூறியவன் கூற்றில் சிரிப்பதா அழுவதா என தெரியாத மனநிலையில் தத்தளித்தாள் அவள் அகிலாண்ட நாயகி..
தன் முன்னே நின்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனதில் ஆழிப் பேரலையாக பல கேள்விகள் கிளர்ந்தெழ அதில் ஒன்றேனும் கேட்டு அதற்கு பதில் கிடைத்திடாதா என்ற நப்பாசையில் வாய் திறந்தாள் பெண்.
"என்னை பிடிச்சு தான் நீங்க கல்யாணம் பண்ணீங்களா?" என்று கேட்டவளின் விழிகளில் இதற்காகவேனும் பதில் கூறிவிடேன் என்ற ஆசையும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்து வழிந்ததைக் கண்டு கொண்டவன் அகமும் முகமும் உணர்ச்சிகளை துடைத்து வெறித்திருக்க அவன் இதழ்களோ தன்னிச்சையாய் அவள் கேள்விக்கான பதிலை உரைத்தது.
"நோ.. ஐ டோன்ட் லைக் திஸ் சோ கோல்ட் மேரேஜ்" என குரலில் மண்டிய வெறுப்போடு கூறியவனின் கூற்றில் நொருங்கித் தான் போனது அவள் மனதின் எங்கோ ஓர் மூலையில் கற்பனையில் அவனோடு வாழ்ந்த பளிங்கு மாளிகை.
சட்டென்று விழிகள் கலங்கிட தன் கண்ணீரை அவனுக்கு காட்டாது தலை தாழ்த்தியவள் முயன்று கண்ணீரை உள்ளிழுத்தவளாய் நிமிர்ந்து அவனை ஊடுருவிப் பார்த்தாள் துளியேனும் இவனுக்கு என்பால் இரக்கம் சுரக்காதா என்ற ஏக்கத்தோடு.
அவளுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றமே.
உணர்வுகளை துடைத்த முகம் எனக்கு உன் மீது எவ்வித உணர்வுகளும் இல்லை என்பதை அப்பட்டமாய் காட்டியது.
பலவீனமான தன் மனதை அவனுக்கு காட்டாதவளாய் நிமிர்ந்து நின்றவள் "இப்பிடி சொல்ற நீங்க அப்போ எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு ஆர்வம் காட்டினிங்க? எதுக்கு எல்லார் முன்னாடியும் நடிச்சு இந்த கல்யாணத்த பண்ணீங்க? நானே வேணானு ஒதுங்கி போக நினைச்சும் பிடிவாதமா என் விருப்பத்தை தூண்டிவிட்டு எதுக்கு கல்யாணத்தை நடத்தினீங்க? சொல்லுங்க எனக்கு பதில் தெரிஞ்சாகனும்" என அழும் குரலில் பிடிவாதமாய் கேட்டவளை பார்த்து பரிதாபத்திற்கு பதிலாக அவன் இதழ்களில் விஷம புன்னகை கூடியேற அவளை நக்கல் பொதிந்த பார்வை பார்த்தவன்.
"அத தெரிஞ்சி இப்போ என்ன செய்யப் போறீங்க மிஸிஸ் அகிலாண்ட நாயகி ஆருத்ர பைரவன்" என அழுத்தமாய் கேட்டவனின் விழி நோக்கியவள் அவன் பார்வையில் தெரிந்த நக்கலில் மனம் வெறுத்தவளாய் அவனை விட்டு விலக முயல அவன் விட்டால் அல்லவா.
அவள் கரம் அவன் பிடியில் சிக்கியிருக்க திரும்பி அவனைப் பார்த்தவளை நோக்கி கண்சிமிட்டி சிரித்தவன் "என்ன மிஸிஸ் ஆருத்ர பைரவன் பதில் வேணாமா?" எனக் கேட்டிட அவளோ அவனை வெறித்து பார்த்தாள்.
"ம்ம் பார்வையெல்லாம் ரொம்ப பலமா இருக்கு, குட் கல்யாணம் பண்ணி இந்த சிக்ஸ் மன்த்ல நல்ல முன்னேற்றம் தான்.. எப்போவுமே அழுது வடியிற அகிலாண்ட நாயகிய விட இப்பிடி எந்த உணர்வையும் காட்டாம அழுத்தமா இருக்குற மிஸிஸ் ஆருத்ர பைரவன் பெர்பெக்ட் மேட்ச் போர் மீ" என்றவன் இதழ்களில் மந்தாசகப் புன்னகை ஒன்று அக்கணம் தோன்றி மறைந்தது.
நொடியேனும் அவன் இதழ் சிந்திய புன்னகையில் தன்வசமிழந்த காதல் கொண்ட மனதிற்கு ஓர் கொட்டுவைத்தவளாய் அவனைப் பாராது முகம் திருப்பிக் கொண்டாள் பெண்.
அவள் முகத்திருப்பலில் சட்டென முளைத்த கோபத்துடன் அவள் கன்னம் பற்றி தன் பக்கம் திருப்பியவன் "டோன் டூ திஸ் டூ மீ அகெய்ன்" என்றான் அழுத்தமாய்.
அதில் அவனை உறுத்து விழித்தவள் "ஏன் இந்த ஆறு மாசமும் இதை தானே எனக்கு செய்தீங்க" சிறு பிள்ளையாய் நியாயம் பேசியவளைக் கண்டு ஏனோ அக்கணம் அந்த இரும்பு மனிதனுக்கு கோபம் வராதது என்ன விந்தையோ. அவளின் துறுதுறுக்கும் விழிகளை பார்த்தவன் அவள் கேள்விக்கு பதிலாய் "ஏன்னா எனக்கு உன் முகம் பார்க்க பிடிக்கல அதனால உன்ன அவோய்ட் பண்ணேன்.. ஆனா உனக்கு அப்பிடி இல்லையே என்னைத் தான் உனக்கு ரொம்ப பிடிக்குமே" என்றவன் வார்த்தையில் அவன் தன்னை கேலி செய்வதைப் போல் உணர்ந்தவள் மனம் வெதும்பிப் போனாள்.
என்ன வாழ்க்கை இது.
பிறந்த வீட்டில் தான் பாசம் என்ற வெளிப் போர்வையில் ஒவ்வொரு நாளையும் நரகமென கழித்து ஏமாந்து போயிருந்தாள் என்றாள்.. திருமணம் எனும் பந்தத்தை நரக விடுதலையாய் எண்ணி ஆசையாய் கரம் பிடித்த வாழ்க்கையிலேனும் இத்தனை காலம் அனுபவித்திராத பாசத்தை கரம் பற்றிய கண்ணாளனிடம் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் அதே அவல நிலை தொடர்ந்ததில் அவள் மனமுழுவதும் விரக்தியே வியாபித்தது.
அவள் வாழ்க்கையை எண்ணி அவளுக்கே சிரிப்பாய் இருக்க அவள் இதழ்கள் வளைந்து கொண்டது.
அவள் இதழ் வளைவில் புருவம் சுருங்க அவளை பார்வையால் துளையிட்டவனுக்கு அவள் எண்ண நினைக்கிறாள் என தெரியாது குழம்பி நின்றிருந்தான் அனைவரையும் விரல் நுனியில் ஆட்டிப் படைத்திடும் அந்த அசகாய சூரனான ஆருத்ர பைரவன்.
சில நிமிடம் இருவரையும் மௌனம் கவ்விக் கொள்ள அவள் கரத்தை விட்டவன் "இனி என்னை மீறி நீ எங்கும் போகக் கூடாது மீறி போனால் பின்விளைவு மோசமா இருக்கும்" என சீறிவிட்டு அங்கே தனக்கான அறைக்குள் நுழைந்து கொள்ள பெண்ணவளோ தொப்பென்று பலமிழந்தவளாய் இருக்கையில் அமர்ந்தாள்.
அவளுக்கு அவளை எண்ணியே கழிவிரக்கம் தோன்றியது.
அவள் நினைத்தது என்ன? அவளுக்கு கிடைத்தது என்ன? யோசிக்கும் போதே வாய்விட்டு கதறனும் போன்ற உணர்வு எழ அதற்கு கூட வழியில்லை என்பதை உணர்ந்தவளால் உள்ளுக்குள் மருக மாத்திரமே முடிந்தது.
அவளோ அவளை காக்க வந்த தேவதூதன் என எண்ணி அவனை காதலோடு கரம் பற்ற இவனோ காலதேவனாய் அவள் உணர்வுகளை அனுஅனுவாய் பறித்துக் கொண்டல்லவா இருக்கிறான்.
அவளது எண்ண அலைகள் முழுவதும் அவள் அவனை சந்தித்த முதல் சந்திப்பை எண்ணிட அந்த எண்ணங்களோடு கண்மூடி தூங்கிப் போனாள் பெண்.
அறைக்குள் நுழைந்தவன் படுக்கையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் மூளையோ படுவேகமாய் அடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்க அவன் மனமோ இனி வரும் நாட்களில் அவன் செய்யப் போகும் காரியங்களுக்காக இப்போதே அவனை குதறிக் கொண்டிருந்தது.
உடல் பலத்திற்கு ஈடாக மனோ பலத்தை கொண்டிருந்தவனை அத்தனை எளிதில் அவன் மனசாட்சியினால் கூட வெல்ல முடியாது தான் போனது.
முகத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் இரும்புக் கவசத்தை இட்டிருப்பான் போல இலகுவில் நான் இளகவும் மாட்டேன் யாருக்காகவும் இரங்கவும் மாட்டேன் என வீம்பாய் அவன் மனசாட்சியவே அடக்கிவிட்டிருந்தான் ஆணவன்.
விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலித்து அவனைக் களைத்திட அழைப்பை ஏற்க மறுமுனையில் "என்ன பண்ணிட்டு இருக்க ருத்து" என்று கோபமாய் ஒலித்த குரலில் இவனுக்கோ இளநகை பூத்தது இதழ்களில்.
அதில் மறுமுனையிலோ வேக வேகமான மூச்சு சத்ததிலே அவனின் கோபத்தின் அளவு தெள்ளத் தெளிவாய் தெரிந்திட இவன் புன்னகையோ மேலும் விரிந்தது.
"சரி சரி ஜோக் அபார்ட்.." என்றவன் இளக்கம் மறைந்திட்ட குரலில் "என்ன கேக்கனுமோ அத நேரடியாவே கேளு தீரா" என்றதும் மறுமுனையில் சிறு மௌனம் நிலவி மீண்டும் "நாம பண்ணப் போற வேலைக்கு இன்னொருத்தங்க பழியாகுறது எனக்கு பிடிக்கல. அதுவும் ஒரு அப்பாவி" என்க.
"மஹாபாரதம் படிச்சியிருக்க தானே தீரா?" என சம்பந்தமே இல்லாது அவன் கேட்டு வைத்தாலும் மறுமுனையில் இருந்தவனுக்கோ அவன் எதை கூற வருகிறான் என்பது புரிய மௌனியாகிப் போனான்.
அவன் மௌனத்தில் இவனோ மேலே சொல்லலானான் "மஹாபாரதத்துல தப்பு செய்தது என்னவோ பாண்டவர்களும் கௌரவர்களும் தான் ஆனா அவங்க தப்புக்கு பழியானது என்னவோ இப்போ நீ சொன்னியே அதே பாவபட்டவங்களும் பாவம் செய்யாதவர்களும் தான்" என்றான்.
அதில் அவன் சொல்வதை புரிந்து கொண்டவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான். அவனால் இதற்கு பதில் கூற முடியவில்லை. அவன் சொல்வது போல் தான் அவர்கள் நிகழ்த்தவிருக்கு இந்த நவீன குருஷேத்திரப் போரில் எத்தனையோ அப்பாவிகள் காயப்படப் போவது அவனுக்குமே சர்வ நிச்சயமாய் தெரிந்த ஒன்று தான்.. இருந்தாலும் ஏனோ மனம் முரண்ட அவனிடம் தன் விருப்பமின்மையை தெரிவித்திருக்க அதற்கு அவன் கூறிய பதிலில் மௌனியாகிப் போனான் தீரா.
மறுமுனை மௌனத்தில் அவன் புரிந்து கொண்டிருப்பான் என எண்ணியவன் அவனிடம் வேறு பேசலானான்.
"தீரா நெக்ஸ்ட் டோர்னமெண்ட் பத்தின ஆல் டீடெய்ல்ஸ்ஸும் கிஷோருக்கு அனுப்பி விடு" என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
அவன் மனசாட்சியே அடக்கியவனுக்கு தீராவை அடக்குவது அவ்வளவு கடினமில்லையே.
"பாவம் புண்ணியம் பார்க்க நான் ஒன்னும் புத்தன் இல்ல. செய்த தப்புக்கான தண்டனை நிச்சயம் அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும்" என சூளுரைத்துக் கொண்டவன்
இனி தான் நிகழ்த்தப் போகும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பலியாகப் போவது அவன் எதிர் படையில் நிற்கும் சிப்பாய்களும் ராணியும் மட்டுமல்ல தன்னகத்தே தன்னே நம்பியிருக்கும் அவன் ராணியும் என்பதை அவன் உணர்ந்தே இருந்தாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவனாய் கொக்கு ஒன்றே மதி என்ற ரீதியில் அவனது இலக்கை நோக்கி பயணிக்க தயாராகி நின்றான்.
நேரங்கள் நகர்ந்திட அறை விட்டு வெளியே வந்தவன் பார்வை பதிந்தது என்னவோ சோபாவில் உடலைக் குறுக்கி பாதுகாப்பற்ற சிறுமி போல் துயின்ற அவள் மணவாட்டி மீதே.
அவள் கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர் கோடுகள் அவள் அழுததை பறைசாற்ற அவளை பார்த்தவாறே அவளை நோக்கி மெல்ல நகர்ந்தவன் அவள் முகத்தில் படர்ந்திருந்த மெல்லிய முடிக்கற்றைகளை தன் ஒரு விரல் கொண்டு விலக்கிட அதில் சற்றே அவள் அசைந்ததில் பட்டென்று தன் விரலை விலக்கி கொண்டவன் அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.
முதன் முதலில் அவன் பார்த்த பெண்ணவளுக்கும் இதோ இப்போதிருக்கும் பெண்ணவளுக்கும் ஒன்றல்ல ஓராயிரம் வித்தியாசங்கள் அல்லவா?
'அன்று துறுதுறுவென துடிப்பாய் சுற்றித் திரிந்தவளின் உணர்வுகளைக் கொன்று
இன்று உணர்வுகளற்ற கைப்பாவையாக்கி வைத்திருக்கின்றாயே' என்ற மனசாட்சியின் அலறலை கண்டு கொள்ளாதவனாய் குனிந்து பூவென அவளைத் தன்கரங்களில் ஏந்தியவன் அறைக்குள் படுக்க வைத்து அவளையே பார்த்திருக்க அவன் நினைவுகளோ அவளை முதன் முதலாய் சந்தித்த நாளை நோக்கி பின்னோக்கிப் பயணித்தது.
ஒரு வருடம் முன்பு.
"அய்யோ மது பயமாயிருக்குடி வாடி வீட்டுக்கு போகலாம்" என்றவளின் பயந்த குரலை சட்டை செய்யாதவளாய் அவள் அருகில் நின்றவளோ வழிந்து நிறைந்த அந்தக் கூட்டத்தை முட்டி தள்ளிவிட்டு அவளை இழுத்துச் சென்றாள் மது என அவளால் அழைக்கப்பட்ட மதுராக்ஷி.
அந்த மிகப்பெரிய அரங்கத்தினுள் நுழைந்தவர்களின் கண்களோ அங்கே நிரம்பியிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
ஒருத்திக்கு ஆனந்த அதிர்வாக இருக்க மற்றவளுக்கோ அச்சத்தில் அதிர்வாகி நின்றாள்.
"அய்யோ மது என்னடி இது இவ்வளவு கூட்டமா இருக்கு.. இங்க எதுக்குடி அழைச்சிட்டு வந்த வாடி போகலாம்" என்றவள் தன் தலையிலிருந்து வழுவிய தாவாணியை பிடித்து நன்றாய் முகம் தெரியாதவாறு மூடிக் கொண்டாள் அவள் அகிலாண்ட நாயகி.
தோழியின் நச்சரிப்பில் அவள் புறம் திரும்பியவளோ
"அகி இப்போ எதுக்கு நீ இப்படி பயந்து சாகுற சும்ம வாடி எப்போவாச்சும் தான் நமக்கு வாய்ப்பு கிடைக்குது அத கப்புனு பிடிச்சிக்கிறத விட்டுடு சும்மா புலம்பாத"
என்க அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லையே அவள்.
"இல்ல மது எனக்கு இது சரியாப்படல வாடி கிளம்பலாம்.. இவ்வளவு கூட்டத்துல என்ன யாராச்சும் ஒருத்தர் அடையாளம் கண்டாலும் அது எனக்குத் தான் பிரச்சனை வாடி" என பயத்தில் அவள் கரம் பற்றி இழுக்க,
அவளோ விடாப்பிடியாய் "அகி இங்கப் பாரு இங்க யாருடி உன்ன கண்டு பிடிக்கப் போறா எல்லாரோட போகஸ்ஸும் அதோ அந்த ரிங்ல விளையாட போற கிங் மேல தான் இருக்கப் போகுது" என அரங்கத்தின் மத்தியில் பாக்ஸிங்கிற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சுட்டிக் காட்டியவள் மேலும் "அப்பிடியே உன்னை தெரிஞ்ச எவனாச்சும் பார்த்தாலும் உன்ன கண்டே பிடிக்க முடியாதே" என்றாள் கேசுவலாய்.
அதில் தோழியை புரியாது பார்த்தவள் "ஏன்" என்க அவளோ "அதான் முகமூடி கொள்ளைக்காரி போல முகத்த மூடிட்டு தானே நிக்குற இதுல எங்கயிருந்து உன்ன கண்டுபிடிக்கிறது" கேலியாய் கூறி சிரித்தவளை முறைத்தவள் அவள் தோளில் அடித்தாள்.
இருவரும் நடைபாதையில் நின்று பேசிக் கொண்டிருந்ததில் தங்கள் பின்னே நின்றவர்களை மறந்து நின்றிருக்க அவர்களை களைக்கவென ஓங்கி ஒலித்தது ஒரு குரல் "ஹலோ எக்கியூஸ்மி கொஞ்ச வழிய விட்டு உங்க விளையாட்ட வெச்சிக்கிறீங்களா?" என்ற ஆண்குரலில் பெண்ணவளோ தோழியை அடிப்பதை நிறுத்தி அதிர்ந்து நின்றாள்.
தோழியின் அதிர்வில் எட்டி அவள் பின் பார்த்த மதுவோ அங்கே எரிச்சல் முகத்தோடு நின்றவனைக் கண்டு புருவம் சுருக்கியவள் பின் தாங்கள் நடைபாதையில் நிற்பதை உணர்ந்தவளாய் நாக்கை கடித்துக் கொண்டு "ஸாரி பாஸ்" என்றவள் அதிர்ந்து நின்றவளை அழைத்துக் கொண்டு விலகி செல்ல முயல,
அவனோ "இடியட்ஸ்" என்ற முணுமுணுப்போடு அவர்களை கடந்து செல்ல அவன் கூறியது காதில் விழுந்ததும் பொங்கியெழுந்தாள் மதுராக்ஷி.
"ஹேய் ஹலோ யாரு இடியட்ஸ்" என எகிறிய தோழியை கண்டு பல்லைக்கடித்தவள் எங்கு தான் இங்கே நின்றாள் தன்னை கண்டு கொள்வானோ என பயத்தில் அவ்விடம் விட்டு நகர்ந்தவள் எந்த பக்கம் செல்வது என தெரியாது திணறி கால் போன போக்கில் ஒரு வழியில் நடந்து சென்றாள்.
திக்குத் தெரியாத காட்டில் கைவிடப்பட்ட குழந்தை போல நிரம்பி வழிந்த கூட்டத்தில் முட்டி மோதி வெளியே வந்தவள் வெளியே செல்லும் பாதைக்கு பதிலாக பாக்ஸிங் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யோக அறையிருந்த பக்கம் செல்லலானாள்.
பயம் ஒருபக்கம் பதட்டம் ஒருபக்கம் என நடந்து சென்றவளுக்கு ஓர் கட்டத்தில் செல்ல பாதை இல்லாது போகவே தனித்து நின்றிருந்தாள்.
"அய்யோ இனி எந்தப் பக்கம் போறது" என்ற புலம்பலோடு நின்றவளை அதிர்ச்சியை கூட்டவென அந்த காரிடோரின் மறுமுனையில் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் சற்று முன்னே தோழி வாயாடியவனும் அவள் அண்ணணுமாகிய எழில்வேந்தன்.
"அய்யோ அண்ணன் இவர் எதுக்கு இங்க வாறாரு.. மாட்டினேன் நல்லா மாட்டினேன்" கைகால் உதற நின்றிருந்தவளுக்கு எங்கேயேனும் சென்று ஒழிந்து கொள்வோமா என விழியாலே வழி தேடி அலைந்தவள் அங்கிருந்த ஓர் அறைக் கதவு சற்று திறந்திருந்தது கண்டு பட்டென்று உள்நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.
கதவில் சாய்ந்து நின்று நிம்மதி பொருமூச்செறிந்தவள் அப்போது தான் விழி திறந்து அறையை பார்க்க அங்கோ தன்னையே விழியகலாது பார்த்து நின்றவனைக் கண்டு திக்கென்றானது அவளுக்கு.
அண்ணனிடமிருந்து தப்பிக்க அறைக்குள் புகுந்தவளுக்கு அறைக்குள் யார் இருப்பார்கள் என்ற எண்ணம் அப்போதிருக்கவில்லை ஆனால் தன்முன்னே துளைக்கும் பார்வையோடு அமர்ந்திருந்தவனைக் கண்டவளுக்கு உடல் சில்லிட்டது.
அவனோ அவளைப் பார்த்தவாறே அவளை நோக்கி நெருங்க அவளுக்கோ பயத்தில் இதயம் எகிறித் துடித்தாலும் வெளியில் போக முடியாத நிலையில் இருக்க என்ன அவனையே பயந்த விழிகளோடு பார்த்து நின்றாள்.
அவளை நெருங்கியவன் "ஹூ ஆர் யூ" என்று தன் அழுத்தக் குரலில் வினவிட அவளுக்கோ வார்த்தை வருவேனா என தொண்டைக் குழியில் நின்று சண்டித் தனம் செய்தது.
"நா...நான்.. அ..அது" என வார்த்தை வராது திக்கித் தவித்தவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன் பின் "ஆட்டோகிராப் வேணுமா?" என்றான்.
அவனே பதில் கூறியதில் ஆசுவாசமானவள் வேகமாய் தலையசைத்திட அவனும் அங்கிருந்த மேசையின் மீதிருந்த பேனையை எட்டி எடுத்தவன் அவளிடம் "நோட்" என்க. அவளிடம் இருந்தாள் அல்லவா?
அவளோ முழித்து நிற்க அவனோ மீண்டும் "நோட்" என்றான். அவளோ அவன் அழுத்தத்தில் அவசரமாய் தன் கரத்தை நீட்டியவள் "இ...இதுலயே போ..போடுங்க" என திக்கித் திணறி கூறினாள்.
தன் முன்னே கரம் நடுங்க நின்றிருந்தவள் கரத்தை அழுத்தமாய் பற்றி அவள் படபடக்கும் விழியோடு விழிகலந்து அவள் கரத்தில் கிறுக்கியவன் கரமோ அவள் தளிர் கரத்தை மெல்ல வருடிட பட்டென்று தன்கையை இழுக்க முயன்றவளுக்கு அவன் இறுகிய பிடியில் முடியாது தான் போனது.
அவள் உள்ளங்கையை தன் கரம் கொண்டு வருடியவன் "சோ சொப்ட்" என மீண்டும் அவள் கரம் வருடிவிட்டு அவள் கரத்தை விடுவிக்க வேகமாய் தன் கரத்தை இழுத்துக் கொண்டவள் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.
போகும் அவளைப் பார்த்திருந்தவன் இதழ்கள் புன்னகைக்க "கிரேஷி" என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
மாயோள் - 03
அந்த அறையை விட்டு தப்பித்தால் போதும் என ஓடி வந்தவள் அக்கணம் தான் எதற்காக அங்கு ஒழிந்து கொண்டோம் என்பதை மறைந்தவளாய் மீண்டும் தோழியை தேடி அந்த ஸ்டேடியம் உள்ளே நுழைந்தாள்.
மதுராக்ஷியும் தோழியின் அண்ணன் என தெரியாமலே அவனுடன் ஓர் ஆட்டம் ஆடியிருக்க அவனுக்கோ இவள் வாயை சமாளிக்க முடியாது ஓர் கட்டத்தில் முறைப்புடன் அமைதியாய் விலகிச் சென்றிருந்தான்.
ஸ்டேடியம் உள்ளே மீண்டும் நுழைந்தவள் அவளைத் தேடிட, "ஹேய் அகி இதோ இருக்கேன்டி" என்ற குரலில் அவள் புறம் திரும்பியவள் தோழியைக் கண்டு நிம்மதி பெருமூச்சுடன் அவளருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
"ஹேய் அகி எங்கடி போய் தொலைஞ்ச உன்ன எங்கெல்லாம் தேடுறது" தோழியை கடிந்து கொண்டவளோ அவள் முகம் காட்டிய பாவனையில் "என்னடி என்னாச்சு ஏன் பேயறைஞ்சவ மாதிரி இருக்க" என்றது தான் தாமதம் தோழியிடம் நடந்த அனைத்தையும் கொட்டிருந்தாள் நாயகி.
அவள் கூறியதை கேட்டவளுக்கோ கோபம் சுள்ளென்று ஏறியது.
"என்னடி சொல்ற எவன்டி அவன் உன் கையையே தடவி இருக்கான் நீ செவில்ல ஒன்னு வைக்காம இப்படி பயந்து ஓடி வந்திருக்க.. நீ எவன்னு மட்டும் காட்டு அவன இன்னைக்கு நான் ஒரு வழி பண்ணிடுறேன்" பெண் வேங்கையாய் சிலிர்த்தவளை தாவி பிடித்து அமர வைத்திருந்தாள் நாயகி.
"ஹேய் மது வாய மூடுடி.. கத்தாத எல்லாரும் பார்க்குறாங்க" என்றவள் பார்வை தங்களை ஒரு மாதிரியாக பார்த்தவர்களை சுட்டி காட்ட அது எல்லாம் அவள் கவனித்தால் அல்லவா.
"ஏய் லூசு அவன் பண்ண வேலைக்கு அவன ஏதாச்சும் பண்ணணும் அதவிட்டுடு அமைதியா இருக்க சொல்ற" என்றாள் கோபத்துடன்.
"ஹேய் மது ரிலாக்ஸ்டி அதுதான் அவன் ஒன்னும் பண்ணலையே இன்பாக்ட் என் மேல தான் தப்பு நான் தான் பெர்மிசன் இல்லாம அந்த ரூம் உள்ள போய்ட்டேன்" என்றவளை புருவம் சுருங்க பார்த்தவள்.
"அதானே நீ எதுக்குடி அந்த ரூம் போன" என்றவளை முறைத்தாள் இவள்.
"இப்போ எதுக்குடி என்ன முறைக்குற" என்க, அவளோ "முறைக்காம என்ன பண்ண சொல்ற வந்த இடத்துல வாய மூடிட்டு சும்மா இருக்காம சண்டைய இழுத்து வெச்சிட்டு இருக்க"
"ஹேய் அவன் நம்மள இடியட்ஸ்னு சொல்றான் சும்மா விட சொல்றீயா அவன.. அதான் நாலு திட்டு திட்டினேன் ஏன் இதுக்கு முன்னாடி நான் யாரையும் திட்டினதே இல்லையா?" என புரியாது கேட்டாள்.
"அது இல்லடி அவரு யாரு தெரியுமா?"
குரல் இறங்கி கேட்டிட, அவளோ
"யாரு இந்தியாவோட அடுத்த பிரதமரா" என்றாள் கிண்டலாய்.
"உன் மூஞ்சு.. அது என்னோட அண்ணாடி.. நானே யார் கண்ணுலயும் படவே கூடாதுனு இருந்தா நீயா வழிய போய் வம்பு இழுத்துட்டு நிக்குற அதுவும் அவர் கிட்ட" என்றவளுக்கு இப்போதும் கூட பயத்தில் உடல் நடுங்கியது.
அவளுக்கு தான் தெரியுமல்லவா அவள் குடும்பத்தினர் பற்றி அதனால் உண்டான பயத்தில் படபடக்க மதுராக்ஷியோ அவள் அண்ணா என்றதில் விழி விரித்தவள் "என்னடி சொல்ற அண்ணாவா.. உனக்கு இப்பிடி ஒரு காட்டேரி அண்ணா இருக்கான்னே நீ சொல்லவே இல்ல" என வேண்டுமென்றே கேலி பேசிட அவள் முதுகில் குத்தியிருந்தாள் அவள்.
"அய்யோ அடிக்காதடி.. சரி சரி உன் அண்ணன் ஹேண்ட்ஸமா தான் இருக்கான் ஆனா என்னோட ருத்ரா போய் முன்னாடி உன் நொண்ணன் ஜீரோ தான்" என்றாள் கெத்தாய்.
தோழி கூறிய புதியவன் பெயரில் புருவம் சுருங்க அவளை ஏறிட்டவள் "அது யாரு ருத்ரா" என்றாள்.
"என்னாது யாரு ருத்ராவ .. ஏன்டி அது தெரியாம தான் என்னோட இங்க வந்திருக்கியா" என்றாள் அவள் கேள்வியில் அதிர்ந்தவளாய்.
"நானெங்கடி வந்தேன் நீயா தானே என்ன இழுத்துட்டு வந்த" என சலிப்புடன் தலையிலடித்துக் கொண்டாள்.
"அதுவும் சரி தான்.. என் ஆள பார்க்கனுமா வைட் அண்ட் சீ இப்போ வருவான் பாரு" என்றவள் ஆர்வமாய் பார்க்க இவளும் மறுக்க முடியாதவளாய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அதே நேரம் போட்டி ஆரம்பமாவதற்காக வீரர்களை அழைத்தனர்.
இடையை இறுக்கிப் பிடித்த நீல நிற சார்ட்ஸுடனும் கையில் அணிந்த பாக்ஸிங் க்ளோஸூடன் தன் படிகட்டு தேகத்தை பளீச்சென்று காட்டிக் கொண்டே மேடையேறினான் ஆருத்ர பைரவன்.
அவன் மேடை ரிங்கினுள் நுழையவும் அவன் பெயர் அந்த அரங்கமும் ஒலிக்கவும் சரியாய் இருந்தது.
அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் "ருத்ரா" என்ற பெயரை கரோகஷமாய் எழுப்பிட அந்த சத்ததில் காதுகளை பொத்திக் கொண்டவளோ தன்னருகே அமர்ந்திருந்தவளைப் பார்க்க அவளோ துள்ளிக் கொண்டிருந்தாள் சந்தோஷ ஆராவரத்தில்.
'இவ என்ன இவ்வளவு ஹெப்பியா இருக்கா.. அப்பிடி அந்த ருத்ரால என்ன தான் இருக்கோ' என எண்ணியவளாய் தன் பார்வையை திருப்பிய பெண்ணவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது அங்கே நின்றிருந்தவனைக் கண்டு.
'இவனா அந்த ருத்ரா' மனதினுள் எண்ணியவளாய் அறிகிலிருந்த தோழியின் கரங்களை சுரண்டினாள்.
அவள் சுரண்டலை யெல்லாம் எங்கு அவள் கவனித்தாள் அவள் பார்வை மொத்தமும் அவளின் கனவு நாயகன் மீதல்லவா பதிந்திருந்தது.
"அடியேய் இவன் தான்டி அவன்" அவள் தோளில் தட்டி காதில் கிசுகிசுக்க அவளோ புரியாதவளாய் "எவன்டி" என்றாள்.
"அதான் சொன்னேன்ல கைய பிடிச்சி ஆட்டோகிராப் போட்டான்ல அவன் தான்" என்றாள்.
"எது.. ருத்ராவா" கண்கள் விரிய அதிர்வாய் கேட்டவளிடம் "ம்ம்" என தலையாட்டி வைத்தாள் பெண்.
"நிஜமா சொல்லுடி ருத்ராவா அப்பிடி பண்ணது.." நம்பமாட்டாதவளாய் மீண்டும் கேட்க அவள் கேள்வி கடுப்பை தர அவளை முறைத்தவள் "நான் என்ன பொய்யாடி சொல்றேன். அவனே தான்" என்றாள்.
"ஏனாவா.. அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா அதுமட்டுமில்ல அவரு கேர்ள்ஸ் கிட்ட ரொம்ப ரொம்ப ஜெனியூன் பெர்சன். பெண்களுக்கு ஆதரவா ஒரு ட்ரஸ்ட் நடத்துறாறு தெரியுமா? அதுமட்டுமா பெண்ணோட உரிமை பற்றி ஒரு கட்டுரை புத்தகம் எழுதியிருக்காரு" என்றவள் அவன் பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்ல நாயகியின் விழிகளும் ஏகத்துக்கும் விரிந்தது.
'இவ்வளவு செய்திருக்காரா அதுவும் பெண்களுக்கு' என மனதில் எண்ணியவளுக்கு அக்கணம் அவன் மீது மரியாதை எழுந்தது.
"ஏய் நான் எங்கடி தப்பா நடந்தாருன்னு சொன்னேன். கையில ஆட்டோகிராப் போட்டேன்னு தானே சொன்னேன்" என அவசரமாய் மறுத்துக் கூறினாள்.
"ம்ம்.. ஆனா நம்பவே முடியலடி" என்றவள் போட்டியை பார்க்க ஆரம்பிக்க நாயகின் பார்வை முழுவதும் அவன் மீதே பதிந்தது.
அடிமைத் தனத்தில் ஊறிப் போன பாரம்பரியத்தை பின்புலமாய் வைத்த குடும்பத்தில் பிறந்த பெண்ணவளுக்கோ அவன் பெண்களுக்காக செய்த சேவைகளை கேட்டு ஓர் பெண்ணாய் அவள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துக் கொண்டான் அவன்.
போட்டியின் ஆரம்பத்தில் அவன் மீது வைத்திருந்த அவளது விழிகளோ போட்டியும் முடிவுற்று அவன் வெற்றி பரிசை பெற்ற போதும் கூட அவனை விட்டு அகலாது நிலைத்திருந்தது.
அன்று முதல் அவள் மனதில் ஆழப்பதிந்து போன அவன் நினைவுகளோடு நாட்களைக் கடத்தியவளுக்கு மீண்டும் அவனை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் அவளறியாமலே அவள் ஆழ்மனதில் தோன்றியிருக்க அவள் ஏக்கம் தீர்க்கவென்றே அடுத்து அவர்களது சந்திப்பு வெகு சீக்கிரமாகவே அமைந்தது அதுவும் அவள் வீட்டிலே.
.....
"ஹேய் அகி ரொம்ப நேரமா உன் போன் அடிக்குதுடி எடுத்து பேசேன்டி நேத்து தான் பைனல் எக்ஸாம் முடிஞ்சுது இன்னைக்காச்சும் நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா விடுறீயா நீ" அரைத்தூக்கத்தில் புலம்பியபடி படுத்திருந்தாள் மதுராக்ஷி.
ஆம் நேற்று அவர்களின் நான்காம் வருடம் கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தனர் இருவரும்.
இறுதி தேர்வையும் எழுதிவிட்டு கல்லூரி நண்பர்களோடு சந்தோஷமாய் நேரத்தை செலவிட்டவர்கள் இறுதியில் அழுகையோடு விடைபெற்று ஹாஸ்டல் திரும்பும் போதே நேரம் நள்ளிரவை தொட்டுயிருந்தது.
இன்று இறுதி நாள் என்பதால் ஹாஸ்டல் வாடனும் அனுமதி வழங்கியிருக்க எவ்வித பிரச்சனையுமின்றி ஹாஸ்டல் வந்து சேர்ந்தவர்கள் களைப்பில் தூங்கியும் போயிருந்தனர்.
இரவு போட்ட ஆட்டத்தில் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கோ விடாது ஒலித்த அலைபேசி ஒலி எரிச்சலை தர புலம்பிக் கொண்டே படுத்திருந்தாள் மதுராக்ஷி.
தோழியின் குரலில் குளித்தது பாதி குளிக்காதது பாதியாக குளியறையிலிருந்து வெளியே வந்தவளோ போனை பார்க்க அதில் தெரிந்த இலக்கத்தைக் கண்டு வெலவெலத்துப் போனாள்.
"அம்மா காலிங்" என்ற பெயரைத் தாங்கி வந்த அழைப்பை திரையில் கண்டவள் அவசரமாய் போனை எடுக்க அவள் போதாத காலம் கையிலிருந்த சோப்பின் நுரையால் அதுவோ வழுக்கியது.
'அய்யோ இது வேற' மனதிற்குள் புலம்பியவள் அழைப்பை ஏற்க திரையை தொட்டிருந்தாள்.
அழைப்பு இணைக்கப்பட்டதுமே மறுபுறத்திலிருந்து "போன எடுக்க இவ்வளவு நேரமா என்ன தான் பண்ற?" என்ற அதட்டல் குரல் அழுத்தமாய் கேட்டதில் இவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது.
"அ..அது அ..ம்மா நான் குளிச்சுட்டு இருந்தேன் அது தான்" என்றாள் மெல்லிய குரலில்.
"ம்ம்.. எதுக்கு இந்த நேரம் குளிக்குற இப்போ தான் எழுந்தியா? காலைல நேரத்தோட எழுந்துக்கனும்னு சொல்லியிருக்கேன் இல்லையா? என்ன படிக்க போனதும் பாரம்பரியம் மறந்து போச்சோ? இல்ல பட்டண பவுசு உடம்புல ஏறிப் போச்சோ" அதட்டலும் நக்கலுமாய் வந்து வீழ்ந்த வார்த்தைகளில் அவள் கண்கள் கலங்கித் தான் போயின.
ஏன் தனக்கு மட்டும் இப்படி எப்போதும் போல மனது அவள் நிலையை எண்ணி கழிவிரக்கம் கொண்டது.
சொந்த ஊரைவிட்டு படிப்பிற்காக தொலை தூரம் வந்து கல்வி கற்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தாலே ஏதோ கடவுளே வரம் கொடுக்க அழைத்தது போன்று அத்தனை மகிழ்வோடு அழைப்பை ஏற்று மணிக்கணக்கில் பேசுவார்கள்.
ஆனால் அவளுக்கோ வீட்டிலிருந்து அழைப்பு என்றாலே தன்னிச்சையாக உடலும் உள்ளமும் நடுங்கத் தொடங்கிவிடும்.
பாசத்தில் உருகியெல்லாம் பேச வேண்டாம் தொலைதூரத்தில் இருக்கும் பெண்ணிடம் அக்கறையாய் நாலு வார்த்தையேனும் நலம் விசாரிக்கலாமே இல்லை தூரத்து உறவுகளைக் கண்டால் பேசும் அந்த நல விசாரிப்புக்கள் போல் சரி தன்னிடம் பேசாலாமே அதை விடுத்து எப்போதும் ஏன் இந்த அதட்டலும் அதிகாரமும் மனம் வெறுத்துத் தான் போனது பெண்ணவளுக்கு.
இப்போதும் அவர் அதட்டலில் மனம் சுணங்கியவள் அவர் தன் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பது உணர்ந்து
"இல்லம்மா நேரமாவே எழுந்துட்டேன்" என்றாள்.
"ம்ம்.. நேத்தோட பரீட்சையெல்லாம் முடிஞ்சுதானே இன்னைக்கு அண்ணன் உன்ன அழைச்சிட்டு போக வரான் கிளம்பியிரு" என்றவர் அழைப்பை துண்டிக்கு முன் அவரை தடுத்தவள்.
"ம்மாஆ.. அ..அது என்கூட என் ப்ரெண்டையும் அழைச்சிட்டு வரவா? ஒரு இருபது நாள் நம்ம ஊர சுத்தி பார்த்துட்டு வரனும்னு ஆசையா இருக்குதாம்னு என் கிட்ட கேட்டாள்.. ப்ளீஸ்மா நோ சொல்லிடாதீங்க" என்றவளின் குரலில் ஓர் நிமிடம் அமைதி காத்தவர் பின் "அழைச்சிட்டு வா" என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க இவளோ முகம் கொள்ள மகிழ்ச்சியுடன் "ஹேய்ய்" என துள்ளிக் குதித்தாளென்றாள் அவளையே முறைத்தபடி அமர்ந்திருந்தாள் அவள் உயிர்த் தோழி.
அவள் அம்மாவிடம் பேசும் போதே அரை தூக்கத்தில் கேட்டுக் கொண்டு படுத்திருந்தவள் அவள் கேட்ட அனுமதியில் பட்டென்று அதிர்ந்த விழியோடு கட்டிலில் எழுந்தமர்ந்து தோழியை முறைத்திருந்தாள்.
தோழியின் முறைப்பை கண்டு கொள்ளாதவள் "ஹேய் மது செல்லம் நான் ரொம்ப ஹெப்பியா இருக்கேன் இன்னும் இருபது நாளைக்கு நீ என்கூட தான் இருக்கப் போற" என சந்தோஷத்தில் அவள் கன்னம் கிள்ளி துள்ளிக் குதிக்க.
மதுவோ தன் கன்னத்தில் பதிந்த சவர்க்கார நுரையை துடைத்துவிட்டவளாய் "அடியேய் பாவி நான் எப்போடி உன்கிட்ட உன் விளங்காத ஊருக்கு சுத்தி பார்க்க வரேன்னு சொன்னேன்" என்றாள் அழுதுவிடுபவள் போல.
அவளுக்குத் தான் நன்கு தெரியுமே இத்தனை வருட காலேஜ் வாழ்க்கையில் அவளுடனான நட்பின் பழக்கத்தில் அவள் அவள் ஊர் பற்றி கூறியவைகள் அனைத்தும்.
அப்போதிலிருந்தே ஏனோ அவளுக்கு தோழியின் குடும்பம் மீதும் ஊர் மீதும் அத்தனை வெறுப்பு மனதில் பதிந்து போனது.
இந்தக் காலத்திலும் இப்படியொரு கூட்டம் என அவளால் மனதால் சபிக்கத்தான் முடிந்தது.
ஆனால் இவள் அந்த வீட்டின் சூழலுக்கு குடும்பத்துக்கும் சம்மந்தமே இல்லாதவள். சேற்றில் மலர்ந்த தாமரை.
வெள்ளை மனம் படைத்தவள் எப்படி அந்த கொடூரக் கூட்டத்தில் பிறந்தாளோ இந்த ஒரே கேள்வி இன்று வரை அவள் மனதை அரிக்கத் தான் செய்தது.
தோழியின் பாவனையில் கிளுக்கிச் சிரித்தாள் நாயகி.
"மது ப்ளீஸ்டி தங்கம் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதடி.. இங்கயிருந்து நான் ஊர் போனேன்னா இனி எந்த காலத்துல உன்ன பார்ப்பேன்னு எனக்கே தெரியலடி. அதுதான் உன்னோட இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு ஆசைப்பட்டு அம்மா கிட்ட கேட்டுடேன்.. ப்ளீஸ்பா எனக்காக வறேன்னு சொல்லேன்" கலங்கிய கண்ணோடு தன்னிடம் இறைஞ்சி நின்றவளை பார்த்து அவளுக்கும் கண்கலங்கிப் போனது.
யாருமற்ற அநாதையாய் இருக்கும் தனக்கும் அனைத்து உறவுகளும் இருந்து அநாதையாய் நிற்கும் இவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இருவரும் பாசத்திற்காகவே ஏங்கி நிற்கின்றோம் என அவள் மனது உரைக்க தோழியை அணைத்துக் கொண்டாள் மதுராக்ஷி.
"உனக்காக வரேன்டி அகி எனக்கும் உன்னவிட்டா யாரு இருக்கா?" என்றவளின் குரலும் நலிந்து தான் போனது.
காலேஜ் முதல்வருடத்தில் காலடி எடுத்து வைத்த போது தாய் தந்தை இருவரையும் ஒரு விபத்தில் இழந்தவள் உறவுகள் யாருமின்றி தணித்து நிற்க அவளுக்கு துணையாய் நின்றது என்னவோ அவள் தாய் தந்தை தேடி வைத்த உயிரற்ற சொத்துக்கள் மாத்திரமே.
உயிரோடிருக்கும் காலத்தில் பிள்ளைக்கு என சொத்தை சேர்க்க காட்டிய ஆர்வத்தில் சொந்தத்தை முற்றிலும் ஒதுக்கி வைத்ததன் பலன் இன்று பெற்ற மகள் யாருமற்ற அநாதையாய் நிற்கின்றாள் என்பதை அறியாதவர்களாய் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.
தனியாளாய் நின்றவளுக்கு துணையாய் அவர்களது குடும்ப வக்கீலே முன்நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்ததால் அவளும் ஓரளவு சமாளித்துக் கொண்டவள் தன் காலேஜ் படிப்பையும் ஆரம்பித்திருந்தாள்.
தாய் தந்தையை இழந்த இழப்பை ஈடு செய்யவே கடவுளாய் அனுப்பி வைத்த தேவதையே அவளது உயிர்த் தோழி அகிலாண்டநாயகி.
அவளது அன்பை முழுதாய் அனுபவித்தவளுக்கு அவள் தாயுமானவளாகவே மாறிப் போயிருந்தாள் இந்த நான்கு வருட கல்லூரிப் பயணத்தில்.
ஒருவருக்கொருவர் சளைக்காது ஒருத்தர் மீது ஒருத்தர் அன்பு வைத்திருக்க அவர்களது இந்த பிரிவு தற்காலிகமா இல்லை நிரந்தரமா என அறியாது இப்போதே பிரிவின் வலி தந்த தாக்கத்தில் அழுது கரைந்தனர்.
எத்தனை நேரம் அழுதிருப்பார்களோ மதுவின் தும்மல் சந்தத்திலே இருவரும் பிரிந்திட நாயகியோ தன் வெற்றுத் தோளில் உணர்ந்த குளுமையில் குனிந்து தான் நின்றகோலத்தை பார்த்தவள் தலையிலடித்துக் கொண்டாள்.
அவசரத்தில் பெரிய துவாளையைச் சுற்றிக் கொண்டு வந்து நின்றவள் பேச்சின் சுவாரஷ்யத்தில் மறந்தும் போயிருந்தாள்.
"அய்யெய்யோ.. இவ்வளவு நேரமும் இந்த கோலத்துலையா உன்ன கட்டிட்டு இருந்தேன். எவளாச்சும் நம்மள பார்த்து இருந்தா வேற மாதிரி நினைச்சியிருப்பாளுகள்டி" என்றவள் குளியறை நோக்கி செல்ல அவள் கூற்றில் சிரித்த மதுவோ "அதுக்கென்ன அகி பேபி சொல்றவளுங்க சொல்லிட்டு போகட்டும் ஐ லவ் யூ.." என்று கத்த அவளை நோக்கி வந்து வீழ்ந்த சோப் டப்பாவில் கப்பென்று வாய் மூடிச் சிரித்தாள் மதுராக்ஷி.
"சீக்கிரம் ரெடியாகுடி இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்துருவான்" ஆமையாய் ஊர்ந்து ஊர்ந்து கிளம்பியவளைக் கண்டு பல்லைக் கடித்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தாள் நாயகி.
"ப்ச்ச் இப்போ என்னத்துக்குடி பதறுற உன் அண்ணன் சொந்த வண்டில தானே வறான் இல்ல வாடக வண்டில வறானா? நேரமாச்சுன்னா வாடகை கூட கொடுக்கனுமேன்னு கத்துவானா?" என கிண்டல் பண்ணியவளாய் தன் அலங்காரங்களை செய்து கொண்டிருக்க அவர்களது அறைக்கதவு தட்டப்பட்டது.
"ம்ம் சொன்னேன்ல அண்ணன் தான் வந்திருக்கும்" என்றவள் எழுந்து கதவைத் திறக்க அவர்களின் ஹாஸ்டல் வாடன் தான் நின்று கொண்டிருந்தார்.
"அகிலா உன் அண்ணன் வந்திட்டாரு உன்ன வர சொன்னார்" என்றவர் எட்டி மதுவை பார்த்து "என்ன மது நீயுமா வீட்டுக்கு கிளம்புற?"
"இல்ல வாடன் நானும் அகி கூட ஊருக்கு போறேன் ஒரு டுவன்டி டேய்ஸ் அங்க தான் ஸ்டே பண்ணப் போறேன்" என்றாள்.
"ஆஹா ஓகே கேர்ள்ஸ் ஹெப்பி ஜேர்னி" என்றவர் கீழே செல்ல பெண்கள் இருவரும் தயாராகி கீழே வந்தனர்.
"ஏன்டி அகி அன்னைக்கு உன் நொண்ணன நான் போட்ட போடுல இப்போ என்ன பார்த்தான்னா என்ன சொல்லுவான்" அதிமுக்கியமான கேள்வியை கேட்டவளை அதிர்ந்து பார்த்தாள் நாயகி.
"அய்யோ இத எப்பிடி மறந்தேன். உன்ன இப்போ அண்ணன் பார்த்திச்சுன்னா அன்னைக்கு நான் தான் உன் கூட இருந்தேன்னு கண்டுபிடிச்சுடுமே" விழி விரிய பயத்தில் அசையாது நின்றவளின் தோள் தட்டியவள்.
"ஹேய் லூசு பயப்படாதடி உன் நொண்ணன் ஒன்னும் என்ன கண்டுபிடிக்கமாட்டான். அப்பிடியே கண்டுபிடிச்சாலும் சமாளிச்சுக்கலாம் வாடி" என அவளை சமாதானம் செய்தாலும் அவளுக்கும் உள்ளுக்குள் உதறத் தொடங்கியது.
அன்று கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினாள்
இப்போது நினைக்கும் போது அவன் தன்னை கண்டால் என்ன சொல்வானோ என பயந்தாவாறே அவளோடு இணைந்து நடந்தாள்.
இருவரும் தங்கள் உடைமைகளுடன் கீழிறங்கி காத்திருப்பு அறைக்குள் நுழைய வாசலுக்கு முதுகாட்டி ஆஜாகுபவனாய் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் எழில் வேந்தன்.
அவர்கள் வந்த அரவம் அவன் உணர்ந்தாலும் அவர்கள் புறம் திரும்பாது அழைபேசியில் பேசிக் கொண்டிருக்க அவர்களும் அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாய் நின்றிருந்தனர்.
சிறிது நிமிடத்தில் பேசி முடித்து இவர்கள் புறம் பார்வையை திரும்பியவனைக் கண்டு முகம் மலர்ந்தவள், "அண்ணா எப்பிடியிருக்கிங்க" என அவனை நல விசாரிக்க அவனிடம் மெலிதான தலையசைப்பு மட்டுமே.
அதில் அவள் மனம் சுருங்கினாலும் அவன் எப்போதும் அப்படித் தானே என தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனை பார்க்க அவனோ தன்னருகே நின்றவளை புருவம் சுருங்க பார்ப்பதைக் கண்டு திக்கென்றானது அவளுக்கு.
மதுவுக்கும் தோழியின் நலவிசாரிப்பிற்கு வாய் கூட திறந்து பதில் சொல்லாதவன் மீது கடுப்பாய் வந்தாலும் அவன் தன்னை ஆராய்ச்சியாய் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சி தான் எங்கு தன்னை அடையாளம் கண்டு திட்டிவிடுவானோ என்று பயந்து தான் போனாள்.
அவனும் அவர்கள் பயத்தை மெய்யாக்குபவன் போல "இது" என நெற்றியை தேய்த்துவிட்டவாறே கண்மூடி யோசித்தவனை மேலும் யோசிக்க விடாது "இது என்னோட ப்ரெண்ட் மதுராக்ஷி அண்ணா நம்ம கூட தான் ஊருக்கு வரப் போறா" வேகமாய் தோழியை அறிமுகபடுத்தியவள் அவனைப் பார்க்க அவனோ அழுத்தமான பார்வையுடன் எதுவும் பேசாது "கிளம்பலாமா?" என்றான்.
"போகலாம்ணா" என்றவளின் கரத்திலிருந்த பையை தூக்கிக் கொண்டே அவன் முன்னே செல்ல மதுவோ" ம்க்கும் ரொம்ப தான் பாசம். ஆளு பார்க்க பீம்பாய் சைஸ்க்கு தானே இருக்கான் என் பையையும் தூக்கினா என்னவாம்" அவள் முணுமுணுப்பாய் சொன்னாலும் அவளை கடந்தவன் காதில் தெளிவாய் விழ திரும்பி அவளை பார்த்தவன் பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.
அவனோ அழுத்தமாய் பார்த்துவிட்டு அவளை கடந்து சென்றுவிட நிம்மதி பெருமூச்சு விட்டனர் இருவரும்.
"ஹப்பா.. நல்ல வேளை உன் அண்ணாக்கு என்ன தெரியலடி" என்றவளிடம் மறுப்பாய் தலையசைத்தாள் நாயகி.
"என் அண்ணன் ரொம்ப ஷார்ப் எப்படியும் உன்ன கண்டு பிடிச்சி தான் இருப்பாரு அதான் சைலெண்ட்ஆ போறாருடி" என அண்ணனை நன்கு புரிந்தவளாய் கூறினாள்.
"சும்மா வாடி உன் நொண்ணன் புராணம் பாடாம கிளம்பலாம் இல்லனா அதுக்கும் முறைச்சிகிட்டு இருக்க போறாரு" என்றவாறே இருவரும் வெளியேறிச் சென்றனர்.
வேந்தனோ வண்டியின் பின்னே லக்கேஜ்களை வைத்துவிட அகியோ மதுவின் லக்கேஜ்ஜை வாங்கி வைத்திருந்தாள்.
அவன் முன்னிருக்கையில் ஏறியவன் வண்டியை உயிர்ப்பிக்க அவர்களும் பின் இருக்கையில் ஏறிக் கொண்டதும் வண்டியை கிளப்பியிருந்தான் வேந்தன்.
பயணம் முழுவதும் ஆணவனோ அமைதியாய் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க பெண்களிருவரும் மெல்லிய குரலில் தங்களுக்குள்ளே பேசி சிரித்தபடி பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பேச்சு காதில் விழாதவன் போன்று வண்டியை செலுத்தியவன் பார்வையோ அடிக்கடி கார் கண்ணாடி வழியே தெரிந்த தங்கையின் புன்னகை முகத்தில் பதிந்து மீண்டது.
அவன் அடிக்கடி கண்ணாடி வழியே பார்ப்பதை கண்டது என்னவோ மதுராக்ஷியே.
அவள் மனமோ அவன் பார்வையில் "எதுக்கு இந்த பீம் பாய் அடிக்கடி நம்மளையே பார்க்குறான் ஒருவேள நிஜமாலுமே நம்மள கண்டுபிடிச்சுருப்பானோ" என எண்ணிக் கொண்டாலும் பயத்தை முகத்தில் காட்டாதவளாய் அமர்ந்திருந்தாள்.
அவர்களது நீண்ட நேர பயணமோ வள்ளியூர் உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற எல்லைக்குள் நுழைந்து முடிவுக்கு வந்தது.
எங்குமே பசுமை நிறைந்த வயல்வெளிகள் பாதையின் இருபுறமுமே நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியை தர தன் ஊரின் அழகை ரசித்தவாறே வந்தவளுக்கு மீண்டும் தான்தாய் மடி சேர்ந்த நிம்மதியோடு அந்த பயணத்தை ரசித்திருந்தாள்.
நகரத்தில் வளர்ந்த மதுராக்ஷிக்கோ அந்த சூழல் அழகாக காட்சியளிக்க அனைத்தையும் தன் போனில் படம் பிடித்துக் கொண்டவள் எதேர்ச்சியாக திரும்ப கண்ணாடி வழியே இவளையே முறைப்பாய் பார்த்திருந்தான் வேந்தன்.
"அய்யெய்யோ இவனெதுக்கு முறைக்குறான்" என மனதினுள் பதறியவள் அவனைப் பாராது மீண்டும் பாதையில் பார்வையை பதித்தாள்.
பெண்கள் இருவரும் ஊரின் அழகை ரசித்தபடி வர வண்டியோ அந்த மிகப் பெரிய பண்ணை வீட்டின் முன்னே வழுக்கி நின்றது.
வண்டி நின்றதுமே இருவரும் வண்டியை விட்டு இறங்கினர்.
மதுவின் விழிகளோ அந்த பண்ணை வீட்டின் வெளித் தோற்றத்தைக் கண்டு ஆச்சர்யமாய் விரிந்து கொண்டது.
"வாவ் அகி கிராமம்னாலும் உன் வீடு ரொம்ப பெருசுடி ரொம்ப அழகாவும் இருக்குடி" வீட்டின் வெளித் தோற்றத்தை பார்த்து பிரமித்தவளாய் கூறியவளைக் கண்டு சிரித்தவள்.
"இது அந்த காலத்து குட்டி அரண்மனைடி காலம் போக போக குட்டி அரண்மனை சுருங்கி பண்ணை வீடா மாறிப்ப் போச்சு" என்றவள் அவளை அழைத்துக் கொண்டு உள்நுழைய வீடோ வெறிச்சோடிக் கிடந்தது.
"என்னடி வீட்ல யாருமே இல்ல.. நீ இன்னைக்கு வரதுன்னு தெரியும் தானே" சந்தேகமாய் கேட்ட தோழியின் கேள்விக்கு பதில் தெரியாதவள் தங்கள் லக்கேஜ்களை சுமந்து வந்தவனிடம் "அண்ணா எல்லாரும் எங்க ஒருத்தரையும் காணோம்" எனக் கேட்டாள்.
"ஊர் திருவிழா பத்தி பேச பஞ்சாயத்து கூட்டியிருக்காங்க அதுக்கு தான் எல்லாரும் போயிருக்காங்க நீ குளிச்சுட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு அவங்க வந்துடுவாங்க" என்றான்.
"ரொம்ப நாள் கழிச்சு வர பொண்ண வரவேற்க ஒருத்தர் கூட வீட்ல இருக்காமா அப்படியென்ன பஞ்சாயத்து வேண்டிகிடக்கு" என அவன் வார்த்தைகளில் உண்டான சிறு கோபத்தில் சூடாய் கேட்டிருந்தவளை தீயாய் முறைத்தவன்.
"அகிலா இது ஒன்னும் பட்டணம் இல்ல கிராமம் அதுக்கு ஏத்தா போல பேச்சும் நடத்தையும் இருக்கனும் இல்லன்னா என்ன ஆகும்னு தெரியும்ல சொல்லி வை உன் ப்ரெண்ட்கிட்ட"
தங்கையிடம் அதட்டலாய் கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறிச் சென்றவனின் பின்னே சண்டைக்கு தயாரானவளை இழுத்துப் பிடித்திருந்தாள் நாயகி.
"தங்கமே எதையும் பேசி வம்ப இழுத்துடாதடி வா அறைக்குப் போய்டலாம்" கெஞ்சிக் கூத்தாடி அவளை இழுத்துக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்திருந்தாள்.
பயணக்களைப்பு தீரும் வரை குளித்து முடித்தவர்கள் இருவரும் கீழே வர அவர்களுக்கான உணவு தயாராக இருந்தது.
"பரவால அகி சாப்பாட்டுலயாச்சும் கருணை காட்டினாங்களே பெரிய மனசு தான்" கிண்டலாய் கூறியபடி உணவை உண்டவளைக் கண்டு தலையாட்டி சிரித்தவள் தன் உணவில் கவனமானாள்.
அதன் பின் இருவரும் அறைக்குள் நுழைந்து தூங்கிப் போனவர்கள் எழுந்தது என்னவோ கீழே கேட்ட பலவிதமான குரல்களின் கலவையான சத்தத்திலே.
முதலில் எழுந்து கொண்ட நாயகிக்கோ கீழே கேட்ட சத்தத்தில் என்ன நடக்கின்றது என புரிந்திட அருகே தோழியை பார்த்தாள். அவளோ காதுகளை பொத்திக் கொண்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்ததில் நிம்மதி பெருமூச்சுடன் எழுந்து கொண்டவள் வேகமாய் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழிறங்கிச் சென்றாள்.
அவள் கீழிறங்கவும் அவள் அன்னை அங்கிருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறையவும் சரியாய் இருக்க அந்தக் காட்சியை கண்டவளோ உடல் அதிர அப்படியே நின்றாள்.
அவள் வந்ததை அங்கிருந்த யாருமே கண்டதாக தெரியவில்லை அனைவரது பார்வையும் ராஜேஸ்வரியின் மீதே பதிந்திருந்தது.
"என்னடே உனக்கு அவ்வளவு திமிரா போயிடுச்சோ ஒழுங்கு மரியாதையா ஊர் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்குற இல்லன்னு வெச்சுக்கோ நடக்குறதுக்கு கால் இருக்காது வெட்டி ஆத்துல வீசிவிடுவேன்" என்ற அகங்கார கத்தலில் அடிவாங்கியவனின் தாயோ கண்ணீருடன் அவர் முன்னே வந்தவர் "அய்யோ அம்மா அப்படியெல்லாம் பண்ணிடாதிங்க நீங்க சொன்ன மாதிரியே என் பையன் அந்தப் பொண்ண விட்டு விலகிடுவான்" கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினார்.
அவர் கெஞ்சலில் தன் கோபம் குறைந்தவராய்,
"ம்ம் அழைச்சிட்டு போ.. இதுவே கடைசி முறையா இருக்கட்டும் இல்ல நான் சொன்னது தான் நடக்கும்" என்றுவிட்டு அங்கே போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியில் தோரணையுடன் அமர்ந்து கொள்ள அவர்களும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.
புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.
கடந்த நான்கு வருடங்களில் இந்த அடாவடிகளை விட்டு நிம்மதியாய் இருந்தவளுக்கு இந்த நிகழ்வு மனதில் வேதனையை உண்டு பண்ண அதனை வெளிகாட்ட முடியாத தன்நிலையையும் நொந்து கொண்ட மெல்ல படிகளிலிருந்து கீழே இறங்கியவளின் அரவத்தில் அப்போது தான் அவளைக் கண்டனர் அவள் குடும்பத்தினர்.
அம்மா அண்ணா சித்தப்பா சித்தி தங்கை என அங்கே இருந்தவர்கள் அனைவரின் பார்வையும் அவள் மீதே நிலைத்தது.
"அகிலா எப்போடா வந்த நீ" என முகம் கொள்ளா புன்னகையோடு கேட்டவாறே அவளை நெருங்கினார் அவள் சித்தி பாக்யவதி. அவளுக்கென்று ஆதரவான ஒரே ஜீவன் அவர்.
அவரைப் பார்த்து புன்னகைத்தவள் "மதியமே வீட்டுக்கு வந்துட்டேன் சித்தி" என்றவள் பார்வையோ தயக்கத்துடன்
அன்னையை பார்த்தது.
அவரோ "எங்க உன் தோழி.. இன்னுமா எழுந்திரிக்கல? இல்ல இரவாகுமோ?" என்ற குரலில் இருந்த அழுத்தமே 'இப்போதே அவள் வர வேண்டும் என சொல்லாமல் சொல்லிட' அவளோ "இதோ இப்போவே எழுப்பிவிடுறேன்மா" என்றுவிட்டு வேகவேகமாய் அறைக்குள் நுழைந்து நல்ல தூக்கத்திலிருந்தவளை இழுத்துக் கொண்டு கீழிறங்கியிருந்தாள்.
அரைத் தூக்கத்தில் அரக்க பறக்க தன்னை இழுத்து வந்தவளை முறைக்கவும் முடியாமல் தன்னையே வெட்டும் பார்வை பார்த்த குடும்பத்தை பார்க்கவும் முடியாமல் தயக்கத்துடன் நின்றிருந்தாள் மதுராக்ஷி.
அவள் அமைதியைக் கண்டு பாக்யவதியோ "உன் பேரு என்னம்மா?" என அவராகவே பேச்சை ஆரம்பித்தார்.
அவர் கேள்வியில் சற்றே தயக்கம் நீங்கியவள் "மதுராக்ஷி ஆன்டி" என்றாள் சிறு புன்னகையோடு.
அவரோ "நல்ல பெயர்மா" என்று பாராட்ட அங்கு நின்ற ஒருத்தனின் இதழ்கள் மாத்திரம் "ராட்சசி" என முணுமுணுத்துக் கொண்டது யாரும் அறியாமல்.
அது வேறு யாருமல்ல சாட்சாத் எழில் வேந்தனே. அவனுக்கு தான் அவளுடனான வாய் சண்டையில் முன்னனுபவம் உண்டே.. அதனாலே அவன் அவளை ராட்சசியாகவே உருவகப்படுத்திக் கொண்டான்.
அவளை முதலில் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டவன் வாய் திறக்கும் முன்னே அவனை முந்திக் கொண்டு பேசிய தங்கையின் சமாளிப்பில் எதுவும் பேசாது வாய் மூடிக் கொண்டாலும் அவனுக்கு அவளுடனான முதல் சந்திப்பிலிருந்த அதே கோபம் இருக்க தங்கைக்காக அடக்கிக் கொண்டவன் அவளது துடுக்கான பேச்சில் அவ்வப்போது முறைத்து வைத்தான்.
இப்போதும் அவளை முறைத்துக் கொண்டே அங்கே ஓரமாய் மார்புக்கு குறுக்கே கைககட்டி நின்றிருந்தான் அவன்.
"இங்கப் பாருமா பொண்ணு என் பொண்ணு சொன்னதுக்காக தான் உன்ன இங்க வர அனுமதிச்சேன். எங்க ஊரு ரொம்ப ரொம்ப கட்டுப்பாடான ஊரு அதுக்கேத்த போல நீ நடந்துக்கனும் வந்தோமா ஊர சுத்தி பார்த்தோமான்னு போய்ட்டே இருக்கனும் புரிஞ்சிதா" என்றதும் அவளோ பொம்மையாட்டம் தலையாட்டி வைக்க அவள் மனமோ 'நல்ல விருந்தோம்பல்' என கிண்டலாய் எண்ணிக் கொண்டது.
நாயகிக்கோ தாயின் வார்த்தைகளில் மனம் சுணங்க நின்றவள் அவளைப் பார்க்க அவள் தலையாட்டிய தோரணையில் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் சிரிப்பை மறைத்தாலும் அவள் மீது ஓர் நோட்டம் வைத்திருந்த வேந்தனுக்கோ அவளை எண்ணி மனம் கனத்தது.
ராஜேஸ்வரியோ அங்கே நின்ற எழில் வேந்தனிடம் "வேந்தா நாளைக்கு விடியக்காலையிலே அவங்க எல்லாரும் வந்திடுவாங்க அவங்களுக்கு நம்ம தோப்பு வீட்ட தங்க ஏற்பாடு பண்ணு. அப்புறம் காலையிலே வரதுனால அவங்களுக்கான காலை உணவு இங்கே ஏற்பாடு பண்ணிடு அதுக்கு பிறகு தோப்பு வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்." என்றவரின் கட்டளைக்கு சரியென தலையசைத்தான் வேந்தன்.
நாயகிக்கோ அன்னை யாரை சொல்கிறார்கள் என்று புரியவில்லையென்றாலும் தோப்பு வீடு என்ற போது யாரோ விருந்தினர்கள் வரப் போகின்றனர் என எண்ணிக் கொண்டவள் அமைதியாய் நின்றிருந்தாள்.
ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை அந்த விருந்தினர்கள் தான் தன் வாழ்க்கையின் பாதையை மாற்றப் போகிறவர்கள் என்று.
மாயோள் - 05
அன்றைய இரவுணவை அனைவருமாய் சேர்ந்து உண்ட போதும் அவர்களிடையே அமைதி மட்டுமே.
எவ்வித பேச்சுமின்றி இரவுணவு வேளையும் முடிந்திட ஒவ்வொருவரும் தத்தமது அறைக்குள் அடங்கிக் கொண்டனர்.
"ஹேய் அகி நீ சொல்லும் போது கூட உன் பெமிலி பத்தி இந்தளவு யோசிக்கலடி நேர்ல பார்க்கும் போது தான் புரியுது இந்த குடும்பம் எவ்வளவு டெரெர்னு" அறைக்குள் நுழைந்ததும் தொப்பென்று கட்டிலில் விழுந்தவாறே புலம்பிய தோழியை சிரிப்புடன் பார்த்தவள்.
"எல்லாரும் டெரெர்னு சொல்ல முடியாது மது, அம்மா அண்ணா ரெண்டு பேருமே அளவோட தான் பேசுவாங்க. சித்தப்பா அம்மா முன்னாடி பேசவே மாட்டாங்க அம்மான்னா அவ்வளவு மரியாதை அதான் கீழ எதுவும் பேசாம இருந்தாங்க.
ஆனா சித்தி அப்படியில்ல ரொம்ப கலகலன்னு பேசிட்டே இருப்பாங்க.
சித்திக்கு எப்போவுமே நான்னா ரொம்ப பாசம்" என்றாள் முகம் கனிய.
"ம்ம் எனக்கும் அவங்கள தான் ரொம்ப பிடிச்சுது அகி. பார்த்து பார்த்து என்ன கவனிச்சிட்டாங்களே" தன்னிடம் அன்பாய் நடந்து கொண்டவரை பற்றி புன்னகையுடன் கூறினாள்.
இருவரும் பேசியவாறே படுக்கைக்கு தயாராகிட கதவு தட்டும் சத்ததில் நாயகியோ 'யாரா இருக்கும்' என்ற யோசனையோடு கதவை திறக்க அவளை தாவியணைத்திருந்தாள் அவள்.
"அகிக்கா" என்ற அழைப்புடன் தன்னை அணைத்திருந்த குட்டித் தங்கையை தானும் மகிழ்வோடு அணைத்தாள் நாயகி.
அவள் மலர்விழி, கஜேந்திரன் மற்றும் பாக்யவதியின் இரண்டாவது மகள் இவ் வீட்டின் கடைக்குட்டி.
பாக்யவதிக்கு அடுத்து அவள் மீது அன்பு வைத்த ஜீவன்.
மாலை வேளை தன் அக்காளைக் கண்டதும் அவளை தாவியணைத்திடும் ஆசை இருந்தாலும் தன் பெரியம்மா மீதான பயத்தில் அமைதியாய் நின்றிருந்தவள் இப்போது தனிமையில் அக்காவை காண ஓடி வந்திருந்தாள் பெண்.
"ஸாரிக்கா பெரியம்மா முன்னால உன் கூட பேசவே முடியல" சோகமாய் கூறியவள் தாடையை பிடித்த பெரியவளோ "பரவாலடா எனக்கு தான் தெரியுமே அம்மா முன்னாடி யாருமே பேச முடியாது சித்தியை தவிர" என்று சிரிக்க அவளோடு இணைந்து சிரித்தவள் "அது உண்மை தான்கா எங்கம்மா மட்டும் தான் உங்க அம்மா முன்னாடி வாய் திறக்குற ஒரே ஜீவன்" என்றாள்.
"ஹாய் நீங்க தான் மது அக்காவா? ரொம்ப அழகா இருக்கிங்க" என வெள்ளந்தியாய் பேசியவளை அக்கணம் பிடித்து தான் போனது மதுவிற்கும்.
"ஹாய்டா ஆமா நான் தான் மது உன் செல்ல அக்காவோட பெஸ்ட்டு ப்ரெண்டு" என தோழியின் கழுத்தை கட்டிக் கொள்ள சிரிப்புடன் தங்கையை பார்த்தாள் நாயகி.
மூவருமாய் கட்டிலில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க பேச்சின் நடுவில் "ஏன்கா நீ திரும்பி வந்த அதான் காலேஜ் முடிச்சிட்டல்ல அங்கயே ஏதாச்சும் வேலையை பார்த்து போயிருக்கலாம்ல.. நிம்மதியா இருந்துருப்ப" என்றாள் சின்னவள்.
அதில் தங்கையை கண்டிப்பான பார்வை பார்த்தவள் "ப்ப்ச் இப்பிடி பேசாத விழி இது நம்ம வீடு நம்ம உறவு இதெல்லாம் விட்டுடு எங்க போக சொல்ற" சிறு கண்டிப்பில் ஒலித்த அவள் குரலில் முகம் சுருக்கினாள் மலர்விழி.
"போக்கா இது உனக்கு வீடா? ஜெயிலு" என்ற தங்கையின் வார்த்தையில் இருந்த சலிப்பில் அவள் மனம் புரிந்தாலும் அவள் பேச்சை மாற்ற எண்ணியவள் "அதவிடு நீ எப்பிடி இருக்க பரீட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியா?" என்றாள்.
"ம்ம் ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கேன். இந்த ஜெயில்ல இருந்து தப்பிக்குறதுக்காக வேண்டியே ராத்திரி பகல் பார்க்காம கண் முழிச்சு படிச்சி பரீட்சை எழுதி இருக்கேன்" சிரிப்புடன் கண்சிமிட்டி கூறியவளை பெரியவள் முறைக்க மதுவோ புரியாது
"ஏன் எதுக்கு" எனக் கேட்டிருந்தாள்.
"அப்போ தானே காலேஜ்க்கு போகலாம். ஒரு நாழு வருசம் அக்கா போலவே நிம்மதியா இந்ந ஊர விட்டு இருந்துட்டு வரலாமே அதுக்கு தான்" என்றாள் கண்சிமிட்டி.
"அடேங்கப்பா சின்ன பொண்ணா இருந்தாலும் எவ்வளவு தெளிவா யோசிக்குற விழி. உன் அக்காளும் இருக்காளே" தோழியை சீண்டியவளாய் சின்னவளுடன் கையடித்து சிரித்தாள்.
இருவரையும் முறைத்தவள் "என்னையே ஓட்டுறிங்களா உங்கள" என இருவருக்கும் அடி போட சத்தமின்றி சிரித்து கொண்டனர்.
மதுவோ தோழியை மேலும் சீண்ட எண்ணி "விழி நீ வா நான் அங்கவே உனக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி தரேன் நாம ஜாலியா லைப் என்ஜாய் பண்ணலாம். இந்த கிழவி இந்த ஊருலே எவனாச்சும் குப்பனையோ சுப்பனையோ கட்டிகிட்டு காலத்த கழிக்கட்டும்" என்றதும் மலர்விழியோ வாய் பொத்தி சிரிக்க நாயகியோ தோழியின் தலையில் பல கொட்டுக்களை பரிசளித்தாள்.
சில பல கொட்டுக்களை வழங்கிவிட்டு அவளை பார்க்க அவளோ களைந்த தலையை தேய்த்துக் கொண்டே இவளை பாவமாய் பார்த்தாள்.
"படுபாவி வலிக்குதுடி" அழுவது போல் மூஞ்சை வைத்திருந்தவளைக் கண்டு சிரித்தவள் தானே அவள் தலையை தேய்த்துவிட மதுவும் வாகாக அவள் மடியில் படுத்துக் கொண்டாள்.
இதுவரை அழைப்பேசியில் மாத்திரம் தன் அக்கா கூறி கேட்ட அவர்களின் நட்பினை இன்று நேரில் பார்த்திருந்த மலர்விழியின் முகத்திலும் புன்னகை எழ இருவரையும் பார்த்தவள்
"எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்து பொறாமையா இருக்குக்கா" என செல்லமாய் சிணுங்கிட ,
சின்னவளின் பேச்சில் மற்ற இருவரும் சிரித்துக் கொண்டனர்.
மதுவோ திடீரென்று ஏதோ தோன்றியவளாய் "ஏன் அகி உங்க குடும்பத்த பத்தி நீ நிறைய சொல்லியிருக்க அப்பிடி இவ்வளவு பாரம்பரியமும் கட்டுப்பாடுனு இருக்குற குடும்பம் எப்பிடி பொண்ணுங்கள படிக்க வைக்குறாங்க. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு" என்றாள்.
"மதுக்கா இவ்வளவு கட்டுப்பாடு இருக்குற எங்களுக்கு இந்த படிப்பு மட்டும் தான் சுதந்திரம் அது கிடைச்சதே எங்களுக்கு வரம் தான். பெரியம்மா அப்போவே பீ காம் படிச்சு முடிச்சவங்க அதனால தான் படிப்போட அருமை புரிஞ்சு படிக்க பெர்மிசன் கொடுத்திருப்பாங்க" என்றாள் சின்னவள்.
"ஹேய் விழி நிஜமா சொல்ற? அப்பா வர போறாங்களா" துள்ளிக் குதிக்காத குறையாய் அவளிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள் பெண்.
எத்தனை வருடத்தின் பின் தந்தையை காணப் போகிறோம் என்ற சந்தோஷம் அவள் முகத்தில் விரவிக்கிடந்தது.
எழிலேந்திரன் ராஜேஸ்வரியின் கணவர். எழில்வேந்தன் அகிலாண்ட நாயகியின் தந்தை.
எழிலேந்திரன் பிறந்தது கிராமத்தில் என்றாலும் தன் படிப்பு மற்றும் தொழில் திறமையினால் படிப்படியாக முன்னேறி தன் தொழில் வட்டத்தை சிறுசிறுக பெருக்கி தனக்கென ஓர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.
அவரின் உழைப்பின் பலனாய் எத்தனையோ கோடிக் கணக்கான சொத்துக்கள் அவர்களிடத்தில் ஒருபக்கம் இருக்க பாரம்பரிய சொத்துக்கள் ஒரு புறம் நிறைந்து தான் இருந்தது.
அவரின் தொழில்கள் அனைத்தும் வெளிநாடுகளிலே இருக்க அவரும் ஊர் சுற்றும் பறவையாய் தன் தொழிலுக்காக நாடு நாடாய் பறந்தவர் இறுதியில் முழு வெளிநாட்டு வாசியாகித் தான் போனார்.
அவ்வப்போது ஊரின் முக்கிய நிகழ்வுக்காய் வந்து செல்பவர் வருடத்தின் முக்கால்வாசி வெளிநாடே வசிப்பிடமாகிப் போனது.
அருகிலிருந்த தாயின் அன்பு கிடைக்காதது போலவே வேலை பணம் என பணத்தின் பின்னே ஓடும் பிஷ்னெஷ்மேனான தந்தையின் அன்பும் அவளுக்கு கிடைக்காது தான் போனது.
இருந்தும் சிறு வயதிலிருந்தே அவ்வப் போது ஊருக்கு வந்து போகும் தந்தை தரும் சிறு அன்பில் வருடக் கணக்காக தவமிருந்தவள்.
இப்போதும் அதே எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தாள்.
"அப்பா மட்டும் தானா வாறாங்க கவி அண்ணா ப்ரியா அண்ணி எல்லாம் வரலையா" என்றாள்.
"ம்ம் அண்ணாவும் அண்ணியும் தான் வாறாங்க அக்கா. அண்ணிக்கு இது ஏழாவது மாசம்ல ஊர்ல வளகாப்பு வெச்சு இங்கே பிள்ளைபேறு பார்க்கனும்னு பெரியம்மாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"
கவியரசன் கஜேந்திரன் பாக்யவதியின் மூத்த மகன் மலர்விழியின் அண்ணன்.
கவியரசன் எழிலேந்திரன் தொழிலை கவனித்துக் கொள்வதற்காக திருமணம் முடித்த கையோடு மனைவியையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றவன் இதோ இப்போது தான் ஊர் திரும்புகிறான்.
அண்ணணும் வருகிறான் என்பதில் அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
பாசத்தை வெளிப்படையாய் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவர்களிடத்தில் வெறுப்பும் இல்லை என்பது தான் உண்மை. பேசிக் கொள்வார்கள் சிரித்துக் கொள்வார்கள் என்ன மற்றைய குடும்பங்களை போன்று உறவுகளிடையே அந்நியொன்னியம் மட்டும் இல்லை.
மூன்று பெண்களும் பேசிப் பேசியே பாதி இரவைக் கடத்திருந்தனர்.
நள்ளிரவை தாண்டிய வேளையில் மலர்விழியோ தூக்கம் வருவதாக கூறி அவளறைக்குச் சென்றிட எஞ்சிய இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டே தூங்கிப் போயினர்.
அடுத்த நாள் அதிகாலை விடியலில் நான்கு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டாள் நாயகி.
இரவு தாமதமாக தூங்கினாலுமே அதிகாலை விடியலிலே எழ வேண்டும் என்ற தாயின் கட்டளைக்கு ஏற்ப எழுந்தவள் குளித்துவிட்டு அறையை விட்டு வெளியேறி சமையலறை நுழைந்து கொண்டாள்.
அங்கோ ஏற்கனவே எழுந்து காபி போடுவதற்காக நின்று கொண்டிருந்த பாக்யவதி இவளைக் கண்டு "எழுந்திட்டியாமா இரு காபி போடுறேன்" என்க.. அவளும் புன்னகைத்தவள் "இல்ல சித்தி நான் முதல்ல கோலம் போட்டு முடிச்சிட்டு அப்புறமா குடிச்சிக்கிறேன்" என்றவள் கோல மாவு டப்பாவை எடுத்துக் கொண்டு வாசலுக் சென்றாள்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் வீசிய இளம் தென்றல் காற்றின் வாசனையை ஆழ்ந்து சுவாசித்து இரைப்பை நிறைந்த காற்றின் குளிர்ச்சியில் அகமும் முகமும் விகாசிக்க வாசலில் கோலம் போட ஆரம்பித்தாள்.
வாசலை நிறைத்து கோலத்தை போட்டு முடித்தவள் தன் கைவண்ணத்தில் அழகுற மின்னிய கோலத்தை ஓர் நிமிடம் நின்று ரசித்தவள் வீட்டினுள் நுழைந்தாள்.
"ரொம்ப அழகா இருக்கா அகிலாமா" என்றவர் அவள் முகத்தை வருடி நெற்றி முறிக்க பெண்ணவள் முகமும் வெட்கத்தில் சிவந்து போனது.
"நான் நீங்க தூக்கி வளர்த்த பொண்ணு.. ஆனா நீங்க என்னடான்னா இப்போ தான் என்ன புதுசா பார்க்குறப் போல பேசுறீங்க சித்தி" என்றாள் சிரித்தபடி.
"ம்ம் ஆமா நான் தூக்கி வளர்த்த பொண்ணு தான் ஆனா இப்போ பெரிய பொண்ணாகிட்டா அழகான்னா பொண்ணாவும் ஆகிட்டா" என்றார்.
அவளோ எதுவும் பேசாது சிரித்தபடி காபியை குடிக்க அவரும் மற்றவர்களுக்கான காபியை போடத் தொடங்கினார்.
அதே நேரம் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டைகளில் கேட்ட சத்ததில் நாயகியோ வீட்டின் பின்புறம் சென்றாள்.
ஆடு மாடு கோழி என ஒரு சிறு பண்ணையே அந்த வீட்டின் பின்புறம் அமைந்திருந்தது.
விடிந்து விட்டது என்று அறிவிப்பாய் பசியில் சத்தமிட்ட மாடுகளுக்கு அங்கிருந்த வைக்கோல்களை எடுத்து போட்டவள் அதற்கான தண்ணீரை பிடித்து விட்டு திரும்ப அங்கு தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியொன்றைக் கண்டு அவள் இதழ்கள் அழகாய் விரிந்து கொண்டன.
தாய் ஆடு தூங்க குட்டியோ தாய்க்கு மீது குறுக்காக துள்ளிக் கொண்டிருந்தது.
அதை பார்க்கும் போதே தூக்க வேண்டும் என்ற ஆசை எழ அதை நெருங்கினாள் பெண்.
தன்னை நெருங்கியவளைக் கண்ட குட்டியும் தன்னோடு விளையாட துணை கிடைத்துவிட்டது என எண்ணியதோ என்னவோ அவள் கையில் சிக்காமல் ஓட்டம் காட்ட ஆரம்பித்தது.
அதன் ஓட்டத்தில் தானும் அதன் பின்னே ஓடியவள் வாசல் பக்கம் சென்றிருக்க குட்டியோ போகும் வழி தெரியாது ஓரிடத்தில் நிற்கவும் "மாட்னியா குட்டி" என்று சொல்லிக் கொண்டே குனிந்து அதை தன் கைகளில் அள்ளியிருந்தாள்.
"எனக்கே ஓட்டம் காட்றீயா நீ" அதனோடு பேசியபடியே அதன் தலையை தடவி விட்டு திரும்பியவள் தன்னெதிரே மார்பிற்குக் குறுக்கே ஐய்யனார் கணக்காய் உயர்ந்து நின்ற உருவத்தை அந்த இருள் பிரியும் பொழுதில் கண்டு ஓர் நொடி அதிர்ந்து போனவள் பயத்தில் ஓர் எட்டு பின்னே வைத்ததில் தடுமாறிட எட்டி தன் முரட்டு கரம் கொண்டு அவளைப் பற்றியிருந்தான் எதிரில் நின்றவன்.
ஆணவனின் தொடுகையில் மேலும் அதிர்ந்து விலக முயன்றவளைக் கண்டு என்ன நினைத்தானோ தன் கையை விலக்கிக் கொண்டவன் அவளைப் பார்த்தான்.
அவளும் அவனையே பார்த்தவள் இப்போது சிறு வெளிச்சத்தில் தெளிவாய் தெரிந்த அவன் முகம் கண்டு மேலும் அதிர்ந்து போனாள்.
'அய்யோ இவரா?' என அவள் மனமோ அதிர்ந்து கேட்க அவளோ நம்ப முடியாதவளாய் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தாள் அவனே தான்.
அவள் மீண்டும் பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய அதே முகம் கண்டு அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றவளுக்கு சத்தியமாய் நம்பவே முடியவில்லை அவ்வளவு பெரிய பாக்ஸிங் சாம்பியன் தன் கிராமத்தில் தன் வீட்டின் முன் நிற்பதை.
இது கனவாக இருக்குமோ என்று மீண்டும் கண்களை தேய்க்க முயன்றவளை அவனின் சொடக்கொலி தடுக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஹேய் ஹலோ" என அவள் முகம் நேரே கையை ஆட்டியதில் தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல 'ஹாங்' என முளித்தவளைக் கண்டு அவன் இதழினோரம் சிரிப்பில் துடித்தது.
"ஹேய் சில்கி.. என்ன கண்ண திறந்துட்டே தூங்குறியா?" என்றவனின் கிசுகிசுப்பான குரலில் மேலும் அதிர்ந்தவள் அவனை பார்க்க அதற்கும் அவன் ஏதோ சொல்ல வருமுன்னே அவன் பின்னே ஒலித்தது எழில்வேந்தனின் குரல்.
"ஹலோ ருத்ரா உள்ளே வாங்க" என்று அவனை வரவேற்றவன் விழிகளோ அங்கே நின்ற தங்கையை கண்டு சுருங்கி மீள அவளிடம் "அகிலா நீ என்ன பண்ற இங்க" என்றவன் பார்வை இப்போது அவள் கையிலிருந்த ஆட்டுக்குட்டியில் பதிந்தது.
அதில் புரிந்து கொண்டவன் அவளிடம் "அத பின்னாடி விட்டுடு உள்ளவா.." என்றுவிட்டு ருத்ராவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல நாயகியோ அண்ணணுடன் போகின்றவனையே அதிர்ச்சி அகழாதவளாய் பார்த்திருந்தாள்.
அவள் பார்வையை அறிந்தானோ ஆணவனவனும் வீட்டினுள் நுழையும் நொடியில் அவளை திரும்பி பார்த்தவன் ஒற்றைக் கண்ணடித்து இதழ் பிரித்து சிரித்தபடி திரும்பிக் கொள்ள அவன் செய்கையில் உறைந்து நின்றாள் பெண்.
மாயோள் - 06
மூச்சுவிடும் சிலையென அந்த அதிகாலை கதிரோனின் செங்கதிர் தகிப்பில் செம்மஞ்ச வர்ணமாய் மேனி பளபளக்க நின்றிருந்த பெண்ணவளின் எண்ணங்கள் முழுவதும் ஆணவனிலேயே நிலைத்து நின்றது.
மாய தேவனாய் அவள் கண்முன் தோன்றி மயக்கும் கண்ணணாய் புன்னகை செய்து மாயமாய் மறைந்து போனானோ? கள்வன் அவன் கற்பனை உருவம் கண்டு தனக்குள் சிக்கித் தவிக்கிறேனோ? என மனதின் கேள்விகளுக்கு விடை தெரியா பாவையாய் சமைந்து நின்றவளின் எண்ணம் களைக்க விளைந்தது அவள் கையிலிருந்த ஆட்டுக்குட்டி.
அதன் மென்மையான நெளிவிலும் மெல்லிய கத்தல் ஒலியுலும் கவனம் களைந்தவள் தன் கையிலிருந்த குட்டியை குனிந்து பார்த்தாள். அதுவோ என்னை விடேன் எனும் விதமாய் அவள் கையில் இருந்து தப்பிக்கும் வழி தேட அந்தக் குட்டியின் சேட்டையில் அவள் இதழோரம் புன்னகைத்தது.
"போகனுமா குட்டிக்கு" அதன் தலையை தன் மென்கரம் கொண்டு வருடிவிட்டவள் அதை கீழிறக்கிவிட அதுவோ துள்ளிக் குதித்து ஓடியது தாயின் இருப்பிடம் தேடி.
வீட்டின் புறம் பார்வையை திருப்பிய பாவைக்கு உள்ளே செல்ல ஒருவித தயக்கம் அவளறியாது ஒட்டிக் கொள்ள தயங்கி நின்றாள்.
'அவன் எப்படி இங்கே? அதுவும் தன் வீட்டில்? தான் கண்டது நிஜம் தானா? இல்லை சில நாட்களாகவே கனவில் வந்து தன்னை தொல்லை செய்யும் காளையவனின் எண்ணங்களின் அலைவரிசையில் உண்டான கற்பனையா?' என எண்ணற்ற கேள்விகள் அவள் மண்டையை குடைய உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்ற மனதில் பட்டிமன்றம் நடத்தியவள் கால்கள் அன்னிச்சையாக வீட்டினுள் அடியெடுத்து வைத்தது.
வீட்டின் கூடத்தில் போட்டிருந்த அகன்ற சோபாக்களில் ஒற்றையாய் போடப்பட்டிருந்த சோபாவில் தோரணையாய் அமந்திருந்தான் அவள் எண்ணங்களின் நாயகன். நிமிர்ந்த தோரணையோடு அமர்ந்திருந்தவன் பார்வை முழுவதும் அவள் மீதே.
உச்சி முதல் பாதம் வரை அவன் பார்வை அவள் மீது அலை பாய்ந்தது.
சிறிதும் விரசமமில்லாத பார்வை. கலைஞன் வரைந்த ஓவியத்தை ரசிக்கும் பாவனை. சிற்பி வடித்த சிற்பத்தை ரசிக்கும் பாவனை போல அவளை ரசித்தவன் விழிகளோ அவள் விழியோடு மோதிக் கவ்வி நிற்க அந்த பார்வையின் வீச்சில் பாவையவள் மனமோ பட்டாம்பூச்சியாய் படபடவென்று அடித்துக் கொண்டது.
நொடி நேரம் அவன் பார்வையில் கட்டுண்டு கிடந்தவள் வேகமாய் தன் பார்வையை அகற்றிக் கொண்டு சமையலறையினுள் நுழைந்து கொண்டவளுக்கு மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
'என்ன பார்வை இது' என்ற மனதின் குரலோடு சேர்ந்து அன்றைய நாளின் நிகழ்வுகளும் மனதினுள் அணைகட்டி நிற்க அவளுக்கோ எங்கு அவன் தன்னை தெரிந்த போல் காட்டி விடுவானோ என்ற புதுப் பயமும் மனதை கவ்விக் கொண்டது.
"கடவுளே அன்னைக்கு அந்த ஸ்டேடியம்ல வெச்சு பார்த்தத அண்ணன்கிட்ட சொல்லிடுவாங்களா? ஏற்கனவே அண்ணன் வேற மதுவ பார்த்து அவ தான்னு கண்டு பிடிச்சிட்டாங்க இப்போ இவங்களும் ஏதாச்சும் சொன்னா அண்ணா கண்டுபிடிச்சுடுமே" என்றவளின் மனப் போராட்டத்தை களைக்கும் விதமாய் வெளியே அவள் அன்னையின் குரல் ஆர்ப்பாட்டாமாய் ஒலித்தது.
"வாங்க தம்பி.. பயணம் எல்லாம் எப்படி போச்சு" என்ற தாயின் வரவேற்புக் குரலைக் கேட்ட நாயகியின் விழிகள் ஆச்சர்யமாய் விரிந்து கொண்டது.
'அய்யோ அப்போ இவங்க அம்மாக்கு தெரிஞ்சவங்களா?' மனதோடு கேட்டுக் கொண்டவள் நெஞ்சம் படபடக்க காதைத் தீட்டி அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தாள்.
"என்ன தம்பி வெள்ளனவே வந்துட்டிங்க அம்மா அப்பா எல்லாம் வரலையா?"
மாடிப்படியில் தோரணையாய் இறங்கி வந்த ராஜேஸ்வரியை கண்டவன் விழிகள் அவரையே வெறித்தது.
அவன் மனதில் ஆறாது பதிந்து போன அவன் வாழ்வில் என்ஞாற்றும் மறக்க எண்ணாத மறக்க முடியாத அவர் முகம் இத்தனை நாள் நிழலுருவமாய் அவன் நினைவில் கரையாய் படிந்திருந்த அந்த முகம் இன்று நேரில் கண்டதும் அவன் உடல் இறுக வெறித்தவன் அவரின் அடுத்தடுத்த கேள்விகளில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தான்.
"ப்ளைட் கொஞ்சம் டிலே ஆகிடுச்சு அதனால அவங்களால என்னோட வர முடியல மோர்னிங் எய்ட் க்ளொக்கு இங்க ரீச் ஆகிடுவாங்க" என்றவனின் பதிலில் அலட்சியமோ அசூசையோ எதுவோ ஒன்று அவன் பேச்சிலே உணர்ந்தவள் முகம் சுருங்கிப் போனாள்.
'ஏன் என்னவோ மாதிரி பேசுறாங்க' மீண்டும் தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள் பெண்.
இரண்டே இரண்டு சந்திப்பில் அவன் குரலிருந்த மாற்றத்தைக் கூட தெள்ளத் தெளிவாய் கண்டு கொண்டு முகம் சுருங்கிய மனதின் போக்கை அக்கணம் அவள் அறிந்திருக்கவில்லை.
தோழியின் மூலம் அவன் பற்றி அவளறிந்த நல்ல விசயங்களும் அதன் பின்னே அவளாகவே தேடித் தேடி ஒற்றை சந்திப்பில் தன் மனதில் சிறு சலனத்தை வித்திட்டவனைப் பற்றி அறிந்து கொண்ட தகவல்களிலும் அவளறியாமலே அவன் மீது உண்டான ஈர்ப்பில் அவன் குரலில் உண்டான ஒதுக்கத்தையும் கண்டு கொண்டாள் பெண்.
வெளியில் அவன் பதிலை கேட்ட ராஜேஸ்வரியும் "ஆஹ் அப்போ சரி தம்பி நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. வேந்தா உன் அறையில தங்கவெச்சிக்கோ அவங்க எல்லாம் வந்தப்புறம் பண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்" என மகனிடம் கட்டளையிட்டவர் அவனிடம் தலையசைத்து விடைபெற்று தன்னறைக்குள் நுழைந்து கொண்டார்.
அன்னை கூறிச் சென்றது போல அவனை அழைத்துக் கொண்டு தன்னறை நோக்கிச் செல்லும் முன் வேந்தனோ "சித்தி காபி ரூம்க்கு கொடுத்து விடுங்க" என கூறிச் சென்றிருக்க அவளோ கைகளை பிசைந்தபடி சமையலறையில் நின்றிருந்தாள்.
பாக்யவதி வெளியே மாட்டுக் கொட்டகையில் மாடுகளுக்கான தீவனம் போடச் சென்றிருக்க அவர் இதை அறிந்திருக்கவில்லை.
"அய்யோ சித்தி வேற வெளியே இருக்காங்க இப்போ என்ன பண்றது" கைகளை பிசைந்தபடி நின்றவளை பார்த்தவாறு அங்கு வந்து சேர்ந்தார் பாக்யவதி.
"என்னடா அகிலா என்ன ஒருமாதிரியா இருக்க" என்ற சித்தி பாக்யவதியை கண்டவள் நிம்மதிப் பெருமூச்சுடன்
"சித்தி யாரோ வந்திருக்காங்க அண்ணா ரூம்ல ப்ரெஷ் ஆக கூட்டிட்டு போயிருக்கு காபி ஒன்னு போட்டு வர சொல்லிச்சு" என கூறியவள் மேலும் "நேத்து நைட் விழி கூட சொன்னா யாரோ விருந்தாளிங்க வர்றதா யாரு சித்தி அது" கேள்வியாய் கேட்டு வைத்தாள் பெண்.
"அட ஆமாடா அகிலா நானும் சொல்ல மறந்துட்டேன் பாரு இன்னைக்கு விருந்தாளிங்க வறாங்க மாமாவோட பிரெண்ட்டாம் பெமிலியா வர்றதா சொல்லியிருந்தாங்க" என்றவர் "எல்லாரும் வந்துட்டாங்களா அகி நீ பார்த்தியா?" என்றவரிடம் இல்லையென தலையசைத்தவள் "ஒருத்தர் தான் வந்திருக்காங்க சித்தி மத்தவங்க வற லேட் ஆகுமாம்" என்றதும் தலையாட்டியவர் வேகமாய் ஒரு காபியை கலந்து அவள் கையில் திணிக்க அவளோ திருதிருவென முழித்து நின்றாள்.
"போடா இத கொண்டு போய் கொடுத்து விடு நான் சமையலை ஆரம்பிக்குறேன்" என்றவர் காலைநேர சமையலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட அவளோ அவரிடம் மறுப்பு கூற முடியாது தன் விதியை நொந்தபடி தன் அண்ணன் அறைக்கு செல்ல மாடியேறினாள்.
எத்தனை மெல்லமாய் நடந்த போதிலும் நொடியில் வந்துவிட்டது போன்ற உணர்வில் அண்ணன் அறை முன்னே வந்து நின்றவள் தயங்கித் தயங்கி அறைக்கதவை தட்டி கதவு திறக்க காத்திருக்க அதுவோ திறவாது அப்படியே இருக்கக் கண்டு மீண்டும் கதவின் மீது கைவைத்திட கதவோ தானாக திறந்து கொண்டது.
தயக்கத்துடனே அறைக்குள் நுழைந்தவள் அறையில் யாரும் இல்லாதது கண்டு நிம்மதி பெருமூச்சொன்றை வெளியிட்டவள் அங்கிருந்த மேசையில் காபி தட்டை வைத்துவிட்டு திரும்ப அவளெதிரே மார்பிற்குக் குறுக்கே கைகட்டி நின்றவனைக் கண்டு விழிகள் விரிந்திட அதிர்ந்தாள் பெண்.
அவனோ மாயக்கண்ணணாய் புன்னகை சிந்தியவன் தன்னையே விழி சிமிட்டாது பார்த்து நின்ற பெண்ணவள் முன்னே சொடக்கிட்டு "ஹலோ சில்கி" என்றதும் நினைவு வந்தவளாய் திடுக்கிட்டு அவனைப் பார்க்க அவனோ மாறா புன்னகையுடன் "என்ன நைட்டெல்லாம் தூங்கலையா பார்க்குற நேரமெல்லாம் நின்னுகிட்டே தூங்குற?" சிறு நகைப்புடன் அவன் கேட்டதும் அவள் முகத்திலே வெட்கத்தின் சாயல்.
"ச்சேஹ் இப்பிடியா மொக்க வாங்குவ" என தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவள் மீண்டும் அவனின் சில்கி என்ற அழைப்பில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"ஓய் ஹலோ என்ன நீ அடிக்கடி ட்ரீமுக்கு போயிடுற" என்ற அவன் கேள்வியில் அவளுக்கோ அவன் முகம் பார்க்க முடியாமல் போக தலையை குனிந்து கொண்டவள் "காபி" என கைகாட்டிவிட்டு திரும்ப செல்ல முயல அவனோ "ஆமா சில்கி அன்னைக்கு என்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினல்ல பத்திரமா வெச்சியிருக்கியா?" என்றவன் கேள்வியில் படக்கென்று அவள் புறம் திரும்பியவள் "எ..என்னைத் தெரியுமா?" என்றாள்.
அவனோ "என்ன" எனக் கேட்க வேகமாய் தலையசைத்தவள் அங்கிருந்து நகர முயல அவனோ "நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலியே" என்றான்.
"அ..அது நா..நான்" தடுமாற்றமாய் அவன் முகம் பார்க்கத் தயங்கியவளைப் பார்த்தவன் "சரி விடு நீ இங்க என்ன பண்ற?" என்ற அவன் கேள்வியில் அவளோ "அத நான் தான் கேக்கனும்" என்றாள் பட்டென்று.
"ஓஓ சரி அப்போ நீயே கேளு" சாதாரணமாய் தோள்குலுக்கி அவன் கூறிட அவளோ 'ஹாங்' என அவனைப் பார்த்தவள் அவன் இதழோரச் சிரிப்பில் சிறு முறைப்புடன்.
"நீங்க இங்க எப்பிடி வந்திங்க? " என கேட்க அவனோ "சென்னைல இருந்து கார்ல வந்தேன்" என்றதும் அவனை முறைத்தவள் அங்கிருந்து நகர முயல அவளை தடுத்தவனாய் "ஓகே ஓகே கூல் சில்கி" என்றான்.
அப்போது தான் அவன் தன்னை பார்த்த நிமிடத்திலிருந்து இதே போல் அழைக்கிறான் என்றுணர்ந்தவள் "அப்படி கூடாதீங்க" என்றாள் மறுப்பாய்.
எங்கே வீட்டினர் முன்னே அவ்வாறு அழைத்து தன்னை மாட்டிவிட்டுவிடுவானோ என்ற பயத்தில் அவள் கூற அவனோ குறும்பாய் சிரித்தவன் "யூ நோ அன்னைக்கு உங் கைல ஆட்டோகிராப் போடும் போது ஐ பீல் லைக் தட்.. யுர் ஸ்கின் லைக் சில்க் ஐ மீன் ரொம்ப சாப்ட்டா பட்டு போல இருந்திச்சு அப்போவே என் மைன்ட்ல உன் பேஸும் இதோ இந்த நேமும் பிக்ஸ் ஆகிட்டு" என்றவனிடம் என்ன பதில் சொல்ல என தெரியாது முளித்தவள் இவன் தன்னை இப்படி அழைப்பது சரியில்லை என மூளை உணர்த்த "அப்படி கூப்பிட வேணாம்" என்றாள் மீண்டும்.
அவனோ அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன் "ஓகே அப்போ எப்பிடி கூப்ட பேபி ஏஞ்சல் கனி ஸ்வீர்ட்ஹார்ட்.. ப்ளா ப்ளா இப்பிடி எதுவும்" என அவன் பாட்டில் கூறிச் செல்ல அவளோ பதறித்தான் போனாள்.
"அய்யோ அய்யோ சத்தம் போடாதீங்க ப்ளீஸ்.. இப்பிடியெல்லாம் நான் கூப்ட சொல்லவேயில்லை" என பதறியவளுக்கு அண்ணணின் அறையிலிருந்து புதிய ஆடவனுடன் இப்படியான பேச்சை வளர்ப்பதை எண்ணி பயம் வர அவளோ அங்கிருந்து வெளியேற முயலும் முன் "வெய்ட் சில்கி" என அவளை தடுக்கும் முகமாய் அழைத்தான்.
அவன் அழைப்பில் திரும்பி அவனை முறைத்தவள் பார்வையில், "ஓகே ஓகே அப்பிடி கூப்டல உன் நேம் சொல்லு அப்படியே கூப்டுறேன்" என்றவன் அவள் முகம் பார்க்க அவளோ முதலில் தயங்கியவள் பின் தன் பெயர் கூறிட அவனோ அவள் பெயரை உச்சரித்து பார்த்தவன் பின் "நைஸ் நேம்" என்றான்.
அவளோ எதுவும் பேசாது அமைதியாய் அங்கிருந்து செல்ல முயல. அவனோ "என்கிட்ட ஏதோ கேட்டல்ல பதில் தெரிய வேணாமா" என்றதும் நின்று அவனைப் பார்த்தவள் "என்ன" எனக் கேட்டாள்.
அவளைப் பார்த்தவாறே அங்கே சுவரில் சாய்ந்து நின்றவன் "நீங்க எப்பிடி இங்க வந்தீங்கன்னு கேட்டியே பதில் வேணாமா" என்கவும் அவளுக்கும் அந்தக் கேள்விக்கான பதில் அறிய வேண்டி அவனைப் பார்த்து நின்றாள்.
"எழிலேந்திரன் அங்கிள் தான் என்ன ஊருக்கு வர சொல்லி இன்வைட் பண்ணாங்க சோ அதனால தான் இங்கே வந்தேன்." என்றான்.
"அப்பா.. அப்பாவ எப்பிடி தெரியும் உங்களுக்கு" என்றாள் ஆர்வ மிகுதியில்.
சித்தி தந்தை ப்ரெண்ட் குடும்பத்தோடு வருகை தர இருக்கிறார் என்று கூறியிருந்தாலும் அவன் யாராக இருக்கும்? தந்தையை தெரியுமா? என அறிய ஆவல் கொண்டு அவனிடமே கேட்டிருந்தாள்.
"ம்ம் பிஷ்னெஷ் பார்ட்னர்ஸ் வெல்விசர் நலன் விரும்பி, வருங்கால மாமானார் இப்படி நிறைய சொல்லலாம்" என கூறிக் கொண்டே போனவனின் வார்த்தைகளில் இவளோ முழித்து நிற்க அவனோ புருவம் உயர்த்தி என்ன என்ற ரீதியில் அவளைப் பார்த்தான்.
'என்ன சொன்னான் இவன்.. என் காதில் தான் தவறாய் ஏதும் வீழ்ந்ததோ?' என முழித்து நின்றவள் பார்வையில் இதழ் மடித்து சிரித்துக் கொண்டவனோ மீண்டும் சொடக்கிட்டு அவள் அதிர்ந்த நிலை களைத்தவன்.
"சில்கிய விட உனக்கு ஸ்லீப்பிங் பியூட்டினு நேம் கரெக்ட்டா இருக்கும் போல அடிக்கடி கண்ண முழிச்சுகிட்டே தூங்குற" என்றவன் கேலியில் அவனை முறைத்தவள் அறை விட்டு வெளியேறும் கணம் ஏதோ தோன்றியவளாய் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளையே சுவரில் சாய்ந்து ஒற்றைக்காலை மடித்து வைத்து நின்ற தோரணையுடன் அவளை பார்த்து நின்றான்.
சில நொடி அவனிடம் ஏதோ சொல்லத் தயங்கியவள் பின் "எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என ஒருவழியாய் கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்க அவனோ நீயே சொல் என்பது போல அவளை பார்த்து நின்றான்.
"அன்னைக்கு நீங்க ஸ்டேடியம்ல வெச்சு என்னை பார்த்தத மறந்துடுங்க ப்ளீஸ்" கண்கள் சுருக்கி கெஞ்சலாய் அவள் கேட்டிட அவள் விழிகளிலே தன் விழிகளை பதித்து நின்றவன் வேண்டுமென்றே "இல்லையே எனக்கு நியாபகம் இருக்கே நான் ஏன் மறக்கனும்" என்றான்.
"அய்யோ உங்கள மறக்க சொல்லல அது எப்பிடின்னா நான் இல்ல நீங்க என்ன முன்னாடி பார்த்த போல காட்டிக்காதிங்க"
என்றவள் பார்வையில் தொக்கி நின்ற மிதமிஞ்சிய கெஞ்சலில் அவனோ "ஓகே பட் வன் கண்டிஷன்" என்றவன் நிறுத்தி ஏதோ சொல்ல அவள் விழிகள் விரிய அறையைவிட்டு வெளியேறினாள்.
போகும் அவளையே குறுஞ்சிரிப்புடன் பார்த்து நின்றவன் மனதிலோ முற்று முழுதாய் அவன் புன்னகைக்கு மாறான எண்ணங்கள் மட்டுமே அணிவகுத்து நின்றன.
"வில் யூ மேரி மீ" குறும்பு கூத்தாட இதழோடு இணையாக அவன் கண்களும் சிரித்திட தன்னிடம் கேட்டவனின் வார்த்தையும் புன்னகை முகமுமே அவள் எண்ணலைகளைச் சுற்றி சுழற்றிட தன் போக்கில் தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள் பெண்.
அவனைக் கண்ட நொடியிலிருந்து தன்னை அதிர வைத்து உறைய வைக்கும் அவன் சீண்டலில் இப்போதும் உறைந்து போனவளாய் அறைக்குள் நுழைந்து கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவள் மனம் அவனுடனான உரையாடலில் லயித்தது.
"ஏன் என்னிடம் அப்படி கேட்டார்? என்னைச் சீண்ட நினைக்கிறாரா? இல்லை நிஜமாலுமே அந்த எண்ணத்தில் தான் என்னிடம் கேட்டாரா? அதெப்படி பார்த்து இரண்டாவது சந்திப்பிலே தன்னிடம் இப்படியெல்லாம் கேட்கலாம்?" என மனதில் அணிவகுத்து நின்ற பல கேள்விகளுக்கு விடையறியாத பெண் மானாய் தவித்திருந்தவளின் நினைவை களைத்தது அவளருகே தூங்கத்தில் புரண்டு படுத்த மதுராக்ஷியின் அசைவு.
அதில் தன் எண்ணங்களை எட்ட நிறுத்தியவள் தோழியிடம் நடந்ததைக் கூற எண்ணி மனம் பரபரக்க அவளை எழுப்பத் தொடங்கினாள்.
"ஹேய் மது மது எழுந்துருடி உன்கிட்ட முக்கியமான விசயம் சொல்லனும் எழுந்துருடி" வேகமாய் அவளை போட்டு உலுக்கியும் நான் எழுவேனா என அழிச்சாட்டியம் செய்பவளாய் முகத்தை மறுபக்கம் திருப்பி அவள் மேலே காலைத் தூக்கி போட்டபடி தூக்கத்தை தொடர்ந்தாள் மது.
"அடியேய் கும்பகர்ணி எழுந்துருடி. இங்க யாரு வந்திருக்கார் தெரியுமா? அவர் வந்திருக்காருடி" என அவசரத்தில் அவன் பெயர் சொல்லாது மொட்டையாய் அவள் கூறி வைக்க,
ஏற்கனவே அவள் உலுக்கலில் பாதி தூக்கம் களைந்தவளாய் "அடியேய் அகி எதுக்குடி இந்த நடுச்சாமத்துல என்ன போட்டு எழுப்புற, தூங்கவிடுடி" என்றவள் கொட்டாவி விட்டபடி விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.
"எத மிட்நைட்டா அடியேய் விடிஞ்சி பல மணி நேரமாகிட்டு எழும்புடி. அங்க யாரு வந்திருக்கா தெரியுமா? ஆரு.." என்றவளுக்கு பதட்டத்தில் அவன் முழுப் பெயர் வாயில் நுழையாது போக தடுமாறியவள் "ஆரு ஆரு" என்றே சொல்லிக் கொண்டிருக்க "ஆமாடி சூர்யா நடிச்ச படம் ஆறு அப்புறம் ஏழு" என்றவள் தூக்கத்திலும் தோழியை வாரிட,
பல்லைக்கடித்த நாயகியோ சுள்ளென்று ஓர் அடியை கொடுத்து "அடியேய் தூங்கு மூஞ்சி எழும்புடி. இப்போ நீ மட்டும் எழும்பலன்னு வை காலையில பட்டினி தான் கிடக்கனும் நாம" என்றதும்.
முதுகில் வீழ்ந்த அடியில் முதுகை தேய்த்தவாறே எழுந்தவள் கட்டிலில் சம்மணமிட்டவாறு அமர்ந்து தன்னெதிரே அமர்ந்திருந்தவளை தீயாய் முறைத்தாள் மதுராக்ஷி.
"பாவி பாவி நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன் செவனேனு ஜாலியா இருந்த என்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு இந்த கான்ஜூரிங் ஹவுஸ்க்கு கூட்டியாந்து நடுராத்திரில பேய் மாதிரி தூங்க விடாம என்ன டார்ச்சர் பண்றியடி" மூக்கால் அழுதுவிடுபவளைப் போல தன் போக்கில் புலம்பியவளைக் கண்டு கொள்ளென்று சிரித்து வைத்தாள் மற்றையவள்.
தலை களைந்து முகத்தில் மிஞ்சமிருந்த தூக்கத்தோடு புலம்பியவளின் தோற்றத்தில் அவளோ சிரித்தவள்
"இந்த கான்ஜூரிங் ஹவுஸ்க்கு ஏத்த கான்ஜூரிங் பேய போலவே இருக்கடி மது" என்றவள் மீண்டும் சிரிக்க காண்டாகிப் போனாள் மதுராக்ஷி.
"நான் பேயா உனக்கு" என கேட்டுக் கொண்டே அவள் மீது பாய்ந்தவளின் அடிகளை சிரிப்புடனே வாங்கிக் கொண்டவள் "அடியேய் மது இங்க யாரு வந்திருக்கா தெரியுமா?" என மீண்டும் ஆரம்பிக்க.
"யாரு தான்டி வந்திருக்கா சொல்லித் தான் தொலையேன்டி" சலிப்பாய் கூறியவளிடம் யார் என்று தெளிவாய் எடுத்துரைக்க தோழியை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தாள் மது.
"இல்ல நான் தூங்கிட்டு இருந்த இந்த கேப்ல எங்கயாச்சும் விழுந்து மண்டைல அடிபட்டுடுச்சான்னு பார்க்குறேன் அகி.. ஆர் யூ ஓகே பேபி" என சீரியசாய் ஆரம்பித்து நக்கலாய் முடித்தவளை நிமிர்ந்து பார்த்தவள் அவளை முறைக்க,
மதுவோ "ஓய் என்னா முறைப்பு. இந்தியாவோட டாப் டென் ரிச் மேன் தி நம்பர் வன் பாக்ஸிங் சாம்பியன் ஆருத்ர பைரவன் இந்த ஊருக்கு இதோ இந்த வீட்டுக்கு வந்திருக்காருன்னு சொன்னா உன்ன லூசுன்னு தான்டி நினைக்கத் தோணும்" தன்னை முறைப்பவளின் தாடையில் செல்லமாய் குத்தியவாறு கேலி பண்ணினாள்.
"ஹேய் நிஜமா தான்டி சொல்றேன் அவரு இங்க வந்திருக்காருடி நான் பார்த்தேன் என்கூட பேசினாரு தெரியுமா?" என்றவள் தன்னுடன் அவன் பேசிய அனைத்தையும் கூறியவள் இறுதியில் அவன் கேட்டதை மற்றும் தோழியிடம் சொல்லாது மறைந்திருந்தாள். காரணம் அவள் காதால் கேட்டது அவளுக்கே உண்மையா இல்லை தன் பிரம்மையா என்ற குழப்பமிருக்க அதைத் தவிர்த்து அனைத்தையும் அவளிடம் ஒப்புவித்தாள் நாயகி.
அனைத்தையும் கூறி முடித்து இப்போதாவது தான் சொன்னதை நம்பினாலா என ஆர்வமாய் பெண்ணவள் முகம் பார்த்தவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவள் "நீ சரியில்லடி சரியே இல்ல. அன்னைக்கு டோர்னமெண்ட் போய்ட்டு வந்ததுலயிருந்து ஒரு மார்க்கமாத்தான் இருக்கே. நான் கூட என் கிரஷ்ஷூக்கு அட்லீஸ்ட் நேர்ல பார்த்து ஹாய் சொன்னாலே போதும்ங்குற லெவலுக்ககு தான்டி கனா காணுறேன் ஆனா நீ என்னடான்னா விட்டா அவன் உன்கிட்ட ப்ரோபஸ் பண்ணினானு கூட சொல்லுவ போலயிருக்கே.. அய்யோ போற போக்க பார்த்தா என் கிரஷ்ஷ உன்கிட்ட இருந்து காப்பாத்தனும் போலயே ஓ மை கடவுளே " என நெஞ்சில் கைவைத்து விட்டத்தை பார்த்து புலம்பியவளின் புலம்பலில் சிறு கோபம் வந்தது மற்றையவளுக்கு.
அவள் தலையில் தட்டி தன்னை பார்க்கச் செய்தவள் "மது நிஜமா தான்டி சொல்றேன் அவரே தான் இங்க எங்க வீட்டுக்கு வந்திருக்காரு" என்றவள் மறுத்து பேசும்முன்னே "நீ இப்பிடி சொன்னால்லாம் நம்பமாட்ட போ போய் நீ முதல்ல குளிச்சுட்டு வா. நேர்லயே காட்டுறே" என்றவள் அவளை இழுத்து குளியறைக்குள் விட்டு அவளுக்காக காத்திருந்தாள்.
...
அதே நேரம் அவளுடன் சீண்டலாய் பேசிவிட்டு அந்தறையை நோட்டமிட்டவன் மனதிலோ பல விதமான எண்ணலைகளை மனதை தாக்கிட கண்களை இறுக மூடி தன்னுணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அறையிளிருந்த குளியறை நுழைந்து முகம்கழுவி வர அறைக்குள் நுழைந்திருந்தான் எழில் வேந்தன்.
"என்ன ருத்ரன் காபி குடிக்கலையா?" மேசை மீது அவள் வைத்துவிட்டுச் சென்ற காபியோ ஆறிப் போய் அப்படியேயிருந்தது.
"இல்ல எழில் நான் காபி குடிக்கமாட்டேன்" என்றான்.
அவன் பதிலில் அவனைச் சற்று வியப்பாய் பார்த்த எழிலோ அவனை ரெஸ்ட் எடுக்குமாறு கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிச் செல்ல அவனும் பயணம் செய்து வந்த களைப்பு இருந்தாலுமே ஏனோ தூங்க மனமில்லாது போக அந்த அறையை ஒட்டியிருந்த பால்கனி புறமாய் சென்றவன் கிழக்கு வானிலிருந்து புலர்ந்த செங்கதிரோனை பார்த்து நின்றான்.
சூரியனின் தகிப்பிற்கு இணையாக அவன் மனதில் தகிக்கும் வலியை போக்கிடவே வழி தேடி இங்கு அவன் வருகை அமைந்திருப்பது அவன் மட்டும் அறிந்த உண்மை.
..
தன்னறை விட்டு வெளியே வந்த எழிலோ கீழிறங்கி செல்ல அதே நேரம் தங்கள் அறையிலிருந்து வெளியேறி வந்தனர் நாயகி மது இருவரும்.
நாயகியோ மதுவோடு பேசியபடி நடந்து வர மதுவும் அவளோடு வாயாடிக் கொண்டே வந்தவள் எதிரில் தங்களையே பார்த்து நின்ற எழில்வேந்தனை கவனிக்கத் தவறினர் இருவரும்.
"ஏன்டி அகி நீ சொல்றது உண்மைனா அன்னிக்கு உன் நொண்ணன் அந்த ஸ்டேடியமுக்கு வந்தது ருத்ரன பார்க்கவா தான் இருக்குமோ?" என்று சரியாய் கேட்டு வைக்க நாயகிக்கும் அந்த கேள்வி இருக்கவே செய்ய "இருக்கலாம் மது" என்றாள்.
"ம்ம் என்னவோடி இந்த இருபது நாள் ரொம்ப போரிங்கா போகும்னு நினைச்சேன். பட் இப்போ ஹெப்பியோ ஹெப்பி என் க்ரஷ் கூட ஜாலியா என்ஜாய் பண்ணப் போறேன்" என்றவள் துள்ளலோடு ஒரு சுற்று சுழன்றி நிமிர்ந்திட எதிரிலே அவளைப் பார்வையாலே பஷ்பமாக்கி நின்றிருந்தான் எழில்வேந்தன்.
'ஆத்தாடி ஆத்தா ஏழரை சனி ஏர்லியாவே காட்சி தருதே அடக்கி வாசி மதூ' என்ற மனது கூச்சலிட்டாலும் வெளியில் கெத்தாய் அவனைக் கடந்து செல்ல,
தன்னை கடந்து சென்ற தங்கையை அழைத்தான் எழில்வேந்தன்.
அவன் அழைப்பில் நின்று திரும்பினர் இருவரும்.
"என்ன அண்ணா" அவன் திடீர் அழைப்பில் தயக்கத்தோடே அவன் முன்னே வந்து நின்றவள் அவனைக் கேள்வியாய் பார்த்து நிற்க அவனோ தங்கையையும் தங்கையின் அருகே நின்றவளையும் ஓர் பார்வை பார்த்தான்.
பாவாடை தாவணியில் குளித்து முடித்து தலையை தளர்வாய் பின்னலிட்டு கூந்தலில் பூச்சூடி மங்களகரமாய் கிராமத்துப் பெண்ணாய் அழகுடன் மிளிர்ந்த தங்கையையும் அதற்கருகே டாப் ஜீன்ஸ் சகிதம் காற்றில் விரித்த கூந்தலுடன் தோழியின் அவசரத்தில் பொட்டு வைக்க மறந்து வெறும் நெற்றியாய் காட்சியளிக்க நின்ற பெண்ணவளையும் நொடியில் ஒப்பிட்ட அவன் விழிகளோ மதுவை பார்த்து சுருங்கியது.
'இது என்ன கோலம்' என அவன் மனமோ அவள் தோற்றம் கண்டு சுணங்கியது.
முன்னரே அவள் மீது அவனுக்கு நல்லெண்ணம் இல்லாதிருக்க இப்போது அவளின் ஒவ்வொரு அசைவிலும் குறைபோட்ட கண்ணோடு நோக்க ஆரம்பித்திருந்தான்.
இதோ முதல் கட்டமாய் அவள் ஆடையிலிருந்தே தொடங்கியிருந்தது.
அவன் முகம் சுளிக்கும் அளவிற்கெல்லாம் நாகரீமற்று ஆடையணியவில்லை அவள். காலர் வைத்து முழங்கால் கீழ் தொட்ட முழுக்கை நீண்ட டாப்பும் அதற்கு தோதாக இறுக்கிபிடித்த ஜீன்ஸ்ஸூம் அணிந்திருந்தாள்.
தங்கையோடு அவளை ஒப்பிட்டவனோ தங்கை கிராமத்திலே படித்து வளர்ந்து நகரத்தில் படிக்கச் சென்றவள்.. அவளோ நகரத்திலே வளர்ந்த பெண் என்பதை அக்கணம் மறந்தவனாய் அவளை அழுத்தமாய் பார்த்தவாறு தங்கையிடம் திரும்பியவன்.
"அகிலா உன் ப்ரெண்ட்ட ஒழுங்கா ட்ரெஸ் பண்ணிக்க சொல்லு.. இது ஒன்னும் சிட்டி இல்ல ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டுகிட்டு தலையை சிலிப்பிக்கிட்டு திரிய. இது கிராமம் இங்க பூவும் பொட்டும் வெச்சு மங்களகரமா அடக்க ஒடுக்கமா தான் பொண்ணுங்க இருக்கனும். பொண்ணா லக்ஷணமா அதுக்கு ஏத்த போல துணி போட்டுக்க சொல்லு அதவிட்டுடு இப்பிடி வெறுமையா வந்து நின்னா விளங்குமா" கடுமையான குரலில் எச்சரித்தவனின் வார்த்தைகளை கிரகிக்கவே அவளுக்கு சில கணங்கள் எடுத்திருக்க. அது புரிந்ததும் நிமிர்ந்து அவனை தீப்பார்வையால் எரித்தவள் "யூ.." என விரல் நீட்டி அவனிடம் எகுறுமுன்னே பட்டென்று அவள் கரம் பற்றி தடுத்திருந்தாள் நாயகி.
பார்வையாலே தோழியை சமாதானம் செய்தவள் அண்ணணிடம் பார்வையை திருப்பி "சரிண்ணா நா..நான் பார்த்துக்குறேன்" என்றவள் தன் பிடியில் தன் அண்ணனை முறைத்து நின்ற தோழியை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்திருக்க.
அடுத்த கணம் ஆத்திரத்துடன் கட்டிலில் தொப்பொன்று வீழ்ந்தவள் புசுபுசுவென மூச்சுவாங்க அமர்ந்திருந்தாள்.
"மது" என பேச முயன்றவளை கைநீட்டி பேச வேண்டாமென்றவள் "நான் ஊருக்கு போறேன் அகி" என்றாள் இறுகிய குரலில்.
அவள் கூற்றில் பதறிய நாயகிக்கோ அவள் தன் அண்ணணின் வார்த்தையில் காயப்பட்டிருக்கிறாள் என புரிந்து அவள் மனமும் கலங்கிட "மது ஸாரிடி.. ஸாரி" என அவள் கரம் பற்றி முகம் பார்த்திட அவள் முகத்தை பாராது திருப்பிக் கொண்டவள் "ப்ளீஸ் அகி என்ன தடுக்காதே நான் போறேன்" என்றவளின் குரலின் உறுதியே அவள் மனதை வெளிப்படுத்த உள்ளம் கலங்கி நின்றாள் பெண்.
அவள் நன்கு அறிவாள் தோழியின் குண இயல்பைப் பற்றி.
எத்தனை கலகலப்பானவளோ அத்தனைக்கு அத்தனை கோபக்காரியும் கூட. ஒரு தடவை அவளை காயப்படுத்தினாள் தன்னை காயப்படுத்தியவர்களை வார்த்தையாலே குத்திக் குதறிவிடுவாள். அப்படிபட்டவள் இன்று தன் அண்ணணின் வார்த்தைக்கு பதிலடி கொடுக்காது அமைதியாய் இருப்பது தான் அங்கிருந்ததினாலே என்பது புரிய தோழியை கவலையாய் பார்த்தாள்.
"ஸாரிடி என்னால தான் எல்லாமே நான் தான் உன்ன கம்பெல் பண்ணி கூட்டி வந்துட்டேன்" என்றவள் கண்கள் கலங்க தோழியின் தோளோடு சாய்ந்து கொண்டவளுக்கு தன் வீட்டைப் பற்றி அறிந்திருந்தும் தோழியை அழைத்து வந்த மடத்தனத்தை எண்ணி நொந்து போனாள்.
அழைத்து வந்தும் கூட இங்கிருக்கும் சூழலை அவளிடம் எடுத்துரைக்காத தன்னையே திட்டிக் கொண்டவள் தோழியின் மனநிலை உணர்ந்து "இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கூட இருடி ப்ளீஸ்" என கண்களைச் சுருக்கி கெஞ்சியதும் அத்தனை நேரமும் மனதில் எரிமலைக் குழம்பாய் தகித்திருந்தவள் பெண்ணவளின் கெஞ்சலில் சற்றே மனம் இளக.
"இன்னைக்கு மட்டும் அதுவும் உனக்காக மட்டும் தான்" என்றதும் சுருங்கியிருந்த முகம் பிரகாசமாக அவளைக் கட்டிக் கொண்டாள் பெண்.
"பட் வன் கண்டிஸன் நான் இப்பிடித் தான் ட்ரெஸ் பண்ணுவேன். அத உன் நொள்ளக் கண்ணு நொண்ணண் கிட்ட சொல்லிடு" உர்ரென்று முகத்தை வைத்து கூறியவளின் தாடை பிடித்து ஆட்டியவள் "ஆளாளுக்கு கண்டிஷன் போடுறிங்கடி.. ம்ம் நான் தான் இப்போ பலியாடு போல மாட்டிக்கிட்டேன்" என தன் போக்கில் புலம்பிக் கொண்டவள் அவள் கூறியது போல அவளாடையில் எந்த மாற்றமும் செய்யாது அணிந்திருந்த ஆடைக்கு தோதாக துப்பட்டா ஒன்றை அணியச் செய்ய அதற்கு மறுத்தவளிடம் கெஞ்சிக் கொஞ்சி பல சமாதானம் செய்து அதோடு நெற்றியில் பொட்டிட்டு கூந்தலைப் பின்னி பூவைச் சூட்டிய பின்னரே அவளை அறைவிட்டு அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
தோழிகள் இருவரும் கீழிறங்கி வந்து சேர அங்கு நடுஹாலில் நாயகமாய் தோரணையாய் அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி.
அவரைக் கண்டதும் அமைதியாய் தோழியை அழைத்து சமையலறைக்குள் நுழைய முயன்ற நாயகியோ அன்னையின் அழைப்பில் அவரிடம் விரைந்தாள்.
"இங்க வா" என தனதருகே அழைத்ததும் அவளுக்குள்ளோ ஒரு புறம் சந்தோஷசச் சாரல் வீசிட மறுபுறம் என்றுமில்லாது இது என்ன புதுசா?" என மனம் கேள்வியாய் குடைய அன்னையை நெருங்கினாள்.
அவரோ தன்னருகே வந்து நின்ற பெண்ணவளிடம் தான் இடுப்பில் வைத்திருந்த சாவிக் கொத்தை எடுத்து நீட்டியவர் "என்னோட அறையில லாக்கர்ல புதுத்துணியும் நகையும் வெச்சியிருக்கேன் போ போய் எடுத்துக்கோ" என்றதும் அவளொன்றும் அப்படி மகிழ்ந்திடவில்லை வழமையாகவே இப்படித்தானே என்ற ரீதியிலே நின்றிருந்தவளுக்கு குழப்பமும் வந்தது.
ஒரு அன்னையாய் தன் பெண்பிள்ளைக்கு பார்த்து பார்த்து ரசிப்புடன் செய்ய வேண்டிய அனைத்துமே கடமையே என இத்தனை வருடங்களில் அவர் செய்வது என்றாலும் அதுவெல்லாம் ஏதாவது விசேஷங்களில் தான் செய்வார் ஆனால் இன்று ஏனோ என தனக்குள்ளே யோசித்தவள் அதே யோசனையோடே அன்னையின் அறை நோக்கிச் சென்றாள்.
மதுவோ அமைதியாய் பார்த்து நின்றவளுக்கு இத்தனை காலமும் தோழி வாய் வார்த்தையாய் கூறியவை ஒவ்வொன்றாய் நேரில் காண்கையில் அவளுக்குள்ளே தோழியை எண்ணி கவலை கொண்டாள்.
யாருமற்ற அநாதையாய் நிற்கும் தனக்கிருக்கும் சந்தோஷம் கூட அனைவருமிருந்தும் அவளுக்கு இல்லையே என்று எண்ணிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்திட அவளைக் கண்ட பாக்யவதியோ "வாமா மது காபி குடிக்கிறீயா" அன்பாய் கேட்டவரிடம் புன்னகையோடு தலையசைத்தாள்.
அவளுக்கான காபியை தயாரித்துக் கொடுத்தவர் காலை சமையலை தடபுடலாய் சமைப்பது கண்டு "என்ன ஆன்டி இவ்வளவு சமையல் இன்னைக்கு எதுவும் ஸ்பெஷலா" என்றாள் மது.
"ஆமா மது. இன்னைக்கு வீட்டுக்கு விருந்தாளிங்க வறாங்க கூடவே எழிலேந்திரன் மாமாவும் என் பையனும் மருமகளும் வறாங்க" முகத்தில் சந்தோஷம் வழிந்தோட அவர் கூறியதிலே நேற்று மலர்விழி கூறியது நியாபகம் வர தலையாட்டியவள் கையிலேந்திய காபியோடு வீட்டின் பக்கவாட்டில் இருந்த தோட்டம் பக்கம் எட்டி நடையிட்டாள்.
காலை நேர தென்றல் காற்றை ரசித்தவாறே காபிபை அருந்தி தோட்டத்தை ரசித்து நின்றவளுக்கு சற்று முன்னே மனதில் உண்டாயிருந்த எரிச்சல் அனைத்தும் சிறிசிறிதாய் மட்டுப்பட கண்களை மூடித் திறந்தவள் பார்வை வட்டத்தினுள் வீழ்ந்தான் எழில்வேந்தன்.
அவனைக் கண்டதுமே அத்தனை நேரம் அடங்கியிருந்த கோபமும் எரிச்சலும் தலைக்கேற. "என் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி பேச இவன் யாரு? இவனுக்கு யாரு அந்த அதிகாரம் கொடுத்தா? அவன் அதிகாரம் பண்ணி அடிமையா நடத்தினா அமைதியா போக நான் என்ன அவன் வீட்டு பொண்ணுனு நினைச்சிட்டானா இடியட் " என ஏகத்துக்கும் அவள் மனது அவனை அர்ச்சிக்க கண்மண் தெரியாது எழுந்த கோபத்தில் வேகமாய் அவனை நெருங்கியவள் கையிலிருந்த காபியை வேண்டுமென்றே அவன் மீது சிதறவிட,
சற்றே சூடாக தன் மீது ஏதோ வீழ்ந்ததில் "ஸ்ஸ்" என உடலை உதறிக்கு கொண்டே திரும்பியவன் அங்கே கண்ணில் அலட்சியமும் தெனாவட்டுமாய் நின்ற பெண்ணவளைக் கண்டு தீயென முறைத்தான் எழில் வேந்தன்.
வள்ளியூர் கிராமத்தின் ஒட்டுமொத்த ஊர்மக்களின் மரியாதைக்குரியவன், கோபக்காரன், இளவட்டங்களே அவன் முன் நின்று பேச அஞ்சுவார்கள். அப்படிப்பட்டவன் முன்னால் அலட்சியமும் தெனாவட்டுமாய் நிறைந்த பார்வையோடு அவனை முறைத்து நின்றாள் மதுராக்ஷி.
உடலில் கொட்டிய திரவத்தின் சூட்டை விட தன்னை அலட்சியமாய் பார்த்து நின்ற பெண்ணவளின் பார்வையைக் கண்ட எழில்வேந்தனுக்கோ கட்டுக்கடங்காத கோபம் கிளர்ந்த போதிலும் முயன்று தன்னை அடக்கிக் கொண்டவன் அவளை தீ விழிப் பார்வையால் உறுத்து விழிக்க அவன் பார்வையை சளைக்காது எதிர் கொண்டாள் பெண்.
"ஏய் எதுக்கு என் மேல காபிய கொட்டுன" சீறலாய் வந்த அவன் வார்த்தைகளுக்கு அவளோ கண்ணில் குடியேறிய அலட்சியத்துடனும் போலியான பதற்றத்துடனும்
"அச்செச்சோ சுட்டுடிச்சா ஸாரி ஸாரி வேணும்னே என் கை உங்க மேல காபிய கொட்டிடுச்சு ஸாரி" என்றவள் வார்த்தைகளில் தெறித்த உச்சபட்ச நக்கலில் கண்களில் கோபம் கொப்பளிக்க நிமிர்ந்து அவளை முறைத்தவன் 'என்ன தைரியம் இவளுக்கு' என மனம் பொறுமிக் கொண்டே, "ஏய் என்ன திமிறா வேணும்னே பண்ணிட்டு அத என்கிட்டயே தைரியமா சொல்றீயா?" ஏக கடுப்புடன் அவளிடம் சீறினான்.
அவளோ 'உன் கோபம் என்னை எதுவும் செய்யாதடா' என்ற ரீதியில் அவனைப் பார்த்து நின்றாள்.
அவனுக்கோ அவளின் அலட்சியத்திலும் தெனாவட்டிலும் அவனின் அகங்கார மனம் எக்காளமிட தன் முன்னே நின்றவளைக் முறைத்தவன் அவளைக் காணக்காண எழுந்த கோபத்தில் எங்கே அடித்து விடுவேனோ என எண்ணி பல்லைக் கடித்து பார்வையை திருப்பி நிற்க,
அவளோ அவன் தன்னை பேசிய வார்த்தைகளில் உண்டான வடுவிற்கு மருந்தாய் அவனுக்கு பதிலடி கொடுப்பேன் என கங்கணம் கட்டியவளாய் நின்றவள், "என்ன ஸார் ரொம்ப சூடா இருக்கிங்க போல" என அவனைச் சீண்ட திரும்பி அவன் முறைப்புப் பார்வையில் "இல்ல காபி ரொம்ப சூடா இருந்திச்சேன்னு சொன்னேன்" என இதழை கோணலாய் வளைத்து அவள் கூறிய தினுசில் தன்னை சீண்டுகிறாள் என புரிந்து கொண்டவன் அவளை முறைத்துக் கொண்டே "ரொம்ப பேசுற வாய மூடிட்டு போய்டு" எச்சரிக்கையாய் அவன் கூறினாலுமே அதற்கு சிறிதும் அஞ்சாதவளாய் மார்பிற்குக் குறுக்கே கைகட்டி நிமிர்வாய் நின்றவள்.
"உங்கள போல சென்ஸே இல்லாமலா பேசிட்டேன் " என்றாள் இளக்காரமாய்.
"ஏய் ரொம்ப பேசாம இங்கயிருந்து போ"
"போகமுடியாது" என்றாள் அழுத்தமாய்.
அவள் நின்ற தோரணையும் தன்னை எதிர்த்து எதிர்த்து பேசும் பாவனையும் அவனை மேலும் கோபப்படுத்த முஷ்டியை இறுக்கி தன்னை கட்டுப்படுத்தியவன் "சும்மா என்னை சீண்டாத பின்விளைவு பயங்கரமா இருக்கும்" மீண்டும் எச்சரித்தான் அடக்கப்பட்ட கோபத்தோடு.
"உங்கள சீண்டனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல தேவையில்லாம நீங்க தான் என்ன சீண்டுறீங்க" என்றவள் அலட்சிய பாவனையோடு "பெர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங் மைண்ட் யூவர் பிஷ்னெஷ்.. என்னைப் பத்தியோ என் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பத்தி பேச உங்களுக்கு எந்த ரைட்ஸ்ஸூம் இல்ல. நான் இங்க ஒரு விருந்தாளியா வந்திருக்கேன். அதுவும் என் ப்ரெண்ட்டுக்காக மட்டும் தான் இல்லன்னா பேஷிக் சென்ஸ்ஸே இல்லாத உங்கள போல ஆளுங்க இருக்குற இடத்துல ஒரு நொடிக் கூட இருக்க மாட்டேன்" நீளமாய் பேசியவள் முடிவாய் " இனி என் விசயத்தில தலையிட மாட்டீங்கன்னு நினைக்கிறேன் மீறி தலையிட்டா வெறும் காபியோட நிறுத்த மாட்டேன்" என வார்த்தையை தெறிக்கவிட்டு ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவள் பார்வையே 'இதுக்கு மேலும் நான் செய்வேன்' என எச்சரிக்க அவனை முறைத்து விட்டு விலகி நடக்க, அவள் வார்த்தைகளிலே அவன் மொத்த ஆண் என்ற அகந்தை கிளர்ந்தெழ வேகவேகமாய் அவள் முன்னே சென்று வழி மறித்து அவளை காட்டமாய் முறைத்து நின்றான்.
தன்முன்னே அவன் வந்து நின்ற வேகத்தில் தடுமாறிப் பின்வாங்கியவள் தன்னை முறைத்தவனை தானும் முறைத்தவள் "வழிய விடு" என்றாள் மரியாதையை கைவிட்டவளாய்.
அவளின் மரியாதை இல்லாத விழிப்பில் மேலும் கோபம் அதிகரித்தவன் "ஏய்ய் !" விரல் நீட்டி எச்சரித்தவனாய் அவளைப் பார்க்க.
அவளோ "என்ன ஏய்! நீங்க மிரட்டினா பயப்பட நான் ஒன்னும் உங்க வீட்டு அகிலாவோ இல்ல மலர்விழியோ இல்ல நான் மதுராக்ஷி என்கிட்ட உங்க அதிகாரத்தெல்லாம் வெச்சிக்காதீங்க அன்ட் மோர் ஓவர் நான் வந்தது என் ப்ரெண்ட் வீட்டுக்கு. நான் ஒன்னும் உங்க வீட்டு சொந்தக்கார பொண்ணா வரல உங்க கிராமத்து கல்சரயோ இல்ல உங்க சோ கால்ட் வீட்டு ரூல்ஸ்ஸ போலவ் பண்ண" மூச்சிரைக்க அவனிடம் பேசியவள் விலகி நடக்க முயல கை நீட்டி அவளைத் தடுத்தவன்.
"பொண்ணா அடக்கமா ட்ரெஸ் பண்ண சொன்னா சென்ஸ் இல்ல மண்ணு இல்லன்னு பெரிய புடுங்கி மாதிரி பேசுவியா" தரமிறங்கி அவன் கோபமாய் கொந்தளித்ததில் முகம் சுருக்கியவள் "மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்றாள் விரல் நீட்டி.
தன் முன் நீண்டிருந்த விரலை உறுத்து விழித்தவன் தன் கரம் கொண்டு அதை மடக்கிப் பிடித்திட அவன் அப்படி செய்வான் என எதிர்பார்த்திடாதவள் அவன் பிடித்த பிடியின் வலியில் "ஆ விடு" என தன் விரலை உறுவிட முயல அவனோ அவள் விரலை வலிக்குமளவிற்கு காயப்படுத்திவிட்டே தன் கரத்திலிருந்து உதறியவன் "உன் திமிரெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத. இது ஏ ஊரு ஏ வீடு இங்க நான் சொல்ற போல தான் இருக்கனும். அதவிட்டுடு நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன் நடப்பேன்னு சொல்லிட்டு ஆடினியோனு வெச்சிக்கோ ஒழுங்கா ஊர் போய் சேரமாட்ட" மிரட்டலாய் கூறியவன் அவளை அழுத்தமாய் பார்த்தவாறு "அப்பா அம்மா கூட இருந்து வளர்த்திருந்தா பொண்ணுங்குற அடக்க ஒடுக்கம் தானா வந்திருக்கும் ஆனா நீ தான் அநாதையா வளர்ந்தவளாச்சே இப்பிடி தான் அடங்காபிடாரி போல ஆம்பள கூட சண்டைக்கு நிற்ப" என்றவனின் அமில வார்த்தைகளில் துடிதுடித்துப் போனாள் பெண்.
இத்தனை நாளாய் தாய் தந்தை இல்லையென்ற ஏக்கம் மனதினோரம் அமிழ்ந்து கிடந்தாலுமே தன் வலியை மறைத்து இயல்பாய் துள்ளளோடு வளர்ந்தவளுக்கு இன்று நேரடியாக 'நீ ஒரு அநாதை தானே' என தாக்கிய வார்த்தைகளில் உள்ளூரே சுக்கு நூறாய் நொருங்கிப் போனாள் பெண்.
இத்தனை நேரமிருந்த தைரியம் மொத்தமும் வடிந்தவளாய் முகம் வலியில் சுருண்டு கண்ணோரம் துளிர்த்த கண்ணீரோடு நின்றவளைக் கண்டும் அந்த கல் நெஞ்சக்காரனின் மனம் இறங்கவே இல்லை.
'என்னை சீண்டினாய் அதற்கு அனுபவி' எனும் விதமாய் அவளைப் பார்த்து நின்றவன் "உன்னோட ஊர்ல நீ எப்படி வேணா இரு. ஆனா இது எங்க இடம் இங்க எங்க கட்டுப்பாட்டுப்படி தான் இருக்கனும். நான் சிட்டில வளர்ந்தவ நான் இப்பிடித்தான் ட்ரெஸ் பண்ணுவேன் இப்பிடித்தான் ஆம்பளைய எதிர்த்து பேசுவேன்னு நீ புதுசு புதுசா போடுற கூத்துல எங்க வீட்டு பொண்ணுங்க கெட்டுப் போய்டக் கூடாது" என்றவன் வார்த்தையின் மறைப் பொருளில் அவன் அவளின் குணத்தை இழிவுபடுத்த உடல் கூச தலைகுனிந்து நின்றவளுக்கு அவனிடம் பதில் பேச வாய் துடித்தாலும் அவனின் அநாதை என்ற அமில வார்த்தையில் மனம் சோர்வுற்றவள் அமைதியாய் நின்றிருக்க அவள் அமைதியைக் கண்டவனுக்கு அவளை அடக்கிவிட்டோம் என்ற ஆண் கர்வம் தலை தூக்க கர்வமாய் சிரித்துக் கொண்டான்.
தலைகவிழ்ந்து தனக்குள்ளே உழன்றவளைக் பார்த்தவன்
"இனி புரிஞ்சு நடந்துப்பன்னு நினைக்கிறேன். இருக்குற இருபது நாளும் அமைதியா இருந்துட்டு உன் ஊர பார்த்து போய்ட்டே இரு" என்று அங்கிருந்து நகர்ந்து சென்றிட,
அத்தனை நேரம் அவன் முன்னே அழுது விடாதே என இழுத்து வைத்திருந்த வைராக்கியம் சுக்கு நூறாய் உடைய அங்கிருந்த திண்டில் தொப்பென்று அமர்ந்தவள் கண்களோ அவள் அனுமதியின்றி கண்ணீரை சுரந்தது.
அவளை விட்டு விலகி நடந்தவனுக்கோ மனதில் அவளின் இயலாமையை சுட்டிக்காட்டியதில் ஏதோ உறுத்த நின்று திரும்பியவன் கண்கள் கண்ணீர் தடத்தோடு அமர்ந்திருந்தவளைக் கண்டு என்னவோ போலானது.
தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன் மீண்டும் தான் பேசியவற்றை எண்ணிப் பார்க்க, 'சற்று அதிகமாய் எல்லை மீறி பேசிவிட்டாய்' என மனம் உணர்த்தினாலும். அவள் பேசிய வார்த்தைகளும் கண்முன் வந்து போக மீண்டும் ஆண் என்ற அகந்தை அவனைச் சூழ்ந்து கொண்டதில் அவன் தவறை உணர மறுத்து நின்றான்.
'பெண்ணாய் தன் அன்னையை தவிர யாருமே தன் முன் நின்று பேச அஞ்சுவார்கள். ஆனால் இவள். இவள் எப்படி என்னைச் சீண்டி எச்சரிக்கை செய்யலாம். பெண்ணாய் இருந்து கொண்டு இவளுக்கு என்ன இத்தனை அகங்காரம்' என அவன் அவளைப் பற்றி குறையாய் எண்ணினான்.
அவனுக்கு தெரிந்த அவளின் அகங்காரமும் திமிறும் பெண்ணவளின் தன்மானம் என்பது அறியாது தான் போனான் ஆணவன்.
சில நொடிகள் அவளைப் பார்த்து நின்றவன் தோளைக் குலுக்கிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றான்.
....
அன்னையின் அறையிலிருந்து எடுத்து வந்த புடவையையும் நகையையும் எடுத்து வந்து அவர் முன்னே நின்றிருந்தாள் அகிலா.
"சாயந்திரம் கோவிலுக்கு போகனும் இத உடுத்திக்கோ நகையையும் போட்டுக்கோ அப்புறம் உன் தோழிக்கும் உன்கிட்ட இருக்குற புடவைல ஒன்ன கட்டிக்க கொடு" என்று கட்டளையாய் கூறிய அன்னையிடம் சரியென தலையசைத்தவள் கையிலிருந்தவற்றை எடுத்துக் கொண்டு அறை நோக்கிச் செல்ல அவள் முன்னே வந்த எழில்வேந்தனோ அவளைப் பாராது "உன் ப்ரெண்ட் அங்க தோட்டத்துல தனியா நிக்குற" என முகஇறுக்கத்தோடு கூறிவிட்டு நகர அவன் முகத்தின் இறுக்கமே ஏதோ சரியில்லை என உணர்த்தவே வேக வேகமாய் பொருட்களை அறையில் வைத்துவிட்டு தோழியை தேடிச் செல்ல அங்கு அவளோ தரையை வெறித்தபடி அங்கிருந்த திட்டில் அமர்ந்திருந்தாள்.
வெறித்த பார்வையோடு அவள் அமர்ந்திருந்த தோற்றம் கண்டு பதறியவளாய் அவளை நெருங்கியவள்
"மது" என அவள் தோள் தொட நிமிர்ந்து அவளைப் பார்த்தாள் மதுராக்ஷி.
"மது என்னடி ஆச்சு ஏன் இங்க இப்படி உட்கார்ந்திருக்க" தோழியின் முகத்திலிருந்த வெறுமை ஏதோ நடந்திருக்கு என்பதை பறைசாற்ற படபடக்கும் நெஞ்சோடு அவளிடம் கேட்டாள்.
"அகி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்றுமே இல்லாது குரலில் கெஞ்சலோடு கேட்டவளை புரியாது பார்த்தவள் "சொல்லுடி" என்றாள்.
"நான் ஈவ்னிங் ஊருக்கு போக ஏற்பாடு பண்ணிடு அகி ப்ளீஸ்" என்றதும் அந்தக் குரலிலிருந்த தொய்வே அவள் மனதினுள் எதையோ எண்ணி கவலையுறுகிறாள் அந்த கவலைக்கு காரணம் தன் அண்ணணாகத் தான் இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டவள் அவளருகே அமர்ந்து தோளோடு அவளை அணைத்து "சரி நான் அம்மா கிட்ட சொல்றேன் ஈவ்னிங்கே போகலாம்" என்றவள் அவளிடம் வேறதைப்பற்றியும் தூண்டித்துருவாது அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சில நிமிடம் தோழி இருவரிடமுமே பெறுத்த அமைதி நிலவ அந்த அமைதியை களைத்தவளாய் "நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் மது" என்றாள் கலங்கிய கண்களோடு.
"மறுபடியும் அந்த காலேஜ் லைஃப் கிடைக்காதானு ஏக்கமா இருக்குடி. இன்னும் கொஞ்ச நாள் நாம ஒன்னா இருந்திருக்கலாம்ல" சோகம் இழையோட கூறியவளின் கரத்தைப் பற்றிக் கொண்ட மதுவோ "என்கூடவே வந்துடுடி இந்த ஜெயில் வீடு வேணாம் உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ வாழலாம். சுதந்திரமா இருக்கலாம்" என தொண்டை வரை வெளிவரத் துடித்த வார்த்தையை முழுங்கிக் கொண்டவள் "நீ நினைச்சா இப்போ கூட காலேஜ் லைப்ப கண்டினியூ பண்ணலாம் அகி" என்றவளை புரியாது பார்த்தாள்.
அவளை பாவமாய் பார்த்தவள் "எங்கம்மா விடுவாங்கன்னு நினைக்கிறியா மது" என்றாள்.
"ஏன் அவங்க தான் படிப்புக்கு எந்த தடையும் விதிக்காதவங்களாச்சே நிச்சயம் விடுவாங்க ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம்" என அவளை ஊக்கப்படுத்தியவளுக்கு எப்படியாவது தோழியை இங்கிருந்து அழைத்து செல்லும் வேகம்.
மனதில் அத்தனை திடத்துடனான என்னாலே இந்த வீட்டில் இந்த மனிதர்கள் மத்தியில் இரு நாட்களை கடத்த முடியாதிருக்க இயல்பிலே மென்மையான உள்ளம் கொண்டவள் இங்கு எப்படி வாழ்வாள் என தன் தோழியை எண்ணி சஞ்சலமடைய எப்பாடுபட்டாவது அவளையும் தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என உறுதி கொண்டாள்.
தோழி மீது கொண்ட அளப்பறிய நேசத்தில் அவளை இங்கிருந்து அழைத்துச் செல்ல எண்ணியவள் அறியவில்லை விதி தங்கள் வாழ்க்கையை வேறு வகையில் புரட்டிப் போடப் போகிறது என்ற உண்மையை.
தோழியின் வற்புறுத்தலில் சரி என ஒத்துக் கொண்டவளை அணைத்துக் கொண்டாள் மதுராக்ஷி. "தைங்ஸ்டி" என்றவள் முகத்தில் இருந்த சந்தோஷம் கண்டு தானும் மகிழ்ந்தவள் அவளை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
.......
'வள்ளியூர் உங்களை அன்போடு வரவேற்கிறது' வரவேற்கும் முகமாய் அமைந்திருந்த பதாகையை கடந்து ஊருக்குள் நுழைந்தது பென்ஸ் கார் ஒன்று.
பச்சை பசேலென ஜன்னல் வழி தெரிந்த வயல்வெளிகளை ரசித்தபடி தென்றலாய் வீசிய காற்றினை உள்வாங்கியபடி வந்த காயத்ரியின் காதுகளிலோ தன்னருகே அமர்ந்து பயணம் ஆரம்பித்த முதல் இதோ முடியும் வரை வாய் ஓயாது புறுபுறுவென்ற மகனின் புலம்பலைக் கேட்டு கோபம் எழ "டேய் இப்போ உன் வாய மூடப் போறியா இல்லை? கார்லயிருந்து தள்ளிவிடட்டா" என கத்தியதும் தன் புலம்பலை நிறுத்தி தன் தாயை முறைத்தான் இருபத்தி நான்கு வயதே ஆனா காயத்ரி மற்றும் தியாகு தம்பதியினரின் இரண்டாவது புதல்வன் தீரன்.
"என்னடா முறைப்பு நேத்து கிளம்பினதுலயிருந்து புலம்பிக்கிட்டே இருக்க வாயே வலிக்காதாடா உனக்கு" என்றவரை மேலும் முறைத்தவன் "என் புலம்பல கேட்க அவ்வளவு கஷ்டமா இருந்தா எதுக்கு என்ன வம்படியா இங்க அழைச்சிட்டு வந்திங்க.. எனக்கு இங்க வர பிடிக்கவே இல்லன்னு தெரியும் தானே உங்களுக்கு" கோபம் குறையாதவனாய் கத்தியவனின் குரலில் மகனை திரும்பிப் பார்த்தார் தியாகு.
"டேய் தீரா அமைதியா பேசுடா. இது ஒன்னு யூஎஸ் இல்ல இது கிராமம். இங்க நாங்க மட்டும் இல்ல கண்ணா உன் அண்ணணும் இங்க தான் இருக்கான் சோ கொஞ்சம் ஒழுங்கா உன் வாலைச் சுருட்டிக்கிட்டு இரு புரியுதா?" தந்தையும் தன் பங்கிற்கு அதட்ட தாய் தந்தை இருவரையும் முறைத்துவிட்டு மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு ஜன்னல் புறமாய் பார்வையைத் திருப்பி அமர்ந்திருந்தான்.
வண்டியை ஓட்டிக் கொண்டே அவர்களின் உரையாடலை கேட்டு வந்த கிஷோரோ "அங்கிள் அதான் அவனுக்கு பிடிக்கலைல அப்புறம் எதுக்கு அழைச்சுகிட்டு வந்திங்க" என்றான்.
"என்னப்பா பண்றது நான் தான் இங்க வந்தா தொல்லை பண்ணுவான் இவன விட்டுடு வருவோம்னு சொன்னேன் ஆனா உன் ப்ரெண்ட் தான் அவனையும் அழைச்சிட்டு வாங்கனு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுட்டானே" என்றார் சலிப்பாக.
அதில் தலையாட்டி சிரித்தவன் வண்டியை
அந்த பண்ணை வீட்டின் முன் நிறுத்தியிருந்தான்.
வாசலில் வண்டிச் சத்தம் கேட்க அவர்களை வரவேற்கவென்று வாசலுக்கு வந்தனர் ராஜேஸ்வரி மற்றும் எழில்வேந்தன் இருவரும்.