எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஒழுக்கம்! - கதைத்திரி

ஒழுக்கம்!அந்த காலை நேர பரபரப்புடன் தனது கணவருக்கும் மகனுக்கும் உணவினை செய்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் நப்பின்னை. இருவரும் தயாராகி வரவே காலை உணவை எடுத்து வைத்த நப்பின்னை மதிய உணவை எடுத்து வைத்தபடி, "டேய் கண்ணா சாப்பாடோட கொஞ்சம் பழம் வச்சிருக்கேன் ஒழுங்கா சாப்பிடு. வாழப்பழத்தை சாப்பிட்டு தோலை தூர எரியாம ஒழுங்கா குப்பை தொட்டில போடு. இல்லை டப்பாவிலேயே போட்டு கொண்டு வந்து வீட்டு குப்பை தொட்டில போடு" என கூற "ம்ம்.. சரி அம்மா" என்றான்.


மென்மையான புன்னகையுடன் பாவை கணவரைப் பார்க்க "உத்தரவு மகாராணி" என மகனுக்கு கூறிய அதே அறிவுரைகள் தான் தனக்கும் என புரிந்தவராக கூறினார். அதில் தன் பச்சரிசிப் பற்கள் மின்ன சிரித்தவள் இருவரும் புறப்பட்டதும் 'ஹப்பாடா' என ஓய்ந்து அமர்ந்தாள்.


சோர்வுடன் கடிகாரத்தை பார்த்தவள் தனக்கு இன்னும் நேரம் இருப்பதை குறித்துக் கொண்டு காலை உணவுடன் வந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.


அதில் செய்திகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு இளைஞர்கள் மது அருந்தியபடி சாலையோரம் சென்றவர்களை தங்கள் அலறல் மூலம் திடுக்கிடச் செய்ததும், மது போத்தலை சாலையோரம் வீசி உடைத்து மற்றவரை காயப்படுத்திச் சென்றதும் காணொலியாக ஓடிக் கொண்டிருந்தது.


அதைக் கண்டவளுக்கு அடுத்த வாய் உணவு உள்ளே செல்ல மறுத்தது. கண்களில் அத்தனை கோபம். 'ப்ச்' என்ற சலிப்புடன் உணவை வைத்துவிட்டு தயாராகி புறப்பட்டாள்.


அவள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடைபயணத்தில் அந்த அகண்ட கட்டிடம். மேலே 'சாரதா மறுவாழ்வு மையம்' என்று இருந்தது. நப்பின்னை அங்கே தான் மனநல நிபுணராக பணிபுரிகின்றாள். அங்கு உள்ளே நுழைந்தவுடன் உடன் பணிபுரியும் சீதாவை பார்த்து சினேகமாக புன்னைகைத்தவள் காலை வணக்கம் கூற பதிலுக்கு தானும் தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்ட சீதா "நப்பு நியூஸ் பார்த்தியா?" என்று கேட்டாள்.


கோபத்தை காட்ட முடியாத ஒருவித எரிச்சலுடன் "ம்ம் சீதா. அத்தனை ஆத்திரமா வருது. இந்த காலத்து பிள்ளைகளுக்கு கொஞ்சம் கூட சமூக விழிப்புணர்வே இல்லை. நம்ம செய்ற செயல் அடுத்தவரை பாதிக்கும்னு கொஞ்சமும் அக்கறை இல்லை" என தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள்.


"அதான் நப்பு. கொஞ்சமும் அக்கறை இல்லை. அந்த பசங்க தூக்கி எரிஞ்ச பாட்டிலிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளால அங்க ஒரு நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கு. அதுமட்டுமில்லாம அந்த வழியா போன ரெண்டு மூனு பேருக்கு சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டிருக்கு" என சீதா கூற,


"இவங்க வீட்ல ஆட்கள காயப்படுத்தினா சும்மா இருப்பாங்களா? இல்ல இவங்க மேல தான் யாரும் பாட்டில எரிஞ்சா சும்மா இருப்பாங்களா?" என நப்பின்னை கொந்தளித்தாள்.


"காலம் கெட்டு கிடக்குதுடி. சரி வா‌. எனக்கு இன்னிக்கு அந்த டிரக் அடிக்ட் பொண்ணோட கேஸ் இருக்கு. உனக்கு எங்க?" என சீதா வினவ ஒரு தாளை எடுத்து புரட்டியவள் "ஏதோ புது கேஸ் போல இருக்குடி" எனக் கூறினாள். "சரி நப்பு மதியம் பாப்போம்" என்று சீதா தன் வேலையை கவனிக்க செல்ல நப்பின்னையும் புறப்பட்டாள்.


அதிலிருந்து அறை எண்ணை குறித்து சென்றவள் உள்ளிருந்து வந்த மருத்துவரிடம் "என்ன கேஸ் சார்?" என வினவ, அவளுக்கு தன் காலை வணக்கத்தை தெரிவித்தவர் "சூசைட் கேஸ் நப்பின்னை. அவன் காதலிச்ச பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுனு அந்த பொண்ண வேலை விட்டு வந்ததும் வெட்டிட்டு இவனும் விஷம் குடிச்சிருக்கான்" எனக் கூறவே "என்ன இது கொடுமை?" என்றாள்.


"ம்ம்.. அந்த பொண்ணு ஆபத்தான கட்டத்த தாண்டிட்டா. இவன உடனே ஆஸ்பிடல்ல சேர்த்ததால காப்பாத்தியாச்சு. ஆனா மறுபடியும் சூசைட்க்கு இரண்டு முறை முயற்சி பண்ணிட்டான். அதான் இங்க விட்டிருக்கோம்" என அவர் கூற‌ "சரி டாக்டர்" எனக் கூறி உள்ளே சென்றாள். அவனோ கட்டிலை தவிர வேறேதுமற்ற காலியான அந்த அறையில் தலையை பீய்த்துக் கொண்டபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க நப்பின்னை உள்ளே வரும் அரவம் கேட்டு திரும்பினான்.


அவளை கண்டவுடன் விரைவாக அவளிடம் செல்ல நப்பின்னை ஒரு நொடி பயந்து தான் போனாள். சட்டென அவள் காலில் விழுந்து அவள் கால்களை கட்டிக் கொண்டவன் "தயவு செஞ்சு என்ன சாக விடுங்க. அவ இல்லாத வாழ்க்க எனக்கு வேணாம்" என கதற அவனை ஒரு வேதனையான பார்வை பார்த்தாள்.


அவன் தலை கோதிவிட்டு தூக்கி அங்குள்ள கட்டிலில் அமர்த்தியவள் "என்னாச்சு தம்பி?" என பரிவாக வினவ "நா காதலிச்ச பொண்ணு என்ன வேணாம்னு சொல்லிட்டா. வேற யாரயோ கல்யாணம் பண்ண போறாளாம். அதான்.. அதான் அவ ஆபிஸ் விட்டு வந்ததும்" என்றுவிட்டு குலுங்கி குலுங்கி அழுதான். "இந்த பூமில சேரமுடியாட்டா நாங்க மேல சேந்துக்குறோம். என்ன சாக விடுங்க" என கதறினான்.


"உங்களுக்கு என்ன வயசு ப்பா? என்ன செய்றீங்க?" என அவள் வினவ எரிச்சலுடன் கத்தினான். மீண்டும் அதே பொறுமையுடன் அவனை சமாதானம் செய்ய "இ..இருபத்தி ஆறு வயசு. வேலை தேடிட்டு இருக்கேன்" என்றான். "என்ன படிச்சிருக்கீங்க?" என‌ அவள் கேட்க "இன்ஜினியரிங்" என்றான். "ஓ.. என்ன பர்சென்டேஜ் ப்பா? ஏன் வேலை கிடைக்கலை?" என அவள் கேட்கவே அவன் முகம் கருத்து தலை குனிந்தான்.


"என்னப்பா?" என நப்பின்னை வினவ அவனிடம் பதில் இல்லை. மீண்டும் கத்தி ஊரை கூட்டியவனுக்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு அவனது பெற்றோரிடம் பேசினாள். அப்படியே அன்றைய பொழுது மாலை நேரத்தினை ஏந்தி நிற்க பாவை வீடு திரும்பினாள். தங்கள் வீடு உள்ள தெருவில் நுழையும்போதே மகனும் அவள் நடையில் இணைந்து கொள்ள இருவருமாக வீட்டை அடைந்தனர்.


உள்ளே சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் அடுப்படியில் உருளும் பாத்திரங்களின் சத்தத்தில் "ம்மா.. இப்ப தானே வந்தீங்க?" என்றபடி சமையலறை வந்தான். சன்னமான புன்னகையுடன் "கையோட வேலைய முடிச்சிட்டு உக்காரலாமேனு தான்டா" என்க அவரை வலுக்கட்டாயமாக அனுப்பியவன் இருவருக்கும் தேநீர் போட்டுக் கொண்டு வந்து ஒன்றை தாயிடம் நீட்டி மற்றொன்றை தான் பருகினான்.


அதில் மெல்ல புன்னகைத்தவள் எண்ணம் மீண்டும் அந்த பையனின் தாயிடம் பேசியதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது.


தாயின் யோசனை முகத்தை பார்த்து "என்ன ம்மா? ஏதோ பலத்த யோசனை போல?" என அவன் வினவ "இன்னிக்கு ஒரு கேஸ் வந்ததுடா கண்ணா.." என அதை பற்றி கூறினார்.


மேலும் "அந்த பையனோட அம்மா வந்தாங்க. அவங்க பேசினது தான் மனசுலயே ஓடிட்டு இருக்கு. ஸ்கூல் படிக்கும் வரை ரொம்ப நல்ல பையனா தான் இருந்தானாம். நல்லா படிக்கலைனாலும் மோசம்னு சொல்லுமளவு இல்லையாம். காலேஜ் சேர்ந்ததும் ரொம்பவே மாறிட்டானாம்" என நப்பின்னை கூற "ஏன் ம்மா?" என மகன் வினவினான்.


"வேறென்ன? கூடா நட்பு கேடாய் விழைந்தது" என்றவர் ஒரு பெருமூச்சுடன் "அந்த பசங்களோட சேர்ந்து மது பழக்கத்துக்கு ஆளானானாம். இல்லாத கெட்ட வார்த்தையெல்லாம் பழகிக்கிட்டானாம். ஒன்னு சொல்லவாடா கண்ணா. இப்ப உள்ள பிள்ளைகளுக்கு கெட்ட வார்த்தை பேசுறது ஒரு நாகரீகமான செயலா போச்சு. நாங்க எல்லாம் பைத்தியம்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு எங்க பாட்டி கிட்ட அத்தனை அடி வாங்கி இருக்கோம்" என்க மகன் வாய்விட்டு சிரித்தான்.


அதில் "சிரிக்க சொல்லலைடா. இது நிஜம். நா காலேஜ் படிக்கும் போதுலாம் அம்மா சொல்லுவாங்க. காலம் கெட்டு போச்சு இப்ப உள்ள பிள்ளைங்க சரியில்லைன்னு சொல்வாங்க. இத்தனைக்கும் அப்போ ஒன்னும் அத்தனை அநியாயமெல்லாம் நடந்தது இல்லை. எங்கயாவது மாசத்துக்கு ஒரு திருட்டு கேஸு இருக்கும். அதுக்கு தான் இத்தனை பேச்சும். அதுவும் ஒரு பையன் லவ் பண்றேன்னு வீட்டில் சண்டை போட்டா இந்தியா பாகிஸ்தான் சண்டை தான்" என்று அந்த நினைவுகளில் அடைத்துக் கொண்ட மூச்சை சரிசெய்து கொண்டு "ஆனா அதுதான்டா வசந்தகாலம். பிள்ளைகள வெளிய அனுப்பலாம் அவ்வளவு பயம் இருந்தது இல்ல. இருட்டுல அனுப்பினா கூட காதுல கழுத்துல உள்ளது பரிபோகுமேனு தான் பயம் இருந்தது. இப்ப அப்படியா?


காலைல ஒரு செய்தி பாத்தேன். நாலு பசங்க ஒரே வண்டில குடிச்சுட்டே போய் அலறி, பாட்டில உடைச்சுனு அத்தனை ரகளை. அப்போலாம் கள்ளுனு சொன்னாலே பாட்டிகிட்ட கரண்டி வளைய வளைய அடிவிழும். இப்ப பாரு.. அசால்டா போச்சு இதுலாம். நாகரீகம்ற பெயர்ல நிறையா மாறி போச்சுடா கண்ணா. சமூக விழிப்புணர்வு சுத்தமா இல்லை" எனக் கூறினார்.


"சரி அந்த அண்ணா கதைக்கு வாங்க" என மகன் கேட்க "ம்ம்.. அதான் மது பழக்கம், கெட்ட வார்த்தை, எல்லாம் சேர்ந்து படிப்புல பூஜியமா போய்ட்டான். பல அரியர் வச்சு டிகிரியே கொஞ்ச மாசம் முன்ன ஏனோ தானோனு பாஸாகி வாங்கிருக்கான். சரியான வேலை கிடைக்கலை. இப்படியுள்ள பையன எந்த பொண்ணு தான் விரும்புவானு அவங்க அம்மாவே சொல்லுறாங்க. சொல்லும்போது அவங்க முகத்துல இருந்த அந்த அவமானம்.. அதுலயே அவங்க அணு அணுவா சாகுறாங்கனு தோனுச்சு. ஒரு தாய் தான் பிள்ளையோட பிறப்புல பெருமையடையலைனாலும் சிறுமையடையாம இருக்கனும்னு தான் நினைப்பா. ஒருத்தனோட அடையாளம் அவன் படிப்புல மட்டுமே கிடையாதுப்பா. நல்ல ஒழுக்கத்துல தான் இருக்கு. உயிர விட ஒழுக்கம் முக்கியம்" என்றார்.


"நிஜம்தான் ம்மா. அந்த ஆன்டி பாவம். இப்ப அந்த அண்ணா எப்படி இருக்காங்க?" என மகன் வினவ "மயக்க மருந்து கொடுத்துட்டு வந்தேன். ம்ம்.. பாப்போம்" என்றார். அன்னையின் கரத்தை அழுத்திக் கொடுத்து "எல்லாம் நல்லபடியா நடக்கும் ம்மா" என அவன் கூற புன்னகையுடன் அவன் கன்னம் வருடியவர் அதில் சட்சட்டென இரு அறைகளை வைத்தார்.


அதில் கண்களை சுறுக்கி தூக்கத்திலிருந்து எழுந்தவன்மேல் அவனது மூன்று வயது சீமாட்டி அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க "அச்சோ பாப்பா.. அப்பாவ தூங்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுனு அண்ணா சொல்வேன்ல" என்றபடி மூத்தவன் தங்கையை தூக்கிக் கொண்டான்.


எதிரே உள்ள சுவற்றில் நப்பின்னையின் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டிருக்க மூத்தவன் "இன்னிக்கு பாட்டி பர்த்டேல ப்பா?" என்றான். அன்னையின் புகைப்படத்தை சிறு வருத்தம் கலந்த புன்னகையுடன் பார்த்தபடி தலையாட்டியவன் மகனை பார்க்க "ப்பா.. இன்னிக்கு என் பிரண்டு சாக்லேட் சாப்டுட்டு கவர ரோட்ல போட்டான். நா அப்படி போடக்கூடாது. இது ஒழுக்கமற்ற செயல், எங்க பாட்டி ஒழுக்கம் உயிரைவிட மேன்மைனு சொல்வாங்கனு சொன்னேன்" என்றான்.


அதில் விரிந்த புன்னகையுடன் மகனை அணைத்துக் கொண்டவன் அன்னையின் புகைப்படத்தை பார்த்து "நன்றி ம்மா" என முனுமுனுத்துக் கொண்டான்.


இன்றைய இளைய சமுதாயம் நாகரீகம் என்ற பெயரில் மது அருந்துதல், கெட்ட வார்த்தை பேசுதல், புகைப்பிடித்தல் போன்ற ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்ததால் தான் வையகத்திலும் வசந்தம் முற்றிலும் அழிந்து கோடை குடிபுகுந்துவிட்டது போலும். முற்றும் முழுவதும் உண்மையான மனிதனாக வாழ நாம் துறவிகள் இல்லை தான். ஆனால் முடிந்தவரை நம்மால் பிறருக்கு நேரும் அனர்த்தங்களை தவிர்ப்பது நன்று. ஒழுக்கம் உயிரை விட மேன்மையானது. அதை கடைபிடித்தல் மிகவும் அவசியமாகும்.


'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்'

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடவும் 🥰
👇
 
Last edited:
Top