வணக்கம் நண்பர்களே, எனது மற்றுமொரு கதையுடன் உங்களை நமது தளத்தில் சந்திக்க மீண்டும் வந்துள்ளேன். கதையின் ஒரு சிறிய அறிமுகப்படலத்தோடு துவங்குகிறேன்.
கதையில் இரண்டு நாயகர்கள்/நாயகிகள்.
அபிஷேக்
பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்க்கப்பட்டவன். தாத்தாவின் கம்பெனி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு குடும்பத்திற்காக வாழ்பவன். காதலின் வாசத்தை அறியாதவன். இன்றோ, காதலின் வாயிலில் நின்று போராடுபவன்.
தேவ்
அழகிய நட்பைக் காதலாய் கொண்டவன். தன் மனதிற்கு சரி என்று தோன்றுவதைச் செய்பவன். சரியோ? தப்போ? அதைச் சொல்வதால் பலருடைய எதிர்ப்புக்கு ஆளானவன். காதலிக்காகக் காத்திருப்பவன்.
பிரார்த்தனா
அநாதையானாலும், தாய் போல் பாசம் காட்டிய அத்தையால் வளர்க்கப்பட்டவள். வாழ்க்கையில் லட்சியத்தை அடையப் போராடுபவள். தன் சுயமரியாதையை என்றும் விட்டுக்கொடுக்காதவள். காதலின் இனிமையை உணர விரும்புபவள்.
அஞ்சலி
பணக்காரக் குடும்பத்தில் பிறந்து விட்ட ஒரே காரணத்தால் பல கட்டாயங்களுக்கு ஆளானவள். ஒரு சூழ்நிலையில் தான் எடுத்த அவசர முடிவால் இன்றும் துக்கத்தை அனுபவிப்பவள். காதலனின் கை சேரத் துடிப்பவள்.
இதிலேயே கதையின் சில விஷயங்களைக் கூறியிருக்கிறேன். நாளை முதல் பதிவு வரும் நண்பர்களே. கதையைத் தொடர்ந்து படித்து உங்களது மேலான கருத்துக்களைக் கருத்துத் திரியில் கூறுங்கள்.
என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்த பாடல், அந்த விநாயகர் கோவிலையும் தாண்டி தெருவில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்தப் பாடலுக்கு இணையாக தன் குரலையும் இணைத்து விநாயகரின் சந்நதி முன்பு நின்று, மார்பின் குறுக்கே கைகளைக் குவித்தபடி பாடிக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
அவள் மனம் முழுக்க அப்பொழுது விநாயகர் மட்டுமே நிறைந்திருந்தார். அவரின் தீவிர பக்தை அவள். நாள் தவறாமல் கோவிலுக்கு வந்துவிடுவாள்.
அவளுடைய பாட்டி சொல்லிக்கொடுத்த பழக்கம் இது. சிறிய வயது முதலே இன்றும் நாள் தவறாமல் கடைபிடித்து வருகிறாள். சாப்பிடாமல் கூட வீட்டிலிருந்து கிளம்புவாளே தவிர, விநாயகரைத் துதிக்காமல் ஒரு நாளும் சென்றதில்லை.
செல்ல முடியாத நாட்களில் கூட, தொலைவில் இருந்தே பார்த்தால் தெரியும் விநாயகரை அங்கிருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் செல்வாள். இல்லையென்றால் அவளுக்கு அன்றைய நாள் வேலையே நடக்காது என்பது அவளுடைய நம்பிக்கை.
இன்று கூட அவளுக்கு மிக முக்கியமான நாள். அவள் முகத்தில் கவலை ரேகைகள் படிந்திருக்க, கண்களில் சில துளி கண்ணீரும் துளிர்ந்திருந்தது.
“விநாயகா, உனக்குத் தெரியாததில்ல. எப்படியோ அந்த ஜெயில்ல இருந்துட்டே கஷ்டப்பட்டுப் படிச்சு ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிட்டேன். ஆனா, நான் வாழ்க்கைலயும் பாஸ் ஆகணும். நான் ஜெயிக்க மாட்டேன்னு சொன்னவங்க வாயையெல்லாம் அடைக்கணும். அதுக்கு இன்னைக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. எப்படியாவது இந்த வேலை மட்டும் எனக்குக் கிடைச்சிருச்சுன்னா, உனக்கு என்ன வேண்டுதல்ன்னாலும் செய்யறேன். இது மட்டும் தான் நான் அங்க இருந்து தப்பிக்கற ஒரே வழி. இத்தனை நாள் பொறுத்துக்கிட்டேன். நீயும் எனக்கு எப்படியோ வழிகாட்டின. ஆனா, இதுக்கும் மேல பொறுத்துப் போகணும்னு எனக்கு அவசியம் இல்ல. போதும். என்னுடைய வாழ்க்கை இனி என்னோட கையில தான்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்கும் மேல என்னை சோதிக்காத. எப்படியாவது இந்த இண்டர்வியூல நான் பாஸ் ஆகிடணும்.” என்று தீர்க்கமான மனதுடன் தன் கண்களை மூடி முணுமுணுத்தபடி அழகாய் வேண்டிக்கொண்டிருந்தவளை விநாயகர் பார்த்துக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொண்டாள்.
மெல்ல கண்களைத் திறந்தவளுக்கு முன்னே விநாயகர் வெள்ளிக் கவசத்தில் அலங்காரத்துடன் காட்சி தந்தார். அவருடைய ரூபமே “நீ கவலைப்படாதே, அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்று சொல்வதைப் போலிருந்தது.
பெருமூச்சொன்றை விட்டவள், மனதில் முழு நம்பிக்கையுடன் அர்ச்சகர் தந்த விபூதி, குங்குமப் பிரசாதத்தை வாங்கி அதை நெற்றியில் நேர்த்தியாய் இட்டுக்கொண்டாள்.
பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்துவிட்டு அவள் எப்பொழுதும் அமரும் இடமான தூணுக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டு விநாயகரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது ஒரு பெண்மணி, “இந்தாம்மா பிரசாதம். வாங்கிக்கோ.” என்று கொடுத்தார்.
வாங்கிக்கொண்டவளின் கண்கள் பிரகாசித்தன. சர்க்கரைப் பொங்கல். அவளுக்கு மிகவும் பிடித்தமான பிரசாதம். உடனே, புன்முறுவல் பூத்தபடி விநாயகரைப் பார்த்தாள். நல்ல ஒரு சகுணம். கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னபடி சாப்பிட்டாள்.
சர்க்கரைப் பொங்கல் வாயில் கரைந்தபடி உள்ளே சென்றது. சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்து மீண்டும் விநாயகரை ஒரு நொடி நின்று வணங்கிவிட்டு, வெளியே வந்து தனது ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.
கண்களும், கைகளும் அதன் பணியைச் செய்துகொண்டிருக்க பிரார்த்தனாவின் மனம் மட்டும் பின்னோக்கி பலவற்றை யோசித்துக்கொண்டிருந்தது.
பிரார்த்தனாவின் அம்மா தேவி, கல்லூரியில் பழகிய நண்பரையே காதலித்தார். அவரது வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று, கோவிலில் சென்று யாருக்கும் தெரியாமல் மணம் புரிந்துகொண்டார்.
தங்கள் மகள் சொல்லாமல் செய்த காரியத்தால் தலைகுனிந்து நின்றனர் பெற்றோர். தேவியின் அண்ணன் ராஜனோ, கடும் கோபக்காரன். அவளை தலைமூழ்கிவிடுங்கள் என்று ஒற்றைச் சொல்லில் அவர்களை அடக்கினான்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் கருவுற்றார் தேவி. அவர்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன் பிறகு, வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த தேவியின் கணவன் சாலை விபத்தில் உயிரிழந்தான்.
உலகமே இருண்டது தேவிக்கு. போக வழியில்லாமல், எங்கு செல்வது என்று தெரியாமல் கடைசியில் பெற்றோரிடமே வந்து சேர்ந்தாள். மகள் நிற்கதியாய் நிற்பதைப் பார்த்த பெற்றோர் இரக்கப்பட்டனர்.
ஆனால், ராஜன் அவளை ஏற்க மறுத்தான். தேவியின் பெற்றோரும், ராஜனின் மனைவியும் விடாமல் வற்புறுத்தி அவளை எப்படியோ வீட்டிற்குள் அழைத்துக்கொண்டனர்.
கணவன் இறந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத தேவி, அண்ணனின் வசைப்பாட்டை வாங்கிக்கொண்டே தினமும் சாகாமல் சாவார். வீட்டிலுள்ள மூவரும் அவளைத் தேற்றுவர். பிரார்த்தனா பிறந்தபோது, முடியாமல் படுத்த படுக்கையானாள் தேவி.
பிஞ்சுக் குழந்தைக்கு பெயரை மட்டுமே அவளால் வைக்க முடிந்தது. அடுத்த மூன்று மாதங்களிலேயே அவளும், கணவனுடன் சென்று சேர்ந்து கொண்டாள்.
பிறந்து மூன்றே மாதங்களில் அநாதையாகிவிட்டாள் பிரார்த்தனா. பிஞ்சுக் குழந்தையின் அழுகையைப் பார்த்து இவர்கள் மூவரும் தினமும் அழுதுகொண்டிருப்பர்.
“இந்த அநாதையக் கொண்டு போய் ஏதாவது ஆசிரமத்துல விட்டுட்டு வந்துருங்க. தொல்லை ஒழியட்டும்.” என்று மனசாட்சியே இல்லாமல் பேசுவார் ராஜன்.
அவர் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று அவனது மனைவி ராதாமணி, அந்த நிமிடத்திலிருந்தே பிரார்த்தனாவிற்கு தாயாய் மாறிப் போனாள். அவளுக்கான அனைத்து கடமைகளையும் செய்தாள். ஏற்கனவே ராஜனிடமிருந்து திட்டு வாங்கும் ராதாமணி, இன்னும் அவருடைய கோபத்திற்கு ஆளானார்.
“உனக்கு என்ன திமிர் இருந்தா இந்த அநாதைய வளர்க்கறேன்னு கங்கனம் கட்டிட்டுத் திரிவ.? அப்போ நான் சொன்னதுக்கு என்ன மதிப்பிருக்கு.? ஒழுங்கா போய் ஆசிரமத்துல விட்டுட்டு வந்து வேலையப் பாரு. உனக்கு ஒரு பையன் இருக்கான்னு ஞாபகம் இருக்கா.? அவன யாரு பார்ப்பா.?” என்று சண்டையிட்டார்.
“அவன் ஒன்னும் சின்னக் குழந்தையில்ல. அவனுக்கு இப்போ ஏழு வயசாகுது. உங்களப் பார்த்து நல்லாப் பேசவும் ஆரம்பிச்சிட்டான். அவன நான் தான் பார்க்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல. அவனாவே எல்லாத்தையும் செஞ்சுக்குவான். ஆனா, இந்தப் பச்சக் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு.? பிறந்தப்பவே அம்மா, அப்பாவப் பறிகொடுத்துட்டு…” என்று அழுதார்.
“முடியாது. நான் இவள எங்கயும் விட மாட்டேன். அம்மா, அப்பா இல்லாம வளர்றது எவ்வளவு கொடுமைன்னு எனக்குத் தெரியும். அந்தக் குறை இவளுக்கு வந்திடக் கூடாது. இவள நானே வளர்ப்பேன். அவ வளர்ந்து படிச்சு, பெரியவ ஆனதும், அவளே அவள நிலைநிறுத்திக்க நான் சொல்லிக்கொடுப்பேன். அதுவரைக்கும் நீங்க எதுவும் பேசவேண்டாம்.” என்று எதிர்த்துப் பேச,
அன்றிலிருந்து தினமும் சண்டை தான் இருவருக்கும். எத்தனையோ விஷயங்களில் விட்டுக்கொடுத்துப் போன ராதாமணி, பிரார்த்தனாவின் விஷயத்தில் மட்டும் பிடிவாதமாய் இருந்துவிட்டார். தினமும், பேசிப் பேசி ராஜனுடைய வாய் ஓய்ந்து போனதுதான் மிச்சம்.
ராதாமணி அசரவே இல்லை. அடித்தும் பார்த்துவிட்டார். முதலிலெல்லாம் மகனுக்காக பரிந்து பேசிய பெற்றோர், பிரார்த்தனாவின் விஷயத்திலிருந்து ராதாமணிக்கு ஆதரவாக இருந்தனர். அதுவும் ராஜனுக்கு பொறுக்கவில்லை.
மகனை தனக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் பயன்படுத்திக்கொண்டார் ராஜன். அவரது மகன் செல்வாவும் அப்பா சொல்வது தான் சரி என்று பேச ஆரம்பித்தான். முதலில், “குட்டிப் பாப்பா” என்று கொஞ்சச் சென்றவனிடம் அதையும், இதையும் சொல்லி அவனுடைய மனதையும் மாற்றிவிட்டார் ராஜன்.
இப்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு, பிரார்த்தனா அவனுக்கு வேண்டாதவளாகிவிட்டாள். சிறு வயது முதலே அவளை வேண்டுமென்றே, “கருப்பி.. கருப்பி…” என்றுதான் அழைப்பான்.
“டேய்.. அவள ஏண்டா அப்படிக் கூப்பிடற. துரை ரொம்ப சிகப்போ.? இன்னொருவாட்டி அப்படிக் கூப்பிட்ட, பெல்ட்லயே அடி விழும்.” என்று மிரட்டுவார் அவர்களது தாத்தா பெரியசாமி.
“ஏன் அத்த, செல்வா மாமா எப்பவும் என்னை கருப்பின்னு கூப்பிடறான்.?” என்று சிறிய பெண்ணாய் இருக்கும் போது கேட்பாள் பிரார்த்தனா.
“அவன் கிடக்கறான். அவன் சும்மா விளையாட்டுக்குச் சொல்றான். நீ தங்கம் மாதிரி கோதுமை நிறம். அவ்ளோ சீக்கிரம் யாரும் அந்த நிறத்தில இருக்க மாட்டாங்க கண்ணு?” என்று அவளை உயர்த்திப் பேசுவாள் ராதாமணி.
அத்தையின் அன்பினாலேயே வளர்ந்தாள் பிரார்த்தனா. செல்வா படிக்கும் பள்ளியில் பிரார்த்தனாவை சேர்க்க நினைத்தார் ராதாமணி. படிப்புக்குக் காசு எதுவும் தர முடியாது என்று சொல்லிவிட்டார் ராஜன். துணி தைத்துக் கொடுத்து அதில் வரும் வருமானத்தில் அவளைப் படிக்க வைப்பேன் என்று சொன்னார் ராதாமணி.
“என்னுடைய பென்ஷன் பணம் தரேன் மா. அதையும் அவ படிப்பு செலவுக்கு எடுத்துக்கோ.” என்பார் பெரியசாமி.
“தாத்தா, நான் கவர்மெண்ட் ஸ்கூலுக்குப் போனா, செலவு ரொம்பக் கம்மின்னு பக்கத்து வீட்டு நிம்மி சொன்னா. நானும், அவளோட அதே ஸ்கூலுக்குப் போறேன்.” என்று அந்த வயதிலேயே நிலைமையைப் புரிந்து பேசும் பிரார்த்தனாவைக் கட்டிக்கொண்டு அழுவார் ராதாமணி.
அவள் சொன்னபடியே அருகே இருந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலேயே பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படித்தாள். இதற்கிடையில், அவளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளுக்கெல்லாம் எந்த முறையையும் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்த ராஜனை எப்படியோ சம்மதிக்க வைத்து நடத்தி முடித்தனர்.
செலவையெல்லாம், ராதாமணியும், பெரியசாமியும் தான் பார்த்துக்கொண்டனர். அதற்கே ராஜனுக்கு முகமில்லை. எத்தனை தைரியம்? தான் இல்லாமல் இத்தனை காரியத்தையும் தன்னுடைய துணை இல்லாமல் செய்து, இந்த அநாதையை வளர்த்தும் விட்டிருக்கிறார்கள் என்ற ஆங்காரமும் எழுந்தது அவரிடம்.
அந்தக் கோபத்திலேயே செல்வத்திடம் அனைத்தையும் சொல்லி அவனை ஏவ விட்டு வேடிக்கை பார்த்தார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை எழுவது வாடிக்கையானது.
ஆனால் ராதாமணியோ, “இத்தன நாள் உங்கப்பன் செய்யாத கூத்தா.? அதையே ஏறி மிதிச்சிட்டுப் போயிட்டேன். நீ என்னடா சின்னப்பய…” என்று சொல்லி அவனையும் அசர வைத்தார்.
அத்தனை தடைகளையும் மீறி அவளது அன்னைக்கும் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்தார் ராதாமணி. அதே பாசமும், அன்பும் பிரார்த்தனாவுக்கும் அவர் மேல் உண்டு. அவர் அடிக்கடி சொல்லும் ஒரே விஷயம் தான் அவளுக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.
“எப்படியாவது படிச்சு முன்னேறி வந்துடு கண்ணு. இந்த ஆளு முன்னாடி நீ யாருன்னு காட்டிடு. அப்போதான் உங்கப்பா, அம்மாவோட ஆத்மா சந்தோஷப்படும்.” என்று சொல்வார்.
அவளது அப்பா, அம்மா சந்தோஷப்படுவார்களோ, இல்லையோ அவளுக்குத் தெரியாது. ஆனால், இத்தனை துயரங்களையும் தாண்டி தன்னை வளர்த்த அத்தைக்காக கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் தான் படித்தாள்.
நல்லபடியாக பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தவள் இன்று ஒரு கம்பெனியின் நேர்காணலுக்காக சென்றுகொண்டிருக்கிறாள்.
நினைவிலிருந்து மீளாதபடி அதே நினைவிலேயே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தவள், கோவை மாநகரத்தின் முக்கிய சாலையாம் பீளமேடு சாலையின் அந்த போக்குவரத்து நெரிசலில், தனக்குப் பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்த காரின் வலது பக்கவாட்டுக் கண்ணாடியின் மேல் மோதிவிட்டாள். அதன் மேல் இடித்த பின்பே அவளுக்கு நினைவு தெளிந்தது.
தான் செய்த தவறை அவள் உணர்ந்து அந்த வண்டிக்கு பின்னே நகர்ந்து செல்ல முயன்றாள். அந்த வெள்ளை நிற உயர்ரக காரை செலுத்திக்கொண்டிருந்த கம்பீரமான இளைஞன், கோபத்தில் காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கிப் பார்த்தான்.
“ஏய்.. இடியட். கொஞ்சமாவது அறிவிருக்கா.? வண்டி ஓட்டத் தெரியுமா.? தெரியாதா.? இப்படி வந்து இடிச்சு கண்ணாடிய ஒடச்சிருக்க” என்று திட்ட ஆரம்பித்திருந்தான்.
அவன் திட்டுக்களைக் கேட்டு செய்வதறியாது நின்றுகொண்டிருந்தாள் பிரார்த்தனா…
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே...
நேர்காணலுக்குப் பலர் வந்திருந்தார்கள். ஏக கூட்டம். பின்னே, கோவையின் பிரபலமான ஸ்பின்னிங் மில் கம்பெனிகளில் ஒன்றான ராம் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் தான் நேர்காணலை நடத்துவது.
கோவையின் முக்கியமான பருத்தி ஆடைகளை எக்ஸ்போர்ட் செய்யும் கம்பெனிகளில் ஒன்றான இந்தக் கம்பெனி, லண்டனிலும் அதன் கிளையைக் கொண்டிருக்கிறது. இந்தக் கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமும் அதிகம், சலுகைகளும் அதிகம்.
அதே போல், முக்கிய விழாக்கள் என்றால் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் போனஸூம் அதிகம். அதனால், இதைப் பற்றி தெரிந்தவர்கள் எவராய் இருந்தாலும் இந்தக் கம்பெனியில் வேலை செய்யவே விரும்புவர்.
கம்பெனியின் சில முக்கியமான இடங்கள் காலியானதால் தான் இந்த நேர்காணலை அறிவித்திருந்தார்கள். கேள்விப்பட்ட பலர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
அதிலிருந்து மொத்தம் ஐம்பது பேரை மட்டுமே தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைத்திருந்தனர். இதிலிருந்து மொத்தம் பத்துப் பேர் மட்டுமே பணியிடங்களுக்கு நிரப்பப்படுவார்கள். அப்படித் தேர்வாகியிருந்தவர்களில் பிரார்த்தனாவும் ஒருத்தி.
அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்து சற்று மிரண்டு தான் போனாள். “விநாயகா, இத்தனை பேர் இருக்காங்க. இவங்களையெல்லாம் மீறி எனக்கு இந்த வேலை கிடைக்குமா.?” என்று தனக்குள்ளேயே கேள்வியைக் கேட்டுக்கொண்டாள்.
தனது பக்கத்து வீட்டுத் தோழி நிம்மி மூலமாகத்தான் பிரார்த்தனாவுக்கு இங்கே வேலை காலியாக இருப்பதைப் பற்றித் தெரியும். படிப்பு முடிந்து ஒரு மாத காலமே வீட்டில் இருந்தவளை ராஜனும், செல்வாவும் ஒட்டுமொத்தமாய் நோகடிக்க,
கடவுள் புண்ணியத்தால், அவள் தோழி மூலமாக இந்த விவரம் தெரிந்து அதற்கு விண்ணப்பித்து அதில் தேர்வும் ஆனாள். நேர்காணல் என்பது அவளுக்குப் புதிது என்றாலும், கல்லூரியில் தெரிந்த பேராசிரியர்கள் உதவியால் அதற்கும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
“பிரார்த்தனா…” என்ற ஒற்றை அழைப்பில் திடுக்கிட்டவள், கூப்பிட்டவரைப் பார்க்க, “உங்களக் கூப்பிடறாங்க.” என்று சொன்னதும், ஒரு நொடி அவளது உடல் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், சற்று மனதைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றாள்.
“மே ஐ கம் இன் மேம்.” என்று கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தவளை,
“யெஸ். கம் இன்.” என்ற இனிய குரல் அழைத்தது.
குரலைக் கேட்டதும் தான் சற்று பயமே தெளிந்தது பிரார்த்தனாவுக்கு. அங்கே ஒரு நவநாகரிக மங்கை, வெளிநாட்டு பாணியில் உடை அணிந்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளிடம் சென்று தனது ஃபைலைக் கொடுத்தவள், “யா, சிட் அவுன்.” என்று அவள் அனுமதி அளித்ததன் பிறகே அமர்ந்தாள்.
அவள் சிறிது நேரம் அவளது ஃபைலை ஆராய்ந்தாள். அப்போது பிரார்த்தனா அந்த மங்கையின் தோற்றத்தையும், அழகையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அழகென்றால் இப்படித்தான் இருக்குமா.? என்றொரு கேள்விக்கு ஆமென்றால் அது அவள் தான்.
அத்தனை அழகு, வசீகரம், காந்தக் கண்கள், அழகான சிரிப்பு, ஆண்களைக் கட்டிப் போட்டிழுக்கும் அவளது தோற்றத்தை அவளால் வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை. ஒரு பெண்ணான தன்னையே கட்டிப் போட்டு விட்டது அவளது அழகு என்று நினைத்தாள்.
அவளது ஃபைலை ஆராய்ந்து முடித்தவள், “ஓகே மிஸ். பிரார்த்தனா. நைஸ் நேம். உங்க ப்ரொஃபைலப் பார்த்தேன். வெரி இம்ப்ரஸ்ட். ஜஸ்ட் டெல் மீ அபௌட் யுவர்செல்ஃப்.” என்று அவள் கூற,
அவள் ஆங்கிலத்தில் மொழிந்தது, “முதலில், என்னைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பை அளித்ததற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர் பிரார்த்தனா. நான் கோவை சிங்காநல்லூரிலிருந்து வருகிறேன். நான் எனது கல்லூரிப் படிப்பு பி.பி.ஏவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முடித்தேன். எனது பொழுதுபோக்குகள் என்றால், செய்தித்தாள் படிப்பது, வீட்டு வேலை செய்வது, மற்றவர்களுக்கு உதவுவது, விளையாடுவது.” என்று சொல்லிமுடித்தாள்.
“யா. வெரி குட் மிஸ்.பிரார்த்தனா. தென்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அந்த அறையின் கதவு திறக்கும் ஓசை கேட்டது. யாரென்று பார்த்தாள் அந்த அழகு மங்கை.
பார்த்தவள் புருவம் சுருக்கி, “அபி.. வாட் இஸ் திஸ்.? இதுதான் நீ இண்டர்வியூக்கு வர நேரமா.? அல்மோஸ்ட் ஹால்ஃப் ஆன் அவர் லேட்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அங்கே வந்தவன், அவளுக்கு அருகே இருந்த சேரில் அமர்ந்தான்.
அப்போதுதான் அவனைப் பார்த்து அதிர்ச்சியானாள் பிரார்த்தனா. அதுவரை அவளைக் கவனிக்காதவனும், பிரார்த்தனாவைக் கண்டு அதிர்ச்சியாகி முறைத்தபடி பார்த்தான்.
அது ஏன்? என்பதைப் பார்ப்போம்…
பிரார்த்தனா தெரியாமல் இடித்து காரின் பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்து விட, காரிலிருந்து இறங்கி அவளைத் திட்டியவன் தான் அவன் அபிஷேக்.
நன்றாக அவனிடமிருந்து திட்டு வாங்கியவள், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நிற்க, சிக்னலும் பச்சைக்கு மாற, பின்னால் வந்தவர்களும் சத்தம் போட வேறு வழி தெரியாமல் வண்டியை சற்றுத் தள்ளிச் சென்று அவனுடைய திட்டுக்களை சட்டை செய்யாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாள் பிரார்த்தனா.
நேர்காணலுக்கும் நேரமாகிவிட்ட கவலை அவளுக்கு. அவனோ, அனைத்தையும் செய்துவிட்டு இங்கே வந்து பொம்மை போல் அமர்ந்திருப்பவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ… அபி.. ஸீ.. நான் உன்கிட்ட தான் பேசிட்டிருக்கேன். நீ என்னடான்னா, அந்தப் பொண்ணையே பார்த்துட்டிருக்க.?” என்று அவள் அதட்டிக் கேட்டாள்.
“ஏன் லேட்டுன்னு தான கேட்ட.? இதோ இங்க உட்கார்ந்திருக்காங்களே, இந்த மேடம் கிட்ட கேளு. அவங்க பதில் சொல்லுவாங்க.” என்றதும், அவளோ பிரார்த்தனாவைப் புரியாமல் பார்த்தாள்.
“ஸாரி.. ஸாரி சார்.. நான்.. என்ன பண்றதுன்னு தெரியல..” என்று பிரார்த்தனா திக்கி திக்கிப் பேச,
“என்னாச்சு.? ப்ளீஸ், அபி. யூ ஜஸ்ட் டெல் மீ.” என்று அவள் கத்த,
“மேடம்க்கு யாரு டிரைவிங் லைசன்ஸ் கொடுத்தாங்கன்னு தெரியல. அவன் மட்டும் என் கைல கிடைச்சான்னா, அவ்ளோதான்.” என்று திரும்பவும் அவளைப் பார்த்துக்கொண்டே, விரல்களைக் கோர்த்து முறுக்கினான்.
“ஓ காட்! அபி.. நீ இன்னும் எதையும் முழுசா சொல்லல.” என்று அவள் எரிச்சலாக,
“மேடம் அவங்க ஸ்கூட்டிய ஓட்டிட்டு வந்து, என் காரோட ரைட் சைட் மிரர்ர ஒடச்சிட்டாங்க. அதுக்கு ஒரு சாரி கூட கேட்கல. நான் திட்டத் திட்ட அப்படியே ஓரமாப் போய் எஸ்கேப்பாகிட்டாங்க. சைட் மிரர் இல்லாம சிட்டிக்குள்ள நான் எப்படி வண்டி ஓட்டறது.? மெக்கானிக்குக்கு போன் பண்ணி எடுத்துட்டுப் போகச் சொல்லிட்டு, கம்பெனி கேப்க்கு போன் பண்ணி வரச்சொல்லி வரதுக்கு லேட் ஆயிடுச்சு.” என்று விவரித்தான்.
அப்போதுதான், அவளுக்கு அனைத்து விவரங்களும் தெரியவர நமுட்டுச் சிர்ப்பைச் சிரித்தபடி இருந்தாள். அதைப் பார்த்து மீண்டும் எரிச்சலானவன்,
“ஏய்.. அவ கார் கண்ணாடிய ஒடச்சிட்டான்னு சொல்லிட்டிருக்கேன். நீ என்னடான்னா சிரிச்சிட்டிருக்க.?” என்று அவன் கோபப்பட்டான்.
ரோலர் சாரை இழுத்துக்கொண்டு அவனுக்கு அருகில் நெருக்கமாய்ச் சென்றவள், “அதான் இன்சூரன்ஸ் போட்டிருக்கல்ல. அதுல க்ளைம்ப் பண்ணிக்கலாம். இதுக்குப் போய் ஏன் இவ்ளோ டென்ஷன்.? அவங்க வேணும்னே பண்ணிருக்க மாட்டாங்க. அதான் ஸாரி கேட்டுட்டாங்கள்ல.” என்று அவனது தாடையைப் பிடித்தபடி குழைந்தாள்.
இருவரையும் நெருக்கமாய்ப் பார்ப்பதற்கு நாயகனைக் கொஞ்சும் நாயகியைப் போல் தெரிந்தது பிரார்த்தனாவிற்கு. எப்படியும், இவர்கள் கண்டிப்பாக காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
“சரி, சரி.. எல்லாம் ஓகே ஆயிடும். இவ்ளோ நேரம் நான் மட்டுமே 5 பேர இண்டர்வியூ பண்ணிட்டேன். நீயும் இருந்தா பெட்டரா இருந்திருக்கும். இவங்கள இப்போதான் இண்டர்வியூ பண்ணிட்டிருந்தேன். இன்னும் முடிக்கல. கண்டினியூ பண்ணலாமா.?” என்று அவள் வேண்டுகோள் வைக்க, விருப்பமில்லாமல் தலையாட்டினான் அவன்.
“ஓகே, பிரார்த்தனா. டெல் மீ அபௌட் யுவர் ஃபேமிலி.” என்று கேட்டாள் அவள்.
“எங்க வீட்டுல தாத்தா-பாட்டி இருக்காங்க. தாத்தா பெரியசாமி ஓல்ட் ஈபி லைன் மேன், இப்போ ரிட்டயர்ட் ஆகிட்டார். பாட்டி லட்சுமி ஹவுஸ் வைஃப். அப்பறம் மாமா ராஜன் இப்போ ஈபி ஆஃபீசரா வொர்க் பண்ணிட்டிருக்கார். மாமாக்கு ஒரே பையன் செல்வா, வீட்டு பக்கத்துல இருக்க ஒரு மில்லுல வொர்க் பன்றார்.” என்று சொல்லிமுடிக்கும் போது, அவர்கள் இருவரின் முகத்திலும், கேள்விக்குறிகள்.
ஒரு பெருமூச்சொன்றை விட்டுவிட்டு நிமிர்ந்தவள், “அவங்க ரெண்டு பேரும், கடவுள்கிட்ட பத்திரமா இருக்காங்க.” என்று சொல்லிமுடிக்கும் போது, அவளது கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர்.
அதைக் கேட்டதும், அவர்களது முகமே சங்கடப்பட்டதை உணர்த்தியது அவளுக்கு.
“ஸாரி.. ஸாரி.. மிஸ்.பிரார்த்தனா. தெரியாம கேட்டுட்டேன். ஐ ஆம் ரியலி ஸாரி..” என்று அவளது வருத்தத்தைத் தெரிவித்தாள்.
“இருக்கட்டும் மேம். நீங்க எதுவும் வேணும்னு கேட்கலையே.” என்று அவள் கண்ணீரையும் தாண்டி சிரித்த நொடி அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவளிடம் மீண்டும் அவள் படிப்பு சம்பந்தப்பட்ட சில கேள்விகளையும், தங்களது கம்பெனி சம்பந்தமான சில கேள்விகளையும் கேட்டறிந்தனர்.
“ஓகே மிஸ்.பிரார்த்தனா. நீங்க வெளில வெய்ட் பண்ணுங்க. கூப்பிடறோம்.” என்று சொல்லி புன்னகைத்தவளுக்கு,
“தேங்க் யூ மேம். தேங்க் யூ சார் அண்ட் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி எகைன்.” என்று விடைபெற்றவளைப் பார்த்து அவனும் கடமைக்குப் புன்னகைத்தான்.
நேரங்கள் கடந்தன. கிட்டத்தட்ட அனைவரையும் மாலை 4 மணி வரை நேர்காணல் செய்துகொண்டிருந்தனர். முடிவு தெரியும் வரை அனைவரும் அங்கேயே காத்திருக்க வேண்டியதாய் இருந்தது.
உள்ளே, அங்கே அவர்கள் இருவருக்குமிடையே தேர்வு செய்வதில் பயங்கர விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. அதிலும் பிரார்த்தனாவை தேர்வு செய்வதுதான் குழப்பமே.
“ஸீ.. நீ அந்தப் பொண்ண பரிதாபப்பட்டு எடுத்தா, அது நல்லா இருக்காது. அந்த மாதிரி பாவம் பார்த்து வேலை கொடுத்தா எத்தனை பேருக்கு வேலை கொடுக்கறது.?” என்றான் அபிஷேக்.
“அபி, நான் ஒன்னும் பாவம் பார்த்து அந்தப் பொண்ண செலக்ட் பண்ணனும்னு நினைக்கல. அவ பி.பி.ஏ ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருக்கா. ஒவ்வொரு செமஸ்ட்டர்லயும் அக்கவுன்ட்ஸ்ல மட்டுமே ஃபுல் மார்க் ஸ்கோர் பண்ணிருக்கா. அத விட இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்ன தெரியுமா?” என்று அவள் கேட்க, அவளைக் கேள்வியாய்ப் பார்த்தான்.
“சி.ஏ பௌன்டேஷன் கோர்ஸ (முதல் நிலை) 60% ல பாஸ் பண்ணிருக்கா. அது எவ்ளோ பெரிய விஷயம். நீ எத்தனை வருஷமா ட்ரைப் பண்ணிட்டிருக்க. உன்னால இன்னும் அதைப் பாஸ் பண்ண முடியல. ஆனா, அவ ஒரே எக்ஸாம் தான். அந்த அளவுக்கு டேலண்ட்டான பொண்ணு நம்ம கம்பெனிக்கு கண்டிப்பாத் தேவை.” என்றாள்.
“அதெல்லாம் சரிதான். ஆனா, அது மட்டும் பத்தாதே. ரோட்ல வண்டியக் கூட சரியா ஓட்டத் தெரியாம ஓட்டி கார் கண்ணாடிய ஒடச்சிட்டா. கேட்டா, ஒரு நிலைல இல்லன்னு சொல்றா. ஒரு வொர்க்ல கான்சண்ட்ரேஷன் இல்லைன்னா எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமப் போயிடும். இவ்ளோ படிச்சிருந்தும், திறமையிருந்தும், இந்த மாதிரி சின்ன விஷயத்துல மிஸ்டேக் பண்ற பொண்ணு, எப்படி இந்த வேலைக்கு செட் ஆவா.? இதெல்லாம் நீ யோசிக்கணும். சும்மா திறமைய மட்டும் பார்த்து செலக்ட் பண்ணக் கூடாது.” என்று சொல்ல,
அதுவும் சரியாகப்பட சிந்தனையில் ஆழ்ந்தாள் அந்த அழகு மங்கை.
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
ஒரு வழியாகத் தங்கள் கம்பெனிக்குத் தேவையான பத்துப் பேரை தேர்வு செய்துவிட்டார்கள் இருவரும். பல குழப்பங்களும், சிக்கல்களும் இருந்தாலும், இவர்கள் தான் வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர்.
அங்கே பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவர்கள் அனைவரும் காத்திருந்த இடத்திற்கு வந்து, தேர்வு செய்தவர்களின் பெயரைச் சொல்லி ஒவ்வொருவராய் அழைத்தார்.
தேர்வானவர்கள் ஒவ்வொருவரும் முகம் முழுக்க சந்தோஷத்துடன் ஒரு பக்கமாய் வந்து நிற்க, மற்ற அனைவரும் அடுத்தது நாமாக இருக்க மாட்டோமா? என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பிரார்த்தனாவும் அதே போல் தான், தனது விநாயகரை மனதில் வேண்டிக்கொண்டபடி இருந்தாள். ஆனால், அவர் முடிவில் அவளது பெயரைச் சொல்லவில்லை. ஏமாற்றத்தில் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
தேர்வானவர்களைத் தவிர மற்ற அனைவரும் ஏமாற்றத்துடன் வெளியேற, தேர்வானவர்களை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் அந்த ஊழியர். பிரார்த்தனாவுக்கு வெளியே செல்ல விருப்பமே இல்லை. எப்படியும் இந்த வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் தான் வந்தாள்.
ஆனால், கடவுள் தன்னை ஏன் இந்தளவுக்கு சோதிக்க வேண்டும்? என்றே தோன்றியது. ஒவ்வொரு நாளையும் நரகமாய் கழிக்கும் நேரத்தில் எப்படியாவது ஒரு வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவளுக்கு இந்த ஏமாற்றம் பெரிதாகத் தெரிந்தது.
தான் ஓர் துரதிர்ஷ்டசாலி என்று நினைத்தாள். அப்போது படுக்கையில் கிடந்த போது, கடைசியாய் ராதாமணி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது அவளுக்கு.
“நீ எப்படியாவது ஜெயிச்சிடு கண்ணு. இந்த ஆளு முன்னாடி தலைகுனிஞ்சு கை, கட்டி மட்டும் நின்னுடாத. அது நீ சாகறதுக்கு சமம்.” என்று சொன்னார்.
கிட்டத்தட்ட அழுகை வெளி வந்த சமயம், “இங்க பிரார்த்தனான்றது யாரு.?” என்று மீண்டும் அந்த ஊழியர் வந்து அழைக்க, அழுகையையும் மீறிய அதிர்ச்சியில் கண்களை அவசர அவசரமாய்த் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.
“சார், நான் தான் பிரார்த்தனா.” என்றாள்.
“உங்களக் கூப்பிடறாங்க.” என்று சொன்னபடி சென்றவரின் பின்னால் தொடர்ந்தாள்.
முகத்தை நன்றாக வைத்துக்கொண்டபடி அந்த அறையில் நுழைந்தவள், அங்கே தேர்வானவர்கள் அனைவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
அதே போல், அவர்களுக்கு முன்னே அந்த அழகிய மங்கையும், அபிஷேக்கும் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவளைப் பார்த்ததும் அந்த மங்கை புன்னகை சிந்த, அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவள் வந்த பிறகே, அந்த அழகிய மங்கை எழுந்து நின்று தன் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஹலோ.. ஐ ஆம் அஞ்சலி. இந்தக் கம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர். முதல்ல, உங்க எல்லாருக்கும் கங்க்ராஜூலேஷன்ஸ். இனிமேல் இங்க தான் நீங்க எல்லாரும் வொர்க் பண்ணப் போறீங்க. சோ, இது நம்ம கம்பெனின்ற எண்ணம் இப்போவே உங்க மனசுல வரணும். அதுக்காக நிறைய ஹார்ட் வொர்க் பண்ணனும். ஓகே. எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட்.” என்று சிரித்த முகத்துடன் அளவாய்ப் பேசிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
அப்போதுதான் அவளது பெயர் அஞ்சலி என்று அனைவருக்கும் தெரிந்தது. அவளது அழகைப் பல பேர் புகழ்ந்த வண்ணம் இருந்தனர்.
அடுத்ததாக, அபிஷேக் எழுந்தான்.
“க்குக்க்கும்ம்…” என்று தொண்டையைச் செருமியபடி பேச ஆரம்பித்தான்.
“ஹலோ ஆல்.. ஐ ஆம் அபிஷேக். சி.இ.ஓ ஆஃப் திஸ் கம்பெனி. அஞ்சலி சொன்ன மாதிரி எல்லாரும் நல்லா ஹார்ட் வொர்க் பண்ணனும். அதுதான் எங்களுக்கு வேணும். உழைப்புக்கேத்த ஊதியம் உங்களுக்குக் கொடுப்போம். அண்ட் கங்க்ராஜூலேஷன்ஸ் டூ ஆல்.” என்று சொன்னவன் ஸ்டைலாக தன் பாக்கெட்டில் அணிந்திருந்த கூலிங்க்ளாஸை அணிந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அதன் பிறகு, கம்பெனியைத் துவங்கியது எப்படி? நிறுவியவர் யார்? இப்போது யாரெல்லாம் அதற்குப் பொறுப்பு என்பதைப் பற்றி ஒரு சீனியர் ஆஃபீஸர் அவர்களுக்கு அதைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
அனைத்தையும் அமைதியாக அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். சில விஷயங்களுக்குக் கைத்தட்டல்களும் வந்தபடி இருந்தன. அனைத்து விஷயங்களும் பகிரப்பட்டு அனைவரும் அடுத்த நாளே அங்கே வேலையில் சேர வேண்டும் என்ற விஷயத்தையும் காதில் வாங்கிக்கொண்டு கிளம்பினர்.
அனைவரும் கிளம்பிய பிறகும், பிரார்த்தனா மட்டும் அங்கேயே இருந்தாள். அவளைப் பார்த்த அஞ்சலி, அவளைக் கையசைத்து வருமாறு அழைக்க, அவளிடம் சென்றாள்.
“என்ன மிஸ்.பிரார்த்தனா, ஒரே கன்ஃப்யூஸ்டா இருக்கா.?” என்றாள் அஞ்சலி.
“ஆமா மேடம். நீங்க பத்து பேர மட்டும் தான செலக்ட் பண்றதா சொல்லியிருந்தீங்க. ஆனா, அல்ரெடி செலக்ட் பண்ணதுக்கு அப்பறம் என்னை எதுக்காக கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியல மேடம்.” என்றாள் இன்னும் அந்த எதிர்ப்பார்ப்பு நிரந்தரம் ஆகாததால்.
குழி விழ அழகாய்ச் சிரித்த அஞ்சலி, “என்னமோ, உங்க ப்ரொஃபைல் பார்த்தும், உங்க பேச்சக் கேட்டும் நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆய்ட்டேன். யூ ஆர் சச் அ டேலண்ட் கேர்ள். நீங்க காலைல பண்ண ஒரே ஒரு மிஸ்டேக்க மட்டுமே மனசுல வச்சுட்டு உங்கள ரிஜக்ட் பண்ண எனக்கு மனசு வரல.” என்று திரும்பி அபிஷேக்கைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்.
அவனோ, இவர்களின் உரையாடலை கவனிக்காதவன் போல் தனது அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான். பிரார்த்தனாவுக்கும் அது சங்கடமாகத்தான் இருந்தது. அவளின் முக வாட்டத்தை அறிந்தவளாய்த் தொடர்ந்தாள் அஞ்சலி.
“எனக்கு பர்சனலா ஒரு பி.ஏ வேணும்னு ரொம்ப நாளா தோணிட்டிருந்துச்சு. இவன் கிட்ட சொன்னா, அதெல்லாம் எதுக்குன்னு? சொன்னான். எனக்கு கண்டிப்பா வெணும்னு சொல்லிட்டேன். அதுவும், நீங்க எனக்கு பி.ஏ வா இருந்தா கண்டிப்பா ஹெல்ப்பா இருக்கும்னு தோணுச்சு. அதனால தான், உங்களுக்கு ஒரு போஸ்டிங்க இங்க கொடுத்தாச்சு. அதுக்கும் இதே சாலரி தான் தருவோம். சோ, டோண்ட் வொர்ரி. நாளைல இருந்து ஜாய்ன் பண்ணிக்கோங்க.” என்றாள் புன்னகை மாறாமல்.
அதுவரை அவை அனைத்தும் கற்பனையே என்று நினைத்திருந்த பிரார்த்தனாவுக்கு சிரிப்போடு, அழுகையும் சேர்ந்திட அஞ்சலியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். மகிழ்ச்சியையும் தாண்டிய அழுத்தம் அவள் தொண்டையை அழுத்திட, பேச முடியாமல் திணறினாள்.
அஞ்சலியோ பதறியபடி, “பிரார்த்தனா என்னாச்சு.? எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகறீங்க.?” என்றபடி அபிஷேக்கைக் காண, அவனோ அங்கே ஏதோ நாடகம் ஒன்று நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப் போல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“மேடம், நீங்க பண்ணது எனக்கு எவ்ளோ பெரிய உதவி தெரியுமா.? ஏன்னா, எனக்கு இப்போ இந்த வேலை அவ்ளோ முக்கியம். வேலையில்லாம என்னால அந்த வீட்டுக்குப் போக முடியாது. எனக்கு பர்சனலா நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்கு. நீங்க இன்னைக்கு என்னோட சுய மரியாதையக் காப்பாத்திக் கொடுத்திருக்கீங்க. அதுக்கு நான் எவ்ளோ நன்றிகள் சொன்னாலும் பத்தாது. கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி இந்தக் கம்பெனிக்காகவும், உங்களுக்காகவும் உண்மையா இருப்பேன் மேடம்.” என்று சொல்லி, கண்களைத் துடைத்தாள்.
“அவ்ளோ எமோஷனலா எல்லாத்தையும் சொல்லி வம்புல மாட்டிக்காதீங்க மிஸ்…. என்ன பேரு.?” என்றான் வேண்டுமென்றே அபிஷேக்.
அதைக் கேட்ட அஞ்சலி, “அபி… ப்ளீஸ்…” என்று இழுக்க,
“ப்ச்.. நீ சும்மா இரு. இப்படித்தான் பல பேர் உண்மையா இருக்கோம், அப்படிப் பண்றோம், இப்படிப் பண்றோம்னு சொல்லி கடைசில கால வாரி விட்டுட்டுப் போய்டறாங்க. அதுக்கப்பறம் கஷ்டத்த அனுபவிக்கறது நாம தானே.?” என்று அஞ்சலியிடம் எகிற,
ஒரு கணம் பிரார்த்தனா அமைதியாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனது வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டவள்,
“சார், நான் உங்க கார் கண்ணாடிய வேணும்னா ஒடச்சிருக்கலாம். ஆனா, இவ்ளோ பெரிய கம்பெனி எனக்குக் கொடுத்திருக்க இந்த வேலைல எந்த ஒரு கலங்கமும் வர விடமாட்டேன். மேடமோட நம்பிக்கைய கண்டிப்பா காப்பாத்துவேன்.” என்று உறுதியோடு சொன்னவளை, ஏற இறங்கப் பார்த்தான் அபிஷேக்.
“அதையும் தான் பார்க்கலாம். எவ்வளவு பேர் இந்த மாதிரி டயலாக்கெல்லாம் பேசிப் பார்த்திருப்போம். நீ மட்டும் என்ன விதிவிலக்கா.?” என்று அவளை ஒரு பூச்சியைப் போல் நினைத்தபடி உதாசீணப்படுத்திவிட்டுச் சென்றான்.
“அபி, எப்பவும் அப்படித்தான் பிரார்த்தனா. அவனுக்கு அவ்ளோ சீக்கிரம் யார் மேலயும் நம்பிக்கை வராது. அதுக்குத் தகுந்த மாதிரி தான் எல்லாமே நடந்துச்சு. அதனால அவனையும் ப்ளேம் பண்ண முடியாது. போகப் போக எல்லாமே சரியாகிடும். நீங்க எனக்கு மட்டும் பி.ஏ இல்ல. அவனுக்கும் சேர்த்து தான். சொல்லப்போனா, எங்க ரெண்டு பேரோடவும் நீங்க எப்பவும் இருக்கணும்.” என்றாள்.
அப்போதுதான் பிரார்த்தனாவுக்கு சற்று பயம் உண்டானது. அதை உணர்ந்துகொண்டவளாய் அஞ்சலி,
“ரொம்ப பயந்துக்காதீங்க. நானும், கூடவே தான் இருப்பேன். அதனால சமாளிச்சுக்கலாம். சி.ஏ ஃபர்ஸ்ட் எக்ஸாமே க்ளியர் பண்ணிட்டீங்க. இவன சமாளிக்க முடியாதா.?” என்று அவள் தைரியம் சொல்ல, அப்போதுதான் அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“ஓகே பிரார்த்தனா. நாளைக்குப் பார்க்கலாம். பை..” என்று அவளை மேல் நாட்டு நாகரிக பாணியில் கட்டிப்பிடித்து விடைகொடுத்தாள்.
அஞ்சலியின் ஒவ்வொரு செயலும், அவளை பிரமிக்கவே செய்திருந்தது எனலாம். அவள் ஒரு மாடர்ன் தேவதை போல் தெரிந்தாள் பிரார்த்தனாவிற்கு.
மனம் முழுக்க நிம்மதி பிறந்திருக்க, வீட்டிற்குத் திரும்பும் வழியில் திரும்பவும் அவளின் ஆஸ்தான விநாயகரிடம் சென்று நன்றி தெரிவித்துவிட்டு வந்தாள்.
அருகே வீடு வர வர.. கொஞ்சம் உள்ளுக்குள் பயம் உண்டானது ஏனோ உண்மை. அவளுடைய வண்டியை சென்று நிறுத்தும் போதே, ராஜனுடைய வண்டியும், செல்வாவினுடைய வண்டியும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அவர்கள் இருவரும் வந்துவிட்டார்கள் என்று தெரிந்துகொண்டாள்.
உள்ளே அவள் எப்போது நுழைவாள்.? என்று காத்திருந்ததைப் போல் செல்வா,
“அப்பா, மஹாராணி வந்துட்டாங்க. ஊர் சுத்திட்டு இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சிருக்கு.” என்று வம்பிழுத்தான்.
“டேய். என்னடா பேசற.? அதை நீ பாத்தியா.? எப்பவும் அவளை ஏதாவது சொல்லிட்டே இருக்கறதுதான் உன் வேலையா.? ஊர் சுத்தறதெல்லாம் உனக்குத் தான் கை வந்த கலை. அவளப் பத்தி அப்படித் தப்பா பேசாத.” என்றார் அவர்களது பாட்டி லட்சுமி.
“இங்க பாரு கிழவி, உன் பேத்திக்கு நீயும் சப்போர்ட்டா.? இத்தனை நாள் அந்தம்மா தான் சப்போர்ட் பண்ணிப் பண்ணியே உயிர விட்ருச்சு. அடுத்து நீ நாள எண்ணப் போறியா.?” என்றான் செல்வா கேலியாக.
“டேய்… செல்வா, பொடிப்பயலே! என்ன பேச்சு டா பேசற உன் பாட்டியப் பாத்து? உனக்கெல்லாம் உங்கம்மா போனது கொஞ்சம் கூட வருத்தமாவே இல்லல்ல? ஏதோ மூணாவது மனுஷங்க போன மாதிரி பேசற. எல்லாரோட மனசையும் நோகடிச்சு நோகடிச்சு நீங்க ரெண்டு பேரும் என்னடா சாதிக்கப் போறீங்க? நாங்கல்லாம் போன பிறகு தாண்டா உங்களுக்கு அருமை தெரியும்.” என்றார் அவர்களது தாத்தா பெரியசாமி ஆவேசத்துடன்.
“இந்தாப்பா… சும்மா நீ அவனையே குத்தம் சொல்லாத. அவன் ஒன்னும் தப்பா சொல்லலையே. இவ எங்க போய் சுத்திட்டு வரான்னு யாரு கண்டா? சின்ன வயசுலயே இவளத் தலை மூழ்கிடுங்கன்னு சொன்னேன். கேட்கவே இல்லை. அம்மா, அப்பா, என் பொண்டாட்டின்னு எல்லாரோட உயிரையும் காவு வாங்கிட்டா. இன்னும் மிச்சம் இருக்கறது நாம நாலு பேர் தான். நம்மையும் கொன்னுட்டு தான் இவ அடுத்த வேலையப் பார்ப்பா. அதுக்கப்பறம் அதை உணர்றதுக்கு கூட நாம இந்த உலகத்துல இருப்போமான்னு தெரியல.” என்று ராஜனும் தனது வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டே போக,
வேலை கிடைத்த சந்தோஷத்தைக் கூட அவர்களிடம் உடனே பகிர்ந்து கொள்ள முடியாதவளாய் உள்ளே அழுதுகொண்டே சென்றுவிட்டாள் பிரார்த்தனா. அழுது அழுது ஓய்ந்தவளை அவளது தாத்தாவும், பாட்டியும் சமாதானம் செய்தனர்.
அதன் பிறகு அவர்களிடம் விஷயத்தைக் கூற, இருவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இருந்தாலும், ராஜனும், செல்வாவும் கூறிய வார்த்தைகள் அவளை ஈட்டி கொண்டு எறிந்ததைப் போல் காயம் செய்துவிட இனியும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், செய்வதறியாமல் இருந்தாள்.
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
அடுத்த நாள் கொஞ்சம் முன்னதாகவே கிளம்பிவிட்டாள் பிரார்த்தனா. முதல் நாள் வேலைக்குச் செல்லும் போது, எந்த ஒரு அவசரமும் இல்லாமல் செல்வதற்கு முன்னரே கிளம்பினால், ஏற்றதாக இருக்கும் என்று நினைத்தாள்.
அதே போல், வழக்கமாகக் கோவிலுக்குச் சென்று விநாயகரை தரிசிக்கவும் மறக்கவில்லை அவள். மனதில் ஒருவித உற்சாகமும், பரவசமும் பரவ, வானில் மிதப்பதைப் போல் உணர்ந்தாள்.
இந்நேரம் நேற்று இதே மனநிலையில் இல்லை அவள். வேலை கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற ஒரு சந்தேகம் மனம் முழுவதும் வியாபித்திருக்க வண்டியை ஓட்டித்தான் அபிஷேக்கின் கார் மீது மோதிவிட்டாள்.
அதைப் பற்றி நினைக்கும் போது, அவனுடைய ஞாபகமும் கண் முன்னே வந்து போனது பிரார்த்தனாவுக்கு. நல்ல உயரம், சுண்டிவிட்டால் ரத்தம் சிந்தும் நிறம், ஸ்டைலாக வளர்த்திருந்த தாடி, மீசை. கிட்டத்தட்ட ஒரு பெண் தனக்கு வரப் போகிறவன் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் ஆணழகன்.
ஆனால், அவனது தோற்றத்திற்கு எதிரான குணம் அவனுடையது என்று நேற்று பார்த்த ஒரு தினத்திலேயே தெரிந்துகொண்டாள். அவனுக்குத் தன்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது.
அஞ்சலியால் மட்டுமே தனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது என்பதையும் அவள் நினைக்காமல் இல்லை. அவளால் மட்டுமே இன்று தன் வாழ்க்கை ஒரு நல்ல நிலையை அடையப் போகிறது. அவளுக்கு என்றுமே தான் நன்றிக்கடன் கொண்டிருக்க வேண்டும் நினைத்தாள்.
இதையெல்லாம் நினைத்துக்கொண்டே ராம் ஸ்பின்னிங்க் மில்லினுள் நுழைந்தாள். அங்கே பார்க்கிங்க் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வந்தவளின் சாவி எதேச்சையாக கீழே விழ அதை எடுக்கக் கீழே குனிந்த போது, எதிரே வந்த காரின் ஹார்ன் சத்தம் கேட்டு பதறிப் போனாள்.
நிமிர்ந்து பார்த்தவளுக்கு எதிரே காரில், அபிஷேக் அவளை ஒரு அகங்காரப் பார்வை பார்த்தவாறு இருப்பது தெரிந்தது. அவனைக் கண்டதும் ஏனோ பிரார்த்தனாவிற்கு உடல், கை, கால் என சகலமும் நடுங்கியது.
அவளது நடுக்கத்தைப் பார்த்து கேலியாகச் சிரித்தவன், “போ…” என்ற கட்டளையால் சைகை காண்பித்தான். விட்டால் போதும் என அங்கிருந்து சிட்டாய்ப் பறந்துவிட்டாள் பிரார்த்தனா.
கடவுளே! இவன எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியலையே? இதுல இவனுக்கும் பி.ஏ வா இருக்கணும்னு வேற சொன்னாங்க. என்ன பண்ணப் போறேனோ? என்று யோசித்தபடியே உள்ளே சென்றாள்.
அன்று புதிதாய் அலுவலகத்தில் சேர வந்தவர்களுக்கென்று சில சந்திப்பு ஏற்பாடுகள் நடப்பதை அறிந்துகொண்டு அவர்கள் சொன்ன அறைக்குச் சென்றாள்.
அவளுக்கு முன்னரே ஓரிரண்டு பேர் அங்கே இருந்தனர். ஒரு பெண் இருந்ததால் அவளுடன் சென்று அருகில் அமர்ந்துகொண்டாள். பரஸ்பரம் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.
“நான் பிரார்த்தனா. பி.ஏ வா ஜாய்ன் பண்ணிருக்கேன்.” என்றாள்.
பிறகு, இருவரும் தங்களுடைய இடம், படிப்பு என சகல விஷயங்களையும் பறிமாறிக்கொண்டிக்க மீதமுள்ள அனைவரும் வந்து சேர்ந்தனர். இவர்களைப் போலவே இன்னும் இரு பெண்கள் வந்திருந்தனர்.
அவர்களையும் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக்கொண்டனர். சில மணித்துளிகளுக்குப் பிறகு, அங்கே நேற்று நேர்காணல் நடந்த போது பார்த்த ஊழியர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
அவர்களுக்குப் பிறகு, அபிஷேக்கும், அஞ்சலியும் வந்தனர். வரும் போதே, அஞ்சலி வெள்ளை நிற கோட்டோடு, வெளிநாட்டு பாணி உடையுடன் வந்திருந்தாள். அவளுக்கு அது மிகப் பொருத்தமானதாக இருந்தது.
அதைப் பார்த்த பெண்கள் கண்டிப்பாக பொறாமை கொள்ளாமல் இருந்தால் தான் அதிசயம். புன்னகை மாறாமல் அனைவரையும் பார்த்து “ஹாய்…” என்றாள். ஆண்கள் அனைவர் முகத்திலும் அசடு வழிந்தது.
அபிஷேக் ஒரு மிரட்டலான பார்வை பார்க்க, அப்படியே ஆண்களின் பார்வை அடங்கிப் போனது. அதன் பிறகு தான் பேச ஆரம்பித்தான்.
“ஸீ.. கைஸ். இன்னைக்கு தான் உங்க ஃபர்ஸ்ட் டே. இந்த மன்த் ஃபுல்லா உங்களுக்கு ட்ரெயினிங்க் போகும். அதுல இருந்து நிறைய விஷயங்கள நீங்க கத்துக்க வேண்டியிருக்கும். எனக்கு சின்சியாரிட்டி அண்ட் பன்ச்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். இன்னைக்கு எல்லாரும் ஃபர்ஸ்ட் டே ன்னால சீக்கிரம் வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். இதே மாதிரி தான் தினமும் வரணும். டெய்லி பிரசன்ட் சிக்னேச்சர் வைக்கணும். அதுவும் அந்த டைம்க்குள்ள. அப்படி லேட் ஆச்சுன்னா, கண்டிப்பா உங்க ஹால்ஃப் டே சம்பளம் கட் ஆகும். சின்சியரா வேலை செய்யணும். ஒரு சின்ன தப்பு நடந்தாக் கூட அதுக்கு நீங்க தான் பொறுப்பு. கை நீட்டி சம்பளம் வாங்குனா மட்டும் பத்தாது. அதுக்குத் தகுந்த மாதிரி சின்சியரா வேலை செய்யணும்.” என்று காட்டமாக அவன் சொன்ன விஷயங்களைக் கேட்டு அனைவரின் முகத்திலும் ஈயாடாத குறை தான்.
அவன் பேசியதைக் கேட்டு அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “என்ன எல்லாரும் பயந்துட்டீங்களா?” என்று ஒரு ஏளனப் பார்வை பார்த்தபடி கேட்டான்.
“அபி, இன்னைக்குத்தான் எல்லாரும் புதுசா ஜாய்ன் பண்ணிருக்காங்க. நீ ஏன் எல்லாரையும் இவ்ளோ பயமுறுத்தற?” என்றாள் அஞ்சலி அவனது தோள்களைத் தொட்டு.
அதைப் பார்த்தே பலரது மனதில் இவர்களுக்குள்ளான உறவை முடிவு செய்துவிடத் தோன்றியது. அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டனர்.
அடுத்து, அஞ்சலி பேசினாள். “இங்க பாருங்க கைஸ். இன்னைக்கு உங்களுக்கு ஜஸ்ட் இண்ட்ரோ செஷன் அன்ட் கம்பெனி விசிட் மட்டும் தான். எங்க இண்டஸ்ட்ரீயோட ஒவ்வொரு செக்ஷனையும் நீங்க பார்க்கலாம். உங்ககூட சீனியர் ஆஃபிசர் முத்துவேல் சார் கூடவே வந்து எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணுவார்.” என்று புன்னகையுடன் கூறி முடித்தாள்.
அடுத்து ஒவ்வொருவருடைய அறிமுகப்படலம் நிகழ, அடுத்து வந்த நேரத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு அந்த சீனியர் ஆஃபீசர் முத்துவேல் முன்னே சென்றார். அவரும் கம்பெனியைப் பற்றி நிறைய விஷயங்களைக் கூறிக்கொண்டே வந்தார்.
“1967-ல எங்க பெரிய முதலாளி ராமநாதன் ஆரம்பிச்ச ஸ்பின்னிங்க் மில் தான் இது. ரொம்பச் சின்னதா ஆரம்பிச்சு இன்னைக்கு இந்த அளவுக்கு கம்பெனி வளர்ந்திருக்குன்னா, அதுக்குக் காரணம் அவருடைய கடின உழைப்பும், தொழிலாளர்கள் மேல அவர் வச்ச நம்பிக்கையும், பற்றும் தான்.” என்றார்.
அதைக் கேட்டு அனைவரும் தலையாட்டியபடியே சென்றனர். “வேற எந்தக் கம்பெனிலயும் இவங்கள மாதிரி சம்பளமோ, எக்ஸ்ட்ரா போனஸோ தரது கிடையாது. அதுவும், இங்க வேலை செய்யற தொழிலாளர்கள் எல்லாரையுமே அவங்க குடும்பம்ன்னு தான் சொல்லுவாரு எங்க பெரிய முதலாளி.” என்றார்.
“அவர் இருக்காரா?” என்று தனது சந்தேகத்தைக் கேட்டான் ஒருவன்.
“ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் தவறினார். எங்க ஒட்டுமொத்த தொழிலாளிங்களோட நம்பிக்கையே அவர் தான். எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இன்னமும், அவர் எங்ககூட தான் இருக்காருன்னு நாங்க நம்பறோம். தினமும் வந்து, அவருடைய படத்தைப் பார்த்து கும்பிட்டுட்டு தான் எங்க வேலையவே தொடங்கறோம்.” என்று பக்தி சகிதமாய் சொல்லிக்கொண்டே சென்றார் முத்துவேல்.
“இப்போ, இந்த ஸ்பின்னிங்க் மில் பொறுப்ப அபிஷேக் சார் தான் ஏத்துக்கிட்டிருக்கார். அவரோட அப்பாவும் ஒரு விபத்துல தவறிட்டார்.” என்றார்.
“ஓ! அபிஷேக் சார் உங்க பெரிய முதலாளி பையனோட பையனா?” என்றான் இன்னொருவன்.
“எல்லாம் ஒரு பொது அறிவுக்கு தான் சார்.” என்று அவன் நெளிய, பெண்கள் குழு சிரித்துவிட்டது.
“அபிஷேக் சார், எங்க பெரிய முதலாளியோட ஒரே பொண்ணோட பையன். பெரிய முதலாளியோட பையன் ராமச்சந்திரன், லண்டன்ல இதே பிஸினஸ்ஸ அங்க ரன் பண்ணிட்டு இருக்கார். அவரோட பொண்ணு தான் அஞ்சலி மேடம்.” என்றார்.
“ஓ!!” என்று தனக்குத் தேவையான விவரங்கள் கிடைத்ததாய் நினைத்தான் அவன்.
இதே போல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே, அவர்களது மில்லுக்கும், கம்பெனியின் மற்ற இடங்களுக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
இதற்கே மதியமாகி விட்டது. அனைவருக்கும் அவர்கள் சார்பாக அன்று உணவு வழங்கப்பட்டிருந்தது. கேண்டீனில் சென்று அமர்ந்து சாப்பிட்டனர். இடையே பல உரையாடல்களும் நடந்தன.
“ஆமாமாம். நான் கூட மொதல்ல அவர சைட் அடிச்சேன். அதுக்கப்பறம் அவர் பேசறதக் கேட்டு அமைதியா அடங்கிட்டேன். பார்வைலயே என்னமா மிரட்டறார்?” என்று சிலாகித்தாள் லதா என்ற பெண்.
“அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டின்னு நினைக்கறேன். இல்லைன்னா இவ்ளோ பெரிய கம்பெனிய மெய்ண்டெய்ன் பண்ண முடியுமா? நம்ம கோயம்புத்தூர்லயே இவங்களோடதுதான் நம்பர் ஒன் கம்பெனின்னு பேசிக்கறாங்க.” என்றாள் சுமதி என்ற பெண்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தாள் பிரார்த்தனா.
“அஞ்சலி மேடமும், அபிஷேக் சாரும் முறைப் பசங்கன்னு முத்துவேல் சார் சொல்லும் போது கவனிச்சேன். அநேகமா ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன். ஜோடிப் பொருத்தமும் ரொம்ப நல்லா இருக்கு.” என்றாள் லதா.
அதை பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள் குழு, “பார்த்தீங்களா, நேத்து தான் வந்து அவங்களப் பார்த்தோம். இன்னைக்குத்தான் அவங்க ரெண்டு பேரும் யாருன்னே தெரிஞ்சது. ஆனா, அதுக்குள்ள அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்னு இவங்களே முடிவு பண்ணிட்டாங்க.” என்று சொன்னான் ஒருவன்.
“அந்த அஞ்சலி மேடம் என்ன அவ்ளோ அழகா இருக்காங்க? இந்த மாதிரி பொண்ண நான் நம்ம கோயம்புத்தூர்ல பார்த்ததே இல்ல.” என்று வாயைப் பிளந்தான் ஒருவன்.
“அவங்க லண்டன் ரிட்டன் தம்பி. அவங்க ரேஞ்சுக்கு அந்தப் பொண்ணு சொன்ன மாதிரி அபிஷேக் சார் தான் கரெக்ட்டா இருப்பார். இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறதே அபூர்வமாய்டுச்சு. அதுவும் இந்த மாதிரி கம்பெனில வேலையெல்லாம் அசாதாரணம். அதனால, நாம வந்தோமா, வேலையப் பார்த்தோமா, தேதி ஒண்ணு ஆனா சம்பளம் வாங்குனோமான்னு போய்ட்டே இருக்கணும். அதை விட்டுட்டு தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்தா அசிங்கமாயிடும். அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க.” என்று எச்சரித்தான் இன்னொருவன்.
அதையும் சிலர் ஆமோதித்தவாறே, சாப்பிட்டு முடித்து மீண்டும் அலுவலகம் சென்றனர். அங்கே அவர்களுக்கான இடத்தை முத்துவேல் சொல்ல, அதைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
பிரார்த்தனாவுக்கு மட்டும் அங்கே இடம் என்று எதுவும் இல்லாததால், முத்துவேலிடம் சென்று கேட்டாள்.
“சார், என்னோட சீட் எதுன்னு தெரியல.” என்றாள்.
அவளைப் பார்த்து, “உங்களுக்கு, இங்க தனியா சீட் எதுவும் அலாட் பண்ணல. இருங்க நான் சார்கிட்ட கேட்டு சொல்றேன்.” என்றபடி நகர்ந்தார் முத்துவேல்.
எனக்கென்று தனி இடம் எதுவும் இல்லையா? என்று மனதினுள் கேட்டுக்கொண்டவள், அப்போது அஞ்சலி அந்த இடத்திற்கு வர, அவளிடமும் அந்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“மேடம் என்னோட சீட் எங்க இருக்கு? நான் எங்க இருந்து வொர்க் பண்ணனும்?” என்றாள்.
“ஓ! சாரி பிரார்த்தனா. இங்க பி.ஏன்னு யாரும் இதுவரைக்கும் வொர்க் பண்ணதில்ல. அதனால எங்கயும் சீட் அலாட் பண்ணல. நான் தான் ஃபர்ஸ்ட் டைம் உங்கள பி.ஏ வா செலக்ட் பண்ணியிருக்கேன். ஆனா, நான் இதப் பத்தி யோசிக்கவே இல்ல.” என்றவள்,
“சரி, ஒரு நிமிஷம் வாங்க.” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அவள் அழைத்துக்கொண்டு சென்றதோ, அபிஷேக்கின் அறைக்கு. நல்ல பெரிய விசாலமான அறை அது. அங்கே கம்பெனி நிறுவனர் ராமநாதனின் போட்டோ பெரிதாக மாட்டியிருந்ததிலேயே தெரிந்தது, இது அவருடைய அறைதான் என்று.
இப்போது அது அபிஷேக்கின் அறை. அவனுக்குத் தகுந்தாற் போல் சில நவீன முறைகளைப் புகுத்தி அறையில் பல மாற்றங்களைச் செய்திருந்தான்.
“அபி, இவங்களுக்கு எங்க சீட் அலாட் பண்றது? புதுசா செலக்ட் ஆன எல்லாருமே அவங்க சீட்ல அலாட் ஆய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன பண்றது?” என்றாள் அஞ்சலி.
“நீதான பி.ஏ வேணும்னு கேட்ட. உன் ரூம்லயே ஒரு டேபிள் போட்டு உட்கார வச்சுக்கோ.” என்றான் கேலியாக.
“ஹே மேன். அங்க எனக்கு மட்டும் தான் கரெக்ட்டா இருக்கும். அங்க இன்னொரு டேபிள் போட ஸ்பேஸ் இல்ல. வேணும்னா ஒன்னு பண்ணுவோம். உன்னோட ரூம் ரொம்பப் பெரிசு தான? இங்கயே ஒரு டேபிள், சேர், ஒரு சின்ன ரேக் போட்டு இவங்களுக்கு கொடுத்திருவோம். அவங்க இங்கயே இருக்கட்டும்.” என்று அஞ்சலி சொல்ல,
அபிஷேக்கோ, அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டு சிரித்தான். அதன் உள் அர்த்தம் என்னவென்று தெரியாமல் விக்கித்துப் போய் நின்றாள் பிரார்த்தனா.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
மறுநாள் காலை பிரார்த்தனா, அலுவலகத்தில் நுழைந்த போதே, முத்துவேல் அவளை எதிர்கொண்டார்.
“மிஸ்.பிரார்த்தனா. அபி சார் ரூம்ல உங்களுக்கான டேபிள் போட்டிருக்கோம். நீங்க இனிமேல் அங்க இருந்து வொர்க் பண்ணலாம்.” என்றார்.
அதைக் கேட்டு எச்சிலை விழுங்கிய பிரார்த்தனா, “சார், இங்க வேற எங்கயுமே இடம் இல்லையா.? நான் கண்டிப்பா அங்க தான் உட்கார்ந்து வேலை செய்யணுமா.?” என்று தயங்கியபடியே கேட்டவளைப் பார்த்துச் சிரித்தார் முத்துவேல்.
“இங்க வேற இடத்துல இருந்து நீங்க வேலை பார்க்கறத விட, அபி சார் ரூம்ல இருக்கறது தான் உங்களுக்குப் பாதுகாப்பு. அங்க அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழைய முடியாது மா. அதுவும், அபி சார் ரொம்ப நேரத்துக்கு ரூம்ல இருக்க மாட்டார். அப்பப்போ வெளிய போய்டுவார். அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அவர் ரொம்ப நல்லவர், கண்ணியமானவர்.” என்று அபிஷேக்கைப் பற்றி உத்திரவாதத்தை அளித்துக்கொண்டிருந்தார்.
என்னதான் அவனைப் பற்றி முத்துவேல் நல்லவிதமாகச் சொன்னாலும், அவளை அவனுக்குப் பிடிக்காது என்பதாலேயே இன்னுமே அவனைப் பற்றிய பயம் இருக்கத்தான் செய்தது.
நேற்று கூட அவனது அறையில் இருந்த போது, அவன் பார்த்த பார்வை இன்னும் கண் முன்னே வந்து சென்றது. நீ இங்க தான் வரப்போறியா.? உன்னை ஒரு வழி பண்ணப் போறேன் பாரு. என்று சொல்வதைப் போல் இருந்தது அந்தப் பார்வை.
ஏளனமான சிரிப்பு. அவனது பார்வைக்கும், சிரிப்புக்கும் தனி அகராதியே வைக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு நாட்களிலேயே புரிந்து கொண்டாள். வேறு வழியும் இல்லை. இப்போது சென்றே ஆக வேண்டும், என்ற கட்டாயத்தில் அவனது அறைக்குச் சென்றாள்.
உள்ளே சென்று கதவைத் திறந்த போது, அங்கே அபியும், அஞ்சலியும் பேசிக்கொண்டிருந்தனர். அஞ்சலி அவனது டேபிளின் மேல் அமர்ந்தபடி திரும்பிப் பார்த்தாள்.
அதுவே அவளுக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. அஞ்சலி, பிரார்த்தனாவைப் பார்த்ததும் சிரித்தாள்.
“ஹே… கம் ஆன் பிரார்த்தனா. வாங்க.” என்றாள்.
அவள் உள்ளே நுழைய முற்பட்ட போது, “மேடம்க்கு உள்ள வரும் போது எக்ஸ்கியூஸ் மீ கேட்கணும்னு தெரியாதா.?” என்ற அபியின் அதிகாரக் குரல் கேட்க, வந்தவள் அப்படியே நின்றாள்.
அவளின் பரிதாபமான முகத்தைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தான். அதைப் பார்த்த அஞ்சலி, “அபி, டோண்ட் டூ லைக் திஸ். அவங்க இன்னைக்குத்தான் வொர்க் பண்ண வந்திருக்காங்க. அதுவும், இங்க தான் அவங்களுக்கு டேபிள் போட்டிருக்கோம். அப்போ அவங்களுக்கும் இதுதான ரூம். அவங்க ரூம்க்கு வரும் போது கூட, ஒவ்வொரு டைமும் எக்ஸ்கியூஸ் கேட்கணுமா உனக்கு.?” என்றாள்.
“நான் ஒன்னும் அப்படி சொல்லலையே. இது இன்னைக்கு வேணும்னா அவங்களுக்காக அலாட் பண்ண ரூமா இருக்கலாம். ஆனா, இது தாத்தாக்கு அப்பறம் என்னோட பர்சனல் ரூம். சோ, ஃபர்ஸ்ட் உரிமை எனக்குத்தான். கண்டிப்பா ஒவ்வொரு டைமும் எக்ஸ்கியூஸ் கேட்டுட்டுத்தான் வரணும்.” என்றான் கண்டிப்பான குரலில்.
“ஹே.. மேன். நீ ரொம்ப ஓவரா தான் போற. ஸீ.. அவங்க எனக்கு தான் ஃபர்ஸ்ட் பி.ஏ. அடுத்ததுதான் உனக்கு. சோ, அவங்கள சும்மா நீ இந்த மாதிரியெல்லாம் அதிகாரம் பண்ணக் கூடாது. அது நீ என்னை ஹர்ட் பண்ற மாதிரி.” என்றாள் அஞ்சலி.
“அப்போ, உன்னோட ரூம்லயே கூட்டிட்டுப் போய் உட்கார வச்சுக்கோ. என்னோட ரூம்ல இருந்து வொர்க் பண்ணனும்னா என்னோட பேச்சைக் கேட்டுத்தான் ஆகணும்.” என்று திமிராகப் பேசியவனைப் பார்க்கச் சகிக்காமல் தலை குனிந்தபடியே இருந்தாள் பிரார்த்தனா.
“அபி…” என்று அஞ்சலி இழுக்க, அவனோ எழுந்து கொண்டு, “நான் ப்ரொடக்ஷன் யுனிட்ட விசிட் பண்ணிட்டு வரேன். இந்த மேடம்ம பார்த்து இருக்கச் சொல்லு. என்னோட ரூம்ல ஏதாவது காணோம்னா இவ தான் பொறுப்பு. அதையும் சொல்லிட்டேன்.” என்று சொன்னபடி சென்றுவிட்டான்.
பிரார்த்தனா கிட்டத்தட்ட அழும் நிலைக்குப் போய்விட்டாள். அதைப் பார்த்து பதறிய அஞ்சலி, “பிரார்த்தனா அழாதீங்க. அவன் எப்பவும் அப்படித்தான் பேசுவான். நீங்க அதெல்லாம் கண்டுக்கக் கூடாது. வொர்க் பண்ற இடத்துல இந்த மாதிரியெல்லாம் நடக்கறது யூசுவல். நீங்க உங்க வொர்க்க மட்டும் கான்சண்ட்ரேட் பண்ணுங்க. நான் இருக்கேன். டோண்ட் வொர்ரி.” என்று சமாதானம் செய்தாள்.
“மேம். ப்ளீஸ் எனக்கு வேற எங்கயாவது டேபிள் போட்டுக் கொடுத்திடுங்க. எனக்கு அவரப் பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குது. அவர் சொல்றதெல்லாம் கேட்டா ரொம்பப் பயமா இருக்கு. இப்போ, இந்த ரூம்ல ஏதாவது தெரியாம காணாமப் போனாக் கூட என்னைத்தான் சொல்வாரோன்னு தோணுது. நான் அன்னைக்குப் பண்ண ஒரு தப்பு, என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விடும்னு நான் நினைக்கல மேம்.” என்று தனது ஆதங்கத்தை அவளிடம் கொட்டினாள் பிரார்த்தனா.
“ஐ அண்டர்ஸ்டேண்ட் பிரார்த்தனா. பட், நீங்க ஒரு ஸ்பெஷல் கேண்டிடேட். ஏன்னா, இதுக்கு முன்னாடி உங்க வொர்க்க யாரும் இங்க ஹேண்டில் பண்ணல. நான் தான் உங்களை செலக்ட் பண்ணிருக்கேன். அப்படி இருக்கும் போது, கிடைக்கிற இடத்துல தான் நீங்க இருந்தாக வேண்டிய கட்டாயம். கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அதுக்குள்ள நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன்.” என்றாள் அஞ்சலி.
அஞ்சலி அவ்வளவு தூரம் சொன்ன பிறகு, அவளும் வேறு வழியில்லாமல் தலையாட்டினாள்.
“உங்க ட்ரெயினிங்க் ஹவர்ஸ் ஒன் மன்த்க்கு மத்த எம்ப்ளாயீஸ்ஸோட தான் போகும். மீதி இருக்க நேரத்துல தான் நீங்க உங்க வொர்க்க பண்ற மாதிரி இருக்கும். சோ, ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்க. எதுவானாலும் என்கிட்ட கேளுங்க, சொல்லுங்க. நான் பாத்துக்கறேன்.” என்று தோள்களைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றாள் அஞ்சலி.
அவள் சென்ற பிறகு, அவளுக்காகப் போடப்பட்டிருந்த டேபிளுக்குச் சென்றாள். அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து பார்த்த போது, அபி அமர்ந்திருக்கும் இடம் அவளுக்கு வலது பக்கத்தில் இருந்தது.
அதாவது, அபி அவளை நன்றாகவே பார்க்க முடியும். இடையில் எந்த ஒரு திரையும் இல்லை. அதுவே அவளை திரும்பவும் சலிக்கச் செய்தது. தனது மணிபர்ஸைத் திறந்து சிறிய அளவில் அவள் வைத்திருந்த விநாயகர் அட்டைப்படத்தை எடுத்தாள்.
முணுமுணுவென தனது கவலையை அவரிடம் சொல்லிவிட்டு, டேபிளின் ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டாள். அவளுக்கு அது ஒரு ஆறுதலையும், தைரியத்தையும் தருவதாக உணர்ந்தாள். அவரை வணங்கிவிட்டு எழுந்து தன்னுடன் பயிற்சி எடுத்துக்கொள்ளப் போகும் நபர்களைப் பார்க்கச் சென்றாள்.
மதியம் வரை அவர்களுக்கான பயிற்சி நேரம். அதன் பிறகு, அது சம்பந்தமான வேலைகளை கணிணியில் பார்க்க வேண்டும். அதனால், மதியம் வரை அவர்களுடன் பொழுது போனது அவளுக்கு.
மதிய உணவு உண்டுவிட்டு வந்த பிறகு, மீண்டும் அவளை அறியாமல் பயம் தொற்றிக்கொண்டது. அறைக்குள்ளே செல்ல முனைந்தபோது, அபி காலையில் சொன்னது ஞாபகம் வர, “எக்ஸ்கியூஸ் மீ சார்.” என்றாள் வெளியில் நின்றபடி.
“யா கெட் இன்…” என்ற குரல் உள்ளிருந்து கேட்கவில்லை. தனக்கு மிக அருகில் இருந்து கேட்பதாக உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அபிஷேக்.
அவனைக் கண்டதும், எப்பொழுதும் போல் கை, கால் உதற பதறியபடி கதவுக்குப் பக்கத்தில் ஒட்டி நின்றாள். அவனோ, அவளுக்கு மிக அருகில் வந்து, கதவைத் திறந்தபடி உள்ளே சென்றான்.
சங்கடத்தில் நெளிந்தபடியே அவள் வெளியே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவன், “அதான் வான்னு சொன்னேன் இல்ல.” என்று திரும்பவும் அதிகார தொணியில் கூற,
அவசரமாய் உள்ளே வந்து, நேரே தனது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள் பிரார்த்தனா. கணிணியில் அன்றைய பயிற்சியின் சில முக்கிய விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அதை ஒரு சிறிய அளவிலான நோட்டில் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கவனம் முழுவதும் கணிணியிலேயே இருக்க, அபிஷேக் அவளையே கண்காணித்துக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் அவன் பக்கம் திரும்ப, அவனோ சட்டென பார்வையை கீழே தளர்த்திவிட்டான். அப்போதே, அவளுக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், தனது வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
அப்போது அபிஷேக்கின் அலைபேசி மணி ஒலிக்க, ஆங்கிலத்தில் யாரிடமோ உரையாடிக்கொண்டிருந்தான். பேசிக்கொண்டே, அப்படியே நடந்து வந்து பிரார்த்தனாவின் டேபிளுக்கு முன்பு நின்றபடி பேச ஆரம்பித்தான்.
இதையெல்லாம் பார்த்த பிரார்த்தனா சங்கடத்தில் நெளிந்துகொண்டிருந்தாள். இப்படி ஒரு சிக்கல் தனக்கு இந்த வேலையில் வரும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அந்த சமயம் அவன் நின்றுகொண்டிருக்கும் போது, இருக்கையில் உட்காரலாமா.? வேண்டாமா.? என்ற சந்தேகம் வேறு அவளுக்கு.
அவன் பேசியபடியே திடீரென, “ஒன் செகண்ட்..” என்று மறுமுனையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, பிரார்த்தனாவிடம் திரும்பியவன், “போன் இருக்கா.?” என்றான்.
“சாரி சார். நான் அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸரா சேரணும்னு தான் உங்க கம்பெனி இண்டர்வியூக்கு வந்தேன். ஆனா, இங்க என்னோட திறமைக்கு மதிப்பில்ல. அஞ்சலி மேமோட கன்சர்ன்ல தான் அவங்க பி.ஏ வா சேர்ந்திருக்கேன். ஆனா, அதோட வேலை என்னன்னு எனக்கு இன்னும் முழுசாத் தெரியாது. இருந்தாலும், கத்துக்க முயற்சி பண்ணுவேன்.” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அவளைத் தீவிரமாய் முறைத்தவன், “வாயெல்லாம் நல்லாதான் பேசறீங்க. ஆனா, அந்தளவுக்கு நடந்துக்குவீங்களான்னு பார்க்கறேன். பி.ஏ வா வொர்க் பண்ண சில க்வாலிட்டீஸ் இருக்கணும். டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹேண்ட் இன்னும் இது மாதிரி நிறைய தெரிஞ்சிருக்கணும்.” என்றான்.
“ம்ம்ம்…. ஓகே. என்னோட நம்பர் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க.” என்று அவன் சொல்ல அவள் அதை தனது அலைபேசியில் சேமித்துக்கொண்டாள்.
“தென், இனிமேல் நான் நம்ம கம்பெனி விஷயம் எதுவா இருந்தாலும், உங்களைத்தான் கேட்பேன். டைம்க்கு எல்லா விஷயத்தையும் நோட் பண்ணி வச்சு என்கிட்ட சொல்லணும். எல்லாமே, கரெக்ட்டா இருக்கணும். பீ சின்சியர். ஓகே.” என்று விரலை நீட்டி மிரட்டியபடி சொன்னவனை ஒரு நிமிடம் பார்த்து தலையாட்டினாள்.
அப்போதிலிருந்தே அதை மனதில் பதித்துக்கொண்டாள் பிரார்த்தனா. இனிமேல் இவனால் வரும் பிரச்சினைகளையும், சவால்களையும் எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
அந்த மாதம் முழுவதும் பாதி நேரம் பயிற்சி, மீதி நேரம் அதைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் சில நேரம் அபிஷேக்கின் கட்டளைகள் என்று விரைவாகச் சென்றுவிட்டது பிரார்த்தனாவிற்கு.
ஒரு மாதம் முடிந்த நிலையில் அவளுக்கு அன்றுதான் சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அதை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக வீட்டிற்குச் சென்றவளுக்கு அந்த சந்தோஷம் அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும் என்று தெரியாமல் போனது.
அவள் செல்லும் போதே, செல்வாவினுடைய சத்தம் அந்தத் தெருமுனை வரை கேட்டது அவளுக்கு.
“அவ கண்ட இடத்துக்குப் போய் சுத்திட்டு வருவா, அவ கேட்டா மட்டும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்வீங்க. நானும் உங்க பேரன் தான, ஏன் நான் கேட்டா எதுவும் செய்யமாட்டீங்களோ?” என்று பெரியவர்களைக் கத்திக்கொண்டிருந்தான்.
“டேய். போதும் டா. அவளப் பத்தி இப்படி அநியாயமா பேசாத. நீயும், உங்கப்பணும் வேலைக்குப் போற மாதிரிதான் அவளும் வேலைக்குப் போய்ட்டிருக்கா. அவ பாவம் டா. எல்லாத்தையும் இழந்துட்டா. மீதி இருக்கறது நாம மட்டும் தான். நாமதானே அவளுக்கு எல்லாத்தையும் செய்யணும்.” என்று அவளுக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி.
“ம்ம்.. எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டு செய்யுங்க. அப்படியே ஏக்கர் கணக்கா சொத்து சேர்த்து வச்சிருக்கீங்க பாருங்க. இருக்கறது இந்த ஒரு ஓட்ட வீடு. அதுக்கு இந்த பில்ட்டப்பு. அவள இங்கிருந்து துரத்துனா தான் சரிப்பட்டு வரும்.” என்று செல்வா மீண்டும் அவளைப் பற்றியே சொல்ல,
பெரியசாமி தாத்தா பொறுமை இழந்து, “டேய். என்னடா சொன்ன?” என்று அவனைப் பிடித்தபடி கையை ஓங்கச் செல்ல, பாட்டி அவரைத் தடுக்க, ராஜன் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.
இவை அனைத்தையும் பிரார்த்தனா ஒரு இடத்தில் அழுதுகொண்டே நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அப்பா, எதுக்கு இப்போ அவன அடிக்கப் போற? அவன் என்ன தப்பு பண்ணான்?” என்று மகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தார் ராஜன்.
“டேய், அவன் எப்பவும் என் பேத்தியப் பத்தி தப்பாவே தான் பேசிட்டு இருக்கான். அவளோட நிலைமை தெரிஞ்சும் ஏண்டா அவளைக் காயப்படுத்தறீங்க? அவள வெளிய துரத்தணும்னு சொல்றாண்டா.” என்று அவரிடம் முறையிட,
“இங்க பாரு ப்பா.. அவன் சொல்றதுல எந்தத் தப்பும் இல்ல. இனியும் அந்த அநாதை கழுதைய வீட்டுல வச்சிருக்கறதுல எனக்கும் விருப்பம் இல்ல. அதான், இப்போ வெளிய போய் சுத்திட்டு வராளே, அதுக்கு எதுவும் காசு கொடுக்காமயா இருப்பாங்க? வேற இடம் பார்த்துக்க சொல்லப் போறேன். இதுக்கும் மேல அவ மூஞ்சில முழிக்க முடியாது. எப்பவும் ஏதோ வீட்டப் புடிச்ச தரித்திரம் மாதிரி.” என்று அவர் சொல்லி முடிக்க, சரியாக உள்ளே நுழைந்தாள் பிரார்த்தனா.
“மாமா, நீங்க சொன்ன மாதிரி நான் உங்களுக்கு வேண்டாதவளா இருக்கலாம். ஆனா, அதுக்காக என் மேல இப்படி அநியாயமா பழி போடாதீங்க. நான் ஒன்னும் வெளிய போய் ஊர் சுத்திட்டு வரல. நியாயமா ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்து இன்னைக்குத்தான் முதல் மாச சம்பளம் வாங்கிட்டு வந்தேன். எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? சம்பளப் பணத்தைக் கொடுத்து, உங்க எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கணும்னு நினைச்சேன். ஆனா, நீங்க என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசிட்டீங்க.” என்றாள்.
“ஏய்… என்ன வாய் நீளுது? ஓ! மேடம் இப்போ சம்பாதிக்க ஆரம்பிச்ச திமிருல பேசறீங்க. யாருக்கு வேணும் உன் பணம்? எடுத்துட்டு, மூட்டை முடிச்சைக் கட்டிட்டு எங்கயாவது கண் காணாத இடத்துக்கு ஓடிப் போயிடு. உன்னை இப்பவாவது தலை முழுகறேன்.” என்று ராஜன் அவளை இன்னும் நோகடிக்க,
“டேய்… என்ன வார்த்தை டா பேசற? அவ எங்கடா போவா?” என்று லட்சுமி கதறினார்.
“எத்தனையோ இடம் இருக்கு. அங்க போகச் சொல்லு. என்னை விட்டுப் போனாப் போதும். அவளுக்கு வக்காலத்து வாங்கறேன்னு நீங்க ரெண்டு பேரும் பேசினா அப்பறம் அவ நிலைதான் உங்களுக்கும்.” என்று கண்டித்தபடி உள்ளே சென்றுவிட்டார் ராஜன்.
செல்வா அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி வெளியே சென்றுவிட்டான். பிரார்த்தனாவிற்கு அழுகையும் மீறிய ஒரு வெற்று நிலை மனதிற்குள் வந்தது. அநாதை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம், காயப்படுத்தலாம் என்று சில உறவுகள் நினைத்து விடுவதை அன்றுதான் அவள் கண்கூடாகக் கண்டாள்.
அவளை இழுத்து வைத்து பெரியசாமியும், லட்சுமியும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அவளோ அந்த சமாதான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்குக் காயப்பட்டிருந்தாள்.
“இங்க பாரு கண்ணு, நீ அவன் சொல்றத எல்லாம் பெருசா எடுத்துக்காத. அவன் என்னவோ பேசிட்டுப் போறான். நீ எப்பவும் போல வேலைக்குப் போய்ட்டு வா. எல்லாம் சரியாகிடும்.” என்று லட்சுமி சொல்ல,
“லட்சுமி, நீ கொஞ்சம் சும்மா இரு. அவன் கொஞ்ச நஞ்ச வார்த்தையா பேசினான்? அவன் பேசினத என்னாலயே ஏத்துக்க முடியல, இவ எப்படித் தாங்குவா சொல்லு?” என்று அவரிடம் சொன்னவர், பிரார்த்தனாவிடம் திரும்பி,
“இங்க பாரு கண்ணு, நீ உறவுன்னு நினைக்கிறவன், உன்னை வேண்டாம்னு நினைக்கிறான். அப்படி அவனோட கொல்ற வார்த்தைகளை தினமும் கேட்டுட்டுத்தான் இத்தனை நாளும் நீ சகிச்சிக்கிட்டுக் கிடந்த. ஆனா, நீ இப்போ சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட. உனக்குன்னு ஒரு சுயம் வந்துடுச்சு. இனிமேல் நீ யாரோட பேச்சையும் கேட்கணும்னு அவசியம் இல்ல. நீ வெளிய எங்கயாவது ஹாஸ்டல் பார்த்து சேர்ந்துக்கோ. அங்கேயிருந்தே வேலைக்குப் போ. உனக்கான வாழ்க்கைய எங்களால அமைச்சுக்கொடுக்க முடியுமான்னு தெரியல. நாங்களே இப்பவோ, அப்பவோன்னு இருக்கோம். அதனால, அதையும் நீதான் தேர்வு செஞ்சுக்கணும். கண்டிப்பா உனக்கு நல்ல பையனாவே கிடைப்பான். உன் மனசுக்குப் புடிச்சவனக் கல்யாணம் பண்ணிக்கோ. இனிமேல் நீதான் உன்னையும், உன் வாழ்க்கையையும் பார்த்துக்கணும்.” என்று பெரியசாமி சொல்லி முடிக்க,
அதுவரை மௌனமாய் அழுதுகொண்டிருந்த பிரார்த்தனா, அவர் சொன்னதைக் கேட்டு வாய்விட்டுக் கதறி அழுக ஆரம்பித்தாள். அதைப் பார்த்த பெரியவர்கள் உள்ளம் நொறுங்கிப் போனது.
“கண்ணு, அழாதேடா. எல்லாம் விதி. யாரைக் குத்தம் சொல்ல. உங்க தாத்தா சொன்ன மாதிரி நீ இங்க தினமும் சாகறத விட, தனியா ஒரு இடத்துல இருந்து நாலு பேர் கூட இருக்கற மாதிரி பாரு கண்ணு. உனக்காகப் பொறந்தவன் கண்டிப்பா உன்னைத் தேடி வருவான். உன்னை நல்லபடியா பார்த்துப்பான். பிறந்ததுல இருந்து எல்லாக் கஷ்டத்தையும் நீ அனுபவிச்சிட்ட. ஆனா, இதுக்கப்பறம் நீ கண்டிப்பா சந்தோஷமா தான் இருப்ப. இந்த நாய்களுக்கு உன்னோட அருமை புரியல. எல்லாரும் போனதுக்கப்பறம் தான் இவனுகளுக்கு புத்தி வரும்.” என்றார் லட்சுமி.
“நீங்க ரெண்டு பேரும் இருக்க தைரியத்துல தான் பாட்டி நான் இங்க இன்னமும் சகிச்சிக்கிட்டு இருக்கேன். இப்போ திடீர்னு வெளிய போகச் சொன்னா, நான் உங்கள விட்டுட்டு எப்படிப் போவேன் பாட்டி?” என்றபடி அவரது மடியில் படுத்து மீண்டும் அழுதாள் பிரார்த்தனா.
“கண்ணு, நீ அழுது மட்டும் எதுவும் ஆகப்போறது இல்ல. இனிமேல் தான் நீ தைரியமா இருந்து சாதிக்கணும். முதல்ல அழறத நிறுத்து. எதுக்கெடுத்தாலும் அழுதா, அதுவே உன்னை கோழையாக்கிடும். நீ உங்கம்மா மாதிரி அழுதே வாழ்க்கைய விட்டுடக்கூடாது. உங்க அத்தை மாதிரி திடமா இருந்து கடைசி மூச்சு வரைக்கும் போராடணும். அவ அழுது ஒரு நாளாவது நீ பார்த்திருக்கியா? அதுதான் அவளோட மன தைரியம். நீ அவள நினைச்சுத்தான் இனிமேல் உன்னுடைய மீதி வாழ்க்கைய ஓட்டணும். நான் சொன்ன மாதிரி ஒரு நல்ல ஹாஸ்டல்லா பார்த்து வை. நான் வந்து சேர்த்துவிடறேன்.” என்று பெரியசாமி தீர்க்கமாய்ச் சொல்ல, வேறு வழியில்லாமல் தலையாட்டி வைத்தாள் பிரார்த்தனா.
அடுத்த நாள் காலை முதலே பிரார்த்தனாவைப் பார்த்தபடி இருந்தான் அபிஷேக். அவள் முகவாட்டம் இன்னும் போகவில்லை. அழுது அழுது வீங்கிப் போயிருந்த கண்கள், அவள் அழுததைப் பறைசாற்றியது. அதே போல, அவன் அன்றைக்கு செய்ய வேண்டிய குறிப்புகளை சரியாக அவள் சொல்லவும் இல்லை.
“ஹலோ பிரார்த்தனா… என்ன ப்ராப்ளம்? ஏன் எந்த ஒரு நோட்ஸையும் சரியா சொல்ல மாட்டிங்கறீங்க? இந்த டைம்க்கு நான் எந்த செக்ஷனப் பார்க்கணும்னு, நீங்க தான நோட் பண்ணி வச்சிருக்கீங்க. அப்பறம் என்ன கன்ஃப்யூஷன்?” என்று தன் காட்டமான பார்வையால் அவளைக் கேட்க,
ஏற்கனவே மனதளவில் காயப்பட்டு துவண்டு போய் இருந்தவளுக்கு அவனை எதிர்கொள்ளும் பலமில்லை.
“சார், இதுதான் நீங்க நேத்து சொன்ன டைம் அண்ட் செக்ஷன். நான் கரெக்ட்டா தான் சொன்னேன்.” என்று வாதிட்டாள்.
“என்ன என்கிட்டயே எதிர்த்துப் பேசறீங்களா? அப்போ நான் சொன்ன ஷெட்யூல் தப்பு. அப்படித்தானே?” என்று அவன் எகிறிக்கொண்டு வர,
அவளோ, அவனிடம் வேறு எதுவும் பேச தைரியமில்லாதவளாய், “ஸாரி சார். நான் கரெக்ட் பண்ணிக்கறேன்.” என்றபடி அவளிடத்திற்குச் சென்றாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், சட்டென்று எழுந்து சென்றுவிட்டான். அதைக் கூட கவனிக்க மனமில்லை பிரார்த்தனாவுக்கு. இன்னும் இரண்டு நாட்களில் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டுமே என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்திருந்ததால், அவள் வேறு எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் காட்டவில்லை.
சிறிது நேரத்தில் அஞ்சலியிடமிருந்து இண்டர்காமில் அழைப்பு வர, அவளது அறைக்குச் சென்றாள்.
“பிரார்த்தனா? ஆர் யூ ஓகே? ஏன் ரொம்ப டல்லா இருக்கீங்க? எனி பிராப்ளம்? ஜஸ்ட் டெல் மீ.” என்று அஞ்சலி அவளைப் பரிவுடன் கேட்க,
“மேம். எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. தலைவலியும் அதிகமா இருக்கு. அதான், வேற ஒன்னும் இல்ல.” என்று அவள் மழுப்பியபடி பேச, அதை அஞ்சலி நம்பாவிட்டாலும் அவளாக சொல்லாவிட்டால் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்து அமைதியாக இருந்துவிட்டாள்.
மதிய உணவு இடைவேளையில் தன்னுடன் பணிபுரியும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“உங்களுக்குத் தெரிஞ்ச ஹாஸ்டல் ஏதும் இங்க பக்கத்துல இருக்கா?” என்று அவள் கேட்ட கேள்வியில், அனைவரின் முகத்திலும் கேள்விக்குறிகள்.
அவள் முகமும், கண்களும் ஒரு மாதிரியாக இருப்பதைப் பார்த்தவர்கள், “என்னாச்சு பிரார்த்தனா? எதுக்கு திடீர்னு ஹாஸ்டல் பத்தியெல்லாம் விசாரிக்கற?” என்று கௌசி கூற,
“அது வீட்டுல கொஞ்சம் ப்ராப்ளம். கொஞ்ச நாளைக்கு வீட்டவிட்டு தள்ளி இருக்கலாம்னு தான் கேட்டேன்.” என்று அவள் தயங்கியபடியே கூற,
அவளைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததால், ஓரளவு பிரச்சினையை அவர்களே யூகித்துக் கொண்டனர்.
“ஹூம்ம்.. வீட்ல பிரச்சினையா பிரார்த்தனா?” என்று லதா கேட்க,
“ம்ம்ம்…” என்று தலையாட்டினாள்.
“ஹாஸ்டல் போற அளவுக்கு ரொம்பப் பிரச்சினை அதிகமாயிடுச்சா? ஏன் இப்படி மனசாட்சியே இல்லாம நடந்துக்கறாங்க?” என்று கௌசி கேட்டாள்.
“என்னோட விஷயத்துல கடவுள் மனசாட்சியோட நடந்துக்கறதே பெரிய விஷயம் கௌசி. இதுல நான் சாதாரண மனுஷங்ககிட்ட அதை எதிர்பார்க்கறது ரொம்பத் தப்பு. என்னோட விதி அப்படித்தான் இருக்கு.” என்று விரக்தியுடன் பேசினாள் பிரார்த்தனா.
அவளை மேலும் என்னவென்று கேட்டு நச்சரிக்க விரும்பாதவர்கள், “இங்க பக்கத்துல ஒரு ஹாஸ்டல் இருக்கு. ஆனா, அங்க ஃபுட் கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கிருந்து ரேஸ்கோர்ஸ் கிட்ட வேணும்னா ஒரு ஹாஸ்டல் நல்லா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொல்லியிருக்கா. அங்க வேணும்னா ட்ரைப் பண்ணிப் பாரேன்.” என்றாள் சுமதி.
“ம்ம்.. நீங்க சொன்ன இடத்துக்கு நான் போய்ப் பார்க்கறேன். எவ்ளோ சீக்கிரம் நான் அங்க ஷிப்ட் ஆகறனோ, அவ்ளோ நல்லது.” என்று சொன்னவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது அவர்களுக்கு.
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
புது விடுதியில் தனது முதல் காபியைப் பருகியபடி அமர்ந்திருந்தாள் பிரார்த்தனா. அது காபி என்றே சொல்ல முடியவில்லை. ஏதோ, பழுப்பு நிறப் பொடியை சர்க்கரையோடு சேர்த்து பாலில் கலந்து கொடுத்ததைப் போலிருந்தது அவளுக்கு. வேறு வழியில்லாமல் குடிக்க முயன்றாள்.
முந்தைய தினம் அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பியவள், ஏற்கனவே கிளம்பத் தயாராய் அவளின் பொருட்களை மூட்டை கட்டி வைத்திருக்க, அதை எடுத்துக்கொண்டு பெரியசாமியுடன் கிளம்பினாள். லட்சுமி பாட்டி அழுதுகொண்டே அவளை வழியனுப்ப,
அவள் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்த செல்வா அப்போதுதான் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கிரிக்கெட்டை மும்முரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். ராஜனோ அன்று பார்த்து வீட்டிற்கு வரவே இல்லை.
அங்கிருந்து அவளது ஸ்கூட்டியையும் எடுத்துப் போக விடவில்லை அவர்கள் இருவரும். அது, ராதாமணி அரசின் மானிய விலையில் மேலும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து அவளுக்காக வாங்கிக் கொடுத்த பரிசு. அதனால், அதன் மேல் பிரியம் கொஞ்சம் அதிகம்.
ஆனால், அவர்கள் இருவரும் அது அவர்களுடையது என்று பிடிவாதமாய் இருக்க, அதையும் விட்டுக்கொடுத்துவிட்டாள் பிரார்த்தனா. எப்படி இனிமேல் தனியாக இந்த வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற நினைவுடனே, அந்த இரவில் விடுதிக்கு அவருடன் வந்து சேர்ந்தாள்.
முந்தைய தினமே, பணம் கொடுத்து விடுதியில் தங்க ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்ததால், அவரிடம் விடைபெற்றுவிட்டு நேரே அவளது அறைக்குச் செல்ல முயன்ற போது, அவளின் கரம் பற்றினார் பெரியசாமி.
“இந்தா கண்ணு. இதுல அம்பதாயிரம் இருக்கு. உனக்காக நானும், பாட்டியும் சேமிச்சு வச்சப் பணம். பேங்க்ல தனியா போட்டு வச்சிருந்தேன். அவனுகளுக்குத் தெரியாது. இத உன்னோட அக்கவுண்ட்ல போட்டு வச்சு ஏதாவது பயன்படுத்திக்கோ கண்ணு.” என்று அவள் கையில் பணத்தைத் திணிக்க,
“பரவால்ல கண்ணு. ஏதோ எங்களால முடிஞ்சது. இந்த வயசானவங்களால உனக்கு வேற எந்த ஒரு உதவியும் பண்ண முடியல. வயசுக்கு வந்த புள்ளையப் பார்த்துக்க முடியாத பாவிகளா ஆய்ட்டோம். எங்க மேல ஏதும் கோவமா கண்ணு?” என்று கண்கலங்க நின்ற தாத்தாவைக் கட்டிக்கொண்டாள் பிரார்த்தனா.
“தாத்தா, அப்படியெல்லாம் இல்ல. நான் இத்தனை நாள் இருந்ததே உங்களாலயும், பாட்டியாலயும் தான். அத்தைக்கு அப்பறம் நீங்க தான் எனக்குன்னு இருந்தீங்க. இப்போ, தனியா வந்து இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க தாத்தா? எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் எந்தக் கோவமும் இல்ல. உங்களப் பிரிஞ்சி இருக்கப் போறதுதான் என்னுடைய வருத்தமே.” என்று கண் கலங்கியவளைப் பிடித்து நிறுத்தியவர்,
“நான் அன்னைக்கு என்ன சொன்னேன்? எதுக்காகவும் அழக்கூடாதுன்னு சொன்னேன் இல்ல? நீ எல்லாத்தையுமே தைரியமா எதிர்கொள்ளனும். எதுக்காகவும் பயப்படக்கூடாது. சரியா கண்ணு. நான் முடியறப்போ வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்.” என்று சொன்னவர் விடைபெற உள்ளே சென்றாள் பிரார்த்தனா.
அதை நினைத்தபடியே மேலே பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், நேரம் ஆவதை உணர்ந்து அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானாள். காலை உணவு இட்லி என்ற பெயரில் மாவாய் இருக்க, சாம்பாரிலோ தண்ணியை மொத்தமாய் ஊற்றியதைப் போல் இருந்தது.
சாப்பிடலாமா, வேண்டாமா? என்றாகிவிட்டது அவளுக்கு. சுமதி சொன்ன ரேஸ் கோர்ஸ் ஏரியாவில் இருக்கும் விடுதிக்கு தினமும் பேருந்தில் சென்று வருவது சிரமம் என்று தெரிந்து, அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் விடுதியிலேயே தங்க முடிவெடுத்தாள்.
சுமதி சொன்னதைப் போல் இங்கே உணவு சுமாராகக் கூட இல்லை. மோசமாக இருக்கிறது என்றே நினைத்தாள். இருந்தாலும் வேறு வழியில்லை, சாப்பிட்டால் தான் வேலை செய்ய முடியும் என்று நினைத்தவள், கண்களை மூடிக்கொண்டு இரண்டு இட்லிகளை மென்று விழுங்கினாள். அதற்கு மேல் முடியாமல் எழுந்து கொண்டாள்.
அங்கிருந்து பத்து நிமிட நடை பயணம். அலுவலகத்துக்குள் வந்து தனது அறைக்குள் நுழைந்தாள். இன்னும் அபி வரவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு அவளது அன்றைய குறிப்பேட்டை சரிபார்த்தாள்.
ஏற்கனவே அவனிடம் பல திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்ததால், இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது, அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்க, பார்த்தவளுக்கு அஞ்சலி வருவது தெரிந்தது.
“ஆமா மேம். புது ஹாஸ்டல் சேர்ந்திருக்கேன். இங்க பக்கத்துல தான். வாக்கபிள், டென் மினிட்ஸ் தான் ஆகும். அதான் சீக்கிரமே வந்துட்டேன்.” என்றாள்.
“ஓ அப்படியா.!” என்றவள், வேறு எதையோ கேட்க நினைத்து பிறகு, “சரி, நீங்க வொர்க் பாருங்க.” என்று சொன்னபடி சென்றுவிட்டாள்.
அதன் பிறகு, அபி வந்ததும் அன்றைய அவனது திட்டங்களைக் குறித்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள். அதன் படியே அவனும் அனைத்தையும் செய்தான்.
சொல்லப்போனால், அஞ்சலி அவளை தனக்கு பி.ஏவாக நியமித்திருந்தாலும், அங்கே அவள் பி.ஏ வாக முழு நேரமும் அபியுடன் தான் இருந்தாள்.
அஞ்சலி இதைப்பற்றி ஒரு நாள் அபியிடமும் கேட்டுவிட்டாள். “பிரார்த்தனாவ நான் தான் பி.ஏ வா அப்பாய்ண்ட் பண்ணேன். ஆனா, நீ என்ன மேன் அவள என்னோட ரூம்க்கே வர விடமாட்டிங்கற?” என்றாள்.
“அதுக்கு நான் என்ன பண்றது? நீதான சொன்ன, நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கட்டும்னு. நான் அவள விடமாட்டேன்னு ஒன்னும் சொல்லலையே? நீதான் அவள யூஸ் பண்ணிக்கத் தெரியாம இருக்க.” என்று அவளையே அவன் குறை சொல்ல, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள் அஞ்சலி.
அதே போல், அவனுக்கு எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும், அதை உடனடியாக அவளிடம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் இருந்தான். பாவம், அதற்கு பிரார்த்தனாவால் அவ்வளவு சீக்கிரம் ஒத்துழைக்க முடியவில்லை.
அன்று இரவு, அடுத்த நாள் ஷெட்யூலின் ஒரு பகுதியை மாற்ற நினைத்தவன் அவளுக்கு இரவில் போன் செய்தான்.
இரவு, 11 மணி. கிட்டத்தட்ட தூங்கப் போய்விட்டாள் பிரார்த்தனா. புதிதாக வந்து சேர்ந்ததால் சரியாக தூங்க முடியாமல் இரண்டு நாட்களாக அவதிப்பட்டவளுக்கு, அன்றுதான் ஏதோ அதிசயமாய் தூக்கம் வந்தது.
அதைக் கெடுப்பதைப் போல் இவன் போன் செய்ய பதறிப் போய் போனை எடுத்தாள்.
“ஹலோ.. பிரார்த்தனா. நாளைக்கு ஷெட்யூல்ல ஒரு சின்ன சேஞ்சஸ்.” என்று எடுத்த எடுப்பிலேயே கட்டளையிட்டான்.
தூங்கிவிட்டாளா, தொந்தரவு செய்கிறேனா? என்று எந்த ஒரு வார்த்தையும் இல்லை. எடுத்த உடனேயே அவன் கட்டளையைத் தொடர அய்யோ!!! என்றிருந்தது பிரார்த்தனாவிற்கு.
“சார், நான் அந்த நோட்ஸ ஆஃபீஸ்ல தான் எப்பவும் வச்சிருப்பேன். நீங்க சடர்ன்னா சொன்னா, நான் எப்படி சேஞ்ச் பண்றது? அதுல நீங்க நிறைய சொல்லியிருக்கீங்க.” என்று அவள் சொன்னதும்,
“இதுல கூட இவ்ளோ இர்ரெஸ்பான்ஸிபிளா இருப்பீங்களா? அதைக் கூடவே வச்சிருந்தா என்ன ப்ராப்ளம் உங்களுக்கு?” என்று அவன் எகிற,
“சார், நீங்க இப்படி இந்த நேரத்துல கூப்பிட்டு சேஞ்ச் பண்ண சொல்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா அதை என் பேக்லயே வச்சிருப்பேன். ஆனா, இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் நீங்க சொல்றீங்க. நான் என்ன பண்ண சார்?” என்றாள் பாவமாக.
ஆனால், அவனுக்கு அவள் பேசப் பேச எரிச்சல் தான் வந்தது. “ஜஸ்ட் ஸ்டாப் இட் இடியட். உன்னை மாதிரி எம்ப்ளாயிய செலக்ட் பண்ணாளே அவள சொல்லணும்.” என்று சொன்னவன், அவளது பதிலையும் எதிர்பார்க்காமல் போனை பட்டென்று வைத்துவிட்டான்.
அவ்வளவுதான், அதற்கு மேல் அவள் எங்கே தூங்குவது? ஏற்கனவே தூக்கம் வர பாடுபடும். இதில் இவனது ஏச்சுக்களை வாங்கியதில் தூக்கம் வரவே இல்லை. அப்படி, இப்படி என புரண்டு படுத்தும் வரவில்லை. அப்படியே அவளுக்கு அந்த இரவு கழிந்தது.
அடுத்த நாள் எப்பொழுதும் போல, அபிஷேக் அலுவலகத்தில் நுழைய அங்கே அப்போது வரை பிரார்த்தனா வந்திருக்கவில்லை. சிறிது நேரம் காத்திருந்து பார்த்தான். இந்த நேரத்திற்கெல்லாம் அவள் வந்திருக்க வேண்டும்.
பொறுமை இழந்தவன், அஞ்சலியை இண்டர்காமில் அழைத்தான். அவனது பேச்சிலேயே அவனது கோபம் புரிந்து உடனே வந்தாள் அஞ்சலி.
“என்னாச்சு அபி? ஏன் அவ்ளோ ஹார்ஷா கூப்பிடற?” என்று சொன்னவளை முறைத்தவன்,
“முதல்ல உன்னைச் சொல்லணும். நீ தான அந்த இடியட்ட வேலைக்கு சேர்த்த. பாரு, இன்னும் வரல. ஏதாவது சொன்னாளா?” என்று கோபத்தில் கத்த,
“இல்லையே என்கிட்ட எதுவும் சொல்லல. ஏதாவது ப்ராப்ளமா இருக்கும் அபி. வந்துடுவாங்க.” என்று அவளுக்குப் பரிந்து பேசினாள்.
“ஆமா, பெரிய மரியாதை அவளுக்கு. எதையாவது உருப்படியா பண்றாளா? வேலையும் இன்னும் ஒழுங்கா செய்ய வரல. இதுல லீவு வேற. அவகிட்ட தான், என்னோட இன்னைக்கான எல்லா ஷெட்யூல் நோட்ஸூம் இருக்கு. நான் என்னென்ன எந்த டைம்ல பண்ணனும்னு அதைப் பார்த்துதான் பண்ணுவேன். நேத்து நைட் கூட போன் பண்ணி, ஒரு ஷெட்யூல மாத்த சொன்னேன். அதுக்கு, நான் ஆஃபீஸ்ல தான் வச்சிருக்கேன், இப்போ மாத்த முடியாதுன்னு சொல்லிட்டா. அதுவே எனக்கு டென்ஷன். இதுல, இவ இன்னும் வந்து சேரல.” என்று விடாமல் கத்திக்கொண்டே இருப்பவனை அவ்வளவு சீக்கிரம் சமாதானம் செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை அஞ்சலிக்கு.
“போ.. போய் அவ டேபிள்ல அந்த நோட்ஸ எங்க வச்சிருக்கான்னு தேடிப் பாரு.” என்று கட்டளையிட, அவனை ஏற இறங்கப் பார்த்தாள் அஞ்சலி.
“ப்ச்ச்… ப்ளீஸ் அஞ்சலி. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ. மாமா நேத்து நைட் போன் பண்ணி, யாரோ லண்டன்ல இருந்து வராங்க. அவர நீதான் ஹேண்டில் பண்ணனும்னு சொன்னார். அதனால தான் எல்லா ஷெட்யூலையும் மாத்திட்டு, அவர நான் மீட் பண்ணனும். ப்ளீஸ் ஹெல்ப் மீ.” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினான் அபிஷேக்.
“ம்ம்.. அதானே, உன் டென்ஷன் எங்கப்பா மேல. அதை எல்லாத்தையும் எங்க மேல தான் காட்டணுமா?” என்று சொன்னபடியே, பிரார்த்தனாவின் டேபிளுக்கு வந்து அவளது குறிப்பேட்டைத் தேடினாள்.
அங்கே அப்படி எதுவும் இல்லை. ட்ராவோ பூட்டியிருந்தது. முக்கியமான குறிப்புகள் என்பதால் அதை பிரார்த்தனா அங்கே வைத்துப் பூட்டியிருந்தாள். சாவியும் அவளது கைப்பையில் தான் இருக்கும்.
“ட்ராவ் லாக் ஆகியிருக்கு அபி, திறக்க முடியல. கீ இங்க இருக்க மாதிரி தெரியல. கண்டிப்பா பிரார்த்தனாகிட்ட தான் இருக்கணும்.” என்று சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் அபிஷேக்.
வேறு யார் சொன்னாலும் பரவாயில்லை. அது அவனின் தாய் மாமா, அதாவது அஞ்சலியின் அப்பா ராமச்சந்திரனின் கட்டளை. அவர் ஏதாவது ஒன்று சொல்லிவிட்டால் போதும், அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அதனால் தான், மற்ற வேலைகளை வேறு நேரத்தில் செய்ய திட்டமிட்டு வைத்துவிட்டால், லண்டனிலிருந்து வருபவரை சந்திக்கச் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால், இன்று பார்த்து பிரார்த்தனா விடுப்பு எடுத்துவிட்டாளே என்ற கோபம் அவனை ஆட்டுவித்தது.
“அந்த இடியட்க்கு போன் பண்ணு.” என்று திரும்பவும் கத்த,
அவசரமாய் அவளது எண்ணுக்குத் தொடர்பு கொண்டாள் அஞ்சலி. ஆனால், எதிர்முனையிலோ அந்தச் செய்தி வர கண்களை அகல விரித்தபடி பயத்தில் அபியிடம், “ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது அபி..” என்றாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் அஞ்சலி கையைப் பிசைந்துகொண்டு முழிக்க, பற்களை நற நறவென்று கடித்த அபிக்கு அளவில்லாத கோபம் வந்தது பிரார்த்தனாவின் மேல்.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
அஞ்சலி போன் செய்து செய்து ஓய்ந்து போயிருந்தாள். அபியோ கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டிருந்தான். வேறு வழியில்லாமல் அவளுடைய ட்ராவின் பூட்டை உடைத்துதான் அந்தக் குறிப்பேட்டை எடுக்க வேண்டியதாய் இருந்தது.
அதற்குள் நிதானத்தை இழந்திருந்த அபியை சாந்தப்படுத்த அஞ்சலியால் முடியவே இல்லை. கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அவனை வழிப்படுத்தினாள்.
“அபி.. ஸீ.. நான் வேணும்னா அந்த லண்டன் கிளையண்ட்ட ஹேண்டில் பண்ணிக்கறேன். நீ இதுல இருக்க மத்த வேலையப் பாரு. இதே டென்ஷன்ல நீ எதையும் பண்ண வேண்டாம்.” என்றாள்.
“ஏன்.. அதுக்கும் மாமா ஏதாவது சொல்றதுக்கா? வேண்டாம் அதை நானே பாத்துக்கறேன். எல்லாம் அந்த இடியட்டால வந்தது. அப்போவே வேணாம்னு சொன்னேன். நீதான் கேட்காம அவள வேலைக்கு சேர்த்த. பாரு அவ வேலை பார்க்கற லட்சணத்த. இனிமேல் அவளுக்கு இந்தக் கம்பெனில இடம் இல்ல. வேற வேலைய தேடிக்கச் சொல்லு.” என்றான் திடுதிப்பென்று.
“ஹே.. என்ன மேன் நீ, எல்லாத்தையும் பட்டுன்னு டிசைட் பண்ற? அவங்களுக்கு அங்க என்ன சிச்சுவேஷன்னு தெரியாம இந்த மாதிரி டிசைட் பண்றது முட்டாள்தனம் அபி. கொஞ்சம் பொறுமையா இரு. கண்டிப்பா ஏதாவது விஷயம் இருக்கும்.” என்று அஞ்சலி இன்னும் பிரார்த்தனாவிற்காகப் பரிந்து பேச,
“நீ இப்படியே பேசிப் பேசி அவ ஒட்டுமொத்தமா உனக்கு ஒரு நாள் ஆப்பு வைப்பா பாரு. அப்போ தெரியும் உனக்கு.” என்று அவன் எதையோ உணர்த்திப் பேசியபடி கோபத்தில் வெளியேறினான்.
எப்படியோ அவன் ஒரு வழியாக சமாதானம் ஆகாவிட்டாலும், இந்த விஷயத்தை அப்போதைக்கு விட்டானே என்றாகிவிட்டது அஞ்சலிக்கு. ஆனாலும், பிரார்த்தனா ஏன் வரவில்லை? போனும் அணைந்திருப்பதால் என்ன பிரச்சினையாக இருக்கும்? என்று யோசித்தபடியே அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றாள்.
இவர்களின் கோபத்துக்கும், பரிவுக்கும் காரணமான நாயகியோ விடுதியில் தனது அறையில் எழக்கூட முடியாமல் படுத்தபடி இருந்தாள். அருகே அவளது அறைத்தோழியும் கூடவே இருந்தாள். கண்கள் திறக்க முடியா நிலையில் மெல்ல கண் திறந்தவள்,
“சித்.. சித்ரா…” என்று அவளை மெல்ல அழைத்தாள்.
அவளின் அழைப்பைக் கேட்டு அருகே வந்த அவளது அறைத்தோழி, “என்னாச்சு பிரார்த்தனா? நேத்து நைட் ஃபுல்லா படாதபாடு பட்டுட்ட. எனக்கே ஒரு மாதிரியா ஆய்டுச்சு. இப்போ எப்படி இருக்கு?” என்று சிறிது ஆறுதலாய்ப் பேசினாள்.
ஆனால், அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் அவள் விழிகள் எதையோ தேடின. அதைப் பார்த்த சித்ரா, “என்ன தேடுற?” என்றாள்.
“போன்.. என்னோட போன்..” என்று சொன்னபடியே மீண்டும் தேட,
“இரு எடுத்துத் தரேன். நான் தான் சேஃப்ட்டியா உன்னோட கப்போர்ட்ல வச்சு லாக் பண்ணேன்.” என்று சொன்னபடியே அவளிடம் எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கியதும், அது அணைந்து போயிருக்கவே அவளையறியாமல் அவளது மனம் பயம் கொண்டது. நேற்று இரவு நடந்த விஷயத்தில் போனை அவள் கவனிக்கவே இல்லை. கொஞ்சமாக இருந்த பேட்டரியும் முடிந்து, அது அணைந்து போனதும் அவள் அறியவில்லை.
“இது ஸ்விட்ச் ஆஃப் ஆயிருச்சு. கம்பெனிக்கு போன் பண்ணனும். இன்னைக்கு லீவ் சொல்லவே இல்ல. பாஸ் திட்டுவாரு.” என்ற பதட்டத்தில் அவள் சொல்ல,
“இந்த மாதிரி திடீர்னு ஆகும்னு யாருக்குத் தெரியும்? விடு சொல்லிக்கலாம். சரி, உன்னோட சார்ஜர் எங்க? சார்ஜ் போட்டு விடறேன்.” என்றபடி அவளிடம் கேட்டு அவள் போனை சார்ஜில் போட்டாள்.
“சரி, நான் வெளில கடைல உனக்கு மதிய சாப்பாடு சொல்லியிருக்கேன். நீ அதை சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்கோ.” என்று சொன்னவளை நன்றியுடன் பார்த்து அழுதாள் பிரார்த்தனா.
“ஹே.. எதுக்கு இதுக்கெல்லாம் அழற? உன்னோட ப்ராப்ளம் என்னன்னு தெரியும். ஒரு ரூம்மேட்டா நான் இதுகூட பண்ண மாட்டேனா?” என்று அவள் ஆறுதல் சொல்ல,
“தேங்க்ஸ் பா..” என்றாள்.
“இருக்கட்டும்..” என்று சொன்னபடி அவள் ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போனாள்.
சிறிது நேரம் கழித்து, அஞ்சலி திரும்பவும் பிரார்த்தனாவின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தாள். அப்போதுதான் அது ரிங்கிற்குப் போக, உற்சாகமானாள்.
எதிர்முனையில் எடுத்ததும், “ஹலோ, பிரார்த்தனா. ஆர் யூ தேர்? வாட் ஹேப்பண்ட்?” என்று அவள் பேச,
“ஹலோ.. நான் அவங்க ரூம் மேட் சித்ரா பேசறேன்.” என்று வேறு குரல் கேட்க,
“நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று அவள் பவ்யமாய்க் கேட்க,
“நான் பிரார்த்தனா வொர்க் பண்ற கம்பெனி எம்.டி.” என்று அஞ்சலியும் நிதானமாகச் சொல்ல,
“மேம்.. அவங்களுக்கு மிட் நைட்ல இருந்து கொஞ்சம் உடம்பு சரியில்ல.” என்றாள்.
“ஏன் என்னாச்சு? அவங்க நேத்து கூட நல்லாத்தானே இருந்தாங்க.” என்றாள் அஞ்சலி.
“எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாதுதானே மேம். உடம்பு திடீர்னு தானே சரியில்லாமப் போகும். அவங்களுக்கு ஃபுட் பாய்ஸன். வாமிட் ரொம்ப அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அந்நேரத்துக்கு ஹாஸ்பிடல்க்குக் கூட்டிட்டுப் போக முடியாததால, நான் தான் மார்னிங்க் பக்கத்துல இருக்க க்ளினிக் கூட்டிட்டுப் போனேன். ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு சொன்னாங்க.” என்றாள்.
“இப்போ அவங்க எப்படி இருக்காங்க? பரவாலையா? ஏன் திடீர்னு ஃபுட் பாய்ஸன்? ஏதாவது வெளில சாப்டாங்களா?” என்றாள் அக்கறையுடன்.
அதைக் கேட்டுச் சிரித்த சித்ரா, “ஹூம்ம்.. வெளியில சாப்பிட்டிருந்தா கூட நல்லா இருந்திருப்பாங்க மேம். இங்க ஹாஸ்டல் ஃபுட் கொஞ்சம் மோசம் தான். எனக்கு சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல் சாப்பாடு பழகிடுச்சு. ஆனா, பாவம் அவங்களுக்கு அது செட் ஆகல. அதான், இந்தப் ப்ராப்ளம். அவங்க டயர்ட்ல தூங்கறாங்க. நான் அவங்கள அப்பறமா பேசச் சொல்லட்டுமா?” என்றாள்.
பிரார்த்தனா எழுந்ததும் சித்ரா, அஞ்சலி போன் செய்தது பற்றிக் கூறினாள். அப்போதே பிரார்த்தனா அஞ்சலிக்கு போன் செய்ய, அவளை நலம் விசாரித்தவள், நன்றாக ஓய்வெடுத்துவிட்டு வருமாறு அறிவுரை சொல்லிவிட்டாள்.
அதைப் பார்த்த சித்ரா, “ரொம்ப ஆச்சர்யமா இருக்கு பிரார்த்தனா. ஒரு கம்பெனி எம்.டி இந்த மாதிரி போன் பண்ணிக் கேட்க வேண்டிய அவசியமே இல்ல. அதுவும் எவ்ளோ தன்மையா பேசறாங்க தெரியுமா? ரொம்ப க்ரேட் லேடி.” என்று அவளைப் பாராட்டிப் பேச,
பிரார்த்தனா அதை ஆமோதித்தவாறே அஞ்சலியை நினைத்தாள். சித்ரா சொன்னது போல், அவள் பிராத்தனாவிடம் சற்று அதிகமாகவே கரிசனமும், அக்கறையும் காட்டினாள். இதுவே மற்ற வேலையாட்களிடம் இப்படி இருக்கிறாளா? என்றால் இல்லை.
பிரார்த்தனாவைக் கண்டது முதலே அவளிடம் ஒரு இனம்புரியா ஈர்ப்பு அவள் மேல் வந்துவிட்டது அஞ்சலிக்கு. அந்த ஈர்ப்பிலேயே அவளிடம் பழகிக்கொண்டிருந்தாள். அபிஷேக் என்னதான் அவளைப் பற்றிக் குறை கூறினாலும், அதை அவள் சட்டை செய்யாமல் தான் இருந்தாள்.
மாலை அபிஷேக் வந்ததும் அவனிடம் இந்த விஷயத்தைக் கூற, “அவ சொன்னா உடனே நீ நம்பிடுவியா? அது உண்மையா? இல்லையான்னு பார்க்க மாட்டியா? அவ ப்ளான் பண்ணித்தான் லீவ் போட்டிருக்கா. நான் நேத்து நைட் போன் பண்ணி அவளத் திட்டினேன். அதான், என்னைப் பழிவாங்க இப்படியெல்லாம் பண்ணிருக்கா.” என்று அவன் கோபமாய்ப் பேசிக்கொண்டே போனான்.
“அபி, லிசன்.. உனக்கு அவங்களப் பார்த்தா அப்படியா தோணுது? தேவையில்லாம இந்த மாதிரி எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படாத. அது நல்லா இல்ல. இவ்ளோ நாள்ல ஒரு நாள் கூடவா அவங்களப் பார்த்துத் தெரிஞ்சுக்க முடியல. ரொம்ப நல்ல பொண்ணு அபி. ரொம்ப இன்னசண்ட். அவங்க எதையும் வேணும்னே பண்ணல. சொல்லப் போனா, இதுக்கு நீயும் ஒரு காரணம்.” என்றாள்.
“வாட்? நான் என்ன பண்ணேன்?” என்று அவன் எகிற,
“அபி, நீ கொஞ்சம் எதையும் பொறுமையா முழுசா கேட்கணும். அப்போதான் எல்லாமே புரியும். முதல்ல இந்த மாதிரி பட்டுன்னு கோபப்படறத நிறுத்து.” என்று அஞ்சலி சொல்ல,
அவளை ஒரு பார்வை பார்த்தவன் நடந்து சென்று, அவன் தாத்தாவின் படத்திற்கு முன்னே நிமிர்ந்து அவரைப் பார்த்தபடி ஒரு நிமிடம் கண்ணை மூடி நின்றான். அதன் பிறகு, ஏதோ தெளிந்தவனாய் அவளிடம் வந்து நின்றபடி, “சொல்லு.” என்றான்.
அதைக் கண்டு பெருமூச்சு விட்டவள், “நேத்து நைட் அவங்க தூங்கும் போது போன் பண்ணி அவங்க தூக்கத்த நீ கெடுத்திருக்க. அதுக்கப்பறம் தூக்கம் வராம இருந்ததால புக் படிச்சிட்டிருக்கும் போது, சடர்னா வாமிட் பண்ணிட்டாங்க. அவங்க ஹாஸ்டல் ஃபுட் சரியில்லாம அது அவங்களுக்கு பாய்ஸன் ஆய்டுச்சு. காலைல 5 மணிக்கு அவங்க ஃப்ரெண்ட் க்ளினிக் கூட்டிட்டுப் போய் ரெண்டு பாட்டில் க்ளுக்கோஸ் ஏத்திருக்காங்க. இதுக்கிடைல அவங்க போன் ஸ்விட்ச் ஆஃப். இதெல்லாம் தெரியாம நாம அவங்களுக்குப் போன் பண்ணிருக்கோம். இதுல அவங்க தப்பு என்ன இருக்கு சொல்லு?” என்று அவள் கூற,
ஒரு நிமிடம் யோசித்தவன், “என்னவோ, நீ சொல்றதெல்லாம் நிஜமா இருந்தா ஓகே. இருந்தாலும் பீ கேர்ஃபுல்.” என்று ஏதோ ஜோசியக்காரனைப் போல் அனைத்தும் அறிந்தவனாய் சொன்னபடி சென்றவனைப் பார்த்துச் சிரித்தாள் அஞ்சலி.
ஒரு வழியாக அந்த லண்டன் கிளையண்டை நல்லபடியாக சந்தித்து அவரிடம் ஒரு சின்ன ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டு, அந்தத் தகவலை அப்பொழுதே ராமச்சந்திரனுக்குத் தெரிவித்தனர் இருவரும். அவரும் சரியென்று சொன்னதும் தான் அபிக்கு நிம்மதியானது. அதைக் கண்ட அஞ்சலி,
“அபி, என்னால உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல. நீ ஏன் எங்கப்பாவுக்கு இவ்ளோ பயப்படற? எல்லார்கிட்டயும் எவ்ளோ கெத்தா இருக்க ஆள் நீ. ஆனா, இவர்கிட்ட மட்டும் ஏன் இப்படி நடந்துக்கற? அவர்கிட்டயும் அதே மாதிரி இருக்கலாமே?” என்று அவள் கேட்க,
“அவர்கிட்ட எனக்கு இருக்கறது பயம் இல்ல அஞ்சலி. அது ஒருவித உணர்வு. அவர் எதுவும் சொல்லிடக்கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் என்னோட உள் மனசு சொல்லிக்கிட்டே இருக்கும். என்னைக்குமே அவர் முன்னாடி நான் தலை குனிஞ்சு நின்னுடக்கூடாதுன்னு ஒரு மைண்ட் செட். அதான், அவர் சொல்ற வேலைய பெர்ஃபெக்ட்டா முடிச்சிடறேன்.” என்றான்.
ஒரு பெருமூச்சொன்றை விட்டவள், “நீ எதனால இப்படி ஆனன்னு எனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக எப்பவும் அதே மாதிரி நடக்க முடியுமா? மனுஷங்கன்னா சின்ன சின்னத் தப்பு பண்றது ரொம்ப நார்மல். அதை நீங்க ரெண்டு பேரும் தான் பெரிய விஷயம் ஆக்கறீங்கன்னு தோணுது.” என்றாள்.
“சரி விடு. சும்மா அதைப்பத்தியே பேச வேண்டாம். கிளம்பலாம்.” என்றான்.
அந்த நேரம் அஞ்சலிக்கு பிரார்த்தனாவின் நினைவு வர, அவளை சந்திக்கச் செல்லலாம் என்று நினைத்தாள். ஆனால், அபியிடம் இதை எப்படிச் சொல்வது என்று யோசித்தவள்,
“அபி, நீ வீட்டுக்குப் போ. எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு. நானே வீட்டுக்கு வந்திடறேன்.” என்றாள்.
நடந்து செல்லும் தூரமே இருந்த பிரார்த்தனாவின் விடுதியைக் கண்டுபிடிக்க அவசியம் இல்லாமல் இருந்தது அஞ்சலிக்கு. ஐந்தே நிமிடத்தில் வந்து அவளைப் பற்றி வாட்ச்மேனிடம் விசாரித்துவிட்டு அவளது அறைக்கே வந்துவிட்டாள்.
அப்போது சித்ரா அங்கே இல்லை. பிரார்த்தனா மட்டும் தான் உட்கார்ந்தபடி இருந்தாள். அவளைக் கண்டதும் அதிர்ச்சியான பிரார்த்தனா, “மேம்… நீங்க எங்க இங்க?” என்றபடி முடியாமல் எழுந்து வந்தாள்.
“ஹே… உட்காருங்க.. எதுக்கு கஷ்டப்பட்டு எழுந்து வரீங்க? உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் பிரார்த்தனா. இப்போ எப்படி இருக்கீங்க?” என்று அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பேசினாள்.
“ம்ம்.. இப்போ கொஞ்சம் பரவாயில்ல மேம். டயர்ட்னஸ் தான் அதிகமா இருக்கு.” என்று சொன்னவளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது அவளுக்கு.
“ஃபுட் பாய்ஸன் ஆகற அளவுக்கு இங்க சாப்பாடு அவ்ளோ மோசமா இருக்கும்னா, நீங்க ஏன் இங்க தங்கணும்? முதலெல்லாம் வீட்ல இருந்துதானே வந்துட்டிருந்தீங்க? இப்போ என்னாச்சு?” என்று பொறுமையாகக் கேட்டாள் அஞ்சலி.
“அது… அது…” என்று தயங்கியபடியே இருந்தாள்.
அவளது தயக்கத்தைப் புரிந்துகொண்டவளாய் அஞ்சலி, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, “இங்க பாருங்க பிரார்த்தனா. நான் உங்க எம்.டி அதனால இவங்ககிட்ட எப்படி எல்லாத்தையும் சொல்றதுன்னு நினைக்க வேண்டாம். நான் உங்க சிஸ்டர் மாதிரி. நான் அப்படித்தான் உங்களை நினைக்கறேன். என்கிட்ட நீங்க ஃப்ரீயா பேசவும், பழகவும் முடியும். அதனால தயங்காம எதுவா இருந்தாலும் சொல்லுங்க.” என்று ஆறுதலாய்ப் பேசினாள்.
இப்படிப்பட்ட ஆறுதல் வார்த்தைகளைத்தான் இத்தனை வருடங்களாய்த் தொலைத்திருந்தாள் பிரார்த்தனா. திடீரென்று அஞ்சலி அப்படிப் பேசியதும், மனதில் இருந்த பாரத்தில் வெடித்து அழுதாள். அவள் அழுவாள் என்று எதிர்பார்க்காத அஞ்சலியோ, அதிர்ச்சியானாள்.
“பிரார்த்தனா அழாதீங்க. ப்ளீஸ் எனக்குக் கஷ்டமா இருக்கு. என்னாச்சுன்னு சொல்லுங்க.” என்று அவள் திரும்பவும் கேட்க, அனைத்து விஷயங்களையும் அவளிடம் கொட்டித் தீர்த்தாள் பிரார்த்தனா. அதைக் கேட்டு அவளை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள் அஞ்சலி.
“என்ன சொல்றதுன்னு தெரியல. இப்படியும் மனுஷங்க இருப்பாங்களான்னு தான் தோணுது. இதுக்கும் அவங்க தங்கச்சி பொண்ணு நீங்க. அந்தப் பாசம் கூட கிடையாதா? பாவம் உங்க அத்தை. அவங்க இடத்துல யார் இருந்தாலும் இந்த அளவுக்கு உங்களப் பார்த்திருக்க வாய்ப்பில்ல. அவங்க ரொம்ப க்ரேட். ஆனா, உங்கள இந்த அளவுக்கு வளர்த்து, படிக்க வைச்சிட்டாங்களே அதுவே ரொம்பப் பெரிய விஷயம். அதுவரைக்கும் அவங்க சப்போர்ட் இருந்திருக்கு உங்களுக்கு. இல்லைன்னா, உங்க மாமா அதையும் கெடுத்திருப்பாருன்னு தான் தோணுது.” என்று அஞ்சலி தன் மனதில் பட்டதைப் பேசினாள்.
“ஆமா மேம். அத்தையும், தாத்தா-பாட்டியும் இல்லன்னா நான் என்னாகி இருப்பேன்னே தெரியல. எப்படியாவது என்னோட சொந்தக் கால்ல நின்னு நான் யாருன்னு ப்ரூஃப் பண்ணனும்னு ஒரு வெறி மனசுக்குள்ள ஊறிக்கிட்டே இருக்கு. ஆனா, அதுக்கான சப்போர்ட் தான் எனக்குக் கிடைக்க மாட்டிங்குது.” என்று விசனப்பட்டாள்.
“நீங்க வருத்தப்படாதீங்க பிரார்த்தனா. நாங்க இருக்கோம். எல்லாம் சரியாகிடும். நீங்க நினைச்ச மாதிரி ஒரு நல்ல நிலைக்கு நீங்க வருவீங்க. அதுக்கான எல்லா சப்போர்ட்டும் நான் நிச்சயமா தருவேன். சரியா?” என்றாள் அஞ்சலி புன்முறுவலுடன்.
அதைக் கேட்டு, “ரொம்ப தேங்க்ஸ் மேம். உங்களை மாதிரி ஒரு எம்.டி கிடைச்சதுக்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
“சரி, நாளைக்கும் நீங்க வர வேண்டாம். ரெஸ்ட் எடுத்துக்கோங்க. அபிய நான் ஹேண்டில் பண்ணிக்கறேன்.” என்றாள் அஞ்சலி.
“ஐயோ!! வேண்டாம் மேம். நாளைக்கு முடிஞ்ச அளவு நான் வர ட்ரைப் பண்றேன். அவர் ஏற்கனவே என் மேல கோபப்படுவாரு. இதுல நாளைக்கும் லீவ் போட்டா அவ்ளோதான். திட்டியே சலிப்பாரு.” என்று பிரார்த்தனா சொல்ல, அஞ்சலி அதற்குச் சிரித்தாள்.
அதைக் கண்டவள், “எதுக்கு மேம் சிரிக்கறீங்க? அபி சார் என்னைத் திட்டறதப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என்று நெளிந்துகொண்டே கேட்டாள்.
“அது இல்ல பிரார்த்தனா. நீங்க அபி மேல வச்சிருக்க பயத்தப் பார்த்தா, ஏதோ ஹஸ்பெண்ட் திட்டுவாரேன்னு பயப்படற வைஃப் மாதிரி இருக்கு. அதை நினைச்சுத்தான் சிரிச்சேன்.” என்று மீண்டும் சிரித்தாள்.
அதைக் கேட்டதும், பேந்தப் பேந்த விழித்தாள் பிரார்த்தனா. “இல்ல… ஸாரி மேம்…” என்றாள்.
அதைக் கேட்டு, “ஹே.. நான் ஜோக்குக்கு சொன்னேன் மா. நீங்க டென்ஷனாக வேண்டாம்.” என்றாள்.
அவளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்தாள் பிரார்த்தனா. ஆனால், அஞ்சலி அதைத் தவறாக எடுத்துக்கொள்வாளோ என்று எண்ணியபடி இருந்தாள். ஆனால், அதைத் தெரிந்துகொண்டவளாய் அஞ்சலி,
“நான் ஏதும் ஹெல்ப் பண்ணனும்னா சொல்லுங்க பிரார்த்தனா. என்கிட்ட எப்படிப் போய் கேட்கறதுன்னு தயங்க வேண்டாம்.” என்றாள்.
“மேம்.. அது வந்து… ஒரு சின்ன ஹெல்ப் மேம்..” என்று திரும்பவும் சொல்லவே தயங்கினாள்.
“ப்ச்ச்.. எதுவா இருந்தாலும் பரவாயில்ல, நீங்க கேளுங்க.” என்று சொல்ல,
“இந்த ஹாஸ்டல்ல இனிமேல் இருக்க எனக்கு விருப்பமில்ல மேம். எங்க அத்தை அடிக்கடி சொல்லுவாங்க. நல்லா சாப்பிட்டு உடம்பத் தெம்பா வச்சுக்கிட்டா தான், எந்த ஒரு வேலையையும் பார்க்க முடியும்னு. அதனாலயே நான் நல்லாவே சாப்பிடுவேன். தினமும் இந்த சாப்பாட்ட சாப்பிட்டா எனக்கு இன்னும் பிரச்சினை தான் அதிகமாகும். அதே மாதிரி தினமும் வெளிய கடைல வாங்கி சாப்பிட்டாலும் நல்லது இல்ல. வேற ஹாஸ்டல் போனாலும் இதே மாதிரி பிரச்சினைன்னா என்ன பண்றது? அதனால, இங்க பக்கத்துலயே ஏதாவது வாடகைக்கு ஒரு சின்ன ரூம் இருந்தாக் கூட போதும். நான் அங்க ஷிஃப்ட் ஆய்க்குவேன். நானும், ஓரளவு சமைப்பேன். அதனால எப்படியும் மேனேஜ் பண்ணிக்குவேன். இந்த ஏரியா எனக்குப் புதுசு மேம். எங்க கொஞ்சம் சேஃப்ட்டி அதிகம்ன்னு உங்களுக்குத்தான் தெரியும். அதனால, எனக்கு யார்கிட்டயாவது விசாரிச்சு ஒரு வீடு இருந்தா சொல்லுங்க மேம்.” என்று அனைத்தையும் தயங்கியபடியே சொல்லி முடித்தாள் பிரார்த்தனா.
“வெரி குட் டெஷிஷன் பிரார்த்தனா. இதைக் கேட்கவா தயங்கினீங்க? கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல வீட்டப் பார்த்துக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க வொர்ரி பண்ணிக்காம இருங்க. நான் அபிகிட்டயும், முத்துவேல் சார்கிட்டயும் இதைப்பத்தி பேசிட்டு சொல்றேன்.” என்றதும் பிரார்த்தனாவின் முகம் சுருங்கிப் போனது.
“மேம்.. இதை அபி சார்கிட்ட சொல்ல வேண்டாம். அவர் எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னே சொல்ல முடியாது. நாங்க என்ன உன்னோட வீட்டு புரோக்கரான்னு கேட்பாரு.” என்று அவள் மீண்டும் பயத்தில் கூற,
அதைக் கேட்டு இன்னும் அதிகமாய்ச் சிரித்தாள் அஞ்சலி மீண்டும். அவள் சிரிப்பதைப் பார்த்து முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டாள் பிரார்த்தனா.
“பிரார்த்தனா, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமான்னு தெரியல. நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே லண்டன்ல. கோயம்புத்தூர் எனக்கு இந்த ஒரு வருஷமா தான் பழக்கம். அதனால, எனக்கும் இந்த ஏரியா கொஞ்சம் புதுசுதான். அதனால, என்னை விட அவங்க ரெண்டு பேருக்குத்தான் இந்த ஏரியா ரொம்பப் பழக்கம். அதனால தான் அவங்ககிட்ட பேசறேன்னு சொல்றேன்.” என்று விளக்கம் கொடுத்தாள் அஞ்சலி.
“ம்ம்ம்… ஆமா பிரார்த்தனா. அப்பாவோட பூர்வீகம் கோயம்புத்தூர் தான். தினமும் அபியோட ரூம்ல பெரிய போட்டோவா பார்க்கறீங்களே அதுதான் எங்க தாத்தா. அவரோட ஒரே பையன் தான் எங்க அப்பா ராமச்சந்திரன். தாத்தா இந்த பிஸினெஸ்ஸ எக்ஸ்போர்ட் பண்ண நினைச்சாரு. முதல்ல நல்லாதான் போய்ட்டிருந்துச்சு. ஆனா, போகப் போக அதோட லாபம் அங்க இருக்க இம்ப்போர்ட்டர்ஸ்க்கு தான் அதிகமா போற மாதிரி அப்பாவும், தாத்தாவும் ஃபீல் பண்ணாங்க. இங்க வர லாபம் ரொம்பக் கம்மியா இருந்துச்சு. அதனால, எங்கப்பா நீங்க எக்ஸ்போர்ட் பண்றத நான் அங்க போய் இம்ப்போர்ட் பண்ணி நம்ம கம்பெனிக்கு லாபம் பண்ணித் தரேன்னு சொல்லி, அவர் கல்யாணம் ஆன கையோட அங்கயே போய்ட்டாரு. அதுக்கப்பறம் நானும் அங்கயே பிறந்தேன், வளர்ந்தேன்.” என்று தனது வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஆனா, நீங்க ரொம்ப நல்லா தமிழ் பேசறீங்களே?” என்றாள் பிரார்த்தனா.
“கரெக்ட் தான். ஸ்கூல், காலேஜ், பக்கத்து வீட்ல ஃப்ரெண்ட்ஸ்ன்னு எல்லாருமே இங்லீஷ்ல தான் பேசற மாதிரி இருக்கும். ஆனா, என்னோட அம்மாக்கு தமிழ்ப் பற்று கொஞ்சம் அதிகம். சின்ன வயசுல இருந்தே என்னைத் தமிழ் பேசியே ஆகணும்னு ரொம்ப ஃபோர்ஸ் பண்ணுவாங்க. அப்பா கூட கண்டுக்க மாட்டார். ஆனா, அவங்க விடவே இல்ல. அப்போவெல்லாம் அம்மா ஏன் இப்படி என்னை படுத்தறாங்கன்னு தோணும். பேச மட்டும் இல்ல, படிக்க, எழுதவும் செய்யணும். ஆனா, இப்போ யோசிச்சா அம்மா பண்ணது சரிதான்னு தோணுது. இங்க வந்து இருந்த இந்த ஒரு வருஷம் யாருமே நான் லண்டன்ல இருந்து வந்தவன்னு தெரியாத அளவுக்குப் பேசிப் பழகிட்டேன்.” என்று சொன்னவள் முகத்தில் அத்தனை உற்சாகம்.
“என்ன இருந்தாலும் நம்ம தாய்மொழியாச்சே மேம். அதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும். நாம எந்த நாட்டுக்குப் போனாலும், நமக்கான அடையாளம் இதுதானே. அதைக் கத்துக்கறத நினைச்சு நாம பெருமைப்படணும்.” என்று அவள் சொன்னதை அஞ்சலியும் ஆமோதித்தாள்.
“சரி டைம் ஆய்டுச்சு. நான் உங்களுக்கு விசாரிச்சு என்னன்னு சொல்றேன்.” என்றபடி எழுந்தாள்.
“ஓகே மேம். நீங்க கேட்டு சொல்லுங்க. சப்போஸ் அபி சார் ஏதாவது சொன்னா, நானே இதைப் பார்த்துக்கறேன் மேம்.” என்றாள் இன்னும் கண்களில் அந்த பயத்தைக் காட்டியபடி.
அஞ்சலியோ சிரித்தபடி, “சரி.. நான் கிளம்பறேன். நாளைக்கும் நல்லா ரெஸ்ட் எடுங்க. நான் உங்களுக்கு போன் பண்றேன். டேக் கேர். பை.. பை…” என்று விடைபெற்றாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திலேயே சித்ரா வந்துவிட்டாள். அவளிடம் அஞ்சலி வந்ததைப்பற்றிச் சொன்னாள் பிரார்த்தனா.
“அடடா!! நான் அவங்களைப் பார்க்கவே மிஸ் பண்ணிட்டேன். எவ்ளோ நல்ல கேரக்டர் அவங்க. போன்ல பேசும் போதே அவ்ளோ நல்லா பேசினாங்க. உன்னை நேர்லயே வந்து பார்த்திருக்காங்கன்னா ரொம்பப் பெரிய விஷயம் தான். அவங்க கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. நீ கவலைப்படாத.” என்று சித்ராவும் ஆறுதலாய்ப் பேசினாள்.
இவர்களைப் போல் ஆதரவு தரும் நல் உள்ளங்கள் தன்னுடன் இருக்கும்போது, தான் எந்த விதத்திலும் கவலைப்படக்கூடாது என்று நினைத்தாள் பிரார்த்தனா.
அஞ்சலி வீடு வந்து சேர, இரவு 8 மணி ஆகிவிட்டது. எங்கே அபி அங்கே இருப்பானோ என்ற சந்தேகத்திலேயே அவள் வர, சரியாக ஷோஃபாவில் ஹாயாக அமர்ந்தபடி தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான் அபிஷேக்.
எப்படியாவது அவனிடமிருந்து தப்பித்து விட வேண்டும் என்று அவசரமாய் உள்ளே நுழைந்தவளைக் கண்ட அபிஷேக், “முக்கியமானவங்களப் பார்த்துட்டு வந்தாச்சா?” என்று கேட்க, அவளோ அதிர்ச்சியில் விழிக்கலானாள்.
இவனுக்கு எப்படி தான் பிரார்த்தனாவைப் பார்க்கப் போனது தெரிந்தது என்ற யோசனையிலேயே வேறு வழி தெரியாமல், அவனிடம் வந்து நின்றாள் அஞ்சலி.
(தொடரும்….)
உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் மக்களே...
அவன் அப்படிக் கேட்பான் என்று நினைக்காத அஞ்சலி திருதிருவென்று விழித்தாலும், அப்போதே அவனைச் சமாளிக்கும் விதமாக,
“அப்போ நான் எங்க போறேன்னு என்னை வாட்ச் பண்ணிட்டுத்தான் வந்திருக்க?” என்றாள் இடுப்பில் கை வைத்து முறைத்தபடி.
“ஆமா, நீ எங்க போனாலும் சேஃபா போறியா, வறியான்னு பார்த்துக்கறது என்னோட பொறுப்பு. இல்லைன்னா உங்கப்பாவுக்கு யாரு பதில் சொல்றது?” என்றான் வேண்டுமென்றே.
“அப்பவும் எங்கப்பா கேள்வி கேட்டுடக் கூடாதுன்னு மட்டும் தான் உன் மைண்ட்ல இருக்கு. என் மேல நிஜமான அக்கறை இல்ல?” என்றாள்.
“அதெப்படி ராஜாத்தி உன் மேல அக்கறை இல்லாமப் போகும்?” என்றபடி வந்தார் அபிஷேக்கின் அம்மா சீதாலட்சுமி.
“பின்ன எதுக்கு ஆண்ட்டி, அபி இப்படிப் பேசறான்? நீங்க இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்று அஞ்சலி அவரிடம் புகார் அளித்தாள்.
“டேய்.. ஏண்டா அவள அப்படிக் கேட்கற? இனிமேல் அவகிட்ட வம்பிழுத்த உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது சொல்லிட்டேன்.” என்று அவனிடம் பொய்யாக நடித்தார் அஞ்சலியின் த்ருப்திக்காக.
“ஓ! அவ சொன்னா உடனே அவளுக்கு சப்போர்ட் பண்ணப் போய்டுவியா மா நீ? அவ என்ன பண்ணிட்டு வந்திருக்கா தெரியுமா?” என்றான்.
அதைக் கேட்டு அஞ்சலி முழித்துக்கொண்டு நிற்க, “அப்படி என்னடா அவ பண்ணா?” என்று கேட்டார் சீதா.
“ம்ம்… பி.ஏ வா வொர்க் பண்ற பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு மேடம் போய் பார்த்துட்டு வராங்க. ஒரு கம்பெனி எம்.டி எம்ப்ளாயிக்காக இந்த மாதிரி போய் நீ கேள்விப்பட்டிருப்பியா?” என்றான்.
“இதுல என்னடா தப்பிருக்கு? அவ நல்ல விஷயம் தான செஞ்சிருக்கா? அந்த மாதிரி போய் யாருமே பார்த்ததில்லன்னு உனக்குத் தெரியுமா? உங்க தாத்தா அவர்கிட்ட வேலை பார்க்கறவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா எப்படி ஓடிப்போய் பார்ப்பாரு தெரியுமா? அதுக்கெல்லாம் கௌரவம் பார்க்கக் கூடாது டா. அதுவும் ஒரு மனிதாபிமானம் தான். இதுக்கு நீ அவளைப் பாராட்டணும், திட்டக்கூடாது.” என்று அவளுக்காகப் பரிந்து பேசினார்.
அதைக் கேட்டு அபிஷேக் எரிச்சலாகி திரும்பி நிற்க, “ஆண்ட்டி, வர வர அபி எங்கப்பா மாதிரி பிஹேவ் பண்றான்னு தோணுது. அவர் தான் இந்த மாதிரி கௌரவம், மரியாதைன்னு ஓவரா பண்ணுவாரு.” என்று கடிந்துகொண்டாள் அஞ்சலி.
“சரி விடு மா. அவனுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான். நாம கூடிய சீக்கிரமே அவனை எப்படியாவது மாத்திடலாம்.” என்றார் சீதா.
“யாரு? இவனா? சான்சே இல்ல ஆண்ட்டி. ரொம்பக் கஷ்டம். எப்போ பாரு உர்ருன்னு மூஞ்சிய வச்சிக்கிட்டு. சார், வீட்ல தான் ஏதோ கொஞ்சம் நார்மலா இருக்காரு. இதே, ஆஃபீஸ்ல வந்து இவன்கூட இருந்து பாருங்க அப்போ தெரியும், இவன் எவ்ளோ பெரிய கோபக்காரன்னு. பாவம் அந்தப் பொண்ண தெரியாம வேலைக்கு சேர்த்து இவனுக்கு பி.ஏ வா போட்டுட்டேன். அவ தினமும் அழுது, அழுது இன்னைக்கு ஒரேயடியா உடம்பு முடியாமப் போய்டுச்சு. நான் தான் இவனுக்கு எந்தக் கெட்டப் பேரும் வந்துடக்கூடாதேன்னு போய் பார்த்துட்டு வரேன்.” என்று சமாளித்தாள்.
“அடப்பாவி மகனே! இப்படியாடா ஒரு பொண்ண படுத்துவ?” என்று சீதாவும், அப்பாவியாய்க் கேட்க,
“ஏம்மா, அவ தான் ஏதேதோ சொல்லி ட்ராமா போடுறானா, நீ அதுக்கும் மேல என்னையே கேள்வி கேட்கற? நேத்து நைட் அவளுக்கு ஃபுட் பாய்ஸன் ஆய்டுச்சு. அதனால தான் அவளுக்கு உடம்பு சரியில்ல. ஆனா, இவ ஒரேயடியா என் மேல பழியத் தூக்கிப் போடறா.” என்று எரிச்சலாய்ச் சொல்ல,
“அஞ்சலி சொன்னது சரிதான் டா. நீ நிறைய விஷயத்துல எங்கண்ணன் மாதிரியே இருக்க, பண்ற. இப்படித்தான் அவரும் பேசுவாரு.” என்று அவனுடைய பேச்சை சட்டை செய்யாமல் சொல்ல,
அதைக் கேட்டு சிரித்துவிட்டாள் அஞ்சலி. அதைக் கண்டு அபிஷேக் முறைக்க, இப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். மேலும், எரிச்சலானவன் அவர்களை விட்டு மேலே சென்று அவனது அறைக்குள் நுழைந்து கதவைப் படாரென்று சாத்தினான்.
அதைப் பார்த்த சீதா, “ரொம்ப அதிகமா அவன கடுப்பேத்திட்டோமோ அஞ்சலி மா?” என்று சற்று ஆதங்கப்பட்டார்.
“அந்தப் பொண்ணு இப்போ நல்லா இருக்காளா?” என்று நலம் விசாரித்தவரைப் பார்த்த அஞ்சலி, “யாரு, பிரார்த்தனாவக் கேட்கறீங்களா?” என்றாள்.
“ஓ! அந்தப் பொண்ணு பேரு பிரார்த்தனாவா? பேரு ரொம்ப அருமையா இருக்கு. இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே?” என்றார் இன்னும் அக்கறையுடன்.
“ம்ம்.. கொஞ்சம் பரவாயில்ல ஆண்ட்டி. ரெஸ்ட் எடுத்துட்டு வரச் சொல்லியிருக்கேன். பாவம், ஹாஸ்டல் ஃபுட் ஒத்துக்கல. கூட யாரும் இல்ல. தனியா சமாளிக்கறாங்க.” என்று சொன்னதும், சங்கடப்பட்டார் சீதா.
“ஏன் அந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லையா?” என்றார்.
அதை அவர் உண்மையாக அறிந்துகொள்ளும் நோக்கத்தில் கேட்க, அவளைப் பற்றிய விஷயங்களை சீதாவிடம் சொன்னாள் அஞ்சலி.
“ச்சே.. என்ன உலகத்துல இப்படியும் மனுஷங்க இருக்காங்க? பாவம் அந்தப் பொண்ணு.” என்று வருத்தப்பட்டுப் பேசினார்.
“இதையே தான் ஆண்ட்டி நானும் ஃபீல் பண்ணேன். யாருமே இல்லாதப்போ அட்லீஸ்ட் நாமளாவது போய் பார்த்தா தானே அவங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதனால தான் போய் பார்த்துட்டு வந்தேன். ஆனா, இவன் அதைப் புரிஞ்சுக்காம திட்றான் ஆண்ட்டி.” என்று அவரிடம் குறைபட்டாள்.
“அவனுக்கு எதுவுமே நிதானமா சொல்லணும் டா. அப்போதான் மண்டைல கொஞ்சமாவது ஏறும். அவன் என்னவோ பண்ணட்டும் விடு. நீ செஞ்சது சரிதான். முடிஞ்சா ஒரு நாள் அந்தப் பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வா.” என்றார்.
“சரி ஆண்ட்டி. நான் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என்று சொன்னபடி மாடிக்குச் சென்று தனது அறையில் நுழைந்து கொண்டாள்.
பிரார்த்தனாவுக்கு உடம்பு முடியாமல் போனது கேள்விப்பட்ட அவளது தாத்தாவும், பாட்டியும் அவளைப் பார்க்க இரவையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.
“என்ன கண்ணு? மூணு நாள்ல இப்படி இளைச்சுப் போயிட்ட? சாப்பாடு சரியில்லன்னா சொல்ல வேண்டியது தான? நான் சமைச்சு கொண்டு வந்து கொடுத்திருப்பேன்.” என்று அக்கறையுடன் பேசிய பாட்டி லட்சுமியின் கையை ஆதரவாய்ப் பிடித்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
“ஒரு நாள்ன்னா பரவாயில்ல பாட்டி. தினமும் நீங்க எப்படி எனக்குக் கொண்டு வந்து கொடுக்க முடியும்? அதுவும் இவ்ளோ தூரம். விடுங்க, நான் எங்க எம்.டி கிட்ட சொல்லி வீடு ஏதும் கிடைக்குமான்னு பார்க்கச் சொல்லியிருக்கேன். அவங்களும் எனக்கு ஹெல்ப் பண்றதா சொல்லியிருக்காங்க. அதனால தான் தைரியமா இருக்கேன்.” என்றவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது இருவருக்கும்.
உறவுகள் என்று இவர்கள் இருந்தும், அநாதையாய் இவள் இங்கே வந்து கஷ்டப்படுவதைத் தாங்க முடியாமல் மனதுக்குள் தவித்தார்கள். ஆனால், அதை இனி பேசி எந்த பயனும் இல்லை என்பதால், அவளுக்கு ஆறுதலாய் நாலு வார்த்தைகள் பேசவே வந்தனர்.
“சரி கண்ணு, அவங்கள ஒரு நல்ல வீடா பார்த்துத் தரச் சொல்லு. எதுவா இருந்தாலும் போன் பண்ணு. நாங்க முடிஞ்ச அளவுக்கு ஓடி வந்திடறோம். உடம்பைப் பார்த்துக்கோ.” என்று சொன்ன தாத்தாவின் விழிகள் கண்ணீரை சிந்தத் தயாராய் இருக்க, அதை அவள் பார்க்கக் கூடாது என நினைத்தவர், உடனே கிளம்பினார்.
இருவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு சித்ராவிடம் சொல்லி, அழுது புலம்பினாள் பிரார்த்தனா. இரவு உணவை பக்கத்து தெரு கடையிலேயே வாங்கிக் கொடுத்து அவளைச் சாப்பிட வைத்து, மாத்திரை தந்து தூங்கச் சொன்னாள் சித்ரா. அப்போதைக்கு அவளுடைய தற்காலிகமான அரவணைப்பு அவளுக்கு ஆறுதலைத் தந்தது.
இங்கே, இரவு உணவு தயாரானதும் சீதா அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்தார். அபிஷேக்கிற்கு கொள்ளைப் பசி எடுத்துவிட்டதோ என்னவோ, கூப்பிட்ட உடனே அதற்காகக் காத்திருந்தவனைப் போல் உடனே கீழே வந்துவிட்டான்.
அவன் வேக வேகமாகப் படியிறங்கிப் போனதை கவனித்த அஞ்சலி, அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் பின் தொடர்ந்து சென்றாள். இருவரும் அவர்கள் எப்பொழுதும் அமரும் நாற்காலியில் அமர, அவர்கள் இருவருக்கும் பறிமாறிவிட்டுத் தானும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் சீதா.
சிறிது நேரம் மூவரும் மௌனமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஏனோ, அஞ்சலிக்கு அது பிடிக்காமல் போக அபியிடம் பிரார்த்தனாவின் விஷயத்தைப் பேச நினைத்தாள். ஆனால், அபியோ மும்முரமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“அபி, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். நம்ம கம்பெனி இருக்க லைன்ல ஏதாவது ஒரு சின்ன வீடு ரெண்ட்டுக்குக் கிடைக்குமா?” என்று அஞ்சலி கேட்டதும்,
உடனே, சீதாவும், அபிஷேக்கும் அதிர்ச்சியுடன் எதற்கு என்பதைப் போல் கேள்வியாய் அவளைப் பார்த்தனர். அவர்கள் தன்னை எதற்காக இப்படிப் பார்க்கிறார்கள்? என்று புரியாதவள்,
“எதுக்கு திடீர்னு வாடகைக்கு வீடு கேட்கற?” என்ற அபியின் குரலில் கடுமை.
“எதுக்கு அஞ்சலி மா? தனியா போய் இருக்கலாம்னு நினைக்கிறியா? வேண்டாம் அப்படியெல்லாம் முடிவெடுத்துடாத. பாவம் இந்த அத்தை. என் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நீ இருக்கறதனால தான் ஏதோ டைம் கொஞ்சம் போகுது. இல்லைன்னா இந்தப் பய என்கிட்ட பேசவே மாட்டான். உங்க தாத்தா, உங்கப்பா மாதிரி பிஸினெஸ்ஸ கட்டிக்கிட்டே அழறான். நீ இங்கயே இரு. இவன் வேணும்னா போய் ஆஃபீஸ்லயே தங்கட்டும்.” என்று விடாமல் பேசிக்கொண்டே போனவரைப் பார்த்து, சிரித்து சிரித்து வயிறு வலி எடுக்காத குறைதான் அஞ்சலிக்கு.
சிரித்துக்கொண்டிருந்தவளைப் புரியாமல் பார்த்த சீதா, மகனைப் பார்க்க, அபியோ இவரை முறைத்துக்கொண்டிருந்தான்.
ஒரு வழியாக சிரித்து முடித்தவள், “ஆண்ட்டி, போதும் என்னால முடியல. இந்த மாதிரி நான் சிரிச்சு வருஷம் ஆச்சு. பட், இப்போ நான் சீரியஸ்ஸா தான் கேட்கறேன்.” என்றாள்.
“நானும் சீரியஸ்ஸா தான் சொல்றேன். என்னைத் தனியா விட்டுட்டுப் போகாத ராஜாத்தி.” என்று திரும்பவும் சொல்ல,
“அம்மா. போதும், நீ கொஞ்சம் நிறுத்து. அவ எதுக்கு அதைக் கேட்கறான்னு தெரியாம நீயே எல்லாத்தையும் கற்பனை பண்ணிக்குவியா? முதல்ல அவள சொல்ல விடு.” என்று அபி அவர் மேல் இருந்த கடுப்பில் கத்த, அவர் அமைதியானார்.
“பிரார்த்தனாவுக்கு ஒரு வீடு பார்த்துத் தரேன்னு சொல்லியிருக்கேன். எனக்கு அந்த ஏரியா அவ்ளோ தெரியாதில்ல. அதனால தான், உன்கிட்ட கேட்கறேன்.” என்றாள்.
“நீ என்ன அவளுக்கு வீட்டு புரோக்கரா, வீடு பார்த்துக் கொடுக்க?” என்றான் அபிஷேக்.
பிரார்த்தனா வந்த சில தினங்களிலேயே இவனைப் பற்றி சரியாகக் கணித்துதான் சொல்லியிருக்கிறாள் என்று மனதினுள் நினைத்ததை வெளியே சொல்லாமல், சிரித்துக்கொண்டாள் அஞ்சலி.
“இதுல என்னடா இருக்கு? அவ ஏதோ ஹெல்ப் பண்ணலாம்னு கேட்டிருக்கா? அதுக்குப் போய் இப்படி சொல்வியா? ஏன் நீ உன் ஃப்ரெண்டா இருந்தா செய்ய மாட்டியா?” என்று சீதா கேட்க,
“என் ஃப்ரெண்டா இருந்தா நான் எதுக்கு வெளியில வீடு பார்த்துக் கொடுக்கப் போறேன்? நம்ம வீடே மாளிகை மாதிரி தான இருக்கு. இங்க இல்லாத ரூமா? ஏதாவது ஒரு ரூம்ல இருந்துக்கோடான்னு சொல்லிடுவேன்.” என்றான் அபிஷேக் எதார்த்தமாக.
சட்டென்று ஒரு யோசனை மின்னலெனத் தோன்ற, “அபி, இதுகூட நல்ல ஐடியா தான். பேசாம பிரார்த்தனாவ நம்ம வீட்லயே இருந்துக்க சொல்லலாமே?” என்று அஞ்சலி அதே எதார்த்தத்தில் கேட்க,
அவள் சொன்ன வார்த்தைகளில் பற்றிக்கொண்டு வந்த கோபத்தை அடக்கமுடியாமல் அவளைத் தன் கனல் பார்வையால் சுட்டுக்கொண்டிருந்தான் அபிஷேக்.
(தொடரும்…)
உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்....
அவள் சொன்னதைக் கேட்டு கோபத்தின் விளிம்பில் நின்ற அபிஷேக், “ஜஸ்ட் ஸ்டாப் இட் அஞ்சலி.” என்று கத்தினான்.
அதைக் கண்டு அவர்கள் இருவரும் அவனைக் காட்டில் சத்தமிடும் மிருகத்தைப் போல பயந்தபடி பார்த்தனர்.
“டேய்.. எதுக்குடா இப்போ அவளக் கத்தற? எதையும் பொறுமையாவே பேசத் தெரியாதா உனக்கு?” என்று கோபப்பட்டார் சீதா.
அதைக் கேட்டு அவரை முறைத்தவன், “பொறுமையா பேசற மாதிரியா இவ யோசிக்கறா? தெரியாம தான் கேட்கறேன், எப்படி இந்த மாதிரி சீப்பா யோசிக்க முடியுது உன்னால? இதென்ன சத்திரமா? கண்டபடி யார் வேணும்னாலும் வந்து தங்கறதுக்கு?” என்று அபிஷேக் சொல்ல,
இப்போது, அஞ்சலியின் கண்களில் கோபம் அனலாய்க் கொதித்தது. “ஸீ அபி, லிமிட் யுவர் வோர்ட்ஸ். ரொம்ப அதிகமா பேசற. நான் ஒன்னும் அப்படித் தப்பா சொல்லலையே? உன் ஃப்ரெண்ட்ட மட்டும் வீட்டுல தங்க வைக்கறேன்னு சொல்ற. அதுமாதிரி தான இதுவும். அவங்க நம்மோட பி.ஏ. நம்ம கூட எல்லா டைமும் இருந்தாக வேண்டிய கட்டாயம். எனக்குக் கூட இல்ல. முக்கியமா உனக்குத்தான் அவங்க பி.ஏ.” என்றாள்.
“அதுக்காக இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வரேன்னு சொல்றதெல்லாம் நியாயமே இல்ல அஞ்சலி. அவள எம்ப்ளாயின்ற லிமிட்டோட நிறுத்தறது தான் உனக்கு நல்லது.” என்று மீண்டும் அவன் கோபத்திலேயே பேச,
“ஓ! அப்போ நீ மட்டும் அந்த லிமிட்ட க்ராஸ் பண்ணி, அவங்கள மிட் நைட்ல டிஸ்டர்ப் பண்ணி, ஷெட்யூல மாத்துன்னு டார்ச்சர் பன்றது மட்டும் நியாயமா? கம்பெனி வொர்க் கம்பெனியோட முடிஞ்சு போகணும். வீட்ல நிம்மதியா கூட நீ இருக்க விடல. அது மட்டும் சரியா?” என்று அவளும் எதிர்த்துப் பேசினாள்.
“ஓ காட்! நீ எதை எதோட முடிச்சு போடற? அவள நம்ம வீட்டுல தங்க வைக்கறது ஒத்துவராது அஞ்சலி புரிஞ்சுக்கோ. அப்பறம், இதே மாதிரி பல பேருக்கு பரிதாபப்பட்டு நீ இடம் கொடுக்கற நிலைமை வந்துடும். அதுக்காகத்தான் சொல்றேன்.” என்றான்.
“சரி, நான் ஒரு விஷயம் கேட்கறேன், இந்த வீட்டுல எனக்கு ஒரு முடிவெடுக்கக் கூட எந்த உரிமையும் இல்லையா?” என்றாள்.
அதைக் கேட்டவன், அவள் புரிந்து கொள்ளா சிறு பிள்ளையைப் போல் அடம்பிடிப்பதைப் பார்த்து சலித்தவனாய் திரும்பி நின்றான்.
அதைக் கேட்ட சீதாவோ, “ஏய்.. ராஜாத்தி.. உனக்கில்லாத உரிமையா? அவன் ஏதோ லூசுப்பையன் உளர்றான். நீ அதெல்லாம் பெருசுபடுத்தாத. நீ உன்னோட பி.ஏ வ கூட்டிட்டு வா. பேசிக்கலாம்.” என்றார் அவசரமாய்.
“ஆனா, அபி பேசறதப் பார்த்தா அப்படித்தான் இருக்கு ஆண்ட்டி. என்னோட விருப்பம்ன்னு எதுவுமே இந்த வீட்டுல இருக்கக் கூடாதா? நான் அவனுக்கும் சேர்த்து ஒரு நல்ல விஷயம் பண்ணனும்னு நினைச்சுத்தான கேட்டேன். அது புரியலையா அவனுக்கு?” என்று பேசியவள் கண்கள் அருவியைக் கொட்டியது.
இதற்கு மேலும் இவளிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்தவன், பாதியிலேயே கையைக் கழுவிவிட்டு அவசரமாய் அவனது அறையை நோக்கி மாடிக்குப் பாய்ந்து சென்றான்.
அவன் போவதையே பார்த்தவர்களுக்கு அதற்கு மேல் சாப்பிட விருப்பமில்லை. அஞ்சலியோ அழுதபடியே இருந்தாள். அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார் சீதா.
“டேய்.. ராஜாத்தி. அழாதடா. நீ அழுது நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல. நீ எவ்ளோ தைரியமான பொண்ணு. ஒரு பொண்ணு எப்படி தைரியமா இருக்கணும்னு உன்னைப் பார்த்துதான எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்கன்னு சொல்வேன். ஆனா, நீ என்னடான்னா இந்த சின்ன விஷயத்துக்குப் போய் அவன்கிட்ட கோபப்பட்டு அழுதுட்டிருக்க?” என்றார் சீதா.
“கரெக்ட் தான் ஆண்ட்டி. நான் ரொம்ப போல்ட்டான பொண்ணு தான். ஆனாலும், எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குதானே? அதை என்னால ரொம்ப கண்ட்ரோல் பண்ண முடியாதப்போ நான் இந்த மாதிரி அழுதுடறேன். நானும் சாதாரண மனுஷி தானே?” என்றாள்.
“நீ அழக்கூடாதுன்னு யார் சொன்னா இப்போ? ஆனா, அதுக்குத் தகுந்த காரணம் இருக்கணும் தானே டா. ஒரு பி.ஏக்காக ஏன் உங்க ரெண்டு பேருக்குள்ள இவ்ளோ சண்டைன்னு தான் என்னோட ஆதங்கம்.” என்றார்.
“ஆண்ட்டி நான் ஏன் ஒரு பி.ஏக்காக இவ்ளோ தூரம் அபிகிட்ட சண்டை போடறேன் தெரியுமா? முதன் முதல்ல நான் பிரார்த்தனாவப் பார்த்தப்போ எனக்கு என்னோட தங்கச்சி ரித்திகா ஞாபகம் தான் வந்தது. அவ சின்ன வயசுலயே என்னை விட்டுப் போய்ட்டா. அவன்னா எனக்கு உயிர். அவளோட தான் என்னோட ஒவ்வொரு நாளும் போகும். அவ வளர்ந்து பெரியவளா ஆகி இருந்தா இதே மாதிரி தான் இருந்திருப்பான்னு தோணுச்சு. பிரார்த்தனா என்கிட்ட ஒவ்வொரு முறை பேசும் போதும், எனக்கு அவகிட்ட பேசற மாதிரியே இருக்கும்.” என்று அவள் சிலாகித்தபடி சொல்லிக்கொண்டிருக்க,
“என்ன அஞ்சலி மா சொல்ற? நிஜமாலுமே அந்தப் பொண்ணப் பார்த்தா அப்படியா இருக்கு?” என்று நம்பமுடியாதவராய்க் கேட்டார் சீதா.
“அப்படியே அவள மாதிரியே கோதுமை நிறம், முகம், பேச்சு, அவளோட பிஹேவியர் எல்லாமே அப்படித்தான் இருக்கு ஆண்ட்டி. அதனால தான் அவள என்னால விட்டுக்கொடுக்க முடியல. பாவம் அவ அபிகிட்ட எவ்ளோ திட்டு வாங்குவா தெரியுமா? ஆனாலும், ரொம்பப் பொறுமையா இருப்பா. என்னோட ரித்திகாவும் அப்படித்தான் இருப்பா ஆண்ட்டி. பிரார்த்தனாவ நான் பார்த்ததுக்கப்பறம் என்னோட ரித்திகா என் கூடவே இருக்கற மாதிரி ஒரு ஃபீல். அதனால தான் அவளுக்காக இவ்ளோ தூரம் சப்போர்ட் பண்ணிப் பேசிட்டிருக்கேன்.” என்று அவள் முடிக்க,
“எனக்கு உன்னோட உணர்வுகளப் புரிஞ்சுக்க முடியுது ராஜாத்தி. ஆனா, இதெல்லாம் அந்த மரமண்டையனுக்கு எடுத்து சொன்னாதான் புரியும். உடனே சொன்னா அவன் கோபப்படுவான். சரி, விடு. நான் அவன்கிட்ட பேசறேன்.” என்று சொல்லி, அவளை அப்போதைக்கு சமாதானம் செய்து அவளை அறைக்கு அனுப்பிவைத்தார் சீதா.
அன்று இரவு முழுவதும் அஞ்சலி தூக்கமில்லாமல் அவள் தங்கையின் நினைவிலேயே கழித்தாள். அடுத்த நாள் காலை அபிக்கு முன்னமே அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டாள் அஞ்சலி. அதுவே அவனுக்கு ஒருவித எரிச்சலைத் தந்தது.
சீதாவும், அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவன் அலுவலகம் கிளம்பும் முன் ஏன் இதைப்பற்றிப் பேசி அவனை தேவையில்லாமல் கோபப்படுத்துவானேன் என நினைத்து, அன்று மாலை பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.
அலுவலகம் சென்றால் எப்போதும், ஒரு முறைக்கு பத்து முறை அஞ்சலி, “அபி.. அபி..” என்று அவனது அறைக்கு வந்து, அவனிடம் சில மணி நேரம் பேசிவிட்டுத்தான் செல்வாள். ஆனால், இன்றோ சென்று அரைநாள் ஆகி மதியமே வந்துவிட, அவள் வந்தபாடில்லை.
அபிஷேக்கிற்கு தான் மிகவும் கடுமையாக அவளிடம் நடந்துகொண்டோமோ என்று தோன்ற, பொறுமை இழந்து அவளை இண்டர்காமில் தொடர்பு கொண்டான். ஆனால், அவள் எடுக்கவே இல்லை.
சரி, அவளது அறைக்குச் சென்று பார்க்கலாம் என்று பார்த்தால், அவளோ அங்கே இல்லை. அப்படியே நடந்து சென்று அவளைத் தேடி பார்வையை சுழல விட்டான். அவள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால், அவள் இன்று அலுவலகத்திற்கு வந்தாளா? இல்லையா? என்றே குழம்பினான்.
அப்போதே முத்துவேலிடம் சென்றான். அவன் பதட்டமாகவும், வேகமாகவும் தன்னை நோக்கி வருவதை அறிந்தவர், “என்னாச்சு அபி சார்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றார்.
“சார், அவங்க காலைல நேரமே வந்திருந்தாங்க. ஆனா, ஒரு 12 மணி இருக்கும் போதே என்கிட்ட வந்து, “ரொம்பத் தலைவலியா இருக்கு, நான் வீட்டுக்குப் போறேன்”னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, உங்ககிட்ட சொல்லியிருப்பாங்கன்னு தானே நினைச்சேன்.” என்றார்.
அவர் அதைச் சொன்னாலும், உள் மனது அதை உண்மையா? என்று அறிந்துகொள்ளத் தூண்ட, “சரி நான் பாத்துக்கறேன்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தவன், உடனே அலைபேசியை எடுத்து அவளது நம்பருக்கு அழைத்தான். ஆனால், எதிர்முனையில் நீண்ட நேர அழைப்பிற்கு பதிலில்லாமல் போனது.
அதைக் கண்டு எரிச்சலுற்றவன், உடனே சீதாவிற்கு அழைத்தான். அவருடைய நம்பரும் நீண்ட நேர அழைப்பிற்குப் பிறகே எடுக்க, “ஹலோ…” என்று சீதாவின் குரல் கேட்டதுமே,
“ஏம்மா, இவ்ளோ நேரம் ரிங்க் போய்ட்டே இருக்கு. அப்படி என்ன வேலை? உடனே எடுக்க மாட்டியா?” என்று கத்தினான்.
“டேய்.. நான் துணி காயப்போட சொல்லி சரோஜாகிட்ட சொல்லிட்டிருந்தேன். அவ ஏனோ, தானோன்னு செய்வா. அதனால கிட்ட இருந்து சொல்லிக்கிட்டிருந்தேன். நீ இந்த நேரம் கூப்பிடுவேன்னு நான் என்ன கனவா கண்டேன். கார்டன்ல இருந்து வந்து எடுக்கறதுக்குக் கொஞ்சம் லேட் ஆய்டுச்சு. அதுக்கு இவ்ளோ பேச்சு பேசற.” என்று அவனுக்கு சற்றும் சலைக்காமல் பேசியவரைக் கேட்டு பெருமூச்சை விட்டவன்,
“சரி, அஞ்சலி வீட்ல இருக்காளா?” என்றான்.
“ஆமா, திடீர்னு தலைவலியா இருக்கு ஆண்ட்டி. அதான் கிளம்பி வந்துட்டேன்னு சொன்னா. பாவம், நேத்து நைட் முழுக்க தூங்கவே இல்ல போலிருக்கு. முகமெல்லாம் அழுது போய் வீங்கி இருந்துச்சு. நான் தான் போய் ரெஸ்ட் எடுன்னு சொல்லி அவ ரூம்க்கு அனுப்பினேன்.” என்றார் சீதா.
“ப்ச்ச்… இவ ஏன் மா இப்படிப் பன்றா? தேவையில்லாத ஒரு விஷயத்துக்காக ஆர்க்யூ பண்ணி, தூங்காம… இதெல்லாம் அவளுக்குத் தேவையா?” என்று கடிந்துகொண்டான் அபிஷேக்.
“உனக்கு அது தேவையில்லாத விஷயமாத் தெரியலாம் அபி. ஆனா, அது அவளோட சைட்ல இருந்து பார்த்தா ரொம்பப் பெரிய விஷயம் தான். அவளோட ஃபீலிங்க்ஸ்ஸ உன்னால எப்பவுமே புரிஞ்சுக்க முடியாது. அவ எது சொன்னாலும் நீ கோப்பப்படத்தான் செய்யற. நான் தான் நேத்து நைட்டே பார்த்தேனே.” என்று தன் மனதில் உள்ளவற்றைப் பேசினார் சீதா.
“அம்மா, நீயும் அவளுக்கு சும்மா சும்மா சப்போர்ட் பண்ணாத. எது சரின்னு அவளுக்கு சொல்லிக் கொடு. நாளைக்கு மாமா வந்து நம்மகிட்ட, என் பொண்ண நம்பித்தான உங்ககிட்ட அனுப்பி வச்சேன். ஆனா, நீங்க அந்த நம்பிக்கைய காப்பாத்தலன்னு சொல்லுவார். அப்போ தெரியும் உனக்கு.” என்றான்.
“நான் கூட எங்கண்ணனுக்கு இவ்ளோ பயந்தேனான்னு தெரியல அபி. ஆனா, நீ ஏன் அவர் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்க?” என்று தன் கேள்வியை முன் வைக்க,
“எல்லாம் தெரிஞ்சும் நீயும் இப்படிப் பேசினா எப்படி மா?” என்றான் சலித்துக்கொண்டு.
“அதையே எப்பவும் நினைச்சு இப்போ நடக்கற விஷயங்கள நாம பார்க்க ஆரம்பிச்சா, எதுவுமே சரியா இருக்காது அபி. நீ அஞ்சலியப் பத்தி புரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. முடிஞ்சா சாயங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு வா. உன்கிட்ட பேசணும்.” என்றார்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். அதன் பிறகு, அவனுக்கு அங்கே வேலையே ஓடவில்லை. சீக்கிரமே மாலை வர வேண்டும் என்று காத்திருந்தான்.
(தொடரும்….)
உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
அவசர அவசரமாக முத்துவேலின் உதவியுடன் அன்றைய வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பினான் அபிஷேக். பிரார்த்தனா வராத இந்த இரண்டு தினங்கள் அவரைக் கொண்டுதான் தனது திட்டங்களை செயல்படுத்திக்கொண்டான்.
தேவையில்லாமல் அஞ்சலி பிரார்த்தனாவிற்காகப் பரிந்து பேசுவதும், அவளை வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்று பிடிவாதம் பிடிப்பதும், அவனின் கோபத்தையும் தாண்டி பெரும் மன உளைச்சலைத் தந்தது அபிக்கு.
வீட்டிற்கு வந்ததும், அவனை எதிர்கொண்டார் சீதா லட்சுமி. ஆனால், அவரை பொறுத்திருக்கச் சொன்னவன், அவனது அறைக்குச் சென்று உடை மாற்றி தன்னைப் புதுப்பித்துவிட்டு(Refresh) வந்தான்.
அவனுக்காக சூடாக தேநீர் வைத்து எடுத்து வந்த சீதா, அவனிடம் அளித்து விட்டு அவன் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தார். குடித்து முடித்தவன்,
“அவ ரெஸ்ட் எடுத்தாளா.? இப்போ எப்படி இருக்கா.?” என்றான்.
“ப்ச்ச்.. இவளோட பிஹேவியர் வர வர ஒன்னும் சரியில்லம்மா. வந்த ஒரு வருஷத்துல இவ இருந்ததுக்கும், இந்த ஒன் மன்த்க்கும் நிறைய டிஃபரன்ஸ். எல்லாம் அந்த இடியட்டால வந்தது. அவ எப்போ வந்தாளோ, அப்போவே இவ இப்படி ஆய்ட்டா. அப்படி என்னத்த அவகிட்ட இவ கண்டுட்டான்னு தெரியல. சரியான மாய வித்தக்காரியா இருப்பா போல.” என்று பிரார்த்தனாவைப் பற்றி பொறிந்து தள்ளினான் அபிஷேக்.
“அபி, நீ ஒரு விஷயத்த முதல்ல புரிஞ்சுக்கணும். எங்கிருந்தோ வந்த சாதாரண பொண்ணுக்காக, லண்டன்ல இருந்து வந்த அஞ்சலி இந்த அளவுக்கு மாறியிருக்கான்னா, அப்போ அவகிட்ட இவளுக்கான ஏதோ ஒரு விஷயம் ஒளிஞ்சிருக்குன்னு உனக்கு யோசிக்கத் தோணலையா.?” என்றார் சீதா.
அதைக் கேட்டதும், அவன் புருவங்கள் நிமிர்த்தி கேள்வியாய் அவரைப் பார்த்தான். அப்போதுதான், நேற்று இரவு அவளது தங்கை போலவே பிரார்த்தனா இருப்பதைப் பற்றியும், அவளது பாசத்தை அவள் எவ்வளவு தொலைத்து விட்டாள் என்பதையும், அதை ஈடுகட்டத்தான் அவள் பிரார்த்தனாவுக்காக பேசுவதையும் சொல்லி அவள் அழுததைப் பற்றி அவனிடம் சொன்னார் சீதா.
“அம்மா அது எப்பவோ நடந்து முடிஞ்ச விஷயம். ஆனா, அதை இப்பவும் இவ மூடத்தனமா நம்பிக்கிட்டு அவளப் புடிச்சிட்டுத் தொங்கினா நல்லாவா இருக்கு.?” என்றான்.
“அபி.. உனக்குக் கூடப்பொறந்தவங்க யாரும் இல்லாததால உனக்கு அந்த அருமை தெரியல டா. அப்படி கூடப்பிறந்தவங்க உயிரா இருக்கும் போது, ஒரு நாள் ஒட்டுமொத்தமா நம்மளை விட்டுட்டுப் போய்ட்டா அந்த வலி எப்படி இருக்கும்னு சாதாரணமா சொல்ற நம்மளால சத்தியமா புரிஞ்சுக்க முடியாது. அது அவங்க இடத்துல இருந்து பார்த்தா தான் தெரியும்.” என்று சீதா சொல்ல,
“நானா வேணாம்னு சொன்னேன். நீங்க தான் பெத்துக்கல. நான் ஒருத்தனே போதும்னு விட்டுட்டீங்க. இப்போ வந்து அதோட அருமைய சொன்னா, எனக்கு எப்படி மா தெரியும்.?” என்றான்.
“எங்களுக்கு மட்டும் ஆசையில்லையா டா மகனே. உனக்கு அப்பறம் உனக்கு ஒரு தங்கச்சியோ, தம்பியையோ பெத்துக்கணும்னு தான் இருந்தேன். ஆனா, என்னோட உடம்பு ரொம்ப வீக் ஆனதுல, இன்னொரு குழந்தை பிறந்தா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி எனக்கு ஒரேயடியா ஆபரேஷனே பண்ணிட்டாங்க. நான் என்ன பண்ண முடியும்.?” என்று அவரின் ஆதங்கத்தைக் கொட்டினார் சீதா.
“சரி விடு மா. இதையே இன்னும் எத்தனை வருஷத்துக்கு சொல்லுவ.? இப்போ அஞ்சலி நார்மலாக நான் என்ன பண்ணனும்.? அதுக்கு வழிய சொல்லு.” என்றான்.
“அவகிட்ட போய் முதல்ல மனசு விட்டுப் பேசு. அவளோட பிரச்சினை என்னன்னு கண்டுபிடி. அதுக்கு நீயே ஒரு தீர்வையும் கண்டுபிடி. அவ்ளோதான்.” என்று சாதாரணமாக சொன்னவரை, ஏற இறங்கப் பார்த்தவன்,
“சீதா லட்சுமி, கில்லாடி தான் நீ. பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுறியோ.?” என்று சொன்னவனை,
“என்னது..? எடு அந்தக் கட்டைய, மவனே என் புருஷனே என்னை முழு பேர் சொல்லிக் கூப்பிட்டது இல்ல. நீ எவ்ளோ கிண்டலா கூப்பிடற.?” என்று அவனைத் துரத்த முயல, நாலுகால் பாய்ச்சலில் படியேறி மேலே சென்றுவிட்டான் அபிஷேக்.
நீண்ட வருடங்கள் கழித்து அபி இப்படி அவருடன் பேசியதையும், கிண்டல் செய்ததையும் நினைத்து ரசித்தவாறு சிரிப்புடன் சென்றார் சீதா.
மேலே சென்றவன் நேரே அஞ்சலியின் அறைக்கு முன்னே சென்று நின்றுகொண்டு அவளின் அறைக்கதவைத் தட்டினான். ஆனால், எந்த ஒரு பதிலும் இல்லை. கதவு திறப்பதற்கான அடையாளமும் இல்லை. மீண்டும் தட்ட நினைக்காமல் மெல்ல கதவைத் திறக்க முயன்றான். கதவைத் திறந்து உள்ளே பார்க்க, அங்கே அஞ்சலி இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
அறை முழுக்கத் தேடியவன், ஏதோ ஒரு நினைவாய் வெளியே வந்து நேரே, அதற்கும் மேலே இருக்கும் அறைக்குச் சென்றான். அங்கேயும் பெரிய அளவில் ஒரு வரவேற்பறை போன்ற இடம். அங்கே பக்கவாட்டில் தனியாக ஒரு சின்ன அறை.
அந்த வரவேற்பறையைத் தாண்டி இன்னொரு கதவைத் திறந்தால் வெட்டவெளி. ஒரு வேளை அஞ்சலி அங்கே இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வந்தான் அபிஷேக். அவன் எண்ணியது சரியே என்பதைப் போல், அங்கே குளிர் காற்றில் நின்றபடி எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
“அஞ்சலி…” என்ற அழைப்பில் திரும்பியவள், முகத்தைத் திருப்பியபடி அவனைக் கண்டுகொள்ளாமல் அந்தப் பக்கமாய்ச் சென்று நின்றுகொண்டாள்.
அதைக் கண்டு சிறிது எரிச்சல் வந்தாலும், சீதா சொன்னதை நினைவில் கொண்டவன், அவள் அருகே சென்றான். அப்போதும் அவனை அவள் சட்டை செய்யவில்லை.
“எதுக்கு அஞ்சலி இப்படி உம்முன்னே இருக்க? உன்னை இப்படிப் பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு. உன்னோட பிரச்சினை தான் என்ன?” என்றான் சிறிது பொறுமையாக.
“நான் எப்படி இருந்தா உனக்கென்ன மேன்? நீ உன் வேலையைப் பாரு. எனக்குத்தான் பேசறதுக்கு எந்த உரிமையும் இல்லையே இந்த வீட்டுல. நான் எதுவும் பேசப் போறது இல்ல.” என்று மீண்டும் கோபத்திலேயே சொன்னாள்.
“ப்ச்ச்.. அஞ்சலி. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கற? நான் ஏதோ கோபத்துல அப்படிப் பேசிட்டேன். அதுவும் அந்த இடியட் மேல இருக்க கோபத்த உன் மேல காமிச்சிட்டேன்.” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.
“இன்னொரு தடவ அவள இடியட்டுன்னு சொன்ன, உன்னைக் கொன்னுடுவேன் மேன்.” என்று அவனிடம் கையை நீட்டி மிரட்டிப் பேசியவளைப் பார்த்து சிரித்துவிட்டான் அபிஷேக்.
அவன் சிரிப்பதைப் பார்த்துக் கடுப்பானவள், “சிரிச்சு என்னைக் கடுப்பேத்தாம இங்கிருந்து போ..” என்றாள்.
“என் மேல கோபம் வர அளவுக்கு அவ மேல அப்படியென்ன ஒரு ரிலேஷன்ஷிப் உனக்கு?” என்றான்.
“ஓ! உனக்குப் பொறுமையா இதெல்லாம் கூட கேட்கத் தெரியுமா?” என்றாள்.
“ஏதோ கொஞ்சம். எங்கம்மாவோட ட்ரெயினிங்க்.” என்று புன்னகைத்தான். ஆனால், அதைப் பார்த்து அவளோ முறைத்தபடி முகத்தை மீண்டும் திருப்பிக்கொண்டாள்.
“சொல்லு அஞ்சலி. நான் பொறுமையா உன்னோட ப்ராப்ளம் என்னன்னு தான் கேட்க வந்திருக்கேன். தயவுசெய்து சொல்லு.” என்று கெஞ்சியவன் மேல் கொஞ்சம் இரக்கம் காட்ட நினைத்தாள்.
“உனக்கு என் தங்கச்சி ரித்திகாவப் பத்தி தெரியுமா? அவன்னா எனக்கு எவ்ளோ இஷ்டம்ன்னு தெரியுமா? அவ கூட இருந்த நாளெல்லாம் எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உனக்குத் தெரியுமா? அதெல்லாம் இப்ப நினைச்சாலும் அப்படியே எனக்கு உடம்பே சிலிர்க்கும். அந்த அளவுக்கு ஒரு அன்பான தங்கச்சி. ஆனா, அவ என்னை விட்டுப் போவான்னு நான் நினைச்சதே இல்ல. என்னோட பத்து வயசுல, அவ என்னன்னே சொல்ல முடியாத நோயால அஃபெக்ட் ஆகி என்னை விட்டுட்டு கடவுள் கிட்ட போய்ட்டா. அதுக்கப்பறம் என்னோட லைஃப்ல நடந்த விஷயமெல்லாம் தான் உனக்குத் தெரியுமே.” என்றவள் சற்று நிறுத்தினாள்.
அவனும் அதை ஆமோதிப்பதைப் போல், “ம்ம்..” என்றான்.
“முதன் முதல்ல பிரார்த்தனாவ இண்டர்வியூல பார்த்தப்போ, என்னோட ரித்திகா தான் என் கண்ணு முன்னாடி வந்து உட்கார்ந்திருக்க மாதிரி ஒரு ஃபீல். அவங்களோட பேச்சும் அப்படியே அவளத்தான் எனக்கு ஞாபகப்படுத்துச்சு. அதனால தான் அவங்கள மிஸ் பண்ணக்கூடாதுன்னு அவங்களுக்கு ஒரு வேலையக் கொடுத்தேன். இந்த ஒரு மாசமா அவங்க கூடப் பழகும் போது, ரித்திகாவுக்கும், அவங்களுக்கும் எவ்ளோ சிமிலாரிட்டீஸ் தெரியுமா? அது உனக்கு சொன்னாப் புரியாது. ஆனா, என்னால ஃபீல் பண்ண முடியுது. அந்த ஒரு விஷயம் தான் அவங்க உடம்பு சரியில்லாம இருந்தப்போ, அவங்களப் போய்ப் பார்க்கணும்னு தோணுச்சு. அவங்க வீடு இருந்தா சொல்லுங்கன்னு சொன்னதும், வெளியில தான் பார்த்துக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, நீ பேசினதுக்கப்பறம் தான் அவங்கள ஏன், நம்ம வீட்லயே தங்க வைச்சா என்னன்னு தோணுச்சு. ஆனா, நீ தான் அதுக்கு ருத்ர தாண்டவம் ஆடிட்டியே. அதுக்கப்பறம் என்னால நைட் தூங்கவே முடியல. ரித்திகா நினைப்பாவே இருந்துச்சு. மார்னிங்க் டயர்டா இருந்தாலும் எப்படியோ கம்பெனில சமாளிச்சுட்டு இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா, தலைவலி தாங்க முடியலன்னு தான் வீட்டுக்கு வந்துட்டேன்.” என்று தன் மனதில் இருந்த வேதனைகளை ஒரு வழியாக அபியிடம் கொட்டினாள் அஞ்சலி.
“ஹூம்ம்.. வெரி லாங்க் ஸ்டோரி…” என்று சலித்துக்கொண்டதைப் போல் நடித்தவனை முறைத்தாள்.
“ஹூம்ம்.. ஓகே.. விடு. இப்போவாது என்னைப் புரிஞ்சுக்கிட்டியே.” என்று சொல்லி சமாதானக் கொடியைப் பறக்க விட்டாள் அஞ்சலி.
ஒரு வழியாக சமாதானம் ஆனாளே என்று, அவளைப் பிடித்தபடி அவனும் சிரித்தான்.
அதைப் பார்த்து, “அப்போ, பிரார்த்தனாவ நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாமா?” என்றாள் திரும்பவும்.
திரும்பவும் ஆரம்பிப்பவளைச் செல்லமாக முறைத்தவன், “அதெல்லாம் நல்லா இருக்காது அஞ்சலி. நம்ம வீட்ல போய் எப்படி ஒரு எம்ப்ளாயிய தங்க வைக்கறது? இது மட்டும் கம்பெனில இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சா என்னாகறாது? யோசிச்சுப் பாரு.” என்றான்.
“அவங்க நம்ம கூடவே இருக்கறது அவசியம்னு சொல்லுவோம். அவங்க பிரச்சினை என்னன்னு சொல்லுவோம். நிறைய இடங்கள்ல பி.ஏ வா இருக்கறவங்கள கூடவே தங்க வைக்கறது இல்லையா? அதுமாதிரி தான் இதுவும்.” என்றாள் விடாமல்.
“தப்பா நினைச்சுப் பேசுவாங்க அஞ்சலி புரிஞ்சுக்கோ.” என்று அவனும் அவளின் எண்ணத்தை மாற்ற நினைத்தான்.
“நாம ஒன்னும் நம்ம வீட்ல இருக்கற ரூம்ல தங்க வைக்க வேண்டாம். இதோ இங்க இருக்கே, இந்த தனி ரூம் போதும் அவங்களுக்கு. அவங்க இப்படி இருந்தா போதும்னுதான் என்கிட்ட கேட்டாங்க. வேணும்னா இங்க தங்கிக்க சொல்லலாம்.” என்றாள்.
அதைக் கேட்டவன் அவளை விடுவித்து, “அந்த ரூம்லயா? நீ என்ன லூசா?” என்று அவளிடம் திரும்பவும் எகிறினான்.
அவன் திரும்பவும் கோபப்படுவான் என்று எதிர்பார்க்காதவள், அவனை முறைத்தபடி நின்றாள்.
(தொடரும்…)
உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல் விடிய, பிரார்த்தனா ஓரளவு தன்னைத் தேற்றிக்கொண்டு அன்றுதான் கம்பெனிக்கு வந்து சேர்ந்தாள். அவள் வருவாள் என்று எதிர்பார்த்தே அஞ்சலியும் முன்னமே அங்கிருந்தாள்.
அவளைக் கண்டதும் முகம் முழுக்க புன்னகையும், பிரகாசமும் தெரியப் பார்த்தாள். பிரார்த்தனா அருகில் வந்ததுமே, அவளது கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“ஆர் யூ ஓகே? ஹெல்த் இப்போ நல்லா இருக்கா பிரார்த்தனா?” என்று அக்கறையுடன் அவளைப் பார்த்து விசாரித்த விதம், பிரார்த்தனாவிற்கு ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது.
தன்னை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் மத்தியில், இப்படி ஒரு தேவதை தன்னை அரவணைத்து, அக்கறை செலுத்தி அன்பு காட்டுவதை நினைத்து மனதிற்குள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
“இப்போ ஓகே தான் மேம். ஃபீல் பெட்டர்.” என்றாள் கண்களில் அதே அன்புடன்.
“சரி இன்னைக்கு ஈவினிங்க் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. நீங்க கண்டிப்பா மாட்டேன்னு மட்டும் சொல்லக்கூடாது. அப்போ வந்து சொல்றேன். சரியா?” என்று அந்தப் புன்னகை மாறாமல் கூறியவளைப் பார்த்து கேள்வியுடன் நின்றாள்.
“மேம். என்ன திடீர்னு சர்ப்ரைஸ்ஸெல்லாம்? எதுக்கு?” என்றாள்.
“அது சஸ்பென்ஸ். சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேன். அப்பறம் கேட்டா எப்படி சொல்ல முடியும்? ஈவினிங்க் வரைக்கும் வெய்ட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டுச் செல்ல முயன்றவளை அழைத்தாள் பிரார்த்தனா.
“மேம். நான் சீக்கிரமே வீடு பார்க்கணும். நீங்க சார் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னீங்க…” என்று மெல்லத் தயங்கிக் கேட்டவளிடம் விழித்தவள்,
“ஆங்க்… சொல்றேன். கண்டிப்பா சொல்றேன்…” என்று சொன்னபடியே அவளை விட்டு நழுவிவிட்டாள் அஞ்சலி.
அதற்கு மேல் அவளிடம் கேட்பது நன்றாக இருக்காது என்று எண்ணியவள், வழக்கம் போல் அபிஷேக்கின் அறைக்குள் நுழைய, வழக்கத்திற்கு மாறாக அங்கு அபிஷேக் அவனது ரோலிங்க் சாரில் அமர்ந்தபடி அவளை ஒரு பார்வை பார்த்தான்.
இதை எதிர்பார்க்காதவள், மெல்லத் தயங்கித் தயங்கி உள்ளே வந்தாள். அவனிடம் பேசலாமா? வேண்டாமா? என்று யோசித்தாள். வேறு வழியில்லை பேசித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனை நம்பித்தான் தனது பிழைப்பே என்று எண்ணியவள், அவளது மேசையில் பையை வைத்துவிட்டு, அவனிடம் வந்து நின்றாள்.
அவள் வந்து நிற்கிறாள் என்று தெரிந்துமே, வேண்டுமென்றே தனது அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான் அபிஷேக். ஆனால், அதற்காகவெல்லாம் அவனை விட்டுச் செல்ல முடியாத கட்டாயம். பிரார்த்தனா இப்போது பேசியே ஆக வேண்டும்.
“சா…. சார்…” என்று அவள் ஆரம்பிக்க, அவனோ அதை இப்போதும் சட்டை செய்யவில்லை.
“ஓ! நீங்க இந்தக் கம்பெனியோட எம்ப்ளாயியா? நான் கூட வேற யாரோன்னு நினைச்சேன்.” என்று கேலியாகப் பேச,
அவளோ தலை குனிந்தபடி நின்றாள். எடுத்தவுடனேயே இப்படிப் பேசினாள் அவளால் வேறு என்ன பேச முடியும்?
“வந்து கொஞ்ச நாள்லயே அஞ்சலிக்கும், எனக்கும் ஒரு கேப்ப உருவாக்கிட்ட. ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்க. நீ நிறைய ப்ளான் பண்ற. ஆனா, அது கரெக்ட்டா, பர்ஃபெக்ட்டா நடக்க சரியான ஆள் புடிச்சிருக்க பாரு. க்ரேட்…” என்று சொல்லிக்கொண்டே போனவனைப் புரியாமல் பார்த்தாள்.
“சார்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல. எதுவா இருந்தாலும் ஸ்ட்ரெய்ட்டா சொல்லுங்க.” என்றாள் பட்டென.
“இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆனா, வேலை மட்டும் ஒழுங்கா பண்ணத் தெரியாது. உன்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் எங்கிருந்துதான் வர்ரீங்களோ?” என்றான்.
அவன் அத்துமீறி பேசிக்கொண்டே போக, “சார்.. நான் இந்தக் கம்பெனிக்கு வேலை பார்க்க வந்திருக்கேனே தவிர நீங்க சொல்ற மாதிரி விஷயங்கள செய்யறதுக்கில்ல. இன்னும் நீங்க என்னை சரியாப் புரிஞ்சுக்கல.” என்றாள் விடாமல்.
“ஹலோ… உன்னை எதுக்கு நான் புரிஞ்சுக்கணும்? நான் யாரு உனக்கு? வெறும் பாஸ் மட்டும் தான். வேற எதுவும் இல்ல. என்ன?” என்று எகிறியபடி பேசினான்.
அதற்கு மேல் அவனிடம் பேசிப் பயனில்லை என்று தெரிந்தவள், அமைதியாகப் போய் அவளது இடத்தில் அமர்ந்தாள். அவளது பேச்சைக் கேட்டு எரிச்சலானவன், அங்கிருந்து சென்றுவிட்டான்.
அன்று அவனது வேலையின் எந்த ஒரு குறிப்பையும் அவளிடம் அவன் சொல்லவில்லை. எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடியாததால், கணிணியில் தனது சி.ஏ படிப்பிற்கான அடுத்தகட்ட முயற்சிக்காகப் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அப்படியே மாலையும் வந்துவிட்டது.
அப்போதே அஞ்சலி வந்துவிட்டாள். “ஓகே பிரார்த்தனா, உங்கள ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போவேன். நீங்க கண்டிப்பா என்கூட வரணும்.” என்று அவளின் அனுமதி எதையும் கேட்காமல், அவளின் கைப் பிடித்து கூட்டிக்கொண்டு போனாள்.
அபிஷேக் கண்டிப்பாக அவர்களுடன் வரமாட்டான் என்று, முன்பே அஞ்சலி கம்பெனியுடைய கேபில் அவளை அழைத்துக்கொண்டு சென்றாள். இவை எல்லாவற்றையும் ஒரு கண் கொண்டு கோபத்தோடு பார்த்துக்கொண்டுதான் இருந்தான் அபிஷேக்.
அவள் அழைத்துக்கொண்டு செல்லும் வரை அமைதியாகவே அவளுடன் சென்றாள் பிரார்த்தனா. அவர்களின் வீடு வரவே, பிரார்த்தனாவை இறங்கச் சொல்லி உள்ளே அழைத்துப் போனாள்.
பிரார்த்தனாவின் மனதில் ஒரு நிமிடம் தான் காண்பது கனவா? நினைவா? என்றே தோன்றியது. ஏனென்றால், அவள் கனவில் மட்டுமே நினைத்துப் பார்க்கக்கூடிய மாளிகை போன்ற வீடு, சுற்றியும் தோட்டம். பச்சைப் பசேல் போர்த்திய புல்வெளி இடங்கள்.
முன்பு சில சினிமா படங்களில் மட்டுமே பார்த்த வீடுகள் போன்றொரு பிரம்மாண்ட அமைப்பைக் கண்டு பிரமித்துத்தான் போனாள். இப்படி ஒரு இடத்திற்கு அஞ்சலி எதற்கு தன்னை அழைத்து வந்திருக்கிறாள்? என்பதே அவளுடைய கேள்வி.
“மேம்.. எங்க வந்திருக்கோம்? இது யாரோட வீடு?” என்றாள் வாசலுக்கு வந்ததும்.
அவளைப் பார்த்து ரகசியப் பார்வையோடு புன்னகை சிந்திய அஞ்சலி, “இதுதான் அபிஷேக்கோட வீடு. நானும் இப்போ இங்க தான் இருக்கேன்.” என்றாள்.
அதைக் கேட்டதும் அதிர்ந்தவள், “ஐயோ.. மேம்.. என்னை விட்டுடுங்க. நான் போறேன். அவர் மட்டும் இங்க என்னைப் பார்த்தார் அவ்ளோதான்.” என்று ஓட நினைத்தவளை, சட்டெனப் பிடித்து நிறுத்தினாள் அஞ்சலி.
“ஹலோ… எங்க ஓடறீங்க? இது அவனோட வீடு தான். கம்பெனி இல்ல. எதுக்கு இவ்ளோ பயப்படறீங்க பிரார்த்தனா? அவன் இன்னும் வீட்டுக்கு வரல.” என்றாள்.
“மேம். அதனால தான் சொல்றேன். அவர் வரதுக்குள்ள நான் கிளம்பிடுறேன். ஏற்கனவே காலைல அவர்கிட்ட நல்லா டோஸ் வாங்கினேன். இங்க மட்டும் அவர் என்னைப் பார்த்துட்டா இன்னும் நல்லா நாலு வார்த்தை சொல்லிடுவார். வேண்டாம் மேம். ப்ளீஸ் நான் கிளம்பறேன்.” என்று பயத்தில் உள்ளே வராமல் வாசலிலிருந்தே ஓடிவிடும் எண்ணத்தில் கூறினாள்.
“அதெல்லாம் முடியாது. நீங்க உள்ள வந்துதான் ஆகணும்.” என்று அஞ்சலி அவளைப் பிடித்து இழுக்க, இவர்கள் போட்ட சத்தத்தைக் கேட்டு வாசலுக்கே வந்துவிட்டார் சீதா லட்சுமி.
“அடடே! இது தான் அந்தப் பொண்ணா ராஜாத்தி? வாம்மா உள்ள வராம இங்கயே ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று அவர் கேட்க, வேறு வழி தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள் பிரார்த்தனா.
வீடு வெளியே எத்தனை பிரம்மாண்டமோ, அதே அளவு உள்ளேயும் இருந்தது. அவள் உள்ளே வரவே சங்கோஜப்பட்டு நிற்க, அஞ்சலி அவளை வம்படியாக இழுத்து வந்து அங்கே இருந்த ஷோஃபாவில் அமர வைத்தாள்.
அதற்குள், சீதா அவர்கள் இருவருக்கும் பருக நீரும், கொஞ்சம் நொறுக்குத் தீனிகளையும் கொண்டு வந்து வைத்தார். அதைக்கூட எடுத்து சாப்பிடத் தயங்கினாள் பிரார்த்தனா. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சீதா, கண் ஜாடையில் அஞ்சலியிடம் ஆமாம் என்று தலையாட்டினார்.
அவருக்கு பிரார்த்தனாவைப் பார்க்க, அவருடைய அண்ணியின் சாயல் கொஞ்சம் தெரிந்தது. அஞ்சலியுடைய தங்கை ரித்திகாவும் அவருடைய ஜாடை என்பதால் தான், அவளுக்குப் பிரார்த்தனாவைப் பார்த்ததும் அப்படித் தோன்றியிருக்கிறது என்பதை அப்பொழுதே நன்றாகப் புரிந்துகொண்டார்.
“இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நாம முன்ன, பின்ன வந்தது இல்லையே இவங்க என்ன நினைப்பாங்களோன்னு யோசிக்கிறியா மா?” என்றார் சீதா பிரார்த்தனாவைப் பார்த்து.
“ஆங்க்… இல்ல.. இல்ல மேம்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று அவள் தயங்கித் தயங்கிச் சொல்லும் போதே, அவள் எந்த அளவு சங்கோஜப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டார்கள் இருவரும்.
“அதென்ன மா? மேம், கீம்ன்னுட்டு? அஞ்சலி கூப்பிடற மாதிரி ஆண்ட்டின்னு தாராளமா கூப்பிடு.” என்றார்.
அதைக் கேட்டு அவரைப் பார்த்தவள் அஞ்சலியைப் பார்க்க, “இதுதான் என்னோட செல்ல ஆண்ட்டி. ஐ மீன், அபியோட அம்மா. இவங்க எப்பவுமே இப்படித்தான் ஜாலியா பேசுவாங்க.” என்றதுமே அவளது கண்கள் அகல விரிந்தன.
“ஐயோ ஏன் மா? என்னோட பையன் பேரைக் கேட்டாலே இவ்ளோ பயப்படற? அந்த அளவுக்கு உன்னை மிரட்டி வச்சிருக்கானா?” என்றார்.
ஆனால், அவளோ தலைகுனிந்து மௌனத்தை மட்டுமே பதிலாய் அளித்தாள்.
“நான் தான் சொன்னேனே ஆண்ட்டி, இவங்க ரொம்பப் பாவம்ன்னு. அவன் தான் இவங்களத் திட்டியே டார்ச்சர் பண்றான். இந்த இடத்துல வேற யாராவதா இருந்தா இந்நேரம் ஓடியே போயிருப்பாங்க.” என்றாள் அஞ்சலி.
“சரி விடுமா, அவன் அப்படித்தான். உன்னைப் பத்தி அஞ்சலி நிறைய விஷயம் சொன்னா. கேட்டதுமே எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இவ்ளோ சின்ன வயசுலயே இப்படிக் கஷ்டத்த அனுபவிக்கறது ரொம்பக் கொடுமை. கடவுள் உன்னை ரொம்ப சோதிக்கறார்.” என்று தனது மனதில் பட்டவற்றை சீதா பேச,
அவரது எதார்த்தமான பேச்சில் நெகிழ்ந்த பிரார்த்தனா, “கடவுள் என்னை சோதிச்சாலும் கைவிட மாட்டார் ஆண்ட்டி. இல்லைன்னா அஞ்சலி மேம் மாதிரி ஒருத்தவங்க எனக்குக் கிடைச்சிருக்க மாட்டாங்க. அவங்க மட்டும் எனக்கு இந்த வேலையக் கொடுக்கலன்னா, என்னோட நிலை என்னாகி இருக்கும்னே யோசிச்சுப் பார்க்க முடியல.” என்ற போதே குரல் தழுதழுத்தது பிரார்த்தனாவுக்கு.
“கடவுள் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு ஒரு தைரியத்த நம்ம மனசுல ஆழமா பதிச்சுட்டா, அதை விட தைரியம் வேற என்ன வேணும் சொல்லு மா?” என்றார் சீதா.
அதை ஆமோதிப்பவளாய்ப் பிரார்த்தனா தலையாட்ட, “ம்ம்.. ஆண்ட்டி யூ நோ ஒன் திங்க்? பிரார்த்தனா விநாயகரோட தீவிர பக்தை. அவர நாள் தவறாம கும்பிடுவாங்க. நம்ம கம்பெனில இருக்க விநாயகர தினமும் தரிசிக்கிற ஒரே ஜீவன் இவங்க மட்டும் தான்.” என்று அஞ்சலி கேலி செய்தாள்.
“ஓ அப்படியா! ரொம்ப நல்ல பழக்கம் மா. இப்போ இருக்க பசங்களுக்கெல்லாம் அதுக்கு எங்க நேரம் இருக்கு? சரி, அதை விடு. நீ உன்னோட லக்கேஜெல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா? இல்ல நாளைக்கு எடுத்துட்டு வரியா? இன்னைக்கும், நாளைக்கும் நாள் நல்லா இருக்கு. நீ வந்தா சரியா இருக்கும்.” என்று சீதா சொல்ல, பிரார்த்தனாவோ விழித்தாள்.
அதுவரை அமைதியாக இருந்த அஞ்சலி, “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்ன்னு சொன்னேனே, அது என்ன தெரியுமா? இனிமேல் நீங்க இந்த வீட்ல தான் தங்கப் போறீங்க.” என்று அஞ்சலி பரவசத்துடன் சொல்ல,
பிரார்த்தனாவோ அதிர்ச்சியின் ஆழத்திற்குச் சென்றதைப் போல் மொத்தமாய் தனது பன்முக பாவனைகளை அவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாள்.
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
அவர்கள் இருவரும் சர்வ சாதாரணமாகச் சொன்னதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அவளை ஒரு நிலைக்குக் கொண்டு வர அஞ்சலி பாடுபட்டாள்.
“என்ன மேம் சொல்றீங்க? நான் எப்படி இங்க தங்க முடியும்? நீங்க என்னோட முதலாளி. நான் அந்த லிமிட்ல இருக்கறதுதான் நல்லது. நான் ஏதோ ஒரு சின்ன ரூம் மாதிரி இருக்கற ஒரு வீடு கேட்டேன். நீங்க இந்த மாளிகை மாதிரி இருக்க வீட்ல தங்க சொன்னா, அது நல்லா இருக்காது மேம். கண்டிப்பா பிரச்சினை ஆகும். அதுவும் அபி சாருக்கு இது தெரிஞ்சதுன்னா, கண்டிப்பா ஒத்துக்கமாட்டார்.” என்று தெளிவாகப் பேசினாள் பிரார்த்தனா.
“அதெல்லாம் அபி ஒத்துக்கிட்டான். நேத்தே நானும், ஆண்ட்டியும் அவன்கிட்டப் பேசி ஒத்துக்க வச்சிட்டோம். இனி நீங்க உங்க லக்கேஜெல்லாம் தூக்கிட்டு இங்க வர்றது மட்டும் தான் பாக்கி. இனி எதுவும் பேச வேண்டாம் பிரார்த்தனா. உங்களுக்கு இங்க எந்தக் குறையும் இருக்காது. எங்கள உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ்ஸா பாருங்க.” என்று அஞ்சலி பரந்த மனதுடன் சொல்ல, அதற்கு சீதாவும் ஆமோதித்தபடி தலையாட்டினார்.
ஆனால், பிரார்த்தனாவுக்கு இது சரியென்று படவில்லை. அதனால் தான் இன்று காலை அலுவலகத்தில் அவள் நுழைந்த உடனேயே அவன் அவளை ஜாடையாய்ப் பேசியிருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.
அவன் கண்டிப்பாக முழு மனதோடு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இவர்களின் கட்டாயத்தில் ஏதோ சரியென்று சொல்லியிருப்பானே தவிர, இவர்கள் போல் அவனுக்குப் பரந்த மனமென்று ஒன்று இருப்பது சந்தேகமே என்று நினைத்தாள்.
“என்னம்மா, இப்பவும் எங்க அபி என்ன சொல்லுவானோன்னு யோசிக்கிறியா?” என்று சீதா கேட்க, பிரார்த்தனாவின் விழிகளே அதற்குப் பதில் சொல்லியது.
“கம்பெனில தான் அவனோட ராஜ்ஜியமெல்லாம். இந்த வீட்ல எங்க ராஜ்ஜியம் தான். அவன் எதுவும் பண்ண முடியாது. அதனால, நாளைக்கே நீ வந்துடு. நீ கேட்ட மாதிரியே ஒரு ரூம் மேல இருக்கு. அங்கயே நீ தங்கிக்கலாம்.” என்றார் சீதா.
அதைப் பார்க்க பிரார்த்தனா விருப்பப்பட்டாலும், ஒரு பக்கம் அபியின் கோபமான முகமே நினைவுக்கு வந்தது. இனிமேல் 24 மணி நேரமும், அவனது கோபப் பார்வையைத் தான் சந்திக்க வேண்டுமே என்று நினைக்கும் போது, அவளுக்குத் தொண்டைக் குழி அடைத்தது.
அடுத்த நாள் காலை 7 மணிக்கெல்லாம் அபியின் வீட்டில் ஆஜராகியிருந்தாள் பிரார்த்தனா. காலை 8 மணி வேளையில் அந்த அறையில் பால் காய்ச்சி குடியேறுவதாய் பிரார்த்தனா விருப்பப்பட, அதை செவ்வனே நிறைவேற்றத் தயாராகினர் சீதாவும், அஞ்சலியும்.
பிரார்த்தனாவை அந்த அறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை முந்தைய தினமே அவர்கள் செய்திருந்ததால் அவளுக்கு எந்த வித சிரமும் இல்லாமல், நல்லபடியாய்ப் பாலைக் காய்ச்சி குடியேற்றினர் அந்த அறையில்.
அவளுக்கென்று ஒரு சின்ன தடுப்பை ஏற்படுத்தி அடுக்களையைத் தயார் செய்திருந்தார் சீதா. தனக்குப் பரிசாக வந்த ஒரு சிறிய அடுப்பு மற்றும் சில இதர சமையல்கட்டில் உபயோகிக்கும் சாமான்கள், கேஸ் சிலிண்டர் என அனைத்தும் அவளுக்காகத் தயாராய்க் காத்திருந்தன.
அதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனாள் பிரார்த்தனா. நன்றி சொல்லும் விதமாக கையைக் குவித்து அவள் சொல்ல, அதைத் தேவையில்லை என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டார் சீதா. முந்தைய தினமே அஞ்சலி, பிரார்த்தனாவுடன் வந்து விடுதியின் அனைத்து விஷயங்களையும் முடித்துவிட்டு வந்ததால், பிரார்த்தனா தனது பைகளை எடுத்துக்கொண்டே வந்துவிட்டாள்.
இதெல்லாம் தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தாலும், எதையுமே கண்டுகொள்ளாமல் காலை உணவை உண்டுவிட்டு சட்டென்று கம்பெனிக்குக் கிளம்பிவிட்டான் அபிஷேக்.
அவனுடைய மனக்குமுறலை யாரிடம் சொல்வது? என்று தெரியாமல் கிளம்பிச் சென்றான். அன்று அஞ்சலி அந்த அறையைப் பற்றிக் கேட்டபோதே, அவன் ஒத்துக்கொள்ளவில்லை.
“அஞ்சலி, இது என்னோட சின்ன வயசு ரூம். நான் எப்பவும் இங்க தான் இருப்பேன். இப்போ வேணும்னா நான் தாத்தாவோட ரூம்ல இருக்கலாம். ஆனா, இதுதான் என்னோட ஞாபகார்த்தம் எல்லாம். நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணும் போது, நான் எதையாவது மிஸ் பண்ணும் போது இங்கதான் வந்து ஸ்பெண்ட் பண்ணுவேன். இங்க வந்து அவளப் போய் தங்க சொல்லப் போறியா?” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
“ஆனா, இது இப்போ பழைய சாமானமெல்லாம் போட்டு வைக்கற ஸ்டோர் ரூம் தான? நீ என்ன யூஸ் பண்ணிட்டா இருக்க? இந்த சின்னக்குழந்தைங்க விளையாடற பொம்மை கண்ணு முன்னாடியே இருந்தாலும் அதைக் கண்டுக்க மாட்டாங்க. ஆனா, அதை வேற யாராவது எடுத்து விளையாட ஆரம்பிச்சிட்டா உடனே சண்டை போடுவாங்களே, அது மாதிரி இருக்கு நீ சொல்றது. நான் வந்ததுக்கப்பறம் நீ அந்த ரூம் பக்கம் எட்டிப் பார்த்தது கூட இல்ல. எப்பவும் பூட்டியேதான் இருக்கும். ஆனா, இப்போ மட்டும் அது உன்னோட ரூம்ன்னு செண்ட்டிமென்ட்டா பேசிட்டு இருக்கியா?” என்றாள்.
“ப்ச்ச்.. அதை நான் எப்படி உனக்கு சொல்லிப் புரியவைப்பேன்?” என்று தனது கையைத் தலையில் வைத்தபடி நின்றவனைப் பார்த்து,
“ஒரு வேளை என்னோட தங்கச்சி உயிரோட இருந்து, இந்த வீட்டுக்கு வந்து, எனக்கு இந்த ரூம் தான் வேணும்னு அடம்புடிச்சா இந்த ரூம நீ அவளுக்காகத் தராமப் போய்டுவியா? தந்துதானே ஆகணும். அதுமாதிரி நினைச்சுக்கோ.” என்றாள் அஞ்சலி சர்வ சாதாரணமாக.
“அவ அடம் பிடிக்கல அஞ்சலி. நீதான் ரொம்ப அடம்பிடிக்கற. எனக்கு எதுவுமே சரியாப்படல. நீ பண்றதெல்லாமே சரியாகாது. எதுவா இருந்தாலும், யோசிச்சுப் பண்ணு.” என்றான்.
“நான் எல்லாமே யோச்சிச்சுத்தான் பண்றேன் அபி. என்னோட மனசுல என்ன தோணுதோ அதை இப்போவரைக்கும் சரியாதான் பண்ணிட்டு வரேன். அதனால, நான் தப்பு பண்ணலன்னு முழுசா நம்பறேன். இனி நீ தான் சம்மதம் சொல்லணும்.” என்று அவனது பதிலை எதிர்பார்த்தாள்.
“ஏதோ பண்ணு…” என்று அவளிடம் சொல்லிவிட்டு சலிப்புடன் அங்கிருந்து வந்ததை நினைத்தபடியே, தனது காரை கம்பெனியின் நுழைவாயிலில் செலுத்தி உள்ளே சென்றான் அபிஷேக்.
எப்பொழுதும் போல அனைவரது வேலைகளும் கம்பெனியில் ஆரம்பிக்க, பிரார்த்தனாவும், அஞ்சலியுடன் வந்துவிட்டாள். அபியின் குறிப்புகளைக் குறித்துக்கொள்ளத் தயாராக அவனருகில் வந்து நின்றாள்.
ஆனால், அவனோ அவளை ஏதோ கொலை செய்ததைப் போல் வெறித்துப் பார்த்தபடி இருந்தான். அதைப் பிரார்த்தனா தெரிந்துகொண்டாலும், அவள் வேலையில் மட்டுமே தனது கவனம் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்றாள்.
“எல்லாத்தையும் பண்ணிட்டு ரொம்ப அடக்க, ஒடுக்கமா இருக்கற மாதிரி நடிக்கிறியா? நீ நினைச்ச மாதிரி அஞ்சலிய யூஸ் பண்ணி உன்னோட காரியத்த சாதிச்சிட்ட தான? மனசு இப்போ குளிர்ந்து போயிருக்குமே. உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு என்னோட வீட்டுக்குள்ள வரதுக்கு?” என்று எல்லை மீறிய வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தினான் அபிஷேக்.
ஆனாலும், அவள் அமைதியாகவே இருப்பதைப் பார்த்து எரிச்சலானவன், “எவ்ளோ சொன்னாலும் உனக்கெல்லாம் சூடு, சுரணையே இருக்காதா? என்ன திட்டு திட்டினாலும் அமைதியாவே பொம்மை மாதிரி நிக்கற?” என்று பொறுமையிழந்து கேட்டான்.
அவனை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தவள், “சொல்லப்போனா நான் ஒரு பொம்மை மாதிரி தான் சார். எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாதவ தான். அதனால தான் நீங்க எவ்ளோ பேசினாலும் அமைதியாவே இருக்கேன். ஏன்னா, நான் இதைவிட மோசமான வார்த்தைகள என்னோட வாழ்க்கைல இத்தனை வருஷமா கேட்டுட்டு தான் வந்திருக்கேன். இதுக்கே நான் ஓஞ்சு போய்ட்டா, என்ன பண்றது சார்?” என்றாள் விரக்தியுடன்.
அதைக் கேட்டு அவளைக் கேள்வியுடன் பார்த்தான். அதைப் பார்த்தவள், மீண்டும் தொடர்ந்தாள்.
“இப்போ கூட உங்க மனசுல என்னைப் பத்தின நிறைய தப்பான விஷயங்கள் தான் ஓடிட்டு இருக்கும். இப்படி சிம்ப்பதி க்ரியேட் பண்ணித்தான் எல்லாத்தையும் நான் கவுக்குறேன்னு கூட நினைச்சிருப்பீங்க.” என்று அவள் சொன்னதும், தன் மனதில் அப்போது அதே விஷயம் தோன்றியதை ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன் நினைத்தான் அபிஷேக்.
“உங்களுக்குப் பொதுவாவே யார் மேலயும் நம்பிக்கை இல்லன்னு வந்த கொஞ்ச நாள்லயே நான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதுக்காக நீங்க சந்திக்கற எல்லாருமே அப்படிப்பட்டவங்கன்னு எப்படி சார் யோசிக்கறீங்க? ஒருத்தர் கூடவா நல்லவங்க இல்ல? ஒரு சில சந்தர்ப்பத்துல, ஒரு சில விஷயங்கள் நம்ம கை மீறிப் போகும் போது அந்த அவநம்பிக்கை வரலாம். ஆனா, எல்லா நேரமும் அதையே நாம புடிச்சிட்டு இருந்தா நம்மாள இந்த வாழ்க்கைய நிம்மதியா வாழவே முடியாது. நான் அன்னைக்கு உங்க வண்டிய இடிச்சு கண்ணாடிய உடச்சதால தான சார் என் மேல உங்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு, கோபம்? எனக்கு இந்த வேலை எவ்ளோ முக்கியம்னு உங்களுக்குத் தெரியாது. வாழ்க்கை எங்க நம்ம கைய விட்டுப் போயிடுமோன்ற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்குள்ள இருந்து, என்னைத் தூங்கவிடாம செஞ்ச டைம் அது. எப்படியும் என்னோட சொந்தக் கால்ல நிக்கணும்னு ஒரு வைராக்கியம். அது நடக்குமோ, நடக்காதோன்னு ஒரு தடுமாற்றத்துல தான் சார் அன்னைக்கு தெரியாம அந்தத் தப்பப் பண்ணிட்டேன். நான் எதையும் வேணும்னே பண்ணல சார். இது கூட நான் ஏதோ பொய் சொல்றதா நீங்க நினைக்கலாம். ஆனா, என் மனசுல இருக்க உண்மைய சொல்றதுக்கு நான் என்னைக்குமே பயப்பட மாட்டேன் சார். நீங்க சொல்ற மாதிரி நான் பொம்மையா இருந்ததால தான், இன்னைக்கு இந்த வேலைல இருக்கேன் சார். நீங்க பேசற கடுமையான வார்த்தைகள நான் ஏத்துக்கப் பழகிட்டேன். இனி நீங்க எவ்ளோ என்னைக் காயப்படுத்த நினைச்சாலும் அதையும் தாங்கிப்பேன் சார். ஆனா, எனக்கான வேலைய விட்டு நான் என்னைக்கும் போகமாட்டேன். அது மட்டும் உறுதி.” என்று சொன்னவள் கண்கள் இந்நேரம் அருவியைக் கொட்டியிருக்க வேண்டும்.
ஆனால், அவள் பொறுமையாக அனைத்தையும் அவனுக்கு எடுத்துரைத்தாளே தவிர, அதைக் காரணம் காட்டி அவனிடம் பரிவு கிடைக்குமென்று நினைக்கவில்லை. அழுகையை மொத்தமாய் மனதில் அடக்கிக்கொண்டே பேசினாள்.
“ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார். தேவையில்லாம உங்க கோபத்தை தினமும் அதிகப்படுத்தறதுக்கு. ஆனா, அது என்னை பாதிக்குதோ இல்லையோ? உங்க உடம்ப தான் அது அதிகமா பாதிக்கும். கோபம் யாரையும் நல்லா இருக்க விட்டதே இல்ல சார். அந்த ஒரு நல்லெண்ணத்துல தான் சொல்றேன். முடிஞ்ச அளவு நான் ஒதுங்கியே இருக்கேன் சார். அஞ்சலி மேம்கிட்ட நான் சொன்னேன். இது ஒத்துவராதுன்னு. ஆனா, அவங்க பிடிவாதமா இருந்ததால அவங்க மனசு நோகக்கூடாதுன்னு தான் அங்க வந்தேன். ஆனா, அது ரொம்பப் பெரிய தப்பு சார். என்னோட தகுதிக்கு மீறி நான் யோசிச்சிருக்கக்கூடாது. முடிஞ்சளவு வேற பக்கம் வீடு பார்த்து எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் உங்க வீட்ட விட்டுப் போயிடறேன். உங்களுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்க மாட்டேன் சார்.” என்று சொன்னவளால் அதற்கு மேலும் அழுகையை அடக்க முடியவில்லை.
“சார், அஞ்சலி.. மேம் என்னைக் கூப்பிட்டாங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றவள் கண்களிலிருந்து ஊற்றாய் கண்ணீர் பெருகியது. ஆனால், அதை வெளிப்படுத்த அவளுக்கான இடம் என்றால் அது கழிவறையே என்று அங்கே விரைந்தாள்.
இங்கே, அபிஷேக்கோ அவளின் பேச்சுக்களை இன்னும் தனது செவியை விட்டு விலக்க முடியாதவனாய், ஒருவாறு மனது பிசைய அந்த இடத்திலேயே சிலையாய் அமர்ந்திருந்தான்.
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே...
பிரார்த்தனாவின் பேச்சைக் கேட்டு மனது ஏனோ பாரமாய் இருந்தது அபிஷேக்கிற்கு. தான் கொஞ்சம் அதிகமாகத்தான் அவளிடம் நடந்துகொண்டோமோ? என்று முதன்முறையாகத் தன்னையே அவன் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.
இதுவரை எந்த ஒரு பெண்ணிற்காகவும் தன் மனம் இப்படி வருந்தியதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இன்றோ பிரார்த்தனாவின் உண்மையான விழிகள் எந்தப் பொய்யையும் உரைக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டவன் முதன்முறையாகத் தடுமாறிப் போனான்.
பிரார்த்தனாவோ, அஞ்சலியைப் பார்க்கச் செல்வதாய் கழிவறை சென்றவள், அதன் பிறகு அபியின் அறைக்குத் திரும்பவே இல்லை. அஞ்சலியுடன் சிறிது நேரத்தையும், அபி இல்லாத நேரத்தில் அந்த அறையிலும், அவன் வருவது தெரிந்தால் அங்கே பணிபுரியும் சக அலுவலகத் தோழிகளுடன் கலந்துகொண்டு பணிபுரிந்தபடி அன்றைய நாளை அப்படியே ஓட்டிவிட்டாள்.
அது அபிஷேக்கிற்குத் தான் பெரும் மன வருத்தத்தைக் கொடுத்தது. அவளிடம் எப்படியாவது பேசி தனது மன்னிப்பைச் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தவன், அவள் அதன் பிறகு வராமல் சென்றுவிட்டது தெரிந்து ஏமாற்றம் கொண்டான்.
ஆனாலும், ஒருவித ஆறுதல். அவள் தன் வீட்டில் தானே இருக்கிறாள். அதனால், பேசுவதற்கான சந்தர்ப்பம் அங்கு கிடைத்தால் கூட கண்டிப்பாக சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு அவசரமாய்க் கிளம்பினான்.
அபியின் வீட்டில் இருந்தாலும், பிரார்த்தனா தனது அறையில் முழு சுதந்திரமாக இருக்கவே நினைத்தாள். தனக்குப் பிடித்த சமையல், பிடித்த பாட்டு, படம், மழை, வானம், நிலா, நட்சத்திரம் என அனைத்தையும் ரசிக்க வேண்டும் என்ற நினைப்புடனேயே இருந்தாள்.
வந்ததும், அவளுக்குப் பிடித்த பாடலை வானொலியில் கேட்டபடி தனது இரவு உடையில், தானே தயாரித்த தேநீரைப் பருகியவாறு அமர்ந்திருந்தாள். உள்ளே இருப்பதைக் காட்டிலும், மாலை வேளையில் மொட்டைமாடியில் சில்லென வீசும் காற்றோடு ஒன்றி இருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.
இது போல் ஒரு நாளும் அவள் இருந்ததில்லை. எப்பொழுதும் ராஜன் மற்றும் செல்வாவின் வசைப்பாட்டோடு பழகிப்போனவளுக்கு இப்போதுதான் ஒருவித நிம்மதி மனதில் பரவியது. தாத்தாவையும், பாட்டியையும் சில சமயங்களில் நினைத்துக்கொண்டாலும், அவர்களும் இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தன்னோடு இருந்துவிட முடியும் என்ற சலிப்பு தான் ஏற்பட்டது.
நல்லவேளையாக, கடவுள் அஞ்சலியைப் போல் ஒரு நல்ல குணம் கொண்டவளை அறிமுகப்படுத்தியது தான், தனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்று அவளை நினைத்து கடவுளுக்கு மனதில் நன்றி கூறினாள்.
“என்ன பிரார்த்தனா, ரேடியோல பாட்டு கேட்டுட்டு ட்ரீம்ல டூயட்டா?” என்றபடி நின்ற அஞ்சலியைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றாள் பிரார்த்தனா. ஏனென்றால் அவள் நின்ற கோலம் அப்படி.
ஏதோ, மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீராங்கனையைப் போல், அவள் மேலே உள்ளாடைக்குப் போடும் அடர்த்தியான பனியனும், கீழே தொடை தெரிய டிராயரையும் அணிந்துகொண்டு வந்து நின்றதில் அவளை ஏற, இறங்கப் பார்த்தாள் பிரார்த்தனா.
சுற்றும், முற்றும் பார்த்தாள். இவளை யாராவது இந்தக் கோலத்தில் பார்த்தால் என்னாவது என்ற கவலை அவளுக்கு. அதைப் பார்த்த அஞ்சலி விழித்தபடி, “என்னாச்சு பிரார்த்தனா? எனி ப்ராப்ளம்? ஏன் சுத்திப் பார்க்கறீங்க?” என்றாள்.
“இல்ல மேம். உங்கள யாராவது பார்த்தா, அதான்…” என்று அவள் இழுக்க, அவள் எதைச் சொல்கிறாள்? என்று புரிந்துகொண்டவள்,
“என்னோட ட்ரெஸ்ஸிங்க் பத்தி சொல்றீங்களா?” என்றாள்.
அவள் ஏதேனும் தப்பாக எண்ணி விடுவாளோ என்ற பயத்தில், அவளுக்கு எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் அவளைப் பார்த்தபடியே நின்றாள் பிரார்த்தனா.
அதைப் பார்த்து அவள் அருகே வந்து நின்றவள், “நான் ஏதும் தப்பா நினைச்சுக்குவேன்னு தான எதுவும் சொல்லாம இருக்கீங்க?” என்றாள்.
அதற்கும் பிரார்த்தனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தவள்,
“கமான் யா… எதுக்கு இவ்ளோ பயப்படுறீங்க? நான் தான் அன்னைக்கே சொல்லியிருக்கேனே, நான் உங்க சிஸ்டர் மாதிரின்னு. அப்பறமும் எதுக்கு யோசிக்கிறீங்க? எதுவா இருந்தாலும் தைரியமா பேசணும், சொல்லணும். ஓகே வா?” என்றாள் அவளது தோள்களைப் பிடித்துக்கொண்டு.
அதற்கு தலையசைத்து சரியென்றாள் பிரார்த்தனா. அவள் எப்படியும் கேட்கத் தயங்குவாள் என்று தெரிந்தே அஞ்சலி சொன்னாள்.
“நான் லண்டன்ல இந்த மாதிரிதான் வீட்ல இருக்கும் போதும், ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ணும் போதும், ட்ரெஸ் பண்ணுவேன். அது சின்ன வயசுல இருந்தே பழகிடுச்சு, மாத்திக்க முடியல. அங்க அதை யாருமே கண்டுக்க மாட்டாங்க. ஆனா, இங்க வந்தப்போ ஆண்ட்டி கூட சொன்னாங்க. லண்டன்ல எவ்ளோ குளிர் அங்கயே நான் இப்படித்தான் இருப்பேன். அப்போ, இங்க கேட்கவே வேண்டாம். ஸ்ட்ரெய்ட் ஆப்போசிட், வெரி ஹாட் நோ.? அதனால எனக்கு இதுதான் கம்ஃபர்ட்டபிள்ளா இருக்குன்னு சொன்னேன். அதுக்கப்பறம், அபிதான் என்னைப் புரிஞ்சுக்கிட்டு என்னோட இஷ்டப்படி இருக்க சொல்லிட்டான்.” என்றவளைப் பார்த்து புன்முறுவல் செய்தாள் பிரார்த்தனா.
“எதுக்கு இந்த ரகசியமான சிரிப்பு?” என்றாள் அஞ்சலி.
“இல்ல, அபி சாருக்கு புரிஞ்சுக்கற அளவுக்கு சக்தியும், பொறுமையும் இருக்கா?” என்றாள் பிரார்த்தனா.
அவள் அப்படிக் கேட்டதும், அவளது உள் அர்த்தத்தைப் புரிந்துகொண்டாள் அஞ்சலி.
“பிரார்த்தனா, நீங்க அபியோட ஒரு பக்கத்த மட்டுமே தான் இத்தனை நாளும் பார்த்திருக்கீங்க. ஆனா, அவன் டோட்டலி நீங்க நினைக்கறதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட் கேரக்டர். இப்போ நீங்க பார்க்கற அபியோட கேரக்டர் ஒரு வெளி வேஷம் மட்டும் தான். ஆனா, அது அவனோட உண்மையான கேரக்டர் இல்ல.” என்றவளது வார்த்தைகள், இதற்குப் பின் பல விஷயங்கள் இருப்பதை உணர்த்தியது.
“ஏன் மேம்? என்னாச்சு?” என்றவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவள், “அதை இன்னொரு நாள் சொல்றேன். அப்பறம், இனிமேல் நீங்க என்னை மேம்ன்னு கூப்பிடக்கூடாது பிரார்த்தனா. எனக்கு அது ஒரு மாதிரியா இருக்கு. வேணும்னா அஞ்சலின்னே கூப்பிடுங்க. இல்லைன்னா அக்கான்னு கூட கூப்பிடுங்க.” என்றாள்.
அதைக்கேட்டு, அவளை அணைத்துக்கொண்டாள் அஞ்சலி. அந்த அணைப்பில் நான் எப்பொழுதும் உனக்காக இருக்கிறேன் என்று சொல்வதைப் போலொரு உணர்வு அவளுள் எழுந்தது. இருவர் கண்களும் ஒரே நேரத்தில் கண்ணீரை சிந்தின.
அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்து, “க்க்குகும்ம்ம்….” என்று இருமும் சத்தம் கேட்டு ஒரு சேரப் பார்த்தவர்களின் முன்னே வந்து நின்றான் அபி.
அவனைப் பார்த்து அஞ்சலி ஒரு பக்கம் முறைத்துக்கொண்டு நிற்க, பிரார்த்தனாவோ எப்பொழுதும் போல் பயந்தபடி நின்றாள். சற்று முன்னர், தான் அவனைப் பற்றி அஞ்சலியிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டிருப்பானோ? என்றொரு பயம் அவளுக்கு.
“ஹலோ.. நாங்க ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ். நாங்க அப்படித்தான், கொஞ்சிக்குவோம். அதுல உனக்கு என்ன மேன் ப்ராப்ளம்?” என்றாள் அஞ்சலி.
“எனக்கு என்ன ப்ராப்ளம்? பார்க்கறவங்க தான் தப்பா நினைப்பாங்க.” என்றான்.
அதைக் கேட்டு உதட்டைச் சுழித்தவள், “ஏய்.. உன்னோட இந்த தாட் எப்போதான் போகுமோ? எப்பவும் பார்க்கறவங்க இப்படி நினைப்பாங்க, அப்படி நினைப்பாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கறது. நாம நமக்காக வாழறோம். இதுல எவன் என்ன சொன்னா என்ன? நான் அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன். என் ஹார்ட்டுக்கு என்ன தோணுதோ அதை யார் என்னன்னு பார்க்காம அப்படியே பண்ணிடுவேன். யாருக்காகவும் பயப்பட மாட்டேன்.” என்றாள் தைரியமாக அவன் முன் விரலை உயர்த்திப் பேசியபடி.
அதை அப்படியே லாவகமாகப் பிடித்து மடக்கினான் அபி. வலி தாங்க முடியாமல் அலறினாள் அஞ்சலி. அவர்களின் விளையாட்டைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தவாறு வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் பிரார்த்தனா.
“இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் குறைச்சலே இல்ல. உன்னை அம்மா கூப்பிடறாங்க கீழ போ. அதை சொல்லத்தான் வந்தேன்.” என்றான்.
“ஓ! ஓகே நான் போறேன். ஆனா, நீ இங்க என்ன பண்ற? நிஜமாலுமே ஆன்ட்டி கூப்பிடறாங்கன்னு சொல்லத்தான் வந்தியா? இல்ல வேற ஏதாவது பிளான் இருக்கா?” என்று அவள் ஜாடையாய்ப் பிரார்த்தனாவைப் பார்த்துக்கொண்டே அவனிடம் கேட்க,
“உன்னை உதைக்கப் போறேன். கிளம்பு முதல்ல…” என்று அவளைத் துரத்த, அவளும் அவன் கையில் சிக்காமல் ஓடி விட்டாள்.
“ஏய்.. மறக்காம பேண்ட் எதுவும் போட்டுட்டுப் போ. மறந்து அப்படியே போய் நிக்காத. அம்மா திட்டுவாங்க.” என்று அவளிடம் நினைவுபடுத்த, “ஆங்க்.. ஆங்க்…” என்று தலையாட்டியபடியே சென்று விட்டாள்.
அஞ்சலி ஜாடையாய் அபியிடம் கேட்ட போதே, ஏதோ ஒன்று இருக்கிறது என்று புரிந்துகொண்டாள் பிரார்த்தனா. இல்லையென்றால் இவன் இங்கே வருவதற்கான அவசியம் என்ன என்பதையும் நினைத்தாள். அவனோ அஞ்சலி சென்று விட்டாள் என்று தெரிந்ததும், பிரார்த்தனாவிடம் வந்தான்.
அதை உணர்ந்தவளோ அங்கேயிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்தவளாக, அவனைப் பார்க்காமலேயே அவளது அறைக்குச் செல்ல முயன்றாள்.
ஆனால், “பிரார்த்தனா..” என்ற அபியின் குரல் அவளை அங்கேயே நிற்கச் செய்தது.
நின்றபடி திரும்பாமல், “சொல்லுங்க சார்..” என்றவளின் குரல் பயத்தில் உள்ளே சென்றது.
அவளை நெருங்கி நின்றவன், “எனக்கும் மனுஷங்களோட மனசப் புரிஞ்சுக்கற சக்தி இருக்கு. ஒரேயடியா என்னோட கேரக்டர் இதுதான்னு முடிவு பண்ணாதீங்க.” என்றான்.
அப்போதுதான், இவன் தான் பயந்தது போலவே, அஞ்சலியிடம் பேசியதைக் கேட்டதால் தான் இப்படிச் சொல்கிறான் என்று புரிந்துகொண்டு, “ஓகே சார்..” என்றபடி திரும்பவும் செல்ல முயல,
“இன்னும் நான் பேசி முடிக்கல.” என்றதும், மீண்டும் அங்கேயே நின்றாள்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் ஹார்ஷா தான் பிஹேவ் பண்ணிட்டேன். நீங்க பேசினது கரெக்ட் தான். பொம்மைக்கும் உணர்ச்சி இருக்குன்னு புரியவச்சிட்டீங்க.” என்றான்.
அதைக் கேட்டதும் அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவன் முகம் தெளிவாய்த் தெரிய எதையோ உணர்த்தியது அவளுக்கு.
“உங்க ஃபீலிங்க்ஸ் என்னன்னு மட்டும் சொல்லாம, என்னுடைய கோபத்தையும் குறைக்கச் சொல்லி சொன்ன உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ். அண்ட் ஐ ஆம் ஸாரி.” என்று தன்மையாய் சொன்னவனைப் பார்த்தவள்,
உண்மையாகவே இது அவன் தானா? என்று அவளுக்கே சந்தேகமானது. அவளால் இதை நம்பவே முடியவில்லை. இப்போது அவன் பார்க்கும் பார்வையில் ஒருவித பரிவு தெரிந்தது. அவன் சொல்வது உண்மை என்றே உரைத்தன அவனது கண்கள்.
இதற்கு என்ன பதிலைச் சொல்வது? என்று விழித்தாள் பிரார்த்தனா. இருந்தாலும் பேசியாக வேண்டிய கட்டாயம்.
“இருக்கட்டும் சார். பரவால்ல. நான் தான் ஏற்கனவே சொன்னேனே, இதை விட கொடுமையான வார்த்தைகளத்தான் இத்தனை வருஷமா கேட்டுட்டு வந்தேன். உங்களோட வார்த்தைகள் அதை விட ஒன்னும் பெருசு இல்ல. நீங்க இதுக்காக என்கிட்ட ஸாரியெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்ல சார்.” என்றாள் தன்மையாக.
இதுவே முதலில் அவளை வெறுக்கும் அபிஷேக்காக இருந்தால், கண்டிப்பாக இந்நேரம் அவளைத் திமிராகப் பேசுகிறாள் என்றே நினைத்திருப்பான். ஆனால், இப்போது அவளின் தன்னடக்கத்தை அவனே உணர ஆரம்பித்திருந்தான்.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடவும்.....
ஒரு மனிதனை பரிவான, உண்மையான வார்த்தைகள் இந்த அளவுக்கு மாற்றுமா? என்று கேட்டால், அது அபியின் விஷயத்தில் நன்றாகவே பொருந்தியது.
பிரார்த்தனாவிடம் மன்னிப்புக் கேட்ட தருணத்திலிருந்து வேறொரு அபிஷேக்காய் மாறியிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அதை அடுத்து வந்த நாட்களில் பிரார்த்தனாவும் நன்றாகவே தெரிந்துகொண்டாள்.
எப்பொழுதும் தன்னைக் கண்டாலே உர்றென்று முகத்தை வைத்திருப்பவன், இப்பொழுது சிரித்த முகத்துடனே எல்லாவற்றையும் செய்வதை உணர்ந்தாள்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அஞ்சலியையும் வரச் சொல்லி, மூவரும் சேர்ந்தே அனைத்தையும் கலந்துகொண்டு செய்தனர். அஞ்சலிக்கே அபியின் இந்த மாற்றம் நம்பமுடியாததாய் தான் இருந்தது.
அன்று அஞ்சலி அவர்களுடன் வந்து கலந்துகொள்ள சிறிது தாமதித்த நேரம், இவர்கள் இருவரும் கம்பெனியின் வருட லாப, நஷ்டக் கணக்கு வழக்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அபி, “ஓகே, அனா.. நீ கொஞ்சம் அப்பப்போ அக்கவுண்ட்ஸ் செக்ஷனையும் ஒரு கண் வச்சு, அவங்க எப்படிப் பண்றாங்கன்னு எனக்குத் தகவல் சொல்லு. சில டைம் அவங்க கேர்லஸ்ஸா இருக்கற மாதிரி எனக்கு ஒரு ஃபீல்.” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் அத்தனை நேரம் சொன்னதை விட, தன்னை என்னவோ சொல்லி அழைத்தானே அது என்ன என்பதைத்தான் அவள் மனம் எண்ணியது அந்த நிமிடம். அதைக் கேட்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள்,
“சார்.. நீங்க என்னை ஏதோ சொல்லிக் கூப்பிட்டீங்க. என்ன அது?” என்று கேட்டே விட்டாள்.
அதைக் கேட்டு அவளை ஒரு பார்வை பார்த்தவன், “ஓ! அதுவா, நான் கூட நீ நோட் பண்ணலையோன்னு நினைச்சேன். அது, உன் பேர் ரொம்பப் பெருசா இருக்கு. கூப்பிட சிரமமா இருக்கு. என்னோட பேர எப்படி ஷார்ட்டா அபின்னு சொல்றாங்க. அதே போல யோசிச்சு, உன் பேர சுருக்கி அனான்னு வச்சேன்.” என்றான்.
என்னவோ இவன் தான் தனக்குப் பெயர் வைத்தவன் போல சொல்வதைக் கேட்டு ஒரு பக்கம் நினைத்தவள்,
“ஆனா, சார் அது.. திடீர்னு யாராவது கேட்டா, நல்லா இருக்காது. வேற யாரோன்னு தான நினைப்பாங்க.” என்றாள்.
“அதுக்காக, உன்னோட பேரோட ஷார்ட் நேம பிரா.. பிரான்னா கூப்பிட முடியும்.?” என்று அவன் வெளிப்படையாகச் சொல்ல, அவளது முகமே அதை நினைத்து அருவருப்பை வெளிப்படுத்தியது.
“ம்ம்ம்.. உனக்கே எவ்ளோ கேவலமா இருக்குன்னு தெரியுதுல்ல? அதனால தான் அனான்னு வச்சேன். ஓகே?” என்று அவன் சொல்ல, வேறு எதுவும் சொல்ல முடியாத நிலையில் அவள் தலையாட்டினாள்.
“ஓகே அனா.. பார்த்துக்கோ.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அஞ்சலி வந்துவிட்டாள். அவள் காதுகளிலும் அந்தப் பெயர் அடிபட,
அங்கிருந்து தப்பித்தால் போதுமென்று பிரார்த்தனா நழுவி விட, “யாரு அபி… அனா?” என்று மெதுவாய்க் கேட்டபடி அபியின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“மத்ததெல்லாம் எதுவுமே கேட்காதே உனக்கு. இது மட்டும் நல்லா காதுல வந்து விழுந்துடுச்சா?” என்று அபி அவள் மேல் சலிப்பைக் காட்ட,
“என்ன மேன், இப்போவெல்லாம் பேசறதுக்கும், சொல்றதுக்குமே ரொம்ப சலிச்சுக்கற?” என்று அவள் முறைத்தாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.” என்று அவன் சொன்ன விதத்திலேயே அஞ்சலி தெரிந்துகொண்டாள் அவன் பிரார்த்தனாவைத்தான் அவ்வாறு அழைத்திருப்பான் என்று. அவன் எதிர்பாரா சமயம் அவனது தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
“ஸ்ஸ்… ஆஆ… வலிக்குது பிசாசே.” என்று அவளை அடிக்க,
“அப்போ சொல்லு..” என்று விடாமல் அடாவடியாகக் கேட்டாள் அஞ்சலி.
“நம்ம பி.ஏ மேடமைத்தான் அப்படிக் கூப்பிட்டேன். எவ்ளோ பெரிய பேரு. அதனால தான்.” என்றான் அவள் கிள்ளிய இடத்தைத் தடவிக்கொண்டு.
“அப்படியொன்னும் அது பெரிய பேர் இல்லையே.! அதுவும் நீ ஷார்ட் நேம் வச்சுக் கூப்பிடற அளவுக்கு, அவளுக்கு நீ ஒன்னும் க்ளோஸூம் இல்லையே.! அப்பறம் என்ன மேட்டர்?” என்று அவள் புருவம் உயர்த்தி அவனை சந்தேகமாய்ப் பார்க்க,
“ஒரு மன்னாங்கட்டியும் இல்ல. அடுத்த வாரம் ஆடிட்டிங்க் வராங்க. அதுக்குள்ள எல்லா அக்கவுன்ட்ஸ் டீட்டெய்ல்ஸூம் ரெடியா இருக்கணும். அப்பப்போ அக்கௌண்ட்ஸ் செக்ஷன செக் பண்ணிட்டே இரு. அவங்க அசால்ட்டா இருக்கப் போறாங்க.” என்று பேச்சை மாற்றி அவளை அனுப்பி வைக்கப் பாடுபட்டான் அபிஷேக்.
அவளும் அவனை வேறு எதுவும் கேட்காமல் அப்போதைக்கு விட்டுச் சென்றாள். அவனும் இதோடு விட்டுவிட்டாள் என்று நிம்மதியடைந்தான்.
அடுத்த நாள் காலை, அஞ்சலியும், பிரார்த்தனாவும் வந்த போது அலுவலகமே அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்த கணக்கியல் பணியாளர்களை சராமாரியாக கேள்வி கேட்டபடி திட்டிக்கொண்டிருந்தான் அவர்களுக்கு முன்னமே வந்துவிட்ட அபிஷேக்.
அதைப் பார்த்த அஞ்சலி முத்துவேலிடம் அபியின் கோபத்திற்கான காரணம் கேட்க, “அடுத்த வாரம் கம்பெனி ஆடிட்டிங்க் வராங்க இல்ல மா, இவங்க ஏதோ முக்கியமான ஃபைலக் காணோம்னு சொல்றாங்க. அதுல தான் ஃபைனல் பண்ண அக்கவுண்ட்ஸோட எக்ஸல் டாகுமெண்ட் இருக்காம்.” என்று நிலையை விவரித்து சொல்ல,
அதைக் கேட்ட பிரார்த்தனா, “சார், நேத்து நான் தான் அந்த ஃபைல ஃபைனலா செக் பண்ணிட்டுப் போனேன். ஆனா, எல்லாம் சரியாதான இருந்தது. அதுக்குள்ள எப்படி மிஸ் ஆச்சு?” என்று அவளும் புரியாமல் கேட்டாள்.
தெரியவில்லை என்ற பதிலே வந்தது முத்துவேலிடம். அபிஷேக் ஏற்கனவே கோபப்படுபவன். இதில், இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்றால் அவன் கோபத்தின் உச்சிக்கே செல்வதை சொல்லவே வேண்டாம்.
அவன் ஊழியர்களைத் திட்டிக்கொண்டிருக்க, அருகே வந்து நின்றனர் இருவரும். அபிஷேக் திட்டி முடித்த கணம் பிரார்த்தனாவைப் பார்க்க, அவள் பார்த்த பார்வை அன்று அவள் சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்த,
“எனக்குத் தெரியாது. இமீடியட்டா எல்லா ஃபைலயும் சேர்த்து வச்சு ஃபைனல் டாகுமெண்ட் ரெடி பண்ணிக் கொடுத்தே ஆகணும். இன்னும் ஒரே நாள் தான் டைம் உங்களுக்கு.” என்று அவர்களுக்கு கட்டளையோடு, எச்சரிக்கையும் விடுத்துச் சென்று விட்டான்.
அதைக் கேட்டு, அலுவலக கணக்கியல் ஊழியர்கள் அனைவரும் வியர்த்துப் போய், என்ன செய்யப் போகிறோம்? என்று தெரியாமல் நின்றனர். அவர்களைப் பார்த்து கண்ணசைத்து, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்ன பிரார்த்தனா, விரைந்து அபிஷேக்கிடம் பேசச் சென்றாள். கூடவே அஞ்சலியும் சேர்ந்து சென்றாள்.
“அபி.. நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகற?” என்று அஞ்சலி அவனது அறைக்கு வந்ததுமே கேட்க, பின்னாலேயே வந்து நின்றாள் பிரார்த்தனா.
“பின்ன, அந்த இடியட்ஸ் பண்ண வேலையைப் பார்த்தியா? கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிள்லே இல்ல.” என்றான் அவனது ரோலிங்க் சாரை உருட்டியபடி.
“பாரு பிரார்த்தனா, இப்போ அந்த இடியட் பேருக்கு வேறவங்க சொந்தமாய்ட்டாங்க.” என்று அந்த நிலையிலும் அஞ்சலி அவனைக் கேலி செய்தபடி பிரார்த்தனாவிடம் முணுமுணுத்தாள்.
அதைக் கேட்டு அவள் சிரிக்க நினைத்தாலும், அங்கே ஒரு ஜீவன் கத்திக்கொண்டிருக்கும் போது அப்படி சிரிப்பது நியாயமல்ல என்று அமைதியாய் இருந்தாள் பிரார்த்தனா.
“எவ்ளோ அசால்ட்டா அந்த ஃபைல் தெரியாம டெலிட் ஆய்டுச்சுன்னு சொல்றாங்க. எது பண்ணாலும், அத பேக்-அப் எடுத்து வைக்கணும்னு ஒரு பேசிக் சென்ஸ் கூட இல்ல. இவங்களையெல்லாம் வச்சு நாம எப்படி கம்பெனிய ரன் பண்றது.? இதுல உங்கப்பா வந்து கேக்கற கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லணும் பாரு, அப்போ இருக்கு எனக்கு.” என்று பேசிக்கொண்டே போனான்.
“ஹே ஸ்டாப் இட் மேன்.. சும்மா.. எப்போ பாரு எங்கப்பாவ நினைச்சே கவலைப்பட்டு உன் வாழ்க்கைய ஓட்டிடுவ போலிருக்கே. நடந்தது நடந்துடுச்சு அபி. அடுத்து என்ன சொல்யூஷனோ அதைத்தான் பார்க்கணும். அதை விட்டுட்டு, அதைப்பத்தியே பேசிட்டு இருந்தா உனக்கு பி.பி தான் எகிறும். விடு.” என்று சமாதானம் செய்ய முயன்றாள் அஞ்சலி.
அப்போது பிரார்த்தனா, “சார், நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்றாள்.
அவளைப் பார்த்தவன், “சொல்லு..” என்றான்.
“நான் நேத்து லாஸ்ட்டா செக் பண்ணும் போது எல்லாமே சரியாதான் இருந்துச்சு. எப்படி டெலிட் ஆச்சுன்னு தெரியல. ஆனா, அதை ஒரு நாள்ல முடிக்கறது ரொம்பக் கஷ்டம் சார்.” என்று அவள் சொல்ல,
“ஆனா, நெக்ஸ்ட் வீக் ஆடிட்டிங்க் வருவாங்க. என்ன பதில் சொல்ல முடியும்? எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும். ஒரு சின்ன மிஸ்டேக் கூட இருக்கக் கூடாது. இவங்க பண்ண மிஸ்டேக்னால என்ன பண்ணப் போறோம்னே தெரியல.” என்று மீண்டும் பதட்டமானான்.
“சார், நீங்க ஒரு த்ரீ டூ ஃபோர் டேஸ் எனக்குக் கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா, கண்டிப்பா இதை என்னால முடிக்க முடியும். நான் சி.ஏ ஃபர்ஸ்ட் எக்ஸாம் படிக்கும் போது நிறைய ட்ரிக்ஸ் தெரிஞ்சு தான் படிச்சேன். அத யூஸ் பண்ணி கண்டிப்பா என்னால அத முடிக்க முடியும். நீங்க பர்மிஷன் கொடுத்தா, ஒரு ஃபோர் டேஸ் அந்த வேலையை முடிச்சிட்டு நான் வேற வேலையைக் கண்டினியூ பண்றேன்.” என்று சொன்னவளின் நம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்டு, இருவரும் சந்தோஷப்பட்டனர்.
“உன்னால கண்டிப்பா முடியும்னா, நீ ஃபுல் வொர்க்கும் அங்கயே பாரு. நாங்க உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம். அஞ்சலி, அனாவுக்கு என்ன ஹெல்ப்ன்னாலும், அந்த இடியட் டீமைக் கூடவே இருந்து பண்ணச் சொல்லு.” என்று உத்தரவிட்டான்.
“ஹூம்ம்… அனாக்கு தானே ஹெல்ப் பண்ணிட்டாப் போச்சு.” என்று அவன் கூப்பிடும் விதத்தை அழுத்திச் சொன்னபடி சென்றாள் அஞ்சலி.
கூடவே சிரித்தபடி பிரார்த்தனாவும் செல்ல, மனதில் ஏதோ ஒரு நிம்மதி பரவியபடி தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான் அபிஷேக்.
அடுத்த 4 நாட்களுக்குப் பிரார்த்தனா தூக்கம் பாராது, அஞ்சலியிடம் தற்போதைக்கு ஒரு மடிக்கணிணியை பயன்பாட்டிற்குக் கேட்டு, அந்த வேலையை வீட்டிலும் செய்தபடி இருந்தாள். அதைப் பார்த்த அபிஷேக்கும், அஞ்சலியும் அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
சீதா அவளை எந்த சமையலையும் செய்ய வேண்டாம் என்று சொன்னவர், அவளுக்கான உணவையும் அவரே தன் சமையல்கட்டில் செய்து கொடுத்தனுப்பினார். இப்படியாக 4 நாட்கள் கடக்க, கம்பெனியின் இறுதி ஆவணத்தை நேர்த்தியாக தயார் செய்து விட்டாள் பிரார்த்தனா.
அதை சரிபார்த்த கணக்கியல் ஊழியர்கள் சந்தோஷத்தோடு அவளிடம் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். பிரார்த்தனா மட்டும் இதைச் செய்யவில்லை என்றால், தாங்கள் அபிஷேக்கின் கோபத்தால் என்னவாகி இருப்போம் என்றே நினைக்கக்கூட முடியாமல் இருந்தனர்.
அஞ்சலியும், அபிஷேக்கும் அவளை நினைத்து அகமகிழ்ந்தனர். அதே போல், அடுத்த வாரம் நடந்த தணிக்கை அறிக்கைத் தாக்கலில் அனைத்தும் சரியாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர், அதை சரிபார்க்க வந்தவர்கள்.
அவர்கள் சென்ற பிறகுதான் அபிக்கு மனதில் நிம்மதியே உருவானது. பிரார்த்தனாவை அலுவலகமே தூக்கி வைத்துக் கொண்டாடியது. அஞ்சலியும் அவளைப் பாராட்டித் தள்ளிவிட்டாள். வீட்டிற்கு வந்ததும் அவளை சீதாவும், அஞ்சலியும் ஒரேயடியாக உபசரித்தனர்.
அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் முடிந்து தனது அறைக்குத் திரும்பியிருந்தவள், சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தனது அறையில் இருக்கும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்களை மூடித் திறந்த நிமிடம் அங்கே அபிஷேக் வாயில் கதவருகே நின்றுகொண்டிருந்தான்.
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்....
அனைவரும் பாராட்டினாலும், அபிஷேக் ஏனோ அவளை எதுவும் சொல்லவில்லை என்று நினைத்திருந்தாள். இப்போது இங்கு எதற்காக வந்து நிற்கிறான் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
“சார்.. ஏதாவது, வேணுமா?” என்று கேட்டவளின் அருகில் வந்து நின்றவன், நன்றியோடு அவளைப் பார்க்க, இவளோ எதுவும் புரியாமல் விழிக்க, அவள் சற்றும் எதிர்பாரா சமயம் அவளை அப்படியே அணைத்துக்கொண்டான் அபிஷேக்.
சட்டென அவனது இந்த செயலால் நிலைகுலைந்து போய் நெளிந்தாள் பிரார்த்தனா. ஆனால், அபிஷேக்கோ அவளை விடுவதாகத் தெரியவில்லை. ஒரு நிமிடத்திற்குப் பின் அவளை விடுவித்து நிறுத்தியவன்,
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அனா.. நீ மட்டும் இதைப் பண்ணலன்னா, நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும் தெரியுமா? உனக்கு எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது. நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.” என்று சொன்னவன் கண்களில் தெரிந்த சந்தோஷமும், சிரிப்பும் அவள் இதுவரை அவனிடம் கண்டிராதது.
“பரவால்ல சார். அதுவும் என்னோட ரெஸ்பான்சிபிள்ன்னு நினைச்சு செஞ்சேன். அவ்ளோதான்.” என்றாள்.
“உன்னை அஞ்சலி செலக்ட் பண்ணப்போ, எதுக்கு உன்னை செலக்ட் பண்ணான்னு நிறைய டைம் யோசிச்சிருக்கேன். ஆனா, இந்த சமயம் மட்டும் நீ இல்லைன்னா, நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன். அதை நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். நான் உன்னை நிறைய முறை காயப்படுத்தியிருக்கேன். ஆனா, அதை எதையுமே மனசுல வச்சுக்காம நம்ம கம்பெனிக்காக நீ செஞ்ச இந்த விஷயம் ரொம்பப் பெருசு. எல்லாத்துக்கும் சேர்த்து வெரி சாரி அனா.. கைண்ட்லி அக்சப்ட் மை அப்பாலஜீஸ்..” என்று உண்மையிலேயே மனம் வருந்தி சொன்னான்.
“சார், நீங்க ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகறீங்க? உங்க சாரிய நான் என்னைக்குமே எதிர்பார்த்ததில்ல. நீங்க எதுக்காகவும் ஃபீல் பண்ணாதீங்க. நாங்கள்லாம் இருக்கோம் சார்.” என்றாள் அழகான புன்னகையோடு.
அவளுடைய உண்மையான குணத்தை அந்த நொடிதான் முழுமையாய் உணர்ந்துகொண்டான் அபிஷேக். அவன் அவளை மீண்டும் நன்றியான பார்வையோடு பார்த்துவிட்டுச் சென்றான்.
அவன் சென்றபிறகு தான், பிரார்த்தனாவால் நன்றாக மூச்சு விட முடிந்தது. சட்டென்று அவனது எதிர்பாரா அணைப்பில் மூச்சுவிடவே மறந்திருந்தாள். ஒரு ஆடவனின் முதல் அணைப்பு அவளை என்னவோ செய்தது. ஆனாலும், அதை அவளது உடல் அசதி புரட்டிப் போட்டு அவளை தூக்கத்திற்குத் தள்ள, நன்றாகத் தூங்கிவிட்டாள் பிரார்த்தனா.
அடுத்த நாள், அவளை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று அபிஷேக்கும், அஞ்சலியும் சொல்லிவிட, நன்றாக உறங்கியபடி இருந்தாள். விடிந்தது கூடத் தெரியாமல் இருந்தவளை அறைக்கதவு தட்டும் ஓசை எழுப்பிவிட, தள்ளாடி எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
வீட்டின் வேலைக்காரப் பெண் சரோஜா நின்றிருந்தாள். “அக்கா, உங்கள கீழ சீதாம்மா கூப்பிடறாங்க. இந்தாங்க காஃபி. கொடுக்க சொன்னாங்க.” என்று அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
அதை வாங்கி டேபிள் மேல் வைத்துவிட்டு, இரண்டே நிமிடத்தில் பல் துளக்கி காஃபியை அருந்திய பின், குளித்து முடித்து கீழே சென்றாள். அங்கே அவளுக்காகக் காலை உணவைத் தயாராய் வைத்தபடி சாப்பிடும் மேசையில் காத்திருந்தார் சீதா.
அவளைப் பார்த்ததும் புன்னகை சிந்தியவர், “வா பிரார்த்தனா. நல்லாத் தூங்கி எழுந்தியா? தூங்கிட்டு இருந்தவள எழுப்பிட்டேனோ?” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்.
“இல்ல ஆண்ட்டி. நல்லாதான் தூங்கினேன். இவ்ளோ நேரம் நான் தூங்கினதே இல்ல. இதுதான் ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரி அசந்து தூங்கினது.” என்றாள்.
“நாலு நாலா கண்ணு முழிச்சு வேலை பார்த்த இல்ல மா? அதோட அலுப்பு தான் உன்னை அப்படித் தூங்க வச்சிருக்கும். ரொம்ப நேரம் வயித்த காயப்போடக் கூடாது. அதனால தான் காஃபி கொடுத்தனுப்பி வரச் சொன்னேன்.” என்றார் சீதா.
“ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி. நாலு நாளா நான் எதுவுமே சமைக்கல. நீங்க தான் எல்லாமே பண்றீங்க. உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கறேனோன்னு தோணுது.” என்று உண்மையில் வருந்தியவளிடம்,
“ஆமாம், அப்படியே பத்து பேருக்கு சமைச்சிட்டேன் பாரு? அட போ பிரார்த்தனா, இருக்கறது மூணு பேரு. இப்போ உன்னோட சேர்த்து நாலு பேருக்கு சமைச்சிருக்கேன் அவ்வளவுதான். அதுவும் வேலைக்காரி உதவி பண்றா தானே? இதுல எனக்கு என்ன பெருசா சிரமம் இருக்கப்போகுது?” என்றவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
அப்படியே பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தார்கள் இருவரும். “எப்பவும் நான் இந்த வீட்டுல தனியா தான் ரெண்டு நேரமும் சாப்பிடுவேன். நைட் மட்டும் தான் இந்தப் பசங்களோட சாப்பிட நேரம் கிடைக்குது. இன்னைக்கு நீ இருந்ததால தான் உன்கிட்ட பேசிட்டே சாப்பிட்டிருக்கேன்.” என்று தனது ஆதங்கத்தைச் சொன்னார்.
“அதனால என்ன ஆண்ட்டி, நீங்களும் அவங்க கூடவே காலைலயும் உட்கார்ந்து சாப்பிடலாமே.” என்றாள்.
“யாரு எங்க அபி கூடவா? ஐயோ அந்தப் பையன் காலைல பண்ற அலப்பறை இருக்கே, ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சுன்னு நம்ம உயிர வாங்குவான். இதுல நான் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடறதெல்லாம் நடக்கற காரியமா கண்ணு?” என்றவரின் அன்பான வார்த்தையில் புன்னகைத்தாள்.
“ஆண்ட்டி, எனக்கு ரொம்ப நாளா ஒரு டௌட். ஏன், அபி சார் எப்பவுமே அஞ்சலி மேமோட அப்பாக்கு பயந்துக்கறாரு?” என்று கேட்டவளிடம்,
“ரொம்ப நல்ல கேள்விதான் மா. ஆனா, அது ஒரு பெரிய கதை ஆச்சே.!” என்றவரிடம்,
“இதையே தான் அஞ்சலி மேமும் சொன்னாங்க. ஆனா, இப்போவரைக்கும் எதையுமே சொல்லல ஆண்ட்டி. நீங்களாவது சொல்லுங்களேன். எனக்கும் கேட்க ஆர்வமா இருக்கு.” என்று பேச்சை ஆரம்பிக்க,
“ம்ம்.. சொல்லலாமே. எனக்கும் இவ்ளோ நாள் பேச்சுத் துணைக்கு ஆள் இல்ல. நல்லா பேசியே ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கு நீ கிடைச்சிருக்க. இந்த சான்ஸ விடுவானேன். ஆனா, அதைப்பத்தி பேசறதுக்கு முன்னாடி சரோஜாகிட்ட சில வேலைகள செய்யச் சொல்லிட்டு வந்திடறேன்.” என்று சொன்னவர்,
எழுந்து சென்று அவளிடம் வேலைகளைச் சரியாக செய்யும்படி சொல்லிவிட்டு மீண்டும் பிரார்த்தனாவிடம் வந்து அமர்ந்தார். இருவருக்கும் பேசுவதற்கு ஏதுவாக, ஷோஃபாவில் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர்.
“இங்க மாட்டியிருக்க பெரிய படத்துல இருக்கறவர் யார் தெரியுமா?” என்று தனக்குப் பின்னால் தெரிந்த அந்தப் பெரிய படத்தைப் பார்த்துக் கேட்டார் சீதா.
“ம்ம்.. சரிதான். அவர்தான் என்னோட அப்பா. அவருக்கு எங்கண்ணன் ராமச்சந்திரன், அதாவது அஞ்சலியோட அப்பாதான் முதல் வாரிசு. அதுக்கப்பறம் தான் நான் பிறந்தேன். ஆனா, நான் பிறந்த வேளை தான் அவர் சின்னதா ஆரம்பிச்ச இந்தக் கம்பெனி பெரிய அளவுல வளர்ந்ததுன்னு அடிக்கடி சொல்லுவாரு. அதனால எந்த ஒரு விஷயம் கம்பெனில பண்ணாலும் என்னைத்தான் அப்பா முதல்ல வரச் சொல்லி தொடங்குவாரு. அம்மாவுக்கு கூட அடுத்த உரிமை தான். அந்த அளவுக்கு அப்பா ரொம்பப் பாசமா என்னை வளர்த்தாரு. அம்மா, கொஞ்சம் கண்டிப்பு தான். அண்ணாவோ, அதுக்கும் மேல. நானும், அந்தக் கால காலேஜெல்லாம் படிச்சிருக்கேன். பி.ஏ தமிழ் லிட்ரேச்சர். இந்த ஒன்னத்துக்கும் உதவாத படிப்ப படிச்சதுக்கு நீ படிக்காமயே இருந்திருக்கலாம்னு அண்ணன் அடிக்கடி கிண்டல் பண்ணுவாரு. ஆனா பாரு விதி, என் மூலமா காலேஜ்ல அறிமுகமான என்னோட சீனியர் ஃப்ரெண்ட்ட லவ் பண்ணாரு. இதுல என்ன ஒரு பெரிய விஷயம்ன்னா, அவங்களும் எங்களோட கேஸ்ட். அவங்களும் கொஞ்சம் பெரிய ஆளுகன்னால, பெருசா எதிர்ப்பு ஒன்னும் வரல. கல்யாணமும் நல்லபடியா நடந்துச்சு. அப்பறம் நானும், அடுத்த ஒரு வருஷம் படிப்பைப் படிச்சிட்டு இருந்த சமயம் தான், அண்ணா லண்டன் போய்ட்டாரு. அதுக்கப்பறம்…” என்று நிறுத்தியவர், பிறகு தொடர்ந்தார்.
ராமநாதனின் கம்பெனியில் முக்கியப் பதவி வகித்த இருவர், ஒன்று முத்துகிருஷ்ணன், கம்பெனியின் அனைத்து விஷயங்களையும் பொறுப்போடு பார்த்து என்ன தேவை, தேவையற்றவை என்று முதலாளியான ராமநாதனுக்கே எடுத்துரைப்பவர்.
மற்றொருவர், ஜெயராமன். கம்பெனியின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிப்பது, இன்ன பிற வேலைகளைச் செய்வது என்று இருவரும் போட்டி போட்டுக்கொண்டு செய்தனர்.
இதில், முத்துகிருஷ்ணன் சிறிது பொறாமையும், அகம்பாவம் பிடித்தவர். ஆனால், ஜெயராமனோ அதற்கு அப்படியே எதிரானவர், தன்மையானவர். அதனாலோ என்னவோ, அவர் சீதா லட்சுமியின் மனதிற்குள் காதலனாய் விழுந்தார்.
முதலில் மறுத்த ஜெயராமனும், அவரது வேல் விழிப்பார்வையில் வசப்பட காதல் இருவருக்குமிடையில் அரும்பியது. இதை அறிந்த சீதாவின் அம்மாவோ எதிர்த்தார். கூடவே ராமச்சந்திரனையும் ஏற்றிவிட்டு அவரை விட்டு பேச வைத்தார்.
ஆனால், இயல்பாகவே ஜெயராமனின் நல்ல குணத்தைக் கண்டிருந்த ராமநாதன், தன் மகளுக்கு சரியானவன் என்றே அவரை எண்ணினார். ஆனால், அதே சமயம் முத்துகிருஷ்ணனுக்கு உள்ளூர எரிச்சல் மூண்டது.
அவருடைய எண்ணமே, எப்படியாவது அவரது மகளை மணந்து, அவருடைய கம்பெனியின் பொறுப்புகளைத் தான் அடைய வேண்டும் என்பதுதான். ஆனால், தான் கோட்டை கட்டிவைத்ததை தகர்க்கும் விதமாக இப்படி நடந்துவிட்டதால், அதைப் பொறுக்க முடியாமல் உள்ளுக்குள்ளே வெந்து புழுங்கினார். கடைசியில், பெற்றவர்கள் பார்த்து வைத்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து ஜெயராமனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி விட்டார் ராமநாதன். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயராமனுக்கு அப்பா, அம்மா சிறிய வயதிலேயே இறந்துவிட, அவருக்கு அதில் எந்த சிரமமும் இல்லாமல் இருந்தது. இதில், சீதாவின் அம்மாவிற்கும், ராமச்சந்திரனுக்கும் விருப்பமில்லை. ஆனாலும், தன் அப்பாவின் ஆதரவோடு சந்தோஷமாக அவருடன் வாழ்ந்தார் சீதா.
ஆனால், முத்துகிருஷ்ணனின் மனதில் வஞ்சகம் என்னும் நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக்கொண்டே சென்றது. அங்கே வேலை செய்துகொண்டே நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து ஜெயராமன் - சீதாலட்சுமி தம்பதியருக்கு அபிஷேக் பிறந்தான். அதன் பிறகே ராமச்சந்திரனுக்கு, அஞ்சலி பிறந்தாள்.
வருடங்கள் அவர்கள் பெரிதாகும் வரை எந்த ஒரு குறைவில்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது. சீதாவின் அம்மாவும் இறந்துவிட்டார். ஒரு கட்டத்தில் பெரியவரான, ராமநாதனுக்கு கம்பெனியின் பொறுப்புகளை சரிவர பார்த்துக்கொள்ள முடியாமல் வயதின் முதிர்ச்சி தடுத்தது.
அந்த சமயம் அந்தப் பொறுப்பை ஜெயராமனிடம் ஒப்படைத்தார். ஆனாலும், முக்கியப் பொறுப்புகளை ராமநாதனிடம் கேட்டுவிட்டே செய்வார். முத்துகிருஷ்ணனும் அவருடன் சேர்ந்தே செயல்பட்டார். ஆனால், அவருடைய மனதில் இருந்த பழிவாங்கும் எண்ணம் மட்டும் அகலவே இல்லை.
அதை செயல்படுத்தும் நாளை எண்ணிக் காத்திருந்தார். அப்போது, அபிஷேக் தனது கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த சமயம், ஒரு நாள் வீட்டில் பெரிய சத்தம். அப்பா ஜெயராமனை அவனது தாத்தா ராமநாதன் கத்திக்கொண்டிருந்தார்.
விசாரித்த போது, இப்போது நடந்தது போலவே தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் நாள் பார்த்து அதன் முக்கிய ஆவணத்தைக் காணவில்லை என்று ஜெயராமன் சொல்ல, உடைந்தே போனார் ராமநாதன்.
அதை யார் வேண்டுமென்றே செய்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால், பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. தேவையில்லாத வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி ஜெயராமனை நிலைகுலையச் செய்தார் ராமநாதன்.
அதைக் கேட்டவர், துக்கம் தாளாது தொண்டையை அடைக்க மயங்கி அதே இடத்தில் சரிந்தார். அதைப் பார்த்து ஓடி வந்து தாங்கிப்பிடித்தார் சீதா. அபிஷேக்கோ, அவரைப் பார்த்துக் கதறி அழுதான்.
(தொடரும்….)
உங்களது கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராமனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. அதைக் கேட்டு குடும்பமே அல்லாடியது. அதிலிருந்து வெளியே வருவதற்கே போராடினார் ஜெயராமன். தான் எந்தத் தவறும் செய்யாத போது, இப்படியொரு பழிச்சொல்லுக்குத் தான் ஆளாகிவிட்டோமே என்ற மனஉளைச்சலே அவரை அந்நிலைக்குத் தள்ளியது.
வீட்டில் படுத்த படுக்கையில் கிடந்தார். சீதா தான் அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டார். முடிந்த போது, அபிஷேக்கும் அவர் கூடவே இருந்து அவரைத் தேற்ற முயன்றான். ஆனாலும், அவருடைய மனநிலையை அவரால் மாற்றவே முடியவில்லை.
ராமநாதன் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகிப் போனார். அவரால், அவர் செய்த தவறை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தான் அவசரப்பட்டு எதையும் பேசியிருக்கக் கூடாது என்று நினைத்து பெரிதும் வருந்தினார்.
இவையெல்லாவற்றையும் பார்க்கத்தான் முத்துகிருஷ்ணனும் காத்திருந்தார். தான் நினைத்தது நடந்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் அடைந்தார்.
இதற்கிடையில் அபிஷேக்கின் இறுதி ஆண்டு படிப்பின் முடிவில் ஜெயராமன் காலமானார். சீதாவுக்கு வாழ்க்கையே இருண்டது போலானது. அவரைத் தேற்றத் தகுதியற்றவராய் நின்றார் ராமநாதன். தன்னால் தான் தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆனது என்பதை நினைத்து மனமுடைந்தார்.
அவரின் இறப்பிற்காக வந்திருந்த ராமச்சந்திரன், இடம், பொருள் என்று கூட பார்க்காமல் அவரைப்பற்றி அபிஷேக்கிடமே கூற, அதைக் கேட்டு கோபம் கொண்டவன், தாத்தாவின் கம்பெனி பொறுப்புகளைத் தான் ஏற்பதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்.
அதே போல், தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்பதையும் நிரூபிப்பேன் என்று சபதமும் எடுத்தான். இதை முத்துகிருஷ்ணனும் எதிர்பார்க்கவில்லை. அபிஷேக் பொறுப்பேற்ற பிறகு, நிறைய மாற்றங்களைச் செய்திருந்தான்.
அவனுடைய தற்போதைய அறிவுக்கு ஈடுகொடுக்க, முத்துகிருஷ்ணன் முடியாமல் அல்லாடினார். அவனின் சபதத்தை நினைத்து, சில சமயம் தவறுகளும் செய்தார். அதே போல், அவரது தம்பியான முத்துவேலும் அங்கே தான் அவருக்குக் கீழான வேலையில் இருந்தார். ஆனால், அவருக்கு நேர் எதிரானவர். நல்ல குணம் கொண்டவர்.
சில தினங்களிலேயே அபிஷேக்கின் நன்மதிப்பைப் பெற, அதைப் பொறுக்க முடியாமல் முத்துகிருஷ்ணன் தம்பியையே எதிர்க்க ஆரம்பித்தார். அவர் செய்த தவறுகளை அவரின் வாயாலேயே உளற, அதை முத்துவேல் ஆதாரங்களுடன் அபிஷேக்கிடம் கூறிவிட்டார். அப்போதே, அவரின் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை உள்ளே தள்ளினான் அபிஷேக்.
ஆனால், அவரை நம்பி இருக்கும் குடும்பம் என்ன செய்யும்? என்று யோசித்தவன், அவருடைய பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க ஏற்பாடும், மாதமானால் குறிப்பிட்ட தொகையையும் முத்துவேல் மூலமாக கொடுத்து வர ஆரம்பித்தான்.
அவர்களும், நிதர்சனத்தை உணர்ந்தவர்களாய் தங்கள் தந்தையின் மேல் இருக்கும் தவறையும் புரிந்துகொண்டு, அவர்களது வாழ்க்கையை வாழத் துவங்கினர்.
அதன் பிறகுதான், ராமநாதன் இன்னும் அதிகமான குற்ற உணர்ச்சியில் மொத்தமாக தன்னை வருத்திக்கொண்டார். அபிஷேக்கும் அவரைத் தேற்ற முயன்றான். ஆனால், அவனால் முடியாமல் போக, அனைத்து பொறுப்புகளையும் அவனிடமே ஒப்படைத்துவிட்டு ஒரு வருடத்திற்கு முன்னர் தான் இறைவனடி சேர்ந்தார்.
இப்போதுவரை சீதா சொன்ன அவர்கள் கதையை சுவராசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அவர் சொல்லி முடிக்கும் போது, மதியமே ஆகிவிட்டது.
“இவ்ளோ விஷயம் நடந்திருக்கா ஆண்ட்டி.? பெரிய பணக்காரக் குடும்பம்ன்னா எந்தக் கஷ்டமும் இல்லன்னு வெளியில சிலர் நினைக்கறாங்க. ஆனா, மனுஷங்களாப் பிறந்த எல்லாருக்குமே ஏதோ ஒரு கஷ்டத்த கடவுள் கொடுத்துட்டே தான் இருக்காரு.” என்று தன் எண்ணங்களைக் கூறினாள் சீதாவிடம்.
“சரியா சொன்னடா மா. அதுதான் உண்மை. அதே போல, அந்தக் கஷ்டத்தையே எப்பவும் நினைச்சுட்டே இருந்தாலும் கஷ்டம் தான். அடுத்து என்னன்னு பார்த்துட்டு போய்ட்டே தான் இருக்கணும். இல்லன்னா இந்த உலகத்துல சந்தோஷம்ன்னு ஒண்ணு இருக்கவே இருக்காது.” என்று நிதர்சனத்தைப் பற்றிப் பேசினார்.
“அதனால தான் ஆண்ட்டி எப்பவும் சந்தோஷமா இருக்காங்க.” என்ற அஞ்சலியின் குரல் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்த போது, அவள் உள்ளே வந்துகொண்டிருந்தாள்.
“ஆமா, அப்படியே ஒன்னும் தெரியாத பச்சக் குழந்தை. ரொம்பக் கஷ்டப்படுவான். எனக்குப் பிரார்த்தனா இல்லாம, ஒரு மாதிரியா இருந்துச்சு ஆண்ட்டி. அதனால தான் முத்துவேல் சார்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். அவன்கிட்ட சொன்னா திட்டுவான். அதான், க்ரேட் எஸ்கேப்.” என்று சொல்லி கண்ணடித்துச் சிரித்தவளின் காதைப் பிடித்துத் திருகினார் சீதா.
“ஆஆஆ… வலிக்குது ஆண்ட்டி. விடுங்க.” என்று சொல்லி, அவரின் கைகளிடமிருந்து தப்பித்து பிரார்த்தனாவின் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
“சரியான வாலு.. எங்கண்ணி எப்படித்தான் உன்னை வச்சு சமாளிச்சாங்களோ.?” என்று சொன்னார் சீதா.
“ஹூம்ம்.. அவங்க எங்க சமாளிச்சாங்க? நானா தான் வளர்ந்தேன். அவங்களுக்கு லண்டன்ல தமிழ் டியூஷன் எடுக்கவே நேரம் சரியா இருந்துச்சு.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அஞ்சலி.
அதைப் பார்த்த பிரார்த்தனாவின் முகம் மெல்ல கலங்குவதை உணர்ந்துகொண்டார் சீதா.
“என்னாச்சு பிரார்த்தனா மா, ஏன் திடீர்னு முகமே மாறிடுச்சு?” என்றார்.
“நீங்க ரெண்டு பேரும் எப்படி இவ்ளோ அந்யோன்யமா பேசி, சிரிச்சிட்டு இருக்கீங்களோ, அதே மாதிரிதான் நானும், எங்கத்தையும் இருப்போம். நான் பிறந்ததுல இருந்து அம்மாவோட அன்ப நான் அவங்க மூலமா தான் பார்த்தேன். அவங்களும் இப்படித்தான் உங்கள மாதிரி எல்லாத்தையும் ஈஸியா எடுத்துப்பாங்க, தைரியமா இருப்பாங்க. எல்லாமே அவங்களைத்தான் ஞாபகப்படுத்துது ஆண்ட்டி.” என்று அவள் கண்கள் கலங்க,
“டேய்.. இதுக்குப் போய் கண் கலங்குவியா? நான் தான் இப்போ உன் கூடவே இருக்கேன் இல்ல. என்னை அவங்களாவே நினைச்சுக்கோ. அவங்ககிட்ட நீ எப்படி இருப்பியோ, அப்படியே இரு. உன்னை யார் இங்க கேட்கப் போறாங்க.? இதோ இந்த வாலயே நான் சமாளிக்கறேன். அதே மாதிரி உன்னையும் சமாளிக்கப் போறேன்.” என்று சீதா இயல்பாகச் சொன்னார்.
அவளும், “ம்ம்ம்..” என்று தலையாட்டினாள் கண்களைத் துடைத்துக்கொண்டு. அவளின் கண்கள் கலங்குவதைக் காணச் சகிக்காத அஞ்சலி, அந்த நிலையிலிருந்து அவளை வெளியேற்ற நினைத்தாள்.
“சரி, என்ன ஃப்ளாஷ்பேக்கெல்லாம் பிரார்த்தனாகிட்ட சொல்லிட்டிருந்தீங்க போலிருக்கு.?” என்று அவள் கேட்க,
“ம்ம்… ஆமா ராஜாத்தி. எனக்கும் வீட்ல ஒரே போர். இன்னைக்கு பிரார்த்தனா தான் எனக்குக் கிடைச்சா, அதனால அவகூட பேசிட்டிருந்தேன். உங்கப்பாக்கு ஏன், அபி இவ்ளோ பயப்படுறான்னு கேட்டா, அதுக்கு ஆரம்பத்துல என்ன நடந்துச்சுன்னு தெரியனுமில்ல. அதான், அதையெல்லாத்தையும் சொல்லிட்டிருந்தேன்.” என்றார்.
“ஆனா, ஆண்ட்டி நீங்க இன்னும் அதுக்கான காரணத்தை சொல்லவே இல்ல.” என்று பிரார்த்தனா நேரம் பார்த்து அவரை இறக்கி விட,
“பார்த்தியா பிரார்த்தனா ஒரு பேச்சுக்கு சொன்னா, நீயும் அவள மாதிரியே வாலுத்தனமா கேள்வி கேட்கற.?” என்று சீதா பாவமாகச் சொல்ல,
அஞ்சலியும், பிரார்த்தனாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
“எல்லாத்தையும் சொல்லி, எனக்கு டயர்டா இருக்கு மா. மீதிய அஞ்சலிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ. நான் போய் கொஞ்ச நேரம் அப்படியே மெத்தைல சாயறேன்.” என்றபடி தனது அறைக்குள்ளே சென்றுவிட்டார் சீதா.
அவர் சென்றபின், அவர் எதோடு முடித்தார் என்பதைக் கேட்டு அஞ்சலி சொல்ல ஆரம்பித்தாள்.
“எங்கப்பாக்கு, ஜெயராமன் அங்கிள் மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சுன்னு சொன்னத, அபியால ஏத்துக்க முடியல. அதெப்படி நம்ம அப்பாவ, மாமா அப்படிச் சொல்லலாம்னு அவன் எல்லா பொறுப்புகளையும் ஏத்துக்கிட்டு, அவர் எந்தத் தப்பும் பண்ணலன்னு அப்பாகிட்ட ப்ரூஃவ் பண்ணான். ஆனாலும், அப்பாக்கு அவன் மேல நம்பிக்கை இல்லையோன்னு அவனுக்கு ஒரு ஃபீல். அதே மாதிரி, தாத்தா ஃபைனலா கம்பெனியோட பொறுப்புகள அபிகிட்ட கொடுக்கறதுல அப்பா விருப்பம் இல்லன்னு சொல்லிட்டார். அப்பவும், அதெப்படி அவர் அப்படிச் சொல்லலாம்னு அபிக்கு ஒரு வெறி. அவர் எந்த ஒரு வார்த்தையும் சொல்லிடக்கூடாதுன்னு கம்பெனியோட வளர்ச்சிய ஒரே வருஷத்துல ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்தான். நல்ல ப்ராஃபிட் வந்துச்சு. அதுக்கப்பறம் தான் எப்படியோ அவர் மனசுல ஒரு நம்பிக்கைய சம்பாதிச்சிருக்கான். அதனால தான், அவர் மேல ஒருவித பயம் எப்பவும் அவனுக்கு இருந்துட்டே இருக்கு. நானும் இந்த எண்ணத்த மாத்திக்கோடான்னு சொன்னா, அதை மட்டும் இப்போவரைக்கும் காதுலயே வாங்கல. நானும், வெறுத்துப்போய் விட்டுட்டேன்.” என்றாள்.
அனைத்தையும் கேட்டபடி அமைதியாகத் தலையாட்டிக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
“அதனால தான் பிரார்த்தனா அன்னைக்கு ஆடிட்டிங்க் டாகுமெண்ட் காணாம போனப்போ, ரொம்ப டென்ஷனா இருந்தான். ஏற்கனவே இதே விஷயத்துல தான் அங்கிள்க்கு ஸ்ட்ரோக் வந்து அவர் அதுக்கப்பறம் இறந்துட்டார். அவனால அந்த விஷயத்தை அக்சப்ட் பண்ண முடியல. திரும்பவும் அதே விஷயம் நடந்ததால அவனுக்கு ரொம்ப டென்ஷனாகிடுச்சு. நீ மட்டும் இல்லன்னா அவனை அவனாலயே சமாதானப்படுத்தியிருக்க முடியாது.” என்றாள் அஞ்சலி.
“ம்ம்ம்… இப்போ புரியுது.. அவருக்கு ஏன் யார் மேலயும் நம்பிக்கை வரலன்னு. ஒருத்தர் பண்ற தப்பு, எவ்ளோ பேர பாதிக்குது இல்ல.? இந்த உலகத்துல போட்டி, பொறாமை இதெல்லாம் இல்லாத மனுஷங்களே இல்லன்னு தோணுது. தன்னோட பழிவாங்கற எண்ணத்தால ஒரு மனுஷன் தப்பு பண்ணி, அதனால ரெண்டு உயிர் போய்டுச்சு பாருங்க. இப்போ அவரால, அவரோட குடும்பம் தான பாதிக்கப்படும். ஆனா, அதையும் யோசிச்சு அபி சார் அவங்களுக்கு உதவி செய்யறத நினைச்சா ரொம்ப பிரமிப்பா இருக்கு. அவர் ரொம்ப க்ரேட் தான்.” என்று முதன்முறையாக அபியைப் பற்றிப் புகழ்ந்தவள், அவனை மனதில் மெச்சிக்கொண்டாள்.
“நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல பிரார்த்தனா. அது அவனோட உண்மையான குணம் இல்லன்னு. அவன் ரொம்ப நல்லவன் தான். ஆனா, என்ன கொஞ்சம் புரிஞ்சுக்க லேட் ஆகும்.” என்றாள் அவளது தோள்களைத் தொட்டு.
“ம்ம்ம்… என் மகனப்பத்தி பெருமைப்பட்டது போதும், வாங்க சாப்பிடலாம்.” என்று மதிய உணவுக்கான நேரத்தை ஞாபகப்படுத்தி, அவர்களை சாப்பிட அழைத்தார் சீதா.
“ஏதோ, மெத்தைல சாயறேன்னு போனீங்க. நாங்க என்ன பேசறோம்னு உள்ள கேட்டுட்டு இருந்தீங்க தான ஆண்ட்டி.?” என்று அவரை அஞ்சலி கேலி செய்ய,
“தூக்கம் வரல ராஜாத்தி. சும்மா கண்ணை மூடிப் படுத்திருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசுறது நல்லாவே கேட்டுச்சு. அதுக்குள்ள வயித்துக்குள்ள ஒரு பட்சி பறந்துட்டே இருந்துச்சா, அதான் உடனே ஓடி வந்துட்டேன்.” என்று அவரும் சொல்ல,
அவர்களது சம்பாஷைனைகளை ரசித்தபடி உணவருந்திவிட்டு மேலே சென்றாள் பிரார்த்தனா. அவள் உள்ளம் இப்போது அபியைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தது.
எத்தனை திறமை, நல்ல குணம், எல்லாவற்றுக்கும் மேல், தன் தந்தையின் மேல் இருந்த பழியை தவறு என நிரூபித்த இடத்தில் வள்ளுவர் சொன்ன,
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”
என்ற குறள் தான் ஞாபகம் வந்தது அவளுக்கு.
இதை விட அந்தத் தந்தைக்கு வேறு என்ன ஒரு சந்தோஷம் இருந்திருக்கும்.? அதை நினைத்தே அவருடைய ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என்று நினைத்தாள்.
ஒரு கட்டத்தில், அவனுடைய கோபமான குணத்தைக் கண்டு அவனைத் தவறாக நினைத்திருந்தாலும், இவையெல்லாவற்றையும் கேட்ட பின்பு, அபிஷேக் இப்போது பிரார்த்தனாவின் மனதில் ஒரு உயரமான இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான்.
(தொடரும்…)
உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
மாலை வேளையில் அன்று போலவே, அஞ்சலியும், பிரார்த்தனாவும் மொட்டை மாடியில் ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக்கொண்டிருக்க, கையில் பருகிய தேநீர் கோப்பையுடன் அங்கே வந்து சேர்ந்தான் அபிஷேக். ஆனால், அவர்கள் இவனைப் பார்க்காமல் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்தனர்.
ஆனால், பிரார்த்தனாவின் விழிகளில் விழுந்துவிட்டான் அபிஷேக். அவனைப் பார்த்ததும் பதட்டத்தில் அவள் பேச்சை நிறுத்த, என்னவென்று திரும்பிப் பார்த்த அஞ்சலி, அவன் நின்றபடி தங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“அபி, இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்துட்ட போலிருக்கு?” என்று கேட்டவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“அதை நான் தான் கேட்கணும். நீ தான் சொல்லாமயே மதியமே கிளம்பி வந்துட்ட. எல்லாரும் இங்க இருக்கும் போது, எனக்கே அங்க இருக்கப் பிடிக்கல.” என்றபடியே அவர்கள் அருகில் வந்து நின்றான்.
அவன் பிரார்த்தனாவையும் சேர்த்தே சொன்னது, அவளுக்கும் புரிந்தது. ஆனால், அவள் குனிந்த தலை நிமிராமல் அமைதியாகவே இருந்தாள்.
“ஆமா, நாம மூணு பேரும் இருந்தா தான் ஆஃபீஸ்ல நல்லா இருக்கு. இல்லைன்னா ரொம்ப போர் அடிக்கற மாதிரி இருக்கு. விடு, நாளைல இருந்து பிரார்த்தனா வந்துடுவா இல்ல, நான் அப்படி டக்குன்னு கிளம்பி வரமாட்டேன்.” என்றாள் அஞ்சலி.
அஞ்சலியின் மனதில் பிரார்த்தனாவிற்கான இடம் எத்தனை ஆழமாய் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டான் அபிஷேக். பிரார்த்தனாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
“நல்லா ரெஸ்ட் எடுத்தியா?” என்று மெல்ல அவளிடம் கேட்டான்.
“ஆங்க்.. எடுத்தேன் சார்.” என்றாள் ஒரே வரியில்.
“எங்க அவ ரெஸ்ட் எடுத்தா? இன்னைக்கு ஆண்ட்டி கைல இவ மாட்டிக்கிட்டா. நம்ம ஃபேமிலியோட ஃபுல் ஹிஸ்டரியையும் சொல்லி முடிச்சதுக்கப்பறம் தான் விட்டாங்க. நடுவுல நான் வந்து கொஞ்சம் காப்பாத்திட்டேன்.” என்று பேசிய அஞ்சலியைப் பார்த்துச் சிரித்தாள் பிரார்த்தனா.
அதைக் கண்டு அபிஷேக்கும் அழகாய்ச் சிரிக்க, முதன் முதலில் அவன் அப்படிச் சிரிப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் மயங்கித்தான் போனாள் பிரார்த்தனா. அதை அபியும் கண்டுகொண்டான்.
அஞ்சலி அவளாக இருவரிடமும் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரின் பார்வைகளோ பல கதைகள் பேசிக்கொண்டன. அதை அவர்களாலேயே தடுக்க முடியவில்லை.
சட்டென அவர்களை நினைவுபடுத்தியவள், “ஏய்.. என்ன ஓகே வா?” என்று கேட்க, திருதிருவென விழித்தனர் இருவரும்.
அவள் என்ன பேசினாள்? என்று தெரியாத அளவிற்கு கண்களின் பாஷைகள் அவர்களைக் கட்டிப்போட்டிருந்தது.
அஞ்சலி அவன் தோளில் இடிக்க, “என்ன? என்ன கேட்ட?” என்று அவன் சலிப்புடன் சொல்ல,
“ம்ம்ம்… ஊறுகா..” என்றாள் அவள்.
“அதைக் கீழ போய் அம்மாகிட்ட கேளு, அவங்களே செஞ்சு தருவாங்க.” என்று சிரிக்காமல் பதில் சொல்ல, களுக்கென்று சிரித்துவிட்டாள் பிரார்த்தனா.
அதைக் கேட்டு பொய்க்கோபத்துடன் உதட்டைச் சுழித்த அஞ்சலி, “ஏண்டா என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? எவ்ளோ சீரியஸ்ஸா உன்கிட்ட கேட்டுட்டிருக்கேன். ஆனா, நீ எவ்ளோ கேர்லஸ்ஸா பதில் சொல்ற.” என்று அவன் தொடையில் கிள்ளினாள்.
பட்டென்று நிமிர்ந்தவன், “ஸ்ஸ்ஆஆஆ… ஏய் ஏன் எப்போபாரு கிள்ளிக்கிட்டே இருக்க? வலிக்குது பிசாசு.” என்று திட்ட,
“பின்ன கேட்டத காதுல வாங்காம பராக்கு பார்த்துட்டு இருந்தா என்ன பண்ணுவாங்களாம்?” என்று முறைத்தபடி சொன்னாள்.
“சரி, இப்போ கேட்கறேன் சொல்லு.” என்றான்.
“இந்த வீக்கெண்ட் எங்கயாவது போலாமா? எப்பவும் கம்பெனி விட்டா வீடு, வீடு விட்டா கம்பெனின்னு ரொம்ப போர் அடிக்குது. எங்கயாவது அவுட்டிங்க் போலாம் அபி.” என்றாள் அஞ்சலி.
“ம்ம்.. அதுவும் சரிதான். எனக்கும் எப்பவும் இதே மாதிரி இருக்க ஒரு மாதிரி தான் இருக்கு. பை சேஞ்ச் எங்கயாவது வெளிய போனா நல்லா தான் இருக்கும். போலாம் கண்டிப்பா.” என்றான் அபிஷேக்.
“ஹே… சூப்பர்.. இன்னும் ரெண்டு நாள் தான் சண்டே வில் பீ அ ஃபன் டே..” என்று சொன்ன அஞ்சலி, துள்ளிக் குதித்தபடி ஓடினாள். அதைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டனர்.
அடுத்த இரண்டு நாட்களும் வேலை ஓய்வில்லாமல் செல்ல, அவ்வப்போது அபியின் பார்வைகள் பிரார்த்தானாவின் மீதும், பிரார்த்தனாவின் பார்வைகள் அபியின் மீதும் படுவது புதிதாகத் தெரிந்தது இருவருக்கும். இதற்கு முன் தாங்கள் இருவரும் இப்படி இல்லை என்று இருவருமே உணர்ந்தாலும், தங்களின் மாற்றத்தை அவர்களால் செய்யாமல் இருக்க முடியவில்லை.
அஞ்சலி எதிர்பார்த்ததைப் போல, அந்த வார ஞாயிறு அன்று அனைவரும் காலை உணவை உண்டுவிட்டு வெளியே செல்லத் தயாராகினர்.
பெண்களுக்கு முன்னரே கிளம்பியிருந்த அபிஷேக், அப்போதைய மாடல்களில் ஒன்றான முழுக்கை அளவு கொண்ட, கழுத்தை ஒட்டி இருந்த நீல நிற டி-சர்ட்டை அணிந்தபடி இவர்களின் வரவுக்காகக் காத்திருந்தான்.
மெல்லிய சத்தம் கேட்க, மேலே பார்த்தவன் கண்கள் விடாமல் பார்வையை அங்கேயே செலுத்தப் பணித்தது. அஞ்சலி எப்பொழுதும் போல ஒரு கருப்பு நிற பூ டிசைன்கள் கொண்ட, முட்டி தெரியும் அளவிலான மாடர்ன் உடையில், புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் மெல்லிய மேக்-அப்புடன் இறங்கி வந்தாள்.
அவள் எப்பொழுதும் அப்படித்தான் என்று நினைத்த அபியின் கண்கள் பார்த்தது என்னவோ, அவளுக்குப் பின்னால் இறங்கி வந்த பிரார்த்தனாவைத்தான். வெங்காய சருகு நிறத்தில் பெரிய அளவிலான, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ஆரம்பரமான உடையை அணிந்து, புதுவித ஹேர்ஸ்டைலுடன் வந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையில் சற்று நாணப்பட்டு தலைகுனிந்தபடி வந்தாள் பிரார்த்தனா. அபியின் உதடுகள், “அனா…” என்று உச்சரித்தது யாருக்கும் தெரியாது.
அபி, அவளையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அஞ்சலி, “இந்த ட்ரஸ்ஸப் பார்க்கறியா? இது நீ என் பர்த்டேக்கு எடுத்துக் கொடுத்த ட்ரஸ் தான். ஆனா, இத நான் தொடக்கூட இல்ல. எனக்கு இந்த மாதிரி ட்ரஸ்ஸெல்லாம் செட் ஆகாது அபி. எனக்கு எப்பவும் இந்த மாதிரி மாடர்ன்னா, ஃப்ரீயா இருக்க ட்ரஸ் தான் கரெக்ட். நீ கொடுத்தன்னு அப்போதைக்கு வாங்கிட்டேன். ஆனா, இப்போவரைக்கும் நான் வச்சுக்கூட பார்க்கல. இது பிரார்த்தனாவுக்கு நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுச்சு. பாரு ஹைட், சைஸ் எல்லாம் கரெக்ட்டா அவளுக்கே எடுத்த மாதிரி இருக்கு. நான் தான் இதைக் கொடுத்து போட சொன்னேன். அதுக்காக என்னை பனிஷ் பண்ணிடாத டா.” என்று கெஞ்சியவளை தூக்கி ஒரு சுற்று சுற்ற வேண்டும் போலிருந்தது அபிஷேக்கிற்கு.
தான் வாங்கிக் கொடுத்த உடை யாருக்கு சென்று சேர வேண்டுமோ அங்கேயே சென்று சேர்ந்ததுமில்லாமல், அது அவளுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று நினைத்து மனதிற்குள் சந்தோஷப்பட்டான் அபிஷேக்.
அதற்குள் அங்கே வந்த சீதா, “அடடே! நம்ம பிரார்த்தனாவா இது? என்ன ஒரு அழகு போ.. உனக்கு இந்த ட்ரஸ் எவ்ளோ பொருத்தமா இருக்கு. அஞ்சலி போட்டிருந்தா கூடா இவ்ளோ நல்லா இருந்திருக்குமான்னு தெரியல.” என்று அவளை வம்பிழுத்தார்.
அதைக் கேட்டு உதட்டைச் சுழித்த அஞ்சலி, “ஆண்ட்டி, அப்போ நான் அழகு இல்லையா?” என்று இடுப்பில் கை வைத்து அவரைப்பார்த்து முறைத்தபடி கேட்டாள்.
“ஐயோ.. நான் அப்படிச் சொல்வேனா டி என் ராஜாத்தி? நீ எப்பவுமே பேரழகிதான்.” என்று அவளைச் சுற்றி த்ருஷ்டி கழித்தார் சீதா.
“ம்ம்ம்….” என்று சொன்னவள் சிரித்தபடி சென்றாள்.
முதன் முறை, அபியின் வண்டியில் பிரார்த்தனா வருகிறாள். எப்போதும், கம்பெனி உபயோகத்திற்கான வண்டியிலேயே அஞ்சலியும், அவளும் வருவார்கள். அபி தன் வண்டியை அத்தனை சீக்கிரம் யாருக்காகவும் பயன்படுத்தியது இல்லை.
அதில் சென்றால் அவனது குடும்ப உறுப்பினர்களாகத்தான் இருக்க முடியும். இன்று பிரார்த்தனாவுக்கு முதல் பயணம் அவன் வண்டியில். முன் இருக்கையில் சீதாவும், பின் இருக்கையில் அஞ்சலி சீதாவுக்குப் பின்னும், அபிக்கு பின் இருக்கையில் பிரார்த்தனாவும் அமர்ந்துகொண்டனர்.
முன்பக்கக் கண்ணாடியை சரி செய்தவன், அதில் பிரார்த்தனாவின் முகமும் தெரியும் வண்ணம் வைத்துக்கொண்டான். அதை அவளும் சென்றுகொண்டிருந்த சில நேரத்திலேயே தெரிந்துகொண்டாள். நிமிடத்திற்கு ஒருமுறை அவளைப் பார்த்தபடி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.
முதலில் அவர்கள் சென்றது ஒரு நல்ல ஷாப்பிங்க் மாலுக்கு. அங்கே சென்று ஒரு சில கடைகளில் கிடைக்கும் மாடர்ன் உடைகளை அள்ளி வந்தாள் அஞ்சலி. அதைப் பார்த்து நெற்றியில் அடித்துக்கொண்டார் சீதா.
பிரார்த்தனா வேண்டாம் என்று சொன்னாலும், அவள் அணிந்துகொள்ளும் விதமாக பல டாப்ஸ்களை அவளுக்காக வாங்கினாள் அஞ்சலி. கடையே காலியாகிவிடும் என்று கேலி செய்த அபிஷேக்கை, கடையென்றும் பார்க்காமல் அவனை விளையாட்டாக அடித்து விளையாடினாள்.
இதற்கிடையில், அங்கே இருந்த ஒரு பிரபலமான கை கடிகாரக் கடையில், பெண்கள் அணியும் கை கடிகாரத்தை வாங்கினான் அபிஷேக். அதை அஞ்சலியும், அவனுமே தேர்ந்தெடுத்தனர்.
வெளியே சீதாவிடம் பேசிக்கொண்டிருந்த பிரார்த்தனாவிடம் கொண்டு வந்து நீட்டினான் அபிஷேக். அதைப் பார்த்து விழித்தவளிடம், “வாங்கிக்கோ பிரார்த்தனா. இது உனக்காக நாங்க வாங்கிக் கொடுக்கற கிஃப்ட்.” என்றாள் அஞ்சலி.
அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தவள் கண்கள் விரிந்தன. தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டும் அந்த அழகான கை கடிகாரத்தை பலமுறை ரசித்திருக்கிறாள். பழைய வாரை மாற்ற முடியாமல், கையில் கை கடிகாரமே கட்டாமல் இருந்தவளுக்குத் தேவையான ஒன்றை வாங்கித் தந்தவர்களுக்கு தனது கண்களாலேயே நன்றி கூறினாள்.
அதற்கே மதியமாகிவிட, ஒரு நல்ல ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்து, எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட ஆரம்பித்ததில், மதிய உணவே சாப்பிடத் தோன்றவில்லை அவர்களுக்கு.
அதன் பிறகு, ஒரு நல்ல சினிமாவிற்குப் போகலாம் என்று முடிவெடுத்து அதே மாலில் அதற்கு டிக்கட்டும் எடுத்து விட்டு மூன்று மணி நேரம் அதில் செலவு செய்தனர். அதன் பிறகு ஒரு நல்ல இரவு உணவை உண்ண வேண்டும் என்று விரும்பியவன், நேரே வண்டியை அவிநாசி ரோட்டில் இருக்கும் ரெசிடன்ஸி டவருக்கு விட்டான்.
அங்கே உள்ள தி பெவிலியன் ஹோட்டல் ரெஸ்ட்டாரண்ட்டில் பஃபெட் டின்னர்க்கு புக்கிங்க் செய்து அவர்களை அழைத்துச் சென்றான். சீதாவும், அஞ்சலியும் இதற்கு ஏற்கனவே பழகியவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் இயல்பாகவே இருந்தனர்.
ஆனால், பிரார்த்தனாவுக்கு அனைத்தும் புதிது. இது போலான இடங்களுக்கு வருவது இதுவே முதல் முறை. அதுவும் இவ்வளவு பெரிய ஹோட்டலில் தான் சாப்பிடப் போகிறோம் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
அஞ்சலி அந்த பஃபெட் டின்னரைப் பற்றி அவளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்தாள். அதில் உள்ள அயிட்டங்களைப் பார்த்து மலைத்துப் போனாள் பிரார்த்தனா. சில தேர்ந்தெடுத்த பதார்த்தங்களை மட்டுமே அவள் உண்டு மகிழ்ந்தாள்.
அதை அவளுக்கே தெரியாமல் ரசித்தான் அபிஷேக். அஞ்சலி, வேறு சில உணவுகளைத் தேடி எடுக்கச் சென்றாள். அதோடு போதும் என்று நிறுத்திக்கொண்ட பிரார்த்தனாவுக்கு கழிவறைக்குச் சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
அதை விசாரித்து அவள் செல்லும் போது, அந்த வழிக்கு முன்பாக ஒரு தனிமையான இடத்தில் அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சியின் ஆழத்துக்கே தள்ளியது. அங்கே அஞ்சலி, யாரென்றே தெரியாத ஒருவனை இறுக அணைத்தபடி, அவனுக்கு முத்த மழை பொழிந்துகொண்டிருந்தாள்.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்....
ஹோட்டலில் அஞ்சலி யாருடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தாள்? என்ற யோசனையிலேயே இருந்தாள் பிரார்த்தனா. சாப்பிட்டு முடித்த பிறகு, அனைவரும் கிளம்ப வண்டியில் செல்லும் போது நிசப்தமாய் இருந்தது ஒருவித ஆச்சர்யம் அபிஷேக்கிற்கு.
இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளாமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருவரும் சேர்ந்துவிட்டால், ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். பிரார்த்தனா இயல்பாகவே அமைதியாக இருந்தாலும், அவளை இழுத்துக்கொண்டு பேசுவது அஞ்சலியின் குணம். ஆனால், இப்பொழுது அவள் தான் அதற்கு நேர்மாறாக இருந்தாள்.
அபிஷேக் இதை யோசித்துக்கொண்டிருந்தாலும், இப்பொழுது அவர்கள் இருவருக்குள்ளும் தான் போராட்டமாய் இருந்தது. அஞ்சலியின் கண்களில் பலவித உணர்வுகளைக் கண்டாள் பிரார்த்தனா. ஒருவித ஏக்கம், அன்பு என்று அனைத்தையும் பிரதிபலித்தன. எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டே வந்தாள்.
சட்டென்று திரும்பியவள், பிரார்த்தனா தன்னிடம் பேசாமல் வருவதைப் பார்த்து, யூகித்து விட்டாள். ஆனால், அப்போதைக்கு அவளிடம் சொல்லவோ, பேசவோ முடியாத நிலை. வீடு வரும் வரைக்கும் அமைதியாகவே வர வேண்டியதாய் இருந்தது.
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ததும், அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்ப, அசதியில் இருப்பதால் தான் ஒருவரும் பேசவில்லை என்ற நினைப்பு சீதாவுக்கு. ஆனால், அபிஷேக்கிற்கு அந்த சந்தேகம் இருந்தபடி தான் இருந்தது.
அவன் இருந்த அசதியில் அவனும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அறைக்குத் திரும்பினான். பிரார்த்தனா யோசனையிலேயே மாடிக்குச் செல்வதை தன் அறையின் வெளியே நின்றுகொண்டே பார்த்தாள் அஞ்சலி.
அவளிடம் பேசலாமா? வேண்டாமா? என்றொரு கேள்வி எழ ஏதோ ஒரு முடிவெடுத்தவளாக இரவு உடைக்கு மாறியவள் நேரே பிரார்த்தனாவின் அறைக்குச் சென்றாள்.
அவளும் உடை மாற்றி, வெட்டவெளியில் நின்றபடி அதே நிலையில் இருந்தாள். பெருமூச்சொன்றை விட்டபடி அவள் அருகே சென்றாள் அஞ்சலி. அவள் தோள்களைத் தொட்டதும் அவளது கையை எடுத்து விட்ட பிரார்த்தனா கண்களாலேயே ஏதோ பேச நினைத்தாள்.
“எனக்குப் புரியுது பிரார்த்தனா. நீ என்னை அங்க பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. அதனால தான பேசாம வந்த?” என்று கேட்க, ஆமாம் என்று தலையாட்டினாள் அவள்.
“உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு எனக்கு எந்த ஒரு அவசியமும் இல்ல பிரார்த்தனா. சொல்றதுக்கான சிச்சுவேஷன் வரல. அதனால தான் அதைப்பத்தி சொல்லல.” என்றாள்.
“அது யாரு? அவங்க கூட நீங்க எவ்ளோ க்ளோசா…” என்று அதற்கு மேல் கேட்க வந்த வார்த்தைகளை நிறுத்திக்கொண்டாள் பிரார்த்தனா.
“ரொம்பக் கேவலமா என்னை நினைச்சிருப்ப இல்ல?” என்றாள் அஞ்சலி கவலையோடு.
“அது என்னோட தேவ். என்னோட லவ்வர்.” என்று சொல்ல, விழித்தாள் பிரார்த்தனா.
லண்டன், இங்கிலாந்து.
குளிர் பிரதேசமான இங்கிலாந்தில் சில சமயம் பெயர் தெரியா நோய்கள் பரவுவது இயல்பு. லண்டனில் அப்போதுதான் ஒருவித காய்ச்சல் அனைவருக்கும் பரவியிருந்தது. பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே தாக்கியிருந்தது அந்த நோய். கை, கால்கள் மரத்துப் போதல், இடைவெளியில்லா காய்ச்சல் என்று அதில் அவதிப்பட்டு இறந்தவர்கள் அதிகம். பல பேர் வீடுகளே கதியென இருந்தனர்.
அந்த நோயால் தான் அஞ்சலியின் தங்கை ரித்திகாவும் பாதிக்கப்பட்டிருந்தாள். குறை மாதத்தில் பிறந்ததால் இயல்பாகவே அவளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால் அந்த நோய் அவளை எளிதில் ஆட்கொண்டது.
அதில் அவதிப்பட்டவளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவள் உடல் ஒத்துழைக்க மறுத்து, இறந்துவிட்டாள். ராமச்சந்திரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, அஞ்சலி என அனைவரும் கதறி அழுததை அந்த மருத்துவமனையே வேடிக்கை பார்த்தது.
அதே நேரத்தில் வேறு இருவரும் கதறி அழுத சத்தமும் அங்கே கேட்டது. அது தேவ் மற்றும் அவனது அப்பா விஸ்வநாதன். அவரது மனைவியும் அதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போய் விட்டார். விஸ்வநாதனும், ராமச்சந்திரனும் பால்ய கால சிநேகிதர்கள்.
இருவரும் தங்களுக்கு நேர்ந்த நிலையை நினைத்து கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதனர். அதே போல், அஞ்சலியும், தேவ்வும் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்களாதலால், ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அழுதனர்.
அவர்களைத் தேற்றுவதற்கு ஒருவராவது தைரியமாக இருக்க வேண்டுமே என்று தமிழ்ச்செல்வி அவர்களை அணைத்துக்கொண்டு ஆறுதல் சொன்னார்.
அதன் பிறகு, ஒரு மாத காலம் அவர்கள் நினைவிலேயே கரைய, அப்படியே இருக்க முடியாமல், அவரவர் வேலைகளைத் தொடர ஆரம்பித்தனர். ராமச்சந்திரன் தனது கம்பெனிக்குச் செல்ல, தமிழ்ச்செல்வியோ வீட்டில் அமைதியாக இருக்க முடியாமல் அருகே இருந்த குழந்தைகளுக்கு தமிழ் டியூசன் எடுக்க ஆரம்பித்தார்.
ஆனால், பத்து வயதே ஆன அஞ்சலிக்கு நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உயிருக்கு உயிரான தங்கை, தன்னுடன் இல்லை என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாமல் போனது. பள்ளிக்குச் செல்லும் போது தேவ்வைப் பார்த்தாள்.
“அப்பா தான் செஞ்சாரு. அவருக்கு கொஞ்சம் சமைக்கத் தெரியும். நானே ரெடியாகிப்பேன். இதெல்லாமே அம்மாதான் செய்வாங்க. ஆனா, இப்போ அவங்க தான் இல்லையே..” என்று சொல்லும் போதே அவனது கண்கள் கலங்கியது.
அதைக் காணப் பொறுக்காதவள், “அழாத தேவ். நான் வேணும்னா உனக்கும் சேர்த்து அம்மாகிட்ட சொல்லி சாப்பாடு எடுத்துட்டு வரேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்.” என்று ஆறுதலாய்ச் சொன்னவளைப் பார்த்து சிரித்தான் தேவ்.
இப்படியாக அவர்களது நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. வயது பதிமூன்றான போது, அஞ்சலி பருவமடைந்தாள். அப்போது, சிறிது நாட்கள் அவள் தேவ்வைக் காணவும், பேசவும் முடியாமல் தவித்தாள். அதே நிலை தான் அவனுக்கும்.
சிறிது நாட்கள் கழித்து பள்ளிக்கு அவளை ராமச்சந்திரனே கொண்டு வந்துவிட்டார். அவளைக் கண்டதும், மகிழ்ச்சி பொங்க அவளை நோக்கி வேகமாக தனது சைக்கிளில் வந்த தேவ்வை அவள் பார்க்கவில்லை.
எப்படியாவது இடைவெளியில் பேச நினைத்தான். ஆனால், அஞ்சலி எதுவுமே பேசாமல் சென்றுவிட்டாள். மாலையும் அவளது அப்பாவே வந்து அவளை அழைத்துச் சென்றார். அவனால் அவளிடம் காரணம் கேட்பதற்குக் கூட சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
எதனால் இவள் இப்படிச் செய்கிறாள்? என்று விடை தெரியாமல் அமைதியாய் வீட்டினுள் முடங்கிக் கிடந்தவனிடம் நடந்ததைக் கேட்டறிந்தார் விஸ்வநாதன்.
“இதெல்லாம் சகஜம் டா. நம்ம ஊர்ல எல்லாம் பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டாலே, இதுக்கப்பறம் பசங்களோட எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி, ஆம்பளைங்ககிட்டயும் பார்த்து தான் பேசணும். ஏன் அப்பாகிட்ட கூட அதே நிலை தான். அதெல்லாம் அவங்க அம்மா அவகிட்ட சொல்லியிருப்பாங்க. அதனால தான் அவ உன்னக் கண்டுக்காம இருந்திருப்பா. இதுல அவ தப்பு எதுவும் இல்ல. நேரம் கிடைச்சு அவளப் பார்த்துப் பேசினா, கோபப்படாம அவளுக்கு நம்பிக்கை கொடுக்கற மாதிரி பேசு. அவளே புரிஞ்சுக்குவா.” என்று அவனுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிச் சொன்னார்.
அதைப் புரிந்துகொண்டவன், சில தினங்கள் அவளை அவனே கண்டுகொள்ளாதது போல நடந்துகொண்டான். அதை அஞ்சலி நினைத்தாலும், எதுவும் பேசாமல் இருந்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல, அவன் தன்னை முற்றிலுமே மறந்துவிடுவானோ என்ற ஏக்கம் அதிகரிக்க, பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தவனிடம் சென்றாள்.
“நான் உன்கிட்ட ஏன் பேசலன்னு கேட்கமாட்டியா டா? நான் பேசலன்னா உடனே அப்படியே விட்டுடுவியா?” என்று இடுப்பில் கை வைத்தபடி முறைத்துக்கொண்டு கேட்பவளைக் கண்டுகொள்ளாமல் அவன் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தான்.
அதைக் கண்டு கோபம் கொண்டவள், அங்கிருந்து அழுதபடியே சென்றுவிட்டாள். அவள் சென்றதும்தான், “எவ்ளோ நாள் என்கிட்ட பேசாம இருந்த? இன்னைக்கு ஒரு நாள் உனக்கு பனிஷ்மெண்ட்.” என்று சிறுபிள்ளைத்தனமாய் விளையாண்டான் அவளிடம்.
அடுத்த நாள் பள்ளி வகுப்பறைக்குச் செல்லாமல் மைதானத்தின் மரத்தடியில் அமர்ந்திருப்பவளைப் பார்த்தான் தேவ். பார்த்த நொடியே ஓடிவந்தான் அவளிடம்.
அவனைக் கண்டதும், முகத்தைத் திருப்பி உதட்டைச் சுழித்தாள் அஞ்சலி. அவன் மீண்டும் அவள் முன்னே வந்து அமர்ந்து, “நீ எதுக்காக இப்போ கோவமா இருக்கேன்னு எனக்குத் தெரியும். நான் நேத்து உன்கிட்ட பேசலன்னு தான?” என்றான்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல?” என்று மீண்டும் முகத்தைத் திருப்பினாள்.
“நான் ஒரு நாள் உன்கிட்ட பேசலன்னு உனக்கு எவ்ளோ கோபம் வருதுல்ல. அதே மாதிரி தான, அன்னைக்கு எனக்கும் இருந்திருக்கும்? அதுவும் ஒரு வாரமா நீ என்னைக் கண்டுக்கவே இல்ல. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்றான் தேவ்.
“அதுக்கு ரீஸன் இருக்கு.” என்றாள்.
“ம்ம்ம்… தெரியும். அப்பா என்கிட்ட சொன்னார்.” என்று அவர் சொன்னவற்றைச் சொன்னான்.
“டேய்.. லூசு. அதெல்லாம் ஒன்னும் இல்ல. எங்கம்மா அப்படியெல்லாம் எதுவுமே சொல்லல. அவங்களுக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல. நான் லீவ் முடிஞ்சு ஸ்கூல் வந்தப்போ, என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் மடோனா க்ளாஸ்ல இல்ல. விசாரிச்சப்போ, அவ யு.எஸ் போய்ட்டாளாம். அவங்கப்பாவுக்கு திடீர்னு ட்ரான்ஸ்ஃபர் வந்ததால உடனே கிளம்பிட்டாளாம். அவ என்கிட்ட எதுவுமே சொல்லாமப் போய்ட்டான்னு எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. அப்போதான் தோணுச்சு, நான் யார்கிட்ட ரொம்பக் க்ளோசா இருக்கேனோ, அவங்க எல்லாம் என்னை விட்டு ஏதோ ஒரு வகைல போயிடறாங்கன்னு. முதல்ல ரித்து, அப்பறம் மடோனா, அதுக்கப்பறம் என்கிட்ட க்ளோஸா இருக்கறது நீதான். அதனால தான், நான் உன்கிட்டயும் பேசல. அப்பறம் நீயும் என்னைவிட்டுப் போய்ட்டா, அவ்ளோதான். அட்லீஸ்ட் உன்னை எங்கயாவது பார்த்தாக் கூட போதும்னு தோணிடுச்சு. ஆனா, அது ஒரு வாரத்துக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. அதனால தான் உன்கிட்ட பேசலாம்னு நேத்து வந்தேன். ஆனா, நீ என்னைப் பழிவாங்கிட்ட இல்ல?” என்று அவனின் தோளில் அடித்தாள்.
“ஏய்.. இல்ல அஞ்சலி. நான் உன்னைப் பழிவாங்க அப்படிப் பண்ணல. அதெல்லாம் பெரியவங்க செய்யறது. உனக்கு என்னோட பெய்ன் என்னன்னு தெரியணும்னு நினைச்சேன். அதனால தான் பேசல. இதோ, இன்னைக்கு ஓடி வந்துட்டேன் பாரு.” என்று அவன் பேச, அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“ப்ளீஸ் தேவ். நீயும் என்னை விட்டுப் போய்டாத. அப்பறம் எனக்குன்னு யாருமே இருக்க மாட்டாங்க.” என்று சொல்லி அழுதவளைத் தேற்ற அவனுக்குப் போதும் போதுமென்றானது.
இப்படியாக வருடங்கள் செல்ல, அவர்களுக்குள்ளான நட்பு இன்னும் அதிகமாகி அது அடுத்தகட்டத்துக்கு செல்லத் தயாரானதை அறிந்தான் தேவ்.
அவள் இல்லாமல் தன்னால் இருக்கவே முடியாது என்பதை அறிந்துகொண்டான். சண்டையிட்டாலும், சமாதானம் செய்தாலும் அவள் வேண்டும் என்பதில் அந்த வயதிலேயே தீர்க்கமாக இருந்தான்.
அவர்களின் கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வர இருந்த சமயம், ஒரு நாள் அஞ்சலி தீவிரமான முகத்தோடு இருப்பதைக் கண்டவன், என்னவென்று விசாரிக்க,
“அந்த ராபர்ட் என்னை டேட்டிங்க் வர்றியான்னு கேக்கறான் டா. அவனுக்கு எவ்ளோ திமிரு? என்னைப் பார்த்தா அவன்கூட சுத்தற பொண்ணு மாதிரியா தெரியுது?” என்று கோபப்பட்டாள்.
“அவனா? அவன் எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் அதையே தான் கேட்பான். சரி, ஒரு வேளை தெரிஞ்ச பையனா இருந்தா அவன் கூட டேட்டிங் போவியா?” என்றான் சமயம் பார்த்து.
“ஆங்க்.. எதுக்கு அப்படிக் கேட்கற?” என்றாள்.
“இல்ல, நானும் அதையே தான் கேட்கணும்னு வந்தேன்.” என்றான் தேவ் சாதாரணமாக.
“டேய். என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியானாள் அஞ்சலி.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்....
தேவ் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அஞ்சலி, நம்பமுடியாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, அவனோ விரலை அவளுக்கு முன்னால் சொடுக்கி அவளை நினைவுக்குக் கொண்டுவந்தான்.
“என்னாச்சு? ஏன் இப்படிப் பேயறைஞ்ச மாதிரி நிக்கற?” என்றான்.
“நீ என்ன சொல்ல வரயோ, அதை முழுசா சொல்லு.” என்றாள்.
“அப்படின்னா, நான் உன்னை லவ் பண்றேன்னு அர்த்தம். இங்க்லீஷ்ல அத ஐ லவ் யூன்னு சொல்லுவாங்க.” என்றான் சிரித்துக்கொண்டே.
அதைச் சொன்னதும், அவளையும் அறியாமல் அவனைக் கட்டிப்பிடித்தபடி அழுதாள் அஞ்சலி. அவள் முழுவதுமாக அழுது முடிக்கும் வரை அமைதியாகக் காத்திருந்தவன், பின்னே அவளை இழுத்து முகம் காண, அதில் சிறிதளவு நாணம் உண்டாகியிருந்ததைக் கண்டுகொண்டான்.
“ஏய்.. உனக்கு வெட்கப்படத் தெரியுமா? அப்பா..! கன்னம் என்னம்மா சிவந்திருக்கு பாரேன்?” என்று சொல்ல, அவள் இன்னும் நாணத்தோடு சிரிக்க அவளை மீண்டும் இழுத்துப்பிடித்து இறுக அணைத்துக்கொண்டான் தேவ்.
“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தேவ். ஆனா, அது வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான்னு இப்பவும் நினைச்சேன். ஆனா, நீ இப்போ ப்ரப்போஸ் பண்ண நிமிஷம், நானும் உன்னை லவ் பண்ணியிருக்கேன்னு தெரியுது டா. நீ என்னோட லைஃப் முழுக்க என்கூட வரணும். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.” என்று உறுதியுடன் அவள் பேச,
“கண்டிப்பா எப்பவும் நான் உன் கூடவே தான் இருப்பேன் அஞ்சலி. என் அம்மா இறந்ததுக்கு அப்பறம் இன்னும் நான் நானா இருக்கேன்னா அதுக்குக் காரணம் நீதான். உன்னை மாதிரி ஒருத்திய நான் எப்படி விடுவேன்? யார் தடுத்தாலும், உன்னைத் தூக்கிட்டுப் போய்டுவேன். கவலைப்படாத.” என்று சொன்னவன் வார்த்தைகள் அவளுடைய இதயத்தின் ஆழத்துக்குள் சென்றது.
அஞ்சலி வீடு வந்து சேர்ந்து எப்பொழுதும் போல உறங்கச் சென்றாள். கனவிலும், நினைவிலும் தேவ்வே இருக்க, அவனை நினைத்தபடி காதலில் கரைந்து உருகிப் போனாள்.
அடுத்து வந்த நாட்களில் தேவ்வைப் பார்க்க முயன்றாள். ஆனால், ஏனோ அவனை எங்கேயும் பார்க்கவே முடியவில்லை. சரியென்று அவனது வீட்டிற்குச் சென்றாள். ஆனால், அங்கே வீடு பூட்டியிருக்க, ஏமாற்றம் அடைந்தவளாய்த் திரும்பினாள்.
அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அணைந்திருப்பதாகவே வந்தது. நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரிடமும் விசாரித்துவிட்டாள். ஆனால், எந்தவிதமான சரியான பதிலும் கிடைக்கவில்லை.
இப்படியாக, ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. நட்பு என்று நினைத்த வரை தன்னுடனே இருந்தவன், காதல் என்று சொல்லி ஆசை காட்டிவிட்டு இப்போது எங்கே சென்றான்? என்று அந்தப் பேதை மனது அல்லாடிக்கொண்டிருப்பதைப் பெற்றவர்கள் கண்டுகொண்டனர்.
“என்னாச்சு அஞ்சலி மா? ஏன் இவ்ளோ டல்லா இருக்க?” என்று எப்பொழுதும் கண்டுகொள்ளாத ராமச்சந்திரன் அன்று அக்கறையாய் அவளை விசாரிக்க, யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவள், அவரிடம் தேவ்வைப் பற்றிச் சொன்னாள்.
“அட தேவ்வா? நம்ம விஸ்வாவோட பையன் தானே? நீயும், அவனும் ஒரே ஸ்கூல், காலேஜ் இல்ல? அவன் கூட நீ அவ்ளோ க்ளோஸா?” என்று தெரியாதவர் போலவே பேசினார்.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு, தமிழ்ச்செல்வியும் அருகே வந்து அமர்ந்தார். “ஆமாம்..” என்று ஒரே வார்த்தையில் சொன்னாள்.
“அது என்னாச்சுன்னா, விஸ்வா ஷேர் மார்க்கெட் பிஸ்னெஸ் தான பண்ணிட்டிருந்தான். அதுல லாபம், நஷ்டம் வரது ரொம்ப சகஜம். ஆனா, அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது, வேற ஏதாவது பண்ணுடான்னு, நானும் நிறைய அவனுக்கு அட்வைஸ் பண்ணேன். ஆனா, அவன் அதையெல்லாம் கண்டுக்காம அதே கதின்னு கிடந்தான். ஒன்னா சொல் புத்தி இருக்கணும், இல்ல சுயபுத்தி இருக்கணும். ரெண்டுமே இல்லாதவன என்ன சொல்றது? அது பாரு, அவன் நேரம், போன வாரம் ஷேர் மார்க்கெட் ரொம்ப டவுன். அவன் எடுத்த எல்லா ஷேரும் பயங்கர லாஸ். அதுக்கப்பறம் என்ன பண்றதுன்னு தெரியாம, யார்கிட்டயும் சொல்லாம அவன் பையனக் கூட்டிட்டு வேற எங்கயோ போய்ட்டதா கேள்விப்பட்டேன். நான் கூட நம்ம கம்பெனிக்கு வந்து வேலை செய், நானே ஒரு சம்பளம் தரேன்னு சொன்னேன். ஆனா, அது அவனுக்கு கவுரக் குறைச்சல்ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான். இதுக்கு மேல ஒரு ஃப்ரெண்ட்டா நான் வேற என்ன பண்ண முடியும் சொல்லு? உன்னை ஃப்ரெண்ட்டா நினைக்கறவன் உன்கிட்ட சொல்லிட்டுத்தான போயிருக்கணும்? அவனும் சரியில்ல. விடு, அஞ்சலி. நீ அதையே நினைச்சு ஃபீல் பண்ணாத.” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார் ராமச்சந்திரன்.
அதே போல் தமிழ்ச்செல்வியும், “அஞ்சலி, இது மாதிரி நம்ம கூட படிச்சவங்க அவங்க வாழ்க்கைய நோக்கி வேற பக்கம் போறதெல்லாம் சகஜம் தான். எப்பவும் நம்ம கூடவே இருப்பாங்களா? அதையெல்லாம் ரொம்ப எளிமையா எடுத்துட்டுப் போய்க்கணும். இல்லைன்னா நம்மாள இந்த வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது.” என்று அவர் பங்கிற்கு எடுத்துரைக்க முயன்றார்.
இவையெல்லாம் அஞ்சலியைப் பொறுத்தவரை, செவிடன் காதில் சங்கூதிய கதை தான். ஏனென்றால், இவர்கள் சொல்வதைப் போல் கண்டிப்பாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. ஆனால், அது என்னவென்று முழுமையாய் அவளுக்குத் தெரியவில்லை.
அவளுடைய தேவ்வைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். காரணமில்லாமல், காரியமில்லை. இப்போது இவர்கள் சொல்லும் எந்த ஒரு விஷயத்துக்கும் தான் தவறான எண்ணங்களை மட்டும் மனதில் தேக்கிவைக்கக் கூடாது என்று முடிவெடுத்தாள்.
அவள் அமைதியாகவே இருப்பதைப் பார்த்த ராமச்சந்திரன், “சரி அஞ்சலி, படிப்பு முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க? மேல ஹையர் ஸ்டடீஸ் எதுவும் பண்ணப் போறியா? இல்ல வேற எதுவும் ப்ளான் இருக்கா?” என்றார்.
வேறு ஏதும் திட்டம் உள்ளதா? என்று அவர் கேட்கும் தொணியிலேயே அவரிடம் ஏதோ திட்டம் உள்ளது என்று தெரிந்துகொண்டாள் அஞ்சலி.
“இல்லப்பா எதுவும் இல்ல.” என்றாள்.
“அப்போ நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதுக்கு நீ தான் பதில் சொல்லணும்.” என்றார்.
ஓஹோ! முடிவு எடுத்துவிட்டுத்தான் தன்னிடம் சமாதானமாகப் பேச வந்திருக்கிறார் என்று அப்போதுதான் விளங்கியது அஞ்சலிக்கு.
மனதில் தோன்றிய கோபத்தை வெளிக்காட்டாமல் பல்லைக் கடித்துக்கொண்டு, “ம்ம்ம்..” என்றாள்.
“சீதாவுக்கு இதுல சம்மதம் தான். ஆனா, உடனே வேண்டாம்னு அபிஷேக் சொன்னதா சொன்னா. அதுவும் சரிதான். ஏன்னா, இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் பழகுங்க, புரிஞ்சுக்கோங்க. நல்லா டைம் எடுத்துக்கோங்க. அப்பறம், ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றோம்.” என்றார் அனைத்தையும் சாதாரணமாக.
அவள் பதில் ஏதும் பேசாமல் எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
“ஆமா, அஞ்சலி. அபிஷேக் ரொம்ப நல்ல பையன். உனக்கு ரொம்பப் பொருத்தமா இருப்பான். நம்ம சொந்தமும் விட்டுப் போகக்கூடாதுன்னு தான் இந்த முடிவு.” என்றார் தமிழ்ச்செல்வியும்.
“நீ இந்தியா போக ஏற்பாடு பண்ணியிருக்கோம். அங்க போய் ஒரு வருஷமாவது அவங்க கூட இரு. அதே மாதிரி அங்க இருக்க நம்ம தாத்தாவோட பிசினெஸ்ஸ அபிதான் இப்போ பார்த்துட்டிருக்கான். நீயும், அவனுக்கு பிசினெஸ்ல ஹெல்ப் பண்ணு. எம்.டியா இருந்து எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணக் கத்துக்கோ. உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.” என்று சமாதானம் செய்பவராய், அனைத்து முடிவையும் சொல்லிவிட்டார் அவர்.
அவள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். அவர் சென்ற பிறகு, தனது அறைக்குள் நுழைந்தவள் அழுகை பீறிட்டு வர, அழுது அழுது தேய்ந்தாள். சாப்பிடவும் மனம் வரவில்லை.
அவள் இப்படி இருப்பதைப் பார்த்த தமிழ்ச்செல்வி, “நீ இப்படி அழுதுட்டே இருந்தா மட்டும் எல்லாம் சரியாகிடுமா அஞ்சலி? மனசத் தேத்திக்கிட்டு இந்தியா போகப் பாரு.” என்றார்.
அதைக் கேட்டு நிமிர்ந்தவள், “நீங்க என்ன பண்ணாலும் என் மனச உங்களால மாத்த முடியாது. கல்யாணம் பண்ணி வைக்கற அளவுக்கு யோசிச்சிட்டீங்க இல்ல? ஆனா, என்னோட தேவ்வ என்னோட மனசுல இருந்து உங்களால என்னைக்குமே பிரிக்க முடியாது. என்ன ஆனாலும், அவன் தான் என்னோட லைஃப். இப்போ இந்தியா போறேன். ஆனா, இத மட்டும் எப்பவும் நீங்க ஞாபகம் வச்சுக்கோங்க.” என்று ஆவேசத்தோடு சொன்னபடி தனது உடமைகளை எடுத்து வைத்துக் கிளம்பத் தயாரானாள்.
அதைக் கேட்டு தமிழ்ச்செல்வி அதிர்ச்சியானாலும், அனைத்தும் போகப் போக சரியாகிவிடும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டார். அதைக் கேள்விப்பட்ட ராமச்சந்திரனும், இந்தியா சென்றால் அவள் கண்டிப்பாக மாறிவிடுவாள் என்று சொல்லி அவரை சமாதானம் செய்தார்.
அதைத் தொடர்ந்து, அடுத்த வாரமே தான் இந்தியா வந்துவிட்டதாக அஞ்சலி தனது கதையைப் பிரார்த்தனாவிடம் சொல்லிமுடித்தாள்.
அதைக் கேட்டு பிரார்த்தனா, “உங்க லவ் எவ்ளோ ஆழமானதுன்னு எனக்குப் புரியுது மேம். ஆனா, உங்க பேரன்ட்ஸோட சம்மதம் இல்லாம எப்படி முடியும்?” என்றாள்.
“ஹூம்ம்.. என்னோட ரித்து போனதுக்கப்பறம் என்னை ஒரு பொருட்டாவே மதிக்காதவங்கள விட, எனக்கு ஆறுதல் சொல்லி, என்னை ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்த தேவ் தான் என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட அப்பா, அம்மா எல்லாமே. அப்படி இருக்கும் போது, அவங்க சம்மதம் சொன்னா என்ன? சொல்லலைன்னா என்ன?” என்றாள் விரக்தியாக.
“அப்போ, சீதா ஆண்ட்டி, அபி சார். அவங்ககிட்ட எப்படி இதைப்பத்தி சொல்லப்போறீங்க?” என்றாள்.
“நான் இங்க இந்தியா வந்ததுமே, என்னோட எல்லா விஷயங்களையும் அபிகிட்ட ஒன்னு விடாம சொல்லிட்டேன் பிரார்த்தனா. அவனும், என்னைப் புரிஞ்சுக்கிட்டு இப்போ வரைக்கும் ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா என்ன கைட் பண்ணிட்டிருக்கான். ஆனா, ஆண்ட்டிக்கு இது தெரியாது. தெரிஞ்சா அப்பாக்கிட்ட பேசுவாங்க. தேவையில்லாத இஷ்யூ ஆகும்னு சொல்லல. ஆனா, அவங்களும் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் மாதிரிதான். சொல்லப்போனா, நான் இங்க வந்ததுக்கப்பறம் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட தேவ் இல்லாத குறைய இவங்க ரெண்டு பேரும் தீர்த்து வச்சிருக்காங்கன்னு தான் சொல்லணும். ஆனாலும், திடீர்னு அவனோட ஞாபகம் வந்துடும், மனசுக்குள்ளயே அவன நினைச்சு உருகிட்டிருப்பேன். அவனப் பிரிஞ்சு இருந்தாலும், இன்னும் என்னோட லவ் அதிகமாகிட்டு தான் இருக்கே தவிர, கொஞ்சம் கூட குறையல. அவன் எனக்காக எப்படியும் வருவான்னு ஒரு நம்பிக்கை. அதுதான், நேத்து அவனை அங்க ஹோட்டல்ல பார்த்ததும், உணர்ச்சிவசத்துல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தேன். பார்க்கறவங்களுக்கு அது அருவருப்பா தெரியலாம். ஆனா, அது என்னோட இத்தனை வருஷ அவன் மேலான தவிப்பு, ஏக்கம், காதல் இதோட வெளிப்பாடுதான் அது.” என்று சொன்னவள் கண்களில் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை.
“சாரி மேம். நேத்து உங்கள அப்படிப் பார்த்ததும் உடனே தப்பா தான் நினைக்கத் தோணுச்சு. ஆனா, இப்போ நீங்க சொன்னதுக்கப்பறம் தான் உங்க லவ் எப்படிப்பட்டதுன்னு தெரியுது. அவர் இங்க தான் இருக்காரா?” என்றாள்.
“நாளைக்கு நாங்க மீட் பண்ணப் போறோம். அவன் என்கிட்ட நிறைய விஷயங்களைப் பத்திப் பேசணும்னு சொன்னான். அதனால, நான் நாளைக்கு கம்பெனிக்கு வரமாட்டேன். நீயும், அபியும் ஹேண்டில் பண்ணிக்கோங்க.” என்றாள்.
“ம்ம்.. சரி” என்று தலையாட்டி வைத்தாள் பிரார்த்தனா. ஆனாலும், மனதுக்குள் ஏதோ ஒரு சிறு சஞ்சலம். நாளை இதை எப்படி அபிஷேக்கும், சீதாவும் எடுத்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் அவள் மனதிற்குள் ஓடியது.
(தொடரும்….)
உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
அடுத்த நாள், அஞ்சலி அவசரமாய் அபிஷேக்கிடமும், சீதாவிடமும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அதைப் பிரார்த்தனா அறிந்தாலும் அதைப் பற்றி அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை.
வழக்கம்போல், கம்பெனி கேபில் வரலாம் என்று இருந்தவளை, “ம்ம்.. அனா இன்னைக்கு என் கூடவே வந்துடு. அஞ்சலி வெளிய ஆஃபீஸ் கேப்ல தான் போயிருக்கா. அதனால நீ எப்படி வருவ? வா.” என்றான்.
“இல்ல சார். நான் ஆட்டோல வந்திடறேன்.” என்றாள் தயங்கியபடி.
"நான் நம்ம கம்பெனிக்குத் தான போறேன். அப்பறம் என்ன பிரச்சினை உனக்கு?" என்று கேட்க, வேறு வழியில்லாமல் அவனுடனே கிளம்பினாள்.
பின்னால் அமரப் போனவளை, “முன்னாடி உட்காரு.” என்று கட்டளையாய்ச் சொல்ல, முன்னே அமர்ந்தாள்.
அபிஷேக், எதனால் இப்படிச் செய்கிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை என்றாலும், அவனுடன் இதுபோல் அமர்ந்து தனியாகச் செல்வது அவளுக்குப் பிடித்திருந்தது.
ஆனாலும், அவன் அதனைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று முகத்தில் எந்தவித பாவனையும் காட்டாதவாறு கடிவாளம் போட்டாள்.
“தெ.. தெரி.. தெரில சார்.” என்று சொல்வதக்குள் வார்த்தைகள் தடுமாறி வர, அதைக்கண்டு முகம் சுருக்கினான் அபிஷேக். ஆனால், அதற்கு மேல் அவளிடம் வேறு எதையும் கேட்கவில்லை.
கம்பெனிக்கு வந்த பிறகு வழக்கம்போல் அவளது இஷ்ட தெய்வம் விநாயகரைத் தொழுதுவிட்டு வர விரும்பினாள் பிரார்த்தனா.
“சார்.. நீங்க இங்கயே நிறுத்திக்கோங்க. நான் கோவிலுக்குப் போய்ட்டு வந்திடறேன்.” என்றவள், அவனது பதிலையும் எதிர்பாராமல் இறங்கிச் சென்றாள்.
கம்பெனியின் நுழைவாயிலில் அமையப் பெற்றிருக்கும் அந்த சிறிய கோவில் பிள்ளையாரை தரிசிப்பவர் சிலரே. அதில் முக்கியமானவள் பிரார்த்தனா என்பதை அபிஷேக்கும் அறிவான்.
அன்று ஏதோ ஞானோதயம் வந்தவனாக தனது வண்டியை காவலாளியிடம் அதற்கு உரித்தான இடத்தில் நிறுத்தப் பணித்துவிட்டு, அவசரமாய் கோவிலுக்கு வந்து சேர்ந்தான்.
வழக்கம்போல் பிரார்த்தனா தனது அனைத்து கோரிக்கைகளையும் பிள்ளையாரிடம் முறையிட்டபடி இருந்தாள். அதில் அஞ்சலியும், தேவ்வும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கியிருந்தது.
முணுமுணுத்தபடி அவள் கும்பிடும் அழகை ஒரு கண்ணால் ரசித்தபடி கையெடுத்து பிள்ளையாரை வணங்கினான் அபிஷேக். அவள் கண் திறந்து பார்த்தபோது, எதிரே நின்றிருந்தவனைப் பார்த்து ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும், ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது பிரார்த்தனாவிற்கு.
ஏனென்றால், அவன் பெரிய நாட்டமுள்ள பக்திமான் இல்லை என்பதை சீதாவும், அஞ்சலியும் சொல்லக் கேட்டிருக்கிறாள். வீட்டில் உள்ள பூஜையறையில் ஒரு நாளும் அவன் நின்று பார்த்ததில்லை அவள்.
அதே போல், வீட்டிலிருந்து கிளம்பினால் நேராக தனது வண்டியை அவனது இருப்பிடத்தில் நிறுத்திவிட்டு விறுவிறுவென்று தனது அலுவலகத்திற்குச் செல்பவன், திடீரென இங்கே வந்து நிற்கக் காரணம் என்னவாக இருக்கும்? என்றே யோசித்தபடி நின்றாள்.
தான் கேட்டிடாமல் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தவள், “சார்… நீங்க எங்க இங்க?” என்றதும், அபிஷேக்கோ அப்போதுதான் அவளைப் பார்ப்பது போல் பாவனை செய்தான்.
“கோயிலுக்கு வந்தேன் அனா… ஏன்? நான் வரக்கூடாதா?” என்றவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தவள்,
“இல்ல நான் அப்படிச் சொல்லல சார். நீங்க எப்பவும் இங்க வரமாட்டிங்களே. அதனால தான் கேட்டேன்.” என்றாள்.
“அது.. அஞ்சலி அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பா. நம்ம கம்பெனில இருக்க பிள்ளையார தினமும் கும்பிடற ஒரே ஜீவன் நீதான்னு. அதான், நீ தினமும் கும்பிடற அளவுக்கு இவர்கிட்ட என்ன இருக்குன்னு பார்க்க வந்தேன்.” என்றான் குறும்பாக.
அதைக் கேட்டு சிரித்தவள், “சார்.. நான் இப்போன்னு இல்ல, சின்ன வயசுல இருந்தே தினமும் இவரப் பார்க்காம இருந்ததே இல்ல. அந்த அளவுக்கு என்னை அவருக்குத் தெரியும். அவர் தான் எனக்கு எல்லாமே.” என்று அவள் சொல்லிக்கொண்டே போக, தனது முத்துப்பற்களைக் காட்டி அழகாய்ச் சிரித்தான் அபிஷேக்.
அதிகமாகப் பார்த்துவிடாத அபூர்வமான விஷயத்தைப் பார்ப்பதைப் போல அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அந்த நிமிடம் அது அழகாய்த் தெரிந்தது அவளுக்கு.
“ஏதோ நீயும், பிள்ளையாரும் கிளாஸ்மேட்ஸ் மாதிரி பேசிட்டிருக்க? நீ சொல்றதெல்லாம் கேட்டா குழந்தைத்தனமா இருக்கு.” என்றான்.
“நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம் சார். அது பார்க்கறவங்களோட பார்வையைப் பொறுத்தது. ஆனா, அவருக்கும் எனக்குமான பந்தம் அப்படிப்பட்டது.” என்று மீண்டும் உணர்வுப்பூர்வமாகப் பேசினாள்.
“அப்படி என்ன இருக்கு அந்த சிலைல?” என்றான்.
“சார்… சில பேர் அதை சிலைன்னு சொல்லுவாங்க, சில பேர் கல்லுன்னு கூட சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அது நம்பிக்கை. நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு. அந்த சக்திதான் நம்மை எல்லாவிதத்திலும் ஆட்டுவிக்குது. அந்த சக்திய உண்மைன்னு நம்பறவங்களுக்கு அது சரியான நேரத்துல சரியான பதில சொல்லும். அது முட்டாள்தனம், மூடநம்பிக்கைன்னு நினைக்கறவங்களுக்கு அதுக்கான பதில் கிடைக்காது. நான் அந்த சக்திய அவரோட ரூபமா பார்க்கறேன். அவர நம்பினதால தான், எத்தனையோ கஷ்டத்தை அனுபவிச்சிட்டிருந்த என்னை உங்கள மாதிரியும், அஞ்சலி மேம் மாதிரியும் ஒரு நல்லவங்ககிட்ட என்னை ஒப்படைச்சிருக்கார்.” என்றவளைப் பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது அபிஷேக்கிற்கு.
ஒரு 22 வயதே ஆன பெண்ணுக்கு இத்தனை தெளிவும், சிந்தனையும் இருக்க முடியுமா? என்றே ஆச்சர்யப்பட்டான். வாழ்க்கையின் கஷ்டங்கள் தான் அவளை இந்த அளவிற்கு பக்குவப்படுத்தியிருக்கிறது என்றும் புரிந்துகொண்டான்.
“உன்னோட நம்பிக்கைய நான் பாராட்டுறேன். நானும் முடிஞ்ச அளவுக்கு நம்ப ஆரம்பிக்கறேன். வொர்க் அவுட் ஆச்சுன்னா நீ சொல்றத நான் ஏத்துக்கறேன்.” என்றதும், அவள் சிரித்தாள்.
“நான் சொன்னதுக்காகவெல்லாம் நீங்க எதையும் நம்ப வேண்டாம் சார். நம்பிக்கைங்கறது தானா வரணும். அப்போதான் கண்கூட நாம அதை உணர முடியும்.” என்றவளது வார்த்தைகளில் அடங்கிய உண்மையைப் புரிந்துகொண்டான் அபிஷேக்.
அப்படியே பேசிக்கொண்டு சென்ற போது, தங்களைக் கடந்து சென்ற ஒரு பைக்கில் பின்னே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு. மெல்ல அவளது கண்கள் நன்றாக அது யாரென்று பார்க்க முயற்சி செய்தது. ஆனால், அதற்குள் அவன் சென்றுவிட்டான்.
ஒரு வேளை தான் தான் தவறாக எண்ணியிருப்போம் என்ற சமாதானத்தோடு அமைதியாக அலுவலகம் வந்து சேர்ந்தாள். அதன் பிறகு, வழக்கம்போல் அவனது அன்றைய தின செயல்களை அவன் சொல்லக் குறித்துக்கொண்டாள்.
“இன்னைக்கு நம்ம கம்பெனில ரொம்ப வருஷமா வேலை செஞ்ச அஞ்சு பேர் ரிட்டயர்ட் ஆகறாங்க. அவங்களுக்கு கம்பெனி சார்பா ஒரு சின்ன செண்ட்-ஆஃப் ப்ரோகிராம் இருக்கு. அப்பறம் அதுக்கு பதிலா புதுசா அஞ்சு பேர் வேலைல சேர இருக்காங்க. அவங்களையும் பார்க்கணும்.” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, அவளது மனதில் அக்கேள்வி திடீரென உதயமானது.
“சார், பேக்கிங்க் செக்ஷன்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்களா?” என்றாள்.
“ஆமா அனா… ஏன் கேட்கற?” என்றான்.
“யார் சார் அவங்கள வேலைக்குச் சேர்க்கறது?” என்றாள்.
எப்பொழுதும் இல்லாமல் இன்று இவள் கேட்கும் கேள்விகள் அவனை யோசிக்க வைத்தது.
“அந்தந்த செக்ஷன்ல இருக்க மேனேஜர், அப்பறம் யூனியன் லீடர் ரெகமண்டேஷன்னு வந்தா சேர்த்துப்போம். மூணு பேர் மேனேஜர் பார்த்து சேர்த்திருக்கார். ரெண்டு பேர் யூனியன் லீடர் ரெகமண்ட் பண்ணியிருக்காங்க.” என்றான்.
“சார், நீங்க அவங்களப் பார்க்கப் போகும்போது நானும் கூட வரலாமா?” என்றாள்.
அவளைக் கேள்வியாய்ப் பார்த்தவன், “அஃப்கோர்ஸ் அனா… நீயும் கூட வா.” என்றதும், அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவளது இடத்திற்குச் சென்றாள்.
ஒரு மணி நேர அலுவலக வேலைக்குப் பிறகு, அவன் சொன்ன நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றனர் அபிஷேக்கும், பிரார்த்தனாவும். அவன் முன்னே செல்ல, அவளோ தூரமாகவே இருந்து அனைத்தையும் பார்க்கத் தயாரானாள்.
விடைபெற இருந்தவர்களுக்கு உரிய மரியாதையுடன் மாலை அணிவித்து, அவர்களுக்கு வேட்டி, சட்டை வழங்கி, சிறிது ரொக்கப் பணமும் கொடுத்தனர். விடைபெறுவதற்கு மனமே இல்லாமல் அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். கூடவே முத்துவேலும் இருந்து அந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
அதற்கு அடுத்ததாக புதிதாக கம்பெனியில் சேர்ந்த ஊழியர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் முத்துவேல். அவர்களை அபிஷேக்கும் பார்த்துக்கொண்டிருக்க, இப்போது பிரார்த்தனாவின் கண்களோ ஒருவித பயத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தது.
அவள் சந்தேகப்பட்டதைப் போலவே அங்கே நின்றிருந்தான் செல்வா. அவனது மாமா ராஜனின் மகன். யாரை தான் வாழ்நாளில் இனிமேல் காணவே கூடாது என்று நினைத்திருந்தாளோ, அவன் இங்கேயும் வந்துவிட்டான் என்பதை அவளால் நம்பமுடியவில்லை.
இவன் எப்படி இங்கே? என்று யோசித்துக்கொண்டே நின்றாள். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கிளம்பிவிட, அபிஷேக் வந்ததும் ஓரமாக நின்றிருந்தவள் அவனுடன் இணைந்துகொண்டாள்.
“ஏன் அனா… நீ இங்கயே இருந்துட்ட? நீயும் அங்க வந்திருக்கலாமே?” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று விழித்தாள்.
“அங்க நிறைய ஜெண்ட்ஸ் இருந்தாங்க சார். அதனால தான் வரல.” என்று சாக்கு சொன்னவளை நம்பாமல் பார்த்தான் அபிஷேக்.
“ஆமா, அங்க எல்லாருமே ஜெண்ட்ஸ் தான் இருப்பாங்க. ஆனா, அது தெரிஞ்சுதான நீயும் வந்த?” என்றான் அவளை மடக்கும் விதமாக.
“அது… வந்து சார்…” என்று இழுத்தவளின் மனதில் ஏதோ உள்ளது என்று தெரிந்துகொண்டவன்,
“சரி… நீ உன் கேபின்க்குப் போ. நான் அப்படியே ப்ரொடக்ஷன் யூனிட்ட விசிட் பண்ணிட்டு வந்திடறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
“ஒகே சார்…” என்றவள், அப்போதும் யோசித்துக்கொண்டே தான் சென்றாள்.
ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்த அபிஷேக்கோ, அவள் ஏதோ ஒரு குழப்பத்தில் உள்ளாள் என்பதை மட்டும் தெரிந்துகொண்டான். அதை அவளிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.
நேரங்கள் கடந்துவிட, மதியம் அவளது இடத்தில் அமர்ந்து இன்னும் செல்வாவைப் பற்றி தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அண்மையில் அவளது தாத்தா, பாட்டியிடம் பேசியபோது அவர்கள் சொன்ன விஷயம் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அப்படியிருக்க, செல்வா இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பதை எண்ணி அவள் மனதில் ஒருவித பயம் உருவானது. அதேபோல், அவளும் இதே கம்பெனியில் தான் வேலை செய்கிறாள் என்று தெரிந்தால், என்னென்ன பிரச்சினைகள் செய்வானோ? என்றே எண்ணி கவலைப்பட்டாள்.
தீவிர சிந்தனையில் இருந்தவள் முன்பு, விரலை சொடுக்கினான் அபிஷேக். அவன் வந்துவிட்டதை அறிந்தவள், ஒருவாறாக சமாளித்து நின்றாள்.
“என்ன ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டிருக்க? ஏதாவது பிரச்சினையா?” என்றவனிடம் சொல்லிவிடலாமா? வேண்டாமா? என்று யோசித்தாள்.
ஆனால், வந்த முதல் நாளே அவனைப் பற்றிக் கூறி வெளியே அனுப்பிவிட்டால் அது பிரச்சினையாகிவிடும். அதுவும், அதற்குத் தான் தான் காரணம் என்று அறிந்தால், செல்வாவின் மற்றொரு முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும் என்று நினைத்தவள்,
“ஒன்னும் இல்ல சார். அஞ்சலி மேம் இன்னும் வரல. அதைப்பத்தி தான் யோசிச்சிட்டிருந்தேன்.” என்று சமாளித்தாள்.
“ம்ம்… ஆமா, எனக்கும் அது தெரியும். ஆனா, அவ ஒரு முக்கியமான விஷயமா வெளிய போறதா தான சொன்னா. வந்துடுவா.” என்றான்.
அதற்கு சரியென்று தலையாட்டியவளிடம், “அப்பறம் அனா.. இன்னைக்கு ஈவினிங்க் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் வெளிய போறேன். நீயும் என்கூட வரணும்.” என்றான்.
அதற்கு அவள் திருதிருவென்று விழித்தாள். எதற்காகத் தன்னை வெளியே செல்ல அழைக்கிறான் என்று தெரியாமல் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“சார், அஞ்சலி மேம் வரட்டுமே.” என்றாள்.
“இல்ல. அஞ்சலிகிட்ட நான் பேசிக்கறேன். ரொம்ப முக்கியமான விஷயம். நீ கண்டிப்பா வர.” என்றான் கட்டளையாக.
வேறு வழி தெரியாமலும், அதற்கு மேல் அவனது கட்டளையை மறுக்க முடியாமலும் தலையாட்டி வைத்தாள் பிரார்த்தனா.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
தேவ்வைக் காணச் சென்ற அஞ்சலி இப்போது இருந்தது பாலக்காட்டில் உள்ள ஒரு ரெசார்ட்டில். கோயம்புத்தூரில் இருந்து ஒரு மணி நேரப் பயணமே என்பதால், அவனுடன் அங்கே சென்றிருந்தாள்.
வருடம் கழித்து அவனைக் கண்ட சந்தோஷம், ஒரு மணி நேரப் பயணம் என்று அவள் முகம் பிரகாசித்தது. காரில் சென்ற போது, அவனின் தோள்களில் சாய்ந்தபடியே வந்தாள்.
அவளை ஆதுரமாய்த் தழுவி, காதல் பாடல்களுடன் அழைத்து வந்துவிட்டான் தேவ். இயற்கை தவழும் காற்றில் தங்களை மெய்மறந்து இருந்தார்கள் இருவரும்.
“தேவ், நான் இதைக் கேட்டுத்தான் ஆகணும், ஏண்டா என்னை விட்டுட்டுப் போன? இந்த ஒரு வருஷமா மனசளவுல நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஃப்ரெண்ட்டா இருந்த வரைக்கும் கூடவே இருந்துட்டு, லவ் பண்றேன்னு சொல்லிட்டு என்னை அப்படியே விட்டுட்டுப் போய்ட்ட. அப்போ நான் பயப்பட்ட மாதிரியே ஆய்டுச்சு தான? எல்லாரும் என்னை விட்டு தூரமா போய்ட்டீங்க.” என்று வருத்தப்பட்டுப் பேசியபடியே அழுதாள்.
“ஏய்.. வருஷம் கழிச்சு வந்திருக்கேன். உன்னோட சந்தோஷத்தைப் பார்க்கணும்னு நினைச்சேன். ஆனா, நீ என்னடான்னா அழுதுட்டிருக்க?” என்று அவள் தலையில் குட்டினான்.
“டேய்.. நான் தான் உன்னை அடிக்கணும். நீ என்னைக் குட்டற?” என்று அவனை அடிக்கச் சென்றவளின் கைகளை லாவகமாகப் பிடித்து அணைத்தான் தேவ். அந்த அணைப்பில் அவளையே மறந்தாள் அஞ்சலி.
“இதுக்காகத்தான் இவ்ளோ வருஷமா காத்துக்கிட்டிருந்தேன் டா. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. நீ எப்படியும் என்கிட்ட வந்துடுவேன்னு. ஐ லவ் யூடா.” என்று அணைத்திருந்த அவனது கையை இழுத்து முத்தமிட்டாள்.
“என் மனசுல ஒரு லட்சியம் இருந்துச்சு அஞ்சலி. அதை அடையாம உன்னைப் பார்க்கக்கூடாதுன்னு இருந்தேன். அதுக்கே ஒரு வருஷம் ஆய்டுச்சு. ஆனா, உன்னை எப்பவும் நினைச்சுக்கிட்டே தான் இருப்பேன். ஏதாவது ஒரு நேரம் ரொம்ப சோகமா இருந்தா, எனக்கு ஒரே ஆறுதல் தர உன்னோட பேச்சை அப்பப்போ நினைச்சுக்குவேன். அதோட, உன் போட்டோவப் பார்த்து மனசத் தேத்திக்குவேன்.” என்றான், அவள் கழுத்தில் முத்தமிட்டபடி.
அதை ரசித்தவள், “அப்படி என்ன பெரிய லட்சியம் உனக்கு? பெரிய ரஜினி ஸ்டைல்ல வசனம் பேசிட்டிருக்க.” என்றாள்.
“எல்லாமே உனக்காகத்தான் அஞ்சலி. உங்கப்பா சொன்ன ஒரு வார்த்தைல வந்த வெறி.” என்றான்.
அவன் அதைச் சொன்னதும் அதிர்ச்சியானவள், அவனது அணைப்பிலிருந்து விடுபட்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
“என்ன சொல்ற தேவ்? நீ எங்கப்பாகிட்ட பேசினியா?” என்றாள். அதைக் கேட்டு புன்னகைத்தவன், அன்று நடந்ததை விளக்கினான்.
அன்று, அஞ்சலியிடம் தனது காதலைத் தெரிவித்த சந்தோஷத்தில் தேவ் வீடு வந்து சேரும் போது, அங்கே விஸ்வநாதன் முகம் இறுகியபடி நின்றுகொண்டிருக்க, அவர்களது வீட்டிலிருக்கும் ஷோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி ராமச்சந்திரன் அமர்ந்துகொண்டு அவரைக் கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தார்.
அதைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தவனைப் பார்த்து சட்டென்று எழுந்தவர் விஸ்வநாதனிடம் வந்து, “பையன் வந்துட்டான். நான் சொன்னதெல்லாம் நினைவிருக்குல்ல? பேசிப் புரியவை.” என்று அவரது தோள்களைத் தொட்டு கிட்டத்தட்ட மிரட்டிவிட்டுச் சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
செல்லும் போது, அவனை முறைத்துக்கொண்டே தான் சென்றார். அவர் சென்றதுமே, விஸ்வநாதன் அருகில் வந்து என்னவென்று கேட்டான் தேவ்.
“நீ அஞ்சலியோட இனிமேல் பழகவோ, பேசவோ கூடாதாம். முடிஞ்சா இந்த ஊர்லயே இருக்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போறான்.” என்று அவர் விரக்தியில் சொன்னதும், தேவ்வின் முகம் சுருங்கியது.
“அவ கூட பேசவோ, பழகவோ கூடாதுன்னு சொல்றதுக்கு அவருக்கு உரிமை இருக்குப்பா. நான் அதை தப்புன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, அவ அவரோட பொண்ணு. ஆனா, இந்த ஊர்லயே இருக்க வேண்டாம்னு சொல்றதுக்கு அவருக்கு எந்த உரிமையும் இல்ல.” என்று எரிச்சலாக சொன்னவன் காதுகள் சிவந்திருந்தது.
“இதுக்கே கோபப்பட்டா எப்படி தேவ்? நாம இருக்க நிலைமை அப்படி. இதுவே, ஷேர்மார்க்கெட் நல்லா இருந்தா நாமளும் அவன விடவே இந்நேரம் நல்ல நிலைல இருந்திருப்போம். என்ன இருந்தாலும் அவனோட ஸ்டேட்டஸ் வேற, நம்ம ஸ்டேட்டஸ் வேற தானடா?” என்று சொன்னவர் வார்த்தையில் வலி தெரிந்தது.
“என்னப்பா பெரிய ஸ்டேட்டஸ்? பணம் இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்களா? எப்பவுமே குணம் தான் ப்பா முக்கியம். அவர் பொண்ண, நல்ல வசதியான குடும்பத்துல கட்டிக்கொடுத்தா தான் அவ சந்தோஷமா இருப்பான்னு அவர் தப்புக்கணக்கு போட்டுட்டார். ஆனா, அவ மனசப் புரிஞ்சுக்கிட்டு அவ கூட எல்லாத்தையும் ஷேர் பண்றவனோட தான் அவ சந்தோஷமா இருப்பான்னு அவருக்குத் தெரியல. அந்த வகைல நான் அவள ரொம்ப நல்லாப் பார்த்துக்குவேன் ப்பா.” என்று சொல்ல,
விஸ்வநாதன் அவனைப் புரியாது பார்க்க, “நானும், அஞ்சலியும் லவ் பண்றோம் ப்பா. அது தெரிஞ்சு தான் அவர் உன்கிட்ட பேச வந்திருக்காரு.” என்றான் தேவ்.
“நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மை டா தேவ். ஆனா, வெறும் வாய்ச்சொல் மட்டும் நம்மளக் காப்பாத்திடாது. நீ நிறைய உழைக்கணும், நிறைய விஷயம் கத்துக்கணும். எதிர்காலத்துல அவள எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாம இருக்கற மாதிரி நீ சம்பாதிச்சிட்டு, அப்பறமா உன் வாழ்க்கையத் தொடங்கு. அதுவும் அவன் முன்னாடி நீ ஒரு நல்ல நிலைல இருக்கணும்.” என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார் விஸ்வநாதன்.
அதற்குள், ராமச்சந்திரன் போன் செய்து தேவ்வை தனியாக சந்திக்க வரச் சொன்னார். அவனும் தைரியமாகவே சென்றான். இரவு நேரம், ஓரிடத்தில் தனியாகத் தனது வண்டியை நிறுத்திவிட்டு மர நிழலில் நின்றவரிடம் சென்றான்.
அவனைப் பார்த்ததும் ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு, “நான் இன்னைக்கு பார்க்ல உன்னையும், அஞ்சலியையும் பார்த்தேன். ரொம்ப சின்சியரான லவ்வோ?” என்று கடுமையாகக் கேட்டார்.
“சின்ன வயசுல இருந்து பழகறோம் அங்கிள். இவ்ளோ வருஷமா ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். ஆனா, இப்போ அது லவ்வா மாறிடுச்சு.” என்றான் அவனும் தயங்காமல்.
“அவள லவ் பண்றேன்னு என்கிட்டயே எவ்ளோ தைரியமா சொல்ற?” என்றார் அவனை முறைத்தவாறு.
“ஏன் அங்கிள், இவங்க இவங்கதான் லவ் பண்ணனும்னு ஏதாவது சட்டம் இருக்கா? எங்க ரெண்டு பேரோட மனசு ஒத்துப்போனதால லவ் பண்றோம். இதுல என்ன தப்பிருக்கு?” என்றான்.
“ஹூம்ம்.. தம்பி, வெறும் மனச வச்சிட்டு இந்த உலகத்துல ஒன்னும் பண்ண முடியாது. பணம் வேணும். எல்லாத்துக்குமே பணம் வேணும். அது இருக்கா உன்கிட்ட? ஐ மீன் உன் அப்பன்கிட்ட?” என்று அவர் அவனிடம் தீவிரமாய்க் கேட்க, அவனுக்கு சற்று எரிச்சலானது.
“ஓ! உங்க பொண்ண ஒரு பணக்காரப் பையனாப் பார்த்து கட்டிவைக்க நினைக்கறீங்க. எங்ககிட்ட அந்தப் பணம் இல்ல. அதுதான உங்க பிரச்சினை? சரி, அப்படியே ஒரு பணக்கார வீட்டுக்கு உங்க பொண்ண கட்டிவைச்சாலும், அவ சந்தோஷமா இருப்பாளான்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்தீங்களா?” என்றான்.
“பணம் இருந்தா போதும் பா, ஆட்டோமேட்டிக்கா சந்தோஷம் தேடி வந்திடும். அவளுக்கு நினைச்சதெல்லாம் கிடைக்கும். அப்பறம் என்ன கவலை? அவ உன்னையே மறந்துட்டு நான் பார்த்த பையனோட சந்தோஷமா இருப்பா.” என்று வாய் கூசாமல் பேசியவரைப் பார்த்து ஒரு அடி அடிக்கலாம் என்றே தோன்றியது அவனுக்கு.
வந்த கோபத்தை அடக்கிக்கொண்டவன், “சரி நீங்க சொல்ற பணத்தை நான் சம்பாதிச்சுட்டு வந்து நின்னா, உங்க பொண்ண எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா?” என்றான்.
“நீ சும்மா, வாய்லயே வடை சுடாத தம்பி. நிதர்சனம்னு ஒன்னு இருக்கு. இது ஒன்னும் சினிமா இல்ல. ஒரே பாட்டுல பணக்காரன் ஆகறதுக்கு. அதுக்காக எவ்வளவு வருஷம் பாடுபடணும்னு எனக்குத் தெரியும். அதே சமயம் எங்கள மாதிரி பரம்பரைப் பணக்காரங்களுக்கு மட்டுமே அது சாத்தியம். நீ சும்மா இந்த டயலாக்கெல்லாம் பேசாத.” என்றார்.
“அதையும் தான் பார்க்கலாம் அங்கிள். உங்கள விடவே அதிகமா சம்பாதிச்சிட்டு, என் அஞ்சலி ஆசைப்பட்ட மாதிரி அவள கல்யாணம் பண்ணிக்கிட்டு அவள சந்தோஷமா கூட்டிட்டுப் போவேன். அதுவும் உங்க முழு சம்மதத்தோடவும், ஆசீர்வாதத்தோடவும் தான் எங்க கல்யாணம் நடக்கும். நீங்க வேணும்னா பாருங்க, இது கண்டிப்பா நடக்கத்தான் போகுது.” என்று சபதமிட்டான் அவரிடம்.
அவரோ அது எப்படியும் நடக்கப் போவது இல்லை என்றே கர்வமாய்ப் பார்த்தார் அவனை. ஆனாலும், இப்போதைக்கு இவன் அவள் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்வதே நல்லது என்று நினைத்தவர்,
“ஆனா, அதுவரைக்கும் நீ என்னோட பொண்ணு கண்ணுல படக்கூடாது. நீயும், உங்கப்பனும் வேற எங்கயாவது போய்டுங்க.” என்றார்.
“சார், நாங்க மட்டும் இல்ல. நீங்களும் இங்க பிழைப்பு தேடித்தான் வந்திருக்கீங்க. இந்த ஊரு நம்ம யாருக்குமே சொந்தமில்ல. நாங்க எங்க போய் இருக்கணுமோ அங்க இருந்துக்கறோம். நீங்க எதையும் தீர்மானிக்க வேண்டாம். என்னோட அஞ்சலி எனக்காகக் காத்திருப்பான்னு நம்பிக்கையோட போறேன். காலம் வரும்போது நீங்க பண்ணினது எல்லாமே தப்புன்னு தெரிஞ்சுக்குவீங்க.” என்று தீர்க்கமாய்ப் பேசினான்.
அவரோ, அதை சட்டை செய்யாமல் கிளம்பிவிட்டார். அதன் பிறகு, சோக முகமாய் வீடு வந்து சேர்ந்தவனை விஸ்வநாதன் என்னவென்று கேட்க,
“ஆமாம் ப்பா. நீங்க சொல்றதுதான் சரி. அவர் நினைக்கறதுல எந்தத் தப்பும் இல்ல. அவரோட பொண்ண ஒரு வசதியானவனுக்கு கட்டி வைக்கணும்னு நினைக்கறார் அவ்ளோதான். நான் சம்பாதிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததுக்கப்பறம் தான் அவளப் பார்ப்பேன். அவ கண்டிப்பா என்னைப் புரிஞ்சுக்கிட்டு எனக்காகக் காத்திருப்பா ப்பா. நாம வேற பக்கம் போய்டலாம்.” என்று அவரிடம் அனைத்தையும் சொன்னான்.
அதன் பிறகு அவர்கள் இருவரும் அங்கே இருந்து வேறு இடம் குடி பெயர்ந்தனர். வேறு ஊரில் விஸ்வநாதனுக்குப் பழக்கமானவர் வீட்டில் வாடகைக்குச் சென்று குடியிருந்தனர்.
ராமச்சந்திரன் சொன்ன வார்த்தைகள் என்றுமே நினைவில் இருக்க, தேவ் அதன் பிறகு ஓயவில்லை. ஷேர் மார்க்கெட்டின் அடி முதல் நுனி வரை ஆராய்ந்து அதன் வளைவு, நெளிவுகளைத் தன் அப்பாவின் மூலம் தெரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தினான்.
எதை எப்போது வாங்க வேண்டும், எங்கே விற்க வேண்டும் என்ற மொத்த வித்தையையும் கற்றுத் தேர்ந்தவன், அதில் பெரும் வெற்றிகண்டான். தன்னால் இத்தனை வருடம் முடியாத ஒன்றை, தன் மகன் ஒரே வருடத்தில் செய்துவிட்டதில் அத்தனை ஆனந்தம் விஸ்வநாதனுக்கு.
சொன்னதைப் போலவே தனது லட்சியத்தை அடைந்துவிட்டுத்தான் அஞ்சலியின் முன்னே வந்து நின்றான் தேவ். அவன் சொன்னதைக் கேட்டு, அஞ்சலியால் அழாமல் இருக்க முடியவே இல்லை. அருவியாய் வந்த கண்ணீரை அவன் மார்பில் புகுந்து கொட்டினாள்.
“எனக்காக நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருக்க தேவ்? எங்கப்பா ஏதோ பண்ணியிருக்கார்ன்னு மட்டும் தாண்டா நினைச்சேன். ஆனா, உன்ன ஒட்டுமொத்தமா என்கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைச்சிருக்கார். அது இப்போதான் எனக்கு நல்லாப் புரியுது. அவருக்கு நீ எதுவும் பண்ணிடமாட்டேன்னு ரொம்ப தைரியம். ஆனா, நீ சாதிச்சிட்ட தேவ். என்னையும் கைவிடல.” என்றவள் அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.
“ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் அஞ்சலி. நான் ஒருவேளை எதுவும் சம்பாதிக்காம, அப்போ இருந்த மாதிரியே ஒரு சாதாரணமானவனாவே இருந்திருந்தா என்ன பண்ணியிருப்ப?” என்றான்.
“தேவ்… நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை லவ் பண்ணியிருப்பேன் டா. நான் பழகினது சாதாரணமா என்னை ரொம்ப அன்பா, பாசமா பார்த்துக்கிட்ட தேவ் கிட்ட தான? எனக்கு அவனைத்தான் ரொம்பப் பிடிக்கும். எங்கப்பா சொன்னதால இப்போ நீ ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கலாம். ஆனா, இந்த ஒரு வருஷத்துல நான் எந்தளவுக்கு உன்னை மிஸ் பண்ணேன்னு உனக்குத் தெரியாது டா. நீ ஏழையா, பணக்காரனான்னு பார்க்கறது இல்லடா என் மனசு. நீ என்கிட்ட காட்டின அன்புக்கு தான் நான் அடிமை. அப்படியிருக்கும் போது, உனக்கு ஏன்டா இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கு?” என்றவளைப் பிடித்து அணைத்துக்கொண்டான் தேவ்.
“அது எனக்குத் தெரியும் அஞ்சலி. சும்மா உன்னை வம்புக்கு இழுக்கணும்னுதான் கேட்டேன்.” என்றவனைப் பார்த்து முறைத்தவள்,
“உன்ன….” என்று அவனை அடிக்கப்போக, அவள் கைகளைச் செல்லமாய்ப் பிடித்துக்கொண்டான் தேவ்.
வருடங்கள் கழிந்தாலும் உண்மையான காதலர்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தனர் இருவரும்.
(தொடரும்...)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
மாலை வெளியே செல்ல வேண்டும், அதுவும் தான் கண்டிப்பாக அவனுடன் வந்தாக வேண்டும் என்று கட்டளையாகச் சொன்னானே, என்னவாக இருக்கும் என்று வேலையின் நடுவில் அதைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள் பிரார்த்தனா.
ஏற்கனவே செல்வாவைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை. இதற்கிடையில், இவனும் வந்து எங்கோ செல்ல வேண்டும் என்று கட்டளையிட, வேறு வழி தெரியாமல் தலையாட்டி வைத்ததையும் நினைத்துக்கொண்டிருந்தாள்.
சட்டென்று, அவளது மேசையைத் தட்டும் ஓசையில் நொடி பயந்துதான் போனாள். அபிஷேக் தான் அவளின் சிந்தனையை திசை திருப்ப அவள் முன் தட்டினான்.
அதைப் பார்த்து விழித்தவளிடம், “நீ என்ன அப்போ இருந்து ரொம்ப யோசனைலயே இருக்க? கேட்டாலும் சொல்லமாட்டிங்கற.” என்றான்.
“சார்… அதுவந்து… ஒன்னும் இல்ல…” என்று மீண்டும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டாள்.
அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவன், “சரி, கிளம்பலாமா?” என்றான்.
“சார், எங்க போறோம்?” என்றாள்.
“ரொம்ப அவசியமா தெரிஞ்சுக்கணும்னா, உடனே கிளம்பி வா. அல்ரெடி லேட் ஆயிடுச்சு.” என்றான்.
எப்படியும், இவன் இப்போதைக்கு சொல்லப் போவதில்லை என்று தெரிந்தவள், அவனுடன் கிளம்பினாள். காலை வந்ததைப் போலவே முன்னிருக்கையில் அவனோடு எங்கே என்று தெரியாமலே பயணமானாள்.
கார் பலவித வாகன நெருக்கடியைத் தாண்டி, கோவை – பாலக்காடு சாலையில் பயணமானது. அதைப் பார்த்தவள், “சார், இப்போவாவது சொல்லுங்க. நாம எங்க போறோம்?” என்றாள்.
அதற்குள், சீதா அவனுக்கு அலைபேசியில் அழைத்துவிட்டார். அதை ஏற்றவன், “சொல்லு மா.” என்றான்.
“எங்க இருக்க அபி? இன்னும் ஆளையே காணோம்ன்னு தான் போன் பண்ணேன். இந்த அஞ்சலியையும் இன்னும் காணோம்?” என்றார்.
“அது எங்களுக்குத் தெரிஞ்ச ஃப்ரெண்டோட மேரேஜ் பார்ட்டி மா. எங்களையெல்லாம் இன்வைட் பண்ணிருக்கான். அதான் பாலக்காடு போய்ட்டிருக்கேன். வரதுக்கு, எப்படியும் மிட்-நைட் கூட ஆகும். நீ பார்த்து பத்திரமா கதவத் தாழ்ப்பாள் போட்டுட்டு படு. நான் வந்ததும் கூப்பிடறேன். அப்பறம், பிரார்த்தனாவும் எங்ககூட தான் இருக்கா.” என்று தகவலை மட்டும் சொன்னவன் அப்படியே அலைபேசியை துண்டித்தான்.
அவன் மிட்-நைட் என்று சொன்னதும் திக்கென்று இருக்க, அவனை பயத்தோடு பார்த்தவளிடம், “இப்போ நீ கேட்டதுக்கு ஆன்ஸர் கிடைச்சிருச்சா?” என்றான்.
அவளால் வேறு என்ன பேச முடியும்? அவன் சொன்னதற்குக் கூட எதுவும் பேச முடியாமல் அமைதியாகவே வந்தாள். சரியாக, மாலை 6.30 மணி எனும் போது, அந்த ரெசார்ட்டினுள் நுழைந்தான்.
அங்கே அவன் சொன்னதைப் போல், பல அலங்காரங்களோடு திருமண விழாவுக்கான நிகழ்ச்சி ஒன்று அரங்கேறிக்கொண்டிருந்தது. அதில், அனைவரும் கலந்துகொண்டு உற்சாகத்தில் திளைத்திருந்தனர். அபிஷேக் யாருடனோ சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்தான்.
அதுவரை வெறும் பார்வையாளராக, ஓரிடத்தில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அவன் வந்ததும், அவனைப் பார்த்ததும் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
அவனோ, அவளுக்கு மிக அருகில் வந்து அமர்ந்துகொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“அனா.. நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிற?” என்றான் பட்டென.
திடீரென்று அவன் கேட்ட இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை. ஆனால் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்.
“சார்.. ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்விய என்கிட்ட கேட்கறீங்க?” என்றாள்.
இவன் விடமாட்டான் போலிருக்கிறது என்று நினைத்தவள், “சார், நான் பார்த்தவரைக்கும், நீங்க ஒரு முன்கோபி, எதையும் யோசிக்காம பேசறது, அடாவடியா நடந்துக்கறவர்.” என்று இன்னும் அவனுடைய எதிர்மறையான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அதைக் கேட்டவன், “இதுவரைக்கும் என்னைப் பத்தி இப்படித்தான் நெகட்டிவ்வா நினைச்சிருந்தியா?” என்று கேட்டவனின் பாவமான பார்வையைப் பார்த்தவள் சிரித்துவிட்டு,
“இதெல்லாம் எதுவரைக்கும் தெரியுமா சார்? நீங்க உங்கப்பாவுக்காக ஒரு விஷயம் பண்ணீங்க பாருங்க, அதை நான் கேள்விப்படறவரைக்கும் தான். அப்போவே உங்களுடைய நெகட்டிவ்வான விஷயங்கள் எல்லாமே என்னோட மனச விட்டு மறைஞ்சு போயிடுச்சு. சீதா ஆண்ட்டியும், அஞ்சலி மேமும் சொல்லித்தான் எனக்கு எல்லா விஷயமுமே தெரிஞ்சது. உங்க அப்பா மேல இருந்த வீண்பழிய துடைச்சு எறிஞ்சீங்களே! அங்கயே நீங்க ஒரு நல்ல மகனா ஜெயிச்சிட்டீங்க சார். பெத்தவங்களுக்கு ஒன்னுன்னா நாம அவங்களுக்காக இருந்து போராடுற ஒவ்வொரு விஷயமும் ரொம்ப உயர்வானது சார். அதுதான், இந்த உலகத்துலயே ரொம்பப் பெரிய விஷயம். அந்த விஷயத்துல நீங்க க்ரேட் சார். அப்போவே நீங்க என் மனசுல உயர்ந்துட்டீங்க.” என்று அவள் பெருமையாக அவனைப் பற்றிச் சொன்னதும் தான் அபிஷேக் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
அப்போது, “அபி…” என்ற பழக்கப்பட்ட குரல் ஒன்று பின்னால் கேட்க, திரும்பிப் பார்த்தனர் இருவரும்.
அங்கே அஞ்சலி அவர்கள் இருவரையும் மாறி, மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தான் தேவ்.
“நீ எங்கடா இங்க? அதுவும் பிரார்த்தனாவையும் கூட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்டபடியே அவர்களுக்கு அருகே வந்தாள்.
“அது.. அது…” என்று தயங்கினான் அபிஷேக்.
“அஞ்சலி.. நான் தான் அபிகிட்ட இங்க வரதா தகவல் சொல்லியிருந்தேன். அதான் இங்கயே நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்துட்டார் போலிருக்கு.” என்றான் தேவ்.
அதைக் கேட்டு, “என்ன? உனக்கு எப்படி அபியத் தெரியும்?” என்று விரலை நீட்டி அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
“நீ இங்க வந்து என்னைப் பத்தி அவர்கிட்ட சொன்னதுமே, அபிஷேக் என்னை சோசியல் நெட்வொர்க் மூலமா தெரிஞ்சுகிட்டு காண்டாக்ட் பண்ணாரு. உன்னைப் பத்தி அவர் சொன்னதும் தான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. அதுக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் இந்த ஒரு வருஷமா நல்ல ஃப்ரெண்ட்ஸா ஆனோம். அதே மாதிரி அப்பப்போ, உனக்குத் தெரியாம பேசிட்டுத்தான் இருந்தோம்.” என்று சொல்லிக்கொண்டே போனான் தேவ் சாதரணமாக.
தேவ் சொன்னதும், தான் ஏதும் சொல்லாமல் இருந்தால் வம்பாகிவிடும் என்று நினைத்த அபிஷேக்,
“ஆமா அஞ்சலி. தேவ் அப்பப்போ உன்னைப் பத்திக் கேட்டுட்டு தான் இருப்பார். நானும், எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன். இல்லைன்னா சாருக்கு வொர்க்கே ஓடாதுன்னு சொல்லுவார். உன்னால நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம்.” என்றான் அபிஷேக் தன் பங்கிற்கு.
அதைக் கேட்ட அஞ்சலியின் விழிகள் பெரிதாக, “பாவிகளா! எனக்கே தெரியாம ரெண்டு பேரும் காண்டாக்ட் பண்ணிப் பேசியிருக்கீங்க. எனக்கு ஒரு வார்த்தை சொல்லல. என்னைப் பைத்தியக்காரின்னு நினைச்சிட்டீங்களா? ஃப்ராடு பசங்களா?” என்று கோபத்தில் அவர்கள் இருவரையும் மாறி, மாறி துரத்தி அடிக்க ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்து விழுந்து, விழுந்து ஓரிடத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. அவள் வாழ்வில் இதுபோல் ஒரு நாளும் எதை நினைத்தும், பார்த்தும் சிரித்ததே இல்லை அவள்.
சிறிது நேரம் இதே தொடர்ந்துகொண்டிருக்க, அங்கே இருப்பவர்கள் அனைவரும் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், அவர்கள் மூவருமே அதை சட்டை செய்யவில்லை. அவர்கள் இருவரும் சளைக்காமல் ஓடியபடி இருக்க, ஒரு கட்டத்துக்கு மேல் அஞ்சலி முடியாமல் பிரார்த்தனாவுக்கு அருகே வந்து மூச்சு வாங்க அமர்ந்தாள்.
“மேம், நான் உங்கள இப்படி ஓடி, விளையாடி பார்த்ததே இல்ல. நல்ல எண்டர்டெய்ன்மெண்ட்.” என்று பிரார்த்தனா கேலி செய்தாள்.
“ஏய்.. அவங்க ரெண்டு பேரும் என்னை ஒரு வருஷமா ஏமாத்தியிருக்காங்க. அந்தக் கோபத்துல துரத்தி அடிச்சா, உனக்கு அது எண்டர்டெய்ன்மெண்ட்டா?” என்றாள் அஞ்சலி இன்னும் மூச்சு வாங்க.
“நான் மட்டும் இல்ல மேம். ஹோல் ரெசார்ட்டே உங்க மூணு பேரையும் தான் பார்த்துட்டிருந்துச்சு. சில பேர் வீடியோ கூட எடுத்ததப் பார்த்தேன்.” என்றாள்.
“அடப்பாவிகளா! கடைசில என்னை கோமாளி ஆக்கிட்டீங்களே டா?” என்று அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை கோபத்தோடு எடுத்துக் குடித்தாள்.
சாமி மலையேறிவிட்டதா? என்பதைப் போல் பார்த்துப் பார்த்து பயந்தபடியே அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தனர் அபிஷேக்கும், தேவ்வும்.
அவர்களைப் பார்த்ததும், தன் கண்காளாலேயே எரித்துவிடுவதைப் போல் பார்த்துவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அஞ்சலி.
“ஹே.. சாரி அஞ்சலி. ப்ளீஸ் நான் எதையும் வேணும்னு பண்ணல. என்னோட நிலைமை அப்படி. உன்னை எந்த விதத்துலயும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ஒரு சபதம் மனசுக்குள்ள. ஆனாலும், உன்னை நினைக்காம இருக்க முடியல. அப்போதான் என்னை அபி காண்டாக்ட் பண்ணிப் பேசினார். நீ இங்க இருக்கேன்னு அப்போதான் எனக்குத் தெரிஞ்சது. அதுக்கப்பறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு. என்னாலயும் என்னோட வொர்க்ல கான்சண்ட்ரேட் பண்ண முடிஞ்சது.” என்றான் தேவ்.
அதைக் கேட்டு, “உனக்குத் தெரியும் தான தேவ், என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு. அட்லீஸ்ட் பேசவாது ஒரு சான்ஸ் இருந்துச்சே டா. அதையும் ஏண்டா வேண்டாம்னு சொல்லிட்ட? அப்படியாவது உன்கிட்ட பேசிட்டு இருந்திருப்பேனே?” என்றாள், அவன் தோளில் சாய்ந்துகொண்டு.
“இல்ல அஞ்சலி, அப்படி நீ பேசியிருந்தா, உடனே உன்னைப் பார்க்கணும்னு எனக்குத் தோண ஆரம்பிச்சிடும். என்னால எப்படி என்னோட வொர்க்ல கான்சண்ட்ரேட் பண்ணிருக்க முடியும்? இந்தளவு எப்படி ஒரு சக்சஸ்ஃபுல் ஆளா வளர்ந்திருக்க முடியும் சொல்லு? அதனால தான் அபி கேட்டப்போ கூட எதையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். பொறுமையா சொல்லிக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள உன்கிட்ட வசமா மாட்டிக்கிட்டோம்.” என்று உதட்டைக் கடித்து சிரித்தான் தேவ்.
ஆஹா! எத்தனை ஒரு குழந்தைத்தனமான வசீகரச் சிரிப்பு அவனுடையது? அதில் தான் அஞ்சலி விழுந்திருக்க வேண்டும். அதே போல், இருவருடைய ஜோடிப்பொருத்தமும் நன்றாகவே இருந்தது. இப்படியே இருவரும் வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் பிரார்த்தனா.
இவள் இங்கே அவர்களை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருக்க, தன்னை ஒருவன் நீண்ட நேரமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல் இருந்தாள் பிரார்த்தனா.
அதன் பிறகு, அவளை எப்படியோ அதையும், இதையும் பேசி வழிக்குக் கொண்டுவந்தார்கள் தேவ்வும், அபிஷேக்கும்.
அதன் பிறகு அஞ்சலி, தேவ்வை பிரார்த்தனாவுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். அவர்களும் நன்றாகப் பேசிக்கொண்டனர். இரவு அங்கேயே உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர்.
செல்வதற்கு முன் தனது நண்பர்கள் பட்டாளத்தையும் பார்த்து, அவர்களிடம் விடைபெற்று வந்தான் அபிஷேக். அதன் பிறகு, அவர்கள் இருவரும் ஜோடியாக காரில் பயணம் செய்ய, இந்த ஜோடியோ அதைக் கண்குளிரப் பார்த்துக்கொண்டு வந்தது.
ஜோடி என்றால், அபிஷேக்கைப் பொறுத்தமட்டில் இருவரும் அப்படித்தான் என்று நினைத்தான். ஆனால், பிரார்த்தனாவோ சாதாரணமாகத்தான் வந்தாள்.
தேவ் அவர்களுடனேயே பயணித்து கோவை வந்ததும், அஞ்சலியை அவர்களுடன் அனுப்பிவிட்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்துவிட்டான்.
பிறகு, மூவரும் எப்பொழுதும் போல வீடு வந்து சேர்ந்தனர். சீதா வந்து கதவைத் திறந்ததும், களைப்பில் எதையும் கேட்காமல் சென்று படுத்துவிட்டார்.
அவர் எதையும் கேட்காமல் இருந்ததே சந்தோஷம் என்று நினைத்த மூவரும், அவரவர் அறைக்குத் திரும்பினர். அறைக்குத் திரும்பும்போது அபிஷேக் பிரார்த்தனாவைப் பார்த்துக்கொண்டே தான் சென்றான்.
தன்னையும் அறியாமல் இவள் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு தொடர்ச்சியாகத் தனக்கு ஏற்படுவதை, அன்றாடம் உணர்ந்திருந்தான் அபிஷேக். இன்று அவளுடன் பயணித்த போது தான் கொண்ட அளப்பறியா சந்தோஷத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்றுகூட அவனுக்குப் புரியவில்லை.
நாளுக்கு நாள் அவள் புதிதாகத் தெரிகிறாள். அவளுடைய பேச்சு, பாவனை, கள்ளம் கபடமில்லா உள்ளம் என்று அவளைச் சுற்றியே தனது மனம் அலைபாய்வதை உணர்ந்தான் அபிஷேக்.
ஒரு வேளை இதற்குப் பெயர் தான் காதலோ???
(தொடரும்…)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
அபிஷேக்கின் மனம் பிரார்த்தனாவை நினைப்பதைப் போலவே, பிரார்த்தனாவும், அபிஷேக்கை நினைத்துக்கொண்டிருந்தாள். அவனது நல்ல குணங்களை சில தினங்களாகக் கேள்விப்பட்டதை வைத்தும், அவன் தன்னிடம் நடந்துகொள்ளும் விதத்தை வைத்தும் தெரிந்துகொண்டாள்.
ஒரு முதலாளி என்பதைத் தாண்டி, அவன் அவ்வப்போது பார்க்கும் அர்த்தமற்ற பார்வைகளும், தன்னை உரிமையுடன் செல்லப் பெயர் வைத்து அழைக்கும் விதம் என, அனைத்தையும் உணர்ந்திருந்தாள்.
அவனைத் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி, அதற்குத் தான் தகுதியானவளா? என்றொரு கேள்வி தான் சில சமயம் அவள் முன்னே வந்து நிற்கும். அதைப் பற்றிய சிந்தனையில் கவனம் செலுத்தாமல், தான் உண்டு தனது வேலை உண்டு என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அடுத்த நாள் எப்பொழுதும் போல உற்சாகமாக விடிய, தினமும் பிரார்த்தனாவுடன் இருக்கும் பொழுதை எண்ணியபடியே அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானான் அபிஷேக்.
அவன் தயாராகிக் கீழே வந்தபோது, அஞ்சலி மட்டும்தான் இருந்தாள். பிரார்த்தனாவைக் காணவில்லை. அவனது கண்கள் அவளை வீடு முழுவதும் தேட, கேள்வியுடனேயே வந்து நின்றவனைப் பார்த்து புருவம் உயர்த்தி, கை கட்டிப் பார்த்தாள் அஞ்சலி.
“என்ன சார், எதையோ தேடற மாதிரி இருக்கு.” என்றவள் தனது மனதைப் படித்துவிட்டாள் என்று அறிந்தவன், தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.
“ஓ! நீ ஆண்ட்டிய தான் தேடறேன்னு நான் நம்பிட்டேன். அவங்க இன்னும் கிட்சன்ல இருந்து வரவேயில்ல.” என்றாள்.
அதைக் கேட்டவன், “அம்மா… டிஃபன் எடுத்துவைக்கல? சீக்கிரம் கொண்டு வா.” என்றதும், சமைலறையில் இருந்து வெளிப்பட்டார் சீதாலட்சுமி.
“டேய்.. இருடா வந்துட்டேன். எப்பவும் சுடுதண்ணிய கால்ல ஊத்துற மாதிரியே வா. உட்காரு, எடுத்து வைக்கறேன்.” என்றார்.
அதைக் கேட்டு இருவரும் அமர, இருவருக்கும் காலை உணவைப் பறிமாறினார் சீதா. இப்போதும், அபிஷேக்கின் மனது பிரார்த்தனா ஏன் இன்னும் கீழே வரவில்லை என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க, அதை எப்படி இவர்களிடம் கேட்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.
ஒரு வழியாக தனது மனதில் உதித்த எண்ணத்தை வைத்து அதைச் செயல்படுத்த நினைத்தான்.
“அது அபி.. நான் கொஞ்சம் நிறுத்தி, நிதானமா தான் சாப்பிடுவேன். உனக்கு டைம் ஆகும். நான் ஆஃபீஸ் கேப்லயே வரேன். நீ போ.” என்றாள் வேண்டுமென்றே.
“பரவாயில்ல. நான் வெய்ட் பண்றேன். நீ வா.” என்றான் அவனும் விடாமல்.
“அஞ்சலி மட்டும் தாண்டா இருக்கா. பிரார்த்தனா முன்னாடியே ஆஃபீஸ்க்கு கிளம்பிப் போய்ட்டா. டிஃபன் கூட சாப்பிடல. நான் தான் வெறும் வயிறா போறாளேன்னு, பால் ஆத்தி குடுத்தேன்.” என்ற தனது அம்மாவின் அக்கறையை எண்ணி அவரை மனதில் மெச்சிக்கொண்டான்.
“அஞ்சலி, நான் கிளம்பறேன். நீ ஆஃபீஸ் கேப்லயே வந்துடு.” என்றவன் நிற்காமல் கை கழுவிக்கொண்டு கிளம்ப,
“ஏய்… அபி… இரு… இரு… நானும் வரேன்.” என்று அவசரமாய் தோசையை விழுங்கியவள், கை கழுவிக்கொண்டு அவன் பின்னாலேயே ஓடினாள்.
அதைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்ட சீதா, “இவங்க ரெண்டு பேரும் எப்போ தான் திருந்துவாங்களோ?” என்றபடி அவர்களது தட்டுக்களை எடுத்துக்கொண்டு சென்றார்.
அஞ்சலி ஓடி வருவதற்கும், அபிஷேக் காரை எடுப்பதற்கும் சரியாக இருந்தது.
“ஏய்… என்ன மேன் நீ ஓவரா பண்ற? நான் தான் வரேன்னு சொன்னேன் இல்ல? யார் மேலயே இருக்கற டென்ஷன என் மேல காட்டுறதே உனக்கு வேலையாப் போச்சு.” என்றவளைப் பார்த்து முறைத்தவன், எதுவும் பேசாமல் கிளப்பினான்.
“அபி… ஏன் எது சொன்னாலும் டென்ஷனாகற? பிரார்த்தனா தான் சொல்லியிருக்காளே, டென்ஷனானா உடம்புக்கு ஆகாதுன்னு.” என்று அவளை இழுத்துப் பேச, மீண்டும் முறைத்தான் அபிஷேக்.
“சரி, சரி… நான் எதுவும் பேசல.” என்றபடி அமைதியாக இருந்தாள்.
“இல்ல. தேவ் இன்னைக்கு வொர்க் விஷயமா பெங்களூரு போறான். எப்படியும் இந்த வீக் ஃபுல்லா வொர்க் இருக்குமாம். சோ, வீக் எண்ட் தான் வரதா சொன்னான். அதனால, ஒரு ஃபைவ் டேஸ் வெய்ட் பண்ணனும், அவன மறுபடியும் பார்க்கறதுக்கு.” என்றவளது வார்த்தைகளில் தெரிந்த ஏக்கத்தைப் புரிந்துகொண்டான்.
“நல்லவேளை தொல்லையிலிருந்து ஒரு வாரம் தப்பிச்சார். நான் தான் மாட்டிக்கிட்டேன்.” என்று அவளை வம்பிழுத்தான்.
“ஓ! அப்போ இத்தனை நாளா நான் உனக்குத் தொல்லையா தான் இருக்கேனா?” என்று சண்டையிடத் தயாராக இருந்தவளிடம் சிரிப்பைக் காட்டித் தப்பித்தான் அபிஷேக்.
அவன் கேலியாகச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, கம்பெனிக்குள் நுழைந்ததும் கீழே இறங்கி முன்னே சென்றுவிட்டாள் அஞ்சலி. அவளது சிறுபிள்ளைத்தனத்தை ரசித்தவனாக சிரித்துக்கொண்டே வண்டியை அதனது இடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றவன் கண்ணில் அது தெரிந்தது.
அதைப் பார்த்துக்கொண்டே சென்றவனுக்கு ஒருபக்கம் அது நம்பமுடியாததாகத் தெரிந்தாலும், மற்றொரு பக்கம் அது என்னவாக இருக்கும்? என்று தெரிந்துகொள்ளும் ஆவல் உதித்தது.
எப்பொழுதும் போல வேலை நேரம் துவங்க, அலுவலக அக்கவுண்ட்ஸ் கணக்குகளைப் பற்றி பிரார்த்தனா, அபிஷேக் மற்றும் அஞ்சலியிடம் விவரித்துக்கொண்டிருந்தாள்.
அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு, வாரம் ஒருமுறை அனைத்து கணக்கு, வழக்குகளை அதன் குழுவிடமிருந்து வாங்கி சரிபார்த்து, அதில் ஏதேனும் தவறிருந்தால் அதைச் சரிசெய்து அதன் கோப்புகளை பத்திரப்படுத்தி வைப்பது பிராத்தனாவின் வழக்கமாக இருந்தது.
அதனாலேயே இன்று அவள் முன்னரே அலுவலகத்திற்கு வந்துவிட்டிருந்தாள். அனைத்தையும் சரிபார்த்தவர்கள், அவளது திறமையைக் கண்டு பாராட்டினர்.
“சூப்பர் அனா… இதே மாதிரி நம்ம கம்பெனியோட எல்லா ஃபைல்ஸையும் ப்ராப்பரா மெய்ண்டெய்ன் பண்ணா, ஆடிட்டிங்க் வரும்போது இருக்க லாஸ்ட் மினிட் டென்ஷன் இல்லாம இருக்கும். நீ எப்பவும் இப்படியே எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லி மெய்ண்டெய்ன் பண்ணு. வெல்டன்…” என்று மனதாரப் பாராட்டியவனின் கண்களில் இருந்த சந்தோஷத்தைக் கண்டாள் பிராத்தனா.
“தேங்க்யூ சார். எப்பவும் எல்லா விஷயத்தையும் அவசரப்படாம நிதானமா, சரியா செஞ்சா கண்டிப்பா நல்லபடியா வரும் சார். இனிமேல் நீங்க இந்த விஷயத்தை நினைச்சு கவலைப்படவோ, டென்ஷனாகவோ வேண்டாம்.” என்றாள்.
“நீ இருக்கறதால தான், அபி இப்போ இந்த விஷயத்துல டென்ஷனாகாம இருக்கான் பிரார்த்தனா. இல்லைன்னா, அவன எப்படி மேனேஜ் பண்றதுன்னே எங்களுக்குத் தெரியாது. முன்னாடியெல்லாம், இவன மேனேஜ் பண்றதுக்குனே நான் தனியா க்ளாஸ் போகணும்னு யோசிச்சிருக்கேன் தெரியுமா?” என்றதும், சிரித்துவிட்டாள் பிராத்தனா.
அவள் சிரிப்பதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் அபிஷேக். அதைப் பார்த்துவிட்டாள் அஞ்சலி.
“ஹலோ… அபி, நான் உன்னைப் பாராட்டிப் பேசல. கிண்டல் பண்ணிட்டிருக்கேன். இந்நேரம் நீ என்னைத் திட்டியிருக்கணும்.” என்றாள்.
அதைக் கேட்டவன், “அதெல்லாம் பழைய அபிஷேக். இப்போ அப்படியில்ல.” என்று பிரார்த்தனாவைப் பார்த்துச் சொன்னவன்,
“நான் கம்பெனி யூனிட்ட விசிட் பண்ணிட்டு வரேன். நீ மத்த விஷயங்களைப் பார்த்துக்கோ அனா…” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
அவன் செல்வதைக் கண்டு பெருமூச்சு விட்ட அஞ்சலி, “பிரார்த்தனா, அபிகிட்ட கொஞ்ச நாளா பயங்கரமான சேஞ்சஸ் தெரியுது. நீ அதைப்பத்தி என்ன நினைக்கிற?” என்று வேண்டுமென்றே அவளிடம் கேட்டுவைத்தாள்.
அதைக் கேட்டு சுதாரித்தவளாய், “இதுல நான் நினைக்கிறதுக்கு என்ன இருக்கு மேம்?” என்றவள், அதற்கு மேல் அவள் பேச இடமளிக்காமல் தனது இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.
பிரார்த்தனா எதையோ மறைக்க முயல்வதை அறிந்துகொண்டாள் அஞ்சலி. அதனால் தான், எதைக் கேட்டாலும் பட்டும் படாமல் பதிலளித்துவிடுகிறாள் என்று நினைத்தாள்.
அதேபோல், முடிந்த அளவு இவர்களை விட்டு விலகி இருப்பதே தனக்கு நல்லது என்று மனதில் நினைத்துக்கொண்டாள் பிரார்த்தனா. ஆனால், விதி என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதை அவள் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை தான்.
மாலை அலுவலக நேரம் முடிந்து மூவரும் ஒன்றாகவே வந்து சேர்ந்தனர். பிரார்த்தனா ஏதோ ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு அவர்களோடு செல்வதை தவிர்க்க நினைத்தாள். ஆனால், அபிஷேக் ஒரு முறை சொன்னால், அஞ்சலியோ விடாமல் பலமுறை சொல்லி அவளை அழைத்து வந்துவிட்டாள்.
வரும்போது, பெரிதாக அவர்களிடம் எதையும் பேசிக்கொள்ளவில்லை. வந்ததும், அவளது அறைக்கு நேரே செல்ல நினைத்தாள். சீதா, காஃபி தருவதாகச் சொன்னபோதும், தானே தயாரித்துக்கொள்வதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
இது சீதாவிற்குப் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், பின்னாலேயே வந்த அபிஷேக்கிற்கும், அஞ்சலிக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது.
இருவரும் அவரவர் அறைக்குத் திரும்பி உடை மாற்றி நின்றபோது, வேலையாள் வந்து இருவருக்கும் காஃபியைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அதை வாங்கிய நேரம் அஞ்சலிக்கு தேவ்வின் அழைப்பு வர, அதை ஏற்று அவனிடம் உரையாடத் துவங்கிவிட்டாள்.
அபிஷேக்கோ, மேலே பிரார்த்தனாவின் அறையைப் பார்த்தபடியே தனது அறை வாசலில் நின்றுகொண்டிருந்தான். காஃபியை மெல்லப் பருகியவன், மெதுவாய்ப் படிக்கட்டுகளின் வழியே மேலே சென்றான்.
அங்கே பிரார்த்தனாவும், இரவு உடைக்கு மாறி தானே தயாரித்துக்கொண்ட காஃபியைப் பருகியபடி மொட்டை மாடியில் இருக்கும் திண்ணையில் அமர்ந்துகொண்டிருந்தாள். மெல்ல அவள் அருகே சென்றான் அபிஷேக்.
“அம்மா போடுற காஃபிய விட, நீ போடற காஃபி தான் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ?” என்று அவன் பின்னால் நின்று கேட்ட கேள்வியில் அதிர்ந்துபோய் எழுந்தாள் பிரார்த்தனா.
“சார்…” என்றவளைப் பார்த்தவன், அமறுமாரு சைகை காண்பித்துவிட்டுத் தானும் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அவள் நெளிந்துகொண்டே இருக்க, “ஸ்டே கம்ஃபர்ட்டபிள். நான் என்ன உன்னை கடிச்சா திங்கப்போறேன். இந்த நெளி நெளியற?” என்றதும், அமைதியாக அமர்ந்தாள்.
அவள் காஃபியைப் பருகாமல் கையில் அப்படியே வைத்திருப்பதைப் பார்த்தவன், “எங்க நீ போட்ட காஃபியைக் குடு.” என்றான்.
அதைக் கேட்டு அதிர்ச்சியானவள், “சார்… இது நான் குடிச்சது. உங்களுக்கு வேணும்னா, ஃப்ரெஷ்ஷா போட்டுத்தரேன்.” என்றாள்.
“இல்ல… இல்ல… நீ இனிமேல் போய் போட்டு எடுத்துட்டு வரதுக்குள்ள விடிஞ்சிடும். இதையே குடு.” என்று அவளது கைகளிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டான்.
இதை எதிர்பாராமல் கைகளைப் பிசைந்துகொண்டு இருந்தாள் பிரார்த்தனா.
அவள் தயாரித்த காஃபியைப் பருகியவன், “ம்ம்… காஃபி ரொம்ப நல்லா இருக்கே!! அம்மா போடற காஃபிய விட இது கொஞ்சம் டேஸ்ட்டா இருக்கு. என்ன ரகசியம்?” என்றான்.
“இது ஃபில்ட்டர் காஃபி சார். நானே வாங்கி அரைச்சு ப்ரிப்பேர் பண்ணது.” என்றாள்.
“ஓ! இதெல்லாம் பண்ண உனக்கு டைம் இருக்கா?” என்றான்.
“சண்டே தான் சார் இதெல்லாம் பண்ணுவேன்.” என்றாள்.
அவள் அமைதியாகவே இருப்பதைப் பார்த்தவன், “என் அம்மா போட்ட காஃபி என்ன பாவம் பண்ணுச்சு? நீ குடிச்சிடு. உன்னோடத நான் குடிச்சிட்டேன் இல்ல.” என்றான் சர்வ சாதாரணமாக.
அவள் குடித்த காஃபியை அவன் வாங்கிக் குடித்ததையே அவளால் இன்னும் நம்பமுடியவில்லை. இதில், அவன் குடித்த காஃபியைத் தான் எப்படிப் பருகுவது? என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
அவள் யோசிப்பதைக் கண்டவன், “நான் வேணும்னா புட்டி பாட்டில் வாங்கிட்டு வந்து ஊத்தித் தரட்டுமா?” என்று கேலி பேசியவனைப் புரியாமல் பார்த்தாள்.
“எடுத்துக் குடி…” என்று அவன் கட்டளையிட, வேறு வழியில்லாமல் எடுத்துக் குடித்தாள்.
“இன்னைக்கு காஃபி ஷேரிங்க் டேன்னு நினைச்சுக்கோ.” என்று அவன் சாதாரணமாகச் சொன்னதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை பிரார்த்தனாவுக்கு.
“சரி, இன்னைக்கு காலைல கேண்டீன் பக்கம் உன்கூட பேசிட்டிருந்தவன் யாரு?” என்று அவன் கேட்ட கேள்வியில், கடைசி மிடரைப் பருகிக்கொண்டிருந்தவளுக்கு புரை ஏறுவதைப் போலிருந்தது.
அவன் இதைக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை அவள். என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் விழித்துக்கொண்டிருக்க, அபிஷேக்கோ, பிரார்த்தனாவின் ஒவ்வொரு அசைவையும் கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
காலை உணவருந்தச் சென்ற நேரம், எதேச்சையாக செல்வாவின் கண்ணில் பட்டதும், அவன் தன்னை எப்பொழுதும் போலவே ஏசிக்கொண்டிருந்ததைத்தான் அபிஷேக் பார்த்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டாள்.
அவன் எதைப் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்தாளோ, இப்போது அதைப் பற்றியே அவளிடம் கேட்க, திருதிருவென விழித்தாள் பிரார்த்தனா.
“நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா? ஏன் இப்படி முழிக்கற?” என்றவனது வார்த்தைகள் அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
“சார்… அது வந்து…” என்றவளை இடைமறித்தவன்,
“இங்க பாரு அனா… இந்த வந்து… போய்… இதெல்லாம் வேண்டாம். எதுவா இருந்தாலும் ஃப்ரான்கா சொல்லணும். பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது.” என்றவனை மேலும் பயத்துடன் பார்த்தாள்.
“அது என்னோட மாமா பையன் செல்வா சார். அவன்கிட்ட தான் பேசிட்டிருந்தேன்.” என்றாள்.
அதைக் கேட்டதும் புருவத்தை சுருக்கியவன், “அப்படியா! ஆனா, அவனப் பார்த்தா அப்படித் தெரியலையே. அவன் உன்கிட்ட ஏதோ கைய நீட்டி மிரட்டிப் பேசிட்டிருந்த மாதிரி இருந்ததே?” என்று தன் சந்தேகத்தை அவளிடம் கேட்டான்.
“ஆமா சார். ரெண்டு பேருமே ஒரே வீட்டுல தான் வளர்ந்தோம். ஆனா, அவனுக்கு சின்ன வயசுல இருந்தே என்னைப் பிடிக்காது. அந்த வீட்டுல இருக்கறவரைக்கும் என்னை நிம்மதியா இருக்க விட்டதே இல்ல. இப்போ இங்கயும் நான் இருக்கேன்னு என்னை மிரட்டினான். அவன் கண்ணுல நான் எப்பவும் படக்கூடாதாம்.” என்று சொன்னவளின் மனது எந்த அளவிற்குக் காயப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்துகொண்டான் அபிஷேக்.
“ஒருத்தரப் பிடிக்கலன்னா அதுக்காக இப்படியெல்லாமா பண்ணுவாங்க?” என்றவனது வார்த்தைகளைக் கேட்டவள், ஒரு நிமிடம் அவனை நிமிர்ந்து பார்க்க,
யோசித்துக்கொண்டே நின்றவன் பார்வைகளில் அவளது பார்வைக்கான அர்த்தம் புரிந்தது. ஒரு கட்டத்தில் தானும் இதுபோல் பல விதத்தில் அவளைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்று நினைத்தபோதே அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“சரி… சரி… நீ அவனைப் பத்தியெல்லாம் கவலைப்படாத. மறுபடியும் ஏதாவது சொன்னா நீ என்கிட்ட வந்து சொல்லு. நான் பார்த்துக்கறேன்.” என்று அவளுக்கு தைரியமளித்தான்.
“ம்ம்…” என்று தலையாட்டியவள்,
“சார்… இன்னொரு முக்கியமான விஷயமும் உங்ககிட்ட சொல்லணும்.” என்றதும், அவனது முகம் பிரகாசமானது.
“என்ன… சொல்லணும்…” என்று அவள் முகம் பார்த்து நின்றான்.
“செல்வா இதுக்கு முன்னாடி வேற ஒரு கம்பெனில வேலை பார்த்துட்டிருந்தான். அங்க முதலாளிகிட்ட சம்பளம் பத்தலன்னு சண்டை போட்டு பெரிய பிரச்சினை பண்ணி, அவர் வேலைய விட்டே துரத்திட்டார். அதுக்காக அவரை அடிக்கப் போய்ட்டதா எங்க தாத்தா, பாட்டி சொன்னாங்க. அதுக்கப்பறம் கொஞ்ச நாள் எங்கயும் வேலை கிடைக்காம தான் இருந்திருக்கான். இப்போ, நம்ம கம்பெனில வேலைக்கு ரெகமண்டேஷன்ல ஈஸியா சேர்ந்துட்டான். பழைய கம்பெனில பிரச்சினை பண்ண மாதிரி, இங்கயும் பண்ண சான்ஸஸ் இருக்கு. அதனால அவன்கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருக்கணும் சார்.” என்றாள்.
அவள் இதைப்பற்றித்தான் சொல்ல வந்தாளா? என்று உள்ளுக்குள் ஏமாந்து போனான் அபிஷேக். தன்னைப் பற்றி வேறு ஏதேனும் பேச மாட்டாளா? என்றுதான் முதலில் நினைத்திருந்தான்.
அவள் சொன்னதைக் கேட்டவன், “இந்த மாதிரி சில பேர் எல்லா கம்பெனிலயும் இருப்பாங்க. அதை நாம தடுக்க முடியாது. நீ அதை நினைச்சு ரொம்பக் கவலைப்படாத. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.” என்றவன், அதற்கு மேல் அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
அதே போல் பிரார்த்தனாவும், அனைத்தையும் அபிஷேக்கே பார்த்துக்கொள்வதாய்ச் சொன்னதை மனதில் ஏற்றிக்கொண்டவள், மேலும் அதைப்பற்றிய சிந்தனையை விடுத்து அமைதியாகச் சென்றாள்.
அடுத்து வந்த நாட்களும் அப்படியே சென்று விட, வார இறுதியில் அலுவலகத்தில் பலவித அலங்காரத் தோரணங்கள், வண்ணக் காகிதங்கள், மேலும் பலவித பூஜைப் பொருட்கள் என்று பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள் பிரார்த்தனா.
அங்கே வந்த முத்துவேலிடம், “முத்துவேல் சார், இதெல்லாம் எதுக்கு? நம்ம கம்பெனில ஏதாவது ஃபங்க்ஷன் நடத்தப்போறாங்களா?” என்றாள்.
“ஆமா மா. நாளைக்கு விநாயகர் சதுர்த்தி இல்லையா? நம்ம கம்பெனில இருக்க விநாயகர் கோவில சுத்தம் பண்ணி, அலங்காரம், பூஜை எல்லாத்தையும் பண்ணனும்னு அபி சார் சொல்லியிருக்கார். அதனால தான், இதெல்லாத்தையும் இங்க வச்சிருக்கோம். மதியம் மேல கம்பெனில இருக்கறவங்க எல்லாருமா சேர்ந்து ஏற்பாடு பண்ணப்போறாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு செய்யற நிகழ்ச்சி மா.” என்று சிலாகித்துச் சொன்னார்.
“ஓ! அப்படியா சார். ஆனா, எல்லா வருஷமும் இது பண்றது தானே?” என்றாள்.
“இல்லம்மா. இந்தக் கோவில எங்க பெரிய முதலாளி தான் கட்டினார். ஒவ்வொரு வருஷமும் விசேஷமா சதுர்த்தியக் கொண்டாடுவார். ஆனா, இந்த ரெண்டு, மூணு வருஷமா எதுவுமே பண்ணல. அபி சாரும் பெருசா கண்டுக்கமாட்டார். நாங்க தான், எல்லாருமா சேர்ந்து ஒரு ஐயிர வர வச்சு பூஜை பண்ணி, பிரசாதம் கொடுத்து சிம்பிள்லா கொண்டாடிட்டுப் போவோம். ஆனா, இந்த வருஷம் அபி சாருக்கு என்ன ஞானோதயம் வந்ததுன்னு தெரியல. எல்லா ஏற்பாடையும் தடபுடலா பண்ணனும்னு ஆர்டர் போட்டிருக்கார்.” என்றதும், அவள் மனதில் பட்டென்று தோன்றியது.
தான் அன்று அபிஷேக்கிடம் தனக்கும், கடவுளுக்குமான பந்தத்தைப் பற்றி விவரித்ததும், அவனும் அதன் பிறகு தினமும் கோவிலில் தன்னைப் போலவே பிரார்த்தனை செய்வதையும் நினைத்துப் பார்த்தாள்.
அப்படியென்றால் இந்த மாற்றம் தன்னால் தான் அவனுக்குள் உருவானதா? ஏன் இந்த திடீர் மாற்றம்? எதற்காக? என்று பல்வேறு சிந்தனைகள் அவளுக்குள் தோன்றியவண்ணமே இருந்தது.
சில நாட்களாய் அவன் காட்டும் மாற்றங்கள் தன்னைச் சுற்றியே இருப்பதையும் அவள் உணராமல் இல்லை. தனக்கு அவனைப் பிடிக்கும் என்று தெரியும். ஆனால், அவனுக்குத் தன்னைப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
மதியமே ஊழியர்கள் கோவிலிலும், கம்பெனியின் பல்வேறு இடங்களிலும் அலங்காரங்களைச் செய்ய ஆரம்பித்தனர். அதைப் பார்த்த போது உற்சாகமாக இருந்தது பிரார்த்தனாவிற்கு.
ஒவ்வொரு வருடமும், விநாயகர் சதுர்த்திக்கு விரதம் இருந்து, விநாயகருக்குப் பிடித்த பதார்த்தங்களைச் செய்து, கோவிலுக்குச் சென்று அனைத்தையும் அவருக்குப் படைத்து, மனதார பிரார்த்தித்து விட்டுத்தான் வருவாள்.
அதை இன்றும் நினைத்துப் பார்த்தாள். அவள் மனதைப் படித்தவனாக அருகே நின்றுகொண்டிருந்த அபிஷேக், “என்ன அனா? எப்படி ஏற்பாடெல்லாம்? நல்லாருக்கா?” என்றான்.
“ஓ! சொல்லிட்டாரா. ஆமா, அப்பாவும், தாத்தாவும் எங்களை விட்டுப் போனதுக்கப்பறம், இங்க பெருசா எதையும் கொண்டாடல. இப்போதான் மறுபடியும் எல்லாத்தையும் பண்ணனும்னு தோணுது. அதுக்கு ஆரம்பமா இந்த விநாயகர் சதுர்த்திய நல்லா செலிபரேட் பண்ணனும்னு நினைச்சேன். அதான்.” என்றவனைப் பார்த்தவள்,
“இப்போ நம்பறீங்களா சார்?” என்றாள்.
“ம்ம்… கொஞ்சம் கொஞ்சமா நம்பிட்டிருக்கேன். ஆனா, நான் மனசுல ஒரு விஷயத்தை ரொம்ப நாளா நினைச்சிட்டிருக்கேன். அதை மட்டும் அவர் நிறைவேத்திட்டா, முழுசா நம்புவேன்.” என்றான்.
“இதென்ன அக்ரீமெண்ட்டா சார். இதெல்லாம் பண்ணா தான் நம்புவேன், இல்லைன்னா நம்பமாட்டேன்னு சொல்றதுக்கு. கடவுள் நமக்கு ஒண்ணு கொடுக்கறார்னா அது நல்லதுக்காகத்தான். அதே மாதிரி, கொடுக்கலைன்னாலும் அதுவும் நம்மளோட நல்லதுக்குன்னு தான் எடுத்துக்கணும். அதை விட்டுட்டு, கொடுக்கலைன்னதும் கடவுள் இல்லை, நான் நம்பமாட்டேன்னு சொல்லக்கூடாது.” என்று பிரசங்கம் செய்பவளிடம் நெருங்கி வந்து நின்றான்.
“ரொம்ப நல்லா பேசற அனா… பட், நீ சொல்ற மாதிரி இது எனக்கும் கடவுளுக்குமான அக்ரீமெண்ட் தான். நான் நினைச்சது நடக்குமா? நடக்காதா? எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா, ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கு.” என்றபடியே அவள் விழிகளைப் பார்க்க, அவளும் ஒரு நிமிடம் அசையாது அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவன் தன்னிடம் எதையோ எதிர்பார்ப்பதை உணர்ந்த நிமிடம் அது. சிலையென நின்றவர்களின் நிலையைக் கலைக்கும் விதமாக அஞ்சலி அறைக்குள்ளே வந்தாள்.
அவளைப் பார்த்ததும், சாதாரணமாக அவளிடம் பேச்சுக் கொடுப்பதைப் போல், “ஆங்க்… அனா… நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.” என்று சொல்லிவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.
அதைக் கேட்டுத் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள் பிராத்தனா. இங்கு ஏதோ சரியில்லை என்பதைத் தெரிந்துகொண்ட அஞ்சலி,
“எதைப் பத்தி அபி சொல்லிட்டிருக்கான்?” என்று அவளிடம் கேட்க, தான் நன்றாக மாட்டிக்கொண்டோம் என்று விழித்தாள் பிராத்தனா.
“அஞ்சலி… நாளைக்கு நம்ம கம்பெனில விநாயகர் சதுர்த்தி செலிபரேட் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்கேன். அது கரெக்ட்டா நடக்கணும்னு அனாகிட்ட சொல்லிட்டிருந்தேன். நீ சும்மா நோண்டி நோண்டி அவளக் கேள்வி கேட்டுட்டிருக்காத.” என்றவனைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
“ஹே மேன்… நான் சாதாரணமா தான அவகிட்ட கேட்டேன். நீ ஏன் இப்போ நெர்வஸ் ஆகற?” என்று இடுப்பில் கை வைத்துக் கேட்டவளிடம் இப்போது என்ன பதில் சொல்வது என்று சத்தியமாக அபிஷேக்கிற்குத் தெரியவில்லை.
“மேம்… நம்ம கம்பெனில எந்த ஒரு விஷயம் நடந்தாலும், அதை நினைச்சு சார் நெர்வஸ்ஸா ஃபீல் பண்றது நார்மல் தான. அதான் அப்படியிருக்கார்.” என்று இந்தமுறை காப்பாற்றி விட்டாள் பிரார்த்தனா.
இருவரும் மாறி, மாறி ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கண்டு அஞ்சலிக்கு சந்தேகம் இரண்டு மடங்கானது. இருப்பினும், எதையும் இவர்கள் வெளிப்படையாகச் சொல்லப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டாள்.
“சரி… சரி… வா, நாம போய் அங்க நடக்கற அரேஞ்ச்மெண்ட்ஸ பார்க்கலாம்.” என்று அவளை வேண்டுமென்றே அழைத்துக்கொண்டு சென்றாள் அஞ்சலி.
செல்லும் போது, அபிஷேக்கின் முகபாவனை மாறுவதைத் திரும்பிப் பார்த்தபடி தான் சென்றாள். அஞ்சலி சில சமயம் தன்னை இதுபோல் வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதை வழக்கமாகக்கொண்டிருப்பதைக் கண்டு எரிச்சலானான் அபிஷேக்.
அடுத்த நாள் மிகச் சிறப்பாக விநாயகருக்குப் பூஜை, அலங்காரங்கள் என கோலாகலமாக சதுர்த்தி விழா ஆரம்பமானது. அனைத்து ஊழியர்களும் அதைக் கொண்டாடக் காத்திருந்தனர்.
இதற்காக அஞ்சலிக்கும், பிரார்த்தனாவுக்கும் புதிதாக புடவையை எடுத்துக்கொடுத்திருந்தார் சீதா.
அஞ்சலி அதைக் கட்டிக்கொள்ள முரண்டுபிடிக்க, சீதா பிரார்த்தனாவின் உதவியுடன் அவளுக்குப் புடவையைக் கட்டிவிட்டார். எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பிரார்த்தனா அதைத் தானாகவே கட்டியிருந்தாள்.
அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பவேண்டிய நேரம், அபிஷேக்கும் புதிதாக எடுத்திருந்த வேஷ்டி, சட்டை சகிதமாக நின்றுகொண்டிருந்தான். கையை உயர்த்தி மடித்துவிட்டுக்கொண்டே திரும்பிப் பார்த்தபோது, படியில் இருந்து பிரார்த்தனாவும், அஞ்சலியும் வந்துகொண்டிருந்தனர்.
முதன்முதலில் புடவையில் பிரார்த்தனாவைக் காண இரு மடங்கு அழகாய்த் தெரிந்தாள் அவன் கண்களுக்கு. அவள் மேல் வைத்த கண்களை எடுக்க அவனாலேயே முடியவில்லை. சிரமப்பட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பினான்.
அதை அறிந்துகொண்டு அவனருகே வந்ததும் அஞ்சலி, “ஹே மேன்… சூப்பர்… செம்மயா இருக்க அபி. இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் உன்னை வேட்டி, சட்டைல பார்க்கறேன்.” என்றாள்.
“நீ கூட புடவைல ரொம்ப அழகா இருக்க அஞ்சலி. இன்னைக்குத்தான், நீ இந்த நாட்டுப் பொண்ணு மாதிரி இருக்க.” என்று வம்பிழுத்தான்.
“ஏய்… கிண்டல் பண்றியா? என்னைக்கிருந்தாலும் நான் லண்டன் பொண்ணு தான்.” என்று மினுக்கிக்கொண்டு சென்றவளைப் பார்த்துச் சிரித்தான்.
பின்னால் நெளிந்துகொண்டே வந்த பிரார்த்தனாவிடம், “புடவைல எல்லாப் பொண்ணுகளும் அழகா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இன்னைக்குத்தான் அதை நேர்ல பார்க்கறேன்.” என்றவன், அவளை ரகசியமாய்ப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றான்.
இதற்கான அர்த்தம் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா. வழக்கம்போலவே அவள் காலை விரதமிருந்து, விநாயகருக்காக சிறிதளவில் தன் கையாலேயே செய்த பிரசாத பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.
அதே சமயம், சமையல் செய்பவர்களை வைத்து சீதா அனைவருக்கும் தேவையான அளவு செய்து வைக்கச் சொல்லியிருந்ததால், அதையும் எடுத்து வந்திருந்தனர். தேங்காய், பழங்கள், சுண்டல், அவல் பொரி, கடலை, மோதகம், கொழுக்கட்டை என அனைத்தும் அங்கே படைக்கப்பட்டிருந்தன.
அபிஷேக், அஞ்சலி, சீதாலட்சுமி என அனைவரும் முன்னே அமர்ந்து அனைத்தையும் முன் நின்று நடத்திக்கொண்டிருந்தனர்.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை அனைவரும் கைகூப்பி வணங்கிக்கொண்டிருந்தனர். பிரார்த்தனாவோ, அதைக் கண்டு ஒரு நிலையில் இல்லை. தன் இஷ்ட தெய்வத்தை கண்கள் நிறைய மனமுருகி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அபிஷேக்கின் கண்கள் ஆங்காங்கே செல்வது போல் சில சமயம் பிரார்த்தனாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன. அதை அஞ்சலியும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.
பூஜை, அலங்காரங்கள் நிறைவுபெற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சீதா, முக்கியமான அலுவலக ஊழியர்களை வைத்து அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கிக்கொண்டிருந்தார். அனைவரும் கோவிலிலிருந்து வெளியே வந்துவிட்ட நிலையில், பிரார்த்தனா மட்டும் இன்னும் அங்கிருந்து வரவில்லை. இறைவனிடமே தன்னை அர்ப்பணித்தவள் போல் நின்றுகொண்டிருந்தாள்.
அவளின் பக்தியை மெய் சிலிர்த்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர் அபிஷேக்கும், அஞ்சலியும். அப்போது, தீடீரென பிரார்த்தனா நிலை தடுமாறி மயங்கிக் கீழே விழுந்தாள்.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
திடீரென்று மயங்கி விழுந்த பிரார்த்தனாவை ஓடி வந்து அஞ்சலி மடியில் ஏந்திக்கொண்டாள். அதே போல், அவளுடனே ஓடி வந்த அபிஷேக் என்னவானதோ? என்ற பதட்டத்தில் அவள் கன்னங்களைத் தட்டி எழுப்ப முயன்றான்.
அருகில் தண்ணீர் இருக்கிறதா? எனத் தேடிக்கொண்டிருந்தான். சீதாவும் அவ்விடம் வந்துவிட, அங்கே சலசலப்பு ஏற்பட்டது அனைவருக்குமிடையில். தண்ணீரைத் தேடிக்கொண்டிருந்தவன் கண்ணில் அருகிலிருந்த அபிஷேக நீர் பட, அதை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.
அதில் முகம் சுருக்கியவள், மயக்கம் தெளியாமல் அஞ்சலியின் மடியிலேயே இருக்க, வேறு வழியில்லாமல் அந்த அபிஷேக நீரையே அவள் வாயில் ஊற்றினான் அபிஷேக்.
அதைப் பருகியதும் சற்று தெளிந்தாள். அவளை மெல்ல எழுப்பி அமர வைத்தனர். அப்போதுதான் அவளுக்குத் தான் மயங்கி விழுந்ததே நினைவுக்கு வந்தது.
“இப்போ எப்படிம்மா இருக்கு?” என்று சீதா கேட்க,
“பரவாயில்ல ஆண்ட்டி.” என்று மெதுவாகச் சொன்னாள்.
“உன் உடம்பே வீக்கா இருக்கு. இதுல எதுக்கு நீ விரதம் எல்லாம் இருக்கற?” என்றான் அபிஷேக் கண்டிப்புடன்.
“சின்ன வயசுல இருந்தே இந்த ஒரு நாள் மட்டும் தான் சார் விரதம் இருப்பேன். எப்பவும் போல தான் இருந்தேன். ஆனா, திடீர்னு மயக்கம் போட்டு விழுவேன்னு எதிர்பார்க்கல.” என்றாள் அயர்விலேயே.
“சரி… சரி… விடு அபி. நீ வாம்மா பிரசாதத்தை சாப்பிடு.” என்று அவளை அக்கறையுடன் அழைத்துச் சென்றார் சீதாலட்சுமி.
அவள் சென்றதும் அபிஷேக்கின் அருகே வந்த அஞ்சலி, “ம்ம்.. அபி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த நார்த் இந்தியா சைட்ல, ஹஸ்பெண்ட்க்காக வைஃப்பெல்லாம் ஏதோ ஒரு விரதம் கடைபிடிப்பாங்களே! அது பேர் கூட… ம்ம்ம்… கர்வாசௌத்…” என்று அவள் யோசித்துக் கூறியதும் அவளை ஒரு பார்வை பார்த்தான் அபிஷேக்.
“நீ இந்தியாக்கு வந்தே ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள நீ நார்த் இந்தியால கடைபிடிக்கற விரதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியா?” என்றான்.
“ஹே… இதுக்கு நான் இந்தியால தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. எத்தன ஹிந்தி படத்துலயும், சீரியல்ஸ்லயும் பார்த்திருப்பேன். அதுல ஹஸ்பெண்ட்ஸெல்லாம் வைஃப்புக்கு தண்ணி கொடுத்துதான் அந்த விரதத்த முடிச்சு வைப்பாங்க.” என்று அவள் ஓரக்கண்ணில் அவனைப் பார்க்க,
“இப்போ அதுக்கு என்ன?” என்றான்.
“இல்ல… அதையெல்லாம் எனக்கு நேர்ல பார்க்க இதுவரைக்கும் சந்தர்ப்பம் அமையல. இன்னைக்குத்தான் அமைஞ்சது.” என்று அவனிடம் கண்ணடித்துச் சிரித்தாள்.
அதைக் கேட்டவன், “நீ இருக்கியே! பேசாமப் போ.” என்று அவளிடமிருந்து தப்பித்துச் சென்றாலும், மனதின் ஒரு ஓரத்தில் தன்னையும், பிரார்த்தனாவையும் இணைத்து அவள் பேசிய விதம் அவனுக்கு என்னவோ பிடித்திருந்தது.
அனைத்தையும் ஒரு கண்ணோடு பார்த்துக்கொண்டு தான் இருந்தான் செல்வா. பிரார்த்தனா தனது வீட்டில் இருந்தபோது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் எத்தனை வித்தியாசம் என்றே நினைத்தான்.
இருக்கவே இடம் இல்லாமல் அண்டிப் பிழைப்பவளைப் போல் இருந்தவள், இன்று நன்றாக உடை உடுத்துவதும், சிரித்து சிரித்து கம்பெனி முதலாளியுடன் பேசுவதும், அவர்கள் குடும்பத்தோடு ஒட்டி உறவாடுவதும் என எதையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மனதில் அவளை நினைத்து கறுவிக்கொண்டே இருந்தான். நேரம் கிடைத்தால் அவளை இன்னும் நாலைந்து வார்த்தைகளைச் சேர்த்தே திட்ட வேண்டும் என்று நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்தான்.
அனைவரும் காலை உணவையும் அங்கேயே முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாயினர். அப்போது சீதாவிடம் வந்தாள் பிரார்த்தனா.
“ஆண்ட்டி, நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்திடறேன். ஈவினிங் தான் வருவேன்.” என்றாள்.
“எங்கமா வெளிய போற? ஏற்கனவே மயக்கம் போட்டு வேற விழுந்த. போற பக்கமும் அந்த மாதிரி ஆனா என்ன பண்ணுவ?” என்றார் அக்கறையுடன்.
“இல்ல ஆண்ட்டி. இப்போ நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.” என்றாள்.
அப்போது அங்கே வந்தான் அபிஷேக். அவனைப் பார்த்ததும் சீதா, “டேய் அபி… பாருடா இந்தப் பொண்ணு எங்கயோ வெளிய போகணுமாம். இப்போ தான மயக்கம் போட்டு விழுந்தா, வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டிங்கறா.” என்றார்.
“அதான் அம்மா சொல்றாங்கல்ல. அப்படி எங்க போகணும்?” என்றான்.
இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தவள், “சார், நான் சின்ன வயசுல இருந்து எப்பவும் போற விநாயகர் கோவிலுக்குப் போகணும்னு நினைச்சேன். அப்பறம் அங்கதான் என்னோட தாத்தா, பாட்டி இருக்காங்க. அவங்களையும் அப்படியே பார்த்துட்டு வந்துடலாம்னு தான் கேட்கறேன்.” என்றாள்.
அப்போதுதான், அவள் எங்கே செல்ல நினைக்கிறாள் என்று புரிந்துகொண்டனர் இருவரும்.
“சரிம்மா. எப்படிப் போவ?” என்றார் சீதா.
“பஸ்லதான் ஆண்ட்டி. எனக்குத் தெரியும். நான் போய்க்குவேன்.” என்றாள்.
“இல்ல பிரார்த்தனா. பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கும் இன்னைக்கு. ஏற்கனவே நீ மயங்கி விழுந்திருக்க. அதனால, நீ பேசாம அபியோட போய்ட்டு வந்துடு.” என்றார்.
அதைக் கேட்டதும் ஒரு பக்கம் அதிர்ச்சியானாள் பிரார்த்தனா. மறுபக்கம் அபிஷேக்கோ மனதில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான். ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாதவன் போல் இருந்தான்.
“அம்மா… அவதான் பஸ்லயே போறேன்னு சொல்றா இல்ல. நீ ஏன் என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்ற?” என்றான் வேண்டுமென்றே.
“டேய்… பிரார்த்தனா எப்போ நம்ம வீட்டுக்கு வந்தாளோ, அப்போவே அவ நம்ம பொறுப்பு. நீ பத்திரமா அவளக் கூட்டிட்டுப் போய்ட்டு வா.” என்றார்.
அதைக் கேட்டு அவளை அவன் ஒரு பார்வை பார்க்க, அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள். அப்போது, அங்கே வந்த அஞ்சலியும் சேர்ந்துகொண்டாள்.
“ஆண்ட்டி, பிரார்த்தனா கூட நானும் போய்ட்டு வரேன். இந்த அபி போர் அடிப்பான். அவ பாவம் இல்ல?” என்று சீதாவிடம் கொஞ்ச, அவரும் சரியென்றார்.
அதைப் பார்த்த அபிஷேக் அவளை முறைத்துக்கொண்டே சென்று காரைக் கிளப்பினான். அப்போதும், தயங்கிக்கொண்டே நின்ற பிரார்த்தனாவை இழுத்துக்கொண்டு சென்று காரின் பின்புறம் ஏற்றிவிட்டு, தானும் சென்று அமர்ந்துகொண்டாள் அஞ்சலி.
சீதாவிடம் அபிஷேக், “அம்மா… நீ ஆஃபீஸ் கேப்ல பத்திரமா வீட்டுக்குப் போய்ட்டு ரெஸ்ட் எடு. நாங்க வந்திடறோம்.” என்று சொல்ல, அதற்குத் தலையாட்டி அவர்களை வழியனுப்பி வைத்தார் சீதா.
சிறிது தூரம் சென்ற பிறகு அஞ்சலி, “ஆங்க்… அபி… அந்த ஓரமா நிறுத்திக்கோ.” என்றாள்.
திடீரென வண்டியை நிறுத்தச் சொல்கிறாளே என்று அவன் திரும்பிப் பார்க்க, அஞ்சலியோ வழிந்தபடி சிரித்தாள்.
“சாரி… சாரி… ரெண்டு பேருக்கும். தேவ் காலைலயே பெங்களூர்ல இருந்து வந்துட்டான். என்னைப் பார்க்கணும்னு சொன்னான். ஆண்ட்டி கிட்ட எப்படி சொல்லிட்டு வரதுன்னு முழிச்சிட்டிருந்தேன். நல்லவேளையா நீ வெளிய போகணும்னு சொன்னியா பிரார்த்தனா. அதனால தான், அப்படியே உங்ககூட வந்துட்டேன்.” என்றாள்.
“ஏய்… வர வர நீ கேடியாகிட்ட அஞ்சலி.” என்று அவள் தலையில் குட்டினான் அபிஷேக்.
“ஆஆஆஆ… வலிக்குதுடா…” என்று சொன்ன வேளை அவர்கள் காரின் முன்னே ஸ்டைலாக தனது பைக்கோடு வந்து நின்றான் தேவ்.
அவனைப் பார்த்ததும், எதைப்பற்றிய நினைப்பும் இல்லாமல் உடனே இறங்கிச் சென்று அவனை ஓடிச் சென்று அணைத்துக்கொண்டாள் அஞ்சலி.
“ஏய்… அஞ்சலி… நாம இப்போ லண்டன்ல இல்ல. கோயம்புத்தூர்ல இருக்கோம்.” என்று அவளை இழுத்துப் பிடித்து நினைவுபடுத்தினான் தேவ்.
“அதனால என்ன? நான் என்னோட தேவ்வ அப்படித்தான் கட்டிப்பிடிப்பேன். யார் பார்த்தாலும் எனக்குக் கவலை இல்ல.” என்று சொன்னவளைப் பார்த்து அவள் தலையில் செல்லமாய்த் தட்டிச் சிரித்தான் தேவ்.
“புடவைல எவ்ளோ அழகா இருக்கடி நீ?” என்று அவளைப் பார்த்து பிரமித்துப் போய் தேவ் சொல்ல, அதைக் கேட்டு வெட்கப்பட்டுச் சிரித்தாள் அஞ்சலி.
அதே சமயம் காரின் உள்ளே இருந்த அபிஷேக்கையும், பிரார்த்தனாவையும் பார்த்த தேவ் இருவருக்கும் சைகை காண்பிக்க, அவர்கள் இருவரும் காரிலிருந்து இறங்கி வந்தனர்.
பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்ள, “அஞ்சலியப் பார்த்துக்கோங்க தேவ்.” என்றான் அபிஷேக்.
“நோ வொரிஸ் அபி. நான் அவளை எப்பவுமே பத்திரமா பார்த்துக்குவேன்.” என்றான்.
“ஈவினிங்க் நீங்க சொல்ற இடத்துக்கு நானே அவளைக் கொண்டுவந்து விட்டுடறேன்.” என்றவன் அவளை தனது வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றான்.
அவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டு காருக்குத் திரும்பியபோது, “அனா… முன்னாடி வந்து உட்காரு.” என்றான் அபிஷேக்.
தயங்கியபடியே முன் சீட்டில் வந்து அமர்ந்தாள் பிரார்த்தனா. வண்டியைக் கிளப்பியவன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
“நிஜமாலுமே நீ கோவிலுக்குத்தான் போகணுமா? இல்ல?” என்றவனைப் பார்த்தவள்,
அவன் தான் சொன்னதை நம்பவில்லை என்று தெரிந்துகொண்டாள்.
“சார்… நீங்க நினைக்கிற மாதிரி நான் எதையும் மறைக்கல. நிஜமாலுமே கோவிலுக்குப் போகணும். அப்படியே தாத்தா, பாட்டியையும் பார்க்கணும்.” என்றாள்.
“அதுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு ரெண்டு மணி நேரம் ஆகுமா? ஆனா, ஈவினிங்க் வரதா சொன்னியே.” என்றான் அவளை விடாமல்,
“அது… அவங்களை வெளிய சாப்பிடறதுக்குப் பக்கத்துல இருக்க ஒரு நல்ல ஹோட்டல்க்கு கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேன். அப்படியே பக்கத்துல இருக்க பார்க்குக்கும் போகணும். அவங்க அந்த மாதிரி வெளிய எங்கயும் போனதில்ல. ஏதோ, என்னால முடிஞ்சது. இன்னைக்கு அவங்க கூட முழுசா ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைச்சேன்.” என்றாள்.
“ஓ! தாராளமா ஸ்பெண்ட் பண்ணலாமே. அவங்க உனக்கு மட்டும் இல்ல, எனக்கும் தாத்தா-பாட்டி மாதிரி தான்.” என்றவன், அவளிடம் வழி கேட்டு காரை நேராக அவள் சொன்ன இடத்திற்குச் செலுத்தினான்.
அரைமணி நேரத்தில் அங்கே சென்றவர்கள், கோவிலுக்குச் சென்று அவளது இஷ்ட தெய்வத்தை வழிபட்டுவிட்டு பெரியவர்களுக்காகக் காத்திருந்தனர்.
பிரார்த்தனா முன்னரே அவர்களிடம் போன் செய்து விபரத்தைச் சொன்னதால், அவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். பிரார்த்தனாவை புடவையில் பார்க்க மங்களகரமாய்த் தெரிந்தாள்.
முன்னே தங்களுடன் இருந்த பேத்தியை விட, இப்போது அவர்கள் பார்க்கும் பிரார்த்தனா வெகுவாக மாற்றம் கொண்டிருந்தாள். அதே போல், அவர்களுக்கு அருகே வாட்டசாட்டமாக, வேட்டி சட்டை சகிதம் நின்றிருந்தவனையும் பார்த்துக்கொண்டே தான் வந்தனர்.
இருவரையும் ஒன்றிணைத்துப் பார்க்க, புதிதாய்த் திருமணமான தம்பதியரைப் போலிருந்தது அவர்களுக்கு. ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்து சேர்ந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் பாட்டியை ஆரத் தழுவிக்கொண்டாள் பிரார்த்தனா. தாத்தாவும் அவளை உச்சி முகர்ந்தார். அதைப் பார்த்து அவர்களுக்குள் இருக்கும் பாசத்தைப் புரிந்துகொண்டான் அபிஷேக்.
அவனைப் பார்த்த பெரியசாமி, “இது யாரு கண்ணு?” என்றார்.
“இவர்தான் என்னுடைய கம்பெனி முதலாளி தாத்தா. இவங்க வீட்ல தான் இப்போ நான் இருக்கேன்.” என்றாள்.
உடனே, அவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் அபிஷேக். அதைப் பார்த்தவர், “எழுந்திரிப்பா… எழுந்திரிப்பா… நாம இருக்கறது கோவில். இங்க சாமிய விட பெருசு எதுவும் இல்ல. அதனால, யார் கால்லயும் விழக்கூடாது.” என்றார் பணிவாக.
“சரிங்க தாத்தா.” என்று அவரது வார்த்தையை ஏற்றுக்கொண்டான் அபிஷேக்.
அவனைப் பற்றியும், அவர்களது குடும்பத்தைப் பற்றியும் பிரார்த்தனா ஒவ்வொன்றாகச் சொல்ல, அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ரொம்ப ரொம்ப நன்றி தம்பி. எங்க பேத்திய வீட்ட விட்டு வெளிய அனுப்ப மனசே இல்லாம இருந்தோம். எங்க போய் எப்படி இருப்பாளோன்னு ரொம்பக் கவலைப்பட்டோம். ஆனா, இன்னைக்கு இவ உங்க வீட்டுல ரொம்பப் பாதுகாப்பா இருக்கறத நினைச்சு ரொம்ப நிம்மதியா இருக்கு.” என்றார் லட்சுமி பாட்டி.
“ஆமா தம்பி. எங்களுக்கு அவளோட சந்தோஷமும், நிம்மதியும் தான் முக்கியம். அவளோட சொந்தக் கால்ல அவ நிக்கணும்னு ஆசைப்பட்டா, அதைப் பார்த்துட்டோம். அதே மாதிரி ஒரு நல்ல இடத்துல இருக்காங்கறதும் எங்களுக்கு பரம சந்தோஷம். இதுவே போதும்னு இருக்கு.” என்றார் பெரியசாமி.
“நீங்க ரெண்டு பேரும் பிரார்த்தனாவைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அவள நாங்க ரொம்ப பத்திரமா பார்த்துக்குவோம்.” என்று உறுதியாகப் பேசியது பெரியவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
அப்படியே பேசிக்கொண்டிருந்தவர்களை, அடுத்து மதிய உணவிற்காக ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் அபிஷேக். பிரார்த்தனா ஓரளவிற்கு இருந்தால் போதுமென்று நினைத்திருந்தாள்.
ஆனால், அபிஷேக்கோ அவர்கள் அத்தனை எளிதில் செல்ல முடியாத இடத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டான். இதுவரை அவர்கள் சாப்பிடாத பலவித உணவுகளைச் சொல்லி அசத்தினான்.
த்ருப்தியாக உண்டு முடித்ததும், அங்கேயே இருந்த தோட்டம் போன்ற இடத்திற்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தான். இவையெதுவுமே பிரார்த்தனா எதிர்பார்க்காதவை.
மாலை அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டு வாசலுக்குச் சென்றே இறக்கிவிட்டான் அபிஷேக். அவர்கள் அவனை வாழ்த்திவிட்டுச் சென்றனர். அவர்கள் காரிலிருந்து இறங்கும் போது தூரத்தில் வந்துகொண்டிருந்த செல்வா பார்த்துவிட்டான்.
அதை அறியாமல் அபிஷேக்கும், பிரார்த்தனாவும் கிளம்பினர். செல்லும் வழியில் மனமெல்லாம் நிறைவாய் இருக்க, அபிஷேக்கைப் பார்த்தாள் பிரார்த்தனா.
அதை உணர்ந்தவன் காரை செலுத்திக்கொண்டே கேட்டான். “என்ன அனா… ஹேப்பியா?”.
“எப்படி வார்த்தையால சொல்றதுன்னு தெரியல சார். நான் அவங்கள சும்மா ஏதோ வெளிய கூட்டிட்டுப் போகணும்னு தான் நினைச்சேன். ஆனா, அவங்க சாதாரணமா கூடப் போக முடியாத இடத்துக்கு அவங்களக் கூட்டிட்டுப் போய், எல்லாத்தையும் சாப்பிட வச்சு, அவங்கள ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்.” என்று தழுதழுத்தவளைப் பார்த்தவன்,
“இதுக்காக நீ எந்த தேங்க்ஸூம் சொல்ல வேண்டியதில்ல. இதெல்லாம் என்னோட கடமை. உனக்காக இதைக் கூட செய்யமாட்டேனா?” என்றான்.
அதைக் கேட்டவள், புரியாமல் விழித்தாள். எனக்காக எதற்கு இதெல்லாம் செய்ய வேண்டும்? இதைத் தன்னுடைய கடமை என்று வேறு சொல்கிறானே?
மறைமுகமாய்ப் பல விஷயங்களை சில நாட்களாகத் தனக்கு தொடர்ந்து உணர்த்திக்கொண்டே இருப்பவனிடம், இதற்கான அர்த்தத்தை என்னவென்று கேட்பது? என்ற கேள்வியுடனேயே சென்றாள் பிரார்த்தனா.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
விடுமுறை தினம் என்று வந்தால், இப்போதெல்லாம் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை. அதுவும் பிரார்த்தனாவும் இங்கே வந்துவிட்ட பிறகு, சீதாவுக்கும், அஞ்சலிக்கும் இன்னும் வசதியாகப் போய்விட்டது.
காலை, மதியம், இரவு என ஒரு நாளுக்கான சமையல் வேலையை சீதாவே ஆட்களை வைத்து செய்து விடுவார். பிரார்த்தனாவையும் “இங்கேயே சாப்பிடு…” என்று வற்புறுத்தி வர வைப்பார்.
ஆரம்பத்தில் அபிஷேக் மேல் இருந்த பயத்தில் கீழேயே வர சங்கடப்படுவாள் பிராத்தனா. ஆனால், அஞ்சலி இருக்கும் தைரியத்தில் அமைதியாக வந்து அவர்களுடன் இருப்பாள். இதைப் பார்க்கும் போது அபிஷேக்கிற்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.
கண்டும், காணாதது போல இருந்துவிடுவான். இல்லையேல், வெளியே கிளம்பிவிடுவான். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. அனைத்தும் மாறிவிட்டன. அபிஷேக்கைப் பொறுத்தவரை அவனது அனாவை தினமும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது கூட, காலை உணவை உண்டுவிட்டு டைனிங்க் டேபிளிலேயே அமர்ந்து மூவரும் கலகலவென பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன், அமைதியாக ஷோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பார்க்க நினைத்தது என்னவோ பிரார்த்தனாவைத்தான். ஆனால், பெயருக்கு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான். லாவகமாக அவளைப் பார்ப்பதற்கு ஏதுவாக அமர்ந்துகொண்டு, ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்தான்.
பேச்சின் சுவாரஸ்யத்தில் பிரார்த்தனா அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அவளது அருகே இருந்த அஞ்சலி இப்போதெல்லாம் அபிஷேக்கின் ஒவ்வொரு செயல்களையும் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருக்கிறாள்.
ஒரே சேனலைப் பார்க்காமல் மாற்றிக்கொண்டே இருந்தவனிடம், “அபி… டிவில நீ என்ன பார்க்கற?” என்று அவனை வம்பிழுத்தாள்.
இவள் வழக்கம்போல் தன்னை வம்பிழுக்கிறாள் என்று நினைத்தவன், “சும்மா தான், ஏதாவது ஒரு நல்ல பாட்டா போடுறாங்களான்னு பார்த்துட்டிருக்கேன்.” என்று சமாளித்தான்.
“அபி… முதல்ல எல்லாம் சண்டேன்னா வீட்லயே இருக்கமாட்டியே. எப்பவும் வெளிய தான சுத்திட்டிருப்ப. இப்போ என்னடான்னா வீட்லயே இருக்க?” என்றார் சீதா அவர் பங்கிற்கு.
அதைக் கேட்டதும், “இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நான் இங்க இருக்கணுமா? இல்ல வெளிய கிளம்பணுமா?” என்றதும், மூவரும் சிரித்துக்கொண்டனர்.
அதற்கு மேல் அவனை மேலும் பேசி வெறுப்பேற்ற நினைக்காதவகள் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தனர். பல சேனல்களை மாற்றிக்கொண்டே இருந்தவனுக்கு ஒரு நல்ல பாட்டு கண்ணில் பட்டது.
அதனது ஒலியை சற்று அதிகமாக்கினான். அது அங்கே அமர்ந்திருந்தவகள் காதிலும் ஒலித்தது. முக்கியமாக இது பிரார்த்தனாவின் காதில் விழ வேண்டும் என்றுதான் அதிகமாக வைத்தான் அபிஷேக்.
“கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்………
காதல் முகம் கண்டுகொண்டேன்………
விரல் தொடும் தூரத்திலே………
வெண்ணிலவு கண்டுகொண்டேன்………”
ஒலியை அதிகப்படுத்தியவனை பிரார்த்தனா பார்க்க, இது உனக்கானது என்பதைப் போல அவளைப் பார்த்தான் அபிஷேக்.
இவர்களது பார்வை சம்பாஷணைகளைப் புரிந்துகொண்டவளாய் அஞ்சலி, அபிஷேக்கை எழுந்து நின்று இடுப்பில் கை வைத்தபடி பார்க்க, அவனோ “இவள் சரியான தொல்லை…” என்று புலம்பியபடி தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எரிச்சலோடு சென்றுவிட்டான்.
அதைப் பார்த்த சீதா, “இப்போவே இவங்க ரெண்டு பேரும் எலியும், பூனையுமா இருக்காங்க பிரார்த்தனா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்னதான் பண்ணுவாங்களோ?” என்று சலித்துக்கொண்டவரைப் பார்த்துச் சிரித்தாள் பிரார்த்தனா.
அவள் எங்கே தனது ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவாளோ என்று பயந்த அஞ்சலி, “ம்ம்… ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று பிரார்த்தனாவிற்கு சைகையில் உதட்டின் மேல் விரல் வைத்துச் சொல்ல, அமைதியாக இருந்துவிட்டாள் அவள்.
அடுத்த நாள் வழக்கம்போல கம்பெனியில் வேலை தொடங்க அதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர் மூவரும். மதிய இடைவேளையில் அபிஷேக்கை சந்திக்க வந்தார் பேக்கிங்க் செக்ஷன் ஊழியர்களின் தலைவன் சுந்தர்.
நல்ல உழைப்பாளி தான். ஆனால், எவராவது பின்னால் இருந்து எதையாவது சொல்லிவிட்டால் அதைப்பற்றி சிந்திக்காது அப்படியே நம்பி அதையே பின்பற்றுவார். இவர் எதற்காக தன்னைச் சந்திக்க வந்துள்ளார் என்ற கேள்வியுடனேயே பார்த்தான் அபிஷேக்.
கூடவே அவருடன் முத்துவேலும் அருகே நின்றிருந்தார். இருவரும் தயங்கியபடி நிற்க, அவர்களை ஏற, இறங்கப் பார்த்துக்கொண்டிருந்தான் அபிஷேக்.
“என்ன முத்துவேல் சார்? எதுக்கு இவர் என்னைப் பார்க்க வந்திருக்கார்? ரெண்டு பேரும் தயங்கி நிற்கறதப் பார்த்தா ஏதோ சரியில்லன்னு தோணுதே?” என்றான்.
“அது அபி சார், இவர் வேலை செய்யற பேக்கிங்க் செக்ஷன்க்கு இப்போ ஷிஃப்ட் நேரம் அதிகமாகியிருக்கு. அதனால, அவங்க சம்பளத்த கொஞ்சம் ஏத்திக் கேட்கறாங்க.” என்றார் முத்துவேல்.
அதைக்கேட்டு புருவம் சுருக்கியவன், “இப்போ தீபாவளி சீசன் இல்லையா? அதனால கொஞ்சம் வேலை அதிகமா தான் இருக்கும். மத்தபடி அவங்கவங்க ஷிஃப்ட்டுக்கான பணம் தான் வந்துடுமே. அப்பறம் எதுக்கு சம்பளத்தை அதிகமாக்கணும்?” என்றான்.
“சார்… நீங்க சொல்றது சரிதான். ஆனா, எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் பார்க்கும் போது, எங்களுக்குப் பணம் அப்பப்போ தான வருது. எப்பவும் வரது இல்லையே. சம்பளம் கொஞ்சம் அதிகமாக்கினா நல்லா இருக்கும். ரெண்டு வருஷமா இதே சம்பளம் தான் வாங்கறோம்.” என்று சுந்தர் சொன்னதும், சற்று கோபமானான் அபிஷேக்.
“நீங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா? ரெண்டு வருஷமா அதே சம்பளம் வந்தாலும், தீபாவளி போனஸ், பொங்கல் போனஸ்ன்னு எல்லாத்தையும் அதிகமா தான வாங்கறீங்க. அது உங்க கண்ணுக்குத் தெரியலையா?” என்று வாதிட்டான்.
“அது பொதுவா எல்லாக் கம்பெனிலயும் கொடுக்கறது தான சார். சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுங்கன்னு தான கேட்கறேன். ஒட்டுமொத்தமாவா கேட்கறேன்.” என்றவரை ஒரு பார்வை பார்த்தவன்,
“இது நீங்க ஒருத்தர் மட்டும் வேலை பார்க்கற கம்பெனி இல்ல. இங்க கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கா வேலை செய்யறாங்க. அவங்க எல்லாத்துக்குமே சம்பளத்தை உடனே அதிகப்படுத்தணும்னா எப்படி முடியும்? அதுவும், தீபாவளி பக்கத்துல வந்ததுனால எல்லாத்துக்குமே போனஸ் அலாட் பண்ணச் சொல்லியிருக்கேன். இப்போ வந்து அது, இதுன்னா நான் என்ன பண்ண முடியும்? பேசாமப் போய் உங்க வேலை என்னவோ அதைப் பாருங்க.” என்றான் எரிச்சலில்.
“சார், நான் தன்மையா தான கேட்கறேன். நீங்க என்னடான்னா எடுத்தெறிஞ்சு பேசறீங்க? இது நல்லா இல்ல.” என்றவரைப் பார்த்து முறைத்தான் அபிஷேக்.
“முத்துவேல் சார். இவரப் பேசாமப் போகச் சொல்லுங்க. அப்பறம் நான் என்னை அறியாம கத்திடுவேன்.” என்றதும், அவர் சுந்தரை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சென்றார்.
அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பிரார்த்தனா அவனிடம் வந்தாள்.
“சார்… நீங்க நினைக்கிற மாதிரி இது அவரா பேசல. பின்னால இருந்து செல்வா தான் தூண்டி விட்டிருக்கான். இவர் தான அவன வேலைக்கு ரெகமண்டேஷன்ல சேர்த்துவிட்டது. அதுக்குப் பிரதிபலன காமிச்சுட்டான். நீங்க இந்தப் பிரச்சினைய அதிகமா வளர விடாம எப்படி ஸ்மூத்தா முடிக்கலாம்னு பாருங்க. எனக்குத் தெரிஞ்சு அவன் இன்னும் அதிகமா தான் அவரத் தூண்டிவிடப் பார்ப்பான்.” என்றாள்.
அப்போதுதான் அவனுக்கு விவரம் புரிந்தது. “கரெக்ட் அனா… நான் அப்பவும் யோசிச்சேன். இதுவரைக்கும் நம்ம கம்பெனில சம்பளம் அதிகப்படுத்துங்கன்னு சொல்லி யாரும் என்கிட்ட வந்ததில்ல. ஆனா, இன்னைக்கு வந்திருக்காங்கன்னா, இது பின்னால இருந்து யாரோ பார்த்த வேலையா தான் இருக்கும்னு நினைச்சேன். நீ கரெக்ட்டா க்ளூ கொடுத்திட்ட. நான் இதை ஹேண்டில் பண்ணிக்கறேன்.” என்றவன், அப்போதே எழுந்து வேகமாகச் சென்றான்.
அடுத்த நாள் அவன் கம்பெனிக்குள் நுழையும் போதே, பேக்கிங்க் செக்ஷனுக்கான கட்டிடத்தின் முன்பாக ஒன்று திரட்டப்பட்டவர்கள் போல அனைவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே முத்துவேல் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தார்.
நேராக கோபத்துடன் அபிஷேக் அவர்களை நோக்கிச் செல்ல, பின்னாலேயே அஞ்சலியும், பிரார்த்தனாவும் பதட்டத்துடன் சென்றனர்.
“முத்துவேல் சார்… இங்க என்ன பிரச்சினை? ஏன் எல்லாரும் வேலையப் பார்க்காம, இங்க வந்து உட்கார்ந்திருக்காங்க?” என்று கத்த ஆரம்பித்தான்.
“சார்… நேத்து சுந்தர் வந்து கேட்டதும் நீங்க எந்த பாசிட்டிவ்வான பதிலையும் தரலன்னு சொல்லி, பேக்கிங்க் செக்ஷன்ல வேலை பார்க்கற எல்லாத்தையும் ஒண்ணாக் கூட்டிட்டு வந்து போராட்டம் பண்றான். நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். யாரும் மசியற மாதிரியே தெரியல.” என்றார்.
அதைக்கேட்டு கோபத்தில் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்தபடி செல்வா அவனையும், பிரார்த்தனாவையும் பார்த்து ஏளனமாய் நகைத்தான்.
அவன் சிரிப்பதைப் பார்த்த அபிஷேக், பிரார்த்தனா சொல்வதைப் போல் தான் இப்போது கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்துகொண்டவனாய் ஒரு நிமிடம் தன்னையே மனதினுள் சாந்தப்படுத்திக்கொண்டான். இதை எப்படி சுமூகமாகத் தீர்ப்பது என்று யோசித்தான்.
“இங்க பாருங்க. நீங்க என்ன நினைச்சு இந்த மாதிரியெல்லாம் பண்றீங்கன்னு எனக்குத் தெரியல. இங்க இருக்க எத்தனையோ பேர் ரொம்ப வருஷமா இங்க தான் வேலை செய்யறீங்க. உங்களுக்கு இங்க என்ன குறை இருக்கு? எல்லாத்துக்குமே காலைல டிஃபன், ஏதாவது விஷேசம்னா மதியானம் விருந்து, தீபாவளி, பொங்கல்க்கு போனஸ், ஸ்வீட், துணி, மணின்னு எல்லாமே தான கொடுக்கறோம். அதுமட்டும் இல்ல, மத்த கம்பெனிய விட இங்க தான் உங்க உழைப்புக்கான ஊதியத்த நாங்க சரியா கொடுத்துட்டிருக்கோம். அப்பறமும் ஏன் சம்பளம் ஏத்திக் கொடுங்கன்னு சொல்றீங்க?” என்றான்.
“சம்பளம் எல்லாத்துக்குமே சரியானதா தான் இப்போவரைக்கும் கொடுத்திட்டிருக்கோம். நம்ம கம்பெனிக்கு வர லாப, நஷ்டக் கணக்கெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு எவ்ளோ நஷ்டம் வந்தாலும், உங்க எல்லாத்துக்கும் மாசா மாசம் சம்பளத்தை கரெக்ட்டா தான கொடுக்கறோம். அதையெல்லாத்தையும் காரணம் காட்டி உங்களுக்கு ஒரு மாச சம்பளத்துல ஏதாவது பாகுபாடு காட்டினோமா? இல்ல தராம தான் போனோமா? நீங்க அதையெல்லாம் யோசிச்சுப் பார்க்கணும். ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்களோட தீபாவளி போனஸ் எல்லாத்தையும் கொடுக்கறதப் பத்தி தான் பேசிட்டிருந்தோம். எங்களுக்காக இவ்வளவு வருஷமா உழைக்கிற உங்களுக்கு ஒரு மாச சம்பளம் இல்ல, ஒன்றரை மாச சம்பளத்த போனஸா கொடுக்க இருக்கோம். ஆனா, அதைப் புரிஞ்சுக்காம நீங்க இங்க வந்து போராட்டம் பண்ணி, உங்க நேரத்தை மட்டுமில்லாம, என்னோட நேரத்தையும் வீணடிக்கிறீங்க.” என்று நிதானமாகவே பேசினான்.
“என்ன தம்பி சொல்றீங்க? இந்த வருஷம் போனஸே இல்லைன்னு இல்ல சொல்லி எங்களப் போராட்டம் பண்ணக் கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா, நீங்க எங்கள மனசுல வச்சு இந்த வருஷம் ஒன்றரை மாச சம்பளத்த போனஸா தரேன்னு சொல்றீங்க. இவனுங்க பேச்சக் கேட்டுட்டு வந்தத நினைச்சா எனக்கே சங்கடமா இருக்கு. மன்னிச்சிடு தம்பி. இன்னும் என்னங்கடா உட்காந்திருக்கீங்க, எழுந்திரிங்க. இனிமேல் எவனாவது போராட்டம், அது இதுன்னு சொல்லட்டும் நானே துரத்தி விட்டுடறேன்.” என்று சொன்னபடி முதியவர் ஒருவர் எழுந்து செல்ல, அவருடனேயே பாதிக்கும் மேலானவர்கள் சென்றுவிட்டனர்.
மீதி இருந்தவர்கள் சொச்சம் பேர் மட்டுமே. அவர்களையும் பார்த்தவன், “உங்க மனசு இன்னும் மாறல இல்ல. நான் வேணும்னா உங்களுக்கு மதியம் வரைக்கும் டைம் தரேன். இங்க மட்டுமில்ல, இன்னும் எத்தனையோ கம்பெனிஸ் நம்ம கோயம்புத்தூர்ல இருக்கு. அங்கயும் போய் எங்க சம்பளம் அதிகமா தராங்கன்னு விசாரிச்சிட்டு வாங்க. அதே மாதிரி தீபாவளி போனஸ் கூட தராங்களான்னு கேட்டுட்டு வாங்க. அப்படி நம்ம கம்பெனிய விட பெஸ்ட்டா வேறா கம்பெனி இருக்குன்னு நீங்க சொல்லிட்டா, அதுக்கப்பறம் என்ன பண்றதுன்னு நானே முடிவு பண்றேன்.” என்றதும், அதிலிருந்த சில பேர் மறுபேச்சு எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்றுவிட்டனர்.
மீதம் இருந்தவர்கள் சுந்தரும், செல்வாவும், அவரால் சிபாரிசு செய்யப்பட்ட இருவர் மட்டுமே. இவர்கள் நால்வரை சமாளிப்பது ஒன்றும் அவனுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.
சுந்தரிடம் வந்தவன், “அண்ணா, உங்கள இங்க வேலை செய்யற எம்ப்ளாயின்னு நான் நினைக்கல. நம்ம கம்பெனியப் பொறுத்தவரைக்கும் எனக்கு எல்லாருமே என்னோட குடும்பம் மாதிரிதான். அப்படிச் சொல்லித்தான் என்னை தாத்தா வளர்த்தார். அவர் இருந்தவரைக்கும் இந்தக் கம்பெனிய எப்படிப் பார்த்துக்கிட்டாரோ, அதே மாதிரிதான் நானும் பார்த்துக்கணும்னு ரொம்பப் பாடுபடறேன். அதுக்கு உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் எனக்கு வேணும். நீங்களே யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு உங்க வைஃப்க்கு ஏதோ உடம்பு முடியல உடனே ஆபரேசன் பண்ணனும்னு சொன்னதும், அப்போவே முத்துவேல் சார்கிட்ட சொல்லி உங்களுக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன். அந்த மாதிரி யார் உங்களுக்கு உடனே உதவி செய்வா சொல்லுங்க? எதையுமே நினைச்சுப் பார்க்காம சம்பளம் கொடுக்கலன்னதும் போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க இல்ல? உங்களப் பத்தி தாத்தா எத்தனையோ தடவ பெருமையா பேசியிருக்கார். ஆனா, நீங்க அப்படி இல்லன்னு இன்னைக்கு நிரூபிச்சிட்டீங்க.” என்றான்.
அவன் பேசியதைக் கேட்டு மனமிறங்கியவர், “தப்பு தான் சார்… நான் அறிவிழந்து போய், கேட்கக்கூடாதவங்க பேச்செல்லாம் கேட்டுட்டு இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. அன்னைக்கு நீங்க உடனடியா பண்ண உதவிய நான் மறந்திருக்கக்கூடாது. என் பொண்டாட்டி அப்பவும் சொன்னா, நான் தான் முட்டாள்தனம் பண்ணிட்டேன். இனிமேல் இந்த மாதிரி எதுவும் நடக்காது.” என்றவர் அமைதியாக விலகிச் சென்றார்.
அவரே செல்வதைப் பார்த்த மற்ற இருவரும் எதற்கு வம்பு? என்று அவருடனேயே சென்று விட்டனர். முன்னர் ஆட்டு மந்தை போல் குவிந்திருந்த கூட்டம் ஒவ்வொன்றாக விலகிச் சென்றுவிட, இப்போது செல்வா மட்டுமே அங்கே தனித்து நின்றுகொண்டிருந்தான்.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
செய்த அனைத்தும் செல்வாவுடைய வேலைதான் என்று பிரார்த்தனாவின் மூலம் நன்றாகவே தெரிந்துகொண்டான் அபிஷேக். தான் இப்போது ஏதேனும் முட்டாள்தனமாக எதையும் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
இதுவே அதிகாரமாகப் பேசியிருந்தாலோ, இல்லை வேறு ஏதாவது செய்திருந்தாலோ இந்தப் பிரச்சினை இத்தனை சுமூகமாக முடிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான், அனைவரையும் தனது சமாதானப் பேச்சின் மூலம் அமைதிப்படுத்தி அனுப்பிவிட்டான்.
இதை அவனிடம் எதிர்பார்க்காத செல்வா, அவனைப் பார்ப்பதை விடுத்து கீழே குனிந்துகொண்டு நின்றான். அபிஷேக்கோ அவனைத் தனது கனல் பார்வையில் சுட்டுக்கொண்டிருந்தான்.
“நீ வேலைக்கு சேர்ந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல. இங்க எந்த வேலையப் பார்க்க வந்தியோ அதை விட்டுட்டு, இல்லாத வேலையெல்லாம் பார்த்திருக்க? நீ சொன்னா உடனே இவங்க எல்லாரும் இந்தக் கம்பெனிய விட்டுப் போயிடுவாங்கன்னு நினைச்சியா? அப்படி நீ யோசிச்சிருந்தா அது உன்னோட முட்டாள்தனம். இது எங்க தாத்தா ஆரம்பிச்ச சாம்பிராஜ்யம். அதத் தகர்த்து ஏறியனும்னு யார் நினைச்சாலும் அவங்கதான் அழிஞ்சு போவாங்க. இதுக்கும் மேல நீ இங்க நின்ன, அப்பறம் நானே உன்னைக் கொன்னுடுவேன். கெட் அவுட்.” என்று ஆவேசமாய்க் கத்தினான் அபிஷேக்.
அவன் கத்தியதைப் பார்த்து ஒரு நிமிடம் செல்வா மிரண்டு போனாலும், மனதில் அவனை நினைத்துக் கறுவினான். இது அவனுடைய இடம், அவனைத் தன்னால் இங்கே எதுவும் செய்ய முடியாது என்றே அமைதியாய்ச் சென்றான்.
அதே போல், செல்லும் போது அங்கே நின்ற பிரார்த்தனாவையும் அவன் பார்க்காமல் இல்லை. அவளை எரித்துவிடுவதைப் போல் பார்க்க, அவளோ அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“இதுக்கெல்லாம் காரணம் நீதானடி? எனக்குத் தெரியும். இவனோட சேர்ந்து நீ சுத்தும் போதே தெரியும். உனக்கெல்லாம் வெட்கமா இல்ல?” என்று வரம்பு மீறிப் பேசினான் செல்வா.
அதைக் கேட்ட அஞ்சலி, “ஹலோ… யூ க்ராஸிங்க் யுவர் லிமிட்.” என்றாள்.
“என்ன இங்கிலீஷ்ல பேசுனா நீ பெரிய இவளா? நீயும் தான அவனோட சுத்திட்டிருந்த. ரெண்டு பேரும் நல்லா அவன மயக்கி வச்சிருக்கீங்க.” என்று அவன் பேச்சு மேலும் எல்லை மீறிச் செல்ல,
“ஏய்… வாய மூடு…” என்று பிரார்த்தனா கத்தினாள்.
அதைக் கேட்டு அவர்களிடம் வந்த அபிஷேக் அவனை ஓங்கி ஒரு அறை வைத்தான். அதைப் பார்த்தவன் அதிர்ந்தே போனான். பிரார்த்தனாவும், அஞ்சலியும் இதை எதிர்பார்க்கவில்லை.
“என்னடா ரொம்ப ஓவரா பேசற? அவங்க ரெண்டு பேரையும் பத்திப் பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு?” என்று மேலும் ஒரு அறை வைத்தான்.
மீண்டும் செல்வாவை அறைந்ததும் அவன் வேகமாய் எழுந்து அபிஷேக்கை அடிக்கச் செல்ல, அங்கிருந்த காவலாளிகள் வந்து செல்வாவைப் பிடித்துக்கொண்டனர். அவனை இழுத்துக்கொண்டு சென்று வெளியே தள்ளினர்.
“என்னையா இப்படிப் பண்ணீங்க? உங்கள விடமாட்டேன்.” என்று கோபத்தில் கத்தியபடியே சென்றான் செல்வா.
அவன் சென்றதும் தான் மனம் நிம்மதியடைந்தது அவர்களுக்கு. ஆனால், பிரார்த்தனா மட்டும் சற்றுக் கவலையாகத் தெரிந்தாள்.
அலுவலக அறைக்குள் சென்று நுழைந்ததும் அவளைப் பார்த்த அஞ்சலி, “என்னாச்சு பிரார்த்தனா? அவன் தான் போய்ட்டானே. அப்பறம் ஏன் பயப்படற?” என்றாள்.
“இல்ல மேம். அவன் ரொம்ப மோசமானவன். அவனோட தோல்விய அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்கமாட்டான். கண்டிப்பா வேற ஏதாவது பிரச்சினை பண்ணுவான்னு தோணுது. அதை நினைச்சுத்தான் பயப்படறேன்.” என்றாள்.
அதைக் கேட்ட அபிஷேக், “இங்க பாரு அனா… அவன் உன்ன அன்னைக்குக் கேவலமா பேசினப்போவே நாலு அறை இதே மாதிரி நீ விட்டிருந்தா, அவன் இந்தப் பக்கம் வரதுக்கே யோசிச்சிருப்பான். இப்போ பாரு, தேவையில்லாம நான் உனக்காக அவன அறைய வேண்டியதாப் போயிடுச்சு.” என்றதும், மெலிதாக சிரித்தாள் பிரார்த்தனா.
“ஆஹா!! எவ்ளோ பெரிய ஜோக் சொல்லிட்ட அபி? அதுக்கு பிரார்த்தனா வேற சிரிக்கறா.” என்று கேலி பேசினாள் அஞ்சலி.
“ஹலோ… நான் சீரியஸ்ஸா தான் சொல்றேன். இவ அவனப் பார்த்து பயப்படறதால தான் அவன் இன்னும் இவள ரொம்பக் கேவலமாப் பார்க்கறான். எல்லாமே ஒரு லிமிட் தான் அனா… எதுவா இருந்தாலும் ஒரு கை பார்த்துடணும். நம்ம சுயமரியாதைய நாம எப்பவுமே விட்டுக் கொடுக்கக் கூடாது. அவன் உன்னை மரியாதையில்லாம எதிர்த்து நின்னா, நீயும் பதிலுக்கு அவனை எதிர்த்து நிக்கணும். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு தைரியமா இருக்கணும். அதுவே நமக்கு ஒரு பெரிய பலத்தைக் கொடுக்கும். இதை நீ முதல்ல கத்துக்கணும்.” என்று அவளுக்கு பெரிய அறிவுரையை வழங்கிக்கொண்டிருந்தான்.
அதைக் கேட்டு பிரார்த்தனா தலையாட்ட, அஞ்சலியோ கேலியாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அபிஷேக்,
“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம், நீ முதல்ல இவகூட சேருறத கொஞ்சம் குறைச்சுக்கோ. இல்லைன்னா உன்னோட ப்ளஸ் உனக்குத் தெரியாமயே போயிடும்.” என்று வேண்டுமென்றே சொன்னான்.
அதைக் கேட்டு முறைத்த அஞ்சலி, “அடப்பாவி!! இதெல்லாம் உனக்கே அடுக்குமா? நீ சொல்ற அட்வைஸ மனுஷன் கேட்க முடியுமா? ஆனா பாரு வேற வழியில்லாம பிரார்த்தனா கேட்டுட்டிருக்காளேன்னு நினைச்சு சிரிச்சேன். அதுக்கு நீ என்னை வம்பிழுக்கறியா?” என்று அவனை அடித்தாள்.
“ஏய்… அஞ்சலி… தயவுசெய்து இப்படி அடிக்காத. நானாவது ஏதோ கொஞ்ச நாளைக்குன்னு எல்லாத்தையும் தாங்கிக்கறேன். ஆனா, பாவம் தேவ். அவர நீ இப்படி அடிச்சா அவர் எப்படித் தாங்குவார்?” என்று தேவையில்லாமல் தேவ்வை இழுத்தான்.
“என்னோட தேவ் ஒன்னும் உன்னை மாதிரி இல்ல. அவனுக்கு என்னை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியும். உன்னைக் கட்டிக்கப் போறவதான் பாவம்.” என்று பெருமூச்சு விட்டபடி பிரார்த்தனாவை ஓரக்கண்ணில் பார்த்தாள் அஞ்சலி.
அதைப் பார்த்துவிட்ட அபிஷேக், “அது எனக்கு வரப்போறவளோட பாடு. அதைப் பத்தி நீ கவலைப்படாத. அவள நான் எப்படி ஹேண்டில் பண்ணனுமோ, அப்படிப் பண்ணிக்கறேன்.” என்று அவனும் அவளை ஓரக்கண்ணில் பார்த்து சொல்லிவைத்தான்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் சம்பாஷணைகளை பிரார்த்தனா ஒருபுறம் கேட்டுக்கொண்டிருந்தாலும், அவளின் கைகள் இப்போது கணிணியை மையம் கொண்டிருந்ததால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவள்.
அடுத்தடுத்து நாட்கள் வேகமாய்ச் சென்று கொண்டிருந்தன. சொன்னதைப் போலவே ஒன்றரை மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவர்களது அக்கவுண்டில் போட்டுவிடுவதற்கான ஏற்பாடுகளை பிரார்த்தனாவின் மூலமாக செய்தான் அபிஷேக்.
தனது கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்களைத் தன் குடும்பமாக நினைப்பதாக அபிஷேக் சொன்னது வெறும் வாய் வார்த்தை அல்ல, நிஜம் தான் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டாள் பிரார்த்தனா.
அந்த வார விடுமுறை தினத்தில், அனைவருக்கும் தீபாவளிக்கான துணிமணிகள் தேர்வு செய்வதற்காக வெளியே செல்லத் திட்டமிட்டனர். இது போன்ற விஷேச தினங்கள் என்றால், அவர்களது குடும்பத்திற்கென தனியாக உள்ள ஆடை வடிவமைப்பாளரிடம் அனைத்தையும் தேர்வு செய்து சொல்லிவிடுவது வழக்கம்.
அவரும் குறிப்பிட்ட தேதியில் அவர்களுக்கு அதை வடிவமைத்துக் கொடுத்துவிடுவார். எனவே தான், இன்று அவருடைய ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்று ஆடைகளைத் தேர்வு செய்து கொடுப்பதாகத் திட்டம்.
பிரார்த்தனாவையும் அவர்களுடன் அழைக்க, அவளோ வேண்டாம் என்று தயங்கினாள். ஆனால், அபிஷேக் ஒரே பேச்சாக வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டளையிட, வேறு வழியில்லாமல் சரியென்று விட்டாள்.
அதே போல், சில ஆபரணங்களையும் எடுக்க வேண்டும் என்று சீதா சொல்லியிருந்ததால், அவரையும் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று இருந்தான் அபிஷேக். ஆனால், அஞ்சலியின் திட்டமோ வேறாக இருந்தது.
அவள் ஆடைகளைத் தேர்வு செய்ய தேவ்வை அவ்விடம் அழைத்திருந்தாள். ஆனால் சீதா வந்தால், தான் அவனோடு நேரத்தை செலவிட முடியாது என்பதால், அவரை எப்படியாவது வீட்டிலேயே இருக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.
“இப்போ தலைவலி பரவாயில்லடி ராஜாத்தி. நானும் உங்ககூட வரேன்.” என்று சீதா சொல்ல,
அவளது தவிப்பை அறிந்துகொண்ட அபிஷேக், “அம்மா, உனக்கெதுக்கு வீண் அலைச்சல். கொஞ்ச நேரம் நடந்தாலே தலைசுத்துதுன்னு சொல்லுவ. நான் அங்க போய் உனக்கு வீடியோ கால் போட்டுக் காட்டறேன். உனக்கு எது வேணுமோ அதை நீ செலக்ட் பண்ணிக்கோ. சரியா?” என்றான்.
தனது மகனும் சொல்வது அவருக்குத் தோதாகப் படவே, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சரியென்று அவர்களை மட்டும் அனுப்பிவைத்தார் சீதா.
மூவரும் வெளியே வந்ததும், “ஏய்… கேடி… என்ன தேவ்வ கூப்பிட்டிருக்கியா? அதனால தான் அம்மாவ வர வேண்டாம்னு சொன்னியா?” என்றான் அபிஷேக்.
அதைக் கேட்டதும் புன்னகைத்த அஞ்சலி, “ஹே… சூப்பர் அபி… கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட.” என்று அவனைக் கட்டிக்கொண்டாள். அதைப் பார்த்து பிரார்த்தனா தலையைக் கீழே குனிந்தபடி அமைதியாகச் சென்று வண்டியில் ஏறினாள்.
இதுவே முதலில் இருந்த அபிஷேக்காக இருந்தால், அதைப் பெரிதாக நினைத்திருக்க மாட்டான். ஆனால், இன்று அவனுடைய அனா… முன்பாக அவள் இப்படிச் செய்ததும், அவளை உடனே பிடித்து நிறுத்தினான்.
“ஏய்… இங்க பாரு, சும்மா எப்பவும் இந்த மாதிரி கட்டிப்பிடிக்காத அஞ்சலி. இனிமேல் எதுவா இருந்தாலும் உன்னோட தேவ்வோட நிறுத்திக்கோ.” என்று அவன் சொன்னதும்,
முதலில் புரியாமல் விழித்த அஞ்சலி, அதன் பிறகு பிரார்த்தனாவைப் பார்த்ததும் தான் புரிந்துகொண்டாள்.
“ஓ!! ஓ!! புரிஞ்சுடுச்சு அபி… சாரி… இனிமேல் இப்படிப் பண்ண மாட்டேன்.” என்று சொன்னவளாய் அவளும் காரின் கதவைத் திறந்துகொண்டு சென்று பிரார்த்தனாவுடன் அமர்ந்துகொண்டாள்.
“சாரி பிரார்த்தனா…” என்று அவள் வேண்டுமென்றே அபிஷேக் முன்பாக அவளிடம் கூறியதும்,
“எதுக்கு மேம் சாரி?” என்றாள்.
“ப்ச்ச்… அது எதுக்கோ? நீ முதல்ல இந்த மேம்ன்னு கூப்பிடறத நிறுத்து. ஏதோ தேர்ட் பர்ஸன்ஸ கூப்பிடற மாதிரியே இருக்கு.” என்றாள் அஞ்சலி.
“ஹூம்ம்… எப்பவும் இதையே சொல்லு.” என்று சலித்துக்கொண்டவள், அதன்பிறகு தேவ் அலைபேசியில் அழைக்க அதில் மும்முரமானாள்.
இவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டே காரைச் செலுத்துவதில் கவனமானான் அபிஷேக். அரைமணி நேரப் பயணத்தில் அவர்கள் வந்தடைய வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே சென்றதும், தேவ் இவர்களுக்கு முன்னரே அங்கே காத்திருந்தான். ஓடிச்சென்று அவனைப் பிடித்துக்கொண்ட அஞ்சலி, அவனது கையை இறுக அணைத்துக்கொண்டே அவனுடன் சென்றாள்.
அவர்களது அன்பைப் பார்த்துப் பூரித்துப் போனவளாய்ச் சென்றாள் பிரார்த்தனா. கூடவே அபிஷேக்கும் அவளுடன் இணைந்துகொண்டான். அங்கே சென்றதும் ஆடை வடிவமைப்பாளரின் உதவியுடன் பல்வேறு உடைகளை ஆராய்ந்தவர்கள் இறுதியில் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்து கொடுத்தனர்.
முதலில் வேண்டாமென்று மறுத்த பிரார்த்தனா, மூவரின் வற்புறுத்தலில் சரியென்று சம்மதித்தாள். கிட்டத்தட்ட தேவ்வும், அஞ்சலியும் ஆடைகளை ஒரே மாதிரியாகத் தேர்வு செய்திருந்தனர்.
இந்த முறை பிரார்த்தனா தேர்வு செய்த ஆடைக்கு மாதிரியான ஆடையையே தேர்வு செய்தான் அபிஷேக். இது அஞ்சலிக்கு முதலிலேயே தெரியும் என்பதால் அமைதியாய் இருந்தாள். ஆனால், பிரார்த்தனாவோ புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.
எதையும் அவளால் உடனே உறுதிப்படுத்த முடியவில்லை. சீதாவிற்குத் தேவையான புடவை வகைகளை அபிஷேக் அலைபேசி வழியாகக் காண்பித்துத் தேர்வு செய்துவிட்டான்.
அடுத்து நகைக் கடைக்குச் சென்றனர். அங்கே தேவ்விற்கு ஒரு வைர மோதிரத்தை பரிசளிக்க எண்ணி அவனை அந்தத் தளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாள் அஞ்சலி.
கீழே இருந்த தங்க நகை தளத்தில், சீதா வேண்டுமென்று கேட்டிருந்த நகையை மீண்டும் அலைபேசி வாயிலாகக் காண்பித்து தேர்வு செய்துகொண்டிருந்தான் அபிஷேக். பிரார்த்தனாவோ அனைத்தையும் ஒருவித ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
ஆரம்பத்தில் அவள் சடங்கான போது, அவளது அத்தை சேர்த்துவைத்த பத்து பவுன் நகைகள் மட்டுமே அவளுக்கென்று இருந்தன. ஆனால், அதையும் வங்கியில் அடமானம் வைத்து காசாக்கிக் கொண்டார் ராஜன்.
அவளுக்கென்று இப்போது எதுவுமே இல்லை. அவளது பிறந்தநாள் பரிசாக தாத்தா-பாட்டியும் ஒரு சிறிய வெள்ளிச் சங்கிலியை கொடுத்தனர். அது மட்டுமே இப்போது அவளது கழுத்தில் உள்ளது.
பெரிதாக நகைகள் என்று எதுவுமே இல்லாததால், இனிமேல் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும் என்று அங்கே உள்ளவற்றைப் பார்த்து நினைத்துக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
திடீரென அவளை அவனருகே அழைத்தான் அபிஷேக். எதற்காகத் தன்னை அழைக்கிறான் என்று விழித்தபடியே வந்தாள் பிரார்த்தனா.
அருகே வந்ததும், “இங்க உட்காரு.” என்று அவளிடம் கட்டளையிட்டவன்,
“இந்த நகைய இவங்களுக்குப் போட்டு விடுங்க.” என்று அங்கே இருந்த பணிப்பெண்ணிடம் சொன்னான்.
அதைக் கேட்டு அதிர்ந்து போய் எழுந்துவிட்டாள் பிரார்த்தனா.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
“சார்… அஞ்சலி மேம் வரட்டும். அவங்களுக்குப் போட்டுப் பாருங்க. எனக்கு தயவுசெய்து வேண்டாம்.” என்று சங்கடத்தில் நெளிந்தாள்.
“அவ தான் தேவ்வோட மேல போயிருக்கான்னு தெரியும் தானே? இப்போ சும்மா போட்டுப் பார்க்கறதுல உனக்கு என்ன கஷ்டம்? நீ பேசாம இரு.” என்று அவளை அடக்கியவன், அவளுக்கு அந்த நகையைப் போட்டுப் பார்க்க வைத்தான்.
அவளுக்கு அது அற்புதமாகப் பொருந்தியது. அவள் கழுத்தில் இருக்கும் போது அழகாகத் தெரிந்தது. கண்ணாடியில் அதைக் காண்பித்த போது, ஒரு நிமிடம் அவளையே மறந்து அதைத் தடவிப் பார்த்தாள் பிரார்த்தனா.
அதைப் பார்த்து ரசித்த அபிஷேக், அதைத் தனது அலைபேசியில் புகைப்படமாக எடுத்துக்கொண்டான். அதே போல், இன்னொரு சிறிய அளவில் டாலருடன் செயினையும் போட்டுவிடச் சொன்னான்.
அதற்கும் அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க, அவனோ அமைதியாய் இரு என்பதைத் தவிர வேறு எதையும் அவளிடம் சொல்லவில்லை.
அதுவும் அவளுக்கு அழகாகவே இருந்தது. அந்த இரண்டு நகைகளையும் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டான் அபிஷேக். அதைத் தொடர்ந்து அஞ்சலியும், தேவ்வும் அவர்கள் தேர்வு செய்ததைக் காண்பித்தனர்.
அனைத்தையும் முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டனர் நால்வரும். தேவ் அங்கிருந்து கிளம்பிவிட, அவனுக்கு விடைகொடுத்துவிட்டு இவர்கள் மூவரும் வீட்டிற்குக் கிளம்பிவிட்டனர்.
வீட்டிற்கு வந்ததும், தாங்கள் வாங்கி வந்த அனைத்தையும் சீதாவிடம் காண்பித்தனர். அவரும் அதைப் பார்த்து ஆனந்தப்பட்டார். அஞ்சலி களைப்பில் தனது அறைக்குச் சென்றுவிட, அபிஷேக் நகைகளை சீதாவிடம் காண்பித்தான்.
“அம்மா, நீ செலக்ட் பண்ண ஜூவல்ஸ் இந்தா? இதுதானான்னு பார்த்து செக் பண்ணிக்கோ.” என்றவனிடம் வாங்கி அதைப் பார்த்தார் சீதா.
“ம்ம்.. இதே தாண்டா. ரொம்ப அம்சமா இருக்கு. நியூ டிசைன் இல்ல?” என்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
பிறகு, சீதாவிடம் சைகையில் எதையோ அபிஷேக் சொல்ல, அவரும் அதைப் புரிந்துகொண்டு, “ஆங்க்… பிரார்த்தனா. இங்க வா.” என்றதும், அவள் அருகே வந்தாள்.
அவளது கையில் ஒரு சிறிய நகைப் பெட்டியைக் கொடுத்தவர், “இது உனக்குத்தான் வாங்கிக்கோ.” என்றார்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சியானவள், அதைத் திறந்து பார்த்தபோது அதில் அபிஷேக் தேர்வு செய்த அந்த விநாயகர் டாலர் பொறித்த செயின் இருந்தது.
அதைப் போட்டுப் பார்த்த போதே, அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அதிலும், அவளது இஷ்ட தெய்வம் அதில் இருந்தது இன்னும் மனதுக்கு நிறைவாய் இருந்தது.
ஆனால், அது தனக்கானது இல்லை என்றே நினைத்து கழட்டி அவனிடம் கொடுத்தாள். ஆனால், அது தனக்காகத்தான் வாங்கியிருக்கிறான் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டாள்.
இருப்பினும் தயங்கியவள், “ஆண்ட்டி, இது கோல்ட் செயின். இதை எனக்குக் கொடுக்கறீங்க? இதெல்லாம் ரொம்ப அதிக விலை இருக்கும்.” என்றாள்.
“விலையப் பத்தியெல்லாம் நீ ஏன் கவலைப்படற? இது உனக்குன்னு தான் அபிய வாங்க சொன்னேன். உன் கையில, கழுத்துல, காதுலன்னு நான் தங்கத்தையே பார்த்ததில்ல. எப்பவும் அந்த சின்ன வெள்ளி செயின் போட்டிருக்க. கையில கண்ணாடி வளையல், காதுல சின்னதா ஒரு வெள்ளிக் கம்மல். பொண்ணுங்களுக்கு தங்கம்ன்னா எவ்ளோ பிடிக்கும்னு தெரியும் தானே? அதனால தான், உனக்கு ஒரு பிரசண்ட் பண்ணனும்னு நினைச்சு இந்தச் செயின வாங்கிருக்கோம். நீ இதை கண்டிப்பா போட்டுக்கணும்.” என்றார் சீதா அன்புடன்.
“ஆண்ட்டி… இதை எனக்காகக் கொடுக்கறது உங்க பெருந்தன்மை. ஆனா, எனக்கு இது வேண்டாம் ஆண்ட்டி. ப்ளீஸ்…” என்றவள், அதற்கு மேல் அங்கே நிற்காமல் படியேறி தனது அறைக்குச் சென்றாள்.
அவளது மனதில் குடிகொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையை இருவரும் புரிந்துகொண்டனர். சீதா, அபிஷேக்கைப் பார்க்க, அவனோ அதை அவரிடம் வாங்கிக்கொண்டு மேலே சென்றான்.
உள்ளே நுழைந்து ஆடையை மாற்ற ஆயத்தமானாள் பிரார்த்தனா. அப்போது கதவு தட்டும் ஓசை கேட்க, யாரென்று பார்க்க மாற்ற வைத்திருந்த உடையை அப்படியே வைத்துவிட்டுச் சென்று கதவைத் திறந்தாள்.
அங்கே, அபிஷேக் கதவின் ஓரமாய் நின்று அவளைப் பார்த்தான். இவன் இப்போது இங்கே ஏன் வந்தான் என்று அவள் விழிக்க, தனது கையில் எடுத்து வந்திருந்த செயின் பெட்டியை அவள் முன் நீட்டினான் அவன்.
அதைப் பார்த்தவள், “சார்… இதை ஏன் இங்க திரும்பவும் எடுத்து வந்தீங்க? எனக்கு வேண்டாம் இது.” என்றாள்.
அதைக் கேட்டவன், “உனக்குப் பிடிக்கும்னு தான் உன்னோட பிள்ளையார் வச்ச டாலர் பார்த்து வாங்கினேன். ஆனா, நீ வேண்டாம்னு சொல்ற.” என்றான்.
அதற்கு அமைதியாய் நின்றாள் பிரார்த்தனா.
“எனக்குத் தெரியும் அனா… உனக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு. கடைல அவங்க நகைய உனக்குப் போட்டுவிட்டதும், உன் முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்தை நான் பார்க்கலன்னு நினைச்சியா? அதை நான் ஃபோட்டோவே எடுத்து வச்சிருக்கேன். வேணும்னா காட்டவா?” என்றான்.
“சார்… பிடிச்சது எல்லாத்தையுமே வாங்கிட முடியாதில்லையா? எனக்கு இப்போதைக்கு வெள்ளியே போதும். நான் அந்தக் கடையில விசாரிச்சுட்டு வந்திருக்கேன். அடுத்த மாசத்துல இருந்து நகைச்சீட்டு போடலாம்னு இருக்கேன். பதினொரு மாசம் முடிஞ்சதும், அந்தப் பணத்துக்கு நகை எடுத்துக்கலாம்னு சொன்னாங்க.” என்றவளைப் பார்த்து சிரித்தான் அபிஷேக்.
“எதுக்கு சார் சிரிக்கறீங்க?” என்றாள்.
“இல்ல, நகைச்சீட்டு போட்டு என்ன பண்ணப் போற?” என்றான்.
“என்னோட மேரேஜ்க்கு நகை சேர்க்கணும் இல்லையா சார்? ஏதோ என்னால முடிஞ்சத நானே செஞ்சுக்கலாம்னு இருக்கேன்.” என்றவளை குறுகுறுவெனப் பார்த்தான்.
“அதெல்லாம் தேவையே இல்ல அனா டியர்… உனக்கு எல்லாத்தையும் நானே பண்ணுவேன்.” என்று அவள் அறியாமல் மனதில் நினைத்துக்கொண்டவன்,
“சரி, நீ சேர்க்கற நகைல இதுவும் ஒண்ணுன்னு நினைச்சுக்கோ.” என்று அதை மீண்டும் அவளிடம் நீட்டினான்.
“சார்… பரவால்ல… இது உங்ககிட்டயே இருக்கட்டும்.” என்றாள்.
அதைக் கேட்டு புருவம் சுருக்கியவன், “நீ சொன்னா கேட்க மாட்ட இல்ல?” என்றான்.
அதைக் கேட்டு தலையைக் குனிந்துகொண்டு அமைதியாய் நின்றாள். அப்போது, அவள் முன்பு அந்த செயினை தனது இரு கைகளால் விரித்துக்காட்டியவன், அவளது எந்த அனுமதியும் இல்லாமல் நெருங்கி வந்து அதை அவள் கழுத்தில் போட்டுவிடத் துவங்கினான்.
ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனாள் பிரார்த்தனா. கிட்டத்தட்ட அவன் தாலி கட்டுவதைப் போல் இருந்தது அவளுக்கு. என்ன செய்து அவனை தடுத்துநிறுத்த என்றே தெரியாமல் அவனது நெருக்கத்தில் ஊமையாகிப் போனாள்.
அதைப் போட்டுவிட்டவன், “ம்ம்… பாரு உனக்கு எவ்ளோ அழகா இருக்கு? இதைப் போய் வேண்டாம்னு சொல்ற? இது எப்பவும் உன் கழுத்துல தான் இருக்கணும் அனா… எந்த சூழ்நிலைலயும் நீ இதை கழட்டக்கூடாது. ஞாபகம் இருக்கட்டும்.” என்று உறுதியாகச் சொன்னவன், அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றான்.
அபிஷேக்கின் நடவடிக்கைகளை அவளால் தடுக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. அவன் தனது முதலாளி என்ற ஒரே காரணத்தால் அவனது செய்கைகளை அவள் பொறுத்துக்கொள்கிறாள் என்பதில்லாமல், ஏனோ சில நாட்களாக அவனைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயத்தில் அவள் அறியாமலேயே அவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்தாள் என்பது தான் விஷயமே.
ஆனால், அதை அவள் உணர்வதற்கு முன்னாலேயே அவளது மனசாட்சி அவளது நிலையைப் பற்றியும், அவள் எப்படிப்பட்டவள் என்பதையும் உணர்த்திவிடும். அதனால் தனது மனதிற்குக் கடிவாளமிட்டபடியே இருந்தாள்.
இப்போதோ அதையும் மீறி, அபிஷேக் செய்த இந்தச் செயலை அவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் இப்போதெல்லாம் பார்க்கும் பார்வைகளும், சில நேரம் வேண்டுமென்றே செய்யும் செயல்களும், அவளை பலவாறு யோசிக்க வைத்தன.
தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்த சமயம், கம்பெனியில் வேலைகள் அனைத்தும் வெகு மும்முரமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தன. பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருப்பதால் தான் இந்த நெருக்கடி.
ஊழியர்களுக்கு, இரண்டு ஷிஃப்ட்டுக்களை நியமித்து வேலை வாங்கினர். ஆனால், அதற்கேற்ற ஊதியமும் அளிக்கப்பட்டது. அதேபோல், அவர்களுக்கான தீபாவளி பரிசுகளையும் ஒப்படைத்தனர்.
பிரார்த்தனா, அலுவலக கணக்குப் பணிகள் மற்றும் அபிஷேக்கினுடைய தனிப்பட்ட வேலைகள் என அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்ததால் மிகவும் சோர்ந்து போனாள். அதைக் கண்டுகொண்டான் அபிஷேக்.
“என்ன அனா… ரொம்ப டயர்டாகிட்டயா? வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ.” என்றான்.
“இல்ல சார். இங்க எல்லாருமே என்னதான் டயர்டானாலும் வேலை செய்யறாங்க தானே? எனக்கு மட்டும் எதுக்கு ரெஸ்ட்? அதெல்லாம் சரியாகிடும்.” என்றொரு பதிலைச் சொல்லிவிட்டு வேலையில் மும்முரமானாள்.
ஆனால், அவனோ அவளை ஏதாவது ஒரு வகையில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான். அதை செயல்படுத்த அஞ்சலி தான் சரியான ஆள் என்று யோசித்து, அஞ்சலியின் அறைக்குச் சென்றான்.
“அஞ்சலி, இன்னைக்கு ஈவினிங் நான் ஸ்பாக்கு போகலாம்னு இருக்கேன். நீ வரியா?” என்றான்.
“ஸ்பாவுக்கா? என்ன திடீர்னு?” என்றாள் அவளோ சந்தேகமாக.
“ரெண்டு நாளா ரொம்ப டைட் வொர்க் இல்ல. எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து ரொம்ப டயர்டா இருக்கு. அதனால தான் போகலாம்னு யோசிச்சேன். அங்க போனா, அந்த மசாஜ்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்.” என்றான்.
“ம்ம்… நானும் லண்டன்ல இருந்தப்போ ஸ்பாவுக்கெல்லாம் போயிருக்கேன். ஆனா, இங்க வந்ததுக்கப்பறம் பார்லர் போகறதுக்குக் கூட டைம் இல்ல.” என்று சலித்துக்கொண்டாள்.
“எனக்குத் தெரிஞ்ச ஒரு ஹோட்டல் இருக்கு. அங்க பார்லரும் சேர்ந்தே இருக்கும். நீ ரெண்டையுமே யூஸ் பண்ணிக்கலாம்.” என்றவனைப் பார்த்து சந்தோஷத்தில் எப்போதும் போல கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அப்போது, எதேச்சையாக அஞ்சலியின் அறைக்கு வந்த பிரார்த்தனாவுக்கு என்னவோ போல் ஆக, வந்தவள் அப்படியே சென்றுவிட்டாள்.
அதைப் பார்த்த அபிஷேக், “ஏய்… எப்போ பாரு இதே வேலையா போச்சு உனக்கு. நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல? எதுவா இருந்தாலும், அது உன் தேவ்கிட்ட மட்டும் வச்சுக்கோ.” என்று தலையில் அடித்துக்கொண்டான்.
அதைக் கேட்டு சிரித்த அஞ்சலி, “இப்போ நீ எதுக்கு சும்மா டென்ஷன் ஆகற? நான் ஒரு ஃப்ரெண்ட்லியா தான் கட்டிப்பிடிக்கறேன் அபி. இதெல்லாம் லண்டன்ல சாதாரணமான விஷயம்.” என்றாள்.
“ஆனா, நீ இப்போ இருக்கறது கோயம்புத்தூர்ல. அது ஞாபகம் வச்சுக்கோ.” என்றவனது கோபம் ஏன் என்று தெரிந்துகொண்டாள் அஞ்சலி.
அவன் எதை எதிர்பார்த்து இதை செய்தானோ, அது சரியாக நடக்கப்போகிறது என்று மனதிற்குள் குதூகலித்தான்.
“வேணும்னா அனாவையும் கூட கூட்டிட்டு வா.” என்றான்.
“அதான பார்த்தேன்.” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட அஞ்சலி, “ஓகே அபி.” என்று தலையாட்டினாள்.
அவன் சொன்னதைப் போலவே, அவர்கள் இருவரும் அன்று மாலை கோவையின் அந்தப் பிரபலமான ஹோட்டலில் உள்ள ஸ்பாவுக்குச் சென்றனர்.
அங்கே பார்லருடன் இணைந்த, ஸ்பாவும் இருந்ததால் கொண்டாட்டமானது அஞ்சலிக்கு. அவளுக்காக மட்டுமே கூடவே வந்த பிரார்த்தனா அவளின் கட்டாயத்தால் ஸ்பாவிற்கு சம்மதித்தாள்.
நவநாகரிக உடையணிந்த பெண்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கான உரிய மசாஜ்களைச் செய்தனர். அதில், அவர்களது அசதி மொத்தமும் காணாமல் போனது போல் இருந்தது.
உடலில் உள்ள மொத்த செல்களும் புத்துயிர் பெற்றதைப் போல் இருந்தது பிரார்த்தனாவிற்கு. இவையெல்லாம் அவள் கனவிலும் நினைத்துப் பார்க்காதவை.
அதன் பிறகு, பார்லரில் ஃபேசியல் செய்ய வேண்டும் என்று அஞ்சலி, அவளையும் இழுத்துக்கொண்டு செய்து முடித்தாள். இதுவே அதிகம் என்று நினைத்திருந்தவளுக்கு இன்னொரு சலுகையும் கிடைத்தது.
அனைத்தையும் செய்துமுடித்து வர நெடுநேரமாகிட, இரவு உணவையும் அதே ஹோட்டலிலேயே முடித்துக்கொண்டனர். அப்போது, அஞ்சலிக்கு தேவ்விடமிருந்து அழைப்பு வந்தது.
அவனிடம் பேசிக்கொண்டிருந்தவள் நேராக அபிஷேக்கிடம் வந்தாள். “அபி, ஒரே நிமிஷம் நான் போய் தேவ்வ பார்த்துட்டு வந்திடறேன். அவன் நாளைக்கு மார்னிங்க் ஃப்ளைட்ல மும்பை போறானாம். வரதுக்கு ரெண்டு வாரம் ஆகும்னு சொல்றான். ப்ளீஸ்…” என்று கெஞ்சியவளை முறைத்தான்.
“ஆல்ரெடி டைம் 10 ஆகுது அஞ்சலி. இப்போ போய் நீ எப்படி பார்ப்ப?” என்றான்.
“அவன் தங்கியிருக்க ஹோட்டல்க்குப் போய் அவனைப் பார்த்துட்டு வந்திடலாம்.” என்றாள்.
“எல்லாரும் போனா ரொம்ப லேட் ஆகும். ஒண்ணு பண்ணு. நான் வண்டியை கீழ நிறுத்தியிருக்கேன். நீ மட்டும் போய் சீக்கிரம் பார்த்துட்டு வந்துடு.” என்றான்.
“ஆங்க்… அது போதும், ஒரு டென் மினிட்ஸ்ல வந்திடுவேன்.” என்றவளைப் பார்த்து சிரித்தான் அபிஷேக்.
சொன்னதைப் போலவே, அவன் ஹோட்டலுக்கு உள்ளே உள்ள பார்க்கிங்க் ஏரியாவில் காரை நிறுத்த, தேவ்வைப் பார்த்துவிட்டு வர ஓடினாள் அஞ்சலி.
அப்போது இவர்கள் இருவர் மட்டுமே இருக்க, “ஸ்பா எப்படி இருந்தது அனா…?” என்றான் அபிஷேக்.
“ரொம்ப ரிலாக்ஸா இருந்துச்சு சார். உடம்பே ஒட்டுமொத்தமா ரெஃப்ரெஷ் ஆன மாதிரி இருக்கு.” என்று உற்சாகமாகப் பேசியவளை முன் கண்ணாடி வழியே ரசித்தான்.
அப்போது சீதாவிடமிருந்து அழைப்பு வந்தது அபிஷேக்கிற்கு.
“என்னம்மா… நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்.” என்று எடுத்த எடுப்பிலேயே பேசியவனை மனதில் திட்டினார் சீதா.
“டேய்… என்ன சொல்ல வரேன்னே கேட்காம நீயா பேசுவியா? நான் அதுக்கு ஒன்னும் போன் பண்ணல. எனக்கு ரொம்ப தலைசுத்தலா இருக்கு. பிரஷர் மாத்திரை வேற தீர்ந்திடுச்சு. நீ வரும்போது வாங்கிட்டு வந்திடு.” என்றார்.
அதைக் கேட்டவன், “ஹூம்ம்… தீபாவளிக்கு பலகாரம் பண்றேன்னு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுட்டு பண்ண இல்ல, அதனால தான் பிரஷர் அதிகமாயிருக்கும். உன்னை யாரு இதெல்லாம் பண்ண சொல்றா?” என்றான் எரிச்சலில்.
“டேய்… வருஷத்துக்கு ஒரு தடவை வர விசேஷம்டா. இதைக் கூடப் பண்ணலன்னா எப்படி? ரொம்பப் பேசாத. மாத்திரைய மட்டும் வாங்கிட்டு வா.” என்று போனை வைத்துவிட்டார்.
அதைப் பார்த்து புருவம் சுருக்கியவன், காரை பின்னால் பார்த்து திருப்பிச் சென்றான்.
“சார்… இன்னும் அஞ்சலி மேம் வரல.” என்றாள் பிரார்த்தனா.
“அம்மாக்கு ஏதோ மாத்திரை வேணுமாம். நாம வரும்போது பக்கத்துல ஒரு மெடிக்கல் ஷாப் பார்த்தேன். நான் ஒரு ஓரமா காரை நிறுத்தறேன். நீ போய் அந்த மாத்திரைய மட்டும் வாங்கிட்டு வந்துடு.” என்றவன், சொன்னதைப் போலவே ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தினான்.
அன்றாடம், பலவித வாகனங்கள் வந்து செல்லும் அவ்வழி அன்று ஏனோ வெறிச்சோடியிருந்தது. அந்த இடத்தில் அந்த மருந்தகத்தைத் தவிர வேறு எந்தக் கடையும் இல்லை.
பிரார்த்தனா மாத்திரையைக் கேட்டு அதை வாங்க இறங்கிச் சென்றாள். அப்போது, அவளைக் கடந்து ஒரு லாரி எதிரில் வேகமாய்ச் செல்ல, மணல் துகள்கள் அவளது கண்ணைப் பதம் பார்த்தது.
கண்ணைத் துடைத்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென இடி முழக்கம் போல் சத்தம் கேட்க, பயந்துபோய் பார்த்தவள் அதிர்ச்சியானாள்.
அந்த லாரி, அபிஷேக்கின் காரை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் போய்க்கொண்டே இருந்தது. அருகே இருந்த பள்ளத்தில் சென்று விழுந்த வண்டியில், அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தான் அபிஷேக்.
(தொடரும்....)
உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்...
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான் அபிஷேக். கை, கால்கள் மற்றும் உடலின் சில பகுதிகளில் அடி பலமாகவே இருக்க, நினைவிழந்திருந்தவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தனர்.
வெளியே நின்றுகொண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவின் சிறிய கண்ணாடி வழியே அவனுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த பிரார்த்தனாவுக்கு இப்போதும் நடந்த நிகழ்வையும், அபிஷேக்கையும் நினைத்து கண்களில் அருவியாய் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
தன்னை கடந்து சென்ற லாரி, அபிஷேக்கின் காரை அடித்துவிட்டுச் செல்ல, அதிர்ந்துபோய் நின்றிருந்தவள் கால்கள் தன்னையும் அறியாது ஓடியது அடுத்த நிமிடமே.
இரண்டடி பள்ளத்தில் கார் நேராகச் சென்று மோதியதில், ஏர்பேக்கில் முகம் புதைந்து அபிஷேக் நிலைகுலைந்து தலை தவிர உடலெங்கும் ரத்தமாகத் தெரிந்தான். அவனை அப்படிப் பார்த்ததும், ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்லக் கீழே இறங்கி வந்தாள் அவள்.
அபிஷேக்கை அப்படி ஒரு நிலையில் அவளால் பார்க்கவே முடியவில்லை. “சார்… சார்…” என்று அழுதுகொண்டே அவனைத் தன் தோளின் மேல் கிடத்திக்கொண்டவள், அருகே யாருமில்லாமல் தவித்தாள்.
இரவு 11ஐ நெருங்கும் சமயம், அந்த மருந்துக்கடையில் இருந்தவர் மட்டும் ஓடிவந்து பார்த்ததும், இவள் சைகை செய்ய உடனே ஆம்புலன்ஸூக்குத் தகவல் தெரிவித்துவிட்டார். அப்போதுதான் அங்கே ஓடிவந்தாள் அஞ்சலி.
“பிரார்த்தனா அபிக்கு என்னாச்சு?” என்று பதட்டம் கலந்த முகத்துடன் ஓடிவந்தவள் அபிஷேக் அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்துத் துடித்துப் போனாள்.
“அய்யோ! அபி… இவ்ளோ ரத்தம் போகுது. கடவுளே எங்க அபியக் காப்பாத்து.” என்று அவள் கடவுளிடம் வேண்டிக்கொண்ட சமயம், பிரார்த்தனாவும் தனது வேண்டுதலை விநாயகரிடம் வைத்தாள்.
அதே சமயம், ஆம்புலன்ஸ் அங்கே வேகமாக வந்து அவர்களுக்கு உதவி செய்து, அபிஷேக்கை படுக்கையில் கிடத்திக்கொண்டு வண்டியில் ஏற்றினர். அப்போதே அவனுக்குத் தேவையான முதலுதவியையும் அளிக்க ஆரம்பித்தனர்.
“யாராவது ஒருத்தர் கூட வாங்க.” என்று அவர்கள் சொன்னதும்,
“பிரார்த்தனா, நீ அபி கூட ஹாஸ்பிடல் போ. உன் ட்ரெஸ்ஸெல்லாம் ரத்தமா இருக்கு. இதோட ஆண்ட்டி உன்னைப் பார்த்தா ரொம்ப பயந்துடுவாங்க. நான் உடனே தேவ்க்கு போன் பண்ணி வரச்சொல்லி, வீட்டுக்குப் போய் ஆண்டியக் கூட்டிட்டு வரேன்.” என்றாள் அஞ்சலி.