எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

துயர் தீராயோ தூயவா - 1

**1**

5f81eadba3760bdd0af523eb228230ec.jpg


"அங்க என்னங்கடா வெட்டி பேச்சு? சீக்கிரம் லாரியை எடுங்க, இப்ப எடுத்தால் தான் நேரத்துக்கு போய் சேரமுடியும்" என்று வெள்ளை வேட்டியை தூக்கிக் கட்டியபடி ஜவகர் தனது பி. ஏவிடம் கத்தினார்.


"நீங்க வந்ததும் வெளிய எடுக்கலாம்னு தான் நிறுத்தி வச்சேன் அண்ணே " என்று அவரின் வலதுகையான பி. ஏ கூறவும்.


"சரி சரி. நீ போய் டீசல் செக் பண்ணு" எனக்கூறி அவனை அனுப்பிய ஜவகர் யாருக்கோ கால் செய்தார்.


அந்த பக்கத்திலிருந்தவர் என்ன சொன்னாரோ இங்கு இவர் வாயெல்லாம் பல்லாக, "அதெல்லாம் சரியா முடிஞ்சுடும் அண்ணா நீங்க கவலை படாதிங்க. சரக்கு ஹார்பர்க்குள்ள போனதும் பிரச்சனை முடிந்ததுனு அர்த்தம். டிரைவர் பற்றி யோசிக்காதிங்க. பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் வேலை செய்வான். இதோ இப்ப கிளம்பிடும்" என்றபடி போனை கட் செய்தவர்,


"எல்லாம் செக் பண்ணிட்டியா?" என்று தனது பி. ஏவைப் பார்த்து கேட்டார்.


"எல்லாம் பக்காவா இருக்கு அண்ணா" என்றவனிடம்.


"வண்டியை கொண்டு போய் எப்போதும் விடும் இடத்தில் விட்டுட்டு நீ வந்திடு" என்றார்.


"சரிங்க அண்ணா" என்றவன் அந்த இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தலிருக்கும் ஷெட்டில் விட்டவன் ட்ரைவரிடம் சாவியையும் சிறிது பணத்தையும் கொடுத்து, "பார்த்து ஜாக்கிரதையா கொண்டுப்போ. நைட்டுக்குள்ள சரக்கு ஹார்பரில் இருக்கணுங்கிறதை நியாபகத்தில் வச்சிக்கோ" என அழுத்தமாக கூறினான்.


"அதெல்லாம் பண்ணிடலாம் சார்" என்ற ட்ரைவர்,


"சம்பளம்" என இழுத்தார்.


"வேலை முடிந்ததும் நாளைக்கு வந்து ஆபீஸில் வாங்கிக்கோ" என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.


இவன் சென்றதும் இவர்களும் சென்னையை நோக்கி கிளம்பிவிட்டனர்.


****


“இன்னும் எவ்வளவு நேரம் தான் இந்த இருட்டில் உட்கார்ந்துக்கிட்டு இருப்பது? இரண்டு வாரமா இப்படித்தான் தவங்கிடக்கிறோம் ஒருத்தனும் வரலை… இனி வருவாங்கனும் எனக்கு தோணலை” என கான்ஸ்டபிள் ஒருவர் புலம்பினார்.


அதற்கு மற்றொரு கான்ஸ்டபிள், “நாமே குழப்பிகிட்டு இருப்பதற்கு பதிலா அவரையே கேட்டுட்டு வந்திடலாமாயா?” என வெள்ளந்தியாக கேட்டார்.


“எதுக்குங்கிறேன்? அந்தாள் இருக்கிற மனநிலையில் நீ போய் எதையாவது கேட்டு, கடுப்பாகி நம்மை மொத்தமா வீட்டுக்கு துறத்திவிடவா? போயா போய் வேலையைப்பார்” என கடுப்பாக கூறியவர் சாலையில் கவனமானார்.


இவர்களின் புலம்பலுக்கு காரணமான அந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி யாருடனோ ஃபோனில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.


ஃபோன் பேசி முடித்தவனின் முகம் பாறையென இறுகிப் போயிருந்தது.


இவனின் முக பாவனையைக் கண்ட இன்ஸ்பெக்டர் மனதில், ‘இரண்டு வாரமா இங்கேயே நம்மை காய வைப்பதும் இல்லாமல் இவரும் காய்கிறாரே அப்படி யார் என்ன கொண்டு வராங்க? ஒரு வேளை போதை மருந்து, சரக்கு இந்த மாதிரி ஏதாவது இருக்குமோ?’ என பலவாறு யோசித்தபடி சாலையில் கவனத்தை செலுத்தினார்.


தூரத்திலிருந்து ப்ரத்யேகமான ஒலி கேட்கவும் நால்வரும் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர்.


இதை அறியாத அந்த கண்டெய்னர் லாரியை இயக்கிக்கொண்டிருந்த ஓட்டுனரிடம் க்ளீனர், “எனக்கு ஒரு சந்தேகம்ணா… வாரம் வாரம் நம்மையே இந்த லாரியை எடுக்க வைக்கிறாங்களே ஏன்?


“இதைக்கூட விடுங்க… லாரியை எடுக்க சொல்றவங்க ஏன் அண்ணா எங்கேயும் நிறுத்தாமல் ஸ்பாட்டுக்கு போகச் சொல்றாங்க? அப்படி என்னதான் இந்த கண்டெய்னரில் இருக்கு?” என சந்தேகமாகக் கேட்டான்.


அதற்கு ஓட்டுனர், “எனக்கும் அதுதாண்டா புரியலை. ஆனால் எதுவோ தப்பா படுது, இந்த முறை போயிட்டு வந்ததும் வேற இடம் பார்க்கணும். இவனுங்க கொடுக்கிற காசை விட நம்மை மாதிரி ஆளுங்களுக்கு பேர் தான் முக்கியம், அது மட்டும் கெட்டுப்போச்சு மொத்தமும் போச்சு” என ஒரு மாதிரி பயந்த குரலில் கூறினார்.


“அதுவும் சரிதான் அண்ணா” என்றவன்,


“பெயர் போனா யாரும் நம்மை நம்பி ஒரு இனிமூக்குகூட வெளியே விடமாட்டாங்க. நீங்க சொல்ற படி வேறு இடம் பார்ப்பது தான் நல்லது. அப்படியே எனக்கும் ஒரு வேலை அண்ணா” என தலையை சொறிந்தபடி கேட்டான்.


“பார்த்துக்கலாம்டா” என்று சிரிப்புடன் சொன்னவர் சாலையில் கவனமானார்.


“அண்ணா… அங்க பாருங்க ரோட்டில் எதோ தடுப்பு மாதிரி இருக்கு” என்றதும்,


ஓட்டுனர், “ஆமாம்டா… இங்க யார் தடுப்பு வச்சிருப்பா? வேலையேதும் நடக்குதா என்ன?" என்றவர் லாரியின் வேகத்தை குறைத்தார்.


அதற்கு க்ளீனர், “அவனுங்க என்ன சொன்னாங்கனு மறந்துட்டியா அண்ணா?” என்கவும்,


“நாம நிறுத்தினால் அவனுங்களுக்கு தெரியவா போகுது? இருடா என்னன்னு பார்க்கலாம்” என்றவர் லாரியிலிருந்து இறங்கவும் காவல் அதிகாரிகள் சூழ்ந்து கொள்ளவும் சரியாக இருந்தது.


என்ன ஏது என்று யோசிப்பதற்குள் இருவரின் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்டது.


இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான தூயவன் நம்பிநாடன், “யார்டா நீங்க? எங்க இருந்து வரீங்க? லாரி ஓனர் யார்? உள்ள என்ன இருக்கு?” என கேள்வியாக அடிக்கினான்.


தூயவனின் அழுத்தமான பாவனையும் கூரிய விழிகளும் பயத்தை கொடுக்க ஓட்டுனர், “எங்களுக்கு சொந்த ஊர் திருச்சிங்க சார்… நாங்க மதுரையிலிருந்து சரக்கு ஏத்திக்கிட்டு வரோம்” என்றவர்,


“உள்ள என்ன இருக்குனு எங்களுக்குத் தெரியாதுங்க சார். முதலாளி பி.ஏ சொல்வதை அப்படியே செய்வோம் கேள்வியெல்லாம் கேட்கமாட்டோம்” என்று பயத்துடன் கூறினார்.


"அப்ப அவன் கொலை பண்ண சொன்னா செஞ்சுடுவியாடா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.


அதில் அதிர்ந்து ஓட்டுனர், “என்னது கொலையா? அந்த அளவுக்கெல்லாம் நாங்க பெரிய ஆளுங்க இல்லைங்க சார். ஏதோ கிடைத்த வேலையை செஞ்சுக்கிட்டு பொழப்பை பார்த்துக்கிட்டு இருக்கோம்” என அவசரமாகக் கூறினார்.


இதையெல்லாம் சிறிதும் காதில் வாங்காத தூயவன், “பூட்டை திற உள்ள என்ன இருக்குன்னு பார்க்கணும்” என்றதும் மறுத்து பேசாமல் ஓட்டுனர் கண்டெய்னரை திறக்கபோனார்.


‘என்னடா இது வம்பாப்போச்சு' என நினைத்தபடி கண்டெய்னரின் பூட்டை திறந்து உள்ளே பார்த்த ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, க்ளீனரோ மயங்கி சரிந்தான்.


இவர்களின் அதிர்ச்சியை தூசி போல் தட்டிய தூயவன் கண்டெய்டரை பார்க்கவும் மற்றவர்களும் தின்பண்டங்களை ஈக்கள் சொப்பிக்கொள்வது போல் சூழ்ந்துகொண்டனர்.


இவ்வளவு நேரம் எரிச்சலில் இருந்த மற்ற காவல் அதிகாரிகளுக்கு அப்பொழுது தான் தூயவனின் காத்திருப்புக்கான தீவிரம் புரிந்தது.


அதில் ஒரு கான்ஸ்டபிள், “இவனுங்களையெல்லாம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் எல்லா உண்மையும் தானா வந்திடும் சார்” என்று தூயவனிடம் கூற,


அவனோ, “எய்தவனை விட்டுட்டு அம்பை நொந்துக்க எதுவும் இல்லை. அதைவிட இவனுங்களை வைத்து ஒன்னும் பண்ணமுடியாது” என்றவன் அவசர ஊர்திக்கு அழைத்து பேசினான்.


பின் காவல் அதிகாரிகளிடம், “இவனுங்கக்கிட்ட விசாரித்து அந்த முதலாளி யார்னு பார்த்து உடனே ஸ்டேட்மென்ட் வாங்குங்க… இதில் சம்பந்தப்பட்ட எவனும் தப்பிக்கக்கூடாது, அதே மாதிரி இங்க நடந்ததும் யாருக்கும் தெரியக்கூடாது ரொம்ப ரொம்ப பாதுகாப்பா, அதைவிட ரகசியமா விசாரிங்க. அதுவும் இதெல்லாம் விடிவதற்குள் நடக்கணும். புரியுதா?” என்றவன் அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தினான்.


இன்ஸ்பெக்டர், “புரியுதுங்க சார்” என்றதும்,


“இவங்களை ஸ்டேஷனுக்கு கொண்டுபோக வேண்டாம் நான் சொல்ற இடத்திற்கு கொண்டு போங்க” என அழுத்திக் கூறினான்.


அதை சரியாக புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், தூயவன் சொன்ன இடத்திற்கு இருவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார்.


அவர் செல்லவும் ஆம்புலன்ஸ், அங்கு வரவும் சரியாக இருந்தது.


ஆழ்ந்த நித்திரையில் இருந்த குழந்தைகள், பெண்கள் என இருபது பேரை ஆம்புலன்ஸில் ஏற்றியதோடு அவர்களை தொடர்ந்து கான்ஸ்டபிள் இருவரையும் பாதுகாப்புக்காக அனுப்பியதும் தான் இறுக்கம் தளர்ந்து நிம்மதி பெருமூச்சுவிட்டான்.


அவர்கள் சென்றதும் மதுரை மாவட்ட ஆட்சியாளரான தனது நண்பனுக்கு அழைத்து விஷயத்தை கூறியவன் மனம்கேளாது தானும் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து சென்றான்.


பூவிழும் மென்மையான குழந்தைகளையும் பெண்களையும் கடத்தி, மயக்கமருந்து கொடுத்தது போதாதென கண்டெய்னரில் அடைத்து வைத்தது அவனின் மனதை வெகுவாக காயப்படுத்தியது.


என்னதான் பதவிக்காக கடுமையான அதிகாரியாக அரிதாரம் பூசிக்கொண்டு வலம் வந்தாலும் இவனும் இதயம் உள்ள மனிதன் தானே? கண்கூட கண்ட கொடூரத்தை எப்படி மென்று தின்று செரிக்க முடியும்? மனதிலிருந்த ரணத்தை யாரிடமும் கொட்ட முடியாமல் காரின் வேகத்தை கூட்டி ஹாஸ்பிட்டலுக்குச் சென்றான்.


இவ்வளவு விரைவாக வந்தவனை கண்டு கான்ஸ்டபிள் ஒருவர் வாயை பிளக்க தூயவனோ, “இங்கு என்ன வேடிக்கை? சீக்கிரமா அட்மிட் பண்ணுங்க” என்று கத்தவும் வேலை துரிதமாக நடந்தது.


இவனே நேரடியாக வந்ததும் எந்த இடைஞ்சலும் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை நடந்தது.


அப்பொழுது தூயவனுக்கு கால் வரவும் கான்ஸ்டபிள் இருவரையும் பார்த்து, “கவனமா இருங்க எவனுங்க வேணாலும் எப்படி வேணாலும் வருவானுங்க ஏனோதானோன்னு இருக்காதீங்க. கொஞ்சம் அசந்தாலும் மொத்தமா நாசமாயிடும், அப்புறம் இங்க இருக்கும் குழந்தைங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவனுங்களை நம்மால் ஒன்னுமே பண்ண முடியாது போயிடும். ஜாக்கிரதை” என எச்சரிக்கை செய்தபடி சற்றுத் தள்ளிச் சென்றான்.


தூயவனின் வார்த்தையிலிருந்த உண்மை புரிய சலிப்பை குப்பை போல் ஒதுக்கி தள்ளிய கான்ஸ்டபிள் இருவரும் தாய்க்குருவி குஞ்சுகளை அடைகாப்பது போல் காத்தனர்.


சிறிது தூரம் சென்று சுற்றுவட்டத்தை ஆராய்ந்தபடியே ஃபோனை அட்டன் செய்த தூயவன், “என்னா ஆச்சு விமலேஷ்? எல்லாம் ஓகே தானே? அந்த ஆளுங்க சிக்கினாங்களா?” என கேள்வியாக கேட்டான்.


“எல்லாம் பக்காவா போச்சுடா. லாரி ஓனர் ஜவஹரும், அந்த பி.ஏவும் மாட்டிக்கிட்டாங்க. ஆனால்…” என விமலேஷ் இழுக்க.


“ஆனா என்னடா? அதை முதலில் சொல்லு” என பல்லைக் கடித்தபடி கேட்டான்.


“குழந்தைகளையும் பொண்ணுங்களையும் கடத்தி அனுப்பினவன் மட்டும் தப்பிச்சுட்டான் துவா" என்றவன்,


"எல்லாம் சரியா தான் போச்சு? ஆனால் எப்படி தப்பித்தான்னு தான் தெரியலை” என்று விமலேஷ் தயக்கத்துடன் கூறவும்.


தூயவன், “ச்சை… எப்படி விமலேஷ்? எப்படி? ஒரு மாதமாக நாய் மாதிரி அழைந்து பக்காவா ப்ளான் போட்டு தானே இந்த ஆப்ரேஷன் பண்ணினோம், அப்புறம் எப்படி தப்பித்தான்? அவன் மாட்டினால் தான் அந்த கும்பலுக்கு மூளையாக இருக்குறவனை பிடிக்கமுடியும்” என கோபமாக கத்தியவன்,


சிறிது நேரத்தில் தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொண்டு, “இட்ஸ் ஓகே. இதுவும் ஒருவகையில் நல்லதுக்குத்தான். மூளையாக இயங்குறவனை மட்டுமில்லாது தலையையும் சேர்த்து கொத்தோடு பிடிக்கலாம்” என விசமப் புன்னகையுடன் கூறினான்.


அதை கேட்ட விமலேஷ் தவிப்பு நீங்கி, “எனக்கும் இதுதான்டா தோனுச்சு. அவன் தப்பித்திருந்தாலும் நேராக முக்கியமான இடத்துக்கு போகமாட்டான் துவா. கொஞ்ச நாளைக்கு ஆறப்போடுவோம், ஏதாவது சின்னதாக அறிகுறி கிடைக்கட்டும் அதை வைத்து மொத்தமா பிடித்திடலாம். அதுவரைக்கும் நீயும் அலார்ட்டா இருந்துக்க, அம்மாவையும் அந்த வாலையும் கவனமா பார்த்துக்கோ” என நண்பனை எச்சரித்தான்.


“புரியுது விமலேஷ். எனக்கு இப்ப என்னைப் பத்திக்கூட கவலை இல்லடா குழந்தைகளை நினைத்துதான் கஷ்டமா இருக்கு. எப்படியாவது உரிய இடத்தில் சேர்த்திடணும், அதுவரை இவங்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கணும் அதுதான் இப்ப பெருசா இருக்கு” என்று ஆயாசமாக கூறினான்.


விமலேஷ், “என்ன மேன் இதற்கு போய் இப்படி சோர்ந்து போற? கொஞ்சம் யோசி வழி கிடைக்கும்” என்றான்.


“சரிடா. நான் வந்து ரொம்ப நேரமாகுது போய் குழந்தைகளை பார்க்கிறேன்” என்றவன் ஃபோன் கட் செய்துவிட்டு யாருக்கோ அழைத்து பேசிய கையோடு ஐசியூவிற்கு விரைந்தான்.


“நீங்க போய் ஏதாவது சாப்பிட்டுவாங்க நான் பார்த்துக்கிறேன்” என்ற தூயவனிடம்,


கான்ஸ்டபிள் ஒருவர், “சார்” என தயங்கியபடி அழைத்தார்.


அவரின் தயக்கத்தை உணர்ந்தவன், “தயங்காமல் சொல்லுங்க சார்” என்று உசுப்பியவன்,


“இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு ரகசியமா செய்றோமே ஏதாவதுனா யார் பார்ப்பதுனு தானே கேட்க வாரீங்க?" என லேசான சிரிப்புடன் தங்களின் மனதிலிருந்ததை அச்சுப்பிசகாமல் கேட்கவும் கான்ஸ்டபிள் இருவரும் வாயைப் பிளந்தபடி தூயவனைப் பார்த்தனர்.


அதைக் கண்டு மேலும் சிரித்த தூயவன், “ஓகே நானே பதிலையும் சொல்லிடுறேன். கொஞ்சம் அந்த ஜன்னல் வழியா எட்டிப் பாருங்க உங்களுக்கே புரியும்” என்றதும் தயங்கியபடி பார்த்தவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.


அதில் ஒருவர், “சார் இவங்க எப்படி இங்க?” எனக் கேட்க,


“எல்லாம் நம்ம ஆளுங்க தான்” என்றவன்,


கான்ஸ்டபிளிடம், “நீங்க என்ன பண்றீங்க சாப்பிட்டு வரும்போது சூடான ஒரு மசாலா டீ வாங்கிட்டு வந்திடுங்க” என மாறாத புன்னகையுடன் கூறினான்.


“என்ன சார் நீங்க? இந்த ஆப்ரேஷன் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தானே இவ்வளவு பாடுபட்டிங்க. இப்ப என்னடானா அதுக்கு ஆபத்து வார மாதிரி இத்தனை ரிப்போட்டர்ஸ் வந்திருக்காங்களே” என தவிப்பாக கேட்டார்.


“நான் மட்டுமில்லை நாம சார். இவங்களை வர வைத்ததே நான் தான்” என்ற தூயவன்,


“அந்த கும்பலுக்கு குழந்தைகள் மீட்கப்பட்ட செய்தி போய் சேர்ந்திருச்சு. அதனால் குழந்தைங்களுக்கு ஆபத்து வர வாய்ப்பு ரொம்ப அதிகம். இவர்களை நாம தனியா சமாளித்து பசங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைப்பது ரொம்ப ரொம்ப சிரமம். அதற்கு தான் ரிப்போட்டர்ஸ் மூலமா பிசிரில்லாமல் செய்யறேன்” என்றான்.


“நல்ல ஐடியா சார். முள்ளை முள்ளால் எடுக்கிற மாதிரி தானே? இனி எல்லாம் தானா வழிக்கு வரப்போகுது. இந்த நியூஸ் மக்களுக்கு தெரிய வந்தா அதிகாரிங்க யாரும் ஜகாவாங்க முடியாது” என புன்னகையுடன் கான்ஸ்டபிள் கூறவும்.


“அதே தான். என்னதான் ஐ.பி.எஸ், ஐ.ஏ.ஐஸ்னு பதவி இருந்தாலும் அதிகாரத்தை கையில் எடுத்துக்க முடியாது, பலபேருக்கு பதில் சொல்லணும். இதுவே எல்லாம் தானா அமைந்தால் அவங்களா நம்மை அதை செய், இதை செய்னு ஏவுவாங்க” என வெறுப்புடன் தூயவன் கூறினான்.


இன்னொருவர், “நல்ல யோசனைங்க சார்” என்றார்.


அதற்கு தூயவன் ஏதோ சொல்ல வரவும் குழந்தைகளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.


டாக்டரை கண்டதும் தூயவன், “குழந்தைங்க எப்படி இருக்காங்க சார்? எதுவும் பிரச்சனையில்லையே?” என தவிப்பை மறைத்துக்கொண்டு கேட்டான்.


“ஒரு பிரச்சனையும் இல்லைங்க சார். நாம நினைத்த மாதிரி மயக்க மருந்து தான் கொடுத்திருக்காங்க. நல்லவேளையா சரியான அளவில் கொடுத்ததால் தவறா எதுவும் நடக்கவில்லை. அதுவே கொஞ்சம் அதிகமா போயிருந்தாலும் கஷ்டமாகியிருக்கும்” என்றவருக்கு அடுத்த கேஸ் வரவும் சென்றுவிட்டார்.


சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்துவிட அவரின் பின் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் என மருத்துவமனையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.


இவர்களின் வரவு அதிகரிக்க பாதுகாப்புக்காக போலீஸ் படையே மருந்துவமனையை சுற்றி நிறுத்தப்பட்டது.


தூயவனின் புத்திக்கூர்மையை கண்ட உயர் அதிகாரிகளின் மனதில் பலபடி உயர்ந்து நின்றான்.


எந்த அளவுக்கு இவர்களின் மனதில் இடம் பிடித்தானோ அதே அளவுக்கு மறைமுகமாக விரோதிகளையும் சம்பாதித்தான் என்றால் மிகையில்லை. அதன் விளைவை அடுத்த நாளே தெரிந்துகொண்டான்
 
Top