எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாய சஞ்சலே! கதை திரி

Status
Not open for further replies.

NNK-14

Moderator
ஹாய் பிரெண்ட்ஸ்..

நான் இந்த தளத்திற்கு புதுசு! கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவள்.. இதுவரை சில கதைகள் எழுதியிருக்கிறேன்.

என்னைப் பற்றிய அறிமுகம் இது போதும் என்று நினைக்கிறேன்.

இனி கதையே என் அடையாளமாகவும் நமக்குள் பிணைப்பாகவும் இருக்கும்.

விரைவில் கதை பற்றிய அறிமுகம் மற்றும் டீசருடன் வருகிறேன்.

நன்றி..
 

NNK-14

Moderator
ஹாய் ஆல்! எனது போட்டி எண்‌ NNK 14

கதை தலைப்பு : சாய சஞ்சலே!

என் கதை பற்றி சிறு அறிமுகம் கொடுக்க வந்திருக்கிறேன்.

இது கொஞ்சம் controversy subject 😬

இந்த கதையை எப்படி எடுத்துக்குவீங்கனு தெரியலை. ஆனால் நிச்சயம் கதைப் போக்கின் முடிவில் உங்களை திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன்.

ஜனவரி முதல் நாள் அன்று டீசர் எல்லாம் இல்லாமல் முதல் யூடி கொடுக்கிறேன். பிறகு தைத்திருநாளில் இருந்து அடுத்து அடுத்து யூடிகள் வரும்..

படித்து பார்த்து கருத்துக்கள் தெரிவியுங்கள்..

நன்றி ☺️
 

NNK-14

Moderator
ஹாய் ஆல்..

சாய சஞ்சலே கதையின் முதல் மற்றும் இரண்டாம் யூடியுடன் வந்துவிட்டேன்.

படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிருங்கள்.

அடுத்த யூடிகள்.. பொங்கல் தினத்தில் இருந்து தருகிறேன்.


சாய சஞ்சலே! அர்த்தம் கேட்டிருந்தீர்கள்.

சாய- நிழல்
சஞ்சலே - மின்னலே

இந்த தலைப்பு கதைக்கு எப்படி பொருந்துகிறது என்பதை கதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

NNK-14

Moderator
சாய சஞ்சலே!


நிழல் 1


வருடம் 1956


இந்தியா நாடு முழு சுதந்திரத்தை அனுபவிக்க ஆரம்பித்த காலக்கட்டம் என்றுக் கூறலாம். சினிமாக்களும்.. ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்ற நாகரிகங்களும்.. ஒங்கிக் கொண்டிருந்தன. சினிமாக்களை பார்த்து.. மக்கள் நாகரிகத்தை கற்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்கப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகள் பெருக ஆரம்பித்தன. கைத்தொழில் விவசாயம் தவிர்த்து.. இயந்திரங்களுடன் வேலை செய்ய மக்கள் ஆர்வம் கொண்டனர். இவ்வாறாக ஒரு பக்கம்.. நாகரிகங்கள் வளர்ந்துக் கொண்டிருந்தாலும்.. சிலரின் வாழ்க்கையோ.. பண்பாடு மாறாது தெளிந்த ஓடை போல் காலத்தோடு ஓடிக் கொண்டிருந்தன. செல்வம் கொண்டவர்கள்.. தங்களது பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். அது அப்பொழுது பெரிய விசயமாக பேசப்பட்டது. சமூகத்தில் பெண்களுக்கு சமஅளவு மதிப்பும் மரியாதையும் படிப்பும் தரப்பட்ட காலம் என்றுக் கூட கூறலாம். வீட்டில் ஒடுங்காது பெண்கள் வெளி வந்து சுதந்திரமாக உலாவினர். ஆனால் சிலருக்கு.. பெண்கள்.. ஒடுக்கப்பட வேண்டியவர்கள்.. என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை. அடக்கியும் வைத்திருந்தார்கள்.


அழகிய கடற்கரை கொண்ட தமிழ்நாடும்.. இந்தியாவில் முக்கியமான மாநிலமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. கப்பல்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தன.


அத்தமிழ் திருநாட்டில் மயிலாடுதுறைக்கும்.. தாஞ்சவூரிற்கும் நடுவில் காவேரி ஆறு ஓடும் மலைக்குன்றுகள் சூழ அமைந்துள்ளது நெற்கொம்பு ஊர்! பெயருக்கு ஏற்ப நெற்மணிகதிர்கள் பயிரிடும் விவசாயம் அங்கு பெருமளவு நடைப்பெற்றன. காவேரி அன்னையும் பயிர் வாடாமல் பார்த்துக் கொண்டாள்.


நெற்கொம்பு ஊரின் பெரும்பான்மையான தொழில் விவசாயம் தான் என்றாலும்.. பல்வேறு கைத்தொழில்களும், சுயதொழில் புரிவோர்களும் என்று ஒன்றாக வாழும் ஊர் அது!


அன்றைய காலக்கட்டத்தில் பிரிவினை.. அவர்களது தொழில்கள் கொண்டு நிர்ணயக்கப்பட்டது. நிலப்புலன்கள் வைத்திருந்து.. மற்றவர்களுக்கு.. வேலை போட்டு தருபவரும், கோவிலில் பணிப்புரிவோரும் உயர்ந்த சாதி.. என்றும், அவர்களிடம் பணிப்புரிவோர்.. அவர்களுக்கு அடுத்த உயர்ந்த சாதி என்றும் வழங்கப்பட்டது. இவ்வாறு தறி நெய்பவர்கள் குடும்பம் ஒன்றாகவும், குயவு தொழில் செய்பவர்கள் குடும்பம் ஒன்றாகவும், சந்தைக்கு சென்று.. பொருள் வாங்கி வந்து விற்பவர்கள்.. என்று தொழில் அடிப்படையாக கொண்டு.. குடும்பம் குடும்பமாக சுமார் ஐநூறு குடும்பங்கள் வாழும் ஊர் அது!


பாடசாலையும், சிறு மருத்துவமனையும், தபால் நிலையமும் கூட அமைந்திருக்கும் நாகரிக ஊர் தான் அது!


வாரம் தோறும் வண்டி கட்டிக் கொண்டு.. சந்தைக்கு செல்வது போல்.. தாஞ்சாவூரில் இருக்கும் டூரிங்ஸ் தியேட்டரில் படம் பார்க்கவும் செல்வார்கள், கடந்த ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேசனும் அஞ்சலிதேவியும் அவர்களது ஆஸ்தான நடிகர்கள் ஆவர். அவர்களைப் போன்று நடிக்க ஆசைப்பட்டு.. முதலில் திரைப்பட ஸ்டூடியோ தொடங்கப்பட்ட.. கோவை நகரத்திற்கும்.. பின்பு மதராஸ் பட்டிணத்திற்கும் கிளம்பியவர்கள் உண்டு.


காவேரி ஆற்றோரம் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலும் ஊருக்கு நடுவே அமைந்திருக்கும்.. சிவன் மீனாட்சி கோவிலும், ஊரின் எல்லையில் இருக்கும்.. பெருமாள் திருக்கோவிலும் அந்த ஊரின் காக்கும் தெய்வங்களாக வணங்கப்பட்டன. ஹரியா! சிவமா! எந்த கடவுள் அதிகம் அருள் புரிகிறார் என்று சில சமயம் வாக்குவாதமும் நடைப்பெறுவது உண்டு.


என்ன தான் நாகரிகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அரசர் ஆட்சி காலத்தில் இருந்து தங்களுக்கு மேலே இருப்போரை மதித்து மரியாதை செலுத்துவது.. என்பது இரத்தத்தில் ஊறிப் போனதால்.. நெற்கொம்பு ஊரின் மிராசுதார் சுந்தரத்திடம் அந்த ஊர் மக்கள். மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள்.


மிராசுதாரர் சுந்திரத்திற்கு.. கிட்டத்தட்ட அந்த ஊரில் இருந்த பாதி நெல்வயல்களும்.. தென்னந்தோப்பும் சொந்தமானது. அது போதாது என்று.. தங்கங்களை உருகி அணிகலன்கள் செய்யும் தொழிலையும் செய்து வருகிறார். அவற்றை.. மைசூர் மற்றும் ஹைதராபாத் மன்னர்களிடம் சென்று விற்று.. அதனால் வரும் செல்வம் கொண்டு.. செழிப்பாக வாழ்க்கை வாழ்பவர் அவர்! செல்வமும்.. மரியாதையும்.. அவரது உடல் உறுப்பு போன்று அவரது உடனேயே பிறந்தது என்று நினைப்பவர்! இத்தனை இருந்தும் சிறிது காலமாகவே கடும் வேதனையும்.. மனவுளைச்சலும்.. அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்தன.


அன்று..


ஆழ்ந்த இரவு பொழுதில் கொட்டான்கள்.. தனது தலையை திரும்பி நாலாப்புறமும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அது! வௌவால்கள் சுதந்திரமாக வானில் சிறகை அடித்து பறக்கும் வேளை அது! மலைக்குன்றுகளின் நடுவே பாய்ந்து வந்த ஓடை.. சலசலப்புடன் ஓடிக் கொண்டிருக்க.. அந்த ஓடையின் ஓரமாக அமைந்துள்ள.. சுந்தரத்தின் மாளிகை ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அரிக்கேன் விளக்குகளின் ஒளியை மட்டும் தாங்கிக் கொண்டு நிசப்தமாக காட்சியளித்தது. பிரமாண்டமாக காட்சியளித்த அந்த மாளிகை.. ஆங்கிலேயர் தங்களது அலுவலகத்திற்காக 1800-ல் கட்டிய மாளிகை அது! பின்பு அவர்கள் வெளியேறிய பொழுது.. அந்த ஊரின் மிராசுதார்.. சுந்தரத்தின் தாத்தாவிடம் சில பொன்நகைகளுக்கு.. இதை விற்றுவிட்டு சென்றார்கள். அப்பொழுதிலிருந்து.. மிராசுதார் குடும்பம் அங்கு வசம் செய்கிறார்கள்.


முன்புறம் பிரமாண்டமான இரும்பினால் ஆனா வாயில் கதவும், நுழைந்ததும்.. வட்ட வடிவில் அமைந்துள்ள அழகிய நீருற்றும், ஓரத்தில் மாடு மற்றும் குதிரை வண்டி சராங்கள், ஒரு மோட்டர் சைக்கிளும், கார் நிறுத்த வைப்பதற்கான கொட்டகையும் அதை சுற்றிச் சென்றால்.. பிரமாண்டமான தூண்களை கொண்ட தாழ்வாரமும்.. நீண்ட முன் வரவேற்பு அறையும்.. இரு பக்கமும் வரிசையாக அறைகளும்.. இரண்டாக பிரித்து செல்லும் படிக்கட்டும், பின்கட்டில்.. சமையலைறையுடன் கூடிய.. சாப்பிடும் அறையும்.. அதற்கு அடுத்து பொருட்கள் மற்றும் பழைய பொருட்களை வைக்கப்படும் சிறு அறைகளும்.. முதல் தளத்தில்.. அழகிய பால்கனியும்.. பின் இருபக்கமும் நான்கு படுக்கையறையும் கொண்ட அந்த மாளிகையின் அழகிற்கும் பிரமாண்டத்திற்கும் சிறிதும் குறைவில்லை. பின்கொல்லையில் மாட்டு கொட்டகையும்.. மதிற்சுவற்றின் வடமூலையில்.. நெற்கதிர்கள் மூட்டையாக கட்டப்பட்டு அடித்து நெற்கதிர்களைப் பிரிப்பதற்கு தயாராக இருந்தன. தென்மூலையில் வேலையாட்கள் தங்குவதற்கு என்று கொட்டகை இருந்தது. மதிற்சுவற்றிக்கும் பின்புறம் ஓடை ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பிரமாண்டமான இம்மாளிகையில் சில நாட்களாக நடப்பதற்கும் எதுவும் சரியில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா!


கோணிப்பை ஒரு பக்கம் கிழித்து அதை தலையில் போர்த்திக் கொண்டு.. கையில் கம்புடன் நின்றுக் கொண்டு உறங்கியவாறு ஒருவன்..‌ மாளிகையின் பின் புறம் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையிடம் காவல் காத்துக் கொண்டிருக்க.. முன் பக்கம் பெரிய வாயிலிடம் கண்களை சுழற்றும் உறக்கத்தை துரத்தியடித்தவாறு ஒருவன் கையில் கம்புடன் நின்றுக் கொண்டிருந்தான். மற்ற இரு பக்கங்களிலும் ஆளுக்கு ஒருவர் என்று ரோந்து வந்துக் கொண்டிருந்தனர்.


மாளிகையில் தனது படுக்கையில் படுத்திருந்த சுந்தரத்திற்கும் உறக்கம் கொள்ளவில்லை. அன்று என்ன நிகழுமோ என்ற கிலி மனதை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. சூரிய சக்கரம் ஓவியமாக வரையப்பட்டிருந்த விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்தவரை அச்சமும் கவலையுமாக அவரது மனைவி பர்வதம் பார்த்துக் கொண்டிருந்தார்.


அவரது பயம் சரியே என்பது போல் சிறிது நேரத்தில் மெதுவாக கண்ணயர்ந்த சுந்தரம் “ஐயா!” என்ற அழைப்புடன் கதவில் மாட்டப்பட்டிருந்த வெண்கலத்தால் ஆனா சிங்கம் பொதித்த வட்டவடிவ.. குமிழின் தட்டல் ஓசையில் எழுந்தார். வேகமாக எழுந்தவர் அருகில் இருந்த சரிகை சால்வையை எடுத்து உடம்பில் சுற்றிக் கொண்டு.. பரபரப்புடன் கதவை திறக்க முயன்ற பர்வதத்தை தள்ளிவிட்டு அவரே கதவை திறந்தார்.


அங்கு கண்ணில் பீதியுடன் நின்றிருந்த கோவிந்தன் “ஜயா! நெல்லு மூட்டை வைத்திருக்கிற கொட்டகை பற்றி‌ எரியுதுங்க..” என்கவும், சுந்தரம் அதிர்ந்து தான் போனார்.


வேகமாக சென்றவர் மேலே சுற்றியிருந்த சால்வை கீழே விழுவது கூடத் தெரியாது.. பலத்த சத்தத்துடன் படியிறங்கினார்.


அந்த சத்தம் கேட்டு படிக்கட்டிற்கு அருகில் இருந்த அறையில் இருந்து அவரது கைம்பெண் மகள் சாரதா எட்டிப் பார்த்தாள். அவளது கண்களிலும் பீதி பரவியிருந்தது.


வேகமாக பின்வாசல் வழியாக கொல்லைப்புறத்திற்கு சென்றவர், அங்கு இருட்டை விரட்டிய நெருப்பின் வெளிச்சத்தில் திகைப்புடன் நின்றுவிட்டார். இடப்புறம் மாட்டுக்கொட்டகை இருக்க வலப்புறம்.. நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொட்டகை இருந்தது. அதுதான் தற்பொழுது கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.


“தண்ணியை ஊற்றுங்க!”


“அந்த மணல் மூட்டையை கொட்டுங்க”


“ம்ம்! தீ முழுவதுமா பரவதற்குள்ள போய் மூட்டையை எடுத்துட்டு வாங்க..”


“சீக்கிரம்.. போங்க போங்க..”


என்று பல்வேறு குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.


சுந்தரத்தின் வேலையாட்கள் வாளி கொண்டு நீரை பாய்ச்சுவதும்.. மணல் மூட்டைகளை தீயின் மேல் பரப்பிய வீசியவாறு துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்த கொட்டகைக்குள் புக முயன்றுக் கொண்டிருந்தார்கள்.


இவை எதுவும் சுந்தரத்தின் கருத்தில் கண்ணிலும் படவில்லை. சிவப்பு பிளம்பாய் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பின் மேல் தான் அவரது பார்வை நிலைக்கொத்தி இருந்தது. அன்று பலத்த காற்று வீசியதின் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது.


அதிர்ச்சியுடன் நின்றிருந்த சுந்தரத்தின் முன்.. அவரது ஆஸ்தான வேலைக்காரன் கடம்பன் மூச்சிரைக்க வந்தான்.


“ஐயா! தீயை அணைக்கிற வேலை நடந்துட்டு இருக்குங்க! நம்ம ஆட்களையும் உள்ளாற அனுப்பி முடிஞ்ச வரை.. மூட்டைகளை எடுத்துட்டு வரச் சொல்லியிருக்கேனுங்க..” என்றுத் தனது முதலாளியை சமாதானப்படுத்த செயல்படுத்திய நடவடிக்கைகளை கூறினான்.


ஆனால் சுந்தரம் தனது முன்னால் நின்றிருந்த கடம்பனை ஓங்கி அறைந்தார்.


“இப்படி தீ பரவுகிற வரை என்ன செய்துட்டு இருந்தீங்க?” என்று கர்ஜீத்தார்.


சுதந்திரம் அடித்ததில் தரையில் விழுந்த கடம்பன்.. “இதோ தீயை அணைத்து விடுகிறோம் ஐயா..” என்றவாறு எழுந்து கொட்டகையை நோக்கி ஓடினான்.


சில மணி நேரத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. ஆனால் அவ்விடம் எங்கும் வைக்கோல் பற்றி‌ எரிந்த நாற்றமும் புகை மூட்டமும் பரவி கிடந்தது. அதனால் காலை வேளையில் சிட்டுக்குருவிகளுக்கும் காகங்களுக்கும் வேலை இல்லாது போயிற்று.


சுந்தரம் வீட்டினுள் சிலையென அமர்ந்திருக்க.. தங்களது முதலாளிக்காக தீயையும் பொருட்படுத்ததாது.. கொட்டகைக்கு புகுந்து கையிலும் முதுகிலும் தீக்காயம் பட்டவர்கள் மருத்துவச்சாலைக்கு அனுப்பப்பட்டார்கள். அப்பொழுதும் பெரும்பான்மையான மூட்டைகள் நெருப்பிற்கு இரையாகி விட்டன.


வெறித்தவாறு அமர்ந்திருந்த சுந்தரத்தின் முன் வந்து நின்ற கடம்பன் “ஐயா! போன முறை அடிச்ச புயல்ல வாழைமரம் அழிந்து விட்டதால்.. காத்து பலமா வீச தொடங்கவும், வேலையாட்களை அங்கே அனுப்பிட்டேன்ங்க! இங்கே காவலுக்கு நாலு பேரும் வீட்டு தோட்ட வேலையாட்கள் தான்ங்க இருந்தாங்க! அதுனால தான் நிறையா மூட்டைகளை காப்பாற்ற முடியலைங்க!” என்றுப் பயத்துடன் கூறினார்.


சுந்தரத்திற்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் பார்த்தார். வாழைத் தோட்டத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் வந்துவிட்டனர். நேற்று.. சுற்றிலும் பதினைந்து ஆட்கள் காவல் காத்துக் கொண்டிருக்க.. இன்று நாலு பேர் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்ட நிலையில்.. இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது அவரது துரதிஷ்டமா.. அல்லது விதியா என்றுப் புரியவில்லை. அதுமட்டுமா கடந்த எட்டு மாதங்களாக அவரைச் சுற்றி நடப்பதற்கு அர்த்தம் என்ன!


எனவே சட்டென்று எழுந்து “இங்கே என்ன நடக்குது கோவிந்தன்! எட்டு மாதத்திற்கு முன்னாடி நடந்த கோவில் விழாவில்.. யானைக்கு மதம் பிடித்து என்னைப் பார்த்து ஓடி வந்தது. நல்லவேளை பாகன்.. அதோட காதை பிடித்து இழுத்தி நிறுத்தினான். இல்லாவிட்டால்.. அது என்னைப் பற்றி வீசி மிதித்திருக்கும்! ஆறுமாதத்துக்கு முன்னாடி மணம் செய்து வைத்து அனுப்பிய என் மகள்.. அடுத்த மாதமே கணவனை இழந்தாள். ஐந்து மாதத்திற்கு முன்னாடி.. நான் வந்த மாட்டு வண்டியோட அச்சாணி உடைந்து.. தடம் புரண்டு விழுந்து.. என் கால் எழும்பில் அடிப்பட்டது. மூன்று மாதத்திற்கு முன்னாடி நெற்வயலுக்கு திருப்பி விட்ட நீரினால்.. பயிர்கள் அழுகி வாடியது. போன மாதம் அடித்த புயலில் வாழைத் தோட்டம் அழிந்தது. இப்போ நெல் மூட்டை கொட்டகை தீப்பிடித்திருக்கு! இதற்கு எல்லாம் என்ன காரணம்? என்னவாயிற்று?” என்றுக் கத்தினார்.


அவரது கத்தலில் அந்த மாளிகையே அதிர்ந்தது.


கோவிந்தன் “ஐயா! நான் போன முறையே கூறினேன். தொடர்ந்து கெடுதலாக நடக்கிறது. ஒரு நல்ல ஜோதிடரை பார்க்கலாங்க! அவர் எதாவது பரிகாரம் சொல்வார். அதைச் செய்தால்.. இந்த கெடுதல்கள் அகலுனு நினைக்கிறேன்.” என்றார்.


அதற்கு சுந்தரம் கேலியான புன்னகையுடன் “ஜோதிடர் என்ன பரிகாரம் கூறுவார் என்றுத் தெரியுமா! நான் தங்க வியாபாரி என்றுத் தெரிந்திருக்கும். எனவே தங்கத்தால்.. ஆனா சிலையை காணிக்கையிடுங்கள் என்றுக் கூறுவார். அப்பொழுதும் கெடுதல்கள் நடந்து என்னவென்று போய் கேட்டால்.. பரிகாரத்தில் சிறு பிழை இருக்கு என்றுக் கூறுவார்.” என்றார்.அதற்கு கோவிந்தன் “ஐயா! நான் சொல்ற ஜோதிடர் அப்படியில்லைங்க! இவரைப் பற்றிச் சொல்லணும்னு நினைச்ச போதே..‌ நல்லா விசாரிச்சுட்டேன்ங்க! பெரிய‌ பெரிய‌ ஆளுங்க எல்லாம் இவர் கிட்ட வந்து ஜோசியம் கேட்டு போயிருக்காங்க! அவங்களுக்கு எல்லாம் நல்லது நடந்து.. அந்த சந்தோஷத்துல பணத்தை கொடுத்துட்டு போயிருக்காங்கனு தான் கேள்விப்பட்டிருக்கேன்ங்க! நீங்களும் போன நல்லது நடக்குமுனு தோணுங்க! ஏன் சொல்றேனுங்கன்னா.. நடக்கிறது எல்லாம் பார்த்தா.. சாதாரண விசயமா தெரியலைங்க.. வரிசையா‌ எதாவது நடக்குதுங்க! இதுக்கு முடிவு கட்டணுங்க!” என்றார்.


கோவிந்தன் கூறியதைக் கேட்டு சுந்தரம் பலத்த யோசனையில் ஆழ்ந்தார்.


மெல்ல பர்வதம் “கோவிந்தன் சொல்றது சரியாக எனக்கு படுகிறதுங்க! அவர் கூறின ஜோதிடரிடம் போகலாம். நம்முடைய தொடர் துன்பத்திற்கு முடிவு கிடைக்குங்க! எல்லாம் கூறினீங்க! ஒன்றை விட்டுட்டிங்க! ஒரு வருஷத்துக்கு முன்னே வெளிநாட்டுல படிப்பை முடிச்சுட்டு வந்த நம்ம மகனுடைய போக்கும்.. சரியில்லைங்க! எப்படியிருந்தவன் அவன்!” என்றவரின் கண்கள் குளம் கட்டின.


யாரைப் பற்றி பர்வதம் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தாரோ.. அவன் வாயில் பைப்புடன் ஒரு கையால் மோட்டர் காரின் ஸ்ட்ரீங்கை பிடித்து ஓட்டியவாறு அந்த மண்சாலையில் வந்துக் கொண்டிருந்தான். 

NNK-14

Moderator
நிழல் 2பர்வதம் அவர்களது மகனைப் பற்றிக் கவலையுடன் கூறவும், சுந்தரம் “அவனைப் பற்றிப் பேசாதே! மகனா அவன்! பெற்றோரின் துன்பத்திலும், கெடுதலிலும் தோள் கொடுத்து தாங்குபவன் தான் மகன்! ஆனால் அவன்..” என்று வெறுப்புடன் பார்த்தார்.


பின் சுற்றிலும் பார்த்தவர், “மகன் என்றுச் சொன்னாய் தானே! எங்கே அவன்? இங்கே இத்தனை கலவரம் நடக்கிறது.. வந்து எட்டி‌ கூடப்‌ பார்க்க மாட்டானா” என்று எரிச்சலுடன் கேட்டார்.


அதற்கு கோவிந்தன் “சின்ன ஐயா! நேற்று மதியத்திற்கு மேல் வேட்டைக்கு கிளம்பியவர்..” என்றுவிட்டு மெல்லிய குரலில் “இன்னும் வரலைங்க..” என்றார்.


அது கேட்டு சுந்தரம் மேலும் வெறுப்புடன் “பகல் எல்லாம் ஊர் சுற்றுவது, இரவானால் மது, மாது என்று பெண்கள் வீட்டில் குடியிருப்பது.. இவன்தான் எனக்கு உறுதுணையாக இருக்க போகிறவனா..” என்றார்.


பர்வதம் விசும்பலுடன் “நான்கு வருடங்களுக்கு முன் இப்படியாங்க இருந்தான். குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். பதினெட்டு வயதிலேயே உங்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தான். படிப்பிற்கு என்று வெளிநாட்டிற்கு சென்று.. இம்மாதிரி பாழாய் போன பழக்கவழக்கங்களை பழகி வந்துவிட்டானே! அவன் இவ்வாறு மாறினதில் இருந்து தான் நம் துன்பங்கள் கூடின. அதனால் தான் கூறுகிறேன். கோவிந்தன் கூறிய ஜோதிடரிடம் செல்லலாங்க! ஏன் தொடர் கெடுதல்கள் ஏற்படுகின்றன என்றுக் கேட்டு.. அதற்கு அவர் கூறும் பரிகாரத்தை செய்யலாங்க! எனக்கு எனது மகன் முன்பு இருந்தது போல் வேண்டுங்க..” என்று அழுகையுடன் முடித்தார்.


சுந்தரத்தின் முகத்தில் பலத்த யோசனை கூடியது. பர்வதம் கூறுவது உண்மையே! அவனது பொறுப்பையும் திறமையையும் கண்டே மேலும் பணம் பெருக்க.. மகனை இயந்திரங்கள் பற்றிய படிப்பை படிக்க செலவு செய்து வெளிநாடு அனுப்பி வைத்தார். அங்கு சென்றவன் நாலு ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டு வந்த பின் இரு மாதங்கள் நன்றாக தான் இருந்தான். ஆனால் திடுமென.. இப்படி மது மாது என்று வந்து நின்றதோடு மட்டுமில்லாது.. தொழிலிலும் அக்கறை செலுத்தவில்லை. நல்லவேளை இவனை நம்பி இன்னும் இயந்திரங்களை இறக்குமதி செய்யாமல் இருந்தார். மனைவி கூறியது போல்.. மகன் இவ்வாறு மாறியதும் கெடுதல்களில் ஒன்றோ! இதற்கு முடிவும் தீர்வும் உண்டோ! என்று யோசனையில் ஆழ்ந்தவர்.. பின் நிமிர்ந்து கோவிந்தனிடம் “ஜோதிடர் வீடு செல்ல ஏற்பாடு செய்..” என்றார்.


அப்பொழுது வாயில் இருந்த இரும்பு கதவு வேகமாக திறக்கப்படவும், வேகமாக உள்ளே வந்த மோட்டர் கார் நீரூற்றை சுற்றி தாறுமாறாக வந்து தாழ்வாரத்தில் இருந்த தூணில் இடித்து நின்றது.


பின்புறமாக திறக்கும் கதவை ஓட்டுநர் இருக்கையில் இருந்து திறந்துக் கொண்டு இறங்கினான்.. இத்தனை நேரம் தாய் மற்றும் தந்தையின் உரையாடலுக்கு காரணமாக இருந்த அந்த வீட்டு வாரிசு வேதாச்சலம்!


வேதாச்சலம் இறங்கியதும்.. பணியாளர்கள் ஓடி வந்து நின்றார்கள். வேதாச்சலம் நடந்தவாறு தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை நீட்டவும், ஒருவன் வாங்கி கொண்டு சென்றான். பின் தனது தொப்பியை கழற்றி நீட்டவும் இன்னொருவன் வாங்கி கொண்டு சென்றான். அவனது பின்னாலேயே அவனது நடைக்கு ஈடு கொடுத்தவாறு வந்த இன்னொருவன்.. அவன் அணிந்திருந்த மேல் கோர்ட்டை கழற்றிக் கொண்டு சென்றான். அதற்குள் வாயிற்கதவை அடைந்திருக்கவும்.. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தனக்கு முன்னிருந்த சிறு மேசையில் காலை வைக்கவும், அவனது காலில் முழங்கால் வரை தோலுறை கொண்ட லெதர் ஷுவின் நாடாக்களின் முடிச்சை அவிழ்த்து.. இருகால்களில் இருந்து ஷுவை கழற்றி விட்டார்கள். அவர்கள் கழற்றியதும்.. சோம்பல் முறித்தவாறு எழுந்து நின்றவன், கொட்டாவியும் விட்டான்.


அவன் வந்ததில் இருந்து அவனது செய்கைகளை சுந்தரம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். இங்கு இத்தனை கலவரம் நடந்திருக்க.. அதற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதவன் போன்று அசட்டையான நடையும்.. நேற்றிரவு மது அருந்தியதின் அடையாளமாக சிவந்த விழிகளும் கலைந்த முகமும் என்று அவனைப் பார்க்கும் பொழுது.. சுந்தரத்திற்கு உடல் முழுவதும் பற்றி எரிவது போன்று இருந்தது.


அதை மேலும் அதிகப்படுத்துவன் போல்.. அசட்டையான நடையுடன் வரவேற்பறைக்கு வந்த வேதாச்சலம் பணியாட்கள் கொண்டு.. அனைவரும் குழுமியிருப்பதைக் கண்டு “இன்று என்னவாகிற்று! எது நாசமாகியது?” என்று இரவில் அருந்திய மதுவின் போதை தெளியாது சிரித்தான்.


அத்தனை நேரம்.. அவனுக்காக பேசிக் கொண்டிருக்க.. வேதாச்சலமோ.. அவர்களது பிரச்சினையை கூறிச் சிரிக்கவும், பர்வதம் அழுகை அடக்க முடியாமல் அழுதார். சுந்தரத்திற்கோ ஆத்திரம் மிக அவனை நோக்கி வந்து ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.


உடனே கோவிந்தன் முதற்கொண்டு மற்ற பணியாளர்கள்.. அங்கிருந்து தலையை நிமிர்ந்து கூடப் பாராது கலைந்து சென்றனர்.


சுந்தரம் அடித்தத்தில் அடித்த திசையில் தலையை திருப்பியிருந்த வேதாச்சலம், பின் கன்னத்தை தடவியவாறு அவரைப் பார்த்தவன், “என்னை அடித்தற்கான சரியான காரணத்தை கூறிவிட்டால்.. என்னுடைய மறு கன்னத்திலும் நீங்கள் அறைந்துக் கொள்ளலாம்.” என்று அவனை அடிப்பதற்கு.. அவனுடைய தந்தைக்கு அனுமதி கொடுத்தான்.


வேதாச்சலத்தின் திமிரான பேச்சில் கோபம் மிக சுந்தரம் நின்றிருக்க.. பர்வதம் முன்னே வந்து மகனின் சட்டையை பற்றி குலுக்கியவாறு “நாங்கெல்லாம்.. எவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நீ அதை கேலி செய்கிறாயா!” என்றார். அவருக்கு கணவர் கோபத்தில் மீண்டும் மகனை அடித்து விடக் கூடாதே என்ற பயம் இருந்தது.


வேதாச்சலம் ஒரு பக்கமாக உதட்டை வளைத்து சிரித்து.. “உங்க கூட சேர்ந்து வருத்தப்பட்டால்.. உங்களுக்கு சந்தோஷமா அம்மா!” என்றான்.


சுந்தரம் ஆத்திரத்துடன் “தொடர்ந்து இம்மாதிரி நடக்காமல் இருக்க.. அக்கறையுடன் முயற்சி செய்ய வேண்டும்.. முட்டாள்!” என்று கர்ஜீத்தார்.


அதற்கு வேதாச்சலம் “ஓ அப்படியா! ஆனால் அறிவுஜீவி நீங்க இருந்தும்.. இதே போல் தொடர்ந்து நடக்கும் போது இந்த முட்டாள் இருந்து என்ன செய்ய போகிறேன்.” என்றான்.


சுந்தரம் கோபத்துடன் அவனை நோக்கி வரவும், பர்வதம் இருவருக்கும் நடுவில் வந்து நின்றவர்.. வேதாச்சலத்தை அறைக்கு செல் என்று அனுப்பி வைத்தார்.


படியேறி கொண்டிருந்த மகனை பார்த்த சுந்தரம் எரிச்சலுடன் “இவன் தலையிட்டு செய்த ஒரு காரியமும் உருப்படியான காரியம் இல்லை. அந்த விசயத்திற்குள் யார் இவனை உள்ளே வரச் சொன்னது? திருமணம் செய்து அனுப்பிய பெண்ணை யாராவது மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார்களா?” என்றுக் கோபத்துடன் கேட்டார்.


ஒன்றாக செல்லும் படிக்கட்டு இரண்டாக பிரியும் இடத்திற்கு சென்றிருந்த வேதாச்சலம் அங்கிருந்து திரும்பி அவரைப் பார்த்தான்.


“சாரதாவிற்கு அங்கு வாழ்க்கை இல்லை என்று ஆன பிறகு.. அவள் அங்கு எதற்கு இருக்க வேண்டும்!” என்றுக் கேட்டான்.


அப்பொழுது இடைப்புகுந்த பர்வதம் “அபத்தமாக பேசாதே வேதா! இந்த விசயத்தில் சாரதாவை நீ அழைத்துக் கொண்டு வந்தது எனக்கும் விருப்பமில்லை. நீ அவளை அழைத்த வந்த போது.. அவள் ஒரு மாதக் கருவை வேறு வயிற்றில் சுமந்திருந்தாள். தற்பொழுது.. அது ஐந்து மாத கருவாக வளர்ந்திருக்கிறது. அந்த குழந்தை அவர்கள் வீட்டின் வாரிசு. அவள் அந்த வீட்டு பெண்!” என்றார்.


அதற்கு வேதாச்சலம் “ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு உங்களிடமும் இப்படிப்பட்ட பேச்சை எதிர்பார்க்கவில்லை அம்மா! இனி உங்களுக்கும் விளக்கம் கூறி பயனில்லை. சாரதாவிற்கு அங்கே இருக்க விருப்பம் என்றால் கூறச் சொல்லுங்கள்.. கொண்டு போய் அங்கேயே விட்டு விடுகிறேன்.” என்றுவிட்டு.. இரண்டாக பிரிந்த படிக்கட்டின் ஒன்றின் கடகடவென ஏறிச் சென்றான்.


தனது அறையில் அவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சாரதா கண்களில் பெருகிய கண்ணீருடன் கதவின் மேல் சாய்ந்துக் கொண்டாள்.


அதன் பின்.. அந்த மாளிகையில் சில மணி நேரங்கள் மயான அமைதி நிலவியது. அவரவர் அவர்களது அறையில் முடங்கி கொண்டார்கள். சுந்தரமும் கோவிந்தனும்.. அன்று எரிந்த மூட்டைகளினால் ஏற்பட்ட நஷ்டக்கணக்கை பார்த்தார்கள். அதைப் பார்த்த சுந்தரத்திற்கு.. சீக்கிரம் ஜோதிடர் வீட்டிற்கு போவது நல்லது என்றுப் பட்டது. எனவே அன்று மாலையே கோவிந்தன் குறிப்பிட்ட கார்மேகம் ஜோதிடரை பார்க்க சென்றார்கள்.


சுந்தரத்தின் ஜாகதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர் கார்மேகம் “உங்களது பரம்பரை தோஷம் தான்.. இவற்றிற்கு எல்லாம் காரணம்! உங்க ஜாதகத்தில் தற்பொழுது கட்டம் சரியில்லாதது போனதும்.. அந்த தோஷத்திற்கு வலு கூடிவிட்டது. அதனால் தான் தொடர்ந்து கெடுதல்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த தோஷத்தின் வலுவை குறைக்க வேண்டும். அதற்கு உங்க பரம்பரையில் புது இரத்த வாரிசு தோன்ற வேண்டும். அதுவும் குறிப்பிட்ட ஜாதகம் கொண்ட பெண்ணின் மூலமாக அந்த வாரிசு உருவாக வேண்டும். புது இரத்த வாரிசு உருவாகினாலே.. தோஷம் சிறிது சிறிதாக விலகுவதை பார்ப்பீங்க! அந்த திருமணமும்.. வருகிற பத்து நாளில் வருகிற பௌணர்மி தினத்திற்குள் நடைப்பெற வேண்டும். இல்லையேல் அடுத்து அடுத்து பெரும் இழப்பை காண்பீர்கள்” என்றுக் கூறினார்.


கோவிந்தன் “ஐயாவோட மகன் திருமண வயதில் தான் இருக்கிறார். அவருக்கே திருமணம் முடித்துவிடலாம். நீங்களே.. நல்ல ஜாதகம் பார்த்து தாருங்கள்..” என்றார்.


அதற்கு நாளை மறுநாள் வருமாறு கூறினார்.


அதன்படியே இரு நாட்கள் கழித்து.. கோவிந்தன் சென்று.. ஜாதகத்தை வாங்கிக் கொண்டு வந்தார். அது அக்ஹகாரத்தில் வசிக்கும்.. பண்டிதம் கூறும்.. ரங்கராஜனின் மகள் ஜானகியின் ஜாதகம்! அம்சமான ஜாதகம் என்றார். கார்மேகம் ஜோதிடரே திருமணநாளையும் குறித்து கொடுத்திருக்கிறார் என்றும், நான்கு நாட்கள் கழித்து நல்ல மூகூர்த்த நாள் வருகிறது என்றுக் கூறினார். சுந்தரம் மகிழ்ந்தவராய் “நல்லது அதையே முடித்துவிடலாம்.” என்றுக் கூறினார்.


பின் சுந்தரம் பர்வதத்திடம் “பர்வதம்! உன் மகனை தயாராக இருக்க சொல்லு! எங்காவது சென்றுவிட போகிறான்.” என்றார்.


பர்வதம் மகிழ்ச்சியுடன் அதை வேதாச்சலத்தின் அறைக்கு சென்றார்.


வேதாச்சலத்தின் அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு ரெக்கார்ட் பிளேயரில் பாடல் ஓடிக் கொண்டிருந்த வேதாச்சலம் பால்கனியில் நின்றுக் கொண்டு தொலைநோக்கி கருவி கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.


“வேதா!” என்று பர்வதம் அழைத்ததும்.. திரும்பியவன் “என்ன விசயம் அம்மா!” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தான்.


பர்வதம் ஜோதிடர் கூறியதைக் கூறி.. அவனுக்கு திருமணம் முடிக்க பெண்ணும் நாளும் குறிக்கப்பட்டு விட்டதைக் கூறவும், சத்தமாக சிரித்தவன், “என்னால் இந்த திருமணத்தை செய்ய முடியாது.” என்றுக் கூறினான்.


பர்வதம் அதிர்ந்தவராய் பார்க்கவும், வேதாச்சலம் “ஏதோ ஜோதிடர் கூறினார் என்பதற்காக என்னால் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.” என்று வெறுப்புடன் கூறினான்.


பர்வதம் “வேதா! நம் குடும்ப நலனுக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்!” என்றுக் கெஞ்சினார்.


வேதாச்சலம் ஒரே வார்த்தையில் “முடியாது.” என்றுவிட்டு.. பாதியில் விளையாடி நிறுத்தியிருந்த செஸ் விளையாட்டு பேழையின் முன் அமர்ந்தான். பர்வதம் இதை எப்படி கணவரிடம் கூறுவது என்று கவலையுடன் சென்றுவிட.. வேதாச்சலம் வெண்தந்தத்தால் ஆனா சிப்பாய் காயை.. தன் பக்கம் இருந்த வெண்கலத்தால் ஆனா சிப்பாய் காய் கொண்டு வெட்டினான்.


பின் தன் பக்கம் இருந்த சிப்பாய் காயை நகர்த்தியவன், எதிர்புறம் இருந்த வெண்தந்தத்தால் ஆனா.. குதிரை காய் அதன் விதிமுறை படி நகர்த்தி தனது சிப்பாயை வெட்டினான். அப்பொழுது கதவை தட்டிக் கொண்டு கோவிந்தன் உள்ளே வந்தார்.


வேதாச்சலம் நிமிர்ந்துக் கூடப் பாராமல் “வாங்க கோவிந்தன்! உட்காருங்கள் விளையாடலாம்.” என்றான்.


அதற்கு கோவிந்தன் “விளையாடலாலேயே உங்க கூட தோற்க ரெடிங்க!” என்றுச் சிரித்தார்.


வேதாச்சலம் சிரித்தவாறு “என்ன கோவிந்தன்! நீயும் அப்பா சார்பாக என்னை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்ல வந்திருக்கியா..” என்றுக் கேட்டான்.


அதற்கு கோவிந்தன் “உங்க நல்லதிற்காகவும் தான் சொல்றாங்க! பல பெண்கள் சகவாசம் நல்லது இல்லைங்க..” என்றார்.


அதற்கு வேதாச்சலம் சிப்பாய் காயை நகர்த்தியவாறு “அதற்கு என்னால் ஒரு பெண்ணுடன் வாழ முடியாது.” என்றான்.


கோவிந்தன் “இந்த பெண்ணை சம்பிரதாயப்படி திருமணம் செய்துக்கோங்க! மற்றபடி உங்க விருப்பம் போல் இருந்துக்கோங்க..” என்றுச் சிரித்தவாறு கூறினார்.


அதற்கு வேதாச்சலம் சிரித்தவாறு “நீங்க என்ன சொன்னாலும் என்னால் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள முடியாது.” என்றான்.


கோவிந்தன் “உங்களுடைய குடும்பமும் சொத்தும் அழிகிறது. அதனால் தானே..” என்றுக் கூறிக் கொண்டிருக்கையிலேயே தனக்கு முன்னால் இருந்த பேழையை வீசியேறிந்தான்.


கோவிந்தன் திடுக்கிட்டவராய் நான்கடி பின்னால் சென்று நின்றார்.


கோபத்துடன் எழுந்து நின்ற வேதாச்சலம் “இவர் செய்வது முட்டாள்தனமாக இருக்கிறது கோவிந்தா.. இதற்கு என்னை துணைப் போக சொல்றீங்களா! நடக்கும் விசயங்கள் யாரோ செய்யும் சதி போல் தெரிவது இவருக்கு புரியவில்லையா! அதை ஆராய்வதே விட்டு.. யானை அவரை தாக்க வந்தது என்று அந்த யானையை கொல்ல சொன்னார். பெரிய சம்பந்தத்திற்கு ஆசைப்பட்டு.. என் தங்கையை பதினைந்து வயதில் திருமணம் முடித்து வைத்தார். அடுத்த மாதமே.. அவர் இறந்துவிட்டார். பெரிய இடத்து மருமகள் என்ற பெயருடனே இருக்கட்டும் என்று அவளை அங்கேயே விட்டு வரப் பார்த்தார். அவர் வந்த அச்சாணி முறிந்தது.. என்று அந்த அச்சாணியை பொருத்தியவனுக்கு.. காசையடி கொடுக்க சொல்லியிருக்கார். நெற்பயிர் வாடியது என்பதற்காக நீர் பாய்ச்சியவர்களை தலைகீழாக அரைநாள் தொங்க விட்டார். புயல் காற்று அடித்தால் வாழை மரங்கள் சாய்வது இயற்கை தான்! அதற்காக சிறு காற்று அடித்தாலே.. பணியாட்களை அனுப்புவது சரியில்லை. இப்போ கொட்டகை தீ பிடித்து விட்டது. அதற்கு காவலாளிகள் என்ன செய்வார்கள். தீ என்றும் பாராமல் உள்ளே புகுந்து தற்போது தீக்காயத்தோட இருக்காங்க போல! இப்போ ஒரு பெண்ணை திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொள்ள கூறுகிறார்கள். இதற்கு நான் உடன்பட மாட்டேன்.” என்று மூச்சிரைக்க கூறினான்.


கோவிந்தன் நடுங்கியவாறு நின்றிருந்தான். அவருக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.


வேதாச்சலம் “நீங்க போகலாம்‌.” என்றதும்.. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சென்றவர், சுந்தரத்தின் முன் நின்றார். அவர் குரலில் நடுக்கத்துடன் வேதாச்சலம் கூறியதை அப்படியே ஒப்புவித்தார்.


சுந்தரம் “சொல்வதை செய்ய சொன்னால் எனக்கே அறிவுரை கூறுகிறானா! அவன் சொன்னது போல் பார்க்காமல் இருப்பேனா! புயல் காற்று‌ அடிப்பதும், நீர் அதிகமாக பாய்வதும் கூட மனிதனின் சதி என்றுக் கூறப் போகிறானா..” என்று கர்ஜீத்தார்.


கோவிந்தன் என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாமல் விழித்தவாறு நின்றிருந்தார்.


குறுக்கும் நெடுக்குமாக நடந்த சுந்தரம் பலத்த யோசனையில் இருந்தார். ஜோதிடர் கூறியது அவரது மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. பின் சிறு பெருமூச்சுடன் நின்று கோவிந்தனை பார்த்தவர் “ஜோதிடர் குறித்த நாளில் திருமணம் நடந்தேற வேண்டும்ஹ அந்த ஜாதகம் கொண்ட பெண் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு எப்படியாவது ஒப்புதல் வாங்கிருங்க..” என்றார்.


கோவிந்தன் கேள்வி கேட்க வாயை திறந்து விட்டு மூடவும் சுந்தரமே பதிலளித்தார்.


“இந்த வம்சத்திற்கு புது வாரிசு உருவாக வேண்டும் அவ்வளவுதானே! நானே அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறேன்.” என்று அறிவித்தார்.


ஒரு கணம் திகைத்து நின்ற கோவிந்தன் மறுகணமே தலையை ஆட்டிவிட்டு.. முதலாளி கூறியதை நிறைவேற்ற ஓடினான்.


அடுத்த நான்காம் நாள்.. அந்த மாளிகையின் வளாகத்தில் சிறு திருமண மேடை அமைக்கப்பட்டிருக்க.. மேடையின் அருகே மணப்பெண்ணின் பெற்றோர் கண்ணீர் மல்க நடக்க போவதை தடுக்க இயலாது கரங்களை பிசைந்தவாறு நின்றிருந்தார்கள்.


திருமண மேடையில்.. சிவப்பு நிறத்தில் தங்கத்தால் சரிகை நெய்யப்பட்ட பட்டுப்புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் மூக்கில் மூக்குத்தியும் புல்லாக்கும் மின்ன.. அந்த மின்னலை தோற்கடிக்கும்படி கண்களில் கண்ணீர் துளி மின்ன.. தன் முன் இருந்த அக்னிக்குண்டத்தை வெளித்தவாறு ஜானகி அமர்ந்திருந்தாள்
 

NNK-14

Moderator
நிழல் 3ஜானகியின் குடும்பம் ஆச்சாரமான வைஷ்ணவ குடும்பம்! சுந்தரத்தின் கணக்கு பிள்ளை வந்து விசயத்தை கூறிய பொழுது.. அதிர்ந்தவர்கள், பலமாக மறுப்பு தெரிவித்தார்கள். ஜானகியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக என்று அவர்களது உறவினர்கள் மட்டுமில்லை. நண்பர்கள், பழகியவர்கள் கூட வரவில்லை. ஆனாலும் மகளின் வாழ்விற்காக அப்பொழுதும் அவர்கள் மறுத்து போராடினார்கள். அவர்களது உயிருக்கு கொலை மிரட்டல் விடுக்கவும், தனது பெற்றோரின் உயிரை காக்கும்‌ பொருட்டு வேறு வழியில்லாது ஜானகி இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.


மாளிகையின் வாளகத்தில் முன் இருந்த சிறு மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. அக்னி குண்டத்தை வெறித்தவாறு ஒரு காலை மடித்து அதைக் கட்டிக் கொண்டு கண்களில் கண்ணீர் மின்ன ஜானகி அமர்ந்திருந்தாள்.


மனமில்லா திருமண நிகழ்வு தான் என்றாலும்.. மணமகளின் குடும்பத்தாரின் துயரத்தை தவிர.. எந்த வித குறையுமின்றி.. அந்த நிகழ்வுக்குரிய அனைத்து அம்சங்களுடன் நடைப்பெற்று கொண்டு இருந்தது. மணமக்களை வாழ்த்த ஊர் மக்களும் கூடியிருந்தார்கள். ஆனால் இன்னும் மணமகனான சுந்தரம் இன்னும் மாளிகையில் இருந்து வெளியே வரவில்லை. முகூர்த்த நேரமும் நெருங்கி கொண்டிருந்தது.


மாளிகையில் சுந்தரத்தின் அறையில்.. பர்வதம் தங்க சரிகை இட்ட அங்கவஸ்திரத்தை எடுத்து கணவரின் தோளில் போட்டு சரிச் செய்தாள். அவளது கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது. அப்பொழுது கதவு தட்டப்பட்டு கோவிந்தனின் ‘ஐயா’ என்ற குரலும் கேட்டது.


சுந்தரம் “நான் தயாராகிவிட்டேன் கோவிந்தன்! போகலாமா! பர்வதம் ஆரத்தியுடன் தயாராக இரு..” என்றுவிட்டு.. வெளியே வந்தார்.


ஆனால் வெளியே வந்தவரிடம் கோவிந்தன் சன்னமான குரலில் “ஐயா! தர்மபுரி நவாப் கிரிசங்கர் அவர்கள் அவரோட பெண் திருமணத்திற்கு நகைகள் செய்ய.. உங்களை அழைத்து வர.. வண்டியுடன் ஆட்களை அனுப்பியிருக்கிறார்.” என்றுப் பணிவும் சங்கடமுமாக கூறினான்.


“என்ன!” என்றுத் திரும்பிய சுந்தரத்தின் கண்கள் பளபளத்தன.


“நவாப்.. அழைத்திருக்கிறாரா! இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா! பொன்னால் நகைகள் மட்டுமில்லை. பொன்னால் பொருட்களையும் செய்ய சொல்லுவார். இதோ உடனே கிளம்பலாம்.” என்றவரின் நடையின் வேகம் கூடியது.


அவரின் வேகத்திற்கு உடன் நடந்தபடி கோவிந்தன் “அப்போ உங்கள் திருமணம்..” என்கையிலேயே அவர்கள் வாயிலை அடைந்திருந்தார்கள். சுந்தரமும்.. திருமண நிகழ்விற்கு கூடியிருந்த மக்களையும்.. கல்யாண மேடையில் அமர்ந்திருந்த மணப்பெண்ணையும் பார்த்தார்.


சுந்தரத்தை பார்த்ததும்.. “மாப்பிள்ளை வந்தாச்சு..” என்று அங்கு பரபரப்பு தோன்றியது.


அப்பொழுது கோவிந்தன் மெல்ல அவர் புறம் சரிந்து “இரண்டு நிமிஷம் வந்து மேடையில் உட்கார்ந்து திருமணத்தை முடிச்சுட்டு போய் விடலாங்க..” என்றான்.


ஆனால் சுந்தரத்தின் மனம் வெளியே அவரை அழைத்துப் போக நின்றிருந்த மோட்டர் காரின் மேல் இருந்தது. அவரால் ஒரு கணம் கூட அங்கு நிற்க முடியவில்லை. எனவே அங்கிருந்தவர்களைப் பார்த்து தொண்டையை கனைத்துவிட்டு “இந்த திருமணத்தை இப்போதைக்கு நிறுத்துக்கிறேன்.” என்றார்.


அதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.


சுந்தரம் தொடர்ந்து “மீண்டும் மூன்று நாட்கள் கழித்து.. திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்.” என்று ஜானகியின் பெற்றோரையும் ஜானகியையும் பார்த்தார்.


திருமணத்தை நிறுத்துக்கிறேன் என்ற வார்த்தையில் உயிர் பெற்றவர்களாய் பார்த்தவர்கள்.. சுந்தரம் அடுத்து கூறியதைக் கேட்டு தோய்ந்தார்கள்.


அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் “நான் போயிட்டு வருவதற்குள்ள எந்த மாற்றமும் வந்துவிடக் கூடாது. திட்டமிட்டது நடந்தே தீரணும்.” என்று எச்சரிக்கை குரலில் கூறினார். பின் கோவிந்தனிடம் திரும்பி “கோவிந்தா! நான் கூறியதைப் புரிந்தது தானே! இவங்களை..” என்றதும்.. கோவிந்தன் “நம்ம ஆட்களை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யறேன்ங்க..” என்றான்.


சுந்தரம் “ஏற்பாடு செய்துட்டு சீக்கிரம் வா..” என்றுவிட்டு.. அவர் காரை நோக்கி சென்றார். சுந்தரத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஜானகியை திருமணம் செய்ய ஏற்பாடு தான் செய்தார். இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. அதுக்குள் அவளது அதிர்ஷ்டத்தை பார்த்து விட்டார். எனவே ஜானகி அவர்களது வீட்டிற்கு வந்துவிட்டால்.. அவரது தொடர் துன்பங்களும்.. பிரச்சினைகளும் தீர்ந்து நல்லது நடக்கும்.. என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


சுந்தரம் உத்தரவிட்டதும் கோவிந்தன் ஜானகி குடும்பத்தாருக்கு காவல் காக்க ஆட்களிடம் உத்தவிட்டு விட்டு.. கிட்டத்தட்ட சுந்தரம் இருந்த காரை நோக்கி ஓடினான். கோவிந்தன் காரில் ஏறியதும்.. அந்த மோட்டர் கார் புறப்பட்டது.


அவர்கள் சென்றுவிட.. சிலையென அமர்ந்திருந்த ஜானகியின் உள்ளம் பரபரப்பது. தற்பொழுது அவள் தப்பித்துவிட்டாள். அவளுக்கு இன்னும் மூன்று நாட்கள் கெடு இருக்கிறது. அதற்குள் அவளுக்கு எதாவது வழி கிடைக்கலாம். ஆம் அந்த வழியை ஏற்படுத்தவே.. பகவான் இந்த திருமணத்தை இப்போதைக்கு நிறுத்தியிருக்கிறார். இதையே நல்லதாக நினைத்து.. இதிலிருந்து தப்பிக்க வழியை தேட வேண்டும். பகவான் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜானகியின் மனதில் சிறு நம்பிக்கையும்.. மகிழ்ச்சியும் கொண்டது. திகைப்புடன் நின்றுக் கொண்டிருந்த தனது பெற்றோரை பார்த்து மெல்ல சிரித்தாள்.


இன்று தப்பித்துவிட்டாலும் இன்னும் மூன்று நாட்கள் கழித்து.. மகளை தீயில் குதிக்க சொல்லியிருக்கிறார் என்பதை மறந்து சிரிக்கும் மகளை வருத்தத்துடன் பார்த்தவர்களுக்கு அழுகை பொங்கி வந்தது.


தனது அழுகையை அடக்கிக் கொண்டு மகளின் தலையை வருடிய ஜானகியின் அன்னை “எழுந்திரு ஜானகி!” என்றுக் கரம் பற்றி எழ வைக்க முயன்றார்.


அப்பொழுது “யாரும் எங்கேயும் போகக் கூடாது. அவரவர் இடத்தில் அப்படியே அமருங்கள்..” என்று ஒரு குரல் கர்ஜீத்தது.


அனைவரின் கவனம் குரல் வந்த இடத்திற்கு சென்றது. அங்கு வேதாச்சலம்.. நிதானமான நடையுடன் கல்யாண மேடையை நோக்கி வந்துக் கொண்டிந்தான். அனைவரின் பார்வை அவனின் மேல் இருந்து அகலவில்லை.


கல்யாண மேடையில் ஏறி நின்ற வேதாச்சலம் “நின்று போன இந்த திருமணம்.. தற்பொழுது நடக்கும்.” என்றுப் பேச்சை நிறுத்திவிட்டு.. அனைவரையும் நன்றாக பார்த்தவன், பின் தொடர்ந்து “என்னுடன்..” என்று முடித்தான்.


அதைக் கேட்டு அனைவரும் திகைத்து விழித்தார்கள். ஜானகியோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.


‘இது என்ன.. அப்பன் இல்லை என்றால் மகனா!’ இங்கு என்ன காலியிடத்தை நிரப்பும் போட்டியா நடக்கிறது. என்று இருந்தது. எனவே அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.


திருமண பந்தலுக்குள் நுழைந்த வேதாச்சலம் மந்திரம் கூறுபவரைப் பார்த்து.. “திருமண சடங்குகள் எல்லாம் எதையும் விடாது, எல்லாம் நடக்கட்டும் என்றுவிட்டு ஜானகியின் புறம் திரும்பியவன், “உட்கார்..” என்றான்.


ஜானகி இன்னும் அதிர்ந்து நிற்கவும், வேதாச்சலம் புருவத்தை சொறிந்தவாறு “உன் பெயர் என்ன?” என்றுக் கேட்டான்.


மந்திரம் கூறுபவர் “ஜானகி” என்றார்.


வேதாச்சலம் “ஓ உட்கார் ஜானகி..” என்றுவிட்டு தனக்கு கொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டான்.


ஜானகி தனது மொத்த திடத்தையும் திரட்டி வேதாச்சலத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.


“என்னை விட்டுருங்கோ! என்னை பெற்றவாவை கொன்று விடுவதா மிரட்டவும், இந்த திருமணத்திற்கு ஒத்துண்டேன். இந்த திருமணத்தில் துளியும் கூட நேக்கு விருப்பமில்லை. இப்போ பகவானா பார்த்து இந்த திருமணத்தை நிறுத்தி எனக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கா! இதில் நடுவில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தாதீங்கோ! இந்த திருமணம் நடக்காதுனு சொல்லுங்க! நான் உங்க கிட்ட கெஞ்சி கேட்கிறேன். காலில் கூட விழறேன்.” என்று அவனது காலில் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.


வேதாச்சலம் சிறிதும் அசராமல் குனிந்து அவளைப் பார்த்தவன் “உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா.. அல்லது இந்த திருமணம் பிடிக்கவில்லையா!” என்றுவிட்டு தலையை பின்னால் சாய்த்து சிரித்தான். ஜானகி விக்கித்தவளாய் பார்த்தாள்.


வேதாச்சலம் “இன்று திருமணம் நின்றுவிட்டால்.. தப்பித்துவிடலாம் என்று நினைத்துவிட்டாயா! ஒருவேளை எனது தந்தை திருமணம் செய்துக் கொள்ள தான் விருப்பம் என்றால்.. நான் சென்றுவிடுகிறேன்.” என்றதும்.. ஜானகி முகத்தை சுளித்தவாறு எழுந்தாள்.


வேதாச்சலம் சிரித்தவாறு அவளது கரத்தை பற்றினான். உடனே விதிர்த்து போன.. ஜானகி தனது கரத்தை விடுவித்துக் கொள்ள போராடினாள். ஜானகியின் பெற்றோர் வேதாச்சலம் முன் வந்து கையெடுத்து கும்பிட்டு “இப்படி பலர் முன்னிலையில் அவளிடம் தவறா நடக்காதேள்! அவளை விட்டுருங்கோ!” என்றுக் கெஞ்சினார்.


அதற்கு வேதாச்சலம் “அப்போ முரண்டு பிடிக்காமல் உங்க மகளை மனையில் உட்கார சொல்லுங்க!” என்று இரக்கமில்லாமல் கூறியவன், ஜானகியை பார்த்து “மூன்று நாட்கள் கழித்து.. மட்டும் உனக்கு பிடிக்காத திருமணம் நடக்காது என்று நினைச்சுட்டியா! இப்போ இந்த திருமணம் நடக்காவிட்டால் அந்த திருமணம் கண்டிப்பா நடந்தே தீரும். எந்த திருமணம் உனக்கு வேண்டும்?” என்று உதட்டை வளைத்து சிரித்தான்.


ஜானகி ஸ்தம்பித்தவளாய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் வேதாச்சலம் “அந்த திருமணத்தை நிறுத்த உன் பகவான் கொடுத்த வழி.. நான்தான் என்று நினைச்சுக்கோ!” என்று நக்கலுடன் கூறினான்.


பின் அவளை மேலும் அருகே இழுத்தவன் “இந்த திருமணத்திற்கு நீ ஒத்துக் கொள்ளவில்லை என்றால்.. உன் பெற்றவங்களை கொன்று விடுவேன் என்று எனக்கு மிரட்ட தெரியாது என்று நினைத்தாயா..” என்றுச் சிரித்தான்.


ஜானகி அதிர்ந்து அவனை நோக்கினாள். அவன் அவளது பார்வையை தயங்காது தாங்கியவாறு கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் ஜானகி பார்வையை தாழ்த்தினாள்.


ஜானகியின் பெற்றோர் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருக்க.. அங்கிருந்த மக்கள் கூட்டமும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


‘அப்பா மணக்க இருந்த பெண்ணை.. இவன் மணக்கிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே.. கலியுகம் ரொம்ப கெட்டு கிடக்கு..” என்றுத் தங்களுக்குள் சலசலத்தவாறு இருந்தார்கள்.


அவர்களின் பேச்சு.. ஜானகியின் காதிலில் விழத் தான் செய்தது.


எனவே மெல்ல நிமிர்ந்தவள் “ஏன் இப்படி அடம் பிடிக்கிறேள்! நான் என்ன தவறு செய்தேன்?” என்றுக் கேட்டாள்.


வேதாச்சலத்தின் கண்களில் இரசனை பரவியது. அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “நீ மிகவும்.. அழகாக இருக்கிறாய்!” என்றான். அதைக் கேட்டவளுக்கு தன்னை நினைத்தே அருவருப்பாக இருக்க.. வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.


அதற்கு மேல் அவளிடம் நின்றுப் பேசாமல்.. ஜானகியை இழுத்துக் கொண்டு சென்றவன், அவளை மனையில் அமர வைத்து தானும் அமர்ந்து.. மந்திரம் ஓதுபவரை அவரது வேலையை செய்ய சொன்னான்.


ஜானகியின் தந்தை தலையில் அடித்துக் கொண்டு அழ.. ஜானகியின் அன்னை முந்தானையை வாயில் வைத்தவாறு அழ.. கூடவே மந்திரங்களும் ஓத.. வேதாச்சாலம்.. உயிர் உள்ள சிலையாய் அமர்ந்திருந்த ஜானகியின் கழுத்தில் மங்கல நாண் கட்டினான்.


சாட்சியாக இருந்த அக்னி குண்டத்தை மூன்று முறை சுற்றி வணங்கிவிட்டு.. இருவரும் மூன்று முறை மாலையை மாற்றிக் கொண்டார்கள்.


முதல் முறை மாலை மாற்றும் போது.. கண்களில் துக்கத்தை தேக்கி வைத்துக் கொண்டு வேதாச்சலத்தை ஜானகி பார்த்தாள்.


இரண்டாம் முறை மாலை மாற்றும் போது.. எவ்வித உணர்ச்சியுமின்றி அவனைப் பார்த்தாள்.


மூன்றாம் முறை மாலை மாற்றும் போது.. கண்களில் கனலை கக்கியவாறு பார்த்தாள்.


இந்த மூன்று பார்வைகளையும் முகத்தில் மாறாத புன்னகையுடன் வேதாச்சலம் எதிர்கொண்டான். 
Status
Not open for further replies.
Top