எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விழி முதல் மொழி வரை - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK 48

Moderator
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்..

சும்மா ஒரு இண்ட்ரோ கொடுக்கலாம்னு..

முதல்ல ஹீரோ ஹீரோயினுக்குப் பேர் வச்சிடுவோம்.

நிருதி வாசன் - நிதன்யா

இவங்க மூலமா தான், நான் உங்கக்கூட பயணிக்கப் போறேன்.

இது ஒரு காதல் கதை தான். விழிகள்ல துவங்குற இவங்க காதலோட
மொழி என்னனு கதையில தெரிஞ்சிக்கலாம்‌.


ei3TFVT32299.jpg 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 1


இல்லம் பரபரப்பின் உச்சத்தில் இயங்கிக் கொண்டு இருந்தது.

“திவா.. அப்படியே ரெண்டு பால் பாக்கெட் வாங்கிட்டு வந்திடு!” எனப் பானுமதி சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார்.

“சரிம்மா..” என்றபடி காலணிகளை அணிந்து கொண்டிருந்தவன், தன்மேல் விழுந்த நீர் துளிகளின் காரணமாய், மேல் நோக்கிப் பார்த்தான்.

மாடியின் பால்கனியில் நின்று ரோஜா செடிகளிற்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த மஹதி, தமையனை நோக்கி நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்.

“செடிக்கு ஊத்தச் சொன்னா, என்மேலயா ஊத்தி விளையாடுற? சேட்டை கூடிப் போச்சு உனக்கு. இரு, கடைக்குப் போயிட்டு வந்து பேசிக்கிறேன்!” என விரல் நீட்டி எச்சரித்தவன் வெளியே செல்ல, “ஏய்.. இன்னும் என்னடி செய்யிற? தலையைக் காய வச்சியா இல்லையா.?” என்று அன்னையிடம் இருந்து தாக்குதல் வந்தது.

“காய்ஞ்சிடுச்சுமா. இதோ வந்துட்டேன்!” என அவசரமாய் மாடிப் படிகளை நோக்கி ஓடியவள், திறந்திருந்த ஜன்னலைப் பார்த்துவிட்டு அங்கிருந்த வீட்டின் கதவைத் தட்டினாள்.

தானாய் திறந்து கொண்டது அது. எப்பொழுதுமே அப்படித்தான். இரவு மற்றும் வெளியில் செல்லும் நேரங்களைத் தவிர, மற்ற பொழுதுகளில் திறந்தே தான் இருக்கும் அவ்வீடு.

உள்ளே சென்றவள் அறைக்குள் எட்டிப் பார்க்க, கணினியின் திரைக்குள் தலையை நுழைத்து இருந்தான் நிருதி வாசன்.

பூனை நடையில் சென்று, பின்னிருந்து அவனது தோளைச் சுற்றிக் கையைப் போட, மெலிதாய்ப் புன்னகைத்தான்.

“அது எப்படி அண்ணா, நான் எவ்வளவு சைலண்டா வந்தாலும் கண்டு பிடிக்கிறீங்க.?” என அவள் எப்பொழுதும் போல் வியப்புடன் வினவ, சிரிப்பு மட்டுமே பதிலாய் வந்தது.

“மஹி..” என்ற பானுமதியின் உச்சக் குரல் செவியை அடைய, “அச்சோ! அம்மா செகண்ட் டைம் கூப்பிட்டுட்டாங்க. உடனே போகலேனா, அடி கன்ஃபார்ம். அண்ணா‌, மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வர்றப்ப நீங்களும் கண்டிப்பா இருக்கணும். அதுனால குட்பாயா கீழ வந்திடுங்க. இல்லேனா.. நான் பேச மாட்டேன், பார்த்துக்கோங்க!” என உரைத்தவள், பதில் சொல்ல முயன்ற நிருதியைக் கருத்தில் கொள்ளாது விறுவிறுவெனக் கீழே சென்றாள்.

“பானுமா.. பூ வாங்கிட்டு வந்திட்டேன். என்ன விலை சொல்லுறான் பூக்கடைக் காரன்?” என்றபடி மோகன் வீட்டிற்குள் நுழைய, “முகூர்த்த நாள் இல்லங்க. ரேட் அதிகமா தான் இருக்கும். மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க ஃபோன் எதுவும் பண்ணாங்களா?”

“பத்து நிமிசத்துக்கு முன்னாடி தான் பேசுனேன். அவங்க காலையிலயே கிளம்பிட்டாங்களாம்.‌ ரெண்டு மணி நேரத்துல வந்திடுவாங்க!” என்றிட, அவசர‌ கதியில் பணியைக் கவனித்தார் பானு.

குழலை இருபுறமாய்ப் பிரித்து விட்டு அதில் இருந்த‌‌ சிக்கல்களை விலக்க கொண்டிருந்த மகளைக் கண்ட மோகன், “இங்க வாடா, அப்பா எடுத்து விடுறேன்!” என அழைக்க,

“ஆமா.. அஞ்சு வயசு பாப்பா. மடியில தூக்கி வச்சுக் கொஞ்சுங்க.‌ சிக்கு எடுக்குறாராம், நாளைக்குப் புருஷன் வீட்டுல யாரு செய்யிவா? போயி வேலையைப் பாருங்க‌. தலையை அங்குட்டும் இங்குட்டும் ஆட்டிக்கிட்டு இருக்காம, சீக்கிரம் சீவி பின்னலைப் போடு!” என்று இல்லத்தின் அரசியிடம் இருந்து அதட்டல் வர, வலக்கையால் வாயை மூடிக் கொண்டு, கண்களால் சிரித்தபடி சென்றார் மோகன்.

தாய் மற்றும் தந்தையின் பேச்சைக் கேட்ட மஹதி சிரித்தபடி தயாராக, சொன்ன நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்தனர்.

வண்டியில் இருந்து முதலில் இறங்கிய தீரஜ், “ம்மா.. வீடு சின்னதா இருக்கே? நம்ம ஃபேமிலிக்கு ஒத்து வருமா.?” என வினவ, பின்னால் வந்த அவனின் தந்தை கிருஷ்ணன், “போடா! பெரிய மனுஷன் மாதிரி பேசிக்கிட்டு!” என்று விரட்டினார்.

“பின்ன, நான் பெரிய மனுஷன் இல்லையா? ஐ ஆம் எ டிகிரி ஹோல்டர் ப்பா.”

“அரியர் எல்லாம் முடிச்சா தான், டிகிரி கிடைக்கும்.‌ அதுவரைக்கும் நீ டுவல்த் தான்டா ரஜூக்குட்டி!” என்ற சரண் அவனது பின்னந்தலையில் செல்லமாய் அடிக்க, “ச்சீ.. பொம்பளைப் பிள்ளை மாதிரி குட்டி கட்டினு‌. தம்பின்ற மரியாதை இல்ல உனக்கு‍?”

“ஆமா.. இந்தப் பெரிய மனுசனுக்கு மரியாதை ஒண்ணு தான் குறைஞ்சுப் போச்சு. போடா!” எனப் பெயரனின் முதுகில் ஊன்று கோலால் குத்தியபடி முன் பக்கமாய் நகர்த்தினார், குடும்பத்தின் தலைவரான விஜயரங்கன்.

“என்னங்க, கொஞ்சம் கையைப் பிடிங்க!” என்ற துளசி கணவனான கிருஷ்ணனை அழைக்க, அருகே சென்று உதவினார்.

வலது காலில் கட்டு இடப்பட்டு இருக்க, கவனமாய் இறங்கிய தருணம்.. மோகனும் திவாகரும் வாயிலிற்கே வந்து அவர்களை வரவேற்றனர்.

தனது அறையில் இருந்த ஜன்னலின் வழியே வெளிப்பக்கம் பார்வையைப் பதித்திருந்த மஹதி, தன்னைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டிச் சிரித்த சரணைக் கண்டு, வெட்கத்தில் சிவந்து அங்கிருந்து மறைந்தாள்.

வரவேற்பு நிகழ்ந்து முடிய, இரு வீட்டாரும் தத்தமது குடும்பத்தாரை அறிமுகம் செய்வித்தனர்.

“இவ, என் மனைவி பானுமதி. முதல் பையன் திவாகர், அது அவனோட ஃப்ரெண்ட் நிருதிவாசன். ரெண்டு பேரும் சேர்ந்து பிரிண்டிங் பிரஸ் நடத்திக்கிட்டு இருக்காங்க.‌ சேர்ந்து வேலை செய்ய வசதியா இருக்கும்னு, மேல் வீட்டுல குடி இருக்கான். அவனும், நம்ம குடும்பத்துப் பையன் தான்!” என இல்லத்தில் இருந்தவர்களைப் பற்றி, மோகன் சுருக்கமாய் முடித்துக் கொண்டார்.

விஜயரங்கனும் தன் பங்கிற்கு.. “இது, எங்க வீட்டம்மா பத்மாவதி‌. மூத்த பையன் கிருஷ்ணன், ‌அவனோட சம்சாரம் துளசி. அவனுங்க ரெண்டு பேரும், பையனோட பிள்ளைங்க. சரண், தீரஜ். சரணுக்குத்தான், உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கோம். நாங்க ஆறு தலைமுறையா ஜவுளிக்கடை வச்சிருக்கோம். பிள்ளைக எல்லாம் ஒண்ணா சேர்ந்து, இப்ப அதைத்தான் பார்த்துட்டு இருக்காங்க.

எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. பேரு, கீதா. மருமகன் சரவண வேல். நம்ம‌ ஊர்லயே, ஸ்டேட்‌ பேங்க்ல மேனேஜரா வேலை செய்யிறாரு. அவங்களுக்கு ஒரு பொண்ணு. ‌ சரணுக்கு மூத்தவன் ஒருத்தன், பார்கவ். கல்யாணம் ஆகிடுச்சு, சென்னையில ஒரு ஐடி கம்பெனில வேலை பார்க்கிறான்.” என்றார்.

பானுமதி, “மூத்த பையனோட குடும்பத்தைக் கூட்டிட்டு வரலைங்களா.?” என வினவ, “இன்னும் வந்து போக விசேஷம் இருக்கு இல்ல?” என்று மறுமொழி சொன்னார் பத்மாவதி.

“சரிங்கம்மா, காஃபியைக் குடிங்க!”

துளசி, “பொண்ணைப் பார்த்திடலாமே.?”

மோகன், “கை நனைக்க யோசிக்கிறீங்களாக்கும்? எல்லாம், முடிஞ்ச மாதிரி தான?”

கிருஷ்ணன், “பிள்ளைய ஃபோட்டோல தான பார்த்திருக்கோம். நேர்ல பார்த்துடலாம்னு தான்!” என்றிட, பானுமதி மகளை அழைத்து வர உள்ளே சென்றார்.

துளசியின் காலில் இருந்த கட்டைக் கவனித்த திவாகர், “ஆன்டிக்கு, கால்ல என்ன?” என விசாரிக்க, “மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆன சந்தோஷத்துல, காலைத் தரையில வைக்காம அந்தரத்துல வச்சிட்டாங்க எங்க மம்மி. அது சுளுக்கிக்கிச்சு!” என்று தீரஜ் பதில் உரைக்க, சிரிப்பலை எழுந்து அடங்கியது.

மஹதியை அழைத்து வந்தார் பானுமதி. அவள் சரணை ஓரக் கண்ணால் பார்க்க, அவனோ பார்த்தும் பார்க்காதது போல் அமர்ந்து இருந்தான்.

“பிள்ளைக பேசிக்கட்டுமே.‌ அதுகளுக்கும் ஆசை இருக்கும்ல? நாமளும் மத்த விசயத்தைப் பத்திப் பேசிக்கலாம்!” எனப் பத்மாவதி உரைக்க, இருவரையும் மாடியில் இருந்த நிருதியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் குடும்பத்தார்.

இவர்களிற்குள் உறவு ஏற்பட்டது, திருமணத் தகவல் மையத்தின் வாயிலாய் தான்.

தனது மகளின் விவரங்களைப் பதிவு செய்யச் சென்ற மோகன்.. அவ்விடத்தில் சரணின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அவனைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார்.

அங்கு, குடும்பத்தின் மூத்தவரான விஜயரங்கனின் கைப்பேசி எண்தான் பதிவு செய்யப்பட்டு இருந்தது‌. இரு குடும்பத்தாரும் கைப்பேசி வழியாய் அறிமுகமாகி‌ அவர்களிற்குள் ஓரளவிற்குப் புரிதல் ஏற்பட்ட பின்பு, பிள்ளைகளிடம் விவரத்தைக் கொண்டு சென்றனர்.

தனது தாத்தா தந்த பெண்ணின் புகைப்படத்தைக் கண்ட சரண், “இது, எப்ப எடுத்ததோ? பார்லர் போயி மேக்கப் போட்டு, அது பத்தாதுனு ஸ்டுடியோகாரன் சிஸ்டம்லயே டச்சப் வேற செஞ்சிருப்பான். பொண்ணை, இப்ப ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்லுங்க‍!” என்று விட்டான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது. இதுதான் ஃபோட்டோ. எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. நாலு நாள் உனக்கு டைம். அதுக்குள்ள உன்னோட பதிலைச் சொல்லு!” என உறுதியாய் உரைத்துச் சென்றார் மூத்தவர்.

மாப்பிள்ளையானவனுக்கு ஏனோ திருப்தி இல்லை. இன்னமும் அறுபதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தாத்தனை மீறி, எதுவும் செய்ய முடியாத நிலை. சிறு வயதில் இருந்தே அப்படியே பழகி விட்டதால், மூத்தவர்களை எதிர்த்து பேச நா மறுத்தது.

தீரஜிடம் தனது எண்ணத்தை உரைக்க, கடைக்குட்டியானவன் தமையனுக்காக அப்பணியைக் கச்சிதமாய் முடித்தான்.

தாத்தாவின் கைப்பேசியை அவர் அறியாமல் ஆராய்ந்து, மோகனின்‌ எண்ணை எடுத்து அவரிடமே நேரடியாய்ப் பேசி விட்டான்.

இளையவனிடம் இயல்பாய் உரையாடுவது சற்றுக் கடினமாக இருக்கவே, தனது மகன் திவாகரின் எண்ணை பகிர்ந்தார் அவர்.

“பாஸ்.. அந்தக் காலத்து ஆளுங்களுக்கு இதெல்லாம் புரியாது. அவனவன் பிக்கப்பு டிராப்புனு சுத்திக்கிட்டு இருக்கான். என்னோட அண்ணன்காரன், ‘லவ் எல்லாம் நோ. ஒன்லி அரேஞ்ச் மேரேஜுனு’ பாட்டுப் பாடுறான். பாவம்.. இப்பதான் பையனுக்குக் கொஞ்சம் புத்தி தெளிஞ்சு பொண்ணோட ஃபோட்டோவை பார்க்கணும்னு முதல் தடவையா ஒரு விசயம் சொல்லி இருக்கான்.

ப்ளீஸ் பாஸ், உங்க சிஸ்டரோட ஃபோட்டோவைக் கொஞ்சம் வாட்ஸ் அப்ல அனுப்புங்களேன். நைட்டியில இருந்தாலும் ‌ஓகே. எங்க வீட்டு பெருசு, நாலு நாள்ல பதில் சொல்ல சொல்லி இருக்கு. சுச்சுவேஷனை புரிஞ்சுக்கோங்க. நானும்.. என்கூடப் பிறந்தவனோட ஃபோட்டோவை அனுப்புறேன். பாருங்க! கிவ் அண்ட் டேக் பாலிசி மாதிரி வச்சுக்கலாம்.” என்றவன்,

பல் துலக்கிக் கொண்டிருந்த சரணைப் புகைப்படம் பிடித்து அனுப்பி விட்டான், எதிர்புறம் இருந்த திவாகர் பேசுவதற்கு வாய்ப்பே அளிக்காமல்.

தீரஜின் விளையாட்டு பேச்சும், அதன் பின்னிருக்கும் தமையனின் மீதான அன்பும் பிடித்துப் போக, மஹதியிடம் பேசினான் அவன்.

அவளும் சம்மதிக்க, புகைப்படம் பகிரப் பட்டது.

சுடிதார் அணிந்து இருந்தாள். தலைக்குக் குளித்ததின் அடையாளமாய், குழலின் நுனியில் நீர் திவலைகள் துருத்தி நின்றன. கன்னத்தில் இரண்டு மூன்று பருக்கள், கண்களிற்கே தெரியாத அளவில் பொட்டு எனப் பார்வைக்குக் குளிர்ச்சியாய் தெரிந்தாள் மஹதி.

சரணிற்குமே, ஏனோ கண்டதும் பிடித்துவிட்டது. ஒருமுறை அவளிடம் பேசுவதற்குத் திவாகரிடம் அனுமதி பெற்று, பேசினான்.

“நல்லா இருக்க‌. எனக்குப் பிடிச்சிருக்கு!” என நேரடியாய் உரைத்தவன், “எங்களோடது கொஞ்சம் பெரிய ஃபேமிலி. கல்யாணத்துக்கு அப்புறம் தாத்தா பாட்டி, அத்தை மாமா, அம்மா அப்பாவோட தான் இருக்கணும். நினைச்ச நேரம் எல்லாம், பிரைவசி கிடைக்காது. ஆனா, எல்லாரும்‌ என்னை மாதிரியே உன்னையும் பார்த்துப்பாங்க. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கத்தான் வேணும். உனக்கு ஓகேனா, நான் தாத்தாக்கிட்ட சரினு சொல்லுறேன். இல்லேனா..” என்று தனது குடும்பத்தின் நிலைப்பாடை உரைத்தான் சரண்.

இறுதியாய், ‘இல்லேனா..’ எனும்‌ பொழுதே அவனின் குரல் கரகரப்பதை உணர்ந்து கொண்டாள் மஹதி.

அவளிற்குமே அவனைப் பிடித்து இருந்ததால், “என்னால, கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனா, நீங்க என்னை நல்லா பார்த்துக்கணும். குட்டி குட்டியா நிறைய ஆசை இருக்கு. அதெல்லாம் அப்பப்ப செய்யணும். இது, என்பக்க கண்டிஷன்!” என்று அவளும் மறைமுகமாய்ச் சம்மதம் சொன்னாள்.

அதன் பின்னர்ப் பெரியவர்கள் தங்களின் பக்கம், வேலைகளைக் கவனிக்க, இடைப்பட்ட நாள்களில் சரணும் மஹதியும் மூன்றுமுறை கைப்பேசியில் பேசிக் கொண்டனர்.

சற்றே நெருக்கம் கூடி, மனதிற்குள் வண்ணத்துப் பூச்சிகள் பறக்கத் துவங்கின.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 2மாடிச் சுவற்றில் சாய்ந்து நின்று இருந்தனர் சரணும் மஹதியும். நிருதியின் வீட்டிற்குள் செல்லவில்லை‌. வெளியில் தான் இருந்தனர்.

முன்னரே சிலமுறை பேசி இருந்தாலும்.. நேரில் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பதால், சற்றே தயக்கம் எட்டிப் பார்த்தது இருவருக்குள்ளும்.

'என்ன பேசுவது? எப்படித் துவங்குவது?' என்ற குழப்பத்திலேயே சில நொடிகள் கடந்திருக்க, "என்னென்ன ஆசை இருக்கு, உனக்கு.?" எனப் பேச்சை துவக்கினான் சரண்.

"ஹான்.?" என்று அவள் திகைத்துப் பார்க்க, "நிறையக் குட்டிக் குட்டி ஆசை இருக்குனு சொன்னியே.?"

மெலிதாய்ச் சிரித்தவள், கீழ் இதழ்களைப் பற்களால் கடித்துக் கொண்டாள்‌. ஒரு பெண்ணிற்கு நாணம் எனும் அணிகலன் எத்தனை அழகு‌ என்பதை, நேரில் கண்டான் ஆடவன்.

"ஃபர்ஸ்ட் டைம் பேசுறப்பவே, மனசுல இருக்கிறதை பளிச்சுனு சொன்ன. இப்ப, இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.?"

"அ.. அது.. ஃபோன்ல பேசுறப்ப அவ்வளவா ஒண்ணும் தெரியல. ஆனா, நேர்ல..‌" என்று சொற்களை மென்று விழுங்க, கைநீட்டி அவளின் இடதுகை வளையல்களை வருடினான்.

மேல் இருந்து கீழ் வரை ஒற்றை விரலை நகர்த்தி வந்தவன்.. அவளின் கரத்தைப் பற்ற, சட்டென்று உதறி ஓர்அடி பின் நகர்ந்து கொண்டாள் மஹதி.

'அனுமதி இன்றிக் கையைப் பற்றியதால், சினம் கொண்டாளோ.?' எனப் கண்களை நிமிர்த்தி முகத்தைப் பார்க்க, புன்சிரிப்புத் தவழ்ந்தது அவளின் இதழ்களில். அனிச்சையாய் சரணின் அதரங்களும் மலர, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து டெய்ரிமில்க் இனிப்பு, இரண்டை எடுத்து நீட்டினான்.

ஒருமுறை பேசும் பொழுது, தனக்குப் பிடிக்கும் என உரைத்து இருந்தாள் மஹதி.

அவள் வியப்புடன் நோக்க, வாங்கிக் கொள்ளும் படிக் கண்களால் சுட்டிக் காட்டினான்.

"தேங்க்ஸ்.." என்றவள் பெற்றுக் கொள்ள, "என்ன சொன்ன?"

"தேங்க்ஸ்னு சொன்னேன்."

"ஸ்வீட் கொடுத்தா, ஸ்வீட்டா எதுவும் கிடைக்கும்னு நினைச்சா, இப்படித் தேங்க்ஸ்னு பட்டுனு முடிச்சிட்ட.?"

"ஸ்வீட்டா.? கீழ லட்டு, ஜிலேபி, பால்கோவா எல்லாம் இருந்துச்சே? நீங்க சாப்பிடலயா? நான், போயி எடுத்துட்டு வரவா.?"

சட்டென்று சிரித்த சரண், "ஏய்.. கிண்டலா பண்ணுற என்னை.?"

"பின்ன.. ஓவர் தைரியம் தான் உங்களுக்கு. ஸ்வீட் வேணுமாம்ல? அதெல்லாம் கல்யாணத்துக்குப் பின்னாடி தான்."

"நல்ல தெளிவு. சரி, இந்த ஸ்வீட்டையாவது சேர் பண்ணிக்கலாம்ல.?" என்றிட, ஒரு டெய்ரிமில்க்கை அவனிடம் நீட்டினாள்.

"ரெண்டு வாங்கிட்டு வந்தது தப்பா போச்சு."

"ஏன்..?"

"என்ன ஏன்.?"

அவளிற்குச் சிரிப்பு வர, ஒன்றை பிரித்து சிறிதளவு பிய்த்துக் கொண்டு, மீதியை அவனிடம் நீட்டினாள்.

"எனக்கு வேணாம்."

"என்ன வேணாம்? நீங்கதான சேர் பண்ணிக்கலாம்னு சொன்னீங்க?"

"இப்படி முழுசா கொடுத்தா.?"

"வேற எப்படித் தரணும்.?"

"அந்தக் கையில இருக்கிறதைத் தரலாம்ல.?"

"ஓஹோ.. ஆனாலும் உங்களுக்குச் சேட்டை அதிகம். ஊட்டி எல்லாம் விடமுடியாது!" என மஹதி உரைத்து முடிக்கும் பொழுது, அவளின் கையைப் பற்றி விரல்களிற்குள் இருந்த இனிப்பை, ருசித்துவிட்டான் சரண். அத்தோடு அவளின் இரு விரல்களையும்.

ஆடவனின் உரிமையான செயலில் அதிர்ந்து, சட்டென்று விலகி நின்றாள். அவன் மேலும் சீண்டும் விதமாய்.. ஒற்றைக் கண் சிமிட்டி சிரிக்க, முறைத்துவிட்டுக் கீழ் இறங்கி ஓடினாள்.

சரண், "ஹேய்.. ஹேய்.. மஹி!" என்றிட, நிதானித்துத் திரும்பிப் பார்த்தாள்.

"என்னை முறைச்சது நடிப்பு தான?"

"நடிப்பு எல்லாம் இல்ல. நிஜமாவே எனக்குக் கோபம் தான், உங்க மேல!"

"சரி, எப்படி உன்னைச் சமாதானம் செய்யிறது.?"

"ம்ம்.." என அவனைக் கண்கள் சுருக்கிப் பார்த்தவள், "கண்டுபிடிங்க, அதுவும் கல்யாணம் வரைக்கும் தான் உங்களுக்கு டைம்!" என்று இதழ்களிற்குள் சிரித்தவாறு செல்ல, பின்னந்தலை குழலைக் கோதியபடி திரும்பினான் சரண்.

திறந்திருந்த நிருதியின் இல்லத்திற்குள் முகம்மற்ற ஒரு பெண்ணின் ஓவியம் கூடத்தின் சுவற்றில் பெரியதாய் இருக்க, துளிர்விட்ட சுவாரஸ்யத்தோடு மெல்ல மாடிப் படிகளில் இறங்கினான்.

பெரியவர்கள் இணைந்து பேசி, இவர்களது திருமணத்தை முடிவு செய்து இருந்தனர்.

வெற்றிலை பாக்கு மாற்றப் பட, பத்மாவதி தங்களின் குடும்ப வழக்கமாய்த் தங்க சங்கிலி ஒன்றை மஹதிக்கு அணிவித்தார்.

"ஆடி முடிஞ்சதும், ஆவணில கல்யாணத்தை வச்சுக்கலாம். ஜோசியர்க்கிட்டப் பேசிட்டு தேதியைச் சொல்றேன். அப்புறம் கலந்து பேசி, முடிவு செஞ்சுக்கலாம்!" என விஜயரங்கன் உரைக்க, இருபக்கத்தாரும் ஏற்றுக் கொண்டனர்.

பெண் வீட்டிலேயே மதிய உணவை முடித்துவிட்டு, சரணின் குடும்பத்தார்‌ மதுரையை அடையும் பொழுது மாலை ஆகி இருந்தது.

பயணத்தின் காரணமாகச் சோர்வுடன் இல்லத்திற்குள் நுழைய, அனைவரது கரத்திலும் பழச்சாறு டம்ளரைக் கொடுத்தார் கீதா.

"இதுல எல்லாம் உங்களை அடிச்சிக்கவே முடியாது அத்தை.‌ உள்ள வந்ததும் தொண்டைக்கு இதமா, குடிக்கத் தர்றீங்க பாருங்க.‌ இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்க, கொடுத்து வச்சிருக்கணும். பேசாம, உங்க மகளை எனக்கே கட்டிக் கொடுத்திடுங்க!" என்றபடி தீரஜ் பழச்சாறை அருந்த,

"என்னோட அண்ணன் மகனை மருமகனா ஆக்கிக்க, கசக்குமா என்ன? உன்னோட முறைப் பொண்ணுக்கிட்ட கேளு. அவ சரின்னு சொன்னா, எனக்கும் சம்மதம் தான்!" என்றார் கீதா.

"அந்தச் சீனிக் கிழங்கு, எனக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பிறந்துட்டா. கேட்டா, ஒத்துக்க மாட்டாளே?"‌ என வெகுவாய் வருத்தம் கொள்ள, "பொறுப்பா இருக்கிற மூத்த ரெண்டு பேரையுமே, வேண்டாம்னு சொல்லிட்டா. உன்னைத்தான் கட்டிக்கப் போறாளாக்கும், என்னோட பேத்தி. போடா, போக்கத்தவனே!" என்று பெயரனை விரட்டினார் பத்மாவதி.

அனைவரும் சிரிக்க, "விசேஷம் எல்லாம் எப்படி நடந்துச்சு?" என வினவினார் கீதா.

கிருஷ்ணன், "அதெல்லாம் நல்லபடியா நடந்துச்சு!"

"பொண்ணு எப்படி இருக்கு, அண்ணே.?"

"ஃபோட்டோவைக் காட்டிலும் நேர்ல லட்சணமா இருக்கா பிள்ள!" எனத் துளசி பதிலளிக்க, "நீயும் வந்திருக்கலாம், எங்கக்கூட!" என்றார் பத்மா.

"நம்ம வீட்டுல, நாம இருந்து செய்யிற முதல் விசேஷம்‌. அவர் இல்லாம, நான் மட்டும் வந்தா நல்லாவா இருக்கும்.? அவருமே, லீவ் கேட்டுத்தான் இருந்தாரு. அதுக்குள்ள பேங்க்ல வேலை பார்க்கிற ஒருத்தன் பணத்தைக் கையாடல் செஞ்சிட்டானு பிரச்சனை ஆகி, பொறுப்பு இவர் தலையில விழுந்திடுச்சு. என்ன செய்ய..?"

"ம்ம்.. எல்லாம் சரியா போகும்மா! மாப்பிள்ளய சங்கடப்படாம இருக்கச் சொல்லு!" என விஜயரங்கன் உரைக்க, தலை அசைத்தாள் கீதா.

"சரி, உன்னோட மகக்கிட்டப் பேசுனியா.?"

"மதியம் தான்பா பேசுனேன்."

"என்ன சொல்லுறா, கல்யாணத்துக்கு.?"

"அதே பழைய பாட்டுதான். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லுறா."

பத்மா, "இருபத்து மூணு ஆச்சு. இன்னும் என்னவாம்.?"

"என்னனு தெரியல. நானும் உங்க மாப்பிள்ளயும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம். ஆனா, ஒரு வழிக்கும் வர மாட்டிறா. நான் இப்ப கல்யாணத்துக்கு ரெடி இல்லனு, ஒரே பதிலைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கா."

பத்மா, "ஒருவேள யாரையும் விரும்புறாளோ என்னவோ.?"

துளசி, "நம்ம பொண்ணு அப்படி எல்லாம் செய்ய மாட்டா அத்தை!"

கிருஷ்ணன், "அப்படித்தான் பார்கவ்வையும் நினைச்சோம். ஆனா, என்ன செஞ்சான்னு பார்த்த இல்ல? பெத்தவங்க, குடும்பம் யாரும் வேணாம்னு, அவனோட இஷ்டத்துக்குக் கல்யாணம் செஞ்சுக்கலயா?"

"அதுவும் சரிதான்!" எனத் துளசி பெருமூச்சு விட, தனது தாய்த் தந்தையரை நோக்கினார் கீதா.

“இங்க உட்கார்ந்து, இவங்க பேசுறதை எல்லாம் கேட்டா, ஏகத்துக்கும் பீபி ஏறிடும். நான் கிளம்புறேன்பா!” எனத் தீரஜ் தனக்குத்தானே புலம்பிக் கொண்டு எழுந்து செல்ல, ரங்கனும் பத்மாவும் ஒருவரை ஒருவர் வலியுடன் பார்த்துக் கொண்டனர்.

கிருஷ்ணன் அதைக் கண்டு கொள்ளாதது போல் இருக்க, கீதா மற்றும் துளசியின் முகம் சட்டென்று வாடிப் போனது.

இவர்களின் மனக்கவலைக்கு உரித்தானவனோ, சென்னையில் தனது பணியில் முனைப்பாய் இருந்தான்.

பார்கவ், மடிக்கணினியில் மூழ்கி மூன்று மணிநேரம் கடந்து விட்டது‌.

உறவானவளோ நான்கு முறைக்கும் மேலாக எட்டிப் பார்த்து, இரண்டு ‌முறை அழைத்தும் விட்டாள்.

"டூ மினிட்ஸ் தனு, ப்ளீஸ் திரீ மினிட்ஸ்."‌ என்றே பொழுதைக் கடத்திக் கொண்டு இருக்கிறான்.

திடீரென முழங்கையின் அருகே சூடு பரவுவதை உணர்ந்து, "ஆ.. ஆ.." என்ற‌ கத்தலோடு பதறி எழ, கரத்தில் தோசைக் கரண்டியுடன் நின்று இருந்தாள் அவனின் தனு.

"கடன்காரி கடன்காரி, ஏண்டி இப்படி‌ சூடு வச்ச.?"

"கையில வைக்கிறதுக்குப் பதிலா, வாயில‌ வச்சிருக்கணும். நான்‌ என்னமோ உனக்குக் கடன்பட்ட மாதிரி, பேச்சைப் பாரு! சொல்லப் போனா, நீதான் என்கிட்ட கடன் பட்டிருக்க மாமா!"

"சரி சரி! இனி அப்படிச் சொல்லல."

"சொன்ன, இனிமேல் இப்படிச் சூடுதான் கிடைக்கும்!"

"ரொம்ப மிரட்டுற என்னை, இது எல்லாம் சரியில்ல."

"ஓஹோ.. பாவம், நீ சின்னப் பாப்பா. மிரட்டுறாங்களாம். வீணா என்னைச் சீண்டுன, அப்புறம் டைவர்ஸ்காகக் கோர்ட் வாசல்ல நிக்க வேண்டியது இருக்கும். ஜாக்கிரதை!"

"அச்சச்சோ! அப்படி எதுவும் செஞ்சுடாத குட்டி. உன் மாமா, பாவம்!" எனும் பொழுதே, இருவரது கைப்பேசியும் தொடர்ந்து குறுந்தகவலுக்கான ஒலியை எழுப்பியது.

அவர்களின் கவனம் திரும்பிட.. தன்னுடையதை எடுத்துப் பார்த்தவள், "மாமா, தீரஜ் போட்டோஸ் அனுப்பி இருக்கான்!" என்றாள்.

"என்ன ஃபோட்டோ?" என அருகில் சென்று பார்த்தவனின் முகம், மகிழ்ச்சியில் மலர்ந்தது‌.

மஹதியின் இல்லத்திற்குச் சென்ற பொழுது எடுத்த புகைப்படங்களைத் தமையனிற்கும் அவளிற்கும் பகிர்ந்து இருந்தான், இளையவன்.

அடுத்த நொடியே பார்கவ்வின் கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பேசினான்.

"அண்ணா, ஃபோட்டோஸ் பார்த்தியா.?"

"இப்பதான் பார்த்தேன். எல்லாருக்கும் ஓகேவா.?"

"ம்ம்.. எங்களுக்கு எல்லாம் அண்ணியைப் பிடிச்சிருச்சு. கன்ஃபார்ம் தான். டேட் ஃபிக்ஸ் பண்ணதும் சொல்லுறேன்."

"ம்ம்.. சரண் என்ன செய்யிறான்.?"

அருகே படுக்கையில் கவிழ்ந்து படுத்திருந்த மூத்தவனைக் கண்டவன், "அவன் ஆளோட கடலைப் போட்டுட்டு இருக்கான்."

"அந்த அளவுக்குத் தேறிட்டானா.?" எனப் பார்கவ் சிரிக்க, "ஐயோ அண்ணா, இவனை எல்லாம் நம்பவே கூடாது. அண்ணிக்கிட்டப் பேசிட்டுதான், கல்யாணத்துக்கே ஓகே சொன்னான். அதுவும் மேக்கப் இல்லாத ஃபோட்டோ வேணும்னு, என்ன ஒரு தைரியம்னு பாரு.? ஒரு பொண்ணுக்கிட்ட இதெல்லாம் கேட்கிறது, எவ்வளவு பெரிய தப்பு.?"

மூத்தவன் சிரித்து, "சரண்கிட்ட பேச முடியுமா, இப்ப.?"

"இவன் என்ன, அவ்வளவு பெரிய ஆளா? பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு. நீ பேசு!" என்றவன் சரணின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு, தன்னுடையதைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

"ஹலோ.. ஹலோ.." என‌ச் செவியைத் துளைத்த மஹதியின் குரலில் தீரஜிற்குள் இருந்த குறும்புக்காரன் எட்டிப் பார்க்க, "ஹாய் பேபி! உங்க ஆளுக்கிட்ட தான் பேசுவீங்களா? என்கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா.?" என்று வம்பு பேச துவங்க,

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அண்ணி. இப்ப பேபியா.?"

"அச்சோ, இது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"சரண், பக்கத்துல தான இருந்தாரு? மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களே கொழுந்தனாரே?"

"சோ சேட்!"

மஹதி மறுபுறம் சிரிக்க, "பேபி பேபி, அண்ணினு சொல்லுறது அன்கம்ஃபர்டா இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான? இப்படியே பேசிக்கலாமா.?"

"அண்ணனோட ஆளுக்கிட்ட கடலை போடுறது, தப்பு கொழுந்தனாரே?"

"கடலை? யூ மீன், கிரௌண்ட் நட்..?"

"ஹான்.. ரோஸ்டட் நட். கடலை வறுக்குறது!"

"வாவ்.. எவ்வளவு அறிவா பேசுற பேபி."

"ஸப்பா, முடியல! சரண் சொன்னது சரிதான் போல?"

"என்ன சொன்னான், என் அண்ணன்?"

"என் தம்பிக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் கிடையாது. அதேபோல நாம அவன்கிட்ட பேசும் போது, மூளைய கழட்டி வச்சிட்டுத்தான் பேசணும்னு சொன்னாரு!"

"மொத்தமா குளோஸ் பண்ணிட்டான், என்னோட மானமே போச்சு!" என அவன் வராத கண்ணீரை துடைக்க, "சரி, சரி. அழாதீங்க. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் உங்களுக்கு வாங்கித் தர சொல்லுறேன்."

"அதுக்கு அவனே பரவாயில்ல. நீ, உன்னோட ஆளுக்கு மேல இருக்க!" என்றிட, கலகலவெனச் சிரித்தாள் அவள்.

அவனும் சிரித்தபடி, தமையனது வருங்கால மனைவியின் பொறுமையையும் மனோபலத்தையும் சோதிக்கத் துவங்கினான்.

அதேநேரம் மூத்த சகோதரர்கள் இருவரும், பேசிக் கொண்டு இருந்தனர்.

"ஸாரிடா.. என்னால உனக்குத்தான் கஷ்டம்!" என்ற தமையனை எண்ணிச் சிரித்த சரண், "கஷ்டமா? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. சந்தோஷமா தான் இருக்கேன்."

"நான்.‌. வீட்டுல இருக்கிறவங்களுக்குப் பிடிக்காம லவ் மேரேஜ் பண்ணதால, உன்னோட கல்யாண விசயத்துல எல்லா முடிவையும் பெரியவங்களே எடுத்துட்டாங்க. உனக்கு, அது வருத்தமா தான இருந்திருக்கும்?"

"டேய்.. அதெல்லாம் இல்ல. உனக்கு வேலை பார்க்கிற இடத்துல பொண்ணுங்களைப் பார்க்க, பேச சான்ஸ் இருந்துச்சு.‌ அண்ணியைப் பிடிச்சிருந்துச்சு, கல்யாணம் செஞ்சுக்கிட்ட.

எனக்குத் தான், அந்தச் சான்ஸே கிடைக்கலயே?‌ காலையில இருந்து நைட் வரைக்கும் கடையில இருக்கணும். லவ் பண்ணுறதா இருந்தா‌, கடைக்கு வர்றவங்க இல்லேனா வேலை பார்க்கிறவங்கள்ல யாராவது ஒரு பொண்ணைத் தான் லவ் பண்ணணும். அது நல்லாவா இருக்கும், சொல்லு? நம்ம மேல இருக்கிற நம்பிக்கையிலயும் மரியாதையிலயும் தான கடைக்கு வர்றாங்க. அது தப்புடா!

இப்ப, என்ன பெருசா எனக்குக் குறைஞ்சுப் போச்சுனு நினைக்கிற? மஹியைப் பிடிச்சிருக்கு. நல்ல பொண்ணு. வீட்டுலயும் எல்லாருக்கும் அவளைப் பிடிச்சிருச்சு. இதுக்கு மேல என்ன வேணும்.?

நான்.. இங்க பேசுறேன். ஒழுங்கா‌ என்னோட கல்யாணத்துக்கு, அண்ணியைக் கூட்டிட்டு வந்து சேரு. இதைவிட்டா, அப்பாவைச் சமாதானம் பண்ண முடியாது. அப்புறம் இப்படியே பேசாம இருந்துட வேண்டியது தான். என்ன புரிஞ்சிச்சா.?"

"ம்ம்.."

"எல்லாம் சரியாகிடும். பழைய மாதிரி வீட்டுக்கு வந்திடுவ நீ. வருத்தப்படாத! அண்ணி எங்க.?"

"கிச்சன்ல இருக்கா."

"சரி, சொல்லிடு. நான், நாளைக்குப் பேசிக்கிறேன்."

"சரிடா!" எனப் பார்கவ் பேச்சை முடிக்க, "ஆரம்பிச்சிட்டியா, உன்னோட சேட்டையை? பேசுனது போதும், கொடுடா!" என்று தீரஜிடம் இருந்து தனது கைப்பேசியைப் பறித்தான் சரண்.

 
Last edited:

NNK 48

Moderator

அத்தியாயம் 3திருமண அழைப்பிதழ்களின் வடிவமைப்பைத் தேர்வு செய்வதற்காக, மஹியின் இல்லத்திற்கு வந்திருந்தான் சரண்.

பெரியவர்கள் தங்களது கால வழக்கப்படி ரோஜா மற்றும் மஞ்சள் நிறம் கலந்த அழைப்பிதழ்கள் அச்சிட்டு இருக்க.. இளையவர்கள் தேவைக்காக மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அச்சிட திட்டமிட்டு இருந்தனர்.

திவாகர் அது சம்பந்தமான துறையிலேயே இருப்பதால், "நீங்க வாங்க மாப்ள. எப்படி வேணுமோ, அப்படியே ரெடி பண்ணிடலாம்!" என அழைத்திருந்தான்.

'அந்தச் சாக்கில் மஹதியுடனும் நேரத்தைச் செலவிடலாம்!' என்று கடையின் பொறுப்பைத் தந்தை மற்றும் தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருந்தான்.

"இன்னும் எவ்வளவு நேரம் தாண்டி‌ மேக்கப் போடுவ? மாப்ள வந்து அரைமணி நேரத்துக்கு மேல ஆகுது!" எனப் பானுமதி மகளை விரட்டிட, "வந்துட்டேன் வந்துட்டேன். எப்பப் பாரு, என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இரு!" என்று பதில் உரைத்தவாறே அறைக் கதவைத் திறந்தாள்.

கூடத்தில் அமர்ந்திருந்த சரண்.. அன்னை மற்றும் மகளின் பேச்சைக் கேட்டுத் தனக்குள்ளே சிரிக்க, வெளியே வந்த மஹதி ஆடவனைக் கண்டதும் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

இரு புருவங்களையும் உயர்த்தி அவளை ‘என்ன?’ என்பது போல் பார்த்தவன், "போலாமா?" என்றிட, தலை அசைத்தாள்.

"நாங்க கிளம்புறோம் அத்தை!" என அவன் பானுமதியிடம் உரைக்க, "பார்த்துப் போங்க. ரொம்ப நேரம் வெளிய இருக்க வேணாம். கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது!" என்று அன்னையாய் ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பினார்.

மஹதி வழி சொல்ல, இருவரும் திவாகரின் பணி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

திருமண அழைப்பிதழ்‍, சுவரொட்டி, இல்லத்தில் அலங்காரத்திற்காக ஒட்டப்படும் ஓவியங்கள், ஃப்லெக்ஸ், புத்தகத் தோற்றம் எனக் கணினியின் மூலமாய் அதனை நேர்த்தியாய் வடிவமைக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர், நண்பர்கள்.

நிருதியின் பணி..‌ வாடிக்கையாளரின் விருப்பத்தின் படி வடிவமைப்பைத் தயாரிப்பது. அதனைத் தகுந்த இடங்களில் கொடுத்து அச்சிட்டு, உரியவரிடம் ஒப்படைப்பது போலான வாணிகம் செய்யும் வேலையைச் செய்தான் திவாகர்.

உள்‌ வேலைக்கு ஒருவன், மற்றவரைப் பேச்சால் கவர்ந்திழுக்க ஒருவன் எனத் தாங்கள் செய்ய வேண்டியதைப் பகிர்ந்து, ஒன்றாய் இணைந்து பயணிக்கின்றனர் இருவரும்.

வந்தவர்களை வரவேற்று, "மாப்ள.. டீ, காபி எதுவும் குடிக்கிறீங்களா?" என உபசரிக்க, "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.‌ இப்பதான் வீட்டுல ஜுஸ் குடிச்சேன்!" என்று மறுத்து விட்டான் சரண்.

அருகே இருந்த மஹி, "அதென்ன அவர்கிட்ட மட்டும் கேட்கிறது? நான் எல்லாம் மனுசி இல்லயா? நாங்க குடிக்க மாட்டோமா.? ஓடிப் போயி தங்கச்சிக்கு ஒரு ஆப்பிள் ஜுஸ் வாங்கிட்டு வா, பார்ப்போம்!" என மூத்தவனிற்குக் கட்டளை இட, "நீ சாப்பிடாமலா இருக்க? இந்நேரம், ரெண்டு தட்டுச் சாப்பாடை உள்ள தள்ளி இருப்பியே?" என்று வம்பு பேசினான் அவன்.

"அண்ணா.‌." எனப் பல்லைக் கடித்தவள், "ஒழுங்கா போய் ஜுஸை வாங்கிட்டு வா.‌ இல்லேனா டைம் ஆக ஆக ஜுஸோட நம்பர்ஸ் கூடும்!"

திவாகர் சிரித்து, "நான் வாங்கித் தந்திடுவேன். நீ குடிக்கணுமே.?" என்றுவிட்டு பணி செய்பவரை அனுப்ப, சரண் சிரித்தபடி இவர்களைப் பார்த்திருந்தான்.

அத்தை மகளின் நினைவு வந்தது. அவளிடம் பேசி, சரியாக ஒரு வருடம் ஆகிறது‌. பார்கவ், சரண், அவள், தீரஜ் நால்வரும் ஒன்றாகத்தான் வளர்ந்தனர். அதனாலோ என்னவோ முறைப் பெண் என்ற எண்ணமே வரவில்லை.

குடும்பத்தில் ஒற்றைப் பெண் என்பதால்.. அன்பும் சலுகையும் அதிகம். பெண்ணவள் சிந்தும் ஒற்றைத் துளி கண்ணீருக்கு, மொத்த குடும்பமுமே பதறிவிடும். அவள்‌ 'ம்ம்..' எனும் முன், அதனை ஈடேற்றி விடும் அளவிற்குப் பேரன்பு கொண்டிருந்தனர் ஒவ்வொருவரும்.

குடும்பத் தொழிலில் விருப்பம் இல்லாத பார்கவ்.. பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் பணியில் இணைந்து, அதற்கு வசதியாகச் சென்னையிலேயே தனது இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

மூத்தவனின் செயல் பெரியவர்களின் மனதைப் பாதிக்க, சரண் பொறுப்பை ஏற்று ஆடையக தொழிலைச் செய்யத் துவங்கினான்.

படிப்பை முடித்த கீதாவின் மகள், "சும்மா, வீட்டுல இருந்து என்ன செய்யப் போறேன்? சென்னைக்குப் போயி ஏதாவது ஒரு வேலையில ஜாய்ன் பண்ணிக்கிறேன்!" எனச் சென்று, பார்கவ்வுடன் இணைந்து கொண்டாள்.

அவர்களுக்கு இடையேயான அன்பையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் உணர்ந்த பெரியவர்கள், இருவருக்கும் திருமணம் செய்ய நினைக்க, உடன் பணிபுரியும் பெண்ணைக் காதலிப்பதாய் வந்து நின்றான் மூத்தவன்‌.

கிருஷ்ணன் அதற்கு மறுப்புத் தெரிவிக்க.. ஆறு மாதங்களாய் குடும்பத்தாரிடம் பேசிப் பார்த்து, அவர்களின் மனதை மாற்ற இயலாத நிலையில் காதலித்த பெண்ணைச் சுயமாய்த் தானே கரம் பற்றினான்.

தங்களை மீறி சென்ற பிள்ளையின் மீது உண்டான சினத்தால், பெரியவர்கள் பேசாமல் இருக்க, உறவும் அப்படியே ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று என்றாகிப் போக, கீதாவின் மகளைச் சரணிற்கு மணம்முடிக்க எண்ணினர்.

பார்கவ்விற்கும் அவளிற்கும் இருக்கும் நெருக்கத்தைக் கண்டு, 'தனக்கு அண்ணியாக வரப் போகிறவள்!' என்று நினைத்திருந்த இரண்டாமவனிற்கு, பெரியவர்களின் விருப்பம் ஏற்புடையதாய் இல்லை.

'என்ன சொல்லி, அந்தப் பேச்சை நிறுத்துவது.?' என்று அவன் தவிக்க‍, "த்ரிஷா இல்லேனா நயன்தாராங்கிற மாதிரி, அவன் இல்லேனா இவனா.? அதெல்லாம் கட்டிக்க முடியாது! முறைப் பையன்களைத்தான் கல்யாணம் செய்யணும்னு சட்டம் இருக்கா, என்ன?" என மறுத்து விட்டாள் அவள். பின்னர்த் தான், சரணிற்கு மஹதியைப் பெண் பார்த்து முடிவு செய்தனர்.

நிருதியும் திவாகரும் காட்டிய வடிவமைப்புகளில், தங்கள் இருவருக்கும் பிடித்தமானதைத் தேர்வு செய்துவிட்டுக் கிளம்பினர், திருமணமாகப் போகிறவர்கள்.

வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சரண், "மஹி, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்‍!" என்றிட, வெளிப்பக்கம் வேடிக்கைப் பார்த்திருந்தவள், "என்னங்க?" என அவன்புறம் திரும்பினாள்.

மிக இயல்பான அவளின் பேச்சும் அழைப்பும்.. உரிமையுணர்வை மேலும் அதிகரிக்க, இடக்கையால் அவளின் கரத்தைப் பிடித்தான்.

"கார் ஓட்டுறப்ப, என்ன இது? பேசாம, வண்டியை ஓரமா நிறுத்துங்க, பேசிட்டுப் போகலாம்!"

"அதெல்லாம் வேணாம்!" என்றவன் அவளின் கரத்தை இழுத்து தனது முழங்கைக்குள் கோர்த்துக் கொண்டு, பயணத்தைத் தொடர்ந்தான்.

"என்ன பேசணும்?"

"எப்படிச் சொல்லுறதுனு தெரியல. பட், நீ தெரிஞ்சிக்கணும்.‌ கல்யாணத்துக்குப் பின்னாடி, இதுனால தப்பான புரிதல் வந்துடக் கூடாதுல?"

"என்னங்க, என்னென்னமோ சொல்லுறீங்க? முன்னாடி, யாரையும் லவ் பண்ணீங்களா.?"

சட்டென்று சிரித்தவன், "ஹேய்! அதெல்லாம் இல்ல. எனக்கு, அதுக்கு டைமும் இல்ல. இது, வேற விஷயம். எனக்கு அண்ணா இருக்கிறது தெரியும்ல, உனக்கு?"

"ம்ம்.."

"அவன் லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டான். அதுனால வீட்டுல பெரியவங்க யாரும் பேசுறது இல்ல. நம்ம கல்யாணத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். அம்மா அப்பா, எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியல. உனக்கு, அதைப் பத்தின கொஸ்டின் வரக் கூடாதுல? அதான் சொல்லுறேன்."

"ம்ம்.. புரியிது. ஏன், அத்தை மாமா எல்லாம் பேசாம இருக்காங்க? உங்க அண்ணா, யாருக்கும் சொல்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா.?"

"வீட்டுல சொல்லி பர்மிஷன் கேட்டான். யாரும் ஒத்துக்கல. அதான், அவனே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டான்."

"ஏன் ஒத்துக்கல?" என அனிச்சையாய் கேட்டவள் உடனே நாக்கை கடித்துக் கொண்டு, அவனைத் தயக்கத்துடன் பார்த்தாள்.

'திருமணம் நிகழ்வதற்கு முன்பே, அவனது குடும்ப விவகாரத்திற்குள் தலையை நுழைத்து, அதிகமாய் உரிமை எடுத்துப் பேசி விட்டோமோ?' என்ற எண்ணம் எட்டிப் பார்த்தது‌.

மஹதியைப் பார்த்துச் சிரித்தவன், "அண்ணி ஹோம்ல வளர்ந்த பொண்ணு‌. அவங்களுக்கு அம்மா அப்பானு யாரும் இல்ல. அதுதான் பிரச்சனை. யாரு, என்னனு தெரியாம எப்படி வீட்டுக்கு மருமகளாக்குறதுனு அவங்களுக்கு ஒரு எண்ணம். அதோட, என்னோட அத்தைப் பொண்ணைப் பார்கவ்வுக்குக் கல்யாணம் முடிக்க ஆசைப்பட்டாங்க. அவன் மறுத்ததால கோபம் வேற!"

"ஹோ.. உங்க முறைப் பொண்ணைப் பத்தி எதுவும் சொல்லல நீங்க.?"

"அந்த வாலு, கல்யாணத்துக்கு வருவா. பார்த்தே தெரிஞ்சிக்க!" எனச் சிரிக்க, அவளும் புன்னகைத்தாள்.

அன்றிரவு வீட்டை அடைந்ததும்.. பெற்றவர்களை விட்டு, தாத்தா பாட்டியைச் சந்திக்கச் சென்றான் சரண்.

"என்னடா, பேத்தி என்ன சொன்னா.?" என விஜயரங்கன் வினவ, "உங்க எல்லாரையும் கேட்டதா சொல்லச் சொன்னா. ஏன், நீங்க மட்டும் வந்தீங்க? எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்லனு கேட்டா."

"நாங்க எல்லாம் வந்தா, உனக்குத் தொந்தரவா இருக்குமே‌‍ மருமகனே?" என உரைத்தபடியே கீதா அறைக்குள் வர, "வாங்க அத்தை‍!" என்று புன்னகைத்தான்.

"இந்தாங்க அப்பா, மாத்திரை போட்டுக்கோங்க!" என்று தந்தைக்கான மருந்தைத் தர, "சீனி எப்ப வர்றா அத்தை.?"

"நீ இன்வைட் பண்ணலயாமே?"

"அவளுக்கு இன்விடேஷன் வச்சு அழைக்கணுமா.?"

"என் பொண்ணு, கூப்பிட்டா தான் வருவாப்பா!" என அவர் முகத்தைச் சற்றே நிமிர்த்தி, இடப்பக்கமாகத் திருப்ப, தாத்தாவும் பெயரனும் சிரித்தனர்.

ஓய்வறையில் இருந்து வந்த பத்மாவதி, "என்ன, சிரிப்புச் சத்தம் எல்லாம் பலமா இருக்கு? கீதா, மாப்ள வந்துட்டாரா.?"

"ஆ.. வந்துட்டாரு ம்மா. அண்ணா அண்ணிக்கிட்ட கல்யாண வேலையைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்காரு."

"சரி சரி.. நீ என்ன சரண், மஹிக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தியா.?"

"அவளுக்கு ஸ்வீட் பிடிக்கும். அதான் கொஞ்சம் வாங்கிட்டுப் போனேன்‌."

"டேய்! துணிமணி, வேற எதுவும் வேணுமானு கேட்டு வாங்கித் தர்றதை விட்டுட்டு, மிட்டாய் வாங்கித் தந்தேன்ற.?"

"கல்யாணத்துக்கு ஆர்டர் பண்ணி இருந்த சேலையோட சேர்த்து, அவளுக்குப் பிடிச்ச கலர்ல, எக்ஸ்ட்ரா ஒரு புடவை நெய்யச் சொல்லி இருக்கேன். ரெடியானதும் கொண்டு போய்த் தரணும். கேட்டு வாங்கித் தர்றதுக்குத் தான்‍, இன்னும் காலம் இருக்கே!"

"அடேயப்பா! இப்பவே, காலக் கணக்கு எல்லாம் பார்க்க ஆரம்பிச்சாச்சா? அக்மார்க் குடும்பஸ்தனா மாறிட்டடா‍, நீ!" என உரைத்துக் கீதா சிரிக்க‍, சிறிது நேரம் சிரிப்பொலியில் நிறைந்தது அவ்விடம்.

"தாத்தா‍, உங்கக்கிட்ட ஒண்ணு கேட்க வந்தேன்."

"சொல்லுடா!"

"பார்கவ் இல்லாம, எப்படித் தாத்தா கல்யாணம் செய்யிறது.?"

தாயும் மகளும் ஆர்வத்துடன் விஜயரங்கனைப் பார்க்க, "அவனை விட்டுட்டு, எப்படிடா செய்ய முடியும்? நாளைப்பின்ன பொண்ணு வீட்டுக்காரவங்க கேட்டா, பதில் சொல்லணுமே? வரட்டும்‍!" என்றார் கரகரத்த குரலில்.

"ஆனா, அப்பா அதுக்குச் சம்மதிக்கணுமே?"

"அவன் என்ன சம்மதிக்கிறது? நான் சொல்லிக்கிறேன்."

"உஃப்ஸ்ஸ்.." என நிம்மதி மூச்சு விட்டுப் புன்னகைத்தவன், "நீங்களே கால் பண்ணி, அண்ணன்கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லிடுங்களேன் தாத்தா. ப்ளீஸ்.." என்றிட,

"காரியக்காரன்! நினைச்சதைச் சாதிச்சிட்ட!" எனப் பெயரனை மெச்சியவர் கைப்பேசியுடன் அங்கிருந்து சென்றார்.

சரணின் தலையில் வருடிய பத்மா, "உனக்குக் கல்யாணம் பேசி முடிச்சதுல இருந்தே, அவங்கக்கிட்ட பார்கவ்வைப் பத்தி எப்படிப் பேசுறதுனு, யோசனையா இருந்துச்சு. ஒரு செகண்ட்ல அதைச் செஞ்சிட்டியே கண்ணா!" என்று பூரிப்புடன் உரைக்க, கனிவுடன் நோக்கினார் கீதா.

விஜயரங்கன்.. மூத்த பெயரனை, திருமண விழாவிற்கு வருமாறு அழைக்க, சரணும் தன் பங்கிற்கு அத்தை மகளிடம் கைப்பேசியின் வழியாய்ப் பேசினான்.

 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 4இல்லம் களைகட்டி இருந்தது, நிகழப் போகும் திருமணத்திற்காக.

பெண் வீட்டாரை அழைத்து வந்து, தகுந்த இடம் பார்த்து தங்க வைத்து, உறவினர்களிற்கும் விடுதி அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்து என அனைத்து பணிகளையும் அன்று காலையே முடித்து இருந்தனர், மாப்பிள்ளையின் குடும்பத்தார்.

அலங்கரிக்கப்பட்ட‌ வெளிப்பக்கத்தைப் பார்த்தவாறே, வாயிலைக் கடந்து உள்ளே காலடி எடுத்து வைத்தான் பார்கவ்.

கூடத்தில் இருந்த கிருஷ்ணன், "துளசி இன்னுமா ரெடி ஆகல? அம்மா, அப்பா, தீரஜ்.. சீக்கிரம். எவ்வளவு நேரம்.? மாப்பிள்ளை அழைப்புக்கு, பொண்ணு வீட்டுப் பக்கம் இருந்து கிளம்பிட்டாங்களாம். கீதாமா.." என ஒவ்வொருவரையும் அழைத்துவிட்டுத் திரும்ப, பார்வையில் விழுந்தான் மூத்தமகன்.

"அப்பா.." என்றவாறு ஓர் அடி எடுத்து வைக்க, மகனைக் காணாதது போல் தனது அறையை நோக்கிச் சென்றார் அவர்.

தமையனின் அழைப்பில் வெளியே வந்த கீதா, அவனைப் பார்த்ததும் அப்படியே நின்று கொள்ள, பார்கவ் தயக்கத்துடன் ஏறிட்டான்.

"அத்தை.." என்றவன் அதற்கு மேல் எதுவும் பேச தோன்றாது அமைதியானான்.

'தந்தையே கண்டு கொள்ளாத பொழுது, அவரின் தங்கை மட்டும் பேசிவிடப் போகிறாரா என்ன.?'‌ என மனம் வினா எழுப்பி, அவனை இம்சித்தது.

சிறிது நேரம் அவனையே பார்த்திருந்தவர் அருகே வந்து, “வாடா மருமகனே! என்ன, இப்பதான் எங்க ஞாபகம் எல்லாம் வந்துச்சா? உன்னோட பொண்டாட்டி, எங்களைக் காட்டிலும் அவ்வளவு நல்லா பார்த்துக்கிறாளா.?” எனக் கேட்ட சொற்களில் துளியும் வருத்தம் இல்லை. அவனைக் கடந்த எட்டு மாதங்களாய், காண இயலாத ஏக்கம் மட்டுமே நிறைந்து இருந்தது.

தவிக்கும் மனது ஆசுவாசம் அடைய, "அப்படி எல்லாம் இல்ல அத்தை. உங்களை விட, யாரால என்னைப் பார்த்துக்க முடியும்.?" என்று பதில் தந்தவனிடம், "சரி, எப்படி இருக்க.?"

"நல்லா இருக்கேன் அத்தை."

"நீ மட்டுமா வந்த.?" என வினவும் பொழுதே, மாப்பிள்ளை அழைப்பிற்காகத் தயாராகி வந்த சரண், தமையனைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

கீதா சிரித்தபடி இருவரையும் பார்த்திருக்க, “ரெண்டு நாளுக்கு முன்னாடியே வந்தா என்ன? விடிஞ்சா கல்யாணம், இப்ப வர்ற?" என்று கடிந்தான் புது மாப்பிள்ளை.

பார்கவ் சிரித்துச் சமாளிக்க, "சரி, அண்ணி எங்க.?”

"நானும் கேட்டேன், இன்னும் பதில் வரல!‌" எனக் கீதாவும் தன் பங்கிற்கு‌ கேட்க, “அவ வரலடா!” என்றான்.

சரண் திகைத்து, "ஏன் வரல?”

“நீயும் தாத்தாவும் தான் கூப்பிட்டீங்க. அத்தைக் கூட, இப்பப் பேசிட்டாங்க. ஆனா.. அப்பா, பார்த்தும் பார்க்காதது மாதிரி போயிட்டாரு. அப்பாவை மீறி அம்மா பேச மாட்டாங்க. மாமா, எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு தெரியல. எனக்கே இந்த நிலைமைனா, அவளுக்குக் கஷ்டமா இருக்காதா.? அதான்.!” என்று சமாதானம் சொல்ல,

“வர்ற மகராஜா.. சம்சாரத்தைக் கூட்டிட்டி வராம, மொட்டையா வந்து நிக்கிறான் பாரு பத்மா? ஏண்டா, என் வயசுக்கு உனக்கு வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா? அவ்வளவு பெரிய மனுசன் ஆகிட்டியா, நீ? நான் ‘வா’னு சொன்னா, நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரும் சொல்லுறதா தான அர்த்தம்? அப்ப, எனக்கு அவ்வளவு தானா மரியாதை.?” என விஜயரங்கன் வினவியபடியே மனைவியுடன் வர, தவிப்பும் துடிப்புமாய்ப் பெரியவர்களைப் பார்த்தான் பார்கவ்.

“கூட்டிட்டு வந்தா, அந்தப் பிள்ளைய போன்னு விரட்டியா விட்டுடுவோம்? எங்களை அப்படியா நினைச்சிட்டு இருக்க.?” என்று பத்மாவதியும் தன் பங்கிற்கு வினவ, “ஸாரி பாட்டி, தப்புதான். நான் அவளைக் காலையில வரச் சொல்லிடுறேன்!” என உரைத்தவனின் கண்களில் நீர் கோர்த்து இருந்தது.

"இப்பவும் எனக்குப் பதில் சொல்லாம, அவனோட ஆச்சிக்கிட்டப் பேசுறான், பாரு? அப்ப.. என்னைப் பெரியவனா நினைக்கல.‌ அப்படித்தான.?"

“ஐயோ தாத்தா..” என்ற பார்கவ் அவரைப் பாவமாய்ப் பார்க்க, “சும்மா இருங்கப்பா.‌ அவனே இப்பதான் வந்திருக்கான். மனசு சங்கடப்படப் போறான்.‌” எனத் தந்தையிடம் உள்ளன்போடு உரைத்தார் கீதா.

மூத்தவனின் வருகை குடும்பத்தாரிடம் மகிழ்ச்சியைக் கூட்டிட, “தீரஜ் எங்க சரண்.?” என்றான்.

“கல்யாண மண்டபத்துல இருக்கான். அங்க வேலையைப் பார்க்கணும்ல.?”

பார்கவ் வியப்புடன், “அவனுக்கு அவ்வளவு பொறுப்பு வந்திடுச்சா என்ன.?”

“அவனுக்குப் பருப்பு வெந்திருக்கானே பார்க்கத் தெரியாது. நல்ல பொறுப்பு தான்! மானத்தை வாங்காம, கொஞ்சம் மெச்சூர்டானவன் மாதிரி நடினு கெஞ்சி அனுப்பி இருக்கேன்!” எனச் சரண் சொல்ல, இடம் கலகலப்பானது.

“அட.. அட.. இதெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சு? எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா.. எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை.. லாலலா..” என்று பாடியவாறே வந்த அக்குடும்பத்தின் இளவரசி சீனியிடம் அனைவரது கவனமும் திரும்ப, மகிழ்ச்சியின் அளவீடு இன்னும் ஒரு படி அதிகரித்தது‌.

சரியாய்.. இல்லத்தின் வாயிலில் மேளதாளம் ஒலிக்க, நேரம் ஆனதை உணர்ந்தனர்.

“பொண்ணு வீட்டுல இருந்து, அழைக்க வந்துட்டாங்க போல! கிருஷ்ணனையும் துளசியையும் கூப்பிடு சீனி!” என மகள் வயிற்றுப் பெயர்த்தியிடம் உரைத்து விட்டு வாயிலிற்குச் சென்ற விஜயரங்கனைத் தொடர்ந்து, மற்ற குடும்பத்தாரும் சென்றனர்.

இரண்டு எட்டுகளை எடுத்து வைத்த சரணின் கையைப் பற்றிய சீனி, “மாமா, எங்க போற? நீ, கல்யாண மாப்பிள்ள. இப்படி எல்லாம் முந்திரிக் கொட்டை மாதிரி, முன்னாடி ஓடக்கூடாது. அடக்க ஒடுக்கமா அமைதியா நல்ல பையனா இரு, வந்து கூட்டிட்டுப் போவாங்க. என்ன சரியா? கொஞ்சம், உன்னோட ஆர்வத்தைக் கண்ட்ரோல் பண்ணு!” என்றுவிட்டு, அவனது பெற்றோரை அழைத்து வர ஓடினாள்.

சடங்கு துவங்கிட.. சரணின் அருகே வந்து நின்றவள், “இதெல்லாம் யார் யாருனு சொல்லு மாமா.” எனப் பெண் வீட்டாரைப் பற்றி விசாரிக்க, ஒவ்வொருவர் அணிந்திருந்த உடையின் நிறத்தை உரைத்து, உறவு முறைகளைச் சொன்னான்.

“அது திவாகர், மஹியோட அண்ணா. அடுத்து, அவளோட தாய்மாமா. அவரு பக்கத்துல இருக்கிறது, என் மாமனாரோட தம்பி..‌‌” எனச் சொல்லிக் கொண்டே வர, இறுதியாய் நின்று இருந்தவனைக் கண்டதும், பேச்சு மூச்சற்று போனாள் அவள்‌.

'அவன் தானா? அவனே தானா? நிஜமா? இனிமேல் பார்க்கவே முடியாது, எதுவும் தெரிஞ்சிக்கவும் வாய்ப்பு இல்லனு நினைச்சேனே.? ஒருவேளை, வேற யாரோவா.? என்னோட கண்ணுக்குத் தான், அவனை மாதிரி தெரியிதா.?' எனப் பெண்மனம், அவன் யாரென உறுதி செய்து கொள்ள இயலாது திணறியது.

அவனுமே.. சீனியைப் பார்த்து உள்ளம் தடதடக்க என்ன செய்வது என்று புரியாமல், திகைப்புடன் நின்றிருந்தான்.

திவா.‌. நண்பனின் தோளைத் தொட, திரும்பிப் பார்த்தான்.

"மாப்பிள்ளய கூட்டிட்டுப் போகணும்."

நிருதி முயன்று புன்னகைத்தபடி தலை அசைக்க, சரணின் இருபுறமும் ஆளிற்கு ஒருவராய் நின்று அழைத்துச் சென்றனர்.

அத்தை மகளைக் கவனித்த பார்கவ், "ஏய் என்னாச்சு? எதுக்கு இப்படி ஷாக்கான மாதிரி நிக்கிற‌? வா, போகலாம்." என்றபடி அவளின் தோளில் கையைப் போட்டபடி நடந்தான்.

இல்லத்தை விட்டு வெளியேறும் முன்னர், நிருதியின் பார்வை நான்கைந்து முறைக்கும் மேல், அவளைத் தொட்டுச் சென்றிருந்தது. சீனியும் அதைக் கவனிக்கத் தவறவில்லை‌.

அவனைப் பார்த்தவாறே, "மாமா, அவரை உனக்கு அடையாளம் தெரியிதா.?" என வினவ, "யாரைச் சொல்லுற.?"

"மஹியோட அண்ணா, ஃப்ரெண்ட்!" என நிருதியைச் சுட்டிக் காட்டிட, "ம்ம்.‌. பார்த்த மாதிரி இருக்கு!"

"பார்த்த மாதிரியா.?‌ நம்ம இருக்கிற அப்பார்ட்மெண்ட்ல, குடி இருந்தாரே.? அவர்தான.?"

சில நொடிகள் சிந்தித்த பார்கவ், "ஹேய்.. ஆமா.. ஆமா.. திவாகரையும் நான் ஒன்‌ டைம் பார்த்திருக்கேன். நீ சொல்லவும் தான், ஞாபகமே வருது!" என்றிட, ஏதோ பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்ந்தாள் அவள்.

தற்போது தான், திவாகரின் முகம் கூட நினைவு வந்தது. இரண்டு முறை பார்த்திருக்கிறாள். ஏனோ.. நிருதி, அவளது நினைவுகளில் நிறைந்த அளவிற்கு, அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்த மற்ற எவரும் பதியவில்லை‌.

நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள். மனம் ஒருபுறம் மகிழ்ச்சியில் கூத்தாட, மறுபுறம் சினத்தில் கொந்தளித்தது.

இரண்டிற்கும் காரணம், அவன்தான். எட்டு மாதங்கள் ஆகிவிட்டது, அவனைப் பார்த்து. திடீரென ஒருநாள் மாயமாய் மறைந்து போனான். இன்று வரை, நினைக்காத நாள் இல்லை‌. அதேபோல் மறக்க முயன்றும் கூட, முடியவில்லை.‌

கடந்த காலத்தின் நிகழ்வுகளிலும், மனதை அழுத்திக் கொண்டிருந்த வலிகளின் காரணமாகவும் கண்கள் அனிச்சையாய்க் கலங்க, உறவுகள் எவரும் அறிந்துவிடா வண்ணம் அதை மறைத்துக் கொண்டாள் சீனி.

மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடனே, பெரும்பாலான உறவுகள் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். பெண் அழைப்பிற்கு.. கீதாவும் சரவணவேலும் தயாராக, "சீனி, நீயும் அம்மா அப்பாவோட போ!" என்றார் விஜயரங்கன்.

அவள் இருந்த மனநிலையில், "நான் எதுக்குத் தாத்தா.?" எனத் தவிர்க்க முயல, "போடா கண்ணு. இன்னும் நீ, மஹி பொண்ணைப் பார்க்கல இல்ல. கொஞ்சம் ஜாலியா பேசிப் பழகுனேனா, நம்ம வீட்டுக்குப் பயம் இல்லாம வருவா புதுப் பேத்தி!" என்று பத்மா எடுத்துரைக்க, வேறு வழியின்றிச் சம்மதித்தாள் சீனி.

‘ஒருவேளை அவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தாலோ அல்லது மஹதியிடம் பேச முடிந்தாலோ, இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? திடீரென ஏன் மாயமானான், என்பதை அறிந்து கொள்ளலாம்‌!’ என்ற எண்ணம், அவளை அங்கே செல்வதற்கு உந்தித் தள்ளியது.

தாங்கள் தங்கி இருந்த இருப்பிடத்திற்கு வந்த சம்பந்தியின் உறவுகளை, வரவேற்று உபசரித்தனர் பெண் வீட்டார்.

“மஹி ரெடியா? நல்ல நேரம் முடியிறதுக்குள்ள மண்டபத்துக்குப் போயிடலாம்!” எனக் கீதா வினவ, “அஞ்சு நிமிசம் மா. இப்ப ரெடி ஆகிடுவா!” என்று விட்டு அவசரமாய் உள்ளே சென்றார் மோகன்.

இருக்கையில் அமர்ந்திருந்த சரவணன், “உள்ள போய்ப் பார்த்து, ஏதாவது உதவி தேவைப்பட்டா செய் கீதாமா. நேரம் ஆகிடப் போகுது!” என மனைவியிடம் உரைக்க, மகளை உடன் அழைத்துக் கொண்டு சென்றார் அவர்.

மஹதியும் சீனியும் தற்போது தான் முதன்முதலாய் பார்த்துக் கொள்கின்றனர். சரணின் மூலமாய் ஒருவரைப் பற்றி மற்றவருக்குத் தெரியும் என்பதால், "ஹாய்.." எனக் கையசைத்து அறிமுகம் ஆகிக் கொண்டனர்.

"என்ன கல்யாணப் பொண்ணு, கிளம்பலாமா? மொத்த ஃபேமிலியும் உனக்காக மண்டபத்தில வெயிட்டிங்!" என்றுவிட்டு, "உன்னோட ஆள், உன்னைக் காணாம அங்க தவிச்சிக்கிட்டு இருக்காரு!" எனக் காதோரம் கிசுகிசுப்பாய் உரைக்க, முகம் சிவந்து தலைக்குனிந்தாள் மஹதி.

"சரி சரி, பேசுனது போதும்! மத்ததை வழியில பார்த்துக்கலாம். நல்ல நேரம் போயிடப் போகுது!" என்று கீதா அனைவரையும் கிளப்பி வெளியே அழைத்து வர, வாகனத்தை இயக்கி வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினான் நிருதி.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 5


வாகனத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு இறங்கிய நிருதி‍, திறவுகோலை சரவணவேலிடம் நீட்டினான்.

"தேங்க்ஸ் ப்பா‌.." எனப் பெற்று கொண்டவர் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர, நண்பனது தந்தையின் புறம் பார்த்தான் அவன்.

"பஸ்ல ஏறிக்கோ நிரு. பானுமா, நீ மஹிக்கூடப் போ. நான் ஆளுங்களைக் கூட்டிட்டுப் பின்னாடியே வர்றேன்!‌" என மோகன் சொல்ல, அனைவரும் ஒன்றுபோல் தலை அசைத்தனர்.

மஹதியின் கரத்தைப் பற்றியபடி நின்றிருந்த சீனிக்கு, நடந்த எதுவும் கருத்தில் பதியவில்லை. அவன் ஒருவனது அசைவுகளைத் தவிர‌.

அழகாய், கம்பீரத்துடன் கர்ம சிரத்தையாய்ச் செய்து வைத்த அசையும் சிலையைப் போல் இருந்தான் நிருதி. முகம், நொடியும் மலர்ச்சியைச் சிந்த தவறவில்லை.

எனினும், சொத்தை எழுதிக் கொடுத்தால் கூட, வாயைத் திறந்து பேச மாட்டான் போலும். அத்தனை இறுக்கம், அவ்வளவு அழுத்தம்.

'இல்லை, வேறு ஏதோ‌ ஒன்று! வலுக்கட்டாயமாய்ப் பேசுவதைத் தவிர்க்கிறான்.' என அவளின் ஆழ்மனம் எடுத்துரைத்தது‌.

ஆடவனைப் பலமுறை பார்த்திருந்த போதும், ஒருமுறை கூடப் பேசிட வில்லை‌.

'பேசலாமா அவன்கிட்ட? எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலயே? நாமளா போயிப் பேசுனா, எதுவும் தப்பா நினைச்சிடுவானோ.?‌' என்று எண்ணியே, அவள் நாள்களைத் தள்ளிப் போட்ட வண்ணம் இருந்தாள்.

இறுதியாய் அவன் எங்கோ மறைந்து போன பின்பு, 'அச்சோ! பேசாம இருந்துட்டேனே? எவ்வளவு வாய்ப்பு, அவ்வளவையும் வேஸ்ட் ஆக்கிட்டோமே.?' என நினைத்து ஏங்கிய தினங்கள் எல்லாம், இன்றுவரை எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றன.

இருந்தும், நிருதியின் குரலை ஒரே ஒரு முறை கேட்டிருக்கிறாள் சீனி. ஆனால் தற்போது, அந்த ஓசையானது பாவையின் நினைவுகளிற்குள் பிடிபட மறுத்தது‌.

"சீனி.. கார்ல ஏறு. எவ்வளவு நேரம், வேடிக்கைப் பார்த்துட்டு நிப்ப.?" என்ற கீதாவின் குரலில் நிகழ்வுக்கு மீண்டவள், மணப்பெண்ணின் உறவுகளுடன் பேருந்தில் ஏறிய நிருதியை ஒருமுறை பார்த்துவிட்டு, வாகனத்திற்குள் அமர்ந்தாள்.

சில நொடிகளில் அவர்களின் பயணம் துவங்க, பேருந்தும் பின்தொடர்ந்து வந்தது.

"சீனி.. கிளம்பிட்டோம்னு தாத்தாக்குக் கால் பண்ணிச் சொல்லிடு ம்மா!"‌ எனச் சரவணன் உரைக்க, கைப்பேசியில் எண்களை அழுத்தினாள் அவள்.

"இது என்ன பேரு, சீனினு. கல்யாணப் பத்திரிக்கையில வேற ஏதோ போட்டிருந்ததைப் பார்த்தேனே.?" என்று பானுமதி வினவ, "அவ, சரியான சீனித்தின்னி அக்கா. அதான் அந்தப் பேரு!" என உரைத்தார் கீதா.

மஹதி வியப்புடன், "பேரு வைக்கிற அளவுக்கா, சீனி சாப்பிடுவீங்க..?"

அவள் சிரித்து, "அது, சின்னப் பிள்ளையில. ஒரு அஞ்சாறு வயசு வரைக்கும் சாப்டுட்டேன்னு வச்சுக்கோயேன். டீ, காபிக்கு எல்லாம் அரை டம்ளர் அளவுக்குச் சீனி போடணும். அவ்வளவு தித்திப்பா குடிப்பேன். சர்க்கரை, வெல்லம், பனங்கல்கண்டு, கற்கண்டுனு இனிப்புக்கு எத்தனை வகை இருந்தாலும், எனக்குச் சீனிதான் எப்பவும். சர்க்கரைப் பொங்கல்ல கூட, மேல சீனியைத் தூவி சாப்பிடுவேன். அதுனால கிருஷ்ணா மாமா வச்சப் பேரு தான், சீனித்தின்னி. அது, இப்ப சீனினு சார்ட்டா மாறிடுச்சு.‌"

பானுமதி விழி அகல, "அம்மாடி அம்மா! உனக்கு மட்டுமே தனியா, மாசமாசம் பத்துகிலோ சீனி வாங்கணும் போலயே.?"

"இப்ப, அவ்வளவு இனிப்புச் சாப்பிடுறது இல்ல பெரியம்மா.‌ ஸ்கூல் போகவுமே கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு, இப்ப சுகர்பிரீக்கு மாறிட்டேன். ஆனாலும், இந்தப் பேர் என்னை விட மாட்டிது!" என்று சிரித்தாள் அவள்.

"சரி,‌ உன்னோட பேர்தான் என்ன.? பத்திரிக்கையில ஒருதடவைப் பார்த்தது, மறந்துடுச்சு!" என வினவ, "நிதன்யா ம்மா!" என்றாள் மஹதி.

"ஃப்ரெண்ட்ஸுக்கு, நிதா. பார்கவ் மாமாவுக்கு, தனு. வீட்டுல இருக்கிற மத்த எல்லாருக்கும், சீனி! இந்தச் சீனியைத் தவிர, நீங்க வேற எப்படிக் கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான் பெரியம்மா!" என அவள் உரைக்கும் பொழுதே, "அது‌ என்ன, சரணோட அண்ணா மட்டும் ஸ்பெஷல்?" என்றாள் மஹதி.

"என்‌‌ ஃப்ரெண்ட் ஜனனி, அப்படித்தான் கூப்பிடுவா. அவளைப் பார்த்து, அவரும் கூப்பிட ஆரம்பிச்சிட்டாரு."

"ஜனனி னா.?" எனப் பானுமதி தனது சிந்தனையைத் தட்டிவிட்டுச் சந்தேகமாய்ப் பார்க்க, "பார்கவ் மாமாவோட, வொய்ஃப்!" என்று அதனை உறுதி செய்தாள் சீனி.

மஹதி ஆராய்ச்சியாய், "அவங்க வொய்ஃப்,‌ உங்களுக்கு ஃப்ரெண்ட் ஆனாங்களா.? இல்லேனா.. உங்க ஃப்ரெண்டை, அவர் கல்யாணம் செஞ்சுக்கிட்டாரா.?‌" என வினவ, முன்புறம் இருந்த கீதா தலையைத் திருப்பி மகளைப் பார்த்தார்.

அன்னையை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தவள், "என் ஃப்ரெண்டைத்தான் காதலிச்சு கவுத்துக் கல்யாணம் செஞ்சுக்கிட்டான், அந்தச் சோம்பேறி." என்றிட, "அப்ப, அவங்க கல்யாணத்துக்குக் காரணமே நீங்கதானா.?" என வினவி, பட்டென்று உண்மையை உடைத்தாள் மஹதி.

"நானே தான். சென்னையில, இப்ப நாங்க மூணு பேரும்‌‌ ஒண்ணா தான் இருக்கோம்!" என்று மேலும் பேச்சை வளர்ப்பதற்கான வாய்ப்பை நல்காது சுருக்கமாய்ச் சொல்லி முடிக்க, திருமண அரங்கின் வாயிலின்‌ முன்‌னர் நின்றது வாகனம்.

மணமகன் உட்பட, குடும்பத்தார் அனைவரும் வெளியிலேயே நின்றிருந்தனர்.

கிருஷ்ணனும் துளசியும் வரவேற்க, மஹதியை நோக்கி வலது கையை நீட்டினான் சரண். அவள் புன்னகையுடன் தனது கரத்தை அவனோடு சேர்க்க, ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

மணமக்களின் வருகையினால் அரங்கம் மேலும் அழகுபெற, இசையும் இனிமை சேர்த்தது.

ஒருபுறம்.. உறவுகளிற்குள், அறிமுகப் படலங்களும், நலம் விசாரிப்புகளும், விட்டகுறை தொட்டகுறையாய் விடுபட்ட பேச்சுகளும் நடந்தேறிக் கொண்டிருக்க, மறுபுறம் வரவேற்பு நிகழ்ந்தது.

மஹதியை அழைத்து வந்து கடமையை முடித்துவிட்ட சீனி, நேராய் பார்கவ்விடம் சென்று நின்றாள்.

அத்தை மகளைக் கேள்வியாய் நோக்கியவன், "என்ன.?"

"ஜனனிக்கிட்ட பேசுனியா மாமா.?"

"ம்ம்.. பேசிட்டேன்."

"எப்ப வர்றாளாம்.?"

"ஆல்ரெடி கிளம்பிட்டா. ஆனா.."

"என்ன இழுக்கிற.?"

"அப்பாவை நினைச்சா தான்!"

"அதான் தாத்தாவே சொல்லிட்டாரே? ரொம்ப யோசிக்காத, பார்த்துக்கலாம்! அப்புறம் மஹி, உன்னோட மேரேஜ் பத்திக் கேட்டா."

அவன் சிரிக்க, "அனேகமா, வீட்டுல இன்னொரு பூகம்பம் வெடிக்க வாய்ப்பு இருக்குனு நினைக்கிறேன்."

புரியாது பார்த்தவன், "ஏன்?"

"எப்படியும், நான்தான் உனக்கும் ஜனனிக்கும் கல்யாணம் செஞ்சு வச்சேன்னு தெரிஞ்சிடும். மிஸ்டர் கிருஷ்ணன், சும்மா இருப்பாருனு நினைக்கிற.?‌ ஆல்ரெடி என்னோட அம்மாக்கு, அந்த டவுட் இருக்கு."

"வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க வேண்டியது தான.?"

"நான், சும்மாதான் இருக்கேன் மாமா. ஆனா, யாராவது எதுவும் கேட்டா எப்படிப் பதில் சொல்லாம இருக்க முடியும்? அதோட, என் வாய்வேற பொய் சொல்லித் தொலைக்காது‍!" என்றுவிட்டு அவள் பாவமாய் நிற்க, "கல்யாணம் ஆகி, இப்ப வீடு வரைக்கும் வந்தாச்சு‌. இனிதான், அப்பா எதுவும் கேட்கப் போறாராக்கும்? என்கிட்டதான் பேசுறதே இல்லையே?‌ விட்டுத்தள்ளு!"

"உன்கிட்ட பேசுறது இல்ல, அதுனால உனக்குப் பிரச்சனை இல்ல.‌ ஆனா, என்கிட்டப் பேசுவாறே.? என்னோட மம்மி வேற, பாசமலர் சாவித்திரியோட லேட்டஸ்ட் வெர்சன்‌. புகுந்த வீட்டுக்கு போகாம, கட்டுன மனுஷனை வீட்டோட மாப்பிள்ளயா செட்டில் பண்ணுற அளவுக்குப் பாசக்காரி. விஷயம் முழுசா தெரிஞ்சுச்சு.. என்னைப் பக்கத்துல உட்கார வச்சு, உரல்ல இடிக்கிற மாதிரி இடிச்சு, வெல்லப்பாகை சூடா ஊத்தி, அப்படியே அதிசரம் சுட்டுடும்!"

பார்கவ் சிரிக்க, "நல்லா சிரிப்பு வருது போல. இதேமாதிரி உனக்கும் நடந்தா தெரியும்."

"விடு தனுமா.." என அவன் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொள்ள, "எங்க அந்த, ரஜூ குட்டி.?"

"திவாகரும், அவனும் இப்பதான் வெளிய போனாங்க."

"அவனுக்குனு ஒரு ஆள், சிக்கிட்டாரு போல.?"

பார்கவ் சிரித்துத் தலையசைக்க, "ஏன் மாமா, நமக்குத்தான் அவரைச் சரியா அடையாளம் தெரியல. அவருக்குமா, நம்மளைத் தெரியல?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசுனேன். அவன், நமக்கு மேல இருக்கான். 'நான், தூங்குறதுக்கு மட்டுந்தான் அப்பார்ட்மெண்டுக்கே வருவேன். பக்கத்து வீட்டுல யார் இருக்காங்கனு கூடத் தெரியாது'னு சொல்லிட்டான்.‌ இதுக்கு மேல என்ன கேட்கிறது.?" எனச் சிரிக்க, சீனியும் புன்னகை சிந்தினாள்.

ஏனோ சிந்தை எங்கும், நிருதியின் எண்ணமே சுற்றிக் கொண்டிருக்க, விழாவில் ஒன்ற இயலாமல் ஒருவித மன இறுக்கத்தில் சிக்கித் தவித்தாள்.

மணமக்களிற்கான சடங்குகள் துவங்கிட, குடும்பத்தைச் சார்ந்த பெரியவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் மேடையில் ஏறினர். மணமகனின் புறம்.. சீனியும் தீரஜும் சிறுபிள்ளையாய் அங்கும் இங்கும் ஓடி, சொல்லும் வேலைகளை ஒவ்வொன்றாய்ச் செய்ய, பெண்வீட்டுப் பக்கம் திவாகரும் நிருதியும் அதனைக் கவனித்தனர்.

விழாவின் பரபரப்பு, திருமண வரவேற்பில் இருந்து பந்திக்கு இடம் மாறியது.‌ விருந்தினர்களின் வயிற்றை நிறைத்து, கிளம்பியவர்களை வழியனுப்பி, கடமைகளைச் சரியாய் முடித்து விட்டு, உணவருந்த அமர்ந்தனர் இருபக்க வீட்டாரும்.

எப்பொழுதும் எங்கும் இணைகளாய் அமர்வதே, விஜயரங்கன் குடும்பத்தாரது வழக்கம்.

அதன்படி.. விஜரயங்கன் பத்மாவதி, கிருஷ்ணன் துளசி, கீதா சரவணன், சரண் மஹதி என ஒருபுறம் அமர, எதிர்பக்கம்..‌ மோகன் பானுமதியுடன் தீரஜ் உட்கார்ந்து கொண்டான்.

வெகு நேரம் ஆகிவிட்டதால், பணியாளர்களிற்கு ஓய்வைக் கொடுத்துவிட்டு, சிறியவர்களே உணவைப் பரிமாறினர்.

'தந்தையின் புறம் சென்று அவரின் முறைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டாம்!' என்று, பெண் வீட்டாரின் பக்கமே நின்று கொண்டான் பார்கவ்‌. சீனி, மற்றவர்களின் இலையில் எடுத்து வைத்தாள்.

தனது தாய்த்தந்தையரைக் கவனித்த மஹதி, "அப்பா, ரெண்டு அண்ணாவும் எங்க.?" என்றிட, "உன்னோட சித்தப்பா, மாமா எல்லாம் ரூம்ல தங்கிட்டுக் காலையில வர்றோம்னு சொன்னாங்க. அதான் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க."

"சாப்பிட்டாங்களா ப்பா.?"

"இன்னும் இல்லடா."

"சாப்பிட வச்சிட்டு அனுப்பி இருக்கலாம்ல? டைம் ஆச்சுப் பாருங்க. திரும்ப இங்க வர்றாங்களோ, இல்லேனா அங்கேயே தங்குறாங்களோ.?"

"வந்திடணும்னு சொல்லி விட்டிருக்கேன். வந்திடுவானுங்க!" எனப் பானுமதி மகளிற்குச் சமாதானம் சொல்ல, "ஏன்பா, நிக்கிற? நீயும் உட்கார்ந்து சாப்பிடு!" எனப் பார்கவ்விற்குத் தன்னருகே இருந்த இருக்கையைக் காட்டினார் மோகன்.

"பரிமாறிட்டு வர்றேன் மாமா, நீங்க சாப்பிடுங்க!" என்றிட,‌ "நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன், நீ மட்டும்தான் இருக்க, உன்னோட வொய்ஃப் வரலயா.?‌" எனப் பானுமதி மனதில் இருந்ததை வெளிப்படையாய் வினவினார்.

கிருஷ்ணன் உட்படக் குடும்பத்தார் அனைவரும் அவனை நோக்க, "ஆஃபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் அத்தை. அவாய்ட் பண்ண முடியாது. அதான் ஜனனி போயிருக்கா‌."

"அப்ப, அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கும் வர மாட்டாளா.?"

"வந்திடுவா அத்தை, கொழுந்தனார் கல்யாணத்துல அவ இல்லாம எப்படி..?" எனும் பொழுதே, திவாகரும் நிருதியும் வந்து சேர்ந்தனர்.

ஒவ்வொருவராய் உணவை முடித்துக் கொண்டு எழ.. நண்பர்கள் இருவருக்கும் உணவைப் பரிமாறிவிட்டு பார்கவ்வும் சீனியும் உண்ண அமர்ந்தனர்.

புதிய உறவுகளுக்கு இடையே அறிதலும் புரிதலும் அவசியம் என்பதால், திவாவுடன் பேசிய படி பார்கவ் அவனருகே அமர்ந்திருக்க, சீனி நிருதியின் அருகே உட்கார்ந்தாள்.

ஒருமுறை மட்டும் அவளைத் திரும்பிப் பார்த்த ஆடவன், உணவில் கவனமாகி விட, பாவைக்குத்தான் மனதில் ஏதோ ஒருவலி.

"ஏன்.. இப்படி அவாய்ட் பண்ணுறான்‍?" எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள்,

'அவன் பேசலேனா என்ன, நம்ம முயற்சி செஞ்சு பார்க்கலாம்!‌' என்ற எண்ணத்துடன், "ஹலோ!" என்றாள்.

சீனியின் பேச்சிற்கு எவ்வித பிரதிபலிப்பையும் காட்டாத நிருதியின் அலட்சியமான நடவடிக்கையில்.. அவளுள் சினம் துளிர்க்க, உணவை மூடி வைத்துவிட்டுச் சட்டென்று அங்கிருந்து எழுந்து சென்றாள்.

நடந்ததைக் கவனித்த பார்கவ், "தனு.. என்னாச்சு?" என்றபடி அத்தை மகளைப் பின்தொடர, இருவரையும் மனம் கனக்கப் பார்த்திருந்தான் நிருதி.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 6

கரத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்திருந்தாள் சீனி. அவளருகே வந்து அமர்ந்த பார்கவ், "ஏன், சாப்பிடாம வந்துட்ட? உடம்புக்கு எதுவும் செய்யிதா.?"

அவள் மறுத்துத் தலையசைக்க, "வேற என்ன.?"

"மனசே சரியில்ல மாமா."

சின்னதாய்ச் சிரித்தவன், "அதுக்கு என்ன ஆச்சு.?"

"ஒண்ணும் இல்ல!‌" என்றவள் அவனின் தோளில் சாய்ந்து கொள்ள, "எதுவோ உன்னோட மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. ஆனா, அதை என்கிட்ட சொல்ல மாட்டிற."

"சொல்லுற அளவு, பெரிய விசயம் இல்ல மாமா. நம்ம ஆசைப்படுற மாதிரி ஒண்ணு நடந்தா, எல்லார்க்கிட்டயும் சொல்லி சந்தோஷத்தை சேர் பண்ணிக்கலாம். மறக்கணும்னு நினைக்கிறதை, யாருக்கிட்டயும் சொல்லாம இருக்கிறதே நல்லது!"

"ம்ம்.. எனக்குத் தெரியாத ரகசியம் கூட உன்கிட்ட இருக்கா.?"

அவள் சிரித்துச் சமாளிக்க,‌ அவர்களின் அருகே வந்தான் திவாகர்.

"என்னாச்சுப் பார்கவ்? சிஸ்டர், ஏன் பாதிச் சாப்பாட்டுலயே வந்துட்டாங்க?" என விசாரிக்க, "ஒண்ணும் இல்லண்ணா. குருமால இருந்த மிளகாயைக் கடிச்சிட்டேன்‌. அதான், காரத்தைத் தாங்க முடியாம வந்துட்டேன்."

"அவ்வளவு காரமாவா இருந்துச்சு? எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியலயே?"

"அவளுக்கு நார்மல் காரமே, அதிகமா இருக்கிற மாதிரிதான் ஃபீல் ஆகும். ஒரு டம்ளர் காஃபிக்கு, அரை டம்ளர் சீனி போட்டுக் குடிக்கிற ஆளு.‌ அதுனால அப்படித்தான்!" எனப் பார்கவ் உரைக்க, "மாமா, உன்கிட்ட இப்ப கேட்டாங்களா.?" என்று பல்லைக் கடித்தாள் சீனி.

"உலகம் அறிஞ்ச ரகசியத்தை, நான் சொன்னதுதான் தப்பாப் போச்சாக்கும்? அதைவிடு, இதுக்குப் பதில் சொல்லு. அது எப்படி, இவ்வளவு இனிப்பு சாப்பிட்டும் உனக்குச் சுகர் வராம இருக்கு?"

"அடப்பாவி மாமா! நான் எப்ப பேசண்ட் ஆவேன்னு வெயிட் பண்ணுறியா.?" என அவனை விளையாட்டாய் அடிக்க, தூசியைத் தட்டிவிடுவதைப் போல் அவளின் கைகளைத் தட்டிவிட்டுச் சிரித்தான் பார்கவ்‌.

திவாகர் சிரித்தபடி அருகே நின்றிருக்க, தள்ளிநின்று அவர்களைப் பார்த்துவிட்டுத் தனக்கெனக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றான் நிருதி.

மனம் காரணக் காரியத்தோடு முணுமுணுக்க, 'ரெண்டே நாள்ல இங்க இருந்து கிளம்பிடுவ. அதுக்குள்ள ஏன், இவ்வளவு போராட்டம்? முடிஞ்சது எல்லாம், முடிஞ்சதாவே இருக்கட்டும்!' என்று மூளைத் தெளிவைக் கொடுத்து, துயிலின் வசம் இழுத்துச் சென்றது.

பேச்சின் இடையே பார்கவ்வின் கைப்பேசி ஒலிக்க, "யாரு மாமா?" என்றாள் சீனி.

"உன்னோட ஃப்ரெண்ட் தான்! ஊருக்கு வந்துட்டானு நினைக்கிறேன்!" என்றபடி தொடர்பை இணைக்க, "ஹலோ பார்கவ்.."

"சொல்லுமா, எங்க இருக்க?"

"பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன். எந்த ஏரியா? மண்டபம் பேர் என்னனு சொல்லுங்க, ஆட்டோல வந்திடுறேன்."

"நீ அங்கேயே இரு. நான் வர்றேன்." என்றவன் சீனியிடம் சைகையால் உரைத்துவிட்டு நகர்ந்தான்.

மறுபுறம் இருந்தவள்‍, "நீங்க வர்றதுக்கு எவ்வளவு டைம் ஆகும் பார்கவ்?"

"ஃபிப்டின் டூ டிவன்டி மினிட்ஸ். சாப்டியா டா.?"

"இன்னும் இல்ல."

"அப்ப, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல ஏதாவது சாப்பிடு. அதுக்குள்ள நான் வந்திடுறேன்."

"இல்ல, வேணாம்."

"ஏன்.?"

"எனக்கு, அங்க சாப்பிடணும் ப்ளீஸ்.."

இங்கு இருந்தவன் சிரித்து, "இப்பதான், சாப்பிட்டு முடிச்சோம். நாங்கதான் லாஸ்ட். சாப்பாடு இருக்கான்னு தெரியலயே?" என்றபடியே தீரஜின் இருசக்கர வாகனத்தில் கிளம்பினான்.

"என்ன இருக்குதோ, அது போதும்!" எனப் பதில் உரைத்தவளின் மீது, மேலும் காதல் அதிகரித்தது அவனிற்கு.

'இந்த அளவிற்குக் குழந்தை மனதுடன் இருப்பவளை விட்டு எப்படி விலக இயலும்?' என்ற எண்ணம் எழ, 'தனது உறவுகள், அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமே?' என மனம் தவிக்கவும் செய்தது.

ஜனனிக்கு.. பார்கவ்வின் ஊர் புதிய இடம் என்பதால், ஊடலை கருவியைச் செவியில் பொருத்தி, பேச்சுக் கொடுத்தபடியே பயணத்தைத் தொடர்ந்தான்.

மணி பதினொன்றைக் கடந்திருக்க, "எல்லாரும் போய்ப் படுங்கப்பா, காலையில கல்யாணத்துக்குச் சீக்கிரம் ரெடி ஆகணும்ல.?"‌ என்று அங்கங்கு கதை பேசிக் கொண்டிருந்த உறவுகளிடம் விஜயரங்கன் உரைத்துச் செல்ல, சீனியும் அறைக்குச் சென்றாள்.

மறுநாளிற்கான உடை மற்றும் ஆபரணங்களைச் சரிபார்த்து எடுத்து வைத்த கீதா, "இந்தாங்க பீபி டேப்லட்!" எனக் கணவரிடம் கொடுக்க, அதை விழுங்கிக் கொண்டார் சரவணன்‌.

கதவைத் திறந்து உள்ளே வந்த மகளின் சோர்ந்த முகத்தைக் கவனித்தவர், "சாப்டியா.?"

"ம்ம்.."

"சரி, எனக்கொரு பதில் சொல்லு."

"என்ன பதில்.?"

"கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு எடுத்திருக்க? விசாரிக்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியல."

"ம்மா.."

"நம்ம சொந்தத்துலயே ரெண்டு பசங்க இருக்காங்க.‌ அதுல ஒருத்தவங்க, உன்னைப் பத்திக் கேட்டாங்க.‌ பையன், காலையில கல்யாணத்துக்கு வருவானாம். பார்த்துட்டுச் சொல்லுறியா, பேசலாம்."

அன்னையை முறைத்த சீனி, "இதென்ன மாப்பிள்ளை பார்க்கும் வைபவமா? சும்மா இரும்மா, கண்டதையும் பேசிக்கிட்டு!"

"ஏன் சொல்ல மாட்ட? கல்யாண விசயம், கண்டதுனு ஆகிடுச்சா, உனக்கு? சரி சொல்லு, எப்பதான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்க? இல்ல, கடைசி வரைக்கும் இப்படியே இருக்கலாம்னு நினைச்சிருக்கியா.?"

"இருந்தா, என்ன தப்பு.?"

"என்ன தப்பா.? அடிச்சேனா பாரு! ஒரே பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தது, தப்பாப் போச்சு. அதான் இஷ்டத்துக்குப் பேசிட்டுத் திரியிற! உனக்கு ரெண்டு மாசம் தான் டைம். அதுக்குள்ள ஒரு பதிலைச் சொல்லு. இல்லேனா, நாங்க பார்க்கிற மாப்பிள்ளய கல்யாணம் செஞ்சுக்க.‌ அவ்வளவு தான்!"

"அம்மா.." என்றவள் ஏதேனும் உதவி கிட்டுமா எனத் தந்தையைப் பார்க்க,

"இதை, நான் பேசுனா‌ சரி வருமானு தெரியல.‌ அதான், உன்னோட அம்மா பேசுறா. எனக்குமே.. ஒரே வீட்டுக்குள்ள உன்னைக் கல்யாணம் செஞ்சுக் கொடுக்கிறதுல அவ்வளவா விருப்பம் இல்ல.‌ அதுனால தான்.. பார்கவ்வையும் சரணையும் நீ வேணாம்னு சொன்னப்ப, சரினு ஒத்துக்கிட்டேன். கீதா வருத்தப்பட்ட அப்பவும், சமாதானம் செஞ்சேன்‌.‌ அதுக்காக, உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைக்காத. ஒரு அப்பாவா, எனக்குனு கடமை இருக்குல சீனிமா..? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வா!" என்றவர் படுத்துக் கொள்ள, இயலாமையுடன் நின்றிருந்தாள் நிதன்யா.

மகளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுக் கீதாவும் படுக்கையில் விழ, தூக்கத்தைத் தொலைத்து, அறையில் இருந்த பால்கனிக்குச் சென்றாள் அவள்.

கைப்பிடிச் சுவற்றில் கரம்பதித்துக் கீழ்புறம் பார்க்க, நிருதி நின்றிருந்தான்.

இப்போது இல்லை, அவனை முதன்முதலாய்ப் பார்த்த தருணம் அது.

மேற்கே கதிரவன் மறைய தயாரான பொன் மாலைத் தருணம்...

குடியிருப்பில் இருந்த சிறுவர் சிறுமியருக்கு, வண்ண காகிதங்களில் பூக்களைச் செய்து கொடுக்க, அதனை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.

இரண்டாம் தளத்தில் இருந்தாள் அவள். குழந்தைகள், "நிருதி அங்கிள்.." என அழைத்ததின் மூலமாய் அவனது பெயரை அறிந்து கொண்டாள்.

"நிருதி.. பேர் வித்தியாசமா இருக்கே.?" எனச் சொல்லிப் பார்த்தவாறே அவள் கீழ்பக்கம் விழிகளைத் திருப்ப, அண்ணார்ந்து அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

'இவன் எதுக்கு நம்மளைப் பார்க்கிறான்?' எனச் சிந்தித்தவள் அப்போது தான் கவனித்தாள், தனது கரத்தில் இருந்த தேநீர் குவளை சற்றே சாய்ந்து சில துளிகள் சிந்தி இருப்பதை. அதில் ஒன்றிரண்டு துளிகள், அவன்மீது சிதறி இருக்கக்கூடும் என அனுமானித்தாள்.

'அச்சோ!' என்று மனம் அனிச்சையாய் பதறிட, 'மன்னிப்பு கேட்டு விடலாம்!' என அவள் வாய்த்திறந்த தருணம், அங்கிருந்து சென்று விட்டான் நிருதி.

'யார் இவன்? இதே அப்பார்ட்மெண்ட் தானா.? இல்ல, யாரு வீட்டுக்கும் கெஸ்டா வந்தானான்னு தெரியல? ச்சே.. காஃபியைச் சிந்திட்டு, ஒரு ஸாரிக்கூடச் சொல்ல முடியலயே.?' என்று எண்ணிக் கொண்டு இருந்தவளிற்கு, அடுத்த இரண்டு நாள்களில் மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவள் இருக்கும் தளத்திற்கு மாடிப்படிகளில் ஏறிச் செல்லும் போது, இறங்கிச் சென்றான் நிருதி.

சீனி.. எப்பொழுதும் எதையும் நிதானமாய்ச் செய்யக் கூடியவள். நடப்பதிலும் கூட ஒரே சீராக இயங்கும், அவளின் கால்கள். படிகளில் ஏறும் பொழுதும் அப்படித்தான்.‌ வியர்வை ஊற்றெடுப்பதோ, அதிகப்படியாய் மூச்சு வாங்குவதோ நிகழாது. அவளின்‌ உடல் வாகு, அதற்கு ஏற்றது போல்தான் அமைந்து இருந்தது.

ஆனால் அவளைக் கடந்து சென்றவனோ, ஆறு அடிக்கும் குறைவில்லாதவன். உயரத்திற்கு ஏற்றபடி, நீண்ட கால்கள்.‌ அவளின் வளர்ச்சிக்கு, சற்றே அண்ணார்ந்து பார்க்க கூடிய அளவில் இருந்தான். வேகத்திற்குப் பிறப்பெடுத்தவன் போலும், நொடியில் இரண்டு படிகளில் தாவி, கால் நிமிடத்தில் தரைத் தளத்திற்குச் சென்று விட்டான்.

'எப்பா.. இவ்வளவு வேகமா.?' என அவள்.. கீழே சென்றவனைப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது, அது நிருதி என.

கடந்த முறையைப் போலவே, தலையை நிமிர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்துச் சென்றான். அதனால்தான், முகத்தைக் காண முடிந்தது. இல்லையேல், யாரெனத் தெரிந்திருக்காது.

இதுவே அடுத்தடுத்தும் தொடர்ந்தது. இவள் பணியை முடித்துவிட்டு இல்லத்திற்குத் திரும்பும் நேரத்தில், அவன் வெளியில் கிளம்பிச் செல்வான். அது..‌ நாள் தவறாமல் நிகழ, தினமும் பார்த்துக் கொள்வது என்பது இயல்பாய் மாறிப் போனது. அத்தோடு, நிருதி மூன்றாம் தளத்தில் குடியிருப்பதையும் அறிந்து கொண்டாள் சீனி.

அவள், ஒவ்வொரு நாளும் ஆடவனைக் கண்டதும் புன்னகைக்க முயல்வாள்‌. அவனோ இஞ்சியை விழுங்கிவிட்டு வருவான் போலும். இறுக்கமான முகத்துடன் கடந்து செல்வான்.

இரு மாதங்கள், இப்படியே நகர்ந்து சென்றது. ஒரு பணியை இருபத்தோரு நாள்கள் தொடர்ந்து செய்தாலே, பழக்கமாகி விடும் என்பர்.‌ சீனிக்கு, அவனைக் காண்பது என்பது.. காலை எழுவது, இரவில் உறங்குவது போல் தினசரி நடவடிக்கையாய் மாறியது‌‌.

அன்றைய தினம்.. குடியிருப்பில் இருந்த வயதானவர் ஒருவருக்கு உடல்நிலை மோசமாகி விட, அவசர ஊர்தியின் ஆட்கள், மாடியில் இருந்து படிகளின் வழியாய் அவரைப் படுக்கையில் கிடத்தி கொண்டு வந்தனர்.

அதனால் இல்லத்திற்குச் செல்ல இயலாது, கீழ் தளத்திலேயே நின்று கொண்டாள் சீனி.

அவர்கள் பணியை முடித்து, அவசர ஊர்தி அங்கிருந்து கிளம்பிச் செல்லும் வரை.. பார்த்தபடி இருந்தாள். பெயர் அறியா அந்த முதியவருக்காக, இறைவனிடம் அவசரமாய் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டுத் திரும்ப, அவளின் பார்வையை நிறைத்தபடி எதிரே வந்து நின்றான் நிருதி.

சீனி.. 'என்ன?' என்பது போல் பார்க்க, வழியை மறைத்து நிற்பதைக் கண்களால் சுட்டிக் காட்டினான்.

அவன் முதன்முதலாய் அவளிடம் உரையாடியது, விழி மொழியாகத்தான்.

அனிச்சையாய் சீனியின் முகமும் இதழ்களும் மலர, சட்டென்று ஒதுங்கி நின்று, அவனிற்கு வழி விட்டாள்.

கடந்து சென்றவன்.. நிதானித்து அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துச் செல்ல, மௌனமாய் இருந்த மனம் ஏதோ ஒரு மெல்லிசையைச் சிதறவிட்டுச் சிணுங்கிச் சிரித்தது.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 7

பணிக்குச் செல்ல தயாராகி வந்த நிதன்யா, மேசையின் மீதிருந்த அட்டைப் பெட்டியை வியப்புடன் நோக்கினாள். காரணம்.. அதில் இருந்த, ரங்கா சில்க்ஸ் என்ற பெயரும் அதன் வடிவமைப்பும்.

மதுரையில் இருக்கும் அவர்களது கடையில் இருந்து வந்திருந்தது, அது.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த பார்கவைக் கண்டவள், "என்ன மாமா இது.?"

"சேரி.."

"எனக்கா.?"

"இல்ல."

அவளின் விழிகளில் ஆராய்ச்சி உருவெடுக்க, "பின்ன.?"

தேநீர் கோப்பையை அவளிடம் தந்தவன், பதில் அளிக்காது சிரித்துவிட்டு நகர்ந்தான். பெட்டியைப் பிரித்த சீனி, அதிலிருந்த ஆகாயவண்ண பட்டுப் புடவையைத் தொட்டுப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

அதற்குள், "தனு, தேங்காய் சட்னி அரைச்சிட்டேன். தோசை ஊத்திக்கலாமா, இட்லி ஊத்தி வச்சிடவா.?" எனப் பார்கவிடம் இருந்து வினா வந்தது.

"தோசையே ஊத்திக்கலாம்." என்றவாறே புடவையைப் பத்திரப்படுத்தி விட்டு, தேநீரை அருந்திக் கொண்டு அவனிடம் சென்றவள், "சேரி எனக்கு இல்லேனா, வேற யாருக்கு?"

"ஒருத்தருக்காக வாங்கினேன்."

"அதான்.. யார் அந்த ஒருத்தர்?"

"ஆஃபிஸுக்கு டைம் ஆச்சு. அப்புறம் பேசுவோமா?"

"ஓஹோ.. அப்படினா, இப்ப சொல்ல மாட்ட? சரி விடு, நான் சரணுக்குக் கால் பண்ணி கேட்டுக்கிறேன்." என அவள் மாமனின் இரண்டாம் மகனிற்கு அழைப்பு விடுக்க, "ஏய் ஏய்.. வேண்டாம்‌." என்று சீனியின் கரங்களைத் தடுத்துப் பிடித்தான் பார்கவ்.

"ஏன்.. இவ்வளவு பதட்டம்.?"

"அது.." என அவன் தயங்க,‌ "ம்ம்..?‌" என்று இரு புருவங்களையும் உயர்த்தி வினவினாள் சீனி.

"சொல்லு மாமா.."

"உனக்குனு சொல்லிதான் சேரியை அனுப்ப சொன்னேன்‌."

"ஓ.. அப்ப, நான் கட்டிக்கலாம்!"

"நோ!"

"என்ன‌ நோ? எனக்குப் பிடிச்சிருக்கு, நான் கட்டப் போறேன்."

"ஹேய்.. வேணாம். அது, ஜனனிக்காக வாங்கினது!"

"அப்படி வா, வழிக்கு. என்ன விசயம்? என்னோட ஃப்ரெண்டுக்கு, நீ ஏன் சேரி வாங்கி இருக்க?"

"நெக்ஸ்ட் வீக், அவளுக்குப் பர்த்டே வருதுல. அதான் கிஃப்ட் பண்ணலாம்னு‌."

"நானே, அவளுக்கு இதுவரை கிஃப்ட் எதுவும் கொடுத்தது இல்ல. உனக்கு எதுக்கு, இவ்வளவு ஆர்வம்.?"

"நீ கொடுக்கிறது இல்லேல, அதான்.."

"அவ எனக்கு ஃப்ரெண்டாகி நாலு வருசம் ஆகுது. உனக்கு, ஒரு மூனு வருசமா தெரியும்.‌ இதுவரைக்கும் இல்லாம, இப்ப மட்டும் என்ன.?"

"அவளுக்கு யாரும் இல்லனு சொன்னேல?"

"அதை எப்பவோ சொல்லிட்டேனே?"

"அதான் கிஃப்ட் பண்ணலாம்னு."

"ஓஓ.. கிஃப்ட் கொடுக்க, வேற பொருளே கிடைக்கலயா உனக்கு? இருபத்து அஞ்சாயிரத்துக்குப் பட்டுப்புடவை வாங்கி இருக்க? ரொம்பக் காஸ்ட்லியான‌ கிஃப்டா இருக்கே, மிஸ்டர் பார்கவ்? உன்னோட அத்தை மக, எனக்குக் கூட இப்படிக் கிஃப்ட் பண்ணது இல்லயே?"

"தனு.!" என அவன் இயலாமையில் அழைக்க, நக்கலாய்ச் சிரித்தாள் அவள்.

"சென்னைக்கு வந்ததும் தனுனு கூப்பிடுறதைப் பார்த்து.. சரி, வெளியூருக்கு வந்ததுனால ஏதோ கொஞ்சம் மரியாதையா பேசுறனு நினைச்சேன். அச்சோ..‌ மாமாக்கு, நம்ம மேல எவ்வளவு பாசம்னு புல்லரிச்சுப் போனேன். ஆனா, இப்ப இல்ல தெரியிது.. அந்தத் தனு எங்க இருந்து வந்திருக்குனு."

அவன்.. தவறு செய்து தாயிடம் அகப்பட்ட குழந்தையாய் விழிக்க, "சொல்லு! எப்ப இருந்து நடக்குது, இது? எனக்கு ஃப்ரெண்டுனு ஒருத்தி இருக்காளே, அந்தப் பக்கியும் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லல?"

"ஹேய்.. ஹேய்.. அவளுக்கே இன்னும் தெரியாது."

"என்ன தெரியாது?"

"அவளோட பர்த்டே அன்னைக்குத்தான், கிஃப்ட் கொடுத்துப் பிரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்."

"அடப்பாவி மாமா.."

"நானே, உன்கிட்ட பேசலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள, நீ சேரியைப் பார்த்துட்ட!"

"நான் பார்த்தேனா? என் கண்ணுல பட்டு.. நானே கேட்கணும்னு, கரெக்டா ஹால்ல வச்சு, பிளான் எல்லாம் போட்டிருக்க.‌ சோம்பேறி, அது எப்படி, நல்லவன் மாதிரியே பேசுற நீ? இதுல, அப்புறம் பேசலாம்னு‌ பந்தா வேற."

அவளைக் கெஞ்சலாய்ப் பார்த்தவன், "தனு..தனு.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணேன்.”

"நீ.. என்னை என்ன வேலைப் பார்க்கச் சொல்லுறனு தெரியிதா.?"

"ஹேய்.. எனக்கு, உன்னை விட்டா வேற யாருடா இருக்கா செல்லம்.?"

"ஆமா.. செல்லம், டானு கொஞ்சி பேசி, நல்லா ஐஸ் வை!"

அவன் சிரிக்க, "ஆனா, சும்மா எல்லாம் செய்ய முடியாது!"

"லஞ்சம் கேட்கிறியா.?"

"அப்புறம், இங்க‌ என்ன ஃபிரீ சர்வீஸ்னு போர்டா மாட்டி வச்சிருக்கு?"

தலையசைத்தவன், "சரி, என்ன வேணும்?"

"ம்ம்.." என இரண்டு நொடிகள் சிந்தித்தவள், "இப்ப எதுவும் எனக்குத் தேவையா இல்ல. தோணுறப்ப கேட்கிறேன்.‌ என்ன, செய்யிவ இல்ல.?"

"உனக்குச் செய்யாமலா?" என அவன் புன்னகைக்க, "சரி, ஜனனிக்கிட்ட பேச ஏதாவது பிளான் வச்சிருக்கியா.?"

"இல்ல.‌ இனிதான் யோசிக்கணும். நீ எப்ப விஷ் பண்ணுவ?"

"எப்பனா?"

"காலையில எழுந்தா, இல்ல‌ நைட்டே விஷ் பண்ணிடுவியா.?"

"கரெக்டா.. நைட் டுவல்வ் ஓ கிளாக்.‌ நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆனதுல இருந்து, அவளுக்கு முதல்ல விஷ் பண்ணுறதே நான்தான்."

"இந்த வருசம் விஷ் பண்ணாத.."

"என்ன விளையாடுறியா.? உனக்கே தெரியும், அவ ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு. என்னைத் தவிர, ஃப்ரெண்ட்ஸுனு சொல்லிக்கக் கூட யாரும் இல்ல. ஏமாந்து போயிடுவா மாமா. என்னால முடியாது."

"ப்ளீஸ் செல்லம். இந்த வருசம். நான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுறேனே..?"

"இதெல்லாம் அநியாயம் தெரியுமா? அவ, என்கிட்ட இதைத் தவிர வேற எதையுமே எதிர்பார்க்க மாட்டா.‌"

"அதை, எப்பவும் உன்னால கொடுக்க முடியும்னு நினைக்கிறியா?‌ ஒரு முறை இல்லேனா‌ இன்னொரு முறை, நீ மறந்து போக வாய்ப்பிருக்கு. ஆனா, நான் அப்படி இல்ல. கடைசி வரைக்கும் அவளோட இருப்பேன்."

மாமன் மகனை முறைத்த சீனி, "டைலாக் எல்லாம் நல்லாதான் பேசுற. அவ்வளவு கான்ஃபிடன்ஸா உனக்கு.?"

"ஸுயர்."

"நம்ம வீட்டுல என்ன சொல்லுவாங்கனு நினைச்சுப் பார்த்தியா.?"

"என்ன சொன்னாலும் பரவாயில்ல. ஐ லவ் ஹெர். அவ்வளவு தான்!"

"என்னமோ போ! எங்க ஃப்ரெண்ஷிப்பை, வெட்டி விடாம இருந்தா சரி. அப்படி ஏதாவது நடந்துச்சு, நானே உன்னோட லவ்வுக்கு எமனாகிடுவேன் பார்த்துக்க!" எனப் பேச்சை முடித்த சீனி, தோசை வார்க்கத் துவங்கினாள்.

இருவரும் உணவை உண்டுவிட்டு கிளம்ப, கீழ்தளம் நோக்கி இறங்கியவளின் நெஞ்சம் ஏனோ குறுகுறுத்தது.

காதல் என்ற சொல்லை, தவறான வார்த்தைப் பட்டியலில் சேர்த்து வைத்திருக்கின்றனர், அவளது குடும்பத்தின் பெரியவர்கள். அதை அறிந்தும் கூட, பார்கவ் ஜனனியை நேசிப்பது.. ஒருபுறம் மன கலக்கத்தைக் கொடுத்தாலும், மறுபுறம் சற்று மகிழ்ச்சியாகக் கூட இருந்தது.

பெரியவர்களின் விருப்பத்தின் பெயரில், மாமன் மகனை மணந்து கொள்வதில் சீனிக்குப் பிடித்தம் இல்லை. திருமணம் நடந்தால், தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் இனிமையான உறவு சிதைந்து போகும் என்றே எண்ணினாள். அந்த வகையில் மகிழ்ச்சியே அவளிற்கு.

'அப்படி என்னதான் இருக்கிறது, இந்தக் காதலில்? அது, எப்படி இருக்கும்? எவ்வாறு அதை உணர்வது? எம்முறையில் தெரிந்து கொள்வது.?‌' என வரிசையாய் வினாக்கள் அவளுள்.

கால்கள்.. படியில் தானாய் இறங்கிக் கொண்டிருக்க, கண்கள் அனிச்சையாய் நிருதியைத் தேடியது.

'வழக்கமா ஈவ்னிங் தான அவன் வருவான்? இப்ப என்ன புதுசா, காலையிலயே தேட ஆரம்பிச்சிட்ட? நீ, போற போக்கே சரியில்ல!‌' எனப் பெண்ணிற்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வு எச்சரிக்க, ஆடவனைப் பற்றிய சிந்தனையை விடுத்துப் பணிக்குச் சென்றாள்.

அந்தத் தெளிவு எல்லாம், மாலை வரை தான் நீடித்தது. மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போல், மாலை ஆனதும் அவனது நினைவு மனதை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டது.

'சரியாய் முகம் பார்த்து, இதுவரை ஒருமுறை கூடப் பேசியது இல்லை! பின், எதற்காக இவ்வளவு ஆர்வமும்? எதிர்பார்ப்பும்?' என மூளை வினா எழுப்பிட, ஏதோ தவறு செய்வது போலக் குற்ற உணர்வு ஆட்கொண்டது.

ஆனால், சிறிது நேரம் மட்டுமே அது நீடித்தது. தன்னைக் கடந்து படிகளில் இறங்கிச் சென்றவனை, அன்றைய தினம் தன்னை மறந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சீனி.

குடியிருப்பை விட்டு வெளியே செல்லாமல், எவருடனோ பேசிக் கொண்டிருந்தான். தலையைத் தாழ்த்திப் பார்த்தாள். எதிரே திவாகர் நின்றிருந்தான். இருவரின் சிரிப்பு சத்தமும், காற்றில் மிதந்து வந்து செவிகளை அடைந்தது‌‌. அதில் நிருதிக்கு உரிமையானதைக் கண்டறிய முயன்று, தோற்றாள்.

நான்கு நாள்கள் கடந்து சென்றது. அன்று நண்பர்கள் இருவரும் இணைந்து படிகளில் இறங்கினர். எதிரே சீனியைக் கண்டதும் நிருதி ஒதுங்கிக் கொள்ள, திவாகர் மட்டும் முதலில் சென்றான்.

அவள் மேல்பக்கம் ஏறியதும்.. மற்றவனும் இறங்கி செல்ல, "இந்தச் சர்ட்டை போடாதனு சொன்னா, கேட்கிறியா நீ.?" என்ற பேச்சொலி கேட்க, திரும்பிப் பார்த்தாள் சீனி‌.

நொடிப் பொழுதில் நிருதியின் விழிகள் அவளை எதிர்கொள்ள, அனிச்சையாய் மெலிதான புன்னகை எட்டிப் பார்த்தது இருவரது இதழ்களிலும். இம்முறை புன்னகையில் உரையாடிவிட்டுச் சென்றான்.

'என்னைப் பார்த்து சிரிச்சானா என்ன? இதுதான் அவன் குரலா? நாட் பேட். எப்பவும் உம்முனு இருக்கிறவன், இன்னைக்குப் புன்னகை மன்னனா இல்ல இருக்கான்? என்ன காரணம்னு தெரியலயே.?' என மனம் அவனை எண்ணி குறுகுறுக்க, 'இவ திருந்த மாட்டா!' என்று அமைதியாய் இருந்து கொண்டது மூளை.

பின்னர்.. பார்க்கும் பொழுதெல்லாம், ஏனோ அவன் தன்னைப் பார்த்துப் புன்னகைப்பதாகவே தோன்றியது சீனிக்கு. இவளுமே.. முன்பு போன்று தயக்கம் ஏதுமின்றிப் புன்னகை சிந்தினாள்.

'ஏன்? ஏதற்கு? எப்படி? சரியா? தவறா?' என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், நிதன்யாவிற்கு நிருதியைப் பிடித்து இருந்தது.‌

தன்மீது ஒருவரின் பார்வை தவறான முறையில் பதிந்தால், சட்டென்று அறிந்து கொள்ளும் பெண் மனது. அவ்வகையில் அவனின் பார்வைகள், தேடல் என்று எதுவும் இல்லாது, வெகு இயல்பாய் அவளை உரசிச் சென்றது.

அவள் அறிந்த அவனின் ஒரே விஷயம், அந்த விழிகளின் மொழி மட்டுமே!

சில தருணங்களில் கண்களால் விசாரிப்பான். சில சமயம் மெச்சுதல் எட்டிப் பார்க்கும். சில முறை ஏக்கங்கள் நிறைந்திருக்கும்.‌ அத்தோடு எதிர்பார்ப்பும் கலந்து இருக்கும்.

ஆனால் இருவருமே.‌. அந்தப் பார்வைப் பரிமாற்றத்தைக் கடந்து அடுத்த அடி முன்னேற முயலவில்லை.

சீனிக்குத் தனது குடும்பத்தை எண்ணி தயக்கம் இருந்தது. அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது எது என, அவன் மட்டுமே அறிவான்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 8


பெண்கள் விடுதியில்.. தான் தங்கியிருந்த அறையில், நள்ளிரவில் கைப்பேசியைப் பார்த்தபடி இருந்தாள் ஜனனி.

தோழியிடம்‌ இருந்து வாழ்த்து பெறுவதற்காகக் காத்திருக்க, பார்கவ்விடம் இருந்து அழைப்பு வந்தது. அவனது எண் தெரியும் என்றாலும், இதுவரை தவிர்க்க இயலாத தருணங்களில் இருமுறை மட்டுமே பேசி இருக்கிறாள்.

நேரில் சந்திக்கும் பொழுது, சில பொதுவான பேச்சுகள் மட்டுமே நடைபெறும். அதுவும், நான்கு வார்த்தைகளைத் தாண்டியது இல்லை.

பார்கவ்வின் விழிகள் அவ்வப்போது தன்னைத் தீண்டிச் செல்வதை அறிவாள் தான், ஜனனி. ஆனால், இதுநாள்‌ வரை அதைப் பெரியதாய்க் கண்டு கொண்டது இல்லை. இளமையின் எதிர்பார்ப்பு எனக் கடந்து வந்திருக்கிறாள்.

எனினும், தற்போதைய அவனின் அழைப்பு ஒருவித பதற்றத்தைக் கொடுத்தது.

அதேநேரம், 'தனுவோட மாமா ஒண்ணும், தப்பானவரு இல்லையே? வலுக்கட்டாயமா, பேச கூட முயற்சி செஞ்சது இல்ல.‌ அப்புறம் எதுக்கு, நாம பதறணும்?' என்ற வினாவும் சிந்தைக்குள் எழுந்து அவளை இயல்பாக்கியது.

'ஒருவேள ‌தனுதான் கூப்பிடுறாளோ என்னவோ?‌ ரெண்டு பேரும், ஒரே வீட்டுல தான இருக்காங்க? அப்படித்தான் இருக்கும். இல்லேனா, சம்பந்தமே இல்லாம அவரு எதுக்கு இந்த டைம்ல நமக்குக் கால் பண்ணப் போறாரு.?' எனவும் தோன்றிட, தயக்கம் விடுத்துப் பேச்சைத் துவக்கினாள்.

"ஹலோ.."

"ஹேப்பிப் பர்த்டே ஜனனி!" என்று பார்கவ் மறுபுறம் வாழ்த்துத் தெரிவிக்க..‌ அனிச்சையாய், "தேங்க்ஸ்!" என உரைத்தாள்.

"பர்த்டே பேபி, தூங்கலயா.?"

"இனிதான்..‌ நீங்க என்ன இந்த டைம்ல?"

"தனுதான், உனக்குப் பர்த்டேனு சொன்னா.‌ அதான் விஷ் பண்ணலாம்னு கால் செஞ்சேன்."

"ஹோ..‌ அவ,‌ இல்லையா?"

"தூங்குறா. இந்நேரம் வரைக்கும் முழிச்சிட்டு தான் இருந்தா. ஆஃபிஸ்ல ஒர்க் அதிகம் போல.‌‌ டையர்டுல தூங்கிட்டா!‌" என அவன் சமாதானம் உரைக்க, "சரிங்க!" என்றதோடு முடித்துக் கொண்டாள் ஜனனி.

மறுநாள் காலையில் தனது விடுதி வாயிலில் வந்து நின்ற சீனியை முறைத்துவிட்டு, பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள் அவள்.

"ஹேய்.. நில்லுடி!" என்றவாறே அவளும் சேர்ந்து கொள்ள, "ஆளைப் பாரு. அப்படி‌ என்ன தூக்கம்‌ வேண்டிக் கிடக்கு? ஒருநாள் முழிச்சிருந்தா, குறைஞ்சா போயிடுவ?"

"இதெல்லாம் அராஜகம் தெரியுமா.? இப்படி ‌மிரட்டுற?"

"நானா கேட்டேன்? நீதான, நைட் விஷ் பண்ணி எனக்குப் பழக்கி விட்ட?"

"அதான்.. என்னோட மாமா விஷ் பண்ணானே?"

"அவரும் நீயும் ஒன்னாடி?"

"அதைத்தான் நானும் சொன்னேன். ஆனா அந்த லூசு, உனக்குப் பதிலா கடைசி வரைக்கும் ஜனனிக்கூட இருப்பேன்னு‌ பினாத்திட்டு இருக்கு."

"என்னடி சொல்லுற?" என்று அவள் குழப்பத்துடன் வினவ, "அதை அப்புறம் விளக்கமா சொல்லுறேன். இப்ப வா, கோவிலுக்குப் போகலாம்."

"ஹேய்.. ஆஃபிஸ் போகணும்."

"பெரிய ஆஃபிஸ். ரெண்டு பேருக்கும் லீவ் சொல்லிட்டேன்."

"என்ன.. இன்னைக்கு எல்லாம் அதிரடியா இருக்கு?"

"விஷ் பண்ணலனு கோபமா இருக்கேல?‌அதான், அப்படியே கூல் பண்ணலாம்னு.."‌ என்று உரைக்க, சிரித்தாள் ஜனனி.

இருவரும் பேருந்து நிலையத்தை அடைய, வாகனத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தான் பார்கவ்.

அவள் கேள்வியாய்ப் பார்க்க, "இன்னைக்கு, மாமாதான் நமக்கு டிரைவர். வா, போகலாம்!" என அழைத்துச் சென்றாள் சீனி.

அருகில் இருந்த கோவிலில் ஜனனியின் பெயரில் அர்ச்சனை செய்து,‌ இறைவனையும் அவரது துணைவியாரையும் தரிசித்து விட்டு வந்தனர்.

சுற்றுப் பிரகாரத்தில் அமர, "உட்காருங்க, நான் பிரசாதம் வாங்கிட்டு வர்றேன்!" என்று இருவருக்கும் தனிமையைக் கொடுத்தாள் நிதன்யா.

அதை உணர்ந்த பார்கவ்.. அடுத்த நொடியே ஜனனியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து, வண்டியில் வைத்திருந்த பரிசை எடுத்துச் சென்றான்.

தன்முன் நீட்டப்பட்ட அட்டைப் பெட்டியை அவள் புரியாமல் பார்க்க, "பர்த்டே பேபிக்கு கிஃப்ட்!" என்றான் அவன்.

ஏனோ மனம் காரணம் இன்றிப் படபடக்க, தோழியைத் தேடினாள் அவள்.

"தனு வர்றதுக்கு டைம் ஆகும். முதல்ல, நீ இந்தக் கிஃப்டை வாங்கிக்கோ!"

"எதுக்குக் கிஃப்ட் எல்லாம்? எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. வேணாம்."

"ஜனனி ப்ளீஸ்.." எனக் கெஞ்சலாய்ப் பார்த்தவனிற்கு, ஏமாற்றத்தை தர அவள் விரும்பவில்லை.‌ சிறு வயதில் தாய்த் தந்தையரை இழந்து, அரசாங்க உதவியுடன் ஆசிரமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ.. ஏமாற்றங்களின் சாயல் அவளது வாழ்வில் அதிகம். அதனால், அதை எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பாள் ஜனனி.

விசேஷ தினங்களில், பெரும் பணக்காரர்கள் அங்கு வந்து பரிசுகளைக் கொடுத்துச் செல்வது இயல்பு என்பதால், அந்த மனநிலையிலேயே அதை வாங்கிக் கொண்டாள்.

"பிரிச்சுப் பாரு."

"இல்ல, தனு வரட்டும்."

"நீ பாரு, அவ‌ வருவா.." என மீண்டும் வற்புறுத்த, வேறு வழியின்றித் திறந்து பார்த்தவளிற்கு மூச்சு அடைத்தது.

பட்டுப்புடவை எல்லாம், அவள் கனவிலும் எண்ணாதது. வேலைக்குச் செல்லத் துவங்கி பொருளாதார நிலை மேம்பட்ட போதிலும் கூட, ஏனோ அதன் மீது ஆசை உண்டாகவில்லை. கண்டதும் அறிந்து கொண்டாள், அதன் விலை அதிகம் என்று.

"எதுக்குச் சேரி? அதுவும்..?" எனத் திணறலுடன் நிறுத்த, "மத்த எதை வாங்கித் தந்தாலும், என்னோட மனசு உனக்குப் புரிய வாய்ப்பில்ல. ஐ லவ் யூ, ஜனனி. இது, உனக்காக நான் வாங்கின முகூர்த்தப் புடவை." என்று நொடியில், தனது மனதைப் பட்டென்று உரைத்து விட்டான்.

அவளிற்கு எதுவுமே கருத்தில் பதியவில்லை. கண்கள் ஏனோ காரணம் இன்றிக் கலங்கிட, சட்டென்று எழுந்து கோவிலில் இருந்து வெளியேறினாள்.

திகைத்த பார்கவ், நிதன்யாவிற்குக் கைப்பேசியில் உரைத்துவிட்டு, ஜனனியைப் பின்தொடர்ந்து சென்றான்.

அவள் வேறு எங்கும் செல்லாது வெளியிலேயே நின்று கொள்ள, சீனியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

தன்னை முறைத்த தோழியைக் குழப்பத்துடன் பார்த்தவள், "என்னாச்சு‌?"

"உனக்குத் தெரியாதுனு பொய் சொல்லாத தனு."

"ஏய்.. நிஜமாவே தெரியல.‌ எதுக்கு இப்படி ரெண்டு பேரும் வந்து நிக்கிறீங்க?" என அவள் பார்கவ்வைப் பார்க்க, புடவையை நீட்டினாள் ஜனனி.

"அட.. அவசரக்குடுக்கை மாமா. உன்னை யாரு, அதுக்குள்ள தரச் சொன்னது.? நான் வர்ற வரைக்கும், வெயிட் பண்ணக் கூடாது.?"‌ என்று வினவும் பொழுதே, "எனக்கு யாரும் இல்ல, அதுனால கேட்டதும் ஓகே சொல்லிடுவேன்ற எண்ணத்துல தான, உங்களுக்கு இந்த நினைப்பு வந்திருக்கு.?‌" எனத் தனது இயலாமையின் நிலையைச் சுட்டிக் காட்டினாள் மற்றவள்.

"ஏய்.. என்ன பேச்சுப் பேசுற? அடிச்சேனா பாரு! என்னோட மாமாவைப் பார்த்தா, எப்படித் தெரியிது? அவனை உனக்கு மூனு வருசமா‌ தெரியும்ல? இதுவரைக்கும் எந்தப் பொண்ணுக் கிட்டயாவது எல்லை மீறி பேசிப் பார்த்திருக்கியா? என்னமோ, உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிற மாதிரி பேசுற? வேண்டாம்னா, நோனு சொல்லிட்டுப் போ!‌ அதுக்கு அப்புறமும் வந்து, உன்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணா, சொல்லு! அதை விட்டுட்டு.." என்று பேசிக் கொண்டே வந்த சீனி, கண்ணீர் ததும்ப நின்றிருந்த தோழியைக் கண்டு அமைதியானாள்.

பார்கவ் எப்பொழுதோ அங்கிருந்து சென்றிருந்தான். 'தன்னைத் தவறாய் எண்ணி விட்டாளே?' என்ற‌ வேதனை அவனுள்.

மகிழ்ச்சியாய் துவங்கிய அன்றைய தினம், வேதனையுடன் நிறைவடைந்தது. அதே மனநிலையில் குடியிருப்பிற்கு வந்த சீனிக்கு, மேலும் மன அழுத்தத்தைத் தந்தது, உறவுகளின் மூலம்‌ வந்த செய்தி.

பார்கவ்‌ புடவை வாங்கியதை.. சரணின் மூலமாய் அறிந்த வீட்டுப் பெரியவர்கள், இருவருக்கும் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து, இளையவர்களிடம் பேசினர்.

சீனிக்குத் தலை வெடிக்காத குறைதான். மாமன்‌ மகனிடம் கொண்டிருக்கும் அன்பு, தோழியுடனான நட்பு, குடும்பத்தாரின் விருப்பம் என மூன்றுக்கும் இடையே திரிசங்கு நிலையில் சிக்கித் தவித்தாள்.

இதற்கிடையில் ஜனனியுமே.. தான் சற்று அதிகப்படியாய் பேசிவிட்டதை உணர்ந்து, சீனியிடம் மன்னிப்பை வேண்டிட, "எனக்கு ஒண்ணும், உன்னோட ஸாரி வேண்டாம். இதுனால, நம்ம ஃப்ரெண்ட்ஷிப் அஃபெக்ட் ஆகப் போறது இல்ல.‌ உன் ஸாரிய, என் மாமாக்கிட்ட சொல்லு. அவன்தான் சோகமா மூஞ்சியை வச்சுக்கிட்டுத் தேவதாஸ் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான்!‌" என்று விட்டாள்.

ஜனனிக்கு, அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட மனமில்லை. இருக்கும் ஒரே தோழிக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பாது, பார்கவ்விடம் பேசினாள்.

"ஸாரி.." என்றவளிற்கு அவனிடம் இருந்து வந்த மறுமொழியும் மன்னிப்பு வேண்டலே.

"நீங்க எதுக்கு ஸாரி கேட்கிறீங்க.?" என அவள் வினவ, "நியாயமா, நான்தான் மன்னிப்புக் கேட்டிருக்கணும். என்னோட விருப்பம் தான் பெருசா தெரிஞ்சதே தவிர, உன்னோட மனநிலை எப்படி இருக்கும்னு யோசிக்க மறந்துட்டேன்."

அவனது பதிலில் சற்றே ஆசுவாசமான ஜனனி, "ஹப்பா.‌. இப்பதான் நிம்மதியா இருக்கு. ஆக்சுவலி, எனக்கு ஸாரி கேட்கிறதுல உடன்பாடு இல்ல. உங்க முறைப் பொண்ணு பேசுன பேச்சாலதான்.."

"போனா போகுதுனு, ஸாரி சொன்னியாக்கும்.?" என்று இடையே புகுந்து வினவினான்.

"ஆமா.. வேறவழி? அந்தச் சீனிடப்பா, அப்புறம் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டே சுத்துவா. என்கிட்ட, வார்த்தையை எண்ணி எண்ணி‌ வேற பேசுவா.‌ நானா நீங்களானு கேட்டா, உங்களைத்தான் சூஸ் பண்ணுவா. ஆனா, எனக்கு என்னோட ஃப்ரெண்ட் வேணும்."

மெலிதாய்ச் சிரித்தவன், "பட், ஐ லவ் யூ ஜனனி. அவளுக்கு நாம ரெண்டு பேருமே ஒண்ணுதான். நாம சேர்ந்தா, முதல்ல சந்தோஷப்படுற ஆள் அவளாதான் இருப்பா. புடவை, தனுக்கிட்ட தான் இருக்கு‌. நல்லா யோசி. ஒருவேளை உனக்கு ஓகேனா, அவக்கிட்ட இருந்து வாங்கிக்கோ.‌ நான் புரிஞ்சிப்பேன்.‌ இதுக்கு மேல, உன்னை டிஸ்டர்ப் பண்ண விரும்பல." என்றுவிட்டுச் செல்ல, ஜனனிதான் குழம்பிப் போனாள்.

அதன் பின்னர்ப் பார்கவ், அவளிடம் மறைமுகமாகக் கூட அதைப் பற்றிப் பேசவில்லை.‌ சந்திக்கும் வாய்ப்பு அமையும் பொழுதும், நட்பின் எல்லையைத் தாண்டாது நின்று கொண்டான்.

விஜயரங்கன் மதுரையில் இருந்து, "ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. நிச்சயத்தை முடிச்சிடலாம்!" எனப் பெயரன் பெயர்த்தி இருவரையும் அழைக்க, சீனியை விட்டு தான் மட்டுமாய்ச் சென்றான் பார்கவ்.

பெரியவர்கள் என்னவென்று விசாரிக்க, "எனக்கு, சீனியைக் கல்யாணம் செஞ்சுக்கிறதுல இஷ்டம் இல்ல. நான், வேற பொண்ணை விரும்புறேன்!" என்று உரைத்து, அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

"யாருடா, அந்தப் பொண்ணு.?"‌ எனக் கிருஷ்ணன் மகனிடம் வினவ,‌ ஜனனியின் முடிவு தெரியாததால். பதில் சொல்ல இயலாத நிலையில் நின்றான். பார்கவ்வின் செயல்.. பெரியவர்களிடம் சினத்தை உருவாக்க, குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிக்கத் துவங்கியது.

நடந்த நிகழ்வுகளால், நிருதியைப் பற்றிய சிந்தனையைச் சற்றே மறந்திருந்தாள் சீனி. அவனின் நினைவுகளைத் தூண்டி, ஏமாற்றத்தையும் வலியையும் பரிசாய் அளிப்பதற்காகவே வந்து சேர்ந்தது, அந்த நாளும்.

 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 9

ஆறுமாத காலம் பல்வேறு மனப் போராட்டங்களுடன் கடந்து சென்றிருந்தது.

பார்கவ்வின் கண்ணியமான நடவடிக்கை ஜனனிக்குப் பிடித்துவிட.. அவன் காதலைத் தெரிவித்த இரண்டு மாதங்களிலேயே தோழியிடம் தனது விருப்பத்தைச் சொன்னாள்.

அவளின் சம்மதம் கிடைத்ததும், குடும்பத்தாரிடம் ஜனனியைப் பற்றி உரைத்து விட்டான். ஆனால் பெரியவர்கள் தான், அந்தக் காதலை ஏற்க தயாராக இல்லை.

ஜனனி யாரும் அற்றவள் என்பதே, அவர்கள் மறுக்கப் பெரும் காரணமாய் இருந்தது. கிருஷ்ணன் மகனைப் பேசவே அனுமதிக்காத நிலையில், மூவறுபது நாள்கள் காத்திருந்து பொறுமை இழந்தான் பார்கவ்‌.

இறுதியாய்.. ‌நேசித்தவளைக் கரம்பற்ற முடிவு எடுத்தவன், அதனை முதலில் உரைத்தது நிதன்யாவிடம் தான்.

திகைத்தவள், "மாமா, என்ன விளையாடுறியா.?"

"இல்ல தனு. இதுக்கு மேலயும் வெயிட் பண்ணுறது வேஸ்ட்.‌ அத்தைக்கு வாக்குக் கொடுத்திட்டேன்னு சொல்லி, அப்பா என்னைப் பேசவே விட மாட்டிறாரு.‌ நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்யணும்கிறது தான், அவங்க எண்ணம். நான் காத்திருக்கிறதால உன்னோட, சரணோட மேரேஜ் எல்லாம் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கு. அதைவிட, இப்பவரை நான் மனசு மாறிடுவேனு அத்தையும் நினைச்சுட்டு இருக்காங்க. அவங்களுக்கு, இதுக்கு மேல நம்பிக்கை கொடுக்க விரும்பல. இந்த முடிவு தான், சரி.‌ இதே கோபத்தோட எப்பவும் இருந்துட மாட்டாங்க, நிச்சயமா எல்லாரோட மனசும் மாறும்!

ஆனா, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்.‌ ஜனனி, இதுக்குச் சம்மதிக்க மாட்டா. அவளுக்காக, நீ எங்கக்கூடவே இருந்து கல்யாணத்தை நடத்தணும் ப்ளீஸ்.." எனக் கேட்டுக் கொள்ள, மாமன் மகனிற்காகவும் தோழிக்காகவும் சம்மதித்தாள் சீனி.

சரணிடம் உரைத்து, அவன் மூலமாய்க் குடும்பத்தாருக்கு விசயத்தைச் சேர்த்தான்.‌ அதில் கிருஷ்ணனின் சினம் மேலும் அதிகமாக, மகனுடன் பேசுவதை முழுவதுமாய் நிறுத்திக் கொண்டார். அத்தருணத்தில் விஜயரங்கனிற்கும் பெயரனின் நடவடிக்கையில் பிடித்தம் இல்லாது, பேசாமல் இருந்தார்.

குடும்பத்தின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய இரு ஆண்மகன்களும் இறுக்கமாய்‌ மாறிப் போக, மற்றவர்களால் எதுவும் பேச இயலாத நிலை.

அருகில் இருந்த கோவிலிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, அதைப் பதிவு செய்வதற்காகன முன்பணிகளையும் செய்து முடித்தான் பார்கவ்‌.

நிதன்யா பேசியதால், ஜனனியும் அரைமனதுடன் திருமணத்திற்குச் சம்மதித்தாள்.

உறவுகள் அற்றவளுக்கு, தோழியின் மூலமாய் அறிந்த,‌ அவர்களின் கூட்டுக் குடும்ப முறை மிகவும் பிடித்துப் போக.. அனைவருடனும் ஒன்றாய் இருக்கவே விரும்பினாள்‌. ஆனால் சூழல் அதற்கு ஒத்துழைக்காமல் போக, காலமானது நிச்சயம் நல்வாய்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில் பார்கவ்வின் கரம்பற்ற தயாரானாள்.

இரண்டு நாள்களில் திருமணம்‌ என்ற நிலையில், அத்தை மகளிடம் ‌அட்டைப் பெட்டி ஒன்றை நீட்டினான் பார்கவ்.

வியப்புடன் நோக்கியவள், "என்ன இது.?"

"ஜனனிக்கு வாங்குன‌ சேரி பிடிச்சிருக்குனு சொன்ன இல்ல.‌ அதான் அதேபோல உனக்கும் ஒண்ணு வாங்கிட்டேன்.‌ என் மேரேஜுக்கு, நீ இதைத்தான் கட்டுற‌." என்றிட, பிரித்துப் பார்த்தாள் சீனி.

சந்தன வண்ண புடவையில் தங்க நிறத்தில் பூ போன்ற வடிவமைப்பு செய்யப்பட்டு இருந்தது. மயில்கழுத்தின் வண்ணத்தில் கரை நெய்திருக்க, நிறக்கலவையும் அதனின் வேலைபாடும் கண்களைப் பறித்தன.

விழிகள் மின்ன பார்த்தவள், "அழகா இருக்கு மாமா. தேங்க்ஸ்.."

"வீட்டுக்குப் பேசுனியா.?"

"ம்ம்..‌ அப்பா, பெருசா எதுவும் கேட்டுக்கல.‌ அம்மா தான், உன்னைப் பத்தி விசாரிச்சாங்க. மாமாவும்‌ அத்தையும் கூட, வருத்தப்பட்டாங்க‌."

"நீ என்ன சொன்ன.?"

"என்ன சொல்லுறது? அவங்க பேசுனதுக்கு எல்லாம் உம் கொட்டுனேன். தாத்தா தான், ரொம்ப நேரமா எனக்கு ஆறுதல் சொன்னாரு."

"எதுக்கு.?"

"அவங்கதான், என் மனசுல ஆசையை வளர்த்துட்டாங்களாம். நான், அதை நினைச்சு எல்லாம் வருத்தப்படக் கூடாதாம்."

"அப்படியா என்ன? ரொம்ப வருத்தமோ?"

"அட, நீ வேற மாமா. இருபத்து நாலு வருசமா, உன்னோட மூஞ்சியவே பார்த்துப் போர் அடிக்கிது. இதுக்கு மேல, முடியாதுப்பா. இதுக்கு, வருத்தப்படக் கூடாது. சந்தோஷம் தான் படணும்!"

பார்கவ் சிரிக்க, "ஏன், அவன்கூட இருக்க? ஊருக்கு வானு பாட்டி கூப்பிட்டாங்க.‌ நான், மாமாக்கூட இல்ல‌. தனியா ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன். நீயும், அப்படியே மெயிண்டெயின் பண்ணு. அப்புறம் ஜனனி, என்னோட ஃப்ரெண்டுங்கிறதும் இப்போதைக்குத் தெரிய வேணாம்."

"நானும் அப்படித்தான் நினைச்சிருக்கேன். அப்புறம் என்மேல இருக்கிற கோபம் எல்லாம், உன்பக்கம் திரும்பிடும். இதெல்லாம் தெரியுமா? தெரிஞ்சும் ஏன் அமைதியா இருந்த?‌ உன்னோட ஃப்ரெண்டே, உன் வாழ்க்கையைப் பறிச்சிட்டானு.. ஜனனியையும் சேர்த்துத் தப்பா சொல்லுவாங்க."

தலையசைத்த சீனி, "ஏன் மாமா, நான் பேசாம ஏதாவது ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல போயி இருந்துக்கவா?"

"ஏன் லூசு.?"

"மேரேஜ் கப்புள்ஸுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கக்கூடாது இல்ல.?"

"நீ, எங்கக்கூட இருப்பனு தான் ஜனனி மேரேஜுக்கு ஓகே சொல்லி இருக்கா. இல்லேனா, நோ தான். அதுனால, ஒழுங்கா இங்கேயே இரு!‌" என உரைக்க, சீனியும் தோழிக்காக ஏற்றுக் கொண்டாள்.

திருமண நாள், எவ்வித பரபரப்பும் இன்றி இயல்பாய் புலர்ந்தது.‌ அதிகாலையே ஜனனி தங்கியிருந்த விடுதிக்குப் போய், அவளை அழைத்துக் கொண்டு அழகு நிலையத்திற்குச் சென்று விட்டாள் சீனி.

சிறிது நேரம் உடன் இருந்துவிட்டு, தயாராவதற்காக அவள் வீட்டிற்குச் செல்ல.. அதற்குள் பார்கவ் மாப்பிள்ளையாய், வருங்கால மனைவிக்குத் துணையாய் வந்து சேர்ந்தான்.

ஏழரை முதல் ஒன்பது முகூர்த்தம். சீனி சரியாய் ஏழு மணிக்குக் கோவிலிற்கு வர, சில நண்பர்களின் முன்னிலையில் இருவரின் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது‌.

சரணும் தீரஜும் கைப்பேசியின் வாயிலாக வாழ்த்துத் தெரிவிக்க, அவர்களிற்குத் திருமணப் புகைப்படங்களை அனுப்பி வைத்தாள் சீனி.

பத்து மணி வரை அங்கேயே இருந்துவிட்டு.. கிளம்பத் தயாரான நேரம், கோவிலிற்குள் நுழைந்தான் நிருதி.

வாயிலைப் பார்த்தபடி நின்று இருந்த பாவையின் பார்வையில் பட்டநொடி, "தனு, மாலையைக் கொஞ்சம் வச்சிரு. ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடுறேன்!" என்றுவிட்டுச் சென்றாள் ஜனனி. பார்கவ்.. நண்பர்களை வழியனுப்பும் பணியில் இருக்க, சீனி மீண்டும் வெளிக் கோபுரத்தின் பக்கம் திரும்பினாள்.

தனியாகத்தான் வந்திருந்தான் நிருதி. வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தான். கழுத்துப் பட்டை மற்றும் கைமடிப்பில் மயில்கழுத்து நிறம் எட்டிப் பார்த்தது. பொத்தான்களும் அதே வண்ணத்தில் மிளிர்ந்து, அவனது தோற்றத்தை எடுப்பாய்க் காட்டியது.

கண்டதும் உணர்ந்து கொண்டாள், அவனது வாழ்வில் ஏதோ முக்கியத் தினம் என்று. உடுத்தியிருந்த உடையும், முகத்தில் இருந்த தீவிர மனபாவமும் அந்த எண்ணத்திற்கு ஆதியாய் அமைந்தது.

'என்னாச்சு அவனுக்கு? எப்பவும் சிடுமூஞ்சி தான். ஆனா, இன்னைக்குக் கவலைக் கொஞ்சம் தூக்கலா தெரியிதே? பேசிப் பார்ப்போமா? ஆனா, இதுவரைக்கும் பேசுனது வேற இல்லையே? பதிலுக்குப் பேசுனா, ஓகே! கண்டுக்காம போயிட்டானா, அசிங்கமா போயிடும்!' எனச் சிந்தனையில் அவள் மூழ்கியிருந்த தருணத்தில், இறைவனைத் தரிசித்து விட்டு வெளியே வந்தான் நிருதி.

இம்முறை அவனது பார்வைக்கு எதிரே நின்றிருந்தாள், சீனி.

பட்டுப்புடவையும் மெலிதான ஒப்பனையும் விழிகளில் ரசனையைத் தோற்றுவிக்க.. முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து, இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது.

ஆடவனின் புன்னகையைக் கண்டு, அவளின் அதரங்களும் மலர.. சீனியை நோக்கி ஓர்அடி எடுத்து வைத்தான் நிருதி.

அடுத்த நொடியே அவனின் கால்கள் பின்வாங்கிட, "தனு, ஜனனி வந்துட்டா. கிளம்புவோமா?" என்றவாறே அவளின் அருகில் வந்தான் பார்கவ்.

"ஹான்.. கிளம்பலாம் மாமா!" எனப் பதில் உரைத்துவிட்டு, நிருதியின் புறம் பார்க்க, அவ்விடத்தில் அவனைக் காணவில்லை.

சட்டென்று மனமும், முகமும் வாடிவிட்டது சீனிக்கு. கோவிலில் இருந்து வெளியேறி, வண்டியில் ஏறி கிளம்பும் வரையிலுமே அவனைத் தேடிய வண்ணம் இருந்தாள். மின்னலானது, நொடியில் வெட்டி மறைவது போல்.. காணாமல் போனான்.

'அதுக்குள்ள எங்க போனான்? என்னைப் பார்த்து, வந்த மாதிரி இருந்துச்சே? அது உண்மை தானா? இல்லைனா, பிரம்மையா?' என யோசித்தபடியே புதுமணத் தம்பதியரோடு வீடு வந்து சேர்ந்தாள்.

அதன்பின்னர், ஜனனியின் விடுதி அறையைக் காலி செய்து, தங்களது இருப்பிடத்தில் அவளிற்குத் தேவையானதை பார்த்து, தோழியின் சௌகர்யத்தைக் கவனிக்கும் பணியில் இறங்கிவிட்டாள் சீனி.

இரண்டு நாள்களாய் நிருதியைப் பார்க்கவில்லை. மூன்றாம் நாள், அவனைத் தேடத் துவங்கி விட்டது மனம். இறுதியாய் பார்த்தபோது.. அவளைக் கண்டதும் அவன் சிந்திய புன்னகை வேறு,‌ நினைவுகளிற்குள் வந்து இம்சித்தது.

வழக்கமாய்.. மாலை நேரத்தில் தான் அவனைப் பார்ப்பாள் என்பதால், பணிமுடிந்து வரும் தருணங்களில் உடனே வீட்டிற்குச் செல்லாது மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதுமாய் நேரத்தைக் கடத்தினாள்.

நாள்களின் எண்ணிக்கை அதிகரித்ததே அன்றி, நிருதியைக் காணும் வாய்ப்பு மட்டும் கிட்டவே இல்லை‌. பத்துத் தினங்கள் கடந்த நிலையில், அவன் குடியிருக்கும் வீட்டிற்கே சென்று பார்த்தாள்.

'TOLET' பலகை தான் நிதன்யாவை வரவேற்றது. காரணம் அறியாது நெஞ்சுருகிப் போனாள்.

'ஒருமுறை கூடப் பேசிடாதவனின் மீது, எதற்கு இத்தனை ஆர்வம்.? ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?' எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவளிற்குப் பின்புதான் புரிந்தது, அதன் பெயர் காதல் என்று.

ஒருவனை நேசிப்பதற்குப் பெயரும், முகமும், பார்க்கும் பார்வையும், சிந்தும் புன்னகையும் மட்டும் போதுமா என்ன.?‌ உண்மையில், சீனிக்கு அதுவே போதுமானதாய் இருந்தது‌.

நிருதியின் உள்ளர்த்தம் தேடாத விழிகளின் மொழிகளும், புன்னகையில் நிறைந்திருந்த சிநேகமும்.. பின்புலம் அறியா ஒருவனின் மீது நேசத்தை உருவாக்கி விட்டது அவளுள்.

அக்கம் பக்கத்தாரிடம் வெளிப்படையாய் விசாரிக்க இயலாது, அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் வழியையும் கண்டறிய முடியாது.. வலியுடன் நாள்களைக் கடத்தினாள்.

'ஸ்கூல்ல, காலேஜ்ல, பஸ்லனு எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கோம். அதுல, ஒரு சிலரை பிடிச்சும் இருந்துச்சு. அவங்களை எல்லாம் கடந்து வரலயா.?‌அதே மாதிரி, இவனோட நினைப்பும் காலப் போக்குல மறைஞ்சு போயிடும். வெளிய சொல்லப்படாத ஒரு தலைக் காதல், புக்குக்கு உள்ள இருக்கிற மயிலிறகு மாதிரி. அப்பப்ப புரட்டிப் பார்த்துச் சந்தோஷப் பட்டுக்கலாம். எந்நேரமும் அதையே பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. நிருதியோட நினைப்புல இருந்து வெளிய வா சீனி..' எனத் தன்னைத் தானே மீட்டுக் கொண்டாள்.

அவன் திடீரென மாயமானதன் வலி மெல்ல மெல்ல மறைய, இனிமையான நினைவுகளாய் மட்டுமே.‌. நிருதியை மனதில் பதியவைத்துக் கொண்டாள் நிதன்யா.

'நினைவாய் இருந்தவன், நிஜமாய் எதிரில் வந்து நிற்பான்.' எனக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாள் அவள். எனினும் கனவை மிஞ்சும் சுவாரஸ்யங்களை நிகழ்த்தி வேடிக்கைக் காட்டுவது தானே, காலத்தின் வாடிக்கை.

அக்காலத்தின் வேடிக்கையைக் காண்பதற்கு நாமுமே தயாராவோம்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 10


திருமண அரங்கம், பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.‌ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை.

குடும்பத்தார் முதல் உறவுகள் வரை அனைவரது கண்களும் முதலில் பதிந்தது, பார்கவ் ஜனனி ஜோடியின் மீதுதான்.

விஜயரங்கனின் அழைப்பின் பெயரில் வந்த குடும்பத்தின் மூத்த வாரிசான பார்கவ்வை, ‘வேண்டாம்னு போனவன், இப்ப எதுக்குடா வந்த.?‌’ என்று கேட்க, எவரிற்கும் மனமோ வாயோ வரவில்லை.

மறப்பதும் ஏற்பதும் தானே, மனித இயல்பு. அவ்வகையில் குடும்பத்தினர் அனைவரும் நேய மனதுடன் நடந்து கொண்டனர். ஆனால், மற்ற‌ உறவினர்கள்.?

காற்று வாக்கில் அவன் காதல் திருமணம் செய்து கொண்டது, வருகை தந்தவர்களின் செவியை அடைந்திருந்தது.‌ அதனால் சிலபல ரகசிய பேச்சும், கண் ஜாடைகளும், சலசலப்புகளும் இருக்கத்தான் செய்தன.

கிருஷ்ணனிற்கு.. அவை அனைத்தும் அசௌகர்யத்தைத் தர, பல்லைக் கடித்துக் கொண்டு முகத்தில் இருக்கும் புன்னகை மறையாமல் பார்த்துக் கொண்டார். இதில் பாவப்பட்ட ஜீவன், துளசி தான்.

மூத்த மகனிடமும் மருமகளிடமும் உரையாட ஆசை இருந்தாலும், கணவரை மீறிச் செய்ய இயலாத நிலையில், பார்வையால் மட்டும் விசாரித்துக் கொண்டார்‌.

ஜனனிக்கு, தனது புகுந்த வீட்டுக் குடும்பத்தாருடனான முதல் அறிமுகமே இதுதான்.‌ முன்பே அனைவரையும், கணவனது கைப்பேசியில் இருந்த புகைப்படங்களின் மூலமாய்ப் பார்த்து இருக்கிறாள்.

சீனியும் தன் பங்கிற்கு.. 'யார் யார், எப்படி?‌ என்ன குணம்?' என்று தோழிக்கு வகுப்புகள் எடுத்திருந்தாள்.‌ மாமனாரைப் பற்றி அறிந்திருந்ததால், இன்றியமையாத தேவைகளைக் கடந்து, அவள் எதற்கும் வாய்த் திறக்கவில்லை.

பார்கவ்.. மணமகன் அறையில் சரணிற்கு உதவி செய்ய, தனித்து நின்றிருந்த ஜனனியின் அருகே வந்தான் தீரஜ்.

சுற்றி முற்றிப் பார்த்தவனைக் கண்டு சிரித்தவள், "பார்கவ் இங்க இல்ல!"

"ஹப்பாடி!‌" என்றவன் அவளது தோளில் கை போட்டு,‌ "ஹாய் பேபி!"

ஜனனிக்கு மேலும் சிரிப்பு அதிகரிக்க, "ஹாய்.."

"நைட் எத்தனை மணிக்கு வந்த?"

"இங்க வர்றப்ப பதினொன்னு ஆகிடுச்சு."

"கொழுந்தன் மேல உனக்குப் பாசமே இல்ல, பார்த்தியா? இப்ப நானா வந்து பேசுற வரைக்கும், கண்டுக்காம இருக்க?"

அவள் சிரிக்க, "எங்க அந்தச் சீனி.?"

"ரெடியாகிட்டு இருக்கா?"

"நீ மட்டும், எப்படிப் பேபி சீக்கிரம் ரெடி ஆன?"

"உன்னோட அண்ணாதான் என்னை ரெடி பண்ணி, இங்க கொண்டு வந்து நிப்பாட்டிட்டாரு!"

"மஹி பேபிய பார்த்தியா?"

"இன்னும் இல்லடா..‌"

"நீ எல்லாம் என்ன மருமக?‌ அதுவும் மூத்த மருமக வேற! போய்ப் பார்த்து.. என்ன ‌ஏதுனு விசாரிச்சு, அதட்டி உருட்டி வச்சாதான, உனக்கு மரியாதைக் கிடைக்கும்?"

"டேய்!‌‌ இன்னைக்குத் தான் மாமியார் வீட்டுல அடியெடுத்து வச்சிருக்கேன். இது கல்யாண ஃபங்ஷன் தான். நீ, பொங்கலாக்கி விட்டுறாத!"

"அட போ, ஜனு பேபி!"

"அடி தான்டா வாங்கப் போற!"

சிரித்தவன், "சரி வாங்க, சின்ன அண்ணியை இண்ட்ரோடியூஸ் பண்ணுறேன்."

"இப்ப வேணாம்.‌ அப்புறம் பார்த்துக்கலாம்."

"அப்புறம்னா, எப்ப.?‌ வாங்க அண்ணி!" என்றவன் கைப்பற்றி இழுத்துச் செல்ல, "தீரஜ்!" எனக் குரல் கொடுத்தார் கிருஷ்ணன்.

"என்னப்பா.?"

"வா இங்க. எவ்வளவு வேலை இருக்கு?"

"அப்படி எவ்வளவு வேலை இருக்கு.?"‌

"வாடான்னா, கேள்விக் கேட்டுட்டு இருக்க.?"

தீரஜ்.. தமையன் மனைவியிடம் சொல்லிவிட்டுச் செல்ல, ஜனனியின் முகம் சட்டென்று வாடிவிட்டது.

"அண்ணன் பொண்டாட்டிக்கிட்ட இப்படித் தான் நடந்துப்பியா.?" எனக் கிருஷ்ணன் கண்டிக்க, "என்ன தப்பா நடந்துக்கிட்டேன். பேசுனது ஒரு குத்தமா.?"

"அதுக்குனு ஒரு வரைமுறை வேணாம்.? தோள்ல கைப் போட்டுப் பேசுவியா.?"

தந்தையின் சொற்களில் திகைத்தவன், "நீங்க தான்பா, வரைமுறை இல்லாம பேசுறீங்க.‌ எனக்கு.. பாட்டி, அம்மா, அத்தை, சீனி, அண்ணி எல்லாருமே ஒண்ணுதான். இதைச் சொல்லத்தான், வேலை இருக்குனு கூப்பிட்டீங்களா.?" என்றுவிட்டு நகர, "நேரமாச்சு. சரண் ரெடி ஆகிட்டானானு பாரு, போ!" எனக் கட்டளையாய் உரைத்தார்.

"அப்பா, முகூர்த்தத்துக்கு இன்னும் டைம் இருக்கே.‌?"

"அதுக்கு‌ முன்னாடி, சடங்கு எல்லாம் செய்யணும். கேள்விக் கேட்காம, சொல்லுறதைச் செய்!‌" என்றிட, வேறு வழியின்றித் தமையனின் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான் தீரஜ்.

நடந்ததைக் கவனித்திருந்தவள் ஒரு பெருமூச்சை விட்டபடி நிற்க, "ஜனனிமா, இங்க வா." என அழைத்தார் பத்மா.

வாடிய முகம் மலர்ந்தபடி அருகே சென்றவளிடம், "ரூமுல அட்சதை தாம்பூலம் வச்சிருக்கேன்.‌ தாத்தாக்கிட்ட இருந்து சாவி வாங்கிட்டுப் போயி, எடுத்துட்டு வா!" என்று வேலை சொல்ல, விஜயரங்கனைத் தேடிச் சென்றாள் அவள்.

புரோகிதர் சொன்னதின் பெயரில் பார்கவ்வும் தீரஜும் சரணை அழைத்து வர, தயாராகி வந்த சீனி தோழியோடு மணப்பெண்ணின் அறைக்குச் சென்றாள்.

"அண்ணா.. போதும் ப்ளீஸ்.." என்ற மஹியை நிருதி முறைக்க, "மணமேடைக்குப் போயிட்டா, கீழ இறங்குறதுக்கு எப்படியும் மூனு மணி நேரம் ஆகும். அதுனால கொடுக்கிறதை சாப்பிட்டுக்கோ.‌ இல்லேனா.. அந்தப் புகைக்கும் வெட்கைக்கும் மயக்கம் வந்துடும்!" என வற்புறுத்தினான் திவாகர்.

பானுமதியும் மோகனும் மற்ற வேலைகளில் மூழ்கிவிட, மஹதியைக் கவனிக்கும் பணியை நண்பர்கள் இருவரும் தான், ஏற்று இருந்தனர்.

கதவைத் தட்டிய ஒலியில்.. திவாகர் வாயிலை எட்டிப் பார்க்க, இட்லியை ஊட்டி முடித்து அலங்காரம் கலையாத படி மஹியின் வாயைத் துடைத்து விட்டான் நிருதி.

உள்ளே வந்த சீனியும் ஜனனியும் அந்நிகழ்வை வியப்புடன் பார்க்க, "தேங்க்ஸ் அண்ணா!" எனப் புன்னகைத்தாள் மஹதி.

"என்ன கல்யாண பொண்ணே, ரெடியா? போகலாமா?‌" என்று சீனி வினவ, தலையசைத்து எழுந்தாள்.

பெண்ணும் மணமேடைக்கு வந்து சேர, அடுத்தடுத்த சடங்குகள் குறித்த நேரத்தில் வரிசையாய் நிகழ்த்தப்பட்டு, சரணின் மனைவியானாள் மஹதி.

இரு குடும்பத்தாரும் பின்நின்று மணமக்களைப் பார்த்து மகிழ, முன்பக்கம் உறவுகள் யாவரும் எழுந்து நின்று அட்சதை அரிசியை வாழ்த்துகளாய் தூவினர்.

அது மேலே இருந்த அனைவரின் மீதும் சிதறி விழுந்திருக்க.. தனது தலையில் இருந்ததைத் தட்டிவிட்டு நிமிர்ந்த நிருதி,‌ எதிர்பக்கமாய் இருந்தவர்களைக் குழப்பத்துடன் பார்த்தான்.

தன்மீது இருந்த மஞ்சள் கலந்த அரிசியைப் பார்கவ் தட்டிவிட முயல, கணவனின் கைப்பற்றித் தடுத்தாள் ஜனனி.

"என்னமா.?"

"உடனே தள்ளிவிடாதீங்க!"

"ஏன்.?"

"நம்ம கல்யாணம்.. சொந்தக்காரவங்க யாரும் இல்லாம நடந்ததால, இந்தச் சந்தோஷம் கிடைக்கவே இல்ல.‌ இன்னைக்குச் சரண் மஹியோட சேர்த்து, நமக்கும் வாய்ச்சிருக்கு. கொஞ்ச நேரம் இருக்கட்டுமே.?‌" என்றிட, மனைவியின் விருப்பத்திற்காகத் தலை அசைத்தான் அவன்.

"இதுக்கு எல்லாமா ஃபீல் பண்ணுவாங்க? முதல்லயே சொல்லி இருந்தா, உங்களுக்கும் தனியா ஒரு பந்தலைப் போட்டுச் செகண்ட் டைம் மேரேஜ் செஞ்சு வச்சிருக்கலாமே?‌ மிஸ் ஆகிடுச்சு, பரவாயில்ல. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும்! இந்தாங்க அட்சதை!" எனக் கை நிறைய அரிசியை அள்ளி அவர்களின் மீது போட்டான் தீரஜ்.

"மணமேடையில நின்னு, என்ன விளையாட்டு இது.?‌" என்று..‌ கிருஷ்ணன் கண்டிக்க, "இதுல என்ன இருக்கு? சின்னப் பிள்ளைக, ஏதோ விளையாட்டுத் தனமா செய்யிறாங்க. விடுப்பா!" எனப் பெயரன்களிற்குப் பரிந்து பேசினார் விஜயரங்கன்.

தந்தையை மீறிப் பேசிப் பழக்கமற்ற கிருஷ்ணன் அமைதியாகி விட.. சீனியும் தன் பங்கிற்கு, பார்கவ் ஜனனியின் மீது அட்சதையைப் போட்டாள்.

நடந்த நிகழ்வைத் திகைப்புடன் நோக்கிய நிருதி, திவாகரின் தோளில் தட்டித் தன்பக்கம் அழைத்தான்.

"என்னடா.?"

"யார் அந்தப் பொண்ணு.?" என ஜனனியைக் காட்டி வினவ, "இது என்ன கேள்வி? பார்கவ்வோட வொய்ஃப்!"

அதிர்ச்சியில் முகம் வெளிர, "அப்ப..‌ இது.?" என்று சீனியைக் கைக்காட்டி வினா எழுப்பினான்.

"அது, சரணோட அத்தைப் பொண்ணு."

"அவங்களோட ஹஸ்பெண்ட் வரலயா.?"

"அடப்பாவி! அந்தப் பொண்ணுக்கு இன்னும் கல்யாணமே ஆகலடா." என உரைக்கும் பொழுதே, "திவா.. அந்தத் தாம்பூலத்தைத் தள்ளி வை. அக்னியை வலம் வர்றதுக்கு வழியைக் காணோம் பாரு!" என்று மகனை அழைத்தார் பானுமதி.

நண்பன் சொல்லிச் சென்ற விசயத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிருதி.. எதிர்ப்பக்கம் நின்றிருந்த சீனியைப் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆடவனுக்குச் சற்றும் குறைவில்லாத அதே அதிர்ச்சி, பாவையின் விழிகளிலும் படர்ந்து இருந்தது.

காரணம்.. நிருதியின் மொழி. நண்பனிடம் அவன் வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளால் அல்லாது,‌ கைவிரல்களின் அசைவினால் உரையாடி இருந்தான்.

'அவனால.. பேச முடியாதா.? எப்ப இருந்து?‌ என்னாச்சு அவனுக்கு? அதுனால தான், திடீர்னு காணாம போனானா.?' என எண்ணியவளிற்கு, ஒரு நொடி இதயம் நின்று துடித்தது. கண்களில் அனிச்சையாய் நீர் பெருக்கெடுக்க, சட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளது கழுத்தையும் கால் விரல்களையும் ஆராய்ந்து, கனத்த மனதுடன் நிருதியும் மேடையில் இருந்து இறங்கினான்.

ஒருபுறம் அவளிற்குத் திருமணம் ஆகவில்லை என்ற உண்மை ஆசுவாசத்தைக் கொடுத்தாலும்.. மறுபுறம், 'கல்யாணம் ஆகியிருந்தா‌ என்ன? ஆகலேனா என்ன? நீ,‌ அவக்கிட்ட பேசப் போறது இல்ல. ஒருவேளை பேசுறதுக்கு ஆசைப்பட்டாலும், முடியுமா உன்னால? அப்புறம் எதுக்கு, இந்தப்பாடு படுற? இங்க தங்கச்சிக் கல்யாணத்துக்குத்தான வந்த? அதை மட்டும் கவனி!' என மூளை நிதர்சனத்தை எடுத்துரைக்க, தவிக்கும் மனதிற்குக் கடிவாளம் இட்டு எல்லையைக் கடக்க விடாது இழுத்து நிறுத்தினான்.

சீனியோ, இயல்பிலேயே இல்லை.‌

'அப்ப, இவ்வளவு நாள் அவன் பேசாததுக்குக் காரணம் இதுதானா.? நேத்து நைட் கூட, இதுனால தான் அமைதியா இருந்தானா? இல்லையே, அவன் பேசுனதை ஒரு தடவைக் கேட்டிருக்கேனே? இந்த எட்டு மாசக் கேப்ல தான், எதுவும் நடந்திருக்கணும். யார்க்கிட்ட கேட்கிறது? கேட்டா, தப்பா நினைச்சிடுவாங்களோ..?' என மனமானது தவிக்க,

'போன தடவையும் இப்படித்தான் பேசாமலேயே மிஸ் பண்ண. இப்பவும் அதே தப்பைச் செய்யாத.‌ எதுக்கு மத்தவங்கக்கிட்ட கேட்கிற? அவன்கிட்டயே பேசலாமே? இப்ப ரெண்டு குடும்பமும் சொந்தக்காரவங்களா மாறியாச்சு. நீ பேசுனா, யாரும் குத்தம் சொல்லப் போறது இல்ல‌. தப்பாவும் நினைக்க வாய்ப்பில்ல.‌ யாராவது வந்து என்னனு விசாரிச்சாலும், நீ சொல்லுறது தான் பதில். அப்புறம்‌ எதுக்குத் தயக்கம்?' என்று, சிந்தனை அவளிற்குத் தெளிவைக் கொடுத்தது.

அதன்பின்னர்.. காலத்தைக் கடத்த விரும்பவில்லை நிதன்யா. திருமண அரங்கிற்குள் சுற்றி வந்தவளின் விழிகள், மணப்பெண்ணின் அறையை நோக்கி சென்று கொண்டிருந்த நிருதியைத் தேடிப் பிடிக்க, நொடியும் தாமதிக்காமல் சென்றாள்.

கதவைத் திறப்பதற்காகக் கைப்பிடியைப் பற்றியவனின் பார்வை, கதவின் மேல் பதிந்த பெண்ணவளின் கரத்தில் விழ, திரும்பினான்.

பார்கவ்வின் திருமணத்தில் விழிகளால் பார்க்கும் படியான தூரத்தில் இறுதியாய்ச் சந்தித்துக் கொண்டவர்கள், இன்று சரணின் திருமணத்தில் மொழிகளால் உரையாடும் படியான நெருக்கத்தில் நின்று இருந்தனர்.

அவன் கேள்வியாய் நோக்க, "உங்களுக்குப் பேச்சு வராதா.?" என நேரடியாகவே கேட்டு விட்டாள் நிதன்யா.

'காதுகளும் அதற்கான திறனை அற்றது!' என்று செவியைத் தொட்டுக் காட்டி.. வலது கரத்தை 'இல்லை.' என்பதாய் காற்றினில் அசைத்துக் காட்டினான் நிருதிவாசன்.

 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 11


சரணின் மறுவீட்டு வைபவத்திற்காக, மஹதியின் பிறந்தகத்திற்கு வந்திருந்தனர் அனைவரும்.

நிருதியைப் பற்றி அறிந்த நிதன்யாவால், அதற்கு மேல் எதையும் அவனிடம் கேட்க இயலவில்லை. பேசவும் முடியவில்லை.

தனது வினாவிற்கு அவன் பதில் சொன்னது, இதழசைவுகளைக் கொண்டு என உணர்ந்து கொண்டாள். ஆனால்,‌ அவன் உரையாடும் மொழியின் பொருளை அறியாதவள் சீனி.

'தன்னால் புரிந்து கொள்ள முடியாது!' என்ற புரிதலும், 'எட்டு மாதங்கள் கழித்து, தற்போது ஏன் தனது பார்வையில் அவன் விழ வேண்டும்.?' என்ற மனக்குழப்பமும், அவளைத் தொடர்ந்து பேசவிடாது செய்து விட்டது.‌

எனினும்.. அதேநேரம், மனதிற்குள் புதைந்து போன காதல் விதை, துளிர்விட முயன்றது. நீரூற்றி அதனை வளர்ப்பதா அன்றிச் சிமெண்ட் கலவையை ஊற்றி முழுவதுமாய் அதற்கு முடிவுரை எழுதுவதா என்று புரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள்.

கடந்து சென்ற கடந்த காலமும், வரவிருக்கும் எதிர்காலமும்.. நேர்எதிர் திசையில் அவளை உந்தித் தள்ள, எப்பக்கம் செல்வது எனப் புரியாமல் தவித்தாள்.‌ இதற்கிடையே..‌ மனதில் பதிந்து போன, காதலனின் நினைவு வேறு இம்சித்தது.

சம்மந்தி குடும்பத்தாரை வரவேற்று உபசரித்தனர், மோகனும் பானுமதியும். காலை உணவை.. அவர்கள் வரும் வழியிலேயே முடித்திருக்க, மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

அன்றைய தினம் நிருதி.. நிதன்யாவைத் தவிர்ப்பதற்காகவே பணிக்குச் சென்று விட, திவாகர் பெற்றவர்களிற்கு உதவியாய் வீட்டிலேயே இருந்தான்.

மஹதியின் பிறந்தகம் அளவானது என்பதால், மாப்பிள்ளையின் உறவுகளிற்குச் சற்று நெருக்கடியாகத் தான் இருந்தது, அவ்விடம்.

மோகன் மகனை அழைத்து, "பெரியவங்க இங்கேயே இருக்கட்டும். சின்னவங்களை மேல மாடிக்குக் கூட்டிட்டுப் போ!" என்றிட, நிருதியின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான் திவாகர்.

பானுமதி‌.. முன்னரே இதனைச் சிந்தித்து, மகனின் நண்பனிடம் பேசி திறவுகோலையும் வாங்கி இருந்தார்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர்களை, கண்களைப் பறிக்கும் டிஜிட்டல் ஓவியங்களே வரவேற்றன. அதில்.. பூக்களும், கோவில் கோபுரங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உருவங்களும் முதன்மை இடம் பிடித்திருந்தன.

பார்கவ்வும் நிதன்யாவும் அதை எல்லாம் வியப்புடன் பார்க்க, மற்றவர்கள் பேச்சு மும்முரத்தில் இருந்தனர்‌.

"செமையா இருக்கே திவா?" எனப் பார்கவ் வினவ, "நிருதிக்கு, அழகா இருக்கிறது எல்லாம் பிடிக்கும். எதெல்லாம் பார்வைக்கு ஈர்ப்பை ஏற்படுத்துதோ, அதை எல்லாம் ஃபோட்டோஸ் எடுத்து வச்சுக்குவான். அதேமாதிரி அழுகை, கோபம், வருத்தம் இதெல்லாம் தன்னை நெருங்காம பார்த்துக்குவான்." என்று பதில் அளித்தான் திவாகர்.

நிதன்யா ஆர்வம் தாங்காமல், "ஏன் அப்படி.?"

"அவனால மனசுல இருக்கிறதை வாய்விட்டுப் பேச முடியாது. அதேமாதிரி காதும் நிசப்தமாகிடுச்சு‌. கண்ணால செய்யக்கூடிய ஒரே விசயம், பார்க்கிறது மட்டும் தான். சோ, அதை எப்பவும் சந்தோஷமா வச்சுக்கணும்னு நினைப்பான்! மனசளவுல, தானும் எப்பவும் சந்தோஷமாவே இருக்க முயற்சி செய்வான்."

பார்கவ் சிரித்து, "இண்ட்ரஸ்டிங் கேரக்டர்."

"பழகிப் பாருங்க. ஹீ இஸ் ப்ரீஷியஸ். என்ன, யாருக்கிட்டயும் அவ்வளவு லேசுல ஒட்ட மாட்டான். தன்னைப் பரிதாபமா பார்ப்பாங்களோனு, பெரும்பாலும் தள்ளிதான் நிப்பான்."

"அவருக்கு எப்படி, இப்படி ஆச்சு அண்ணா.?" எனச் சீனி வினவ, "பை பர்த் சிஸ்டர்." என்றான் அவன்.

பெரிதும் திகைத்தவள், "நிஜமாவா சொல்லுறீங்க.?"

"நான்‌ எதுக்குப் பொய்ச் சொல்லப் போறேன்.?" என்ற பதிலில், 'அப்ப.. அன்னைக்கு நாம, மாடிப்படில கேட்டது அவன் குரல் இல்லையா.?'‌ எனச் சிந்தனை எழுந்தது சீனிக்கு.

அன்றைய நாள் திவாகரும் நிருதியுடன் இருந்தது நினைவிற்கு வர, 'இவர் பேசுனதைத் தான், அவன் பேசுனதா நினைச்சிட்டோமா.?' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

'ஓ.. காட்! இப்ப.. இதுதான் முக்கியமா? ஹீ இஸ் டெஃப் அண்ட் டம்ப். அது, உனக்கு உரைக்கவே இல்லையா.?அவனைப் பத்தி ஒண்ணுமே தெரியாம, முட்டாள் தனமா காதலிச்சிருக்க. இதுல பேசாம போயிட்டான்னு வருத்தம் வேற உனக்கு? ஒரு ஊமை, எப்படிடி பேசுவான்.? அந்த அளவுக்கு, குருடியா நீ?' என மூளையானது வன்மையாய்த் தாக்க, நெஞ்சம் பதறினாள் நிதன்யா.

இந்நொடி வரை அவன் மீது உண்டான காதலை என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தவள், தற்போது அதற்கு என்ன பொருள் என்றுகூடப் புரிந்து கொள்ள இயலாது தடுமாறினாள்.

'நீ பேசுனா, அவனுக்குக் கேட்காது சீனி. உன்னோட காதலைச் சொன்னா, அவனால கேட்டு ரசிக்க முடியாது. ஏன், உணர கூட முடியாது.‌ நீ பேசுறதுக்கு, அவனால பதில் சொல்ல முடியாது. அதேபோல அவனோட மொழிக்கு, எந்த டிக்ஸ்னரிலயும் அர்த்தத்தைத் தேட முடியாது. அந்த மொழியைக் கத்துக்கிட்டா தான் ஆச்சு! இட்ஸ், ஒன்லி ஒன் வே! அவன்கிட்ட இருந்து, எதுவுமே வர வாய்ப்பில்ல. எந்த எதிர்பார்ப்பையும் வச்சுக்காம, இதெல்லாம் சமாளிக்க முடியுமா உன்னால?' என நிதர்சனத்தை உணர்ந்த மனம் வினா எழுப்பிட,

'முதல்ல..‌ அவனுக்கு நீ யாருனாவது தெரியுமா.? எட்டு மாசமாச்சு, ஞாபகம் வச்சிருக்கானோ என்னவோ.?‌ இதுல காதலாம், கத்திரிக்காயாம்!' என்று கேலி செய்து சிரித்தது மூளை.

மனதளவில் மொத்தமாய் உறைந்து போனாள் நிதன்யா.‌

'அடுத்தது என்ன.?‌ தான், என்ன செய்யப் போகிறோம்? இல்லை, என்னதான் செய்ய வேண்டும்.?‌' என ஒன்றும் புரியாமல், மரப்பாவையாய் நேரத்தைக் கடத்தினாள்.

பணிசெய்யும் இடத்தில் இருந்த நிருதியும், அதேநிலையில் தான் தவித்துக் கொண்டிருந்தான்.

நிதன்யாவை, அத்தனை எளிதில் கடந்து செல்ல இயலாது என்பதை நன்றாகவே அறிவான்.‌ அதனால் தான்.. தனது இருப்பிடத்தை மாற்றி, அதைச் செயல்படுத்த முயன்றான்.

'பார்க்காமல் இருந்தால், மனம் மறந்து போகும்!' என நினைத்திருக்க.. அதனைச் சோதனைச் செய்து பார்க்கும் விதமாய், காலமானது அவளை மீண்டும் கொண்டு வந்து, அவனது பார்வைக்கு எதிரே நிறுத்திவிட்டது.

முதன்முதலாய் நிதன்யாவைக் கண்ட தருணத்தில் மனமானது எந்த அளவிற்கு ரசித்ததோ..‌ தற்போதும் அதைப் போலவே ரசித்தது,‌ ஆனால் வலியுடன்.

'வேண்டாம்!' என்று எடுத்திருந்த முடிவு, தற்போது ஆட்டம் காணத் துவங்கியது.

'நீ, ஆசைப்பட்டாலும் நடக்குமா நிரு? எந்தப் பொண்ணு, உன்னை மாதிரி ஒருத்தனை அக்செப்ட் செஞ்சுக்குவா? உனக்கே, அது தெரியும் தான? அப்புறமும் ஏண்டா.?' என மனசாட்சி வினா எழுப்பிட, ஒரு பெருமூச்சை விட்டு இருக்கையில் சாய்ந்தான்.

இவன் கேட்டதின் பெயரில், பணியாளன் வந்து தேநீர் கோப்பையை வைத்துச் சென்றான்.

அதன் வாசம் சுவாசத்தின் வழியாய் உட்சென்று உணர்வுகளைத் தீண்டிட, சட்டென்று பெண்ணவளின் நினைவும் வந்து நெஞ்சோரத்தில் ஒட்டிக் கொண்டது.

அவன், அவளைக் காண்பதற்குக் காரணமாக இருந்ததே, சிதறிய சில தேநீர் துளிகள் தானே.?

"அம்மா இறந்து, நாலு மாசம் ஆச்சு! இன்னும் எத்தனை நாளைக்குத்தான், வீட்டுக்கு உள்ளேயே இருக்கப் போற? பெரிய இழப்புதான். கஷ்டம்தான். ஆனாலும், அதைக் கடந்து வந்துதான் ஆகணும். இதைத்தான் சொல்லித்தந்து வளர்த்தாங்களா, அம்மாவும் அப்பாவும்.?" எனத் திவாகர் நண்பனைத் தேற்ற.. கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திய படி ஓய்வறைக்குள் சென்றான் நிருதிவாசன்.

முகத்தை மறைத்த தாடியும், தலைக்கவசம் போல் அடர்ந்திருந்த தலைமுடியும்.. அவனிற்கே அவனை அடையாளம் தெரியவில்லை.

அவனின் அன்னை இருந்த பொழுது.. "நிரு, தாடி‌ எல்லாம் வளர்க்காதடா‌. உனக்கு, அது நல்லாவே இல்ல.‌ என் பிள்ளையோட அழகை, இந்தத் தாடி கெடுத்திடுது!" என்று.. அதிகபட்சம் மூன்று நாள்களிற்கு ஒருமுறை‌, அவனைச் சவரம் செய்ய வைத்து விடுவார்.

'தற்போது.. இப்படி இருக்கும் மகனைக் கண்டால் எவ்வளவு வருத்தம் கொள்வார்.?‌' என்று எண்ணியவன், தன்னைச் சுத்தம் செய்யத் துவங்கினான்.

நாற்பத்து ஐந்து நிமிடங்களில் குளித்துத் தயாராகி வெளியே வந்த நண்பனைப் பார்த்த திவாகர், "இப்ப,‌ எப்படி இருக்கு.? சரி, அப்படியே போய்ச் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா. நான், ரூமைக் கிளீன் பண்ணுறேன்!‌" என வெளியே அனுப்பினான்.

படிகளில் இறங்கியவனின் முகம்.. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர்களைக் கண்டதும் மலர, தானும் அவர்களோடு இணைந்து கொண்டான்.

காகிதங்களில் பறவைகள், விமானம், காற்றாடி எனச் செய்து விளையாடியவர்களிற்கு, விதவிதமாய் மலர்கள் செய்யக் கற்றுத் தந்தான்.

அடிக்கடி இது நிகழ்வது தான் என்பதால், சிறுவர்களும் அவனுடன் இயல்பாய் ஒன்றிக் கொண்டனர். நிருதியிடம் இருக்கும் திறன் குறைபாடை அறிந்திருந்தாலும்..‌ அதைப் பல நேரங்களில் மறந்து விடுவர். அதன் காரணமாகவே, அவர்களுடன் விளையாடுவதைப் பெரிதும் விரும்பினான்.

அத்தோடு அவர்கள் அழைத்தால்.. தெரிந்து கொள்ள இயலாது என்று, பார்வை முழுவதையும் குழந்தைகளின் மீதே வைத்துக் கொள்வான்.

"நிருதி அங்கிள்.. இந்தப் பூ பிஞ்சிடுச்சு.‌ எப்படிச் சரி செய்யிறது.?" எனச் சிறிய வாண்டு ஒன்று கேட்க, சொல்லித் தந்தான்.

அத்தருணத்தில் தான் ஆடவனின் கவனத்தைக் கலைக்கும் விதமாய், தோளின் மீது ஏதோ விழுந்தது. அணிந்திருந்த சந்தன வண்ண சட்டையில், திட்டாய் தேநீர் கறை.

'எங்கிருந்து வந்தது?' என நிமிர்ந்து நோக்க..‌ காற்றில் பறந்த குழலை கரங்களால் சரி செய்த, நிதன்யாவின் இதழ்கள் தேநீர் கோப்பையுடன் உறவாடிக் கொண்டிருந்தன.

மாலைப் பொழுது என்பதால்.‌. ஒளி மங்கி‌ பொன் தூவல் போலக் காட்சி அளித்தது, காலநிலை. அதில் தீட்டப்பட்ட வானவில்லாய், அவளின் உருவம். பார்த்ததும், அவனுள் ‌பதிந்து போனாள்.

'லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்!' என்று எல்லாம் இல்லை. ஆனால், 'லைக் அட் ஃபர்ஸ்ட் சைட்!'

சரியாய் அவளும் குனிந்து நிருதியைப் பார்த்திட, தனது விழிகளை அனிச்சையாய் விலக்கிக் கொண்டான்.

'இப்படியாடா, ஒரு பொண்ணைச் சைட் அடிப்ப?‌ அவ, உன்னைப் பத்தி என்ன நினைப்பா?' என மூளையானது கேவலமாய்த் திட்டிட, முதன்முதலாய் அவனுள் உதித்த சுகானுபவம் அது.

நிதன்யா தேநீர் சிந்தியதற்காக மன்னிப்புக் கேட்க முயல, அதை அவளின் முகப் பாவத்திலேயே உணர்ந்து கொண்டான்.

வந்து பேசினால் தனது இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதால், சட்டென்று அங்கிருந்து நகர்ந்தும் விட்டான்.

மூன்றாம் மாடியில் இருப்பவனிற்கு,‌ இரண்டாம் மாடியில் குடியிருந்தவளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் சிரமமாய் இல்லை.

அதன்பின்னர் பார்கவ்வுடன் இருமுறை பார்த்தான். முதலில் தமையனாய் இருக்கும் என நினைத்தவன்.. பின்னர் அவளின் இதழ் அசைவையும், அவர்கள் பேசும் விதத்தையும் கொண்டு உறவு முறையை அறிந்தான்.

பணியின் நிமித்தமாய், இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மீண்டும் ஒருமுறை, மாடிப்படிகளில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது‌. அது, இயல்பாய் தான் நடந்தேறியது.

ஏதோ ஒரு பெண் என வேகத்தைக் குறைக்காமல் கீழ் இறங்கிச் சென்றவன், பின்னர்தான்‌ சந்தேகத்துடன் நிமிர்ந்து பார்த்தான். அச்சமயம், நிதன்யாவின் விழிகளும் அவன்மீது தான் இருந்தது.‌

மனமானது குழந்தையாய் குதூகலிக்க, அதன் பயனாய் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. அது.. அடுத்தடுத்த தினங்களிலும் தொடர்ந்து, நடக்கத் துவங்கியது.

முதல் இரு சந்திப்பை மட்டும் இயற்கை நிகழ்த்தி இருக்க, அதன் பின்பானவற்றை ஆடவன் தனக்கு வசதியாய் நிகழ்த்திக் கொண்டான்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 12

இரு தினங்கள் நிதானித்து.. நிதன்யா பணி முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தைக் கணக்கிட்டு, அதே சமயத்தில் வெளியே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான், நிருதி.

'ஏன்?‌ எதற்கு?‌' என்று அவனிற்கே தெரியவில்லை. பிடித்திருந்தது அவளை, காரணம் காரியமின்றி‌. அதுதானே, நேசம் எனப்படுவது‌‌! நேசித்தான் நிதன்யாவை.. எந்த ஆசையையும் தனக்குள் வளர விடாமலும், எதிர்பார்ப்பை வைத்துக் கொள்ளாமலும்.

பணிக்குச் சென்று உடலையும் சிந்தனையையும் வருத்தி, வருமானம் ஈட்ட வேண்டிய‌ அவசியமில்லை ஆடவனிற்கு. அவன் குடியிருக்கும் வீட்டோடு சேர்த்து, நாற்பது வீடுகள் நிறைந்திருந்த, அந்த மொத்த குடியிருப்பிற்கும் உரிமையானவனே அவன்தான்.

அனைத்தையும் மகனிற்காகச் சேமித்துக் கொடுத்துச் சென்றிருந்தனர் அவனது பெற்றோரான, வளவனும் இந்திராணியும். அவ்வகையில் குறைகளிற்கு ஈடான நிறைகளைப் பெற்ற, அதிர்ஷ்டக்காரன் நிருதிவாசன்.

'தனது இயலாமை தெரிந்தால், மற்றவர்கள் அதனையே சாதகமாய்ப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு!' என்று, தன்னைப் பற்றி வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே, தரகர்களின் மூலமாய் அனைவரையும் குடியமர்த்தி இருந்தான்‌.

திவாகர் தான், நண்பனிற்குத் துணை நின்று உதவிகளைச் செய்தான். வாடகை பணம்கூட, நேரடியாக அவனின் வங்கிக் கணக்கிற்கே சென்று விடும். அதனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம், அவனுக்கு உண்டாகவில்லை.

ஆகையால் அங்கு இருந்தவர்களிற்கு, 'தங்களைப் போல வாடகைக்குக் குடி இருப்பவன், கேட்கும்‌ பேசும் திறன் அற்றவன்!' என்பதைத் தவிர, நிருதியைப் பற்றி எதுவும் தெரியாது.‌ ஒரு சிலர், அதைக்கூட‌ அறிந்திருக்கவில்லை.

அதனால் தான், நிதன்யாவைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அவனிற்குப் பெரியதாய்ச் சிரமம் ஏற்படவில்லை.

அவன் அறிவான், தனது நிலையை! ஆகவே‌‌.. அவளிடம் இருந்து சிநேகமான முறுவலைத் தவிர, வேறு எதையும் மனமானது தேடவில்லை. மாடிப்படிகளில் கடந்து செல்லும் அந்தச் சில நொடிகளே, அவனிற்குப் போதுமானதாய் இருந்தது.

ஓர்நாள்.. குடியிருப்பில் இருந்த வயதானவர் ஒருவருக்கு உடல்நிலை மோசமாகி விட, அவசர ஊர்தியின் ஆட்கள், மாடியில் இருந்து படிகளின் வழியாய் அவரைப் படுக்கையில் கிடத்தி கொண்டு வந்தனர்.

அவ்வேளையில் தான் நிருதியும், நிதன்யாவைக் காண்பதற்காக வெளியேறி வந்தான்.

'இவர்களைக் கடந்து எப்படிச் செல்வது? இன்று, அவளைக் காண இயலாமல் போய் விடுமோ.?'‌‌ என நெஞ்சம் ஒருபுறம் தவிக்க, மறுபுறமோ.. நேயம் கொண்ட மனம் அவர்கள் கடந்து செல்வதற்கான வழியைவிட்டு, விலகி நிற்கும் படிக் கட்டளை இட்டது.

அதனை ஏற்று, ஒரு ஓரமாய் நின்று கொண்டான் நிருதி‌. அவசர ஊர்தி கிளம்பிச் செல்வதைப் பார்த்தப் பின்புதான் இறங்கி வந்தான். அவனிற்காகவே காத்திருப்பது போல், எதிரில் நின்றிருந்தாள் நிதன்யா.

'வீட்டிற்குச் சென்று இருப்பாள்!' என எண்ணிக் கொண்டிருக்க, அவ்விடத்தில் இருந்தவளைக் கண்டு மனம் மேலும் கூத்தாடியது.

அவள் தன்புறம் தானாய் திரும்பும் வரை பொறுமையாய்க் காத்திருந்தவன், பெண்ணவளின் பார்வையில் பட்ட நொடியில் தடுமாறிப் போனான்.

நிதன்யா கண்களால் 'என்ன?' என்று வினவியதில் தெளிந்தவன், விழிகளாலேயே வழிவிடும் படிக் கேட்டுக் கொண்டு.. மனதில் இருந்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டாது, ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றான்.

அது.. அவ்வப்போது எண்ணிப் பார்த்து அசைபோடும் இனிமையான நிகழ்வாய், நினைவில் தங்கி விட்டது.

மறுநாள் மாடிப்படியின் பொழுது, வேறு விதமாய் இருந்தது.‌ எப்பொழுதும் நிதானமாய் நடக்கும் நிதன்யாவின் கால்கள், அன்று சோம்பேறித் தனத்தைத் தத்தெடுத்துக் கொண்டன போலும்.

ஒவ்வொரு அடியையும் சிந்தித்துச் சிந்தித்து அவள் படிகளில் வைக்க, அவளைக் கவனித்தபடியே உடனே வெளியே செல்லாது நின்று கொண்டான் நிருதி.

மாடிப்படியின் வளைவில் தலைத் தாழ்த்தி தன்னைப் பார்த்தவளைக் கண்டு, உண்மையிலேயே தொலைந்து தான் போனான்.

முதல்நாளின் நிகழ்வு வேறு..‌ அவளின் மீதான அவனது பிடித்தத்தைக் கூட்டி அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிட, நிதன்யா அங்கிருந்து நகரும் வரையிலும் திவாகருடன் பேசிச் சிரித்தபடி நேரத்தைக் கடத்தினான்.

இதுபோல், நிதன்யா சம்மந்தமாய்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் நிருதிக்கு. அவை எல்லாம் தானாக நிகழாது, அவனாய் நடத்திக் கொண்டிருந்தான்.

அவள் சிந்திய தேநீரின் கறை படிந்த சந்தன நிற சட்டை, அவனிற்குப் பிடித்த ஒன்றாய் மாறிப் போனது. அதனை அவ்வப்போது அணியவும் செய்தான்‌. ஆனால், சீனியின் கருத்தில் தான்,‌ அது பதியவே இல்லை. மாறாக, திவாகரின் சிந்தை கவனித்து விட்டது.

"அந்தச் சர்ட் தான் கறையா இருக்கே? வேற சட்டையே இல்லாத மாதிரி, அதையே ஏண்டா அடிக்கடி போடுற.?‌" என ஒவ்வொரு முறை உடுத்தும் பொழுதும் வினவுவான்.‌ அச்சமயங்களில், நிருதியின் பதில் எல்லாம் சிறிய புன்னகை மட்டுமே.

அன்றும் அப்படித்தான். திவாகர், தனது குடும்பத்தாரைப் பார்ப்பதற்காகக் காஞ்சிபுரத்திற்குச் செல்ல தயாரானான்.

நண்பனைக் கவனித்த நிருதி, "நானும் வர்றேன் உன்கூட. அப்படியே, பஸ் ஸ்டாண்டுல டிராப் பண்ணுறேன்!" என்றிட, "எதுக்கு, உனக்கு இந்த வேலை? நான் போயிக்கிறேன்!" எனத் தடுத்துவிட்டுக் கிளம்பினான் திவா.

தனக்காக அவ்வப்போது.. சென்னைக்கு வந்து செல்லும் தோழனை அவ்வாறு அனுப்ப மனமில்லாது, கைக்குச் சிக்கிய உடையை அவசரமாய் மாற்றிக் கொண்டு ஓடி வந்தான் நிருதி.

திவா இரண்டு தளங்களைக் கடந்து கீழே முதல் தளத்தை அடைந்திருக்க, அவனும் வந்து உடன் இணைந்தான்.

"ஏண்டா? நான், போயிக்க மாட்டேனா?" என்றவன் கறைபடிந்த உடையைக் கவனித்துவிட்டு பேச வாய்திறந்த நொடி, நிதன்யா மேல் ஏறி வந்தாள்.

அதனால் திவாகர் முதலில் இறங்கிச் சென்றுவிட.. அவள் மேலேறிச் செல்வதற்கு வழிவிட்டுக் காத்திருந்த நிருதி, பின்னர்க் கீழ் இறங்கினான்.

"இந்தச் சர்ட்டை போடாதனு சொன்னா, கேட்கிறியா நீ.?" என்று திவாகர் நண்பனிடம் வினவ.. அவனோ, அந்தத் தேநீர் கறைக்கு உரிமையானவளை மேல்நோக்கிப் பார்த்தான்.

அந்தப் பேச்சொலியில் தான், நிதன்யா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

'தன்புறம் எதற்காக விழிகளைத் திருப்பினாள்?' எனப் புரியாது போயினும், மனம் என்னவோ மகிழத்தான் செய்தது. அதன் பிரதிபலிப்பாய் சிறிது புன்னகையையும் இதழ்கள் சிந்தின.

நிதன்யாவும் அன்றைய தினம் பதிலிற்குச் சின்னதாய் சிரிக்க, முதன்முதலாய் இருவரும் வெளிப்படையாய்ப் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னரான நாள்கள் எதுவும், நிருதிக்கு அவ்வளவு மகிழ்ச்சியானதாய் அமைய வில்லை. காரணம்.. நிதன்யாவின் முகத்தில் தென்பட்ட கவலையின் ரேகைகள். அந்த அளவிற்கு அவளின் நினைவுகள், ஆடவனின் உணர்வுகளோடு கலந்து போயிருந்தது.

'அவள் ஏன் அவ்வாறு இருக்கிறாள்?‌' என்று நிருதியால் அறிய இயலவில்லை. வழக்கமாய் அவனைத் தேடும் அவளின் விழிகள், அதன் பிறகு சிந்தனையின் இருப்பிடமாய் மாறிப் போனது‌. முன்னர் ரசனையின் பொழுதுகளாய் கழிந்த மாடிப்படி நிகழ்வு, வெறுமையை மட்டுமே அவனிற்குப் பரிசளித்தது.

'ஒருவேளை தன்னைப் பற்றி அறிந்து கொண்டாளோ? அதனால் தான், இப்படித் தவிர்க்கிறாளோ.?'‌ என்ற எண்ணம் தோன்ற, அதற்கு ஏற்றது போல் தனது மனதையும் மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள முயன்றான் நிருதி.

ஆறு மாத காலம், நத்தையின் வேகத்தில் ஊர்ந்து சென்றது‌. அந்நாள்களைக் கடத்துவது என்பதே, அவனிற்குப் பெரும் பாடாய்ப் போனது. இருந்தும்.. அவனது இயல்பான குணம், அனைத்தையும் கடந்து செல்ல தூண்டியது‌.

மீண்டும் எதிர்பாரா சந்திப்பு, கோவிலில்‌. அன்று, தந்தையின் நினைவு தினத்திற்காக, ஆலயத்திற்குச் சென்றிருந்தான்.

உள்ளே காலடி எடுத்து வைக்கும் பொழுதே, யாரோ தன்னைக் கவனிப்பதாய் ஓர் உள்ளுணர்வு நிருதிக்கு. ஆனால் ஆராய விடாமல், சிந்தனையை இறுக்கிப் பிடித்திருந்தது, வளவனின் மரணம் தந்த வலி.

ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன், கண்ணையும் கருத்தையும் முழுமையாய் இறைவனின் புறம் திருப்பினான்.

வெளியில் வரும்போது எதிர்கொண்டான்,‌ அவளை. உடுத்தியிருந்த பட்டுப்புடவையும், மெலிதான ஒப்பனையும்.. வழக்கத்தை விட நிதன்யாவை அழகுப் பதுமையாய்க் காட்சி அளித்தது.

எவராய் இருந்தாலும் நிருதியின் பார்வை முதலில் செல்வது, அவர்களின் கண்களிற்குத் தான்.‌ அவ்வகையில்..‌ அத்தருணம் அவளின் விழிகள் எவ்வித கலக்கமும் இன்றி,‌ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அதை உணர்ந்து அவன் புன்னகைக்க,‌ அடுத்த நொடி அவளின் அதரங்களும் மலர்ந்தன.

'இன்னைக்கு, ரொம்பச் சந்தோஷமா தெரியிறா. பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடுச்சு போல. நம்மளைப் பத்தி அவளுக்குத் தெரியுமா.?‌ ஒருவேளை தெரியாதோ.? தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. அதுனால தான், சிரிக்கிறா. பேசாம, சொல்லீடுவோமா.?' என அவனுள் சிந்தனை எழ, நிதன்யாவை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான்.

அடுத்த நொடி.‌. அவளின் அருகே, பட்டு வேட்டி சட்டையில் பார்கவ் வந்து நிற்க, சட்டென்று நிருதியின் கால்கள் நின்று கொண்டன.

அத்தோடு, 'அவக்கிட்டப் போயி, என்னடா சொல்லப் போற? உன்னோட குறை தெரிஞ்சதும் பரிதாபமா ஒரு பார்வைப் பார்த்துட்டா, அந்தச் செகண்டே நீ செத்துட மாட்ட.? அதைச் சமாளிக்கிற அளவுக்கு, தைரியம் இருக்கா உனக்கு?' என்று மூளை வினா எழுப்பிட, அப்படியே கோவிலில் இருந்து வெளியேறி விட்டான்.

'பார்கவ்வும் நிதன்யாவும் சொந்தக்காரவங்க. ஒரு வருசத்துக்கும் மேல, ஒரே வீட்டுல தங்கி இருக்காங்க. அவங்களுக்கு இடையில இருக்கிற உறவை பத்தி, இவ்வளவு நாளா ஏன் யோசிக்காம போனோம்.? பேரண்ட்ஸ் ஒத்துக்கல போல. அதான், அவங்களா கல்யாணம் செஞ்சுக்கிற முடிவுக்கு வந்திருக்காங்க‌. இதுக்கு அப்புறம், நாம அந்தப் பொண்ணைப் பார்க்காம இருக்கிறதே நல்லது. அப்படியே, அவளைப் பத்தி யோசிக்கிறதையும் நிறுத்திடணும்!' எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், மறுநாளே திவாகரின் ஊரிற்குக் கிளம்பிச் சென்று விட்டான்.

நிருதியைப் பற்றி மோகனின் குடும்பத்தாருக்கு நன்கு தெரியும் என்பதால், இன்முகத்தோடு வரவேற்றனர்.

அவனின் அன்னை இந்திராணி இறந்த சமயத்திலேயே, "கொஞ்ச நாள், அங்க வந்து இருந்து பாரு! மனசுக்குக் கொஞ்சம் மாறுதல் கிடைக்கும்ல?" எனப் பானுமதி பலமுறை அழைத்து இருந்தார்.

அன்னையுடன் வாழ்ந்த நினைவுகளை இழக்க விரும்பாது, அப்பொழுது மறுத்து விட்டான். ஆனால் தற்போது நிதன்யாவின் நினைவை.. மனதில் இருந்து அழிப்பதற்கு, இந்த இடமாற்றமும் புதிய துவக்கமும் தேவையாய் இருந்தது.

மாதா மாதம் கணக்கில் ஏறும் பார்கவ்வின் வீட்டு வாடகை, நிதன்யாவை நினைவு படுத்திக் கொண்டே இருக்க, அவர்கள் வீட்டைக் காலி செய்யும் வரை, சென்னைக்குச் செல்ல வேண்டாம்‌ என முடிவெடுத்தான்.

தனிமை.. பல வலிகளையும், கழிவிரக்கத்தையும் உண்டாக்கும் என்பதால், எப்பொழுதும் யாருடனாவது இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.

தனக்குப் பிடித்தமான வரைகலை வடிவமைப்பையே தொழிலாக மாற்றி, திவாகருடன் இணைந்து காஞ்சிபுரத்திலேயே சிறிய நிறுவனம் ஒன்றை துவங்கினான். பிடித்த வேலை என்பதால், அதனை மகிழ்ச்சியாகவே செய்தான்.

எட்டு மாதங்கள் மெல்ல நகர்ந்து சென்றது. மஹதியின் உரிமை கலந்த குறும்புகளும், பானுமதியின் தாயன்பும், மோகனின் கண்டிப்பு கலந்த வழிநடத்தலும், அத்தோடு நண்பனிற்காக எதையும் செய்யத் தயங்காத திவாகரின் தோழமையும், அவனைப் பழைய நிலைக்கு மாற்றியது.

அனைத்தும்.. சீரான வேகத்தில் திட்டமிட்டு இயக்கப்படும் வாகனத்தைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்க, அதில் வேகத் தடையைப் போல் மீண்டும் எதிரே வந்து நின்றாள் நிதன்யா.

சென்ற முறை பார்வையாலும் புன்னகையாலும் தென்றல் காற்றாய்.. மனதை வருடிப் போனவள், தற்போது தானாய் வந்து பேசி பெரும் இடியை இறக்கி இருந்தாள்.

அதன் பலனாய், அவனுள் அவ்வப்போது மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. மழை வருவது போன்ற அறிகுறித் தென்பட்டது. அது சாரலாய்த் தீண்டுமா? அடைமழையாய் வெளுத்து வாங்குமா? கனமாய் இறங்கி வலியைக் கூட்டுமா? அல்லது புயல் மழையாய் வேரோடு சாய்த்துச் செல்லுமா என்று இனிதான் தெரிய வரும்.

அதுவரை.. அவளின் மனநிலை செய்திகளை அறிவதற்காகக் காத்திருக்க வேண்டியது தான்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 13


சரண் மஹதியின் மறுவீடு வைபவம் முடிந்து, மதுரைக்குச் சென்று கொண்டிருந்தனர், விஜயரங்கனின் குடும்பத்தார். அவர்கள் கிளம்பும் வரை, நிருதி வீட்டிற்கு வரவில்லை.

மஹி, இரண்டு முறை அவனிற்குக் கைப்பேசியில் அழைத்துப் பார்த்தாள்.

"உன்னோட கல்யாணத்துக்காக, பத்து நாள் ஸாப்புக்கு லீவ் விட்டாச்சு. திவாகராலயும் இன்னைக்கு வர முடியாது. நானும் இல்லேனா, நல்லா இருக்காது. புரிஞ்சிக்கோடா. டைம் கிடைக்கிறப்ப, மதுரைக்கே வந்து உன்னைப் பார்க்கிறேன்!" எனக் குறுஞ்செய்தியில் பதில் அனுப்பினான்.

சூழலை உணர்ந்து கொண்ட மஹி, அதற்கு மேல் தமையனின் நண்பனைத் தொந்தரவு செய்யவில்லை.

ஆனால் சீனிதான்.. அவனை இறுதிவரை எதிர்பார்த்து, ஏமாந்து போனாள்.

துவக்கத்தில் பூதாகரமாய்த் தெரிந்த ஆடவனின் குறைகள் யாவும்.. அவனைப் பற்றி முழுமையாய் அறிந்து, மேலும் சிலவற்றை ரகசியமாய் உணர்ந்து கொண்ட போது, ஒன்றுமில்லாதது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது.

"எப்படிடா, உன்னால இப்படி இருக்க முடியிது.?"‌ என்று கேட்கத்தான் தோன்றியது அவளிற்கு. ஒருவேளை, நிருதி‌ அங்கு இருந்திருந்தால் சர்வ நிச்சயமாய்க் கேட்டிருப்பாள்.

உறவுகள் அனைவரும் தங்களிற்குள் பேசிக் கொண்டு வர,‌ தனது கைப்பேசியில் இருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள் நிதன்யா. அன்று காலையில் நிகழ்ந்தவை எல்லாம், மீண்டும் நினைவிற்கு வந்தன‌.

நிருதியின் தந்தை‌‌ வளவன்.. காவல் ஆணையராகப் பணியாற்றி, பணியில் இருக்கும் பொழுதே மாரடைப்பால் உயிரிழந்தவர். அன்னை இந்திராணி முதுகலை பட்டதாரி. பெயர் பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றின்‌ விற்பனைப் பிரிவு தலைவியாகப் பதினைந்து ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றியவர்.

வளவன்‌ நேர்மை மற்றும் கம்பீரத்தின் இருப்பிடம் என்றால், இந்திராணி அன்பு மற்றும் தன்னம்பிக்கையின் மறுவடிவம்.

இருவருக்குமே சொந்த ஊர் காஞ்சிபுரம் தான். நிருதியின் பிறப்பும், துவக்க காலப் படிப்பும் அங்குத் தான் நடந்தேறியது.

பிறந்ததில் இருந்தே.. குறைபாடினால் உறவுகளால் ஒதுக்கப்பட்ட நிருதி, சிறு வயதிலேயே தனிமை விரும்பியானான்.

தனது பிள்ளையை விலக்குபவர்களை விட்டு, தாங்களுமே விலகினர் வளவனும் இந்திராணியும். ஆகையால் சொந்தம் என்று சொல்வதற்கு, நேர்மை மனம் கொண்ட எவரும் அவர்களிற்கு இருக்கவில்லை.

எனினும் நிருதியை அவனது போக்கிற்கு விடாமல், தங்களின் திட்டமிடலுக்குள் இழுத்துக் கட்டி வழிநடத்தினர்.

'உனை விட்டு விலகிச் செல்பவரை, நெருங்க நினையாதே! அதே வேளையில்.. உண்மை அன்புடன் நெருங்கி வருபவரை, விலக்கி வைக்காதே!' என்பது தான், அவர்கள் கற்றுத் தந்த முதல் பாடம்.

திவாகர், நிருதிக்கு ஒன்றாம் வகுப்பு முதல் தோழன். அவனிற்குக் கிடைத்த முதல் தோழனும் அவன்தான். சூழலின் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்த போதும், அவர்களின் நட்பு மட்டும் விடுபட்டுப் போகாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அது பல ஆண்டுகளாய் நீண்டு, திவாகரின் குடும்பத்தாரும் கூட உறவுகளாய் மாறிப் போயினர்.

வளவனிற்குச் சென்னைக்குப் பணி மாற்றம் கிடைக்க, நிருதியின் எட்டு வயதில் குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார்.

மகன் பிறக்கும் வரை வேலைக்குச் சென்று கொண்டிருந்த இந்திராணி, அவனைக் கவனிக்கும் பொருட்டு இல்லத்தரசியாகத் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டார்.

தனது குறையைப் பெரிதாய் நினையாது, நிருதியும் இயல்பாய் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அவனது பத்து வயதில் இருந்தே தனியாய் விட்டுவிட்டு, மீண்டும் வேலைக்குச் செல்ல துவங்கினார்.

வளவனும்‌ நல் தந்தையாய்.. அவனது தேவைகளைக் கவனித்து, இவ்வுலகத்தைத் தயக்கமின்றி எதிர்கொள்ளும் மனதிண்மையை வளர்த்து விட்டார். கணவன் மனைவி இருவருமே வலிமையான பின்புலம் கொண்டவர்கள் என்பதால், நிருதியின் ஆசைகள் எதற்கும் தடை விதிக்காது அவனது விருப்பப்படியே வளர விட்டனர். அவனும் அதை உணர்ந்து, பொறுப்போடு நடந்து கொண்டான்.

அவனது பதினேழு வயதில் நிகழ்ந்த வளவனின் மரணம், பெரும் அடியாய் அமைந்து போனது இந்திராணியின் வாழ்வில்

வாழ்க்கை மிகமிக நன்றாகவே சென்று கொண்டிருந்தது, குடும்பத் தலைவரின் இறப்பு வரை. துவக்கத்தில் அவரின் இழப்பு, தாய்க்கும் மகனுக்கும் வரையறுக்க இயலாத வலியைத் தந்தாலும், அதனைக் கடக்கப் பழகிக் கொண்டனர்.‌

மீண்டும் சீரான இயக்கத்திற்கு வந்தன நாள்கள்.‌ முன்புபோல் இல்லையெனினும் இந்திராணி தாய்த் தந்தை என இருவரது இடத்திலும் இருந்து நிருதியை வழிநடத்தினார்.

சேமிப்பையும் பூர்வீக சொத்துகளையும் வைத்து, தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக, குடியிருப்பு ஒன்றை மகனது பெயரில் வாங்கினார்.

இளங்கலை காட்சித் தொடர்பு படிப்பை முடித்த நிருதி, இல்லத்திலேயே இருந்து அன்னையின் பணிக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் துவங்கினான்.

வெளியே வேலைக்கு அனுப்பி, அவனிற்கு அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை இந்திராணி. ஆகையால்.. தனது கடைசி நொடி வரையிலும் மகனை அருகிலேயே வைத்துக் கொண்டார்.

காலை எழுவதில் இருந்து சமையல் வேலைகளில் உதவி, பணிபுரியும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு, வீட்டைப் பெருக்குவதில் இருந்து துவைத்த துணிகளை அலமாரியில் அடுக்குவது வரையிலான வேலைகளை இடைப்பட்ட நேரத்தில் கவனித்து, மாலை மீண்டும் இந்திராணியை அழைத்து வந்து, அவர் வேண்டும் உதவிகளைச் செய்து என‌‌.. அன்னைக்குத் தாயாய் மாறிக் கவனித்துக் கொண்டான் நிருதி.

'தனது இயலாமைகளை விமர்சித்த உறவுகள் எவரும் வேண்டாம்!' என முடிவெடுத்த அன்னைக்கு, அவனால் கொடுக்க முடிந்தது அது ஒன்றாகத்தான் இருந்தது. அதனால் தன்னைப் பற்றிச் சிந்தியாது, பெற்றவர்களுக்காகவே வாழ்ந்தான்.

கண்கள் பார்ப்பதை, வரைகலை வடிவமைப்பில் காட்சிகளாய் மாற்றுவதில் கைத்தேர்ந்தவன் அவன். என்ன ஒன்று, கேட்கவும் பேசவும் இயலாததால், பெரும்பாலும் மனிதர்களிடம் இருந்து எட்டியே நின்று கொள்வான். அதில் குழந்தைகள் மட்டும் விதிவிலக்கு. சிறுவர் சிறுமியருடன் விளையாடுவது என்றால், மிகப்பிடித்தம் நிருதிக்கு.

அன்னை இந்திராணியிடம்.. இறுதிவரை சிறுவனாய் தான் இருந்தான். அவர் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும், நிசப்த அறைக்குள் அவன் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்.

ஆனால் எதிர்பாராமல் நிகழ்ந்த அவரின் இறப்பு தான், அவனிற்குப் பெரும் வலியைப் பரிசளித்து விட்டது.

முதல்நாள் தான், "கடைசி வரைக்கும், இப்படியே தனியா இருப்பியா நீ? எனக்கு அப்புறம், உன்னை யார் பார்த்துக்குவா?‌ அதுனால கல்யாணம் செஞ்சுக்கடா!" என மகனிடம்‌ எதிர்கால வாழ்வைப் பற்றிப் பேசி,

"அப்படினா, நார்மலா இருக்கிற பொண்ணு வேணாம் மா. என்னை மாதிரியே இருந்தா ஓகே." என்று நிருதியின் சம்மதத்தைப் பெற்றார்.

"சரிடா.. சரி சரி..‌ உனக்கு எப்படி வேணுமோ அப்படியே பார்த்திடலாம்!" எனப் பதில் தந்துவிட்டு, இணையத்தில் குவிந்து கிடக்கும் திருமணத் தகவல் மையங்களில், மகனது விருப்பத்திற்கு ஏற்ப சில பெண்களையும் குறித்துக் கொண்டு, இரவில் உறங்கச் சென்றார்.

ஆனால் அதுதான் ‌அவரது இறுதி தூக்கமாய் இருக்கும்‌ என்று, இந்திராணியே நினைத்திருக்க மாட்டார்‌.

அன்னையின் இழப்பால், வீட்டிற்கு உள்ளேயே முடங்கிப் போனான், நிருதி.

திவாகரின் குடும்பத்தார் வந்து, அவனுடனே சென்னையில் சில நாள்கள் தங்கி இருந்தனர். பின் திவா மட்டும், நண்பனிற்குத் துணையாய் அங்கேயே இருந்து கொள்ள, மெல்ல மெல்ல அன்னையின் நினைவில் இருந்து வெளியே வரத் துவங்கினான்.

மஹதியின் திருமணத்திற்கு முன்பே.. திவாகரின் மூலமாய், விஜயரங்கனின் குடும்பத்தார் ஓரளவு நிருதியைப் பற்றி அறிந்து இருந்தனர்.‌ தற்போது நிதன்யாவும் தெரிந்து கொண்டாள்.

வீட்டைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த சரண், "திவா, லாஸ்ட் ‌டைம் வந்தப்ப இங்க ஒரு பெயிண்டிங் இருந்துச்சே, எங்க காணோம்.?" என வினவ, "என்ன பெயிண்டிங்.?‌" என்று விழித்தான் அவன்.

"அதான்.. லாங் ஸ்கர்ட் போட்ட மாதிரி முகம் மட்டும் இல்லாத ஒரு பொண்ணோட டிராயிங்..?"

சின்னதாய்ச் சிரித்த திவாகர், "அதுமாதிரி, அவன் நிறைய வச்சிருக்கான். அதோ, அந்த ரூம்ல இருக்கு.!" என மூடியிருந்த ஒரு அறையைக் காட்டி, “ஏன்,‌ என்ன விசயம்.?" என்றான்.

"அந்தப் பொண்ணோட டிரஸ்ல இருந்த டிசைன் ரொம்ப‌ அழகா, அட்ராக்டிவா இருந்துச்சு. அதுமாதிரி சேரில டிசைன்‌ பண்ணா என்னனு தோணுச்சு.."

"நிருதி, இந்த மாதிரி நிறைய டிசைன்ஸ் வச்சிருக்கான்.‌ நான் அவன்கிட்டப்‌ பேசுறேன்.‌ பெயிண்டிங்ஸ் எல்லாம் ரூம்ல தான் இருக்கு. வேணும்னா‍, எடுத்துப் பாருங்க!"

"அவர்கிட்ட பர்மிஷன் கேட்காம எப்படி.?" எனப் பார்கவ் வினவ, "அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டான். எந்தச் சேதாரமும் இல்லாம, பழைய மாதிரியே பத்திரமா வச்சிட்டா போதும்!"‌ என்ற திவா, அறையைத் திறந்து காட்டிவிட்டுச் சென்றான்.

மாமன் மகன்களுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த நிதன்யாவிற்கு, அச்சூழலை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை.

அங்கு இருந்த இருபதிற்கும் மேற்பட்ட படங்களில், இரண்டு ‌அவளுடையது. முகம் மட்டும் வரையப்படாமல் இருந்தது.

படத்தில் இருந்த சூழலும்..‌ அதில் வரையப்பட்ட உடல் மொழியும், அப்பட்டமாய் நிதன்யாவையே பிரதிபலித்தது.

ஒன்று மாடிப்படியின் வளைவில் குனிந்து, வெளிப்பக்கம் யாரையோ தேடுவது போன்ற பெண்ணின் தோற்றம். மற்றொன்று அவசர ஊர்தி செல்வதைப் பார்த்து, அதில் இருக்கும் மனிதருக்காக, வேண்டிக் கொள்ளும் மங்கையின் உருவம்.

இரண்டிற்கும் எவ்வித விளக்கங்களும் தேவையில்லை, 'அது அவள்தான்!'‌‌ என அறிந்து கொள்வதற்கு.

'தான் மட்டும் தான், ஒரு தலையாய் அவனை நேசித்து இருக்கிறோம்!'‌ என எண்ணி இருந்தவளிற்கு.. அப்படங்கள், வேறு ஒன்றைப் புரிய வைத்திருந்தன.

நிருதியின் அலட்சிய பார்வைக்கும், நொடியில் கடந்து செல்லும் வேகத்திற்கும் பின்னே.. கூரிய மதிநுட்பமும், கச்சிதமான திட்டமிடுதலும் இருப்பதாய் உணர்ந்தாள்.

அது போன்ற சூழலில் ஒரு பெண்ணின் படத்தை.. வரைகலை மூலமாய் உருவாக்குவது என்றால், அவன் அந்தக் காட்சியை எவ்வளவு ஆழமாய்க் கவனித்து இருக்க வேண்டும்.? எனில், தன்னைப் போலவே அவனும் நேசித்தானா.?

அப்படியானால்.. அவனின் விழிகளில் இருந்து சிதறிய‌ பார்வைக்கும், இதழ்கள் சிந்திய புன்னகைக்கும் பின்னிருக்கும் பொருள்தான்‌ என்ன.?

அதை‌ யோசித்து யோசித்தே, தலை வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டாள் நிதன்யா.‌

முதன்முதலாய் அவனைச் சந்தித்த நாளில் இருந்து, சரணின் திருமணம் வரை நடந்த நிகழ்வுகளை வரிசையாய்க் கோர்த்தாள். அத்தருணங்களில் எல்லாம் நிருதியின் நடவடிக்கைகளை, மனக்கண்ணில் திரைப்படமாய் ஓட்டிப் பார்த்தவளிற்கு, பட்டென்று ‌புரிந்து போயிற்று.. துளியும்‌ சந்தேகம் இன்றி, அவனும் தன்னைக் காதலித்து இருக்கிறான் என.

ஆனால், அந்தக் காதல் இன்னும் உள்ளதா.? இல்லாமல் என்ன.? சரணின் மாப்பிள்ளை அழைப்பில் அவன் விழிகளில் தோன்றிய அதிர்ந்த பார்வைப் போதுமே.?

மறுநாள் திருமணத்தின் பொழுது, 'தான்.. கேட்கும்‍, பேசும் திறன் அற்றவன்!' என‌ மௌன மொழியில் உரைத்தவனது வெறுமையான முகம் சொன்னதே, அவளை எதிர்கொள்ள இயலாது தவிப்பதை.

'இதற்கு மேலுமா, ஆராய‌ வேண்டும்.? அவன் நிலை, ஒருபுறம் இருக்கட்டும். தனது நிலை என்ன.?' எனச் சிந்தித்தவளின் உணர்வுகள் உறைந்து‍, பதிலளிக்க மறுத்தது.

'நிருதி போல் ஒருவனுடன், வாழ்நாள் முழுமைக்கும் பயணிக்க இயலுமா.? அந்த அளவிற்கு, மனம் அவனை நேசிக்கிறதா? அந்த நேசம்.. எச்சூழலிலும் துளியும் குறையாது இறுதிவரை தொடரும் வகையில் அத்தனை உறுதியானதா.?' என்று தன்னைத்தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே, குடும்பத்துடன் மதுரையை வந்தடைந்தாள்.

 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 14


மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் நிதன்யா. கடந்த கால நிகழ்வுகள் யாவும் அனிச்சையாய் மனதிற்குள் வந்து போக, கால்கள் செயல்பட மறுத்து நின்று கொண்டன. கண்கள் கலங்கத் துடித்திட, அதற்குத் தடையிட்டு விட்டு, படியிலேயே அமர்ந்தாள்.‌

பார்கவ், ஜனனியுடன் இணைந்து அவள் சென்னைக்கு வந்து, நான்கு நாள்கள் ஆகிவிட்டது.

நிருதியைப் பற்றி அறிந்த பின்னர், 'தன்னால் அவனுடனான வாழ்வை ஏற்க முடியுமா.?‌' என்ற குழப்பத்திலேயே தான்,‌ இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறாள். தெளிவான மற்றும் உறுதியான முடிவினை, எடுக்க இயலவில்லை.

காதலில் இருந்து வெளிவர விருப்பம் கொள்ளாத மனம், 'இதெல்லாம் ஒரு பிரச்சனையா? பிடிச்சிருக்கும் போது, மத்த குறைகள் எல்லாம் பெருசா தெரியாது. முயற்சி செஞ்சு பார்க்கலாம் சீனி.‌ வாழ்க்கை, நிச்சயம் சந்தோஷமா தான் இருக்கும்!' என நம்பிக்கை அளிக்க..

யதார்த்தமாய்ச் சிந்திக்கும் மூளையோ, 'அவனோட குறையை, நீ வேணும்னா சாதாரணமா நினைக்கலாம். ஆனா, உன்னோட குடும்பமும் அப்படியே நினைப்பாங்களா.?‌ எந்தத் தைரியத்துல, உனக்குள்ள இந்த மாதிரி எண்ணம் எல்லாம் வருது.? குறைகளைத் தாண்டி நேசிக்கிறேன்னு டைலாக் பேசுற காதல் எல்லாம், சினிமாக்கு வேணும்னா நல்லா இருக்கும். ஆனா நிஜத்துல.?‌

பார்கவ்வைப் பார்க்கிற தான.? வீட்டுப் பையன் அவன்‌, இத்தனைக்கும் மூத்த பிள்ள. ஆனா..‌ தம்பி கல்யாணத்துல மூனாவது மனுசனை மாதிரி நின்னுக்கிட்டு இருந்தான். இன்னுமே, கிருஷ்ணன் மாமா அவன்கிட்ட பேச மாட்டிறாரு.‌ அவனாலயும், உரிமையோட நடந்துக்க முடியல.

உன்னோட அம்மா அப்பா மட்டும் என்ன? நீ போயி காதலிக்கிறேன்னு சொன்னா, சந்தோஷமா ஓகே சொல்லிடுவாங்களா? அவ்வளவு தான், நீ அதுக்கு அப்புறம் வீட்டை விட்டு வெளியவே வர முடியாது.‌ ஸ்ட்ரைட்டா மேரேஜ் தான். அதுவும், அவங்க பார்க்கிற பையனோட! முட்டாள் தனமா.. பார்க்காத காதல், பேசாத காதல்னு கதை பேசிட்டுத் திரியாம, வாழ்க்கையை வாழப் பாரு!' என்று கண்டித்தது.

இருவேறு சிந்தனைகளிற்கு இடையே, ஒடுங்கிப் போனாள் நிதன்யா.‌

ஒருவரைப் பிடிப்பதற்கு எவ்வித காரணமும் தேவையில்லை.‌ அப்படித்தான் அவளுக்கு நிருதியைப் பிடித்தது. காதலும் கூட, அவ்வழியிலேயே தான் வந்தது.‌

இவள் நேசிப்பதை அவனும் அறிய மாட்டான்.‌ இவளைத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது. அப்படியே அதனை மறைத்து, மறந்தும் விட்டு, வேறு ஒரு வாழ்விற்குத் தயாராகி விடலாம்.

'எப்போது, சரி‌ என்பாள்?' எனக் காத்திருக்கின்றனர் குடும்பத்தினர்.

'ம்ம்..' என்று ஒரு வார்த்தை உரைத்தால், அந்த நிமிடத்திலேயே பணியைத் துவக்கிவிடுவர். ஒரு மணி நேரத்தில், மாப்பிள்ளைகளின் புகைப்படங்கள் அவளின் கைப்பேசிக்கு வரிசைக் கட்டிவிடும்.

எவனோ ஒருவனை அவள் தேர்ந்தெடுத்தால் போதும். அடுத்தச் சில வாரங்களில், மணமேடையில் அவளருகே மணமகனாய் அமர்ந்து இருப்பான். ஆனால் இவை எல்லாம் நடக்க வேண்டுமாயின், அவள் நிருதியை மறக்க வேண்டும். அவனின் நினைவுகளை மொத்தமாய் அழித்துவிட்டு, துணைவனாய் அறிமுகமாகப் போகிறவனை மனதில் பதிய வைக்க வேண்டும்.

'அதுதான், தன்னால் இயலுமா?' என்பது அவளிற்குள் இருக்கும் வினா.

மறுபுறம் அவனையே துணைவனாய் ஏற்பது என்றால், முதலில் நிருதியின் மனதில் இருக்கும் காதலை வெளிக் கொண்டு வர வேண்டும். திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும். நிச்சயம் அவளின் குடும்பத்தார், இதனை ஏற்கப் போவது இல்லை.‌ பார்கவ்வின் நிலை தான், அவளுக்கும்.‌ அவனிற்காவது, குடும்பத்தோடு இணையச் சரணின் திருமணம் என்றொரு வாய்ப்பு அமைந்தது.‌ அதுபோல், நிதன்யாவிற்கு எதுவும் கிடைக்க வழியில்லை.

தராசுத் தட்டில் எடை போடுவது போல், இருபுறமும் சாதகப் பாதகங்களை வைத்துப் பார்க்கையில், நிறுவை முள்ளானது நடுவில் நிலையாய் நின்றது.

ஒன்றில், அவளுடன் அவளே போராட வேண்டும். மற்றொன்றில்.. அவளைத் தவிர்த்து மற்ற அனைவருடனும் போராட வேண்டும். இரண்டுமே ஒப்பீட்டளவில் சமம் தான். ஆனால், இவை இரண்டிற்குமே ஆதியாய் இருக்கப் போவது என்னவோ,‌ நிதன்யாவின் நிலைப்பாடு மட்டுமே.

முழங்கால்களின் மீது தலையை வைத்து, பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டாள். இமைகள் தானாய் மூடின. படிகளில் நடந்து செல்பவரின் காலடி ஓசையினை, அவளால் கேட்க முடிந்தது‌. சிலர் நிதானித்து அவளை யோசனையுடன் பார்த்துச் செல்வதையும் உணர முடிந்தது.

அங்கிருக்கும் யாரிடமும்.. பேசிப் பழக்கம் இல்லை என்பதால், அவர்களும் பெரிதாய்க் கண்டு கொள்ளவில்லை.

'சீனி, எவ்வளவு நேரம் தான் இப்படியே உட்கார்ந்திருப்ப? பார்கவ்வுக்கும் ஜனனிக்கும் தெரிஞ்சா, என்ன ஏதுனு ஆயிரம் கேள்வி கேட்பாங்க. உன்னால பதில் சொல்ல முடியுமா.? ஒன்னு, எழுந்து வேலைக்குப் போ. இல்லேனா ஆஃபிஸுக்கு லீவ் சொல்லிட்டு வீட்டுக்குப் போ!' என அவளுள் இருந்த இன்னொருவள் அறிவுறுத்த கண்களைத் திறந்தாள்.

எதிரே வசீகரப் புன்னகையுடன் நின்று இருந்தான் நிருதிவாசன். திடுக்கிட்டுப் போனாள் பாவை‌.

கால்கள் அனிச்சையாய் எழ, நிதன்யாவின் கண்களில் அனிச்சையாய் உவர்நீர் திரையிட்டது. அது பெருகி.. பார்வையை மறைத்து, இமைகளைக் கடந்து வெளியேறுகையில், நிருதியின் உருவம் மெல்ல மறைந்து போனது.

எண்ணிலடங்கா ஊசிகளை, பதமாய் இதயத்தில் இறக்குவது போலான வலியை உணர்ந்தாள்.‌ வலியின் காரணமாய், உணர்வுகள் கொப்பளித்து வெளியேறிட வில்லை. மாறாக, பெரும் ரணமாய் அவளை அழுத்தியது.

அதற்கு மேலும், தாக்குப் பிடிக்க இயலாதவள், வேகமாய்ப் படிகளில் ஏறி வீட்டினை அடைந்தாள்.

பார்கவ்வும் ஜனனியும் முன்னரே வேலைக்குச் சென்று இருந்தது, வசதியாய்ப் போயிற்று. தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியைக் கொண்டு இல்லத்தைத் திறந்து, படுக்கையில் போய் விழுந்தாள்.

எட்டு மாத காலம்.. மனதிற்குள் மறைத்து வைத்திருந்த காதலும், சில நாள்களிற்கு அவனை மீண்டும் கண்டதால் உண்டான உணர்வுத் தாக்கங்களும், பெண்மையின் மனதை அலைக்கழித்து இம்சித்தது.

அதனை வேண்டாம் என்று ஒதுக்கவும் இயலாது, வேண்டும் என உடைமையாய் மாற்றிக் கொள்ளவும் முடியாது, மதில்மேல் பூனையாய்த் தவித்தாள்.

பொழுது கடந்து மாலை ஆனது‌. ஜனனி வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று, அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் பார்கவ்.

வழக்கத்திற்கு மாறாய் உற்சாகமின்றிக் காணப்பட்ட நிதன்யாவைக் கண்டு இருவருக்குமே குழப்பமாய் இருக்க, "என்னாச்சு?" என விசாரித்தாள் ஜனனி.

"ம்ப்ச்..‌ ஒண்ணுமில்ல.."

"ஒண்ணும் இல்லாம தான், மூஞ்சி இப்படிச் சுருங்கிப் போய் இருக்குதா.?"

"கொஞ்சம் தலைவலி. அதான் ஆஃபிஸுக்கு லீவ் போட்டுட்டுப் படுத்திட்டேன்."

"இப்ப எல்லாம், உனக்கு அடிக்கடி தலைவலி வர்றது மாதிரி தெரியிதே.?" என்றவாறே மூவருக்குமான தேநீருடன், சமையல் அறையில் இருந்து வந்தான் பார்கவ்.

"தேங்க்ஸ்பா.."‌‌ என ஜனனி ஒரு கோப்பையை எடுத்துக் கொள்ள, "ஆமா, அடிக்கடி தான் தலைவலி வருது. ஆனா, அதுக்கான டிரீட்மெண்ட் தான் என்னனு தெரியல." என்றாள் அவள்.

"அது வெறும் தலைவலியா இருந்தா, ஜெஸ்ட் ஒன் டேப்லட் போதும். வேற ஒரு விசயத்தால தலைவலி வந்திருந்தா, அந்த விசயத்தைத் தான் முதல்ல என்னனு பார்க்கணும். நோய் நாடி, நோய் முதல் நாடி!" என்று பார்கவ் உரைக்க, முயன்று புன்னகைத்தபடி எழுந்து சென்றாள் நிதன்யா.

நாள்கள் நகர நகர, பாவைக்கு அழுத்தமும் அதிகமானது.

முயற்சி மெய் வருத்த கூலி தரும் என்பர்.‌ நிருதியை மறப்பதற்காக அவள் மேற்கொண்ட முயற்சியில், மெய்தான் வருந்திப் போனது.‌ அதனது கூலி‌, கிட்டிய பாடில்லை. பிரிவாற்றாமையில் பசலை நோய் படர்வது இயற்கை. ஆனால், இங்குக் காதல் தன் வேலையை அவளிடம் காட்டி விட்டது.

உடல் சற்று மெலிந்து, முகத்தின் தெளிவும் காணாது‌‌ தென்பட்டாள்.

உடன் பணிபுரிவோரும்.. சற்றே நெருக்கமான நண்பர்களும், "என்னாச்சு? ஏன் இப்படி இருக்க.?"‌ என அவ்வப்போது கேட்டபடியே இருந்தனர். உரைப்பதற்குப் பதில் எதுவும் இல்லாததால், "ஒண்ணுமில்ல!" என்பதை மட்டும் லயம் மாறாமல் ஒப்பித்தாள்.

சரணின் திருமணத்திற்குப் பின்னர்.. பார்கவ்வின் உறவு குடும்பத்தாருடன் சற்றுச் சுமூகமாக இருக்க, நிதன்யாவிடம் கவனித்த மாற்றங்களை, அத்தையான கீதாவிடம் உரைத்து விட்டான்‌.

காணொலி அழைப்பில் மகளிடம் பேசிய சரவணனும் கீதாவும், "என்னடா உனக்கு.?‌" என்று விசாரிக்க, "தெரியல ம்மா, என்னமோ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் ஆகுது!" எனப் பதில் அளித்தாள்.

சரவணன், "வொர்க் லோட் அதிகமா இருக்கா என்ன?"

"அப்படி எதுவும் இல்லப்பா."

கீதா, "ஒண்ணு செய், நீ ஊருக்கு வா.."

அவள் கேள்வியாய்ப் பார்க்க, "நீ சம்பாதிச்சு தான், நாம வாழ்க்கை நடத்தணும்னு எந்த அவசியமும் இல்லடா. இங்க வா. உனக்கும் வயசாகுதுல? ரொம்ப நாளைக்கு எல்லாம் கல்யாணத்தைத் தள்ளிப் போட முடியாது. அதுவரைக்கும் எங்கக்கூட இரு!‌‌" என உரைத்தார் சரவணன்.

மற்றதை விட, திருமணம் என்ற சொல் அவளுக்கு மேலும் கலக்கத்தைக் கொடுத்தது. இதுபோல் குழப்பத்திலேயே நாள்களைக் கடத்தாமல், விரைவில் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

அத்தோடு, 'உறவுகளுடன் இருந்தால், ஏதேனும் தெளிவு கிட்டக்கூடும்!' என்ற எண்ணமும்‌ தோன்ற, ஊரிற்குச் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்தாள்.

வேலையை விட்டுவிட அவளிற்கு மனம் இல்லை. பணத் தேவையைக் கடந்து, தனது எதிர்காலத்திற்கான பாதுகாப்பாய் நினைத்தாள் அதை. வீட்டைத் தாண்டி, ஒரு பெண்ணிற்குத் தைரியம் அளிக்கக்கூடிய, மனதிற்கு நெருக்கமான மற்றொரு உலகம் ஒன்று வேண்டுமாயின், அது அவள் பணி செய்யும் இடமாகத்தான் இருக்க முடியும். ஆகையால், அதில் மட்டும் உறுதியாய் இருந்தாள் நிதன்யா.

இல்லத்தில் இருந்தபடியே வேலை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு, மதுரையைச் சென்று அடைந்தாள்.

சீனி எப்பொழுதுமே, விஜயரங்கனின் குடும்பத்திற்கு இளவரசி தான். தற்போது மனம் இயல்பாக இல்லை என்று வந்தவளை, விடுவார்களா என்ன.?

காலை விழிப்பதே, தாத்தா பாட்டியின் முகத்தில் தான் என்றானது. மூன்று வேளையும் அன்னையும் அத்தையும், "என்ன வேணும்? அதைச் செய்யவா? இதைச் செய்யவா?" எனக் கேட்டுக் கேட்டுச் சமைத்துத் தந்தனர்.

மஹதிக்கும் அவளிற்கும் இரண்டு வயது தான் வித்தியாசம் என்பதால், நெருங்கிய தோழிகளாய் ஆயினர். அவ்வப்போது அவளை அழைத்துக் கொண்டு கடைக்குச் செல்வது, அங்குச் சரணிடம் வம்பு வளர்ப்பது, அதற்கு அப்படியே நேர் எதிராக.. தீரஜ் இவளை சீண்டுவது என இரண்டரை மாதம் நன்றாகவே கழிந்தது நிதன்யாவிற்கு.

இத்தனைக்கு இடையிலும் அவனின் ஞாபகம் வரத்தான் செய்தது. காதலுக்கு இடையே, உறவுகளை வைத்து சுவர் எழுப்பினாள். ஆனால் அந்தச் சுவர், அவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்கவில்லை.

எண்திசைகளிலும் அடைப்பை ஏற்படுத்திப்.. புயல், வெள்ளம், மழை, வெயில், திருடர்களிடம் இருந்து தப்பிக்கலாம். ஆனால் காற்றை என்ன செய்வது? அதன் வழியாக உள்நுழையும் சுவாசத்தை நிறுத்த முடியுமா? நிறுத்தி வைத்தால், எவ்வாறு உயிர் வாழ்வது? அப்படித்தான் ஆகிப் போனது நிதன்யாவின் நிலையும். நிருதியின் மீதான காதல், காற்றாய் அவளைச் சுற்றிக் கொண்டே இருந்தது.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 15


சரணிற்குத் திருமணம் முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கி இருக்க, தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்திற்கான தேதியைக் குறித்து இருந்தனர், அவனது குடும்பத்தினர்.

மஹதியின் மூலமாய் ஏற்கனவே அவளின் பிறந்த வீட்டினருக்குச் செய்தி சேர்ந்திருந்தாலும், விஜயரங்கன் பத்மா தம்பதியரும் முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

கிருஷ்ணன் சொன்னதின் பெயரில்.. மஹியை‌ அழைப்பதற்காக நிதன்யா அறைக்குள் வர, மடிக்கணினியைத் திறந்து வைத்தபடி அமர்ந்து இருந்தாள்.

"மஹி.." என்ற அழைப்பில் திரும்பிட, கணினியின் திரையில் தெரிந்தான் நிருதிவாசன்.

பாவையின் கண்கள் அனிச்சையாய் அவனின் மீது பதிய, "என்ன சீனிக்கா?‌" என வினவி, தன்‌‌ பக்கம் திருப்பினாள் மஹதி.

அவளைப் பார்த்த நிதன்யா, "அத்தை மாமா, உன்னைக் கூப்பிடுறாங்க."

"கொஞ்ச நேரம் கழிச்சு, வரவா அக்கா.?"

"விசேஷத்துக்குப் பொருள் எல்லாம் வாங்குறதுக்குக் கிளம்பிட்டு இருக்காங்க.‌ உனக்கு எதுவும் தேவைனா, அத்தைக்கிட்ட‌ சொல்லி விட்டா, சேர்த்து வாங்கிட்டு வந்திடுவாங்க இல்ல?"

"ஹோ.." என்றவள் நிருதியின் புறம் திரும்பி, வலக்கரத்தின் இரு விரல்களைக் காட்டி அசைத்து, இரண்டு நிமிடம் காத்திருக்கும் படி சொல்லிச் செல்ல, புன்னகைத்துத் தலை ஆட்டினான் அவன்.

நடந்ததைத் கவனித்திருந்த நிதன்யா, அங்கேயே நின்று கொண்டாள்.

இருவரது கண்களும் சந்தித்துக் கொள்ள, அடுத்த நொடியே வேறு பக்கம் பார்வையைத் திருப்பினான் ஆடவன்.

உடல் விட்டு விலகாத நிழல் போல, இவர்களின் பந்தமும் தொடர்ந்து கொண்டே வருவதாய்த் தோன்றியது. எத்தனை தூரம் விலகிச் சென்றாலும், ஏதோ ஒரு தருணத்தில் அவளின் விழிகளின் எதிரே.. நிழலாகவோ, நிஜமாகவோ அன்றி நினைவாகவோ வந்து நின்றான் நிருதி.

மடிக்கணினியின் முன்பு இருந்த, மஹதியின் இருக்கையில் அமர்ந்தாள் நிதன்யா.

இதுநாள் வரை இருந்த சிந்தனை, தயக்கம், குழப்பங்கள் அனைத்தும் அவனைக் கண்ட நொடிதனில், பரிதியில் கரையும் பனித்துளியாய் கரைந்து காணாமல் போனது.

இவள்.. அவனின் முகத்தைக் காண முயல, அவனோ அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாதவன் போல், பட்டென்று மடிக்கணினியை அணைத்தான்.

காட்சியாய் இருந்த அவனின் உருவம் மறைந்து, திரை கருமை ஆனது நிதன்யாவின் புறம். அனிச்சையாய் அவளின் இதழ்களில் புன்னகை மலர, எழுந்து அறையில் இருந்து வெளியேறினாள்.

இந்தநொடி அவளிற்குப் புரிந்து போயிற்று, 'நிருதியை, எப்பொழுதுமே மறக்க முடியாது!' என்று. அதன் பின்னர், சிந்திக்கவே இல்லை நிதன்யா‌. ஆடவனைக் கரம் பற்றுவது என முடிவிற்கு வந்தாள். அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்ள, மனதளவில் தயார் ஆனாள்.

அறையை நோக்கி வந்த மஹதியைக் கண்டவள், "என்ன, உன்னோட மாமியார் மாமனார்கிட்ட பேசியாச்சா.?"

அவள் தலையசைத்துச் சிரிக்க, "எனக்கு ஒரு டவுட், கேட்கலாமா.?"

"என்ன அக்கா? கேளுங்க."

"தப்பா நினைக்காத.‌ மிஸ்டர் நிருதியால பேசவும் முடியாது, கேட்கவும் முடியாது. அப்புறம் எப்படி ஸ்கைப்ல.?"

"பொதுவா அண்ணா தூரமா இருந்தா, வாட்ஸ் அப்ல தான் பேசுவோம். அதே நேரம்.. நாம மெசேஜ் பண்ணுறப்ப, அவர் சிம்பிளா ரிப்ளை பண்ணிடுவாரு. அவரைக் கல்யாணத்துல பார்த்தது தான். அதுக்கு அப்புறம், நேர்ல பார்த்துப் பேச சான்ஸ் கிடைக்கல. அதான் ஃபங்ஷனுக்கு வரச்சொல்லி இன்வைட் பண்ணி இருந்தேன். ஒர்க் இருக்கு, எப்படி‌ ஆஃபிஸை விட்டு வர்றதுனு என்னை ஏமாத்தப் பார்த்தாரு. நான் விடாம, வீடியோ கால்ல கூப்பிட்டுட்டேன். மெசேஜ்ல சமாளிக்கிற மாதிரி, நாம முகம் பார்த்துப் பேசும் போது அவரால சமாளிக்க முடியாது. இந்த விசயத்துல, அண்ணா கொஞ்சம் சென்ஸிடிவ். அதான், கண்டிப்பா வரணும்னு ஆர்டர் போட்டு இருக்கேன்."

நிதன்யா சிரித்து, "ஓவர் பாசமா இல்ல இருக்கு.?"

"எனக்கு, திவா அண்ணா மாதிரி தான் நிருதி அண்ணாவும். அவனாவது அப்பப்ப ஏதாவது வம்பு செய்வான்‌. ஆனா, இவரு சோ ஸுவீட். கோபமே படத் தெரியாது அக்கா. இவர்கிட்ட, எவ்வளவு வேணும்னாலும் சேட்டை பண்ணலாம். அதேபோல.. நான்‌ என்ன கேட்டாலும் அதுக்கு மறுப்பே சொல்ல மாட்டாரு. ஆனா.‌.‌ ஃபங்ஷனுக்கு வர்றதுக்கு மட்டும், ஏன் மறுக்குறாருனு தெரியல.‌ நம்ம வீட்டு ஆளுங்களோட அவ்வளவா பழக்கம் இல்லேல? அதான், தயங்குறாரு போல!" என மஹதி உரைத்துச் செல்ல, புன்னகையுடன் நின்றிருந்தாள் நிதன்யா.

அவளிற்குப் புரிந்தது, நிருதியின் நிலைப்பாடு.‌

சரணின் திருமணம் வரை, அவனுமே இயல்பாகத் தான் இருந்திருக்கிறான்‌. இவளைக் கண்ட பின்புதான், மஹி சம்பந்தமான நிகழ்வுகளைத் தவிர்க்கிறான். அதுவும் தன்னால், தன்மீது அவனிற்கு இருக்கும் ஈர்ப்பால்! எனத் தெளிவாய் உணர்ந்து கொண்டாள்‌.

திருமணத்தின் போது..‌ மஹியை அழைத்து வருவதற்காக மணமகள் அறைக்குச் சென்றிருந்த தருணம், அவளிற்கு உணவு ஊட்டி கவனித்துக் கொண்டதே போதுமானதாய் இருந்தது, அவன் எப்படியானவன் என அறிந்து கொள்வதற்கு.‌

அதைத் தவிர்த்து..‌ நிருதியின் குணத்தைத் தெரிந்து கொள்ள, நிதன்யாவிற்கு வேறு ஒருவரின் வாய்மொழி சொற்கள் கூட அவசியம் என்று தோன்றிடவில்லை.

மஹதியின் அழைப்பிற்கு, அவன் வருவான் என நம்பிக்கை இல்லை பாவைக்கு.

'நீ இருக்கும் போது, நிருதி நிச்சயம் வர மாட்டான்!' என்றே அவளின் மனதும் சொன்னது.

இதற்கு மேலும் இந்தக் கண்ணாம்மூச்சி ஆட்டத்தைத் தொடர்வதற்கு, நிதன்யா விரும்பவில்லை. சட்டென்று அழைப்பு விடுத்தாள், திவாகருக்கு.

மறுபுறம் அலைவரிசையை இணைத்தவன், "ஹலோ சிஸ்டர்."

"எப்படி இருக்கீங்க பிரதர்.?"

"ஃபைன். என்ன கால் எல்லாம்.?"

"சும்மா தான். ஃபங்ஷன் இருக்கு இல்ல? நீங்க எல்லாம் எப்ப வருவீங்க.?"

"ஃபங்ஷன் அன்னைக்குத்தான் வருவோம். எங்க பக்கம் அதுதான் வழக்கம்."

"ம்ம்.. ரிலேசன்ஸுக்கு எல்லாம் சொல்லியாச்சா?‌ யார் யார் எல்லாம் வர்றீங்க.?"

"நாங்க மட்டும் தான், வேற யாரும் வரல."

"ஏன்.?"

"தாலி பிரிச்சுக் கோர்க்கிறது தான? இதுக்கு, எதுக்கு ரிலேசன்ஸ் எல்லாம்? அப்புறம் அவங்களுக்கு எல்லாம் பஸ் பிடிக்கணும். செலவு இழுத்திடும்."

"அதுசரி!" எனச் சிரித்தவள், "உங்க ஃப்ரெண்டும் வரலயா?"

"வரலனு தான் சொல்லிட்டு இருக்கான். நாங்க, வானு கூப்பிட்டு இருக்கோம்."

"சும்மா வாயாலயே சொல்லாம, கையைப் பிடிச்சு இழுத்துட்டு வந்திடுங்க."

"என்னவாம்? திடீர்னு அவனைப் பத்தி எல்லாம் பேசுற?"

"மஹி ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கா, அதான்."

"ம்ம்.. நான் டிரை பண்ணுறேன் சிஸ்டர்."

"டிரை எல்லாம் இல்ல. கன்ஃபார்ம்டா கூட்டிட்டு வர்றீங்க, அவ்வளவு தான்!"

"ஆர்டர் எல்லாம் பலமா இருக்கு.?"

"எஸ் எஸ்.. ரெண்டு தங்கச்சியும் அண்ணனுக்கு ஆர்டர் போட்டிருக்கோம். சோ, சொன்னதைச் செய்யிங்க!"

"சரி சரி..‌" எனச் சிரித்தவன் நிருதியை அழைத்து வருவதாய் வாக்களிக்க, நிறைந்த மனதுடன் கைப்பேசியை நிறுத்தினாள் நிதன்யா.

இரவும் பகலுமாய் நகர்ந்து விசேஷ நாளும் வந்து சேர்ந்தது. மஹதியின் அன்பு கட்டளைக்காக, நண்பனின் பிடிவாதத்தை ஏற்று நிருதியும் விழாவிற்கு வந்திருந்தான்.

ஆடவனின் செவியையும் வாயையும் தான் ஆண்டவன் வஞ்சித்து விட்டான்.‌ ஆனால், உணர்தலும் புரிதலும் அவனிற்கு அதிகப்படியாகவே இருந்தது. அந்த ஒரு காரணத்தினால் தான், நிதன்யாவை விட்டு நெடுந்தூரம் விலகிச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தான்.

முதல்முறை, அவளுக்குத் திருமணம் என்ற தவறான புரிதல், விலகலை நிகழ்த்தி விட்டது‌ . பின்னர் உண்மையை அறிந்தும் கூட.. நிருதியின் மனம், தன்னுள் இருந்த காதல் அணுக்களைப் புதுப்பிக்க விரும்பவில்லை. அதற்கு இரு முக்கியக் காரணங்கள்.

ஒன்று.. தங்கை உறவில் இருக்கும் மஹதியின் வாழ்வில், தன்னால் எவ்வித பிரச்சனையும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்செரிக்கை.

இரண்டாவது, தேன்கூடு போல் இணைந்திருக்கும் நிதன்யாவின் குடும்பம். தனது காதல் வெளிப்பட்டால், அது தேன்கூட்டின் மீது எறியப்படும் கல்லாய் மாறி, அதனது ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்று எண்ணினான்.

தாய்த் தந்தை இல்லாது.. ஆறுதலிற்காக நண்பனது குடும்பத்தை உறவாய் பற்றிக் கொண்டிருக்கும் அவனால் நன்றாகவே உணர முடிந்தது, மஹதியின் புகுந்த வீட்டினரின் பாசப் பிணைப்பை.

பார்கவ்வின் காதல் விவகாரத்தையும், அதனால் ஏற்பட்ட மன வருத்தங்களையும், உடன்பிறவா தங்கையின் மூலமாய்த் தெரிந்து கொண்டவனின் கண்கள், நிதன்யா இருக்கும் திசையில் கூடத் திரும்ப மறுத்தது.

'வீட்டின் இளவரசிக்கு, ஒலி அற்ற ஒருவனை.. எந்தப் பெற்றோர் தான் துணையாய் ஏற்க சம்மதிப்பர்? ஏற்கனவே ஒரு காதல், அவர்களது உறவுக்குள் விரிசலை உண்டாக்கி இருக்க..‌ இரண்டாவதாய் இன்னொரு காதல் அரங்கேறினால், அது உறவுப்பாலத்தை உடைத்து விடுமே?' எனத் தவிப்பு அவனுள்.

இவை அனைத்திற்கும் மேலாய்.. நேசம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, நிதன்யாவின் வாழ்விற்குள் நுழைந்து, அவளின் கனவுகளைச் சிதைக்க அவன் விரும்பவில்லை‌. அதனாலேயே.. தனது காதலை அவளிடம் தெரியப் படுத்தக்கூட நிருதி முனையவில்லை.

எனினும், விதி வலியது. அது தனது விளையாட்டை, கனக்கச்சிதமாய் ஆடி விட்டது.

விளையாட்டு,‌ எவ்வகையான வினையாய் மாறும் என இனிதான் தெரிய வரும். வேதியியல் வினை.. சரியான அளவில் நிகழ்ந்தால், மனம் ஒன்றுபடலாம். இல்லையேல் இரண்டோ மூன்றோ.. உறவு பிளவுகள் எத்தனை நடக்குமோ.?

மஹதியையும் சரணையும் ஒன்றாய் மனையில் அமரவைத்து.. மஞ்சள் கயிற்றில் இருந்த தாலியை‌, பொன் சங்கிலிக்கு மாற்றி, இருவருக்கும் நலங்கு வைத்தார், இல்லத்தின் மூத்த சுமங்கலியான பத்மா.

அவருக்குப் பின்னர்.. வயதின் இறங்கு முகத்தில், தம்பதியினர் இணைந்தும், மற்றவர்கள் தனியாகவும், நலங்கு வைத்து அட்சதை தூவி வாழ்த்தினர்.

சுபநிகழ்வு முடிந்து.. அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, நண்பர்கள் தனித்து நின்றிருந்த இடத்திற்கு வந்தாள் நிதன்யா.

"என்ன பிரதர், தனியா இங்க வந்துட்டீங்க?" எனத் திவாகரிடம் வினவினாலும், அவளின் கண்கள் இருந்தது என்னவோ, நிருதியின் மீது தான்.

"வேற என்ன செய்யிறது? பெருசுங்க கூட இருந்தா.. ஒன்னு பழைய கதையைக் கேட்கணும், இல்லேனா அட்வைஸுக்குக் காதை ரெடியா வச்சுக்கணும். அதான் ஓடி வந்துட்டோம்."

அவள் சிரித்து, "பார்கவ், சரண் எல்லாம் வெளிய போகலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க வர்றீங்களா.?"

"எங்க?"

"மதுரையில போறதுக்கு இடமா இல்ல? நாயக்கர் மஹால் தூணைக் கட்டிப்பிடிச்சு சுத்தி வந்தாலே, பொழுது போயிடும்."

"சரிதான். ஜோடி இல்லாத நீயும் நானும் தூணைத் தான் கட்டிப் பிடிக்கணும். வேற வழி!"

நிதன்யா சிரித்து, "உங்க ஃப்ரெண்டு பேச மாட்டாரா.?"

"அவனோட லாங்வேஜ், உனக்குப் புரியுமா?"

"டிரை பண்ணா தான‍, புரியுமா புரியாதானு தெரியும்.?"

"அப்ப.. டிரைப் பண்ணு. நான் பார்கவ்கிட்டப் பேசிட்டு வர்றேன்!" என்றுவிட்டு நகர்ந்தான் திவாகர்.

அதுவரை.. நண்பனது வாய் அசைவைக் கவனித்துக் கொண்டிருந்த நிருதியும் ஓர் அடி எடுத்து வைக்க, அடுத்த நொடி அவனின் கைப்பற்றி நிறுத்தினாள் நிதன்யா.

அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, "உங்களோட லாங்வேஜ் தான், எனக்குத் தெரியாது. பட், நான் பேசுனா உங்களால புரிஞ்சுக்க முடியும் தான?"


'என்ன பேசப் போறா.?' என்ற ரீதியில் நோக்கிட, "ஐ லவ் யூ, நிரு!" என, தனது காதலை உரைத்தாள் பாவை.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 16"நான் கிளம்புறேன்!‌" எனப் பொருள் படும்படி.. வலக்கரத்தால் தன்னைத் தொட்டுக் காட்டி, காற்றினில் கையசைத்த நண்பனைப் புரியாமல் பார்த்தான் திவாகர்.

"கிளம்புறியா?"

அவன் தலை அசைக்க, "எங்கக்கூடச் சேர்ந்து வந்துட்டு, இப்ப நீ மட்டும் தனியா கிளம்புறேன்னா‌ என்னடா அர்த்தம்?"

"அதான் ஃபங்ஷன் முடிஞ்சிடுச்சே?"

"இன்னும், நீ சாப்பிட கூட இல்ல."

"பரவாயில்ல, வழியில பார்த்துக்கிறேன்!"

"விளையாடாத நிருதி?"

"நான் எதுக்கு விளையாட போறேன்? மஹிக்கிட்ட சொல்லீடு!"

"அதெல்லாம் என்னால முடியாது. நீயே சொல்லீட்டுப் போ!"

"டேய்!‌ நீ வேற.. நான் சொன்னா, என்னை விடமாட்டா.‌ அதான் உன்னைச் சொல்லச் சொல்லுறேன்."

"அது, உன் பாடு!"

"திவா.. ஏண்டா?"

"அதை நான் கேட்கணும், ஏன் இப்படிச் செய்யிறனு? என்னை விட, நீதான மஹி மேல அன்பா இருப்ப?‌ ஆனா‍, அவளோட கல்யாணத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்ட? மறுவீடு அப்பவும், அவளைப் பார்க்க வரல. இடையில, நான் ரெண்டு தடவை மதுரைக்கு வர்றப்ப கூப்பிட்டேன்ல?‌ அப்பவும் வர மாட்டேன்னு சொல்லிட்ட. என்ன தான்டா, பிரச்சனை உனக்கு?"

நிருதி அமைதி காக்க, "கேட்கிறேன்ல? சொல்லுடா, என்ன பிரச்சனை.?"

"நான் சொல்லுறேன் அண்ணா, என்ன பிரச்சனைனு!‌" என்றபடி நிதன்யா வர, கேள்வியாய்ப் பார்த்தான் திவாகர்.

அவளின் வருகையை உணர்ந்து நிருதி வேறுபுறம் திரும்பிக் கொள்ள, "என்னமா சொல்லுற?" என்றவனின் முகத்தில் டன் கணக்கில் குழப்பம் வழிந்தது.

"இதுக்கு என்ன அர்த்தம்னு, உங்க ஃப்ரெண்டைச் சொல்லச் சொல்லுங்க அண்ணா!‌" என அவள் தனது கைப்பேசியில் ஒரு புகைப்படத்தைக் காட்ட, வாங்கிப் பார்த்தான் திவா.

"நிருதியோட வீட்டுல இருந்த, டிஜிட்டல் பெயிண்டிங் இது. நீ, ஃபோட்டோ எடுக்கிறப்ப பார்த்தேனே? இதுல என்ன இருக்கு.?"

"அப்படியே அடுத்த ஃபோட்டோவை ஸ்க்ரோல் பண்ணிப் பாருங்க!"

அவன் தொடுதிரையில் விரலால் நகர்த்த, அதே புகைப்படத்தில், நிதன்யாவின் முகம் பொருந்தி இருந்தது.

திவா திடுக்கிட்டு, "இது, நிருதி பண்ண டிராயிங் இல்லமா."

"உங்களுக்குக் கன்பார்ம்டா தெரியுமா பிரதர்.?"

"ஐம் ஸுயர் நிதா."

"அவர் வரைஞ்சு வச்சிருக்கிறது, என்னைத் தான் அண்ணா."

"என்னமா, என்னென்னமோ சொல்லுற? உன்னை எப்படி.?"

"நாம.. சென்னையில ஒரே அப்பார்ட்மெண்ட்ல தான் இருந்தோம். உங்களுக்குத் தெரியும்ல?"

"ம்ம்.. பார்கவ் சொன்னாரு.‌ ஆனா, உங்க ரெண்டு பேரையும் நான் அவ்வளவா பார்த்தது இல்ல. அதுனால ஞாபகம் வரல."

"நான், உங்களை ரெண்டு மூனு தடவைப் பார்த்திருப்பேன். ஆனா இவரை.." என நிருதியைச் சுட்டிக் காட்ட, திவாகர் நண்பனை நோக்கினான்.

தோழனது முக மாற்றத்தைக் கண்ட நிருதிக்கு, அதற்கு மேல் பேச்சு தொடர்ந்தால், ஏதேனும் பிரச்சனை ஆகிவிடுமோ என்ற ஐயம் தொற்றிக் கொண்டது. ஆகையால்.. திவாவின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து அவசரமாய் நகர, நிதன்யா மற்றொரு கையை இறுக்கமாய்ப் பற்றி, இருவரையும் நிறுத்தினாள்.

நண்பனைப் பிடித்திருக்கும் நிதன்யாவைத் திகைப்புடன் பார்த்த திவாகர், "என்னமா இது.?"

"ஹீ லவ்ஸ் மீ அண்ணா. ஐ டூ."

அவளின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் இருந்த நிருதி.. இவர்களின் உரையாடலைக் கவனிக்காத நிலையில், திவாகருக்குத் தான் தலை சுற்றியது.

"இங்க, என்னடா நடக்குது?" என அவன் நிருதியின் முகத்தைப் பற்றி வினவ, அவனோ என்ன மறுமொழி உரைப்பது என்று புரியாமல் திருதிருவென விழித்தான்.

"எனக்கு, இவரை ஒன்றரை வருசத்துக்கு மேல தெரியும் அண்ணா. தினமும் ஈவ்னிங், ஸ்டெப்ஸ்ல மீட் பண்ணிக்குவோம். ஆனா, அந்த டைம்ல பேசுனது இல்ல. பட்.." என அவள் நிறுத்திட, "பட்.?"‌ என்று தவிப்புடன் வினவினான் திவாகர்.

"எங்களோடது சொல்லப்படாத காதல். திடீர்னு ஒருநாள் காணாம போயிட்டான். சரணோட கல்யாணத்துல தான், திரும்பவும் மீட் பண்ணேன். இந்தப் பெயிண்டிங்ஸ் மூலமா தான், இவரும் என்னை விரும்புறது தெரிஞ்சிச்சு!"

திவாகர் நண்பனை பார்க்க, உணர்வு துடைத்த முகத்துடன் நின்றிருந்தான் நிருதி.

"என்னடா சொல்லுறா அவ.?"

அவன் சிலை போல் நிற்க, "நீ, லவ் பண்ணியா நிருதி.?"

...

"இப்ப மட்டும், சொல்லல? நீ, என்னைக்குமே என்கிட்ட பேசிக்க மாட்ட!"

"இல்லடா!" என அவன் சைகை மொழியில் உரைக்க, "அப்படி இல்லாமத்தான், இதைச் சிஸ்டம்ல டிரா பண்ணியா நீ.?"

"ஒரு தடவை மாடிப்படியில ஏறும் போது பார்த்தேன். வியூ நல்லா இருந்துச்சு. அதான் பண்ணேன். அதுக்காக, அந்தப் பொண்ணை டிரா பண்ணதா ஆகிடுமா.?"

திவா.. நிதன்யாவைப் பார்க்க, "ஏன்.. திடீர்னு சென்னையில இருந்து கிளம்புனாருனு கேளுங்க."

"இந்திராணி அம்மா இறந்ததுல இருந்தே, நான் அவனைக் காஞ்சிபுரத்துக்கு வரச்சொல்லி கூப்பிட்டுக்கிட்டு தான் இருந்தேன். அவனுமே, கொஞ்ச நாள் கழிச்சுப் போகலாம்னு சொல்லி இருந்தான். அப்படித்தான் ஊருக்கு வந்தோம்."

"ஓஹோ.. சரி அண்ணா." என்றவள் ஆடவனின் அருகே செல்ல, கிளம்புவதிலேயே குறியாய் இருந்தான் அவன்.

"ஒன் செகண்ட், என்னைப் பாருங்க!"

தன்மீது மோதும் அவள் சுவாசத்தின் அளவீடை வைத்து பேசுவதை உணர்ந்தவன், வேண்டும் என்றே முகத்தைத் திருப்பாது வேறுபுறம் பார்த்தான்.

"நிரு.." என்று அவள் மீண்டும் அழைக்க, இருவரையும் கவனித்த திவாகர்.. நண்பனின் தாடையைப் பற்றி நிதன்யாவின் பக்கம் திருப்பினான்.

"தேங்க்ஸ் அண்ணா." என அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள்.. நிருதியிடம், "சரி, நீங்க என்னை லவ் பண்ணல. நான், உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டதா இருக்கட்டும்.‌ பட், ஐ லவ் யூ. என்னோட பிரபோஸலுக்கு உங்க பதில் என்ன.?"

அவன் தடதடக்கும் மனதுடன் எச்சில் விழுங்கிய படி அவளைத் தவிப்புடன் நோக்க, "என்கிட்ட பொய் சொல்லிட்ட இல்ல, நிருதி.?" என்றான் திவா.

நிதன்யா‌ அவனைப் பார்க்க, நிருதியின் கண்களும் திரும்பியது.

"பொய் சொல்லிட்ட இல்ல.?"

அவன் 'இல்லை' என்பதாய்த் தலை அசைக்க, "உனக்குப் பொய்ச் சொல்ல வராதுடா. அப்படியே சொன்னாலும், உன்னோட கண்ணு காட்டிக் கொடுத்திடும்‌. உன்னோட ரெண்டு கையும் உடலசைவும் பேசுறதை விட, கண்ணு அதிகமா பேசும்‌. நீ அப்ப மட்டும் இல்ல, இப்பவும் நிதாவை லவ் பண்ணுற! அதுனால தான், உன்னால அவளை நேருக்கு நேர் ஃபேஸ் பண்ண முடியல.‌ ஒதுங்கி, ஓட பார்க்கிற!" எனத் தோழனின் மனநிலையைப் புட்டுப் புட்டு வைத்தான் திவா.

நிருதியால் தற்போது நண்பனையும் எதிர்கொள்ள இயலவில்லை. அச்சூழலை கையாளும்‌ வழி தெரியாது கண்களை மூடிக் கொள்ள, இமைகளிற்குள் உவர்நீர் தளும்பி நின்றது.

ஒரு நீடித்த மௌனம் நிலவியது அங்கு.

"இப்ப, நீ போ. அப்புறம் பேசலாம் மத்ததை!‌" என உரைத்து நிதன்யாவை அனுப்பி வைத்த திவாகர், நிருதியை‌ மதுரையில் இருந்து கிளம்ப அனுமதிக்கவில்லை. தன்னுடனே அவனை வைத்திருந்தான்.

விஜயரங்கன்.. "வந்தது வந்துட்டீங்க. ஒருநாள்‌ இருந்துட்டுப் போங்க. மஹிக்கும் சந்தோஷமா இருக்கும்!" என மோகனிடம் உரைக்க, திருமணத்திற்குப் பின்னர் ஐந்து மாதங்கள் கடந்து, தங்கள் வீட்டுப் பொண்ணுடன் கழிக்கும் நேரத்தை மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொண்டனர், மஹதியின் குடும்பத்தார்.

திவாவும் நிருதியும்.. தீரஜின் அறையில் தங்கிக் கொள்ள, பானுமதி மோகன் தம்பதியருக்குத் தனி அறையை ஏற்பாடு செய்திருந்தனர்.

பார்கவ் ஜனனி, சரண் மஹதி, தீரஜ் ஐவரும் பகல் பொழுதில் வெளியே செல்வதற்குத் தயாராக, நடந்து முடிந்த நிகழ்வினால் மற்ற மூவரும் வீட்டிலேயே இருந்து கொண்டனர்.

அத்தோடு திவாகருக்கு, நண்பனிடம் பேச வேண்டி இருந்ததால், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டான்.

இளையவர்கள்.. கிளம்பிச் சென்றதும், நிருதியைத் தனியாய் அழைத்துப் பேசினான். தற்போதைய தருணத்தில் தனக்கு இருக்கும் ஒரே நண்பனிடம், எதையும் மறைக்க இயலவில்லை அவனால்.

நிதன்யாவைச் சந்தித்த நொடி முதல், இந்நிமிடம் வரையில்.. அவள் மீதான காதலையும், அதன் விளைவாய் தனக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கும் மன போராட்டங்களையும் முழுமையாய் உரைத்து முடித்தான்‌.

"உன்கூடவே தான இருக்கேன். ஏண்டா, என்கிட்ட சொல்லல?"

"சொல்லி, என்ன ஆகப் போகுது? நான்‍, நேசிச்சேன் அவ்வளவு தான்‌. மத்தபடி, அவக்கிட்ட அதைச் சொல்லணும். அன்பைப் பகிர்ந்துக்கணும்.. காதலிக்கணும். கல்யாணம் செஞ்சுக்கணும்னு எல்லாம் நினைக்கல."

"பைத்தியமாடா நீ.?"

சின்னதாய்ச் சிரித்த நிருதி, "உனக்கு, இது பைத்தியக்காரத் தனமா தான் தெரியும். ஆனா, என்னோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாரேன்.? என்னால, ஒருத்தர்கிட்ட இயல்பா போய்ப் பேச முடியுமா.? அப்படி இருக்கிறப்ப, காதல் எல்லாம்.. பேராசைடா. அதான், வெறும் ஆசையோட அதை நிறுத்திக்கிட்டேன்."

"அதுக்காக இப்படியே இருந்திடுவியா?"

"ஏன், இருக்க முடியாதா.?"

"எனக்கும் கல்யாணம் நடக்கும் நிருதி. நீ, தனியாவே எப்படி இருப்ப.?"

"பழகிக்கலாம்!"

"அப்ப, கல்யாணமே செஞ்சுக்கப் போறது இல்லையா நீ.?"

"தெரியல."

"இது, என்னடா பதில்.?"

"என்கிட்ட இருக்கிற ஒரே பதில், இது தான்டா. ஒருவேளை காலம் அனுமதிச்சா, என்னை மாதிரியே இருக்கிற‌ ஏதோ ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கலாம்!"

"அது, ஏன் உன்னை மாதிரியே.?"

"அவளுக்குத் தான, என்னோட லாங்வேஜ் தெரியும்.?‌" என அவன் வலிந்து சிரிக்க, "ஏன்.. நார்மலான பொண்ணு, உன் லைஃப்ல வந்தா வேண்டாம்னு சொல்லிடுவியா.?"

"நார்மலான பொண்ணா இருந்தா, அவ எனக்காக நிறைய மெனக்கிடணும் திவா‌. சைன் லாங்வேஜ் கத்துக்கணும். இவ்வளவு காலமும் சாதாரணமா பேசிப் பழகினவ.. என்கிட்ட பேச, கூடுதல் கவனம் செலுத்தணும்.‌ அவ கூப்பிட்டா, எனக்குக் கேட்காது. நான் ‌எங்க இருக்கேன்னு, அவதான் தேடி வரணும். இது எல்லாத்தையும் விட, அவளால என்கிட்ட வாய்விட்டுப் பேச முடியாது. ஏன்னா, என் காது வெறும் காட்சிப் பொருள் மட்டும் தான்."

ஒரு பெருமூச்சை வெளிவிட்ட திவாகர், "அதுனால தான், நிதன்யா விட்டு விலகி வந்தியா.?"

அவன் தலையசைக்க, "உன்னால, அவளை மறக்க முடியுமா நிருதி.?"

"தெரியல.."

திவாகர் நண்பனின் முகத்தையே பார்த்திருக்க, "மறக்கணும்னு, அவசியம் இல்லையே.? நானே சொல்லாம, என்னோட மனசுக்குள்ள இருக்கிறது, யாருக்குத் தெரியப் போகுது. எனக்குத் தான் பேசவும் வராதே?" எனச் சிரித்தான் நிருதி.

"நிதன்யாவுக்குத் தெரிஞ்சிடுச்சே? இப்ப, என்ன செய்யப் போற.?"

"இன்னும், கொஞ்சம் தூரமா போகலாம்னு இருக்கேன். என்னை மறந்திடுவா. நாங்க என்ன.. பேசிக்கிட்டோமா, பழகுனோமா.? இவ்வளவு அன்பான ஃபேமிலி இருக்கும் போது, அவளுக்கு என்ன குறைச்சல்?‌‌ அவங்க பார்த்துப்பாங்க!" என அவன் தனது நிலைப்பாட்டை உறுதியாய் உரைத்திட, நண்பனை நினைத்துக் கவலையில் ஆழ்ந்தான் திவாகர்.

அதே வேளையில் தனது அறையில் 'நிருதியிடம் எப்படிப் பேசுவது?' என்ற சிந்தனையில் மூழ்கி இருந்தாள் நிதன்யா.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 17


கிழக்கே வெள்ளி முளைத்தது. இன்னும் அதிகாலைக் கதிரவன் தனது பயணத்திற்குத் தயாராக வில்லை. அதன் காரணமாய், வானம் கருமை பூசி இருந்தது.

மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவற்றைப் பற்றிய படி திவாகர் நின்றிருக்க, சற்றுத் தள்ளி சாய்ந்து அமர்ந்திருந்தாள் நிதன்யா.

"வேற என்ன அண்ணா சொன்னாரு.?"

"வேற? ஊரை விட்டுப் போற பிளான்ல இருக்கான்."

அதிர்ச்சியுடன் பார்த்தவள், "ஏன்.?"

"ஏன்னு கேட்டா? அவனோட இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாரு நிதா. முதல்ல, உன்னோட ஃபேமிலிக்கு என்ன பதில் சொல்லுவ நீ.? இது, புத்தகத்துல வர்ற கதையோ நாவலோ இல்ல. காதலிச்சாங்க, கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க, சந்தோஷமா வாழ்ந்தாங்கனு சொல்லி சுபம் போடுறதுக்கு. யதார்த்தம் வேற!"

"எனக்கு, அது புரியாதுனு நினைக்கிறீங்களா.?"

"எல்லாக் காதலும் ஜெயிச்சிடுறது இல்ல நிதா."

"தோத்தாலும் பரவாயில்லனு தான், இவ்வளவு நாளும் அமைதியாவே இருந்தேன். இந்த அஞ்சு மாசமும், நான் பட்ட வலி எனக்குத்தான் தெரியும்‌. என்னால, சென்னையில அந்த அப்பார்ட்மெண்டோட ஸ்டெப்ஸைக் கிராஸ் பண்ண முடியல அண்ணா‌. ஒவ்வொரு தடவையும் ஏறி‌ இறங்குறப்ப, அவருதான் கண்ணுக்குள்ள வந்து நிக்கிறாரு.‌ அதுனாலதான், நான் இங்க வந்து இருக்கேன். தெரியுமா.?"

"இப்ப, என்னதான் செய்யிறது?"

"என்னால அவரை மறக்க முடியாதுனு, நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன். இதுக்கு மேல, வேற ஒரு லைஃபை நிச்சயமா அக்செப்ட் செஞ்சுக்க முடியாது. எனக்கு, நிருதி வேணும்."

"அதுக்கு அவனே ஒத்துக்க மாட்டான்."

நிதன்யா அமைதிக் காக்க, "உன்னோட குடும்பத்தைப் பத்தி யோசிச்சியா.?"

தலையை மட்டும் அசைத்தாள் அவள். திவாகருக்குப் புரிந்தது,‌ 'அவளுமே தனக்குள்ளே பல போராட்டங்களை நிகழ்த்தி தான், இந்த முடிவிற்கு வந்திருக்கிறாள்!' என.

"நிஜமா நிதா.?"

"எஸ் அண்ணா.‌ ஐ லவ் ஹிம்!" என்றவளின் கண்கள் நீரில் தத்தளித்தன.

"அப்படினா, நீதான் அவன்கிட்டப் பேசணும்!"

"ஸுயர். நான், நல்லா இருக்கணும். அவரால எனக்கு எந்தக் கஷ்டமும் வந்துடக் கூடாதுனு தான நினைக்கிறாரு? இதுக்கு மேல, ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்.?"

திவாகர் புன்னகைக்க, "என்ன அண்ணா, சிரிக்கிறீங்க.?"

"எனக்குத் தோணும், நிருதி ரொம்பப் பிளஸ்ட் ஹியூமன்னு. அவனோட அம்மா, அப்பா, வொர்க் எல்லாத்துலயும் அப்படித்தான். இப்ப நீ.."

அவள் புன்னகைக்க, "தனக்கானதை தேடாதவனுக்கு, தேவையானதை இந்த இயற்கைத் தானாவே கொடுத்திடும் போல!"

"நானும் முதல்ல வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா, முடியல. பார்க்கலாம் அண்ணா.." என்றிட, தலை அசைத்தான் அவன்.

அன்று மாலையே திவாகரின் குடும்பத்தார் கிளம்புவதாய் இருக்க, அதற்கு முன்னரே நிருதியிடம் பேச முடிவெடுத்தாள் நிதன்யா.

தீரஜ்.. நண்பர்களைப் பார்ப்பதற்காகச் செல்வதைக் கவனித்தவள், அடுத்த நொடியே அவனின் அறைக்குள் நுழைந்தாள்.

திவாகர் கைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, இருவரது உடைமைகளையும் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான் நிருதி.

"பிரதர்..‌" என்ற அழைப்பில் நிமிர்ந்து பார்த்த திவா அறையில் இருந்து வெளியேற முயல, இருவரையும் குழப்பத்துடன் பார்த்தான் ஆடவன்.

"அண்ணா‌, இங்கேயே இருங்க!"

"பேச வேண்டியது நீயும் அவனும். நான் எதுக்கு.?"

"அவர் ஏதாவது சொன்னாருனா, எனக்குப் புரியணும்ல? ப்ளீஸ்.."

திவாகர் அங்கேயே இருக்க, 'இங்கு, உனக்கு என்ன வேலை?' என்ற ரீதியில் அவளைப் பார்த்தான் நிருதி.

"நான் நேத்து பேசுனதுக்கு, நீங்க இன்னும் உங்களோட பதிலை சொல்லல.?" என நேரடியாக வினவ, "என்னோட லாங்வேஜை டிரான்ஸ்லேட் பண்ணி சொல்லுறதுக்கு, நமக்கு இடையில ஒரு ஆள் தேவைப்படுது உனக்கு. வாழ்க்கை முழுக்க இப்படியே, மூணாவதா ஒரு ஆளைத் தேடிக்கிட்டே இருப்பியா.?" என்று அலட்டிக் கொள்ளாமல் மறுவினா எழுப்பினான்.

நிதன்யா.. அவனது சைகை மொழியைப் புரிந்து கொள்ள முடியாமல் பார்க்க, "இது, தப்பு நிருதி. இப்படிப் பேசாத! அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்?" என்று நண்பனைக் கண்டித்தான் திவாகர்.

"என்ன அண்ணா சொன்னாரு?"

அவன் தயங்க, "சும்மா சொல்லுங்க அண்ணா."

திவா.. நிருதியின் விரல் அசைவுகளை மொழி மாற்றம் செய்ய, "சரி அண்ணா, நீங்க போங்க. நானே, பேசிக்கிறேன்!" என்றாள் நிதன்யா.

நண்பனை ஒரு முறைப் பார்த்துவிட்டு அவன் சட்டென்று வெளியேற, உள்ளே இருக்கும் தவிப்பை வெளியே காட்டாது, அவளை நோக்கினான் நிருதி.

முழுதாய் இரண்டு நிமிடங்கள் அமைதியாய் கடந்து இருந்தது. அவள் எதுவும் பேசவில்லை‌. நிதன்யா அறிந்தது எல்லாம், அவனின் விழி மொழி மட்டுமே‌. அதனால், ஆடவனின் கண்களைத் தான் பார்த்தாள்.

நிருதிக்கு தான், என்ன செய்வது என்றே தெரியவில்லை. 'ஒரு பெண்ணின் பார்வைக்கு இத்தனை வல்லமையா?' என நொடிக்கு நொடி திகைத்தான்.

தன்மீது படிந்திருக்கும் அவளது விழிகளின் வீச்சுகளை எதிர்கொள்ள இயலாது நகர, ஆடவனின் கையைப் பற்றினாள்.

நிருதி உடனே உதறிக் கொள்ள முயல.. அவனது முகத்திற்கு நேரே தனது முகத்தைக் கொண்டு சென்றவள், "நீங்க, என்னோட முகத்தையே பார்க்க மாட்டிறீங்க. இப்படிச் செஞ்சா, நான் பேசுறது எப்படி உங்களுக்குப் புரியும்.?" என்றிட, இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்று கொக்கியிட்டு நின்றது.

"ஒரு உண்மையைச் சொல்லவா.? என்னோட குடும்பத்துல, யாருமே இந்த லவ்வை நிச்சயமா ஏத்துக்க மாட்டாங்க. எனக்கு அது நல்லாவே தெரியும். தெரிஞ்சே தான், உங்களுக்குப் பிரபோஸ் பண்ணேன். அப்படினா, நான் எந்த அளவுக்கு யோசிச்சு இருப்பேன்‌? என் காதலுக்காக, அவங்கக்கிட்ட போராடுறது சரி. உன்கிட்டயும் போராடணும்னா எப்படிடா.? என்னைப் பிடிச்சிருக்கு தான, உனக்கு? நான், நல்லா இருக்கணும்னு நினைக்கிற தான? அதை ஏன், நீயே செய்யக் கூடாது‌? என்னை, கல்யாணம் செஞ்சு நல்லா பார்த்துக்கலாம்ல.?"

நிருதி இமைக்க மறந்து அவளையே பார்க்க.. பிணைந்திருந்த தங்களின் கரங்களைக் கண்களால் சுட்டிக் காட்டியவள், "இதோ, இந்த மாதிரி கைக் கோர்த்துக்கலாம்."

மற்றொரு கையை அவனது தோளில் பதித்து, "தோள்ல சாஞ்சுக்கலாம்."

அதே கரத்தை சற்று மேலேற்றி கன்னத்தைப் பட்டும் படாமல் வருடி, "சாப்பாடு ஊட்டி விடலாம்.‌ சண்டை போடலாம். இந்த மாதிரி, கொஞ்சமா கொஞ்சி சமாதானம் ஆகிக்கலாம்.

குட்டியா, குழந்தைப் பெத்துக்கலாம்‌‌. அதுக்கூட விளையாடலாம். அதுக்காகச் சம்பாதிக்கலாம்‌. அந்தக் குட்டிக்காக, இன்னும் லவ் பண்ணலாம். அந்த லவ்வை, அதுக்கும் சேர் பண்ணலாம்! நம்ம ரெண்டு பேரையும் சேர்த்த மாதிரி அதை வளர்க்கலாம்!" என நிதன்யா, ஆடவனை ஒரு குழந்தையாய் மாற்றிப் பேசிக் கொண்டிருக்க, அவள் உரைத்த ஒவ்வொன்றையும் மனக்கண்ணில் காட்சிகளாய் கண்டவன், அந்தக் கனத்தைத் தாங்கிட இயலாது சட்டென்று விலகி நின்றான்.

அந்நொடி வரை அவளின் நெருக்கத்தில் சுவாசத்தை வெளியேற்றாது உள்ளேயே வைத்திருந்தவன், மூச்சுத் திணறல் ஏற்பட்டது போல் வேக வேகமாய் ஆக்ஸிஜனை உள்ளிழுக்க, "நிரு!" என்றபடி, அருகே சென்றாள் நிதன்யா.

அவனின் நிலையைக் கண்டு மனதிற்குள் அச்சம்‌ உருவெடுக்க, "ஹேய்.. என்னாச்சுப்பா உங்களுக்கு? எதுவும் மெடிக்கல் இஸ்யூஸ் இருக்கா? திவா அண்ணா.." என்றபடி பதற்றத்துடன் வெளியே செல்ல, பட்டென்று ஓய்வறைக்குள் சென்று மறைந்து கொண்டான் நிருதி.

நீரை திறந்து விட்டவன் கை நிறைய‌ அள்ளி முகத்தில் அடித்துக் கழுவிட, விழிகள் சிவந்து அதனுள் இருந்து சில துளிகள் வெளிப்பட்டன.

சிதறிய நீர்த் திவலைகளில் எல்லாம்.. அவளின் இதழசைவும், அதன் பயனாய் உருவெடுத்த கற்பனையும், காட்சிகளாய் விரிய‌‌.. அவற்றைக் கடந்து செல்ல இயலாது தவித்தான்.

'வேண்டாத காதல், என்ன செய்திடும்?'

ஆயுதம் ஏதும் இன்றி, சிறிது சிறிதாய் காயங்களை‌ தந்து வதைக்கும். அத்தனை எளிதில் உயிரை பிரியவிடாது, துளித் துளியாய் மருந்தைக் கொடுத்து உடலோடு பிணைத்து வைத்திருக்கும்.‌ நொடிக்கு நொடி சித்திரவதையைக் கூட்டும். மனம், இறப்பை வேண்டும். அத்தருணத்தில், 'சரி, பிழைத்துப் போ!' என்று உயிரை முழுமையாய்த் தந்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும்.

நிருதி, தற்போது அந்த நிலையில் தான் இருந்தான்.

சேரப் போவதில்லை என்று அறிந்தே நேசித்தான். எவரிடமும் உரைக்காமல், தனக்குள்ளேயே காயங்களைச் சுமந்தான். மறக்க முயன்று, தோற்றான்.‌ அவளின் நினைவுகளால் தவித்தான்.‌ அதன் ரணத்தைச் சகிக்க இயலாது, எங்கேனும் சென்றுவிடத் துடித்தான். இறுதியில், எதிரே வந்து நிற்கிறாள் அவள், 'வா..' எனக் கரம் பற்றி.‌

ஒரு மனம், 'பிடிச்ச கையை விட்டுடாத நிருதி. இது மாதிரி ஒரு வாழ்க்கையும், இவளை மாதிரி ஒருத்தியும் உனக்குக் கிடைக்காது!' என்றிட.. மறுமனமோ, 'அதுக்காக வாழ்நாள் முழுக்க அவளுக்குக் கஷ்டத்தையும், குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு இருக்கிற வலியையும் கொடுக்கப் போறியா.?' என வினா எழுப்பியது.

'அவளுக்கு நீ கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாதுனு நினைக்கிற, சரி. இதுவே, வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சு அப்ப கஷ்டப்பட்டானா? அவளுக்கு, அந்த வாழ்க்கை சந்தோஷத்தைக் கொடுக்கலேனா? அதைப் பார்த்தும், வருத்த படப் போறது நீதான். அதுக்கு.. அவ சொல்லுற மாதிரி, நீயே நல்லபடியா பார்த்துக்கலாம்ல? உன்னால பேச, கேட்க முடியாது‌. அவ்வளவு தான? அதான், கண் இருக்கே? பார்த்தே, அவளோட மனசைப் புரிஞ்சுக்க முடியாதா? அப்படிப் புரிஞ்சதுனால தான், இப்படி ஒளிஞ்சு நின்னு தவிச்சுக்கிட்டு இருக்க. இனி, நீதான் ஒரு தெளிவுக்கு வரணும்!' என்று மீண்டும் எடுத்துரைக்க..

இரு மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடையே சிக்கி நொந்து போனான் நிருதி‌. மெல்ல மெல்ல, தன்னை அதிலிருந்து மீட்டுக் கொள்ள முயன்றான்.

திவாகருடன் அறைக்குள் நுழைந்த நிதன்யா, அங்கு அவனைக் காணாது தவிப்புடன் நோக்கினாள்.

"எங்கமா அவனை?"

"தெரியல அண்ணா, இங்கதான் இருந்தாரு. நிரு.. நிரு.." என அழைத்தவள் அடுத்த நொடியே தனது கன்னத்தில் தானே அடித்துக் கொண்டாள்.

"நிதா, என்ன செய்யிற.?" என அவளின் கரத்தைப் பற்றிட, "அவருக்குத்தான் கேட்காதே.? என்ன ஆச்சுனு வேற தெரியல." என்றவளின் சொற்கள் அழுகையைத் தொட்டிருந்தது.

"சின்னபிள்ள மாதிரி என்ன இது? அவனுக்கு எதுவும் இல்ல. நல்ல ஹெல்தியான ஆளுதான்‌. எங்க போயிருக்கப் போறான். இங்கதான் இருப்பான்!" எனத் தோளில் தட்டிக் கொடுத்த திவாகர், அறையை ஒருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டு, ஓய்வறை கதவைத் திறந்தான்.

அது உள்பக்கம் தாழிடப் பட்டு இருப்பதை உணர்ந்தவன், "உள்ளதான் இருக்கான். நாம கதவைத் தட்டுனாலும், அவனுக்குத் தெரியாது‌. வெயிட் தான் பண்ணணும், வந்துடுவான்!" எனப் புன்னகைக்க, சற்றே ஆசுவாசமானாள் அவள். ஆனால், விழிகள் மட்டும் கசிந்த வண்ணம் இருந்தது.

முழுதாய் பத்து நிமிடங்களைக் கடத்திவிட்டு, வெளியே வந்தான் நிருதி‌. அவனைக் கண்டதும் அதுவரை இருந்த அழுத்தமான மனநிலை சற்றே மாற்றம் அடைய, எதையும் சிந்திக்காது‌ அருகே சென்று இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் நிதன்யா.

"போன தடவை மாதிரியே, சொல்லாம கொள்ளாம எங்கேயோ போயிட்டீங்களோ? இல்ல, எதுவும் ஆகிடுச்சோனு நினைச்சுப் பயந்துட்டேன்‌. ஏன் நிரு, இப்படிச் செய்யிறீங்க.?" எனத் தேம்பலுடன் உரைத்தவளின் உடல்மொழி புரிந்தாலும், சொற்கள் யாதெனத் தெரியவில்லை அவனிற்கு.

எதிர்பாராத அணைப்பு வேறு உடலையும் உள்ளத்தையும் நிலைகுலைய வைத்திருக்க, தவிப்புடன் நண்பனை நோக்கினான்.

நிதன்யாவின் சொற்களை.. திவாகர் சைகையில் மொழி மாற்றம் செய்திட, இதற்கு மேலும் அவளைக் காயப்படுத்த விரும்பாது, தயக்கத்துடன் தனது கரங்களைப் பாவையின் முதுகினில் படர விட்டான் நிருதிவாசன். 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 18


விஜயரங்கனின் இல்லம், நிசப்த போர்வை போர்த்தி இருந்தது.

நிதன்யா, தனது காதல் விசயத்தைப் பெற்றவர்களிடம் உரைக்க, கீதாவின் மூலமாய் மற்றவர்களின் செவியையும் செய்தி அடைந்ததால், உண்டான அமைதி இது.

மஹதி, சிறிது கலக்கத்துடன் நின்று இருந்தாள்‌. கிருஷ்ணனின் பார்வை, ‘உனக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்.?’ என்ற ரீதியில், அவ்வப்போது அவளைத் தொட்டுச் சென்றது.

கூடத்தில் நிதன்யாவின் மடியில் இருந்த அவளின் கைப்பேசி ஓசையின்றி அதிர, அதில் வந்த குறுஞ்செய்தியைத் திறந்து பார்த்தாள்.‌ நிருதி தான் அனுப்பி இருந்தான், “இப்ப வேணாம். டைம் பார்த்து வீட்டுல சொல்லிக்கலாம்‌!” என்று.

‘எழுதி முடித்த தேர்வுக்கு, நுழைவுச் சீட்டை நீட்டுகிறான்!’ எனச் சிரிப்பும், பொய் கோபமும் ஒருங்கே எழுந்தது சீனிக்கு.

“அதெல்லாம் சொல்லியாச்சு‌. நீங்க ரெடியா இருங்க. எப்ப வேணும்னாலும் நான் வீட்டை விட்டுக் கிளம்புவேன்!” எனப் பதில் அனுப்பினாள்.

“அச்சச்சோ. பைத்தியமா உனக்கு, எதுக்கு அதுக்குள்ள சொன்ன?”

“வேற, எப்ப சொல்லுறதாம்? உங்களை நம்ப முடியாது. திடீர்னு காணாம போனாலும் போயிடுவீங்க!”

“நிதி, ஏன்.?”

“போதும் பேசுனது. ஒழுங்கா, என்னைக் கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற வழியைப் பாருங்க‌. நமக்குத் தனியா, சென்னையில ஒரு‌ வீடு பார்த்து வச்சிடுங்க. நான், மேரேஜ் டேட் சொல்லுறேன்!” என அவள் செய்தி அனுப்பிவிட்டு அமைதியாக, மறுபுறமோ நிருதி தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான்.

‘ஏன் இவ்வளவு அவசரம்?‌’ என்று தோன்றியது.

நிதன்யாவைப் பற்றி ஓரளவிற்கு அறிவான் தான். நடந்து செல்வதில் கூட நிதானத்தைக் கடைபிடிப்பவள், உடல் மொழியில் பதற்றம் என்பதே இருக்காது.

அவனிடம் காதலைத் தெரிவித்த பொழுதும், அணைத்த போதும் சரி.. அவளிடம் துளியும் பதற்றமோ தயக்கமோ இல்லை. ஏன், பெண்மைக்கான நாணம் கூட இல்லை. அவன் எதிர்பார்த்திடாத, அளவுக்கான உறுதி மட்டுமே தென்பட்டது‌.

நிதா, ஆழ்ந்து யோசிப்பதிலுமே அப்படித்தான்‌. எதையும் சட்டென்று தீர்மானித்து விடமாட்டாள். அவளின் செயல்பாடுகள் அனைத்தும், ஆற அமரத்தான் இருக்கும்.

ஆனால் நிருதி, அப்படியே நேர்எதிர். சிந்தனையிலும் செயலிலும், எப்பொழுதும் வேகம் காட்டுபவன். அவளை விட்டு விலக வேண்டும்‌ என நினைத்த அடுத்த நாளே, சென்னையில் இருந்து கிளம்பி விட்டான்‌. அதேபோல் தான்‌ நிதன்யாவின் அன்பை ஏற்பதற்காக எடுத்துக் கொண்ட காலம், அவள் பேசிய பின்பான சில நிமிடங்கள் மட்டுமே.

ஆழமான சிந்தனை கொண்டவன் தான். எனினும், அதனைச் செயல்படுத்துவதில் இரு மடங்காய் வேகம் இருக்கும்.

திருமண விசயத்தில் மட்டும்.. தனது இயல்பான வேகத்தை விட்டு, நிதானத்தைக் கடைபிடிக்க, நிதன்யாவோ முற்றிலும் மாறாய் இருந்தாள்.‌

நிருதியின் மீதான நேசத்திற்காக.. நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடம் என அதிகப்படியான நிதானத்துடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து முடிவெடுத்தவள், திருமணத்தில் அதற்கும் சேர்த்தே வேகத்தைக் காட்டினாள்.

அவன் வடக்கு என்றால், தெற்கில் நிற்கிறாள்‌.‌ கிழக்கே சென்றால், மேற்கு நோக்கி இழுக்கிறாள்.

ஏனோ இந்த விசயத்தில், நிருதிக்கு வேறு எதைப் பற்றியும் சிந்திக்கத் தோன்றவில்லை. பெண்ணவள் உரைக்கும் ஒவ்வொரு சொல்லையும் செயல்படுத்தும், காதலன் ஆனான்.

மஹியின் இல்லத்தில் இருந்து கிளம்பும் பொழுது, “கொஞ்ச நாள் போகட்டும். நானே, வந்து உங்க வீட்டுல பேசுறேன்!” என்று தான் உரைத்தான்.

ஆனால் அவளோ, “நீங்க பேசுறது அவங்களுக்குப் புரிஞ்சு, என்னை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கிறது எல்லாம் நடக்குற காரியமா.? லவ்வுல.. முதல் ‘ல’ சொல்லும் போதே, வாய்ல பட்டுனு விழும். உங்களால, பதில் பேச முடியாது நிரு. அது, உங்களுக்குமே மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். அதுனால, நானே பேசிடுறேன்!” எனப் பொறுப்பை, தானே ஏற்றுக் கொண்டாள் நிதன்யா.

அதைத் தற்போது செயல்படுத்தியும் விட்டாள்.

‘குடும்பத்தாரிடம் இருந்து‌ எவ்வகையான பதில் வரும்‌‌.’ என முன்னரே அறிந்திருந்தாலும் கூட, எதிர்ப்பின் சதவிகிதம்‌ எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரிந்து கொள்ளவே காத்திருந்தாள்.

கிருஷ்ணன் எதுவும் உரைக்காது எழுந்து செல்ல, “அண்ணே..” எனத் தவிப்புடன் அழைத்தார் கீதா.

அவர் திரும்பிப் பார்க்க, “என்ன அண்ணே, ஒண்ணும் சொல்லாம போறீங்க?”

“என்னோட பையனே, என் பேச்சைக் கேட்கல. அப்படி இருக்கும் போது, உன்னோட பொண்ணுக்கிட்ட நான் என்னமா பேசுறது? பெத்தவங்க நீங்க, உங்களுக்குத்தான் உரிமை இருக்கு.” என்றவர் தங்கையின் கணவரை ஒருமுறை பார்த்துவிட்டு, “துளசி!” என அழைக்க, கணவனைப் பின்தொடர்ந்து சென்றார் அவர்.

“என்னடா, இதெல்லாம்? உனக்கு, அந்தப் பையன் வேணாம்டா!” என்று ரங்கன் உரைக்க, “நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன் தாத்தா. எனக்கு அவரை ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே தெரியும். ஆனா இது வரைக்கும் ரெண்டு தடவை தான் பேசி இருக்கோம்னு சொன்னா, நம்புவீங்களா.?”

“அவனால தான் பேச முடியாதே? இதுல, நம்பாம போறதுக்கு என்ன இருக்கு? உனக்கு என்னடா குறை? ஏன் இப்படி ஒருத்தன் மேல ஆசைப்படுற? ரெண்டு வருசத்துல, ரெண்டு தடவைதான் பேசி இருக்கோம்னு நீயே சொல்லுற? இனி வாழப் போற காலத்துக்கு, வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் பேசுறது தான் கணக்கா.? இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? அதுல, உனக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்? அவன் வேணாம் கண்ணு!” எனப் பத்மாவதியும் சொல்ல, சன்னமாய்ச் சிரித்தாள் அவள்.

“ரெண்டு தடவை பேசுனதுக்கே.. அவரைக் கல்யாணம்‌ பண்ணிக்கிற முடிவுக்கு வந்திருக்கேன்னா‍, எங்களுக்கு இடையில இருக்குற பந்தம் எப்படிப்பட்டதுனு புரியலயா பாட்டி.? உங்களுக்குக் கல்யாணம் ஆகி‌ அம்பத்தஞ்சு வருசம் ஆகுது. இப்ப.. நீங்க சொல்லுங்க‍, உங்களுக்கு நடுவுல பேசிதான் புரிதல் வந்துச்சா.?”

மூத்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “அவரோட வாய்க்குத் தான் பேச வராதே தவிர‍, கண்ணு நல்லாவே பேசும். எனக்கு அது போதும்! எப்படி உங்களால, தாத்தாவைத் தவிர்த்து வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியாதோ, அதேமாதிரி வேற ஒருத்தரை என்னால யோசிக்கக் கூட முடியல‌.

ஒன்றரை வருசமா, அவரை மறக்க முயற்சி செஞ்சேன் பாட்டி. அதுக்காகத்தான், இந்த அஞ்சு மாசமும் இங்க வந்து உங்கக்கூட இருந்தேன். ஆனா முடியல. இனியும் முடியாதுனு நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன்.

இதெல்லாம் சரி வருமானு யோசிச்சு யோசிச்சு, நான் தவிச்சது எனக்குத்தான் தெரியும். சரிவரும்னு என்னோட மனசு உறுதியா நம்பினதுனால தான்‍, இப்ப உங்கக்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கேன்.” என்றவள் தாய்த் தந்தையரைப் பார்க்க, சரவணன் மகளை நிர்மலமாய் நோக்கினார்.

அவரிற்குப் புரிந்து போயிற்று‌.. ‘அவள், தங்களிடம் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை‌. தனது வாழ்க்கைக்கான ஒரு முடிவை எடுத்துவிட்டு, விசயத்தை மட்டுமே உரைக்கிறாள்‌‍!’ என.

நிருதியை மகளிற்காக மருமகனாய் ஏற்பதில், சரவணனிற்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால், அவன் அனைவரையும் போல் இயல்பான மனிதனாய் இருந்தால்.

‘ஐம்புலன்களில்.. இரு புலன்களின் செயல்பாட்டை இழந்தவன்‍, எவ்வாறு தன் மகளை ஆயுளிற்கும் மகிழ்ச்சியாய் வாழ வைப்பான்.?’ என்று மனம் முரண்டு பிடித்தது‌.

‘அவளுக்காகத் தானே இந்த வாழ்க்கையும், சம்பாத்தியமும்? ஏன், புரிந்து கொள்ள மறுக்கிறாள்‌‌. பெற்றெடுத்த தாய்த் தந்தையருக்காகவும்‍‍, இத்தனை ஆண்டுகளாய் சீராட்டி வளர்த்த உறவுகளிற்காகவும், அந்தப் பொல்லாத காதலை விட்டுத் தொலைத்தால் தான் என்ன?’ என்ற எண்ணம் மேலோங்கியது.

“ஏன் சீனி இப்படிச் செய்யிற? அப்படி என்ன, எங்களை விட அவன் பெருசா போயிட்டான்? உன்னோட குடும்பத்தைக் காட்டிலுமா, நல்லா பார்த்துக்குவான்.?” என அவர் மனதோடு எண்ணியதை, கீதா வாய்விட்டே கேட்டார்.

அன்னையின் சொற்களைச் செவியில் ஏற்றவாறே, தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரின் பார்வையை வைத்தே‍, அக எண்ணங்களை அனுமானித்தாளோ என்னவோ‌‍?

“உங்களுக்கும் அப்பாவுக்கும் என்மேல உரிமை, அதிகாரம், பாசம் எல்லாமே இருக்கு. உங்க எல்லாரையும் விட, நிருதி நல்லா பார்த்துப்பாருனு சொல்ல மாட்டேன். ஆனா,‌ அவருக்கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு தான் சொல்லுறேன். அவரால என்னைக் காயப்படுத்தவோ கஷ்டப்படுத்தவோ முடியாதுமா‌. உண்மையைச் சொல்லணும்னா, அவருக்கு அது தெரியாது.

உங்க சம்மதத்தோட அவரைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். அப்படி நடந்தா, அதை விடச் சந்தோஷம் வேற எதுவும் இல்ல. ஒருவேள.. நீங்க என்னோட காதலுக்குத் தடை போட்டா, உங்க மேல இருக்கிற பாசத்துக்காகவும் மரியாதைக்காகவும் நிச்சயமா அதை ஏத்துக்குவேன். ஆனா, என்னோட லைஃப்ல சந்தோஷம்ங்கிறது துளி அளவுக்கூட இருக்காது‌!” என்றுவிட்டு அவள் செல்ல‍, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நிதன்யாவின் மனதில் இருக்கும் உணர்வுகளை, சிந்தாமல் சிதறாமல் வார்த்தைகளால் சரம் தொடுத்தது போல் தெள்ளத் தெளிவென உரைத்துச் சென்றிருந்தாள்.

எவரிற்குமே.. நிருதியை அவளிற்குத் துணையாக்குவதில் உடன்பாடு இல்லை. அதேநேரம் ‘நிதன்யாவின் விருப்பத்தை, அன்பைக் காட்டியோ அதிகாரம் செலுத்தியோ அடக்கிட இயலாது!’ என அறிந்தும் இருந்தனர்.

அன்றைய தினம் ஒருவித இறுக்கத்திலேயே கழிய‍, வீட்டில் அனைவருமே அவரவர் அறையில் தூக்கம் தொலைத்து இரவை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர்‌.

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த கணவரை, தவிப்புடன் பார்த்திருந்தார் கீதா‌.

“என்னங்க‌..”

சரவணன் அவர்புறம் பார்வையைத் திருப்ப, “அவ.. அவ்வளவு பேசிட்டுப் போறா. நீங்க ஏங்க பதிலுக்கு எதுவுமே சொல்லல? ஒரு வார்த்தை சத்தம் போட்டிருந்தா, அமைதி ஆகிருப்பா இல்ல.?”

“நான் பேசி இருந்தாலும், ஒண்ணும் ஆகி இருக்காது கீதா.”

அவர் கேள்வியாய் நோக்க, “சீனியைப் பத்தி, உனக்கு நல்லாவே தெரியும். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய மாட்டா. ஆனா, இப்படி ஒருத்தன் மேல எப்படி ஆசை வந்துச்சுனு தான் தெரியல.”

“எல்லாம் இந்த மஹி பொண்ணால வந்தது‌. அந்தப் பையன்‍, அவளோட அண்ணன் ஃப்ரெண்ட் தான? நம்ம சரணுக்கு வேற பொண்ணைக் கட்டியிருந்தா‍, இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.”

“சீனி, அந்தப் பையனை ரெண்டு வருஷமா தெரியும்னு சொன்னா. மறந்துட்டியா கீதா.? எதுக்கு மஹியை இதுல இழுக்கிற.? வீணா, பிரச்சனைய கிளப்பாத!” என அவர் மனைவியை அடக்கிவிட்டு, நேரடியாய் திவாகருக்கு அழைத்துப் பேசினார்.

“கோபமா என்மேல? எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது!” எனத் தயக்கமும் தவிப்புமாய் உரைத்த மனைவியை, ஒரு பெருமூச்சை வெளியேற்றி நோக்கினான் சரண்.

“எனக்குத் தெரியும் மஹி. விடு!”

“ஆனா, ஏன் சரியா பேச மாட்டிறீங்க.?”

“சுச்சுவேஷன் உனக்கே தெரியும்ல‍? என்னனு பேச? மனசு சரியில்ல. இந்தப் பிரச்சனை எங்க கொண்டு போயி விடுமோனு, கவலையா இருக்கு‌.”

“நிருதி அண்ணா, ரொம்ப நல்லவருப்பா. சீனி அக்காவை‍, நல்லபடியா பார்த்துக்குவாரு.”

அவன் மெலிதாய்ப் புன்னகைக்க‍, கெஞ்சலுடன் கணவனைப் பார்த்தாள் மஹி.

“இதுல நாம தலையிடாம இருக்கிறதே நல்லது‌. ஏதாவது பேசுனா, பிரச்சனை தான் வரும்!” என்றிட.. அவளுமே அதை உணர்ந்ததால், சரி என்பதாய்த் தலை அசைத்தாள்.

தம்பிகளின் மூலமாய் விசயத்தை அறிந்த பார்கவ், “பைத்தியமா உனக்கு? ஏன், உனக்கு லவ் பண்ண வேற யாரும் கிடைக்கலயா? எப்படித் தனு, நிருதி மாதிரி ஒருத்தரோட உன்னால வாழ முடியுமா? ரொம்பவே சகிப்புத் தன்மையும் பொறுமையும் வேணும். ஏதாவது ஒரு கட்டத்துல அவரோட அமைதி உனக்கு அலுத்துடுச்சுனு வச்சுக்க, நரகமாகிடும் வாழ்க்கை. அதுனால ரெண்டு பேருமே கஷ்டப்படுவீங்க‌. ரிஸ்க் எடுக்காத, வேண்டாம். நிருதிக்கிட்ட நானே பேசுறேன். அவரே புரிஞ்சுக்கிட்டு விலகிடுவாரு!” என அத்தை மகளின் மீதான அன்பிலும் அக்கறையிலும் உரைக்க..

“ஜனனியை நான் வேணாம்னு சொல்லி இருந்தா, நீ சரினு விட்டிருப்பியா மாமா.? உன் காதல், உனக்குப் பெருசா தெரிஞ்சிச்சு.‌ அதுனால தான், எல்லாரையும் எதிர்த்துக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட. அதே மாதிரி தான், என் காதல் எனக்கும். இதைப்பத்தி இனி பேசாத மாமா!” என்று அவனின் வாயையும் அடைத்தாள் நிதன்யா.

தீரஜ்.. எதையும் கண்டு கொள்ளவில்லை‌.

“அவளோட வாழ்க்கை, அவளோட விருப்பம்!” என்பது மட்டுமே அவனின் நிலைப்பாடு. கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் வாயைத் திறந்து, தந்தையான கிருஷ்ணனிடம் இருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள அவன் தயாராய் இல்லை. அதனால் அமைதியாகவே இருந்து விட்டான்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 19


"இல்லைங்க. நீங்க வர வேண்டாம். தப்பா நினைச்சுக்காதீங்க!" எனக் கரகரத்த குரலில் பேசிமுடித்துக் கைப்பேசியை வைத்தார் சரவணவேல். கிருஷ்ணன்.. தங்கையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அறைக்குச் செல்ல, தவிப்புடன் நின்றிருந்தார் கீதா.

அன்று.. தூரத்து உறவினர் ஒருவரின் குடும்பத்தார், நிதன்யாவைப் பெண் பார்க்க வருவதாய் இருந்தது. அவர்களிடம் தான், தற்போது 'வர வேண்டாம்' எனப் பேசி இருந்தனர்.

தங்கை கேட்டுக் கொண்டதின் பெயரில், கிருஷ்ணன் தான் ஏற்பாடு செய்து இருந்தார். சீனியிடமும், முதல் நாளே தெரிவித்து விட்டனர்.

"அவங்களை, வர வேணாம்னு சொல்லிடுங்க‌. நான், நிச்சயமா அவங்க முன்னாடி வந்து நிக்க மாட்டேன். உங்களுக்குத்தான் சங்கடம்!" என அப்பொழுதே, பதில் சொல்லி விட்டாள்.

ஆனால் கீதா தான், "அவ, அப்படித் தான் சொல்லுவா‌. அதுக்காக, நாம சரினு விட்டுட முடியுமா? இல்ல, அந்தப் பையனைத்தான் கட்டி வைக்க முடியுமா.? முதல்ல, மாப்பிள்ள வீட்டுக் காரவங்க வந்து பார்த்துட்டுப் போகட்டும். அப்புறம் மத்ததைப் பேசிக்கலாம்!" என உரைத்து இருந்தார்.

உண்மையில் அவரால், நடந்த நிகழ்வுகளை வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

'நீங்க, உங்க விருப்பத்துக்குச் செய்யிங்க. நான், எனக்குத் தோணுற மாதிரி இருந்துக்கிறேன்!' என எண்ணிக் கொண்ட நிதன்யா‌.. விடிந்ததுமே, வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாள்.

காலை ஆறு மணிக்கு அவளின் அறைக்குச் சென்று பார்த்த பொழுது, "ஸாரி அப்பா, ஸாரிம்மா.." என்று அவள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற காகிதமே வரவேற்றது. அதன் பின்னர் நடந்தது தான், மேற்கூறிய நிகழ்வு.

மகளின் கைப்பேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தார் சரவணன்.

"ஹலோ.."

"எங்க இருக்க.?"

"நிருதியைப் பார்க்க, காஞ்சிபுரத்துக்குப் போயிட்டு இருக்கேன்."

"ஏன், இப்படிச் செஞ்ச சீனி.?"

"என்னோட மனசை, உங்களுக்குத் தெளிவா புரிய வைக்கிறதுக்கு இதைத் தவிர வேற வழி தெரியலப்பா‌. ஸாரி."

"சரி, வீட்டுக்கு வா.."

"இல்லப்பா. மனசுக்கு ஒருமாதிரி இருக்கு. நான் அவரைப் பார்த்துப் பேசிட்டே, வர்றேன்!" என்றவள் கைப்பேசியை நிறுத்த, மனம் கனத்துப் போனது சரவணனிற்கு‌.

ஒற்றை மகள். இதுநாள் வரை, இல்லை என்ற சொல்லின் பொருள் கூட அறியாமல் தான், அவளை வளர்த்தார். கிருஷ்ணனிற்கும் பெண் குழந்தை இல்லாததால், நிதன்யாவிற்கு அதிகப் படியான பாசம் கிட்டியது‌. இருந்தாலும், அவள் ஒருமுறை கூட அதனைத் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அதனால்.. மகளை எண்ணி, சரவணனிற்குச் சற்றே பெருமைக்கூட உண்டு.

ஆனால்.. இன்று அவள் செய்த செயல்‍, உண்மையில் அவரை உலுக்கித்தான் விட்டது. அந்த வலி.. நிதன்யா வீட்டை விட்டு வெளியேறியதால் அல்ல, 'நிருதியைச் சந்தித்து விட்டு வருகிறேன்!' எனப் பெற்ற தந்தையிடமே உரைத்ததால்.

அவள் எதைச் செய்தாலும் பேசினாலும், தெளிவாகவும் தீர்க்கமாகவும் தான் இருக்கும். அதற்கு முன்னர், தனக்குள்ளேயே நடத்திக் கொள்ளும் போராட்டங்கள் எல்லாம், எவரும் அறியாதவை‌. அது, சரவணவேலின் குணம்‌. தந்தையின் உயிரணு வாயிலாய், அதைத் தானும் பெற்று வந்திருந்தாள் நிதன்யா. அதனால், மகளின் மன ஓட்டங்களை அவரால் ஓரளவு புரிந்து கொள்ளவே முடிந்தது.

'அவளின் வாழ்க்கைப் பாதையை மாற்ற.. தாங்கள் ஏதேனும் முயற்சி செய்தால், அதற்கு அனுமதிக்க மாட்டாள்!' என உணர்ந்து கொண்டார்.

அதிகாரம் செலுத்தியோ, சினம் கொண்டோ, கரம் நீட்டி அடித்தோ.. தந்தை என்ற உரிமையில் அவளை அடிபணிய வைக்கலாம் தான். ஆனால்.. அப்படியான சூழலில், சரவணன் வளரவும் இல்லை. தன் மகளையும் அவ்வாறு வளர்க்க வில்லை.

"போல்டா இருக்கணும் சீனி‌. மனசுல பட்டதைத் தைரியமா பேசணும். யார் கருத்து சொன்னாலும், காது கொடுத்து கேட்கணும்‌. அதுல உனக்குச் சரினு படுறதைச் செய்." எனக் கற்றுத் தந்தவரே சரவணன் தான்‌. தந்தையிடம் கற்றுக் கொண்டதன் படிதான், தற்போது நடந்து கொண்டிருக்கிறாள் நிதன்யா.

அதற்கு மேல், மகளின் விருப்பத்திற்கு அவர் அணைக்கட்ட விரும்பவில்லை‌.

"ஏங்க, இவ இப்படிச் செஞ்சா? அவளுக்கு, அந்தக் காதல் தான் பெருசா? நாம எல்லாம் ஒண்ணுமே இல்லையா? அந்த அளவுக்கா, நம்ம மேல இருந்த பாசம் அத்துப்போச்சு?" எனக் கலங்கிய கண்களுடன் வினவிய மனைவியைக் கனிவாய்ப் பார்த்தவர்,

"அதை, அப்படிச் சொல்லிட முடியாது. இருபத்து நாலு வருசம் கூட இருந்த நம்மளை விட, இனி உயிரோட இருக்கப் போற காலம் முழுசுக்கும் அவக்கூட வாழப் போறவன் முக்கியமா படுறான்.

நம்ம கல்யாணம் நடந்த சமயத்துல‌‌.. நான் வேணுமா, அம்மா அப்பா அண்ணன் கூடவே இருக்கணுமானு கேட்டு, அந்தச் சூழ்நிலையில உன்னை நான் நிருத்தல. ஒருவேள.. என்னால வீட்டோட மாப்பிள்ளையா வந்து இருக்க முடியாது‌. நீதான் என்கூட வரணும்னு நான் சொல்லி இருந்தா, என்ன செஞ்சிருப்ப கீதா.?"

அவர் திகைப்புடன் நோக்க, "சொல்லு, உன்னோட பதில் என்னவா இருந்திருக்கும்.?"

"தெரியலங்க‌. ஆனா, உங்களை இழக்க என்னோட மனசு துணியாது."

"இப்ப சீனியோட மனநிலையும் அதுதான்‌. என்ன.. நான், பெரியவங்க பார்த்துப் பேசுன மாப்பிள்ளையா போயிட்டேன். அவன், நம்மப் பொண்ணுக்குப் பிடிச்ச காதலனா இருக்கான்‌."

"எல்லாம் சரிதான். ஆனா.‌. காது கேட்காத, வாய் பேச முடியாதவனோட எப்படிங்க.?"

"எனக்கும் அதை நினைச்சுதான்‍‍, தயக்கமா இருக்கு. சீனிக்காக, இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். பார்கவ் மாதிரி அவளா கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அது இதைவிடப் பெரும் பாரத்தை மனசுல ஏத்திடும். நாமளே செஞ்சு வச்சிடுவோம் கீதா. அவளுக்குப் பிடிச்சவனோட வாழட்டும்!" என்றிட.. கணவனது சொற்களைத் தட்ட இயலாது விருப்பம் இல்லாமல் தலை அசைத்தார்‌.

தான் வந்ததில் இருந்து முகத்தைக் கூடக் காட்டாமல் இருக்கும் நிருதியைப் பார்த்து ஒருபுறம் சினம் துளிர்த்தாலும், மறுபுறம் சிரிப்பும் வந்தது நிதன்யாவிற்கு.

இருவருக்கும் இடையே திவாகர் தான், பாவப்பட்ட ஜீவனாய் அமர்ந்து இருந்தான்.

"இப்ப, அவருக்கு என்னதான் பிரச்சனையாம் பிரதர்?"

"எதுக்கு இப்படிக் கிளம்பி வந்தனு கேட்குறான்."

"அவரைப் பார்க்கணும்னு தான் வந்தேன்!" என்றவளை நிருதி முறைக்க‍, ஒரு கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள் நிதன்யா.

திவாகரும் புன்னகைக்க, "நீங்க, போங்க அண்ணா. நானே பேசிக்கிறேன் அவர்கிட்ட!" என்றிட, வெளியே சென்றான் அவன்.

"ஏற்கனவே உன்னோட பேரண்ட்ஸுக்கு என்னைப் பிடிக்கல. நீ இந்த மாதிரி எல்லாம் செஞ்சா, என்மேல இன்னும் கோபம்தான் வரும். அப்புறம் எப்படி, நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிப்பாங்க நிதி.?" என அவன் கைப்பேசியில் குறுஞ்செய்தி வாயிலாய்ப் பேசிட, "ஒத்துப்பாங்க‌. என்மேல எல்லாருக்குமே பாசம் அதிகம். அதுக்காகவாது சம்மதிப்பாங்க."

"அப்படினா.. என்னை முழுசா அக்செப்ட் பண்ணி, அவங்க ஓகே சொல்ல மாட்டாங்க."

"ஒரே நாள்ல பில்டிங் கட்டிட முடியாது நிரு‌. முதல்ல ஸ்ட்ராங்கான பேஸ்மெண்ட் போடணும். அது செட்டாக வெய்ட் பண்ணணும்‌. அடுத்து தான் ஒவ்வொரு ஸ்டெப்பா எடுக்கணும்‌. செங்கலையும் சிமெண்டையும் வச்சுக் கட்டுற பில்டிங்குக்கே இவ்வளவு வேலை இருக்கிறப்ப, இரத்தமும் சதையும் உயிரும் உணர்வுமா உருவாகுற உறவு இறுக்கமாக.. என்ன எல்லாம் செய்யணும்.?

ஏன்.‌. உங்களுக்கும் எனக்குமான உறவே, இரண்டு வருச காத்திருப்பும் நேசமும் தான.? அவங்களுக்கும், நிச்சயம் உங்களைப் பிடிக்கும். ஆனா, அதுக்கு முதல்ல பேசி புரிஞ்சிக்கணும். அதுக்கான, வாய்ப்பு தான் அமையல. நம்ம கல்யாணத்தை, ஒரு சான்ஸா எடுத்துக்குவோம்!"

"நல்லா பேசு.. அன்னைக்கும் அப்படித்தான் பேசி பேசியே என்னோட முடிவை மாத்திக்க வச்சிட்ட. இன்னைக்கும் அதையே செய்யிற!"

"இனி.. உங்களுக்கும் சேர்த்து, நான்தான பேசணும்? அதான்.."

அவன் முறைக்க, "இந்தக் கண்ணும் பார்வையும், நல்லா இல்ல நிரு. எனக்கு, சென்னையில ஸ்டெப்ஸ்ல ஏறி இறங்குறப்ப பார்ப்பீங்களே‍, அதுதான் வேணும்‌. ரகசியமா பார்த்துட்டு.. வர்ற சிரிப்பை அடக்கிக்கிட்டு அதையும் கண்ணுலயே கடத்துவீங்களே, அந்த மாதிரி!"

நிருதியால், அதற்கு மேல் அவளிடம் விவாதம் செய்ய இயலவில்லை. உண்மையில் ஆறடி ஆடவனை, தனது எண்ணம் போல் இயங்க வைக்கும் வித்தையை அறிந்து இருந்தாள் அவள்‌. அவனும் அதைத் தெரிந்தே, அவளின் சொற்களிற்குத் தலை அசைத்துக் கொண்டிருக்கிறான்.

“நாம முகம் பார்த்துப் பேசும் போது அவரால சமாளிக்க முடியாது. இந்த விசயத்துல, அண்ணா கொஞ்சம் சென்ஸிடிவ்!” என மஹதி உரைத்ததை மனதில் வைத்து, இயன்றவரை அதையே பின்பற்றினாள். தற்போதும் கூட, அதற்காக தான் நேரில் வந்திருந்தாள்.

அன்னையின் இறப்பிற்குப் பின்னர், நிருதியின் மன பகிர்தலிற்கு என்று எவருமே இருக்கவில்லை. திவாகர் நெருங்கிய நண்பன் தான் என்ற போதும், அவனிடமும் உரைக்காத ரகசியங்கள் இருக்கத்தான் செய்தன, நிதன்யாவின் மீதான காதலைப் போல்.

அந்த ரகசியத்தையும் அறிந்து கொண்டு, பூட்டி வைத்திருந்த மனச்சுவர்களை உடைத்து, உள்ளே நுழைந்தது அவள் மட்டுமே. வந்தவள்.. இதய வீட்டையே உரிமையாக்கிக் கொள்ள, இவனும் அதனைப் பட்டாப் போட்டுக் கொடுத்துவிட்டு, அவளை ரசிக்கத் துவங்கி விட்டான்.

"பசங்க தான்.‌. ரிஸ்க் எடுத்து தன்னோட லவ்வரை பார்க்கப் போவாங்கனு கேள்வி பட்டிருக்கேன்‌. ஆனா.. இங்க, எல்லாமே தலைகீழா இருக்கு. நானே பிரபோஸ் பண்ணி, பின்னாடியே சுத்தி, ஓகே சொல்ல வச்சு, இப்ப வீடு தேடி வந்து.. ஸப்பா.. இந்த லவ்வுக்காகவும், கண்ணால கதை சொல்லுற கண்ணாளனுக்காகவும் என்னெல்லாம் செய்ய வேண்டி இருக்கு.? ஹோ.. உஃப்ஸ்.." என அவள்‌ ஒரு பெருமூச்சு விட, தண்ணீர் டம்ளரை நீட்டினான் அவன்.

"இவ்வளவு பேசுனதுக்கு, வெறும் தண்ணி தானா? ஜூஸ், பாதாம் பால், ஐஸ்கிரீம் இதுமாதிரி வேற எதுவும்..?" என அவள் விழிகளால் வினவ, சின்னதாய்ச் சிரித்தான் அவன்.

"எப்பா.. உங்களைச் சிரிக்க வைக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.?" என்று நிதன்யா அலுத்துக் கொள்ள, இடைவிடாது பேசுபவளை இமைக் கொட்டாது பார்த்திருந்தான் நிருதி‌.

"என்ன.?"

"தண்ணிக் குடி!"

"எதுக்கு?"

"பேசி பேசியே டயர்ட் ஆகி இருப்ப?"

"கிண்டலா.?"

"இல்ல.. சீரியஸா தான்‌‌." என்று சைகையால் உரைத்தவனைக் கண்டு.. நிதன்யா புன்னகைத்து விட்டு நீரை அருந்த‍, சரியாய் அவளின் கைப்பேசி ஒலித்தது‌. திரையில் தந்தையின் பெயரைக் கண்டவள், பேச்சைத் துவக்கினாள்.

"ஹலோ அப்பா.."

"எப்ப, வீட்டுக்கு வர்ற.?"

இவள் அமைதிக் காக்க, "கல்யாணத்துக்கு முன்னாடி, பொண்ணு இப்படித் தனியா பையன் வீட்டுக்குப் போறது சரியில்ல."

சரவணனின் சொற்களில் இன்பமாய் அதிர்ந்தவள், "அப்பா, நிஜமாவா.?"

"உனக்காக மட்டும் தாண்டா."

"ஐ க்நோ. தேங்க்யூ சோ மச் அப்பா. தேங்க்யூ தேங்க்யூ.." என்றவளின் விழிகளில் மகிழ்ச்சியின் காரணமாய் நீர் நிறைய, ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்திருந்தான் நிருதி‌.

"நைட்டுக்குள்ள வீட்டுக்கு வந்துடு!"

"ஸுயர் ப்பா.." என்றவள் பேச்சை முடித்துக் கொண்டு, எதிரே இருந்த ஆடவனின் முகத்தை நோக்கினாள்.

அவன் விழிகளாலேயே என்னவென்று வினவ.. அதற்கான விடையாய், வருங்காலத் துணைவனின் நுதலில் தனது இதழ்களைப் பதித்தாள் நிதன்யா.


அவர்களின் உறவு‌‌.. அணைப்பைக் கடந்து முத்தத்திற்கு முன்னேறி இருக்க, அதற்கு உரிமம் அளிக்கும் விதமாய் மகளின் திருமணத்தைப் பற்றி, மனைவியின் பிறந்த வீட்டாரிடம் பேச்சைத் துவக்கினார் சரவணவேல்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 20


நிருதி, நிதியின் திருமண தினம்.. சற்றே சங்கடத்துடன் புலர்ந்தது. அவளைத் தவிர மணமகன் உட்பட, விஜயரங்கனின் குடும்பத்தைச் சார்ந்த எவரின் முகத்திலும் மகிழ்ச்சியே இல்லை. அத்தோடு விருப்பமும் இல்லை.

மகளிற்காகச் சம்மதித்த சரவணன், மற்றவர்களிடம் அதையே செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

"அவரோட பொண்ணு, அவர் முடிவு! இதுல கருத்து சொல்ல நாம யாரு?" என்று வேறு எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை கிருஷ்ணன். விஜயரங்கனும் பத்மாவதியும் கூட, மருமகனின் பேச்சைத் தட்ட இயலாது சரி‌ என்றனர்.‌ அவரது அழைப்பின் பெயரில், திருமணத்திற்கும் வருகை தந்தனர்.

வழக்கமான ஒரு திருமணத்தில் இருக்கும் கலகலப்பும், கொண்டாட்டமும் இன்றி.. ஏதோ மனிதரின் குடும்ப‌ விழாவிற்கு வந்திருப்பது போல் அமர்ந்து இருந்தனர்.‌ பெயரிற்கு என்று அவ்வப்போது புன்னகைத்து, எதையோ பேசிக் கொண்டனர்.

இதில் திவாகரின் குடும்பத்தார் மட்டும் விதிவிலக்காய் போயினர்.

'மகனின் எதிர்காலத்திற்காக, எப்படியும் அவனிற்குத் திருமணத்தைச் செய்து வைத்து விட வேண்டும்!' என்ற இந்திராணியின் விருப்பம் நடந்தேறிக் கொண்டிருந்தது. அதனை மோகனும் பானுமதியும் கண்களால் கண்டு, களிப்புற்றனர். மஹதிக்கும் பெரும் மகிழ்ச்சியே. எனினும், அதை அவள் முகத்தில் காட்ட முனையவில்லை.

'மண்டபம் பிடித்துத் திருமணச் சடங்குகள் செய்தால், அவை ஒவ்வொன்றையும் நிருதிக்குப் புரிய வைப்பது சிரமமாய் இருக்கும்!' எனத் தோன்றியதால், கோவிலில் சுபநிகழ்விற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தாள் நிதன்யா. ஏதேனும் சிறு தவறு நடந்தால் கூட, தனது குடும்பத்தாரின் மனம் வாடிப் போகுமே என்ற தவிப்பு அவளுள். நிருதிக்காகவும் சேர்த்து சிந்தித்தே, இந்த முடிவை எடுத்தாள்‌‌.

பெரியவர்களிற்கும் அதுவே சரியெனப் பட, மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் அவர்களின் திருமணத்திற்குப் பதிவு செய்து இருந்தனர்.

மாப்பிள்ளையின் ஊரில் திருமணம் நடப்பது தான் முறை என்ற பொழுதும், வருங்கால மனைவியினது உறவுகளின் மகிழ்ச்சிக்காக, அதனை விட்டுக் கொடுத்து விட்டான் நிருதி.

அன்றைய தினம் கோவிலில் பதினோரு திருமணங்கள். நிருதி நிதி, ஏழாவது ஜோடி. இரண்டரை மணி நேரங்களிற்கு, முன்னரே வந்து விட்டனர்.

கோவிலின் சிறப்புகளையும், அங்கு வந்து சென்ற தனது சிறுவயது நினைவுகளையும் நிருதிக்கு உரைத்துக் கொண்டிருந்தாள் நிதன்யா.

அவனிற்குத் தான் 'அவளைப் பார்ப்பதா, அவள் கைக்காட்டும் சிலைகளையும் சிற்பங்களையும் பார்ப்பதா?' என்று தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை, இரண்டுமே ஒலியில்லா படங்கள் தான்.

உயிர் கொண்டிருக்கும் சிலையைக் கண்டால், அவளின் வாயசைவில் ஒலி சிந்தும் சொற்கள் யாதென அறியலாம்‌. உயிரில்லா சிற்பங்களைப் பார்த்தால், ரசனையும் தெய்வீகமும்.. பரவசத்தையும் அமைதியையும் ஒருசேர பரிசளிக்கும்.

அந்த அமைதியை எப்பொழுது வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் எதிரில் நிற்கும் பாவை உடனான நிமிடங்கள்.?

இமைக்க மறந்து.. அவளையும், அவளின் பேச்சுக்களையும் கவனிக்கத் துவங்கினான் நிருதி.

பாதி நேரம் கடந்த நிலையில், "முகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் போகுது. வாங்க, கூப்பிடுறாங்க." என இருவரையும் அழைத்தான் திவாகர்.

"இங்க ரொம்ப க்ரௌடா இருக்கும் நிரு. உள்ள தாலி கட்ட போற சமயத்துல, முன்னாடி பின்னாடினு ஆட்கள் எல்லாரும் நகர்ந்திடுவாங்க. கூட்டத்துல உங்களைக் கண்டுபிடிக்கிறது கஷ்டமாயிடும். நாங்க கூப்பிட்டாலும் உங்களுக்குக் கேட்காது‌. அதுனால என்னோட கையை இறுக்கமா பிடிச்சுக்கோங்க! சரியா‌?" என்று அவள் உரைக்க, புன்னகையுடன் பார்த்திருந்தான் நிருதி.

"என்ன சிரிப்பு?"

இடக்கையால் தலையைத் தொட்டவன்.. தனது உயரத்தைச் சுட்டிக் காட்ட, "ஆமா, நீங்க உயரம் தான்‌. கண்டுபிடிக்கிறதும் ஈஸி தான். அதுக்காக என்னோட கையைப் பிடிச்சுக்கக் கூடாதுனு இருக்கா.?" என்றாள் அவள்.

அன்னையின் சொல்லுக்கு அடங்கிப் போகும் சிறு பிள்ளையாய், அவன் தலையாட்டிச் சிரிக்க, "கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு. இன்னும், ஒரு லவ் யூ கூடச் சொல்லல! அப்படியே ஒண்ணும் தெரியாத மாதிரி பார்க்கிறது!" என முணுமுணுத்தபடி வருங்காலக் கணவனை அழைத்துச் சென்றாள் நிதன்யா.

சில நொடிப் பொழுதுகளில் அவர்களின் திருமணம், ஒருவித பரபரப்புடன் நிகழ்ந்து முடிந்தது. மங்கல நாண் கழுத்தில் ஏறும் பொழுது அவளுக்கும், மூன்று முடிச்சுகளைப் போடும் போது அவனிற்கும், ஏனோ காரணம் இன்றிப் பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டது. முழுதாய் ஏழெட்டு நொடிகள் தான் இருக்கும்.

பெரும்பாலும் வாழ்வின் திருப்பு முனைகள் யாவும் நொடிப் பொழுதுகளில் நிகழ்ந்து விடும்‌. அதில் திருமணத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.‌

பின்னர்ப் பயம் மறைந்து சற்றே நிம்மதி பரவிட, மனைவியின் நெற்றியில் குங்குமம் இட்டுப் புன்னகைத்தான் நிருதி. அதன் பிரதிபலிப்பாய் அவளின் அதரங்களும் மலர, "அடுத்த ஜோடியை அழைச்சிட்டு வாங்க!" எனக் குரல் கொடுத்தார், கோவிலில் நிகழும் திருமணங்களின் பொறுப்பாளர்.

வெளியில் வந்து மாலை மாற்றிக் கொண்டு, பெரியவர்களிடம் ஆசி வாங்கிய மணமக்களைப் புகைப்பட நிபுணர், தனது கருவியில் நினைவுகளாய் பதித்துக் கொண்டார்.

வழியில் பெயர் பெற்ற உணவகத்தில் வயிற்றை நிறைத்துக் கொண்டவர்கள், நேராய் வந்தது நிதன்யாவின் பிறந்தகத்திற்குத்தான்.

பால் பழம் உண்ணும் வைபவமும் விளையாட்டு சடங்குகளும் நடந்து முடிய, சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமாகினர்.

"எப்படியும் மறுவீட்டுக்குத் திரும்ப வரணும்ல? எதுக்கு அங்கேயும் இங்கேயும் அலையிறீங்க? பேசாம, வீட்டுலயே இருந்து, எல்லாத்தையும் முடிச்சிட்டுப் போகலாம்." எனக் கீதா மகளிடம் உரைக்க, "அது, சரிவராது அம்மா.." என்றாள் அவள்.

இருவரது பேச்சும் செவியில் விழ, மனைவி மற்றும் மகளிடம் வந்தார் சரவணவேல்.

"என்ன சீனி.?"

"ஒண்ணும் இல்லப்பா.." என அவள் பதில் தர, "என்ன ஒண்ணும் இல்ல? கல்யாணத்தைத் தான் அவ இஷ்டத்துக்குச் செஞ்சுக்கிட்டா.‌ மத்ததுக்காவது நாம ஆலோசனை சொன்னா, அதைக் கேட்கிறதுக்கும் கஷ்டமா இருக்கு!" என்று மகள் மீது புகார் வாசித்தார் கீதா.

"அப்படி, என்ன ஆலோசனை சொன்ன நீ?" எனச் சரவணன் வினவ, இருவருக்குமான பேச்சு வார்த்தையைப் பற்றி உரைத்தார்.

"அம்மா, சொல்லுறது சரிதான சீனி.?" என்று அவரும் வினவ, "இது.. தாத்தாவோட வீடு அப்பா.‌ அதுல, அம்மா மாமா ரெண்டு பேருக்கும் உரிமை இருக்கு. சோ, அவங்கவங்க துணையோட இங்க இருக்கலாம். உங்களோட பிள்ளைகளுக்கும் அதே உரிமை உண்டு. ஆனா..‌ எங்களுக்கு வர்ற துணைக்கு‌,‌ அது எப்படிச் சரிவரும்.?

அதுவும் இல்லாம.. நீங்க யாரும் நிருதிக்கிட்ட எதுவும் பேசப் போறது இல்ல. அதேமாதிரி அவர் பேசினாலும், உங்களுக்குப் புரியும்னு சொல்ல முடியாது‌. ஒருமாதிரி அன்கம்ஃபர்டா இருக்கும். எல்லாம், நார்மல் ஆகட்டும். அவரோட இயலாமை, எப்ப உங்களுக்கு இயல்பா தெரியுதோ.. அப்ப இந்த வீட்டுல தங்குறோம்.

மறுவீடுங்கிறது ஒரு சடங்கு தான? உடனே நடத்தணும்னு, ஒண்ணும் கட்டாயம் இல்லையே? மெதுவா, எல்லாரும் சந்தோஷமான மனநிலையில இருக்கும் போது செஞ்சுக்கலாம். இப்ப வேணாம். அதுனால, நாங்க முறைப்படி இன்னைக்கே கிளம்புறோம் ப்பா!" என்று அவள் அழுத்தமாய்ச் சொல்லிச் செல்ல, கீதாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வெளிப்படையாய் உரைக்காவிடினும், 'நிருதியின் மனம் புண்படும் படி‌.. எவரும், எதுவும் பேசி விடுவார்களோ?'‌ என்ற‌ சிந்தனையே நிதன்யாவை இப்படிப் பேச வைத்தது. பெற்றவர்களும் கூட அதனை உணர்ந்து, அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. என்ன இருந்தாலும், அவன் தற்போது அவர்களின் மருமகன் அல்லவா?

கிருஷ்ணன் எதையும் கண்டு கொள்ளாது இருக்க.. விஜயரங்கனும் பத்மாவதியும், பெயர்த்தியின் எதிர்கால வாழ்விற்காக ஆசி வழங்கி வழியனுப்பினர்.

நிருதியின் குடும்பம் மற்றும் மற்ற விபரங்களை.‌. மோகனின் மூலமாய் அறிந்திருந்த போதும், எதனையும் மற்றவரிடம் விசாரித்து உறுதி செய்து கொள்ளவில்லை சரவணன். விருப்பம் இல்லா திருமணம். மகளின் பிடித்ததிற்காகச் சமரசம் என இருந்ததால், மற்ற எதைப் பற்றியும் அவருக்குச் சிந்திக்கத் தோன்றவில்லை.

அதனால் மனைவியோடு.. மகளின் புகுந்த வீட்டிற்குச் சென்று, அவளை அங்கு விட்டுவர கிளம்பி விட்டார்.

திவாகரோடு.. மோகன் பானுமதி தம்பதியரும், மணமக்களை வரவேற்பதற்காக இவர்களிற்கு முன்னரே புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

அதேநேரம் பார்கவ்வும் ஜனனியும் தனி வண்டியில், சென்னைக்குக் கிளம்பினர்.

முன்பு குடியிருந்த இல்லத்திற்கே அழைத்து வந்திருந்த கணவனைக் கேள்வியாய்ப் பார்த்த நிதன்யா, "மறுபடியும், இந்த வீட்டையே பிடிச்சிட்டீங்களா.?"

அவளைப் பார்த்துச் சிரித்த நிருதி, "மறுபடியும் எல்லாம் இல்ல. வீடு, அப்ப இருந்தே என்கிட்ட தான் இருக்கு." எனத் தனது விரல் அசைவுகளின் மூலம் உரைக்க,‌ "என்ன சொல்லுறீங்க? நீங்க போன பின்னாடி, நான் டூலட் போர்ட் பார்த்தேனே இங்க?"

"அப்புறம் பேசலாம் அதை. இப்ப, ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க. ஆரத்தி எடுக்கலாம்!‌" என்று ஆலம் சுற்றினார் பானுமதி‌.

பேச்சு தடைப்பட.. புதுமணத் தம்பதிகளாய் அவ்வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர், நிருதியும் நிதன்யாவும்.

அளவாய், அதே நேரம் அதிகப்படியான வசதிகளுடன் இருந்தது வீடு. நிருதியின் ஒரு வயது முதல் தற்போதைய தோற்றம் வரையிலான புகைப்படங்கள்.. ஒருபக்க சுவற்றை நிறைத்து இருந்தது. அதன் அருகிலேயே இருந்த மற்றொரு சுவற்றை, வளவன் மற்றும் இந்திராணியின் திருமணப் புகைப்படம் இரண்டரை அடி உயரத்திற்கு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது‌.

முன்னரே அவர்களை, நிருதியின் கைப்பேசிப் படங்களில் பார்த்து இருந்ததால், "இது.. அவரோட அம்மா அப்பா." என்று தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்வித்தாள் நிதன்யா.

சரவணனும் கீதாவும் சுற்றிலும் பார்வையை ஓட‌‌ விட்டனர். வீடு, மூன்று அறைகள், சமையலறை மற்றும் பெரிய கூடத்துடன் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது. படுக்கை அறை கட்டில் முதல் காலணிகளை வைக்கும் அலமாரி வரை அனைத்தும்.. அவற்றிற்கான இடத்தில் கச்சிதமாய்ப் பொருந்தி தென்பட்டன. அஞ்சறைப் பெட்டி‌‌யில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் வரை நிறைந்து இருந்தன.

ஒவ்வொன்றையும் பார்வையிட்டபடி‌ வந்த கீதா, "வீட்டுக்கு, எவ்வளவு வாடகை?" என விசாரித்தார்.

“அம்மா..” என்று நிதன்யா அவரது பேச்சிற்குத் தடை போட முயல, “சொந்த வீடும்மா!” எனப் பதில் சொன்னான் திவாகர்.

“வீடு மட்டும் இல்ல, இந்த அப்பார்ட்மெண்டே நிருதியோடது தான்.‌ வேலையையும் வருமானத்தைப் பத்தியும் நீங்க கவலைப் பட வேண்டிய ‌அவசியம் இல்லம்மா.‌ சிஸ்டரை அவன் நல்லபடியாவே பார்த்துக்குவான்!‌” என்று அவன் மேலும் உரைக்க, தனது கணவனின் புறம் திரும்பிப் பார்த்தாள் நிதன்யா.

பானுமதியும் மோகனும் ஏதோ உரைக்க, அதைக் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான்.

இதுநாள் வரை‌ அவனது குணத்தைக் கடந்து வேறு எதைப் பற்றியும் யோசிக்காத பாவைக்கு, நிருதியைப் பற்றிய செய்திகள் யாவும்.. வியப்பு கலந்த அதிர்ச்சியையே தந்தது.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 21


பெரியவர்களை அமர வைத்து, இரவு உணவைப் பரிமாறினான் நிருதி. நிதன்யாவும் அவனிற்கு உதவ, திவாகர் மடிக்கணினியில் தலையை நுழைத்தபடி அமர்ந்து இருந்தான்.

திடீரெனக் கேட்ட ஒலியில் அனைவரும் நிருதியின் புறம் பார்க்க, கைத்தட்டி நண்பனை அழைத்தான் அவன்.

'ஐந்து நிமிடம்..' என்பது போல் அவன் இடக்கை விரல்களைக் காட்டிவிட்டுப் பணியைத் தொடர, தன்மேல் விழிகளைப் பதித்திருந்த மனைவியின் பெற்றோர்களைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"என்னாச்சு? சாப்பிடுங்க." எனச் சைகையால் உரைக்க, "மருமகன் சாப்பாடு பரிமாறுற பழக்கம் எல்லாம், எங்க வீட்டுல இல்ல. அதான் அப்படிப் பார்க்கிறாங்க." என்று சிரித்தாள் நிதன்யா.

"இங்க, இதுதான் பழக்கம். அம்மா, வேலைக்குப் போனதால, வீட்டு வேலையில அப்பாவும் ஹெல்ப் பண்ணுவாரு. எந்த ஒரு பிள்ளைக்கும், அப்பா தான ஹீரோ? எனக்கும் அப்படித்தான். இதெல்லாம், அவரைப் பார்த்து தான் கத்துக்கிட்டேன். அப்பா இறந்த பின்னாடி, அவரோட இடத்துல நான் வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சேன். இது, நான் அம்மாக்கு எப்பவும் செய்யிறது தான். நிதியோட பேரண்ட்ஸ்,‌ எனக்கும் அம்மா அப்பா மாதிரி தான்‌. அதுனால.. இதைப் பத்தி எல்லாம் யோசிக்காம, சாப்பிடுங்க!" என்றவனின் ஒலியற்ற உரையாடலை, மோகன் மொழி பெயர்த்து உரைத்தார், கீதா மற்றும் சரவணனிற்கு.

மனைவியின் விருப்பத்திற்காக வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் நிதன்யாவின் தந்தைக்கு, தன் மகளிற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் நிருதியை.. அதிகப்படியான காரணங்கள் தேடாமலேயே பிடித்துப் போனது.

காலையில் இருந்து தற்போது வரை.. சிறிதும் முகம் சுருக்காமல் அனைவரிடமும் ஒரேபோல் நடந்து கொள்ளும் அவனின் இயல்பு, நிருதியின் புறம் அவரை ஈர்த்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெயர் சொல்ல ஒரு தொழில், எதிர்காலத் தேவைக்கென நிலையான பொருளாதாரப் பின்னனி‍, எடுப்பான தோற்றம், வசீகரிக்கும் முகம், மதிப்புக் குறையாத நடவடிக்கை, எவரிடமும் இலகுவாய் அணுகும் பாங்கு, துணையைக் காணும் பொழுது அன்பு ததும்பும் பார்வை, சுற்றத்தாரின் மீது அக்கறை என ஒரு ஆணிற்கு உடைய தகுதியாய், அவர் எதிர்பார்த்த அனைத்திலும் நிறைவாகவே இருந்தான் நிருதி.

அருகே நெருங்கிப் பார்த்துப் பழகிய பின்னர்த் தானே, ஒருவரைப் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள முடியும்?

தந்தையும் மகளும் கிட்டத்தட்ட ஒரே குணம் என்பதால், பிடித்தமும் கூட ஒன்றாகி விட்டது போலும். தற்போது, அவனிடம் இருக்கும் குறைகள் கூட, சரவணனிற்குப் பெரிய விசயமாய்த் தெரியவில்லை.

ஆனால், கீதாவிற்கு அதுதான் முதன்மையாய்த் தோன்றியது. இருந்தும், மகளின் மகிழ்ச்சிக்காகக் கணவரின் சொல்லை ஏற்று அமைதியாய் இருந்தார்.

உடையைக் கூட மாற்றாது படுக்கையில் சரிந்து கிடந்த பார்கவ்வின் கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான்.

நிதன்யா அழைத்து இருந்தாள். அவன்‌ அமைதியாய் இருக்க, "யார், கால் பண்ணுறது?" என்றாள் ஜனனி.

அவன் கைப்பேசியைக் காட்ட, "பேசுங்கப்பா, தனு‌ தான?"

"என்ன பேசுறது? அதான், ஏற்கனவே பேசாதனு சொல்லிட்டாளே.?"

"அவளோட கல்யாண விஷயத்தைப் பத்திப் பேசாதீங்கனு தான் சொன்னா. பேசவே கூடாதுனு ஒண்ணும் சொல்லலையே?"

"எனக்கு ரெண்டுமே ஒண்ணுதான்."

அவள் முறைக்க, கைப்பேசியை ஓரமாய்த் தூக்கிப் போட்டான் பார்கவ். அடுத்ததாய், ஜனனியின் கைப்பேசி ஒலித்தது.

"அவ தான் கூப்பிட்டிருக்கா. காலை அட்டன் பண்ணாத!" என அவன் உரைக்கும் பொழுதே, "என்னை, என் ஃப்ரெண்ட் கூடப் பேச கூடாதுனு சொல்லுறதுக்கு உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல. ஓகே?" என்றவள் தொடர்பை இணைத்தாள்.

"ஜானு.."

"சொல்லு தனு."

"சென்னைக்கு வந்தாச்சா?"

"வந்து, டூ ஹவர்ஸ் ஆச்சு!"

"நான், மேலதான் இருக்கேன். வந்து, பார்கணும்னு கூடத் தோணலேல உங்களுக்கு? எங்க, உன்னோட ஹஸ்பெண்ட்? அவன் சொன்னதைக் கேட்கலனு, பேச மாட்டிறான். அவன் செய்யும் போது, சரி.‌ அதையே நான் செஞ்சா தப்பா.?"‌ என அவள் வினவும் பொழுதே, "அதான் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்துட்டோம்ல?‌ அப்புறமும், என்னவாம்‌ அவளுக்கு.?" என்றான் பார்கவ்.

மறுபுறம் இவனது பேச்சைக் கேட்ட சீனி, "ஓஹோ.. கல்யாணத்தை அட்டன் பண்ணா போதுமா.? நான், அப்படியா நடந்துக்கிட்டேன் உங்க மேரேஜ் அப்ப? ஒழுங்கா, பத்து நிமிசத்துல அவனைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்து சேரு. இல்லேனா, அவ்வளவு தான்!" என்று பேச்சை முடிக்க, திருதிருவென விழித்தாள் ஜனனி.

"இவங்க சண்டைக்கு இடையில, என் மண்டை தான் உருளுது!" எனப் புலம்பியவள், கணவனை வலுக்கட்டாயமாய்‌ அழைத்துச் சென்றாள்.

அழைப்பு மணியின் ஒலியில் அனைவரது கவனமும் திரும்ப, தனது சௌகர்யத்திற்காகப் பொருத்தி இருந்த ஒளி உமிழும் கருவி பளிச்சிட்டதைக் கண்டு வாயிலுக்குச் சென்றான் நிருதி.

எவரேனும் அழைப்பு‌ மணியை அழுத்தினால்.. வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளிலும் விளக்கு எரிவது போல் ஏற்பாடு செய்து இருந்தான். அத்தோடு கைப்பேசியில் இருக்கும் செயலிக்கும் தகவல் சென்று, அது அதிர்ந்து இவனிடம் செய்தியைச் சேர்த்துவிடும்.

வாசலில் நின்று இருந்தவர்களைக் கண்டவன்.. தலையசைத்துப் புன்னகையால் வரவேற்க, உள்ளே வந்தனர்.

நிருதி சிநேக உணர்வுடன் பார்கவ்வை நோக்கி வலது கரத்தை நீட்ட, அனிச்சையாய் அதைப் பற்றிக் குலுக்கி வரவேற்பை ஏற்றுக் கொண்டான்.

"ஒரு பதினஞ்சு படி ஏறி வர்றதுக்கு அவ்வளவு கஷ்டம் என்ன, உங்களுக்கு? அழைச்சா தான் வருவீங்களோ?" என நிதன்யா, சற்றே சினத்துடன் கேலியான குரலில் வினவ, முகத்தைத் திருப்பினான் பார்கவ்.

மாமன் மகனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, ஜனனியின் கரத்தைப் பற்றிக் கொள்ள, தோழியுடன் சென்றாள்.

"சாப்பிட்டீங்களா ஜானு?"

"இன்னும் இல்ல, ஹோட்டலுக்குப் போகலாம்னு இருந்தோம். அதுக்குள்ள நீ கால் பண்ணிட்ட."

"அப்ப, இங்கேயே சாப்பிடுங்க."

"அது.." எனத் தயக்கத்துடன் அவள் கணவனைப் பார்க்க, திவாகரும் நிருதியும் பேசி அழைத்து வந்தனர் பார்கவை.

மற்றவர்களும் தங்களது பங்கிற்கு வரவேற்க, "இனி, எதுக்கு ஹோட்டலுக்கு எல்லாம்? இங்கேயே சாப்பிடுங்க!" எனச் சரவணன் உரைக்க, மறுக்க இயலாது இணைந்து கொண்டனர்.

இருந்ததை இளையவர்கள் ஐவரும் பகிர்ந்து உண்ண, இடையிடையே பேச்சிலும் சிரிப்பிலும் வீடு கலகலப்பாய் மாறியது‌.

நிருதி.. அனைவரது முகத்தையும் மாறி‌ மாறிப் பார்க்க, கணவனின் அருகே சென்று கையைப் பற்றினாள் நிதன்யா.

அவன் கேள்வியாய் நோக்க, "நாங்க ஆளாளுக்குப் பேசுறது, புரிஞ்சிக்கக் கஷ்டமா இருக்கா.?"

மறுத்துத் தலையசைத்து புன்னகைத்தவன், "அம்மா, அப்பா, திவா தவிர வேற யார்க்கூடவும் நான் அதிகமா பழகினது இல்ல.‌ ஃப்ரெண்ட்ஸ் கூடப் பெருசா கிடையாது. திவாவோட ஃபேமிலியும் எப்பவாது தான், வருவாங்க. வயசு வித்தியாசம் இருக்குல்ல? ஜோவியலா பேசுறது எல்லாம் சில நிமிசம் தான்.‌ இவ்வளவு நேரம் எல்லாம், வாய்ப்பே இல்ல. இதுதான், எனக்கு முதல் அனுபவம். அதான் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு." என்றிட, நண்பன் உரைத்ததை மற்றவர்களுக்குச் சொன்னான் திவா.

"அப்ப, இந்த அனுபவத்தை அப்படியே பழக்கப் படுத்திக்கோங்க. சரண், தீரஜ் எல்லாரும் சேர்ந்துட்டா இதைவிடவும் சௌண்ட் ஜாஸ்தியா இருக்கும்!‌" என்றாள் ஜனனி.

அவள் உரைத்ததின் பொருளை உணர்ந்து..‌ நிருதி‌ சம்மதமாய்த் தலையசைத்துப் புன்னகைக்க, மேலும் சிறிது பேசிவிட்டு மனைவியுடன் கிளம்பினான் பார்கவ். விடைபெறும் பொழுது, முன்பிருந்த அந்நியத்தன்மை மாறி சற்றே இணக்கம் ஏற்பட்டு இருந்தது உறவில்‌.

நேரம் கடப்பதைக் கண்ட பானுமதியும் கீதாவும் இரவு சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய.. "அம்மா, எதுக்கு இதெல்லாம்? எங்களை, அன்கம்ஃபர்டா ஃபீல் பண்ண வைக்காதீங்க. காலையில இருந்து அலைஞ்சது, உங்களுக்கு டையர்டா இருக்கும்‌.‌ பேசாம, போய் ரெஸ்ட் எடுங்க. நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்!" என இருவரையும் அனுப்பி வைத்தாள்.

தானே தயாரானவள்.. கீதா நான்கு முறைக்கும் மேல் சொல்லி இருந்ததால், பாலை டம்ளரில் ஊற்றி‌ எடுத்துக் கொண்டாள்.

அறைக்குள் செல்ல, கணவனானவனோ முன்னரே உறங்கி இருந்தான்‌. சிரிப்பு தான் வந்தது. அவளின் உடலுமே ஓய்வை வேண்ட, நிருதியின் உறக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.

நள்ளிரவு.. திறந்திருந்த ஜன்னலின் வழியே, நிலவின் வெண்மை ஒளி அறைக்குள் நுழைந்து போர்வைப் போர்த்தியது படுக்கையின் மேல்.

ஓய்வறைக்குச் சென்று வந்த நிருதி, வழக்கத்தை விட அதிகப்படியான வெளிச்சத்தை உணர்ந்து ஜன்னலைப் பார்த்தான்.

அறையில் காற்று பதனாக்கியைப் பயன்படுத்துவதால், உறங்குவதற்கு முன்னர் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடும் பழக்கம் கொண்டவன். ஆனால் நிதன்யா ஏசியை நிறுத்திவிட்டு, சாளரத்தைத் திறந்து வைத்திருந்தாள். அதன்வழியே ஒன்றிரண்டு கொசுக்களும் உள்ளே நுழைந்து, அவனின் தேகத்தில் இருந்து சில குருதித் துளிகளைச் சுவைத்துச் சென்றிருந்தன‌. அதன் காரணமாகத்தான் விழித்தான்‌. இல்லையேல் இடையில் விழிக்க மாட்டான் நிருதி.

தூக்கத்தைத் தொடர இயலாததால், ஜன்னலை மூடி ஏசியை இயக்கிவிட.. உடலைத் தழுவிய லேசான குளிர்ச்சியில் கண் விழித்தாள் நிதன்யா.

எதிரே உறங்காது இருந்த கணவனைக் கண்டவள், "என்ன தூங்கலையா?"

அவன் அசைவின்றி இருக்க, "வாயைத் திறந்து பதில் சொன்னா தான் என்ன?" என்றவள், அடுத்த நொடியே எதையோ உணர்ந்தது போல் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

கண்களை இறுக மூடி திறந்து, தனது இடது கையில் படுக்கை விரிப்பை இறுக்கிக் கொண்டவள், "ஸாரி.. ஸாரி.. பாதித் தூக்கத்துல இருந்ததால, ஞாபகம் இல்லாம அப்படிக் கேட்டுட்டேன்!" எனத் தவிப்புடன் உரைக்க, அவனிடம் இருந்து புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது‌.

சைகையால் கூட அல்லாது, விழிகளாலேயே உணர்வுகளைக் கடத்துபவன் அவன். இமைகளைச் சுருக்கிப் பார்த்தவன், கண்களை ஒருமுறை மூடித் திறந்து, "தூங்கு!" என்றிட, அவளிற்குத்தான் துயில் தொலை தூரமானது.

"ஸாரி!" என மீண்டும் உரைத்தவளின் இதழ்களில் ஒற்றை விரலை வைத்தவன் ஆதூரமாய் அணைத்துக் கொள்ள, சற்றே சமாதானம் அடைந்தாள்.

'இப்படியா பேசுவ? அவருக்குக் கஷ்டமா இருக்காதா? வேணாம்னு விலகிப் போனவரை வேணும்னு கல்யாணம் செஞ்சுக்கிட்டு, இது மாதிரி பேசுனா.. அது எப்படி உண்மையான நேசமா இருக்க முடியும்.? இன்னும் கொஞ்சம், நிதானம் வேணும் சீனி!' என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டாள் அவள்.‌

எனினும் உறக்கம் வர மறுக்க, அவளுக்காகவே தானும் தூங்காது விழித்து இருந்தான் நிருதி.

"நீங்க ஏன் தூங்காம இருக்கீங்க?"

"நீ முழிச்சிருக்கியே.?"

"தூக்கம் போயிடுச்சு!" எனப் பெருமூச்சு விட்டவளைப் பார்த்துச் சிரித்தவன், "பேசுவோமா?"

"என்ன பேச.?"

"ஏதாவது!"

தலை அசைத்தவள் அமைதியாகவே இருந்தாள். பகிர்ந்து கொள்ள எவ்வளவோ விசயங்கள் இருந்தன தான். எனினும் அந்நொடியில் எதுவும் பேசிடத் தோன்றவில்லை.

நிருதி அவளின் கரம்பற்றிப் பார்வையால்.. 'என்ன?' என்றிட, கணவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் நிதன்யா.

நிமிடங்கள் கரைந்தது.‌ ஏசியின் குளிர்ச்சிக்கு, ஒருவரின் உடல் வெப்பம் மற்றவருக்கு இதமாய் மாறியது. அவள் தலை நிமிர்த்திக் கணவனின் முகம் பார்க்க, நுதலில் இதழ் ஒற்றினான் நிருதி.

இரு நொடிகள் கடந்தது‌.

"அவ்வளவு தானா.?"

அவன் கேள்வியாய் நோக்க, "ஒரு கிஸ் தானா?" என வினவினாள் அவள்.

"ஏன், எவ்வளவு வேணும் உனக்கு.?"

"கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு!"

சட்டென்று சிரித்து, மனைவியைத் தன்பக்கம் திருப்பி அணைத்தான். இடது கரத்தைக் குவித்துக் கன்னத்தைத் தொட்டுக் காற்றில் ஒற்றை விரலை மட்டும் சுழற்றி அசைத்து கேட்டிட, "கிஸ் மட்டும் போதுமானு கேட்கிறீங்களா.?"

அவன் சிரிக்க, "நீங்க மொத்தமா எனக்குத்தான? அதெப்படி கிஸ் மட்டும் போதுமானு கேட்கலாம்.?"

"எல்லாமே தந்தா ஓகேவா.?"

மறுத்துத் தலை அசைத்தவள், "சேர் பண்ணிக்கலாம்!" என்றிட, கனிவாய் நோக்கினான் ஆடவன்.

மனப் பகிர்தலும் தேகப் பகிர்தலும் ஒன்றல்ல. எனினும் கணவன் மனைவி உறவில் முழுமை பெற வேண்டும் எனில், ஒன்றிற்கு மற்றொன்று அவசியமாகிறது.

பேசிப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவன். மனம் பகிர்ந்திட, பேசுதல் என்பது, அவர்களிற்கு இடையே தேவையற்றுப் போனது. நிருதியின் ஐம்புலனில் செவி மட்டும் தவிர்த்து, மற்ற நான்கும் தங்களது தேவைகளை அறிய முயன்றன.

துயிலானது எட்டவே நின்று கொள்ள, தீண்டலில் கவிதை பரிமாறப்பட்டது. அவன் ஒவ்வொரு வரியாய் வாசிக்க, அதற்கு இசைக் கோர்வைகளைச் சேர்த்தாள் நிதன்யா.‌

இசையோடு இணைந்த கவிதையைத் தொகுத்து முடித்த பொழுது.. கலைந்த புடவைக்குள், பெண்ணவள் களைத்து இருந்தாள். அவளது தேகம் சிந்திய வியர்வைத் துளிகளைத் தனது உடையில் ஒற்றி எடுக்கத் துவங்கினான் ஆடவன்.


 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 22


நிருதி, நிதியின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து இருந்தது. இரண்டு தினங்களில் மற்ற அனைவரும் கிளம்பிவிட, இவர்கள் இருவரும் தனிக் குடும்பமாய் மாறினர்.

முன்னர்ச் சொல்லப்படாத காதலாய் இருந்ததால், தற்போது பேசிப் பழகிப் பகிர்ந்து கொள்ள நிறையவே இருந்தது.

நிதி.. கணவனின் அசைவு மொழிகளை அவனிடமே கற்றுக் கொள்ள, ஆடவனோ.. மனைவியின் முகத்தை வைத்தே அக எண்ணங்களைக் கணிக்க முயன்றான்.

அவளது புன்னகையின் அளவீடு போதுமானதாய் இருந்தது, பாவையின் மனநிலை என்னவென்று யூகித்துக் கொள்வதற்கு‌.

பிடித்தத்தில் துவங்கி வெறுப்பது வரை அனைத்தையும் மற்றவரிடம் தெரிவிக்க, ஒவ்வொன்றிலுமே நேர் எதிராய் தான் இருந்தனர், இருவரும்.

அவளுக்குக் கருமை நிறம் பிடித்தம் என்றாள்.‌ இவனோ வெண்மை அழகு எனக் கருத்துத் தெரிவித்தான்.

திருமணம் முடிந்த பின்னர் வந்த, முதல் ஞாயிற்றுக் கிழமை.

"நான்வெஜ் சாப்பிடுவ தான? மட்டன் வாங்கிட்டு வரவா?" எனக் கேட்க, "இல்ல நிரு, எனக்கு ஃபிஷ் தான் பிடிக்கும். அதுனால அதையே வாங்கிடுங்க." என்றாள் அவள்.

'அதுசரி! மதுரையில வளர்ந்த பொண்ணு மீன் கேட்கலனா தான் ஆச்சரியம்.‌ ஆனா, நமக்கு அது தொண்டைக்குள்ள இறங்காதே.?' என்று சிந்தித்தபடி அமர்ந்து விட்டான்.

"ஏங்க, கடைக்குப் போகலயா.?"

"எனக்கு, மட்டன் ஆர் சிக்கன் வேணுமே.?" என்று அவன் பாவமாய்ப் பார்க்க, "அப்ப கொஞ்சமா உங்களுக்கு மட்டும் வாங்கிக்கோங்க. நான் உங்களுக்காகவும், நீங்க எனக்காக மீனையும் சமைக்கலாம்!‌" என்றாள்.

"நிதி..?" எனக் கேள்வியாய்ப் பார்த்தவனை, "நிரு..!" என்று கண்டிப்பைக் காட்டினாள்.

அடுத்த நொடி, இருவருக்கும் ஏனோ சிரிப்பு தான் வந்தது. விட்டுக் கொடுத்தலும் ஏற்றுக் கொள்ளுதலும் தானே, மணபந்தம். அதன் முதல்பாடத்தைப் புதுமணத் தம்பதியர், நன்றாகவே கற்றுக் கொண்டனர்.

அன்றைய தினம் முழுவதும். சமைப்பதும், உண்பதும், சமையலறையைச் சுத்தம் செய்வதுமாகத் தான் கழிந்தது‌. இவளிற்குப் பிடித்ததை அவனும், அவனிற்குப் பிடித்தமானதை இவளும், மற்றவரின் விருப்பத்திற்காகச் சிறிது ருசியும் பார்த்தனர்.

மாலையில் நிதன்யா.. தனது உடைகளை எவ்வாறு மடித்து வைப்பது என்று சொல்லித்தர, பதிலிற்கு அவன் தன் மேல் சட்டையை இஸ்திரி செய்யக் கற்றுத் தந்தான்.

"பதிலுக்குப் பதில், ஏதாவது ஒண்ணு செய்யணுமா.?" என முகம் சுருக்கிக் கேட்டவளிடம், "எனக்குனு வேற யாரு இருக்கா? உன்கிட்ட தான், விளையாட முடியும். சண்டை போட முடியும்! மத்தவங்களுக்கு, நான் பேசுறதே புரியாது. இதுல, மத்த விசயம் எல்லாம் எப்படி.? அம்மா இருந்த வரைக்கும், லோன்லியா ஃபீல் பண்ணதே இல்ல.‌ அந்த அளவுக்கு என்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. இப்ப எல்லாம்.." என்று பெருமூச்சு விட்டவன், "உனக்குச் சலிப்பா இருந்தா சொல்லிடு‌. கொஞ்சம் மாத்திக்கிறேன்!" என மறுமொழி உரைத்திட, அவளிற்குத் தான் மனம் கனமானது.

வாயால் குரல் எழுப்பிப் பேசுவதற்கும், கைகளை அசைத்து உரையாடுவதற்குமான தூரம் அதிகப்படியானதாய் தோன்றியது நிதன்யாவிற்கு. அதனை, தன் பக்கம் இருந்து குறைத்திட முயன்றாள். நிருதியும், தனது பங்கிற்குச் சிறிது தூரம் முன்னேறி வந்தான்.

படுக்கையில் படுத்திருந்தவளின் வயிற்றில் தலை வைத்திருந்த ஆடவன், தனது வலது கரத்தின் விரல்களை மனைவியின் இதழ்களில் பதித்தபடி இருந்தான்.

சில நொடிகளில் தனது கரத்தைத் தீண்டிய சுவாசத்தில் நிமிர்ந்து நோக்கியவன், "கூப்பிட்டியா.?" என்றிட, தலை அசைத்தாள்.

"என்ன நிதி?"

"என்ன என்ன? எவ்வளவு நேரம், இப்படி என்மேல படுத்திருப்பீங்க? நான், ஆஃபிஸ் போக வேண்டாமா.? மணி எட்டாகப் போகுது?"

சற்றே வாடிய முகத்துடன் அவளை நோக்கியவன், "இன்னைக்கு லீவ் போடுறியா.?"

"மேரேஜ் லீவ் முடிஞ்சு, டூ வீக்ஸா தான் வேலைக்குப் போறேன். அதுக்குள்ள திரும்பவும் லீவா.?‌ என்ன விசயம்.?"

"இன்னைக்கு அம்மாவோட பர்த்டே. எப்பவும் இந்த நாள்ல, அப்பாவும் நானும் லீவ் போட்டுட்டு அம்மாக்கூட வெளிய போயிட்டு வருவோம்!‌" என்றிட, அவனைக் கனிவுடன் நோக்கித் தலை அசைத்தாள் நிதன்யா.

"சரி, சொல்லுங்க. எங்க போகலாம்."

"ஃபர்ஸ்ட் கோவில், அடுத்து ஹோட்டல்ல சாப்பாடு.‌ அப்புறம் உனக்குப் பிடிச்ச எங்கேயாவது.."

சின்னதாய்ச் சிரித்தவள், "ஓகே.. கிளம்புவோமா.?"

"ம்ம்.. ஒரு ஒன்பது மணிக்கு மேல. அதுவரை படுத்துக்கலாம்."‌ என்றவன் சற்றே மேல்பக்கம் நகர்ந்து அவளை அணைத்து‌ இடையில் ஒற்றை விரலால் கோலமிட, "நிரு! என்ன விளையாட்டு இது? கூசுது!"

"விளையாட்டுன்னு ஒன்னு இல்லேனா, உடம்பு மட்டும் இல்ல உறவும் கூட மந்தமாகிடும்."

"அது சரி!" எனச் சிரித்தவளை, பார்வையால் வருடினான்.

"ஏன், அப்படிப் பார்க்கிறீங்க?"

"இது, ஒருமாதிரி உனக்கு அன்கம்ஃபர்டா இல்லையா.? உன்னோட காதுக்கு, என்னோட அமைதி ஏற்புடையதா இருக்கா.?"

"என்னாச்சுங்க? எதுக்கு, இப்படி எல்லாம் கேட்கிறீங்க.?"

"நீ.. நிறையப் பேசுற. ஆனா, என்னால பேச முடியாது. ஒரு விசயம் படிச்சேன்‌. நமக்கு நெருக்கமானவங்க அனுப்புற மெசேஜை வாசிக்கும் பொழுது, அவங்களே பேசுற மாதிரி, நம்ம காது ஃபீல் பண்ணுமாம்‌. வீட்டுல இருக்கிற நேரத்தைத் தவிர, மத்த டைம்ல எல்லாம் மேசேஜ்ல தான் பேசிக்கிறோம். எனக்குப் பிரச்சனை இல்ல, வாழ்க்கை இப்படித்தான்னு ஆகிடுச்சு. ஆனா, உனக்கு அப்படி இல்லேல? இதெல்லாம் புதுசு. என்கூடப் பேசுறதுக்கு வாய்ப்பே இல்லன்றப்ப..?"

"யாரு.. நான் நிறையப் பேசுறேனா? இப்ப, நீங்கதான் பக்கம் பக்கமா பேசுறீங்க. இதெல்லாம் யோசிக்காமலா, உங்களைக் கல்யாணம் செஞ்சிருப்பேன்? ஆளைப்பாரு! அது போகுது. எனக்கு, இதுவரைக்கும் ஒன் டைம்மாவது ஐ லவ் யூ சொன்னீங்களா நீங்க.?"

"நான் என்ன பேசுறேன். நீ, என்ன கேட்கிற.?"

"ரெண்டும் ஒண்ணு தான். முதல்ல பதில் சொல்லுங்க."

"நான் சொன்னா, உனக்குப் புரியுமா? வெறும் வார்த்தை, சந்தோஷத்தைக் கொடுத்திடுமா நிதி.?"

"அப்ப எனக்குப் புரியிற மாதிரி, சந்தோஷத்தைக் கொடுக்குற வகையில சொல்லுங்க."

அவன் அமைதியாய்ப் பார்த்திருக்க, "என்ன?"

"உனக்குப் பிடிவாதம் ரொம்ப அதிகம்!"

"பாருடா! பட், அப்படி இல்லைனா உங்களைக் கல்யாணம் செஞ்சிருக்க முடியாது. எஸ்கேப் ஆகி இருப்பீங்க!" எனச் சிரித்தவளைக் கண்டு‍, அவனிற்குமே புன்னகை மலர்ந்தது.

'தனது அன்னையின் இல்லாமையை, அவன் தன்னிடம் தேடுகிறான்!' என்று உணர்ந்தவள், நிருதியின் அணைப்பை மேலும் இறுக்கமாக்கினாள்.

ஒன்பது மணி‌யை, பத்து மணியாய் மாற்றிய பின்பே எழுந்தனர். பேசிக் கொள்ளாத போதும், இருவரும் அருகருகே ஒருவரின் சுவாசம் மற்றவரைத் தீண்டும் படியாய் இருப்பதே, போதுமானதாய் இருந்தது.

கட்டி அணைத்தலுக்குக் குறையாத காதலைக் கொண்டதே, கரம் கோர்த்தலும். முன்னது உடலைப் பிணைக்கும் வல்லமை உடையது எனில், பின்னது மனதை இணைக்கும் வலிமை பெற்றது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்க் கரைந்து சென்றது மாதங்கள்‌. பார்கவ், அவ்வப்போது நிதன்யாவின் இல்லத்திற்கு வந்து செல்ல, நிருதிக்கும் அவனிற்கும் இடையே நல்உறவு உருவாகி இருந்தது.

ஆண்களிற்குள் தோழமை உண்டாக.. ஒருசில நிமிடங்களின் பேச்சோ, ஏதோ ஒரு நிகழ்வோ மட்டுமே போதுமானது. அவ்வகையில் நிதன்யாவின் திருமணமும், அத்தோடு ஒரே குடியிருப்பில் இருப்பதுமே இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாய் அமைந்தது.

பார்கவ் பணிமுடிந்து வர தாமதமானால், ஜனனியின் பொழுதுகள் நிதன்யாவின் இல்லத்தில் தான் கழியும். அவன் நேராய் அத்தை மகளின் இல்லத்திற்கு வந்து, மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்வான்‌‌. நிதிக்கும் அப்படியே! நிருதி வீட்டில் இல்லை என்றால், தோழியைக் காணச் சென்று விடுவாள்.

வாய்ப்பு அமையும் பொழுது.. இரு இணைகளும் ஒன்றாய் சமைத்து உண்பது, விடுமுறைகளில் வெளியில் பயணம் செல்வது என உறவுப் பாலம் மேலும் பலப்பட்டது. ஒத்த வயது என்பதால், இணக்கமும் அதிகரித்து இருந்தது.

பார்கவ் மற்றும் மஹதியின் மூலமாய், சரணும் இயல்பாய் உரையாடும் நிலைக்கு வந்திருந்தான். கைப்பேசியில் செய்திகள் பரிமாறிக் கொள்வது இயல்பாய் மாறியது. நிதிக்கு ஏதேனும் உடை வாங்கித் தருவதாய் இருந்தால், உடனே சரணிற்குச் செய்தி அனுப்பி விடுவான் நிருதி.

காணொலி அழைப்பில் வருபவன், "இந்தக் கலர் அவளுக்குப் பிடிக்காது. அந்தப் பிராண்ட் வேணாம். இது பெட்டர்." என, தான் அறிந்த அளவிற்கு உதவுவான்.‌

தீரஜிற்கு, மூன்று பெண்களிடமும் வம்பு வளர்ப்பது தான் வேலையே.‌ அது அவ்வப்போது ஆண்களின் செவியையும் அடைய, செல்ல சண்டைகளில் முடிவடையும்.

நிருதியைக் கவனித்த வரையில்.. 'தனது மகளை அவன் நன்றாய்ப் பார்த்துக் கொள்வான்!' என்ற உறுதி தோன்றியதுமே, நிதன்யாவின் திருமண வாழ்வைப் பற்றிக் கவலைப் படுவதை நிறுத்தி விட்டார் சரவணன்.

கீதாவிற்குத் தான்.. மனம், நிலை கொள்ள மறுத்தது. நாள் தவறாமல், பெண்ணிற்கு அழைத்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"எப்ப எழுந்தீங்க? என்ன சமையல்? ஆஃபிஸுக்கு எதுல போன? உன்னோட புருஷன் வீட்டுல இருக்காரா, வெளிய போயிருக்காரா? அவர்தான் வண்டி டிரைவ் பண்ணுவாரா? எப்படி மேனேஜ் செய்ய முடியும்? அவர் வண்டி ஓட்டுறது, ரிஸ்க் இல்லையா? கடைக்கு எல்லாம் யார் போறது? நீ, சொல்லி விடுற பொருளை கரெக்டா வாங்கிட்டு வந்துடுறாரா? அதிகமா செலவு செய்யிறாரா?" என அன்றாடம் செய்யும் சிறுசிறு பணிகளில் துவங்கி, மாத விலக்கு ஏற்படும் நாள்களில் அவன் கவனித்துக் கொள்வது வரை அனைத்தைப் பற்றியும் மகளிடம் கேட்டார்.

பல நேரங்களில் அன்னையின் வினாக்களிற்குப் பதில் அளித்து விட்டாலுமே, சில தருணங்களில்.. 'ஏன், என்னோட குடும்ப விசயத்துல இவங்க நுழையிறாங்க?' என்று எரிச்சல் மேலிடும் நிதன்யாவிற்கு.

எனினும்.. 'நிருதியின் சிறிய குறையே, தனது அன்னையின் இந்த அளவிற்கான பரிதவிப்பிற்குக் காரணம்!' என உணர்ந்ததால், இயன்றவரை கீதாவின்‌ மனம் காயப் படாதவாறு பதில் அளித்தாள்.

மனைவியின் கைப்பேசி பேச்சையும், செயல்பாடுகளையும் வைத்தே.. ஓரளவிற்கு அவளின் நிலையை உணர்ந்து கொண்டான் நிருதி.

அன்றைய தினம்.. கீதாவிடம் இருந்து வந்த அழைப்பை துண்டித்து விட்டு, காணொலியின் வாயிலாகத் தானே அழைத்தான், மருமகனானவன்.

திரையில் நிருதியைக் கண்டவர் திகைத்து, "என்னாச்சு? சீனி எங்க.?" எனப் பதற்றத்துடன் வினவ, படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளைக் காட்டினான்.

"மணி பத்தாச்சு, இன்னும் தூங்குறா..?" என்றிட.. அவரின் வாயசைப்பைச் சரியாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும், தானே யூகித்து.. "சண்டே தான, அதான் தூங்குறா அத்தை." என்றான்.

நிருதியின் சைகை மொழியைக் கீதா ஓரளவிற்கு அனுமானித்தாலும், முழுமையான புரிதலுக்காக மஹதியின் உதவியை நாடினார்.

கதவு தட்டப்பட்ட ஒலியில் வெளியே வந்தவள், "என்னம்மா.?"

"மாப்ள வீடியோ கால்ல பேசுறாரு. எனக்குக் கொஞ்சம் புரியல.‌ ஹெல்ப் பண்ணுறியா.?"

சின்னதாய்ச் சிரித்தவள், "வாங்கம்மா.." என அறைக்குள் அழைத்து அமர வைத்து அவனிடம் பேசினாள்.

"ஹாய் அண்ணா, குட்மார்னிங்.."

"குட்மார்னிங்டா.."

"கல்யாணம் ஆனதும், தங்கச்சியை மறந்துட்டீங்க பார்த்தீங்களா.?"

"அச்சோ! ஏண்டா இப்படிக் கேட்கிற?"

"முதல்ல எல்லாம், டூ வீக்ஸுக்கு ஒன்ஸாவது பேசுவீங்க. இப்ப எல்லாம் ஒரு மாசம் ஆகுதே.?"

"முதல்ல, நீ ஒருத்தி தான்.‌ ஆனா இப்ப.. சரண், தீரஜ், என்னோட மாமனார்னு ஆட்கள் நிறைய இருக்கீங்களே? எல்லார்க்கிட்டயும் பேசணும்ல.?"

"அதுசரி! மதுரைக்கு வரலாம்ல? கல்யாணம் முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு, இன்னும் உங்களுக்கு மறுவீடு சடங்கே செய்யல."

"இதுக்கு, நிதிதான் பதில் சொல்லணும். முடிவு அவளோட கையில. அவ சொல்லுறதைத்தான், நான் கேட்க முடியும்."

"நீங்க, அக்காக்கிட்ட சொல்லிப் பார்க்கலாம்ல.?"

"சரிடா.." என்றவன், "அத்தை எதுக்குக் கால் பண்ணாங்கனு கேளு."

தங்கள் இருவரது உரையாடலையும் கீதாவிடம் தெரிவித்த மஹதி, நிருதியின் வினாவையும் கேட்டாள்.

"சும்மா தான். சீனிக்கிட்டப் பேசலாம்னு கூப்பிட்டேன். ஏன், இவ்வளவு நேரம் தூங்குறா அவ..?"

நிருதி, "பார்கவ் ஜனனியோட செகண்ட் சோ சினிமாக்குப் போயிருந்தோம். தூங்க லேட் ஆகிடுச்சு. அதான், இன்னும் எழுந்திரிக்கல."

மஹதி, "உங்களுக்குப் படம் புரிஞ்சுதா அண்ணா.?"

"எனக்குக் காது தாண்டா கேட்காது! கண் இருக்கே. இங்கிலீஷ் சப்டைட்டில்ஸ் போட்டிருந்தான். சோ, பிராப்ளம் இல்ல."

தலை அசைத்தவள், "அண்ணாக்கிட்ட எதுவும் பேசணுமா அம்மா.?" எனக் கீதாவிடம் வினவ, "இல்ல." என்றார் அவர்.

இருவரையும் திரையில் பார்த்திருந்த நிருதி, "எதுனாலும்‌, அத்தையை எனக்கு மெசேஜ் பண்ணச் சொல்லு மஹி. நான் ரிப்ளை பண்ணுறேன். நிதி, ஆஃபிஸ் ஒர்க்ல பிஸியா இருப்பா. அவளால உடனுக்குடனே ரிப்ளை பண்ண முடியாது.‌ சிலநேரம் வேலையில மறந்திடுவா‌. நான், வோன் பிஸினஸ் தான? அதுனால‌ பிரச்சனை இல்ல." என்று உரைத்து, தனக்கும் மனைவியின் குடும்பத்தாருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க முயன்றான் நிருதி.

மறுக்க இயலாத அளவிற்கான விழிப் பார்வையில் இன்முகமாய், தன்னிடம் பேசுபவனைத் தட்டிக் கழிக்க இயலாது, ‘சரி’ என்பதாய்த் தலையை அசைத்துப் புன்னகைத்தார் கீதா.

 
Last edited:

NNK 48

Moderator
அத்தியாயம் 23


நாள்காட்டியில் முந்தைய தினத்தின் திகதியைக் கிழித்த துளசிக்கு.. ஏதோ சட்டென்று நினைவு வர, கணவனைத் தேடிச் சென்றார்.

கூடத்தில் அமர்ந்து தினசரியில் பார்வையை ஓட்டியபடி.. இரண்டாம் மகன் சரணிடம், தங்களின் ஜவுளித் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

"என்னங்க.." என அழைத்திட, இருவரது கவனமும் துளசியின் புறம் திரும்பியது.

"அடுத்த வாரம்.. மாமாவுக்கு எண்பது வயசு முடிஞ்சு, எட்டு மாசம் ஆகப் போகுதுங்க." என்றிட, கிருஷ்ணனின் முகம் மலர்ந்தது.

கேள்வியாய்ப் பார்த்த சரண், "என்னப்பா விசயம்.?"

"தாத்தாவுக்குச் சதாபிஷேகம் செய்யணும்டா."

"ஹோ.. ஆனா அது எண்பது வயசுல செய்யிறது தான? அப்படினா, நாம முன்னாடியே செஞ்சிருக்கணுமே? அம்மா ஏதோ எட்டு மாசம் கணக்குச் சொல்லுறாங்க."

"பொதுவா ஒரு மனுசன் பிறந்து, எண்பது வருசம் எட்டு மாசத்தோட முடிவுல ஆயிரம் பிறைகள் அவனோட வாழ்க்கையில வருமாம். அதைக் கணக்கு வச்சுச் சதாபிஷேகம் செய்யிறது வழக்கம்."

"ஹோ.. என்னப்பா செய்யணும்.?"

"பெரியவங்களுக்கு நாம கல்யாணம் செஞ்சு வச்சுப் பார்க்கணும்டா. அம்பத்தாறு வருச குடும்ப வாழ்க்கையைப் பார்த்தவங்க. அவங்கக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா, நாமளும் துணையோட சந்தோஷமா நீண்ட ஆயுளோட இருப்போம்னு ஒரு நம்பிக்கை."

"அப்ப செஞ்சிடலாம்பா‌. நல்லா கிராண்டா, ஒரு மேரேஜ் மாதிரியே நடத்திடுவோம்."

"அதுக்கு முதல்ல உங்க தாத்தாக்கிட்ட பர்மிசன் வாங்கணும்‌." எனத் துளசி உரைக்க, "அதெல்லாம் அப்பா சம்மதிப்பாரு. நானும், கீதா வீட்டுக்காரரும் பேசுறோம். மகனை விட மருமகனோட வார்த்தைக்கு மதிப்பு அதிகம்!" என்றார் கிருஷ்ணன்.

தங்கை மற்றும் அவளின் கணவரிடமும் இதைப் பற்றிப் பேசிட, இருவரும் நிறைந்த மனதுடன் ஏற்பாட்டைத் துவக்கினர்.

மூத்த பெயரனும், இருக்கும் ஒரே பெயர்த்தியும் குடும்பத்துடன் சரியாய் ஒட்டாது தனித்து இருக்க.. அவர்களிற்காக, சதாபிஷேக விழாவிற்குச் சம்மதம் தெரிவித்தனர் விஜயரங்கனும் பத்மாவதியும்.

"இன்விடேஷன் அடிக்கணும். கொஞ்சம் வித்தியாசமா, நம்ம எல்லாரோட ஃபோட்டோவும் போட்டு ரெடி பண்ணா நல்லா இருக்கும்!‌" எனக் கிருஷ்ணன் தனது விருப்பத்தைத் தெரிவிக்க, "சீனியோட மாப்ளக்கிட்டயே சொல்லலாம் மச்சான். நீங்க எப்படிக் கேட்கிறீங்களோ, அதே மாதிரியே டிசைன் பண்ணிக் கொடுத்திடுவாரு!" என்றார் சரவணன்.

"அவருக்குப் புரியவச்சு, உடனே கார்டை ரெடி பண்ணுறது எல்லாம் நடக்குற காரியமா? வேறொரு விசேஷத்துக்குச் சொல்லிக்கலாம்!" எனத் தட்டிக் கழிக்க முயல, "எங்க மேரேஜ் இன்விடேஷனை டிசைன் பண்ணதே, அவர்தான் அப்பா‌. அதெல்லாம் பக்காவா செஞ்சுக் கொடுத்திடுவாரு. நீங்க எப்படி வேணும்னு மட்டும் சொல்லுங்க!" என்று நிருதியைத் திருமண ஏற்பாட்டிற்குள் இழுத்து விட்டான் சரண்.

அதன்பின்னர் பணிகள் யாவும் துரித கதியில் நடந்தேறின.

பார்கவ்வை அழைத்து விசயத்தைச் சொன்ன கிருஷ்ணன், அழைப்பிதழ் வடிவமைப்புக்காகச் சென்னைக்கு வந்தார்.‌

"ஃபோன்ல பேசுறதைக் காட்டிலும், நாம நேர்ல போயிட்டா இன்னுமே நல்லது!" என்று உரைத்து மனைவியின் தமையனைக் கையோடு அழைத்து வந்தார் சரவணன்.

நிதன்யாவின் கைப்பேசிக்கு அழைத்து விபரம் சொல்ல, "நான் ஆஃபிஸ் மீட்டிங்ல இருக்கேன் ப்பா. உடனே வர முடியாது. வீட்டுக்குப் போங்க, நிரு இருப்பாரு!" என அவசரமாய்ப் பேச்சை முடித்துக் கொண்டாள் அவள்.

மனைவியின் குடும்பத்தாரை வரவேற்று தேநீரும் தயாரித்துக் கொடுத்து உபசரித்ததில், கிருஷ்ணன் சற்றுக் கலங்கிதான் போனார். அவர், இதுவரை நிருதியிடம் ஒருமுறை கூடப் பேசியது இல்லை. ஆனால் அவனின் மரியாதை நிறைந்த பார்வையும், சிநேகமான புன்னகையும், ஒருநொடி கூட அந்நியன் என்ற உணர்வைத் தரவில்லை.

அவனிற்கு.. தனது தேவைகளை எப்படிப் புரிய வைப்பது என்று திணற, சரவணன் மற்றவர்களிடம் பேசுவது போலவே இயல்பாகவே உரையாடினார்.

நிருதியின் மறுமொழிக்கான அசைவுகளும், அவர்கள் எளிதாய் விளங்கிக் கொள்ளும் படியாகவே இருந்தது.

கிருஷ்ணன் விருப்பத்தை உரைக்க, "ஈவ்னிங்குள்ள நாலஞ்சு டிசைன்ஸ் ரெடிபண்ணி தர்றேன். நீங்க, பார்த்துட்டு சொல்லுங்க. ஓகேனா..‌ அப்படியே என்னென்ன சேஞ்சஸ் பண்ணணும்னு பார்த்து, மாத்திடலாம். நீங்க ஃபைனல் பண்ணிட்டா, திவா நாலே நாள்ல கார்டை பிரிண்ட் செஞ்சு மதுரைக்கு வந்து கொடுத்திடுவான்!" என்றவன் அடுத்த நிமிடமே பணியைத் துவக்கி விட்டான்.

தந்தையின் வருகையை அறிந்து.. பார்கவ் விடுப்பு எடுத்துக் கொண்டு வர, ஜனனியும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள்.

நிதன்யாவின் இல்லத்திலேயே அவர்களிற்கான‌ உணவு தயாராக, கலந்தாய்வு முடிந்ததும் அனுமதி பெற்று அவளும் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டாள்.

நிருதியின் வடிவமைப்புகள் அனைத்தும் கண்களையும் கருத்தையும் கவரும்படி இருக்க, அதில் சிறந்ததாய் தோன்றிய ஒன்றை தேர்வு செய்தார் கிருஷ்ணன்.

மீதி வேலையைத் திவாகரிடம் ஒப்படைக்க, "ரெடியானதும், நானே வீட்டுக்குக் கொண்டு வந்து தந்திடுறேன்!" என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டான் அவன்.

இளையவர்களின் உபசரிப்பில் உணவை முடித்துக் கொண்டு, இருவரும் இரவே மதுரைக்குக் கிளம்பினர்.

"முடிஞ்ச அளவு, ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்திடுங்க. இனி, நீங்க தான நல்லது கெட்டதைப் பார்த்துச் செய்யணும்‌? வந்து, ஆளுக்கு ஒரு வேலைக்கான பொறுப்பை ஏத்துக்கோங்க!‌" என்று கேட்டுக் கொண்டு சரவணன் விடைபெற, கிருஷ்ணனும் அதையே வழி மொழிந்தார்.

இதற்கு மேலும், பார்கவ்விற்கும் நிதன்யாவிற்கும் சொல்லவா வேண்டும்.?

அலுவலகத்தில் தேவைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு.. மேலும் சில நாள்கள் வீட்டில் இருந்தே பணி செய்வதாய்க் கூறி அனுமதியை வாங்கி, மதுரைக்குச் செல்ல தயாராகினர்.

சதாபிஷேக தினத்திற்கு ஐந்து நாள்கள் முன்னரே, குடும்பத்தார் அனைவரும் வந்துவிட, திருமணத் தம்பதியருக்குப் பெரும் மகிழ்ச்சி.

விடியலில் இருந்து உறங்கும் வரை, பணிகள் நெட்டி முறித்தன. அலங்கார வேலை முழுவதையும் நிருதியே ஏற்றுக் கொண்டான்.

ஜனனிக்கும் மஹதிக்கும்.‌. நாள் முழுவதும் சமையல் அறையிலேயே பொழுது கழிந்தது‌. காலை தேநீர் அருந்தி, அதைக் கழுவி முடிக்க.. அடுத்தது காலை உணவு. சுத்தம் செய்த கையோடு, மதிய உணவு. அடுத்ததாய் மாலை, இரவு எனத் தொடர் பயணம் தான். இடையிடையே இளைப்பாறலாய்.. பழச்சாறு, நொறுக்குத் தீனிகள்.

கிருஷ்ணன் துளசி, சரவணன் கீதா தம்பதியருக்கு.. உறவுகளை அழைப்பிதழ் கொடுத்து வரவேற்கும் பணி‌.

அனைவருக்கும் புத்தாடை என்பதால், சரணிற்கும் நிதன்யாவிற்கும் கடையில் வேண்டியவைகளைத் தயார் செய்யவே, பொழுது சரியாய் இருந்தது.

மற்ற பணிகள் அனைத்தையும் பார்கவ்வும் தீரஜும் கவனிக்க, திருமண நாள் அழகாய் புலர்ந்தது‌.

முன்தினமே கோவிலிற்குச் செல்வது, இதர சடங்குகள் என அனைத்தையும் செய்து முடித்திருந்தனர்.‌ முகூர்த்த நேரத்தில்.. தங்களை விட இளையவர்களின் முன்னர், விஜயரங்கன் மற்றும் பத்மாவதியின் சதாபிஷேகம் நடந்தேறியது.

மேன்நிலையில் இருக்கும் தம்பதிகளிடம், அனைவரும் ஆசி பெற்றுக் கொண்டனர். பெயரன் பெயர்த்திகளிற்குத் திருநீறு குங்குமம் இட்டு ரங்கன் நல்வாழ்த்து உரைத்திட,

"சீக்கிரம் பிள்ள குட்டிய பெத்து, எங்க கண்ணுல காட்டுறது. ஒவ்வொருத்தருக்கும் கல்யாணம் ஆகி, ஒரு வருசம் ரெண்டு வருசம்னு ஆகுதே? அமைதியா இருக்கீங்க? மனசுல இன்னும்‍, சின்னப் பிள்ளைங்கனு நினைப்பா.?" என வினவினார் பத்மா.

"அவங்க‌ மூணு பேரும், அதுக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்டாங்க. பேசாம, எனக்குக் கல்யாணத்தை முடிச்சு வைங்க பாட்டி‍, அடுத்த வருசமே உங்களைக் கொள்ளுப் பாட்டி ஆக்கிடுறேன்!" எனத் தீரஜ் கூற, "அரியரை முடிச்சு, டிகிரி வாங்குறதுக்கே இன்னும் வழியைக் காணோம்?‌ அதுக்குள்ள கல்யாணம் முடிக்கப் போறானாம்!" என்று மகனின் முதுகில் வலிக்காமல் ஒரு அடியைப் போட்டார் கிருஷ்ணன்.

அனைவரது மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்து ததும்ப, அன்றைய தினமும் அப்படியே நகர்ந்தது.

மறுநாள் நிதன்யா நிருதிக்காக மறுவீடு வைபவத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர், கீதாவும்‌ சரவணனும். அன்றே அவளிற்குத் தாலி பிரித்தும் கோர்க்கப்பட்டது‌. துவக்கத்தில் மனைவியின் உறவுகளுடன் உரையாடுவது சிரமமாய் இருந்தாலும், மெல்ல அவர்களது பழக்க வழக்கங்களிற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டான் நிருதி.

அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, உணவைப் பரிமாறிய படியே வந்தார் துளசி.

நிருவின் இலையில் இரு மீன் துண்டுகளை வைப்பதைக் கவனித்த கீதா, "அண்ணி, அவருக்கு மீன் பிடிக்காது‌. அதை மட்டும் விட்டுட்டு, மத்ததை வைங்க!" என்றார்.

"எனக்குத் தெரியாதுப்பா, இரு வேற வைக்கிறேன்!" என அதனை எடுக்க முயன்றவரைத் தடுத்தவன், "பரவாயில்ல, முதல் தடவையா எனக்குப் பரிமாறி இருக்கீங்க. எடுக்க வேண்டாம், நான் சாப்பிட்டுக்கிறேன்!" என்று உரைத்திட, அனைவரது பார்வையும் அவன்மீது நிலைத்தது.

ஒன்றை மட்டும் எடுத்து அருகில் இருந்த நிதியின் இலையில் வைத்தவன், மற்றொன்றில் இருந்து சிறிது பிய்த்து உண்டான்.

தவிர்க்க வாய்ப்புக் கிடைத்தும் அதனைச் செய்யாது, பிடித்தமற்றதையும் உறவுகளிற்காக உள்ளன்போடு செய்யும் அவனின் குணம், அனைவரையும் சற்று நெகிழ்த்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

"கிலோ கணக்குல மீன் சாப்பிடுற மருமகளுக்கு, அது பிடிக்காத பையன்‌‌. நல்லா ஜோடி சேர்ந்திருக்கீங்க‌." எனக் கிருஷ்ணன் உரைக்க‍, சட்டென்று சிரிப்பலை எழுந்தது.

சில தினங்களாய் திருமண வேலைகளைக் கவனித்த அலுப்பு அனைவரையும் ஓய்வின் வசம் தள்ளிட, தத்தமது அறைக்குள் சென்று முடங்கினர்.

படுக்கையில் கவிழ்ந்து கிடந்த கணவனைக் கண்ட நிதன்யா, அவனிற்குத் தனது முகம் தெரியும் வகையில் அருகே சென்று படுத்தாள்.

உறங்காது பெயரிற்கு என்று கண்மூடி இருந்தவன், மனைவியின் வாசத்தை உணர்ந்து விழி திறந்து பார்க்க, "என்ன, உண்ட மயக்கமா.? மாமியார் வீட்டு விருந்து, செமயா இருந்துச்சுப் போல.?"

இடது கையால் தலையைத் தாங்கிய படி ஒருபக்கமாய் திரும்பியவன் சின்னதாய்ச் சிரித்து, 'என்ன.?' என்பது போல் பார்த்திட, "இங்க வந்ததுல இருந்து, நீங்க என்னைக் கண்டுக்கவே இல்ல."

"நீ மட்டும், என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தியோ.?"

"வேலை இருந்துச்சுல்ல?"

"அப்புறம், நான் என்ன சும்மா இருந்தேனா.?"

அவள் முகத்தைச் சுருக்கி இதழ்களைச் சுளித்துக் காட்ட, அருகே இருந்தவளின் இடையில் கைக்கோர்த்து தனக்கு நெருக்கமாக்கினான் நிருதி.

தனது முகத்தில் மோதும் அவனது சுவாசத்தின் கதகதப்பில் இதம் பரவிட, "தூங்கலயா.?" என்றாள் நிதன்யா.

அவளின் இடையில் இருந்த கையை விலக்கி.. கழுத்து இடைவெளியில் 'NO' என விரலால் எழுதியவனின் செயலில், தேகம் சிலிர்த்தது அவளிற்கு‌.

"அச்சோ.‌. என்ன செய்யிறீங்க‌?"

"நீதான, கண்டுக்கலனு சொன்ன? அதான்!"

கணவனின் பதிலில் நாணம் பூத்திட.. மேலும் அவனை நெருங்கிப் படுத்தாள்.

இருவரது விழிகளும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டன. ஆடவனின் பார்வை, அவளின் கண்களில் இருந்து மெல்ல கீழிறங்கி மார்பில் நிலைத்தது.

நிதன்யாவின் தோளில் சரிந்திருந்த துப்பட்டாவை, ஒற்றைக் கரத்தால் மொத்தமாய் உருவி எடுத்தான்.

"நிரு..?" என்றபடி அவள் தவிப்புடன் பார்க்க..‌ புன்னகைத்தானே தவிர, எதையும் கண்களில் காட்டவில்லை. அதனால் ஆடவனின் எண்ணம் யாது என அவளால் கணிக்க இயலவில்லை.

சுடிதார் மறைக்காத உடலின் மேல் பக்கத்தில் தெரிந்த பாகத்தில், வலக்கையால் கோலமிட..‌ அதன் அசைவை உள்வாங்கிய நிதன்யா திகைப்புடன் கணவனைப் பார்த்தாள்.

"ஹேய்.. என்ன சொன்னீங்க.?"

அவன் சிரித்து, "ஏன் கண்டுபிடிக்க முடியலயா? திரும்பவும் எழுதட்டா.?"

"ப்ளீஸ்.." என்றவள் முகத்தை இடப்பக்கம் திருப்பி, தனது வலது கன்னத்தைக் காட்டினாள்.

'I LOVE YOU' என்று மேல் இருந்து கீழ்வரை ஒவ்வொரு எழுத்தாய் எழுதி வந்தவன், இறுதியாய் அவளின் கழுத்து வளைவில் தனது இதழ்களையும் பதித்தான்.

கண்களைத் திருப்பி அவனைப் பார்த்தவள், "இதைச் சொல்ல, இவ்வளவு நாள் உங்களுக்குத் தேவைப்பட்டிருக்கு.?"

"உனக்குப் புரியிற மாதிரி, சந்தோஷத்தைக் கொடுக்கிற விதத்துல சொல்லணும்னு.. நீதான சொல்லி இருந்த.?"

அவள் கண்கள் சுருக்கிப் பார்க்க, "காதல் முழுமை அடையிறது, கட்டி அணைக்கிறதுலயோ கல்யாணம் செஞ்சுக்கிறதுலயோ இல்ல நிதிமா. உனக்கே, அது தெரியும். நாம வாழுற வாழ்க்கையைப் பார்த்து, நம்ம சொந்தங்கள் எல்லாம் அந்த உறவை மனசார ஏத்துக்கிறதுல இருக்கு.

மாமா, எப்ப கிருஷ்ணன் அப்பாவை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாரோ, அப்பவே நம்ம காதலுக்கான அர்த்தம் கிடைச்சிருச்சு. இன்னைக்கு.. அத்தை, சாப்பிடுறப்ப என்னோட பிடித்தத்தைப் பத்தி சொல்லும் போது, அது முழுமை அடைஞ்சிடுச்சு.

இந்தச் சந்தோஷமும் நிறைவும்.. நான் இதுக்கு முன்னாடி ஐ லவ் யூனு சொல்லி இருந்தா, உனக்குக் கிடைச்சிருக்குமா.? உனக்கு நல்லா புரிஞ்ச, தெரிஞ்ச ஒரே மொழி அன்பு மட்டும் தான். அது.. என்கிட்ட மட்டும் இருந்து கிடைச்சா போதுமா? நீ ஆசைப்படுற விரும்புற குடும்பத்துக்கிட்ட இருந்தும் கிடைக்கணும்ல?"

நிருதி சைகையால் உரைத்ததை இமைக்காது பார்த்திருந்தவளின் கண்களில் நீர் திரையிட, உடனடியாய் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

உண்மை தான். என்னதான் அவன் மீது கொண்ட நேசத்திற்காக, உறுதியாய் நின்று திருமணம் செய்து கொண்டாலும்..‌ அதற்கு முன்பும் பின்புமான மனப் போராட்டங்கள் எத்தனை எத்தனை.?

ஆனால் இந்த நொடி அனைத்து கவலைகளும் சிந்தனைகளும் பட்டென்று அறுபட்டது போல், உடலும் உள்ளமும்.. ஏன் மூளையும் கூட ஆசுவாசம் அடைந்ததாய் உணர்ந்தாள். இந்த அனுபவம் எல்லாம், அவளின் குடும்பத்தாரால் மட்டுமே சாத்தியம்‌.

அதற்கும் மேலாய்.. கரம் பற்றிய கணவனானவன், காதல் பரிசாய் விலகி சென்ற உறவுகளை மீண்டும் அளித்து, மேலும் அவளை இன்பத்தில் திளைக்க வைத்து விட்டான்.

பெண்ணவளின் விழியோரம் கசிந்த நீரைக் கண்ட நிருதி, அதனைத் துடைத்து விட்டு.. ஒலியற்ற தனது இதழ்களை அசைத்து 'லவ் யூ நிதி.' என்றிட, மகிழ்ச்சியில் பெருக்கெடுத்த கண்ணீருடன் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்‌ நிதன்யா‌‌.

மனையாளின் முதுகினில் தட்டிக் கொடுத்தவன்.. அவளைத் தன்னிடம் இருந்து பிரித்து முகம் காண, சிவந்த கண்களில் அவன் மீதான காதல் ததும்பி நின்றது. அதன் மீது தன் இதழ்களைப் பதித்தவனிற்கு‍, புன்னகையில் கவிதைப் பரிமாறினாள் அவள்.

காதலைச் சொல்லும் விழிகள்!

கரை கடந்த அன்பின் மொழிகள்!


சுபம்.


வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்..

கதையை நல்லபடியா முடிச்சிட்டேன்.‌ இது, உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடிச்சதுனு தெரியல.‌ வாசிச்ச, வாசிக்கிற, இனி வாசிக்கப் போற எல்லாருக்கும் ரொம்பவே நன்றி. கதை துவங்கின சில அத்தியாயங்கள்லயே சிலர் நிருதியைப் பத்தி ஊகிச்சு இருப்பீங்க. இப்படியான ஹீரோ ஒரு சிலருக்கு வியப்பைத் தந்திருக்கலாம்‌. சிலருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கவும் வாய்ப்பிருக்கு. ஏன்னா.‌. இங்க ஹீரோக்குனு சொல்லப்படுற பொது வரையறைக்குள்ள வராதவன் நிருதிவாசன். உங்க கருத்து எதுவா இருந்தாலும் சரி, யோசிக்காம நிச்சயமா கமெண்ட்ஸ்ல பகிர்ந்துக்கோங்க. என்னுடைய அடுத்தடுத்த கரு உருவாக்கங்களுக்கு அது உதவியா இருக்கும்‌.ரொம்ப நன்றி..🙏🙏🙏

 
Last edited:
Status
Not open for further replies.
Top