எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நாட்பூத்த நன்மலர் - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK-83 Sudar

Moderator
வணக்கம் மக்களே... நாட்பூத்த நன்மலர் வாசனையோடு மலரட்டும்!!
 

NNK-83 Sudar

Moderator
நாட்பூத்த நன்மலர்
Natpootha nanmalar cover.jpg

மலர் 1

கண்கள் இரண்டும் சிவந்திருக்க, இருகைகளையும் தலையில் தாங்கியபடி நடைமேடையில் தொடருந்துக்காக் காத்திருந்தான் மருதசெழியன். இரண்டு தினங்களாக பணத்திற்கு நாயாய் அலைந்தாயிற்று. ஒரு ரூபாயைக் கூட அவனால் புரட்ட முடியவில்லை வேலைக்கும் எந்தவித ஏற்பாடும் செய்ய முடியவில்லை. பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் இருந்தது மருதனின் நிலை. நாளை இந்நேரம் கடன்காரன் வாசலில் வந்து நிற்பான். அப்பா மட்டும் இன்று உடனிருந்திருந்தால்? கேள்விக் கொக்கியிட்டு நின்றது அவனின் மனதில். நீண்ட மூச்சை இழுத்துவிட்டவன் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடருந்தில் ஏறினான். கூட்ட நெரிசலில் அரைமணி நேரம் நின்றவன் மனதில் இன்று சனிக்கிழமை என்பது அப்போதுதான் நியாபகம் வந்தது. உடனே, திருவல்லிக்கேணி நிறுத்தத்தில் அவசரமாக இறங்கினான்.

சனிக்கிழமைதோறும் பார்த்தசாரதி கோவிலுக்கு அப்பா செல்வது வழக்கம். சென்னை வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான், அப்பா கோவிலுக்கு செல்வதும் அமர்வதும் வருவதும். ஏனோ, இதுவரை உடன்சென்று பழக்கமில்லை. அம்மாவின் வாய்மொழியால் கேட்டதோடு சரி. இன்றுதான் புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்ற எண்ணம் வந்தது போல் அவசரகதியில் ஓடினான். மணியோ பதினொன்று ஐம்பத்தைந்து. இன்னும் ஐந்து நிமிடங்களில் கோவில் நடைசாற்றப்படும் என்பது மண்டையில் உரைக்க வேகநடையிட்டு சென்றான். சரியாக கோவிலின் அருகில் வரும்பொழுது அணிந்திருந்த செருப்பு அறுந்துவிட்டது. அதை அப்படியே ஓரமாக கழட்டிவிட்டு கோவிலுக்குள் நுழைந்தான்.

சென்னையின் இயந்திர ஓட்டத்திற்கு நடுவே சற்று மூச்சு மட்டுப்பட்டதாய் ஒரு உணர்வு. கைகூப்பியெல்லாம் வணங்கவில்லை. சற்று நேரம் கொடிமரத்தை பார்த்துவிட்டு, அப்பா அமரும் திண்ணையை நினைவடுக்குகளில் இருந்து எடுத்தவன் தேடிப்பிடித்து அங்கே சென்று அமர்ந்துக் கொண்டான். வெயில் சுட்டெரித்தாலும் சற்று குளுமை எட்டிப்பார்த்தது அந்த இடத்தில். அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. ஐந்தே நிமிடம் அனைவரும் நடைசாற்றுவதால் கிளம்ப எத்தனிக்க, அமைதியாக அனைவரும் செல்வதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் மருதசெழியன்.

வேகமாக வந்ததில் எழுந்த பெரிய பெரிய மூச்சுகள் சற்று குறைந்தது. எதுவும் வேண்டவோ கேட்கவோ தோணவில்லை. ஏனென்றால் அவனின் பட்டியலோ மிக பெரியது. அவன் ஆரம்பித்து முடிக்க இந்த ஐந்து நிமிடம் போதாது என்பது அவன் உணர்ந்ததே.

சிறிது நேரம் இருந்தவன் நடைசாற்றுவதற்கான வேலைகள் நடப்பதை பார்த்து அவர்கள் துரத்துவதற்கு முன் தானே கிளம்பலாம் என்று எழுந்தான்.

“எல்லாம் அவன் விட்ட வழி. பாத்துக்கலாம். ஏதாவது ஒரு வழி கிடைக்காமலா போய்டும்” அருகில் இருந்த யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த வரிகள் தனக்கே விதிக்கப்பட்டதாய் எண்ணி வெளியே வந்தான்.

உள்ளே இருந்த குளுமை வெளியே கிஞ்சித்தும் இல்லை. பொடி சுட்டது. அறுந்த செருப்பு அவனை பார்த்து நகைத்தது. சட்டைப்பையோ கணமில்லாமல் காத்து வாங்கியது. கால்சராயில் இருக்கும் சட்டைப்பை கிழிந்திருக்க இரு முனையையும் சேர்த்து ஊக்கி போட்டு வைத்திருந்தான். தற்போது அது ஆபத்பாந்தவனாய் தெரிந்தது. அதனை எடுத்தாலும் காசு ஒன்றும் கொட்டிவிடாது என்று எண்ணி மென்னகையோடு அறுந்த செருப்பை ஊக்கி வைத்து தற்போதைய காலணியாக மாற்றிவிட்டான்.

தற்போதுதான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. மீண்டும் தொடருந்து நிலையம் நோக்கி சென்றான். காலையில் கையில் இருந்த பத்து ரூபாயில் சென்ட்ரலிருந்து வேளச்சேரிக்கு செல்ல பயணச்சீட்டும், திரும்பி வர பயணச்சீட்டும் வாங்கியாயிற்று. நம் நேரம் நாம் மறந்து போகும் வேளையில் பரிசோதகர் வந்துவிட்டால், அபராதம் கட்ட கூட பணமில்லை. சிறைக்கு சென்றுவிட்டால் அம்மா அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வாள்? என்று எண்ணி எடுத்த பயணச்சீட்டு ஒன்றே, ஒருநாள் பயணத்திற்கு போதுமானதாக இருக்கிறது. தன் நிலையை எண்ணி சிரித்துக் கொண்டவன், திருவல்லிக்கேணியில் ஏறி சேப்பாக்கத்தில் இறங்கினான்.

சேப்பாக்கம் தொடருந்து நிலையத்தில் இறங்கி கீழே வந்து இடது பக்கமாக சென்றால் சென்னை மாநகரத்தின் மற்றொரு பரிணாமத்தை அங்கு காணலாம். நடுத்தர மக்களையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்று குனிந்து சென்னைவாசிகளையும் பார்க்கலாம். வறுமையென்றும் சொல்ல முடியாது, இருக்கின்றோம் என்ற பெயரில் மக்கள் குடிசையிலும் தகரஅட்டையின் கருணையாலும் ஒண்டிக் குடித்தனம் இருக்கும் இடம்.

அப்பா இருந்தவரை இப்படியொரு இடமிருக்கிறது என்று மருதனுக்கு தெரியாது. படித்த பட்டதாரி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது என்று கேட்டால், ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் அவனிடமிருந்து பதில் வரும்.

உச்சிவெயில் மண்டையை பிளக்க, சனங்கள் அப்போதும் தத்தமது வேலைகளை செய்துக் கொண்டுதான் இருந்தனர்.

“இந்தாப்பா மருதா! உங்கம்மா ராயப்பேட்ட ஆஸ்பத்திரிக்கு போயிருக்கு. யாரோ வேல்விழியாமே, ஒடம்பு நோவுதுன்னு இட்டுன்னு போயிருக்காங்க. இந்தா வூட்டு சாவி. நாஸ்த்தா துன்ன சொல்லுச்சு” என்று செல்வி அக்கா கொடுத்து சென்றார்.

"சரிக்கா" என்றவன், ‘வேல்விழிக்கு எப்டி இந்த இடம் தெரிஞ்சது?’ என்ற கேள்வியுடனேயே வீட்டினை திறந்து உள்ளே சென்றான். அவனிருக்கும் உயரத்திற்கு நிமிர்ந்தால் தலையிடிக்கும், படுத்தால் கால் பாதம் வெளிக்காற்று வாங்கும். இதற்கே மாதம் ஆயிரத்தி எழுநூறு வாடகை. உள்ளே சென்றவன் மீதமிருந்த இட்லியை எடுத்து உண்டு முடித்தான்.

இருக்கும் பிரச்சனையில் வேல்விழி வேறு வந்து இம்சை செய்கிறாள். இன்று என்ன ஏழரையை இழுத்து வைத்தாளோ? என்று எண்ணியவாறே சற்று அமர்ந்தான்.

அவனின் எண்ணவலைகள் சற்று பின்னோக்கி சென்றது. சிறுவயதில் சொந்த ஊரில் இப்படித்தான் அப்பாவும் தூணில் சாய்ந்து அமர்ந்திருப்பார். அதுவும் பெரிய வீடொன்று கிடையாது. ஆனால், நால்வரும் தாராளமாக இருக்கும் குடித்தனம்தான்.

மண்ணில் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வேகமாக உள்ளே வந்த மருதசெழியனின், “மருதா, அப்பா இருக்காருடா” என்றதில் மொத்த குதூகலமும் வற்றிவிட்டது.

வாசலில் வைத்த கால் அப்படியே பின்பக்கமாக சென்று உடலிலும் உடையிலும் மணல் படிந்த இடங்களை சுத்தப்படுத்திவிட்டு சமத்துப்பிள்ளையாக அடுக்களைக்குள் அம்மாவைத் தேடி சென்றான்.

“மா, ஸ்கூல் பீஸ்க்கு சொல்லி இருந்தேன்ல? அப்பாக்கிட்ட சொன்னீங்களா?”

“மருதா, மிஸ்கிட்ட சொல்லி ஒரு ரெண்டு நாளைக்கு டைம் கேளுடா. அப்பாக்கு இப்போ வேல கம்மியா இருக்கு. கண்டிப்பா ரெண்டு நாள்ல கட்டிடலாம், சரியா?”

“ப்ச்! எப்பவும் நான்தான் கடைசியா கட்டுறேன்மா.”

“அதவிடு, கட்டிடலாம். அம்மா உனக்கு பிடிச்ச கருப்பட்டி பனியாரம் சுட்டு இருக்கேன் இந்தா” என்றதில், கவலையை மறந்தவனாய் உணவில் ஐக்கியமானான்.

“என்ன சொல்றான் செழியன்?”

“அவனுக்கு என்னங்க தெரியும்? நீங்க எதுவும் டென்சன் ஆகவேண்டாம். வேலை வரும். வந்து சாப்டுங்க!” என்று அவரையும் சமாதானம் செய்து சாப்பிட வைத்தார்.

‘அன்னைக்கு அப்பாவும் இப்டிதான உட்காந்துட்டு இருந்தாரு. ஒரு வார்த்த கேட்டு இருக்கலாம். மனுசனுக்கு காசு பிரச்சனை வந்தா நொந்து போறது கிடையாது. தேவைகள பூர்த்தி செய்யக்கூட பணம் இல்லன்னுதான் நொந்து போறான் போல… எனக்கு உங்கள மாதிரி சமாளிக்குற தைரியத்த கொடுங்கப்பா’ என்று மனதில் தந்தையை உருப்போட்டவன் சற்று கண்ணயர்ந்தான். வெயிலில் சென்று வந்த அலுப்பு அப்படியே அவனை தூக்கத்திற்கு அழைத்து சென்றது. தூங்கி பத்து நிமிடம் கூட இருக்காது, கதவு திறக்கப்பட அடித்து பிடித்து எழுந்தான்.

“தூங்கிட்டு இருந்தியா மருதா? வேல்விழிக்கு மேலுக்கு முடியலயாம். அதான் ராயப்பேட்ட ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். இட்லி வச்சிருந்தேன் சாப்டியா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார் மருதசெழியனின் அம்மா மீனா.

“ம்ம்ம், சாப்டேன். நீ எதுக்குமா இப்போ தேவயில்லாத வேலைய பாத்துட்டு இருக்க? ஏன், அவளுக்கு உடம்புக்கு முடியலன்னா ஆஸ்பிட்டலுக்கு போக தெரியாதா? இங்க நமக்கே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு. இதுல இவளுக்கு வேற நீ சேவகம் செய்யணுமா?” என்று காய்ந்தான் செழியன்.

“என்ன மருதா? அவளுக்கு நம்மள விட்டா யாரு இருக்கா?”

“பேசாத மா! அதான் குடும்பமே ஒட்டும் வேணா, ஒறவும் வேணான்னு போய்ட்டாங்கள? இப்போ என்ன புதுசா சொந்தம் கொண்டாடிட்டு வராங்க? இங்க பாரு, இந்த வேசத்த நீ வேணா நம்பு. நான்லாம் நம்ப மாட்டேன். நாளைக்கு என்ன பன்றதுன்னு நான் நாயா பேயா அலஞ்சிட்டு இருக்கேன். ஊர்ல இருந்து வந்துவளுக்கு நீ சவட்ண செஞ்சிட்டு இருக்க? போம்மா” என்றபடி வாசலுக்கு வர, கைகளில் மாத்திரை பையோடு நின்றவளின் முகத்தில் கண்ணீர் சுவடுகள்.

“படிக்குற புள்ளைக்கு புத்தி வேல செய்யுதா பாரு. வீட்ட விட்டு போக வேண்டியது. இப்போ நம்ம உசுர வாங்க வேண்டியது” இறுதி வார்த்தை அவளின் காதுபடவே சொல்லிவிட்டு சென்றான்.

கேட்டவளோ விரக்தி புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.

“வா, வேலு! அவன் பேசுனத எதயும் மனசுல வச்சிக்காதமா. அவனபத்திதான் உனக்கு தெரியும்ல? கொஞ்ச நேரம் இரு. நான் சட்டுன்னு மதியத்துக்கு சமைக்குறேன். அவனும் வந்துடுவான்” என்றபடி சமையலில் ஈடுபட, வெளியே சென்றவனின் எண்ணத்திலேயே அமர்ந்திருந்தாள் வேல்விழி.

மீண்டும் அவன் தெருவைக் கடந்து வெளியே வர, இருசக்கர வாகனத்தில் அவன்முன் நின்றான் மனோகர்.

“எங்கடா போன? காலைல இருந்து ஆளயே காணோம். நான் பையன ஸ்கூல்ல இருந்து இட்டுன்னு வரனும். நீயும் வா, எங்க போனுமோ எறக்கி வுட்றேன்”

“இல்ல மனோ! நீ போய்ட்டு வா. நான் இங்க பக்கத்துலதான் போகணும் போய்க்குறேன்” என்று மறுத்தவனின் பேச்சினை கருத்தில் கொள்ளாதவன்,

“பிஞ்ச செருப்ப தான கால்ல போட்டு இருக்க? அதாலயே அடிப்பேன். பேசாம உட்காரு.” என்றவனின் பேச்சில் அமைதியாக பின்பக்கம் ஏறி அமர்ந்தான்.

“ஏன் மருதா, பணத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டியா?”

நீண்ட பெருமூச்சொன்றை விட்டவன், “எங்க, அதுக்குத்தான் காலைல இருந்து அலஞ்சிட்டு இருக்கேன். ஒரு ரூவா கூட ரெடி பண்ணல. நாளைக்கு கடன்காரன் வந்து என்ன கிழி கிழிக்கப்போறானோ?”

“கடன்வாங்குன நாய், ஏமாத்திட்டு ஓடிப் போய்டுச்சு. நீ அல்லல்பட்டு கிடக்க. களவாணிப்பய. என்கிட்டயும் இப்போ இல்லடா. இருந்தா நானே கொடுத்து இருப்பேன்.”

“அட, என்ன மனோ நீ? உன்னப்பத்தி எனக்கு தெரியாதா? உன்கிட்ட இருந்தா இந்நேரம் என்னைய அலைய விட்டிருப்பியா நீனு? நீ எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத. கண்டிப்பா கிடைக்கும், பாக்கலாம்” என்றவன் பார்வையை சாலை நோக்கி திருப்ப, அங்கிருந்த தேவாலயத்திற்குள் தெரிந்த ஒருவர் நுழைவதுபோல் இருந்தது.

“மனோ, வண்டிய நிறுத்து. இங்கதான் இறங்கனும்.” என்று அவனின் தோளில் தட்டியவன், அவசர அவசரமாய் சாலையை கடந்து தேவாலயத்திற்குள் சென்றான்.

அங்கிருந்தவரைக் கண்டு ஒருகணம் ஸ்தம்பித்துவிட்டான் மருதசெழியன்.

“மதி!” அவனின் உதடுகள் முணுமுணுத்தன.

“ஆதலால், கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ஆமென்” என்று அருகிலிருந்த ஒருவர் ரோமர் பத்தாவது அதிகாரத்தின் பதின்மூன்றாவது வரியைப் படித்தார்.

மருதசெழியனும் தன்னையறியாமல் “ஆமென்” என்றான். உள்ளத்தில் புது புத்துணர்ச்சி ஒன்று பிறந்தது. மதியைக் கண்டதனாலா அல்லது விவிலியத்தின் வரிகளை உள்வாங்கியதனாலா என்பது அவனுக்கே வெளிச்சம்.

இறைவனை வணங்கியபடி பிரார்த்தனையை முடித்தவள் பாதிரியாரை நோக்கி சென்றாள்.

“எப்டி இருக்கீங்க ஃபாதர்?”

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் மதி. நீ எப்டி இருக்க? எப்போ சென்னை வந்த?”

“நேத்துதான் ஃபாதர். நானும் நல்லா இருக்கேன் ஃபாதர். இல்லத்துக்கு மணிலாம் சரியா வருதான்னு அப்பா கேட்க சொன்னாரு. அன்ட், இன்னும் வேற தேவைகள் இருக்கான்னு கேட்கலாம்னு வந்தேன் ஃபாதர்.”

“உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் செய்ற உதவிகளாலயும், கடவுள் கிருபைனாலயும் இப்போ எந்த தேவைகளும் இல்ல. அப்டி ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா கண்டிப்பா கேட்குறேன். ஓகே மை டியர் கேர்ள்.?”

சின்ன சிரிப்புடன், “ஓகே, ஃபாதர். அம்மா இல்லத்துல தான் இருக்காங்க. நான் அவங்கள கூட்டிட்டு கிளம்புறேன் ஃபாதர்.” என்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு திரும்பியவள் ஆச்சர்யத்தில் உறைந்து நின்றுவிட்டாள்.

மருதசெழியன், அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏய், செழியா? நீயா? இங்கதான் இருக்கியா? எப்டிடா இருக்க? என்னை நியாபகம் இருக்கா? நான்தான் மதி! அப்பா அம்மா எப்டி இருக்காங்க?” அவள் இதழ்கொள்ளா சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருக்க, இவனோ கண்கள்கொள்ள நீரில் அழுதிருந்தான்.

“எங்கடி போன இத்தன வருசமா? செத்துட்டேன் மதி” என்றவனின் அழுகை நின்றபாடில்லை. அவளுக்குத்தான் அவனைக் கையாள வழி தெரியவில்லை.

“செழியா! கன்ட்ரோல். என்கூட வா” என்றபடி அவனை அழைத்து சென்றவள், ஒரு மரஇருக்கையில் அமர வைத்தாள்.

பிடித்த அவளின் கையை விடவேயில்லை. “இப்போ அழு!”

“ஹான்?” அவன் திருத்திருவென விழித்தான்.

“சர்ச்ல அழுதல? அங்க எல்லாரும் பார்ப்பாங்க. இங்க யாரும் இல்ல என்னைத்தவிர. இப்போ அழு.” இதற்குமேல் அவனால் சத்தியமாகத் தாங்க முடியவில்லை.

வெடித்த அழுகை அவனுள் இருந்து வந்தது. மதியும் அவன் அழுது முடிக்கட்டும் என அமைதியாக இருந்துக்கொண்டாள்.

“முடியல மதி. என்னால எதயும் சமாளிக்க முடியல. அடிமேல அடி. அப்பா… அப்பா…” என்று இன்னும் தேம்பியவன், அவளின் மடியில் புதைந்து அழுது தீர்த்தான்.

தொடரும்…
 

NNK-83 Sudar

Moderator
மலர் 2

ஒருவழியாக அழுது ஓய்ந்தவன், “எங்க மதி போன, அஞ்சு வருசமா?”

“நீ ஏன்டா இப்டி இருக்க?”

“எனக்கென்ன நல்லாதான இருக்கேன்?”

“ஐயா, நல்லா இருக்குறதுதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே! ஒழுங்கா சாப்டுறது கிடையாது போல. வயிறுலாம் ஒட்டிபோய் இருக்கு. கருவளையம், இதுல தாடி வேற. மனசும் நல்லா இல்ல, உன் மூஞ்சிய பாக்கவும் நல்லா இல்ல. ஏன் செழியா?”

அவளின் கண்களில் கடுமையான கண்டிப்பு. ‘நீ இப்படி கிடையாது. ஆனால், ஏன் இப்படி?’ கேள்வித் தொக்கி நின்றது.

“ஏன்னா? நான் என்ன சொல்றது மதி?” வானத்தை வெறித்தபடி இருந்தவன், “நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலயே?” என்றான் அவளைப் பார்த்து.

“அத அப்ரோம் சொல்றேன். முதல்ல நீ ஏன் இப்டின்னு சொல்லு நாயே!”

“நான் கேட்டதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு. நான் சொல்றேன்.” என்று தோளைக் குலுக்கினான்.

“எல்லாமே மாறி இருக்கு, இந்த விசயத்த தவிர, லூசு. உனக்கு தான் வீட்ல நடந்த பிரச்சனை தெரியும்ல. அதுக்கு அப்ரோம் நான் சென்னை வந்துட்டேன். அப்ரோம் படிச்சு முடிச்சு, மதுரைல வேலைக்கு ஜாய்ன்ட் பண்ணேன். இப்போ சென்னைக்கு ட்ரான்ஸ்பர். போதுமா? இப்போ நீ சொல்லு.”

“அப்போ நீ அங்க இருந்து கிளம்பி நேரா சென்னைக்கு தான் வந்தியா?”

“ம்ம், ஆமா! ஆனா, ஒரு வருசம்தான் இங்க இருந்தேன். அப்ரோம் திண்டிவனம் போய்ட்டேன். இப்போ இது ரொம்ப முக்கியம் பாரு? டாபிக்க மாத்தாத.”

“சரி, சரி! எல்லாமே நல்லாதான் மதி போய்ட்டு இருந்தது. வேல்விழி தெரியும்ல, அவளுக்கும் சூர்யா அண்ணாக்கும் நிச்சயம் நடந்ததுல ஆரம்பிச்சது பிரச்சனை. வேல்விழியோட அண்ணா குருவுக்கும் நம்ம கீதாவுக்கும் கல்யாணம் முடிஞ்ச உடனே இவங்களுக்குன்னு முடிவாச்சு. அம்மாக்கு வருத்தம்தான். வேல்விழிய எனக்கு பேசலாம்னு இருந்தாங்க. அப்போ நானும் காலேஜ் தானே! அத விடு. இந்த வேல்விழிக்கு கல்யாணத்துல விருப்பமே கிடையாது. ஆனா, கடைசி வரைக்கும் தலையாட்டிட்டு, மணமேடைல சூர்யாவ உட்கார வச்சிட்டு இவ ஓடி போய்ட்டா. போனவ சும்மா போய் இருக்கலாம். என்மேல என்ன காண்டோ? 'நான் செழியன காதலிக்குறேன்'னு எழுதிவச்சிட்டு போய் இருக்கா மதி. இதுனால மூணு குடும்பத்துக்கும் சண்ட.

இதுலாம் எனக்கு எதுவும் தெரியாது. அப்பாவும் கீதாவும் எவ்ளோவோ எடுத்து சொல்லியும் யாரும் கேட்கல. பெரியப்பாவும் மாமாவும் அப்பாவ ரொம்ப பேசிட்டாங்க. அதுல ஒடஞ்சவர்தான். ஹார்ட் அட்டாக்ல அட்மிட் செஞ்சப்போவும் எனக்கு சொல்லல. மத்தவங்க பேச்சு, அத்த, மாமா பேச்சுலாம் கேட்டு ரொம்ப மனசு விட்டுட்டாரு. கீதா கல்யாணத்த நினச்சு ஸ்ட்ரெஸ்ல ஸ்ட்ரோக் வந்துடுச்சு. அப்போ தான் ஹாஸ்ட்டல்ல இருந்த எனக்கு போன் வந்தது. அப்டி இப்டின்னு கடன் வாங்கி உடனே ட்ரீட்மென்ட் செஞ்சதுல படுக்கல அப்பா. காப்பாத்திட்டோம். நான் வந்தது தெரிஞ்சும் மறுபடியும் பிரச்சனை. அதுல கைகலப்பு ஆகி சூர்யாவ நான் அடிச்சிட்டேன். நடுவுல அப்பா வந்து, சூர்யா அப்பாவ அடிச்சிட்டான்.

அதுக்கு அப்ரோம் அப்பா அதுல இருந்து வெளியவே வரல. நமக்கு அப்போ ஃபைனல் செமஸ்டர் தான. சோ, மெடிக்கல் லீவ் எடுத்துட்டேன். அப்பாவ பாக்கணும், வீட்ட பாக்கணும், கீதா கல்யாணம் எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல மதி. உன்ன தான் ரொம்ப தேடுனேன். எக்ஸாம் அப்போ பாக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா, அப்போவும் உன்ன பாக்க முடியல. என்மேல இன்னும் கோவம்போலன்னு நினச்சிட்டு இருந்தேன். அப்டியே லைஃப் போச்சு, ஒரு அஞ்சு மாசம்.

அதுக்கு அப்ரோம் மறுபடியும் கீதா கல்யாணத்துல வந்து நின்னது. குரு வீட்டுக்கு வந்தாரு. அவருக்கும் எங்க மேல கோபம்தான். ஆனா அவர் ஒரு வார்த்த சொன்னாரு மதி, ‘எனக்கு இப்போவும் கோபம் குறையல. என் தங்கச்சி எங்க இருக்கான்னும் தெரியல. இது எல்லாத்துக்கும் மருதன்தான் காரணம். ஆனா, இதுல உன்ன தண்டிக்க எதுவுமே இல்ல கீதா. இப்போ இந்த நிமிசம், குருவுக்கு பொண்டாட்டியா மட்டும் உன்னால இருக்க முடியும்னா வா. ராணி மாதிரி பாத்துக்குறேன்’னு சொன்னாரு. கீதா அப்போவும் போகல. உண்மையாலுமே இதுக்கு நான் காரணம் இல்லன்னு எத்தன பேருக்கு சொல்ல முடியும் மதி? அம்மாதான் அவக்கிட்ட பேசி அனுப்பி வச்சாங்க. அதுக்கு அப்ரோம் அந்த ஊர்ல இருக்கவே முடியல. அப்பாவும் அண்ணாவும் இருந்தும் தங்கச்சிய கட்டிக்கொடுக்க முடியலன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

என்னால எதயும் சமாளிக்க முடியல மதி. எக்ஸாம்ஸ் முடிச்சிட்டு சென்னைல ப்ரண்ட் மூலமா வேலைக்கு ட்ரை பண்ணேன். கிடச்சிடுச்சு. ஒரு சேன்ஜ்சா இருக்கட்டும்னு குடும்பத்தோட சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டேன். முதல்ல இங்க சமாளிக்கவே முடியல. அங்க குத்தல் பேச்சுன்னா, இங்க வாங்குற சம்பளம் செலவுக்கு சரியா இருந்தது. டபுள் சிப்ட், அம்மாவும் வேலைக்கு போனாங்க. அப்பா ரெஸ்ட் எடுக்க சொல்லியும் உழச்ச உடம்பு சும்மா இருக்குமா? மறுபடியும் பைண்டிங்க் வேலைய ஆரம்பிச்சாரு.

இப்டியே போய்டுச்சு நாலு வருசம். அப்பாக்கு ஒரு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. கோமாக்கு போய்ட்டாரு. பாவம் மதி அந்த மனுசன். ரொம்ப பட்டுட்டாரு. இன்னும் ஆஸ்பிட்டல்ல தான் இருக்காரு.”

கேட்டவளுக்கோ உள்ளுக்குள் ஒரு வலி. இத்தனை கஷ்டத்திலும் தன்னை தேடி இருக்கின்றான். சக தோழியாக என்னால் உடன் இருக்க முடியவில்லையே!

“அப்பாவ எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்க? ட்ரீட்மென்ட் எப்டி போய்ட்டு இருக்கு?”

“கவர்ன்மென்ட்ல தான் மதி. ஆனா, இம்ப்ரூவ்மென்ட் ஒன்னும் அவ்ளோவா இல்ல. வேலையும் போய், பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு மதி. யார்கிட்டயும் சொல்ல முடியாம, நான் பைத்தியமாகிடுவேன் போல.” அவனின் இறுக்கம் அதிகமானது.

அவன் கைமேல் தன்கைக்கொண்டு தட்டிக்கொடுத்தவள், “வேலை போச்சா? என்னடா சொல்ற? எப்டி சமாளிக்குற?”

“அத சொல்லலயா? ஆஃபிஸ்ல ஒருத்தன் கடன் வாங்குனான். அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட போய், அந்த நாய் எஸ்கேப் ஆகிட்டான். நான் சிக்கிட்டேன். அதான் இப்போ பெரிய தலவலியா இருக்கு மதி. ரெண்டுநாளா அலையுறேன். எங்கயும் பணத்த ரெடி பண்ண முடியல. இன்னொரு தலவலி என்ன தெரியுமா? வேல்விழி இப்போ வீட்லதான் இருக்கா”

“என்ன? நிஜமாவே நீ பைத்தியமா? எதுக்கு இப்போ அவ இங்க இருக்கா? என்னடா நடக்குது?”

“டென்சன் ஆகாத. அவ யாரயோ கல்யாணம் செஞ்சு இருக்கா மதி. ஒரு வாரமா அவன காணோம். இவ ரெண்டு நாளா சாப்டாம இருந்து கோவில்ல மயக்கம் போட்டு விழுந்து இருக்கா. அம்மா பாத்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு இப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க. அங்க இருக்கவே பிடிக்கல மதி. அதான் பணத்துக்கு ரெடி பண்ணலாம்னு வந்துட்டேன்.”

“ம்ம்…” சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “உன்கதைய கேட்டு எனக்கு தலவலிக்குது. வா, ஒரு டீ அடிக்கலாம்”

“இன்னும் நீ மாறவே இல்ல மதி” சிரிப்புடன் சொன்னவன், அவளோடு கிளம்பினான்.

தனது இருசக்கர வாகனத்தை இயக்கியவள், “உட்காரு!”

“வண்டிலயா? இதுல எப்டி நான் உட்கார?”

“ஏன், இதுக்கு என்ன? இதுக்கு முன்னாடி வண்டில நாம போனதே இல்லயா? மூடிட்டு உட்காருடா.”

“ஆமா, லைசன்ஸ் வச்சிருக்கியா? ஒழுங்கா ஓட்டுவியா?”

“ம்ம்? உன் அளவுக்கு இல்லன்னாலும் ஒழுங்கா ஓட்டுவேன். உட்காரு”

இருவரும் ஒரு தேநீர் கடைக்கு சென்றனர்.

“நேரங்கெட்ட நேரத்துல டீ குடிக்குற பழக்கத்த இன்னுமா விடல நீ?”

“டீ, இட்ஸ் ஆன் எமோசன். என்னை சொல்ற, இப்போ நீ எதுக்கு வந்த?”

“சரி சரி உடனே கத்தாத! டீய குடி.”

“வேல போய்டுச்சுன்னு சொல்ற, இப்போ என்ன பன்ற?”

“சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் பக்கத்துல ஒரு சேரி இருக்கும். அங்க தான் இருக்கோம் இப்போ. கிடச்ச வேலைய செஞ்சிக்கிட்டு, அப்பாவயும் பாத்துட்டு இருக்கேன் மதி. வேலையும் தேடணும். ஆமா, நீ என்ன வொர்க் பன்ற? ஐ.டி.யா?”

“இல்ல, இல்ல. டி.சி.டா. சொன்னேன்ல ட்ரான்ஸ்பர்.”

குடித்துக்கொண்டிருந்த தேநீர் நாக்கை சுட்டது. “ஸ்ஸ்ஆஆ! டி.சி.யா? டி.சி.ன்னா, டெபுட்டி கலெக்ட்டர்ரா?”

“ஆமா. அதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற?”

“ஏய், மதி நிஜமாவா? வாழ்த்துக்கள் மதி. நினச்சத சாதிச்சிட்ட. எல்லாருக்கும் உன்ன மாதிரி வாய்ப்பு கிடைக்காதுல?”

“வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கும் செழியா. ஆனா, அது சூழ்நிலைய பொறுத்து மாறும். நினச்சத சாதிக்க வாய்ப்பு மட்டும் பத்தாது செழியா, வைராக்கியமும் வேணும். அத விடு. இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க?”

“ப்ச்! தெரியல” அவள் சாதாரண ஒரு வேலையில் இருந்திருந்தால் நிச்சயம் அவளிடம் உதவி கேட்டு இருப்பான். தற்போது சாதித்த பெண்ணாக, துணை ஆட்சியராக இருக்கும் தோழிமேல் மரியாதை இன்னும் கூடியது. அவளிடம் தற்போது கேட்க வாய்வரவில்லை.

தேநீரை குடித்து முடித்தவள், “இன்னைக்கு ஏதாவது ப்ளான் இருக்கா? வெளிய எங்கயாவது போக போறியா?”

“இதுவரைக்கும் எதுவும் கிடையாது. ஆனா, எங்கயாவது சுத்துனாதான் நாளைக்குள்ள பணத்த ரெடி பண்ண முடியும் மதி”

“ம்ம்... சரி! என்கூட வா.”

“எங்க மதி?”

“ஏன், சார் சொன்னாதான் வருவீங்களோ? வண்டில உட்காருடா, நான் வரேன்” என்றவள் பருகிய தேநீருக்கு பணத்தை செலுத்திவிட்டு அவனோடு கிளம்பினாள்.

“ஏன் மதி, டி.சி தான நீ. கார் அலார்ட் பண்ணுவாங்கள? ஏன் ஸ்கூட்டி?”

“நேத்துதான் வந்தேன். புதன்கிழம தான் ஜாய்ன் பண்ண போறேன். அதுவரைக்கும் பெண்டிங்க் வொர்க்ஸ் கொஞ்சம் இருக்கு. ஏன், இப்போ ஸ்கூட்டில நான் வரதுனால உனக்கு எதாவது பிரச்சனையா?”

“யம்மா தாயே! நான் ஒன்னும் சொல்லல. நீ போ”

“அதுசரி! நீ என்ன சர்ச் பக்கம்லாம்? அப்பா இருந்திருந்தா விட்டே இருக்க மாட்டாரே?”

“ப்ரண்ட் கூட வண்டில போய்ட்டு இருந்தேன். உன்ன மாதிரியே ஒருத்தர் சர்ச்க்குள்ள போறத பாத்தேன். நீதான்னு ஒரு சந்தேகம். அதான் உடனே வந்தேன். ஆமா, நீ என்ன சர்ச்க்கு? ப்ரேயர்லாம் பண்ணிட்டு இருந்த? கிறிஸ்டியன் ஆகிட்டியா மதி?”

உடனே வண்டியை நிறுத்தி அவனை ஒரு பார்வை பார்த்தவள், “புத்தி போகுது பாரேன். ஏன்டா, ப்ரேயர் பண்ண கிறிஸ்டியன் ஆகணுமா என்ன? பைத்தியம். தோணும்போது போவேன். இப்போ டொனேசன் கொடுக்குற விசயமா ஃபாதர்கிட்ட பேச போனேன்.” என்று இருவரும் பேசிக்கொண்டே வந்து சேர்ந்தனர்.

“நிறைவகம்?”

“உள்ள வாடா”

இருவரும் உள்ளே நுழைய, “அம்மாச்சி, அம்மா வந்துட்டாங்க” என்று ஓடிவந்தாள் குட்டி தேவதை புகழினி.

“அம்மா?” அதிர்ச்சியில் உறைந்து நின்றான் செழியன்.

தொடரும்…
 

admin

Administrator
Staff member

மலர் 3

நிறைவகம் என்ற பெயரிலேயே அதிர்ந்து நின்றவன், தற்போது புகழினியின் ‘அம்மா’ என்ற அழைப்பில் உறைந்தே விட்டான்.​

“அம்மாவா?” அவனின் அதிர்ச்சியில் அவனைப் பார்த்து சிரித்தவள், “உன்ன உள்ளவான்னு சொன்னேன்” என்று அழைத்து சென்றாள்.​

‘நிறைவகம்’ பெயருக்கேற்றாற்போல் நிறைந்து இருந்தது. என்றும் சலசலத்துக் கொண்டிருக்கும் சென்னையில் இப்படியொரு இடமா? என்று ஆச்சர்யப்பட்டு போனான் செழியன்.​

மதியின் பெற்றோர் நிறைவகம் என்ற பெயரில் ஒரு முதியோர் இல்லத்தை நடத்தி வருகின்றனர். சிறு வயதில் அவள் ஆசையாக சொல்லக் கேட்டிருக்கிறான். ஆனால், இன்று அதனை கண்ணாரக் கண்டதும் நிறைவாக இருந்தது அதனின் பெயருக்கு ஏற்றது போல்.​

“எப்டி மதி? நினச்சத சாதிச்சிட்டடி. ரொம்ப சந்தோசமா இருக்கு” தன் தோழியானவளின் கனவுகள் ஆசைகள் நிறைவேறியதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனான் செழியன்.​

அவனின் மகிழ்வை கண்கொண்டு கண்டு உள்ளத்தில் பொதிந்து வைத்தவள், மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தாள்.​

“செழியா, இவ என் பொண்ணு புகழினி. புகழ், நான் அடிக்கடி சொல்லுவேன்ல என் ஃப்ரெண்ட் செழியன் சென்னைல இருக்காங்கன்னு. அவர் தான் இவங்க.”​

“வாவ், மா! ஹாய் செழியன். நீங்க எனக்கும் ஃப்ரெண்ட்டா இருக்கீங்களா? அம்மா அடிக்கடி உங்கள பத்தி சொல்லுவாங்க. நான் ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தேன். உங்கள பாக்கணும்னு. இன்னைக்கு அம்மாவே கூட்டிட்டு வந்துட்டாங்க. தாங்க்ஸ் மா” என்று மதியின் கன்னத்தில் ஈரம் செய்தவள், “இருங்க ஃப்ரெண்ட், உங்களுக்கு ஒன்னு கொண்டு வரேன்” என்று சிட்டாய் பறந்து விட்டாள். ஆனால், செழியன்தான் சென்ற அவளையே பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான். இத்தனை நேரம் மனதை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை பாரங்களும் மழலையிவளின் மொழியில் சுக்குநூறாய் சிதறியது போல் உணர்வு.​

“உள்ள வா” என்று அழைத்தவளின் பின்னாலேயே சென்றான்.​

கூடத்தில் போடப்பட்டிருந்த இருக்கையைக் காட்டி, “உட்காருடா வந்துடுறேன்” என்று உள்ளே சென்றுவிட்டாள்.​

செழியன் அந்த இடத்தை சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டிருந்தவன், “யய்யா, மருதா! நல்லாருக்கீயா?” என்றபடி அவனை வாஞ்சையாய் பார்த்தார் மருதம்மாள்.​

“அப்பத்தா! நீ இங்க என்ன பன்ற? ஊர்லதான இருந்த?”​

“எங்கடா? நீங்க ஊரவுட்டு வந்ததுக்கு அப்ரோம் பெரியவனும் சரி, உன் அத்தக்காரியும் சரி ஒழுங்கா கஞ்சி ஊத்துறதே இல்ல. ஒன்னுக்கு மூணு புள்ளைங்க பெத்தும் வக்கத்து போய் நின்னேன்டா. உன் அப்பன் இருந்துருந்தா என்னை இந்த நிலமைக்கு வுட்டு இருப்பானா? ஒருநா ரொம்ப முடியாம போய்ட்டேன் மருதா. ஆஸ்பத்திரில அனாமத்தா போட்டுட்டு போய்ட்டானுங்க. எவனும் ஒரு எட்டு வந்து பாக்கல. அப்போ தான் நம்ம மதி புள்ள அம்மா கொடி இருக்காள. அவதான் என்னை இங்க கூட்டியாந்தா. இங்க வந்து பாத்தா, ஒவ்வொருத்தரும் நொந்து போய் இருக்காங்க மருதா.​

ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கிட்டேன், காலம் போன கடைசில யாருக்கும் பாரமா மட்டும் இருந்துடக் கூடாதுடா. நரகம் மருதா. அத வுடு. நீ எப்டி இருக்க? நடுலவன் நல்லா இருக்கானா? உன் அம்மா எப்டி இருக்கா? கீதா எதாவது போன் போட்டுச்சா?” செழியனிற்கு மனதே ரணமாகியது.​

‘தோல் சுருங்கி கிடக்கும் இவள் எவ்வளவு உண்டுவிட போகிறாள். ஒருவாய் சோற்றுக்கு உலைக்கலனாய் அவள் மனதை கொதிக்க விட்டிருக்கின்றனரே. தற்போது அப்பா மட்டும் இங்கிருந்திருந்தால் நடக்கும் கதையே வேறு. ஆனால், நான் இருக்கும் சூழ்நிலையில் அப்பத்தாவை அழைத்தும் செல்ல முடியாதே.’ என்று தனக்குள்ளே புலுங்கிக் கொண்டிருந்தான்.​

மருதம்மாளின் கேள்விகளுக்கு பதில் கூற இயலாமல் தவித்தவனை, கையில் ஐந்து தேநீர் கோப்பையுடன் வந்த மதி பேச்சை திசைமாற்றி காப்பாற்றினாள். “அட, அப்பத்தா நானே கூப்டலாம்னு இருந்தேன். அதுக்குள்ள வந்துட்டியா? பேரன பாத்தவுடனே என்னவொரு சந்தோசம் பாரேன்.” என்றவாறே ஒரு தேநீர் குடுவையை அவனிடமும் மருதம்மாளிடமும் கொடுத்தவள், தனக்கொன்றும் எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.​

“என்னட்ட வம்பிழுக்கலன்னா, உனக்கு உறக்கம் கொள்ளாதே புள்ள. குட்டிதான் வந்து சொன்னா. செழியன் வந்துருக்கான்னு. அதான் வந்தேன். பார்வதிக்கு மேலுக்கு முடியல மதி. கொடிக்கிட்ட சொல்ல மறந்துட்டேன். டாக்டர்ர வர சொல்லுதியா?”​

“புகழ் சொல்லிட்டா அப்பத்தா. சாய்ந்தரம் வரேன்னு சொல்லியிருக்காங்க. நீ சாப்டியா? மதியத்துக்கு என்ன சமையல்? உன் பேரன் வேற வந்துருக்கான். எதுவும் விருந்து போடலயா?”​

“அதெப்டி வெறும் வயித்தோட அவன அனுப்புவேன். பாத்தியா மருதா, ஒன் சிநேகிதி பேச்ச?” என்ன ஒரண்ட இழுக்கலன்னா அவளுக்கு பொழுதே போகாது.”​

பாவம், செழியன்தான் அப்பத்தாவின் இந்த துள்ளலையும் மதியின் இந்த பேச்சையும் கண்டு மலைத்துபோய்விட்டான். ஊரில் இருக்கும்வரை அவன் வீட்டிற்குக் கூட அடிக்கடி வர மாட்டாள். அதுவும் அப்பத்தாவைப் பார்த்தாள் ஒதுங்கி சென்றுவிடுவாள். காரணம், மதியின் அம்மா பொற்கொடியும் அப்பா வேல்முருகனும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். அவர்களைக் கண்டாலோ அல்லது மதியைக் கண்டாலோ சாடைப் பேச்சுக்கள் அவனின் இல்லத்தில் ஏராளமாக வரும். அவனின் குடும்பம் மட்டும் விதிவிலக்கு. ஆனால், தற்போது இவர்கள் பேசும் பேச்சுக்கள் அவன் காதையே அவனால் நம்ப முடியவில்லை.​

“என்ன மருதா, அப்டி பாக்குற?” என்று கேட்டபடியே வந்தார் மதியின் அன்னை பொற்கொடி.​

“கொடிம்மா. நல்லா இருக்கீங்களா? இன்னைக்கு எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி. இந்த நாள என் வாழ்க்கைல மறக்கவே முடியாது. ரொம்ப நன்றிமா!” அவனின் நன்றி எதற்கென புரியாது நின்றவர் மதியைப் பார்க்க,​

“அவன் அப்பத்தாவ பாத்துக்குறோம்ல மா, சார் அதுக்கு நன்றி சொல்றாரு” என்றாள் வார்த்தைகள் பற்களுக்கு இடையே அரைப்பட்டு வந்தது.​

“மருதா, கிளம்புறதுக்குள்ள நீ மதிக்கிட்ட நல்லா வாங்கிட்டுதான் போகப் போற. இத விடு. நீ எப்டி இருக்க?”​

“நல்லா இருக்கேன்மா.” அவனின் இந்த பதிலுக்கு பின் எத்தகைய ரணம் இருக்கும் என்று மதியின் சொற்களால் புரிந்துக் கொண்டவர், “உட்காரு. டீ குடி. சாப்ட்டுதான் போகணும்.” என்றவர் அவனருகே அமர்ந்தார்.​

இன்னொரு கோப்பை மீதமிருப்பதைப் பார்த்தவன், யோசனையுடன் “இந்த கப் யாருக்கு மதி?”​

“வருவா பாரு.” என்று சொல்லி முடிக்கவில்லை, ஏதோ ஒரு பொருளை தன் பின்னே மறைத்தவாறே வந்தாள் புகழினி.​

“ஃப்ரெண்ட், இந்தாங்க!” என்று அவனிடம் ஒரு பையைக் கொடுத்தவள் பால் கோப்பையோடு மதியின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.​

ஆர்வமாக அதனைப் பிரித்துப் பார்த்தவனின் விழிகள் அகல விரிந்தது. அவனின் சிறுவயது புகைப்படம் உடன் புகழினியின் புகைப்படத்தோடு பெரியதாக சட்டம் செய்தபடி இருந்தது.​

அப்படியே மதியின் சாயல். அவனுக்கு வார்த்தைகள் சிக்கிக் கொண்டது. கண்ணீரை அடக்குகிறான் போலும், தொண்டைக் குழி ஏறி இறங்கியது.​

“சரி, நீங்க பேசிக்கிட்டு இருங்க. நாங்க போய் மதியத்துக்கு எடுத்து வைக்குறோம்.” என்றபடி கொடியும் மருதம்மாளும் சென்றனர்.​

வெகுநேரமாக அந்த புகைப்படத்தையே நோக்கிக் கொண்டிருந்தான் செழியன். இத்தகைய அன்பிற்கு நான் தகுந்தவனா? என்ற ஒற்றைக் கேள்வியே அவனுள்.​

“புகழ், பாரு செழியன் எமோசனல் ஆகிட்டான். நீ அவன சமாதானம் பண்ணு. அம்மா வந்துடுறேன்.” என்று அவள் காதில் ரகசியம் கூறியவள், மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.​

“ஃப்ரெண்ட், ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க? பிடிக்கலயா?”​

“அச்சோ, அழகா இருக்கு தங்கம். ரொம்ப பிடிச்சு இருக்கு. இது எனக்கா?”​

“ம்ம், ஆமா! என் ரூம்ல ஒன்னு இருக்கு. இது உங்களுக்குதான். வாங்க, நான் என்னோட ஓல்டு ப்ரெண்ட்ஸ்சலாம் காட்டுறேன்.” என்று அழைத்தவளை தூக்கிக் கொண்டவன், அப்பொழுதுதான் கவனித்தான் அங்கு யாரும் இல்லாததை. யோசனையுடன் புகழினியோடு சென்றவன் மலைத்து விட்டான். அங்கு நூறு முதியோர் மக்கள் இருந்தனர். அத்தனை பேருக்கும் நேர்த்தியான அறை. உடல்நலம் சரியில்லாதவருக்கு தாதி என அவர்களின் கவனிக்கும் பாங்குக் கண்டு கண்கலங்கியது செழியனிற்கு. எந்நிலையிலும் தன் தாய் தந்தையை இந்நிலைக்குக் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதில் இன்னும் தீர்மானம் கொண்டான்.​

“ப்ரெண்ட், இவர்தான் குமாரசாமி தாத்தா. தாத்தா, இவர்தான் நான் சொல்லுவேன்ல செழியன்னு. மதிம்மா ப்ரெண்ட். இப்போ என்னோட ப்ரெண்ட்.”​

“வாங்க குட்டி. அப்டியா! இந்தாங்க உங்க ப்ரெண்டுக்கு இன்னைக்கான சாக்லேட்.”​

“ப்ரெண்ட் வாங்கிக்கோங்க. தாத்தாவே சாக்லேட் செய்வாரு. ரொம்ப நல்லா இருக்கும்.” என்று அவனிடம் கொடுத்தவள் அதன் ருசியில் மயங்கிப் போனாள்.​

“நீங்களே செஞ்சதா பா! ரொம்ப நல்லா இருக்கு.”​

“மதி ப்ரெண்ட்னா சும்மாவா. வார்த்தைலயே அவளோட பிரதிபலிப்பு இருக்கு. அவளும் இங்க எல்லாரையும் முற சொல்லிதான் கூப்டுவா. ரெண்டு நாளா பாக்கல. குட்டி அம்மா வந்து இருக்காளா?”​

“ஹான், மருதம் ஆச்சிக்கூட சமையல்ல இருக்காங்க. நீங்க சாப்டீங்களா?”​

“ம்ம் சாப்ட்டு மாத்திர போட்டுட்டேன் குட்டி. உன் ப்ரெண்ட் பேரு என்ன?”​

“மருதசெழியன் பா.”​

“நல்லதுபா. சரி, நீங்க போய் மத்தவங்கள பாருங்க. நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்.” என்றவருக்கு சிறு தலையசைப்பு கொடுத்தவன் புகழினியோடு வெளியே வந்தான்.​

இவ்வாறு ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தவள் மதியின் அழைப்பில் செழியனை அழைத்துக் கொண்டு சென்றாள்.​

“ஒருவழியா எல்லாரையும் இன்ட்ரோ கொடுத்தாச்சா?”​

“இல்லயேமா. அதுக்குள்ள தான் நீங்க கூப்டிங்களே. இன்னும் பார்வதி பாட்டிய காட்டவே இல்ல” என்று உதட்டைப் பிதுக்கினாள் புகழினி.​

“அச்சோ, அழகி.! முதல்ல நாம எல்லாரும் சாப்டுவோமா. அப்ரோம் நீ பார்வதி பாட்டிய செழியனுக்கு காட்டுவியாம், என்ன?”​

“செழியனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே!”​

“புகழ், என்ன பழக்கம் இது? ஒழுங்கா அங்கிள்னு சொல்லு.” என்று அதட்டினார் கொடி.​

“அட, பரவால்ல மா. நீ செழியன்னே கூப்டு புகழ்” என்றதும், தன் பாட்டிக்கு அழகு காட்டினாள் அந்த வாண்டு.​

“சும்மாவே, இங்க எல்லாரும் இவளுக்கு சப்போர்ட்டு. இப்போ நீயும் வந்துட்டியா? முதல்ல சாப்டுங்க. உன் அப்பத்தா உனக்குன்னு பாத்து பாத்து செஞ்சிருக்காங்க.” என்றதும் உண்ண ஆரம்பித்தனர் அனைவரும்.​

வெகுநாட்களுக்கு பிறகு மனதும் வயிறும் நிறைய உண்டான் செழியன். அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சொல்ல முடியாத வலி. எத்தனை துன்பம் அனுபவித்திருக்கிறான். இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி நன்கறிவாள் மதி. ‘அந்தோ பாவம்’ என்ற சிறு பரிதாபத்தையும் அவன் விரும்பமாட்டான். அப்படி யாராவது பரிதாபப்பட்டாள் அவ்வளவுதான் மென்னகையோடு விலகிவிடுவான்.​

வயிறாற உண்டபின் செழியனின் அலைப்புறும் மனதும் சற்று நிதானமடைந்தது. நிச்சயம் ஏதோ ஒரு வழி கிடைக்கும் என்று நம்பினான்.​

புகழினியை மருதம்மாள் பாட்டியுடன் அனுப்பிவிட்டு, செழியன் அருகே வந்தார் கொடி.​

“மருதா, நல்லா சாப்டியா?”​

“ரொம்ப நல்லா சாப்டேன்மா. சரிமா, நேரம் ஆகுது. அம்மா அங்க தனியா இருப்பாங்க. இன்னொரு நாள் வரேன்.”​

“போலாம், என்ன அவசரம்.? நீ பணத்துக்கு அலையுறன்னு மதி சொன்னா. அவளே கொடுத்து இருப்பா. ஆனா, கண்டிப்பா நீ வாங்க மாட்ட. இந்த விசிட்டிங்க் கார்ட்டுல இருக்குற அட்ரஸ்க்கு போ. அங்க கபிலன்னு ஒருத்தர் இருப்பாரு. அவர போய் பாரு.”​

“இல்லம்மா, நான் பாத்துக்குறேன்.”​

“மருதா, நானும் ஒன்னும் பணக்காரிலாம் கிடையாது. இல்லத்துக்கு வர ஃபண்டுல இருந்து என்னால கொடுக்கவும் முடியாது. மதிக்கிட்டயும் நீ வாங்க மாட்ட. கபிலன் எனக்கு ரொம்ப வேண்டியவருதான். நீ போய் அவர பாரு. மதி ப்ரெண்டுன்னு சொல்லு. அதுவும் கடன்தான் செழியா. வட்டியும் கம்மி தான். நீ எத பத்தியும் கவலப்படாத. எல்லாம் சரி ஆகிடும்”​

காலையில் பார்த்தசாரதி கோவிலில் முகமறியாத நபர் பேசியது நினைவுக்கு வந்தது. ‘ஏதவாது ஒரு வழி கிடைக்காமலாயா போய்டும்’. புன்னகைத்தவன், அந்த அட்டையை வாங்கிக் கொண்டான்.​

மதியும் வர, “சரிம்மா நான் கிளம்புறேன். வரேன் மதி!”​

“ஒரு நிமிசம் மருதா. மதி, அவன கபிலன் ஆஃபீஸ்ல இறக்கி விட்டுடு.” என்றதில் யோசனையுடன் அன்னையைப் பார்த்தாள் மதி.​

“அங்கயா எதுக்கு?”​

“கூட்டிட்டு போயேன் மதி.”​

“அதான் விசிட்டிங்க் கார்ட்டு இருக்குல. அவனே போய்ப்பான், இல்ல செழியா?” அவனை பார்த்த பார்வையில் செழியனின் தலை தானாக ஆடியது.​

“ஒழுங்கா கூட்டிட்டு போ.” என்ற பொற்கொடியின் பேச்சுக்கு மறுவார்த்தை வரவில்லை.​

“வா போலாம்.” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.​

முக்கால் மணி நேரம் பயணித்து ஒரு பெரிய கட்டிடம் முன்பு வண்டியை நிறுத்தினாள்.​

வண்டியில் இருந்து இறங்கியவனிடம், “லெஃப்ட்ல போய் ஸ்ட்ரைட்டா போனா லிஃப்ட் இருக்கும். அஞ்சாவது ஃப்ளோர்ல தான் இது இருக்கு. போய் பாரு.”​

“அப்போ நீ வரலயா?” என்றவனின் கேள்வியில் பார்வையாலேயே அனலைக் கக்கினாள்.​

கொளுத்தும் வெயிலில் இவளது கோப வெப்பமும் அவனை சுட்டது. கையைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவள், “நான் வந்தா அந்த நாய் உனக்கு பணம் தராது. பரவாலயா?”​

“எதே! இல்லமா பரவால்ல. நீ இங்கயே இரு. நான் போய் பேசிட்டு வரேன்.” என்று பாதி தூரம் சென்றவன் மீண்டும் அவளிடம் வந்து, “பரவால்ல, நீயும் வா. என்ன பன்றாங்கன்னு பாக்கலாம்” என்று கையோடு இழுத்துச் சென்றான்.​

“டேய், டேய், விடுடா. ஒரு டி.சி.ய இப்டி இழுத்துட்டு போறியே! உள்ள தள்ள போறேன் பாரு.”​

“எங்க வேணா தள்ளிக்கோ. இப்போ வா ஒழுங்கா” என்று அழைத்து வந்துவிட்டான்.​

வரவேற்பறையில் அட்டையைக் காண்பித்தவன், கபிலனைக் காண வேண்டும் என்று கூறினான்.​

“இங்க பாரு, செழியா! நீ மட்டும் உள்ள போ. நான் இங்கயே வெய்ட் பன்றேன்.” அவளின் கெஞ்சல் பார்வையில் என்ன நினைத்தானோ, “சரி, நான் வர வரைக்கும் இங்க தான் இருக்கணும். எங்கயும் போகாத. காசு வேற இல்ல. நீதான் வீட்ல கொண்டு போய் விடணும்.” என சாதாரணமாகக் கூறிச் சென்றான்.​

அவன் சாதாரணமாகக் கூறியது கூட இவளுக்கு ஏதோ போல் ஆனது. விரைவில் அவனுக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.​

சிறிது நேரத்தில் உள்ளே சென்றவன், சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான்.​

தொடரும்.​

 

NNK-83 Sudar

Moderator
மலர் 4

“என்ன செழியன், அப்டியே நின்னுட்டீங்க? பொற்கொடி அம்மா இப்போதான் கால் பண்ணாங்க. உட்காருங்க.” என்று அவனை வரவேற்றான் கபிலன்.

‘ஒரு நாள்ல எத்தன அதிர்ச்சி, யப்பா!’ என்று தன்னிலை மீண்டவன், சிநேகப் பார்வையோடு இருக்கையில் அமர்ந்தான்.

“நான் மதியோட ஃப்ரெண்டு மருதசெழியன் சார்.”

“நான் கபிலன். நானும் மதியோட ப்ரெண்டு தான். இந்த சார் மோர்லாம் வேண்டாம். கபிலன்னே சொல்லுங்க.”

“ஓகே கபிலன்.” என்றவனின் பார்வை அவனையும் மீறி சுவற்றில் இருந்த புகைப்படத்தின் மீது பதிந்தது.

அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்தவன், “ஓ, இதுவா? ஒரு தடவ எனக்கும் மதிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு மருதசெழியன். பட், இப்போ வீ ஆர் குட் ப்ரெண்ட்ஸ்.” என்று சிரித்தான். ஆனால், அந்த சிரிப்பின் பின் இருக்கும் வலியை செழியன் உணர்ந்துக் கொண்டான். அவன் அனுபவிப்பது ஆயிற்றே. சொல்லாமல் உணர்ந்து கொள்ள அவனால் முடிந்தது.

“அப்போ, புகழ்?”

“எங்க குழந்த தான். மதி வந்து இருக்காளா?” சட்டென்று ஆமாம் என்று தலையசைத்தவன், உடனே “இல்ல மதி வரல.” என்றுரைத்தான்.

அதற்கும் சிறு புன்னகையே அவனிடம். “சரி, நீங்க வந்த விசயத்த சொல்லுங்க.”

“அது… நான் வந்தது பணத்தேவைக்குதான் கபிலன். எனக்கு இப்போ அஞ்சு லட்சம் தேவைப்படுது. இப்போ நான் எந்த வேலைக்கும் போகல. ஆனா, கண்டிப்பா உங்க கிட்ட வாங்குற பணத்த வட்டியும் முதலுமா சேர்த்து கொடுத்துடுறேன். பார்த்த உடனே என் மேல நம்பிக்க வராதுன்னு தெரியும். ஆனா, நீங்க மதிய நம்புனா எனக்கு பணம் கொடுங்க. கண்டிப்பா திருப்பி தந்துடுவேன்.” என்றவன் அவனின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.

செழியன் மதியின் நண்பன் என்ற ஒரு காரணத்திற்காகவே கபிலன் எதையும் செய்வான். ஆனால், தற்போது அவனின் பேச்சு கபிலனை ஈர்த்தது. வேலை இல்லைதான், ஆனாலும் நிச்சயம் திருப்பி தந்துவிடுவேன் என்ற உறுதி பிடித்தது. இருந்தும், அவனை சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

“நோ ப்ராப்ளம் மருதசெழியன். அப்டி நீங்க தரலன்னாலும் மதி இருக்காள்ல. அவக்கிட்ட நான் வசூல் பண்ணிக்குறேன்.” என்றதுதான் தாமதம்,

“அப்டிலாம் நான் விட்றமாட்டேன் கபிலன். ஏமாத்திட்டு போற பழக்கமும் எனக்கு கிடையாது. சொன்னா, சொன்ன மாதிரி திருப்பி கொடுத்துடுவேன். இதுல நீங்க மதிய இழுக்க வேண்டிய அவசியம் இருக்காது.” ஆரம்பத்தில் குரலை உயர்த்தியவன் மதி என்று வந்ததும் பொறுமையாகக் கூறினான்.

கபிலனுக்கு பொறாமை எட்டிப்பார்த்தது என்னவோ உண்மைதான்.

“ரைட்!” தனது அறையில் இருக்கும் தொலைபேசியில் உதவியாளனை அழைத்து அவன் செய்ய வேண்டியதை கூறிட, அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஐந்து லட்சம் ரூபாய் அடங்கிய பை அவன்முன் இருந்தது.

“இந்தாங்க மருதசெழியன். இதுல நீங்க கேட்ட அஞ்சு லட்சம் இருக்கு. இது மதி மேல இருக்க நம்பிக்கைக்காகவோ, இல்ல உங்க மேல இருக்க நம்பிக்கைக்காகவோ கிடையாது. உங்களோட தன்னம்பிக்கைக்காக. அன்ட், பொற்கொடி அம்மா சொல்லிட்டாங்க அதுக்காகவும்தான். சீக்கிரம் கடன அடைச்சிட்டு நிம்மதியா இருங்க. இனிமே இந்த மாதிரி ஏமாத்திட்டு போற ஃப்ரெண்ட்சிப்ப முதல்ல கட் பண்ணுங்க.” என்றவனின் பார்வை வெளியே சென்றதில் செழியனும் திரும்பிப் பார்த்தான். மதிதான் நின்றிருந்தாள்.

செழியன் மதியைப் பார்த்த பார்வையில் ஆயிரம் வினாக்கள்.

“வாங்கிட்டியா? போலாமா?” வாயிலைக் கடந்து அவள் உள்ளே வரவில்லை.

செழியன் எழுந்திரிக்க, “அட, உட்காருங்க செழியன். ஒரு டீ கூட குடிக்காம போனா எப்டி.? உதய், மூணு டீ. இல்ல ரெண்டு போதும். மேடம் வேற சூடா இருக்காங்க. அவங்களுக்கு ஜுஸ் கொண்டு வா. என்ன செழியன் ஓகே தான?”

இருக்கும் தலைவலியில் தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. ஆனால், மதி தன்னை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவனுக்குள் கிலி பரவியது.

“சாரி கபிலன். நான் கிளம்பணும். இன்னொரு நாள் கண்டிப்பா வந்து டீ குடிக்குறேன். வீட்ல அம்மா தனியா இருப்பாங்க. வரேன்” என்று விரைந்து மதியுடன் வெளியே வந்தான்.

மதி கபிலனைப் பார்த்து கேலி நகை புரிந்தாள். ‘அவன் என் நண்பன்’ என்ற திமிர் மிளிர்ந்தது. கபிலனுக்கு சிரிப்புத்தான் வந்தது. இன்னமும் அவளின் அந்த சிறுபிள்ளைத்தனம் மாறவில்லை.

இருவரும் வெளியே வர,“என்ன மதி, ஏன் இப்படி?” என்று ஆதங்கமாகக் கேட்டான் செழியன். தன் தோழி மகிழ்ச்சியாக இருக்கின்றாள் என்று சிறிது நேரம் முன்பு தானே எண்ணினோம். ஆனால், அவளின் இந்த நிலையை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை.

“என்ன, ஏன்னா? என்ன சொல்ல சொல்ற செழியா? வண்டில ஏறு. சேஃப்பா வீட்ல விட்டுடுறேன். இன்னொரு நாள் இத பத்தி பேசலாம்.”

அமைதியாக இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவன் மனது கேளாது, “உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் மதி. நான் கூட இருக்கேன்”

“எப்பவும் நீ கூட இருக்க மாட்ட செழியா. ப்ளீஸ், எதுவும் கேட்காத!” செழியனும் அமைதியாக இருந்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில், “ஏன்டா, இத பத்தி எதுவும் கேட்காதன்னு தானே சொன்னேன். பேசாதன்னு சொன்னேனா? அமைதியா வர?” என்று கேட்டு சிரித்தாள். இங்கு யாரின் வலியும் வெளிப்படையாக வரவில்லை. ஒற்றைப் புன்னகையில் ஒழிந்து கிடக்கிறது, வலியும் வேதனையும். அதனை மென்னகையாக மாற்றும் வித்தைதான் இங்கு பலரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது. ஆனால், செழியனும் மதியும் கபிலனும் அதனை இலாவகமாக கையாளும் வித்தை தான் விந்தையாகிறது.

சேப்பாக்கம் தொடருந்து நிலையம் அருகே வந்ததும்,“இங்கயே நிறுத்து மதி. நான் இறங்கிக்குறேன்.”

“ஏன்டா? இன்னும் கொஞ்ச தூரம் தானே?”

“உள்ள ரோடு சரியில்ல. அன்ட் நீ ஏன் அந்த இடத்துக்குலாம் வந்துட்டு.” எப்படி அவளை தன் வீட்டிற்கு அழைப்பது என்று தெரியாமல் அவன் தடுமாற, மேலும் அங்கு வேல்விழி இருப்பதும் அவனை ஏதோ செய்தது.

“செழியா! கைல பணம் வேற வச்சி இருக்க. மறுபடியும் அஜாக்கிரதையா இருந்துடாத. இவ்ளோ தூரம் வந்த எனக்கு இன்னும் கொஞ்ச தூரம் வரதுனால ஒன்னும் ஆகிடாது. அம்மாவயும் ஒரெட்டு பாத்துட்டு போறேன்.” என்று அவனிடம் வழியைக் கேட்டவாறே சென்றாள்.

வீட்டிற்கு அருகினில் செல்ல தெருவே இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

“என்னடா எல்லாரும் இப்டி பாக்குறாங்க?”

“உன் நண்பன் அப்டிமா. இதுவரைக்கும் ஒரு பொண்ண கூட ஏறேடுத்து பார்த்தது கிடையாது. இப்போ ஒரு பொண்ணு கூட போனா அப்டித்தான் பார்ப்பாங்க. இங்கதான் நிறுத்து.” என்றிட அவனின் வீட்டைக் கண்டு அதிர்ந்து நின்றாள் மதி. தகரஅட்டை மூன்று பக்கமும் தடுப்பாய் அமைந்திட, மேலே கூரை வேய்ந்து இருந்தது. இடத்தின் தடுப்பு கதவாய் தகரமும் கூரையும் இணைந்து மற்ற தகரத்தோடு கம்பியுடன் இணைத்து இருந்தார்கள்.

தற்போது தோழியாய் அல்லாது துணை மாவட்ட ஆட்சியராய் யோசிக்கத் துவங்கினாள் மதி. வளர்ந்த மாவட்டத்தில், மாநிலத்தின் தலைநகரத்தில் ஏன் இப்படி ஓர் இடம்? அதிகாரிகளுக்கு தெரியாமலா? இல்லை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனரா என்ற கேள்வி தொக்கி நின்றது.

அவளை உள்ளே அழைத்தவன் வேல்விழி இல்லாததைக் கண்டு நிம்மதியடைந்தான்.

“மா, யார் வந்து இருக்கா பாரேன்.” என்று உறங்கிக் கொண்டிருந்த மீனாவை எழுப்பியவன், மதிக்கு தண்ணீர் கொடுத்தான்.

“வா மதி. நல்லா இருக்கியா?” என்றவாறே புடவையை சரி செய்துக் கொண்டு எழுந்தார் மீனா.

“நல்லா இருக்கேன்மா. நீங்க எப்டி இருக்கீங்க?”

“இருக்கோம்மா. நீ சென்னைல இருக்கன்னு இவன் சொல்லவே இல்ல பாரேன்” என்று செழியனைக் கைக்காட்ட,

“எனக்கே இன்னைக்கு மதியம் தான்மா தெரியும்” என்று ஆரம்பித்தவன் மதியம் மதியை பார்த்ததிலிருந்து தற்போது வரை நடந்த அனைத்தையும் கூறிவிட்டான். கேட்ட மீனாவிற்கோ அழுகைதான் வந்தது. மதியின் கைகளைப் பிடித்துக் கொண்டவர், “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மதிம்மா. ரொம்ப நன்றிமா. இந்த உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.” என்ற கலங்கியவரை என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் செழியனைப் பார்த்தாள்.

இதுவரை அவளிடம் சரியாகக் கூட முகம் கொடுத்து பேசியது கிடையாது. இவர் ஏதாவது நலம் விசாரித்தால் கூட மருதம்மாள் மருமகளை சடைத்து எடுத்துவிடுவார். அதனாலேயே கணவர் பேசும் போது உடனிருந்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்து விடுவார். தற்போது இத்தனை பேசுபவரைத்தான் செழியன் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். காலம் எத்தனை வலியது. காலம் அனைத்திற்கும் மருந்து என்பது நூறு சதம் உண்மையாக இருக்கின்றது.

அப்போது கதவைத் திறந்து கொண்டு வேல்விழி வந்தாள். முகத்தில் அத்தனை கடுகடுப்பு. “அத்த, இனிமே என்னை கடைக்கு அனுப்பாதீங்க. இந்த…” என்று கத்திக் கொண்டே வந்தவள் உள்ளே மதியும் செழியனும் இருப்பதைக் கண்டு அமைதியுற்றாள்.

“என்னாச்சு வேலு?”

“ஒன்னுமில்ல அத்த. நாய் துரத்துச்சு. அதான்…” என்று சமாளித்தவளை மதிதான் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

செழியன் அவளின் வருகையில் எரிச்சலுற்றவன், “இந்த மகாராணிக்கு கடைக்கு போறதுக்குக் கூட வலிக்கும்” என்று முணுமுணுத்தான். அருகிலிருந்த மதிக்கும் வேல்விழிக்கும் நன்றாகவே கேட்டது.

“சும்மா இருடா” என்று அவனை அதட்டிய மதி, “எப்டி வேல்விழி இருக்க?” என்று அவளிடம் கேட்டாள். உள்ளுக்குள் இன்னும் கோபம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏனோ மீனா முன்னிலையில் அவளிடம் முகத்தைத் திருப்ப முடியவில்லை.

“ம்ம்… இருக்கேன் மதிக்கா. நீங்க எப்டி இருக்கீங்க?”

“பாத்தா எப்டி தெரியுது? நல்லா இருக்கேனா?” என்று அவளிடமே கேட்க, சற்றுமுன் வண்டியில் வரும்போது அவள் முகத்தில் கண்ட வலியின் ரேகை தற்போது எங்கே சென்றது என்று ஆராய்ந்தான் செழியன்.

“அப்டியேதான் அக்கா இருக்கீங்க. என்ன, முன்ன இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் பூசனாப்புல இருக்கீங்க” என்றாள்.

“நாலு வயசு குழந்தைக்கு அம்மா, இப்டி கூட இருக்கலன்னா எப்டி வேல்விழி” என்று கேட்டவாறே உள்ளே வந்தான் கபிலன்.

“அட வா கபிலா. நல்லா இருக்கியாப்பா” என்று எழுந்தார் மீனா. செழியனும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “என்னமா, கபிலன உனக்கு தெரியுமா?”

“நம்ம குருவோட ப்ரென்ட் மருதா. நீ பாத்து இருக்க மாட்ட. அடிக்கடி நம்ம வீட்டுக்கு வரும் இந்த தம்பி. காலைல கூட வேலயும் என்னையும் இங்க எறக்கி விட்டுட்டு போச்சு. இருங்க எல்லாருக்கும் குடிக்க டீ போடுறேன்.” என்று துள்ளினார் மீனா. இத்தனை காலத்திற்கு பிறகு மீண்டும் தன் இல்லம் அறிந்த உள்ளங்களால் நிறைந்து இருப்பதே அவருக்கு மகிழ்வை தந்தது.

“அவங்களுக்கு குழந்த இருக்குன்னு உனக்கு எப்டிண்ணா தெரியும்?”

‘ம்க்கும்! குழந்தையோட அப்பா கிட்டயே கேட்குறா பாரேன் கேள்வி. அய்யோ, இந்த மதி வேற என்னைய முறைக்குறாளே!’ என்று மனசுக்குள் புலுங்கிக் கொண்டிருந்தான் செழியன்.

“மதி என்னோட வொய்ப். எங்களுக்கு புகழினின்னு ஒரு குட்டி ஏஞ்சல் இருக்காங்க.”

“பாரேன் மதி! உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா. ரொம்ப சந்தோசமா இருக்கு மதி” என்று பூரித்து பேசுபவரிடம் என்னவென்று சொல்வது என்று அறியாமல் திணறித்தான் போனாள் மதி.

“செழியா! புகழ் என்னோட குழந்தை. எனக்கு மட்டும் தான் குழந்த. அன்ட், இங்க யாரும் வொய்ப்ன்னு சொல்லிட்டு கூஜா தூக்கிட்டு வர வேண்டாம்னு சொல்லு. என்னோட கணவன்ங்குற தகுதிய எப்போவோ இழந்தாச்சு. சாரிமா! நான் வரேன்” என்று திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

போகும் அவளையே வலியோடு பார்த்திருந்தான் கபிலன். செழியன்தான் “மதி, மதி” என்று கத்திக்கொண்டே வெளியே செல்ல, அதற்குள் அவள் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.


தொடரும்.
 
Status
Not open for further replies.
Top