அஞ்சனம் : 01
திருமண முகூர்த்த பட்டுக்களுக்கே பிரசித்தி பெற்ற அந்த ஜவுளி கடையின் சேல்ஸ்மேன் துவக்கம், பல வாடிக்களையாளர்கள் பார்வை அவளை தான் மொய்த்து கொண்டிருந்தது.
"இது அந்த பொண்ணு தானே!"
"ச்சே… வெட்கமே இல்லாம எப்படி தான் வெளிய வர்றாளோ?"
"நான்லாம் இவ இடத்தில இருந்திருந்தா? இந்நேரம் தூக்குல தொங்கி இருப்பேன்"
"அவ ஏன் தொங்க போறா? மானம் ரோஷம் இருக்கவ அப்படி ஒரு காரியத்தை பண்ணுவாளா?"
"இப்படி உடம்ப காட்டி தான் ஜெயிக்கணுமா என்ன?"
"எனக்கு இது போல ஒரு பொண்ணு இருந்திருந்தா சோத்துல விஷம் வச்சி கொன்னுருப்பேன். என்ன பிறவி தானே இதுங்க எல்லாம். ச்சீ…"
ஆயிரமாயிரம் ஏச்சு, பேச்சுகள் நடுவே தன் திருமணத்திற்காக முகூர்த்த பட்டு பார்த்துக் கொண்டிருந்தவள், விழிகள் செவ்வென சிவந்து போக, மூச்சை உள்ளிழுத்து கொண்டே தன்னை நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் அஞ்சனா.
அவள் தாய், தந்தையோ கூனி குறுகி மகளுக்கு அரணாக இருபுறமும் நின்றிருக்க,
அவள் மணமுடிக்க போகும் ருத்ரான்ஷன் வீட்டு ஆட்களோ, நெருப்பில் தகித்தது போல் தான் அங்கே நின்றிருந்தார்கள்.
"அக்கா இதெல்லாம் தேவையா நமக்கு? அப்படி இவகிட்ட என்ன இருக்குன்னு, இவளை தான் கட்டிப்பேனு ஒத்த கால்ல நிற்கிறான்? அசிங்கமா இருக்கு. இனி கல்யாண ஷாப்பிங் எங்கேயும் எங்களை கூப்பிடாதீங்க. அவ கூட வந்தா நம்ம மேலையும் தான் சேரை அள்ளி பூசுவாங்க" என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து, தங்களுக்கான உடைகளை தேர்வு செய்ய சென்று விட்டார்கள்.
அவர்கள் பேச்சிலும், மற்றவர்கள் பார்வையிலும் கோபம் கொண்டு அஞ்சனா அருகே வந்த ருத்ரான்ஷன் அன்னையோ,
"எவ்வளவு நேரம் தான் செலக்ட் பண்ணுவ? எல்லாரும் உன்னை தான் பார்க்கிறாங்க, சீக்கிரம் எடுத்துட்டு கிளம்பு. அசிங்கமா இருக்கு" என்று அடிகுரலில் சீற,
விரல்கள் நடுங்க அமர்ந்து இருந்தவள், கையருகே கிடந்த புடவையை காட்டி விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு எழுந்து ஓடினாள்.
பாதாளத்தில் ஒழிந்தால் கூட, சில வஞ்சக கூட்டம் தோண்டி எடுத்து அவள் மனதை குத்தி கீறும் நிலையில் தான் இப்போது இருக்கிறாள். ஊர் வாய்க்கு அவலகா இருக்கும் அவளை ஆவலாக தான் எல்லோரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்..
அவ்விடம் விட்டு எழுந்து ஓடியவளை மேலும் சில வக்கிர விழிகள் பின்தொடர்ந்து, அவள் உடலை மொய்த்தபடி தங்கள் கைகளில் இருந்த செல்போனில் புகைப்படம் எடுக்க, உடல் கூசி போனது அஞ்சனாவுக்கு.
இது போதாதென்று மீடியாக்கள் வேறு, அவள் வெளியே வந்த தகவல் அறிந்து சுற்றி வளைத்து விட்டார்கள்.
"மிஸ் அஞ்சனா… அந்த வீடியோ பத்தி என்ன சொல்றீங்க?"
"எதுக்கு இந்த அவசர கல்யாணம்?"
"ஃபோர்ட் ஆப் மெம்பர்ஸ் இனி நீங்க எந்த கம்பிடிஷன்லயும் கலந்துக்கவே முடியாது சொல்லிட்டாங்களே, அதனால தான் கல்யாணம் பண்றீங்கிற முடிவா?"
"நீங்க வின் பண்ண போட்டிகள் எல்லாமே கூட இதே போல குறுக்கு வழில தான் வின் பண்ணத வேற சொல்றாங்களே? அது உண்மையா?"
சுற்றி சுற்றி நான்கைந்து கேமாராக்களோடு, மைக்கை அவள் வாயருகே நீட்டி நீட்டி நாலாபுறமும் நின்று கேள்விகள் கேட்க,
திணறியபடி அஞ்சிய விழிகளுடன் சுற்றி சுற்றி அவர்களை பார்த்தாலே தவிர, வாயே திறக்கவில்லை. அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல மனதிலும், உடலிலும் திராணி இல்லாது, உடல் நடுங்க அரண்டு நின்றிருந்தவளை அரணாக வந்து அணைத்து கொண்டான் ருத்ரான்ஷன்.
ஈயென மொய்த்து கொண்டிருந்த கேமராக்களையும், மைக்கையும் கைகளால் தட்டி விட்டவனை அஞ்சனாவும் இறுக பற்றி கொண்டாள்.
அவள் நம்பிக்கையும், பாதுகாப்பும் அவன் ஒருவன் மட்டும் தானே.
காதல் என்ற போர்வையில் பெண் உடலை தீண்டும் ஆண்கள் மத்தியில், விமர்சனத்துக்கு உள்ளாகும் அவளை, அவள் உடலை தாண்டி, அவள் உணர்வுகளை மதித்து அவளை மட்டும் நேசிக்கும் ஜீவன் அவன்.
அவன் அணைப்பில் அஞ்சனா வெட வெடத்து நடுங்கி கொண்டு நிற்க,
இத்தனை நேரம் அஞ்சனாவை துகிலுரித்த கேள்வி கணைகள் இப்போது ருத்ரான்ஷன் மீது பாய்ந்தது.
"எதுக்கு சார் இப்போ இந்த அவசர கல்யாணம்? அதுவும் அஞ்சனா கேஸ் இன்னும் முடியாத சூழ்நிலைல?”
"உங்க லாபத்துக்காக தான் அவங்களை கல்யாணம் பண்ணிகிறீங்கனு சொல்றாங்களே? அது உண்மையா?"
"சிம்பதி கிரியேட் பண்ணி பாப்புலராக நினைக்கிறீங்களா?"
நாக்கா? இல்ல தேள் கொடுக்கா? அவைகள்! உண்மை காதலை கூட வியாபார நோக்கம் என்று பழி போட்டது.
அவர்கள் கேள்விகளில் இரத்தம் கொதித்தது ருத்ரான்ஷனுக்கு.
"மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்று அடி குரலில் மிரட்டியவன்,
கூட்டத்தை விலக்கி கொண்டு செல்ல முயன்றான்.
"பிறகு என்ன சார் நினைக்கிறது. இப்படி ஊரே நிர்வாணமா பார்த்த ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து, நல்ல பெயர் எடுக்க முயற்சி பண்றீங்களா?"
"நீங்களும், அஞ்சனாவும் ரொம்ப வருஷமா காதலிச்சிட்டு இருக்கிறதா நீங்களே ஒரு இன்டர்வியூல சொல்லியிருக்கீங்க. அப்போ அவங்க பண்ண இல்லீகள் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சி தான் நடந்ததா? முக்கியமா அந்த வீடியோ மேட்டர்"
"இல்ல எல்லாத்துக்கும் நீங்க தான் மாஸ்டர் மைண்ட்டா?"
"நீங்க சொல்லி தான் அவங்க அந்த வீடியோ அனுப்பினாங்களா?"
என்று அவர்கள் வழி விடாது மைக்கையும், கேமாரவையும் முன்னால் நீண்டிட,
கோபத்தில் இரண்டு மூன்று மைக்கை பிடுங்கி வீசியே விட்டான் ருத்ரான்ஷன்.
"என்ன சார் அந்த வீடியோவே உண்மையில்லை, பொய்யினு சொல்ல போறீங்களா?" என்று ஒருவன் ஏளனமாக கேட்க,
"வேணும்னா இங்கேயே ட்ரெஸ்ஸ கழட்டி அது பொய்யினு புரூப் பண்ணுங்க. நம்பு…" எள்ளல்லாக சொன்னவன், வார்த்தைகளை கூட முடிக்கும் முன் பல அடிகள் தூரம் பறந்து தான் பொத்தென்று கீழே விழுந்தான்.
அவனை ஆக்ரோஷமாக மிதித்து தள்ளிய ருத்ரான்ஷனோ, ஆடையை கழட்ட சொன்னவன், சட்டையை பிடித்து முன்னால் இழுத்து "உன் வீட்டு பொண்ணா இருந்தா இப்படி கேட்டிருப்பியா?" என்று கேட்டுக் கொண்டே சப் சப்பென்று கன்னத்தில் பல அறைகளை இறக்கி, அவனை மூர்சையாக செய்திருந்தான்.
அவன் ஆக்ரோஷத்தில் அத்தனை பேரும் அரண்டு பின் வாங்க,
"இப்போ என்ன தெரியணும் உங்க எல்லாருக்கும்?"
என்று அதே ஆக்ரோஷத்துடன் கேட்டுக் கோண்டே, அங்கே குத்துயிராய் நின்றிருந்த அஞ்சனாவை மீண்டும் தன்னோடு அணைத்து பிடித்தபடி,,
"அந்த வீடியோ யார் அனுப்பினதுனு இன்விஸ்டிகேஷன் போய்ட்டு இருக்கு. உண்மை கண்டிப்பா ஒருநாள் வெளிய வரும். அப்போ வாங்க இத தூக்கிட்டு." என்றவன் குரலில் 'இப்போ எங்களை வாழ விடுங்க' என்ற கோபம் தான் மேலோங்கி இருந்தது.
அவன் காதலை விமர்சித்த பெண்ணை பார்த்தவன்,
"என்ன கேட்ட? என்னோட லாபத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிறேனா? ஆமா என்னோட லாபத்துக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இவ தான் என் உயிர். நான் உயிர் வாழ இவ வேணும். இவ காதல் வேணும். ரோட்டுல நடக்கும் போது எவனோ சேரை மேல அடிச்சி உடம்ப அசுத்தம் பண்ணிட்டானு, உயிரை விட முடியாது." என்று அத்தனை கோபமாக சொன்னவன், அஞ்சனாவை அணைத்திருந்த பிடியை இன்னும் இறுக்கி கொண்டான். 'உலகமே எதிர்த்தாலும், உன்னை விட மாட்டேன்' என்பது போல் இருந்தது அவன் அணைப்பு.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கடையின் செக்யூரிட்டிகளால் அத்தனை பேரும் வெளியேற்றப்பட்டார்கள்.
மீடியாக்கள் மட்டுமல்ல, தன் செல்வாக்கால் வாடிக்கையாளர்களை கூட அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தான் ருத்ரான்ஷன். ஐந்து மாடி ஜவுளி கடை மொத்தமும் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தமானது.
பல லட்சம் விலை கொடுத்து அல்லவா ஒரு மணி நேரத்திற்கு அந்த கடை மொத்தத்தையும் வாங்கி இருந்தான்.
அவன் வீட்டு ஆட்களும், கடையின் ஊழியர்களும் மட்டுமே தான் இப்போது எஞ்சி இருந்தார்கள். அவனின் ஆக்ரோஷத்தை பார்த்த பிறகு ஊழியர்கள் யாருக்கும் அஞ்சனாவை நிமிர்ந்து கூட பார்க்க தைரியமில்லை.. எள்ளி நகையாடிய ஏளன விழிகள் அஞ்சி தான் தலை கவிழ்ந்தது.
ருத்ரான்ஷனோ மூச்சிரைக்க அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான். அவனுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால், இந்நேரம் அத்தனை பேரையும் எரித்து சாம்பலாக்கியிருப்பான். அத்தனை கோபம் அவன் விழிகளில் உறைந்து இருந்தது.
அவன் எதிரே மெளனமாக கண்ணீரில் கரைந்த படி அஞ்சனா நின்றிருக்க, அவளுக்கு இரு புறமும் நின்றிருந்தார்கள் அவள் பெற்றோர்கள்.
'தான் செய்யா தவறுக்கு, இன்னும் என்னவெல்லாம் சொல்லி தன்னை இந்த உலகம் வதைக்கும்? என்ன வார்த்தைகள் எல்லாம் கேட்க வேண்டும்? யாரையெல்லாம் தலை குனிய வைக்க வேண்டும்?' மொத்தமாக உடைந்து போனாள் அஞ்சனா குணசீலன்.
என்றோ உயிரை விட இருந்தவளை எமனிடம் போராடி அவன் மீட்டிருக்க, இந்த சமூகம் வார்த்தைகளாலே தினம் தினம் அவளை கொன்று விடும் போலவே.
யாரும் இல்ல உலகத்தில் அவனை மட்டும் கடத்தி சென்று விட ஆசை தான் அவளுக்கும். தீரா காதல் அவன் மீது. அவன் அளவுக்கு அவளும் அவனை காதலிக்கிறாளே.
அது தான் இப்போது மனம் மேலும் வலித்தது. தன்னை வதைக்கும் உலகம், தன்னவனையும் சேர்த்து அல்லவா குத்தி கிழிக்கிறது.
அஞ்சனா குணசீலன்… வளர்ந்து வரும் மாடல் அழகி. தொடர்ந்து இரண்டு முறை மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறாள். சவுத் ஏசியா, மிஸ் குளோபல் தாண்டி மிஸ் வேர்ல்டுக்கு சென்றவளை மொத்தமாக முடக்கி போட்டிருந்தது, சில சதிக்காரர்களின் கீழ்தரமான சதிகள்.
இந்தியாவை முன்னிறுத்தி, இந்தியா சார்பாக, உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தவள், கைபேசியில் இருந்து போட்டியின் நடுவர் குழுவில் இருக்கும் ஆண்கள் மூவருக்கும் ஒரு குறுஞ்செய்தி, அவள் நிர்வாண வீடியோவுடன்.
"ஐ ஆம் ரெடி டூ ஸ்டே வித் யூ, ஒன் டே நைட். அண்ட் சேடிஸ்பை யூர்ஸ்" என்று ஹோட்டல் அறை முகவரியுடன் அழப்பு இருக்க,
அவர்களுக்கோ ஏக அதிர்ச்சி தான். 'ச்சீ… என்ன பெண் இவள்?' என்று காரி உமிழ்ந்தாலும், 'இந்த செய்தி உண்மையா பொய்யா? அவள் எண்ணை வேறு யாரும் தவறாக பயன்படுத்துகிறார்களா?' என்ற சந்தேகத்துடன் ஒருவருக்கு ஒருவர் தெரியாது மூவரும் சென்றிருக்க,
அந்த அறையில் அஞ்சனாவும் இருந்தாள்.
போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்குவதற்கு வேறு ஹோட்டல் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.
அவள் மட்டும் தனியாக வேறு ஒரு ஹோட்டல் அறையில் இருந்ததே அவர்களுக்கு அதிர்ச்சி தான்.
'ஒருவேளை இவள் தான் அந்த குறுஞ்செய்தி வீடியோ அனுப்பியதா?' என்று எண்ணிக் கொண்டே, அழகி பேரழகி அவளை பார்வையால் விழுங்கிய படி, கிடைத்தவரை லாபம் என்று தான் மூவரும் சென்றிருந்தார்கள்.
ஆண் வர்க்கம் பெண் என்றதும் தடுமாறி, தன் அதிகாரத்திற்கு கிடைக்கும் வெகுமதியாக எண்ணி அவளை நெருங்க,
முதலில், அவர்கள் தன்னறைக்கு எதற்கு இந்த நேரத்தில் வருகிறார்கள்? என்று யோசித்தாலும், வாசலில் நின்றவர்களை பண்பாடாக "வாங்க" என்று உள்ளே அழைத்தவள், அவர்கள் பேச்சும், பார்வையும் தடம் மாறவே, கத்தி கூச்சலிட்டிருந்தாள்.
ஹோட்டலின் மேனேஜர் துவக்கம் அனைவரும் கூடி விட, அவ்விடம் போலீஸும் வந்து சேர்ந்தது.
மூவரும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக அஞ்சனா புகார் கொடுக்க, அவர்கள் மூவரும் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் வீடியோவை காட்டி அவள் மீது புகார் கொடுத்தார்கள்.
'தங்கள் வேலையை செய்ய இடைஞ்சலாக இருக்கிறாள், தவறான வழியில் வெற்றி பெற முயல்கிறாள்' என்று சொல்லி போட்டியில் இருந்தும் வெளியேற்றப்பட்டவள் மீது கம்ப்ளைண்டும் பதிவு செய்து இருந்தார்கள்.
உலக அளவில் நடக்க இருந்த அழகி போட்டியில் ஏற்பட்ட சம்பவம் என்பதால், எல்லா நாட்டு செய்தி சேனல்கள், நியூஸ் பேப்பர்களிலும் சென்சார் கட் கூட இல்லாது அவள் மீதான புகார் செய்தி வீடியோ ஆதாரத்துடன் வெளி வர கூனி குறுகி போனாள் அஞ்சனா.
"இல்ல… நான் அதை அனுப்பல. இது எப்படி நடந்துச்சுனு எனக்கு சத்தியமா தெரியாது" என்று கண்ணீர் மல்க கதறியவள் வார்த்தைகளுக்கு மதிப்பின்றி, ஆதாரங்கள் ஆழமாக பதிந்து போனது.
அங்கேயே சிறை சாலையில் விசாரணை கைதியாக அடைக்க பட்டு இருந்தவளை, விடயம் அறிந்து பல பெரும் தலைகளை உருட்டி, பல கோடிகள் செலவிட்டு, சொந்த நாடு அழைத்து வந்தது என்னவோ ருத்ரான்ஷன் தான்.
அதற்குள் அவள் வீடியோ இணையதளம் முழுவதும் பரவி, காரசாரமான விவாத பொருளாக மாறி இருந்தாள் அஞ்சனா.
எவ்வளவு பெரிய அவமானம்? உலகமே வெற்றுடலாக பார்த்தா பிறகு, மானம் உள்ள பெண் வாழ்வாலா? மானம் இழந்து வாழ்ந்து என்ன பயன்? துளியும் தைரியம் இல்லாது, போராட மனதிலும் தெம்பில்லாது, வாழ்க்கையை வெறுத்து, கை நரம்பை அறுத்து சாக முயன்றவளை அப்போதும் காப்பாற்றியது ருத்ரான்ஷன் தான்.
இதற்கும் மேலும் அவளை தனியே விட்டால், எங்கே தன்னவளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் அவசர அவசரமாக திருமணம் செய்ய எண்ணினான்.
"இதுக்கு மேல என்னால முடியாது. கல்யாணம் பண்ணிக்கலாம் அஞ்சனா" என்று கையில் கட்டுடன் இருந்தவளிடம் கேட்ட ருத்ரான்ஷனோ, அங்கே கண்ணீருடன் நின்றிருந்த அவள் பெற்றோரிடம்,
"உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுங்க" என்று கைகூப்பி இறைஞ்சிதலாக கேட்டான்.
'இதற்கு மேல் தங்கள் பெண் நிலை என்ன?' என்ற பாரிய கவலையில் மனம் உடைந்து இருந்தவர்களுக்கு அவன் கல்யாணம் செய்து கொள்ள கேட்டது பெரும் நிம்மதியை தான் கொடுத்தது.
கண்களில் நீர் ததும்ப கூப்பிய அவன் கைகளை அவள் தந்தை பற்றிக் கொண்டே,
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ருத்ரா. உங்க வீட்ல ஒத்துப்பாங்களா?" என்பது தான் அவர் கவலையாக இருந்தது.
"நிச்சயமா ஒத்துபாங்க" என்றவன் அவ்வளவு நம்பிக்கையாக சொல்ல,
"இல்ல என்னால ஒத்துக்க முடியாது" என்று பெரிய குண்டை தூக்கி அவன் தலையில் போட்டிருந்தாள் அஞ்சனா.
"ஏன்?" இதயமே நின்று போன உணர்வில் தவிப்பாக ருத்ரான்ஷன் கேட்க,
கண்கள் தாண்டி சட்டென்று கன்னம் நனைத்த உவர் நீரை கைகளால் துடைத்துக் கொண்டே, ஆழ்ந்த மூச்செடுத்தவள்,
"உனக்கு என்ன தலையெழுத்தா என்னை கல்யாணம் பண்ண? நீ நல்லா இருக்கணும். தயவு செஞ்சி என்னை மறந்துட்டு வேற யாராவது கல்யாணம் பண்ணிக்க. நான் உனக்கு வேணாம்." என்று சொன்னவள் வார்த்தைகளை கூட அவள் மனமே தாங்கி கொள்ள முடியாது, எவ்வளவு தடுத்தும் கண்ணீர் கோடாக தொண்டை குழியில் இறங்கியது.
காதல் தன் காயம் மறைத்து தன்னவர்கள் நலனை விரும்பும் என்பார்கள். அவளும் அதை தான் செய்தாள்.
தன்னுடன் இருந்தால் அவன் வாழ்வும் நரகமாகும் என்று தான் 'நீ போ' என்று விரட்டினாள்.
அவள் போ என்றதும் அவளை உதறி தள்ளி தன் நலனை எண்ணி ஓடும் ஆளா அவன்? மொத்தமாக அவனை எரித்தால் கூட அவள் காலடியில் கிடப்பான்.
அவள் வார்த்தைகளின் வேதனையை அறிந்தவன், "இன்னொரு முறை இந்த மாதிரி பேசின, சாவடிச்சுடுவேன்" என்று மிரட்ட தான் செய்தான்.
"என்னால கல்யாணமே பண்ணிக்க முடியாது" என்று வாழ்வை வெறுத்து தன் கூட்டுக்குள் ஒடுங்கி போனவளை அவன் சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்க,
அடுத்த பிரளையத்தை அவன் வீட்டார்கள் உருவாக்கினார்கள்.
"மூளை கெட்டு போச்சா ருத்ரா உனக்கு? அந்த பொண்ண போய் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்ற?" என்று சீறிய அன்னையிடம்,
"ஒரு மாசம் முன்னமே நீங்க என்னை கல்யாணம் பண்ண சொல்லி கேட்ட போது, நான் அஞ்சனாவ தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொன்னேன். அப்போ ஓகே சொன்னீங்க? இப்போ என்ன?" என்று குரலில் நிதானம் இருந்தாலும், அவன் விழிகளோ அவரை எரித்துக் கொண்டு தான் இருந்தது.
"அப்போ இருந்த சூழ்நிலை வேற, இப்போ இருக்கிற சூழ்நிலை வேற. அசிங்கம் டா அவ?" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த பெரிய சாப்பாட்டு மேஜையை அப்படியே தலை கீழாக கவிழ்த்திருந்தான் ருதரான்ஷன்.
அது விழுந்த வேகத்தில் அவன் வீட்டு ஆட்கள் எல்லாரும் அலறி விலகி நின்றுக் கொண்டார்கள்.
நெஞ்சு விடைக்க கோபமாக அன்னையை நெருங்கியவன், "சூழ்நிலைக்கு ஏற்ப காதலை மாத்த முடியாது." என்று உறுமிக் கொண்டே அவர் கழுத்தை நெரித்து இருந்தான்.
மனைவிக்கும், மகனுக்கும் இடையே வந்து அவன் கையை தட்டி விட்டு, மனைவியை காத்த அவன் தந்தையோ,
"என்ன டா காதல்? பொல்லாத காதல். அம்மா சொன்ன வார்த்தையையே உன்னால தாங்க முடியல, ஊரே அவளை அப்படி தான் சொல்லுது. நீ சொல்ற இந்த காதல் எல்லாம் நாலே நாள்ல காணாம போய்டும். அப்படி ஒரு பொண்ண இந்த வீட்டு மருமகளா எங்களால ஏத்துக்க முடியாது" நடப்பை மகனுக்கு உணர்த்த முயன்றார்.
காதலில் விழுந்தவன், கண்கள் மட்டுமல்ல அத்தனை செயல் திறனையும் இழந்தவன் தானே, 'என் பையன் வாழ்க்கை நரகமாகிடும்' என்ற அன்னையின் தவிப்பை உணர மறுத்தான்.
காதல் மட்டுமே கடவுளாக அவனை ஆட்டுவிக்க, "இந்த ஜென்மத்தில அவ தான் என் மனைவி. உலகமே எதிர்த்தாலும் எங்க கல்யாணம் நடந்தே தீரும். உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லைனாலும் இந்த கல்யாணத்துல நீங்க எல்லாம் இருந்தே ஆகணும். குடும்பம் முன்னாடி கல்யாணம் பண்ணனும்னு அஞ்சனா ஆசைப்பட்டா. அவ ஆசை படி எல்லாம் நடக்கும். நடத்தி காட்டுவேன்" என்று சொன்னவன், அதற்காக இப்போது வரை போராடி கொண்டு தான் இருக்கிறான்.
அவள் முகத்தில் புன்னகையை மலர செய்ய, அவள் ஆசைகளை நிறைவேற்ற போராடிக் கொண்டே இருப்பான் இந்த கலியுக காதலன், ருத்ரான்ஷன்.