எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விதிகள் பிழையானால்! -கதைத்திரி

Status
Not open for further replies.

NNK-27

Moderator
விதிகள் பிழையானதால் விதி தலைகீழான ஒரு பெண்ணின் கதை
 

NNK-27

Moderator

பிழையான விதி 1​

உலகம் உருவான விதத்தை விளக்கும் பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்(கை)பியல் விதிகள், இந்த இரண்டுக்கும் நடுவில் தான் சிக்கியிருக்கிறது மானுட வாழ்க்கையின் கோடானு கோடி நிகழ்வுகள். அந்நிகழ்வுகளின் இணைவுகள் மற்றும் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.​

விதிக்கு மற்றொரு பெயர் கர்மா. கர்மா என்றால் செயல் என்று பொருள். இயற்கையின் விதியானானலும் சரி, இயற்பியல் விதியானாலும் சரி நாம் செய்யும் செயலைப் பொறுத்து தான் விளைவு அமையும். நல்லதை நினைத்து நன்மையைச் செய், நல்லதே நடக்கும் என்ற பெரியோர்களின் கூற்றின் பின்னால் இருக்கும் சூட்சுமம் இது தான்.​

எல்லா இடத்திலும் எல்லா விதிகளும் வெற்றி பெருமா என்றால் அதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவே. பிழையான சில விதிகளும் இங்கு உண்டு. அப்படிப் பிழையான விதிகளால் பெண்ணொருத்தி படும் பாடு தான் விதிகள் பிழையானால்.​

“விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல்,

வெருவல், எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்

தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழத்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்“

பூமியில் விழுதல், தேம்பி அழுதல், அதிகமாக உடல் வெப்பம் அடைதல், அஞ்சுதல், எழுந்திருத்தல், வருந்துதல், இராமனை நினைத்து வணங்குதல், தளர்ச்சியடைதல், உடல்நடுக்கம் அடைதல், துன்பத்தால் சிதைந்து பெருமூச்சுவிடுதல் இதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோன்றாத, செய்யத் தெரியாத நிலையில் தன்னைச் சுற்றிலும் கரையான், புற்று வளர்ப்பதைக் கூட அறியாமல் இருந்தாளாம் அசோகவனத்தில் அடைபட்டிருந்த சீதை.​

வேலி வெளிப்படையாக பயிரை மேயத் துவங்க, அதற்கும் சேர்ந்து அண்டை நிலத்துக்காரன் காவல் காக்கும் நேரத்தில், பாவங்களின் காலமான கலிகாலம் துவங்கும் என்கிறது பண்டையக் குறிப்புகள்.​

கலிகாலம் கடக்க கடக்க பாவங்களும் அதிகமாவது தானே அதற்கு அழகு. அந்த வகையில் வேலி ஒன்று, தான் காக்க வேண்டிய பயிரைத் தானே முன் வந்து, பெருச்சாளியிடம் ஒப்படைத்த கதை ஒன்று நிகழ்ந்திருந்தது, தெய்வா மற்றும் மலையரசன் ரூபத்தில்.​

கடிகார முள் நகரும் மெல்லிய சத்தத்தோடு கடுமையாகப் போட்டி போடும் வகையில், நித்திரை அரசன் கும்பகர்ணனை மிஞ்சும் வகையில் பலமான குறட்டை சத்தத்துடன், நான்கு பேர் படுக்கும் அந்த மெத்தையில், அடுத்த ஒரு ஆள் அமர்வதற்கு கூட இடம் இல்லாத வண்ணம் கை, கால்களை நன்றாக விரித்து வைத்து, உலகைச் சுற்றி வந்த களைப்பில் என்று சொன்னால் அது மிகவும் அதிகப்படி,​

முந்தைய நாள் முழுக்க, சோம்பல் முறிக்கக் கூட கையை உயர்த்த சோம்பேறித்தனப்பட்டு, அசையாமல் படுக்கையிலே இருந்த அசதியில், பட்டப்பகலில் பல்லைக் காட்டிக் காட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் கணவன் என்ற உறவைக் கொண்டவன் காலடியில் அமர்ந்து முழங்காலில் முகத்தை மறைத்து அமர்ந்திருந்தாள் தெய்வா என்றழைக்கப்படும் தெய்வானை.​

திரேதா யுகத்தில் கணவன் இடத்தில் இருந்து கட்டாயத்தின் பேரில் பிரிக்கப்பட்டு, இலங்கையில் சிறைவைக்கப்பட்ட சீதையின் நிலையையும், கலியுகத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் சூழ தானாகக் கணவன் மனை என்னும் அசோகவனத்தில் சிக்கிக்கொண்ட இவளின் நிலையையும், உள்ளதை உள்ளபடி காட்டும் தராசில் வைத்தால், சற்றும் நிலை தடுமாறாமல் சமமாக நின்று, இரண்டு சீதையின் துயரமும் ஒன்று தான் என்பதை உணர்த்தும் அந்த நியாயத் தராசு.​

தெய்வானையை கடவுள் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் இருக்கும் போது படைத்தாரோ என்னவோ, விவரம் தெரிந்த நாளில் இருந்து அவள் வாழ்வும் அந்த இரண்டுக்கும் நடுவில் தான் சென்று கொண்டிருக்கிறது.​

ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த அவளுடைய திருமணமும் அப்படித் தான். முழுக்க முழுக்க விருப்பம் என்றும் சொல்ல முடியாது, அதற்காக முழுக்க முழுக்க வெறுப்பு என்றும் சொல்ல முடியாது.​

நிச்சய ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கும் போது அவள் தன் வீட்டில் தான் இருந்தாள். ஆனால், உனக்கு இந்த நிச்சயத்தில் விருப்பமா என்று யாரும் கேட்கவில்லை, அவளும் தன் மன எண்ணத்தை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் அதற்கு மதிப்பு இருக்காது என்பது இரண்டாம் பட்சம், முதன்மையாக ஏச்சு பேச்சு அதிகம் வாங்க வேண்டியது இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தாள்.​

நிச்சயத்துக்கான நாள் குறிக்கப்படும் வரை அவளுக்கு மாப்பிள்ளையின் பெயரோ, வயதோ, படிப்போ தெரிவிக்கப்படவில்லை. தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் அதற்கான அவசியம் இல்லை என்று நினைத்துவிட்டார்கள் போலும். தயக்கம் இருந்தாலும் தாயிடம் கேட்டாள், பாவம் அவருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை.​

தெய்வாவின் வீடு ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த வீடு, அவள் தந்தை மலையரசனைத் தொடர்ந்து இப்போது வீடு முழுமையாக அவள் அண்ணன் வெற்றியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.​

சம்பிரதாய பெண் பார்க்கும் படலத்தின் போது கூட தெய்வா அவ்வளவாக அவனை, இல்லை அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை. வெட்கம் என்று நினைத்தால் அது மிகப்பெரிய பிழை.​

பெண் பார்க்க வரும் எத்தனை பேரைத் தான் அவளால் நிமிர்ந்து பார்த்து பிடித்திருப்பதாகச் சொல்ல முடியும். வண்டு பல பூக்கள் மாறினாலும், பூக்கள் என்னவோ ஒற்றை வண்டை மட்டுமே தன்னில் அனுமதிக்கும். பெண்களை பூக்களுடன் ஒப்பிடுவதன் காரணமும் இதுவே.​

தெய்வாவைப் பெண் பார்க்க வருவது ஒன்றும் அபூர்வமான விஷயம் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக அவ்வப்போது நடப்பது தான். வரும் வரன்கள் அனைவரும், என்னவோ காற்றடித்தால் பறந்து போய்விடும் அளவில் இருப்பவர்கள் போல தங்களைத் தாங்களே உருவகப் படுத்திக்கொண்டு, தாங்கள் தான் மன்மதன் என்ற நினைப்பில் ரதியைத் தேடி வந்திருப்பார்கள் போலும், அவர்களுக்கு சற்று பூசிய உடல்வாகு கொண்டவளை சற்றும் பிடிக்கவில்லை. அகக்கண்ணால் பார்த்தால் தெய்வாவும் ரதிதான். ஆனால் அந்த அளவு அறிவு அவளைப் பெண்பார்க்க வரும் யாருக்கும் இல்லை.​

அப்படியே சிலர் தாய், தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு குணம் ஒத்து வந்தால் போதும் என்ற முடிவில் ஒப்புக்கொண்டால், அது தெய்வானையின் அப்பாவுக்குப் பிடிக்காது. காரணம் வரதட்சணை அதிகம் கேட்பார்கள்.​

வரதட்சணை கொடுக்க முடியாத அளவு அவர்கள் குடும்பத்தில் பணப்பிரச்சனையா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் பெண்ணாகப் பிறந்து வளர்ந்தவளை படிக்க வைத்து, திருமணம் செய்து மட்டும் தான் கொடுக்க முடியும். மற்றபடி தான் சம்பாதித்த அனைத்தும் தன் மகனுக்கே என்ற அசராத கொள்கை உடையவர் தெய்வானையின் தந்தை மலையரசன்.​

ஒன்றும் இல்லாத ஓட்டாண்டியாக தன்னைத் தன் தந்தை தெருவில் விட்ட கொடுமை அடிமன வடுவாக அழுத்தமாகப் பதிந்திருப்பதால், அந்த நிலை தன் மகனுக்கு வர நான் விட மாட்டேன் என்பார் மலையரசன். மனைவி, மகள்களை விட மகனே உயர்ந்தவன் என்ற கொள்கை உடைய பழங்கால மனிதர்.​

மகளை விட இரண்டு வயதே மூத்த மகனுக்கு அன்றைய காலநேரத்தில் முப்பது இலட்சம் ரூபாய் செலவு செய்து தன் வீட்டிற்கு அருகிலேயே நல்ல வீடு ஒன்று கட்டிக்கொடுத்து, ஊர் மெச்சும் அளவுக்கு திருமணமும் செய்து வைத்திருந்தார். வந்த அண்ணியிடம் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் அனைத்து வீட்டு வேலைகளையும் வழக்கம் போல் தெய்வாவே செய்து வந்ததால் அந்த வரையில் தப்பித்தாள். அப்பொழுது கூட ஒருநாள், அண்ணி என்று பாராமல் தன் மனைவிக்கு வேலை பாக்கி வைக்கிறாய் என்று கடிந்து கொண்டிருந்தான் அவள் அண்ணன்.​

மலையரசன் மகனுக்காக பார்த்துப் பார்த்து செய்தது ஊரெல்லாம் பரவி விட, பெண் கேட்டு வருபவர்கள் எல்லாம் மகனுக்கு இணையாக மகளுக்கும் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் வரதட்சணை பேச அதில் விருப்பமில்லை மலையரசனுக்கு.​

இப்படியே ஒவ்வொரு காரணத்தால் திருமணப் பேச்சு தட்டிக் கழித்துக் கொண்டே போக, அதனால் பாதிக்கப்பட்டது என்னவோ தவறே செய்யாத தெய்வானை தான், அதுவும் கல்யாணச் சந்தையில் விலை போக வக்கில்லாதவள் என்ற பட்டத்தோடு. கூடவே தென்னை மரத்தைப் போல் தலையும் தூரும் ஒரே போல இருக்கிறாய் என்ற உருவக்கேலி வேறு பெற்ற தந்தையால் எட்டிப்பார்க்கும்.​

“வாரத்துக்கு ஒருவர் முன்னால் புடவை, நகை என்று அலங்கரித்து நிற்பதற்கு அசிங்கமாக இருக்கிறது, தயவுசெய்து புகைப்படம் காட்டி, இவ்வளவு தான் நகை, பணம் என்று பேசி முடித்து எல்லாம் உறுதியான பிறகு வீட்டிற்கு அழைத்து வாருங்கள்“ என்று எத்தனையோ முறை தன் தந்தையிடம் சொல்லி இருந்தாள்.​

ஆனால் அவள் பேச்சிற்கு புள்ளியளவு கூட மரியாதை இல்லை அவளது சொந்த வீட்டில். கூடவே நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா, இல்லை நான் சொல்வதை நீ கேட்க வேண்டுமா? என்று எடக்காக கேள்வி வேறு வந்து விழவே தெய்வாவால் வேறு பேச முடியவில்லை.​

பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் அந்த நாளே வெறுத்து விடும் அவளுக்கு. இப்படியான தொடர் சம்பவங்களால் ஆசையாய் அணிந்து கொள்ளும் புடவைகளைக் கண்ணால் பார்ப்பதே வேப்பங்காயாய் கசக்க ஆரம்பித்திருந்தது.​

வருடங்கள் ஓடினாலும் அவள் நிலையில் மாற்றம் இல்லை. உடம்பைக் குறை என்று திட்டு தான் கிடைக்க ஆரம்பித்தது. ஏனோ அவள் குண்டாக இருப்பதால் மட்டும் தான் அவளுக்கு வரன்கள் அமையவில்லை என்பது போல் இருந்தது குடும்பத்து ஆண்களின் நிலை.​

நிஜத்தில் அவள் சொந்த ஊரில், அவள் பள்ளி செல்லும் நேரம், டியூஷன் செல்லும் நேரம், திருவிழா, விஷேஷ வீடுகளில் அவள் நடந்து கொள்ளும் பாங்கு என பலதையும், சில வருடங்களாகக் கவனித்து சொந்த ஊர், பக்கத்து ஊரில் இருந்து இரண்டு நல்ல சம்பந்தங்கள் தானாக விரும்பி வந்திருந்தது.​

அதில் ஒன்று இவர்களை விட சற்றே அதிக சொத்து பத்து உள்ளவர்கள் என்பதால், அவர்கள் பெண் வீட்டுக்காரர்கள் என்று தங்களை இழிவாக நடத்துவார்கள். தன்னால், தான் பெற்ற மகளுக்காக ஆயினும் அடுத்தவன் காலில் விழ முடியாது.​

அதனால் மாப்பிள்ளை தங்களை விட கீழான செல்வ நிலையில் தான் இருக்க வேண்டும் என்ற பொல்லாத காரணத்தைச் சொல்லி, அந்த சம்பந்தத்தைத் தடுத்தது மலையரசனே.​

இன்னொன்று சொந்த ஊரில் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அடிக்கடி வீட்டுப்பக்கம் வந்து போவாள். அது மருமகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ, அதோடு உள்ளூர் மாப்பிள்ளை என்றால் எதிர்காலத்தில் மகனோடு தன்னுடைய சொத்துக்காக தகராறு செய்ய வாய்ப்பிருக்கிறது. மகளுக்கு இந்தக் குடும்பம் போனால் வேறு நல்ல, இல்லை வேறு குடும்பம் கிடைக்கும், ஆனால் மகனின் நிம்மதி முக்கியம் என்று சொல்லி அந்த சம்பந்தத்தையும் தடுத்து இருந்தார் மலையரசன்.​

சிறுவயது வரை தன்னோடு சரிக்கு சரியாக நின்ற அண்ணன் ஒருகட்டத்தில் நீ பெண், நான் ஆண். உன்னை விட நான் மேல் என்று தந்தையின் பாதச் சுவட்டைப் பின்பற்றிய நாளில் இருந்தே தெய்வாவுக்கு தன் வீட்டு ஆண்களைப் பிடித்ததில்லை.​

போதாக் குறைக்கு அவளைச் சுற்றி இருந்த பலருக்கும் திருமண வாழ்வு அவ்வளவு நன்றாக அமையவில்லை. இதனாலே முதன் முதலில் திருமணப் பேச்சை ஆரம்பித்த நேரத்தில் இருந்தே லேசான பதற்றத்தில் இருந்தவள், நாட்கள் கடக்க கடக்க தன் தந்தை செய்யும் வேலைகளால் திருமணத்தையே வெறுக்க ஆரம்பித்தாள்.​

திருமணம் வேண்டாம் என்னை என்போக்கில் விடுங்கள் என்று ஒருநாள் சொன்னதற்காக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டு கத்தினார் மலையரசன். மகள் தனிமரமாக நின்றுவிடுவாள் என்ற பயத்திலா என்றால் சத்தியமாக இல்லை. அவர் குடும்ப கௌரவம் கெட்டுவிடும், பெண்ணுக்குத் திருமணம் செய்ய வக்கில்லாதவன் என்று உலகம் சொல்லிவிடும் என்ற காரணத்தால் மட்டுமே.​

நாட்கள் நகர்ந்ததில் அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவள் வீட்டில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அவள் அண்ணி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றதும், குடும்பப் பொறுப்பு அண்ணன் வசம் சென்றது. அதனோடு சேர்த்து அவளுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பும் அவள் தந்தை வசம் இருந்து அண்ணன் வெற்றி வசம் சென்றது.​

அதன் பிறகு தான் அவளுக்கு தன் வாழ்க்கை சிறக்கும் என்று சின்ன நப்பாசை இருந்தது. அண்ணன் இந்தக் காலத்து ஆள், அதோடு திருமணத்திற்கு உன்னுடைய எதிர்பார்ப்பு என்ன என்று இவளிடம் முதன்முறையாக வாய் திறந்து கேட்டவனும் அவனே. அண்ணன் தயவால் எப்படியும் தப்பித்துக் கொள்வோம் என்று நம்பினாள். ஆனால் அந்த அண்ணன் தான் அவளை மொத்தமாக அந்தகாரத்தில் தள்ளிவிட இருப்பவன் என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை.​

வெற்றி பொறுப்பேற்ற பிறகு மாப்பிள்ளை, பெண்பார்க்கும் சடங்கு என்று எதுவும் அவள் காதில் விழவில்லை. எல்லாம் இரகசியமாக நடந்தது. அதில் அவளுக்கு சற்றே நிம்மதி ஏற்பட்டதும் உண்மை. ஆனால் அதுதான் அவள் வாழ்வில் அனுபவிக்கும் இறுதியான நிம்மதியாகிப் போனது தான் பரிதாபம்.​

ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஒரே வாரத்தில் மூன்று குடும்பத்தினர் பெண் பார்க்க வரவும் தெய்வாவிற்கு ஒருமாதிரி ஆகிப்போனது. காரணம் அனைவரும் அவளுடைய ஊரை விட்டு வெகுதொலைவில் உள்ளவர்கள். அதோடு மாப்பிள்ளைகள் அனைவரும் அவளை விட அதிக வயது வித்தியாசத்தில் இருந்தவர்கள். பெரிதாக சொத்து என்று எதுவும் இல்லாதவர்கள்.​

தாயின் மூலமாக தெய்வாவிற்கு அண்ணன் எண்ணம் புரிய ஆரம்பித்தது. உடன் பிறந்த தொல்லைக்காக திருமணம் என்ற ஒன்று செய்து வைக்கிறோம், அதன் பிறகு வீட்டிற்கு அரிதிலும் அரிதாக வந்து சென்றால் போதுமானது என்ற அவனுடைய நோக்கத்தை தெளிவாகப் புரிந்துகொண்டாள்.​

அதில் அவளுக்குப் பெரிதாக வருத்தம் இல்லை, காரணம் பெற்ற தந்தையே பாரமாகப் பார்க்கும் போது தமையனிடம் எவ்வளவு எதிர்பார்த்துவிட முடியும். சொத்து பத்து எதுவும் இல்லாவிட்டால் போகிறது, தான் அண்ணனிடம் சொன்ன நிபந்தனையாக மாப்பிள்ளைக்குச் சொந்த வீடாவது நிச்சயம் இருக்கும் என்று நம்பினாள்.​

எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்று நினைக்கும் ரகம் தெய்வா. ஓட்டு வீடே ஆனாலும் பரவாயில்லை, அது சொந்தமாக இருக்க வேண்டும் என்பது தான் திருமணத்திற்காக அவள் வைத்த ஒரே கோரிக்கை.​

பெரிதாகத் தான் எதுவும் கேட்காததால், தன்னுடைய நியாயமான கோரிக்கையை தன் அண்ணன் நிச்சயம் நிறைவேற்றி இருப்பான் என்று முழுமனதாக நம்பினாள் அந்தப் பைத்தியக்காரி.​

நல்ல ஒரு இராகுகாலத்தில் அவளைப் பெண்பார்க்க வந்திருந்தார்கள் ரகு மற்றும் அவனுடைய அண்ணன் அண்ணி. பத்தோடு பதினொன்றாக யாருடைய முகத்தையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் டீயைக் கொடுத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.​

வீடு வீடாகச் சென்று பெண்களை உற்று உற்றுப் பார்ப்பது ஆண்களுக்கு பிடிக்குமோ என்னவோ, தன்னைப் பெண் பார்க்க வரும் அத்தனை பேரையும் நிமிர்ந்து பார்த்து கணக்கு போடுவது தெய்வாவிற்குப் பிடிக்காத ஒன்று. ஒன்றே உள்ளம் ஒருவனே அதன் தெய்வம் என்று வாழ்பவள் அவள். அதனால் இவன் தான் உன்னவன் என்று காட்டுங்கள் அதன் பிறகு அவனை நிமிர்ந்து பார்க்கிறேன் என்று உறுதிமொழியோடு இருந்தாள்.​

பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் அண்ணன் சில நாட்களில் சென்னை சென்று வந்தான். நன்றாக விசாரித்தாயிற்று. சொந்த வீடு உண்டு, மாதம் முப்பந்தைந்தாயிரம் சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது என்ற நல்ல தகவல்களாக பார்த்து பார்த்து சொல்ல, மாப்பிள்ளை பெண்ணை விட படிப்பு குறைவு, ஆள் உயரமும் குறைவு, காலும் சற்றே தாங்கி நடப்பவர் உற்றுக் கவனித்தால் அன்றி தெரிய வாய்ப்பில்லை என்ற சின்னச்சின்னக் குறைகள் கூட மறைந்து போக, வீடே கல்யாணக்களையில் மகிழ ஆரம்பித்தது.​

இங்கே வீடு என்று மொத்தமாகக் குறிப்பிட்டது வெற்றியையும் மலையரசனையும் மட்டுமே. காரணம் இந்த சம்பந்தம் அவர்களுக்குப் பிடித்தால் மட்டும் போதுமானது என்று தான் நினைத்தார்கள். அதன் விளைவு தான் மாப்பிள்ளையின் சுயவிவரங்களைக் கூட, கட்டிக்கொள்ள இருப்பவளிடம் சொல்லாமல் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்தது.​

அவர்கள் சொன்னால் தெய்வா கேட்பாள் என்ற நம்பிக்கையோடு சேர்த்து கேட்டாக வேண்டும் என்ற கட்டளையும் சேர்ந்தே அவளுக்குச் சென்றது.​

"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்"

ஆராயாமல் யாரையும் நம்பவும் வேண்டாம், நம்பிய பின் எதற்கும் அவரை ஆராய வேண்டாம் என்ற வள்ளுவன் விதியை நம்பி, உடன் பிறந்தவனை முழுதாக நம்பினாள் தெய்வா. அங்கே தான் அவளுடைய முதல்விதி பிழையானது.
 
Last edited:

NNK-27

Moderator

பிழையான விதி 2​

“வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்

மானுடர் வேற்றுமை இல்லை.

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்”

சி. சுப்பிரமணியபாரதியார்.

வர்ணங்கள் வேறுபாட்டால் மனிதர்களில் உயர்வு, தாழ்வு காணுதல் கூடாது என்ற பாரதியாரின் வீரவசனத்தையே இன்னும் முழுதாக ஏற்றுக் கொள்ளாத ஜாதிப் பெருமை பேசும் மனிதர் மலையரசன். அவரா ஆண்பிள்ளையையும், பெண்பிள்ளையையும் சமமாக நடத்தப் போகிறார் என்று அவரைத் தெரிந்த எல்லோரும் சொல்வது உண்டு.​

ஆனால் அவர்கள் அறியாத ஒரு விஷயம், ஒரு காலகட்டத்தில் வெற்றியை விட தெய்வானையைத் தான் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார் அந்த மனிதர் என்பது. அது தெய்வாவால் கூட மறுக்க முடியாத உண்மை. அந்தக் காலம் எல்லாம் ஏதோ முற்பிறவி போல் தோன்றியது இப்போது இருக்கும் தெய்வாவிற்கு.​

தேனி அருகே ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் மூன்றாம் பிள்ளையாய் யாரும் எதிர்பாரா நேரம் பிறந்தவள் தெய்வானை. ஐந்து மாதம் வரை குழந்தை ஒன்று வயிற்றில் இருக்கிறது என்பதே தெரியாத அம்மாவுக்கும், ஒருவருடத்திற்கு முன்னர் தன் பெயரைக் காப்பாற்ற ஆண்பிள்ளை பிறந்த கர்வத்தில் பாதி ஆயுள் கூடியது போல் இருந்த தந்தைக்கும் பிறந்தவள்.​

பிறந்த அன்றே இருக்கவா, போகவா என்னும் இழுபறியோடு, இருபத்தியோரு நாள் செயற்கை சுவாசத்திற்காக, அன்றைய நாளிலே இருபதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விழுங்கி விட்டு குத்துக்கல்லாய் வீடு வந்து சேர்ந்தாள்.​

அவள் வாழப் போகும் எதிர்கால வாழ்வு பற்றித் தெரிந்ததால் தானோ என்னவோ, பிறந்த அன்றே அவளை அழைத்துக் கொள்ள முயற்சி செய்திருந்தார் காலதேவன். ஜீவ மரணப் போராட்டத்தில் இருந்து அவளைக் காத்த மருத்துவரே தெய்வானை எனப் பெயரிட்டு, அவள் போராட்ட வாழ்வுக்கு பிள்ளையார் சுழி போட்டு, இல்லம் அனுப்பி வைத்தார்.​

அக்காவுக்கும், அண்ணனுக்கும் அவள் செல்லமும் கிடையாது, அதே சமயத்தில் விரோதியும் கிடையாது. ஆனால், சுற்றி உள்ள அண்டை வீட்டாருக்கு அவளை மிகவும் பிடிக்கும், அத்தனை சமத்து. வயிறு நிறைந்து விட்டால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரமாட்டாள்.​

தலை நிமிர்த்த வேண்டிய மாதத்தில் தலை நிமிர்த்தினாள், குப்புற விழ வேண்டிய நேரத்தில் மறக்காமல் செய்தாள், தவழ வேண்டிய வயதில் தவழ்ந்தாள், நடக்க வேண்டிய வயதில் நடந்தாள். தொந்தரவு தராத குழந்தையாய் அழகாய் வளர ஆரம்பித்தாள்.​

குழந்தை வளரும் வேகம் யாரும் அறியாதது அல்லவா? இவ்வளவு விரைவாக வளர்ந்தால் விரைவில் இவளுக்காக மீதமிருக்கும் சந்தோஷங்கள் யாவும் அழிந்து விடுமே என்று காலதேவன் மீண்டும் அவளுக்காக வருத்தப்பட்டார் போலும்.​

தன்னிடம் வரவழைத்து, தானே அருகில் வைத்துப் பார்த்துக்கொள்ள ஆசைப்பட்டு, அவள் வீட்டு அருகே உள்ள நீரோடையில் விழ வைத்தார். எதேச்சையாய் வந்த அவளுடைய அத்தை ஆபத்பாந்தவனாய் மாறி அவளைக் காத்தார்.​

அவளுடைய வீட்டில் பெரிய தண்ணீர் பானையில் தலைகீழாக விழவைத்தார், தாய் வந்து காப்பாற்றினார். இன்னும் சின்னச் சின்னதாக ஏதோதோ முயற்சிகள். புயல்காற்றில் வளைந்து கொடுத்து தப்பிக்கும் நாணலைப் போல, ஒவ்வொன்றில் இருந்தும் தப்பித்து வளர ஆரம்பித்தாள் தெய்வா.​

அவள் வளர வளர வீட்டின் செல்வநிலையும் வளர்ந்தது, அவளால் தான் அனைத்தும் என்பது போல் அவள் மேல் அலாதி அன்பைக் காட்ட ஆரம்பித்தார் மலையரசன். என்னைக் காக்கப் பிறந்த என் அம்மா, நான் கும்பிடும் மாரியம்மன் என் மகளாகப் பிறந்து என் வீட்டில் நடமாடுகிறாள் என்பன போன்ற தந்தையின் வார்த்தைகள் அடிக்கடி அவள் காதில் விழும். தன்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாரும் உண்டோ என்று குழந்தை தெய்வானை, முற்றும் முழுதுமாக மகிழ்ந்திருந்த காலகட்டம் அது.​

தந்தை தாயைப் பார்த்து பேசும் சுடுசொல்லும், இருவரும் போட்டுக் கொள்ளும் சில சண்டைகளையும் தவிர்த்து, வேறு துன்பம் அறியா குழந்தை அவளுக்கு சரஸ்வதியின் அருள் இருக்க, நன்றாகவே படித்தாள். அது இன்னமும் தந்தையின் அன்பைப் பெற்றுக் கொடுக்க, அதற்காகவே கூடுதல் அக்கறையோடு படித்தாள்.​

எவ்வளவு பெரிய மழை என்றாலும் ஒருகட்டத்தில் அது வெறிக்கத் தானே வேண்டும். அப்படித் தான் அவளுடைய நிம்மதியான வாழ்க்கைக்கான அடிப்படை ஆட்டம் காண வேண்டிய நாளும் வந்தது.​

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதலாவதாக வந்து மலையரசனுக்கு மாபெரும் கௌரவத்தை தேடிக் கொடுத்தாள் தெய்வா. கல்வியறிவே இல்லாத மலையரசனின் வீடு அவர் மகளால் சரஸ்வதி வாழும் சத்தியலோகமாகிப் போனது போல், ஊரே அவரைக் கொண்டாடியது. தற்பெருமை தாங்கவில்லை தந்தைக்கு.​

அவள் வாழ்ந்தது விவசாயக் குடும்பம் என்பதோடு, ஆணாதிக்கம் நிறைந்த குடும்பம். பெண்களுக்கு மட்டுமான ஏராளமான கட்டுப்பாடுகள், அதெல்லாம் பிடிக்காது போனாலும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவள் என்பதால், அவளும் இது தான் உலக நியதி என்று கருதி வாழப் பழகி இருந்தாள்.​

பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு கூட அவளைத் தனியே அனுப்ப விருப்பமில்லாத தந்தை, ஊருக்குள் உத்தமர் ஒருவர் சொன்ன விவரத்தைக் கொண்டு, மகள் மருத்துவம் படிக்கும் அளவுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார்.​

மகள் மருத்துவம் படித்தால் அதில் அவள் வாழ்வு சிறக்கும், கூடுதலாக தன்னுடைய கௌரவம் அதிகமாகும் என்று நினைத்தாரே தவிர, அதில் மகளுக்கு விருப்பமா என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.​

தெய்வாவும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று தனக்குப் பிடிக்காததை ஏற்க முடிவு செய்து தலையைத் தலையை ஆட்டி வைத்தாள். தன் வாழ்வு பள்ளத்தில் இறங்க அந்தத் தலையாட்டல் தான் முக்கியக் காரணம் என்று தெரிந்திருந்தால் அன்று மட்டும் அவள் சிலையாகிப் போய் இருப்பாளோ என்னவோ.​

நடக்கும் எதிலும் தெய்வாவிற்கு முழு விருப்பமில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல், அவள் அக்காவுக்கும், அண்ணனுக்கும் பொறாமை வேறு.​

தெய்வாவின் அக்காவுக்கு படிப்பு ஓரளவு நன்றாகவே வந்தாலும், கல்லூரி முதல் வருடம் படிக்கும் போதே சொந்தத்தில் நல்ல வரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அது ஒரு தீராத மனக்குறையாகிப் போனது தெய்வாவின் தமக்கைக்கு.​

வெற்றி இளநிலைப் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நேரம் அது. அவனை எப்படியாவது பொறியியல் படிப்பில் சேர்த்துவிட வேண்டும் என்று பெரும்பாடு பட்டார் மலையரசன். ஆற்றில் ஊற்றுநீர் ஊறினால் தானே அதைக் கைகளில் அள்ள முடியும். வெற்றியின் மதிப்பெண்ணிற்கு அருகே இருந்த நல்ல ஒரு கலைக்கல்லூரியில் இடம் கிடைத்தது.​

ஆனால் பொறியியலுக்கு இணையான வேலைவாய்ப்பு இதிலும் கிடைக்கும் என்ற யோசனை கூட இல்லாமல், மகன் தன் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டான் என்ற கடுப்பில் வெற்றியை சற்றே ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார் மலையரசன். அதற்குக் காரணம் தங்கையும், தங்கையின் நல்ல மதிப்பெண்களும் தான் என்று பொறாமை கொண்டான் தமையன். அன்று வெற்றியின் மனதில் விழுந்த பொறாமை விதை தான் வளர்ந்து மரமாகி சரியான நேரத்தில் அவளைக் காவு வாங்கி விட்டதோ என்று நிகழ்காலத்தில் அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்வாள் தெய்வா.​

அப்போதெல்லாம், அதாவது தந்தையின் தாராள அன்பில் குளிர்காய்ந்த காலகட்டத்தில், அண்ணனை நினைத்து அடிக்கடி வருந்துவாள் தெய்வா. ஆனால் அந்த நிலை, சொல்லப் போனால் அதைவிட மோசமான நிலை தனக்கு வெகுவிரைவில் வர இருக்கிறது என்பது அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.​

மேல்நிலை பள்ளிப் படிப்பிற்காக தெய்வாவும் விடுதியை நோக்கி கிளம்பினாள். அந்த ஊரில் இருந்து வெகுதொலைவு சென்று விடுதியில் தங்கும் முதல் பெண் அவளாகத் தான் இருந்தாள், அதுவும் பள்ளிப் படிப்பிற்காக என்று தெரிந்தவுடன் ஊரே அவளை வியந்து பார்த்தது.​

பலர் மலையரசன் மகளைப் படிக்க வைக்கும் போராடும் போராட்டத்தைப் பார்த்து வியந்து போயினர் என்றால், சில எட்டப்பன்கள் மகளைப் படிப்பிற்கென்று வெளியூர் அனுப்புகிறாய், பள்ளிப் பாடங்களோடு சேர்த்து காதல் பாடங்களையும் கற்றுக் கொள்ளாமல் வந்தால் சரி என்று எட்டப்பன் வேலையைக் காட்டினர்.​

சிலரோ பெண்ணுக்கு எதுக்கு மருத்துவம் போன்ற பெரிய படிப்பு, திருமண வயது வரும் வரை பெயருக்கு எதையாவது படிக்க வைத்துவிட்டு நமக்கு கட்டுப்படும் எவனாவது ஒருவனைப் பிடித்து திருமணம் செய்து வைத்து விடுவதா, அதை விடுத்து எதற்கு இந்த வீண்செயல் என்று சகுனி வேலை செய்தனர்.​

அங்கு சுற்றி, இங்கு சுற்றி இந்தத் தகவல் தெய்வாவின் காதுகளுக்கும் வந்து சேர்ந்தது. இப்படியான அவப்பெயர் தனக்கோ இல்லை தன்னால் தந்தைக்கோ வந்துவிடக்கூடாது என்பதற்காக, என்ன ஆனாலும் காதல் என்ற வலையில் விழுந்து விடக்கூடாது என்று உறுதியான முடிவை எடுத்தவள் அதை கடைசி வரைக் காப்பாற்றினாள் என்பது தான் விஷயம்.​

அதுவரை பள்ளிக்கட்டணமாக அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த தெய்வாவிற்கு, அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் கூட செலவழித்திடாத மலையரசன், ஆண்டுக்கு நாற்பதாயிரம் செலவழிக்க ஒப்புக்கொண்டார். அங்கு ஆரம்பித்தது அவளுடைய சனி.​

கூண்டுக்கிளியாய் வீட்டுக்குள்ளேயே வளர்ந்தவளை திடீரென வெகுதொலைவில் கொண்டு தனித்து விட்டது, சித்தி என்று ஆசையாய் தன்னைச் சுற்றி வரும் அக்கா பிள்ளைகளை விட்டு விலகி இருப்பது என்று அதுவரை தெய்வாவின் வாழ்வில் நடக்காத ஒரு திருப்பம் நிகழ்ந்தது.​

அவள் படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது. மதிப்பெண்கள் குறைய குறைய ருத்ரதாண்டவம் ஆடினார் மலையரசன். படிப்பதற்கு அவ்வளவு செலவு செய்கிறேன், ஒவ்வொரு முறை அழைத்துச் செல்ல வரும் போது இவ்வளவு செலவு செய்கிறேன் என்று சொல்லிக் காட்ட ஆரம்பித்தார்.​

கூண்டுக்கிளியாக இருந்தவரை அறியாத ஒன்றை, விடுதிக்கு வந்து பலதரப்பட்ட இடங்களில் இருந்து வந்திருந்த தோழிகளுடன் பழகியதால், தெய்வாவின் மனதில் ஒரு ஓரமாய் உறங்கிக் கொண்டிருந்த சுயமரியாதை எண்ணங்கள் விழித்துக் கொண்டது.​

அதன் பலனாய், இப்போது தந்தை பேசும் பேச்சு தாங்க முடியாமல் கோபம் வந்தது. அதே சமயம் அதை வெளிப்படையாகப் பேசி தந்தையை கோபப்படுத்த வேண்டாம் என்று போராடி அமைதி காத்தாள்.​

அதன் பிறகு அதிக நாட்கள் காத்திருக்காமல் அவளுடைய விதி வேலையைக் காட்ட ஆரம்பித்தது. தெய்வாவின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மருத்துவம் படிக்க போதுமானதாக இல்லை.​

கிட்டத்தட்ட ஊரை எதிர்த்து மகளை வெகுதொலைவு அனுப்பி படிக்க வைத்த மலையரசனுக்கு முகத்தில் கருமை படர்ந்த உணர்வு. யாரைப் பார்த்தாலும், “உன் பொண்ணுக்கு இருக்கும் அறிவுக்கு நம்ம ஊர் பள்ளியில் படித்திருந்தாலே மருத்துவ மதிப்பெண் எடுத்திருப்பாள். ஆனால், உன் பேராசையால் பார் என்ன நடந்திருக்கிறது“ என்று நடந்ததற்கு மலையரசன் மட்டுமே காரணம் என்பது போல் பேச அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தெய்வாவிற்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை, தன் நிலையை எடுத்துச் சொன்னால் சாக்குபோக்கு போல் தான் தெரியும் என்பதால் அமைதி காத்தாள். அந்த அமைதி பெற்றவருக்குத் திமிராகத் தெரிந்தது தான் அவள் பரிதாபம்.​

இப்படியான சமயத்தில் தேறமாட்டான் என்று நினைத்த மகன், என்சிசியில் சேர்ந்து அதில் சிறந்து விளங்கி பரிசு வாங்குவது, படிக்கும் போதே பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்தது என நல்ல விஷயங்கள் தொடர்ச்சியாக செய்து வந்ததால், மலையரசனின் நல்ல எண்ணங்கள் மகன் பக்கம் திரும்பியது.​

ஆயிரம் தான் இருந்தாலும் மகன் தானே இறுதி வரை தன்னோடு வரப் போகிறவன் என்ற விதை அவர் மனிதில் விழுந்தது அன்றைய நாளில் தான் இருக்கும் என்பது தெய்வாவின் எண்ணம்.​

அதற்காக அப்பொழுதும் தெய்வாவை முழுவதுமாக வெறுக்கவில்லை அவர். முன்பைப் போல் பலரும் மகளை அருகிலேயே நல்ல கல்லூரியில் சேர்த்துவிடும் படி அறிவுரை சொல்ல, வெற்றி கூட தெய்வாவின் மதிப்பெண்ணிற்கு அவன் படிக்கும் கல்லூரியிலேயே கட்டணம் இல்லாமல் இடம் கிடைக்கும் என்றான்.​

ஆனால், தெய்வாவை மருத்துவம் படிக்க வைக்கலாம் என்று சொன்ன தன்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன் கொடுத்த யோசனையின் பேரில் பொறியியல் படிப்பை மகளை படிக்க வைக்க முடிவெடுத்தார் மலையரசன். தன் பேச்சை மீறி மீண்டும் தங்கை பக்கம் தந்தை நின்றுவிட்டாரே என்ற கடுப்பு வெற்றிக்கு உள்ளுக்குள் இருந்த துவேசத்தை அதிகரித்து விட்டது போலும்.​

மருத்துவம் படிக்கும் அளவு மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும் மற்றபடி நல்ல மதிப்பெண் தான் பெற்றிருந்தாள் தெய்வா. அதனால் நல்ல பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது.​

இருபாலர் படிக்கும் கல்லூரி அதுவும் சென்னையில் என்னும் போது வெளிப்படையாகவே எதிர்த்தான் வெற்றி. ஆனால் மலையரசன் மகளை நம்பி அனுப்பி வைத்தார்.​

சமீப காலமாக தந்தைக்கு தன் மேல் ஏற்பட்டு இருக்கும் மனக்கசப்பை எப்படியாவது நீக்கிவிடவேண்டும் என்ற துடிப்பில் அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி படிப்பதற்காக சென்னை சென்றாள் தெய்வா. அந்த நான்கு ஆண்டுகள் அவள் வாழ்வில் சொர்க்கத்தைப் போன்றது.​

தமிழ்வழிக் கல்வியில் இருந்து முற்றும் முழுதாக ஆங்கிலத்துக்கு மாறியதால் முதல் ஆறு மாதம் பயங்கரமாக துவண்டு போனாள். ஆனால் விடாப்பிடியாகப் போராடி ஓரளவு சமாளிக்க ஆரம்பித்தாள்.​

படிப்போடு சேர்த்து உடன் வசிக்கும் தோழிகள் அவர்கள் குடும்பப் பழக்க வழக்கங்கள் என பலவற்றைத் தெரிந்து கொண்டு அலசி ஆராய்ந்து எதுசரி எது தவறு என்று புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொண்டாள்.​

இப்போது தெய்வா என்பவள் அவள் ஊரில் இருந்த, புத்தகத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத அப்பாவி அல்ல. ஒரு நபரிடம் பேசுகிறாள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஓரளவு நன்றாகவே கணிக்க கற்றுக்கொண்டாள்.​

நான்கு ஆண்டுகள் மகிழ்ந்தாய் அல்லவா இனி உனக்கு ஏழரை தான் என்று ஆரம்பித்தது அவளுடைய ஜென்மசனி. கேம்ப்பஸ் இன்டர்வியூ நடக்கும் நேரத்தில் அவளுடைய கல்லூரி சேர்மன் இறந்துவிட, அவரின் பிள்ளைகளுக்கு நடுவில் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டு அதில் தெய்வாவின் கல்லூரியைக் கண்டுகொள்ளாமல் போக, அந்த வருடம் கேம்ப்பஸ் இன்டர்வியூ இல்லாமல் மாணவர்கள் வெளியேற வேண்டிய சூழல் உண்டானது.​

வெளியே தங்கி வேலை தேடிய இரண்டு மாதங்கள் விடுதிக்கு பணம் கட்டிய மலையரசன் அதற்குப் பிறகு கட்ட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து அவளை ஊருக்கு வரவழைத்தார். சரியாக அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட கிட்டத்தட்ட ஒருவருடங்கள் அப்படியே கழிந்து போனது.​

வேலை கிடைக்காமல் வீடு வந்ததில் இருந்தே தெய்வாவின் மீது மலையரசனுக்கு இருந்த மனவருத்தம், ஊரடங்கில் பலர் வீட்டில் இருந்து வேலை செய்ய, தன் மகள் மட்டும் சும்மா இருக்கிறாளே. அதுவும் அத்தனை இலட்சம் செலவு செய்து படிக்க வைத்து வீணாகிப் போனாளே என்ற கடுப்பை வெறுப்பாகக் காட்ட ஆரம்பித்தார்.​

பள்ளிப் படிப்புக்காவும் கல்லூரிக்காகவும் அதிகபட்சம் ஐந்து இலட்சம் செலவு செய்திருப்பார். ஆனால் அவருக்கு இருந்த மனவருத்தத்தை வட்டியாக சேர்த்து உன்னால் எனக்கு பதினைந்து இலட்ச ரூபாய் நஷ்டம். அந்த பணத்திற்கு ஒரு இடம் வாங்கிப் போட்டு இருந்தால் இந்நேரம் அதுவாவது இலாபம் கொடுத்திருக்கும், உன்னால் எப்போதும் எனக்கு நஷ்டம் மட்டுமே என்று தினமும் குத்திக்காட்ட ஆரம்பித்தார்.​

தன் முன் நிற்பவள் பழைய அப்பாவி தெய்வா இல்லை, மாறாக நாலும் தெரிந்து கொண்டு புதிதாக உறுமாறி இருப்பவள் என்பது புரியாமல் மலையரசன் கண்டபடி பேச, தெய்வாவும் பயத்தை உதறி திருப்பி பேச ஆரம்பித்தாள்.​

படித்த படிப்பு மற்றும் பழகிய நண்பர்கள் மூலம் பெற்ற அனுபவங்கள் வாயிலாக தன் வீட்டில் நடப்பது தவறு என்று புரிந்து கொண்டு அவ்வப் போது தன் உரிமைக்காக குரல் கொடுத்து திட்டு வாங்குவதை கல்லூரி முடித்து திரும்பிய காலகட்டத்தில் நிறையவே செய்தாள் தெய்வா.​

தனக்கு தான் தான் பேச வேண்டும், ஒவ்வொரு முறையும் யாரேனும் வந்து தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்கக்கூடாது என்று தான் கற்றிருந்த பாடத்தை நடைமுறைப் படுத்தினாள். அதனால் தந்தையின் வெறுப்பு இன்னும் இன்னும் அதிகமானதை அவள் அறியவில்லை.​

சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் இவளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைத்தது தவறாகிப் போனது. அதனால் தான் மகனே தன்னை எதிர்த்துப் பேச பயம் கொள்ளும் போது, இவள் இப்படியெல்லாம் செய்கிறாள் என்று நினைக்க ஆரம்பித்து, அடுத்தடுத்த சம்பவங்களால் தானே அதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் செய்தார் மலையரசன். ஆனால் தன்னிடம் இருக்கும் திறமை, ஆத்திரம், அகம்பாவம், கோபம் அனைத்தும் தன் மகளிடமும் இருக்கும் என்பதை அவர் மறந்துவிட்டார்.​

ஐடி உலகத்துக்குள் நுழைய விருப்பம் இல்லாமல் வங்கிப்பணிக்காக முயற்சி செய்ய நினைத்திருந்தாள் தெய்வா. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் அதற்கான பயிற்சியில் சேர்வதைப் பற்றி தந்தையிடம் பேச, உனக்காக இனி ஒரு ரூபாய் கூட என்னால் செலவு செய்ய முடியாது, படிக்க வைத்த செலவையெல்லாம் ரோட்டில் குப்பையோடு குப்பையாக போட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால், இதற்கு மேல் என்னால் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தவர் தான் மகனுக்கு முப்பது இலட்ச ரூபாய் செலவு செய்து வீடு கட்டிக் கொடுத்தார்.​

தன்னை, தான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட தெய்வா, தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான முயற்சியைத் தொடங்கினாள். அதுவும் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் சமயத்தில் எங்கும் செல்ல வேண்டாம் என்ற தந்தையின் பேச்சை மீறி தான் சென்றிருந்தாள்.​

அந்தக் காலகட்டத்தில் தான் வெற்றியின் திருமணம் நடந்தது. அதன்பிறகு மகள் இருக்கும் போது எதற்காக மகனுக்கு திருமணம் செய்து வைத்தாய் என்ற கேள்விகள் செல்லும் இடத்தில் எல்லாம் மலையரசனைத் தொடர, வேறு வழி இல்லாமல் தீவிரமாக தெய்வாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.​

பெண்பார்க்கும் படலத்திற்காக மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வரத் துவங்கும் போதே அதை இதை பேசி, கத்தி அவளை வேலையை விட்டு வரச்சொன்னவரும் அவர் தான், வேலைக்குச் செல்லும் மருமகள் தான் வேண்டும் என்று, அவளின் உடல் எடையைச் சொல்லி மழுப்ப, விருப்பம் இல்லாமல் சில மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் இப்படியொரு காரணத்தை சொன்ன போது, உன்னை மாதிரி என்ஜினியரிங் படித்தவர்கள் எல்லோரும் வீட்டில் இருந்தபடியே இலட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும் போது, நீ மட்டும் என் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடுகிறாயே என்று கடுமையாக சாடவும் செய்தார்.​

அதற்கு சூடாகப் பதில் சொல்லப் போனவளை அதட்டிய தாய் தான், இதுவரை நீ எப்படி வேண்டுமானாலும் பேசி இருக்கலாம், ஆனால் உனக்கான மாப்பிள்ளை அவர்கள் தான் பார்க்க வேண்டும் என்னும் போது நீ கொஞ்சம் அமைதியாக இருப்பது தான் நல்லது. மீறி ஏதாவது பேசினால் தன்னை எதிர்த்துப் பேசியவளுக்கு இந்த இடம் போதும் என்று கிடைத்த இடத்தில் உன்னைத் தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி பெரும்பாலும் அவள் வாயைக் கட்டிப்போட்டார். எந்த நேரத்தில் சொன்னாரோ கடைசியில் அவர் சொன்னது தான் நடந்தது.​

தன் சொந்த வேலைகளுக்கு நடுவில் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை அதிகப்படி தொந்தரவாக நினைத்த அண்ணன், தாங்கள் கொடுப்பதாக சொன்ன நகை பணத்திற்கு சம்மதித்து தங்கையை மணந்து கொள்கிறேன் என்ற முதல் மாப்பிள்ளையான ரகுவோடு தங்கையைக் கேளாமலே அவள் திருமணத்தை தீர்மானித்தான்.​

எங்கே அவள் மறுத்து அதனால் மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமோ என்று நினைத்து பயந்தான் போலும். ஆனால் தன்னுடைய இந்த அலட்சியம் தங்கையின் வாழ்வைப் பாதித்துவிடக் கூடாதே என்ற சின்ன பயம் கூட வெற்றியிடத்தில் இல்லாமல் போனது தெய்வானையின் துரதிஷ்டமே.​

அவளை, அவளுடைய திருமணத்தை பொறுப்பாக நினைக்காமல், கடமையாகத் தான் நினைத்தனர் அவள் வீட்டு ஆண்கள். தன் கடமை முடிந்தால் போதும் என்ற நினைப்பில், முதலில் தந்தை அவளை அண்ணனிடம் கைகழுவினார். அடுத்ததாக அண்ணன் அவளை ரகுவிடம் கைகழுவினான்.​

தந்தை, தமையன் என்று நம்பி அவர்களின் இழுப்பிற்கு எல்லாம் ஆடிய படித்த முட்டாள் தெய்வா, தன்னுடைய முட்டாள் தனத்திற்கு மிகப்பெரிய பரிசை ரகுவின் மூலமாகத் தானே தேடிக்கொண்டாள்.​

பெண் பார்த்துச் சென்ற அடுத்த நாளே சம்மதம் என்று மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் சொன்னது தான் தாமதம், அடுத்தடுத்த வேலைகள் யாவும் துரிதமாக நடக்க ஆரம்பித்தது தெய்வாவின் வீட்டில்.​

சில விளையாட்டுகளில் உயிரைப் பணயம் வைப்பது போன்று இருக்கும். அங்கே ஒரு முறை இறந்து விட்டால் அத்துடன் அந்த விளையாட்டு முடிந்துவிடாது. அந்த லெவலை முடிப்பதற்காக அதிகபட்சமாக மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்படியாக தெய்வாவிற்கும் அவள் வணங்கும் தெய்வம், நடக்க இருக்கும் திருமணத்தில் இருந்து தப்பிக்க மூன்று வாய்ப்புகள் கொடுத்ததோ.​

முதலாவதாக அவளுடைய வீட்டில் இருக்கும் பசுமாடு தன்னால் குறைப்பிரவத்தில் கன்றை ஈன்று அது அடுத்த சில நிமிடங்களில் இறந்தும் போனது. இத்தனை வருடத்தில் அவர்களின் வீட்டில் நடந்திடாத சம்பவம் அது.​

இரண்டாவது முந்தைய நாள் மாலை வரை நன்றாகப் பூத்துக்கொண்டிருந்த மல்லிச்செடி ஒன்று அடுத்த நாள் காலையில் காரண காரியம் இன்றி காய்ந்து போய் இருந்தது.​

கடைசியாக நிச்சயத்திற்கு முதல் நாள் பகல் முழுவதும் மின்சாரம் மீண்டும் மீண்டும் ட்ரிகர் ஆகிக்கொண்டே இருந்தது. எலக்ட்ரீயசனால் கூட சரியான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதெல்லாம் சாதாரண நிகழ்வுகள் என்று நினைத்தால் சாதாரணம் தான். அதுவே சகுணம் என்று நினைத்தால் அபசகுணமே.​

தெய்வாவிற்கு மற்ற இரண்டில் பெரிதாக நம்பிக்கையில்லை என்றாலும், கன்று பிறந்து இறந்தது அவளுக்கும் மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. இத்தனை போராட்டத்திற்குப் பிறகு நடந்தது தான் ரகுவுடனான அவளுடைய நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம்.​

நிச்சயத்திற்குப் பிறகு போனில் பேசிக்கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் அதிசயத்தில் அதிசயமாக அவள் தான் அதிகம் பேச வேண்டியது இருந்தது. அவளைப் பேச விட்டு அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் ரகு. அவளைப் பற்றிப் பலதும் அவன் தெரிந்து கொள்ள, அவனைப் பற்றி அவளுக்கு எதுவும் பெரிதாக அவன் தெரிவிக்கவில்லை. அவளாகக் கேட்டதற்கு கூட ஒற்றை வரியில் தான் பதில் கிடைத்தது.​

ஒருவேளை குணமே இது தானோ என்று அவள் நினைத்திருக்க, வாயைத் திறந்தால் மறைத்து வைத்திருக்கும் உண்மைகள் யாவும் தன்னை மீறி வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருந்திருக்கிறான் என்பது பலநாள் கழிந்த பிறகு தான் தெரிந்தது பெண்ணவளுக்கு.​

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ எவன்“

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு யாரும் பெற முடியாது என்பது இல்வாழ்க்கை பற்றிய வள்ளுவனின் விதி.​

ஆனால், பொய்யைக் கொண்டு வாழ்வைத் துவங்கி காலப்போக்கில் நல்லபடியாக மாற்றிக் கொள்ளலாம் என்று வள்ளுவனின் விதியையே மாற்ற நினைத்த ரகுவின் எண்ணங்களால் பிழையானது என்னவோ தெய்வாவின் தலைவிதி தான்.​

 
Last edited:

NNK-27

Moderator

பிழையான விதி 3​

செய்முறை ஒன்று பிழையானால், அதைக் கொண்டு உருவாக்கப்பட இருந்த பொருளின் மதிப்பைப் பொறுத்து நஷ்டக் கணக்கீடு இருக்கும். ஆனால், இயற்பியல் விதியோ இல்லை இயற்கை விதியோ பிழையாகும் போது, ஏற்படும் நஷ்டம் கணக்கில் அடங்காததாக இருக்கும். அப்படியான இழப்பு தான் தெய்வாவின் வாழ்விலும் நிகழ இருந்தது.​

சென்னையில் தெய்வா மற்றும் ரகு இருவருக்கும் தனிக்குடித்தனம் என்று முடிவு செய்யப் பட்டிருந்தது ரகுவின் வீட்டினரால். அதுவும் அவர்கள் இப்போது இருக்கும் வீட்டிற்கு மிகவும் அருகிலேயே. காரணம் கேட்ட போது, புதிதாகத் திருமணம் ஆனவர்கள் சிறிது காலம் தனியாக வசிப்பது நல்லது என்று தன் தாய் சொன்னதாகச் சொல்லி தெய்வாவின் குடும்பத்தினருக்கு ஒட்டு மொத்தமாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தான் ரகு.​

அதனால் அந்த வீட்டு வேலை முடியும் வரை புதுமணத் தம்பதிகள் பெண் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லிச் சென்றிருந்தார் ரகுவின் அம்மா மயில். அதனால் முதல் நான்கு நாட்கள் கணவனோடு தன் வீட்டில் தான் இருந்தாள் தெய்வா.​

இதுவரை தான் மட்டுமே இருந்த தனிமை நேரங்களின் சுகம் இனிமேல் வாய்ப்பில்லை என்பது புரிந்தாலும், இதுதான் வாழ்வு, தனியே வாழ்ந்து தனியே சாவதற்காக இயற்கை தன்னைப் படைக்கவில்லை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டிருந்தாள் அந்த பக்குவமடைந்த பெண்.​

சொந்தங்கள் எதுவும் சரியாக அமையாவிட்டாலும், வாழ்க்கைத் துணை எனும் ஒற்றை சொந்தம் சரியாக அமைந்து விட்டால் போதும், உறவுகளோடு சேர்த்து உலகையும் வென்று விடலாம் என்பது அறநீதி.​

தன் வீட்டில் இருந்த வரை, ரகு நடந்து கொண்ட விதத்தை வைத்து, தன் வாழ்வு சிறந்துவிடும். தன் தந்தையைப் போல், தமையனைப் போல் குரலுயர்த்திப் பேசாத கணவன் தனக்குக் கிடைத்திருக்கிறான் என்று பெருமைப் பட்டாள் தெய்வா. இருவரின் மனம் பக்குவமடையும் வரை தாம்பத்யம் வேண்டாம் என்று சொன்ன போது, கதைகளில் வரும் கதாநாயகன் போலவே அவள் கண்களுக்குத் தெரிந்தான் ரகு.​

கோபத்தில் குரலுயர்த்திப் பேசுபவர்கள் அனைவரும் கெட்டவர்களும் இல்லை, அதே சமயத்தில் குரலில் தேன் தடவிப் பேசும் அனைவரும் நல்லவர்களும் இல்லை என்பது புரியவில்லை அந்த சின்னப் பெண்ணிற்கு.​

மாமியார் என்று வந்தவரைப் பார்க்கும் போதே தெரிந்தது, அவர் ஆதிக்கவாதி என்பதை. ஆனால் தன் தந்தை தமையனையே இத்தனை வருடங்களாகச் சமாளித்த தன்னால் மாமியாரைச் சமாளிக்க முடியாதா என்று பெருமையாக நினைத்து தவறு செய்தாள் தெய்வா.​

தன்னிலும் கேடு நாட்டில் கோடி என்று சொல்வது போல், தன் தந்தை தமையனைத் தவிர்த்து மற்ற ஆதிக்கவாதிகள் அனைவரும் பழகுவதற்கு அத்தனை கடினமானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது அவள் எண்ணம். இத்தனை தீவிரமாக அவள் நம்பியதற்குக் காரணம், தான் ஒன்றும் வாய் இல்லாத பிள்ளை இல்லை என்று தன்மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே.​

சரியாக பாயிண்ட் பிடித்துப் பேசி பல சமயம் தன் தந்தையை வாயடைக்க வைத்திருக்கிறாள் தெய்வா. அதற்குத் தனியாக வாயாடி மற்றும் படித்த திமிர் என்ற இணைப்பெயர்கள் கிடைக்கும் என்றாலும் தெய்வா அதைப் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை.​

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்னும் விதத்தில் தந்தை தன் விஷயத்தில் தவறு செய்தால் அதை எதிர்த்து நிச்சயம் குரல் கொடுப்பாள். அப்படி மாமியாரையும் மடக்கிவிடலாம் என்பது அவளது எண்ணமாக இருந்தது.​

ரகு அம்மா பிள்ளை என்பதை ஒரே நாளில் கண்டுகொண்டாள். காரணம் அவனை தெய்வாவின் வீட்டில் விட்டுவிட்டு சென்னை செல்லும் போது, செலவுக்குப் பணம் வைத்துக்கொள் மகனே என்று தன் கையில் இருந்ததைத் தான் கொடுத்துவிட்டுச் சென்றார் மயில். இதை நினைத்து தெய்வாவிற்குப் பயம் எல்லாம் இல்லை.​

மாறாக மொத்த சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு தேவைக்கு வாங்கிக்கொள்வார் போல. இந்தக் காலத்தில் இப்படியும் மனிதனா என்று கணவனை நினைத்து பெருமை தான் பட்டாள்.​

மகன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறான் என்பது கூடத் தெரியாத தன் தாயை நினைத்து அவளுக்கு கவலை வந்தது. கணவனும் சரியில்லை, மகனும் சரியில்லை. இத்தனை நாளாக தான் பார்த்துக்கொண்டதன் பலனாய் தாய் பெரிதும் பாதிப்பில்லாமல் இருந்தார்.​

இனி இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு என்ன செய்யப்போகிறாரோ என்று நினைத்து வருத்தம் வந்த அதே வேளை, தாய்க்கு வந்த நிலை தனக்கு வராது என்று உறுதியாக நம்பினாள் பெண்.​

காரணம் திருமணத்திற்குப் பிறகு தெய்வாவும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்பது மயில் வைத்த ஒரு முக்கியமான நிபந்தனை. ஒருவரின் சம்பளத்தை வைத்து சென்னையில் காலம் ஓட்ட முடியாது என்று அவர் சொன்னதும் சரியாகத் தான் பட்டது அவளுக்கு.​

இயல்பிலேயே தெய்வா கொஞ்சம் அதிக ரோஷக்காரி, ஒருமுறை அதிகமாக பசிக்கிறது என்று முதல் ஆளாக சாப்பிட அமர்ந்தாள் அவள். வேலைக்குச் செல்லும் மகன் இன்னும் சாப்பிடாமல் இருக்க, தானும் அப்போது தான் காலைக்கான இன்சுலின் ஊசியை எடுத்துக் கொண்டிருக்க, முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு சாப்பிட அமர்ந்தவளைப் பார்த்ததும் என்ன கோபம் வந்ததோ, “என்ன சாதித்து கிழித்தாய் என்பதற்காக ஆளுக்கு முன்னால் சாப்பிடுகிறாய்“ என்ற மலையரசனின் வார்த்தைகள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திற்று.​

அதற்குப் பிறகு அந்த வீட்டில் அவளுடைய காலை உணவு அனைவரும் சாப்பிட்டு முடித்து வெகு நேரம் கழித்து பதினோறு மணிக்கு தான் நடக்கும். அதைக் காரணமாய் காட்டி மதிய உணவு எடுத்துக்கொள்ள மாட்டாள்.​

இரவு உணவு தயாரிப்பு முழுக்க அவளுடையது என்பதால் அப்பொழுது தான் சற்று வயிறு நிறைய உண்பாள். திருமணம் முடியும் வரை இதையே தொடர்ந்தாள் என்பது தான் அங்கே விநோதம். நடுவில் சிலமுறை தாய் கவனித்து திட்டும் போது, சாப்பிடுகிறேன் என்று பெயர் செய்து கொஞ்சமாக கொறித்துவிட்டு அமைதியாக இருந்து கொள்வாள்.​

தன் வார்த்தைகளின் வீரியம் தான் மகளின் செய்கைகளுக்குக் காரணம் என்பது தந்தைக்குத் தெரியுமா? என்பதைப் பற்றியெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. சரியோ தவறோ ஒரே செயலுக்காக இருமுறை திட்டு வாங்குவதை தெய்வா என்றும் நடக்கவிட்டதில்லை.​

அவளுடைய இந்தச் செயலால் தன் சுயமரியாதை காக்கப்பட்டதா என்று கேட்டால் அவளுக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால், இப்படிச் செய்வதன் வாயிலாக அவள் தன்னைத் தானே தாழ்வாக எண்ணிக்கொள்ள மாட்டாள்.​

என்று தந்தை படிப்பிற்காக செலவு செய்ததை சொல்லிக்காட்ட ஆரம்பித்தாரோ அன்றே அவரிடம் தன் சொந்த செலவுக்கு கூட பணம் வாங்குவதை நிறுத்தி இருந்தாள். ஆரம்பத்தில் பகுதி நேர வேலையாக சிலதைச் செய்து சமாளித்து வந்தவள், வங்கிப்பணியில் இருந்த போது நன்றாகவே சம்பாதித்தாள்.​

அவள் சேமித்து வைத்திருந்த கையிருப்பு, திருமணத்திற்காக அவள் காத்திருந்த காலத்தில் தேவைப்பட்ட அவளுடைய சொற்ப தேவைகளுக்கு மிக அதிகமாகவே இருந்தது.​

தான் எதிர்த்து பேசுவது பிடிக்காமல் போனாலும் மகள் என்ற அன்பு நிச்சயம் தன் தந்தையிடத்தில் இருக்கும் என்று நினைத்தது தான் அவள் செய்த பெரிய பிழை. அந்தப் பிழைக்கு தண்டனையாக தான், தன் வாழ்வை ஒரு கயவனை நம்பி அடமானம் வைக்க வேண்டிய நிலை வந்தது அவளுக்கு.​

நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால் என்னவோ சேமிப்பு போக தான் செலவு என்ற கொள்கை அவள் மனதில் ஆழமாக பதிந்து போய் இருந்தது. கணவனும் தன்னைப் போலவே பண விஷயத்தில் அக்கறையாக இருக்கிறான், அதனால் தான் சம்பளப் பணத்தை தாயிடம் கொடுக்கிறான்.​

தனிக்குடித்தனத்திற்குப் பிறகு சம்பளத்தை தன்னிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பதிலாக வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் அவனே பார்த்துக் கொள்ளட்டும். அது தான் குடும்பத்தலைவர் என்ற பெருமையை அவனுக்கு கொடுக்கும் என்று முடிவு செய்திருந்தாள். அவள் எந்தளவு சுயமரியாதைக்காரியோ அதே அளவு நேரம், காலம் புரிந்து பழகக்கூடியவளும் கூட, என்பதால் தன்னால் நல்லபடியாக குடும்பம் நடத்த முடியும் என்று நம்பினாள் பேதைப் பெண்.​

நான் உன்னை நம்பும் அளவுக்கு நீ எனக்கு என்ன செய்தாய் என்று காதலனையும், கணவனையும் பார்த்துக் கேட்கும் சில பெண்கள் மத்தியில், தனக்கு ரகுவின் மீது இத்தனை நம்பிக்கை எப்படி வந்தது, அவனைப் பற்றி முழுதாய் தெரியாமல் இவ்வளவு நம்பிக்கை வைப்பது சரியா தவறா என்று எதையுமே யோசிக்கவில்லை அவள்.​

பொதுவில் பெரியவர்கள் பார்த்து வைத்து செய்யப்படும் திருமணம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் ஒருவர் மீது இன்னொருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையால் மட்டும் தான் நல்லபடியாக நகர்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.​

தன் அப்பா பார்த்து வைத்த மாப்பிள்ளை, தன் அம்மா பார்த்த பெண் என்று பெற்றோர்களின் மீது இருக்கும் நம்பிக்கை தான் துணையின் மீதுள்ள ஆரம்பகட்ட நம்பிக்கையாக மாற்றம் அடையும். அதன் பிறகு தான் துணையின் நடவடிக்கையைப் பொறுத்து அந்த நம்பிக்கை அதிகரிக்கவோ இல்லை குறையவோ செய்யும்.​

அண்ணன் ஆதிக்கவாதி, கோபக்காரன் என்ற ஆயிரம் பட்டம் சூட்டினாலும், அவனைப் போன்ற நேர்மையாளனையோ, இல்லை ஆடம்பரமும் இல்லாமல் கஞ்சத்தனமும் இல்லாமல் சிக்கனமாக செலவழிக்கும் பாங்கையோ இன்னொரு மனிதரிடம் தெய்வா கண்டிருந்தாள் இல்லை. அவன் தேர்வு அவனைப் போன்று இருக்கும் என்று தமையன் வெற்றியின் மீது தங்கைக்கு இருந்த நம்பிக்கை தான் ரகுவின் மீதான நம்பிக்கையாக மாற்றம் அடைந்திருந்தது.​

ஆனால் அது தான் கணவனை நினைத்து அவள் பெருமைப்படப் போகும் இறுதிநொடி என்பதோ, இனிமேல் அவள் அதிகமாகக் கவலை கொள்ளப் போவது தன் மாமியாரால் அல்ல, கணவன் என்று பெயர் கொண்டு உடன் இருக்கும் ரகுவால் தான் என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை.​

ரகுவின் வீட்டுக்கு, அதாவது அதுநாள் வரை ரகு தன் பெற்றோருடன் வாழ்ந்த வீட்டிற்கு சுற்றத்தினருடன் வந்து சேர்ந்தாள் தெய்வா. வீட்டை சுற்றிப் பார்த்த முதல் நொடியே அவளுக்கு அதிர்ச்சி தான்.​

அவளுக்கு மட்டும் அல்ல, அவளை புகுந்த வீட்டில் கொண்டு வந்து விடுவதற்காக வந்திருந்த அவள் பக்க சொந்தங்களுக்கும் அது அதிர்ச்சியே. காரணம் வீடு மிகவும் சின்னது என்பதோடு, ரகு அவளிடம் சொல்லி இருந்தது போல் சிறிதுகாலம் கழித்து, அவளும் அவனுமாக இந்த வீட்டிற்குத் திரும்பி அனைவரும் ஒன்றாக வாழ்வது என்பது நடவாத காரியம் என்று பார்வையிலே புரிந்தது.​

மூன்று பேர் ஒன்றாக நின்றால் மூச்சடைக்கும் அளவுக்கு சின்னதாய் ஒரு அறை, அதைவிட சற்று பெரிய ஹால். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நிற்க முடிகிற சமையலறை. ரகுவின் அண்ணன் ராஜின் அறை மேல் மாடியில் இருந்தது. வெற்றியைத் தவிர அனைவருக்கும் ஏமாற்றம் தான் எனினும், நடந்ததை மாற்ற முடியாது என்று அமைதியாகினர்.​

தானும் கூட, முதலில் தன் வீட்டையும் ரகுவின் வீட்டையும் நினைத்து வருந்திய தெய்வா, சில நொடிகளில் தெளிந்தாள். சொந்தமாக ஓட்டு வீடானாலும் சரிதான் என்று நினைத்திருந்தவள் அவள் என்பதால் வெகுவிரைவில் சகஜமானாள்.​

ராஜ் மனைவியின் உறவினர்களால் அந்த நிம்மதி அடுத்த சில நிமிடங்களில் பறிபோனது. காரணம் அந்த வீட்டின் மீது ரகுவிற்கு எந்த உரிமையும் கிடையாது என்பது அவர் மூலமாகத் தெரிய வந்தது. அந்த வீடு முழுக்க முழுக்க ராஜின் சுயசம்பாத்தியம். அதற்குமே இஎம்ஐ இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு மிச்சம் இருக்கிறது என்ற புதிய தகவல் கிடைக்க, அதைத் தொடர்ந்து தெய்வாவின் பெரியம்மா சற்றுப் போட்டு வாங்கியதில், முப்பது வயதாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சம்பாத்தியத்தில் ஒரு ஆக்டிவாவைத் தவிர ரகுவிற்கு பெரிதாக எதுவும் கிடையாது என்ற உண்மை தெரியவந்தது.​

எனில் தாங்கள் தற்காலிகமாக வசிக்கப் போகும் இடம் என்று ரகு சொன்ன வாடகை வீடு தான் இனித் தங்களின் நிரந்தர இருப்பிடமா? காலத்திற்கும் வாடகை வீட்டில் தான் வசிக்க வேண்டுமா என்ற தவிப்பு தெய்வாவை ஆட்கொண்டது.​

வீடில்லாத ஆண்கள் திருமணம் செய்யத் தகுதியில்லாதவர்கள் என்றோ, இல்லை வாடகை வீட்டில் வசிப்பது கௌரவக்குறைச்சல் என்றோ தெய்வா கருதியது இல்லை. அவள் அப்படியானவளும் அல்ல. ஆனால் வாடகை வீடு அவளுக்குப் பிடித்தம் இல்லாத ஒன்று.​

காரணம் அவளுடைய வீட்டிற்கு அருகே ஒரு பெரிய காலணி உண்டு. அவ்வப்போது அங்கே புது ஆட்கள் வருவரும் பழைய ஆட்கள் வெயியேறுவதும் நடந்து கொண்டே இருக்கும்.​

தாங்கள் சொந்த வீட்டில் நிம்மதியாக இருக்கும் போது, வருடத்திற்கு ஒருமுறை இப்படி பொருள்களை அள்ளிக்கொண்டுஅங்கும் இங்கும் செல்கிறார்களே என்று அந்தக் குடும்பத்தினர் மீது சிறுவயது தெய்வாவிற்கு பரிதாபம் தான் வரும்.​

அதோடு வீட்டு ஓனர் என்ற பெயரில், அந்தக் காலணியின் ஓனர் செய்யும் அட்டூளியங்களைப் பார்த்த பிறகு அவளுக்கு வாடகை வீடு என்றாலே பயம் தான். அந்த பயத்தின் தீவிரத்தில் தான் சொந்த வீடு உள்ள மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அவள் கேட்டது. அது இங்கே பொய்யாகிப் போனதில் அவளுக்கு சொல்ல முடியாத வருத்தம்.​

முதல் மருமகளின் உறவினர் இரண்டாவது மருமகளின் உறவினரிடம் வத்தி வைப்பதை தாமதமாகக் கண்டுபிடித்த மயில், ரகுவின் பெயரில் இருப்பதாக நாங்கள் சொன்ன வீடு எங்கள் சொந்த ஊரில் இருப்பது.​

அங்கே இப்போது வாடகைக்கு விட்டு இருக்கிறோம். குழந்தை என்று ஆன பின்பு, அந்த வீட்டை விற்று வரும் பணத்தோடு கூடுதலாக இவர்கள் இரண்டு பேரும் லோன் எடுத்தால் புதிய வீடு இதைவிடப் பெரிதாக தாராளமாக வாங்கிவிடலாம் என்று சொல்லி சமாளித்தார்.​

தெய்வாவிற்கு அது உண்மை போலவே தெரியவில்லை. அவளுக்கே தெரியும் போது இத்தனை வருட அனுபவம் பெற்ற அவளுடைய சொந்தங்களுக்குத் தெரியாதா என்ன? பொய் சொல்லித் திருமணம் முடித்திருக்கிறார்கள் என்று புரியவும் அனைவருக்கும் முகம் தொங்கிப் போனது. இதற்கெல்லாம் காரணனமான வெற்றியோ தங்கைக்கு சீர்வரிசை ஜாமான்கள் வாங்கி வருவதற்காக வெளியே சென்றுவிட்டான்.​

முதல் நாளே மனம் வருந்திவிடக் கூடாது, வாழ்வில் இன்னும் எத்தனையோ பார்க்க வேண்டும், இதற்கே சலிப்படைந்து விடக்கூடாது. ஒருவேளை மயில் சொன்ன சொந்தவீடு என்பது பொய்யாக இருந்தால் கூட, அவர் சொன்ன யோசனை நல்ல யோசனை.​

ஒன்றாக உழைத்து முன்னேறுவது கூட நல்லது தானே. என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு தெய்வா அந்தச் சின்ன அறையை விட்டு வெளியே வந்த வேளையில் அடுத்த குண்டை தயார் செய்திருந்தான் ரகு.​

தாயும் மகனும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். "நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல நீங்கள் தானே போட்டு விட்டீர்கள். இப்போது அது எங்கோ தொலைந்து போனதற்கு நான் என்ன செய்ய முடியும். என்னால் எல்லாம் எங்கேயும் போய் தேட முடியாது. உங்களுக்கு அது அத்தனை முக்கியம் என்றால் போய் நீங்களே தேடிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தான் ரகு.​

தெய்வா என்ன விஷயம் என்று கேட்கும் போது மயில் சொன்ன தகவலை விட, அதற்கு சற்று நேரம் முன்னர் ரகு காட்டிய அலட்சியம் தான் என்னவோ செய்தது அவளை. கல்யாணத்திற்காக தெய்வாவின் வீட்டில் போட்டு விட்டிருந்த ஒரு பவுன் மோதிரத்தை தொலைத்துவிட்டு, அதைத் தேடுவதற்காக வெயிலில் எல்லாம் தன்னால் அலைய முடியாது. போனால் போகட்டும் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் அவன்.​

கோடிகளில் புரளும் பணக்காரர்கள் கூட இத்தனை அஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள். அதோடு அந்த மோதிரம் பெண் வீட்டுப் பக்கம் போட்டது. அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது இருக்குமே என்ற சாதாரண யோசனை கூட இல்லாமல் இருக்கிறானே என்ற தவிப்பு வந்த போதும், கல்யாண டென்ஷன், பயணம் என்று அலைச்சல் அதிகம். அதை இப்படிக் காட்டுகிறார் போலும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள் தெய்வா.​

தவறு செய்துவிட்டோமோ, முன்னே பின்னே கல்யாணம் செய்து வைத்து, அனுபவம் இல்லாத வெற்றியிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கக்கூடாதோ என்ற நினைப்புடன், கொஞ்சம் கூட திருப்தி ஏற்படாத சின்ன மருமகன் வீட்டில் மகளை விட்டுவிட்டு கண்ணீருடன் கிளம்பிச் சென்றார் தெய்வாவின் அம்மா இலட்சுமி. கடமை முடிந்த சந்தோஷத்தில், பெருமையாக கிளம்பி ஊர் வந்து சேர்ந்தான் வெற்றி.​

அன்றைய இரவில், “எதற்காக சொந்த வீடு உங்களுக்கு இருப்பதாக பொய் சொன்னீர்கள். பொய்யை மூலதனமாக வைத்து தொடங்கும் உறவு நெடுநாள் நீடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா?“ என்று கணவனைக் கேட்டாள் தெய்வா.​

கணவன் என்ற பயம் இல்லாமல் முகத்திற்கு நேராக இப்படிக் கேட்பாள் என்று தெரியாத ரகுவோ, “எனில் நீ சொந்த வீட்டிற்காகவும், சொத்துக்காவும் தான் என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாயா? உங்களைப் போன்ற பெண்கள் யாவரும் ஏன் இப்படி பேராசைக்காரர்களாக இருக்கிறீர்கள்“ என்று பொதுவில் பேசி அவள் கவனத்தை சிதறடிக்கப் பார்த்தான்.​

“பெண்ணோ, ஆணோ திருமணத்திற்கென்று வரன் பார்க்கும் போது, நியாயமான எதையும் எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. சரிவரும், சரிவராது என்று சொல்லத் தான் எதிர் வரன்களுக்கு உரிமை இருக்கிறதே தவிர, அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பை குற்றம் சொல்லக்கூடிய உரிமை அவர்களுக்கு இல்லை“ என்று ரகுவின் முகத்துக்கு நேரே பதில் சொன்னாள் தெய்வா.​

அதை எதிர்த்து பதில் சொல்ல முடியாததால் அமைதியாக இருந்தான் ரகு. கணவனுக்குத் தெரியாமல் அவன் அம்மா அப்படி ஒரு பொய்யைச் சொல்லி இருக்க முடியாது. அவ்வளவு ஏன் சிறிது நாட்கள் மட்டும் தான் நம் தனிமை வாசம் என்று சொன்னவன் அவன் தானே. அது அவன் தன்னிடம் நேரடியாகச் சொன்ன பொய் தானே. பொய்யில் ஆரம்பித்த தன் வாழ்வு மெய்யாகுமா? இல்லை பொய்யாகியே போகுமா என்ற பயத்திலே அன்றைய இரவைக் கழித்தாள் பெண்.​

அடுத்தடுத்த நாட்களில் ரகுவைப் பற்றி மொத்தமாக தெரிந்துகொண்டாள் தெய்வா. பத்து நாள், பத்தே நாளில் கணவனுடன் சந்தோஷமாக வாழ்வது என்பது மிகப்பெரிய சவாலான காரியம் என்று புரிந்துகொண்டாள், ரகுவும் மயிலும் சேர்ந்து புரிய வைத்தார்கள் என்றே சொல்லலாம்.​

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

யாதொரு நபருக்கும் குற்றம் சிறிதும் இல்லாமல் முழு நன்மையை மட்டுமே ஒரு பொய் தெரிவிக்கும் என்றால் அது மெய்க்குச் சமம் என்கிற வள்ளுவன் விதியை, சரியாகப் புரிந்து கொண்டவர்களை விட தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தான் அதிகம். அப்படியானவர்களுள் ஒருவன் தான் ரகு.​

தெய்வாவிடம் தன்னைப் பற்றி அவன் சொன்ன எதுவுமே உண்மை கிடையாது. படித்த படிப்பில் ஆரம்பித்து, பார்க்கும் வேலை, வாங்கும் சம்பளம் என ஒவ்வொன்றும் பொய்யாகிப் போக, ஒற்றைப் பொய்க்கே ஒரு முழு இரவு உறக்கத்தை தொலைத்தவள், மொத்தமாக முழுப்பொய்யனுக்கு மனைவியாகிப் போனோம் என்பது புரியவும் தான், தன் தலையில் தானே அடித்து அழுதபடி ரகுவின் காலடியில் அமர்ந்திருக்கிறாள்.​
 
Last edited:

NNK-27

Moderator

பிழையான விதி 4​

“கல்யாணத்தில் முடியாத காதலைக் கூட தாங்கிக் கொள்ள முடியும், ஆனால் காதல் இல்லாத கல்யாணம் தான் சகித்துக் கொள்ள முடியாதது, சகித்துக்கொள்ள கூடாததும் கூட“ எங்கேயோ எப்போதோ படித்த வரிகள் தெய்வாவின் மனதிற்குள் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தன.​

தாய் மற்றும் உறவினர்கள் யாவும், நல்லபடியாக ஊருக்குச் சென்ற பின்பு, ரகுவின் வீட்டில் தெய்வாவின் தினசரி வாழ்க்கை ஆரம்பித்தது. பத்து நாள்கள் மட்டுமே கழிந்திருந்த நிலையில் தான் மேற்க்கண்ட வார்த்தைகள் அவள் தலையைச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பித்திருந்தன.​

அதற்குக் காரணம் ரகுவின் வீட்டில் தெய்வாவிற்கு கிடைத்த ஆச்சர்யங்கள் தான். ஒன்றல்ல இரண்டல்ல, நாளொரு வண்ணம் பொழுதொரு ஆச்சர்யங்கள் அவளை வந்து அடைந்து கொண்டே இருந்தது.​

அவற்றில் முதலாவது இரவு தூங்குவதற்கு மட்டும் அவர்களுக்குப் பார்த்து வைத்திருக்கும் தனி வீட்டிற்குச் சென்றால் போதும், மற்றபடி இருவரும் இங்கே தான் இருக்க வேண்டும், இங்கே தான் சாப்பிட வேண்டும் என்பது தான். அது தான் மயில் தன் சின்ன மருமகளுக்கு இட்ட முதல் கட்டளை.​

இது என்ன கொடுமையாக இருக்கிறது, சாப்பாட்டிற்காக வந்து செல்வது நன்றாக இருக்காதே என்று உள்ளுக்குள் தோன்றிய போதும், மகன் மொத்தமாக தனிக்குடித்தனத்தில் இருந்து விட்டால், கையை விட்டுச் சென்று விடுவானோ என்ற பயம் தான் இதற்குக் காரணம், என்பதைப் புரிந்து கொள்ள வெகுநேரம் பிடிக்கவில்லை தெய்வாவிற்கு.​

இந்த முடிவு தெய்வாவிற்குப் பிடிக்கவில்லை, அதோடு அந்த எண்ணத்திற்கு மறுப்பு சொல்லவும் அவளாக நினைக்கவில்லை. எப்படியும் இது சரிவராது என்பது விரைவில் அவருக்கே தெரிய வரும் என்று சற்று உறுதியாகவே நம்பினாள்.​

அதுவரை என்மகன் எனக்கு மட்டும் தான் என்ற மாமியாரின் முட்டாள் தனமான செயல்களை நினைத்து சிரித்துக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்தாள் தெய்வா. அவள் அப்படித் தான், முட்டாள்தனம் என்று தெரிந்தே செய்யும் ஆட்களைப் பார்த்து கோபப்படுவதை விட, பரிதாபம் தான் அதிகமாகப் படுவாள். அந்தப் பட்டியலில் தன் தந்தைக்குப் பிறகு மாமியாரும் இணைந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்து அப்போதைக்கு சமாதானமடைந்தாள் பெண்.​

மயிலைப் பொறுத்த வரை மூத்த மருமகள் விஷயத்திலும் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறார். ராஜின் மனைவி நயனா வெளியூரில் பெரிய வேலை ஒன்றில் இருக்க, மாற்றல் வாங்கிக்கொண்டு இங்கே வர முடியாத சூழ்நிலை.​

ஆனால் ராஜ் நினைத்தால் மனைவி இருக்கும் ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு செல்ல முடியும். அதில் ராஜ்க்கும் ஆசையே, ஆனால் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது மயில் தான்.​

ராஜ் அங்கு செல்லாமல் இருந்தால் தான், நயனாவுக்கு சீக்கிரத்தில் இங்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வரும். இல்லாவிட்டால் கணவனோடு அதே ஊரில் தனியாக வாழ வேண்டும் என்ற பேராசை வந்துவிடும் என்று பயந்து முடிந்த வரை முட்டுக்கட்டை போட்டு வைத்திருக்கிறார்.​

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் கொரோனா ஊரடங்கு காலத்தில், ராஜிற்கு வீட்டில் இருந்து தான் வேலை. “கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் வரை இந்த ஊரடங்கு காலம் நீடிக்கும் போல் தெரிகிறது, அதனால் மருமகன் தங்கள் மகள் வேலை செய்யும் ஊரில் இந்தக் காலகட்டம் மட்டும் இருக்கட்டும்“ என்று நயனாவின் பெற்றோர்கள் சொன்ன போது, சரிசரியென்று தலையாட்டிய மயில், ராஜ் கிளம்பும் நாளன்று உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, அதையும் இதையும் பேசி அந்த எண்ணத்தை முற்றிலுமாக மகனை மறக்க வைத்தார். தாய் வேண்டுமென்று தான் நாடகம் ஆடுகிறார் என்று தெரிந்தாலும் பொறுத்துப் போனான் அவன்.​

வார விடுமுறை நாட்களில் ராஜின் மனைவி இங்கு வந்து செல்வது வாடிக்கையாக இருந்தது. இப்படியான அவர்கள் வாழ்வில் குழந்தை இல்லை என்பது மயிலுக்குப் பெரும் கவலை. அதற்காக மூத்த மருமகள் நயனாவை ஜாடை மாடையாக நிறையப் பேசி இருக்கிறார். இத்தனை சொன்னவர், ஒருநாளும் சும்மாப் பேச்சுக்குக் கூட வேலையை விட்டு வந்துவிடு, மகன் உன்னைப் பார்த்துக் கொள்வான் என்று சொன்னதில்லை.​

நிஜத்தில் மனைவியை ராணியைப் போல் பார்த்துக் கொள்ளும் அளவு ராஜ் சம்பாதிக்கிறான் என்றாலும் இப்படி ஒரு யோசனையை பெயரளவில் கூட அந்த தம்பதியிடத்தில் வளர விட்டதில்லை மயில். அதற்கு முக்கியமான காரணம் இரண்டு. முதல் ஒன்று தன் மருமகள் இத்தனை பெரிய பதவியில் இருக்கிறாள் என்று அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கும் பெருமை தொடர வேண்டும்.​

இரண்டாவது மகனும், மகளும் அதிக நேரம் உடன் இருந்தால் மகன் மருமகளின் முந்தானையில் சிக்கிக் கொள்வான் என்ற பொல்லாப் பயம். தான் உயிரோடு இருக்கும் வரை, ராஜ் தன்னுடைய மகனாக இருப்பதைத் தான் முதல் பிரையாரிட்டியாக நினைக்க வேண்டும் என்பதற்காக அவர் ராஜைப் பார்த்துக் கொள்ளும் விதத்திற்குப் பெயர் வைக்க வேண்டும் என்றால், சுருக்காக இராஜஉபச்சாரம் என்று சொல்லாம். இந்த உபச்சாரம் ரகுவிற்குக் கிடைக்குமா என்றால் கட்டாயம் இல்லை.​

விடுமுறையில் மூத்தமருமகள் வீட்டிற்கு வரும் போது கூட, மகனோடு அறையில் அடைந்தே கிடக்கக் கூடாது. விடியற்காலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து கொடுக்க வேண்டும். தன்னுடன் அமர்ந்து தான் சொல்லும் வெட்டிக் கதைகளை எல்லாம் கேட்க வேண்டும். தான் ஓய்வெடுக்கும் நேரத்தில் மட்டும் தான் மகன் இருக்கும் அறைக்குச் செல்ல வேண்டும் என்று பெரிய பெரிய கட்டுப்பாடுகள் போடுவார்.​

காரணம் இந்த மாதிரியான செயல்களின் மூலம் மகனும் மருமகளும் ஒன்றாக இருக்கும் நேரம் பெருமளவு குறைந்துவிடும். அதிலும் அவர்கள் மனம் விட்டுப் பேசிக் கொள்ள இடம் கொடுக்காமல், எல்லா வீட்டிலும் குழந்தை இருக்கிறது, இங்கு தான் இல்லை. இலட்சக் கணக்கில் சம்பாதித்து என்ன பயன், குழந்தை இல்லை என்றால் ஒரு பெண்ணை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று வார்த்தையால் குத்துவார். அதற்குப் பிறகு கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசிக் கொள்ள எங்கு நேரம் இருக்கும். குழந்தையை உருவாக்கும் வேகம் மட்டும் தானே இருக்கும்.​

இது தான் மயில் எதிர்பார்ப்பதும். சுருக்கமாக சொல்லப் போனால் மிகத் திறமையாக, தான் நினைக்கும் படி மட்டுமே மூத்த மகனும், மூத்த மருமகளும் வாழும் படி பார்த்துக் கொண்டார். அப்படியான ஒரு இராஜதந்திரி அவர்.​

நயனாவைப் போல் தெய்வாவையும் மடக்க வேண்டும், அதற்கு அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ளலாம் என்று முடிவு செய்வதற்காக, அவள் குணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார் போலும், “முதல் நாளே வெகுவிரைவில் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களைப் பார்த்தாலாவது அவர்கள் இருவருக்கும் குழந்தை ஆசை வர வேண்டும்“ என்றார்.​

நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நீங்கள் என்ன முடிவு சொல்வது என்று நினைக்காமல் அவர் ஆசையை சொல்கிறார் எதிர்த்துப் பேசி அவரை நோகடிக்க வேண்டாம் என நினைத்து ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டாள் பெண். அவளுக்கு கணவன் என்ற பட்டத்தைக் கொண்ட ரகுவின் குணத்தைப் பிடிப்பதே பெரும் பாடாக இருந்தது.​

அவன் இரவு வேலை அதுவும் வீட்டில் இருந்து செய்பவன் என்பதால், பகலில் நன்றாக உறங்குவான். காலை நேரம் தெய்வா தன்வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் அவனைத் தன்னுடன் வந்து, அவன் அம்மா வீட்டில் உறங்குமாறு அழைப்பாள். அவன் என் தூக்கத்தைக் கெடுக்காதே என்றுவிட்டு அவளை மட்டும் தன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிடுவான்.​

மகன் உறங்குகிறான் என்பதைத் தெரிந்து கொண்டதும், முதலில் தனக்கும், கணவனுக்கும் காலை உணவை தயார் செய்து கொடுத்துவிட்டு, நீயும் இங்கேயே சாப்பிட்டு ஒரு டிபன்பாக்ஸில் போட்டு ரகுவிற்கு கொண்டு கொடுத்துவிட்டு உடனே இங்கே வந்துவிடு என்பார்.​

நயனா மற்றும் ராஜைப் போல் தாங்களும் அதிக நேரம் ஒன்றாக செலவழிக்கக் கூடாது, அதில் இருவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்பதும் வரக்கூடாது என்று நினைக்கிறார் போலும், என்று அவள் நினைத்தால் அது தான் தவறு.​

அவளுக்கு, அது நாள் வரை அவள் செய்து பழக்கமே இல்லாத பல வேலைகளைக் கொடுத்து தான் ஒய்யாரமாக தொலைக்காட்சியை இரசிப்பார் மயில். பிறந்த வீட்டில் செல்ல இளவரசியாய் தெய்வா வாழ்ந்தது இல்லை தான் என்றாலும், அதிக கடினமான வேலையை செய்யச் சொன்னது இல்லை இலட்சுமி.​

இங்கானால் பல வருடங்களாக சுத்தம் செய்யாத வாட்டர் டேங்க்கை சுத்தம் செய்வது, பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்களை சுத்தம் செய்வது. மிகச்சிறிய இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகமான பொருள்களை சுத்தம் செய்து மீண்டும் அதனதன் இடத்தில் அடுக்கி வைப்பது, என்று வேலை இருந்து கொண்டே இருக்கும்.​

முடியாத நேரங்களில் முடியவில்லை என்று வாயைத் திறந்து சொல்லுவாள் தெய்வா. ஆனால், நாங்கள் வயதானவர்கள், ராஜ் வேலைக்குச் சென்றுவிடுவான், ரகு இரவு வேலை முடித்து பகல் முழுவதும் உறங்குபவன். என்றாவது ஒருநாள் வந்து போகும் நயனாவையும் இந்த வேலைகளைச் செய்யச் சொல்ல முடியாது. பணம் கொடுத்து இதற்கு ஆட்களைப் பிடித்து வரும் அளவு நாம் பணக்காரர்கள் கிடையாது. இதெல்லாம் நம் வீட்டு வேலை, நாம் தான் பார்த்தாக வேண்டும் என்பார்.​

இத்தனையும் செய்து முடித்த பின்பு, இரவு உணவாக ஒருவருக்கு கோதுமை உப்புமா, கணவனுக்கு தோசை மற்றவர்களுக்கு சப்பாத்தி, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சட்னி, குருமா என்று மேலும் மேலும் வேலை இருக்கும்.​

என்றாவது ஒருநாள் ரகு அரிதிலும் அரிதாக காலை வேளையில் அவளுடன் வந்தால், காய்கறி வெட்டிக்கொடுப்பது, கீரை ஆய்வது போன்ற வெகு சுலபமான வேலைகளைக் கொடுப்பார் மயில். இதைப் புரிந்து கொண்டு முடிந்தவரை காலையில் தன்னுடன் வருமாறு ரகுவை அழைப்பாள் தெய்வா.​

“ஏய் போ, என்னால் அங்கு வந்து படுக்க முடியாது. ஏசியைப் போடாதே அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அங்கே போ, இங்கே போ என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நிம்மதியே இருக்காது, நீ மட்டும் போ, சாப்பாடு எனக்கு எடுத்து வந்துவிடு“ சாதாரணமாகச் சொல்வான் அவன்.​

“எனக்காக உங்கள் தாயை எதிர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை தான், ஆனால் குறைந்தபட்சம் என்னுடன் வந்தால் இந்த வேலைகளில் இருந்து தப்பிப்பேனே, நிஜமாகவே என்னால் முடியவில்லை“ என்பாள் கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில்.​

“உன் உடலில் சத்து இல்லை என்றால் யார் உடலில் இருக்கும். அதெல்லாம் உன்னால் முடியும், செய். நீ செய்ய வில்லை என்றால் விடுமுறை நாளில் என்னைத் தான் செய்யச் சொல்வார்கள். அதனால் எங்களுக்குள் வாக்குவாதம் தான் வரும். நான் செய்தால் என்ன, நீ செய்தால் என்ன? நம் வீட்டு வேலையை நாம் தானே செய்ய வேண்டும்“ என்று சட்டம் பேசிவிட்டு படுத்துக் கொள்வான் ரகு.​

பொறுமை பறந்து, “இப்படி நான் அங்கேயும், நீங்கள் இங்கேயும் இருப்பதற்கு எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள்” என்று கேட்ட பிறகு தொடர்ச்சியாக ஒருவாரம் அவளோடு தாய் வீடு வந்தான். அதன் பிறகு பழைய குருடி கதவைத் திறடியாய் ஆகிப்போனான்.​

மகன் இருக்கும் போது இஷ்டம் போல் வேலை சொல்ல முடியவில்லை என்பதால், “பகலில் தான் உறங்குவான் அவன். அவனை எதற்காக அங்கே இங்கே அலைக் கழிக்கிறாய். நீ மட்டும் வந்து போ, அது தான் சரியாக இருக்கும்“ என்பார் மயில்.​

அவர் சொன்னதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று திட்டித் திட்டி ரகுவை உடன் அழைத்து வருவாள் தெய்வா. இவ்வளவு விரைவில் மயிலை எதிர்த்துப் பேச வேண்டாம் என்று தான் நினைத்தாளே தவிர, அவர் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்ட அவளால் முடியாது.​

தெய்வா எட்டடி பாய்ந்தால், மயில் பதினாறடி பாய்ந்தார். அதற்குப் பிறகு அந்த வீட்டில் வேறு மாதிரி சோதனைகள் நடந்தது. பாத்திரம் கழுவும் போது, தண்ணீர் மிதமாக வைத்திருந்தால், “இப்படித் தண்ணீரை வீணடிக்கிறாயே, ஒரு பெண் தண்ணீரைப் பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் அவள் பொறுப்பை உணர முடியும். நீ என்ன இப்படி இருக்கிறாய்“ என்பார்.​

அதுவே குறைவாக வைத்திருந்தால், “இப்படி மெதுவாக தண்ணீரை வைத்து எவ்வளவு நேரம் கழித்து, வேலையை முடிப்பாய். இந்த வேலையில் நின்றுவிட்டால் அடுத்த வேலை செய்ய வேண்டாம் என்ற நினைப்பா? இந்த வயதில் என்ன சோம்பேறித்தனம், வேகவேகமாக கழுவ வேண்டாமா?“ என்பார்.​

வீடு பெருக்கினால், இன்னும் குப்பையாக இருக்கிறது என்பார், வீடு துடைத்தால் கையில் பலம் இல்லாதவள் போல் துடைக்கிறாயே அழுத்தித் துடை என்பார். தன் உடைகளை காயப் போட்டுவரச் சொல்லி அவள் ரியாக்ஷன் பார்ப்பார்.​

தெய்வாவின் வீட்டில் இருந்து போன் செய்தால், அவள் பேசும் முன்னர் அலைபேசியைப் பிடுங்கி தான் பேசிவிட்டு, தெய்வாவைப் பேசவிடாமல் வைத்துவிடுவார். இதெல்லாம், தான் மாமியார் என்பதை மருமகள் என்றும் நினைவில் வைத்திருப்பதற்காக செய்யும் கோளாறுகள் என்று புரிந்து சலித்துக்கொண்டு சகித்தாள் தெய்வா.​

ரகுவிடம் பல கெட்ட குணங்கள் இருந்தாலும், அவற்றில் தலையாயது தெய்வா அவனைப் பற்றி ஏதாவது தவறு சொன்னால், அதை அவன் தாயிடம் வற்றி வைப்பது. வீட்டில் இருக்கும் போது மிகவும் சின்னதாய் டவுசர் ஒன்றை மட்டும் போட்டுக்கொண்டு அலைவான் அவன்.​

சுடிதாரில் இருக்கும் தெய்வாவை புடவை கட்டினால் என்ன குறைந்து போவாய் என்று கேட்கும் மயில் மகனின் கால்வாசி உடையைப் பற்றி எதுவும் கேட்க மாட்டார். வயது வந்த இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டின் முன்னால், இடையில் வெறும் துண்டோடு கிட்டத்தட்ட அரைமணி நேரம் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறான் ரகு என்று வீட்டு ஓனர் ஒருமுறை கம்ப்ளைண்ட் சொல்லவும் கோபத்தில் கத்தி இருந்தாள் தெய்வா.​

இதை மகன் தாயிடம் போட்டுக் கொடுக்க, என் மகனின் உடைப் பழக்கத்தை குறை சொல்கிறாயா என்று மனதில் வஞ்சம் வைத்தது போல், அவளுடைய சுடிதார்களைப் பார்த்து, “என்ன உடையணிகிறாய் நீ. உனக்கு உடை அலங்காரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை“ என்று சொல்லி அவராக அவருக்குப் பிடித்தவண்ணம் அவளுக்கு உடை எடுப்பார். அதற்கான பணத்தை அவளைக் கொடுக்க வைப்பார். பல்லைக் கடித்துப் பொறுத்துப் போய்க் கொண்டிருந்தாள் தெய்வா.​

ரகுவிடம் சொன்னால், “அம்மா உனக்காக ஆசையாய் எடுத்துக் கொடுத்தால் அதில் நீ குற்றம் கண்டுபிடிக்கிறாயா?“ என்று சண்டைக்கு வந்தான். கூடுதலாக, “ஊர் உலகத்தில் எந்த மாமியாராவது தன்னுடைய மருமகள்களுக்கு இப்படி எல்லாம் பார்த்து பார்த்து செய்வாரா?“ என்று கேள்வி எழுப்பினான்.​

மயிலின் இந்த எண்ணத்திற்குப் பின்னால் இருக்கும் இராஜதந்திரமே அதுதான். தன் எண்ணப்படி மருமகள்களை நடந்து கொள்ள வைக்கும் அதே நேரத்தில், வெளியே இருந்து பார்க்கும் ஆட்களுக்கு மயில் தன் மருமகள்களை, மகன்களை விட நன்றாக நடத்துகிறாள் என்று தெரிய வேண்டும். ஒன்றுக்கும் உதவாத அந்த நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று தான் இத்தனையும் செய்கிறாரா என்ற எண்ணம் வரும் போது, தெய்வாவின் பார்வையில் புளிப்பு மிட்டாயாய் புளித்துப் போவார் மயில்.​

வீட்டுக்கு வரும் ஆட்களிடம், மருமகள்களுக்கு உடை எடுத்துக் கொடுத்த வேலையை ஏதோ சாகசப் பயணம் போல் அவர் அரற்றுவதைக் காணும் போது, அவர் அறியாமையை நினைத்து தலையாட்டிக் கொண்டு கடந்து போவாள்.​

சுயதம்பட்டம் அதோடு நின்றதா என்றால், அது தான் இல்லை. இரண்டு நாட்களில் அடுத்த பிரச்சனையை ஆரம்பித்தார் மயில். தன்னுடைய சுயசம்பாத்தியத்தில் முதன்முதலாக ஆசையாய் தனக்குப் பிடித்த வடிவத்தில் ஒரு மோதிரம் வாங்கி, ஆசைக்காக நடுவிரலில் அணிந்திருப்பாள் தெய்வா. அது அவளுக்கு மிகவும் பிடிக்கும், ஸ்பெஷல் என்ற உணர்வு.​

நிச்சயத்தில் அவளுக்காக போட்ட மோதிரம், அளவு கூட கேட்காமல் பெருமைக்காக அவர்களாக வாங்கி வந்தது என்பதால், மிகவும் இறுக்கமாக இருந்தது. அதனால் திருமணம் வரை சிரமப்பட்டு போட்டிருந்தவள், அதன் பிறகு கழட்டி வைத்துவிட்டாள். அதில் மயிலுக்கு கோபம். அதற்காக ஒரு திட்டம் வைத்திருந்தார்.​

நிச்சய மோதிரம் மற்றும் இப்போது தெய்வா போட்டிருக்கும் மோதிரம் இரண்டையும் கடையில் கொடுத்து, புதிதாக ஒரு மோதிரம் கூடுதல் கனத்தில் எடுக்கலாம் என்று ஐடியா கொடுத்தார்.​

“நான் ஆசையாக வாங்கியது, எனக்கு சௌவுகர்யமாக இருக்கிறது எதற்காக அதை மாற்ற வேண்டும். வேண்டுமானால் நிச்சய மோதிரத்தை கடையில் கொடுத்து, கூடுதலாக பணம் போட்டு நல்ல மோதிரம் ஒன்றை வாங்கிக்கொடுங்கள் போட்டுக் கொள்கிறேன்“ என்று தெளிவாகப் பதில் சொன்னாள் தெய்வா.​

“என்ன, இலட்சத்தில் சம்பாதிக்கும் மூத்த மருமகள் ஒற்றை மோதிரம் மட்டும் போட்டு இருக்கும் போது, வேலைக்குச் செல்லாத நீ, இரண்டு மோதிரம் போட்டு இருப்பது நன்றாக இருக்காது. நான் என் இரண்டு மருமகள்களிடமும் எந்த வேற்றுமையும் பார்க்க மாட்டேன்” என்றார் அவர்.​

இது என்ன நியாயம் என்று தோன்றினாலும், “எனில் நான் போட்டு இருப்பதே எனக்குப் போதும்“ என்று பொறுமையாகப் பதில் சொன்ன தெய்வாவிடம், அவள் அசரும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னார் மயில்.​

“அது எப்படி புதுப்பெண் என்று உன்னைப் பார்க்க பலர் வருவார்கள், அவர்களிடம் நாங்கள் பெண்ணுக்கு போட்ட மோதிரம் என்று காட்டுவதற்கு ஒன்று நிச்சயம் வேண்டுமே. அதனால் தான் இந்த யோசனை சொன்னேன். வேலைக்குச் சொல்லும் நயனா கூட என் பேச்சுக்கு மறுசொல் சொல்லமாட்டாள்“ என்று தெய்வா இன்னும் வேலைக்கு முயற்சிக்கவில்லை என்பதை அடிக்கடி குத்திக்காட்டினார் அவர்.​

“எல்லா விஷயத்திலும் நீங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒன்று இன்னொரு புது மோதிரம் உங்கள் மகனை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள், இல்லை இப்படியே விட்டுவிடுங்கள். என் ஆசை மோதிரத்தை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது“ என்று அந்தப் பேச்சை முடித்திருந்தாள் தெய்வா.​

அதற்குப் பிறகு தான் தன் கணவனால் மோதிரம் என்ன, ஒரு புடவை கூட தனக்கு வாங்கிக் கொடுக்க முடியாது என்பதை தெய்வா கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.​

ஆரம்ப நாட்களில் ரகு, அம்மாவை அனுசரித்து நடந்துகொள், என்னைச் சில விஷயங்களுக்கு தொந்தரவு செய்யாதே என்று பல நிபந்தனைகள் சொன்ன போது, தெய்வாவும் சில விஷயங்களை சொல்லத் தான் செய்தாள்.​

முதல் ஒன்று எதிர்காலத்தில் வீடு வாங்குவதற்காக என்று இல்லை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் குடும்பத்திடம் இருந்து இலவசமாகவோ, கைமாற்றாகவோ பணம் எதிர்பார்க்கக் கூடாது, தான் வாங்கி வந்து கொடுப்பேன் என்று நினைக்கக் கூடாது என்பது.​

“கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென

கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்

ஒழுகு நீர் நுணங்கு அறல் போல

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையாளே“

-நற்றிணை

செல்வத்திற்கு குறைவில்லாத இடத்தில் பிறந்திருந்தாலும், எளியவனை மணந்து மனைவியாகி, அவன் மனை வந்த பிறகு அந்த வீட்டின் செல்வநிலைக்கு தன்னை விரைவில் பொறுத்திக் கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் கணவனுக்காகவோ தனக்காவோ பொருள் கேட்டு தந்தையிடத்திற்கு செல்லக்கூடாது என்கிற நற்றிணையின் கூற்றோடு சேர்த்து, தன் படிப்புக்கு செலவு செய்ததை சொல்லிக்காட்டும் தந்தையிடம் எக்காலத்திலும் வாழ்வாரத்துக்கு உதவி கேட்டு செல்லக்கூடாது என்பது அவள் தீவிரமான எண்ணம்.​

தெய்வா சொன்ன இரண்டாவது நிபந்தனை, வந்திருக்கும் புது சூழ்நிலை பழக்கமாகிய பின்பு, அதாவது குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் தன்னால் வேலைக்குச் செல்ல முடியும் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருந்தாள்.​

அப்படிச் சொன்னதால் மயிலிடம் மண்டகப்படி கிடைத்ததைப் பொறுத்துக் கொண்டாலும், அதனால் தான் ரகுவின் பழக்க வழக்கங்களை அருகில் இருந்து கவனிக்க முடிந்தது அவளால். ஆனாலும் கூட அவள் கவனிக்க ஆரம்பித்தது வெகுநாட்கள் கழித்தே என்று தான் சொல்ல வேண்டும்.​

தெய்வா எறும்பு அளவுக்கு சுறுசுறுப்பானவள் இல்லை என்றாலும், ஓரளவு சுறுசுறுப்பானவளே. ஆனால், ரகுவிற்கு சுறுசுறுப்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தால், அதைக் கையால் கூட வாங்காமல் ஊட்டிவிடச் சொல்லி வாயைத் திறக்கும் ஆட்களை வாழைப்பழச் சோம்பேறி என்று சொல்வார்கள். ரகு அவர்களை விட மோசம்.​

பகலில் படுக்கை தான் அவன் இடம். அங்கிருந்து எழுந்து சென்று கைகழுவ சோம்பேறித்தனப்பட்டு சாப்பாட்டை ஸ்பூனில் தான் சாப்பிடுவான். கனிகளைக் கழவி, வெட்டி சின்னச் சின்ன துண்டுகளாக முள்கரண்டி போட்டு கொண்டுவரச் சொல்லி, அதே மெத்தையில் இருந்து தான் ஒய்யாரமாக உண்பான். உண்ட தட்டை கொண்டு வந்து சமையலறையில் போடுவானா என்றால் நிச்சயம் இல்லை. சாப்பாடு, தண்ணீர் என அனைத்தும் இருக்கும் இடத்துக்கு தெய்வா கொண்டு சென்று கொடுக்க வேண்டும்.​

தன் வீட்டிலும் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களைக் கூட ஆண்கள் எடுக்க மாட்டார்கள் என்பதால், அப்படி இருக்கிறான் போல என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாள் தெய்வா. ஆனால், இது சோம்பேறித்தனத்தின் உச்சகட்டம் என்பதைப் புரிந்துகொள்ள வெகு நாட்கள் பிடிக்கவில்லை.​

காலையில் டீ குடித்த தம்ளரில் ஆரம்பித்து, ஒவ்வொரு நேரம் தெய்வா உணவு கொண்டு வந்த பாத்திரங்கள், கனிகள் கொடுத்த தட்டுகள், தண்ணீர் குடித்த தம்ளர்கள் என அனைத்தையும் பத்திரமாக கட்டில் காலடியில் அடுக்கி வைத்திருப்பான்.​

சில நேரங்களில் பொறுமையிழந்த தெய்வா பயங்கரமாகத் திட்டும் போது, கர்ப்பிணிப் பெண்களைப் போன்ற பருத்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்து சமையலறையில் வைத்துவிட்டு, ஏதோ பெரிதாக சாதித்துவிட்ட முனைப்பில் பெருமூச்சுவிட்டுச் செல்வான். தெய்வா தலையில் அடித்துக் கொள்வாள்.​

“இரு வேறு துருவங்கள் ஒன்றை ஒன்றை அதிகம் ஈர்க்கும் என்பது காந்தவியலின் முதன்மை விதி“

காலம் காலமாய் கணவன், மனைவி மற்றும் காதலர்களுக்கு முதன்மை எடுத்துக்காட்டாய் சொல்லப்படுவதும் இதே விதி தான். தெய்வாவின் திருமண வாழ்வை தலைகீழாய் மாற்றி அமைத்த பல விதிகளில் இதற்கே முதல் இடம் உண்டு என்று சொல்லலாம்.​

மயில் ரகுவிடம் தோகை விரித்து அருள்வாக்கு சொல்லி இருப்பார் போலும், சனி, ஞாயிறு வேலையில்லா இரவில் தெய்வாவை நெருங்க முயற்சிப்பான் ரகு. கணவன் என்பதற்காக அவள் அனுமதிக்க நினைத்தாலும், அவனிடம் இருந்து வரும் நாற்றத்தை அவளால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் போக விலகிவிடுவாள்.​

அடுத்த நாளில் இருந்து தான் ஒன்றைக் கவனிக்க ஆரம்பித்தாள் தெய்வா. அது, ரகு வாரம் ஒருமுறை தான் குளிக்கிறான், அரிதிலும் அரிதாகத் தான் பல் கூட துலக்குவான் என்பதை.​

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று தான் நினைக்கத் தோன்றியது அவளுக்கு. நெஞ்சின் ஒரு ஓரம் வெகுவாக வலித்தது. இத்தனை நாள் பல சிந்தனைகளுக்கு நடுவில் இவனுடைய இந்த கேவலமான பழக்கத்தை அவள் கவனிக்காமல் விட்டதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள்.​

பொதுவாக காலையில் தெய்வா மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் என்றால், வந்து சேர வெகு நேரம் ஆகிவிடும். காலை உணவை அவள் கொண்டு வரும் நேரத்தில் தான் ரகுவின் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்று, “காபி கலந்து கொடுத்துவிட்டுப் போ“ என்பவன் அதற்குப் பிறகு பெரும்பாலும் உறங்க மாட்டான். தாய் வீட்டிற்கும் வரமாட்டான், ஒற்றையில் கிடந்து மெத்தையில் இருந்து காலைக் கூட கீழே எடுத்து வைக்காமல் பப்ஜி விளையாடிக் கொண்டு இருப்பான். பழங்கள், மதிய உணவு என்று எடுத்து வரும் போது குளித்தாயா என்றால் ஆம் என்று வாய் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறான் அன்று வரை.​

அவள் கண்டுபிடித்து விட்டதை உணர்ந்த போது கேவலமான சிரிப்பு ஒன்றை சிரித்துவிட்டு, குளிப்பதற்கு மிகவும் சோம்பேறித் தனமாக இருக்கிறது. அதோடு உனக்கு துவைப்பதற்கு துணிகள் குறைகிறதே என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள், என்று அவன் சொல்லும் போது, கையில் கிடைக்கும் எதையாவது தூக்கி அடித்துவிடலாமா என்று நினைப்பாள் தெய்வா.​

காலையில் எழுந்ததும், இரவு படுக்கப் போகும் முன்னரும் குளிக்காவிட்டால் தெய்வாவிற்கு அந்த நாளே முடியாததைப் போல் தோன்றும், அவளுக்கு வாய்த்த கணவன் தலை மட்டும் அரிப்பெடுக்கவில்லை என்றால் பத்து நாளுக்கு ஒருமுறை குளித்தால் போதும் என்று நினைப்பதை என்ன ஆனாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளால்.​

“புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்“

புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும், உள்ளத்தின் தூய்மையானது ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும் என்பது வள்ளுவன் சொல்லும் நீதி. இங்கானால் இந்த ரகுவிற்கு அகத்தோடு சேர்த்து புறமும் தூய்மையில்லையே.​

இப்படி எந்த விதத்திலும் பொருந்தாத ஒருவனா தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று மனதோடு வருந்தியவளுக்கு, இந்த நிகழ்காலம் முழுக்கவே கானல் நீரைப் போன்ற கற்பனையாக இருந்துவிடாதா என்ற ஏக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.​

 
Last edited:

NNK-27

Moderator

பிழையான விதி 5​

“கணவனின் கௌரவம் காப்பது மனைவியின் கடமை. மாறாக மனைவியின் மரியாதையைக் காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை“ என்று ஆண் பெண் இருவருக்குமே திருமணத்தின் மூலம் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தி இருக்கின்றன நம் அறநூல்கள்.​

இங்கே கணவன் என்ற பெயரில் உடன் இருப்பவனின் கௌரவத்திற்கு பங்கம் வரக்கூடாது என்று தன்னால் முடிந்தவரை பொறுத்துப்போய்க் கொண்டிருந்தாள் தெய்வா. ஆனால் அவனோ அவள் பொறுமையை எல்லாவிதத்திலும் தனக்கு சாதகமாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.​

ரகு தன்னை நெருங்காத வரை தெரியாத பல விஷயங்கள் அதன் பிறகே தெரிய, புரிய ஆரம்பித்தது தெய்வாவிற்கு. திருமணத்திற்காக வளர்த்திருந்த முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு வந்து நின்ற போது தான் கவனித்தாள், அவன் தலை நிறைய வட்ட வட்டமாக பெரிய பெரிய புண்கள் சீள் வைத்து இருந்ததை.​

நகக் கண்ணில் கூட அழுக்குப் பட விரும்பாத பெண்ணவளிற்கு குமட்டியது, இருந்தாலும் கணவன் ஆயிற்றே. என்ன இது என்று தவிப்பாய் விசாரித்த போது, அது பொடுகு முற்றிப் போய் புண்ணாகி இருக்கிறது என்று சாதாரணமாக சொன்னான். அது தலையில் மட்டும் இல்லாமல் கழுத்து முதுகு என்று பரவி இருந்து நாள்பட்ட பாதிப்பு என்பதை சொல்லாமல் சொல்லியது.​

திருமணம் முடிந்த ஆரம்பத்தில் அவன் சற்று நன்றாகத் தான் உடையணிந்து கொண்டிருந்தான். ஆனால் என்று உள்பனியனில் இரத்தக்கறையாக இருக்கிறதே என்ன பிரச்சனை என்று தெய்வா விசாரிக்க ஆரம்பித்தாளோ, அன்றே மற்ற உடைகளுக்கு விடுதலை கொடுத்து, கால்டவுசரோடு சுற்ற ஆரம்பித்தான்.​

கண்ட்ராவியாக இருக்கிறது என்றால், ஆடை சுதந்திரம் பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் இருக்கிறது என்று சமஉரிமை பேசுவான். அந்த நிலையில் கூட, அவன் உடலைக் கவனிக்காமல் இருந்திருக்கிறோமே என்று நினைத்து இப்போது தன்னைத் தான் திட்டிக்கொண்டாள் தெய்வா.​

மருத்துவமனையில் காட்ட வேண்டியது தானே என்று கேட்டதற்கு, இதற்கெல்லாம் செலவளித்தால் மற்ற செலவுகளுக்குப் பணம் இருக்காது என்று மிக அலட்சியமாகப் பதில் சொன்னதில் பேய் முழி முழித்தாள் அவள். காரணம் ரகுவிடம் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய பிழை அவனடைய ஊதாரித்தனம்.​

ஓட்டைச் சல்லடையில் நீரை அள்ளுவதற்குச் சமம் அவனிடம் பணம் இருப்பது. வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. எவ்வளவு சம்பாதிக்கிறானோ அது அவனுக்கே வெளிச்சம். சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் அவன் அதிகம் இறைப்பது உணவில் தான்.​

அதிகம் உண்பவர்களை உனக்கு இருப்பது வயிறா இல்லை வண்ணான் தாழியா என்று அவள் ஊரில் விளையாட்டாய் கேட்பார்கள் சிலர். அப்படியான பெருந்தீனி திண்பவன் தான் ரகு.​

மனிதனானவன் ஒரு நாள் குறைந்தபட்சம் இரண்டு வேளையும், அதிகபட்சம் நான்கு வேளையும் சாப்பிடுவான். ஆனால் ரகு இரவு வேலை செய்வதால், அவன் சாப்பாட்டு வேளைக்கும், சாப்பிடும் அளவுக்கும் கணக்கே இருக்காது. சில நாட்களில் எட்டு வேளை கூட சாப்பிட்டு இருக்கிறான். அதுவும் நாக்குக்கு ருசியாக மட்டும் தான் சாப்பிடுவான்.​

குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு முறையாது ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டே ஆக வேண்டும் அவனுக்கு. மயிலும், தெய்வாவும் சமையல் சுவையில் குறை ஒன்றும் வைத்தது இல்லை என்றாலும் அவனுக்கு கண்ணுக்குப் பிடிக்கும், சுவை உணர்வுகளை மறக்கடிக்கும் அந்த கலர்கலர் உணவுகள் மீது தான் அலாதிப் பிரியம்.​

சிலருக்கு உடல்வாகே அப்படித்தான், அதிகம் பசி எடுக்கும் அதனால் அதிகம் உண்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறாள் தெய்வா. கணவனாக வந்தவனும் அப்படித் தானோ என்று நினைக்கும் போது, அப்படி இல்லை என்பதை இரவு நேரங்களில் உணர்த்துவான்.​

தன்னுள் போடப்படும் அனைத்தையும் வாங்கிக்கொள்ளும் அவன் வயிறு, இரவில் தான் அதன் வேலையைக் காட்டும். நெஞ்சு எரிச்சல், வயிறு புகைச்சல் என்று வெந்நீர் வைத்துத் தரச் சொல்லி அவளை அர்த்த இராத்திரியில் எழுப்புவான்.​

ஆரம்பத்தில் சலிக்காமல் செய்தாள் தெய்வா. வாழ்வதற்காக சாப்பிடும் ரகம் அவள் என்றால், சாப்பிடுவதற்காக வாழும் ரகம் அவள் கணவன். பசி என்று இல்லாமல் ஆசையை அடக்க முடியாமல் தான் இவ்வளவு சாப்பிடுகிறான் என்பதைப் புரிந்துகொண்டு, பைபிளில் சொல்லப்பட்ட ஏழு பெரும் பாவங்களில் ஒன்று பெருந்தீனி, அதோடு நீங்கள் சாப்பிடும் முக்கால்வாசி பொருள்கள் உடலுக்குக் கேடு தரும் விஷயங்கள்.​

அதனால் முடிந்த மட்டும் நல்லவற்றை, கொஞ்சம் குறைவாக சாப்பிடுங்கள் என்று அவனுடைய நல்லதுக்காக தனிமையில் மென்மையாக அவள் சொன்னதை நாரதரை விட மோசமாகத் திரித்து தன் தாயிடம் போட்டுக் கொடுத்து திட்டு வாங்கிக் கொடுத்தான் ரகு.​

“உழைக்கும் பிள்ளைக்கு வயிற்றுக்கு சோறு கூட போட மாட்டாய் போலவே. எவ்வளவு சாப்பிட்டால் தான் என்ன, மண்ணைத் தின்றாலும் செரிக்கும் வயது தானே. என்ன சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள் உன் வீட்டில், நீயெல்லாம் எதிர்காலத்தில் என் பிள்ளையை எப்படிக் காப்பாற்றப் போகிறாய்“ என்று கண்டபடி மண்டகப்படி கிடைத்தது தெய்வாவிற்கு.​

“நல்லதுக்காக தான் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளாமல், இது என்ன சிறுபிள்ளைத் தனம். நாக்குக்கு அடிமையாகி கண்டதையும் உண்டுவிட்டு இரவில் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். வெந்நீர் தானே நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்“ என்று ஒரு கோபத்தில் தெய்வா சொன்னதை மயிலிடம் கோள் மூட்டினான் ரகு.​

“என் மகனுக்கு உங்கள் தங்கை சின்ன வேலை கூட செய்து கொடுக்க மறுக்கிறாள்“ என்று வெற்றியிடம் கம்ப்ளைண்ட் செய்யும் அளவுக்கு இதைப் பெரிதாக்கினார் மயில். அவனா அசருவான், திருமணம் செய்து கொடுத்தாயிற்று இனி நீங்களாச்சு அவளாச்சு என்றதோடு முடித்துக் கொண்டான். அவனுடைய அந்தச் செயலே, அங்கே இருந்து மருமகளின் பெயரைச் சொல்லி ஒன்றையும் கறக்க முடியாது என்பதை உணர்த்திவிட மயிலுக்குப் பலத்த அடி.​

“என் மகன் ஒரு குழந்தையைப் போல், அவனுக்கு சூது வாது தெரியாது, அப்படியே வளர்ந்துவிட்டான். அவனைப் போய் திடீரென்று அவன் அண்ணன் ராஜிற்கு இணையாக பொறுப்பாக நடந்து கொள்ளச் சொன்னால் எப்படியம்மா சாத்தியப்படும். அவனை நீ தான் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பொறுத்துப் போ அம்மா” நாடகத்தை மாற்றி கெஞ்சலில் இறங்கினார் மயில்.​

அவள் ஏன் ரகுவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிஜத்தில் அவன் தானே அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தெய்வாவின் குழப்பத்துக்கு விரைவில் விடை கிடைத்தது.​

ரகுவிற்கு முப்பது வயது ஆகி இருந்தாலும், அந்த வயதிற்கு உரிய பொறுப்புகள் சுத்தமாகக் கிடையாது. அதோடு அவள் முதல் முதலாக நினைத்தது போல், அவன் தன் சம்பளம் மொத்தத்தையும் அம்மாவிடம் கொடுத்து சமயத்துக்கு தகுந்தாற் போல் பணம் வாங்கிக் கொள்கிறவன் அல்ல.​

சொல்லப் போனால் வீட்டிற்கு என்று அவன் சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்காதவன். அவன் எவ்வளவு சம்பாதிக்கிறானோ அது மொத்தமும் அவனுக்கு மட்டுமே. அப்படி என்ன செலவு செய்கிறான் என்றால் எதுவும் உருப்படியாக இருக்காது. நான்கு நாட்களுக்கு ஒரு சினிமா என்று வரும் புதிய சினிமாக்கள் அனைத்தையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து முடித்தால் தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும்.​

உணவுத் திருவிழா எங்கு நடந்தாலும் அங்கு முதல் நாளே சென்றுவிடுவான், சென்னையைச் சுற்றிலும் எந்தெந்த இடத்தில் என்னென்ன உணவுகள் நன்றாக இருக்கும் என்பது அவனுக்கு அத்துப்படி.​

சனி, ஞாயிறு என்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது. காலை ஆறு மணிக்கு வெளியே செல்பவன் இரவு பதினோரு மணிக்கு தான் வீட்டிற்கு வருவான். வீட்டில் மனைவி என்ற பெயரில் தனியாக ஒருத்தி இருப்பாளே என்ற எண்ணம் கொஞ்சமும் இருக்காது.​

இணையதளத்தில் கண்ணில் படும் பொருள்கள் யாவும் அது தேவையா தேவையில்லையா என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் வாங்கிக் குவிப்பான். தினமும் அவன் பெயரில் ஏதாவது ஒரு பார்சல் வந்து கொண்டே இருக்கும். கேட்டால் நான் என்ன அடுத்த வீட்டு ஆண்களைப் போல் சிகரெட் பிடிக்கிறேனா? இல்லை மதுப்பழக்கம் பழகி இருக்கிறேனா? நான் உத்தமன் என்று வாதம் செய்வான்.​

சம்பளம் வாங்கிய முதல் பத்து நாட்கள் ராஜாவைப் போல் செலவழிப்பவன், அடுத்த இருபது நாளும் அண்ணனின் பணத்தைப் பெற்றுக் கொடுக்கச் சொல்லி தன் தாயிடம் பிச்சை எடுக்காத குறையாகக் கெஞ்சுவான். கொஞ்சமாவது சூடு, சுரணை இருந்தால் அடுத்த மாதம் செலவைக் குறைக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் ரகு அப்படியானவன் கிடையாது.​

ஒருநாள் தெய்வாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டிய சூழ்நிலையில், டெபிட் கார்டில் பணம் இல்லை, கிரெடிட் கார்டு வாங்க மாட்டேன் என்கிறார்கள், நீ உன் அண்ணனை பணம் போட்டுவிடச் சொல் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுக்கிறேன் என்ற போது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. காரணம் சம்பளம் வந்து முழுதாக நான்கு நாட்கள் கூட கடந்திருக்கவில்லை. இவனை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று அன்று இரவு முழுவதும் அழுதாள்.​

அடுத்த நாள் பகல் முழுவதும் யோசித்து, இரவில் கணவன் என்ற பெயரில் இருப்பவனை அமர வைத்து, நிஜத்தைச் சொல்லுங்கள். நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கேட்டாள் பெண். கெஞ்சினாள், அழுதாள், திட்டினாள் எதற்கும் அசையவில்லை.​

ஆலங்கட்டிகள் விழுந்தாலும் அசையாத அம்மி போல் மூன்று மணி நேரமும் அமைதியாக இருந்தானே தவிர வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசினான் இல்லை. சலித்துப் போய் தெய்வா தான் தன் முயற்சியைக் கைவிட வேண்டியதாக இருந்தது.​

அதில் மட்டும் இல்லை, பல விஷயங்களில் ரகு கடைப்பிடிக்கும் யுக்தியே அது தான். எப்படி வேண்டுமானாலும் திட்டு, உன்னால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்த முடியும்.​

ஏதாவது ஒரு நேரத்தில் வாய் வலித்து பேச்சை நிறுத்தித் தானே ஆக வேண்டும், அப்போது போ. இப்படியே சிலமுறை நடந்துகொண்டால், இது தான் வாழ்க்கை, இவனிடம் பேசினால் எதுவும் நடக்காது, என்பதைப் புரிந்துகொள்வாய். அதன்பிறகு எதற்கும் என்னிடம் கேள்வி கேட்டு வந்து நிற்க மாட்டாய் என்பதாய் தான் இருந்தது அவன் நடவடிக்கை. இதுவரை தாயிடத்தில் இதைத் தான் செய்து பலன் பெற்றுக் கொண்டிருந்தான் என்பதால், அதையே தெய்வாவிடமும் செயல்படுத்தினான்.​

சூப்பர் மார்க்கெட் சென்றால் பொருள் வாங்கும் வரை அருகில் இருப்பவன் அதற்குப் பிறகு இருக்க மாட்டான், இருந்தால் பணம் செலுத்த வேண்டியது ஆகிவிடுமே. வீட்டிற்கு வந்து தெய்வா சண்டையிடுவாள், எதற்காக தனித்துவிட்டு வந்தீர்கள் என்று. மிகவும் கூலாக வீட்டிற்கு அருகில் இருக்கும் இடம் தானே, நீயாக வந்துவிடுவாய் என்று நினைத்தேன் என்று சாவகாசமாகச் சொல்லுவான்.​

“சீக்கிரத்தில் வேலைக்குப் போ, மூன்று மாதங்கள் கழிந்த பிறகு லோன் எடுத்து குத்தகைக்கு வீடு எடுக்க வேண்டும். மாதவாடகை கொடுப்பது எல்லாம் கட்டுப் படியாகாது. உன் வீட்டில் சீர் வரிசை சாமான்களாக வாங்கிப்போட்டது போக, மீதமுள்ள பொருள்களையும் நீதான் பார்த்துப் பார்த்து வாங்கிப் போட வேண்டும்“ என்று மயில் சொன்ன போது புரியாமல் தலை ஆட்டி வைத்தவளுக்கு, இப்போது தான் புரிந்தது. ரகுவால் இதில் ஒன்றைக் கூட செய்ய முடியாது என்பதை.​

அவனைப் போன்ற பொறுப்பில்லாத ஒருவனை, யானையைக் கட்டி வளர்த்தது போல், பெற்று வளர்த்து பெரிய மகனின் தயவால் இவ்வளவு நாளாய் சுகவாசியாய் வைத்திருந்த மயில், மகன் இனி திருந்தமாட்டான் என்பது புரியவும், காலத்துக்கும் மகனை அப்படியே பார்த்துக் கொள்ள வேண்டி தான், படித்து முடித்து வேலைக்குச் செல்லும் கிராமத்துப் பெண்ணாகத் தேடி எடுத்திருக்கிறார் என்பது புரியவும் அண்ணனை நினைத்து நினைத்து அழுதாள் தெய்வா.​

கிராமத்துப் பெண் என்றால், எத்தனை தான் படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய உத்யோகத்திற்குச் சென்றாலும், கண்டதே கோவில் கொண்டவனே தெய்வம் என்று வாழ்வார்கள் என்று நினைத்துவிட்டார்கள் மயிலும், ரகுவும். தெய்வா வேறு ரகம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.​

சொந்தத் தந்தை தான் என்றாலும் படிக்க வைத்ததை சொல்லிக் காட்டியதால், அதற்குப் பிறகு தன் சொந்த செலவுக்கு கூட அவரிடம் கையேந்தி நிற்கக் கூடாது என்று நினைக்கும் அவளும், எப்படி யாரிடம் இருந்து பணம் பெற்று, தான் சுகமாக வாழலாம் என்று நினைக்கும் அவனுமா ஜோடி.​

நகக்கண்ணில் கூடஅழுக்குப் பிடிப்பதை விரும்பாத அவளும், உள்ளும் புறமும் அழுக்கிலே ஊறிப் போன அவனுமா ஜோடி சேர்வது. சேமிப்பு போக செலவு என்பவள் அவள், சேமிப்பின் அர்த்தம் கூடத் தெரியாதவன் அவன்.​

அடிப்படை கூட ஒத்துப்போகாத போது எப்படி தன்னால் அவனோடு சந்தோஷமாக வாழ முடியும். இதைச் சொல்லி ரகுவை கொஞ்சமாவது மாற முயற்சியுங்கள் அழாத குறையாக அவள் மன்றாடிய போது, “துணையை அவர்களின் குறை நிறைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்வது தான் கணவன் மற்றும் மனைவிக்கு அழகு.​

உன் கோபம், எடுத்தெறிந்து பேசும் விதம் எல்லாவற்றையும் நான் பொறுத்துப் போகிறேன் அல்லவா? அப்படி சிலவற்றை நீ பொறுத்து தான் போக வேண்டும்“ என்று வசனம் பேச உடலும் மனமும் பற்றி எரிந்தது தெய்வாவிற்கு.​

அவனை, இத்தனை வருடமாக அவன் கொண்டிருந்த அழுக்குகளோடு காலம் முழுமைக்கும் அப்படியே அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அது நல்ல மனைவிக்கு அழகு.​

அதே சமயம் இன்னொரு பக்கத்தில், எந்தவிதத்தில் பார்த்தாலும் சரியில்லாத அவனுக்காகவும் அவன் அம்மாவுக்காகவும் தனக்குப் பிடிக்காத அனைத்தையும் சகித்துப் போவதும், மனைவியாக அவள் செய்ய வேண்டிய கடமையா? எப்படி எல்லாவற்றையும் அவனுக்கு சாதகமாகவே மாற்றிக்கொள்கிறான் என்று நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்கவில்லை அவளுக்கு.​

மயிலிடம் ரகுவிற்கு புத்தி சொல்லச் சொல்லும் போது, “அவன் ஆண்பிள்ளை கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பான். பெண் நீ தான் அதையும் இதையும் செய்து, அவனை உன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்“ என்று சொன்ன போது நிஜத்தில் கூட வாந்தி வந்துவிட்டது தெய்வாவிற்கு.​

அதையும் இதையும் என்றால் என்ன அர்த்தம். கணவன் மனைவி அன்பால் விளையும் அந்தரங்கத்தை, அவனைத் தன் பேச்சு கேட்க வைப்பதற்காக செய்ய வேண்டுமா? என்ன கேவலமான எண்ணம். இதற்குத் தன்னால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது என்று ரகுவை மொத்தமாக ஒதுக்கி வைத்தாள் தெய்வா.​

என்று அகத்தாலும், புறத்தாலும் முழுமையாகத் தூய்மையாகிறாயோ அதன்பிறகு என்னைத் தேடி வந்தால் போதும், அதற்கு முன்னர் எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆனாலும் நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று தீவிரமாகச் சொல்லி இருந்தாள். அதைப் பொருட்படுத்தாமல் ரகு முயற்சி செய்த போது அவள் பிடித்த அடம் கண்டு அவனே பயந்து போய் தன்னால் விலகினான்.​

மருமகளுக்கு மகனைப் பற்றி பிடிபட ஆரம்பித்துவிட்டது. நாம் நினைத்த அளவுக்கு இவள் மக்கு இல்லை. அதிக தைரியம் வாய்ந்தவளாக இருக்கிறாள், இவளை விட்டுவிட்டால் மகனுக்கு இன்னொரு திருமணம் நிகழ்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆக இவளைப் பிடித்து வைக்கும் ஒரே பிடிப்பு என்பது குழந்தை மட்டுமே என்று நினைத்து, குழந்தையை நோக்கி தெய்வாவைத் தள்ள ஆரம்பித்தார் மயில்.​

அவரின் இந்த செயல்களால் தெய்வாவின் மனதில் இருவரைப் பற்றியும் அதிருப்தி தான் அதிகமாயிற்றே தவிர, மயில் நினைத்தது போல் இறங்கிவர அவள் நினைக்கவில்லை. தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தாள்.​

ரகுவும் உறுதியாகத் தான் இருந்தான். என்ன ஆனாலும், தன்னைச் சுண்டைக்காய் அளவில் கூட மாற்றிக் கொள்ளக் கூடாது என்று. அடுத்தடுத்து தெய்வாவிடம் ரகு வாங்கிய பட்டங்கள் பொறுப்பில்லாதவன், சோம்பேறி, கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்பவன் என்பன போன்ற கெட்ட பெயர்கள் மட்டும் தான்.​

தெய்வா தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் ரகுவிற்கு பெரிதாக கவலை இருப்பதைப் போல கொஞ்சமும் தெரியவில்லை. அவனைப் பொறுத்த வரை முப்பது வயது ஆகிவிட்டது, இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாய் என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் திருமணம் செய்து ஒரு பெண்ணைத் தன் மனையில் கொண்டு வந்து வைத்தாகிவிட்டது. இனி யாரும் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். மணமான பெண் அவ்வளவு சீக்கிரத்தில் படி தாண்ட நினைக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினான் அவன்.​

எப்படிப் பொறுப்பில்லாத தன் தந்தையை வைத்து, இரண்டுபிள்ளைகள் பெற்று, தாய் இப்போதும் கணவனுக்கு உண்மையாக இருக்கிறார்களோ, அதே போல் மனைவியும் வேலைக்குச் சென்று தன்னையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக் கொள்வாள். தான் எப்போதும் போல், தான் உண்டு, தன் சம்பாத்தியம் தனக்கு மட்டும் என்பது போல் ஜாலியாக இருக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டான்.​

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழும் ரகம் தெய்வா கிடையாது தான் என்றாலும், ரகு நினைத்தது போலவே இதற்காக பிரிந்து செல்வதா? ஊர் உலகத்தில் குடிகாரன், சைக்கோ என்று நம்பி வந்தவளை கொடூரமாக சிதைக்கும் ஆண்மக்கள் நடுவில், இவன் அதிகமாக சோம்பேறியாக, ஊதாரியாக இருக்கிறான், சற்று மனம் வைத்தால் மாறிவிடுவானே என்று தான் ஆரம்பத்தில் யோசித்தாள்.​

அதோடு காதல் என்பது இருவர் சார்ந்தது, அது பொய்த்துப் போனால் அந்த இருவருக்கு மட்டுமே பிரச்சனை. ஆனால், திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சார்ந்தது. திருமணத்தை விட அதிகம் பேசப்படுவது விவாகரத்து.​

தன்னுடைய அவசரத்தால் இரண்டு குடும்பத்துக்கும் தீராத அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமா என்ற குழப்பத்துடன் மதில் மேல் பூனையாக அவள் இருப்பது புரியாமல், மயில் ரகு இருவருமே அவளை ஒருவழி செய்து கொண்டிருந்தனர்.​

தான் தலைவியாக இருக்கும் மகளிர் குழுவில் தெய்வாவை இணைத்து, அவள் பெயரில் ஒரு இலட்சம் ரூபாய் கடன் வாங்கி, அதைக் கொண்டு மகன் திருமணத்திற்காக நண்பர்களிடம் வாங்கி இருந்த கடனை அடைக்க திட்டம் போட்டார் மயில்.​

இது வேறா என்று தலையில் அடித்துக்கொண்ட தெய்வா முடியவே முடியாது என்று பிடிவாதமாய் மறுத்தாள். இந்தக் கடனை அடைக்க யாருடைய உதவியும் கிடைக்காமல் அல்லாடட்டும், அதன் பிறகாவது கொஞ்சமாவது பொறுப்பு வருகிறதா பார்க்கலாம் என்று நினைத்தாள் அவள்.​

விளக்கு சுடும் என்று வார்த்தையால் பலமுறை சொல்வதற்குப் பதில் அதில் குழந்தையை ஒரு முறை கை வைக்க விட்டுவிட்டால் அதன் பிறகு வாழும் நாள் முழுக்க குழந்தை நெருப்பின் பக்கம் போகாது என்பதைத் தான் ரகுவின் விஷயத்தில் முயன்று பார்க்க நினைத்தாள்.​

சம்பாத்தியத்திற்குள் செலவு செய்ய நினைக்காமல், கிரெடிட் கார்டு தான் இருக்கிறதே என்ற நினைப்பில் கண்டபடி செலவு செய்து, கார்டுக்குப் பணத்தோடு சேர்த்து வட்டியும் கட்ட, வாங்கும் சம்பளம் பத்தாமல் போக, வேலை பார்க்கும் இடத்தில் லோன் எடுத்து, அதை அடைக்க முடியாமல் நண்பர்களிடம் கடன் வாங்கிக் கட்டிவிட்டு, இப்போது நண்பர்களின் கடனை அடைக்க வழிதெரியாமல் தான் அவன் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தால் இப்படியொரு பரீட்சை அவனுக்கு தெய்வா வைத்திருக்க மாட்டாளோ என்னவோ.​

“மாமியார் என்ற பயம் கூட இல்லாமல் என் முகத்துக்கு நேரே மறுக்கிறாயே“ என்று மயில் குரல் உயர்த்திய போது, “மாமியார் என்றால் மரியாதை இருந்தால் போதுமானது, பயம் இருக்கத் தேவையில்லை“ என்று பதிலடி கொடுத்தாள் தெய்வா.​

மருமகள் இவ்வளவு நாளாக பயத்தில் அமைதியாக இருக்கவில்லை, மாறாக பொறுத்துப் போய் இருக்கிறாள் என்று புரிந்து கொண்ட மயில் வேறு விதத்தில் பிரச்சனையை அணுகினார்.​

அவள் போட்டிருக்கும் தங்க நகைகள் யாவும் பழைய டிசைனாக இருப்பதால் அதை விற்றுப் புதிதாக வாங்கலாம் என்று இனிப்பாக பேசினார். தாய் மற்றும் மகனிடம் இருந்து இனிப்பான பேச்சு வருகிறது என்றாலே அதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பது வரை புரிந்து கொண்டிருந்த தெய்வா விளக்கம் கேட்காமலே முடியாது என்று மறுத்தாள்.​

தெய்வாவிற்கு நகைகள் மீது அதிகம் பிடித்தம் இருந்தது கிடையாது. அவளுக்காக வாங்கப்பட்ட அந்த நகைகள் யாவும், அவள் இல்லாமல், அவளிடம் எந்த வடிவத்தில் வேண்டும் என்று பெயரளவில் கூட கேட்காமல், மலையரசனால் வாங்கப்பட்டவை. அதை விற்றுப் புதிதாக நகை வாங்குவதில் தெய்வாவிற்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை தான் என்றாலும் மறுத்தாள். காரணம் இதற்கு முன்னர் நயனாவுக்கு மயிலால் நடந்தது.​

அவளிடமும் இப்படித் தான் புதிய டிசைனில் நகைகள் வாங்கலாம் என்று சொல்லி, முந்தையதை விட குறைவான சவரனில் வாங்கிக் கொடுத்து, பெருமளவு பணம் அடித்திருந்தார் மயில். அது தெரிந்தாலும், குடும்பத்திற்குத் தானே செலவு செய்கிறார் அம்மா என்று அமைதியாக இருந்துவிட்டான் ராஜ். நயனா இதையெல்லாம் முன்னரே சொல்லி எச்சரிக்கை செய்திருந்ததால் தெய்வாவின் நகைகள் யாவும் தப்பித்தது.​

பணத்திற்கு மூத்த மகன், சில்லறை வேலைகளுக்கு இளைய மகன் போதும், மற்றபடி அவர்கள் வாழ்க்கை எப்படிப் போனாலும் அதில் அக்கறை இல்லை என்னும் மாமியார். நீ எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, நான் சுகவாசியாக தான் இருப்பேன் என்னும் கணவன், இவர்களுக்கு இடையில் சந்தோஷமாக என்ன, நார்மலாக வாழ்வது கூட பெரிய சோதனையாகத் தான் இருக்கும் என்று தோன்றியது தெய்வாவிற்கு.​

தெய்வாவிற்கு பெரிய பெரிய சந்தோஷங்கள் என்ன சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட விட்டு வைப்பதில்லை ரகு. அவள் நொறுக்குத் தீனிகள் என்று பெரிதாக சாப்பிடுபவள் கிடையாது என்பதால், தனக்குப் பிடித்ததாக பார்த்து பார்த்து ஏதாவது தன் செலவில் வாங்கி வைப்பாள். அதில் இருந்து ஒன்று கூட அவளுக்கு அடுத்த நாள் கிடைக்காது. இரவோடு இரவாக வேலை செய்கிறானோ இல்லையோ அனைத்தையும் காலி செய்து விடுவான் ரகு. எனக்கு கொஞ்சமாவது வைத்திருக்கலாமே என்று கேட்டால் வழக்கம் போல் கேவலமாகச் சிரிப்பான். நொந்து தான் போவாள் அவள்.​

சாப்பாடு மயிலின் வீட்டில் தான் என்றாலும், வீட்டிற்கும் அவர்களுக்குமான தேவையான அன்றாடப் பொருள்களையாவது வாங்கி வாருங்கள் என்று ஒரு வாரம் தொடர்ந்து சண்டையிடாத குறையாக தெய்வா கத்தினால் மட்டுமே ஆறாம் நாள் அவை வீடு வந்து சேரும். தாகத்திற்கு தண்ணீர் கேட்டால், சவத்திற்குப் பால் ஊற்றும் கதை என்று அவள் ஊரில் சொல்லும் பழமொழி ரகுவிற்குப் பொருந்திப் போவதை உணர்ந்தாள் தெய்வா.​

வீட்டிற்காக செலவு செய்வதை மொத்தமாக விட்டுவிட்டாள் தெய்வா. ரகுவை மாற்றும் நடவடிக்கையாக மாமியார் சொன்ன கேவலமான காரியத்தை தவிர்த்து மற்றவைகளை கையில் எடுத்தாள்.​

அவன் குணம் புரிந்து, வீட்டில் குடிதண்ணீர் காலியாகும் இரண்டு நாள் முன்னதாகவே தொடர்ந்து அறிவுறுத்துவாள். அப்படி இருந்தும், ஒருமுறை இப்போது போகிறேன் இன்னும் சற்று நேரத்தில் போகிறேன் என்று நேரத்தைக் கடத்தி இரண்டு நாள் வீட்டில் தண்ணீர் இல்லாமல் போட்டுவிட்டு கேவலாமாக சிரித்தான் அவன்.​

அவனுடைய எண்ணமே இப்படி அடிக்கடி செய்துவிட்டால், தன்னிடம் வேலை சொல்லாமல் தானாக இவள் ஏதாவது மாற்று வேலை செய்து கொள்வாள் என்பது தான். அந்தளவு சோம்பேறி அவன். நான் எதையும் செய்ய மாட்டேன், ஆனால் எனக்கு நீங்கள் எல்லோரும் ஓடி ஓடி உழைத்துப் போட வேண்டும் என்ற தாராள மனம் படைத்தவன்.​

இரவு நேரங்களில் குடிப்பதற்குத் தண்ணீர், மாமியார் வீட்டில் இருந்து வாட்டர்கேனில் எடுத்து வரும் போது, மயில் பார்க்கும் கேவலமான பார்வையைத் தாங்க முடியாமல் என்னடா வாழ்கை இது என்று தான் தோன்றும் தெய்வாவிற்கு.​

நாளாக நாளாக தெய்வாவின் அழுகை தொடர் கதையானது, தான் இருந்த இருப்பிற்கு இப்படி ஒருவனா தனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும். என்ன ஜென்மத்தில் என்ன பாவம் செய்ததற்கு இந்த தண்டனை என்றெல்லாம் கடவுளிடம் சண்டையிடுவாள்.​

பொறுத்து பொறுத்து போன தெய்வா, பொங்கி எழும் நாளும் வந்தது. ஒருமுறை தன் தேவையாக ஒரு பொருளை ரகுவிடம் வாங்கிக் கொண்டு வர சொல்லி இருந்தாள் அவள். அன்று பார்த்து, குடும்ப செலவுக்காக தன் கிரெடிட் கார்டை கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான் ராஜ்.​

இந்த ரகு, அண்ணனின் கார்டில் தனக்குத் தேவையான பல பொருள்களோடு சேர்த்து தெய்வா கேட்ட அந்த ஒற்றைப் பொருளையும் வாங்கி வந்திருந்தான். அதைப் பார்த்துவிட்டு ராஜ் பார்த்த அந்தப் பார்வை, தெய்வா செத்தாலும் மறக்காது. ரகுவையும் விடாமல் கேவலாமான வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தான் செய்தான் அண்ணன்காரன். ஆனால் அவனோ கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் சிரித்தான்.​

அடுத்த நாள் காலையில் சரியாக சாப்பிடும் போது, “என்னைக்கு தான் வேலைக்குப் போகப் போற, இதுவரைக்கும் கூடப்பிறந்தவனுக்கு தான் எங்க ராஜ் செலவு பண்ணிக்கிட்டு இருந்தான். இப்ப அவன் பொண்டாட்டிக்கும் சேர்த்து செலவு பண்ணணுமா?​

நாடு இருக்கும் இருப்பில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கணவன், மனைவி இரண்டு பேரும் இப்படி தினமும் சாப்பிடுகிறோமே என்ற நினைப்பு இருக்கா“ என்ற மயிலின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு ஒரு வாய் சோறு இறங்கவில்லை தெய்வாவிற்கு.​

பக்கத்தில் இருந்த ரகு, அமைதியாக இருந்திருந்தால் கூட அந்த சூழ்நிலை எப்படிக் கடந்திருக்குமோ தெய்வா அறியாள், ஆனால் அவனுடைய ட்ரேடு மார்க் கேவலமான சிரிப்பை அவன் உதிர்த்தது கண்டு, தணலில் பட்ட கரம் போல் மனம் முழுவதும் பொத்துக் கொண்டு வந்தது.​

மனிதனாகப் பிறந்து தன்மானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூடத் தெரியாத இவனோடு இந்த வாழ்வு இனியும் வாழத்தான் வேண்டுமா என்று முதல் முறையாக அன்று தான் யோசித்தாள் தெய்வா.​

“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதல் இறைக்கு“

மனதில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும் என்றான் வள்ளுவன்.​

இந்தத் தகுதிகள் இருப்பவன் தலைவனாக இருப்பதற்கு மட்டும் இல்லை, மனிதனாக இருப்பதற்குக் கூட தகுதியில்லாதவன் என்பது தெய்வாவின் கருத்து. அதைத் தான் தட்டாமல் செய்து கொண்டிருக்கிறான் ரகு. தெய்வா என்ன செய்ய இருக்கிறாள், என்பது அவளுக்கே வெளிச்சம்.​

 

NNK-27

Moderator

பிழையான விதி 6​

நல்லதோர் வீணை செய்தே- அதை

நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?

சொல்லடி சிவசக்தி!

காதில் விழுந்த பாடலில் கவனம் கலைந்து, ரகுவின் காலடியில் இருந்து எழுந்தாள் தெய்வா. அற்புதமான வீணை ஒன்றை ஆசையாய் செய்து, அதன் மதிப்பு தெரியாமல் புழுதியில் எறிவதா என்ற பாரதியின் ஆதங்கத்திற்கு தன் குரலால் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார் பின்னணிப் பாடகி ஜானகி.​

தன்னுடைய நிலையும் அந்த வீணைக்கு இணை தானே. அருமை பெருமையாய் வளர்த்த தன் தந்தை, பொறுப்பைத் தட்டிக்கழித்து, தன்னை அண்ணனிடம் ஒப்புவிக்காமல் இருந்திருந்தால், அண்ணன் அவனுக்கு ஏற்ற மச்சானைத் தேடாமல், தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளையாகப் பார்த்திருந்தால், ரகு என்னும் பாழுங்கிணற்றில் விழுவதற்குப் பதில் தானும் நல்ல ஒரு மனிதனின் கையில் மாலையாகிப் போய் இருப்போமோ என்று நினைத்து இப்போது மனம் நொந்தாள் தெய்வா.​

கழுதை மேய்ப்பவன் கையில் அவனுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட மதிப்புடைய வைரம் கிடைத்த கதை போல் ஆன தன் தலைவிதியை நொந்து முடித்தவள், தன் எதிர்காலத்திற்காக திடமான ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்ததை உணர்ந்தாள். ஆனால் என்ன முடிவு எடுப்பது என்பது தான் அவளுக்குப் புரியவில்லை.​

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்

வீட்டைச் சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் இல்லத்தரசியானால், ஒரு ஆணின் வாழ்வில் எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை என்று சொன்ன வள்ளுவரும் கூட, ஆண் ஒருவன் குடும்பத்தலைவனின் தகுதியில் இருந்து தவறுவதன் பலனைச் சொல்லவில்லையே.​

ரகுவைப் போன்ற ஆட்களிடம் தெரிந்து சிக்கிக்கொள்ளும் பெண்களே பாவம் என்னும் போது, தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்ட தன்னை நினைத்து சுயபச்சாதாபம் தாங்கவில்லை அவளுக்கு.​

எதிரே இருப்பது சுவர் என்று தெரியாமல் கதவாக எண்ணி, எப்படியாவது திறந்து விடாதா என்ற ஆசையில் தட்டித்தட்டி சோர்ந்து போனாள் தெய்வா. ரகு என்பவன் அட்டையாகப் பிறக்க வேண்டிய பிறவி, தப்பித்தவறி மனிதனாகப் பிறந்து, அடுத்தவர் உழைப்பில் காலம் தள்ள விரும்புகிறான், என்பதைப் பல போராட்டங்களின் பின்னால் ஒருவழியாக புரிந்து கொண்டிருந்தாள்.​

ரகுவை அவன் பிழைகளோடு ஏற்றுக்கொண்டு, தான் ஒருவளே தங்கள் இருவரின் வாழ்வை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல அவளுக்கு மனமில்லை. அதற்குப் பெயர் திருமணமே அல்ல, யானை கட்டி சோளம் போட்ட கதையாக, அனைத்தையும் ரகுவிற்கு மட்டுமே செய்துவிட்டு, காலத்திற்கும் வெறும் கையோடு நிற்க வேண்டிய நிலை தான் வரும் என்பது அவளுக்குப் புரிந்து தான் இருந்தது. எதையும் எதிர்பாராமல் கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு அவள் ஒன்றும் முற்றும் துறந்த ஜானி அல்ல. ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரணப் பெண்.​

துணிந்து ரகுவை விட்டு பிரிந்து தனியே செல்ல அவளுக்குத் தைரியம் இருக்கிறது தான். இருந்தாலும் தாய், தந்தையை நினைத்து மனம் தடுமாறி, மனிதர்கள் இருக்கக்கூடாத பொல்லா நிலையான மதில் மேல் பூனை நிலையில் இருந்தாள் தெய்வா.​

நடுவில் ஒருநாள் கோவில் திருவிழாவுக்கு மகளை அழைக்க குடும்பத்துடன் வந்திருந்தார் மலையரசன். சுத்தம் சுத்தம் என்று பொறுமும் மகள் ரகுவின் வீட்டில், வீட்டு உறுப்பினர்களை விட இராஜமரியாதையுடன் வளர்க்கப்படும் வெளிநாட்டு விநோதம் ஒன்றின் கெட்ட வாடை நிறைந்திருக்கும் இடத்தில் முகத்தை சுளிக்காமல் நடமாடுவதைப் பார்க்கும் போது அவருடைய மனமும் வலிக்கத் தான் செய்தது.​

நாற்காலி, துணிமணி, குடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து, சாப்பிடும் சாப்பாடு வரை நாய் முடி கிடப்பதைப் பார்க்கும் போது அவருக்கே அருவருப்பு தாங்கவில்லை. அப்படி இருக்க, சின்னத் தூசிக்கு கூட இடம் கொடாத மகள், இந்த வீட்டில் இத்தனை நாட்கள் எப்படி வாழ்ந்தாள் என்று நினைக்கும் போது கண்கள் கலங்கியது அவருக்கு.​

மலையரசன் மீது மலையென கோபம் இருந்தாலும், அவர் கவலை புரிந்தவள் போல் ரகுவைப் பற்றி சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அப்போதே சொல்லி இருக்கலாம் தான், ஆனால் விதி யாரை விட்டது. சாதாரணப் பெண்களைப் போல கணவன் வீட்டில் நடக்கும் எதையும் பெற்றோரிடம் சொல்லாமல் நல்ல மருமகளாக இல்லை நல்ல மகளாக நன்றாகவே நடந்து கொண்டாள் தெய்வா.​

வீட்டிற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவுக்கு இறைச்சி எடுப்பதற்காக அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே சண்டை வந்தது. “வாரா வாரம் நீ தானே எடுப்பாய்“ என தம்பி அண்ணனிடம் சண்டைக்குப் போக, “வந்திருப்பது உன் மாமனார் மாமியார் அவர்களுக்கு நீ தான் செய்ய வேண்டும்“ என அண்ணன் ஒருபக்கம் கத்த, என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என கைகட்டி வேடிக்கை பார்த்தாள் தெய்வா.​

தெய்வா காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவளிடம் சேமிப்பு இருக்கிறது என்பது மயில், ரகு இருவருக்குமே தெரியும். ரகு அவளுக்காக ஒரு ரூபாய் கூட செலவளிக்காத நிலையிலும், அந்த வீட்டில் அவள் தேவைகள் யாவும் நிறைவேறிக் கொண்டு தானே இருந்தது. அதை வைத்து தான் தாயும் மகனும் இதனை உறுதி செய்திருந்தார்கள்.​

இக்கட்டான நிலையில் கூட பணத்தை கொடுக்க முன்வர மறுக்கிறாளே என்று நினைத்து கோப மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தார் மயில். வீட்டினருக்குச் செலவு செய்ய மனம் உண்டு, ஆனால் பணம் இல்லை என்பவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பொறுப்பைத் தட்டிக் கழித்து, தன் சுகம் மட்டுமே பெரிது என நினைப்பவனின் ஊதாரித்தனத்துக்கு ஆதரவு கொடுத்து அவனை இன்னும் ஊதாரியாக்க தன்னால் முடியாது என்று அமைதியாகவே இருந்தாள் தெய்வா.​

இறுதியில் அந்த வீட்டின் வழக்கமான வழக்கமாக ராஜ் தான் இறங்கி வரவேண்டியதாகிப் போனது. ரகுவை அருகில் இருந்து பார்த்த சில மணி நேரங்களில், அத்தனை வருட அனுபவம் கொண்ட மனிதர் மலையரசனுக்கு அவன் குணம் யாவும் நன்றாகவே பிடிபட்டது. மகள் விஷயத்தில் மகன் செய்த மாபெரும் தவறு புரிந்தது. அடக்க முடியாத ஆத்திரம் மற்றும் கவலையுடன் தான் மகள் இந்த வீட்டில் இருக்கிறாள் என்பதை மகளைப் பற்றி அறிந்த மனிதர் நன்றாகவே கணித்தார்.​

இந்த நேரத்தில் மகளிடம் அனுசரணையாக நடந்து கொண்டால், அது வெற்றி செய்த தவறை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும். கூடுதலாய் குடும்ப கௌரவத்தைப் பற்றிய கவலை இல்லாமல், தெய்வா பாட்டிற்கு ஏதும் தவறான முடிவு எடுக்க தன் அனுசரணை ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற நினைப்பும் கலந்து இருக்க, உள்ளுக்குள் குமுறினாலும், நல்ல வாழ்வு வாழ்கிறாய், எப்படியாவது பிழைத்துக்கொள் என்றுவிட்டு ஊர் திரும்பினார் மலையரசன்.​

நாட்கள் தன் போக்கில் நகர்ந்தது. ரகுவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தெய்வாவிடம் மாற்றம் தெரிந்தது, அதுவும் அளவுக்கு அதிகமாக. பேச்சைக் குறைத்தாள், திட்டுக்கள் குறைந்தது என்று சந்தோஷம் அடைந்தான் ரகு.​

எப்போதும் எதையாவது வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள், நம்மைப் போல் அவளுக்கும் தாம்பத்ய ஆசை வந்துவிட்டது என்று தன்னால் முடிவு செய்து ஆனந்தம் அடைந்தான் அவள் கணவன்.​

செய்யும் வேலைகளில் கவனம் குறைந்து, கைகளில் சுட்டுக்கொள்ள ஆரம்பித்து, ஒருமுறை கொதிக்க கொதிக்க ஆவி முகத்தில் அடித்து முகம் முழுவதும் நன்றாக சிவந்து போனது. விபத்தாக நினைத்து கடந்து போனான் ரகு.​

காரணமே இல்லாமல் கண்களில் இருந்து கண்ணீர் தன்னால் இறங்க ஆரம்பித்தது. உள்ளங்காலில் பாளம் பாளமாக வெடிப்பு வந்து, கவனமின்மை காரணமாக பெரிதாகி கால்ஆணியாக மாறிப்போனது. நடக்கவே முடியாத நேரத்தில் கூட, அவளுக்கான கடமைகள் காத்திருக்கும் அந்த வீட்டில்.​

உறக்கம் கெட்டது, தன்னை மீறி உறங்கினால் கொடூர கனவுகள் துரத்தியது. சாப்பாடு இறங்க மறுத்தது. எதிர் பலனாக உடல் எடை இன்னும் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது. எப்பொழுது அந்த வீட்டை விட்டுச் செல்லலாம் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால் தானோ என்னவோ, தூக்கத்தில் நடக்க ஆரம்பித்தாள்.​

தன் இயல்பில் இல்லாத அந்த நேரத்தில் கதவைத் திறந்து, வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றவளை இரவு நேர வேலையில் இருந்த ரகு தான் கவனித்து இயல்புக்குக் கொண்டு வந்தான். திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் அரிதிலும் அரிதாக அவ்வப்போது வந்து கொண்டிருந்த புன்னகை யாவும் மொத்தமாகத் தொலைந்து போனது.​

மனைவியிடம் தனக்குத் தேவையான மாற்றங்கள் யாவும் வந்துவிட்டது என்று கெக்கலித்த ரகு, அவள் கொஞ்சம் கொஞ்சமாய் மனஅழுத்தத்திற்கு ஆளாகிக் கொண்டு இருப்பதைக் கவனித்தான் இல்லை.​

ஒரு முறை, மயிலும் அவர் கணவரும் சொந்த ஊரில் விஷேஷம் ஒன்றிற்குச் சென்றிருக்க, கொண்டாட்டமாகிப் போனது ரகுவிற்கு. சமையலறையில் வேலையாய் இருந்தவளை கத்தி அழைக்க, அவளும் வந்து நின்றாள்.​

அவனை விட்டுச் சற்றே தொலைவில் இருந்த மின்விசிறியின் சுவிட்சைப் போட்டுவிடச் சொல்லும் போது, “அம்மி இருந்தால் கொண்டு வந்து உங்க தலையில் போடுறேன்“ முதல்முறையாக அவனை மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.​

தாளிப்பிற்காக வெடித்துக் கொண்டிருக்கும் கடுகிற்கு முன் நின்று அதை விட மோசமாக வெடிக்கத் தயாரான நிலையில் மனம் இருந்தாலும், அவள் முகம் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தது.​

அவளுக்குள் ஓயாமல் நிகழும் சுனாமிகளும், எரிமலை வெடிப்புகளும் புரியாமல், “இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படிக் கோபமாகவே இருக்கப் போகிறாய்.​

சொந்த வீடு இருப்பதாய் சொன்னதில் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது. என் அம்மாவும் உன் அண்ணனும் சேர்ந்து பேசியது அவையெல்லாம். அப்படி அவர்கள் பொய்யே சொல்லி இருந்தாலும் தான் என்ன தப்பு.​

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இங்கு ஒற்றைப் பொய்யைச் சொல்லி நம் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.​

வரப்போகும் கணவன், மனைவியைப் பற்றி எல்லோருக்கும் ஏதாவது கற்பனைகள் இருப்பது சகஜம் தான். எனக்கும் கூட என் மனைவி வெஸ்டர்ன் உடைகள் அணிய வேண்டும், அதிநவீன நாகரிக மங்கையாக இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.​

ஆனால், உன் அதிகபட்ச நாகரிகமே சுடிதார் தான். நீ உடல் எடை வேறு சற்று அதிதகம். எனக்கு வருத்தம் தான் என்றாலும் நீதான் என் மனைவி என்று ஆன பிறகு, நான் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தானே செய்தேன். நீயும் அப்படி நினைப்பது தானே சரியாக இருக்க முடியும்.​

ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்க முடியாது. உன் அண்ணனைப் போலவோ இல்லை என் அண்ணனைப் போலவோ நான் ஏன் இருக்க வேண்டும். நான் இப்படித் தான், இது தான் என் வழக்கம்.​

வாழ்வது ஒரு வாழ்க்கை, அதில் கட்டுக்கோப்புகளுடன் வாழ எனக்குப் பிடிக்காது. கலாச்சாரம், மரியாதை போன்ற கண்ணுக்குத் தெரியாத விஷயங்களுக்காகப் பார்த்து, என்னால் என் சந்தோஷத்தைத் தொலைக்க முடியாது.​

உனக்கேற்றபடி நான் மாறிய பின்னால் தான், என்னை உனக்குப் பிடிக்கும் என்றால், அங்கே தவறு என் மீதா இல்லை உன் மீதா? உன் அளவுக்கு சுத்தமாக, பொறுப்பாக, ரோஷமாக என்னால் இருக்க முடியாது என்பது என் மீதான குறையாக எப்படி இருக்க முடியும். உன் அளவீடுகள் வேறு, என் அளவீடுகள் வேறு.​

இதுதான் வாழ்க்கை என்று முடிவான பிறகு அதில் இருக்கும் நல்லதை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, உன்னைப் போல் ஒரு சில கெட்டதுகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.​

இத்தனை நாட்களில் உன்னால் எனக்கு சின்ன சந்தோஷம் கூட கிடைத்தது கிடையாது. அதற்காக நான் உன்னை வெறுத்தேனா இல்லையே, நீ செய்யும் அத்தனை ஆர்ப்பாட்டங்களையும் என் மனைவி என்பதால் பொறுத்துப் போகிறேன். அந்தப் பரந்த மனது உனக்கு ஏன் இல்லை.​

சொந்த வீட்டில் வாழ்பவர்கள் மட்டும் தான் சந்தோஷமாக வாழ்கிறார்களா? ரோஷத்துடன் இருந்தால் இறுதிவரை ரோஷமாக மட்டும் தான் இருக்க முடியுமே தவிர, சந்தோஷமாக இருக்க முடியாது. சுத்தம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் வெறும் வார்த்தை மட்டுமே. அகத்தில் சுத்தம் இல்லாமல் புறத்தில் சுத்தமாய் இருந்து என்ன பிரயோஜனம். பொறுப்பு, ஒரு குழந்தை பிறந்தால் தன்னால் வந்துவிடப் போகிறது பொறுப்பு.​

யார் கை, காலில் விழுவேனோ, எவ்வளவு கடன் வாங்குவேனோ எல்லாம் என் பொறுப்பு. நீ சம்பாதித்து உன்னையும், என்னையும், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டால் போதுமானது. எனக்கென்னவோ நீ ஒரு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றுகிறது” இனிக்க இனிக்கப் பேசிய ரகு, இறுதியில் விஷயத்திற்கு வந்திருந்தான். இரண்டு மாதங்களாக கொடுத்த வீட்டு வாடகைப் பணம் கொடுத்தது அவனுடைய சுகபோக செலவுகளுக்குப் பற்றாமல் இருக்க, மனைவியாக வந்தவளை வேலைக்குச் செல்லத் தூண்டினான்.​

ஒருவர் தன் மன எண்ணங்களைச் சொல்லும் போது மண்ணைப் போல் இருந்தால் அது எப்படியான கடுப்பைக் கொடுக்கும் என்பதைப் புரிய வைக்க நினைத்த தெய்வா, அமைதியாக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.​

அவள் பதிலை எதிர்பார்த்தானோ என்னவோ, நிராசையான குரலில், “எனக்கும் ஆசை இருக்கும், ஒன்றும் இல்லாத காரணங்களைப் பெரிதாக்கி என்னைத் தள்ளி வைத்து மிகவும் துன்புறுத்துகிறாய்“ என்றபடி தெய்வாவை அவன் நெருங்க, தன் துருவத்தை சந்தித்த காந்தத்தைப் போல் தன்னால் விலகினாள் அவள்.​

மனம், உடல் இரண்டும் மரத்துப் போன குரலில், “உங்களுடைய ஆசைக்கு நான் இணங்கி, நாளையே உங்கள் பிள்ளையை நான் சுமக்க வேண்டிய நிலை வந்தால், முதல் மாதமே மாத்திரை, டானிக், ஸ்கேன் என்று பலஆயிரம் செலவாகும்“ என்றவள் அவன் சொல்ல வருவது புரிந்தது போல் தானே தொடர்ந்தாள்.​

“அரசு மருத்துவமனையில் பார்த்தாலும் கூடுதல் செலவுகள் நிச்சயம் இருக்கும். குழந்தை என்பது கோவில் புற்று போல, நாளாக நாளாக அதற்கான செலவுகள் அதிகரிக்குமே தவிர நிச்சயம் குறையாது.​

பேறு காலம் வரை நான் வேலைக்குச் சென்று அந்தச் செலவுகளை சமாளித்தாலும் கூட, நான் மீண்டும் வேலைக்குச் செல்ல தேவைப்படும் இடைப்பட்ட நாட்களில் செலவுக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கும். என் அண்ணன் காலில் போய் விழுவீர்களா? இல்லை உங்கள் அண்ணன் காலில் போய் விழுவீர்களா?​

ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டி தன் இல்லத்தில் கொண்டு வந்து வைத்ததோடு திருமணச் சடங்கில் ஆணின் பொறுப்பு முழுமையடைந்ததாக நீங்கள் நினைத்தால், அது மிகப்பெரிய தவறு.​

இனி, நீங்கள் என்பது நீங்கள் மட்டும் அல்ல. இதுநாள் வரை ரகு என்பவன் ரகு என்னும் தனிமனிதன் மற்றும் மயிலின் மகன். ஆனால், இனி அவன் தெய்வாவின் கணவனும் கூட.​

தெய்வாவின் கணவன் மானம் கெட்டுப் போய், அவள் அண்ணனிடம் காசுக்காக கையேந்தி நிற்பதைப் பார்ப்பதை விட செத்து சுண்ணாம்பாக போவதைத் தான் அந்த சுயமரியாதைக்காரி விரும்புவாள் என்று ஏக குரலில் கத்தினாள் அவள்.​

“சரி, உன் அண்ணனிடம் பணம் கேட்க வேண்டாம். நீ சம்பாதிக்கும் பணத்தில் சிக்கனமாக செலவழித்து, மீதியை சேமித்து வைத்தால் போகிறது“ மிகப்பெரிய யோசனை சொன்னான் ரகு.​

“அப்படியா? எனில் இடைப்பட்ட காலத்தில் நாம் தனிசமையல் துவங்கி, வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் நீங்கள் வாங்கிக் கொடுக்கிறீர்களா?“ தெய்வா கேள்வியைக் கூட முடிக்க கூட இல்லை.​

“விளையாடாதே என்னால் அவ்வளவு எல்லாம் செலவழிக்க முடியாது. நான் சம்பாதிப்பது என் சுய தேவைகளுக்கே பற்றாமல் இருக்கிறது, இந்த அழகில் வீட்டிற்கு நான் எப்படி செலவு செய்ய முடியும்.​

நீ வேலைக்குச் செல், குடும்பச் செலவுகளைச் சமாளித்துக் கொள், குழந்தைக்கு அரசு மருத்துவமனைச் செலவு போக மீதி செலவைப் பார்த்துக்கொள். மிச்சம் வைத்து பேறுகாலம் முடிந்த பிறகு குழந்தையின் தேவையை கவனித்துக்கொள். அதன்பிறகு வேலைக்குச் சென்று குழந்தையின் மற்ற செலவுகளைக் கவனித்துக்கொள். வேண்டுமானால் ஒன்று செய்யலாம், ஒரு குழந்தையோடு நாம் நிறுத்திக்கொள்ளலாம்“ சொல்லும் போதே ரகுவின் குரல் கமறியது. அவனுக்கே அவன் செய்வது அதிகம் என்று தோன்றியதோ என்னவோ.​

வடித்துக் கொண்டிருந்த சாதத்தை வெறும் கைகளால் தூக்கி பொத்தென்று தரையில் போட்டு உடைத்தாள் தெய்வா. சுடுசோறு தரையெங்கும் சிதறி அதில் சில உடலில் பட்டதற்கே நின்ற இடத்தில் நடனமாடினான் ரகு. பாதி சாதம் உடலில் பட்டு, கால்வாசி இன்னமும் உடலில் ஒட்டிக்கொண்டு இருக்க பட்டமரம் நின்றிருந்த பெண்ணவளைப் பார்தததும் ரகுவிற்கு பயம் வந்தது.​

“நான் சம்பாதித்து வீடு வாங்க வேண்டும், நான் சம்பாதித்து வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிப் போட வேண்டும், நான் சம்பாதித்து பாலில் ஆரம்பித்து மளிகைப் பொருள்கள் யாவும் வாங்கிப் போட வேண்டும், நான் சம்பாதித்து குழந்தைக்காக எல்லாம் செய்ய வேண்டும். கூடுதலாக உனக்கு வடித்துக்கொட்டி, உன் துணிமணிகளை துவைத்து, இருந்த இடத்தில் இருந்து கொண்டு நீ ஏவிய வேலைகள் யாவையும் செய்ய வேண்டும், உன் ஆசைகளுக்கு எல்லாம் இணங்க வேண்டும், இப்படி எல்லாவற்றையும் நான் மட்டுமே பார்க்க வேண்டும் என்றால் நீ என்ன மயிருக்கு இந்த வீட்டில் இருக்க வேண்டும்.​

உண்ணவும், உறங்கவும், பிள்ளை கொடுக்கவும் மட்டும் தான் நீ என்றால் அப்படியான நீ எனக்குத் தேவை இல்லை“ தலையின் இருபுறமும் கைகளை வைத்துக்கொண்டு காளியாய் கத்தினாள் தெய்வா.​

அதற்கு மேலும் அங்கு நிற்க அவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது, சென்றுவிட்டான். தெய்வா என்னும் பெண் மலையிறங்க இன்னும் நாள் ஆகும் போல என்று தான் நினைத்தானே தவிர, அவளுடைய பிரச்சனைகளுக்குப் பின்னால் இருக்கும் நியாயங்களை ஒருமுறை கூட நினைத்துப் பார்த்தான் இல்லை.​

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் இல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள் என்பது வள்ளுவன் வாக்கு.​

பெருந்தீனி, உல்லாச சுற்றுலா, கண்ணைக் கவரும் வேண்டாத பொருள்கள் மீதான மோகம், நற்பண்புகள் கொண்ட மனிதர்கள் யாவும் கற்காலத்தில் பிறந்திருக்க வேண்டியவர்கள் என்ற நினைப்பு.​

வீட்டில் இருக்கும் தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, குழந்தை யாவரும் பெரிய சுயநலவாதிகள். நம்மிடம் இருந்து அவர்களுக்குத் தேவையான யாவும் கிடைக்கும் வரை மட்டுமே நம்மை மதிப்பார்கள் என்று தீயவை சொல்லிக்கொடுக்கும் கூடாநட்பு போன்ற சிற்றின்பத்தை விடுத்து வேறு எதுவும் தேவையில்லை. தனக்கு கிடைக்காத அவை யாவும் தவறானவை என்ற நினைப்பில் வாழும் ரகுவைப் போன்ற ஆட்களை வைத்து நன்றாக வாழ நினைப்பது, அமாவாசை நாளில் முழுநிலவுக்காக ஏங்குவதற்குச் சமம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டாள் தெய்வா.​

 

NNK-27

Moderator

பிழையான விதி 7​

“திருமணம் முடித்த ஆண்கள் அனைவரும் கணவன் ஆகமாட்டார்“ என்ற பண்டைய பழமொழி தான் ரகுவின் விஷயத்தில் எத்தனை உண்மையாகிப் போனது. சுடுசோறு கொட்டி கை, கால் எனப் பல பகுதிகள் லேசாக வெந்து போய், அதைவிட அதிகமாக வெந்து கொண்டிருக்கும் மனதோடு நின்றிருந்த மனைவியைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல், அடுத்த அரை மணி நேரத்தில் பசிக்கிறது சாப்பாடு தயாரா என்று கேட்பவனை என்ன செய்தால் தகும் என்று மனதில் நினைத்தாள் தெய்வா.​

நீ இழுத்துக் கொண்டது தானே நீயே பார்த்துக்கொள் என்கிற ரீதியில் அமைதியாக இருந்தான் ரகு. தெய்வாவும் அப்படித் தான் நினைத்தாளோ என்னவோ, தானே சென்று அருகில் இருக்கும் மருந்தகம் ஒன்றில் மருந்தை வாங்கி வந்து சமாளித்தாள்.​

குருட்டுக்கோழிக்கு கிடைக்கும் ஒற்றைத் தானியம் போல், குடிகாரனுக்கும் மனைவி அமைந்துவிடுகிறாள் என்பது பழமொழி. விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்பது உண்மை என்றால், சற்றும் பொருத்தம் இல்லாத இருவரை இணைத்து வைத்து இந்த விதி ஏன் வேடிக்கை பார்க்கிறது, மனித அட்டையான ரகுவிற்கு, அவனுடைய குணத்தை ஒத்த ஒருத்தி மனைவியாக வாய்க்காமல், தன்னைப் போன்ற ஒருத்தி ஏன் வர வேண்டும் என்று பிழையான தன் தலைவிதியை எழுதிய பிரம்மனை மனதினுள் திட்டியபடி நாட்களை நகர்த்தினாள் தெய்வா.​

வாரப் பத்திரிக்கை ஒன்றில் திருமணத்தின் போது எடுத்துக் கொள்ளப்படும் ஏழு சபதங்களுக்கான விளக்கங்களை தெய்வா பார்க்க நேர்ந்தது.​

முதல் சபதம்:

ஓம் ஏஷ ஏகபதி பவ இதி ப்ரதமன்

மணமகனான நான், என் மணமகளான உங்களுக்கு, ஆயுளுக்கும் மகிழ்ச்சியையும், உணவையும் வழங்குவேன். உங்களுடைய ஊட்டச்சத்தைக் கவனித்துக் கொள்வேன், என உறுதி கொடுப்பதாய் அமைவது, திருமணத்தில் மணமகன் மணமகளுக்குக் கொடுக்கும் முதல் சத்தியம்.​

“பொறுப்பான குடும்பத் தலைவியாக இருந்து, நம் குடும்பத்தை நீ மட்டுமே கவனித்துக்கொள், கூடுதலாக என்னையும் பார்த்துக்கொள். ஆண்கள் சம்பாத்தியத்தில் பெண்கள் வாழ்ந்தால் அது கௌரவம், இதுவே பெண்களின் சம்பாத்தியத்தில் ஆண்கள் வாழ்ந்தால் அது கௌரவம் ஆகாதா?​

நான் உன் வீட்டினரைப் போல ஆணாதிக்கவாதி இல்லை. உண்மையில் முப்பத்தைந்து வயதிற்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கி, உனக்கான வீட்டு வேலையில் சின்னச்சின்ன உதவிகளைச் செய்துகொண்டு, இருந்துவிடலாமா என்ற நினைப்பில் இருக்கிறேன்“ என்ற ரகுவின் பேச்சு நினைவு வந்தது தெய்வாவிற்கு.​

தனம் தானியம் படே வதேத்

மணமகனின் சத்தியத்தைத் தொடர்ந்து, மணமகள் ஏற்கும் திருமணத்தின் முதல் சத்தியம், மணமகளான நான், என் கணவரையும் அவரது குடும்பத்தினரையும் நன்றாகக் கவனிப்பதாக உறுதியளிக்கிறேன். எங்களின் வீடு, உணவு மற்றும் நிதி ஆகியவற்றைக் கவனிப்பதில் எனது பொறுப்பை உணர்ந்து, பகிர்ந்து கணவரின் பழுவைக் குறைப்பேன். நாடாளும் ராஜாவாக அவர் இருக்க, அவர் அரண்மனையோடு சேர்த்து, அவரையும் அன்போடு ஆளும் ராணியாக நான் இருப்பேன் என்ற பொருளில் மனைவி தன் ஆயுளுக்கும் அன்புடன் கடைப்பிடிக்க வேண்டிய சத்தியமாகும் இது.​

“மனைவியின் காலைப் பிடித்துக் கிடப்பது எனக்கு ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் தீவிர இரசிகன் நான். ஒரு ஆணின் வாழ்க்கையே அவன் சார்ந்திருக்கும் பெண்ணின் காலடியில் தான் இருக்கிறது என்பது தான் அவரின் வேத வாக்கு.​

உன் காலடியில் கிடந்து, உன் பொறுப்பில் (உழைப்பில்) வாழ்வதற்கு எனக்கு எந்த கௌரவக் குறைச்சலும் இல்லை. உன் பணம் வேறு என் பணம் வேறா“ இனிக்க இனிக்க தான் ரகு பேசினான் என்றாலும், அந்த வார்த்தைகள் யாவும் தெய்வாவிற்கு வேப்பங்காயை விட மோசமாக கசக்கத் தான் செய்தது.​

இரண்டாம் சபதம்:

ஓம் ஊர்ஜே ஜர தஸ்தயாஹா

பவித்திரமான அக்னியின் சாட்சியாக கணவன், மனைவி ஆகிக் கொண்டிருக்கும் நாங்கள் இருவரும் பல்லாண்டு காலம் ஆனந்தமான வாழ்க்கையை நடத்த, உடல் மற்றும் மன வலிமையைத் தரவேண்டும் என மணமகன் கடவுளிடம் கோரிக்கை வைப்பது திருமணத்தில் அவனின் இரண்டாம் சபதம்.​

“தான் உயிர் கொடுத்த பிள்ளைகள் எப்படி இருந்தாலும் ஒரு தாய் அதை இரசிப்பாள், பாதுகாப்பாள். குளிக்காமல் என்னைப் பார்க்க வரக்கூடாது, மாதவிலக்கு காலத்தில் என்னைப் பார்த்தால் எனக்கு கோவம் வரும் என்று சொல்லும் தெய்வங்கள் யாவும் தெய்வங்களே அல்ல“ திருமணமான முதல்வாரம் கோவிலுக்குச் செல்வதற்காக குளிக்கச் சொல்லி தெய்வா மீண்டும் மீண்டும் சொல்லும் போது ரகு சொன்ன வார்த்தைகள் இவை. அவன் ஏதோ புரட்சிக் கருத்து சொல்கிறான் என்று நினைத்து அப்போது கடந்து விட்டிருந்த பெண்ணிற்கு. குளிக்கவும், கோவில் சுற்றுப்பிரகாரத்தில் நடக்கவும் சோம்பேறித்தனப் பட்டு தான் அவன் கோவில் வர மாட்டேன் என்கிறான் என்பது புரிந்ததும் தலையில் அடித்துக்கொள்ளத் தான் தோன்றியது.​

குடும்பூர்ண் ரக்ஷயிஷ்யம்மி ச அரவிந்தரம்

மனைவியாகிக் கொண்டிருப்பவள் அவள் கணவனாகிக் கொண்டிருப்பவனுக்குக் கொடுக்கும் இந்த இரண்டாவது சத்தியத்தின் அர்த்தம், அவருடைய மணமகளான நான், ஆயுளுக்கும் அவர் அருகிலேயே இருப்பேன். என் நடத்தையின் மூலமாக அவருடைய தைரியம் மற்றும் வலிமையின் ஆதாரமாக இருப்பேன் என்பது.​

“என்னுடைய ஆதாரமே நீ தான் தெய்வா, நீ இல்லாமல் என் வாழ்க்கை என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. என் எதிர்கால திட்டங்கள் யாவிலும் உன்னைத் தான் முன்னால் நிறுத்தியிருக்கிறேன்“ என்ற ரகுவின் வார்த்தைகளின் உண்மையான பொருள் புரியாத அளவு முட்டாளாக தான் இன்னும் மாறவில்லை என நினைத்து கசப்பாகப் புன்னகைத்துக் கொள்வாள் தெய்வா.​

மூன்றாம் சபதம்

ஓம் ராயஸ் சந்து ஜோர தஸ்தயாஹா

வெற்றிகரமான வாழ்க்கையை கட்டியெழுப்ப, நான் அயராது பாடுபடுவேன். நம் இருவரின் கனவுகள் மற்றும் அபிலாஷைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை ஆதரிப்பதாக உறுதியளிக்கிறேன். என் துணையின் லட்சியத்திற்கு என் ஈகோ மற்றும் பொறாமை ஒருபோதும் தடையாக இருக்காது. என் துணையின் வெற்றி மற்றும் மகிழ்ச்சியில் முழு மனதுடன் பங்கு பெறுவேன் என்பது கணவன் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மூன்றாம் வாக்கு.​

சபதத்திற்கான அர்த்தத்தைப் படிக்கும் போது, “வாழும் வரை என் மனதிற்குப் பிடித்த வகையில் வாழ்ந்துவிட்டு, வெகுவிரைவில் சாவது என்றால் கூட எனக்குச் சந்தோஷம் தான். அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று எந்த வித கட்டுப்பாடுகளும் அதன் பிறகு இருக்காது.​

நமக்காக வாழ வேண்டும் என்று இல்லாமல், தன்னைப் பிறப்பித்த காரணத்திற்காக அப்பா அம்மாவிற்கு, தாலி கட்டி குழந்தை பெற்றுக் கொடுத்த காரணத்துக்காக மனைவிக்கு, என்னில் இருந்து பிறந்ததால் குழந்தைகளுக்கு என்று மற்றவர்களுக்காக உழைத்து தேய்வது தான் வாழ்க்கை என்று யார் சொல்லி வைத்தார்களோ“ என்ற ரகுவின் பொருமல் தான் நினைவுக்கு வந்தது.​

தவ பக்தி வதேத்வாச்சா

நீங்கள் என் கணவனாக இருப்பதால் என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களை மட்டுமே நேசிப்பேன். என் வாழ்க்கையில் மற்ற ஒவ்வொரு மனிதனும் இரண்டாம் பட்சமாக மட்டுமே இருப்பான். உங்களுக்காக நான் தூய்மையாக இருப்பேன் என்பது தான் பெண்ணானவள் திருமணத்தின் போது தன் கணவனுக்கு கொடுக்கும் மூன்றாம் வாக்கின் அர்த்தமாகும்.​

“ரகு என்ற ஒருவன் செய்து வைத்திருக்கும் வேலையால் காயப்பட்ட நெஞ்சம் ஆறவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும், இந்த அழகில் இன்னொருத்தனா“ நினைப்பே சிரிப்பைத் தான் கொடுத்தது. சற்று சத்தமாகச் சிரிக்கவும் செய்தாள்.​

ஆதித்யா டீவியை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாலும், அமாவாசை வானம் போல முகத்தை இருளாக வைத்திருக்கும் தெய்வாவின் திடீர் சிரிப்பு, ரகுவிற்கு சற்றுப் பயத்தை தான் கொடுத்தது. எட்டிப் பார்த்துவிட்டு தன் ஆஸ்தான இடமான மெத்தையில் படுத்துக் கொண்டான்.​

நான்காம் சபதம்:

ஓம் மாயோ பவ்யஸ் ஜரதாஸ்தயா ஹா

நீங்கள் என் வாழ்க்கையில் புனிதத்தை கொண்டு வந்து என்னை நிறைவு செய்தீர்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு உயரத்தையும் சேர்ந்தே கொண்டாடலாம். உயர்வு மற்றும் தாழ்வு நிலையில், ஒருவருக்கொருவர் சாய்வதற்கு தோள்பட்டையாக இருக்கலாம். வாழ்க்கையில் ஒவ்வொரு சவாலையும் ஒன்றாகச் சந்தித்து சமாளிக்கலாம்.​

உங்களுடைய குடும்பத்தை நானும், என் குடும்பத்தை நீங்களும் நேசிப்போம், மதிப்போம். கணவன் தன் மனைவியைக் கௌரவிக்கும் நான்காம் வாக்காகும் இது.​

“உனக்கு நான் தான் என்பது விதி. உனக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இந்த ஜென்மத்திற்கு நான் தான். என்னோடு தான் நீ வாழ்ந்தாக வேண்டும், என்னைத் தான் முத்தமிட்டாக வேண்டும், என்னோடு தான் இணைந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இது மாறாது, மாற என் அம்மா விடவும் மாட்டார்கள். விரைவில் உன் மனதை மாற்றிக்கொண்டு அனைத்திற்கும் தயாராகு.​

என் அம்மாவோடு நல்ல உறவை நீ வளர்த்துக் கொள்வது இன்றியமையாத ஒன்று, அதற்காக உன் அம்மா அப்பாவுடன் நன்றாகப் பழகச் சொல்லி என்னைத் துன்புறுத்தாதே என்று சொன்ன ரகு கண் முன்னால் வந்து போனான் தெய்வாவிற்கு.​

லாலயாமி ச படே வதேத்

நான் தலை முதல் கால் வரை மகிழ்ச்சியைப் பொழிவேன். என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் உங்களைப் பிரியப்படுத்த முயற்சிப்பேன். ஒரு மனைவி கணவனைப் பார்த்து இப்படிச் சொல்வது தான் அவள் அவனுக்கு கொடுக்கும் நான்காவது வாக்காம்.​

“இன்னும் சில மாதங்களில் குழந்தை ஏன் இன்னும் இல்லை என்று பார்க்கும் யாரும் உன்னைப் பார்த்து கேட்கத் தான் போகிறார்கள். அந்தப் பேச்சிற்குப் பயந்தாவது நீயாக என்னைத் தேடி வருவாய் பார்.​

நான் ஆண் என்ற அகம்பாவம் கொஞ்சமும் இல்லாமல் இருப்பவன், எங்கள் வீட்டில் மட்டும் காதல் திருமணத்தை ஆதரிக்கும் அளவு பெரிய மனம் படைத்தவர்களாக இருந்தால் என்னை விட பெரிய பதவியில் இருக்கும் பெண்களை மிகவும் சுலபமாக என்னைக் காதலிக்க வைத்திருக்க முடியும் தெரியுமா? என்னைப் போன்ற குணம் உள்ள ஒருவன் கிடைப்பதற்கு நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்ற ரகு நினைவில் வர சத்தமாய் சிரித்து அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்தாள் பெண்.​

ஐந்தாம் சபதம்:

ஓம் ப்ரஜாப்யஹா சந்து ஜரதாஸ்தயஹா

இறைவன் முன்னிலையில் நடக்கும் எங்கள் திருமணத்தை பூர்த்தி செய்யும் விதமாக, ஆரோக்கியமான மற்றும் உன்னதமான குழந்தைகளை எங்களுக்கு கொடுத்து இறைவன் அருள் செய்ய பிரார்த்தனை செய்கிறேன்.​

எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருந்து அவர்களை நன்றாக வளர்த்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதாக உறுதியளிக்கிறேன் என்பது கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் ஐந்தாம் வாக்கு.​

“குழந்தையின் விஷயத்தில், மொத்தப் பொறுப்பும் உன்னுடையது“ என்று ரகு சொன்னது நினைவு வர, இதழோரம் துளிர்த்த கசப்பான புன்னகையுடன், இந்த மந்திரங்களையும் அதன் அர்த்தங்களையும் எழுதிய பெரியோர்கள் இப்போது இருந்தால், ரகுவைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தாள் பெண்.​

ஆர்தே அர்பா சபடே வதேட்

நீங்கள் விரும்பி வழங்கும் குழந்தைகளை அன்போடு பெற்றுக்கொண்டு, அவர்களை அன்பாகவும், சுதந்திரமாகவும் நல்ல குணங்களோடும் வளர்த்து, அவர்களின் சொந்த வாழ்க்கையையும் அடையாளங்களையும் அவர்களே கட்டமைக்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கி, அவர்களின் கனவுகளை ஆதரித்து திறமையானவர்களாக சமுதாயத்திற்கு வழங்குவதை என் கடமையாக ஆனந்தமாக ஏற்றுக்கொள்கிறேன் என்பது மனைவி கணவனுக்கு கொடுக்கும் ஐந்தாம் சத்திய வாக்கு.​

குழந்தையை வளர்ப்பதைப் பற்றி நீ சிறிதும் பயம்கொள்ள வேண்டாம். நான் பகல் எல்லாம் உறங்குவதால் நீ வேலைக்குச் செல்லும் போது என் அம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிடலாம். அவர்கள் என்னை வளர்த்தது போல அவனை நல்லபடியாக வளர்ப்பார்கள் என்ற ரகுவின் வார்த்தைகள் நிஜமானால் என்ன செய்வது என்ற கற்பனையே உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் இராஜநாகமாய் கண்முன் படமெடுத்து நிற்பது போல் தோன்றி அவளை நடுங்க வைத்தது.​

ஆறாம் சபதம்:

ருதுப்ய ஷட் பதி பவ

இப்போது என்னுடன் ஆறு அடிகள் எடுத்துள்ளீர்கள். நீங்கள் என் இதயத்தை அளவற்ற மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளீர்கள். எல்லாக் காலங்களிலும் இப்படி என் இதயத்தை மகிழ்ச்சியில் நிரப்பும் தயவை நீ செய்வாயா? என்று மனைவியிடம் கணவன் கேட்பதாய் அமைந்தது ஆறாம் சபதம்.​

“என்னைத் திருமணம் செய்ததால் நீ நன்றாக இல்லை என்றால், உன்னால் யாருடனும் நன்றாக வாழ்ந்திருக்க முடியாது. என்னால் என் குடும்பத்தால் உனக்கு நல்ல வாழ்வு தான் கிடைத்திருக்கிறது. நான் தான் எந்த சுகமும் இல்லாமல் அல்லாடுகிறேன் என்று மனசாட்சியே இல்லாமல் ரகு சொன்ன போதே அவன் வாயைக் கிழித்து விட்டிருக்க வேண்டுமோ என்று இப்போது தோன்றியது தெய்வாவிற்கு.​

யஜ்ஞ ஹோம் ஷஷ்டே வச்சோ வதேத்

நான் எப்போதும் உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்பது மனைவி கணவனுக்கு கொடுக்க வேண்டிய ஆறாம் வாக்கு.​

திருமணம் ஆகி வந்த சில தினங்களிலே ரகுவை விட்டு ஓடி விடலாமா என்று நினைக்கத் துவங்கிய மனது இப்போது வரை மாற்றி நினைக்கவில்லையே, இந்த வாக்கை என்றும் தன்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து வெதும்பினாள் தெய்வா.​

ஏழாம் சபதம்:

ஓம் சகி ஜரதாஸ்தாயஹ்கா

இனி, நீயே என்னுடைய சிறந்த நண்பன் மற்றும் உறுதியான நலம் விரும்புபவன். கடவுள் உன்னை ஆசீர்வதித்து, அதன் மூலமாக என்னையும் ஆசிர்வதிக்கட்டும். நாம் இப்போது கணவன் மனைவியாக, ஒன்றாக இருக்கிறோம், இறுதி வரை ஒன்றாகவே இருப்போம் என்பது திருமணத்தில் கணவன் என்னும் பதவி ஏற்பவன் மனைவிக்கு கொடுக்க வேண்டிய இறுதி வாக்கு.​

இது வெறும் வார்த்தைகளில் இருக்க வேண்டியது அல்ல, மாறாக நிஜத்தில் நடத்திக்காட்ட வேண்டியது என்பதை ரகுவிற்கு யார் புரிய வைப்பது என்று தன்னோடு நினைத்து வருந்தினாள் தெய்வா.​

அத்ரம்ஷே சாக்‌ஷிணோ வதேத் படே

கடவுள் சாட்சியாக நான் இப்போது உங்கள் மனைவி. என்றென்றும் ஒருவரையொருவர் நேசிப்போம் மதிப்போம் பொற்றுவோம். மனைவி கணவனுக்கு கொடுக்க வேண்டிய கடைசி வாக்கை தன்னால் ரகுவிற்கு முழுமனதாகக் கொடுக்க முடியுமா? என்ற பலத்த சிந்தனை தோன்றியது தெய்வாவிற்குள்.​

திருமணம் என்பது இந்த ஏழு வாக்குறுதிகளின் அடிப்படையில், நடைபெறும் புனிதமான ஒப்பந்தமே ஆகும். கணவன், மனைவி இருவருக்கும் வேறுவேறு கடமைகள் இருந்தாலும், பொதுவில் அவர்கள் இருவரும் ஒன்று தான்.​

ஆண், பெண் இருவருக்கும் இடையேயான ஊட்டச்சத்து, வலிமை, செல்வம் மற்றும் செழிப்பு, குடும்பம், சந்ததி மற்றும் குழந்தைகள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி, காதல் மற்றும் நட்பு என அனைத்தும் கலந்த கலவை தான் திருமணம் என்னும் நீண்டகால பந்தத்தின் அழிக்க முடியாத பொருள்.​

ரகுவுக்கும் தனக்கும் நடந்த இந்தத் திருமணத்தில் இதில் ஒன்றாவது சரியாகப் பொருந்தி இருக்கிறதா என்று தெய்வா எவ்வளவு யோசித்தும் அதற்கான பதிலாகக் கிடைத்தது என்னவோ பூஜ்ஜியம் தான், அவள் திருமண வாழ்வைப் போல்.​

”நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு“

நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது வளர்பிறை போல நாளுக்கு நாள் வளரும், பேதைகளின் நட்பு தேய்பிறை போல நாளுக்கு நாள் தேய்ந்து போகும் என்பது வள்ளுவன் வாக்கு.​

ரகுவுக்கு ஒரு நண்பன் இருக்கிறான், இவனால் அவன் கெட்டானா? இல்லை அவனால் இவன் கெட்டானா? என்பது இன்று வரை ரகுவைத் தெரிந்த யாவருக்கும் பதில் தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது.​

“என் நண்பன் கார்த்தி, அப்படியே என்னைப் போல் இருப்பவன். பாவம் அவனை அவன் மனைவி விட்டுச் சென்றுவிட்டாள். இந்தப் பெண்கள் ஏன் கணவன் தனக்குப் பிடித்தது போல் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.​

நாங்கள் பாவம் இல்லையா? எங்களுக்கும் மனது இருக்கிறது, எங்கள் இஷ்டப்படி மட்டுமே வாழ எங்களுக்கு உரிமை இருக்கிறது“ என்ற ரகுவின் வாதம் இந்த நேரத்தில் நினைவு வரவும், கண்கொண்டு பார்த்தே இராத கார்த்தியின் மனைவி என்கிற அந்தப் பெண்ணை ஆரம்ப காலகட்டத்தில், நடந்தது என்னவென்றே தெரியாமல் வெறுத்ததற்காக, இப்போது தன்னை நிந்தித்துக்கொண்டாள் தெய்வா. பாவம் அவள் என்ன இக்கட்டான நிலையில் கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாளோ என்று இப்போது பரிதாபம் தான் ஏற்பட்டது.​

அவளுக்காக இவள் பரிதாபப்படுகிறாள், ஆனால் இவளுக்கு பரிதாபப்பட யாரும் வரப் போவதில்லை என்ற உண்மை, ரகுவைப் பிரிந்த சில நாட்களில் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் புரியும். அதற்குப் பிறகு தெய்வா என்ன செய்ய இருக்கிறாள் என்பது தான் அவள் எதிர்காலத்தை தீர்மானிக்க காத்திருக்கிறது.​

 

NNK-27

Moderator

பிழையான விதி 8​

சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்

பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி

-ஐந்திணை ஐம்பது

நெடுந்தொலைவு நடந்து வந்த ஜோடி மான்கள், மிகக்குறைவான அளவே தண்ணீர் உடைய சின்னக் குட்டையைக் கண்டுபிடித்தன. கண்ட நொடியில் ஆசையாய் இரண்டு மான்களும் அதன் அருகே சென்று நீரைப் பருக ஆரம்பித்து நெடுநேரம் ஆகியும் தண்ணீர் அதில் குறையவே இல்லை .​

காரணம் ஆண்மான் குடிக்கட்டும் எனப் பெண்மானும், பெண்மான் குடிக்கட்டும் என ஆண்மானும் நீரைக் குடிப்பது போல் நடித்துக்கொண்டிருந்ததாம்.​

புனிதமான காதலுக்கு இந்த இரண்டு மான்களின் குணங்களை எடுத்துக்காட்டாய் சொல்லும் பழந்தமிழ் இலக்கியமான ஐந்திணை ஐம்பது, இவற்றின் மூலமாக மனிதர்களுக்கும் சில நெறிமுறைகளையும் கோடிட்டுக் காட்டி இருக்கிறது.​

அவை கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும், ஒருவரை மற்றவரை மதிக்க வேண்டும், ஒருவர் நலத்தை மற்றவர் விரும்ப வேண்டும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பண்பு வேண்டும் என்பதே.​

இப்படியான நல்ல பாடல்களையும் அதன் அர்தத்தையும் சொல்வதோடு சேர்த்து, உயிரைக் கொடுத்தேனும் காக்க வேண்டிய மனைவியை, தன் சோம்பேறித்தனத்துக்காக நாளும் பொழுதும் அல்லாட விடுபவன் மனிதனே அல்ல என்பதைத் தெய்வா பல நாட்களாக பல விதமாக எடுத்துச் சொல்லியும் ரகு கொஞ்சமும் புரிந்து கொள்ளவில்லை.​

அவனுடைய நல்லதுக்காக என்று தெய்வா சொன்ன நல் வார்த்தைகள் யாவையும் மூளைக்கு ஏற்றினால் அதன் புதுமை கெட்டுவிடும் என்பதற்காக வலது காதில் வாங்கி இடது காதில் விட்டுவிட்டு வழக்கம் போல் தன் ஆகாத வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.​

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு

அறிவற்ற ஒருவன் தான் அறிந்ததை மட்டும் வைத்துக்கொண்டு தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான் என்கிறார் வள்ளுவர்.​

ரகுவைத் திருத்துகிறேன் என்று முயற்சி செய்து, தனக்குத் தானே முட்டாள் பட்டம் தயாரித்துக் கொண்டிருந்தாள் தெய்வா. ஆணோ பெண்ணோ யாரும் யாரையும் திருத்த முடியாது, அவர்களாக மனம் திருந்தி மாறினால் தான் உண்டு என்பதை, ரகு என்னும் கல்சுவற்றின் மீது பலமுறை மோதிப் பார்த்த பிறகு தான் புரிந்து கொண்டாள் பேதை.​

ரகுவுடன் தன்னால் நிம்மதியான வாழ்வை நிச்சயம் வாழ முடியாது என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்ட பிறகும் அதை நடைமுறைப்படுத்துவதில் அவளுக்கு பல தடைகள்.​

அதில் அவள் சொந்த மனமும் ஒன்று. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை உடலில் ஓடும் இரத்தத்தை விட அதிகமாக ஊறிப் போய் இருந்தது அவளுள். அதற்குக் காரணமும் மலையரசனே, சிறுவயதில் அவள் ஆசையாய் விரும்பிப் பார்த்த சீரியல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் மறுமணதை மையமாகக் கொண்டது.​

“மறுதாலி கட்டும் நாடகத்தைப் பார்த்து பார்த்து நீயும் பலதாலி கட்டிக்கொள்ளப் போகிறாயா?“ என்று கேட்டு அந்தச் சின்னப் பிஞ்சு மனதை வெகுவாக நோகடித்திருந்தார் அவர். அந்த வார்த்தைகள் கொடுத்த ஆழம் தான் அவளை வெகுவாகத் தயங்க வைத்தது.​

ரகுவைப் பிரிவதற்கு அவளிடம் நியாயமான காரணங்கள் இருந்தது. அந்தக் காரணத்தை நூற்றில் நாற்பது சதவிகிதமாவது தன் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அதற்குப் பின்னால் என்ற பெரிய கேள்வியும் உடன் சேர்ந்தே அல்லவா வந்தது.​

காலம் முழுக்க தனியாக வாழும் தைரியம் அவளுக்கு நிறையவே இருக்கிறது தான். ஆனால் அதற்கு அவளுடைய வீட்டினர் விட மாட்டார்கள் என்பதும் உறுதி. தெய்வா தனியாக வாழ்வது என்பது அவளுடைய எதிர்காலத்தை விட, அவள் குடும்ப கௌரவத்தை அதிகமாகக் குலைத்துவிடும் என்பது தான் மலையரசன், வெற்றியின் கருத்தாக இருக்கும் என்பதை அவள் நன்றாகவே அறிவாள்.​

பண்டைய காலம் போல் பெண்களைப் படிக்க விடாமல் வீட்டோடு முடக்கி வைத்து, உரிய நேரத்தில் திருமணம் முடித்து கடமையை முடிப்பதை விட பெரிய பாவம், சமுதாயத்திற்குப் பயந்து பெண்களைப் படிக்க வைத்து, நாலும் தெரிந்து கொண்ட பட்டதாரியான மகள் பழையபடி, நியாயமே இல்லாத தன்னுடைய கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டு தனக்கு அடங்கி வீட்டில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது.​

பறக்கத் தெரியாத இளம் இறக்கைகள் வெட்டப்படுவதை விட, சிறகடித்துப் பறந்து படித்த வளர்ந்த இறக்கைகளை வெட்டும் போது உண்டாகும் வலி உயிர்வதைக்குச் சமம் என்பதை மலையரசனைப் போன்ற ஆட்கள் இன்றும் என்றும் புரிந்துகொள்ளப் போவது இல்லை.​

ஏற்கனவே சில பல காரணங்களால் திருமணத்தின் மீது நாட்டம் அதிகம் இல்லாமல் இருந்த தெய்வா ரகுவின் தயவால் திருமணம், மணவாழ்வு என்பதை மொத்தமாகவே வெறுத்துவிட்டாள்.​

இப்போது இருக்கும் சூழ்நிலையில் ரகுவைப் பிரிவது என்பது அவளுக்கு சந்தோஷம் தான் என்றாலும், அதன்பிறகு இன்னொருவனுடன் மாலையும் கழுத்துமாக மணமேடை ஏறி, அவன் மனைவியாக அவன் இல்லம் சென்று, அவன் தாய் தந்தையை அத்தை மாமா என்று அழைத்து, ஏற்கனவே நடந்தது எல்லாவற்றையும் முதலில் இருந்து மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பே ஒருமாதிரி அருவருப்பைக் கொடுத்தது.​

மற்ற பெண்களைப் பற்றி அவளுக்குத் தெரியாது. தன்னைப் பொறுத்த வரை இம்மாதிரியான உணர்வுகள் யாவும் கொடூரத்தின் உச்சம், தன்னால் நிச்சயம் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாது என்பது தற்போதைய அவளின் தீர்மானமான எண்ணமாக இருந்தது.​

அதற்காக ரகுவோடு வாழப்போகிறாயா? என்ற மனசாட்சியின் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. மதில் மேல் பூனையின் நிலையில் நின்றவள் தீர்க்கமான முடிவை எடுக்கும் நாளும் வந்தது. அப்படிச் சொல்வதை விட எடுக்க வைத்தார்கள் ரகுவும், மயிலும்.​

ரகு குணம் புரிந்து, மாதம் பிறந்த முதல் தேதியே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்திருந்தாள் அவனுடைய நண்பன் மணி என்பவன். தந்தை இளவயதில் இறந்து போக, தன்னுடைய சுயசம்பாத்தியத்தில் தங்கைக்கு நகை, பணம் சேர்த்து திருமணம் கைகூடி வந்திருக்கும் வேளையில் கூடுதல் செலவுக்குப் பணம் தேவைப்பட்ட காரணத்தால், இவனிடம் கொடுத்த கடனை கேட்டு வந்திருந்தான்.​

இரண்டு நாட்களில் கட்டாயம் திரும்பித் தருகிறேன் என்று சொன்ன ரகு, அவன் வீட்டை விட்டுச் சென்ற அடுத்த நொடி அதைச் சுலபமாக மறந்து போனான். இரண்டு நாள் கழித்து தெய்வா நியாபகமாய் மணியின் கடனைப் பற்றிக் கேட்டதற்கு கொடுத்துவிட்டேன் என்று அசராமல் பொய் சொன்னான்.​

இச்சம்பவம் நடந்து நான்காம் நாள் இரவு நேரத்தில், உணவு உண்ணும் போது அடுத்த நாள் காலையில் மும்பைப் பணயம் இருப்பதை ஒரு தகவலாகச் சொன்னான் அனைவரிடமும்.​

‘ ஏன்? எதற்கு? யாருடன் செல்கிறாய்? என்று எல்லோரும் எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தும் சிரித்தே சமாளித்தான். களிமண்ணுடன் பேசுவதும் இவனுடன் பேசுவதும் ஒன்று தான் என்று அவனை விட்ட மயில், தெய்வாவைப் பிடித்துக்கொண்டார்.​

“பொறுப்பில்லாதவனுக்கு பொறுப்பான உன்னைக் கட்டி வைத்தால் நீயாவது அவனுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துவாய் என்று நினைத்தால் அவனைக் கெடுப்பதே நீ தான் என்று இப்போது தான் தெரிகிறது“ என்று கடுமையாகச் சாடினார்.​

“உங்களைப் போலவே இப்போது தான் எனக்கும் விஷயம் தெரியும்“ என்பதை எவ்வளவோ அவள் எடுத்துச் சொல்லியும் மயில் கேட்பதாக இல்லை. “அதெப்படி கட்டியவளிடம் சொல்லாமல் அவன் ஒரு பயணத்தைத் திட்டம் இடுவான். பொய் சொல்லி உன் புருஷனைக் காப்பாற்ற நினைக்காதே“ என்று புதிதாய்ப் பேசினார்.​

அவள் திட்டு வாங்குவதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரகு உண்மையைச் சொல்வதற்கு என்ன, அவளைத் திட்டாதீர்கள் என்று தாயைத் திருத்துவதற்குக் கூட வாயைத் திறக்கவில்லை.​

அவளுக்கும் விஷயம் தெரியாது என்ற உண்மையைச் சொன்னால் தனக்கு திட்டுவிழும் என்று நினைத்து கட்டியவளை பெற்றவள் கண்டமேனிக்கு திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.​

தங்களுடைய வீட்டிற்குச் சென்றதும் வழக்கம் போல் மனைவி திட்ட ஆரம்பிப்பாள், நாளை அதிகாலையே கிளம்ப வேண்டும். அதனால் உறங்க வேண்டும் என்று சொல்லி அவளிடம் இருந்தும் தப்பித்துவிடலாம் என்று அடுத்த கட்ட திட்டத்தை தீட்டிக் கொண்டு இருந்தான் அவன்.​

வீட்டிற்கு வந்த இடத்தில் தெய்வா ஒரே ஒரு கேள்வி கேட்டாள். மணிக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தாயா? இல்லையா? என்று நேரடியாகக் கேட்க, ஏதோதோ சொல்லி மழுப்பினான். உண்மையைப் புரிந்துகொண்டு அந்த இடத்தில் அவனை மொத்தமாக வெறுத்துப் போனாள் தெய்வா.​

ரகு என்பவன், பொறுப்பில்லாதவன், சோம்பேறி, ஊதாரி, அடுத்தவர் உழைப்பில் சொகுசாக வாழ நினைப்பவன், சுயஒழுக்கம் அற்றவன் என்ற சின்னச்சின்ன குறைகளோடு சேர்த்து, தன் சுயலாபம் என்று வரும் போது அதற்காக யாரையும் பலிகொடுக்கத் தயாராக இருப்பவன் என்ற அவனின் மிகப்பெரிய குறையையும் அவள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்ட நேரம் அது.​

மனம் விட்டுப்போனது, யாரிடமும் எதற்காகவும் பேச்சு கேட்க கூடாது , அதைத் தன் மனம் தாங்காது என்ற காரணத்துக்காகவே சிறுவயதில் இருந்து செய்யும் எல்லா செயல்களையும் நேர்த்தியாக செய்து முடிப்பவள் அவள்.​

ஆனால் கணவன் என்ற பெயர் கொண்டவன் செய்யும் தவறுகளுக்காக குடியிருக்கும் வீட்டு ஓனர், மாமியார், மைத்துனன், பக்கத்து வீடுகளில் இருக்கும் நபர் என அனைவரிடமும் ஏச்சுப்பேச்சு வாங்கிக்கொண்டிருக்கும் நிலையை அறவே வெறுத்தாள் அவள்.​

இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு கூட வழி இல்லாமல் அவள் கணவன் செய்யும் விஷயங்கள் இருக்க கண்ணைக் கரித்தது அவளுக்கு.​

நடந்த இந்த சம்பவங்களுக்கு வலுச் சேர்ப்பது போல், ரகு மும்பை கிளம்பிய நாளே விஷயம் கேள்விப்பட்டு வந்த மணி தெய்வாவைத் தான் குற்றமாகப் பேசினான். அவள் நினைத்திருந்தால் ரகுவுக்கு நல்ல புத்தி சொல்லி இருக்கலாமாம்.​

திருமணமான நாளில் இருந்து ஒருநாள், ஒருபொழுது கூட நல்லவை சொல்லிக் கொடுக்காமல் அவள் இருந்ததில்லை. “பாட்டி மாதிரி அட்வைஸ் செய்து கொண்டே இருக்காதே. டேக் இட் ஈஸி“ என்று அதற்கும் கேவலமாக சிரித்து தானே வைத்தான் அந்தப் பைத்தியக்காரன் ரகு.​

அவன் மும்பை சென்ற காரணத்தை வீட்டை விட்டு கிளம்பும் கடைசி நேரம் வரை கேட்டுப் பார்த்தாள் தெய்வா. வந்து சொல்கிறேன் என்பதை மட்டுமே ஜெபம் போல சொல்லிக் கொண்டிருந்தானே ஒளிய வேறு வார்த்தை அவன் வாயில் இருந்து வரவில்லை.​

வர நான்கு நாட்கள் ஆகும் என்க, அதுவரை மயிலின் அட்டகாசங்களைத் தனியாகச் சமாளிக்க முடியாது என்பதற்காக தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வருவதாக தகவல் தான் கொடுத்தாள்.​

பயங்கரமாகக் கோபித்துக் கொண்டான் வெற்றி. அதென்ன திருமணமான பெண் தனியாக தாய் வீடு வருவது. இரண்டு நாளானாலும் சரி, இருபது நாளானாலும் சரி அவள் இங்கே வருவது என்றால் அது ரகுவோடு தான் வரவேண்டும் என்று உத்தரவு எல்லாம் பலமாக இருந்தது. “என்னைக் கேட்காமல் ஏன் உன் வீட்டில் இப்படிப் பேசினாய்“ என்று மயில் ஒருபக்கம் தோகை விரித்து ஆடினார்.​

ஒருபக்கம் முடிந்தவரை ஊர்பக்கம் வராதே என்று சொல்லும் வெற்றி, இன்னொரு பக்கம் மயில், மூன்றாம் பக்கம் அவள் கணவனுக்கு கடன் கொடுத்த நண்பன், நான்காம் பக்கம் மனைவியை மயிராகக் கூட மதிக்காத கணவன் என நான்கு பக்கமும் ஏகப்பட்ட தொல்லைகளால் நொந்து போய் அமர்ந்திருந்தாள்.​

ரகு திரும்பி வரும் வரை ஏகப்பட்ட ஏச்சுப் பேச்சுகளுடன் தான் அவள் நேரம் கழிந்தது. அவன் திரும்ப வந்து மும்பை சென்ற காரணத்தைச் சொல்லும்போது அவளுக்கு வந்த ஆத்திரத்தின் முன்பு சுனாமி கூட தோற்றுப்போகும்.​

ஐபிஎல் மேட்ச் பார்க்க அலுவலக நண்பர்களுடன் சென்றிருக்கிறான். விமான டிக்கெட், மைதான டிக்கெட், அறைவாடகை என்று சம்பளம் மொத்தத்தையும் இரண்டே நாளில் காலி செய்துவிட்டு மேற்படி செலவுக்கு நண்பர்களிடம் கடன் வாங்கி புதுத் தலைவலியுடன் வந்திருந்தான்.​

அவன் மேட்ச் பார்க்கச் சென்றது கூட தெய்வாவிற்கு கோபத்தை அளிக்கவில்லை. ஆசைக்குச் சென்றான் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள். ஆனால், இதைச் சொன்னால் தாயிடம் திட்டு விழும் என்று தேவையே இல்லாமல் தன்னை அனைவரிடமும் திட்டு வாங்க வைத்து விட்டானே.​

அவனுடைய சுயலாபம் மற்றும் சௌகர்யத்துக்காக செய்த செயல்களால், தான் அனுபவித்த பிரச்சனைகள் யாவும் ஒரு பொருட்டாகக் கூட தெரியவில்லையே என்ற நினைப்பு தான், தெய்வாவை பொறுமையின் எல்லையைத் தாண்ட வைத்தது.​

கட்டியவனின் கௌரவம் காப்பதற்காக இத்தனை நாட்களாக செய்யாத விஷயத்தை செய்தாள். தன் தமக்கையை செல்போனில் தொடர்பு கொண்டு ரகுவின் குணங்களைப் பற்றி புட்டுப் புட்டு வைத்ததோடு, தன்னால் அவனோடு சந்தோஷமாக வாழ முடியாது என்பதையும் ஒரு வேகத்தில் சொல்லியே விட்டாள்.​

கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து இன்னொரு கிராமத்தானைத் திருமணம் செய்து கொண்டு வாழும் கிராமவாதியான அவள் தமக்கைக்கு ரகுவின் மேல் ஆத்திரம் தாங்கவில்லை. இவனெல்லாம் என்ன மனிதன் என்று தான் முதல் கேள்வியே கேட்டார்.​

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வதைப் போல், பொறுப்பில்லாதவன் பெற்ற பிள்ளை பிச்சை தான் எடுக்கும் என்று சொல்வதுண்டு. ரகுவின் குணங்களுக்கும் உனக்கும் ஒன்று கூட ஒத்துப்போகாத போது, இத்தனை நாட்கள் எதற்காக அமைதி காத்தாய் என்று தான் திட்டு வாங்கினாள் தெய்வா.​

அக்கா திருமணமான பிறகு அடிமை வாழ்க்கை தான் வாழ்கிறாள் என்று நினைத்து அவருக்காக தெய்வா வருந்திய நாட்கள் பல உண்டு. மனைவி என்பவள் தன் அதிகாரத்திற்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பல ஆண்களுள் ஒருவர் தான் தெய்வாவின் அக்கா கணவர்.​

அதிகக் கட்டுப்பாடு மனைவிக்கு விதித்திருப்பார். ஆனால் மனைவியை யாரும் ஒருசொல் சொல்ல விட்டது கிடையாது. அவருடைய தேவை யாவையும் கேட்கும் முன்பே நிறைவேற்றிக் கொடுப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாக ரகுவைப் போல், மனைவியிடமோ இல்லை அவள் வீட்டினரிடம் இருந்தோ பணம் சொத்துக்களைப் பெற்று அதைக்கொண்டு வாழ அவர் என்றும் நினைத்தது இல்லை. ரகுவோடு ஒப்பிட்டால் தன் அத்தான் எவ்வளவோ தேவலாம் என்று நினைத்தாள் தெய்வா.​

விஷயம் தெய்வாவின் அம்மா இலட்சுமி காதுக்குச் சென்றது. பதறிப் போய் அழைத்தவர் கேட்ட முதல் கேள்வியே தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது தான். உள்ளும் புறமும் தூய்மையான பிறகு தான் என்னை நெருங்க நான் அனுமதிப்பேன் என்ற தன்னுடைய வார்த்தைகளையும், இன்னும் கொஞ்ச நாளில் குழந்தையைப் பற்றி என் அம்மாவில் ஆரம்பித்து அக்கம் பக்கத்தினர் யாவும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நீயாக என் மடிக்கு வருவாய் பார் என்ற ரகுவின் வார்த்தைகளையும் கண்ணீரோடு சொல்லி முடித்தாள் தெய்வா.​

இலட்சுமி காறி உமிழாதது ஒன்று தான் குறை. இதற்கே ஒத்துவராதவனை வேறு எதைச் சொல்லியும் மாற்ற முடியாது என்ற நிதர்சனத்தை அந்த அனுபவம் மிக்க மனிதியால் புரிந்து கொள்ள முடிந்தது. என்ன செய்வது யாரிடம் கேட்பது என்று புரியாமல் அவருக்குத் தெரிந்த ஒரே வழியான ஜாதகம் பார்ப்பவரிடம் சென்றார்.​

“இவ்வளவு நாள் அந்த வீட்டில் உங்கள் பெண் பிழைத்திருப்பதே பெரிய காரியம், பெண் உயிரோடு வேண்டும் என்றால் உடனடியாக வீட்டிற்கு அழைத்து வாருங்கள். இல்லாமல் போனால் உங்கள் பெண் உங்களுக்கு இல்லை“ என்று தெளிவாகச் சொன்னார் அவர்.​

அதற்கு மேல் தாங்க முடியாமல் மலையரசன் மற்றும் வெற்றியிடம் விஷயத்தைச் சொன்னார் அவர். “குடியைக் கெடுத்தாளே கொலைகாரி“ என்ற வசவுடன் தான் தெய்வாவிற்கு அழைப்பு வந்தது.​

மொத்த விஷயங்களையும் தெரிந்து கொண்ட பிறகும், பெயருக்கு கூட ரகுவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற நினைப்பு வரவில்லை அவர்களுக்கு, தெய்வாவிற்குத் தான் அழைத்தார்கள்.​

கண்டபடி பேசினார்கள், “திருமணம் முடித்துக் கொடுத்த பெண் மீண்டும் இல்லம் திரும்புவதை எந்தக் காலத்திலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவன் தான் உன் கணவன், வாழும் வரை அவனோடு வாழு, முடியாவிட்டால் எங்கேயாவது விழுந்து எப்படியாவது செத்துவிடு“ என்பது தான் கணவன் சரியில்லை என்று சொன்ன பெண்ணுக்கு அவர்கள் கொடுத்த ஆறுதல்.​

அத்தோடு நின்றானா வெற்றி, மயிலை அழைத்து தெய்வாவின் மன எண்ணத்தைப் பற்றி போட்டுக் கொடுத்தான். “அடிப்பாவி சண்டாளி, என் குடும்ப கௌரவத்தையே கெடுக்கப் பார்த்தாளே. நீ இருந்த இருப்பைப் பார்த்துட்டு பொண்ணு பார்க்க வந்த அத்தனை பேரும் வேண்டாம் என்று சொன்னாங்க.​

அவ்வளவு ஏன் நான் கூட வயிறு பானை மாதிரி இருக்கு, இவளுக்கு குழந்தை எல்லாம் பிறக்காது வேண்டாம் என்று சொன்னேன். என் பையன் தான் பெருந்தன்மையா உன்னைக் கட்டிக்கிட்டான். அதற்கான நன்றியுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லையே“ என்று அபாண்டமாகப் பேச்சை ஆரம்பித்தார் மயில்.​

கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும் என்று முடிவெடுத்த பெண் மயிலை எதிர்த்துப் பேசினாள். “உங்க கண் நல்லா தானே இருக்கு, உங்க பையனை தினம் தினம் பார்க்கிறீங்க தானே. அவர் என்ன ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர் போலவா இருக்கார்.​

முற்றிப் போன ஆஸ்துமா, தலை முழுக்க பொடுகு முற்றிப்போய் சீள் வடிந்து கொண்டு இருக்கிறது, ஹார்மோன் பிரச்சனையால் உடல் முழுக்க தோல் நோய் வேறு, என்ன சொன்னீர்கள் என் வயிறு பானையைப் போல் இருக்கிறதா? உங்கள் மகனின் வயிறு ஐந்து மாத கர்ப்பிணியின் வயிறைப் போல் இருக்கிறதே அது உங்கள் கண்ணில் விழவில்லையா? இது அத்தனையும் திருமணத்திற்கு முன்பே இருக்கிறது, இதில் ஒன்றைப் பற்றியாவது எனக்குத் தெரியப்படுத்தினீர்களா?​

என்னைப் பற்றி நீங்கள் பேச“ என்று தனக்காக முதல் முறையாகப் பேசினாள். மயிலால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.​

“தெய்வா என்னை ரொம்பவும் அசிங்கப்படுத்துகிறாய்“ என்று ரகு தான் பொங்கி எழுந்தான். “இதில் அசிங்கப்பட என்ன இருக்கிறது, என் உடல் அமைப்பை உங்கள் அம்மா விமர்சிக்கும் போது இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பதால் தானே அமைதியாக இருந்தீர்கள். அதே போல் நானும் சாதாரணமாகத் தானே சொன்னேன். சொல்வது நான் சொல்லப்படுவது உங்களைப் பற்றி என்கவும் எங்கிருந்து அவமானம் வந்து குதித்தது” என்று அவனிடமும் பொங்கினாள்.​

தெய்வாவின் தைரியம் மயில், அறிந்ததே. ஒருமுறை அவளை மாமியார் என்றும் பாராமல் எதிர்த்துப் பேச அனுமதித்து விட்டால், நாளை மீண்டும் தன் கரம் ஓங்காது என்று நினைத்தாரோ என்னவோ, அந்த வீட்டில் தெய்வா மதிக்கும் ஒரே ஆளான ராஜை பஞ்சாயத்திற்கு அழைத்தார்.​

அவனுக்கு தம்பியைப் பற்றி தெரிந்தாலும் சமரசம் பேசாவிட்டால் தாய் விடமாட்டார் என்பது புரிந்ததால், தங்கள் பக்கம் ஒரே ஒரு பாயிண்டாக இருந்ததைப் பேசினான். “ஊர் உலகத்தில் குடிகாரன், சைக்கோ என்று பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் என் தம்பியின் தவறுகள் யாவும் மிகவும் சின்னவை தானே. நீ கொஞ்சம் மனது வைத்தால் அவை மன்னிக்கப்படக் கூடியவையே“ என்று பேரம் பேசினான்.​

“குடிகாரனையும், புகை பிடிப்பவனையும் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு மணமுடிக்கத் தயங்குவதற்குக் காரணம் என்ன? குடிப்பவன் கையில் பணம் தங்காது, புகைபிடிப்பவன் உடலில் ஆரோக்கியம் தங்காது என்பது தானே.​

உங்கள் தம்பியிடம் இது இரண்டும் இப்போது இருக்கிறதா? அதோடு என்ன சொன்னீர்கள், சின்னச்சின்னத் தவறுகளா? சின்னச்சின்னக் கற்களை ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் விரைவில் அவை ஒரு மலையாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?“ தெய்வா கேட்ட முதல் கேள்வியிலே மொத்தமாக மாட்டினான் ராஜ்.​

“நீங்களாச்சு உங்கள் பிள்ளையாச்சு. நான் ஆரம்பம் முதலே அவனுக்குத் திருமணம் செய்து, வரும் பெண்ணை நன்றாக வாழ வைக்கும் அளவு பக்குவம் இல்லை. உங்கள் திருப்திக்காக திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்காது என்று தான் சொன்னேன். உங்கள் அவசரத்துக்கு தலையைக் கொடுத்துவிட்டு, என்னால் யாரிடமும் பேச்சு வாங்கிக்கொண்டு இருக்க முடியாது. நீங்களாச்சு உங்கள் செல்லமான இளைய பிள்ளையாகிற்று“ என்றுவிட்டு நகர்ந்தான்.​

“மனம் கொஞ்சம் கூட உறுத்தாமல் கணவனை வேண்டாம் என்று சொல்கிறாளே, இவள் எல்லாம் என்ன பிள்ளை. என் கணவனும் கூடத்தான் எதற்கும் உபயோகம் இல்லாமல் ஒரு ஓரத்தில் இருக்கிறார். அதற்காக நான் அவரை விட்டுச் செல்லவா செய்தேன். குடும்பம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் அதற்காக விட்டுச்செல்வதா?“ சமாதானம் போல் பேசினார்.​

“வழக்கமாக எல்லாப் பெண்களும் கேட்கும் கேள்வியைத் தான் நான் உங்களிடம் கேட்கப் போகிறேன், கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.​

நீங்கள் பெற்று வைத்திருக்கும் ஐந்தரை அடி தங்கத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒருவேளை உங்களுக்கு ஒரு மகள் இருந்திருந்தால், அவளை ரகுவைப் போன்றவனுக்கு மணம் முடித்து வைத்து, கணவனைத் திருத்துவது மனைவியின் கடமை என்று அவளுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருப்பீர்களா?’‘ சரமாக கேள்வியைத் தொடுத்தாள் தெய்வா.​

“என் பிள்ளை குழந்தை மாதிரியம்மா. நீ தான் கொஞ்சம் அவனைப் பொறுத்துப் போயேன். நாளையே உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அவன் சரியாகிவிடுவான்” பழைய பல்லவியை அவர் பாட,​

“குழந்தை பிறந்தால் உங்கள் மகன் சரியாகிவிடுவார் என்றால் ஏற்கனவே குழந்தை இருக்கும் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டியது தானே, எதற்காக பொய் சொல்லி என்னை இழுத்துக்கொண்டு வந்தீர்கள்” என்று கத்தினாள். அவளுள் இருந்த அழுத்தம் அப்படிக் கத்த வைத்தது.​

அதற்கு மேல் அன்றைய நாளில் மயில் ஒரு வார்த்தை பேசவில்லை. எதிரில் இருக்கும் ஆட்கள் பேசி முடித்து களைத்துப் போகும் வரை மண்ணைப் போல் அமைதியாக இருக்கும் வித்தையை ரகுவிற்குக் கற்றுக்கொடுத்தவரே அவர் தான் என்பது போல் அமைதியாகவே இருந்தார். தன் மனவேதனை எல்லாம் கொட்ட ஆரம்பித்த தெய்வா, சில நிமிடங்களுக்குப் பிறகு தான் தன் பேச்சு யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கிற்குச் சமமாக இருப்பதை உணர்ந்து வெளியேறினாள்.​

அதன் பிறகு அந்த வீட்டில் தெய்வா தான் அதிகம் பேசினாள். திருமணமாகி வந்த நாளில் இருந்து வாங்கிய பேச்சுகள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்தாள். ஒருமுறை திங்கள் கிழமை தலைக்கு குளித்தற்கு, “பெண் என்றால் செவ்வாய் வெள்ளி தான் தலைக்கு குளிக்க வேண்டும். இதைக் கூட உன் அம்மா உனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையா? வளர்ப்பு சரியில்லை“ என்றிருந்தார்.​

“வாரம் ஒருமுறை குளிக்கும் உங்கள் மகனை என்ன செய்யப் போவதாக உத்தேசம்“ என்று கேட்க, “புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள் என்னை இழுக்காதே, சீக்கிரமே உங்களைத் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும். அப்போது தான் இப்படியான கேள்விகளில் இருந்து எனக்கு நிம்மதி, நீயும் பொறுப்பாக வேலைக்குச் செல்ல ஆரம்பிப்பாய்“ என்று கழன்று கொண்டார்.​

“தினமும் வீட்டைத் துடைக்க வேண்டும் அப்போது தான் மகாலட்சுமி வீட்டிற்கு வருவாள்“ என்க, “வீட்டில் அழுக்கு மூட்டை ஒன்று நடமாடிக்கொண்டு இருக்கும் போது எப்போதும் மகாலட்சுமி வரமாட்டாள்” என்றாள்.​

மயில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்தாள். மகன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இவளிடம் எல்லாம் பேச்சுக்கேட்க வேண்டி வந்திருக்காதே என்ற நினைப்பில் கொந்தளிப்பார் மயில்.​

நாளாக நாளாக தெய்வாவின் மனஅழுத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அவளுடைய கத்தலும் அதிகமாகியது. ரகு எதையும் கண்டுகொண்டான் இல்லை. எருமை மாட்டின் மீது பெய்த மழையைப் போல் அமைதியாக இருந்தான்.​

ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் தன் அலுவலகத்தில் தெய்வாவிற்கு வேலை வாங்கி அதற்கான நேர்காணலுக்கு அழைத்துச் சென்றான். “நீ வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் இது தான் வாழ்கை என்று ஓரளவு எல்லாம் பழக்கமாகிவிடும்“ நீ என்ன தான் கத்தினாலும் நான் மாறப்போவதில்லை என்று மறைமுகமாகச் சொல்ல, பைக்கில் இருந்து குதித்து செத்துவிடலாமா என்று நினைத்தாள் அவள்.​

அதனைத் தொடர்ந்து அடிக்கடி அவளுக்குத் தற்கொலை எண்ணங்கள் வர ஆரம்பித்தது. காய்கறி வெட்டும் போது, அந்தக் கத்தியையும் மணிக்கட்டையும் அடிக்கடி பார்க்க ஆரம்பித்தாள்.​

அவள் பிறந்தகத்திலும் நிலைமை அவ்வளவு சரியாக இல்லை, ரகு தெய்வாவிற்குச் சரியானவன் இல்லை என்பதை சொல்லிச் சொல்லி இலட்சுமிக்கு வாய் வலித்தது தான் மிச்சம். கட்டிக்கொடுத்தாகிவிட்டது அவள் அவனுடன் தான் வாழ வேண்டும் என்று உறுதியாய் இருந்தார் மலையரசன்.​

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்“

தன் உடலை வளர்ப்பதற்காக பிறிதொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவன் மனதில் இரக்கம் எப்படி இருக்க முடியும் என்று புலால் உண்ணாமை பற்றி சொல்கிறார் வள்ளுவர்.​

தான் சுகமாக வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாருடைய உழைப்பையும் உறிஞ்சலாம் என்ற நினைப்பில் இருக்கும் ரகு, “கடன் தொல்லை அதிகமாகிவிட்டது, உன் சேமிப்பு பணத்தைக் கொடு“ என்று தெய்வாவிற்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்த அதே நேரம்,​

“இப்போது என்ன சொந்த வீடு இல்லாதது தானே உனக்கு என் மகன் மீது மிகப்பெரிய குறை. உன் அப்பா சம்பாத்தியத்தில் உன் பங்கைக் கேட்டு வாங்கி வா, பெரிய வீடாக வாங்கி, அதற்கு உன் பெயரையே வைத்து, நாம் எல்லோரும் அந்த வீட்டில் ஒன்றாக வாழலாம்” என்று இன்னொரு பக்கம் மயில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்.​

மனிதனின் பேராசை வெளிவரும் நேரம் அவன் அரக்கனை விட மோசமானவனாக இருப்பான் என்று என்றோ படித்தது நினைவு வர, உன்னை அந்த வீட்டில் இருந்து வெளியே கொண்டு வருவது என் பொறுப்பு. எப்படியாவது உன் அண்ணன் மற்றும் தந்தையிடம் நான் பேசுகிறேன் சிறிது காலம் மட்டும் பொறுத்துக்கொள் என்ற தாயின் பேச்சை மீறி, என்ன ஆனாலும் பரவாயில்லை என்பதாய் துணிந்து ரகுவைவிட்டு வெளியேறி தன் பிறந்த மனை வந்து சேர்ந்தாள் தெய்வா.​

 

NNK-27

Moderator

பிழையான விதி 9​

“என்னை என் குடும்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள், எதிரிகளை நானே பார்த்துக்கொள்கிறேன்“ என்பது செர்பியன் நாட்டுப் பொன்மொழி. அது தெய்வாவின் விஷயத்தில் சரியாகிப் போனது.​

மண்ணாந்தரையைப் போன்ற குணமும், அட்டையைப் போன்ற பிடிவாதமும் கொண்ட ரகுவையும், இராஜதந்திரியான மயிலையும் சமாளித்து தைரியமாக, இனி இந்த வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்று துணிந்து படிதாண்டி வந்த தெய்வாவால் அவளைப் பெற்று வளர்த்த தந்தை மற்றும் உடன்பிறந்த வெற்றியை சமாளிக்க முடியவில்லை.​

“ஆந்தை தன் குஞ்சை இராஜாளியாகக் கருதி வளர்க்குமாம்“ இரண்டு ஆண்பிள்ளைகளைப் பெற்று அதன் மூலம் அவனுக்கும், தனக்கும் ஊருக்குள் பெரிய கௌரவத்தைத் தேடிக் கொடுத்துவிட்டதாக கற்பனை செய்து, மகன் வெற்றியை தன் ஏகபோக வாரிசாக அறிவித்து, தன் சுயசம்பாத்தியத்தில் உண்டான சொத்துகள் அனைத்தையும் மகள்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மகனின் பெருக்கு மாற்றிக் கொடுத்திருந்தார் மலையரசன்.​

தெய்வா வாழும் வாழ்வைப் பார்த்து, எப்போது வேண்டுமானாலும் ரகுவுடனான அந்த பந்தம் உடையலாம் என்று கணித்திருந்தாரோ என்னவோ அது அவருக்கே வெளிச்சம்.​

இப்படியான நிலை என்று வேண்டுமானாலும் தன் வீட்டில் நடக்கும் என்று தெரிந்ததால் தான், என் வீட்டில் இருந்து சல்லிக்காசு கூட எதிர்பார்க்காதீர்கள் என்று ரகு மற்றும் அவன் தாயிடம் தெளிவாகச் சொல்லி இருந்தாள் தெய்வா.​

அந்தப் பேராசை மனிதர்கள், அவள் வார்த்தையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பணம் வாங்கி வா, சொத்து வாங்கி வா என்று அவளை நச்சரிக்கத் துவங்கிய பின்னர் தான், தைரியம் பெற்று படிதாண்டி வந்திருந்தாள்.​

மனிதர் தமக்குத் தானே வரவேற்றுக் கொள்ளும் தீமை பொருந்தாத் திருமணம்“ தன் விஷயத்தில் உண்மையான கிரீஸ் நாட்டுப் பொன்மொழியை மாற்றி அமைக்கும் விதமாக, கணவன் வீட்டை விட்டு வந்தவளுக்கு அவள் பிறந்த வீட்டில் காத்திருந்தது அடுத்தடுத்த சோதனைகள்.​

தன் வீடு தான் அரண்மனை, அதற்கு மகன் தான் ராஜா என்று வாழும் அற்புதமான மனிதரான மலையரசனுக்கு, தன்னைப் போலவே அனைவரும் தன் மகனை ராஜாவாக மதிக்க வேண்டும், நடத்த வேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை வேறு.​

அப்படியான பெருமை மிக்க மகனையும், தன்னையும் ஊராரின் கேள்விக்கு பதில் சொல்ல வைக்கும் வகையில், கணவன் மனையின் படி தாண்டி வந்திருக்கும் சின்னமகளை அறவே பிடிக்கவில்லை அவருக்கு.​

“கோபித்துக்கொண்டு சென்றவளை சமாதானம் செய்வதற்காக எங்களால் அவ்வளவு தொலைவு வர முடியாது. நீங்களாக புத்தியில் உரைக்கும் படி நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வையுங்கள்“ என்று வெற்றியின் கோபத்திற்கு தூபம் போட்டு ஏற்றிவிட்டிருந்தார் மயில்.​

“சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம், அறுவடை மோசமானால் ஒரு வருட நஷ்டம், விவாகம் மோசமானனால் ஆயுள் முழுவதும் நஷ்டம்“ என்ற நிஜத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பெருந்தன்மை கொண்ட மனிதர்கள் தெய்வாவை சுற்றி இல்லை என்பது தான் அவளின் மிகப்பெரிய பிரச்சனையே.​

அன்றைய இரவு தெய்வாவின் வீட்டில், அதாவது அவள் தந்தை மலையரசன் வீட்டில் பஞ்சாயத்து ஆரம்பம் ஆனது. தன் பக்க நியாயத்தை தெய்வா சொல்ல ஆரம்பித்து, முழுதாக ஒருநிமிடம் கூட பேசி இருக்க மாட்டாள். அருகே இருந்த பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கிப் போட்டு உடைத்து, காட்டுக் கத்தல் கத்தினான் வெற்றி. அந்தக் கத்தலுக்கு தெய்வாவின் உடல் முழுதும் நடுங்கிப் போனது. பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூட பதறிப்போய் ஓடோடி வந்தனர்.​

பெயருக்கு கூட ரகுவிற்குப் புத்தி சொல்கிறேன், கண்டிக்கிறேன், அவன் பெற்றோரிடம் பேசி உத்தரவாதம் வாங்கித் தருகிறேன் என்பன போன்ற சமாதான வார்த்தைகள் வரவில்லை மலையரசன் மற்றும் வெற்றியிடம் இருந்து. கணவன் வேண்டாம் என்று அவள் நினைத்ததே ஏதோ கொலைக் குற்றத்தை விட கொடிய பாவம் என்று தான் பேசினர் இருவரும்.​

“முடமோ, ஊதாரியோ, பொறுக்கியோ, நோயாளியோ கணவன் என்று ஆன பின்பு அவனோடு வாழ்வது தான் பெண்ணுக்கு அழகு. அதை விடுத்து உன் விருப்பத்துக்கு அவன் இல்லை என்பதற்காக, விட்டு வருகிறேன் என்பதா? நீ செய்யும் கேவலமான காரியத்தால் எங்கள் வளர்ப்பு அல்லவா பேசுபொருளாகிப் போகும்.​

குடும்ப கௌரவத்தை நாசமாக்கி விடாதே, மலையரசனின் மகள் வாழாமல் வந்துவிட்டாள் என்ற அவப்பெயரை ஏற்படுத்தி விடாதே. ஊருக்குள் விவாகரத்து சாதாரணமாக இருக்கலாம். ஆனால், நம் வீட்டில் அப்படி நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.​

அத்தனை செலவு செய்து நன்றாக வாழட்டும் என்று திருமணம் செய்து வைத்தால், நீ வாழ முடியாது என்றா சொல்கிறாய். அடங்காத உனக்கு உன்னைப் பெற்றவள் வேறு உடந்தையா? பெண் சரியில்லாமல் இருந்தால் தாய் நல்லது சொல்லிக் கொடுக்க வேண்டும். இங்கு தாயே சரியில்லை என்னும் போது உன்னிடம் பெரிதாக வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும். வந்தது வந்துவிட்டாய், இரண்டு நாள் இருந்துவிட்டு மூன்றாம் நாள் கிளம்பும் வழியைப் பார்.​

புருஷன் நோயாளியாக இருந்தால் வைத்தியம் பார், ஊதாரியாக இருந்தால் திருத்து, கடனாளியாக இருந்தால் பொறுத்துப் போ. எப்படியாயிணும் வாழ்ந்து கொள். இனி உனக்காக அலைந்து திரிந்து எதையும் செய்வதற்கு இந்த வீட்டில் யாரும் இல்லை. உடன் பிறந்த பாவத்திற்காக உனக்குப் பிறக்கும் பெண் பிள்ளையை என் மகனுக்கு மணம் முடித்துக் கொள்ளலாம்” கள்ளம் இல்லா அவள் முகத்தைப் பார்த்து, கொஞ்சம் கூட கூசாமல் நேரடியாகவே சொன்னான் வெற்றி.​

ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர் வீட்டில் இருப்பதை விட, ஒரு மரக்கட்டையையாவது மணந்து கொள்ளுதல் நலம்“ என்று பழங்காலத்தில் ஏன் சொல்லி வைத்தார்கள் என்பது அந்த நிமிடம் தான் புரிந்து கொண்டாள் தெய்வா.​

“சொர்க்கத்திற்குச் செல்லும் பயிற்சி நிலையமே குடும்பம்“ என்ற அரேபியப் பொன்மொழி பொய்த்துப்போனது அவ்விடத்தில். தன் வாழ்க்கைக்கு என்ன பதில் என்று கேட்பவளைக் கண்டுகொள்ளாமல் வாய்ப்பே இல்லாத குழந்தைக்கு பேரம் பேசிய தமையனை நினைத்து மனம் நொந்து போனது தெய்வாவிற்கு. அண்ணனின் அதிகாரம் கலந்த சமாதானத்துக்கு முடியாது என்ற ஒற்றை வார்த்தையை பதிலாகக் கொடுத்துவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் தெய்வா.​

“என்ன நெஞ்சழுத்தம்“ என்று அடிக்க வந்தான் வெற்றி. அசையாமல் நின்றாள் தெய்வா. தந்தை, தமையன் என்று பார்த்து, அவர்கள் தனக்கு நல்லது தான் செய்வார்கள் என்று நம்பி ஏமாந்தது போதும்.​

இனி தனக்காக தான் மட்டுமே போராட வேண்டும் என்பதை உணர்ந்தவள், அடுத்த அரை மணி நேரம் வெற்றி மூச்சைப் பிடித்துக் கத்திய யாவற்றையும் கேட்ட பிறகும் கூட, தன் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று உறுதியாகவே இருந்தாள்.​

தமையனின் கோபம் தனலெனத் தகிக்கிறது தான். இந்தப் பிரச்சனைகளோடு சேர்த்து இன்னும் பிரச்சனை வந்தாலும் எதிர்த்துப் போராட உடலில் இருக்கும் தெம்பு, நாளும் பொழுதும் ரகுவோடு போராடி மீண்டும் மீண்டும் தோல்வியைப் பரிசாகப் பெறுவதற்கு இருக்காது என்பது திண்ணமாக இருந்த பட்சத்தில், பிடிவதாமாக மறுத்துக்கொண்டே வந்தாள்.​

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை“

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூன்று முக்கிய உறவுகளுக்கும், உற்ற துணையாக இருப்பது தான் இல்லறம் காக்கும் தலைவனின் தலையாய கடமை என்கிறார் வள்ளுவர். தன் கற்பனையில் கூட ரகு இவற்றை செய்வதைப் போல் நினைத்துப் பார்க்க முடியவில்லை தெய்வாவால். அதனால் தான் தன் தமையனிடம் அத்தனை தீர்க்கம் காட்டினாள்.​

“எவ்வளவு திண்ணக்கம்“ என்று பாய்ந்து வந்தார் மலையரசன். “அடிக்கப் போகிறீர்களா? உங்கள் இஷ்டம் போல் அடித்துக் கொள்ளுங்கள். உங்களைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள். இந்த நினைப்பில் தானே, கிடைத்தவரை லாபம் என்று எந்தவித விசாரணையும் இல்லாமல் கண்டவனிடம் என்னைத் தள்ளி விட்டீர்கள்.​

கணவன் என்பவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான், பெண் நீ தான் அனுசரித்துப் போக வேண்டும் என்று சொல்லும் நீங்கள், எல்லா சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் அளவு என்னை வளர்த்து இருக்க வேண்டியது தானே.​

எதற்காக நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து, இப்படித் தான் வாழ வேண்டும், இது தான் சரி என்று கற்றுக் கொடுத்தீர்கள். நான் வளர்ந்த முறையினால் தானே என்னால் அந்த ரகுவை கணவனாக என்ன நல்ல மனிதனாகக் கூட நினைக்க முடியவில்லை“ தந்தையைக் கேள்வி கேட்டாள் தெய்வா.​

“இந்த வீட்டில் முடிவெடுக்கும் உரிமை எனக்குத் தான் முதலில். எனக்குப் பிறகு என் மகனுக்கு. எங்கள் பேச்சைக் கேட்டு அமைதியாக புகுந்த வீடு திரும்பினால், தாய் வீடு என்று நினைப்பதற்கு ஒன்று இருக்கும். இல்லை முடியாது என்றால் , வீட்டைவிட்டு வெளியே போய்விடு.​

பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்துவிட்டோம், எங்கள் கடமை முடிந்தது. அமைத்துக் கொடுத்த வாழ்க்கையை வாழ உன்னால் முடியாது என்றால், ஒன்று செத்துவிடு, இல்லாவிட்டால் தெருவில் போய் பிச்சை எடுத்து உன் வாழ்வை வாழ்ந்து கொள்“ மனசாட்சியே இல்லாமல் சொன்னார் மலையரசன்.​

“ரகு தான் மாப்பிள்ளை என்ற தன்னுடைய முடிவு சரியில்லை என்று விமர்சிப்பதா? நான் தேர்ந்தெடுத்தவனை வேண்டாம் என்பதா“ என்ற வெற்றியின் ஈகோவோடு சேர்த்து, ‘ஊருக்குள் நான்கு பேர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது வருமே“ என்ற மலையரசனின் ஆத்திரமும் சேர்ந்து அந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண் தெய்வாவின் தலையில் இடியாக இறங்கியது. அவள் அறியாமல் அவளை ஆக்கிரமித்த மனஅழுத்தம் உச்சகட்டத்தை நெருங்கி, அவளை மொத்தமாக விழுங்கக் காத்திருந்தது.​

இன்றைக்கு இது போதும், மீதத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த வெற்றி வீட்டை விட்டு வெளியே செல்ல, தெய்வா அவள் அறைக்குள் சென்றாள். இலட்சுமிக்கு ஜோசியர் சொன்னது தான் மீண்டும் மீண்டும் நினைவு வந்தது, கூடவே தெய்வாவின் திருமணத்தின் போது உண்டான சகுனத்தடையும் சேர்ந்து நிற்க, என்ன ஆனாலும் மகளை மீண்டும் ரகுவிடம் அனுப்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்தவர், அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் மலையரசன் பெரிதாய் மதிக்கும் உறவினர்கள் சிலரை வீட்டிற்கு வரவழைத்தார். அதில் கடும் கோபம் தகப்பனுக்கும் மகனுக்கும்.​

திருமணம் முடிந்த அடுத்த நாளில் இருந்து தெய்வா இங்கே வந்த சில நிமிடங்களுக்கு முன் வரை நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க, வந்தவர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல் மலையரசன் மற்றும் வெற்றியைத் தான் தவறு சொன்னார்கள்.​

“வெளியூர் போய் படித்து வந்திருந்தாலும் கொஞ்சம் கூட இறுமாப்பு இல்லாமல் சாதாரணமாக இருக்கும், தெளிவான அறிவான பெண். அவளுக்கு இப்படியான ஒருவனையா மணமகனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவள் நன்றாக வாழ வேண்டும் என்று திருமணம் செய்து கொடுத்தாயா? இல்லை உன் கடமையை முடிப்பதற்காக திருமணம் செய்து வைத்தாயா? நடந்ததைப் பார்க்கும் போது, இரண்டாவது சொன்னது நடந்திருக்க தான் வாய்ப்பு இருக்கும் போல் இருக்கிறது.​

வெற்றியை மட்டும் தான் பெற்றாயா? அந்தப் பிள்ளையை தவிட்டுக்கா வாங்கினாய். ஆண்பிள்ளை போதும் என்று நினைத்திருந்தாய் என்றால் அவளைப் பெறாமலே இருந்திருக்கலாமே.​

திருமணத்தின் போதே பார்த்தேன். அந்தக் குடும்பத்தில் ஒருவரின் முழியும் சரியில்லை. தெய்வாவிடம் என்ன குறை என்று அப்படி ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் முடிவை எடுத்தாய்“ என வந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு விஷயத்தைச் சொல்லி ஆண்கள் இருவரையும் பிடிபிடியென்று பிடித்தார்கள்.​

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, குடும்பத்தில் ஆண்களின் கரம் தான் உயர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்களுக்கு கூட எந்த ஒரு பெண்ணாலும் ரகுவுடன் வாழ முடியாது என்ற உண்மை புரிந்தது.​

தெய்வாவிற்கு அத்தனை ஆச்சர்யம். இந்தக் கால சொந்த பந்தங்கள் அனைவரும் ஒவ்வொரு வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பேசுபொருளாக்கி அதில் சில கற்பனைகளைக் கலந்து, சுடச்சுட விவாதிக்கவே விரும்புவார்கள் என்று அவள் நினைத்திருக்க, அவளுக்காக பேச என்று அவள் தாய் அழைத்து வந்திருந்த உறவினர்கள் யாவரும் அவள் கதையைக் கேட்டு கண்கள் கலங்கி, ஆவேசமாக அவளைப் பெற்றவரிடம் நியாயம் கேட்டு, அவளுடைய முடிவு தான் சரியென்று அவள் பக்கம் வேறு நிற்கிறார்களே என்ற ஆச்சர்யம் தாங்கவில்லை அவளுக்கு.​

உனக்கு ஒரு நல்ல வழியைக் கொடுப்பது தங்களின் பொறுப்பு என்று தெய்வாவிற்கு நம்பிக்கை அளிக்க ஆரம்பித்தவர்கள் அத்தனை பேரையும் குரலுயர்த்தியே ஆட்டம் காண வைத்தான் வெற்றி.​

அங்காளி, பங்காளி முறை உடையவர்கள், தன்னை விடவும் வயதில் மூத்தவர்கள், நல்லது கெட்டது என அனைத்திற்கும் அவர்களின் தயவு தேவைப்படும் என்பதைப் புரிந்து மலையரசன் கூட சற்று அமைதியாகப் பேச முயன்று கொண்டிருக்க, வெற்றி மலையிறங்கவே இல்லை. மரியாதைக் குறைவாக பேசும் முன்னர் வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள் என்று கத்தினான்.​

“தவறு என்பது புரியாமல் கோபம் கொண்டால் புரியவைக்கலாம். தவறு தான் என்று புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் வெற்றியை நாங்கள் அல்ல கடவுளே வந்தாலும் கூட மாற்ற முடியாது. எங்களுடைய மரியாதையை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். தெய்வாவை அந்தத் தெய்வம் தான் காப்பாற்ற வேண்டும்“ என்றுவிட்டுச் சென்றனர் அவர்கள்.​

தெய்வாவின் தாய்வழி சொந்தமான தாய்மாமன், அத்தை, பாட்டி, ஆகியோரும் கூடபேசிப் பார்த்தனர். யாரையும் வெற்றி கண்டுகொள்ளவில்லை. ஒன்று அவள் ரகுவோடு வாழ வேண்டும் இல்லை அவளோடு சேர்த்து அவளைப் பெற்றவளும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதில் அத்தனை தீவிரம் காட்டினான். இதில் தெய்வாவைப் பெற்றவள் என்பவள் தன்னையும் பெற்றவள் தான் என்பதை வசதியாக மறந்து போனான்.​

அவன் பேச்சைக் கேட்காமல் போனால் தனக்கும் அந்த கதி தான் வரும் என்று நினைத்த மலையரசன் தன் அண்ணன் தம்பி முறை வரும் நபர்களின் பேச்சால் சற்றே இளகி இருந்த மனதையும் இறுக்கிப் பிடித்தார்.​

வயதான காலத்தில் மகள்களிடம் அடைக்கலமாகச் சென்று இருந்தாலும் இருவரும் தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள் என்பது அவருக்குத் தெரியும் தான். இருந்தாலும், மகனுடன் கடைசிகாலத்தைக் கழிப்பது தான் தனக்குக் கௌரவம்.​

ஒரு மனிதன் வாழும் போது எப்படி இருந்திருந்தாலும், சாகும் போது எப்படி வாழ்ந்தான் என்பதைப் பொறுத்து தான் அவன் புகழ் இருக்கும் என்ற தன் நினைப்புக்காக மகன் மற்றும் மருமகளை அண்டி அவன் செய்யும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருந்தார்.​

மகனுடன் நல்உறவு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக முதலில் தெய்வாவின் தமக்கையைப் பகைத்தார். இப்போது இன்னொரு மகளான தெய்வா மற்றும் மனைவி இலட்சுமியைக் கூட பகைத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மகனின் முடிவுக்கு கட்டுப்பட்டார்.​

இத்தனை வயதிற்குப் பிறகு தன்னால் தன் தாய், வீட்டை விட்டும் தந்தையை விட்டு வெளியேறுவதா என்று சற்றே சறுக்கினாள் தெய்வா. ஆனால் இலட்சுமி அத்தனை உறுதியாய் இருந்தார். இவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து மகளை அவள் கணவன் இல்லம் அனுப்பினால் பொல்லாத துன்பங்கள் வந்து சேரும் என்பதை உணர்ந்துகொண்டு, தெய்வா சொல்லச் சொல்ல கேட்காமல் அவளையும் அழைத்துக்கொண்டு மதுரையில் தெய்வாவின் தமக்கை வசிக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.​

பத்தாயிரம் வாலாப் பட்டாசைப் போல் வெடித்தது மலையரசனின் இல்லம். தெய்வா இனி எப்போதும் இங்கே வரப்போவதில்லை என்ற உண்மை புரிந்ததும் மயில் ஒருபக்கம் வெற்றியைப் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.​

ராஜாவைப் போல் வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் அனைவரையும் கட்டி ஆண்ட வெற்றி, மயில் குடும்பத்திடம் பயங்கரமாகப் பேச்சு வாங்கினான். மயிலிடம் அவன் கேட்ட வார்த்தைகள் யாவும் அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்தே இராத வார்த்தைகள்.​

அப்போது கூட தெய்வாவால் தான் இத்தனைப் பேச்சையும் தான் கேட்க வேண்டியது வந்தது என்று நினைத்தானே ஒளிய, இத்தனை பேச்சையும் தாங்கி, ஒன்றுக்கும் உதவாத கணவனோடு தெய்வா எப்படி வாழ்வாள் என்று நினைக்கவில்லை.​

தங்கை என்ற பாசம் நிஜமாக இருந்தால் அப்படி யோசித்திருப்பான். தன் மனைவி, தன் பிள்ளைகள் என்று தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழும் அவன் தங்கைக்காக யோசிப்பான் என்று நினைப்பவர்கள் அல்லவா முட்டாளாக இருக்க வேண்டும்.​

மயிலால் தன் சுயமரியாதை மொத்தமாக குழி தோண்டிப் புதைக்கப்பட்டதாய் நினைத்த வெற்றி தெய்வாவை இன்னும் தான் வெறுத்தான். தனக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, தான் மட்டுமே மோப்பக் குழையும் அனிச்சத்தைப் போல், சின்ன வார்த்தைகளுக்கும் மனம் வாடிப் போகும் குணமுடையவன் மற்ற யவாரும் இரும்பைப் போன்ற மனம் படைத்தவர்கள் என்று நினைக்கும் சுயநலவாதிகளில் வெற்றி முதன்மையானவன்.​

நீ பார்த்துக் கட்டி வைத்தவன் சரியில்லை என்று குறை சொல்லாமல், என்னால் அவனோடு வாழ முடியாது உதவி செய் அண்ணா என்று வந்த தங்கையை, அவளுக்கு பரிந்து வந்த பெற்று வளர்த்த தாயை கண்டபடி பேசும் போது அவர்களுக்கும் கூட சுயமரியாதை உண்டு என்பதை அறியாமல் போய் இருந்தானா இல்லை அறிந்தும் அதைக் குறித்து கவலைப்படாமல் இருந்தானோ அது அவனுக்கே வெளிச்சம்.​

தெய்வா திரும்ப வரமாட்டாள் என்றால் அதையும் இதையும் பேசி அவள் வீட்டாரிடம் இருந்து எதையாவது கறக்க முடியுமா என்று யோசித்து அதற்காக காய் நகர்த்தி தன்னிடம் தொக்காக மாட்டிய வெற்றியை வைத்து செய்து கொண்டிருந்தார் மயில்.​

அவரிடம் பேச்சு வாங்குவதை தாங்க முடியாமல் வீட்டுப் பொருள்களை உடைக்க ஆரம்பித்தான் வெற்றி. ஒவ்வொரு முறை திட்டு வாங்கும் போதும் தெய்வாவின் மேல் வன்மம் கூடிக்கொண்டே போனது அவனுக்கு. இனிமேல் அவள் இந்த வீட்டிற்குள் வரவே கூடாது என்று அவனாக முடிவு செய்து அதற்குத் தன் தந்தையை ஒப்புக்கொள்ளவும் வைத்தான்.​

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவ ஆரம்பித்தது. தெய்வா ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவளைத் தெரிந்த ஒருவர் கூட, அவள் முடிவை எதிர்க்கவில்லை. குறைந்தபட்சம் அவசரப்பட்டுவிட்டாயே என்று கூட கேட்கவில்லை. உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியும், நீ இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாய் என்றால் அந்த இல்லம் நிச்சயமாக சரியானதாக இருந்திருக்க முடியாது என்று தெய்வாவை ஒட்டியே பேசினர் அனைவரும்.​

இப்படியும் ஒரு மனிதனா அவனுக்கு திருமணம் ஒன்று தான் கேடா? தன்னைப் பார்த்துக் கொள்ளவே தாய் மற்றும் தமையனின் உதவியை நாடுபவன் எதற்காக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான் என்று ரகுவைத் தான் திட்டினார்கள்.​

தெய்வா போனாள் போகிறாள், மகனுக்கு அடக்க ஒடுக்கமாக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கலாம் என்ற நினைப்பில் இருந்த மயிலிடம், ரகுவிற்கு ஒருமுறை பெண் கிடைத்ததே அரிது இதில் இன்னொரு திருமணம் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று நயனா நடப்பை எடுத்துரைக்க, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் ரகுவைப் பற்றி நல்லதாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவரின் அறிவுக்கண் திறந்தது.​

தெய்வாவை விட்டுவிடக்கூடாது என்று நினைத்து, தனக்கு வாய்த்த அடிமையான மூத்த மகன் ராஜை சமாதானம் பேச தெய்வாவின் அக்கா வீட்டிற்கு போகச் சொல்லும் போது, திட்டவட்டமாக மறுத்தான் அவன்.​

கண்ணீர்விட்டு கதறி, உன்னை விட்டால் உன் தம்பிக்கு யார் இருக்கிறார்கள், அவனை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பலமணி நேரம் பேசி தெய்வாவிடம் அலைபேசியில் பேசுவதற்காக ராஜைத் தயார் செய்தார் மயில்.​

“என்ன பெண்ணம்மா நீ, கணவனிடம் பிரச்சனை என்றால் அதைக் கணவன் வீட்டினரிடம் கொண்டு வராமல் இப்படித் தான் வாழ வரமாட்டேன், அது இது என்று தாய் வீட்டில் போய் இருந்து கொள்வதா?“ மென்மையாகத் தான் பேச்சை ஆரம்பித்தான் ராஜ்.​

“உங்கள் தம்பியின் குணம் பிடிக்கவில்லை, அவருக்கு நல்லது சொல்லிக்கொடுங்கள் என்று உங்கள் தாய் மற்றும் தந்தையிடம் நான் சொன்னேனா இல்லையா என்று ஒருமுறை என்னை லைனில் வைத்துக் கொண்டே கேளுங்கள்” என்று அவள் சொல்ல, ராஜ் திரும்பி தாயை முறைத்தான்.​

இருந்தாலும் விடாமல், “மனிதனாகப் பிறந்தவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை உண்டு. அப்படி இருக்க, உன் விருப்பப்படி ரகு மாற வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லையாம்மா? அதைவிடப் பெரிய தவறு உன் விருப்பப்படி அவன் நடந்துகொள்ளவில்லை என்பதற்காக அவனுக்கு உன் மீது அன்பு இல்லை என்று சொல்வது” என்க,​

“என் விருப்பப்படி அவரை அப்படி என்ன செய்யச் சொன்னேன் என்று கேளுங்களேன். தினமும் குளி, பல் துலக்கு, கண்ணை உறுத்தாத அளவுக்கு நல்ல உடையாக அணிந்து கொள், உடல் நலத்தைக் கெடுக்கும் உணவை கொஞ்சம் குறைத்துக்கொள், உடலில் இருக்கும் நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள், பொறுப்பை உணர்ந்து நட, உன்னால் அடுத்தவர் வருந்தும் அளவு நடந்துகொள்ளாதே என்று சொன்னேன். இவையெல்லாம் ஒரு மனைவியாக நான் எதிர்பார்க்கக் கூடாதவையா? இல்லை இப்படி நடந்துகொள்ளுங்கள் என்று புத்தி சொல்லக்கூடிய தகுதி இல்லாதவளா?“ என்று கேட்க, ராஜிற்கு செருப்பால் அடித்த உணர்வு.​

“இருந்தாலும், சொல்லாமல் கொள்ளாமல் உன் தாய்வீட்டில் போய் இருப்பது நன்றாகவா இருக்கிறது. என்னிடம் ஒருவார்த்தையாவது சொல்லி இருக்க வேண்டாமா?“ சின்னத் தயக்கத்துடன் கேட்க,​

“நீங்கள் செய்யும் யாவும் எனக்குப் பிடிக்கவில்லை. சொல்லப்படும் நல்ல அறிவுரையைக் கேட்டு ஒழுங்காக வாழ முடியும் என்ற உத்திரவாதத்தைக் கொடுக்காவிட்டால் நான் வேறு மாதிரி முடிவு எடுக்க வேண்டியது வரும். நான் மற்ற பெண்களைப் போல் பொறுத்துப்போகும் ரகம் அல்ல, என்பதை உங்கள் தம்பியிடம் அவர் முகத்தைப் பார்த்து தெள்ளத் தெளிவாக சொன்ன பிறகும், என் அம்மா உன்னை அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார்கள் வீணாக கற்பனை செய்யாதே என்ற உங்கள் தம்பியை நான் என்ன செய்யட்டும்“ தெய்வா கேட்க, பெருமூச்சு வந்தது அவனிடம்.​

“திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. ஆயிரம் காலத்துப் பயிர். விட்டுச் செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பிடித்துக் கொள்ள ஒற்றைக் காரணம் இருந்தால் அதைத் தான் பிடித்துக்கொள்ள வேண்டும்” ராஜ் சொல்ல, தெய்வா தொடர்ந்தாள்.​

“உங்கள் தம்பியுடன் நான் வாழ்ந்தாக வேண்டும் என்பதற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதைத் தாண்டி ஏதாவது நல்ல ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவள் கேட்க, ராஜால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.​

“கணவன் இல்லாத பெண் என்றால் அவளை வேசியாக்க, ஆண்வேசிகள் நிறைந்திருக்கும் உலகம் அம்மா இது. உன்னைப் போன்ற பூஞ்சை மனம் படைத்த பெண்ணால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்காகவேணும் முடிவை மாற்றிக்கொள்ளப் பார்’‘ நயனா தன் பங்கிற்குப் பேச,​

“உங்கள் மைத்துனனுடன் வாழச் சொல்வதற்கு இதைத் தவிர வேறு காரணங்கள் ஒன்று கூட உங்களுக்கும் கிடைக்கவில்லை தானே. உங்கள் கணவனின் உழைப்பில் ஒய்யாரமாக அமர்ந்து உண்ணும் மைத்துனனை விலக்க வழிதெரியாமல் என்னை உள்ளே இழுத்து விட்டுவிட்டீர்களே“ மையப்புள்ளியை தெய்வா பிடித்துவிட அதன்பிறகு எதுவும் பேச முடியவில்லை யாராலும்.​

மயில் அலைபேசியை வாங்கி, “நீ வேலைக்குச் சென்று வந்தால் அவன் வீட்டு வேலைகள் யாவையும் பார்த்துக் கொள்வான். அவனுக்கு கடைசி ஒரு வாய்ப்பு கொடு“ என்று கெஞ்சினார்.​

“உங்களுக்கே இது அதிகம் என்று தோன்றவில்லையா. ஆண் அடுப்பங்கறைக்குச் செல்வதா? நடுஇராத்திரியில் எனக்கு வெந்நீர் தேவைப்பட்டால், எழுந்து வந்து போட்டுக் கொடுத்துவிட்டு அதன்பிறகு நீ உறங்கினால் போதுமானது. கணவனைப் பார்த்துக் கொள்வதை விட பெண்ணுக்கு உறக்கம் பெரிதா? என்று கேட்டவர் தானே அவர். அவரா வீட்டு வேலை செய்வார். இல்லை இதெல்லாம் ஒத்து வராது“ தெளிவாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் தெய்வா.​

அவளிடம் பேச முடியாது போனதில் அவள் தமக்கையிடம் ஒருமுறை பேசிப் பார்த்தான் ரகு. “மிகவும் சிரமப்பட்டு தான் நான் திருமணம் செய்தேன். அத்தகைய சிரமத்தை மீண்டும் ஒருமுறை என்னால் பட முடியாது, அநாதையைப் போல் எங்கள் வீட்டில் தனிமையில் இருக்கிறேன். அவள் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த என்னையும் என் அம்மாவையும் நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டாள்” என்று நடப்பவைகளில் ஏதோ அவன் தான் அதிகம் பாதிக்கப்பட்டவன் போல் அதிகம் பேசினான்.​

“உங்களுக்கும் என் தங்கைக்கும் என்றும் ஒத்துவராது. இணையாத இரண்டு கோடுகள் அருகருகே இருந்தும் பிரயோஜனம் இல்லை. அதனால் இது தான் நல்லது” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் தெய்வாவின் தமக்கை.​

மயிலின் அட்டகாசத்தால், தாலி மெட்டி போன்ற ரகுவின் வீட்டினரால் அவளுக்குப் போடப்பட்ட பொருள்கள் யாவையும் ஒரு ஆளை அனுப்பி வாங்கிவர வைத்தார். ரகுவிற்கு தெய்வாவின் பக்கம் இருந்து போட்ட செயின் அதே ஆள் மூலம் இங்கு வந்து சேர்ந்தது.​

கிட்டத்தட்ட இலட்ச ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்கள் யாவையும் ரகு வீட்டினரே வைத்துக்கொள்வது என்று முடிவானது. இப்படியாக விஷயம் அப்போதைக்கு கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்க, வேறு விதமாகப் பிரச்சனை ஆரம்பம் ஆனது.​

மன ஆறுதலுக்காக தெய்வாவை மட்டும் அவள் தமக்கை வீட்டில் விட்டுவிட்டு தன் இல்லம் வந்திருந்த இலட்சுமியை அங்கே யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை . உயிரும் உணர்வும் இல்லாத அந்த வீட்டின் கௌரவத்தோடு சேர்த்து, சொந்த மகளின் வாழ்க்கையைக் கெடுத்தவள் என்ற பெயரோடு கணவன், மகன் இருவராலும் ஒதுக்கப்பட்டார் அவர். யாரும் தன்னுடன் பேசினாலும், பேசாவிட்டாலும் இது தன் வீடு என்ற நினைப்பை இலட்சுமி கைவிடவில்லை. தன் உரிமையை தானே கையில் எடுத்துக்கொண்டு தன்னந்தனிமையில் நேரம் நகர்த்தினார்.​

தன்னால் தானே என்று நினைத்து நினைத்து மருகினாள் தெய்வா. அழுகை அழுகை என்று தினமும் எண்ண அலைகள் அவளுக்குள் மோதிக்கொண்டே இருந்தது. உன்னை எந்தளவு நம்பினேன் நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டாயே, என் மகன் அநாதை போல் அலைகிறான் நீ மட்டும் சந்தோஷமாக இறுக்கிறாயா என்ற மயிலின் வார்த்தைகளும், ஐந்து மாத திருமண வாழ்க்கையும் தெய்வாவின் தலையைச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பித்தன.​

தமக்கை கணவன் வேலைக்காக வெளிமாநிலம் சென்றிருக்க, தமக்கை வேலைக்குச் சென்றபின் அந்த வீட்டின் தனிமை கொடூரமாகத் தாக்கியதில் தன்னிலை இழக்க ஆரம்பித்தாள் தெய்வா.​

மூளையைச் சுற்றும் நினைவுகளில் இருந்து தப்பிக்க, இல்லாத வேலைகளைக் கூட உருவாக்கிப் பார்த்தாள். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்தாள். பணத்தை செலவு செய்ய யோசிப்பவள் உணவு, கதைப்புத்தகம் என்று கண்டபடி செலவு செய்தாள்.​

சாதாரண உணவைக் கூட வீணாக்க கூடாது என்று நினைப்பவள், ஹோட்டல் உணவை ஒருவாய் உண்டுவிட்டு அப்படியே கொட்டினாள். உணவை வெறுத்தாள், உறக்கத்தை துறந்தாள், உடல் எடை தாறுமாறாகக் கூட ஆரம்பித்தாள். அவள் செய்கைகளுக்கான காரணம் அவளுக்கே புரியாமல் போனது.​

அவள் இருக்கும் நிலை புரியாமல் சீக்கிரமாக ஒரு வேலைக்கு முயற்சி செய், உன்னைத் தூற்றியவர்கள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அம்மா ஒருபக்கம் அறிவுரை சொல்ல, தன்னிலையில் இல்லாதவள் தாயையும் கத்தி வைத்தாள்.​

அவளுடைய பிரச்சனையைத் தெரிந்து கொள்ள அவளுக்கோ இல்லை அவளுக்கு அருகே இருக்கும் ஆட்களுக்கோ தெரியவில்லை. இந்த நிலையில் அவளை கட்டாயப்படுத்தி மலையரசன் வீட்டிற்கு வரவழைத்து, மறுமணம் அது இது என்று தாய் பேச ஆரம்பிக்க, அவள் கத்திய கத்தில் பயந்து போனவர் அப்போதைக்கு அந்தப் பேச்சை ஒத்தி வைத்தார்.​

தன் தலைக்குள் ஓடும் நினைவுகள் என்னும் பெருச்சாளியை சமாளிக்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தாள் தெய்வா. திடீர் என இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறும், நரம்புத் தளர்ச்சி வந்தவரைப் போன்று கை, கால் என அனைத்தும் நடுங்க ஆரம்பிக்கும். தலை மேல் பாரம் ஒன்று நிரந்தரமாக ஏறியதைப் போன்று எப்போதும் கனமாகவே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களையும், அதற்குக் காரணமான தன் மனஅழுத்தத்தையும் தெய்வா உணர ஆரம்பித்தாள்.​

நாள்தோறும் ஏதாவது ஒரு திட்டு, முணுமுணுப்பு என்று மலையரசன் மற்றும் வெற்றி இருக்க, அவர்கள் கண்ணில் படாமல், ஒரு அறைக்குள் சிறை வைத்து நேரம் காலம் சாப்பாடு கொடுத்து அவளை அருகில் வைத்துப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார் இலட்சுமி.​

“என்னை விடுங்கள் அம்மா, இவ்வளவு நாள் நீங்கள் எனக்காக செய்ததே பெரிது, இனி என் வாழ்வை நானே பார்த்துக்கொள்கிறேன். ஒரு வேலைக்குச் செல்கிறேன்“ என்றவளை இப்போது விட்டுவிட்டால் அவள் மறுமணமே செய்ய மாட்டாளோ என்ற பயத்தில், அதையும் இதையும் சொல்லி தன் அருகிலே வைத்துக்கொண்டார் இலட்சுமி. சொந்த வீட்டில் சிறையிருந்த தெய்வா, மனஅழுத்தம் தந்த துன்பத்தில் நாள்தோறும் துள்ளித் துடித்தாள்.​

“துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;

வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்;

மயில் இயல், குயில் மழலையாள், மான் இளம் பேடை

அயில் எயிற்றுவெம் புலிக் குழாத்து அகப்பட்டதன்னாள்“

தூக்கம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து, சூரியஒளியில் ஏற்றி வைத்த விளக்கைப் போல் அருள்ஒளியை இழந்த மேனியோடு, மயிலின் இயல்பான சுறுசுறுப்பு ஒருகாலத்தில் தன்னுள் இருந்ததையே முற்றிலும் மறந்து, குயில் போன்ற மழலை குரலைத் தனக்குள் ஒளித்து வைத்து, கூரிய பற்களை உடைய வெம்மையான புலிகள் கூட்டத்தின் நடுவில் அகப்பட்ட பெண்மானைப் போல் அசோகவனத்தில் சிறையிருந்தாளாம் கம்பராமாயணத்து சீதை.​

தெய்வாவின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான். தந்தை மற்றும் தமையன் கண்ணில் பட்டுவிடாமல் இருப்பதற்காக, சொந்த வீட்டில் பெற்றெடுத்த தாயால் அறைச் சிறைக்குள் இருந்தாள் பெண்.​

சீதையைக் காக்க ராமன் வந்தான். தெய்வாவைக் காக்க யாரும் வரப்போவதில்லை. “வேண்டாம் என்று ஒதுக்கிய தன் வீட்டு ஆண்களின் நிழலில் இருந்து விலக, தன் எதிர்காலம் பற்றி பயந்து, தன்னையும் தினம் தினம் எதையாவது சொல்லி பயமுறுத்தும் தாயிடம் இருந்து நம்பிக்கையோடு நகர, தன் உயிரை விழுங்கக் காத்திருக்கும் மனஅழுத்தத்திடம் இருந்து தப்பிக்க, தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள என்பன போன்ற பல சூழ்நிலையில் இருந்து, தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறாள் நவீன காலத்து சீதையான தெய்வா.​

 
Last edited:

NNK-27

Moderator

பிழையான விதியின் புதிய பரிணாமம்​

“காயங்கள் குணமாக காலம் காத்திரு, கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு“ பாரதியின் கூற்று சத்தியத்திலும் சத்தியமே. தன் மனக் காயங்களும், அதன் தாக்கத்தால் உண்டான மனஅழுத்தமும் காலம் போகப் போக தான் குணமாகும் என்பதைப் புரிந்துகொண்ட தெய்வா முதல் வேலையாக தாயை சமாதானம் செய்ய முயன்றாள்.​

“அறைக்குள் முடங்கிக்கிடப்பதால் தனக்கு எந்த வகையிலும் முன்னேற்றம் என்ற ஒன்று ஏற்படப் போவதில்லை. வேலைக்குச் செல்வதில் இரண்டு வருட இடைவெளி விழுந்திருந்த போதும், தன்னால் விரைவிலே நல்ல ஒரு வேலையைப் பெற முடியும். அதற்கு நான் இந்த அறையை விட்டு, வீட்டைவிட்டு, ஊரைவிட்டுச் செல்ல வேண்டும்“ நடப்பை பொறுமையாகவே எடுத்துரைத்தாள்.​

இலட்சுமி முடியவே முடியாது என்று திட்டவட்டமாய் மறுத்தார். குறைந்தபட்சம், ரகுவுக்கும் அவளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இனிமேல் இல்லை என்பது முடிவாகும் வரையிலாவது அவள் தனக்கு அருகில் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.​

தன்னிலையில் இல்லாத தெய்வாவிற்கு கோபம் அதிகமாக வந்தது. ஆனால் அதையும் மீறி ஒன்று அவளைத் தன் தாய்க்கு எதிராக பேசவிடாமல் செய்தது, அது நன்றியுணர்வு.​

ரகுவுடனான தன் பந்தத்தை உடைக்கும் நிலை வரும் போது மற்றவர்களை விட தன் தாயைச் சமாளிப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று அவள் நினைத்திருக்க, அதற்கு நேர்மாறாக, பழமைவாதியான தன் அன்னை இந்த விஷயத்தில் தனக்கு உறுதுணையாய் நின்றதோடு, அதுவரை எதிர்த்து பேசவே பயந்து கொண்டிருந்த கணவன் மற்றும் மகனை தனியாய் எதிர்த்து நின்று இறுதிவரை போராடி, வேண்டாத ஒரு உறவில் இருந்து தன்னை விடுதலை செய்திருக்கிறார் என்ற உணர்வு, தெய்வா செத்து சிதையில் எரியும் நாள் வரை அவளைத் தன் தாய்க்கு கடமைப்பட்டவளாக இருக்க வைக்கும். அப்படிப்பட்ட தாயின் மனநிம்மதிக்காக சில நாட்கள் அவருடன் அந்த வீட்டில் இருப்பதற்காக முன்வந்தாள்.​

“அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண்“ என்ற ஜெயகாந்தனின் வார்த்தைகளுக்கு இலக்கணமாய் தன் தாயை நினைத்துப் பூரித்தாள் தெய்வா.​

முழுக்க முழுக்க அம்மாவிற்காக எடுத்த முடிவு தான் என்றாலும், அதை நிறைவேற்றுவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமாக இல்லை தெய்வாவிற்கு. அவள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டில், அவளுடைய சொந்த அண்ணன் மற்றும் அப்பா வேலைக்குச் செல்லும் வரை அறையை விட்டு வெளியே வராதே, தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் கண் முன் வந்து, ஆறி வரும் கோபத்தைக் கிண்டி விட்டுவிடாதே என்று ஏகப்பட்ட கட்டளைகளை விதித்தார் இலட்சுமி. என்னடா கொடுமை என்ற எண்ணம் வந்தாலும், எல்லாம் அம்மாவுக்காக என்று சொல்லி அனைத்தையும் தாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள் தெய்வா.​

மலையரசன் நினைத்து தான் சரி என்பது போல் சொந்தத் தேவைகளுக்காக அவள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது விஷயம் சரியாகத் தெரியாமல், கணவன் இல்லாமல் தனியாக எங்கு வந்தாய் என்று கேட்கும் உறவுகளை நினைத்து ஆரம்பத்தில் பயம் கொண்டாலும், இது தான் வாழ்வு என்றான பின்பு பயம் கொள்ளக்கூடாது. விவாகரத்து ஒன்றும் கொலை, கொள்ளை போன்று கொடுஞ்செயல் அல்லவே. எதற்காக வெளியே சொல்ல கூச்சப்பட வேண்டும் என்று நினைத்து தைரியமாகச் சொன்னாள்.​

விவரங்கள் அனைத்தையும் விளக்கமாய் கேட்காவிட்டால் கூட, உனக்கா இந்த நிலை என்று தான் கேட்டார்களே தவிர, அவளை எந்தத் தப்பும் சொல்லவில்லை. என்னடா இது, இவர்கள் எல்லோரும் தன் மேல் இத்தனை நம்பிக்கை வைக்கும் அளவுக்கா நாம் வாழ்ந்தோம் என்று நினைத்து ஆச்சர்யம் தான் கொண்டாள் தெய்வா.​

மனஅழுத்தம் அதற்கான சிகிச்சை என்றெல்லாம் சொன்னால் தாய்க்கு புரியாது என்பது முதல்விஷயம், அதைவிட தப்பும் தவறுமாக பைத்தியம் என்று முடிவு செய்து பயந்து போவார். அவரைத் தவிர தன் சொந்தப் பிரச்சனையை யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால், மனஅழுத்தத்திற்கான சிகிச்சை என்ற கடினமாக பயணத்தை தனியே சமாளிக்க முடிவு செய்தாள் தெய்வா.​

“பெண்கள் ஆண்களை விடச் சிறந்தவர்களா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கண்டிப்பாகத் தாழ்ந்தவர்கள் இல்லை“ என்கிறார் கோல்டா மியர். ஆனால், ஒரு பெண்ணின் வைராக்கியம் மற்றும் நெஞ்சுரத்தின் முன்னால் வீராதி வீரர்கள் கூட மண்டியிட்ட கதைகள் எத்தனையோ இருக்கின்றன. கண்ணகி, மணிமேகலை, பாஞ்சாலி எனப் புராணங்களில் பார்த்தாலும், வேலுநாச்சியார், குயிலி, ஜான்சிராணி இலட்சுமி பாய் என்று வாழ்ந்து மறைந்த நல் போராளிகளைப் பார்த்தும் இவற்றை அறிந்து கொள்ளலாம்.​

அப்படித் தான் தெய்வாவும் தன்னைக் காக்க தனிமையில் நெஞ்சுரத்தோடு போராடினாள். தோழிகளிடம் விசாரித்து மருத்துவர்களை ஆன்லைனில் பிடித்து, தன்னுடைய பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைக்க, மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முற்றவும் இல்லை, தன்னால் சரியாகும் என்று விடும் அளவுக்கு சாதாரணமான மனநோயும் இல்லை என்று சொல்லி, அடுத்தடுத்த கவுன்சிலிங் தேதிகளோடு சேர்த்து, யோகா உடற்பயிற்சி என்று சிலவற்றைக் கற்றுக்கொடுத்தார் அந்த உளவியல் மருத்துவர். உணவில் அவர் சொன்ன மாற்றத்தை தெய்வாவால் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் மற்றவற்றை விடாமல் கடைப்பிடித்தாள். தன்னைக் காத்துக்கொள்ளுதல் தான் பெண்ணின் சிறந்த அழகு என்ற ஔவையாரின் வார்த்தைகளை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றினாள் பெண்.​

மகள் தன் கண் பார்வையில் தான் இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தாலும், பூட்டிய அறைக்குள் மகள் என்ன செய்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள இலட்சுமி முயற்சிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிக்க அவருக்கு ஆயிரம் சிந்தனைகள் இருந்தது.​

ஒன்றாக வாழ்ந்த குடும்பத்தில் தானும் தன் மகளும் தனிமைப்படுத்தப் பட்டோம், மகனும் கணவனும் தான் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் என்றால், மருமகளும் அல்லவா கைகழுவிவிட்டாள் என்று நினைத்து நினைத்து மருகிய இலட்சுமி பெரும்பாலும், அண்டை வீட்டுத் தோழிகளிடம் உரையாடி நேரத்தைப் போக்கிக் கொள்வார்.​

தனியாகக் கிடந்தது தெய்வா தான். இருபத்திநான்கு மணி நேர தனிமையே கொடுமை என்னும் போது, அதற்கு சிகரம் வைப்பது போல் பொல்லாத தொடர்நினைவுகள் தலையைச் சுற்றி வட்டம் அடிக்க பயங்கரமாகத் திணறுவாள்.​

துன்பப்படுவதை விடக் கொடூரம், அந்தத் துன்பத்தைக் கடந்து வரும் போது, ஆறுதலுக்கு உடன் ஒருவரும் இல்லாத தனிமை. ரகுவுடன் போராடி நெஞ்சுரம் அதிகமானதாலோ என்னவோ, தனிமை தரும் தவிப்பைத் தாண்டி ஒற்றை வீராங்கனையாய் போராடினாள் தெய்வா.​

யோகா, மூச்சுப் பயிற்சி, மெல்லிய இசை, நம்பிக்கையூட்டும் நன்னெறிக்கதைகள் என தன்னைச் சுற்றிலும் நல்லவைகளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டாள். சொந்த வீட்டில் ஆறு மாதம் தனிமைச் சிறையில் கழிந்த பிறகு அவள் மனநிலையில் ஓரளவு நல்ல மாற்றம் ஏற்பட்டது.​

ஆனால், மலையரசன் மற்றும் வெற்றியின் மனநிலையில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. ஊரெல்லாம் தங்களைக் கேள்வி கேட்கும் படிச் செய்த தெய்வா இலட்சுமி இருவரையும் அவர்கள் மன்னிப்பதாக இல்லை மற்றும் அவர்களிடம் பேசப்போவதும் இல்லை என்று நீண்ட மௌனவிரதத்தைக் கடைப்பிடித்தனர்.​

என்ன தான் தந்தை மற்றும் தமையன் என்றாலும் இனி முன்பு போல் அவர்களுடன் நல்ல உறவை அமைத்துக்கொள்ள தன்னால் முடியாது என்ற உண்மையை உணர்ந்து மனப்பூர்வமாக தான் விலகி இருந்தாலும், தன் தாயை மட்டுமாவது அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் இருந்தது அவளுக்குள்.​

என்ன தான் தனக்காக தாய் அமைதியாக இருந்தாலும் கணவன் மற்றும் மகன் இருவரும் தன்னைப் புறக்கணிக்கிறார்களே என்ற வருத்தம் அவருக்குள் இல்லாமல் இல்லை என்ற உண்மையும் புரிந்து தான் இருந்தது தெய்வாவிற்கு. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லாகிப் போன கதை அவர்கள் வீட்டிலும் நிகழ்ந்தது. இந்த விஷயத்தில் தன்னால் ஆகக் கூடிய காரியம் என்று எதுவும் இல்லாததால் அமைதி காத்தாள்.​

மனநோயின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது தான் என்றாலும், தன்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்த பின்பு வேலைக்கு முயற்சித்தாள். ஒரே மாதத்தில் வீட்டில் இருந்து செய்யும்படியாக நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை ஒன்று கிடைத்தது.​

வீட்டை விட்டுப் போக வேண்டாம் என்ற நினைப்பில் அவளுக்குள் ஏறிய பாரம், இலட்சுமியின் மனதில் அதுவரை இருந்த பாரத்தை இறக்கியது. என்றாவது ஒருநாள் தன் வீட்டு ஆண்களின் கோபம் குறையும், தெய்வாவின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து, கீழிறங்கி வந்து அவளுக்கு நல்ல ஒரு வாழ்வை அமைத்துக் கொடுப்பார்கள் என்பது அந்தத் தாயின் எண்ணம். ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது என்பதை விரைவிலேயே அவர்களோடு சேர்ந்து தெய்வாவும் அறிந்து கொள்ளும் நிலை வந்தது.​

ரகு மற்றும் தெய்வா இருவரின் திருமணம் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும், முறைப்படி விவாகரத்து வேண்டும் என்று ரகுவின் பக்கம் இருந்து நீதிமன்றத்தை அணுகி இருக்க, அவன் சார்பாக வாதாட இருக்கும் வக்கீல் தெய்வாவைத் தொடர்பு கொள்ள மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது அந்த வீட்டில்.​

போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்றம் இரண்டிலும் எங்களின் கால் படுவதும் ஒன்று தான் தீக்குளிக்குள் இறங்கி உயிர்விடுவதும் ஒன்று தான். அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரிக்கும் போது தான் இந்த வீட்டில் வந்து பிறந்தோமே என்று அதிகம் வேதனைப்பட்டாள் தெய்வா.​

நீதிமன்றம் ஒன்றும் அவர்கள் நினைக்கும் அளவுக்கு புனிதமற்ற இடம் இல்லை தான் என்றாலும், அங்கு தனியாகச் செல்ல தெய்வாவுக்கு கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. அதோடு ரகுவின் சார்பில் மயில் வந்தால் வேறு விதமான பிரச்சனைகள் வருமோ என்று தானும் தவித்து, தெய்வாவையும் தவிக்க வைத்தார் இலட்சுமி.​

சிரமப்பட்டு தன்னுள் சேகரித்து வைத்திருந்த நேர்மறை எண்ணங்கள் யாவும் நொடியில் அழிந்துபோய், மொத்தமாக பயத்தின் பிடியில் ஆழ்ந்தாள் தெய்வா. அவளுக்குள் இருந்த மனஅழுத்தம் மறுபடியும் அவளை மீறி வெளியே வந்து, பேயாட்டம் போட்டது.​

விவாகரத்து கோருவதற்கான விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தன் தாய்மாமன் மற்றும் பெரியம்மா உடன் சென்னை சென்று வருவதற்குள் ஒருவழியாகித் தான் போனாள் அவள்.​

உடன் வந்த பெரியவர்கள் இருவரும், வெளியில் இருந்து தேவையான எல்லா உதவியையும் செய்து கொடுத்தார்கள் தான் என்றாலும், அவளுக்குள் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து ஆறுதல் சொல்ல யாரும் அவளுக்கு அருகில் இல்லை. சின்னச்சின்ன விஷயங்களுக்கு பயந்து கொண்டே இருந்தால் சரிவராது என்று அவள் தான் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள வேண்டியதாகிப் போயிற்று.​

“கோர்ட் படியேறிச் சென்றுவிட்டு வெட்கம் இல்லாமல் என் வீட்டிற்கு வந்திருக்கிறாள் பார்“ என்று முணுமுணுத்தார் மலையரசன். அவையாவும் மகளின் காதை அடையாமல் பார்த்துக்கொண்டார் இலட்சுமி.​

தெய்வா சிரமப்பட்டு தனக்குத் தானே தைரியத்தை ஊட்டுவதும், அதைச் சில நொடிகளில் வெற்றி மற்றும் மலையரசன் ஆகியோர் உடைத்து எறிவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.​

தெரியாத்தனமாக ஒரு திருமணத்திற்கு சம்மதித்துவிட்டேன். அதற்காக இன்னும் எத்தனையைத் தான் நான் சந்திக்க வேண்டும் என்று தவிப்போடு நாட்களை நகர்த்தினாள் தெய்வா.​

தெய்வாவின் வாழ்வு முழுமையாக விடியும் நாளும் வந்தது, விவாகரத்து வழக்கின் முதல் ஹியரிங் வந்த போது முன்னைப் போல் தெய்வா பதற்றப்படவில்லை, பயம் கொள்ள வில்லை.​

தன்னந்தனியாக சென்னை வந்து தான் ஒருத்தியாக வழக்கை எதிர்கொண்டாள். அவள் நேரம் நீதிபதியும் தேவையில்லாத கேள்விகள் எதையும் கேட்காமல் கடைசி ஆறுமாத கால அவகாசம் அளித்து, வழக்கை ஒத்தி வைத்தார்.​

அந்த ஆறுமாத காலம் முடிவடைந்த பின்னர் தெய்வாவின் வாழ்வில் தொடர்ச்சியாக நல்ல விஷயங்கள் அதிகம் நடந்தது. முதலாவது அமைதியாகச் சென்று கொண்டிருந்த அவள் வாழ்வில் புயல், சுனாமியை விட மோசமான பேரழிவை ஏற்படுத்திய ரகுவுடனான திருமணம் சட்டப்படி முறிந்து இனி அவனுக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஆனது.​

இரண்டாவது, வேலை செய்து கொண்டே அரசு வேலைக்காக படித்து, ஒன்றரை வருட கால இடைவெளியில் இரண்டு தேர்வுகள் எழுதி இருந்தாள். “ஆமாம் இவளுக்கு வேலை கொடுக்கத் தான் அரசாங்கம் காத்துக்கொண்டு இருக்கிறது, இவள் காலத்திற்கும் அடுத்தவன் உழைப்பில் உண்டு உறங்கத் தான் தகுதியானவள்“ என்று குத்திப் பேசிய மலையரசனின் வார்த்தைகளைப் பொய்யாக்கி நல்ல முறையில் தேர்வாகி இருந்தாள் தெய்வா.​

அடுத்த சில மாதங்களில் அவளுக்காக போஸ்டிங் பக்கத்து ஊரில் கிடைக்க, தினமும் இங்கிருந்தே சென்று வா என்ற தாயின் வார்த்தைகளை உறுதியாக மறுத்து, வேலை செய்யும் பெண்களுக்கான பிரத்யேக விடுதியில் சேர்ந்தாள்.​

பரந்து விரிந்த ஆகாயத்தில், ஆசையோடு சிறகடித்துப் பறக்கத் தடையாக அவள் நம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவற்றோடு வேண்டாத கூடுதல் சிறகாக இருந்த அவளின் மனஅழுத்தங்கள் யாவும், சொக்கனை கண்டதும் மறைந்திட்ட மீனாட்சியின் மூன்றாம் அங்கத்தைப் போல் இருந்த இடம் தெரியாமல் மொத்தமாக காணாமல் போனது.​

கூண்டுக்கிளியாக இருந்தவள் ஆனந்தமாக ஆகாயத்தில் பறந்தாள், நிம்மதியாக மூச்சுவிட்டாள், தனக்கே தனக்காக வாழ்ந்தாள். அழகான நந்தவனத்தில் எதைப் பற்றிய கவலையும் இல்லாத பட்டாம்பூச்சியாக சுற்றித்திரிந்தாள்.​

அங்கே அவளைக் குற்றம் சொல்லவோ, கரித்துக்கொட்டவோ, அவமானச் சின்னமாகப் பார்க்கவோ யாரும் இல்லை. வாழ்க்கை நன்றாகச் சென்றது, அவ்வப்போது எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் வரும். சூன்யம் போல் தெரிந்த எதிர்காலத்திற்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டுமூ என்று ஒரு இலக்கை நிர்ணயித்த பிறகு, மனம் அதைப் பற்றியே யோசனையில் நின்று கொள்ளும். ரகுவைப் பற்றியோ அவனுடனான ஐந்து மாத திருமண வாழ்வைப் பற்றியோ அவள் துளி அளவு கூடயோசிப்பதில்லை. வேகத்தடை இல்லாத நேர்பாதை போல தெய்வாவின் வாழ்வு சீராகச் செல்ல ஆரம்பித்தது.​

எதிர்காலத் துணை பற்றி அவள் யோசிக்காமல் இருக்கலாம், காலமும் யோசிக்காமல் இருக்கும் என்று சொல்ல முடியாது தானே. யார் ஒருவர் தன் துக்கங்களைத் தனியாக சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்கிறார்களோ, அவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் நெருங்க முடியாது.​

ஒருவேளை அப்படி யாரேனும் ஒருவர் பலத்த இரும்புக்கோட்டைக்குப் பின்னால் இருக்கும் தெய்வாவின் பூஞ்சை மனதை அடைவான் ஆயின், அவனை விடச் சிறந்த பாக்கியவான் யாரும் இருக்க முடியாது. அப்படி ஒருவன் வரப்போகிறானா இல்லை தன் உள்ளத்துக்குக் கோவிலில் அய்யன் இல்லாத அம்மனாக தெய்வா மட்டுமே குடியிருக்கப் போகிறாளா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.​

வெற்றி மற்றும் மலையரசனைப் போன்ற தான் என்ற ஆணவமும் கர்வமும் கொண்ட ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள் தான். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் என்பவர்கள் பலவீனமானவர்கள், ஆண்களால் காக்கப்படும் இடத்தில் இருப்பவர்கள். அது தான் நிஜமா என்றால் சத்தியமாக இல்லை.​

சூழல் காரணமாகவோ, இல்லை இயற்கையான உடல் வலு காரணமாகவோ பொருள் தேடும் பணி ஆணிற்கும், இயற்கையான நுண்திறன் உணர்வு அதிகம் கொண்டிருப்பது மற்றும் தொடர் உழைப்பைக் கொடுப்பதில் ஆணை விஞ்சி நிற்கும் காரணத்தினால், ஆண் தேடி வந்த பொருளைப் பாதுகாத்து குடும்பத்திற்குத் தலைமை ஏற்கும் பொறுப்பில் பெண் இருப்பதும் பண்டைய காலத்தில் இயல்பாக பொருந்திப் போயின.​

இருவரின் வேலையும், திறனும் வெவ்வேறாக இருந்தாலும், அதன் மதிப்பு ஒன்றே. எப்படி ஆணின் பொருளீட்டல் இல்லாமல் குடும்பம் நகராதோ, அதைப் போல் பெண்ணின் சரியான வழிகாட்டல் இல்லாமலும் குடும்பம் நகராது.​

ஆண், பெண் என்ற இருவரின் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் தான் அது குடும்பம். ஒரு நல்ல குடும்ப கட்டமைப்பின் படி ஆணும் பெண்ணும் சமமே. ஆண் வெளியிடங்களுக்குச் சென்று வருவதாலும், பெண் வீட்டிற்குள்ளே இருப்பதாலும் அவர்களின் இருவரின் பணியில் ஏற்றத்தாழ்வு ஏற்படுமா என்றால் அதற்கான பதில் இல்லை என்பது தான்.​

இப்படி இருந்த நம் குடும்ப அமைப்பு யாரால் எப்படி சிதைந்தது. பெண் ஆணுக்கு அடிமை, அவள் செய்யும் வேலைகள் யாவும் அவளுடைய கடமை, என்பதாக எப்படி மாறியது என்பது யாருக்கும் தெரியாது.​

பால் திரிந்து தயிரானது போல் நல்ல மனம் கொண்ட ஆண்களுக்கு நடுவில் சிலரால் பெண்ணடிமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பேயாட்டம் ஆடி சில தலைவர்களால் அது தவறு என்று வலியுறுத்தப்பட்டு, இப்போது பல இடங்களில் ஆணும் பெண்ணும் சமமே என்பதை இருபாலரும் ஏற்றுக்கொண்டு வளர்வது நம்பிக்கையைத் தருவதாக அமைகின்றது.​

பெண் என்பவள் பிரபஞ்சத்தைப் போன்றவள், அவளிடம் அன்போடு கேட்டால் எதுவும் கிடைக்கும். ஆத்திரப்பட்டு அவமதித்தாலோ, தீங்கு விளைவித்தாலோ கனவிலும் எதிர்பாரா விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.​

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்“ என்பது இயற்பியலில் முக்கிய அங்கமான ஆற்றல் அழிவின்மை விதி. இதற்கு நல்ல ஒரு உதாரம் பெண்கள் தான். எந்தப் பாத்திரத்தில் வைத்தாலும் அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை ஏற்கும் நீரைப் போன்ற குணமுடையவர்கள் பெண்கள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அன்னை பார்வதியும் இருப்பார்கள், கோபத்தின் உறைவிடமான காளிதேவியும் இருப்பார்கள். எந்த நேரத்தில் அவள் யாராக இருப்பாள் என்பதை அவளைச் சுற்றி இருக்கும் நபர்கள் தான், தங்கள் செயல்களின் உறுதி செய்கிறார்கள்.​

பெண் ஆதிசக்தி அவள் மனது வைத்தால் மண் குடிசையும் மாளிகையாகும், அதுவே மாற்றி நினைத்தால் மாளிகையும் மண்ணாகும். மனைவி இல்லாத இல்லத்தில் நிம்மதி குடியிருப்பதில்லை என்பதை இல்லாள் இல்லாத இல்லம் பாழ் என்ற பழங்காலப் பொன்மொழி வலியுறுத்துகிறது.​

உலகம் என்னும் ஓவியம் பெண்ணினால் எழில் பெறுகிறது என்பது உலக மகாகவி அல்லாமா இக்பாலின் அற்புதமான வார்த்தைகள்.​

ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அங்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாக மாறும் என்கிறார் திரு.வி.கல்யாணசுந்தரனார்.​

பிறந்த இல்லத்தில் ஆரம்பித்து புகுந்த இல்லம் வரை, ஒரு பெண்ணுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அவள் கேட்டுப் பெறும் நிலை இல்லாமல் இருத்தலே உண்மையான பெண்ணியமாக இருக்க முடியும்.​

பெண் என்பவள் போற்றப்படக் கூடியவள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாத அதே நேரத்தில், அவள் தெய்வம் அவளுக்குத் தொண்டு செய்வது மட்டும் தான் ஆணின் கடமை என்பன போன்ற கருத்துக்களும் ஏற்றுக் கொள்ள முடியாதவையே. ஆண், பெண் இணைந்து வாழும் கட்டமைப்பைக் கொண்டது தான் இந்த உலகம். நீயா நானா என்ற போட்டி இங்கு அவசியம் இல்லை. நீயும் நானும் என்பது தான் சரியாக இருக்க முடியும்.​

திருமணம் செய்ய வயது மட்டுமே தகுதியாக இருக்க முடியாது என்பதை ரகு மூலமும், படிப்பு மட்டுமே தன்னைச் சுற்றி இருக்கும் தவறுகளையும், தவறானவர்களையும் அடையாளம் கண்டு, சரிசெய்ய உதவும், எத்தனை பெரிய போராட்டத்தையும் தாங்கிக்கொள்ளும் திறனைக் கொடுக்கும் என்பதைத் தெய்வா மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.​

விதிகள் பிழையானதால்

விரக்தியில் விழுந்து விடாமல்

விரும்பியது கிடைக்கும் வரை

விடாமல் போராடி

விதியை வென்றுவிடு“

-Thanks to (ApsareezBeena Loganathan)

பிழையான விதிகளை வைத்து, பிழையில்லாத வாழ்க்கை ஓவியம் வரைந்து முடித்த தெய்வாவை உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.​

 
Status
Not open for further replies.
Top