எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சே! செல்லாயோ அவனிடம் - கதை திரி

Status
Not open for further replies.

NNK-65

Moderator
நெஞ்சே! செல்லாயோ அவனிடம் கதை இங்கே பதிவிடப்படும். இந்த வருஷத்தோட முடிவிலும் அடுத்த வருஷத்தோட தொடக்கத்திலும் நிற்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் நல்லதா அமைய வேண்டும் என்ற வாழ்த்தோடும் நிலாக்காலம் 2 போட்டியில் பங்கேற்று அதை நல்லபடியா முடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்திருக்கும் எனக்கு வாசகர்களின் பேராதரவு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் விரைவில் கதை பதிவிட தொடங்குகிறேன்.

நன்றி,
இப்படிக்கு
உங்கள் NNK65
 

NNK-65

Moderator
நெஞ்சே! செல்லாயோ அவனிடம்
#NNK65
#tea_time


“இரண்டு நாள் எல்லோடி நான் லீவு எடுத்த காச்சல் எண்டுப்போட்டு… அதுக்குள்ள எங்கடி நீ காதல்ல விழுந்த?”“எல்லாம் உனக்கு தெரிஞ்ச பெடியன் தான்”காரணமேயில்லாமல் திரேந்திரன் முகம் அவள் மனக்கண்ணில் நக்கல் சிரிப்போடு தோன்றி மறைய ‘இந்த எளியவன் என்னத்துக்கு என்ர நினைப்பில் வாறான்’ தலை சிலுப்பினாள். அவனை நினைக்க இப்போதும் நல்ல கோபம் வந்தது.அகப்பக்கனையோடு புஷ்பா வீடெல்லாம் துரத்த, அப்பா வந்தெல்லோ அவளைக் காப்பாற்றியது. அவள் கால் இரண்டும் பழுக்காமல் போனதே அவள் யாருக்கோ செய்த புண்ணியமல்லவா…“இதுக்குத்தான் சொன்னனான் வகுப்பும் வேணாம் மண்ணும் வேணாம் எண்டு. சொல்லுற பேச்ச கேக்கிறவளா உங்கட மகள்?” ஏச்சோடு ஏச்சாக அப்பாவுக்கும் பேச்சுவிழ, பாவமாக பார்த்தவளை கண்ணை சிமிட்டி ‘பிழைத்து போகட்டும் விடும்’ சமாதானப்படுத்தியது அவர்தான்.“இப்ப போய் வந்திட்டன் தானே. முடிஞ்சத என்னத்துக்கு கதக்கயல்.”“வாய திறக்கிறல்ல நீ. சொல்லிப்போட்டன். வீட்ட இருந்திருக்க, ஊராக்கள் ஏத்திக்கொண்டு விடத்தேவலையெல்லா…”“சும்மா இருங்கோம்மா, வாயக்கிட்டாம. நானென்ன சோட்டப்பட்டா ஏறிக்கு வந்தனான். நான் பாட்டுக்கு ஒருகரையா நின்டவள தெரிஞ்ச பெட்டை எண்டுப்பொட்டு பாவம்பாத்து ஏத்திக்கொண்டு வந்து விட்டவர்.”“நீ வீட்ட இருந்திருக்க அதுவும் வந்திருக்காதெல்லோ. அதுவும் அரவிந்தன் எண்டாலும் பரவால்ல. இது அவன்ர பெரியம்மாயின்ர மகன். நமக்கு ஆரென்டு தெரியுமா எவடமென்டு தெரியுமா… கூப்பிட்டவன் எண்டா ஏறிக்குவாறனீயா? என்ன புதுப்பழக்கம்”‘எல்லாம் அவனால வந்தது!’ அப்போதும் அவனைத் தான் கரித்துக் கொட்டிக்கொண்டு நின்றவள் இப்போது அது நினைவுக்கு வரவும் மீண்டும் அவனையே கரித்துக் கொட்டத் தொடங்கியிருந்தாள்.


——————————

நல்ல மழை வெளுத்து வாங்கத்தொடங்கி இருந்தது. இரவிரவாக சிணுங்கி கொண்டுதான் இருக்க, “பேப்பர் கிளாஸ் இருக்குது அம்மா. எக்ஸாமும் வருகிதல்லா. போகலெண்டா சேர் திருப்பி விளங்கப்படுத்தவும் மாட்டினம். கஸ்டமா போகிரும்.”

புஷ்பாவதி “மழை உரக்கும் போல இருக்கு நித்தி, இன்டைக்கொரு நாள் லீவு போட்டா ஒன்டும் குறைஞ்சிபோக மாட்டாய். அடங்கி வீட்ட இரும்” என்றதை காதிலே விழுத்தாமல் தான் புறப்பட்டு வந்திருந்தாள்.‘ஒரு தரமாவது அம்மா சொல்லுறதை கேக்கவேணும் நித்தி. சொல்பேச்சு கேக்காம பிறகு கனகாட்டு படுறதையே வேலையா வச்சுருக்கிறாய் பாரும். இதுக்கு தான் புஷ்மா வாருவக்கட்டாலேயே சாத்துறவ’ மனசாட்சி வேறு அவளை அன்டைக்கு எண்டு பார்த்து முறைக்க, முகத்தை முழ நீளத்துக்கு நீட்டினாள் நியந்தனா.பாதி தூரம் கடக்கும் வரை மழை வலுக்கவே இல்லை. நடந்து போகலாம் என்று தான் குடையை பிடித்துக் கொண்டு நடையை எட்டிப்போட்டவள். இப்போது அடித்துப் பெய்ய, ரோட்டெல்லாம் சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுக்க, அதுக்குள் காலை வைக்க நரகல்பட்டு ஒரு கரையாக ஒதுங்கி நின்றாள்.“மழை பெய்யும் எண்டு தெரியாத சின்ன பபா குஞ்சா நீ?”“உரக்கும் எண்டு தெரிஞ்சும் யாராவது வருவீனமா. பேப்பர் க்ளாஸ் இருக்கெண்ட படியாலான் வந்தனான். இல்லாட்டி எனக்கென்ன தலைபழுதா, இந்த மழைக்க வந்து அம்புட(மாட்டிக்கொள்ள)”“வாய் மட்டும் நல்லா இல்லெண்டா நாய் தூக்கிக்கொண்டு ஓடிரும். அது மட்டும்தான் இருக்கு, மேலுக்கு சரக்கொண்டும் இல்ல” சிரித்துக்கொண்டே குட்டியவனை திரும்பி முறைத்தாள் அவள்.“நான் உங்களிட்ட கேட்டனானா, போக வழியில்லாம நிக்கன். ஏத்திக்கொண்டு போய் விடும் எண்டு. சும்மா என்ர பாட்டுக்கு நின்டவள ‘ஏறு ஏறு’ எண்டு கரச்சல்படுத்தி ஏத்தினது நீங்க” சூடாக திருப்பிக் கொடுத்தவள் ‘இப்ப வந்து மண்டைக்க சரக்கில்லயாம் மண்ணாங்கட்டி இல்லயாம்’ அவனுக்கு கேட்கட்டும் என்றே சத்தமாக முனுமுனுத்தாள்.அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் முன்னால் பார்த்துக்கொண்டு வண்டியை லாவகமாக வேகமெடுத்தான்.“வீட்டடிய விடத்தேவலை. இஞ்சயே இறக்கி விடுங்கோ. நான் போவன்” அவர்கள் வீடிருக்கும் தெருவுக்குள் கார் நுழைய, அப்போதுதான் மீண்டும் வாயை திறந்தாள் நியந்தனா.அதை காதிலே வாங்காமல் முன்னேறியவனின் செயலில் “சொல்றனானல்லா. யாரும் பாத்தா பிழையா நினைப்பீனம். இறக்கிவிடுங்கோ… இறக்கி விடுங்கப்பா, ப்ளீஸ் ப்ளீஸ். அம்மா கண்டாபிறகு சாத்துவா” கோபம் மறந்து கெஞ்சியவளை அவன்பொருட்படுத்தவேயில்லை.சரியாக அவள் வீட்டு கடப்பலடியில் சென்றே காரை நிறுத்தினான். சுறுசுறுவென பொங்கிற்று அவளுக்கு.‘சரியான மண்டக்கனம் பிடிச்சவன்! வேணுமென்டே செய்றான் எளியவன்’ கடுகடுத்தவள் அவனை முறைத்துக் கொண்டே குடையை விரித்தபடி இறங்க, கார் சத்தம் கேட்டு, மகளை காணாமல் உள்ளுக்கும் வெளியேயும் நடந்து கொண்டிருந்த புஷ்பாவதி அவசரமாக வெளியே வந்தவர் கண்ணில்பட்டதென்னவோ காரில் இருந்து இறங்கிய மகள்தான்.காரில் இருந்தவனும் அதைக் கண்டுவிட நக்கலாகச் சிரித்தவன் “இஞ்சப்பாரும். கொழும்புல இருந்து இப்பான் வாறனான். ஆவூ எண்டு கத்திறேல்ல விளங்கிச்சோ… சத்தம் வராம அழோனும்” சிரிப்படக்கிய குரலில் சொல்லியவன் காரை ரிவர்ஸ் எடுத்து இந்ராணி வீட்டுக்கு முன் கரையாக நிப்பாட்டினான்.‘லூசனா இவன்’ என போகிறவனையே பார்த்திருந்து விட்டு உள்ளுக்கு செல்ல திரும்பியவளுக்கு அங்கு கோபமாக முறைத்துக்கொண்டு நின்ற அம்மாவைக் கண்டு எல்லாம் புரிந்து போயிற்று.‘நாசமா போச்சு’ மானசீகமாக தலையில் கையை வைத்தவள் திரும்பிப் பார்க்க, கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு திரன் உள்ளே செல்வது விழ ‘சனியன் பிடிச்சவன், என்ன வேலையடா பாத்துப்பொட்டு போயிருக்காய். எளியவன்! என்ர கைல மட்டும் மாட்டினியோ கொத்து பராட்டா போட்டு சாப்பிறன் இரும்’ சினந்தவளுக்கு இன்று எப்பிடியும் அம்மாவின் கையால் அகப்பக்கணை அடியிருக்கிறது என்று புரிந்து போயிற்று.
 
Last edited:

NNK-65

Moderator
அத்தியாயம்01

தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா


மெல்லிய குரலில் பாடிக்கொண்டே கண்ணாடியில் முகத்தை ஒழுங்கு பார்த்த நியனா, அடர்சிவப்பில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை நெத்தியில் ஒட்டி ஒரு விரலால் அழுத்தினாள். அது நேராக இருக்கிறதா என்று பார்க்க ஒருதரம், சிரிக்கக்க அழகா இருக்கிறனா என்று பார்க்க ஒருதரம், கடைசியில் கையிலெடுத்த ஆரத்தை கழுத்தில் வைத்து அழகு பார்க்க ஒரு தரமென நிமிசத்துக்கு ஒரு தரம் கண்ணாடி பாத்துக்கொண்டிருந்தவளை அசையாமல் படுக்கையில் கிடந்தபடி ரசித்துக் கொண்டிருந்தான் திரேன்.

கண்ணால் ஒருமுறை அலங்காரங்களை அலசி திருப்திப்பட்டுக்கொண்டே ஆரத்தின் கொழுக்கியை பூட்ட முயன்றவள் கண்ணாடியில் தெரிந்தவனை பல்லை கடித்து முறைத்தாள்.

அவன் அசையவில்லை. ‘இஞ்ச முறைக்கிறனான். எரும மாட்டுக்கு மேல மழை பெய்ஞ்ச கணக்குக்கு அசையாம படுக்கிறத பாரன்’ “கொஞ்சம் வந்து பூட்டி விடுங்கோ” நேரமாகிக் கொண்டிருக்கிறதே. வேறு வழியற்று அழைத்தாள். அப்போதாவது அசைந்தானா? ம்ஹூம்…

‘இந்தாள!’ பல்லை கடித்தவளுக்கு நல்ல விசர் வந்திற்று. “கூப்பிட்டுக்கு இருக்கிறனான் எல்லா. கூப்பிட்டா எழும்பிக்கு வரோணும். இப்பிடி படுத்துக்கெடந்துக்கு போஸ் குடுக்கிறேல்ல. என்ன! பிறகு உங்கட ஆக்கள் அதுக்கும் பேசவேணுமோ எனக்கு? அதுதானே உங்கட எண்ணம். பிறகு நல்ல பிள்ளைக்கு என்ர அப்பாக்கும் மத்த ஆக்களுக்கும் முன்னாடி நடிக்கிறது. நான் லூஸ்க்காரி போல எல்லாரும் சொல்றத வாயை பொத்தி கேட்டுக்கொண்டு இருக்கவேணும் என. எல்லாம் என்ர தலைவிதி. போயும் போயும் உங்கள கலியாணம் கட்டவேணும் எண்டிருந்திருக்கு.”

வழக்கம்போல் மூக்கு விடைக்க, முகம் சிவக்க ஆரம்பித்தவளை எப்போது எப்பிடி என தெரியாமலே தன் கையணைவுக்குள் எடுத்திருந்தான் திரேன்.

அவள் விலகவில்லை. சண்டை பிடித்தாலும் அடியே போட்டாலும் அவன் அணைப்புக்குள் அடங்கினால் எல்லாம் பறந்து போய்விடும். ஆனாலும் கெத்தை விட்டு லேசில் சமாதானமாகமாட்டாள். இப்போதும் பொய்க்கு திமிறியவளின் சேலை மறையாத வெற்றிடையில் அவன் உள்ளங்கை அழுந்த, அவளுக்கு சிலிர்த்தது.

கண்ணை மூடி அவன் நெஞ்சில் வாகாக சரிந்துகொண்டு “இப்ப என்னத்துக்கு வந்து கட்டிப்பிடிச்சுக்கு இருக்கிறயல். நான் கேட்டனானா?” உதட்டை சுழித்து சிடுசிடுத்தவள் சாயம் கண்ணாடியில் வெளுத்துக் கொண்டிருந்தது.

அவன் முகமும் அவள் முகமும் அருகருகே தெரிய, சோடி பொருத்தத்தை எப்போதும் போல் ரசித்துக்கொண்டே “ம்ம்! என்ர மனுசிக்கு தேவையோ தெரியாது ஆனா எனக்கு அவள்ர தேவை எப்பவும் தேவை” முனகலாகச் சொன்னவன் கண்கள் இப்போது அவள் கழுத்துக்கு தாவியதில் உதட்டை குவித்து ஊதினான்.

மயிர்க்கால்கள் கூச்செறிய பிடரி மயிர்கள் சிலிர்த்துக்கொண்டு எழுந்துநிற்க, அவளும் கால் பெருவிரலில் நின்றாள். மலைப்பாம்பை போல் அவள் இடுப்பை சுற்றிய கரங்கள் அவள் முந்தானைக்கூடாக மெல்ல முன்னேறி அவளை மயக்கத்துடன் நடுக்கத்துக்கு ஆழ்த்த, திடுமென “விடுங்கோ! ப்ச்! விடுங்கோ என்கிறன் எல்லா. என்ர சாரி எல்லாம் கசங்குது. கஷ்டப்பட்டு உடுத்தினான்” துள்ளி குதித்து அவனிடமிருந்து விலகியவளின் செயலில் அவனை சுற்றியிருந்த மாயவலை பட்டென்று அறுந்தது.

கண்ணால் அவளை முறைத்தான். எப்போதும்போல் அதை கணக்கெடுக்கவில்லை அவள். “உங்களுக்கு இதே வேலையா போயிட்டு!” பட்டென அவன் தோளில் ஒன்று போட்டவள் “டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்கோ… கைகால் மேல படாம கொழுக்கியை மட்டும் பூட்டிப்போட்டு வெளியேறங்குங்கோ.” தள்ளி நின்று கையால் இடைவெளியை சுட்டிக்காட்டி கறாராக சொல்ல ‘இதுக்கும்மேல என்னடி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றது’ என்றவன் பார்வையோ ஒரு மார்க்கமாக அவளில் மேலிருந்து கீழாக படிய “என்ன லுக்கு? ம்ம். பூட்டுங்கோ” என்றாள் அதட்டலாக.

அவன் முகத்தில் புன்னகை வாடவில்லை. அவள் சொன்னதுபோல் தள்ளிநின்றே கொழுக்கியை பூட்டியவன் விலகி நிற்க, கடைசியாக ஒருதரக்க எல்லாம் சரியாக இருக்கிறதா சாரி கசங்கி இருக்கிறதா என்று பார்த்தவள் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டாள்.

பின்னாலே லேசாக தலையை மட்டும் கோதிக்கொண்டு அவள் அணிந்திருந்த வாடாமல்லி நிறப்புடவைக்கு மேட்சாக அணிந்த முழுக்கை சட்டையின் கையை உயர்த்திவிட்டுக்கொண்டு அறையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அவளை தொடர்ந்தான்.

காரில் ஏறியதும் நினைவு வந்தவளாக “உதி சாப்பிட்டாளாமா? அப்பாட்ட கேட்டனீங்க” என்றாள் அவனிடம் திரும்பி.

அவளிடம் சின்ன தலையசைப்புடன் காரை வேகமெடுத்தான் அவன். அவன் வேகத்திலே நேரமாகிற்றென்று புரிந்திற்று. அதையே அவனிடம் கேட்கவும் செய்தாள். “நல்லா நேரம் போயிட்டாக்குமா?” தாங்கலாக கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன் உதட்டில் பெரிய முறுவல்.

“இண்டைக்கு நேத்தா சுணங்கிறனீ? அது காலம் காலமா நடக்கிறதெல்லா… அதால ஆரும் ஒண்டும் நினைக்கமாட்டினம்” என்றவனுக்கு அடக்கேலாமல் சிரிப்புப் பெருகிற்று.

பட்டென்று அவன் சந்தில் ஒன்று போட்டு “போடா மென்டல்!” சுள்ளென்று சினந்தவள் மறுகணமே உதட்டைக் கடித்துக்கொண்டு ஓரக்கண்ணில் அவனை நோட்டமிட்டாள்.

இப்பிடித்தான் அடிக்கடி எதையாவது பேசிவிடுவாள். பிறகு பிறகு அவன் முகத்தை அடிக்கொருதரம் இப்பிடித்தான் பார்த்து வைப்பாள். “இதுவும் பழகிட்டு” அவளை அதிக நேரம் தவிக்கவிட்டுவிடாமல் சிரிப்புடன் சொல்லியவன் வாகனமோட்டுவதிலே கவனமாக இருக்க, உதட்டை வளித்தவள் கோபம் மூள அவனை முறைத்தாள்.

அதன்பிறகு அவன் பக்கம் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. கையை கட்டிக்கொண்டு ரோட்டில் புதினம் பார்த்துக்கொண்டு வர, திரேனின் அலைபேசி அவளின் அப்பாவின் எண்ணை தாங்கி சிணுங்கிற்று. “அப்பா தான். என்ன எண்டு கேளு. வந்துக்கு இருக்கிறம் எண்டு சொல்லு” என்றான், வாகனமோட்டுவதால் அவளிடம் நீட்டிக்கொண்டே லாவகமாக ரவுண்ட் அபோட்டை சுற்றிக்கொண்டு.

“என்னத்துக்கு உங்களுக்கு எடுத்தவர்? எனக்கு எடுத்திருக்கலாம் எல்லா” என்றவாறே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு “ஓம் அப்பா சொல்லுங்கோ. வந்துகொண்டு இருக்கிறம்நாங்க.” கதைத்தவாறே கைப்பையில் துளாவி போனை கண்டெடுத்து ‘ப்ச்! சைலெண்டுல கிடக்கு’ அதை எடுத்துவிட்டவள் “என்னப்பா எனக்கும் எடுத்திருக்கிறயல். எல்லாம் ஓக்கே தானே அங்க ஒண்டுமில்லையே?” பதற்றமாகவே கேட்டாள்.

“இல்ல இல்ல. இஞ்ச உதி மண்டபத்தில் ஓடிவிளையாடிக்கு இருந்தவள் கீழ விழுந்திட்டாள் அம்மாச்சி. அம்மாவும் அப்பாவும் வேணுமாம் எண்டு ஒரே கத்து. இப்பதான் அரவிந்த் லொலிபொப் ஒண்டு வாங்கித்தந்து ஆள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறா. அது முடிய திரும்ப கத்தினாலும் எண்டுப்போட்டு தான் எடுத்தனான். அவசரமில்ல, ரெண்டு பேரும் மெதுவா வாங்கோ” என்று அழைப்பை துண்டித்தார் சிவலோகநாதன். நியனாவின் அப்பா.

அவன் போனையும் மடியிலே வைத்தவள் அதன் முகப்பில் முகம் எல்லாம் சிரிப்புடன் கையில் பூங்கொத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த உதியின் படத்தை வைத்திருந்தவனை தனகும் நோக்கில் கிண்டல் சிரிப்புடன் திரும்பிப்பார்த்தாள்.

“லொக்கை எடுத்துப்போட்டு உள்ளுக்கு பாரு” அவள் எதற்கு திரும்புகிறாள் என்று தெரியாதவனா அவன்? அவளை திரும்பிப் பார்த்து கண்ணால் சிரித்தவன் மீண்டும் முன்னால் திரும்பிக்கொள்ள, ‘க்கும்’ அலட்டியவள் போனை திறந்துபார்க்க, அவன் கையணைவில் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

நேத்து வரும் வழியில் எடுத்த ஃபோட்டோ. வந்த களைப்பில் அறைக்கு வந்ததும் தூங்கியிருந்தாள் அவள். அவன் அதை ஹோம் ஸ்க்ரீனாக வைத்திருக்க, திரும்பி பக்கவாட்டில் அவனைப் பார்த்தவள் “அதென்ன, உங்களுக்கு அப்பிடியொரு விருப்பம் என்னில?” பதில் வந்தேயாக வேண்டும் என்று கட்டளையிட்டது அவள் குரல்.

காதலுடன் அவளை தழுவி மீண்ட அவன் பார்வையே பதிலாகிற்று அவளுக்கு.

“சிரிப்பழகன் எண்டுற நினைப்போ? கேள்வி கேட்டா பதில் சொல்லோணும். அதைவிட்டுப்போட்டு சிரிக்கிறது. சிரிச்சா கண்ணுக்கு விளங்காத குழி ஒண்டு விழும் அதை காட்டுவம் எண்டுறதுக்காக சிரிக்கிறதோ…” கோபமாக கேட்டவள் தலையில் அடித்துக்கொண்டாள் நினைப்பு வந்து.

‘என்ன’ அவன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, “நேத்து உங்களிட்ட சண்டை போட்டல்லோ நான். இனி கதைக்கமாட்டன் எண்டு வேற சொன்னனான். ப்ச்! மறந்துபோய் கதைச்சுக்கு இருக்கிறன்” நெற்றியில் அறைந்தவள் “திரும்பியும் சிரிப்பா” அவனை அதட்டினாள். ‘அய்யோ திரும்பவும் கதைக்கிறனப்பா’ இருவிரலால் வாயை மூடிக்கொண்டு மௌனவிரதம் காத்தவளை காணக்காண அவன் சிரிப்பு குறையவில்லை.

‘சிரிச்சியலோ கண்ணை நோண்டுவன்’ கண்ணால் மிரட்டியும் அவன் அடங்கினான் இல்லை.

‘இந்தாள் ஒரு சொட்டும் சொல்லு கேக்கிறான் இல்லப்பா’ உதியை முறைப்பதுபோல் அவள் அப்பாவையும் முறைத்து கடைசியில் அவள்தான் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொள்ள வேண்டியதாகிற்று.

மண்டபத்தை அடையும்வரை அவனோடு பேச என்ன திரும்பக்கூட இல்லை. மண்டபத்துக்கு வந்ததும் அம்மா, அப்பாவை கண்டுவிட்டு கண்ணில் கண்ணீர் டேங்கை திறந்து, ஒரு மூச்சு அழுது செல்லங்கொஞ்சி மீண்டும் ஒரு லொலிபொப்புடன் சமாதானமாகி, விட்ட விளையாட்டை தொடர உதி ஓடிய பின்னும் அவள் அவன் பக்கம் திரும்பினால் இல்லை.

“என்னடியப்பா கடும் முறைப்பா கிடக்கு” போறபோக்கில் கேப்பதைப்போல நின்று கேட்டவனையும் கண்டுகொள்ளவில்லை அவள்.

“ரொம்பத்தான் பண்ணுறாள்” சிரிப்புடனே அவள் கோபத்தையும் ரசித்துக் கொண்டான் அவன்.

‘ரகு வெட்ஸ் நர்மதா’ மண்டபவாசலில் பூ அலங்காரங்களின் நடுவே மிளிர்ந்து கொண்டிருந்தது அன்றைய கதாநாயகர்களின் பெயர்.

ஒன்றுவிட்ட அத்தை மகன் மாமன் மகள் தான் என்றாலும் வந்திருந்த சனத்துக்கு குறைவில்லாமல் மண்டபம் நிரம்பி வழிந்தது. என்னதான் அவள் முறைத்துக் கொண்டிருந்தாலும் கூட்டத்தில் அலம்பல் படாமல் கவனமாக கூட்டிச்செல்ல, வேறுபக்கம் திரும்பிக் கொண்டிருந்தாலும் அவன் காட்டிய வழியில் நடந்தவள் ‘இதுக்கு ஒண்டும் குறைச்சலில்லை. கேக்கிறத செய்யேலா. கேக்காததை பாத்து பாத்து செய்றது’ நொடித்துக் கொண்டாள் தவறாமல்.

இவர்களைக் கண்டதுமே பெரியவர்கள் வாசலுக்கே வந்து வரவேற்றனர்.

“எவ்வளவு நாளாகிற்று என்ன” இன்முகத்துடன் உபசரித்தவர்களிடம் பதிலுக்கு சின்ன தலையசைப்புடன் உள்ளேவர, சற்றுத்தள்ளி “அம்மாட்ட போப்போறன்” அழுது அடம்பிடித்த இளையவனை சமாளிக்க திணறிக்கொண்டிருந்த அரவிந்தன், திரேனை கண்டதும் “தோ பெரியப்பா வாறான், வாங்கோ செல்லம் சொக்கா கேப்பம்” மகனை தூக்கிப்போட்டு பிடித்தவன் கிளுக்கி சிரித்தவன் காதுக்குள் “அம்மாட்ட சொல்லப்போடா சரியோ” டீல் பேசியபடி இவனருகில் வந்ததும் ஒரு கையில் மகன் இருக்க, மறுகையால் அவனை ஆரத்தழுவிக் கொண்டான்.

“எப்பிடியடா இருக்கிறாய்?” முறுவலுடன் கேட்டவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்துப்போட்டவன் “விசராடா உனக்கு” வலியோடு சினந்தவனின் தோளில் கைபோட்டு “எப்பிடி இருக்கிறன் நீயே பாரன்” என்றான் அகலவிரிந்த சிரிப்போடு.

“விசரா விசரா இந்தப் பழக்கத்தை இன்னம் விட்டொழிக்க இல்லையாநீ? காணுற நேரம் எல்லாம் குத்திக்குத்தி வயித்தை புண்ணாக்கிறாயடா” சினந்தவன் மறுகணமே மீண்டும் அவனை இறுக்க தழுவியிருந்தான்.

அதற்குள் இவர்கள் வந்ததை கேள்விப்பட்டு விரைந்து வந்த இசைவாணி “நித்தி” பாசமாய் அவளை அணைக்க, கூடவே வந்த மதியும் வாஞ்சையாய் அவள் முகத்தை வருடினாள்.

“வாணிக்கா, மதியக்கா” பதிலுக்கு தானும் அவர்களை கட்டிக்கொண்டவள் அவர்களை கண்டதும் நேற்றைய சண்டை இன்னும் பூதாகரமெடுக்க, சற்று தள்ளி அரவிந்தனோடு கதைத்துக் கொண்டிருந்தவனை கண்ணால் வெட்டிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் நியனா.

‘சரியான கூத்து காட்டுறாள்.’ செல்லமாக கொஞ்சிக்கொண்டவன் வேண்டுமென்றே அவளை கண்டுகொள்ளாமல் தவிர்க்க, அவன் தன்னை கவனிக்கிறானா என அடிக்கடி அவன் முகத்தை முகத்தை பார்த்தவள் அவன் தன்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றதும் கடுப்பாகிப்போயிற்றாள். சுறுசுறுவென கோபம் ஏறிற்று. ‘இந்தாள்ர கொழுப்ப பாரன்’ கருவியவளுக்கு கோபம் மட்டும் குறைந்தபாடில்லை.

அதன்பிறகு வாணி கதைத்ததோ மதி கலியாண பொம்பிளையை பார்க்க கூப்பிட்டதோ எதுவும் காதில் ஏறவில்லை. “நித்தி! கூப்பிறது காதில் விழல்லயா? அப்பிடி என்ன யோசனை” என்ற மதியின் உலுக்கலில் தான் ‘ஹாங்’ என்றபடி நிகழ்வுக்கு திரும்பியவள் “ஒ…ஒண்டுமில்லை மதியக்கா. என்ன கேட்டநீங்க?” என்று கேட்டபடி பொம்பிளையை பாக்கப்போனாள்.

வாணியும் கூடவர “வாணிக்கா எங்க உங்கட குட்டி சுட்டீஸ்? அண்டைக்கு அரவிந்தண்ணாவோட வீட்டுக்கு வந்தவியலை காலில சுடுதண்ணி படாத குறையா அண்ணா அழைச்சுக்கொண்டு போயிட்டார். கட்டாயம் அங்கால பக்கம் வந்தா வீட்டுக்கு வரவேணும்.”

“அதென்ன வாணி மட்டும் ஸ்பெஷல். நாங்களும் இங்கதான் இருக்கிறநாங்க. என்னை கூப்பிடலை பாத்தியோ…”

“அக்கா! அது உங்கட வீடுபோல நீங்க எப்ப எண்டாலும் வந்து போகலாம். கேக்கோணுமா நீங்க?”

“நல்லா நல்ல பிள்ளைக்கு நடிப்பாய்டி” மதி அவள் சொக்கை கிள்ள, வலித்த கன்னத்தை தடவியபடி “அக்கா!!!” என்ற நியனாவின் சிணுங்கல் “அய்யய்யோ அண்ணி!” திடுமென கேட்ட வாணியின் அலறலில் நின்றுபோக, இருவரும் ஒன்றுபோல் வாணியை திரும்பிக் பாக்க, அவளோ நமுட்டுச் சிரிப்புடன் அண்ணிக்கு கண்ணை காட்டினாள்.

மணமகள் அறைக்கு போகும் வழியில் தான் இவ்வளவும் நடந்திருக்க, அந்த பக்கம் ஆண்களே இல்லை. பெண்கள் கூட்டம் போவதும் வருவதுமாக இருக்க, திரேன் வேகநடையில் மேலேறி வந்து கொண்டிருந்தான்.

இருவரின் பார்வையை தொடர்ந்து பார்த்த நியனாவின் முகமே சிவந்திற்று. ‘என்ர மானத்தை வாங்குறதுக்கு எண்டே செய்றார்’ அவள் அவனை கடிந்து முடியவில்லை அருகில் நெருங்கியவனுக்கு கேக்கும் விதமாக “நித்திக்கு கிள்ளிப்போட்டயல் அண்ணி. அங்க அண்ணாக்கு வலிச்சிருக்குமெல்லா…” கிண்டல் சிரிப்போடு கேலி செய்தாள் வாணி.

“வாணிக்கா!” என்றவளின் முறைப்பை பொருட்படுத்தவில்லை அவள். “அப்பிடித்தானே திராண்ணா” என்றிருந்தாள் அருகில் வந்தவனிடமே. மற்ற இருவரும் அறியாமல் கண்ணாலே தன்னை துரத்திக் கொண்டிருந்தவளை குறும்பாக பாத்தவன் “ரூபன் தேடுறவர் வனி” என்க,

“சூப்பர் பவர் என்னவும் உங்களிட்ட இருக்குதோ அண்ணா. கனடாவில் இருக்கிறவர் தேடுறது உங்களுக்கு இங்க விளங்குது என்ன.” என்றவளுக்கு சிரிப்புவர அவனுக்கும் சிரிப்பு வந்திற்று.

“அதுதான் விளங்குது எல்லோ. வெளிக்கிடும்” துரத்தியவனை “இந்த அசிங்கம் தேவையோ அண்ணி. வாங்கோ நாங்க போவம்” பொய்க்கோபம் காட்டியவள் அவன் கேட்ட தனிமையை குடுத்து மதியை இழுத்துக்கொண்டு நகர்ந்திற்றாள்.

முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்டு சூடாக நின்றவளை பின்னால் இருந்து அணைத்தவன் அருகில் இருந்த அறைக்குள் புகுந்திருந்தான். கதவில் சாய்ந்து நின்றவனின் மேல் சாய்ந்து கொண்டு படபடவென அவன் நெஞ்சில் குத்தினாள் அவள்.

பேண்ட் பொக்கெட்டில் கைவிட்டு அவளையே பார்த்திருந்தவனை கண்டு அடிப்பதை நிறுத்தியவள் அவன் முகத்துக்கு நேராக விரல் நீட்டி “சொன்னனான் தானே. அங்கால இங்கால போனா வால்பிடிச்சிக்கொண்டு வாறேல்ல எண்டு. பபா குட்டி எண்டுற எண்ணமா. ஆக்கள் பாத்தா என்ன நினைப்பினம்! ப்ச்! என்ர மானமே போகுது.” படபடவென பட்டாசாக பொறிந்தவளை தனக்குள் சிறையெடுத்தவன் “அவனுக்கு அவன்ர மனுசியில சரியான பாசம், காதல், விருப்பம் எண்டு நினைப்பீனம். நினைக்கட்டுமே!” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை அதக்கி.

“உங்கள!” பல்லை கடித்தவளுக்கு அவனை திட்டவும் வார்த்தை வரவில்லை. சொல்லிச் சொல்லி சலித்தே போயிற்றாள். ‘இன்னும் எப்பிடி சொல்லுறது?’ அவன் கரங்களுக்குள் நின்றவளின் மேல் மூச்சு கீழ் மூச்சில் ஏறி இறங்கிய சேலை மறைத்த மென்மையில் முகம் புதைய குனிந்தவனை தள்ளிவிட்டு “போயா! பின்னால வந்தியோ… கையில் இருக்கிறதை கொண்டு தூக்கி அடிப்பன்” கோபமாக அறையை விட்டு வெளியேறிவிட, அவளை தொடர்ந்து அறையை விட்டு வெளியேறியவன் ஆழ்ந்த மூச்செடுத்து தலையை கோதி “காலையில் இருந்து சோதிக்கிறாள்” முணுமுணுத்துக் கொண்டான்.

வெளியே வந்ததுமே கண்ணால் அவளை தேடி ரெஸ்ட்ரூமுக்குள் நுழைந்தவளை கண்டு சற்று நேரத்திலே வாணியை அங்கு அனுப்பி வைக்க, வெளியில் சத்தம் கேட்டு உள்ளிருந்தபடிக்கே “ஆரு?” என்றவளுக்கு பெருஞ்சிரிப்புடன் “நாந்தான் நாந்தான்” குரல்கொடுத்தாள் வாணி.

‘ஆண்டவா! இந்தாள…’ எதிரில் இருந்த கண்ணாடியிலே தலையை முட்டிக்கொண்டாள்.

கோபம் கோபமாக வந்தது. ஏன்தான் இந்தக் கலியாணத்தை பண்ணித்துலைத்தாளோ? லட்சத்தி பத்தாயிரம் தடவை தனக்குதானே கேட்டு கொண்டாள்.

பரபரவென கைப்பையை திறந்து அதனுள் வைத்திருந்த புகைப்படத்தை வெளியில் எடுத்து உயர்த்திப் பிடித்தாள். பார்க்க பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

‘அண்டைக்கே இவன்ர மண்டையை உடைச்சிருக்க இண்டைக்கு எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? சிரிக்காதயடா. அடிதான் தருவன் இப்ப’ ஆத்திரம் தீருமட்டும் ஃபோட்டோவில் இருந்தவனை திட்டித்தீர்த்தவள் அதற்காகவே மறக்காமல் ஞாபகத்தோடு கைப்பையில் எடுத்து வைத்திருப்பாள். அவளுக்கு கோபம் வருகிற போதெல்லாம் அந்த ஃபோட்டோவும் அதிலிருப்பவனும் தான் வடிகால்.

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவள் இப்போது ஓரளவுக்கு சமன்பட்டிருக்க, கவனமாய் ஃபோட்டோவை பத்திரப்படுத்தினாள். முகத்தை லேசாக சீர்படுத்தி வெளியேவர “முடிஞ்சுதா” கேட்டுக்கொண்டே முன்னே நடந்தாள் வாணி.

“சொறி வாணிக்கா. கணக்க நேரம் நிக்க வச்சிட்டேன் என்ன” கேட்டவளை திரும்பி முறைத்தாள். “அடிவாங்காம நட” எனவும் முகத்தை தொங்கப்போட்டவளை நிப்பாட்டி “இப்பிடியே போய் அண்ணாகிட்ட பேச்சு வாங்கித்தர ப்ளான்ல ஏதும் இருக்கிறயா” கேட்கவும் அவளே சொல்லாவிட்டாலும் அவள் முகத்தை பார்த்தே வாணிக்காவை துருவி எடுத்துவிடுவான் என்பதால் அசடு வழிந்தவள் பளீரென்று சிரிக்க, “இதுதான் என்ர நித்திக்கு அழகு. இப்ப வா போவம்” கைபிடித்து அழைத்துச் சென்றாள் வாணி.

அங்கிருந்த அறையில் ஒன்றின் வாசலில் பேத்தியை கையில் வைத்து ஓறாட்டிக்கொண்டிருந்த இந்ராணி மகளை கண்டுவிட்டு “வாணி, இஞ்ச வா பிள்ளை. பூக்குட்டி தேடுறாள்” என்றழைக்க, “எழும்பிட்டாள்போல, நீ போ நித்தி. சின்னக்குட்டியை படுக்கப்போட்டுப்பொட்டு வாறன்” என்ற வாணி இந்ராணியின் கையில் இருந்த மகளை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்துவிட, வாசலில் நின்ற இந்ராணியோ நித்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவளுக்கு இப்போது இப்பிடியே போவதா நிற்பதா என்று குழப்பமாயிற்று. அதற்குள் அங்கே அவளை தேடிக்கொண்டு வந்துவிட்டான் திரேன்.

அவள் பார்வை போன திக்கில் நின்ற சித்தியை கண்டுவிட்டு அவரிடம் சென்றவன் “சித்தி” என்க, கண்களே கலங்கிப்போயிற்று இந்ராவுக்கு.

எவ்வளவு நாளாயிற்று! முகத்தை திருப்பிக்கொண்டார் அவர். “என்ன சித்தி சின்னப்பிள்ளைபோல…”

“போடா. கதைக்காத சொல்லிப்போட்டன். உனக்கு இப்பதான் உன்ர சித்தியின்ர நினைப்பு வந்திருக்கு என்ன” உண்மைக்கும் சிறுபிள்ளையாக கோபித்துக்கொண்டவர் “அப்பிடி இல்ல சித்தி” என்றவனின் எந்த சமாதானமும் அவரிடம் எடுபடவில்லை.

“உன்ர மனுசி காத்துக்கிருக்கிறாள், காக்கா குருவி தூக்கிக்கொண்டு ஓடிரும். பின்னால போ” அவனை தள்ளிவிட்டவர் விடுக்கென அறைக்குள் சென்றுவிட, பெருமூச்சுடன் அவளருகில் வந்தவன் முகத்தையே பார்த்திருந்தாள் நியனா.

சில நிமிடங்கள் பொறுத்து “என்ர முகத்தில் என்ன இருக்குதாம் எண்டு என்ர மனுசி இப்பிடி உத்து பாக்கிறாள்.” கேட்டவனுக்கு உதட்டை சுழித்தவள் முன்னுக்கு நடக்க, நமட்டு சிரிப்புடன் “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஹ்ம்ம் ஹ்ஹ் ஹ்ம்ம்ஹ்ம்ம்…” ஹம் செய்தான் அவன்.

அதில் நின்று திரும்பிப் பாத்தவள் ‘கண்ணை நோண்டுவன் திரும்படா’ முழியாலே மிரட்டிவிட்டு முயன்றவரை வேகமாக நடந்தாள். அதன்பின் அங்கால் இங்கால் போகும் போதும் வரும் போதும் அவனை முறைப்பதையே வாடிக்கை ஆக்கிற்றாள்.

விளையாடி ஓய்ந்து ஒரு கட்டத்தில் விளையாடிய களைப்பில் அடுத்த பசிவர, சிணுங்கிக்கொண்டு வந்த உதியை கையில் அள்ளிக்கொண்ட திரேன், அவளுக்கு சாப்பிட குடுத்து அழைத்துவர, அப்போதுதான் நல்ல நேரம் என்று தாலி கட்டும் சம்பிரதாயத்துக்கு மாப்பிள்ளை பொம்பிள்ளையை வரச்சொல்லிக் கொண்டிருந்தார் ஐயா.

“இப்பயாவது கூப்பிட்டாரே” சலித்துக் கொண்டான் மகனை இடுப்பில் வைத்திருந்த அரவிந்தன். அவன் பொண்டாட்டி அவன் இருக்கிற திசைக்கே வரவில்லை. கேட்டால் ‘வேலை இருக்குது வேலை இருக்குது’ என்றவள் “கொஞ்ச நேரம் பிள்ளையை வச்சுருந்தா குறைஞ்சா போயிடும்” என்றுவேறு சினந்திருக்க, கடுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் பொறுமலில் வாய்விட்டு சிரித்த கணவனை தள்ளி நின்று முறைத்துக்கொண்டிருந்தாள் நியனா. ஒரு கணம் அவள் முறைப்பில் மூர்ச்சையாகியவன் மறுகணமே அவளை நோக்கி கண்ணை சிமிட்ட, உர்ரென்று அவனை பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவள் பார்வை, அவள் முறைப்பு, அவள் சிடுசிடுப்பு, உதட்டுச் சுழிப்பு இன்றைய நாளின் அவளின் ஒவ்வொரு உணர்வும் அவனுக்கு அன்றைய நாளை தான் நினைவூட்டிற்று.

இதே கலியாண மண்டபத்தில் தான். அச்சு இதே போல்தான்; சரியான கோபத்தில் அவனை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நியந்தனா. ஏன் அவனும் தான். ஏனென்றால் அவர்களின் முதல் சந்திப்பு அப்படியாகத்தான் அமைந்திருந்தது…
 

NNK-65

Moderator
முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு கண்மணீஸ். இதோ கருத்துதிரி :-
வெலெண்டைன்ஸ் டே அதுவுமா எபி போட்டிருக்கேன். உங்க அன்பை அள்ளி அள்ளி தெளிச்சிட்டு போங்க கைஸ்.
 

NNK-65

Moderator
அத்தியாயம்02

மாலை மங்கிய வேளை அது! காலையில் இருந்து வாட்டி எடுத்த சூரியனாரின் வெக்கை தணிந்து மெல்லிய தாலாட்டுப்போல சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது.

“வாணிக்கா, அரவிந்தண்ணா சொன்னது உண்மையோ?” வீட்டின் பின்பக்கம் வாழை மரங்களும் தென்னை மரங்களும் வரிசையாக நாட்டியிருந்தார்கள். அதன் இன்னொரு பக்கம் நிலத்தை வெட்டி கொத்தி சமப்படுத்தி, தன் கையாலே பயிரிட்ட பூக்கன்றுகளுக்கு தண்ணீ பாய்ச்சிக் கொண்டிருந்த வாணிக்கு காதில் கேட்ட குரலில் சிரிப்பு மலர்ந்திற்று.

“வாணிக்கா எங்க அத்தை?” இந்ராணியிடம் அவள் கேட்பது காதில் விழ, காதை அவளிலே வைத்து, சிரித்துக்கொண்டே வேலையை தொடர்ந்தவளுக்கு முன் மூச்சு வாங்க வந்து குதித்த நியந்தனாவுக்கு அப்போது பதினாறு வயது தான் இருக்கும்.

இருபத்திமூன்று வயது வாணிக்கும் அவளுக்கும் இடையே வயது வித்தியாசம் பாராத, அன்பெனும் பாசக்கயிறு மிக வலிமையாகக் கட்டப்பட்டு இருந்தது. இத்தனைக்கும் அத்தை என அவள் அழைத்த இந்ராணி ஒன்றும் அவளுக்கு சொந்த அத்தையும் இல்லை. வெறும் அயலட்டை உறவுதான். நியந்தனாவுக்கும் வாணிக்கும் ஏற்பட்ட நட்பே நாளடைவில் இரு குடும்பங்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது.

துரு துருவென ஓரிடத்தில் நில்லாமல் வளைய வரும் அவளை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். “வாணி மட்டுமில்ல, இந்த நித்தியும் எங்கட வீட்டுப்பிள்ளை போலதான்” பெருமையாக அறிமுகப்படுத்துவார் இந்ராணி. அவரின் கணவர் லோகானந்தமும் சிரித்து கதைத்து விட்டுத்தான் போவார். அவர்களின் மக்களுக்கும் அவள் சின்னக்குட்டி தான்.

“என்ன நித்தி, வகுப்பு முடிஞ்சதா?” முன்னால் நின்றவளை நிமிர்ந்து பார்த்து விசாரித்தாள் வாணி.

ஓஎல் படிக்கும் அவளுக்கு ஒவ்வொரு நாளும் பின்னேர வகுப்புகள் நடைபெறும். இப்போதும் வகுப்பு முடிந்த களை முகத்தில் தெரிய ஓடி வந்ததால் இடுப்பில் கைகுத்தி மூச்சுவாங்கிக் கொண்டிருந்தாள் நியந்தனா. “ஓமோம். இப்பதான்” பெரிய பெரிய மூச்சுக்களுக்கிடையே சொன்னவள் “நான் கேட்டதுக்கு பதில் வரேல்ல” என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டு.

“என்ன கேட்டனீ” கடைசி பூக்கன்றுக்கும் தண்ணீ பாய்ச்சி முடித்ததும் ஹோர்சை கழற்றி அதனிடத்தில் வைத்தவள் கைகள் இரண்டையும் கழுவிக்கொண்டே இவளிடம் கேட்டாள்.

‘அத என்ர வாயால இன்னொரு தரக்க வேற சொல்லோணுமா?’ புறுபுறுத்த மனதை அடக்கேலாமல் “பெரிய்ய்ய கொம்பர், கனடால இருந்து கேட்டு வந்திருக்காராம். உண்மையோ?” வேண்டாவெறுப்பாக கேட்டவளுக்கு மனதே ஆறவில்லை.

அவளுக்கு வாணி என்றால் மிகவும் பிரியம். பிறந்த ஊரை விட்டு திடுதிடுப்பென்று ஒருநாள் யாழ்பாணத்துக்கு குடிவந்தபோது அவளின் உலகமே வெறிச்சோடிப் போயிருந்தது. சோகமே உருவாக தெருவில் நின்று புதினம் பார்த்தவளிடம் “பக்கத்து வீட்டை புதுசா வாடகைக்கு வந்த ஆக்கள் நீங்கதானா?” விசாரிப்புடன் அறிமுகமாகியவள் வாணி.

அப்பிராணியாக தலையை உருட்டியவளை அந்தக் கணமே பிடித்துப்போயிற்று வாணிக்கு. “என்ர பேர் இசைவாணி. வாணி எண்டு எல்லாரும் கூப்பிடுவீனம். இது தான் என்ர வீடு. என்னையும் தேவை எண்டா கேளும், சரியோ” பெரிய பிள்ளையாக சொல்லியவள் “உன்ர பேர்?” எனக்கேட்டு “நியந்தனா” என்றவளை “நித்தி எண்டு கூப்பிடுறனான்” என்று முதல் முறை அழைத்ததும் அவள்தான்.

அதனாலே அவள் என்றால் நியந்தனாக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்.

“ஆரு சொன்னது?” அவள் கேட்ட தோரணையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்ட வாணிக்கு “அதா இப்ப முக்கியம். முதல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ!” பிடிவாதமாக முகத்தைப் பார்த்து நின்றவளுக்கு, நேராக பதில் சொல்லாமல் “பொம்பிளை எண்டு இருந்தா மாப்பிள்ளை கேட்டு வரத்தானடீ செய்வினம்” என்றவளுக்கு அவளை மீறி கன்னங்கள் இரண்டும் மிளிர்ந்திற்று.

அக்காவின் முகத்தை பார்க்கப் பார்க்க மனதே ஆறவில்லை அவளுக்கு. “வெக்கப்படுறியலா…” என்றவள் “அப்ப ஓமெண்டு சொல்லிட்டியல் என்ன!” மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த கேட்டவளுக்கு மனதே விட்டுப்போயிற்று.

“அப்பிடி என்ன அவசரமாம் மாமிக்கு!” முறைப்புடன் சொல்லிவிட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

“அட! மூக்கு நுனியில் கோபத்தை கட்டி வச்சிருக்கிறயோ. வரவர சட்சட்டென்று கோபப்படுறாயடி நித்தி” என்றவள் நொடியில் அவளின் கோபத்திற்கான காரணத்தை ஊகித்துவிட, வாணியின் முகத்திலோ பெரிதாக புன்னகை விரிந்திற்று.

அவளும் ஓம் எண்டு சொல்ல இருக்கவில்லையே! திடுதிடுப்பென்று ஒருநாள் ஃபோட்டோவுக்கு சிரித்துக் கொண்டிருந்தவனை காட்டி “ என்ன எண்டு பாத்துப்போட்டு சொல்லு” என்றிருந்தான் அரவிந்தன். அதிலேயே பின்னால் அவன் விபரங்களும் அடங்கியிருக்க, எதற்கென்று புரிந்துபோயிற்று.

“இப்ப என்னத்துக்குடா அவசரமா”

“உனக்கு பிடிக்காம ஒண்டும் நடக்காது. சும்மா பாரு, பிடிச்சிருந்தா மிச்சத்தை பிறகு பாப்பம்” என்றிருந்தான்.

அவன் சொல்லிச்சென்ற பிறகு கையில் இருந்த ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தவனைத் தான் பார்த்தாள். ஏன், எதற்கு என்று தெரியவில்லை. அவன் சிரிப்பு அவளுக்கும் தொற்றிக்கொண்டிற்று. அடுத்த தடவை அரவிந்தன் வந்து கேட்டபோது “எதுக்கும் ஒருதடவை கதைச்சிப் பாக்கிறன்” என்றிருந்தாள். அதிலே அவள் சம்மதம் தெரிந்துபோக, “இப்போதைக்கு அம்மாட்ட ஒண்டும் சொல்லிப்போடாதே!” என்றான். “ஏன்?” என்றதற்கு “எல்லாம் சொல்லுறன்” என்றவன் வாயே திறக்காமல் இருக்க, பிறகு தான் அவளுக்கு விசயம் தெரிந்தது.

லோகானந்தம்-இந்ராணி தம்பதினருக்கு ஆண்கள் இரண்டும் பெண் ஒன்றுமாக மூன்று பிள்ளைகள். மூத்தவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டிக்கொடுத்திருக்க, இளையவன் தங்கைக்கு பாருங்கள் என்று விட்டான்.

இவர்கள் அவசரப்படவும் இல்லை. இசைவாணியை கோயிலில் எங்கோ பார்த்துவிட்டு அவர்களாகவே கேட்டு வர, “தங்கச்சிக்கு நல்ல இடம் ஒன்டுல இருந்து கேட்டு வருகினம் அப்பு” என்றிருந்தார் இந்ராணி. மூத்தவன் சரவணனும் குடும்பத்தோடு வந்திருக்க, இளையவன் அரவிந்தனும் கணவரும் இருக்க, நல்ல சந்தர்ப்பமென உடைத்து சொல்லி விட்டார்.

“இப்ப என்னத்துக்கம்மா அவசரமா பாக்கயல். இன்னும் ஒரு இரண்டு வருஷம் போகட்டும். என்ன வாண்டு?” அரவிந்தன் தங்கையை குறுகுறுவென பார்க்க, சரவணனும் அதை ஆமோதித்தான்.

“எனக்கு என்ன அவசரம் இருக்கப் போகுது சொல்லுங்கோ பாப்பம். நல்ல அருமையான வரன். பிக்கல் பிடுங்கல் இல்ல… அவியலாவே கேட்டு வருகினம்.” என்றவருக்கு விசாரித்த வரையில் நல்ல திருப்தியே. நல்ல வரனை விட்டுவிடக்கூடாது என்கிற பரபரப்பும் கூடவே இருந்தது.

அதுவரை அமைதியாக மனைவி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த லோகானந்தம் மெதுவாக தொண்டையை செரும, அதுவே அவர் கதைக்கப்போகிறார் என்றிற்று.

மனைவி மக்களின் கவனம் அவரிடத்தில் திரும்ப, நால்வரையும் மேல்கண்ணால் பார்த்தவர் “இந்த காலத்துல ஆரை நம்புற, ஆரை நம்பக்கூடாதென்டு ஒன்டும் சொல்லுறபடிக்கு இல்லையெல்லோ. எதையும் அவசர அவசரமா செய்யவும் ஏலாது. அதுவும் கலியாண விசயத்தில நாலையும் அலசி ஆராஞ்சிபோட்டு தான் செய்யோனும். ஒண்டும் அவசரம் இல்ல பாப்பம்” என்று தன் கருத்தை முன்வைத்தார்.

கணவரின் பேச்சு அவருக்கும் ஏற்புடையதாக இருந்தாலும் ‘நல்ல வரன்’ கைநழுவி விடுமோ என்று முகமே விழுந்துவிட்டது.

“இப்ப என்னத்துக்கு முகம் சுருங்குது” அரவிந்தன் அம்மா அருகில் வந்தமர்ந்தான்.

“இல்ல தம்பி, நல்ல சம்மந்தம் எண்டு எல்லாரும் சொல்லினம். கோயில் ஐயாட்ட கூட கேட்டனான். நல்ல பெடியனாம் என்டவர். நம்பிக்குடுக்கலாம் என்ற படியால் தான் உடைச்சு சொன்னனான். முன்னையும் ஒருக்கா பட்டிருக்கோமெல்லா.. அப்படி விசாரிக்காம எடுத்தோம் கவுத்தோம் எண்டு செய்யுவேனா…” எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு முன்னரே வந்துவிட்டவருக்கு வீட்டினரின் கருத்தை முழுமனதாக ஏற்க முடியவில்லை.

அவரும் ஒன்றும் பேச்சுக்கு சொல்லவும் இல்லை. ஒரே மகளாயிற்றே. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆசையும் அவாவும் அவருக்குள்ளும் இருக்குமல்லவா. அவரே நேரில் சென்று விசாரித்து எல்லாம் திருப்தி என்ற பிறகே வாயை திறந்திருந்தார்.

அப்பா, மகன்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்க்க, “என்னப்பா யோசிக்கிறயல்? அதான் சொல்றனானல்லா” என்றார், விட்டால் அழுதுவிடுபவர் போல்.

அதற்கு மேல் அடக்க முடியாமல் நொடியில் மூவருக்குமே முறுவல் அரும்பிற்று. அதுவரை தவிப்புடன் இருந்த இந்ராணியோ அவர்களின் முகபாவனையில் குடும்பத்தினரை சந்தேகமாக பார்த்தார்.

“பேர் சாய்ரூபன். வயசு 28. கனடாவில் வேலை. ரெண்டு அக்காக்கள். ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சிக்கு போய்ட்டீனம். இவர் மனுசியை கட்டிக்கொண்டு ஆறு மாதத்தில் கனடாக்கு எடுக்கயாம். அப்பா ஸ்கூல்ல சேராம். அம்மா…” கடகடவென ஒப்பித்த அரவிந்தனை, கை நீட்டி தடுத்து, அகல கண்களை விரித்து ஆவென்டு வாயை பிளந்து பார்த்தவரோ “கள்ளா!” பட்டென்று முதுகில் ஒன்றை போட்டார். லேசாக சிரிப்பு கூட வந்து விட்டது.

அம்மாவை பார்த்து அவனுக்கும் சிரிப்பு வரும் போலிருக்க, கலகலத்து சிரித்தான் அரவிந்தன்.

அப்பாவும் சரவணனும் சேர, கதிரையில் முழங்கால்களை கட்டிக்கொண்டு இருந்த இசைவாணிக்கும் சிரிப்பை தாண்டிய வெட்கமும் கூச்சமும் போட்டி போட்டுக் கொண்டு முகத்தில் வந்தமர்ந்தது.

“அட அட! வெக்கத்த பாருங்கோவன் வாண்டுக்கு. வேற என்ன அம்மா வேணும். அதுதான் அந்த பக்கமிருந்தே க்ரீன் சிக்னல் வந்துட்டெல்லா. ஆக வேண்டியதை பாருங்கோ” பட்டென்று உடைத்து அவரை உற்சாகபடுத்த, இசைவாணியின் முகத்தை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் ஒரு துளி கண்ணீர் அரும்பிற்று.

‘என்ர மகள்’ வாஞ்சையுடன் அவளில் படிந்து, நிலைத்து, பின் மீண்டது அவர் விழிகள். கைக்குள்ளயே வைத்து பொத்தி பொத்தி வளர்த்த மகளை இன்னொரு வீட்டுக்கு தாரை வார்த்து குடுக்கும் நேரம் வந்துவிட்டதே.

அவரால் நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கண்களுக்கு இடையில் துளிர்த்திருந்த கண்ணீர் உண்மை தான் என்று சொல்லிற்று.

அதிலும் இப்படியொரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லையே!

“எப்படியப்பா” என்றார் கணவரிடமே.

“என்ர மனுசிய எனக்கு தெரியாதா” ஆர்ப்பாட்டமாக சொல்லியவருக்கு, அவர் சொல்லாமல் விடமாட்டார் என புரிந்து போயிற்று.

“தமயந்தி அன்டைக்கு கோலெடுத்திருந்தவள்” என்றதிலே இந்ராவுக்கும் எல்லாமும் புரிந்தது.

அவரின் தோழி தமயந்தியின் கணவரும் இசைவாணிக்கு கேட்டு வந்த பெடியனின் குடும்பமும் ஒரு வகைக்கு நெருங்கிய சொந்தம் தானாம். அதனால் அவளிடம் ‘ஒன்றுக்கு இரண்டு தடவை விசாரித்து சொல்லும்’ என்று இவரே கேட்டிருந்தார். அதற்கு தான் அன்று அழைத்திருக்க வேணும்.

இவர் பாத்ரூமுக்குள் இருந்ததில் “கன நேரமா கோல் வருது. ஆரென்டு பாருங்கப்பா” உள்ளிருந்தே குரல் குடுக்க, லோகானந்தம் எடுத்து பேசியபோது தான் அவள் இதுதான் விசயம் எண்டு சொல்லியிருக்க வேண்டும். அவள் எடுத்தே ஒரு வாரமாகியிருக்கும்.

ஆக அவரைப் போலவே இவர்களும் இந்த ஒரு வாரமாக மாப்பிள்ளை வீட்டாரை பற்றி விசாரித்து, இவர் வாயாலே வரட்டும் என்று கமுக்கமாக காத்திருந்திருக்கிறார்கள். ‘எப்படியோ நல்ல சம்மந்தம் நல்ல படியாக முடிந்தால் போதும்’ என நினைத்துக் கொண்டார்.

இதில் மகளுக்கும் பிடித்திருக்கிறது என்பதில் இரட்டிப்பு சந்தோசம் தான்.

அப்படி ஆரம்பித்தது தான். இதோ இருபக்கமும் எந்த குறையும் இல்லாமல் பொருந்தி வர, இனி மற்ற மற்ற வேலைகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே பாக்கி இருந்தது. கலியாணம் என்றால் சும்மா அல்லவே!

“வாணிக்கா!” தன் மனவெளியில் மிதந்து கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்த நித்தி, “அத்தை கூப்பிடுறா” என்றவள் இப்போதும் உம்மென்றே இருக்கவும் லேசாக சிரித்துக்கொண்டாள்.

இப்போதும் அவனை நினைக்கையில் எழும் சிரிப்புக்கு அணைபோட, நித்தியின் சுரத்தே இல்லாத முகமும் ஒரு காரணமாயிற்று. ‘சும்மாவே ஆள் நல்ல விசரில் இருக்கிறாள்’ என அவள் முகத்தை பார்த்தே கண்டு கொண்டாள்.

“மாப்பிள்ளைக்கு ஃபோனை போட்டு எங்கட வீட்டு சின்னக்குட்டி பிடிச்சிருக்கு எண்டாத்தான் கலியாணம் எண்டு சொல்லிப்போடுவமா நித்தி” அவளை சமாளித்து ஆகவேண்டுமே. அதில் உடனே நமட்டுச் சிரிப்புடன் அவளை குறுகுறுவென பாத்துக்கொண்டே கேட்ட வாணிக்காவை முறைக்க முயன்று தோற்ற நித்தி, அதுதான் சந்தர்ப்பம் என்று “இப்பயே அவருக்கு ஃபோனை போட்டுத்தாங்கோ!” என்று நின்றாள்.

உடனே கேப்பாள் என்று எதிர்பாராதவளும் ஒரு நொடி அதிர்ந்து மறுகணமே வாய்விட்டு சிரித்தாள். “அடியேய் கள்ளி!” முதுகில் கைபோட்டு உள்ளுக்கு கூட்டிச்சென்றபடி முதுகில் தட்டிய வாணிக்கு “ஆருக்கிட்ட!” சட்டையில் இல்லாத கொலரை தூக்கிவிட்டுகொண்டே ஒற்றை புருவத்தை உயர்த்திய நித்தி, “அதெல்லாம் லேசில ஆரும் ஏமாத்தேலாதாக்கும்” கொடுப்புக்குள் சிரித்தவள் “நாளைக்கு வருவன். கோலெடுத்து வச்சிருந்தா சரி. இல்லையோ கனடா கொம்பர் எப்பிடி என்ர அக்காவை கனடாக்கு எடுக்கிறார் எண்டுறத நானும் பாக்கிறன்” சவால்விட்டவளுக்கு அவனைப் பாராமலே ஏனோ பிடிக்காமல் போயிற்று.

‘கனடாகார மாப்பிள்ளை எண்ட உடனே பெண்ணை தூக்கி குடுத்திருவோம் எண்டுற எண்ணமாக்கும்’ கடுகடுத்தாள்.

உண்மையில் மாப்பிள்ளை பார்த்தது கூட அவளுக்கு பெரிய விசயமாக படவில்லை. மாப்பிள்ளை கனடா என்பதே அவளின் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது. நினைத்த நேரம் இனி அக்காவை பார்க்கேலாதோ என்ற எண்ணமே அவளை கவலைக்குள்ளாக்க, அதுவே இன்னும் சொந்தமேயாகாத அத்தானிடம் திரும்பி அவளை கோபம் கொள்ளவும் வைத்திற்று.

அண்டைக்கு முழுக்க அதே கோபமும் கடுப்புமாக அவள் சுற்றிவர, அந்த நாள் முடிந்து மறுநாள் விடிய, அன்று சனிக்கிழமை. பள்ளிக்கு தான் விடுமுறையே ஒழிய, காலையில் ஆறுமணிக்கெல்லாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது.

“இரவில நேரத்துக்கு படுடீ எண்டா கேக்கறேல்ல. இப்ப கும்பகரண்னுக்கு முறை பொடிச்சு போல தூங்குறது. அடியேய் பெட்ட! எழும்படி நேரமாகிட்டு” காலையிலே சுப்ரபாதத்தை தொடங்கியிருந்தார் புஷ்பவதி. நியந்தனாவின் ஒரே அம்மா. மற்றும்படி அவளுக்கும் அவருக்கும் என்றுமே ஆகாது.

இப்போதும் அவர் குரல் காதிலே கேக்காதளவுக்கு தலையணையில் குப்பறபடுத்து பெட்சீட்டால் இழுத்துப் போர்த்தியிருந்தாள்.

அவளுக்கு பிடிக்குமென்று காலையில் வழக்கமாக எழும்பும் நேரத்துக்கு முதலே எழுந்து இடியப்பம் அவித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உறைப்புக்கு பச்சை மிளகாய் ஒண்டும் செத்தல்மிளகாய் ஒண்டும் போட்டு தாளித்து, அது நன்கு வெந்து வந்ததும் இடியப்பத்தை பிய்த்து போட்டு, அதுக்கு மேலால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அளவுக்கு உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், கொஞ்சமாய் தலைப்பால் சேர்த்து பிரட்டி சுடச்சுட இடியப்ப கொத்தை இறக்கி எடுத்து சூடு ஆற அவள் தட்டில் போட்டு வைத்தவர் நேரத்தை பார்த்துவிட்டு விறுவிறுவென அவள் அறைக்கு நடந்தார்.

ஒரே இழுவையில் பெட்சீட் கையோடு வர, அதாலயே இரண்டு போட்டார்.

நோகவே இல்லை. ஃபேன் காத்துக்கும் ஜன்னலில் மேல் விளிம்பில் இருந்த இடைவெளியூடாக உள்ளே வந்த குளிர் காத்துக்கும் காலை கையை குறுக்கி கொண்டு சுருண்டவளின் மேல் நல்ல விசர் வந்திற்று.

நேரமாகிற்றோ அதுக்கு வேறு குய்யோ முய்யோ எண்டு அவரிடம் தான் சண்டைக்கு வருவாள். “உடனே எழும்புவமா நாங்க? எழுப்ப வேண்டியது உங்கட கடமை!” வாய் கிழிய வியாக்கியானம் பேசி, அதுக்கு அவர் கோபப்பட்டு கத்தி, பதிலுக்கு அவளும் கத்தி என தினம் ஒரு சண்டை அவர்கள் வீட்டில் நடப்பது வழமையாயிற்று.

அதில் அவளின் தண்ணீ போத்தலிலே இருந்த நீரை அப்பிடியே கவிழ்த்து ஊற்ற, அடித்துப்பிடித்து எழுந்தவளை தரதரவென இழுத்துக்கொண்டு போய் பாத்ரூமுக்குள் தள்ளி பைப்பை திறந்து விட்டர் வெளியே வந்து மாற்று உடையையும் டவலையும் கதவில் போட்டுவிட்டு போக, ‘ஆஊ!’ என்று அலறிக்கொண்டே குளித்து முடித்தவள் பற்கள் டைப்படிக்க நடுங்கிக் கொண்டே வெளியில் வந்தாள்.

“நீங்க எல்லாம் ஒரு தாயா?” விசரில் சீறியவளின் ஆவென்ற வாய்க்குள் இடியப்பக்கொத்தை திணித்தார். எதில் குறையோ இல்லையோ புஷ்பவதியின் கைப்பக்குவத்துக்கு என்றும் குறை வந்ததில்லை. அவளுக்கு பிடித்த பதத்தில் அளவான சூட்டில் சுவையாக தொண்டைக்குள் இறங்கிய இடியப்பக்கொத்தை அப்பிடியே விழுங்கினாள்.

அடுத்தடுத்து அவர் வாய்க்குள் அடைக்க, “அம்மா!” சினந்தவளை காதிலே விழுத்தாமல் “கெதியா வெளிக்கிடு. அப்பா கடைக்கு போகேக்க இறக்கிவிட்டுப்போட்டு போவார்.” என்றவர் தீத்தி முடிந்ததும் கணவருக்கும் அவருக்கும் தேத்தண்ணி வைக்க கெட்டிலில் தண்ணீயை நிரப்பி அடிப்பில் ஏற்றினார்.

ஐந்தே முக்கால் என்றால் அங்கால் ஆறுமணி. நேரம் சிறகு முளைத்ததுபோல பறந்துவிடும். அதில் அவசர அவசரமாக வெள்ளை உடுப்பை உடுத்திக்கொண்டு பரபரவென தயாராகி, முகத்துக்கு கொஞ்சமாய் பவுடர் போட்டு கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார்த்து திருப்தியான பிறகே தலைவாரி அவசர பின்னல்போட்டு கொப்பியும் கையுமாக ஓடிவர, சாய்மனை கதிரையில் தேத்தண்ணியும் கையுமாக சிவலோகநாதனும் அவருக்கு பக்கத்தில் குஷன் கதிரையில் புஷ்பவதியும் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

‘அவிர தேத்தண்ணி டைம்!’ மெல்லிய சிரிப்போடு அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவள் “எஹெம் எஹெம்!” லேசாக தொண்டையை செருமினாள்.

“கண்ணம்மா!” இவளைக் கண்டுவிட்டு கைநீட்டி அழைத்தார் நாதன். ஈரெட்டில் அப்பாவின் சாய்மனை கதிரையின் கைப்பிடியில் அமர்ந்தவள் அவரின் கையிலிருந்த தேத்தண்ணி கப்பின் கடைசி சொட்டை வாய்க்குள் சரித்தாள். அவள் தேத்தண்ணி குடிக்க பழகியதும் அப்பிடித்தான். அதனாலே என்னவோ இன்றளவும் அந்தப் பழக்கம் மட்டும் மாறவில்லை.

‘அந்த மனுசர நிம்மதியா ஒரு வாய் தேத்தண்ணி குடிக்கவிடமாட்டாள்’ மகளை பார்வையாலே எரித்த புஷ்பா தலையில் அடித்துக்கொண்டு எழுந்து செல்ல, “சரியான பொறாமை பிடிச்ச மனுசிய எங்கிருந்து தான் தேடிப்பிடிச்சு கட்டினியலோ தெரியேல்ல” அப்பாவுக்கு கண்ணை சிமிட்டு விட்டு சத்தமாக அறிவித்தவளுக்கு குசினிக்குள் இருந்து அகப்பக்கணை பறந்து வந்தது.

“வரவர இவவின்ர போக்கு சரியா படயில்ல அப்பா. உங்களுக்கும் என்ன வயசாயிட்டு சொல்லுங்கோ பாப்பம். பேசாம எனக்கொரு சித்தியை பாத்திங்கள் எண்டா எனக்கும் பொழுதுபோகும்… ஒரே இவட மூஞ்சை பாத்து பாத்து அலுத்துப்போயிட்டு” என்றவளின் முன் பத்ரகாளியாக வந்து நின்றார் புஷ்பா.

“ஓமடி, அவருக்கு வயசாகேல்ல. நீ இன்னொண்டு பாத்து கட்டி வை. கதைக்கிறாள் கதை. இவள பெத்ததுக்கு பேசாம ரெண்டு மாட்டை கட்டி வச்சு வளத்திருந்தாலும் பிரயோசனமா போயிருக்கும்.” அவளிடம் எரிந்து விழுந்தவர் “அவள்தான் மண்ணாங்கட்டி கதை கதைக்கிறாள் எண்டால் நீங்களும் அவளை கதைக்கவிட்டு வேடிக்கை பாக்கிறயல் என்ன” நொடியில் மூக்கை உறிஞ்சுக்கொண்டு நாதனிடம் வெடித்தவர் குசினுக்கு திரும்ப, நாதன் மகளை பரிதாபமாய் பார்த்தார்.

காலையில் அவர் செய்ததுக்கு திருப்பிக்குடுத்துவிட்ட நிறைவோடு இல்லாத தூசை தட்டுவதுபோல கையை தட்டிவிட்டவள் “ரெண்டு நிமிசம் டைமப்பா. வெளியில் நிக்கிறன் உங்கட ஆளை சமாதானப்படுத்திப்போட்டு கெதியா வாங்கோ” நேற்று மறதியாய் வெளியில் இருந்த மேசையில் வைத்த கறுப்பு கலர் அட்லஸ் சூட்டி பென்னை கொப்பி மட்டையில் சொருகிக்கொண்டு வெளியில் நடந்தாள்.

அவள் தந்த இரண்டு நிமிடத்தில் புஷ்பாவை குளிர்வித்துவிட்டு வேகமாய் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்த நாதன், நேரே அவளின் வகுப்படிக்கு சென்று இறக்கிவிட்டு கடைக்கு புறப்பட்டார்.
 

NNK-65

Moderator
இரண்டாவது அத்தியாயம் பதிவிட்டாச்சு கண்மணீஸ்…

இதோ கருத்துதிரி:-

உங்க கருத்துக்களை பகிர்ந்துகோங்க.

பி.கு: வாரத்தில 2 or 3 அப்டேட்ஸ் குடுக்க ட்ரை பண்றேன். முடிஞ்சா சீக்கிரமே வாறன் டியர்ஸ்🥰
 

NNK-65

Moderator
அத்தியாயம் 03):

மரங்களில் தூண் எழுப்பி அதன் மேல் பனை ஓலைகளை வெய்து பந்தல்போட்டிருக்க, வாங்குகளால் நிறைந்திருந்தது இரண்டு வகுப்புக்கள். ஒருபக்கம் நாகரட்ணம் சேரின் கணிதவகுப்பு நடக்க, மற்றப் பந்தலில் வேலுப்பிள்ளை அய்யா விஞ்ஞானம் நடத்திக் கொண்டிருப்பார்.

மற்ற மற்ற பாடங்களுக்கு வேறவேற நேரங்கள், சிலதுக்கு வேற இடங்களில் என தொடர்ச்சியாக வகுப்புகளும் பாடங்களும் நடந்து சூடாகிப்போன மூளைகளுக்கு, கும்பலாய் சைக்கிளில் நின்று போகிற வருகிற பெட்டைகளை சைட் அடித்துக்கொண்டும் பட்டப்பேர் வைத்து கூப்பிட்டு தனகிக்கொண்டும் இருந்தனர் பெடியன்கள்.

ரகசிய சிரிப்புடனும் சிலர் முறைப்புடனும் நான் முந்தி நீ முந்தி என இடம்பிடிக்க வகுப்புக்குள் நடந்த பெண்களுக்குள் எதிர்ப்பட்ட வதனியை “தனியா! இஞ்சால(இங்கால) வாடி” என இழுத்துக்கொண்டு தங்கள் ஆஸ்தான இடம்நோக்கி நகர்ந்தவர்களை “மதினி மதினி” என கலாய்த்து உள்ளே போகும் மட்டும் ஏலம்போட, நித்திக்கு சிரிப்போ சிரிப்பென்றால் வதனிக்கோ ஆத்திரத்தில் முகம் நன்றாகச் சிவந்து போயிற்று.

ஏற்கனவே வெள்ளைவெளேர் என இருப்பவளுக்கு கோவத்தில் சிவந்த முகம்கூட தனிசோபை குடுத்தது. “எல்லாம் அந்த புடலங்காயால் வந்தது” நீட்டு நீட்டென்று மற்றவர்களை காட்டிலும் உயரமாக வளர்ந்த ஏஎல் படிக்கும் கனிகீதன் அவன்! இதே வகுப்பில் வைத்துத்தான் அவளை முதன்முதலில் பார்த்தான். அன்று ஆரம்பித்தது வினை.

“அவள் என்ர ஆள்!” அத்தனைபேரும் பார்க்க பகிரங்கமாக அறிவித்தவனின் தலையீடு, அவள் போகும் இடமெல்லாம் தலைவலியாய் ஆயிற்று. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது அவளின் வாயில் விழுந்து எழுவான். தூரத்தில் எங்கேனும் அவனை பார்க்க நேர்ந்தாலோ வேறு தெருவில் புகுந்தேனும் எப்பிடியாவது வீட்டை போய் சேர்ந்திடுவாள். தப்பித்தவறி எதிர்க்க அவனை கண்டாலோ தலை நிமிர்த்தி அவனை பாப்பது என்ன அவன் இருக்கிற திசைக்கு மூச்சைக்கூட விடுவது இல்லை.

“அவள் தான் நாய்க்கு கூட மதிக்கிறாள் இல்லை எல்லா. பிறகும் ஏன்டா ரோசம்கெட்டவன் போல பிறகால திரியிறாய்” அவன் நண்பர்கள் குறைப்பட்டும் சிரித்துக்கொண்டே “பிடிச்சிருக்கே! என்ன செய்யிறது.” என்று ஒரு வரியில் அவர்களின் வாயை அடைத்தவன் இதோ என்றும்போல் இன்றும் அவளின் வாயில் விழுந்து அரைப்பட்டான்.

“அந்த மரமண்டையன் மட்டும் என்ர கையில் கிடைச்சானோ, ஏறிப்போட்டு மிதிக்கிற மிதில ரத்தம் கக்கிச்சாவான்” வந்த விசருக்கு சினந்தவள் கையிலிருந்த பென்னை மூடி மூடி திறக்க, “அது என்ர!” அதை கவனமாய் அவளிடமிருந்து வாங்கி பத்திரப்படுத்தினாள் நித்தி.

முறைப்புடன் திரும்பிப்பார்த்தவளை “என்ர லக்கி பென்ரி அது. நீ இருக்கிற விசருக்கு உடைச்சிப்போட்டாய் எண்டா…” படபடவென இமைகளை அடித்து ‘உன் கோபத்தை குறையேன்!’ என சிரித்தே சமாதானம் செய்ய முயன்றவளின் முயற்சி புரிபட, லேசாக சிரிப்பு வந்தாலும் இன்னுமே சூடு தணியாமல் அமர்ந்திருந்தவளை “விடடீ, நேர்ல பாக்கேக்க போட்டு கிழிப்பம். இல்லையோ நான் செவில்லயே குடுக்கிறன்” கையை தேய்த்துக்கொண்டே சூளுறைத்த நித்தியை இப்போது நன்றாக திரும்பி முறைத்தாள் வதனி.

‘நீ ஒண்டும் கிழிக்க வேணாம் ஆத்தா!’ என்றவள் பார்வையே ‘நீ செஞ்சது வரை காணும்’ எனச்சொல்லாமல் சொல்ல, தலைக்கு மேல் கும்பிடு போட்டவளை “இறக்குடி முதல, மானத்தை வாங்காத மாடு” அசடு வழிய சிரித்துக்கொண்டே அதட்டியவள் ஒரு நாள் செய்த காரியத்தில்தான் அவன் பின்தொடரலே அதிகமாயிற்று.

“அவன் பாட்டுக்கு இங்க வாறதோட நிப்பாட்டிருப்பான். நீ ஏசப்போறன், கிழிக்கப்போறன் எண்டு போய் நான் போற வகுப்பில ஆரம்பிச்சு வீட்டு விலாசம் வரை குடுத்துப்போட்டு வந்திருக்கிறாய் மொக்கு!” சிடுசிடு என சொன்னவளுக்கு சிரிப்பும் வந்திற்று.

“சிரிக்காதயடி பல்லை பேப்பன்” எகிறியவளும் இறுதில் சிணுங்கிக்கொண்டே “ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்டி இருந்தது. ஃபினிஷிங் தான் புஷ்பத்தை கண்டு ஆட்டம் கண்டிருச்சு” குறைப்பட்டவள் “அண்டைக்கு மட்டும் அவா வராம இருந்திருக்க, நான் குடுத்த கிழியில் கொத்து பரோட்டா ஆகிருப்பான்.” ‘உண்மைடி’ என்று பாவனையோடு கண்ணை உருட்டி உருட்டி சொல்லியவளை மேலும் கீழும் அவள் பார்த்த பார்வையே ‘கிழிச்சிருப்பாய்’ சொல்லாமல் சொல்லிற்று.

அதில் உடனே “சரிசரி விடடீ. நாளைக்கு சண்டே! அது ஞாபகம் இருக்கெல்லோ…” பேச்சின் போக்கை திசைதிருப்ப சொல்லியவளின் கண்களுமே மின்ன, அதற்கு போட்டியாய் முகமும் விகசித்தது.

ஞாயிறு என்றாலே அவர்களுக்கு கொண்டாட்டம்தான். பகல் சாப்பாட்டை ஒரு கட்டுகட்டிவிட்டு மதியம் ஒன்றபோல கொமர்ஸ் வகுப்புக்கு வந்தால் மூண்டு மூண்றறைக்கு எல்லாம் முடிந்துவிடும். மூண்றறையில் இருந்து ஐந்து மணி வரை, அது அவர்களுக்கான நேரம்.

பெரும்பாலும் வதனி வீட்டில் தான் அந்தப்பொழுது கழியும். அவள் வீட்டில் சின்னக் குடிசை வீடு ஒண்டும் இருந்தது. கண்ணாள் அவள் அம்மம்மா அங்குதான் இருந்தவர். பாக்கத்தான் குடிசைவீடு போல இருக்குமே தவிர உள்ளே தண்ணீ, கரண்ட் எல்லாம் எடுத்திருக்க, பிறகு அவளின் அண்ணனின் படிக்கும் அறையாக மாறி, ஞாயிறுகளில் அவர்களின் இரண்டு மணிநேர பொழுது கழியும் இடமும் அதுவென்றாகியது.

அவர்களின் காணி பெரிது என்பதால் நிறைய மரங்கள் வளர்ந்து நிழற்சோலையாக குடைவிரித்து குளுகுளுவென்று இருக்கும். அதனாலே ஞாயிறு எப்போது வரும் என எதிர்பாத்திருப்பாள் நித்தி. அங்கேயே மாமரத்தில் மாங்காய்களை பறித்து, தோல் சீவி வெட்டி, உப்பு, மிளகாய்தூள் போட்டு அவள் அண்ணனின் கொம்பியூட்டரில் புதுப்படமோ அல்லது பாத்த படத்தையோ பாப்பதும் என அவர்களுக்கு மட்டுமேயான அந்தப்பொழுது குதூகலமாகவே கழியும்.

அதில் வதனியும் அந்த தலைகழண்டவனை புறந்தள்ளி “தார்ரோடு நேத்து புதுபடம் வந்திருக்கு எண்டு பாத்தவன்டி. சத்தம் கேட்டது. நாளைக்கு பாப்பம் சரியோ” குசுகுசுவென தங்களுக்குள் பேசிக்கொள்ள, ரட்ணம் சேர் வரவுமே வகுப்பு அமைதியாகி கவனம் அவரிடம் திரும்பிற்று.

அடுத்த இரண்டு மணித்தியாலங்கள் கணிதத்தோடு மல்லுக்கட்டி அதை ஒருவழியாக ஒப்பேத்தி, பிறகு சயின்ஸ் வகுப்பிலும் நீந்திக்கரையேறிய போது மேலும் முழுதாக இரண்டு மணிநேரங்கள் ஓடியே போயிற்று.

“எவன் இந்த மேத்ஸையும் சயின்ஸையும் கண்டுபிடிச்சவனோ தெரியேல்ல. அவன் மட்டும் இப்ப இருந்திருக்க கூப்பிட்டு வந்து படிடா படி எண்டு மண்டையை பிடிச்சு ஆட்டவேணும். அப்ப விளங்கும் எங்கட கஷ்டம்.” இதோ வகுப்பு முடிந்து அலுத்து களைத்துப்போய் நடந்து வந்த நித்தியின் வாயில் இருந்து உதிர்ந்த நல்முத்துக்கள் தான் இவை.

“அவனுகள் சொர்க்கத்துல சந்தோசமா இருப்பானுகள்டி” அவளுக்கு குறையாமல் நீட்டி முழக்கினாள் வதனி.

பேச்சு அவளோடு இருந்தாலும் கண்கள் என்னவோ வேகமாகச் சுழன்று அந்த தலைகழண்டவன் வரவில்லை என்பதை உள்வாங்கிக்கொண்ட பிறகே இலகுவாகியவள் நிம்மதி பெருமூச்செறிய, “எங்க உன்ர ஆள் வரேல்லையாக்குமா” வேணுமென்றே அவளை சீண்டிய நித்தியோ அவள் கைக்கு அம்பிடாமல் ஓடி, இறுதியில் அவளிடமிருந்து மொத்து வாங்கிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.

“ஆள்கீள் எண்டியோ பல்லு பறக்கும். விசர்நாய் போல குறைச்சுக்கொண்டு பின்னால வாறவன் எல்லாம் ஒரு ஆள் எண்டுப்போட்டு கதைக்கிறனீ.” மீண்டும் முதுகிலே ஒன்று போட, “எருமை எருமை. அதுக்கு ஏன்டி இப்பிடி போட்டு அடிக்கிறாய்.”

“அடிக்காம! இன்னும் நல்லா சாத்துவன் ரோட்டில் நிற்கிறம் எண்டு பாக்கன்” கையை பார்த்துக்கொண்டே அவள் சொல்ல, “அப்ப என்னத்துக்கடி அவனை கண்ணால தேடினனீ” அவள் அடித்தற்காகவே ‘இண்டைக்கு உன்னை விடுறேல்ல’ என விடாமல் சீண்டியவளை “உன்னை உதைக்கப்போறனான்!” பல்லைக் கடித்தாள் வதனி.

“உதையேன் ஆரு வேணாம் எண்டது. என்ன, நாளைக்கு நீ புதுசா சேந்திருக்கிற வகுப்பு அட்ரஸும் உன்ர ஆளுக்கிட்ட போகும். வேற ஒண்டும் சொல்லமாட்டனான்.” சிரிப்புடன் சொல்லியவள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட, “நித்தி!” தரையில் காலை உதைத்தாள். அவள் அதற்குள் வீட்டுக்கே போய் சேர்ந்திருப்பாள் என்று தெரியும். ‘எங்க போனாலும் நாளைக்கு என்னட்ட தானே வருவாய். அப்ப கவனிக்கிறன்!’ பல்லை கடித்து கருவிக்கொண்டே வீட்டை போனாள்.

துள்ளல் சிரிப்புடன் நித்தி வீட்டுக்கு வந்தபோது மதியத்திற்கான உணவு வேலையில் இருந்தார் புஷ்பவதி. சத்தமே இல்லாமல் அறைக்குள் புகுந்தவள் காலையில் அவள் போனபோது இருந்தது போலவே இருந்த அறையை கண்டு ‘அம்மா!’ பல்லை கடித்தாள்.

‘அவேன்ர கோபத்தை காட்டுறாவாக்கும்’ சிறு சிரிப்புடனே கடகடவென அதை ஒழுங்கு செய்தவள், படிக்கும் மேசையில் அமர்ந்து வகுப்பில் நடந்த பாடத்தை ஒரு முறை மீட்டி, வீட்டுப்பாடங்களையும் முடித்து நிமிர்ந்தபோது நேரம் பகல் சாப்பாட்டு நேரத்தை தொட்டிருந்தது.

மீண்டும் ஒரு குளியல்போட்டு உடுப்பு மாற்றி வெளியே வந்தவளுக்கு பசிவேறு கபகபவென வயிற்றைக் கிள்ள, மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திருந்த அப்பாவிடமே “சோற்றை போட சொல்லுங்கோ அப்பா. செய்றது ஒரு வேலை, அதைக்கூட நேரத்துக்கு செய்ய ஏலாதா உங்கட மனுசிக்கு” வழமைபோல அவரை சீண்டிக்கொண்டே பேச்சை ஆரம்பித்த மகளை, கதைக்கவிட்டு ரசித்துக் கொண்டிருந்த நாதன் குசினியில் இருந்து சாப்பாட்டு பாத்திரத்துடன் வெளியில் வந்த மனைவியிடம் ‘பிள்ளை பகிடிக்கு கதைக்கிறாள்’ கண்ணாலே இறைஞ்சி சமாதானக்கொடியை பறக்கவிட்டார்.

அதை ஒரு முறைப்பிலே அலட்சியம் செய்திருந்தார் புஷ்பா. புறுபுறுத்த மனதை அடக்க முடியாமல் டொங் என பாத்திரத்தை மேசையில் வைத்தவர் “வேலைக்கள்ளிக்கு பிள்ளைசட்டாம். இஞ்ச படிக்கிறன் படிக்கிறன் எண்டு என்னத்தை படிச்சு கிழிக்கிறாளோ தெரியாது. வாய் மட்டும் நல்லா நேரத்துக்கு கொட்டிக்கவும் கதைக்கவும் வேலை செய்யும். மற்றும்படி வேற ஒண்டுக்கும் உடம்பு வணங்குறேல்ல…“ கொதிப்புடன் அவளை உறுத்து விழித்தவர் “இனி ஒரு தரக்க வாயை திறந்தவளோ… மனுசியா இருக்கமாட்டன் பாருங்கோ!” குடுத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்.

அதை காதில் விழுத்தினால் அவள் நித்தி இல்லையே…

“இப்ப மட்டும் என்ன மனுசியாவா இருக்கிறா… எப்ப பாத்தாலும் அதட்டலும் உருட்டலும். ஊருக்குள்ள போய் பாக்கச்சொல்லோணும். அவளவளுகளின்ர அம்மாக்கள் எப்பிடி இருக்கினம் எண்டு. ஏன், அத்தையை எடுங்கோ. வாணிக்காவில் எப்பிடி பாசமா இருக்கிறா”

“வாணி, அவள் பிள்ளைடி. நீயும் இருக்கிறியே! எந்த நேரத்தில் பெத்து துலைச்சனோ தெரியாது. எருமைமாட்டை பெத்திருக்கன்”

“ஓமோம்! அதை பெரிய எருமைமாடு சொல்லுது” நக்கலாக திருப்பிக்குடுத்தவளை கண்ணில் கனலுடன் அவர் திரும்பிப்பார்க்க, “எப்பிடி பாத்தாலும் நான் குட்டி எருமைமாடு லிஸ்ட்டில தான் வருவன். அப்ப என்னை பெத்தநீங்க பெரிய எருமை மாடாத்தானே இருக்கோணும். அதைச்சொல்லுறன்” துளிகூட பயமில்லாமல் அலட்டியவளை “ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவள்ர வாயை உடைக்கப்போறனான். அண்டைக்கு என்னட்ட ‘புஷ்பா!’ எண்டுக்கு வந்தியலோ வாய் பழுதாகிடும் பாருங்கோ” நாதனிடம் எகிறியவர் விடுக்கென அறைக்குள் போய்விட்டார்.

மனைவி போறதையே பார்த்துக் கொண்டிருந்த நாதனிடம் “அவா அப்பவே போயிட்டா” என்றாள் நித்தி சிரிப்புடன். மகளை முறைக்க முயன்று தோற்ற நாதனுக்கும் புன்னகை அரும்பிவிட, “நீயும் ஏன் நித்திம்மா” என்றார், தன் சிரிப்பை காட்டாத முயன்று வரவழைத்த கண்டிப்பு குரலில்.

“நான் என்ன செய்தனான். பசிச்சது. சாப்பாடு போடச்சொன்னனான். அது ஒரு குத்தமா?” அப்பாவியாக இமைகளை சிமிட்டினாள். அப்பிடி கேட்பவளிடம் எப்பிடி ஓம் என்பது. பிறந்தபோது கையில் ஏந்திய அதே பால்வடியும் முகம். அச்சு அவரின் அம்மாவின் முகசாடை. பேத்தியை பாராமலே இறைவனடி சேரந்தவரை அச்சில் உரித்து அப்பிடியே வந்து பிறந்த மகளிடம் தன் அம்மாவை பார்த்தவரால் மருந்துக்குக்கூட அவளை கண்டிக்க வாய் வருவதில்லை.

அவளின் உச்சியில் கைவைத்து தலையை ஆட்டிவிட்டவர் “என்ர அம்மாம்மா” என்றுவிட்டு எழுந்து கைகழுவப்போனார்.

“என்ன அப்பா சாப்பிடேல்லையா”? என்றவளுக்கு “பிறகு அம்மாவோட சாப்பிடுறன்” கண்ணால் சிரித்துவிட்டுப்போனார் அவர். “ம்ம் ம்ம்!” அவருக்கு இசைந்து தலையை ஆட்டியவளுக்கும் சிரிப்பு வந்திற்று. என்ன தான் அப்பா அவளைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தாலும் அப்பாக்கு அம்மா என்றால் கொள்ளை இஷ்டம் என்று தெரியாமலில்லையே! ‘வரவர பெரிசுகளின்ர தொல்லை தாங்கலையப்பா’ தனக்குள் குறும்பாய் சொல்லிக்கொண்டவள் மீதி சோற்றை ஒரே அள்ளில் அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டு ‘வாணிக்கா, தோ நான் வந்துட்டேன்!’ என்ற ரீதியில் இந்ராணி வீட்டுக்கும் அவள் வீட்டும் பொதுவில் தடுப்பாய் இருக்கும் மதிலால் தாவிக்குதித்து ஏறி மறுபக்கம் வந்திருந்தாள்.

வீட்டில் அணியும் சாதாரண பாவாடை சட்டையில் இருந்தவளோ ஏறுவதற்கென இழுத்து சொருகிய பாவாடையை சரியாக்கிக்கொண்டே கால்கள் தரையில் படாமல் துள்ளலோடு தன் முன் வந்து குதித்தவளை “கொரங்குல இருந்து தான் மனுசர் வந்த எண்டு படிப்பிச்சு தரக்க எல்லாம் நம்பேல்லனான். இப்ப உன்னை பாக்கேக்க அது உண்மையாத்தான் இருக்கும் போலிருக்கு” என்றவளின் கிண்டலில் “என்ன நக்கலா?” உதட்டை சுழித்து கையை அவள் முன் நீட்டிய நித்தியை கேள்வியாக பார்த்து, தட்டில் இருந்த அப்போது தான் சுடச்சுட இறக்கிக்கொண்டு வந்த பயத்தம்பணியாரத்தில் ஒன்றை அவளின் நீட்டிய உள்ளங்கையில் வைத்தாள் வாணி.

அதன் சூட்டில் “ஆஆஆ” அலறிக்கொண்டே டான்ஸ் ஆடியவள் “வாணிக்கா!” என்ற சீறலுடன் பயத்தம்பணியாரத்தை இரு கைகளுக்கும் மாற்றி, உதடு குவித்து ஊஃப் ஊஃப் என ஊதி சற்று சூடு ஆறவும் தான் நிதானமாகி கையை உதறிக்கொண்டு கதிரையில் அமர்ந்தாள்.

“வரவர மினி புஷ்பா ஆகிக்கொண்டிருக்கிறயல்” குற்றப்பத்திரிகை வாசித்தவள் சூடுபட்டு சிவந்துபோன உள்ளங்கையை விரித்து உதட்டை பிதுக்கினாள். அவளுக்கு உருகிற்று.

“எங்க காட்டுனான் பாக்கிறன்”

“ஒண்டும் தேவையில்லை” அருகில் வந்தவளின் கையை தட்டிவிட்டவள் நொடியில் கண்ணை சிமிட்டி “நோகேல்ல எண்டாலும் நோகுற போல நடிப்பம்நாங்க” ஸ்டைலாக சொல்லியவளின் தலையில் எட்டி குட்டிய வாணிக்கு இப்போது முறைப்போடு “நேத்து என்ன சொன்னனான்?” கேள்வியாக புருவம் உயர்த்த, “என்ன சொன்னனீ?” அவளைப்போலவே கேட்டாள் அவளும்.

“ப்ச்! அக்கா!” ஒரு காலை தரையில் உதைத்து அவள் சிணுங்கவும் “உங்கொக்காதான்டி! சொல்லு என்ன சொன்னனீ” என்ற வாணி சிரிப்பை அடக்கேலாமல் முகமெல்லாம் நிறைந்துவிட்ட சிரிப்போடு.

“கனடா காத்து கடுமையாத்தான் வீசுதுபோல…” இடக்காக சொல்லியவள் அப்பிடியே தொனியை மாற்றி “அதான், அந்த கனடா கரடிக்கு போனை போட்டு தரவேணும் எண்டு சொல்லி எல்லா வீட்டை போனனான். மறந்து போயிட்டு என்ன” என்க,

நமட்டுச் சிரிப்புடன் கையில் இருந்த போனை நீட்டியவளுக்கு இப்போது அவள் கனடா கரடியில் கேட்டுக் கொண்டிருப்பவன் என்ன நினைப்பான் என நினைத்து நினைத்து பொங்கிவிட்ட சிரிப்பு அடங்கமாட்டன் என்றிட, பக்கென சிரித்துவிட, மறுமுனையில் விளக்கெண்ணெய் குடித்ததுபோல் விழித்துக் கொண்டிருந்தான் சாய்ரூபன்!

ஆம்! இசைவாணியின் வருங்கால மாப்பிள்ளையே தான்.

‘எதே கனடா கரடியா!’ என்றவன் பார்வையோ எதிரே தெரியும் கண்ணாடியில் படிய, மிதமான காற்றுக்கு அலை அலையாக கலைந்தகேசம் முன்னெற்றியில் புரள, வெளிநாட்டு வாசத்தில் நிறம் மாறினாலும் நம்மூர் முகவெட்டும் சாயலும் அடிக்க, சிரித்தால் கூடவே சேர்ந்து சிரிக்கும் கண்களும் முகமும் என ஜீன்ஸ் டீசேர்ட்டில் களையாக இருந்தவன் ‘பாக்க அப்பிடி தெரியேல்லயே’ ட்ரிம் செய்திருந்த தாடியை கரம் கொண்டு கழுத்தினூடாக வாரிவிட்டான். பாக்க மட்டும்மில்ல பழகவும் இனிமையானவன் என்பது அவன் கருத்து.

அதிலும் இந்த இருபத்தெட்டு வயதுவரை கட்டை பிரம்மச்சாரியாக இருந்தவன் கலியாண ஆசை வந்து வீட்டிலிருப்பவர்களுக்கு ஓம்பட்ட கையோடே விட்டால் பிடிக்க முடியாது என்று சூட்டோடு சூடாக பொம்பிளை பாத்து புகைப்படத்தையும் அனுப்பி வைக்க, முதல் பார்வையிலே அவளை சிநேகித்து, அவனின் இசையாக வரித்துக்கொண்டவனின் முதல் பிறந்தநாள் இன்று, அவள் அவன் வாழ்வில் வந்துவிட்டபிறகு.

முதல் வாழ்த்தும் இசைவாணியிடம் இருந்து தான் வந்தது. “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” தயக்கமும் கூச்சமும் போட்டிபோட ஒலித்த அவள் குரல் இப்போதும் அவன் காதில் ஒலிக்கிறதே! அவனுக்கு பன்னிரெண்டு ஆகும்வரை காத்திருந்து வாழ்த்து சொல்லியிருக்க, அதில் முகம் எல்லாம் பூத்துவிட்ட சந்தோசத்தோடு இருந்தவனுக்கு தான் நித்தியின் குரல் அபஸ்வரமாய்.

‘ஆரு?’ முகத்தை உயர்த்தி சைகையாலே அவள் கேக்க, ‘பிடி’ என அவள் கையில் திணித்தாள் வாணி. “அக்கா!” என்றவளின் குரலை காதில் வாங்காமல் வெறும் தட்டை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்குள் போய்விட, ‘வாணிக்கா’ பல்லைக்கடித்தாள் நித்தி.

கையில் இருந்த ஃபோன் வேறு அழைப்பில் தான் இருக்கிறன் எனச் சொல்லும்விதமாக நிமிசங்கள் ஓடப் பாக்க, திரையில் ‘ரூபன்’ என்ற பெயர் மின்னிக் கொண்டிருந்தது.

‘ஆரெண்டும் தெரியேல்ல, சரி எதுக்கும் சொல்லுவம்’ என நினைத்து காதில் வைத்தவள் “ஹலோ” என்றதுதான் தாமதம் “ஆரு, நான் கனடா கரடியோ? அதை உள்ளூர் கரடி நீர் சொல்லுறீர்! அதும் என்ர மனுசிட்ட. இரும், அடுத்த ஃப்ளைட்டிலே ஊருக்கு வாறனான்” என்ற குரல், மெய்யாகவே அதட்டுவது போல் ஒலிக்க, பட்டென காதில் இருந்த போனை இழுத்தெடுத்தவள் வாயை பொத்திக்கொண்டாள்.

எல்லாம் ஒரு நிமிடம்தான். அவளின் இயல்பான குணம் தலைதூக்க, “வாறதுக்கும் போறதுக்கும் ஒரே நாளில் புக் பண்ணுங்கோ!” என்றவள் முகமெல்லாம் குறும்பு புன்னகை.

ஒருநொடி விழித்தவன் மறுநொடி இதழ்விரித்தான். ‘ஆஹ்ஹாஹ்ஹா!’ சத்தம் வராமல் சிரித்தவனின் உடல் குலுங்கிற்று அதிர்வில். ‘சரியான சேட்டைபிடிச்சவள்!’ வாணி சொல்லியதை வைத்தும் இப்போது அவளின் பேச்சைக்கேட்டும் முடிவுக்கே வந்திருந்தான் ரூபன்.

“தைரியந்தான்!” பொய்யாக மெச்சியவனுக்கு “அது பிறப்பிலே வந்தது” இடக்காக சொல்லியவள் “கனடாக்கு எல்லாம் அது கிடையாது. இருந்திருக்க நேர்ல வந்து பொம்பிளை கேட்டிருக்க தெரிஞ்சிருக்கும் இந்த நித்தி ஆரெண்டு!” அலட்டினாள்.

“ஓமோம். கையோட புஷ்பா சித்தியை கூட்டிக்கொண்டு வந்திருக்க இன்னம் நல்லாருந்திருக்கும்” அவளுக்கு சளைக்காமல் கிண்டல் தொனிக்க கூறியவனை கண்டு பல்லைக் கடித்தாள் அவள்.

‘வாணிக்கா!’ காலை தரையில் உதைத்தவள் ‘எல்லாத்தையும் ஒப்பிச்சிருக்கிறா…’ மான, அவமானம் பாராமல் “அதுக்கெல்லாம் பயப்பிட்டு நிப்பன் எண்டு நினைச்சா அது உங்கட பிழை.” கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சாதிப்பவளாக முகத்தை வெட்டினாள்.

“ப்பாஹ்! அங்க ஃபயரடிக்கிறது இங்க வரைக்கும் அனலடிக்கிறது” டீசர்ட்டை இழுத்து விட்டு ‘ஸ்ப்பா’ ஊதியவனின் செயலை உணர்ந்தவள் இங்கு கொதித்துப்போய் இங்கும் அங்கும் நடக்க, “என்னடி கதைச்சியா?” என கேட்டுக்கொண்டே சன்ன சிரிப்புடன் திரும்பி வந்த வாணிக்காவில் அவை ஒட்டுமொத்தமாக திரும்பி “நல்லாப் பிடிச்சிருக்கிறயல் ஆளை. சரியான குதர்க்கக்காராள்! பிடியுங்கோ உங்கட ஃபோனை. நீங்களாச்சு உங்கட கனடா கரடியாச்சு என்னை ஆள விடுங்கோ!” அவள் கையை இழுத்து போனை டப் என வைத்தவள் விலுக்கென முகத்தை திருப்பிக்கொண்டு நடக்க, “என்ன எண்டு சொல்லிப்போட்டு போடி” என்றதற்கு நடை நிற்க திரும்பி “அதை உங்கட கனடாட்டயே கேளும்.” வெடித்தவள் விறுவிறு என்று சென்று மறைந்திருந்தாள்.

“என்ன சொன்னநீங்க, சரியான கோபத்தில் போறாள்?” கையிலிருந்த ஃபோனை காதுக்கு குடுத்தவள் கேக்க, எப்போது அவள் கதைப்பாள் என்றே காத்திருந்தவன் உல்லாசமாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் அதன் பிறகு கதைத்தது எல்லாம் அவர்களுக்கான அந்தரங்களே! என்ன கதைத்தீர்கள் எனக்கேட்டால் நிச்சயம் இருவரும் முழிக்கத்தான் செய்வினம். ஏதேதோ கதைப்பதும் சம்மந்தமே இல்லாமல் சிரிப்பதும் கொஞ்சம் வெட்கமும் நிறைய கனவுகளும் என விரைவில் கலியாண வாழ்க்கைக்குள் அடியெடுக்கப் போகிறவர்களின் நேரம் அப்படியே நீண்டுபோயிற்று. அங்கு அவன் தூக்கத்தில் சொக்கி விழுந்தபிறகு தான் இங்கு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஒருபக்கம் அவர்களின் நெருக்கங்கள் நீள, இன்னொரு பக்கம் கலியாண சடங்குகளும் துரிதகதியில் ஆரம்பமாயிற்று. கலியாணத்துக்கு ஒரு மாதமே இருக்க, இரு குடும்பங்களும் கலியாண உடுப்புகள் எடுக்க கொழும்புக்கு புறப்பட்டார்கள்.
மூன்றாவது எபி போட்டாச்சு. போன எபிக்கு கருத்து தெரிவித்த எல்லோருக்கும் நன்றி🥰

இதற்கும் உங்கள் கருத்துகளை பகிர்ந்துகோங்க
 

NNK-65

Moderator
அத்தியாயம் 04)

“நீயும் வாவன் நித்தி. எனக்கும் பொழுதுபோகும் நீயும் கொழும்பை சுத்திப்பாத்த மாதிரியும் இருக்கும்” மேல் கண்ணால் அவளைப் பார்த்துக்கொண்டே, அங்கு கொழும்புக்குச் சென்று உடுத்துவதற்கு ஏதுவான உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த வாணி, கட்டிலில் குப்பறபடுத்து காலாட்டிக்கொண்டே கையிலிருந்த கதைப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவளிடம் கேட்டாள்.

“ம்ம் ம்ம்!” என்றவள் பிறகு “ம்ஹூம்!!” என்று வேகமாய் அவள் கேட்டதை உள்வாங்கி மறுப்பாக தலையசைத்துக் கொண்டு.

“சும்மாவே புஷ்பம் எப்படா சான்ஸ் கிடைக்கும் என்னை குதறுவம் எண்டு காத்திருக்கிறா. நானே போய் விழுந்து வாங்கிக்கட்டுறதா? மாட்டேன்ப்பா” என்றவள் என்னவோ அப்பாவி போலவே சொல்ல “போடி” கையில் எடுத்த சீப்பை அவளுக்கு தூக்கி வீசினாள் வாணி. லாவகமாக அவள் எறியில் இருந்து தப்பி எழும்பி அமர்ந்தவள் “படிக்கிறது நிறைய இருக்கு வாணிக்கா. எப்பிடியும் உங்கட கலியாண துண்டுக்க படிக்கேலாது. மெனக்கெட்டு படிச்சாலும் அது மண்டைக்கு ஏறப்போறதில்ல எண்டுறது வேற விசயம்.“ சிரிப்புடன் சொல்லியவள் பிறகு சீரியஸாகவே “அதுக்கும் சேர்த்து இப்பயே படிக்கவேணும். இந்தத் தடவை இல்லாட்டி என்ன இன்னொரு தரம் போவம்” என்றாள் உற்சாகமாக.

அதற்குமேல் அவளும் ஒண்டும் சொல்லவில்லை. ஆனால் நித்தியா அப்பிடியே விடுவாள்? “அதுவும் இல்லாம கனடா காத்து பலமா அடிச்சா இந்த நித்தி ஒரு ஓரமா குந்திக்கு இருக்கிறதும் ஒராளுக்கு விளங்காது எல்லோ” என்றவளுக்கு முகமெல்லாம் துளிர்விட்ட சிரிப்பில் அப்பிடியே அள்ளிக்கொள்ளும் அழகுதான்.

“அழகினீ நித்தி!” எட்டி கன்னம் கிள்ளிய வாணிக்கு அழகிய வெட்கச்சிரிப்புடன் இதழ் நெளிய கண் மூடி திறந்தவள் “சரிசரி, பகிடி கதைச்சது காணும். முதல் உங்கட வேலையை முடிப்பம் வாங்க” என்றவள் வாணியின் முறைப்பை பொருட்படுத்தாமல் அவளும் சேர்ந்து மிச்ச துணிகளை மடிக்க, வேலையும் விரைவாகவே முடிந்திற்று. சரியாக கடைசி உடுப்பை மடித்து பேக்கினை பூட்ட கையெடுக்கையில் மெல்லிய சத்தத்தில் அதிர்ந்தது வாணியின் பேசி!


கனவெல்லாம் நீ தானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீ தானே

கலையாத யுகம் சுகம் தானே…” ஒரு முறை முழுதாக அடித்து ஓய்ந்து இதோ நிக்கப்போகிறன் என்ற நொடியில் தான் கட்டிலில் கலைந்து கிடந்த உடுப்புகளுக்கு அடியில் ஒளித்திருந்து கண்ணாமூச்சி ஆடிய கைப்பேசி கைக்கு தட்டுப்பட, “இதோ இருக்கு” என்று எடுத்த நித்தியின் முகம் அப்படியே கடுகடுத்திற்று.

க்ர்ர்! பல்லை நறநறத்தவள் வேண்டாவெறுப்பாக நீட்டிய தோரணையே அவள் நிலையை சொல்ல, அவனுக்கென ப்ரத்தியேகமாக அவள் பார்த்து பார்த்து வைத்த ரிங்டோன் அல்லவா? ஆர் என தெரியாமல் இருக்குமா என்ன!

வாணியோ எடுக்கத் துடிக்கும் நெஞ்சத்திற்கும் எதிரில் இருக்கும் நித்திக்கும் இடையே அல்லாட, நித்தியோ குமுறிக் கொண்டிருந்தாள். முன்னைப்போல வாணியுடன் செலவழிக்கும் நேரம் இப்போதெல்லாம் வெகுவாக குறைய, அதையெல்லாம் அவனுக்கானதாய் எடுத்துக் கொண்டிருந்தான் கனடாக்காரன். அவளுக்கு சும்மாவே நாள்தோறும் வகுப்பும் பாடமுமாக கிடைப்பதே சொற்பநேரம். அதிலும் அவன் குறுக்கே கட்டையை போடுகிறானே என கொதித்துப் போனாள்.

‘நான் இருக்கேக்க சரியா மூக்கு வியர்க்குமே கனடாக்கு! இப்பவே அக்காட்ட கதைக்க விடுறார் இல்ல. கலியாணம் முடிஞ்சது வாணிக்காவை மறந்திட வேண்டியதுதான்’ அவள் மனம் அறிவுறுத்த, ‘கனடாட்ட பேர்மிஷன் வாங்கித்தான் அக்காட்ட கதைக்கோணும் எண்டுற நிலமை வந்திடுமோ…’ என்றவள் நினைப்பு எங்கெங்கோ செல்ல, தலையை உலுக்கி அந்நினைப்பையே உதறித்தள்ளினாள். அடுத்த அழைப்பிற்கு பட்டென இணைப்பை ஏற்று காதில் வைத்ததும் என்னவோ நித்தி தான்.

“இஞ்ச பாருங்கோ, சும்மா சும்மா கோலெடுத்து டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டு இருக்கிறேல்ல. வாணிக்கா இப்ப பிஸியா இருக்கிறா, பிறகு எடுங்கோ” இங்கு வாணி தடுப்பதற்குள் சொல்லியேவிட “ஆ…! ஹலோ உள்ளூர் கரடி! நீங்களா மேடம். எங்க கனநாளா ஆளை காணேல்ல எண்டு பாத்தனான். இந்த வந்துட்டாவே டிஸ்டர்பன்ஸ்” என்றான் அவனுமே சளைக்காமல்.

காதிலிருந்த போனை கையில் எடுத்து அவனை முறைப்பதாக நினைத்து அதனை முறைத்தாள். ‘பரலோகத்தில் இருக்கும் எம் பரமபிதாவே! என் பொறுமையை சோதியாதீரும்’ மூச்சை வேகமாக இழுத்துவிட்டவள் “வரவர ஓவரா தான் போறீங்க கனடா! எப்பிடி இருந்தாலும் இங்கதான் வரோணும். மறந்திடாதீங்க.” கடுப்பாகிப் போயிற்று அவளுக்கு.

அதிலும் அவசர அவசரமாக கட்டிலில் இருந்த உடுப்புகளை ஒரு கரையாக ஒதுக்கி, பரபரவென முகம் கழுவி லேசாக துடைத்து நொடியில் லேசான ஒப்பனைகளுடன் கண்முன்னே காட்சி தந்த வாணிக்காவில் அது இன்னுமே அதிகமாக ‘அவவுக்கு இனி நாம கண்ணுக்கு தெரியமாட்டமே!’ சலிப்புடன் கோபமாக அறையை விட்டு வெளியேறியவள் தேத்தண்ணியும் கையுமாக எதிர்ப்பட்ட இந்ராணியின் கையிலிருந்த தட்டில் இருந்து கப்பை லாவகமாக தன் கைக்கு இடம்மாற்றி, ஒரே கெழியில் தொண்டைக்குள் ஊற்றி இருந்தாள்.

“அது மாமாவின்ரடி” என்ற இந்ராணியை காதிலே ஏற்றாமல்.

சுட்டெரித்துக் கொண்டு தொண்டையால் நழுவிச்சென்ற தேத்தண்ணியின் சூட்டில் உள்ளக்கொதிப்பு சற்றே மட்டுப்பட, டொங் என வெறும் கப்பை தட்டில் வைத்தவள் விடுவிடுவென்று வெளிக்கிட, “என்னடியப்பா சரியான கோபத்தில் இருக்கிறாய்” என்றார் இந்ராணி, அவளின் சிறுபிள்ளை செயலில் சிரிப்பேற.

அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த அரவிந்தனும் தன்பங்குக்கு “ஓய், சின்ன வாண்டு. எப்ப வந்தனீ” கேட்டுக்கொண்டே உள்ளுக்கு வந்தவனுக்கும் அவள் சொல்லியது தெளிவாய் காதில் விழுந்திற்று. சிரிப்பும் வந்திற்று.

‘மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. ஊருலகம் கண்டறியாத மாப்பிள்ளையை கேட்டு வச்சுப்போட்டு நல்லா கேக்குறா பாரு கேள்வி’ சினத்தில் தனக்குள்ளேயே சிடுசிடுத்தவள் “நான் நல்ல சந்தோசத்தில் தான் இருக்கிறன் பாருங்கோ” முப்பத்திரெண்டு பல்லையும் ஈயென இளித்து காண்பித்தவள் இருந்த விசருக்கு அரவிந்தனையும் முறைத்துவிட்டே வேகமாக வெளியேறிற்றாள்.

அதுவே ஆள் நல்ல கோபத்தில் தான் இருக்கிறாள் என்றிற்று. “என்னவாம்?” அவள் போகிற திக்கில் பார்த்துக்கொண்டே சிரிப்புடன் கேட்ட மகனுக்கு உதட்டை பிதுக்கியவர் ‘வாணி வரட்டும் கேப்பம்’ என நினைத்துக்கொண்டு “உனக்கும் தேத்தண்ணி ஊத்தட்டா தம்பி” கேள்விக்கு அவனின் ‘ஓம்’ என்ற தலையசைப்பை குறித்துக்கொண்டே தேத்தண்ணிக்கு குசினுக்குள் நுழைந்தார்.

அவர்களின் தேத்தண்ணி நேரம் முடிந்து இரவுச்சாப்பாட்டு நேரமும் கடக்க, “அவன்ர ஃபோனுக்கு என்ன நடந்ததோ தெரியேல்ல அம்மா. அவனைப்போலவே கூத்துக்காட்டுது. நீங்க அங்க போறதுக்கு இடையில் பிடிக்கப் பாக்கிறன்” ஃபோனும் கையுமாக சொன்ன அரவிந்தனில் கண்டனத்துடன் பார்வை வீசி, “அவனுக்கும் என்ன அலுவலோ தெரியாதே தம்பி!” அருகில் கணவரும் இருக்கிறபடியால் அக்கா மகனை விட்டுக்கொடுக்காமல் அவசரமாகச் சொல்லிய இந்ராணி “ஒண்டும் அவசரமில்ல, நீ பொறுமையா எடு. போய்ச்சேரக்க எப்பிடியும் விடிஞ்சிரும் எல்லா, அவன் வராட்டி என்ன! எங்களுக்கு தெரியுமே அட்ரஸ்.” என்றும் சேர்த்துச்சொல்ல, அதையே லோகானந்தமும் ஆமோதித்தார்.

அன்றிரவே இந்ராணி குடும்பம் வேன் ஒன்று புக் பண்ணி கொழும்புக்கு புறப்பட, மாப்பிள்ளை வீட்டாக்களும் அவர்களின் குடும்பம் பெரிது என்பதால் அவர்களின் வேனிலே வந்துவிடுவதாகச் சொல்ல, மூண்டு நாள் பயணமாக, தேவையான அனைத்து சாமான்களையும் ஒன்றுவிடாமல் அங்கேயே வாங்கி முடித்துவிட்டுத்தான் திரும்பி வந்தனர்.

வந்த களை தீரும் முன்பே கையோடே கோவில் ஐயாவிடம் பொன்னுருக்கலுக்கு நாள் குறித்த அடுத்த இரண்டாவது நாள் சாய்ரூபன் தாய்நாட்டில் வந்திறங்கினான். அடுத்து என்ன? மளமளவென கலியாணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு இதோ விடிந்தால் கலியாணம் என்கிற நிலையில் பெரும் பரபரப்புடன் இருந்தது கலியாணவீடு.

வாசலை அடைத்து பெரிதாக பந்தல்போட்டு, பந்தல் முழுக்க சீரியல்பல்புகள் இரவைப் பகல்பொழுதாக்கிக் கொண்டிருந்தது.

வெளியூர் உறவுச்சனங்களில் முக்காவாசிப்பேர் அண்டைக்கே வந்திறங்கி இருக்க, வீடே ஒரே கசகச என்று இருந்தது. அதோடு அயலட்டை உறவுகளும் வாணியின் மிகநெருங்கிய தோழிகள் மற்றும் அவர்கள்பக்க உறவுகள் கலியாண பொம்பிளையை பார்க்கவென பின்னேரம் இருந்தே ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருக்க, இப்போது தான் மெள்ள மெள்ள கலைந்திருந்தது சனம்.

அதிலே வெகுவாக தளர்ந்திருந்த வாணியை கண்டுவிட்டு “அதுதான் நாளைக்கு பாக்கப்போயினம் எல்லா. இண்டைக்கே என்னத்துக்கு உடுப்புடுத்தி நடநடந்து வருகிதுகளோ தெரியேல்ல!” சத்தமாக சொல்லிட்டார் நாகம்மாள். இந்ராணியின் பெரியம்மா உறவில் இருந்தவர்.

அப்போது தான் பொம்பிளை பார்க்கவென வீட்டுக்குள் வந்தவர்களுக்கு முகத்தில் அடிப்பதைப்போல சொல்லிய நாகம்மாளின் பேச்சும் அதற்கு அமைதிகாத்த இந்ராணியின் செயலும் மிகுந்த அவமானமாய் போயிற்று. வந்த வேகத்திலே சொல்லிக்கொண்டு விடைபெற, அப்போதுதான் சற்றேனும் ஓய்வுகிடைத்தது நீட்டி நிமிர்ந்து அமர.

பரபரவென வீட்டை ஒழுங்குபடுத்தி, தங்கிவிட்ட உறவுகளுக்கு சாப்பாட்டுக்கு ஆர்டர் குடுத்திருக்க அரவிந்தன் வரவழைத்ததும் எல்லாருமாக பாய் விரித்து அங்கேயே ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு சிலர் அவிடத்திலே கெழிந்திருந்தனர்.

மற்றவர்கள் அறைக்குள் அடைய, கீழிருந்த அறையில் ஒன்றில், வயது போகப்போக ஒவ்வொரு வருத்தமாக வந்திருக்க காலை கையை நீட்டி நிமிர்த்தி வசதியாக கட்டிலில் சரிந்திருந்த நாகம்மாள் “இந்ரா, ஒருக்கா வந்திட்டு போ.” என்றார். “என்ன பெரியம்மா!” கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவருக்கு கண்ணை காட்டவும் தலையில் தட்டிக்கொண்டார் இந்ரா.

வந்தவர்களுக்கு காட்டவென கட்டிலில் பரத்தி இருந்த உடுப்புகளை மளமளவென்று மடித்து ஒரு கரையாக்கியவரிடம் “நகைநட்டு, பொம்பிளை உடுத்துற உடுப்பு, சாமான்செட்டெல்லாம் எடுத்து வச்சிட்டினமா எண்டு இன்னம் ஒருதரக்க பாரும் இந்ரா. பிறகு அங்க போனங்காட்டியும் அதில்ல இதில்ல எண்டு அலம்பல் படுறேல்ல” வயதில் மூத்தவராக நாகம்மாள் அறிவுறுத்த,

‘சரியான கறார் மனுசி!’ பெரியம்மாவை எண்ணி சன்ன சிரிப்புடனே “எல்லாம் எடுத்து வச்சிட்டினம் பெரியம்மா. நான் சொல்லச்சொல்ல மதி தான் எடுத்து வச்சவள். நானும் ஒருதரக்க சரிபாத்தனான். எல்லாம் சரியா இருக்கு” பதில் சொல்லிக்கொண்டே கலியாண பட்டை மடிப்பு கலையாமல் அதை வேறையாக ஒருபக்கம் எடுத்து வைத்தார்.

“அப்பிடியே அந்த வெத்திலை பெட்டியை எடுத்துத் தா, இந்ரா.”

“இன்னம் இந்த பழக்கத்தை விடேல்ல என்ன!” சிறு முறைப்புடனே எடுத்துத்தரவும், குழந்தையாய் சின்ன சிரிப்பு அவரிடம். பக்குவமாக மடித்து வாய்க்குள் போட்டுக்கொண்டே “மூத்தவன்ட பிள்ள அழுதுக்கு இருந்தவளல்லா. போய்ட்டீனமா” வாயை குதப்பிக்கொண்டே இந்ராணியை பார்க்க, “ஓமோம். புது ஆக்கள கண்டா அவவுக்கு கரச்சல்போல. சரியான கத்து காலைல இருந்து. மதியையும் இருக்கவிடேல்ல எல்லா, இனி இங்க ஒரு வேலையும் இல்லயே; எல்லாத்துக்கும் ஆக்கள் இருக்கினம்தானே எண்டு மூத்தவனையும் கூட அனுப்பி வச்சனான்” என்றார்.

சரவணனின் இளைய மாமியார் மகளின் வீடு இங்கு பக்கத்தில் கால்மணிநேர நடைதூரத்தில் இருக்க, மதி தான் அங்க போவம் எண்டு கிளப்பி இருந்தாள்.

இந்ராணிக்கு அது ஒரு குறையாகவே இருந்தபோதும் எதையும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ளவில்லை அவர். வந்த நேரத்தில் இருந்தே தொட்டதுக்கும் சிணுங்கிக் கொண்டிருந்த பேத்தியை கண்டவராயிற்றே. அதனால் மகனையும் கூடவே அனுப்பி வைத்தார். அவன் தயங்கியதற்கும் “இங்க அரவிந்தன் இருக்கிறான். அப்பா இருக்கிறார். வந்த ஆக்களும் இருக்கினம் எல்லா. நீ அவளுக்கு துணையா கூடப்போ. ஆத்திர அவசரத்துக்கு அவள் போகேக்க பிள்ளையை வச்சிக்கொண்டு அவள் தனியா என்ன செய்யிற?” என்றிருந்தார்.

எப்போதாவது வரும் பேத்தியை அனுப்ப மனமே இல்லாமல் அனுப்பி வைத்தவரின் மனக்குறை அவர் முகத்திலே தெரிய, “கலியாண பொம்பிளை எங்க? நேரத்துக்கு தூங்க போயிட்டாளா” என்று பேச்சை திசை திருப்பிட்டார் நாகம்மாள்.

“ஓம். கனக்க நேரம் கதையடிச்சுக்கொண்டு இருக்காம தூங்க சொல்லிப்போட்டு தான் வந்தனான்” என்ற இந்ராணியும் ஒருவழியாக நாளைக்கு உடுத்தும் உடுப்புகளை வேறாகவும் மற்றது மடித்ததை அலுமாரியிலும் அடுக்கி முடித்து நிமிர, “கூட ஆரு இருக்கினம் இந்ரா!” கேட்டவருக்கு “புஷ்பாயின்ர மகள் பெரியம்மா. எங்கட பக்கத்து வீட்டு பெட்டை. நல்ல மாதிரி. மூத்தவன்ர கலியாணத்து துண்டுக்கையும் வந்து நின்டவள் எல்லா. மதியக்கா, வாணியக்கா எண்டு சுத்தி சுத்தி வருகிறவள். வாணிக்கும் அவளென்டா கனகாட்டு இல்லாம இருக்கும் எண்டவள்” அவருக்கு நியாபகம் இருக்குமோ இல்லையோ என்று விலாவரியாக.

“ஆரு, நம்முட நாதன்ர மகளா?” என்றாரவர்.

மெல்லிய சிரிப்பு வந்திற்று இந்ராணிக்கு. “நல்ல ஞாபக சக்தி தான் என்ன பெரியம்மா” என்றவருக்கு உண்மையில் இன்றளவும் அவரளவுக்கு ஆக்களை நினைவு வைத்திருப்பதில் தடுமாற்றம் தான். கலியாண பத்திரிகை குடுக்க பெயர் எழுதுகையில் கூட பகிடி செய்திருந்தானே மகன்.

அதில் பெருமிதமாக பெரியம்மாவை பார்த்து “அப்ப அப்பவே சொல்லிருக்கலாம் எல்லோ. நான் வேலை மெனக்கெட்டு விளக்கியிருக்க தேவையில்லையே” சிரிப்புடனே குறைபட்டுக்கொள்ள, தானும் சிரித்துக்கொண்டவருக்கு கண்ணைக் கட்டியது.

“நானும் நேரத்துக்கு கெழியிறனான். நீயும் வேலையெல்லாம் முடிச்சிக்கு நேரத்தோட படுத்து எழும்பு.” என கட்டையை சாய்த்தார். புயலடித்து ஓய்ந்ததைப் போலிருக்க, “நீங்க நிம்மதியா படுத்து எழும்புங்கோ பெரியம்மா” எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து, கதவை சாத்தி விட்டு வெளியே வந்த இந்ராணி, காலையில் இருந்து நிற்க நேரமில்லாமல் சுழண்டதில் உடம்பு ஓய்வுக்கு கெஞ்ச, வாயில் கையை வைத்து நாசுக்காக கொட்டாவியை வெளியேற்றினார்.

நேரத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டு நிலத்தில் பெரிய பாய் விரித்து ஆங்காங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த உறவுச்சனங்களுக்கு சத்தம்காட்டாமல் வெளிக்கி நடந்தவர் மகனை தேடி கண்ணில் வலம்வந்தார்.

வெளியே பந்தலின் கீழ் வரிசையாக கதிரைகள் போட்டிருக்க, அதில் ஒருபக்கம் லோகானந்தம் அவர் செட்டோடு அளவளாவிக் கொண்டிருக்க, மறுகோடியில் இளவட்டங்கள். ஸ்பீக்கரில் புதுப்பாடல்கள் அதிர்ந்த வண்ணம் இருந்தது.

கூட்டத்தில் அரவிந்தனை கண்டுவிட்டு “தம்பி, அரவிந்தா!” அங்கிருந்தே அவர் அழைக்க, பாட்டு சத்தத்தில் காதில் விழவில்லை.

“டேய் மச்சான், மாமி கூப்பிடுறவா போல இருக்கு” என்றான் சுதன் தான் அவரை கண்டுவிட்டு. “அம்மாவா! இந்நேரத்துக்கு தூங்காம என்ன செய்றாவாம்! கண்ணேரம் சொல்லிப்போட்டு எல்லா வந்தனான்.” சத்தமும் இல்லாமல் வாய்க்குள் என்றும்மில்லாமல் முனகிக்கொண்டே எழுந்து “என்னம்மா, இன்னும் தூங்க இல்லையா?” அதையே அவரிடம் கேட்டுக்கொண்டு அருகில் வர, “நான் தூங்குறது இருக்கட்டும், நீ இன்னும் தூங்காம என்ன செய்றாய் தம்பி? காலம எழும்பி வெளிக்கிடனும் எல்லா. இப்ப படுத்தாத்தானே சரியா இருக்கும்.” மெல்லிய குரலில் என்றாலும் சொன்னவர் குரலில் காரமிருந்தது.

சின்ன சிரிப்பில் எளிதில் அவரை சமாளித்தவன் “தூங்கத்தான் தூங்கத்தான். தூங்காம என்ன செய்ய! ஒவ்வொருத்தனும் வேலை, வெளிநாடு எண்டு இருந்தவன்கள் நான் கூப்பிட்டன் எண்டதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்கள். வந்தவனுகளோட கதைச்சிக்கிருக்கிறேல்லயா (கதைச்சிக்கு இருக்கிற இல்லையா) வாறன் நீங்க போங்கோ.” இடையில் கதைக்க வந்தவரை பேசவிடாமல் முடித்தவன், இன்னும் அசையாமல் இருந்தவரிடம் “இப்ப என்னம்மா” என்றான் சத்தமில்லா சிரிப்புடன் அவரைப்போலே நின்றுகொண்டு.

“படவா!” அவன் பாவனையில் எழுந்த சிரிப்பில் தோளில் ஒண்டு போட்டவர் “குசினிக்க கீழ இருக்கிற வாளி ஒண்டுக்குள்ள பலூடா கலந்தது இருக்கு. தேவை எண்டா கப்புகளும் அவடத்தயே கழுவி கவுத்து வெச்சிருக்கினம். ஊத்தி குடியுங்கோ. அப்பாக்கு, இன்னேரம் முழிச்சிக்கு இருக்கிறவருக்கு தேத்தண்ணி தேவைப்படும். என்ன எண்டு பாத்து செஞ்சி குடும்” என்றார்.

பின் ஞாபகம் வந்தவராக பேசவாயெடுத்தவரை முந்திக்கொண்டு “சொன்னது நினைப்பு இருக்கெல்லோ. காலையில் மாப்பிள்ளை வீட்டாக்கள் நேரத்துக்கே வருவினமாம் தம்பி. நீயும் அண்ணனுமாத்தான் வாற ஆக்களை வரவேற்கவேணும். மறந்திடப்போடா… காலையில் கெதியில் வெளிக்கிட்டு கொண்டுபோய் மண்டபத்தில நிக்கவேணும். அண்ணன்ட்டையும் எடுத்துச்சொல்லு” அவரைப்போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடன்.

வெளிக்காட்டாவிடினும் மனதில் அந்தரிப்பை சுமந்திருந்தவரின் சுமையே இறங்கிற்று மகனின் செயலிலும் பாவனைகளிலும். அவனே தொடர்ந்து, “இந்த வீட்டில ஆம்பிள்ளையல் எண்டு என்னத்துக்கு நாங்க இருக்கிறம். ம்ம்? ஒரு குறையும் இல்லாம எல்லாம் சரியா நடக்கும் சரியோ. போங்கோ. ஒண்டுக்கும் யோசிக்காம படுத்து எழும்புங்கோ!” அவரின் தோள்கள் இரண்டிலும் உள்ளங்கை வைத்து அழுத்தம் குடுத்தவன் கண்ணிலும் அதைக் காண்பிக்க, முற்றாக மனது நிறைந்திற்று இந்ராணிக்கு.

அதை காட்டிக்கொள்ளாமல் “நீ, நீ நினைச்சபடிக்கு தான் எல்லாம் நடக்கோணும் எண்டு நினைக்கப்போடா தம்பி. அம்மா சொல்லுறன் எண்டா கொஞ்சம் கேக்கவேணும். நாளைக்கு ஒரு குறையும் ஆரும் சொல்லிடப்போடா. பாத்துக்கொள்ளும்” நடந்தபடிக்கே கறாராகச் சொல்லியவரை “வரவர புஷ்பா அத்தைபோலவே கதைக்கப் பழகிறயல் அம்மா!” வாயெல்லாம் சிரிப்புடன் நித்தியை போலவே சொல்லிக்காட்டியவனை “படவா ராஸ்கோல்! மேலுக்குத்தான் இருக்கிறாள். கேட்டவளோ உன்ர வாயை கிழிச்சி தோரணம் கட்டிட்டு தான் மறுவேலை பாப்பாள். நாளைக்கு கலியாணமும் அதுவுமா வாயை புண்ணாக்காத தம்பி!” என்றவருக்கு நித்தியை நினைத்ததில் எழுந்த சிரிப்பே மொத்தமாக வியாபித்து முகமெல்லாம் ஜொலிக்க, அங்கு அவளோ சிடுசிடுவென்று சினம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு, தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

‘தலை வலிக்குதுடா! தலை வலிக்குதே!’ வடிவேலுவின் குரல் தான் மண்டைக்குள் குறுக்கும் மறுக்குமாய் ஓடியது.

சன்னக்குரலில் வெட்கம் நிறைந்துவிட்ட முகத்துடன் இங்கும் அங்குமாய் நடந்தே தரையை தேய்த்துக் கொண்டிருந்த வாணி, நிமிசத்துக்கு ஒருதரம் அவளை கிண்கிணியாய் சிரிக்க வைத்த மறுமுனையில் இருந்த கனடாக்காரன் என இருவருமே அவளை கடுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.

போதாக்குறைக்கு பொழுதைபோக்க என கையிலெடுத்த முத்துலட்சுமி ராகவன் அம்மாவின் ‘கை தொட்ட கள்வனே’ ரமணனும் மாளவிகாவும் ஆத்தங்கரை, காபி, ஊடல் என தன்பங்குக்கு இம்சிக்க, ‘அத்தே!’ பல்லைக் கடித்தாள் நித்தி.

அவள் பாட்டுக்கு வீட்டில் நிம்மதியாக படுத்துத் தூங்கியிருப்பாள். ‘வாணி, நித்திக்குட்டிய இரவுக்கு கூட படுக்க வரட்டாம் என்டவள் புஷ்பா’ என்று இந்ராணியே நேரில் வந்து அழைத்திருந்தார். அவள் கேட்டிருக்க சர்வ நிச்சயமாக மறுப்புத்தான். இந்ராணி வந்து கூப்பிடவும் வேறு வழியில்லாமல் அனுப்பி வைத்திருக்க, அவளுமே ‘இண்டைக்கு ஒரு நாள் தான். நாளைக்கு வாணிக்கா கலியாணம் முடிச்சிக்கு போயிடுவா’ என்ற நிஜம் தாக்க, அம்மா சம்மதம் தெரிவித்ததுமே ஓடி வந்திருக்க, இதுக்கு வந்திருக்கவே தேவையில்லை என இப்போது நொந்து கொண்டாள்.

‘நீ ஓடி வந்த வேகத்துக்கு…’ என அதை நினைத்து நினைத்து ஆத்திரப்பட்டுப் போனாள். ‘தேவைதான் உனக்கு! கனடாக்காரனையும் அவேன்ர மனுசியையும் தெரிஞ்சிருந்தும் வந்தனீ எல்லா’ என தனக்குத்தானே குட்டிக்கொண்டாள். என்ன பிரயோசனம்? மேலும் அரைமணித்தியாலம் போன பிறகு தான் ஒருவழியாக, கோலை துண்டிக்கும் கட்டத்துக்கே வந்திருந்தார்கள் நாளை கலியாணம் முடிக்கப்போகிற சோடி.

அப்போதும் “நீங்களே வையுங்கோ ரூபன், நீங்கதானே எடுத்தனீங்க” நாளை கலியாணம், நாளை இதேநேரம் அவனோடு என்கிற நினைவில் எழுந்த வெட்கத்தில் குரலை தளைத்துச் சொல்லிக்கொண்டிருந்தாள் வாணி.

மறுபக்கம் அவன் என்ன சொன்னானோ? அந்தியில் சிவக்கும் வானமாய் அவள் முகம் அப்படியே சிவந்து போயிற்று. காதோரம் செம்மையேற, துடிக்கும் உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு கால் பெருவிரலால் நிலத்தில் கோலம்போட்டவள் “போங்க ரூபன்” அழகாய்ச் சிணுங்கினாள்.

அந்தச் செல்லச் சிணுங்கலே மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க போகிறதென சொல்லாமல் சொல்லிற்று.

அதற்குமேல் பொறுமை இழந்து “ஆராவது ஒருத்தர் வச்சு துலையுங்கோவன். எனக்கு நித்திரை வந்திட்டு” சத்தமாக அறிவித்த நியந்தனாவின் குரலுக்கு மேலாக “இதுக்கு தான் இவள வரச்சொன்னனி எல்லா” மக்களிடம் கோபமே படாத இந்ராணி கூட வந்த விசருக்கு வார்த்தை தடித்து வந்துவிழ, எதிரே முழுக்கோபத்துடன் நின்றிருந்தார் அவர்.நான்காவது எபி போட்டாச்சு. படிச்சிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகோங்க. போன எபிக்கு கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றி

 
Last edited:
Status
Not open for further replies.
Top