எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காந்தையே காதலுற்றேன் - கதை திரி

Status
Not open for further replies.

NNK47

Moderator
காந்தையே காதலுற்றேன் - டீசர்

eiU5YIO34168.jpg"ஜான்" என அவளது கழுத்தை கட்டிக் கொண்டு உரிமையாக 'இதை செஞ்சு கொடு அதை செஞ்சு கொடு ' என கேட்டவை எல்லாம் நினைவுகளாக மாறிப் போயிருந்தன.

இன்று உரிமையாக அவளிடம் எதுவும் கேட்க முடியாமல் அச்சமும் குற்றவுணர்வும் இரு மெய்காவலர்களாக அவளிடம் உரிமை கோர முடியாமல் தடுத்து நிறுத்த, அவளிடம் எப்படி கேட்பது என தயக்கத்தோடு சமையலறை வாசலில் நின்று அவள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் விபு.
அவ்வழியாக வந்த அவனது அன்னை அவனது முதுகில் ஒரு அடியைப் போட, சுள்ளென விழுந்த அடியில் உடலை நெளித்தவன்"அம்மாமாமா….!!" என அலறினான்.


"இங்க என்னடா பண்ற?!"
"ம்மா ! சும்மா பார்த்திட்டு இருந்தேன்"என்று இழுக்க, "என்னத்த பார்க்கற?"என உள்ளே எட்டிப் பார்க்க, உள்ளே வேலை செய்துக் கொண்டிருந்த ஜனனியோ அவர்களின் அரவத்தை கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

"உன் பொண்டாட்டிய தான் மறைஞ்சு நின்னு பார்க்கறீயா? அடுத்தவன் பொண்டாட்டிய திருட்டுத் தனமா பார்க்கற மாதிரி இருக்குடா ! மானத்த வாங்காம உள்ள போடா ?"என தலையில் அடித்துக் கொண்டு சென்று விட,
' எப்படி பார்த்தாலும் என் பொண்டாட்டிய தான பார்த்தேன் இவங்களுக்கு என்ன?' என சலித்துக் கொண்டவன், உள்ளே தன்னை முறைத்துக் கொண்டு நிற்கும் மனைவியிடம் இளித்து கொண்டே அவள் அருகில் வந்தான்.

"என்ன வேணும்?"
"அது !"என தயங்கி நின்றான்.

"ப்ச் சீக்கிரம் சொல்லு"
"எனக்கு நாளைக்கு சில்லிச் சிக்கன் வேணும் செஞ்சு தர்றீயா?"
"இத கேட்க தான் என்னை மறைஞ்சு நின்னு பார்த்தீயா?"

முதலில் 'ஆமாம் ' என்றவன் பின் 'இல்லை ' என்று தலையை ஆட்ட,
அவனை ஏதோ திட்ட வாயெடுத்தவள் அதனை விழுங்கி விட்டு "செஞ்சு கொடுக்கிறேன்"என்று அவனை பாராமல் வெளியேறி விட்டாள்.
அவனோ ' உப் ' என இதழ் குவித்து ஊதியவன், அவளைத் தொடர்ந்து அவனும் வெளியேறிருந்தான்.

****
"ம்ம்ம்ம்...." என ராகமிழுத்தாள் ஜோவித்தா. அவன் கொண்டு வந்த சில்லிச் சிக்கனை ருசித்துவிட்டு.

"விபு ! சான்ஸே இல்ல. என் அம்மா செய்றத விட, இது பேஸா இருக்கு ! யாரு செஞ்சா?"என இரு விரலால் உணவை வழித்து நாவில் வைத்து ருசித்தவள், மீண்டும் ராகமிழுத்த படி கேட்டாள்.
அவள் சாப்பிடும் அழகை ரசித்து பார்த்தவன் "எங்க அம்மா" என மனசாட்சி தன்னை இடித்தும் அவளிடம் பொய் கூறினான்.


"நிஜமாவா? அத்தையா சமைச்சாங்க? அப்ப நான் சமைக்க கத்துக்கணும் அவசியம் இல்ல !" என தோளை குலுக்கி விட்டுச் சொன்னவளை இடையில் கைவைத்து முறைத்தவன்,

"நோ வே பெரியவங்களை கஷ்டப்படுத்தக் கூடாது ஜோ ! கல்யாணத்துக்கு அப்புறம் நீ தான் சமைக்கனும். சோ சமைக்க கத்துக்கடி !"என்று கறராகச் சொல்லி விட, உதட்டைப் பிதுக்கியவள்,

"அப்ப நான் மட்டும் கஷ்டப்படலாமா?"எனச் சிறு பிள்ளை போலக் கேட்டவளை, தலை சாய்த்து பார்த்தவனுக்கு நிச்சயமாக எந்தச் சுவரிலாவது போய் முட்டிக் கொள்ளலாம் என்று தான் இருந்தது.


"ஓகே கூல் நீயும் கத்துக்கோ நானும் கத்துக்கிறேன். ஆஃப்டர் மேரேஜ் சேர்ந்தே சமைக்கலாம் டீல் "என்று அவனே தீர்வையும் சொல்லி அந்தத் தலைப்பை அத்தோடு முடித்து வைத்தான்.


"டபுள் டீல் டா இங்கிலீஷூ!" என மகிழ்ச்சியில் உதட்டை குவித்து அவனுக்கு முத்தத்தைப் பறக்க விட்டாள். அவனும் அவளுக்கு பதில் முத்தத்தை அனுப்பி வைத்தான். இருவரும் தங்களது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டனர்.
 
Last edited:

NNK47

Moderator
காதல் 1
காட்டனிலிருந்து இன்னும் சில வகையானப் புடவைகளோடு சேர்த்து, முப்பது புடவைகளையும் அதற்கு ஏற்ற ரவிக்கைகளையும், வண்ண வண்ண உள்பாவாடைகளும், வாய் பிளந்து கிடக்கும் பெட்டியில் அடக்கிக் கொண்டிருந்தார் மேகவாணி.
"மேகா, ஜோவி சென்னைக்குப் போய் வேலைப் பார்க்கிறதுல எனக்கு இஷ்டம் இல்லைனு சொல்லிட்டு, நீயே நிறைய புடவைய கொடுத்து அனுப்புற? அவ சென்னைக்கு போறத நீ அக்செப்ட் பண்ணிட்டீயா என்ன?" என, சென்னைவாசியாக மாறப் போகும் மகளுக்கு, ஆடைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கும் மனையாளிடம் கேட்டார் மேகவாணி.

"ச்ச... நானாவது அக்செப்ட் பண்ணிக்கிறதாவது? வாய்ப்பே இல்லங்க... ஸ்டில் எனக்கு அவ சென்னைக்கு போறது பிடிக்கல..." என்றார் மேகவாணி, நவநீதனின் துணைவி.

"அப்போ எதுக்கு வாணி, பார்த்து பார்த்து புடவை, சுடிதாருன்னு எடுத்து வைக்கிற?" எனச் சந்தேகத்துடன் கேட்டார்.
"ஜோவிப்பா! வீம்புக்கு அந்த ஸ்கூல்ல தான் வேலை பார்ப்பேன்னு நிக்கறா உங்க பொண்ணு. ஆனா, நான் அடிச்சி சொல்றேன், ஒரு மாசம் அங்க இருப்பா, அதுக்கு மேலே உங்கப் பொண்ணால தாக்குப் பிடிக்க முடியாது. அம்மானு அழுதுட்டு ஓடி வந்திடுவா. வீம்புக்கு இருக்கப் போறா. அவ இருக்கிற ஒரு மாசத்துல அவ போட்டுக்க டிரஸ் வேணாமா? அதுக்குத்தான் பாத்து பாத்து எடுத்து வைக்கிறேன்." என்று சிரிக்காமல் மகளை கேலி செய்தவரை, வாயைப் பிளந்து பார்த்தார் நவநீதன்.

"எப்படி வாணி? அவ ஒரு மாசத்துல வந்திடுவான்னு அடிச்சி சொல்ற?"
"அவ அம்மாப் பொண்ணுங்க! எல்லாத்துக்கும் அவளுக்கு நான் வேணும். என் கையால செஞ்சா மட்டும் தான், அவ திருப்தியா சாப்பிடுவா. தூங்கும்போது அவளுக்கு என் முந்தானை தேவைப்படும். எந்த ஒரு டெஷிசன் எடுக்கிறதுனாலும் இந்த அம்மா வேணும் அவளுக்கு. சோ, இந்த அம்மாப் பொண்ணால தனியா போய் ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்கிறது எல்லாம் கஷ்டம். நீங்க எதுக்கும் பிஎட் காலேஜ்ல எப்ப சேரணும்னு விசாரிங்க ஜோவிப்பா." என்றார் மகளை நன்கு அறிந்து வைத்திருந்ததால்.

"எப்படி வாணி இவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்ற, ஜோவியால அங்க ஒரு மாசம் கூட தாக்குப்பிடிக்க முடியாதுனு?"
"அதான் சொல்றேன்ல ஜோவிப்பா, அவ அம்மாப்பொண்ணு."
"ஆனா வாணி, இது சரியில்ல... எவ்வளவு நாளைக்கு அவளை அம்மாப் பொண்ணுனு சொல்லிட்டே இருக்கப் போற? ஷி இஸ் இன் டுவென்டி த்ரீ. இன்னமும் நீ அவள அம்மாப் பொண்ணுனு சொல்லி பெருமைப் பட்டுக்காத. நாளைக்கு அவளுக்கு கல்யாணப் பேச்சு எடுத்தாலும் இப்படி சொல்லி நீ தட்டிக் கழிப்பியா? இன்னொரு வீட்டுக்கு அவளை அனுப்பணும்னு நினைப்ப தானே? இல்ல, வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு அசால்ட்டா இருக்க போறீயா?
நம்ம பொண்ணு தான், ஆனா இன்னொருத்தர் வீட்டுக்கு போறவ. அவ அங்க நல்லா இருக்கணும்னா நாம அவளைப் பிரிஞ்சிதான் ஆகனும் வாணி. ஒரு மாசத்துல வந்திடுவானு கேலி பண்ணிட்டு இருக்காம, அவ தொடர்ந்து அங்க வேலைப் பார்க்க, அவளுக்கு அட்வைஸ் குடு வாணி." என்றார்.
"நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஜோவிப்பா, உங்க பொண்ணு இருபத்து மூணுல இருக்கா தான், இல்லைனு சொல்லல. ஆனா இன்னும் பத்து வயசு பொண்ணு மாதிரி எல்லாத்துக்கும் என்னை தான் தேடுவா. அதை மாத்தணும்னு நினைக்கிறேன் நான். அவ என் கூட இருந்தாதான் என்னால முடியும். அவ அங்கப் போனா என்னால அவளை மாத்த முடியாது. எதுக்கெடுத்தாலும் அழுவா, அவளை பக்கத்துல உட்கார வச்சி பொறுமையா சொன்னா தான் புரியும்.

அங்க போய் போன்ல அழுதா, இங்க நான் என்ன பண்ணுவேன்? இங்க இல்லாத வேலையா அங்க இருக்கு? ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்கனா இவளும் போகணுமா? டீச்சர் வேலைக்கு போறதுக்கு சென்னைக்கு போகணுமா? ஏன், இங்க இல்லாத ஸ்கூலா?" என சலித்துக் கொண்டார்.
"வாணி, அவளை அம்மாப் பொண்ணுனு சொல்ற ஓகே. உன்னை என்ன சொல்றது? உன்னால ஜோவிய விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியல. ஒரு மாசத்துல அவளுக்கு போன் போட்டு மனசை மாத்தி வர வச்சிடலாம்ன்ற கான்ஃபிடென்ட்ல, அவ வந்திடுவான்னு அடிச்சி சொல்ற, உண்மை இதுதான்.

உன்னால அவளை பிரிஞ்சி இருக்க முடியல. பக்கத்துல வச்சிக்கணும்னு நினைக்கிற, இது சரியா வாணி? கேம்பஸ் இன்டர்வியூ மூலமா நம்ம பொண்ண செலக்ட் பண்ணிருக்காங்க. சென்னையில வேலை கிடைச்சிருக்கு, அதுவும் ஸ்கூல்ல. இது நமக்கு பெருமை தான?! அது அவளுடைய விருப்பம் கூட... என்கரேஜ் பண்ணி அனுப்பி வைக்கணும். அம்மாப் பொண்ணுனு சொல்லி அவ ஆசைக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது வாணி, அது தப்பு.” என அவர் எச்சரிக்க,

அங்கே ஆஜரான ஜோவித்தாவோ, "ஜோவிப்பா, கரெக்ட்டா சொன்னீங்க. நான் அம்மா'ஸோட பேவரைட் தான். ஆனா அதை மாத்தி அவங்க என்னை அம்மாப் பொண்ணுனு சொல்லிட்டு இருக்காங்க." என அவர்கள் பேச்சின் நடுவே நுழைந்தாள்.
அதில் கடுப்பான மேகவாணியோ,


“ஓ... அப்ப நீ அம்மாப் பொண்ணு இல்ல?"

"எஸ்! நான் அம்மாப் பொண்ணு தான்மா. ஆனா அதைத்தான் நான் பிரேக் பண்ணணும்னு நினைக்கிறேன். என்னை நீங்க பொத்தி பொத்தி வளர்த்தது போதும். என்னாலயும் தனித்து, யோசித்து செயல்பட முடியும்ன்ற கான்ஃபிடென்ட் எனக்கும் உங்களுக்கும் வரணும்மா. அதுக்கு நான் சென்னைக்கு போய்தான் ஆகணும். ஒரு மாசம் இல்ல, ஒரு வருசம் வேலை பார்த்து உங்க கான்ஃபிடென்ட்டையும், என் மேலே இருக்க உங்க எண்ணத்தையும் நான் மாத்ததான் போறேன். என்ன ஜோவிப்பா, சரியா?" என்று தந்தையின் தோளில் கை போட,


"சூப்பர்டா மகளே! இப்போ நீ அம்மாப் பொண்ணு இல்லனு நிரூப்பிச்சிட்ட. இதே போல நீ ஒவ்வொரு விஷயத்துக்கும் அம்மாப் பொண்ணு இல்லனு நிரூபிக்கணும். அப்பாவோட விஷ் அதான்!" என்றார். அவளோ கண்களைச் சிமிட்டினாள்.


"ஓ... ரெண்டு பேரும் கூட்டணியா? பார்க்கலாம்... நீங்க ஜெயிக்கிறீங்களா? இல்ல, நானானு? நீங்க வேணா பாருங்க, ஒரு மாசத்துல என்னால வேலை பார்க்க முடியல, நான் இங்கயே இருக்கேன்னு, இவ இங்க வந்து அம்மாப் பொண்ணுனு நிரூபிக்கிறாளா, இல்லையா பாருங்க." என்று வெளியே விறைப்பாக சொன்னாலும், மகளது பேச்சில் உள்ளே ஓர் வெற்றிடம் உருவானது போலிருந்தது மேகவாணிக்கு. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
இத்தனை நாள் மகள் மீது கொண்ட எண்ணம் இன்று உடைக்கப்படுவது போலிருந்தது. அவ்வளவு சொல்லியும் முதன் முறையாக மகள் தன் முடிவுக்கு எதிராக, வேறொரு முடிவை எடுத்தது அவரால் ஜீரணிக்க முடியவில்லை. உள்ளுக்குள் கலங்கிப் போனாலும் வெளியே தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல், தன்னை விறைப்பாக காட்டிக் கொண்டார்.


ஆனால் அதெல்லாம் என்னிடம் எடுக்காது என்பது போல, மனைவியின் மனதைப் படித்துவிட்டு அவரையே பார்த்தார் நவநீதன்.


வாணியோ அவர் பார்வையை பார்த்து மாற்றிக் கொண்டு வேலையைக் கவனித்தார். இவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
இரவெல்லாம் நவநீதன், வாணிக்கு போதகராகி மகள் மீது வாணி கொண்ட எண்ணத்தையும் கவலையையும் குறைக்க முயன்று, அவள் ஊர் விட்டு ஊர் சென்று வேலைக்குச் செல்வது, கசப்பாக இருந்தாலும் அதை விழுங்கதான் வேண்டும் என்று, பல அறிவுரைகள் கூறி ஒரு மனதாக மகளது பிரிவை ஏற்றுக்கொள்ள வைத்தார்.


காலையில் தன் மகன் ஜீவித்தனைப் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, மூவருமாகச் சென்னைக்கு அவர்களது சொந்தக் காரில் பயணித்தனர்.

***

உன் அலும்ப பார்த்தவன்
உங்கப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன்
பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா

உசுர கொடுக்க கோடி பேரு.


அலைபேசியில் ப்ளூடூத் இணைத்து வீடே அதிர, பாடலை ஒலிக்கவிட்டு, அறையில் சின்னவன் பள்ளிச் சீருடை அணிந்து, பெரியவனோ கால்சட்டை, மேல் சட்டைய அணிந்து துண்டை வைத்து சுழற்றி ஆடிக் கொண்டிருந்தனர்.


சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு, இந்தச் சத்தம் சுத்தமாக சேரவில்லை. தலையில் யாரோ சுத்தியல் வைத்து நங்கு நங்கென்று அடித்தது போல இருந்தது. காலையிலே இவர்களது அழும்பு தலைவலியுடன் இரத்தம் அழுத்தமும் உடன் சேர்ந்தது இவளுக்கு.

கரண்டியுடன் வெளியே வந்தவளை பாவமாகப் பார்த்தார் சுதா. வேகமாக உள்ளே நுழைந்தவள், அலைபேசியை கண்டுபிடித்து பாடலை நிறுத்தினாள், இருவரும் திரும்பினார்கள்.
மீசையுள்ள குழந்தையும் மீசை இல்லாத குழந்தையுமாக அவள் முன் நின்றிருந்தனர் இருவரும். மீசையுள்ள குழந்தையை முறைத்துவிட்டு மீசை இல்லாத குழந்தையைத் தன் பக்கம் இழுத்தாள்.


"காலையிலே பாட்டு போடாதனு உனக்கு எத்தனை தடவ சொல்றது? திருந்தவே மாட்டீயா நீ? ஸ்கூலுக்கு போற, இன்னும் உனக்கு புத்தி வரலையா?"


"புத்தி யாருக்கு வரலங்கிற எனக்கா, இவனுக்கா?" இடையில் கை வைத்து அவளருகே வந்து நின்று கேட்டவனைப் பாராது, சின்னவனைப் பார்த்து,


"ரெண்டு பேருக்கும் தான் சொல்றேன். அறிவுனு ஒன்னு இல்லவே இல்ல ரெண்டு பேருக்கும். சத்தமா பாட்டு போட்டு மத்தவங்களுக்கு தொந்தரவு தர்றோம்னு எண்ணம் இருக்கா? அமைதியா என்னைக்காவது கிளம்பி இருக்கீங்களா ரெண்டு பேரும்? நீங்க பண்ற அழும்புல இல்லாத வியாதி எல்லாம் எனக்கு வந்திடும் போல இருக்கு." என்று இருவரையும் கடிந்து கொள்ள,


பக்கத்தில் நின்றவனோ, "வயசானா எல்லா வியாதியும் வரத்தான் செய்யும்." என சத்தமாக முணுமுணுக்க, சின்னவனோ அவனது நக்கலில் வாயை மூடி சிரித்தான்.

"எனக்கு ஒன்னும் வயசு ஏறிடல, ஆனா உங்க ரெண்டு பேர் கூட இருந்தா, வயசாகாத எனக்கும் வயசானா வர வியாதி எல்லாம் வந்திடும். போ, கிளம்புற வேலைய பாரு." எனவும், அங்கிருந்து நகர்ந்து விட்டான் விபு என்கிற விபு பிரசாத்.இப்போது அவளிடம் சின்னவன் மாட்டிக் கொள்ள தாயைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தான்.


"பண்றதும் பண்ணிட்டு இந்த பம்முற வேலைலாம் என்கிட்ட வச்சிக்காத. எதுவுமே செய்யல, யூனிஃபார்ம் மட்டும் போட்டு அந்த ஆட்டம் ஆடுற? நேத்து முழுக்க படிக்கல, இன்னிக்கி ஒரே ஆட்டம். அடிக்க மாட்றேன்ல, அந்த தைரியம் உனக்கு. ஒன்னு வச்சா தான் ஒழுங்காவ நீ." என அவன் முன் விரலை நீட்டி எச்சரிக்க,


உதட்டைப் பிதுக்கி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவளையே பார்த்தான் சாய் சச்சின்.


அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை. எல்லாம் விபு சொல்லிக் கொடுத்த டெக்னிக் தான். அதுவும் அவளுக்குத் தெரியும். பக்கவாட்டில் வளர்ந்து நின்றவனை இவள் முறைக்க, அவனோ திரும்பிக் கொண்டான்.


"இப்படி முகத்தை வச்சிட்டா உன்னை விட்டிருவேன்னு எவன்டா சொன்னது?" என்றதும் அவன் விபுவைக் காட்ட,

அவனோ, “நான் இல்ல, அவன்தான்..."

சின்னவன் சச்சினோ, "நான் இல்ல, இவன் தான்." என்று அவனைக் காட்ட,

மீண்டும் விபு, "நான் இல்ல, நான் தான்..." என்க, அடக்கப்பட்ட சிரிப்பை மறைத்து கோபமாக இருக்க முயன்றாள்.


"போதும் உங்க காமெடி... நேத்து நீ டைரி சைன் வாங்கலல, இப்பயாவது வாங்கணும்னு எண்ணம் இருக்கா உனக்கு? டைரி சைன் வாங்கலனா ஒன் டே முழுக்க கிளாஸ்க்கு வெளிய தான் இருக்கணும், அந்தப் பயம் கூட இல்லாம இருக்க நீ? டைரி சைன் போட்டிருவேன்னு தைரியம் தானே உனக்கு? இன்னைக்கி நான் போடுறதா இல்ல. நீ போய் பனிஷ்மெண்ட் வாங்கு." என்று அதுக்கும் சேர்த்து கடிந்திட,


சச்சினோ, “அதெல்லாம் நான் பனிஷ்மெண்ட் வாங்க மாட்டேன். விபுகிட்ட நேத்தே டைரி சைன் வாங்கிட்டேன். அதுனால எனக்கு பனிஷ்மெண்ட் கிடையாது." என்றவன் மீண்டும் அவளிடம் அவனைக் கோர்த்து விட்டான்.


"சச்சி! போய் ஷூ போடு." என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு இவனைப் பிடித்துக் கொண்டாள்.


"தினமும் நான் தானே சைன் பண்ணுவேன், புதுசா உன்கிட்ட வந்தா என்ன, ஏதுனு கேட்காம சைன் போடுவீயா?"


"அவன்கிட்ட கேட்டேன்டி, நீ மறந்துட்டதா சொன்னான். நானும் நம்பி சைன் போட்டுட்டேன்." என்று சிறுத்த குரலில் சொல்ல,


"என்கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்க வேண்டாமா?"

"ஆமா நீ பெரிய பிரின்சிபல்... உங்ககிட்ட கேட்டுதான் கையெழுத்து போடணுமாக்கும்? என் புள்ளைக்கு நான் போடுவேன், உனக்கு என்னடி? ஒரு நாள் அவன் படிக்கலைனாலும் ஃபெயிலாகி அதே கிளாஸ்ல உட்கார போறதில்ல, ஓவரா பண்ணாதடி...” என்றான் சலிப்பாக.


"நான் ஓவரா பண்றேனா? ஒரு நாள் அவன் படிக்காம ஸ்கிப் பண்ணாலும் அடுத்த நாள் அவன் அதை படிக்க மாட்டான். அப்புறம் பரீட்சை நேரத்துல நான் அவன் கூட மல்லு கட்டணும். நீ டீச்சர் தான, இதுக் கூட உனக்கு தெரியாதா?" என்றவள்,

மேலும் நக்கலுடன், “உனக்கு எப்படி தெரியும்? அதெல்லாம் தினமும் படிச்சி எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ் பண்றவங்களுக்கு தான தெரியும். கிளாஸ் டெஸ்ட்ல கூட ஃபெயிலாகிற ஜீவராசிக்கெல்லாம் எப்படி தெரியும்?" என்றாள்.


"ஆமாடி எனக்கு தெரியாது தான். பெரிய இவளாட்டம் பேசுற... ஒவ்வொரு டெஸ்ட்லயும் மறச்சு வச்சி தானே எழுதின, எனக்கு காட்டினியாடி நீ பிசாசே!? செல்ஃபிஸ்டி நீ! துரோகிடி நீ! எங்க, உன்னை பார்த்து எழுதி உனக்கு ஈக்குவலா மார்க் எடுத்துடுவேன்னு தானடி நீ எனக்கு காட்டல. நான் இருக்கேன்டானு எக்ஸாம் முன்னாடி வாய் கிழிய பேசிட்டு, எக்சாம் ஹால்ல யார்டாங்கிற மாதிரி என்னை பார்ப்ப பாரேன்... அப்பெல்லாம் உன்னை தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு போல இருக்கும்டி. பொம்பள புள்ளைனு விட்டேன், இன்னைக்கி நீ ரொம்ப பேசுற... பல்லெல்லாம் பேத்துருவேன். கிளாஸ் டெஸ்ட்ல ஃபெயில் ஆனாலும் இப்போ நான் டீச்சர்டி. நான் படிக்க வச்சி எத்தனை ஸ்டூடண்ட் பாஸ் பண்ணி போறாங்க தெரியுமா?"

"எனக்கு அதான் சந்தேகமாக இருக்கு. அரியர் வச்சவன் எல்லாம் எப்படி டீச்சர் ஆனான்? எப்படி உன்கிட்ட படிச்சி எல்லாரும் பாஸாகுறாங்கனு தான் தெரியல. உனக்கு எல்லாம் எந்த மடையன் வேலை கொடுத்தான்?"


"ஆங்! உன் அப்பன்... அவன்தான் இந்தாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு டீச்சர் வேலை இருக்கு, வந்து பாருங்கனு கொடுத்தான்." எனவும்,


இவளுக்கு தன் தந்தையை சொன்னது மேலும் கோபமேற, அவனை நெருங்கி வந்து, "எங்க அப்பாவ இழுத்த, எனக்கு செம்ம கோபம் வரும், அடிச்சி சாவடிச்சிடுவேன்." என எகிறிக் கொண்டு வர, அவனும் அவளை நெருங்கி, “ஆங்! அப்படித்தான் உங்க அப்பன பேசுவேன். முடிஞ்சா என்னை அடிச்சிக் கொல்லுடி பார்ப்போம்." என இருவரும் முட்டிக் கொண்டு நிற்க,

அறையின் வாசலில் வந்த சுதாவோ, “நீங்க ரெண்டு பேரும் புருசன், பொண்டாட்டி. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, அது ஞாபகத்துல இருக்கா? பரிட்சையில காட்டல ஃபெயிலாயிட்டேன், உனக்கு யாரு வேலை போட்டு கொடுத்தானு காலேஜ் பசங்க மாதிரி சண்டை போடுறீங்க. அசிங்கமா இருக்கு, கல்யாணம் பண்ணி வச்சும் இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் மெச்சுரிட்டி வரல. இதுல இதுங்க அப்பா, அம்மா வேற...” என தலையில் அடித்து சலித்துக் கொண்டு பேரனை அழைத்து கிளப்பிட சென்றார்.


'புருசன், பொண்டாட்டி' என்ற நிதர்சனத்தை உணர்த்திவிட்டு அவர் போக, அதுவரை சண்டையிட்டு இயல்பாக இருந்தவர்கள், தங்களுக்குள் இறுகிப்போய் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.

***


பிளீஸ் உங்க பொன்னான கருத்தை இங்கே பகிரவும்

 

NNK47

Moderator
காதல் 2


தத்தி தத்தி நடக்கும் மழலையிலிருந்து, பருவ மாற்றம் கொண்டு பறக்கும் பட்டாம்பூச்சிகள் அனைத்தும் வந்தடையும் சோலையே இப்பள்ளிக் கூடம். காலை வேளையிலே மாணவ, மாணவர்கள் அச்சோலைக்குள் படையெடுத்து வந்து கொண்டிருந்தனர்.


தன் இரு சக்கர வாகனத்தில் மகன் சாய் சச்சினோடு பள்ளி வளாகத்தினுள் நுழைந்தான் விபு பிரசாத். வண்டியை நிறுத்திவிட்டு குறுக்கே மாட்டியிருந்த பையைச் சரி செய்துவிட்டு, இருவரது உணவுப் பைகளை ஒரு கையிலும், மற்றொரு கையில் மகனைப் பிடித்தபடியும் அழைத்து வந்தான்.

காலையில் எதுவும் நடவாதது போல குதித்து குதூகலமாக வந்து கொண்டிருக்கும் சாய் சச்சினைப் பார்த்து, "சச்சி!" என அழைத்தான். அதற்கு அவன், “சொல்லு மச்சி." என்றான்.

இது இருவர் மட்டுமே அழைத்துக் கொள்ளும் பிரத்தியேக அழைப்பு.
"எதுக்கு சச்சி, என்னை உன் அம்மாகிட்ட மாட்டி விட்ட? ஒழுங்கா படிக்கிறவன் தான நீ, நேத்து ஏன் படிக்கல? ஏன் என்கிட்ட உண்மைய சொல்லாம சைன் வாங்கின?"


"ரொம்ப கஷ்டமா இருந்தது மச்சி, அதான் படிக்கல. ஒரு ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் பையன் படிக்கிற அளவுக்கா இருக்கு? என் சுண்டு விரல் சைஸ் விட பெருசா இருந்தது. அதுவும் தமிழு... அதான் படிக்கல. ஒரு நாள் தான் படிக்கல அதுக்கு என்ன, ஜானு இப்படி கத்துறா? நான் ஒரு நாள் படிக்கலனா கூட என் மிஸ் திட்டமாட்டாங்க. ஆனா இந்த ஜானு ஒரு நாள் முழுக்க திட்றா. இது நல்லதுக்கு இல்ல, சொல்லி வை உன் ஜானுகிட்ட." என மிரட்ட,
"அது வேற ஒன்னும் இல்ல, நீ என்னை மாதிரி இருக்கல அதான் கோபப்பட்டு கத்தறா!" என்று அவன் விளக்கம் கொடுக்க,

"ஒரு நாள் உன்னை மாதிரி இருந்ததுக்கே என்னை திட்றாளே, தினமும் உன்னை மாதிரி இருக்க உன்னைய எவ்வளவு திட்டுவா? பாவம் மச்சி நீ!" என உச்சுக் கொட்டி அவன் வருந்த,


அவன் சொன்னத்தை கேட்டு சட்டென நின்றவன் அவனை தீவிரமாக முறைக்க, அவனோ சிரித்துக் கொண்டு, வா! வா! உண்மை சொன்னா முறைக்கக் கூடாது மச்சி."

"சரி நேத்து படிக்கல, இன்னைக்கி எப்படி டெஸ்ட் எழுதுவ?"
"டோண்ட் வொர்ரி! எனக்கும் கேர்ள் ஃப்ரண்ட் இருக்கா. அவன் உன் ஃப்ரண்ட் மாதிரி எல்லாம் இல்ல, எனக்கு காட்டுவா. அதுனால நான் டெஸ்ட் எழுதிடுவேன்." என்றான் அசட்டையாக.


அதைக் கேட்டு வாயைப் பிளந்து அதிர்ந்தவன், "டேய் சச்சி! படிக்காத நீ எப்படி எழுதினனு கேட்டு சிபிசிஐடி வேலை பார்த்து கண்டுபிடிச்சி, மிஸ்கிட்ட போட்டுக் கொடுத்திடுவா உன் அம்மா. ரொம்ப பொல்லாதவ அவ. படிக்காத நீ பாத்து எழுதி மாட்டிக்காதடா." என இவன் பயம் கொள்ள,

சச்சினோ, "நீ பயப்படாத மச்சி, ஜானுவ நான் பார்த்துப்பேன். நீ கிளாஸ்க்கு போ." என்றவனைப் பார்த்து இதழ் குவித்து ஊதியவன், அவன் உயரத்துக்கு அமர்ந்து அவனிரு தோள்களை அழுத்தி,
"இங்க பாரு சச்சி, உன் விபு பேச்சை நீ கேட்ப தான?" எனவும்,
அவனும், “ஆமா” என்றான்.


"காலையிலே டீச்சரா அட்வைஸ் பண்றானேனு நினைக்காத, இத்தனை நாள் நீ கஷ்டப்பட்டு படிச்சி எழுதின டெஸ்ட் எல்லாம் உன்னுடைய உழைப்பும் முயற்சியும். இன்னைக்கி ஒரு நாள் நீ பார்த்து எழுதி அது ரெண்டையும் பொய்யினு ஆக்கிடாத. சட்டுனு உங்க மிஸ், 'அப்போ இத்தனை நாள் நீ பார்த்து தான் எழுதுறீயா?'னு கேட்டு உன் உழைப்ப ஒன்னுமில்லாம ஆகிடுவாங்க. இன்னைக்கி ஒரு நாள் நீ பார்த்து எழுதறதை வச்சி உன்னை கார்னர் பண்ணிட்டே இருப்பாங்க.

நீ படிச்சே எழுதினாலும் உன் மேலே அவங்க போட்ட பிளாக் மார்க் மாறவே மாறாது. அதுவே தைரியமா படிக்கல மிஸ் சொல்லு, திட்டுவாங்க தான். ஆனா அது ஒரு நாளோட போயிடும். பிளாக் மார்க்கோட இருக்க போறீயா, இல்ல இன்னைக்கி ஒரு நாள் திட்டு வாங்க போறீயா? உன் சாய்ஸ் தான். பாய், டேக் கேர்!" என்று நல்ல தகப்பகனாக, தோழனாக அறிவுரை சொல்லி, அவனை வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு, இவனும் பள்ளி அலுவலகத்தினுள் நுழைந்தான்.

தனது வருகையை பதிவேட்டில் கையெழுத்திட்டு பதிவு செய்தவன், தலைமை ஆசிரியரைப் பார்த்து காலை வணக்கம் சொல்லி விட்டு, ஆசிரியர்களுக்கான அறைக்குள் நுழைந்தான்.

அவனை வரவேற்றது பல குரல்கள். அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லியவன், தனது பையிலிருந்து தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, பையை அவனது கபோர்ட்டில் வைத்து பூட்டியவன், அவனது வகுப்பறையை நோக்கிச் சென்றான்.

காலை பிரார்த்தனைகள் முடிந்து வகுப்புகள் தொடங்க, அவனும் பாடத்தை எடுக்க ஆரம்பித்தான். விபு பிரசாத், ஆங்கிலத்தில் எம்ஏ எம்எட் முடித்து சென்னையில் பெயர் போன பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணிப்புரிகிறான்.
சுதா, மணிமாறன் தம்பதிகளின் ஒரே தவப்புதல்வன் இவன். உடல் நலக் குறைவால் மணிமாறன் இறந்து விட, அப்போது சிறுவனாக இருந்த விபுவை தனியாளாக படிக்க வைத்து, இன்றைய நிலையில் உயர்த்தியது அவனது தாய் சுதா. கணவர் வீட்டுப் பக்கம் உதவி இல்லையென்றாலும், சுதாவின் உடன் பிறந்த அண்ணன் அவருக்கு எந்தச் சூழ்நிலையிலும், துணையாக இருந்து அவர்கள் வாழ்வில் உயர்ந்து நிற்க உதவியாக இருந்தார். அந்த நன்றி கடனுக்கு, அண்ணனின் மகளை மருமகளாக ஏற்றுக் கொண்டார்.

ஜனனி! விபுவிற்கு மாமன் மகள், மனைவி என்று சொல்வதை விட, அவனது சிறு வயதிலிருந்து இணைப் பிரியாத தோழி எனலாம். இருவரும் நடை பயிலும் காலத்திலிருந்து இன்று வரை சேர்ந்தே பயணிக்கின்றனர். மகன், சாய் சச்சின் முதலாம் வகுப்பு படிக்கிறான். இதுவே விபுவின் குடும்பம்.

***

"சார்ர்ர்..." என மாணவன் விபுவை அழைக்க விபுவோ, பாடத்தில் தான் சந்தேகம் கேட்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டு, “என்ன முகேஷ், என்ன ட்வுட் உனக்கு?" என்றான்.

"அது வந்து சார்..." என இழுக்க, "என்னடா இழுக்குற? என்ன கேட்கணும் உனக்கு, கேளு?" என்றான்.

"நாளைக்கு எங்க கிளாஸ்க்கு புது டீச்சர் வர போறாங்கல்ல... அவங்க சாரா? மேடமா? யங்கா? ஓல்டா?" என தன் சந்தேகத்தை கேட்டு வைத்தான் பதினொன்றாம் வகுப்பு மாணவன்.
அவனை இடையில் கை வைத்து சன்னமாக முறைத்தவன், "ஏன் கருப்பா? சிவப்பா? நெட்டையா? குட்டையானு கேட்க வேண்டியது தான? அதை மட்டும் ஏன் விட்டுட்ட?" என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

"நீங்க இந்தக் கேள்விக்கு பதில் சொல்றத பொறுத்து அடுத்த கேள்வி அதுவா தான் இருக்கும் சார்." என்றவனின் காதை திருகி,
"சப்ஜெக்ட்ல டவுட் கேட்பனு பார்த்தா, வரப்போற டீச்சர் யாருன்னு டவுட்டா கேக்குற? எனக்கு உன் கொஸ்டீனுக்கு பதில் தெரியல. வா, நாம பிரின்சிபல்கிட்ட போய் கேட்போம். உன் கொஸ்டீனுக்கு அவர்தான் சரியா பதில் சொல்வார், வாடா." எனவும்,


"சார்... சார்... சும்மா ஒரு கியூரியாசிட்டில கேட்டேன் சார். என்னை விட்ருங்க... இனி டவுட்ன்னு கேட்க மாட்டேன். வாயவே திறக்க மாட்டேன்." என கெஞ்ச, அவனை விட்டவன் மாணவர்கள் அனைவரையும் பார்த்து, "வேற யாருக்கும் இந்த டவுட் இருக்கா?" என்றான் நமட்டு சிரிப்புடன்.
மாணவர்கள் பயந்து, "நோ சார்..." என கோஷமிட்டனர். அவனும் சிரித்துக் கொண்டே வேலையைப் பார்த்தான்.

இடைவேளையில் அவன் ஆசிரியர்கள் அறைக்குள் வந்தமர்ந்து ஓய்வு எடுக்க, அங்கேயும் நாளை வரப் போகும் பதினொன்றாம் வகுப்பாசிரியரைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது.
"சின்ன பொண்ணு, எம்எஸ்சி முடிச்ச கையோடு கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகி வர்றா போல..." என்று பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர் லதா சொல்ல,

பன்னிரெண்டாம் வகுப்பு கம்ப்யூட்டர் சையின்ஸ் பிரிவைச் சேர்ந்த சுதன்தான் ஆர்வமாக, “சின்ன பொண்ணா? எம்எஸ்சி முடிச்ச கையோடு வர்றாங்கன்னா இருபத்தி ரெண்டு அல்லது, இருபத்தி மூணு வயசு இருக்குமா? எப்படி ஹாண்டில பண்ணுவாங்க பசங்கள?"


"பசங்கள ஹாண்டில் பண்ண ஏஜ் இருக்கணும்னு அவசியம் இல்ல சுதன், அவங்க ஸ்கில்ஸ் போதும். உன் கிளாஸ் மித்ரா லீடர் தான? கிளாஸ் மெயின்டெய்ன் பண்றது இல்லையா அதுபோல தான். ஏஜ் வச்சு ஒருத்தர் எப்படின்னு முடிவு பண்ணாத, மே பீ ஷி ஹாஸ் எபிலிட்டி டூ கன்ட்ரோல் ஸ்டூடண்ட்ஸ். கன்ட்ரோல் பவர் இருந்தால் போதும், ஷி கேன் மேனேஜ் எனிதிங்." என்றான் விபு.
"விபு சொல்றது சரி, கிளாஸ் கன்ட்ரோல் பண்ணிட்டாலே மத்தது எல்லாம் ஈசி தான். மேத்ஸ் மேஜர் வேற பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு..."என்று பெருமூச்சை இழுத்து விட்டார் வனிதா அறிவியல் ஆசிரியர்.


"அது இருக்கட்டும், வர போற பொண்ணு சிங்கிள். நம்ம குரூப் ல ரெண்டாவது சிங்கிள் அதுவும் பொண்ணு வேற! விபுவ தவிர, உங்க யாராலயும் அந்த பொண்ண சைட் அடிக்க முடியாது. வரப்போற பொண்ண அவனை தவிர எல்லாரும் சிஸ்டரா நெனச்சிக்கங்க." என்றார் எக்கானமிக்ஸ் ஆசிரியர் வசந்தா.


"அதென்ன மேடம், அவன தவிர மத்த எல்லாரும் அவங்கள சிஸ்டரா பார்க்கணுமா? இது அநியாயமா இருக்கே! ஏன் நாங்க சைட் அடிக்க கூடாதா?" என பொங்கினான் மோகன் தமிழ் வாத்தியார்.


"எதே... சைட் அடிக்க கூடாதா வா? உங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சில உங்க மனைவியைத் தவிர எல்லா பொண்ணுங்களும் உங்களுக்கு சகோதரிகள் தான். அவனுக்கு மட்டும் தான் இன்னும் கல்யாணம் ஆகல, அவன்ட்ட போய், பார்க்கற பொண்ணா எல்லாரும் தங்கச்சியா பாரு சொன்னா, அவன் யார தான் பார்ப்பான்? யாரை தான் கல்யாணம் பண்ணுவான்? அவனும் எத்தனை நாளைக்கு தான் இப்படி தனியாவே இருக்கறது? நம்ம கூட ஐக்கியமாக வேண்டாமா? அதுனால சைட் அடிக்கர ஆப்ஷன் அவனுக்கு மட்டும் தான் இருக்கு. வேற யாருக்கும் இல்ல மீறி சைட் அடிச்சா அவங்கவங்க பொண்டாட்டிகளிடம் போட்டு கொடுக்கப் படும்"என்றார் வசந்தா.

பெண்கள் கைத் தட்டிச் சிரிக்க, ஆண்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டனர். இவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த, விபுவின் முகமோ வெளிறி போய் இருந்தது.


இன்னும் அவர்களுக்கு அவனுக்குத் திருமணமான விஷயம் தெரியாததால் அவனை இன்றளவும் திருமணமாகாதவன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவன் இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்றும் அவன் திருமணமானதை யாரிடமும் பகிரவில்லை.
***

"சப்போஸ் நான் வேலைக்குப் போற இடத்தில எனக்கு ஒருத்தரை பிடிச்சி, அவரை லவ் பண்ணா என்ன பண்ணுவீங்க ரெண்டு பேரும்?" என விளையாட்டாக கேள்வி கேட்டாள்.


"செருப்பால் அடிப்பேன்." என்றார் பட்டென்று. அவளோ பயந்து இரண்டடி பின் நகன்றாள்.உங்க பொன்னான கருத்தை பகிரலாமே

 

NNK47

Moderator
காதல் 3

சென்னை டிநகர் சாலையில், வார நாட்கள் என்பதால் குறைவான ஜனக் கூட்டமே இருந்தது. கூட்டத்தின் மத்தியில் நவநீதன் தன் மனைவி மற்றும் மகளுடன் நடந்தார். விடுதியில் தங்கப் போகும் மகளுக்கு அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை வாங்க வந்திருந்தனர்

ஜோவித்தா எம்எஸ்சி முடிக்கும் தருவாயில், அவளது கல்லூரியில் பல கம்பெனிகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் வந்து கேம்பஸ் இன்டர்வியூ வைத்திருந்தனர்.
கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கப் பிடிக்காதவள், பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்து அதில் கலந்தும் கொண்டாள். எப்படியும் வேலை கிடைக்காது, ஒரு அனுபவத்திற்காக கலந்து கொண்டவளுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால், பாவம் இவளுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டு மனதாக, 'செல்வதா, வேண்டாமா?' என்று இருந்தாள்.
இதுவரை மதுரையை விட்டு வெளியே எங்கும் போகாதவளுக்கு இது அரிய வாய்ப்பு தான். இவளுடன் படித்த மாணவர்கள், மாணவிகள் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் என கம்பெனியில் வேலை கிடைத்து செல்லவிருக்க, இவளுக்கும் சென்னை சென்று வேலை செய்ய ஆசை தான். ஆனால் மகளை தனியே சென்னைக்கு அனுப்ப மேகவாணிக்கு துளியும் விருப்பமில்லை.


ஊர் விட்டு ஊர் சென்று பெரிய பெரிய கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்றால் கூட தகும். ஆனால் பள்ளியில் வேலை பார்க்க, எதற்கு சென்னை வரை செல்ல வேண்டும் என்பதுதான், அவரது ஆதங்கம். ஆனால் அவளுக்கோ மதுரை தவிர்த்து வெளியூருக்கு சென்று, வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம், விருப்பம், ஆசை, முடிவு. முரண்பாடுள்ள இவர்கள் இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டிருப்பது நவநீதன் தான்.
நவநீதன், மேகவாணி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் ஜோவித்தா, இளையவன் ஜீவித்தன். ஜீவித்தன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். ஜோவித்தா முதுகலையில் இப்போது தான் கணிதம் முடித்தாள். முடித்த கையோடு வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.


மேகவாணிக்கு ஜீவித்தனைப் பற்றி கவலை இல்லை. அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால், அவனை சென்னை, கோவை என்று அனுப்பி படிக்க வைக்க தயார்தான். ஆனால் மகளை வெளியூர் அனுப்பதான் அவருக்கு பயமே! இதை வைத்தே மேகவாணிக்கும் ஜோவித்தாவிற்கும் வாக்குவாதங்கள் வரும்.


"அவனை மட்டும் அனுப்ப தயாரா இருக்கீங்க? ஏன் என்னை மட்டும் அனுப்ப மாட்டீக்கிறீங்க? ஏன் பார்சியாலிட்டி பார்க்குறீங்க?" என அவருடன் சண்டை பிடித்தாள்.

'பார்சியாலிட்டி' என்ற வார்த்தையைக் கேட்டதும் அவருக்கு சுர்ரென்று கோபம் வந்தது. "பாப்பா! அப்படி பேசாத! பார்சியாலிட்டி நான் பார்க்கிறேனா? உன்னை பத்தி முழுசா தெரிஞ்சதுனால தான் உன்னை அனுப்ப பயப்படுறேன். எம்எஸ்சி படிக்கவே நீ எவ்வளவு ஸ்ட்ரகில் பண்ண, எத்தனை முறை அழுத நான் போக மாட்டேன்னு சொல்லி. உன்னை எத்தனை முறை தேத்தி நானும் உன் அப்பாவும் உன்னை காலேஜ் அனுப்பி வச்சோம். தினமும் நான் போக மாட்டேன்னு சின்ன குழந்தை போல அழுததை மறந்துட்டியா?
கஷ்டப்பட்டு தான எம்எஸ்சி முடிச்ச, அதுவும் நாங்க ஒவ்வொரு நாளும் உன்னை தேத்தி. உனக்கு சொல்லி சொல்லி உன்னை அனுப்பி வச்சோம். அங்க ஸ்கூலுக்கு வேலைக்கு போயி கஷ்டமா இருந்தாக் கூட, சொல்லி அழ நாங்க இருக்க மாட்டோம். உன்னை தேத்தி அனுப்ப, உன்கிட்ட பேச உன் அப்பா இருக்க மாட்டார். அங்க போய் நீ ரொம்ப கஷ்டப்படுவ. அதுக்கு நீ இங்க இருந்து பிஎட் படி, கவர்ன்மென்ட் எக்ஸாமுக்கு படி. நீ வேலைக்குப் போகணும்னு அவசியம் இல்ல. நீ இங்க இரு, எங்கேயும் போக வேணாம்." என்றார்.

அதற்கு அவளோ, "இதே வார்த்தைகளை கல்யாண பேச்சை எடுத்தாலும் சொல்வீங்களாமா? என்னை இன்னொரு வீட்டுக்கு அனுப்ப மாட்டீங்களா? இதே போல அங்க போய் நீ ஸ்ட்ரகில் பண்ணுவ, உனக்கு மேரேஜ் வேணாம் சொல்வீங்களா? நான் அந்த வீட்டுக்கு போய் கஷ்டப்படுவேன்னு உங்க கூடவே வச்சிப்பீங்களா? சொல்லுங்க..." எனவும் அவர் தடுமாற,


"பிளீஸ்மா! என்னோட மைனஸ் எல்லாத்தையும் மாத்தணும் நினைக்கிறேன். என்னால நீங்க இல்லாம சர்வே பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை வர, நான் அங்க போகணும்னு நினைக்கிறேன்மா. பிளீஸ்... என்னை உங்க கைக்குள்ள பொத்தி வச்சிக்கிற கோழிக் குஞ்சா வளர்க்கணும்னு நினைக்காதீங்க. அப்பவும் நான்தான் கஷ்டப்படுவேன். என் முடிவை அக்சபட் பண்ணுங்க.” என்றாள்.
அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லை, ஒத்துக் கொண்டார் மனமின்றி.


இதோ அவள் வேலைக்கு சேர வேண்டிய நாளும் வர, அதற்கு முந்தின நாளே அதிகாலை வேளையில் தங்களது மகிழுந்தில் கிளம்பி, மதியம் போல் சென்னை வந்தடைந்தனர். மதிய உணவை முடித்துக் கொண்டு, பெரிய நட்சத்திர விடுதியில் ஒரு அறையை எடுத்து தங்கி, ஓய்வு எடுத்தனர்.
பள்ளி வளாகத்திலே வெளியூரிலிருந்து வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தங்க விடுதிகளும் உண்டு. அங்கே அவளும் தங்க, அவளுக்கு தேவையான வாளி, கப்பு, தட்டு, டிஃபன் பாக்ஸ் மேலும் இதர பொருட்கள் வாங்க, மாலை வேளையில் மூவரும் அந்தச் சாலையில் நடந்தனர்.


மகளுக்கு என்று பார்த்து பார்த்து பேரம் பேசி வாங்கும் மேகவாணியைப் பார்த்து, இருவரும் நமட்டுச் சிரிப்புடன் உடன் வந்தனர் அப்பாவும் பொண்ணும்.
அதை கண்டுகொண்ட மேகவாணியோ, "என்ன?" என்று கேட்க,


"மேகி, பொண்ணு ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்க போறா. கல்யாணம் பண்ணி புருசன் வீட்டுக்கு போகல. சீர் வரிசை வாங்குறது போல வாங்குற. இது ஓவரா இல்ல?" என நக்கல் செய்ய,
"ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்க போறாதான், நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அவ ஒரு மாசத்தில வந்திடுவான்ற என் நினைப்புபடி, விலை கம்மியா இருக்க பொருளை வாங்கி கொடுக்க முடியுமா? அவ ஆசைப்படி ஒரு வருசம் இருக்க போறாளே?! அதுக்கு ஏத்தது மாதிரி தரமான பொருளா வாங்கி கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதுல என்ன நக்கல், அப்பாவுக்கும் பொண்ணுக்கும்?" என அவரும் பதிலுக்கு நக்கல் செய்தாலும், மறுபடியும் அதே கூற்றில் வந்து நிற்க,

"ப்ச்! மேகி..." என ஒரு சேர இருவரும் சலிப்புடன் அழைத்தனர்.


"அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நான் வாயை மூடிட்டு வரணும், அதானே?" என இவர் வாயை மூடிக்கொண்டு முன்னே நடக்க, அப்பாவும் பொண்ணும் தலையை இருப்பக்கமும் ஆட்டிவிட்டு பின்னே வந்தனர்.


"ஜோவி கேட்கணும் இருந்தேன், நீ வேலை பார்க்க போற ஸ்கூல்ல ஜென்ஸ் டீச்சரும் இருப்பாங்களா?" சிறு சந்தேகத்துடன் மேகவாணி கேட்க,


அவளும் சுற்றி கடைகளைப் பார்த்தபடி, "ம்... ஜென்ஸ் ஸ்டாஃப் இருக்காங்கமா." என்றாள்.
"உனக்கு எப்படி தெரியும்?"
"கூகுள்ல... அந்த ஸ்கூல்ல ஃபியூச்சர்ஸ்ல பார்த்தேன்மா."
"ஓ... உன் கூட அவங்களும் வேலை பார்ப்பாங்களா?”


"அட! என்ன மேகி நீ? ஜென்ஸ் ஸ்டாஃப்ஸ் இருந்தா கூட வேலை பார்க்கதான் செய்வாங்க, இதென்ன கேள்வி?" என்றார் எரிச்சலுடன்.
"இல்ல, ஆபிஸ் ஸ்டாஃப்ஸா மட்டும் இருப்பாங்களா? இல்ல, அவங்களும் டீச்சரா இருப்பாங்களான்ற சந்தேகத்துல கேட்டேங்க." என்று விளக்கினார்.
"வெறும் ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ் மட்டும் இல்ல, ஜென்ஸ் டீச்சரும் கூட வேலை பார்ப்பாங்கமா." என்றாள்.
"ம்... அவங்ககிட்டலாம் கொஞ்சம் கவனமா இரு ஜோவிமா.


யார்கிட்டயும் அளவா வச்சிக்க, அதிகமா பேசிட்டு இருக்காத, தேவையோடு பழக்கத்தை வச்சுக்க." என தாயாய் அறிவுரை வழங்க, இருவரும் கடுப்பானார்கள்.

"மா... இது டூ மச்! நான் என்ன எல்லார்கிட்டயும் இளிச்சிட்டா பேசுவேன். நான் இன்ரோவர்ட்னு உங்களுக்கு தெரியாதா? அவ்வளவா யார்கிட்டயும் பேச மாட்டேன், அதுவும் உங்களுக்கு தெரியும் தான? ஏன் இப்படி சொல்றீங்க?” எனக் கோபம் வந்து கேட்டுவிட,


"இல்ல ஜோவி... ஏதோ ஒரு டைம்ல சிலிப்பாகி கீழ விழுவோம். அந்த நேரத்துல நாம சுதாரிச்சி எந்திருக்கணும். இல்ல, நமக்கு தான் அது பெரிய அடியா இருக்கும். அதுல இருந்து மீண்டு வர கஷ்டப்படுவோம். அதுக்கு தான் அம்மா அக்கறையா சொல்றேன், இதெல்லாம் உன் அப்பா சொல்ல மாட்டார்.

"ஆமா, நான் சொல்ல மாட்டேன் தான். ஏன்னா என் பொண்ணு மேல எனக்கு பரிபூர்ண நம்பிக்கை இருக்கு. படிக்கிற காலத்துல சரியா இருந்த என் பொண்ணு, வேலைக்கு போகும் போதும் சரியா இருப்பா. எனக்கு அது நல்லா தெரியும்." என அலாதி நம்பிக்கையில் சொல்ல, ஜோவித்தா அவரைக் கண்டு மென்னகை சிந்தினாள்


"அம்மாவா நான் சொல்ல வேண்டியது என் கடமை." என அழுத்திச் சொல்ல, மனைவியை முறைத்தார் நவநீதன்.

"சரி ஓகே! ரெண்டு பேரோட நம்பிக்கையையும் நான் காப்பாத்துவேன் போதுமா?" என்றதும் இருவரும் அமைதியாக நடந்தனர்.


"சப்போஸ் நான் வேலைக்கு போற இடத்தில எனக்கு ஒருத்தரை பிடிச்சி, அவரை லவ் பண்ணா என்ன பண்ணுவீங்க ரெண்டு பேரும்?" என விளையாட்டாக கேள்வி கேட்டாள்.
"செருப்பால் அடிப்பேன்." என்றார் பட்டென்று. அவளோ பயந்து இரண்டடி பின் நகன்றாள்.


"மேகி!" என்று இவர் அடக்க,


"பின்ன என்னங்க? அதெல்லாம் அவ பண்ணிட கூடாதுனு தானே, அறிவுரை சொல்லிட்டு வர்றேன். சப்போஸ் வந்துச்சினா என்ன பண்ணுவீங்கனு கேக்குறா? எனக்கு கோபம் வராதா?"


"அதுக்கு இப்படியா திட்டுவ? நீ என்னதான் அவளை கன்ட்ரோல் பண்ணினாலும், அவ மனசை உன்னால கன்ட்ரோல் பண்ண முடியாது. காதல் எப்போ யார் மேலயும் வரலாம். அதை உன்னால தடுக்க முடியாது மேகி.
ஜோவிமா, அப்படியே உனக்கு யார் மேலயாவது காதல் வந்தா அப்பாகிட்ட சொல்லு, அந்த பையனை பத்தி விசாரிப்பேன், அவன் நல்லவனா இருந்தா கண்டிப்பா கட்டிக் கொடுப்பேன்." என்க, அவளோ தந்தையை கனிவாய் பார்த்தாள்.

உடனே அவரோ, “அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் பொண்ணுக்கு நான்தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பேன். காதல் கத்திரிக்கானு வந்து நின்றாத, உங்க அப்பா சப்போர்ட் பண்ற தைரியத்தில... அதெல்லாம் நடக்காது இங்க..." சட்டமாக சொல்லிவிட்டுச் செல்ல, அவரை பீதியுடன் பார்த்தாள் ஜோவித்தா.


***
உணவு மேசையில் நால்வரும் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
"எதை பார்த்து செய்ற தெரியல, ஆனா ரொம்ப டேஸ்ட்டா சாப்பாடு இருக்கு ஜானு!" என சுதா புகழ, புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்.

"ஆமா ஜானு, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நீ செய்ற லஞ்ச் ரொம்ப பிடிக்கும். இன்னைக்கி என்னடானு கேட்டு என் டிஃபன் பாக்சை திறக்க விடமட்டானுங்க. சுத்தி நின்னு ஒரு வாய் சாப்பிட்டதும் தான் போவானுங்க." என பெருமையாக சச்சின் சொல்ல,
சுதாவோ, “அப்ப நீ சாப்பிடுறது இல்ல, உன் ஃப்ரெண்ட்ஸ் தான் உன் லஞ்ச்சை சாப்பிடுறாங்க?" என விளையாட்டாக கேட்க, இவன் சிரித்து மழுப்பினான்.
சுதா வாய்விட்டு சிரிக்க, மகனைப் புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் சப்பாத்தியையும் முட்டை கிரேவியையும் ரசித்து உண்பவனை, ஒரு சேர இருவரும் பார்க்க, அவனும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இளித்துக் கொண்டு, "ரொம்ப தேஸ்ட்டா இருக்குமா." என்றான்.

சுதாவும் சச்சினும் தலையை இருபுறமும் ஆட்டிவிட்டு எழுந்து செல்ல, இவர்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும் கை கழுவிக் கொண்டு அவரவர் அறைக்கு சென்றுவிட, அமைதியாக இருவரும் உண்டனர்.
தனக்கெதிரே அமர்ந்து உண்ணும் மனையாளைப் பார்த்தவன்


அவளிடம், "இப்படி எத்தனை நாளைக்கு இருக்க போற? வீடு, சமையல், குடும்பம் போதுமா உனக்கு? வெளிய போய் வேலை பார்க்கணும்னு ஆசை இல்லையா? வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க போறியா?" என்றான்.


"ஆமா, வீட்டுக்குள்ள அடைஞ்சு தான் கிடக்கப் போறேன். எனக்கு வெளிய போய் வேலை பார்க்க இன்ட்ரஸ்ட் இல்ல. எனக்கு எதிலையும் விருப்பம் இல்ல, விட்டுடு." என்று எழுந்து பக்கவாட்டில் இருந்த இருவரது தட்டையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட,

அவனும் அடுத்து எதுவும் கேட்க முடியாத நிலையில், தன் தட்டுடன் எழுந்து அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.

அவள் விளக்க ஆரம்பிக்க, அவளை நிறுத்திவிட்டு தான் செய்வதாக சொல்ல அவனுக்கு இடம் தந்தாள்.


அவன் பாத்திரத்தைக் கழுவ, இவளோ உணவு மேசையையும் சமையலறையையும் சுத்தம் செய்து வைத்தாள்.

சச்சின் உறங்கி விட, அவன் பக்கத்தில் அமர்ந்து அலைபேசியை பார்த்தவன், இன்னும் அவள் வராமல் இருப்பதைக் கண்டு கூடத்திற்கு வர, அவளோ அலைபேசியில் தீவிரமாக குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தாள்.

இவன் வந்ததும் அவனைப் பார்க்க அவனோ, “என்ன பண்ற தூங்காம? வா, வந்து படு." என்றான்.

"எனக்கு தூக்கம் வரல. தூக்கம் வந்ததும் நானே வந்து படுத்துக்கிறேன்." என்று அவனைப் பாராமலே பதில் தந்தவள், மீண்டும் அலைபேசியில் மூழ்கி விட, அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான்.
இவளோ புலனத்தில் வந்த குறுஞ்செய்தியை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
***

"என்ன கிளாஸ்மா படிக்கற? டுவல்த்தா? இல்ல லவன்த்தா? நியூ அட்மிஷனா? சேலை கட்டிட்டு வந்திருக்க?" என அவன் சந்தேகமாக கேட்க,

"ஹலோ! நான் ஸ்டூடண்ட் இல்ல, டீச்சர். அதுவும் லவன்த் ஸ்டாண்டர்ட் கிளாஸ் டீச்சர். என்னை பார்த்தா லவன்த், டுவெல்த் படிக்கற ஸ்டூடண்ட் போல தெரியுதா உங்களுக்கு?" எனப் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.

"ச்ச... அப்படி எல்லாம் தெரியல. ஃபேன்ஸி ட்ரஸ் கம்பெடிசன்ல அப்படியே வந்த சின்ன குழந்தை போல இருக்க..." என கேலி செய்து அவளது பொறுமையை ரொம்ப சோதித்தான் விபு பிரசாத்.

உங்க பொன்னான கருத்து பிளீஸ்

 
Last edited:

NNK47

Moderator
காதல் 4


காலை வேளையில் தாளிக்கும் ஓசை, அரைக்கும் ஒலி நடுவே சுழன்று கொண்டிருந்தாள் ஜனனி.
அவளிடமிருந்து வாங்கிய வசவுகளை நினைவில் வைத்து, இங்கே அமைதியாக கிளம்பிக் கொண்டிருந்தனர் தந்தையும் மகனும்.

அந்தக் காலைப் பரபரப்பிலும் தனது நிதானத்தை இழக்காது, பார்த்து பார்த்து உணவைத் தயாரித்தாள்.
அவள் வாழும் சிறு கூட்டில், அவளுக்கு மிகவும் பிடித்த அறை என்னவோ சமையலறை தான்.
பெரும்பாலும் பெண்கள் சிறை என்று நினைக்கும் அந்த அறை, அவளுக்கு என்னவோ சிறகை விரித்து பறக்கும் ககனமாகவும் யாருமற்ற தனி உலகமாகவும் தெரிந்தது.

'இதை செய், அதை செய்' எனக் கட்டளை இடுவதும், 'இதுவா? அதுவா?' என முகச் சுளிப்பும் இல்லாமல், அவள் செய்வதை விரும்பி ஏற்கும் சமையல் அடிமைகளுக்கு, அவள் என்றுமே சமையல் ராணி தான்.
புதுவிதமாகச் செய்து அவர்கள் வயிற்றை நிறைத்து, நாக்கை உயிர்ப்புடன் வைத்திருப்பாள்.
இன்றுகூட கீரை வகைகளில் ஒன்றானப் பொன்னாங்கண்ணி கீரையைத் தான் சமைத்து இருந்தாள்.

அவர்கள் ருசித்து சாப்பிடுவதற்கு ஏதுவாக, சிறு பருப்பு போட்டு கூட்டாகச் செய்திருந்தாள். மகனுக்கு அதைச் சோற்றுடன் நெய் விட்டு பிசைந்து, மதிய உணவாகக் கொள்கலனில் கட்டி வைத்தவள், அதனுடன் சாப்பிட உருளைக்கிழங்கு வறுவலை கொஞ்சம் காரமாக வைத்திருந்தாள்.
விபுவிற்கு தனித்தனியாகக் கட்டி வைத்தாள்.


காலை உணவிற்கு பாசிப் பயிறை சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து, அதை தோசை மாவில் கலந்து முறுகலாக வார்த்து தேங்காய் சட்னியுடன் பரிமாற,
"கிரீன் தோசை!" என துள்ளிக் குதிக்காத குறையாகக் குதூகலமாக உண்டான் சிறுவன்.
இருவரும் சாப்பிட்டு விட்டு எழும்ப, மகனின் வாயைத் துடைத்து விட்டவள் அவனிடம்,
"உன் லஞ்ச்சை, நீ கொஞ்சமா சேர் பண்ணா போதும். தருமம் பண்ணிட்டு வந்தன்னு தெரிஞ்சது, அப்புறம் நீ ரெண்டு நாளைக்கு பட்னிதான்..." என செல்லமாக மிரட்ட,

"இவ்வளவு டேஸ்டா நீங்க செஞ்சா, என் ஃபிரெண்ட்ஸ் கேட்க தான செய்வாங்க. போங்கடா இல்லைன்னு சொல்லவா முடியும் ஜானு?!" என அவன் கொஞ்சிக் குழைய,
"உன் ஃப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து கொஞ்சம் எக்ஸ்ட்ராவே வச்சிருக்கேன். அவங்களுக்கு அதை குடுத்துட்டு நீங்க உங்க சாப்பாடை சாப்பிடுங்க பாஸ்..." என்று அவன் மூக்குடன் இவள் மூக்கை உரசிவிட்டு கன்னத்தில் முத்தம் பதிக்க, அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்தான்.
முத்தத்தை வாங்கிவிட்டு அவள் நிமிர, அவர்கள் அருகே விபு வந்தான்.

"எனக்கு?" என்றான்.

"என்னது?" என இவள் ஒரு நொடி கண்களை உருட்டிப் பதற,

"லஞ்ச் குடுடி." என்றான்.

"ஓ..." என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டு அவனிடம் கொடுத்தாள். முறைப்புடன் அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

"ஏன்டா பிரசாத்து, உன் கூட வேலை பார்க்கிறவங்க எல்லாரும் என் மருமக சமையலை புகழ மாட்டாங்களா? அவங்க எல்லாரும் கேட்க மாட்டாங்களா?" என சுதா கேட்கவும்,.

"நாங்க அங்க சேர் பண்ணி எல்லாம் சாப்பிட மாட்டோம். கிளாஸ்ல உட்கார்ந்து சாப்பிடறதால சேர் பண்ணிக்க முடியாதுமா." என்றான்.

"ம்..." என்றதோடு அவர் நிறுத்திக் கொள்ள, "வர்றேன்மா!" என்றவன், வாசல் வரைச் சென்றுவிட்டு, மீண்டும் வேகமாக வந்து தாயைக் கட்டித் தழுவி, கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு இவர்கள் மீது ஒரு ஏளன பார்வையை வீசிவிட்டு வெளியே சென்றான்.
.
அவரோ கன்னத்தைத் தடவிச் சலித்துக் கொண்டு, "பொண்டாட்டிக்கு குடுத்துட்டு போவானா?! எனக்கு குடுத்துட்டு போறான். லூசு பையன்..." என திட்டிவிட்டு உள்ளே சென்று விட,
'இவன் திருந்த மாட்டான்' என்கிற ரீதியில் சலிப்புடன் தலையை இருபக்கமும் ஆட்டிவிட்டு மகனைப் பார்க்க, அவனோ சிரிப்புடன் தாயைப் பார்த்தான்.

அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அதற்குள் அவனும் தரிப்பிடத்திலிருந்து வண்டியை எடுத்து அவர்களுக்காக காத்திருந்தான்.

அவன் அருகே வந்ததும் விபுவை அவள் முறைக்க, அவனோ அவளது முறைப்பை அசட்டை செய்தான்.
மகனைத் தூக்கி அவன் முன்னே அமர்த்திக் கொண்டிருக்க, அவளது பார்வையோ அங்கே பணிக்குச் செல்லும் பெண்கள் மீது ஏக்கமாகப் படிந்தது.

இரு சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும், பெண்கள் வேலைக்குச் செல்வதை விழி அகற்றாது பார்த்தாள்.
அவள் அவர்களை ஏக்கமாகப் பார்ப்பதை இவனும் கவனித்து விட்டான். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து பார்வையை மாற்றிக் கொண்ட ஜனனி, மகனுக்கு டாட்டா காட்டிவிட்டு திரும்பி பாராது விறுவிறுவென செல்ல, புருவம் சுருங்க குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தான்.
அவர்கள் அப்பார்ட்மென்ட்டில் தான் குடியிருக்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகளுடன் அவர்களது குடும்பமும் கீழ் தளத்தில் வசிக்கிறது.

'நேத்து எனக்கு இஷ்டம் இல்ல, இன்டரஸ்ட் இல்லன்னு சொல்லிட்டு, வேலைக்கு போறவங்கள ஏக்கமாகப் பார்த்திட்டு போறா?! இவளுக்கு என்னதான் பிரச்சனை? என்னதான் உள்ள நினைச்சிட்டு இருக்கா? இவ ஏக்கமாகப் பார்க்கிறத பார்த்தா, இவளை நான்தான் போகக் கூடாதுன்னு தடுத்தது போலல இருக்கு. இவளை வேலைக்குப் போகக் கூடாதுனு யார் இங்க தடுத்தா? இவளா இன்டரெஸ்ட் இல்லனு உட்கார்ந்துட்டு, இப்போ இந்தப் பார்வை அவசியம் தானா?
பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதோட சரி! அதைப் பத்தின கவலை இல்லை. அதை தீர்க்கிற பொறுப்பை என் தலையில கட்டிட்டு, இவ நல்லா தின்னு, தூங்கினு ஜம்முனு இருக்கா. இவகிட்ட மாட்டிகிட்டு நானும் என் வாழ்கையும் தான் அல்லல் படுறோம். கொஞ்ச நாள் பார்ப்பேன், இவ மட்டும் நல்ல முடிவை எடுக்காம இருக்கட்டும்... இவளையும் பார்க்க மாட்டேன், இவ அப்பன் என் மாமனையும் பார்க்க மாட்டேன்...!' என உள்ளுக்குள் சீறியெழ,


"மச்சி! நான் லேட்டா போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ லேட்டா போனா உள்ள உன்னை விட மாட்டாங்க. போவோமா, வேணாமா?" என முன்னே அமர்ந்த சச்சினின் கேள்வியில், உள்ளக் குமுறலில் இருந்து வெளியே வந்த விபு, மகனின் தலையை அசைத்து, அவள் சென்ற திசையை மீண்டும் பார்த்துவிட்டு சென்று விட்டான்.

***
பெண்கள் விடுதி என்பதால் நவநீதன் வெளியே அமர்ந்து கொள்ள, மேகவாணி மற்றும் ஜோவித்தா இருவர் மட்டும் அவளது உடமைகளை சுமந்து உள்ளே சென்றனர். கீழே வரவேற்பில் அவளது அறையின் எண்ணைக் கேட்டு லிஃப்ட்டில் ஏறி, அவளது அறை இருக்கும் தளத்திற்கு வந்தனர். அறையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைய, ஏற்கனவே அங்கே இருவர் இருந்தனர்.

அதில் ஒருத்தி சந்தியா, மதுரை தான். ஜோவித்தாவின் சீனியர்! அவளைப் பார்த்ததும் வேகமாக கட்டி அணைத்துக் கொண்டாள்.
"சீனியர் நீங்க இங்க? உங்களை நான் பார்ப்பேன்னு நினைக்கல!" என துள்ளிக் குத்திக்காத குறையாக உற்சாகமாகக் கேட்டாள்.


"கிளாமரப்பி சேம் அப்பி! உன்னைப் போல கேம்பஸ் இண்டர்வியூல வந்தவ தான். ஒரு வருஷமா வேலை பார்க்கிறேன்." என்றவள் மேகவாணியை வரவேற்றாள்.
உடனே அவரும், “எப்படிமா இந்த ஸ்கூல்? நல்ல ஸ்கூல் தான? பிரச்சனை எதுவும் இருக்காதுல? பாதுகாப்பா இருக்கும்ல?" தன் எண்ணத்தைக் கேட்க,


அவளோ, “அதெல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காதுமா. ஹண்ட்ரட் பெர்செனட் பாதுகாப்பா இருக்கும். நானே ஒன் இயர் இங்க வேலை பார்க்கிறேனா பார்த்துக்கங்க. எந்த பிரச்சனையும் இருக்காது. பக்கா சேஃப்டியான இடம். நீங்க பயப்பட வேண்டியது இல்ல. இவளை நீங்க தைரியமா விட்டுட்டு போகலாம், நான் பார்த்துக்கிறேன்." என்று உத்திரவாதம் கொடுத்து அவர் வயிற்றில் பாலை வார்த்தாள்.


"பயந்துகிட்டே இருந்தேன். எப்படி ஊர் பேர் தெரியாத இடத்துல இருந்து வேலை பார்க்க போறாளோ? யார் கூட தங்க போறான்னு நைட்டு முழுக்க தூக்கமில்லமா. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு, நம்ம ஊர்க்காரப் பிள்ள... அதுவும் தெரிஞ்ச பொண்ணு வேற! கொஞ்சம் நிம்மதியா இருக்குமா." என்று நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்பட்டுக் கொண்டார்.


அவளும் சிரிப்புடன், “நான் ஜோவியை பார்த்துக்கிறேன்மா." என்று நம்பிக்கை தர, அவரும் தலையை அசைத்தார்.


மேலும் அவளிடம் இதர விஷயங்களைக் கேட்டும் கொண்ட சந்தியா பள்ளிக்குச் செல்ல தயாராக, இவளோ அவளது பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தாயுடன் கீழே வந்தாள்.


காலை உணவை வெளியே சாப்பிட்டு வந்து விட்டனர் மூவரும். கீழே டைனிங் ஹாலில் சென்று மதிய உணவை கொள்கலனில் வாங்கி, குப்பியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்த மகளை வெறிக்கப் பார்த்தார்.


"ஜோவி, நீ இப்பவும் கொஞ்சம் யோசியேன். நான் சமைக்கிறதுல பாதி தான் நீ சாப்பிடுவ. இங்க சாப்பாடு எப்படி இருக்குமோ? இப்படி எல்லாம் உனக்கு சாப்பிட்டு பழக்கம் இல்ல. இதெல்லாம் தேவையா...?" என ஆரம்பிக்கும் போதே இடையில் நிறுத்தியவள்,
"நேரம் பார்த்து ஆரம்பிக்காதீங்க.

எல்லாத்தையும் நான் அக்செப்ட் பண்ணிக்கப் போறேன். கஷ்டமா தான் இருக்கும், நம்ம வீடு போல, உங்களை போல யாரும் இருந்திட மாட்டாங்கமா. நானும் பல பேரை மீட் பண்ணணும், அவங்களை ஃபேஸ் பண்ணணும். உங்க முந்தானையில் இருந்தா எப்படிமா? இனிமேலும் இந்த டாபிக் எடுக்காதீங்க. எனக்கு இது பிடிச்சிருக்கு." என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட, அதற்கு மேல் அவர் வாயைத் திறக்கவில்லை. அமைதியாக அவளுடன் வந்தார்.


மூவரும் பள்ளி வளாகத்தை சுற்றிப் பார்த்தபடி வந்தனர். பெரிய வளாகம் தான். ப்ரீகேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு பிரிவுகள் இருந்தன. மாணவர்கள் அங்கு அதிகம் தான்.
மூவரும் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அமர சொல்லியிருந்தனர். காலை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பிரார்த்தனை முடிந்து இவளை மட்டும், உள்ளே தலைமை ஆசிரியர் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
அவரும் அவளது சான்றிதழ்கள் நிறைந்த கோப்பை வாங்கிக் கொண்டு அத்தனையும் பார்த்தவர், மேலும் சில பல கேள்விகள் கேட்டார். எந்தப் பதற்றமும் இல்லாமல் பதில் தந்தாள்.


"இப்ப லெவன்த் ஸ்டாண்டர்டுக்கு தான் கிளாஸ் டீச்சர் தேவைப்படுது. சிக்ஸ்த், செவன்த் வேணும்னா நீங்க டூ மன்த்ஸ் வெயிட் பண்ணணும். எந்த கிளாஸ் வேணும் உங்களுக்கு?" எனக் கேட்கவும் யோசிக்காமல், "நான் லெவன்த் ஸ்டாண்டர்ட் ஹாண்ட்டில் பண்றேன் மேம்." என்றாள்.


"வெரி குட்! இன்னைக்கி முழுக்க எப்படி கிளாஸ் எடுக்கிறாங்கனு டிரெய்னிங் எடுத்துக்கோங்க. என்னென்ன ரூல்ஸ்னு உங்க கொலிக்ஸ்கிட்ட கேட்டுக்கோங்க. உங்க கூட ஒரு ஸ்டாப் அனுப்பி வைக்கிறேன், அவங்க உங்க கிளாஸ் கூட்டிட்டு போவாங்க. ஆல் தி பெஸ்ட்மா!" என்றார்.


"தேங்க் யூ மேம்!" என்றாள்.
"வெயிட் பண்ணுங்க." என்றார். அவளும் வெளியே வந்து தாய், தந்தையிடம் சொல்ல,
"பெரிய கிளாஸ் எடுத்து கஷ்டப்பட போற ஜோவி? வெயிட் பண்ணி சிக்ஸ்த், செவன்த் எடுத்து இருக்கலாம்ல? ஏன்டி அவசரப்பட்ட?" வாணி கடிந்து கொள்ள,


"அதுக்காக மதுரைக்கு போயிட்டு அவங்க எப்ப கூப்பிடுவாங்கனு காத்துட்டு சும்மா வெட்டியா இருக்க சொல்றீங்களா? பரவாயில்ல, ஐ கேன் மேனேஜ்மா. முதல்ல கஷ்டமா இருக்கும், அப்புறம் பழகிப்பேன். ஜோவிப்பா நீங்க சொல்லுங்க, நான் எடுத்த டெஷிசன் சரி தானே?"
"ஹண்ட்ரட் பெர்சண்ட் சரி! வெயிட் பண்ணிட்டு இருக்கிறதுக்கு, கிடைச்ச வேலையை பார்க்கிறது நல்லது. ஆல் தி பெஸ்ட் செல்லமா! உன் வொர்க் டெடிகேஷகனோட பண்ணு. எந்த வேலையிலும் கஷ்டம் இருக்கும், போராட்டம் இருக்கும், நீதான் போராடி கடந்து வரணும். அழுது தேங்கி நிக்க கூடாது, பின் வாங்க கூடாது. உன் அழுகையை துடைச்சி விட்டு, உன்னை தேத்தி அனுப்ப நாங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டோம். உனக்கு பிடிக்கலையா வந்திடு. போராடலாம், கஷ்டப்படலாம் ஆனா சகிச்சிக்கணும்னு இல்ல.
அதுக்கு அவசியமும் இல்ல. விட்டுட்டு வந்திடு, தைரியமா இரு செல்லமா! அதே நேரம் கவனமாவும் இருக்கணும்." என்று நம்பிக்கை, தைரியம், எச்சரிக்கை என கலந்த கலவையில் ஊக்கம் தந்தார்.
வாணி அவளை அணைத்து முத்தம் வைத்தவர், அம்மாவா சில எச்சரிக்கையும் செய்தார். அதில் ஒன்று, “ஜென்ஸ்கிட்ட அளவா வச்சிக்க ஜோவி! யார் கூடவும் நெருங்கி பழகாத. என்னனா என்னன்னு இரு." எனவும் மனைவியை முறைத்த நவநீதன்,


"அவளுக்கு கிளாஸ் நேரமாச்சி, நான் விட்டுட்டு வர்றேன். நீ போ...” எனவும் வாணி புரிந்து கொண்டு அவரை முறைத்தார்.

தாயைக் கண்ணீருடன் அணைத்து விடுவித்தாள். அவரும் அங்கிருக்காமல் விறுவிறுவென வெளியே சென்று விட்டார்.

"அவ சொல்றத எடுத்துக்காத, உன்னோட சுதந்திரம் அப்படியே உன்கிட்ட இருக்கு. அதை உபயோகிக்கிற விதம் ரொம்ப முக்கியம் ஜோவிமா. பார்த்து இருந்துக்கணும்" என்று அறிவுரை வழங்க, அதே நேரம் இவர்களைத் தேடிக் கொண்டு வந்தான் விபு.
உள்ளே தலைமை ஆசிரியர், புதிதாக வந்த ஆசிரியர் பற்றி சொல்லி வெளியே காத்திருப்பதாக அவனிடம் சொல்லி அனுப்ப, அவனோ அவளைத் தேடி தான் வெளியே வந்தான்.


தேடிக் கொண்ட வந்தவனை நவநீதன் தான், "தம்பி, லெவன்த் ஸ்டாண்டர்ட் எங்க இருக்கு?" என்றார்.

அவனோ பக்கவாட்டில் கண்ணீருடன் மூக்கை உறிஞ்சியபடி நின்ற ஜோவியைப் பார்த்து விட்டு அவரிடம், “அந்த பில்டிங் சார்." என்றவன்,


"நியூ அட்மிஷனா? டுவெல்த்தா, லெவன்தா? என்ன சேரி கட்டிட்டு வந்திருக்க?" என கேலியாகக் கேட்டான்.

அவன் கேட்டதில் நவநீதன் சிரித்து விட, இவளுக்குத் தான் புசுபுசுவென கோவம் வந்தது.


"என்னை பார்த்தா உங்களுக்கு டுவெல்த், லெவன்த் படிக்கிற ஸ்டூடண்ட் போலவா இருக்கு?" என மூக்கு விடைக்க கேட்டாள்.
"ஸ்ஸ்... சாரி தப்பா சொல்லிட்டேன், ஸ்கூல்ல ஃபேன்சி டிரஸ் காம்படிசன்ல குழந்தைங்களுக்கு சேரி கட்டி வந்தா எப்படி இருக்கும், அப்படி இருக்கு." என்றதும் இவளுக்கு கோபம் பழியாக வந்தது.


அவன் சொன்னதில் இவர் சிரித்து விட, "அப்பா...!" என பல்லைக் கடித்தாள். அவர் வாயை மூடிக் கொண்டார்.

அவனும் சிரித்துக் கொண்டே, “சாரி! ஜஸ்ட் கிட்டிங்! அழுதிட்டு இருந்தீங்க, மைண்ட்டை மாத்த அப்படி சொன்னேன், மிஸ்...?" என இவன் இழுக்க, "ஜோவி... ஜோவித்தா!" என்றாள்.

"ஓகே... மிஸ் ஜோவித்தா, நான் விபு, விபு பிரசாத்! என்னை தான் உங்களை கைட் பண்ண சொல்லிருக்காங்க. நேரம் ஆச்சு, கிளாஸ்க்கு போகலாமா?" என்றான்.
"தம்பி, நீங்களும் லெவன்த் ஸ்டாண்டர்ட் டீச்சரா?"


"ஆமா சார்... லெவந்த் பீ செக்சன் கிளாஸ் டீச்சர் நான். இங்கிலீஷ் மேஜர். இவங்களுக்கு லெவன்த் ஏ கொடுத்திருக்காங்க. நாங்க எல்லாரும் ஒண்ணா தான் வேலை பார்க்க போறோம்." என்றான் புன்னகையுடன்.

"கொஞ்சம் பார்த்துக்கோங்க தம்பி. ஊருக்கும் புதுசு, வேலைக்கும் புதுசு, எக்ஸ்பிரியன்ஸ் இல்ல. ஆனா கிளாஸ் நல்லா எடுப்பா, எனக்கு அதுல நம்பிக்கை இருக்கு. ஏதாவது தப்பு பண்ணா கொஞ்சம் பொறுமையா சொன்னா கேட்டுப்பா. கொஞ்சம் சத்தமா பேசினா அழுதிடுவா. கொஞ்சம் பார்த்துக்கங்க..." என புகுந்து வீட்டுக்கு செல்லும், தன் பெண்ணைப் பற்றி மருமகனிடம் சொல்லுவது போல் சொல்ல, அவனோ சிரித்து விட்டான்.
"இப்போ நான் சொன்னது சரியா போச்சுல சார்?" என்றான். அவரோ விழிக்க,

"உங்க பொண்ணு டீச்சர் சார். டீச்சர்கிட்ட விட்டுட்டு போற ஸ்டூடண்ட் போல சொல்றீங்க. அவங்களால முடியும் சார், எக்ஸ்பிரியன்ஸ் இல்லாத ஆளே திணறும் போது, இவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஆனா, டோண்ட் வொர்ரி! நாங்க பார்த்துக்கிறோம்..." என அவனும் நம்பிக்கை கொடுக்க,
"தேங்கஸ் தம்பி!" என்று கை குலுக்கிக் கொண்டார்.
தந்தையை அணைத்து விட்டு விடைபெற்றுக் கொண்டு அவனுடன் நடந்தாள். அவரோ கையை அசைத்தார்.


திரும்பி திரும்பி தந்தையைப் பார்த்து கொண்டே நடந்தாள். அவள் கண்கள் கலங்கின, கண்ணீரை அழுத்தமாய் துடைத்து துடைத்து முகமெல்லாம் சிவந்து போயிருந்தது. கண்ணிலிருந்து மறையும் வரையில் தந்தையைப் பார்த்துக் கொண்டே வந்தவள், கட்டிடத்திற்குள் நுழைந்து விட்டாள்.
அவனுக்கோ அவளது நிலைமை நினைத்து வருத்தமாகவும், அதே நேரம் அவளைப் பார்க்கச் சிரிப்பாகவும் இருந்தது, சிரித்தும் விட்டான். அதை கவனித்தவள்,

"எதுக்கு சிரிக்கிறீங்க?" என்றாள்.
"இல்ல, உங்களை பார்த்தா டீச்சர் ஃபீலிங்கே வரல. காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் பொண்ண சேர்த்து விட்டு போற அப்பா, பொண்ணு போல இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் பேரன்ட்ஸ பிரிஞ்சி வேலைக்கு வர்றீங்களா?" எனக் கேட்கவும்,

"ஆமா, இத்தனை வருசம் அவங்களை விட்டு தனியா இருந்தது இல்ல. ஃபர்ஸ்ட் டைம்... அதான் அழுகை வந்திடுச்சி." எனக் குழந்தை போல் பேசுபவளை, அவனின் மனமேனோ ரசிக்கச் சொன்னது.


"எல்லாம் ஓகே தான், ஆனா... இப்படி அழுது வடிஞ்சி போய் ஸ்டூடண்ட்ஸ் முன்ன நின்னா, நீங்க அழு மூஞ்சி டீச்சர்னு இன்னையிலிருந்து உங்களை அன்போடு எல்லாரும் அழைப்பாங்க, பரவாயில்லையா?" என்றதும் அவளோ, 'ங்கே' என விழித்தவளை, ‘என்ன?’ என புருவங்கள் உயர்த்திக் கேட்க,
இவளோ விழித்து கொண்டே, "இப்ப என்ன பண்ண?" என்றாள்.
"போங்க! வாஸ் ரூம் அங்க இருக்கு, முகத்தை கழுவிட்டு வாங்க!" என்று பெண்கள் கழிப்பறையைக் காட்ட,
"முகத்தை கழுவினா, போட்ட மேக்கப் எல்லாம் அழிஞ்சிடுமே...!" என்றவளை அவன் தீயாக முறைக்க, இளித்துக் கொண்டு வேகமாக அவளது பையைக் கழட்டி அவன் கையில் திணித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.


அவனோ அவளது செயலை அதிர்ச்சியாகப் பார்த்தான். ‘என்ன... ஒரு எக்ஸ்கியூஸ் கூட கேட்காம, செல்ஃப் போல திங்கஸ என் மேலே வச்சிட்டு போயிட்டா? என்ன பொண்ணு இவ?! அழுது வேற தொலைக்கிறா. இப்படி குழந்தையாட்டம் இருப்பவளை, லெவன்த்துக்கு போட்டிருக்காங்க? இவளே குழந்தைத் தனமா இருக்கா, இதுல பசங்களை எப்படி பார்க்க போறா?!' என எண்ணியவன், தன் நிலையை ஒருதரம் பார்த்து நொந்து போனான்.
அவள் வர சற்று தாமதமாக, பெண்கள் கழிப்பறை முன் நிற்காமல் கொஞ்சம் தள்ளிப் போய் நின்றான்.


பை, சர்டிஃபிகேட் கையுமாக நின்ற விபுவை, தூரத்திலே சுதன் பார்த்து விட, சுதனைப் பார்த்த இவனோ கையில் இருந்த இரண்டையும் கீழே போட்டான்.


"என்னடா இங்க நிக்கிற?" எனக் கேட்டு, கீழே போட்ட அவளது பையைப் பார்த்தவன், அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து சிரிக்க,
"ஐய! நீ நினைக்கிறது போல எதுவும் இல்ல... முதல்ல கிளம்பு, இங்க இருந்து." என்றான். அவனும் சிரித்துக் கொண்டே சென்று விட இவனோ தலையில் அடித்துக் கொண்டு அவள் வரும் வழியைப் பார்த்தான்.


வெளியே வந்தவள் அவன் இல்லாது போக பயத்துடன் தேடினாள். அவன் கையை அசைக்க, அவனைக் கண்டு அருகே சென்றாள்.

"எங்க போனீங்க? உங்களை அங்க தேடினேன்..." என்றாள் பயத்துடன்.
"அங்க எப்படி நான் நிக்க முடியும்? அது லேடிஸ் டாய்லெட், அதான் இங்க நிக்கிறேன்." என்று விளக்கம் கொடுத்துக் கொண்டே அவளது உடமைகளைக் கொடுக்க,
நன்றியுடன் வாங்கிக் கொண்டவள், "இப்போ எப்படி இருக்கேன், என் முகம் எப்படி இருக்கு?" எனக் கேட்கவும்,
"ம்..." என்று அவளைப் பாராது முன்னே நடந்தவன், அவளை ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிமுகமும் செய்து வைத்தான். அவளது டிரெய்னிங்கை அவனே தொடங்கி வைத்தான். இரண்டாவது வகுப்பிலிருந்து சிறப்பு வகுப்புகள் வரையிலும், அவளுக்கு பயிற்சி கொடுக்கப்பட, முதல் நாளே சோர்வுடன் வந்தமரும் அவளை விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான் விபு.


***

‘ஹாய் எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க? காலேஜ்ஜா? வீட்ல இருக்கீங்களா? சாப்பீட்டீங்களா?’ என தொடர்ந்து மெசஞ்சரில் குறுஞ்செய்தியாக வந்து கொண்டிருக்க, யாரென அவளும் சலிப்புடன் அதைப் பார்த்தாள் ஜனனி.
***
 
Status
Not open for further replies.
Top