அத்தியாயம் 5 : திருட்டும் காதலும்
“சீக்கிரம் வாடா, கைல மாட்டுனோம்னு வை, நம்மளையே கோழி மாதிரி அறுத்து, நாள காலைக்கு ராவுக்கும் குழம்பா வச்சு திம்பானுங்க” என சொல்லிக்கொண்டே ஒரு நடுத்தர பெண் ஒரு மாளிகை வீட்டிலிருந்து ஒரு சிகப்பு பையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு குழியின் வழியே வெளியே வந்தாள்.
அவளது பின்னால் அவளது 7 வயது மகன் ஓடி வந்தான்.
இருவரும் யார் கண்ணிலும் படாமல் பதுங்கி பதுங்கி வந்தனர்.
பூனையின் நடை தோற்றுவிடும், அவர்களது நடைக்கு அந்த அளவு சத்தமில்லை அங்கு, வீசும் காற்று கூட சத்தமிட்டது அந்த இருட்டில் இவர்கள் குரல் எழவில்லை.
இருவரும் பதுங்கி பயந்து, ஊரின் எல்லையை அடைந்தனர்.
“அதோ நல்லா தூங்குறான் பாரு, அவன்தான் டா ஊரு காவக்காரன், அவன தாண்டிட்டோம் ஜெயிச்சுட்டோம், அவன் பக்கத்துல போய் சத்தம் ஏதும் கொடுக்காத டா”என சொல்லிக் கொண்டு முன்னே செல்ல
கடந்து செல்லும்போது, சிறுவன் அவன் பையை சுமக்க முடியாமல் அதை கொஞ்சம் அழுத்தி பிடிக்க முயற்சிக்க, உள்ளே இருந்து சில பாத்திரங்கள் விழுந்து, காவக்காரன் தூக்கத்தை கலைத்தது.
எடுத்தார்கள் ஓட்டத்தை, பாதையோ காடு, இருட்டு பயமுறுத்த, அஞ்சாமல் இருவர் ஓடினர் முன்னே, பயத்தில் இருந்த பொருளை கீழே போட்டு ஓடினான் சிறுவன், பாரத்தை தூக்கி ஓடி வந்தாள் பெண்மணி.
பெண்மணி பின்னே சிறுவன், பெண்ணின் அருகில் சிறுவன், இதோ அந்த பெண்ணை தாண்டியே விட்டான் சிறுவன்.
வழி தப்பிடுமோ கன்று என பயந்தது பசு, விட்டது கையில் இருந்த மூட்டையை, எடுத்தது ஓட்டத்தை, காவக்காரன் எழுப்பினான் ஊரே, பின் தொடர்கிறது ஊரு, ஓடினர் இருவர்.
பின்னே பசு வழி சொல்லிக்கொண்டு முன்னே கன்று சொல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு…
ஓடியவன் விழுந்தான் கட்டை தடுக்கி, தாய் பதறினாள் மகனை பார்க்க
நிலா சற்று வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது, அது கட்டை அல்ல பையன் என்று.
இவன இப்படியே விட்டுட்டு போன இவன் தான் திருடன்னு கொன்னுருவாங்க இவங்க என நினைத்துக் கொண்டு அவனை எழுப்பி பார்த்தாள். அவன் எழவில்லை.
மக்கள் அருகில் வரும் சத்தம் கேட்டது, காட்டில் இருள் நீங்கி தீ பந்தத்தின் வெளிச்சம் வந்தது.
என்ன செய்வது என்று யோசித்த பெண், மரங்களை கண்டாள்.
“தம்பி மரத்துல ஏறு டா” என அவனிடம் சொல்லிவிட்டு கட்டிருந்த புடவையை அவிழ்த்து விழுந்த கிடந்த பையனை தன் முதுகோடு சேர்த்து கட்டி, அவளிடம் இருந்த குத்து விளக்கையும் சேர்த்து கட்டி மரத்தில் ஏறினாள்.
அனந்த் இப்படியே வந்து சேர்ந்தான் அந்த பெண்ணிடம்…
***கிளினிக்கில் அனந்த் தொடர்ந்தான்***
“சித்தியும் விஷ்ணுவும் என் லைஃப்ல வந்த அப்பறம் அதுவரை நான் வாழ்ந்த லைஃப் அப்படியே தலைகீழ மாறிருச்சு, கஷ்டம், பசி, ஏழ்மை, பயம், எல்லாம் கத்துக்கிட்டேன்” என சொல்ல
“இரு இரு, இப்போ நீ அந்த காட்டுல விழுந்துட்ட, அங்கிட்டு வந்த ஒரு பொண்ணும் அவளோட பையனும் உன்னய தூக்கிட்டு வந்துட்டாங்க சரியா” என டாக்டர் கேட்க
“ஆமா சார்” என சொல்ல
“ஓகே மேல சொல்லு”
“சித்தியும் விஷ்ணுவும் காட்டுக்கு நடுல ஒரு வீடு கட்டி தான் வாழ்ந்தாங்க, அவங்க திருட்டு வேலை பாக்குறாங்க அப்படினு எனக்கு கொஞ்ச நாள் அப்பறம் தான் தெரிய வந்துச்சு” என அதை நினைத்து பார்க்க
***அனந்த் அந்த பெண்ணின் கையில் கிடைத்து சில நாட்கள் பின்***
“அம்மா எனக்கு ஒரு சந்தேகம்?” என விஷ்ணு கேட்க
“சொல்லு தம்பி” என பெண் துணியை அலசிக்கொண்டு கேட்க
“எப்படிமா அன்னைக்கு கரெக்ட்டா குத்து விளக்க எடுத்துட்டு வந்த? நேரமும் கடத்தல”
“அது மூட்டைய புடிக்குற புடில இருக்குது தம்பி, எப்பயுமே நான் மூட்டைக்குள்ள கைய விட்டு ஒரு நல்ல பொருள புடிச்சு வச்சுப்பேன், ஒரு கை மட்டும் தான் வெளிய இருந்து மூட்டையை புடிக்கும், அதுனால தான் நான் மூட்டைய தோலுல போடாம இடுப்புல வச்சுக்கிறேன், இப்படி பண்ணா, யாரும் துரத்தும் போது சுலபமா மூட்டைய போட்டுட்டு எது அவசியமோ அதை மட்டும் எடுத்துட்டு ஓடலாம்” என சொல்லிக்கொண்டு இருக்க
“திருடுறது தப்பில்லை யா?” என அனந்த் கேள்வி எழுப்பினான்.
“பாக்க இத்துன்னுன்டு இருக்க, ஆனா கேள்வி எல்லாம் பலமா கேக்க” என சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“என் அம்மா சொல்லி இருக்காங்க, திருடுறது தப்புன்னு”
“கரெக்ட்டா தான் சொல்லி கொடுத்து இருக்காங்க உன் அம்மா, அவங்களோட கருத்த சொல்லி இருக்காங்க, எனக்குத் தெரிஞ்சவர் சொன்ன கருத்த நான் சொல்லுறேன் நான் பண்றது சரியா தப்பான்னு நீ சொல்லு” என சொல்லி அவளது வாதத்தை முன்னெடுத்தாள்.
“இந்த அரசாங்கம் மக்களோட எண்ணிக்கைய பொருத்துதான் பணம் அச்சு அடிப்பாங்கலாம், அப்படி அச்சு அடிச்சா, எனக்கு சேர வேண்டிய காசு, என் புள்ளைக்கு, என் புருசனுக்கு சேர வேண்டியதுனு என் வீட்டுல காசு இருக்கனுமே எங்க? அத காணோம், ஆனா இந்த அரசாங்கம் என் பேருல கடன மட்டும் வாங்குமாம், அது என்னோட பொறுப்பாம், யோசிச்சு பாரு, எனக்கு சேர வேண்டிய காசை காணோம், எனக்கு சேர வேண்டியதுனு இருக்குது, அப்போ அது எங்க இருக்குது? இந்த மாதிரி பெரிய ஆளுங்க என் காசையும் சேர்த்து பதுக்கி வச்சு இருக்காங்க, உன் அம்மா சொன்னது சரிதான், திருடுறது தப்பு ஆனா அது இல்லாத ஆளுங்க கிட்ட தான், பணத்தை பதுக்கி வச்சவன்கிட்ட இல்லை, என்னோட காசை நான் எடுக்கேன் அவ்வளவுதான்”என விளக்கம் கொடுத்து முடித்தாள் அவள்.
“உங்களுக்கு காசுதான் பிரச்சனைனா உழைச்சு சாப்பிடலாம்ல, வேலைக்கு போகலாம்?”
“இந்தியால ஏழை ஏழை ஆகிகிட்டே இருக்கான், பணக்காரன் பணக்காரன் ஆகிகிட்டே இருக்கான், அதான் இந்தியாவோட நிலை, இதை எல்லாம் புரிஞ்சுக்க உனக்கு இன்னும் வயசு ஆகும் தம்பி, விஷ்ணு அனந்த்த கூட்டிட்டு போய் காட்ட சுத்தி காட்டு” என விஷ்ணு மற்றும் அனந்த்தை அனுப்பினாள் அந்த பெண்.
விஷ்ணுவும் அனந்த்தும் காட்டை சுற்றி பார்க்க சென்றனர்.
“ஆரம்பத்துல டாக்டர், விஷ்ணுவுக்கு என்னய சுத்தமாக பிடிக்கவில்லை, அவனுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய பாசமும், அன்பும் எனக்கும் சேர்த்து இப்போ கிடைக்குதுல அந்த கோவம், எங்க பார்த்தாலும் மூஞ்ச தூக்கி வச்சு திரியுவான், கிட்டத்தட்ட 4 வருஷம் ஆச்சு அந்த கோவம் தீர”
“எப்படி தீர்ந்துச்சு?” என கம்பவுண்டர் கேட்க
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, அந்த மாதிரி சித்தியால வந்த பிரச்சனை வேனியால முடிஞ்சது”
“யாரு இந்த வேனி?”
“எங்க ரெண்டு பேருக்கும் நடுல இருந்த பிரச்சனைய தீர்க்க வந்தவதான் வேனி, மலை கிராமத்துக்காரி, விஷ்ணுவுக்கு வேனி மேல ஒரு கண்ணு, காலைல அவன் ஃப்ரண்ட கூட்டிட்டு போய்ருவான் பள்ளிக்கூடத்துக்கு , வேனிய பார்க்க”
“அட அதெல்லாம் சரி எப்படி தீர்ந்துச்சு அதை சொல்லு”
அனந்த் சிரித்துக்கொண்டே . . .
அன்னைக்கு மலைக்கோவில் திருவிழா என அந்த நாளை சொன்னான்.
மலைக்கோவிலுக்கு வேனியும் அவளது தோழிகளும் செல்ல, விஷ்ணு பின்னாலே வந்துக்கொண்டு இருந்தான்.
அனந்த்தின் சித்தியும் அனந்த்தும் அதே திருவிழாவிற்கு வந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு பெண், அனந்த்தின் சித்தியை அழைத்தாள்.
“ஏய் யசோதா, இதான் உன் புள்ளையா அடையாளமே தெரியலையே” என அனந்த்தை தொட
அப்போதுதான் அந்த பெண்ணின் பெயர் யசோதா என அனந்த்திற்கு தெரிந்தது, இந்த 4 ஆண்டுகளில் பெயர் தெரியாமல், ஊர் தெரியாமல் தான் யசோதா அவனை வளர்த்தாள்.
“டேய் நிறுத்து, அதெப்படி 4 வருஷம் கூட இருந்து இருக்க, பேரு தெரியாம எப்படி வளர்ந்த?” என டாக்டர் கேட்க
“அங்க இருந்தது நாங்க மூனு பேரு மட்டும்தான், விஷ்ணு அம்மா அம்மான்னு தான் கூப்பிடுவான், நான் வாங்க போங்கன்னு சொல்லுவேன், வேற யாரும் அவங்கள பார்க்க வரவும் மாட்டாங்க”
“சரி அது ஓகே, எங்கேயுமே கூட்டிட்டு போனது இல்லையா?” என கம்பவுண்டர் கேட்க
“அதுக்கு காரணம் நான்தான், என் அம்மா அப்பா இறந்ததுல இருந்து எனக்கு ரோட்ட பார்த்தாலே ஒரு பயம், சரி ஆகவே இல்லை, அதை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அவங்க நினைப்புதான் வரும் அதனாலயே நான் எங்கயும் போக மாட்டேன் அவங்களே எல்லாம் எனக்காக பண்ணுவாங்க, துணி சாப்பாடு எல்லாம்” என டாக்டர் மற்றும் கம்பவுண்டரிடம் அனந்த் பதில் அளித்தான்.
அந்த பெண் சொன்னதை கேட்ட யசோதா “இல்லை இது என் ரெண்டாவது பையன்” என அனந்த்தின் மேல் கை வைக்க
அனந்த் சொன்னது கேட்டு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
யசோதா அதைப் பார்த்து, “தம்பி போய் அண்ணன தேடு” என அனந்த்தை அங்கிருந்து துரத்தினாள்.
அனந்த் விஷ்ணுவை தேடி மலைக்கோவில் மேலே ஏறத் தொடங்க
“ஏய் அவன் ஏன்டி நம்ம பின்னாடி வர்ரேன்?” என வேனியின் தோழிகள் பேசத் தொடங்கினார்கள்.
வேனிக்கு எல்லாம் தெரிந்தும் பயந்து அமைதியாய் இருந்தாள்.
எல்லோரும் கோவில் மேல் ஏறிக்கொண்டு இருக்க, அங்கிருந்த தோழி ஒருவளின் அண்ணன் கோவிலில் இருந்து இறங்கி வர, வேனியையும் மீதமுள்ளவர்களையும் முன்னே போக சொல்லிவிட்டு தோழி அவள் அண்ணனிடம் பேசத் தொடங்கினாள்.
“அண்ணா அந்த பையன் எங்க பின்னாடியே வர்ரான்?”
“யாரு அவன்? நம்ம ஆளா?”
“இல்லைன்னா, அந்த ஊரு எல்லைல இருக்குற வீட்டுல உள்ளவன்”
“அந்த திருட்டு நாய்க்கு எங்க ஊரு பொண்ணு கேக்குதா, நீ போ” என அவன் அவளை போக சொல்லி விஷ்ணுவை நோக்கி கிளம்பினான்.
வேண்டும் என்றே விஷ்ணுவை போய் இடிக்க, விஷ்ணு எதுவும் சொல்லாமல் வேனியை பார்த்த சந்தோசத்தில் முன்னே சென்றுக்கொண்டு இருந்தான்.
“அடிச்சது கூட தெரியாம போற அளவா அவனுக்கு உணர்ச்சியில்லை?” என கம்பவுண்டர் கேட்க
“நானும் அப்படித் தான் நினைச்சேன், ஆனா அன்னைக்கு வேனிய பார்த்த அப்புறம்தான் தெரிஞ்சது, ஏன் விஷ்ணு பித்து புடிச்சு மாதிரி இருந்தான்னு, வேனி அவ்வளவு அழகு” என சொல்லி கதையை தொடர்ந்தான்.
தொடரும்…