எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலடியின் மகளே! - கதை திரி

Status
Not open for further replies.

NNK-19

Moderator
மலடியின் மகளே


அத்தியாயம் - 1


அந்த நிசப்தமான இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சூரியபிரகாஷ் தூக்கத்தில் புரண்டவன் கைகளால் படுக்கையை துளாவ அருகில் காலியாக இருப்பதை உணர்ந்து பதறி எழுந்தான்.


பதறி எழுந்தவன் அறை கதவு மூடி இருப்பதை கண்டு குளியலறையை பார்த்தவன் அதுவும் மூடி இருந்தது.


யோசனையுடன் பால்கனிக்கு விரைந்தான்.


அவன் தேடிக் கொண்டிருந்த அவன் காதல் மனைவி கைகளை கட்டிக் கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள்.


அவளை பின்னிருந்து அணைத்தவன் “மதி தூங்காம என்ன பண்ற?” என்றான்.


வலிய வரவழைத்த புன்னகையுடன் “இன்னைக்கு பௌர்ணமி நிலா அழகா இருக்கு அதான் பாத்துட்டு இருக்கேன்” என்றாள் புன்னகையுடன்.


“என்னோட வெண்மதிய விடவா அந்த மதி அழகு! ஒரு நிலவே நிலவை ரசிக்கிறதே. அடடா ஆச்சரியகுறி!” என அவளை பார்த்து கண் சிமிட்டினான்.


அவனை நோக்கி மெலிதாக சிரித்துவிட்டு மீண்டும் திரும்பி நின்றாள்.


அவள் தோளில் கை போட்டவன் “மணி இரண்டாச்சு இவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்ற?” என்றான்.


“எனக்கு தூக்கம் வரல சும்மா எப்படி படுக்கறது அதான் இங்க வந்து நின்னுட்டுருக்கேன்” என்றாள்.


“மதி ஏதாவது பிரச்சனையா? கொஞ்ச நாளா நானும் பார்க்கிறேன் என்னமோ யோசிச்சிட்டே இருக்க. சரியா தூங்கறதில்லை எதாவது பெரிய பிரச்சனையா?” என்றான் கேள்வியாக.


“நான் நல்லா இருக்கேன் எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது தூக்கம் வரலனு இங்க வந்தேன் அதுக்கு போய் இவ்ளோ கேள்வியா?” என்றாள் சலிப்பாக.


“மேடம்க்கு தூக்கம் வரலயா அது எப்படி தூக்கம் வராம இருக்கும்னுனா பார்க்கிறேன்” என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.


வெட்கத்துடன் அவனை தள்ளிவிட்டவள் “சூர்யா என்ன பண்றீங்க இது பால்கனி” என்றாள் கூச்சத்துடன்.


“ஆஹான் எத்தனை வருஷமானாலும் உனக்கு இந்த வெட்கம் போகாது” என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.


“என்னடீ ஆச்சு உனக்கு இவ்ளோ மெலிஞ்சிட்ட” என்றான் யோசனையுடன் .


“அதெல்லாம் இல்ல எப்பவும் போல தான் இருக்கேன்” என்றாள் .


“அடியேய் உன்னை அடிக்கடி தூக்குற எனக்கு தெரியாதா?” என்றதும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.


அவளை படுக்கையில் இறக்கிவிட்டவனின் கண்களில் தெரிந்த தாபத்தில் வெட்கத்துடன் திரும்பினாள்.


“மதி” என அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவள் மேல் சரிந்தான்.


முதலில் நெற்றி முத்தத்தில் ஆரம்பித்தவன் அவள் சிப்பி இமைகளில் முத்தமிட்டவன் பின் அவள் இதழ்களில் இளைப்பாறினான்.


இதழ் முத்தத்தில் ஆரம்பித்து ஆடைகள் விலக ஆனந்த ஆலிங்கனத்தில் சஞ்சரித்து கலைந்த ஓவியமாக தன் மார்பில் துயில் கொண்டிருந்த நிலவு பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டான்.


கலைந்து கிடந்த தன் ஓவியப்பாவையை அணைத்துக் கொண்டு கண் அயர்ந்தான் சூர்யாபிரகாஷ்.ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை “சூர்யா சூர்யா விடிஞ்சிருச்சு” என அவனை தொட்டு உசிப்பினாள் வெண்மதி.


தன் எதிரே தலைக்குளித்து ஈர கூந்தலில் துண்டு கட்டி முகப்பொலிவுடன் மஞ்சள் மணம் மணக்க அறக்கு நிற சிபான் புடவையில் நின்றிருந்தவளை பார்க்க அவனுக்கு திகட்டவில்லை.


படுக்கையில் படுத்தபடி அவளை பார்த்தவன் அவளை தன் மேல் இழுத்துப் போட்டுக்கொள்ள அவனிடமிருந்து திமிறி விடுபட்டாள்.


“சூர்யா நேரமாச்சு ப்ளீஸ் ஆரம்பிக்காதீங்க. நான் ஏற்கனவே குளிச்சிட்டேன். நீங்க முதல்ல காபிய குடிங்க” என்றதை காதில் வாங்காமல் அவனுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டு அவளை விட்டு விலகினான்.


காபி ஆறி ஆடை படர்ந்து அவலாக கிடந்தது.


கலைந்த புடவை முந்தானயை அள்ளி எடுத்தவளை குறும்புடன் பார்த்து “திரும்ப குளிச்சிரு” என கண்ணடித்தான்.


மீண்டும் குளித்து புடவை மாற்றி சென்றவளை மாமியாரும் ஓரகத்தியும் பார்த்த பார்வையில் கூசிப்போனாள்.


சமையலறைக்கு விரைந்த வெண்மதி ஓரகத்திக்கு காபி தயாரித்து எடுத்துச் சென்றாள்.


காபியை வாங்கிக் கொண்டு அவளை மேலிருந்து கீழாக அளவிட்ட காயத்ரி “மறுபடியும் குளிச்சு புடவை மாத்திருக்க போல” என்றவளுக்கு என்ன பதில் கொடுப்பது என தெரியாமல் முழித்தாள் வெண்மதி.


“ஆமா இவளுக்கு நேத்துதான் கல்யாணம் ஆகிருக்கு பாரு திரும்பத் திரும்ப குளிக்க.. மலட்டு மாடு என் பையன மயக்கி தலையணை மந்திரம் போட்ருக்கா அப்புறம் திரும்பத் திரும்ப குளிக்காம என்ன பண்ணுவா?” என மாமியார் பார்வதி கடிந்ததும் கொல்லென சிரித்தாள் கவிதா.


“ஏய்! எங்க மூஞ்சிய பாக்காம சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு” என நொடித்துக் கொண்டு அவளை விரட்டினாள் பார்வதி.


கண்ணீருடன் சமையலறைக்குள் சென்று முடங்கினாள் வெண்மதி.


அங்கு நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த பவானி அவளைக் கண்டு வருத்தத்துடன் அவள் கையை பிடித்து ஆறுதல் சொல்ல முயன்றார்.


“என்ன பவானிக்கா எதுவும் வேணுமா?” என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.


“கவலைப்படாதே மதிம்மா உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே மாறும். கண்டிப்பா உனக்கு ஒரு மழலைச் செல்வம் கிடைக்கும் அழாதே” என்றார்.


“அதெல்லாம் ஒன்னுமில்லக்கா இந்தாங்க இந்த பாத்திரத்தை கழுவிடுங்க” என அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகரப்போனாள்.


“மதிம்மா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத தம்பிகிட்ட இதெல்லாம் சொல்லலாம் தானே” என ஆரம்பித்தவர் வெண்மதி பார்த்த பார்வையில் பேசாமல் வாயை மூடிக்கொண்டார்.

தொடரும்...
 

NNK-19

Moderator
அத்தியாயம் - 2


“அக்கா நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிருக்கேன் விட்ருங்க சீக்கிரமா போய் பாத்திரத்தை கழுவுங்க கடகடனு வேலைய பாக்கணும் எல்லாரும் சாப்பிட வந்துருவாங்க” என்றாள் கண்டிப்புடன்.


“மதிமா நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என ஆரம்பித்தவரை தடுத்து “அக்கா போதும் உங்களுக்கு சொன்னா புரியாதா போய் வேலையை பாருங்க” என கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.


“நல்லதுக்கு சொல்றதை கூட இந்த பொண்ணு புரிஞ்சிக்காது” என மனத்தாங்கலுடன் அங்கிருந்து விலகினார் பவானி.


அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என பரபரப்பாக சமையலை பார்க்கத் துவங்கினாள் வெண்மதி.


வீட்டில் சமையலை தவிர அனைத்து வேலைக்கும் ஆட்கள் வைத்திருக்கிறான் சூரிய பிரகாஷ்.


அது எல்லாம் அவன் வீட்டிலிருக்கும் வரை. அவன் வேலைக்கு கிளம்பிவிட்டால் போதும் வேலை மொத்தத்தையும் வென்மதியிடம் தான் வாங்குவார் பார்வதி.


சூர்ய பிரகாஷ் வெண்மதி இருவரின் திருமணமும் காதல் திருமணம்.


வெண்மதிக்கு தன் தாய் தந்தை யாரென தெரியாது அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட அறியாத பேதை அவள்.


கருணை இல்லத்தில் வளர்ந்த வெண்மதி சூரிய பிரகாஷின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.


வெண்மதியின் நல்ல குணத்தில் பண்பில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்தான் சூர்யா.


தாய் தகப்பன் சொத்து சுகம் ஏதுமில்லா வெண்மதியை பார்வதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


அதிலும் வசதியும் வளமையும் நிறைந்த காயத்ரிக்கு ஒன்னுமில்லாத வெண்மதியை கண்டால் ஆகாது.


காயத்ரியின் கணவன் சந்துருவுக்கு தம்பியின் காதல் திருமணம் வருத்தம் தான் எனினும் தம்பியின் மனதை ஈர்த்த பெண்ணிடம் முகம் திருப்புவதில்லை.


சூரிய பிரகாஷுக்கு இரு சகோதரிகள் தேவிகா, மல்லிகா. இருவரும் பார்வதி காயத்ரியை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். இருவரும் அப்படிப்பட்ட சீரியல் வில்லிகள்.


இவர்களின் தந்தை சந்திரமோகன் சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பில் இறந்துவிட்டார்.


மொத்தத்தில் சூரிய பிரகாஷ் சந்துருவை தவிர மற்ற அனைவருமே வில்லத்தனமானவர்கள்.


இங்கு நடப்பது தெரிந்தால் சூர்யா அனைவரையும் உண்டு இல்லையென ஆக்கிவிடுவான். ஆனால் வெண்மதி தனக்கு தான் யாருமில்லை சூரிய பிரகாஷை அவன் குடும்பத்திலிருந்து பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தால்.


அதனால் தனக்கு நடக்கும் கொடுமை எதையும் வெண்மதி கணவனின் பார்வைக்கு கொண்டு செல்வதில்லை.


அலுவலகம் செல்வதற்கு தயாராகி சாப்பிட வந்தான் சூர்யா.


மனைவி பரிமாறும் இட்லி சட்னி சாம்பாரை ரசித்து உண்டான் சூர்யா.


மதி நீயும் நேரத்தோட சாப்பிடு என அவளையும் சாப்பிட சொன்னான்.


“நீங்க சாப்பிடுங்க சூர்யா நான் அத்தை கூட அப்புறமா சாப்பிடுறேன்” என மறுத்து அவனை சாப்பிட வைத்தாள். சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றான் சூர்யா.


அவன் சாப்பிட்ட தட்டை கழுவ போட்டுவிட்டு அவன் கிளம்புவதற்க்கும் அவன் லேப்டாப் பேகை எடுத்துக் கொடுத்தாள்.


“மதி மதியம் சாப்பாடு கொண்டு வந்துரு” என அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு விடைபெற்றான் சூர்யா.


அவன் கிளம்பியதும் வேலைகளை பரபரப்பாக பார்க்க துவங்கினாள்.


மனம் நிலையில்லாமல் தவிக்க வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் காயத்ரியின் மகன் வைபவின் அழுகை சத்தத்தில் சுய உணர்வுக்கு வந்தாள்.


காயத்ரி குளிக்க சென்றிருந்தாள் அவளின் மூன்று வயது குழந்தையின் அழுகை கண்டு மனம் பொருக்காமல் குழந்தையை கைகளில் அள்ளி சமாதானப்படுத்தினாள்.


“தங்க குட்டி சித்தி கிட்ட வாங்க. ஏன்டா ராஜா அழறீங்க வேண்டாம் தங்கம்” என சமாதானப்படுத்த குழந்தை அழுகையை நிறுத்தி அவள் பேசுவதை உற்று கவனித்தது.


குழந்தையை முத்தமிட நெருங்க அவளிடமிருந்து வெடுக்கென வைபவை பிடிங்கினாள் காயத்ரி.


“ஏய் சனியனே என் பிள்ளைய தொடாதேனு எத்தனை தடவை உனக்கு சொல்லிருக்கேன். உனக்கே வயித்துல ஒரு புழு பூச்சி கூட இல்லை. உன் விளங்காத கையால என்

பிள்ளைய ஏன்டீ தூக்கின” என அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டாள் காயத்ரி.


“ஐயோ அம்மா” என அவள் தள்ளிவிட்ட வேகத்தில் தூர சென்று விழுந்தாள் மதி.


சத்தம் கேட்டு என்னவோ ஏதோவென பதறி ஓடி வந்தார் பார்வதி.


“அத்தை பாருங்க இவளை என் பிள்ளையை தொடக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருப்போம் நம்ம பேச்சை கொஞ்சம் கூட மதிக்காம என் புள்ளைய தூக்கிருக்கா. இவளுக்கு பொறாமை கேடுகெட்ட மனசு. நமக்கு பிள்ளை இல்ல இவளுக்கு மட்டும் பிள்ளை இருக்குனு பொறாமை.‌ என் பிள்ளைய கொல்லக்கூட தயங்கமாட்டா” என நீலிக்கண்ணீர் வடித்தாள் காயத்ரி.


“அநாதை நாயே என் பேரனை உன் கையால தொட்டியா” என மாறி மாறி அவள் கன்னத்தில் அறைந்தார் பார்வதி.


அவர் அறைந்ததை விட அனாதை என்னும் சொல் அவளை மறிக்க செய்தது.


“ஐயோ! படுபாவி என் பேரனை ஏன்டீ தூக்கின உன் கைபட்ட தோஷம் என் பேரனுக்கு வந்து அவனுக்கு என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. உனக்கு என்ன கவலை நீ பெத்திருந்தா பிள்ளையோட அருமை தெரியும். நீ தான் தரிசு நிலமாச்சே. உனக்கு எங்க பிள்ளையோட அருமை தெரியும்” என அவளை வார்த்தையால் கடித்து குதறினார் பார்வதி.


“வாங்க அத்தை போகலாம் இவ பார்வை கூட என் பிள்ளை மேல படக்கூடாது. முதல்ல என் பிள்ளைக்கு என்னனு பார்க்கலாம்” என மாமியாரிடம் பிள்ளைய கொடுத்தாள் காயத்ரி.


தன் மாமியாரிடம் அடி வாங்கிய வெண்மதியை மிதப்பாக பார்த்து அங்கிருந்து அகன்றாள் காயத்ரி.


அவர்கள் வெளியேறியதும் குமுறி அழுதாள் வெண்மதி.தொடரும்…

 

NNK-19

Moderator
அத்தியாயம் - 3


அழுதால் மனபாரம் குறையும் என சொல்வார்கள் எவ்வளவு அழுதும் வெண்மதியின் மனதில் உள்ள ரணம் குறையவில்லை.


வெகு நேரம் அழுதவளுக்கு வேலைகள் நினைவு வர கண்ணை துடைத்துக்கொண்டு எழும்ப முயன்றவளுக்கு எழ முடியவில்லை.


நிற்க முடியாமல் தடுமாற அவளுக்கு கை கொடுத்து உதவினார் பவானி.


பவானியின் பார்வை அவளை குற்றம் சாட்டியது.


எனினும் அதைக் கண்டு கொள்ளாதவள் போல “அக்கா இன்னைக்கு ஒரு நாள் நீங்க சாப்பாடு ரெடி பண்றீர்களா? நான் அவருக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வர்றேன்” என்றவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை பவானி.


“என்னாச்சு அக்கா? நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாம என்னையே அப்படி பார்க்கிறீங்க” என்றாள் அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தும்.


“மதிம்மா நீ இந்த வீட்டோட மருமக நான் இந்த வீட்டு வேலைக்காரி. நீ தான் என்னோட முதலாளி. இதை செய் அதை செய்னு என்னை வேலை வாங்காம செய்றீங்களான்னு கேட்கிற என்ன பொண்ணும்மா நீ” என அவளை கடிந்தார்.


“என்னக்கா நீங்க வேலைக்காரினு சொல்றீங்க என்னைக்காவது உங்கள நான் அப்படி நடத்துறேனா? என்றாள் மதி வருத்தமாக.


“அதை தான் நானும் சொல்றேன். நீ இந்த வீட்டோட மருமக உன்னை அவங்க ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசுறாங்க. வேலைக்காரி எனக்கே அவங்க பேசினத கேட்டு நெஞ்சு பதறுது கண்ணு. நீ அமைதியா இருக்க தயவுசெஞ்சு சூர்யா தம்பிட்ட சொல்லிடு மதிமா”


“இவுங்களாம் உன்னை பேசுறத பாத்தா என் ஈரக்குலையே நடுங்குது. உனக்கு சொல்ல விருப்பம் இல்லனா விட்ரு பரவாயில்ல ஆனா இன்னைக்கு நடந்தத நான் சூர்யா தம்பிட்ட சொல்ல தான் போறேன். இனியும் உன் முட்டாள்தனமான அமைதிய கண்டுக்காம இருந்தா நான் மனுஷியே இல்ல” என்றார் கோபமாக.


“அக்கா போதும் இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம். நீங்க இங்க நடந்ததை பத்தி அவர்கிட்ட ஏதாவது சொன்னீங்க என்னை உயிரோட பார்க்கவே முடியாது” என்றாள் உறுதியாக.


“மதிமா என்ன பேச்சு பேசுற. தம்பி உன் மேல உயிரையே வச்சிருக்கு. நீ இப்படி ஒரு வார்த்தை சொன்னதை தம்பி கேட்டு இருந்துச்சு தாங்குமா என்னமா இதெல்லாம்” என்றார் வேதனையுடன்.


“எந்த பிறவில என்ன பாவம் செய்தேனோ அம்மா அப்பா யாருனு தெரியாம அவங்க இருக்காங்களா இல்லையா எனக்குனு ரத்த உறவுகள் உண்டா? ஏன் நான் முறையா பிறந்த குழந்தை தானா இப்படி எதுவுமே தெரியாம இருக்கேன். யாரு செஞ்ச புண்ணியமோ தெரியல சூர்யா எனக்கு கிடைச்சிருக்காரு. உறவுகளே இல்லாத எனக்கு உறவா உயிரா அவரு கிடைச்சிருக்காரு”


“எனக்கு தான் உறவுகளே கிடையாது அவருக்குனு இருக்க உறவுகளை அவருகிட்ட இருந்து பிரிக்கணுமா? இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சா கோபப்படுவாரு சண்டை போடுவாரு குடும்பம் உடையும் வேண்டாக்கா. எனக்காக தயவு செஞ்சு இதை இப்படியே விட்ருங்க” என்றாள் கெஞ்சலாக.


“உன்னோட நல்ல மனசை இங்க யாருமே புரிஞ்சுக்கலையே” என வருந்தினார் பவானி.


பவானியிடம் என்ன சமைக்க வேண்டும் என சொல்லியவள் எப்பவும் போல தன் துக்கத்தை பூஜையறைக்கு சென்று கடவுளிடம் கொட்ட சென்றாள்.


“கடவுளே உனக்கு கண்ணு இருக்கா இல்லையா? இங்க நடக்கிறத பார்க்கிற தானே. அத்தை என்ன அனாதைனு சொல்றாங்க. நான் என்ன தப்பு பண்ணினேன். எனக்கு ஏன் இப்படி நான் தூக்கினா வைபவுக்கு ஏதாவது ஆகிடுமா. யாரு யாருக்கோ குழந்தை பாக்கியம் தர்ற வயசு கோளாறுள தப்பு பண்ணி கலைக்கிறவுங்களுக்கு கூட குழந்தை கொடுக்கிற”


“உன்னை மட்டும் நம்பி உன்னையே சரணமடைஞ்சு நீயே கதினு இருக்கேன். எவ்வளவு பூஜை விரதம் இருக்கேன் கொஞ்சம் கூடவா உனக்கு மனசு இறங்கல எனக்கு ஒரே ஒரு ரத்த உறவாய் எனக்கு ஒரு குழந்தை தர மாட்டியா” என மடியந்தி கண்ணீர்விட்டு கதறினாள்.


இவள் கதறலை கேட்டால் மழை கூட மனம் இறங்கிவிடும் ஆனால் இந்த குடும்பத்து பெண்களுக்கு மனமிறங்காது.


சும்மாவா சொன்னார்கள் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.


எவ்வளவு நேரம் இறைவனிடம் மனக்குமுறலை இறக்கி வைத்தாளோ பவானியின் குரலில் சுயநினைவுக்கு வந்தாள்.


“தம்பிக்கு சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் நீ எடுத்துட்டு கிளம்பு” என்றார்.


“சரி” என தலையசைத்தாள் மதி.


வெளியேறப் போன மதி என்ன நினைத்தாலோ “அக்கா தயவு செஞ்சி கெஞ்சி கேட்கிறேன் என் மேல உள்ள அக்கறைல அவர்கிட்ட இது எதையும் சொல்லிடாதீங்க” என வேண்டினாள்.


“இல்லம்மா நீ இவ்ளோ சொன்னதுக்கு அப்புறம் நான் தம்பி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். நீ கவலைப்படாதே கண்டிப்பா கடவுள் உனக்காக மனசு இறங்குவாரு கண்ணு. நீ தம்பிக்கு சாப்பாடு கொண்டு போ” என அவளை அனுப்பி வைத்தார்.


அவசர அவசரமாக சாப்பாட்டு பையை எடுத்துக்கொண்டு கணவனது அலுவலகத்திற்கு விரைந்தாள் வெண்மதி.


மனைவி பரிமாறிய உணவை ஒரு வாய் தான் உண்டிருப்பான் “என்ன மதி இன்னைக்கு நீ சமைக்கல போல” என்றான் அவள் முகத்தை கூர்மையாக நோக்கியபடி.


தொடரும்…

 

NNK-19

Moderator
அத்தியாயம் - 4


மனைவி பரிமாறிய உணவை ஒரு வாய் தான் உண்டிருப்பான் “இன்னைக்கு நீ சமைக்கல போல” என்றான் அவள் முகத்தை கூர்மையாக நோக்கியபடி.


ஒரு நொடி திருதிருவென முழித்தவள் லேசாக சிரித்தபடி “எப்படி கண்டுபிடிச்சீங்க?”


“என் பொண்டாட்டி சமையல் எனக்கு தெரியாதா? எத்தனை வருஷமா சாப்பிடறேன். சாப்பாட்டோட வாசத்தை வச்சு என் பொண்டாட்டி சமையலா இல்லையான்னு சொல்லிடுவேன்” என்றதும் சிரித்து விட்டாள்.


“ஹான்” என்றாள் கேலியாக.


“பேச்சை மாத்தாதே நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான்.


“ சரி உங்களுக்கு நூறு மார்க் பவானிக்கா தான் இன்னைக்கு சமைச்சாங்க” என்றாள்.


“ஏன் எப்பவும் கிச்சன் என்னோட ராஜ்ஜியம்னு அங்கேயே குடியிருப்ப ஆச்சரியமா இருக்கே. ஓய் நிமிர்ந்து பாரு என்னை” என அவள் முகத்தை நிமிர்த்தினான்.


“மூஞ்சி கண்ணெல்லாம் சிவந்திருக்கு அழுதியா” என்றான் கவலையுடன்.


“நான் என்ன அழுமூஞ்சியா? நான் ஏன் அழ போறேன்? பயங்கர தலைவலி அதான் அக்காவை சமைக்க சொன்னேன்” என்றாள் தலையை பிடித்துக் கொண்டு.


பாதி உணவில் பதறி எழுந்தவன் அவளை நெருங்கி “என்னம்மா ஆச்சு தலைவலியோட ஏன் அலையற? போன் பண்ணி இருக்கலாமே வீட்டுக்கு வந்து இருப்பேனே” என்றான் கவலையுடன்.


“பரவாயில்லை இதில என்ன இருக்கு பாதி சாப்பாட்டில் ஏன் எழுந்திருக்கீங்க? நீங்க போய் சாப்பிடுங்க” என்றவளை பேசவிடாமல் தடுத்தவன் “ரொம்ப வலிக்குதா” என்றான் கவலையுடன்.


“லேசா தான் வலிக்குது கொஞ்ச நேரம் படுத்தா சரியாகிடும்” என்றவள் அவன் அக்கறையில் நெகிழ்ந்து போயிருந்தாள்.


“நீ எதுவும் சாப்பிட்டுருக்கமாட்ட முதல்ல சாப்பாடு” என அவள் வாயில் உணவை திணித்தான். வேண்டாம் என மறுத்தவளை அடக்கியவன் அவளுக்கு உணவை ஊட்டிவிட்டு அவனிடமிருந்த தலைவலி மாத்திரையை கொடுத்தான்.


அவள் அவன் கொடுத்த மாத்திரையை வாங்கிப் போட்டாள்.


தலைவலி தைலத்தை அவளுக்கு தேய்த்து அவள் தலையை இதமாக பிடித்துவிட்டான்.


அவன் அலுவலக அறையனுள் இருந்த ஓய்வறைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.


“வீட்டுக்கு போனா நீ சுத்தமா ரெஸ்ட் எடுக்க மாட்ட. பேசாம இங்க படுத்து ரெஸ்ட் எடு” என அவளை அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்தான்.


அவள் தலையை இதமாக பிடித்துவிட்டபடி “எதுவும் பிரச்சனையா? என்கிட்ட எதையும் மறைக்கிறியா? வீட்ல உனக்கு ஏதாவது மன கஷ்டம் இருக்கா?” எனக் கேட்டவன் உள்ளுணர்வு அவனுக்கு ஏதோ சரியில்லை என உணர்த்தியது.


“சாதாரண தலைவலி நீங்க தேவையில்லாம யோசிச்சு குழப்பிக்கிறீங்க” என்றாள்.


சிறிது நேரத்தில் அவள் தூங்கியதை உணர்ந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.


“நீ ஏதோ என்கிட்ட மறைக்கிற. சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனைனு சுத்தமா புரியல. வாய திறந்து சொன்னாதானே எனக்கு தெரியும்” என்றவனின் மனம் முழுவதும் வேதனையில் நிரம்பியது.


இவளிடமிருந்து எப்படி விஷயத்தை வாங்குவது என அவனுக்கு தெரியவில்லை. சொல்ல வேண்டும் என நினைப்பவளிடம் விஷயத்தை வாங்கலாம் மறைக்க வேண்டும் எனக் கங்கனம் கட்டியிருப்பவளிடமிருந்து எப்படி விஷயத்தை வாங்க முடியும்.


தலைக்கு மேல் வேலைகள் அவனை இழுக்க அதில் மூழ்கினான்.


மனதின் இறுக்கம் தளர்ந்து நிம்மதியாக ஆழ்ந்து உறங்கினாள் வெண்மதி.


நல்ல தூக்கத்தில் புரண்டவளுக்கு முழிப்பு வர அலுவலகம் வந்து படுத்தது நினைவு வந்து பதறி எழுந்து வெளியே வந்தாள்.


சூர்ய பிரகாஷ் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.


“நல்லா தூங்கினியா நவ் ஃபீலிங் பெட்டர்?” என கேட்டான்.


“நல்லா தூங்கிட்டேன் இப்ப பிரெஷ்ஷா இருக்கு. சரி சூர்யா நேரமாச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என கிளம்ப தயாரானாள்.


“இரு மதி அவ்வளவுதான் வேலை முடிஞ்சது நானும் வர்றேன் சேர்ந்து போகலாம்” என அவளை தடுத்தான்.


மதியம் வந்தவள் இரவு எட்டு மணி தாண்டிவிட்டது. மாமியாரும் ஓரகத்தியும் என்ன பேசுவார்களோ என அவள் வயிற்றில் புளியை கரைத்தது.


காரை சீரான வேகத்தில் ஓட்டிச் சென்றான் சூர்யா.


மௌனமாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் வெண்மதி.


“மதி என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?” என்றான் மீண்டும்.


“என்ன சொல்லணும் எனக்கு புரியல” என்றாள்.


“இல்ல ஏதாவது சொல்ல வந்து என்கிட்ட சொல்ல முடியாம தவிக்கிறியான்னு கேட்கிறேன்” என்றான் அழுத்தத்துடன்.


“அதெல்லாம் எதுவுமில்ல ஏதாவது சொல்லனும்னா உங்க கிட்ட சொல்லாம யாரு கிட்ட சொல்லப் போறேன்” என்றவளின் கண்கள் அவனை நேருக்கு நேர் சந்திக்கவில்லை.


அதிலேயே அவனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது விஷயம் தன் கை மீறி சென்றுவிட்டது.


இனி இவளிடம் கேட்டு பயனில்லை தானே கண்டுபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தான்.


இருவரும் வீட்டிற்குள் நுழைய அவள் முகத்திலிருந்த தெளிவை கண்டு பார்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


உள்ளே நுழைந்த சூர்யாவை தடுத்த பார்வதி “மல்லிகாவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை வளைகாப்பு பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் அன்னைக்கும் வேலை வேலைனு ஓடாதே. வெள்ளிக்கிழமை மல்லிகா வீட்டுக்கு போய் வளைகாப்பு போட்டு அவள இங்க கூட்டிட்டு வரணும்”


“அவளுக்கு அண்ணனா மட்டுமில்லாம அப்பா ஸ்தானத்துல இருந்து நீயும் சந்துருவும் தான் எல்லாம் செய்யணும்” என்றார் பார்வதி குரலில் தேன் ஒழுக.


“சரிம்மா எல்லா ஏற்படும் பண்ணுங்க நாம்ம எல்லாருமா போய் ஜாம் ஜாம்னு அவ வளைகாப்ப நடத்தலாம்” என அங்கிருந்து சென்றான்.


இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் தானும் சாப்பிடலாம் என சாப்பிட அமர்ந்தாள் வெண்மதி.


மூக்கு வேர்த்தது போல அங்கு வந்து சேர்ந்தார் பார்வதி.


“ஏய் என்னடீ உன் புருஷனோட நல்ல ஊர் சுத்திட்டு வந்தியா?” என்றார்.


அலுவலகத்தில் தான் உறங்கியதை எப்படி சொல்வது என தெரியாமல் முழித்தாள்.


“சரி நீ என்னமோ பண்ணித்தொலை. நீ என்ன பண்ணுவியோ எஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது உன் புருஷன் கிட்ட என்ன சொல்லுவியோ தெரியாது. என் பொண்ணு வளைகாப்புக்கு நீ வரக்கூடாது உன்னோட பார்வை பட்டா கூட அது என் பொண்ணுக்கு நல்லதில்லை. அதனால நீ வரக்கூடாது அவ வளைகாப்புல நீ கலந்துக்க கூடாது” என்றார் சற்றும் இறக்கமில்லாமல்.


“அவன் கிட்ட நான் சொன்னதை சொல்லாம நீயே சொல்ற மாதிரி சொல்லற புரியுதா?” என்றார்.


மனதில் சுருக்கென வலிக்க “சரி அத்த நான் வரல” என்றவளின் மனம் முழுவதும் வேதனையில் வெம்பியது.


“சரி சரி நீ நல்ல கொட்டிக்கோ. வேளா வேளைக்கு கொட்டிக்கோ. நல்ல திண்டு வயித்தை நிறைச்சிக்கோ. காஞ்சி தரிசா கிடக்குற வயிறு. வயித்துல ஒரு புழு பூச்சி கூட இல்லைனு வருத்தமில்லாம தின்னு வயித்த வளறு” என விஷத்தை கக்கி விட்டு சென்றார்.


சாப்பிட அமர்ந்தவள் சாப்பிடாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.


தொடரும்..
 

NNK-19

Moderator
அத்தியாயம் - 5


எப்படி வளைகாப்புக்கு வரமாட்டேன் என கணவனிடம் சொல்வது என யோசனையில் இருந்தாள்.


அவன் இவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தான்.


அடுத்தடுத்து மனைவி செய்யப் போகும் காரியம் தெரிந்தால் அவன் ருத்ரதாண்டவம் ஆடி விடுவான்.


இரவு படுக்கைக்கு வந்த மனைவியை கை அணைப்புக்குள் கொண்டு வந்தான்.


அவள் தலைகோதி தூங்க வைத்தவனின் தூக்கம் பறிபோனது.


எப்படியும் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தான்.


மறுநாள் அலுவலகத்திலிருந்து வந்தவன் அவளுக்கு புடவை நகைகள் வாங்கி வந்தான்.


“மது மல்லிகா வளைகாப்புக்கு இந்த புடவை நகையெல்லாம் போட்டுக்கு” என அவள் கையில் கொடுத்தான்.


“எதுக்கு சூர்யா இவ்வளவு என்கிட்ட ஏற்கனவே நிறைய புடவை இருக்கு” என மறுத்தாள்.


“புடவை நகையெல்லாம் வேண்டாம்னு சொல்ற பொண்ணுங்கலாம் இன்னுமா இருக்காங்களா?” என்றான் கேலியாக.


“எப்பவும் உங்களுக்கு என்னை கேலி பண்றதே வேலையா போச்சு” என்றாள் சலிப்புடன்.


“சரி நீ இதெல்லாம் எடுத்து கப்போர்ட்ல வை நான் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என குளியலறைக்குள் சென்றான்.


“சூர்யா உங்கட்ட நான் எப்படி வளைகாப்புக்கு வரமாட்டேனு சொல்லுவேன்” என கலங்கி அழுதாள்.


என்ன காரணம் சொல்வது என புரியாமல் கலங்கி நின்றாள்.


வளைகாப்பு நாளும் வந்தது என்ன செய்வது என யோசனையில் இருந்தவள் படுக்கையை விட்டு எழவில்லை.


கணவனிடம் அசைவு தெரிய தூங்குவதுபோல பாசாங்கு செய்தாள்.


காலையில் தினமும் காபியுடன் தன்னை எழுப்பும் மனைவி நேரம் கடந்தும் தூங்குவதைக் கண்டு யோசனையுடன் சுருங்கியது.


“மதி மதிம்மா எழுந்திரி” என அவளை உலுக்கி எழுப்பினான்.


கணவன் எழுப்பியதும் பதறி எழாமல் “என்ன” என்றாள் பொறுமையாக.


“என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்குற சீக்கிரம் எழும்பு மல்லிகா வளைகாப்புக்கு எழுந்து கிளம்புடா” என அவளை கிளம்ப சொன்னான் சூர்யா.


“என்னனு தெரியலை சூர்யா ரொம்ப தலை சுத்தலா இருக்கு என்னால சுத்தமா எழுந்திரிக்க கூட முடியலை” என்றாள் சோர்வாக.


“என்ன மதி இப்படி சொல்ற கொஞ்சம் எழுந்து கிளம்பு. கொஞ்ச நேரம் நம்ம போயிட்டு வந்துடலாம். வந்து நான் உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் இப்ப ப்ளீஸ் கிளம்புடா” என அவளை வற்புறுத்தி கிளம்ப சொன்னான்.


வேறு வழியில்லாமல் மதி கிளம்பத் தயாரானாள்.


மனைவி சோர்வுடன் வெகுநேரமாக தயாராவதை கண்டு நிஜமாகவே அவளுக்கு உடம்பு சரியில்லை என கலங்கினான்.


இன்னைக்கு கட்டாயம் இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் என முடிவு செய்தான்.


“அவனும் தயாரானவன் பார்வதி அழைக்க கீழே செல்லப் போனவன் நீ ரெடியாகிட்டு கீழே வா” என சொன்னவன் பார்வதியிடம் சென்றான்.


மதி வேறு வழியின்றி தயாராகி வந்தவள் “சாரி சூர்யா நான் பண்ண போறது பெரிய தப்பு தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க. என்னை வெறுத்துறாதீங்க. எனக்கு வேற வழி தெரியலை” என கண்ணை மூடியவள் “ஆஆஆ” என்ற அலறலுடன் படிக்கட்டில் உருண்டு விழுந்தாள்.


அவள் அலறல் சத்தம் கேட்டு சூர்யாவும் சந்துருவும் பதறி ஓடி வந்தனர்.


மனைவியின் நிலையை கண்டு பதறி துடித்தான் சூர்யா.


“தலைசுத்தல்னு சொன்னாலே கூட இருந்து கூட்டிட்டு வந்துருக்கணும்” மனைவி தலைசுற்றி கீழே விழுந்து விட்டாள் என நினைத்தவன் அவளிடம் விரைந்து ஓடினான்.


மனைவி செய்த காரியம் தெரிந்தால் என்ன செய்வானோ.


அவளிடம் ஓடி வந்தவன் மனைவியை கையில் தூக்கப் போனான். அவன் தொட்டதும் அவள் அலறிய அலறலில் பயந்து போய் அவள் கால்ல பார்க்க அவள் கால்கள் பயங்கரமாக வீங்கி இருந்தது.


அவள் கால்களின் வீக்கத்தை கவனித்த சந்துரு “சூர்யா அவ கால்ல பாரு பிராக்சர்னு நினைக்கிறேன் சீக்கிரம் தூக்குடா” என்றான்.


சாவகாசமாக வந்த பார்வதி “என்னாச்சுப்பா கிளம்பலாமா” என்றார்.


“அம்மா இவ மாடி படிக்கட்டிலிருந்து விழுந்துட்டா. கால் ரொம்ப வீங்கிருக்கு ப்ராக்சர்னு நினைக்கிறேன். நீங்க கிளம்புங்க நான் இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்” என்றான் சூர்யா.


“ஆமாடா நீ உடனே மதிய தூக்கிட்டு ஹாஸ்பிடல் போ நாங்க வளைகாப்புக்கு போயிட்டு வந்துடறோம். அவ பாவம் வலியில் ரொம்ப துடிக்கிறா நீ அவளை பாரு” என்றான் சந்துரு.


“சூர்யா நீ இல்லாம நாங்க மட்டும் எப்படி” என்றார் பார்வதி கோபமாக.


மனைவியின் நிலை கண்டு பதற்றத்தில் இருந்தவன் தன் தாய் “நீ இல்லாம எப்படி என்றாரே தவிர நீங்க இல்லாம எப்படி” என கேட்கவில்லை.

மற்ற நேரமாக இருந்தால் கவனித்திருப்பான்.


“சூர்யா நீங்க அத்தை கூட போயிட்டு வாங்க வந்து நம்ம ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள் வலியில் கண்களை சுருக்கியபடி.


“மதி நீ என்ன பேசுற சூழ்நிலை சரியில்லைன்னா என்ன பண்ண முடியும் நாங்க போயிட்டு வர்றோம். நீ சூர்யா கூட ஹாஸ்பிடல் போமா. சூர்யா நீ டாக்டரை பார்த்துட்டு என்னனு கால் பண்ணி சொல்லு” என்றான் சந்துரு.


“அம்மா கிளம்புங்க நம்ம போகலாம்” என பார்வதியையும் கவிதாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


கிளம்பும் முன் வெண்மதியை பார்த்த பார்வதியின் பார்வை நெருப்பை கக்கியது. மாமியாரின் பார்வை வெண்மதியை அச்சுறுத்தியது.


மாமியார் பார்த்த பார்வையில் வெண்மதி பயந்து நடுங்கினாள்.


தொடரும்…


 

NNK-19

Moderator
அத்தியாயம் - 6


சந்துரு,கவிதா, பார்வதி மூவரும் வளைகாப்புக்கு கிளம்பினர்.


மனைவியை கையில் அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் சூர்யா.


அதற்குள் மதி வலியில் துடித்து கதறி விட்டாள்.


அவளை பரிசோதித்த மருத்துவர் ப்ராக்சர் எனக்கூறி வலது காலில் மாவு கட்டு போட்டார்.


மேலும் விழுந்த வேகத்தில் இடது கையில் அடிபட்டு அதிலும் கட்டு போட்டிருந்தனர்.


கணவனிடம் உண்மையை சொல்ல தைரியம் இல்லாமல் ஏதோ யோசித்து ஏதோ செய்து தன்னை இதுபோல வருத்திக் கொண்டாள் முட்டாள் பெண்.


மருத்துவமனையில் இருந்து கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து அறையில் படுக்க வைத்தான்.


அதிக வலியில் அவளால் படுக்க கூட முடியவில்லை. வலியில் அவளுக்கு கண்ணீர் சொரிந்தது.


பெயின் கில்லர் போட்டதன் உதவியால் சிறிது நேரம் உறங்கினாள்.


வளைகாப்பு முடிந்து வந்த பார்வதி அவனிடம் ஆடித்தீர்த்தார்.


“உன் மனசுல என்னதான் நினைச்சிட்டுருக்க அவ கால்ல லேசா அடிபட்டுருச்சு. அதுக்கு உன் தங்கச்சி வளைகாப்புக்கு கூட வர மாட்டியா” என்றார் பார்வதி கோபமாக.


“சூர்யா நா சொல்றேனு தப்பா எடுத்துக்காதே. நீ பண்றது தப்புனு உனக்கே தோணலையா? ஏன் வளைகாப்புக்கு வந்துட்டு உன் பொண்டாட்டிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா ஆகாதா. நல்லா தானே இருக்கா செத்தா போயிட்டா இவ்ளோ டிராமா பண்ற” என்றாள் கவிதா.


“அண்ணி என்ன பேச்சு பேசுறீங்க” என்றான் சூர்யா கோபமாக.


“ஏய் கவிதா உனக்கு அறிவில்ல வாய மூடு. அவளுக்கு என்னாச்சு எப்படி இருக்கானு விசாரிக்காம நீ பாட்டுக்கு லூசு மாதிரி உளர்ற” என அவளை கடிந்தான் சந்துரு.


“என்னை ஏன் அடக்குறீங்க? அண்ணன் தன் சொந்த தங்கச்சி வளைகாப்புக்கு வரலைனு உன் தங்கச்சிக்கு வருத்தம். தங்கச்சி வளைகாப்புக்கு வராத அண்ணன் எனக்கு தேவையே இல்லை. நான் அம்மா வீட்டுக்கு பிரசவத்துக்கு வரமாட்டேன் எனக்கு பிரசவத்துக்கு பிறந்த வீடே வேண்டாம். என் புருஷன் வீட்டிலேயே இருக்கிறேனு அவ கோபப்பட்டு இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டா” என்றாள் கவிதா.


“சூர்யா இவ சொல்றதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. மல்லிகாவுக்கு அவ புருஷனை விட்டுட்டு இங்க வர்றதுக்கு இஷ்டம் இல்லை அதனால அங்கேயே இருந்துக்கறேன உன் சொல்லிட்டா. அதுக்கு நீ வராதது ஒரு சாக்கு அவ்வளவுதான்” என்றான் சந்துரு.


“இதை விடு நீ சொல்லு மதி எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க” என்றான் சந்துரு.


“கால் கைலாம் நல்ல அடிபட்டுருக்குனு சொல்லி கட்டு போட்ருக்காங்க புல் ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க” என்றான் சோகமாக.


“கவலைப்படாத சரியாகிடும்” என தம்பியை தேற்றினான் சந்துரு.


சரியென அண்ணனிடம் தலையசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.


சந்துரு சென்றதும் “பார்த்தீங்களா அத்தை நீங்க அவள வரக்கூடாதுனு சொன்னீங்க மனசுல வஞ்சம் வச்சு உங்க பையனையும் வரவிடாம பண்ணிட்டா. சரியான ஆளுதான்” என பார்வதியை ஏத்திவிட்டால் கவிதா.


மருமகள் ஏத்திவிட்டதில் பார்வதியின் மனம் எரிமலையாக எரிந்தது.


“பவானிக்கா அவ நல்ல தூங்குறா நீங்க கொஞ்சம் அவளை பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடறேன். பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கோங்க. அவளை தனியாவிட்டு எங்கேயும் போகாதீங்க. ஏதாவதுனா எனக்கு கூப்பிடுங்க நான் வந்துடுறேன்” என உறக்கத்திலிருந்து மனைவியை பார்த்துவிட்டு சென்றான்.


வலி எடுக்க தூங்க முடியாமல் முழித்தாள் மதி.


அவளை கோபமாக பார்த்து முறைத்தார் பவானி.


“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா மதி லூசா நீ ஏன் இப்படி பண்ண?” என்றார் கோபமாக.


“அக்கா நான் என்ன பண்ணேன் தெரியாம தான்” என ஆரம்பித்தாள்.


“போதும் நிறுத்து பொய் சொல்லாதே. உன் மாமியார் உன்னை வளைகாப்புக்கு வரக்கூடாதுனு சொன்னாங்க உன் புருஷன்ட்ட என்ன காரணம் சொல்றதுனு தெரியாம படிக்கட்டில் உருண்டுட்ட” என்றார் சரியாக.


அவர் சரியாக சொன்னதும் தலை குனிந்தாள் மதி.


“ஒன்னு நீ உன் புருஷன்ட்ட உண்மைய சொல்லிருக்கணும் இல்லையா ஏதாவது சாக்கு சொல்லி போகாம இருக்கணும் இல்லையா புருஷன் கூட தானே போறோம்னு தைரியமா போயிருக்கணும். அதை விட்டுட்டு இப்படி பண்ணிருக்க ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிருந்தா என்ன பண்ணிருப்ப என்றார் கோபமாக.


“என்ன பண்றதுனு தெரியாம வேற வழி இல்லாம இப்படி பண்ணிட்டேன்” என்றாள் தலைகுனிந்து.


“படிச்ச பொண்ணு தானே முட்டாளா நீ? கால் கையில அடிபட்டுருச்சு சரி தலையில் அடைப்பட்டிருந்தால் என்ன பண்ணிருப்ப? பெருசா ஏதாவதுனா தம்பி என்ன பண்ணிருக்கும் என்றார் கோபமாக.


“ஐயோ! அக்கா என்ன பண்றதுனு தெரியாம தான் இப்படி பண்ணிட்டேன். நான் மட்டும் வேணும்னு பண்ணேன்னு சூர்யாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவரு என்னை வெறுத்துருவாரு” என அழுதாள்.


“இவ்வளவு பயம் இருக்கவ ஏன் இப்படி பண்ணனும்” என்றார் கோபமாக.


அதற்கு மதி ஏதோ சொல்லப் போக சரியாக அங்கே வந்தார் பார்வதி.


“பவானி எனக்கு ஒரு ஜூஸ் போட்டு கொண்டு வா” என பவானியை அங்கிருந்து கிளப்ப முயன்றார் பார்வதி.


“அம்மா தம்பி மதிய பக்கத்துல இருந்து பார்த்துக்க சொன்னாரு” என தயங்கினார் பவானி.


“நான் தான் சொல்றேன்ல போய் ஜூஸ் எடுத்துட்டு வா நான் பாத்துக்குறேன்” என அவளை அனுப்பினார் பார்வதி.


இந்தம்மா இன்னும் என்னெல்லாம் விஷத்தை கக்கப் போகுதோ என புலம்பியபடி வெளியேறினார் பவானி.


“சரியான கைகாரியாடி நீ உன்னை வரக்கூடாதுனு சொன்னதுக்கு படியிலிருந்து உருண்டு என் பையனையும் அவ தங்கச்சி வளைகாப்புக்கே வரவிடாம பண்ணிட்ல்ல நீ எல்லாம் நல்லாருப்பியா நீ நாசமாதான் போவ” என்றார் கோபமாக.


தொடரும்…
 
Status
Not open for further replies.
Top