எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

துயர் தீராயோ தூயவா! - 3

** 3 **

cf3ee6cb94fb4164512547b15b6e381c.jpg


“ஏய் வாணி… சமையல் ஆச்சா?” என்று கேட்டபடியே சமையலறைக்குள் வந்த கல்யாண சுந்தரி எரிந்துகொண்டிருந்த அடுப்பை பார்த்ததும்,


“இன்னும் சமையலை முடிக்காமல் என்னடி பண்ற? உங்க மாமா எதோ வேலையா வெளியே போகணும்னு நேத்தே சொன்னார் தானே? அதற்கு தகுந்த மாதிரி நேரமா எழுந்து அம்மணியால் அடுப்பை பற்றவைக்க முடியாதா?” என்று மருமகளை பேசவிடாமல் கத்தினார்.


“எல்லாம் ரெடியாகிடுச்சு அத்தை. ரசம் இறக்கிட்டால் போதும்” என்ற வாணியின் மனதில்,


‘இந்த கிழவி இப்படி எதாவது வம்பு பண்ணும்னு தெரிந்து தான் நாலு மணிகே எழுந்து சமையலை பண்ணேன். அது தெரிந்தும் திருவாயை திறந்துடுச்சு. என்னை குறை சொல்லலைனா இதுக்கு பொழுதே போகாது' என்று மாமியாரை கழுவி ஊற்றினாள்.


வாணியின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட கல்யாண சுந்தரி, “விடியும் முன்பு எழுந்து நாம வேலை செய்தது தெரிந்தும் கிழவி கத்தறாளே, இவளுக்கு குறை சொல்லலைனா தூக்கமே வராதானு தோனுதா?” என கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தார்.


மருமகளின் திடுக்கிடலை கண்டு இகழ்சியாக சிரித்தவர், “மனசுக்குள்ள நீ என்னை திட்டினால் எனக்கு தெரியாதுனு நினைத்தியா? எத்தனை வருஷமா உன்னை பார்க்கிறேன் இதைக்கூடவா புரிஞ்சிக்காமல் இருப்பேன்?” என்று கேட்டார்.


என்று மதுவனேஸ்வரன் கல்யாண சுந்தரியின் மகன் ஜம்புகேஸ்வரனின் மனைவியாக வாணி இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதே சம்பளமில்லாத வேலைக்காரியாக மாறிவிட்டார்... இல்லையில்லை மாற்றப்பட்டுவிட்டார்.


இயல்பிலேயே எல்லாரையும் அனுசரித்து போகும் குணம் கொண்ட வாணிக்கு தன் நிலை புரியவும் மௌனியாகிவிட்டார்.


அதற்கு தகுந்தது போல் அவரின் கணவன் ஜம்புகேஸ்வரன் பெற்றோர்களின் சொல் தட்டாத மகனாக இருக்கவே எளிதாக வாணி கொத்தடிமையாகவே மாற்றப்பட்டுவிட்டார்.


புதிதாக திருமணம் முடித்து புகுந்த வீட்டில் வரும் பெண்ணுக்கு கணவனின் துணை எவ்வளவு முக்கியமோ அதே போல் பிறந்த வீட்டினரின் ஆறுதலும் அவசியம். இந்த இரண்டில் எது இல்லையென்றாலும் அவளின் நிலை மதில் மேல் பூனை தான்.


இங்கு வாணிக்கோ எந்த பக்கமும் ஆதரவு இல்லாமல் போக அவரின் உணர்வுகள் சிறுகச்சிறுக நசுக்கப்பட்டது.


“அப்படியெல்லாம் இல்லைங்க அத்தை” என பதறிப்போய் சொன்ன வாணியிடம்,


“இந்த எகத்தாலமெல்லாம் என்னிடம் வேண்டாம். பொம்பளையா லட்சணமா இருந்திக்கிட்டனா உனக்கு நல்லது” என கோபமாக சொன்னார்.


அப்பொழுது அங்கு வந்த ஐராவதி, “பொம்பளையா லட்சணமா இருக்கணுமா? எப்படி உங்களை மாதிரியா பாட்டி?” என நக்கலாக கேட்டாள்.


அவளின் பேச்சில் கடுப்பான கல்யாண சுந்தரி, “இத்தனைபட்டும் இந்த வாய்க்கு ஒன்னும் குறையில்லை” என்று இகழச்சியாக சொன்னவர்,


மருமகளை பார்த்து, “பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறதை பார். அவளும் அவ வாயும். இத்தனை வாயிருந்தா இதெல்லாம் எங்க உருப்படப்போகுது? கடைசி வரை இப்படியே இருக்க வேண்டியாது தான்” என வஞ்சம் நிறைந்த குரலில் கூறினார்.


“அப்படி என்ன எங்க அம்மா வளர்ப்பில் குறை கண்டீங்க பாட்டி? சொல்லுங்க பார்க்கலாம்” என அழுத்தமாக கேட்ட ஐராவதி,


“உங்களை மாதிரி அடக்க ஒடுக்கமா இருப்பதற்கு பதிலா இப்படியே இருந்திடலாம்” என்றார்.


“சும்மா இரு ஐரா” என்று மகளை அடக்கிய வாணி,


மாமியாரிடம், “சின்ன பிள்ளை எதோ தெரியாமல் பேசிட்டா அத்தை, நீங்க எதையும் மனசுல வச்சுக்காதிங்க” என கெஞ்சலாக கேட்டார்.


“இவளா சின்னப்பிள்ளை? விஷம், அத்தனையும் விஷம்” என்றவர்,


“இந்த திமிருக்கு தான் ஆண்டவன் உன்னுடைய மகளுக்கு சரியான தண்டனையை கொடுத்திருக்கான். அப்பையாவது புத்தி வருதானு பார்? திருந்தாத ஜென்மம்” என்று வார்த்தைகளை ஈட்டியாக பாய்ச்சினார்.


அது சரியாக ஐராவதியை தாக்கவும் கண்கள் போல் மனமும் கலங்கிவிட்டது.


மாமியாரின் பேச்சில் அதிர்ந்த வாணி மகளின் கண்ணீரை கண்டு துடிதுடித்து போய்விட்டார்.


மனம் கேளாமல், “எவ்வளவு பெரிய வார்த்தையை சாதாரணமா சொல்லிட்டீங்க. அதை கேட்டவங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்கமாட்டீங்களா அத்தை?” என சற்று குரலை உயர்த்தி கேட்டார்.


“என்னடி குரல் உயருது? என்னையே அதிகாரம் பண்ண பார்க்கிறியா? இருக்கிற இடம் தெரியாமல் இருக்கனும், இல்லை உனக்கும் உன்னுடைய மகள் நிலை தான் ஜாக்கிரதை” என மிரட்டினார்.


“யார் இங்க அதிகாரம் பண்றாங்கனு அந்த ஆண்டவனுக்கு தெரியும் அதை நீங்க சொல்லாதிங்க பாட்டி” என்ற ஐராவதி,


“என்னால் எனக்கு இந்த நிலை வரலை. நீங்க எல்லாரும் செய்த பாவத்தின் பலனை நான் அனுபவிக்கிறேன். கொஞ்ச ஆட்டமா ஆடுனீங்க? எல்லாத்துக்கும் இருக்கு! கவலைபடாதிங்க கூடிய சீக்கிரமே அனுபவிப்பீங்க அப்ப வச்சிக்கிறேன் உங்களை” என்று அழுகையை விழுங்கிக்கொண்டு நிமிர்வாக கூறினாள்.


பேத்தியின் குற்றச்சாட்டில் வெகுண்டவர், “யாருக்கு யார்டி பாவம் பண்ணியது?”” என ஆவேசமாக கேட்டார்.


“ஏன் அது உங்களுக்கு தெரியாதா? மறந்திடுச்சா என்ன? ஒன்னு ரெண்டு தப்பு பண்ணயிருந்தால் நினைவிருக்கும். நீங்க எல்லாரும் தான் தப்பை தவிற வேற எதையும் பண்ணியதில்லையே?” என முகத்தை சுருக்கியபடி கூறினாள்.


“அவங்க தான் பேசறாங்கன்னா பதிலுக்கு நீயும் பேசனுமா ஐரா?” என கேட்ட வாணி,


“ஒருத்தர் தப்பு பண்ணா நீயும் அதையே பண்ண வேண்டிய அவசியம் என்ன? நம்ம வழியில் நாம போனா போதும்.

வீண் வம்பை வாங்கிக்காத அப்புறம் இருக்கிற கொஞ்ச நிம்மதியும் போயிடும்” என அழுத்தமாக மகளிடம் கூறினார்.


“அவளுக்கு நல்லா சொல்லி புரியவை. இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என வாணியிடம் மிரட்டலாக கூறினார்.


“அங்க என்ன சத்தம்? வீடா இது? சந்தகடையாட்டம் எப்பப்பார் ஒரே சத்தம்” என்று மதுவனேஸ்வரன் கத்தவும் பெண்கள் மூவரும் வெளியே விரைந்தனர்.


சமையலறையிலிருந்து வந்தவர்களை பார்த்தவர், “காலங்காத்தால சமையலை பார்ப்பதை விட்டுட்டு என்ன வாதம் வேண்டி இருக்கு? வேலை வேலைனு அழையற ஆம்பளைங்க வீட்டிற்கு வந்தா நிம்மதியா இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனால் இங்க அப்படியா இருக்கு? எழுந்ததிலிருந்து படுப்பதுவரை எதாவது ஒரு பஞ்சாயத்து” என்று அனைவரையும் திட்டினார்.


தந்தையின் கோபம் பெருகுவதை கண்டு இடை புகுந்த ஜம்புகேஸ்வரன், “அப்பா. டைம் ஆகுது, பார்ட்டி வேற வெயிட் பண்ணுவாங்க இப்ப போனால் தான் சரியா இருக்கும்” என்றார்.


“மனசு நிம்மதியா இருந்தால் தான தொழிலில் கவனம் வைக்க முடியும் ஜம்பு? இவங்களையெல்லாம் வச்சுக்கிட்டு எப்படி ஒரு வேலையை உருப்படியா பண்றது?” என கோபமாக கேட்டவர் வெளியே செல்ல போகவும்.


கல்யாண சுந்தரி, “சாப்பிட்டு கிளம்புங்க. எல்லாம் ரெடியாகிடுச்சு” என்று கணவனை அழைத்தார்.


“நீ குடும்பம் பண்ற லட்சணத்துக்கு நான் சாப்பிடாதது தான் குறையா போச்சு” என கத்திய மதுவனேஸ்வரன்,


“இத்தனை வயதாகியும் சத்தமிடாமல் எப்படி குடும்பம் நடத்துவதிங்கிறது உனக்கு தெரியாதாடி? உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு..” என ஏதோ சொல்ல வந்தரிடம்.


கல்யாண சுந்தரி, “இந்த வீட்டில் யார் என் பேச்சை கேட்கிறாங்க? எல்லாம் அவங்கவங்க பண்ணாட்டு தானே” என்றவர்,


“நேத்து பிறந்து இந்த சில்வண்டெல்லாம் என்னை பார்த்து கைநீட்டி பேசுது அப்புறம் எப்படி நான் சொல்ற வார்த்தைக்கு மரியாதை இருக்கும்?” என பேத்தியை காட்டி கூறினார்.


மருமகளின் பின் நின்ற பேத்தியை கண்டதும் மதுவனேஸ்வரன், “வேலையா நாங்க வெளியே போகும் போது முன்னாடி வந்து நிற்காதனு எத்தனை நாளைக்கு உன்னிடம் சொல்வது? சூடு சுரணை இருந்தா ஒரு முறை சொன்னதும் ஒதுங்கி இருந்திருக்கனும். அதுதான் உனக்கு இல்லையே” என வெறுப்பாக கூறியவர்,


மகனை பார்த்து, “இன்னைக்கு போற காரியம் விலங்கின மாதிரி தான். முதலில் நீ பெத்த சனியனை உள்ள போக சொல்லுடா பார்க்க பார்க்க எரிச்சலாக வருது” என்றார்.


“தாத்தா சொல்றாங்க தானே போ ஐரா” என்ற தந்தையை ஐரா இமைக்காமல் பார்த்தாள் என்றால், வாணியோ ஊமையாக கண்ணீர் வடித்தார்.


ஏற்கனவே மகளின் நிலை கண்டு உடைந்து போயிருந்தவருக்கு கணவனின் செயல் மனதை சுக்கல் சுக்கலாக கூறு போட்டது.


அதே வேதனையோடு கணவனை பார்த்தவரின் பார்வை ஆயிரம் கேள்வி கேட்டது.


மனைவியின் பார்வையை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் ஜம்புகேஸ்வரன் தடுமாறினார்.


தந்தையின் தடுமாற்றத்தை கண்டு நக்கலாக சிரித்த ஐராவதி, “மனசு குறுகுறுக்குதாப்பா?” என கேட்டாள்.


மகளின் கேள்வியில் சடாரென்று நிமிர்ந்து பார்த்த ஜம்புகேஸ்வரன் அவளின் கண்களில் தெரிந்த குற்றச்சாட்டில் மீண்டும் தலைகுனிந்தார்.


பேத்தியின் கேள்விக்கு தலைகுனிந்த மகனை கண்டு வெறிகொண்ட மதுவனேஸ்வரன், “என்ன வாய் நீளுது? துளிர்விட்டு போச்சா?” என்று அழுத்தமாக கேட்டார்.


“நீங்க பண்ணிய காரியத்திற்கு நான் இது கூட பேசாமல் இருந்தா பிணத்திற்கு சமம்” என்ற ஐராவதி,


“அது எப்படி பண்ற அத்தனையும் பண்ணிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி வெள்ளையும் சொல்லையுமா கிளம்பிடுறீங்க? மனசு குறுகுறுக்காதா? அப்படி ஒன்னு இருந்தால் தானே? உங்களுக்கு தான் மனசுங்கிறதே இல்லையே, இருந்திருந்தால் ஏன் என் வாழ்க்கை இப்படி ஆகியிரிக்கப்போகுது?” என அழுத்தமாக கேட்டாள்.


“அது உன் விதி. நீ செய்த பாவம்” என்று மதுவனேஸ்வரன் மனசாட்சியே இல்லாமல் கூறினார்.


“அது விதியில் நீங்க செய்த சதி” என்ற ஐராவதி,


“என்ன மறந்துட்டீங்களா? முப்பது வருஷத்திற்கு முன் நடந்ததை நினைத்து பாருங்க எல்லாம் நியாபகத்திற்கு வரும். அப்பவும் நினைவுக்கு வரலைனா சொல்லுங்க நான் வேணால் நியாபகப்படுத்தறேன்” என்று அழுத்தமாக கூறினாள்.


இதை கேட்ட கல்யாண சுந்தரி, மதுவனேஸ்வரன் மற்றும் ஜம்பிகேஸ்வரனின் முகம் மாறிவிட்டது.


இவர்களின் முகத்தை கண்டு பயந்த வாணி, “அமைதியா வாடி. பேசி உனக்கு அதே நிலை வந்திடப்போகுது” என்றபடி மகளை இழுத்துச்சென்றார்.


இவர்கள் நகர்ந்து சென்றதும் கல்யாண சுந்தரி, “பார்த்திங்களா உங்க முன்பே எப்படி பேசறானு? இப்படித்தான் தினமும் என்னிடம் வம்பு பண்ணிக்கிட்டே சுத்தறா” என்று பேட்டுக்கொடுத்தார்.


“அதுக்கு என்ன பண்ணணும்னு சொல்ற? முதலில் நீ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தால் ஐராவும் அமைதியா இருப்பா” என பல்லைகடித்தபடி சொன்னவர்,


“அஜனும் மதுமிதாவும் மதியம் போல் வீட்டுக்கு வந்திடுவாங்க. அவங்க வரும்போது எதாவது பண்ணி பிரச்சனையாச்சு, கொன்னுடுவேன்” என்றவர் மகனை பார்க்க அவரோ இமைக்காமல் தந்தையை தான் பார்த்தார்.


மகனின் பார்வையின் பொருள் புரியாமல் பெற்றோர்கள் இருவரும் விழிக்க ஜம்புகேஸ்வரன் அமைதியாக வெளியே சென்றுவிட்டார்.


செல்லும் மகனையே பார்த்தபடி கல்யாண சுந்தரி, “இவன் பார்வையே சரியில்லைங்க” என்க.


மதுவனேஸ்வரன், “நாளைக்கு கோயிலுக்கு அண்ணன், தம்பி, அக்கா மூனு பேரும் வராங்க அப்ப பேசிக்கலாம் இப்ப எதுவும் பேசாதே. அப்புறம் எல்லாம் நம்ம கைமீறி போயிடும்” என்றவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.


மகளை அவளின் அறைக்கு அழைத்துச்சென்று கதவடைத்த வாணி, “ஏன்டி? ஏன்? சும்மாவே இருக்கமாட்டியா? நானே அடுத்து என்ன பண்ணுவாங்களோங்கிற பயத்தில் உயிரை கையில் பிடிச்சுக்கிட்டு இருக்கேன். இதில் நீவேற பேசியே அவங்களை தூண்டிவிடுற” என கண்களில் கண்ணீர் வடிய கேட்டார்.


“இதற்கெல்லாம் பயந்தால் உயிரோடு எனக்கு சமாதி கட்டிடுவாங்கமா. சரிக்கு சமமா துணிந்து பேசினால் தான் அமைதியா இருப்பாங்க” என்றவள்,


“இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் பயந்து பயந்து சாகப்போறமோ? உன்னுடைய அமைதிக்கான விளைவு பார்த்தும் ஏன்மா பொறுமையா இருக்க?” என வேதனையாக கேட்டாள்.


“என்னுடைய வாழ்க்கை முடிந்து போச்சு. என்னை நினைத்து நீ கவலைபடாதே ஐரா” என்ற வாணி,


“உன்னுடைய வாழ்க்கை சரியாகிடுச்சுனா எனக்கு அதுவே போதும். பாதி பாரம் இறங்கிடும்” என்றார்.


“அப்ப நான் உனக்கு பாரமாமா?” என ஐராவதி கேட்க.


“பாரமாக நினைத்திருந்தால் நான் ஏண்டி இத்தனை பாடுபடப்போறேன்? எப்பவோ தொங்கியிருப்பேன். உனக்காக மட்டும் தான் இந்த உடம்பில் உயிர் ஓடுது” என்றவர்,


“உன் அண்ணனை பத்தி பிரச்சனையில்லை எல்லாத்தையும் சமாளிச்சிக்குவான். அவ்வளவு ஏன் உன்னையும் கூட நல்லா பார்த்துப்பான் தான், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என் பொண்ணு வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன். யாரையும் நம்பி உன் எதிர்காலத்தை ஒப்படைக்க நான் விரும்பலை” என அழுத்தமாக கூறியவரின் மடியில் படுத்திக்கொண்ட ஐராவதி,


“நாம ரெண்டு பேரும் எங்கேயாவது கண்காணாமல் போயிடலாம் ம்மா” என்றாள்.


“தப்பு செய்தவங்கள் எல்லாரும் நிம்மதியா இருக்கும் போது எந்த தவறும் செய்யாத நாம ஏன்டி ஓடனும்? இருந்த இடத்திலிருந்தே சாதிக்கணும்” என்றார்.


‘போயிடு… நீ இங்க இருக்காத. இந்த வீடு உனக்கு நரகம். எங்கேயாவது கண்காணாமல் போய் நிம்மதியா இரு' என்று தான் அன்று ஒருவரிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து மன வேதனையை இன்னும் கூட்டியது.


இந்த வேதனைக்கு காரணம் அந்த நபர் சென்றதால் இல்லை, தற்போது அவர் எங்கே எப்படி இருக்கிறாரோ என்ற எண்ணம்.


அன்னையின் மனதில் தன்னை பற்றி மட்டுமில்லாது தான் அறியாத இன்னும் பல வேதனைகளும் ரகசியங்களும் மறைந்திருக்கிறது என்று ஐராவதி அறியாமல் போனாள்.

 
Last edited:
Top