எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் - 1

NNK-64

Moderator
திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக!


அத்தியாயம் 1


அன்று பெளர்ணமி இரவு, மணி ஒன்பது

எப்போதும் போல நிரஞ்சன் தன்னுடைய வெண்ணிற ஆடி காரில் பெசன்ட் நகரில் இருக்கும் அஷ்டலட்சுமி கோயிலுக்கு சென்று வணங்கி விட்டு, கடலின் அலையை ரசித்து கொண்டிருந்தான்..

பெளர்ணமியில் அலைகள் சற்று அதிகமாகவே ஆர்பரிப்பதை காண்பதில் அவனுக்கு அலாதி பிரியம்.. ஒவ்வொரு பெரிய அலையும் இயற்கையின் ஆளுமையை அவனுக்கு உணர்த்துவதாக இருக்கும்..

எனவே ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அஷ்ட லட்சுமி கோயிலுக்கு செல்வதும் கடலை ரசிப்பதும் அவனது பிடித்தமான ஒரு வழக்கம்.. அது மட்டுமில்லாமல் அங்கே கையேந்திபவனில் இட்லி கடை வைத்திருக்கும் அன்னம்மாவின் கைப்பக்குவத்தில் இரவு சாப்பாட்டை முடித்து கொண்டே தன்னுடைய பிளாட்டிற்கு போவான்..

கடலை ரசித்தவாறே, திரும்பி அன்னம்மாவின் கடையை பார்த்தான்.

“என்னா டாக்டரு, இன்றைக்கு வர லேட்டாயிடுச்சு போல.. இப்ப தான் இட்லி ஊத்தியிருக்கேன்.. இறக்கனதும் கூப்படறேன், சூடா சாப்பிடுங்க” என்றாள் அவனை பார்த்து சத்தமாக..

“சரி அன்னம்மா” என்று சொல்லியவன்.. கொஞ்ச நேரம் அப்படியே நின்றபடி பார்த்து கொண்டிருந்து விட்டு சுற்றுபுறம் பார்வையை செலுத்தினான்..

அங்கே ஒருவன் ஒரு பெண்ணிடம் ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருப்பதும், அந்த பெண் மறுப்பதும் தெரிந்தது..

அன்னம்மாவின் கடை அருகே சென்றான் நிரஞ்சன்.. “என்ன அன்னம்மா, அங்கே ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டான்..

“தெரியலை சாரே.. அந்த பொண்ணு ரொம்ப நேரம் தனியாக நின்னுட்டு இருந்துச்சு.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் அந்த பையன் வந்தான்.. வந்ததிலிருந்து அவன் ஏதோ சொல்றதும், அதுக்கு அந்த பொண்ணு மறுத்து தலை ஆட்றதும் தான் தெரியுது, என்னா பிரச்சனைனு தெரியலை” என்றாள்

“சரி, இரு நான் என்னனு போய் பார்த்திட்டு வரேன்” என்று அவர்களை நோக்கி சென்றான்..

“இவ்வளவு தூரம் வந்திட்டு இப்படி வேணாம்னு அடம் பிடிச்சா எப்படி எழிலு.. நான் எல்லா ஏற்பாடு செய்து முடிக்க எம்மா பணம் செலவு பண்ணிக்கினேனு தெரியுமா?” என்று அந்த இளைஞன் சொல்லி கொண்டிருந்தான்..

அந்த பெண்ணோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தலையை குனிந்து வேண்டாம் என்பது போல தலையை மட்டும் இடம் வலமாக வேகமாக ஆட்டி கொண்டிருந்தாள்.. உடல் பதட்டத்தில் நடுங்கி கொண்டிருந்தது..

பேசி கொண்டிருந்த அந்த இளைஞன் தெரு விளக்கின் ஒளியில் தெரிந்த பெரிய நிழலை கண்டு பேச்சை நிறுத்தி திரும்பி பார்த்தான்.. அங்கே ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக தன் உயரத்திற்கு ஒருவன் நின்றிருந்தான்.. தன் பேண்டின் இரு பாக்கெட்டிலும் தன் இருகைகளையும் நுழைத்து படு ஸ்டைலாக அவன் நின்றிருந்த விதம் அந்த இளைஞனையே ஒரு கணம் கவர்ந்தது..

அவனின் தோற்றம் தந்த மதிப்பில், “என்ன சார்?” என்றான் அவன் கேள்வியாக..

“இங்கே ஏதும் பிரச்சனையா?, ஏன் அந்த பெண்ணை வற்புறுத்தறீங்க?” என்றான் நிரஞ்சன்..

“அதெல்லாம் இல்லை சார், நாங்க காதலர்கள்… என் மேல் கோவிச்சிட்டு இருக்காங்க.. அதுதான் சமாதானம் செய்துட்டு இருக்கேன்” என்றான் அவன்..

நிரஞ்சன் நேராக அந்த பெண்ணை பார்த்து “அப்படியா மிஸ்?” என்றான்..

அவளோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.. சற்று நேரம் அவளின் பதிலுக்காக அப்படியே நின்றிருந்தான் நிரஞ்சன்.. அவள் பதில் சொல்லவுமில்லை, அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை..

எதோ பிரச்சனை என்றால் உதவி கேட்டிருப்பாள் தானே என்று நினைத்தவன் தன் தோளை குலுக்கி கொண்டு “சாரி மிஸ்டர், யூ கேரி ஆன்” என்று சொல்லி விட்டு மீண்டும் அன்னம்மாவின் கடை அருகே சென்றான்..

“என்னாவாம் சார்” என்றாள் அன்னம்மா..

“காதலர்களாம் அன்னம்மா, நீங்க எனக்கு இட்லியை வைங்க, சாப்பிட்டு கிளம்பறேன்.. இன்னிக்கு அசதியாக இருக்கு.. சீக்கிரம் போய் தூங்கணும்” என்றான்..

“சரி சாரே, சாப்பிட்டு போய் ஓய்வெடுத்துக்கோ.. சீக்கிரம் ஒரு கண்ணாலம் பண்ணிக்கிட்டா எல்லாம் வர்றவ பாத்துப்பா” என்றபடி இட்லியை தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தாள்..

நிரஞ்சன் அதற்கு பதில் சொல்லாமல் அவள் கொடுத்த இட்லியை வாங்கி உண்ண தொடங்கினான்.

சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் தன்னையும் அறியாமல் அந்த இளைஞனையும் பெண்ணையும் பார்த்தான்.. அவனை பார்த்தால் லோக்கல் ரவுடி போலவே தெரிந்தது.. தூரத்தில் அந்த பெண்ணின் முகம் தெளிவாக தெரியாவிட்டாலும் அவளின் உடல் வாகும் சிவந்த கரங்களும் நல்ல அழகியாக இருப்பாள் என்றே தோன்றியது..

அவனுக்கு ஏதோ ஒரு சினிமா படத்தில் வரும் “சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி, இந்த பொண்ணுங்க எல்லாம் சல்லி பசங்களை தான் லவ் பண்றாங்க” என்ற ஒரு நடிகனின் டயலாக் அப்போது நினைவில் வந்தது.. மென்மையாக புன்னகைத்தபடி சாப்பிட்டான்..

சற்று நேரத்தில் அந்த இளைஞன் அருகே ஒரு கார் வந்து நின்றது.. அதிலிருந்து இரண்டு ஆண்கள் இறங்கினர்..இப்போது அந்த இளைஞன் அந்த பெண்ணை காரில் ஏறுமாறு வற்புறுத்தி கொண்டிருக்க, அவள் மறுத்து கொண்டிருந்தாள்..

ஏதோ சரியில்லை என்று தோன்ற அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

பொறுமை இழந்த அந்த இளைஞன் இப்போது அந்த பெண்ணின் கைகளை பற்றி இழுக்க தொடங்கினான்.. அவள் நின்ற இடத்திலிருந்து நகராமல் அவனிடம் மறுத்து தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்து கொள்ள போராடினாள்..

“சார் அங்கே என்னானு கொஞ்சம் பாரு.. நானும் இதை எல்லாம் எடுத்து வைச்சிட்டு வரேன்” என்றாள் அன்னம்மா..

நிரஞ்சன் நேராக சென்று அந்த இளைஞனின் கைகளை வலுவாக பற்றி நிறுத்தினான்..

அவன் கைகளை இழுப்பது நின்று விடவே அதிர்ச்சியில் அந்த பெண் இப்போது நிமிர்ந்து நிரஞ்சனை பார்த்தாள்.. அவள் கண்கள் கலங்கியிருந்தது.. உதடுகள் துடிப்பதை கஷ்டபட்டு அடக்க முயன்றாள்.. எங்கே கதறி அழுதுவிடுவோமோ என்று தன்னை அடக்க முற்பட்டவளின் உடல் அவள் பேச்சை கேட்காமல் உதற தொடங்கி இருந்தது..

“சார் நான் தான் முதல்லயே சொன்னேனே, இவள் என்னுடைய காதலி.. திருமணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்து இங்க வரைக்கும் வந்துட்டாள்.. இப்போ என்னவோ திடீர்னு வரமாட்டேனு அடம் பிடிக்கிறாள்.. இது எங்க பிரச்சனை.. நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க போங்க” என்றான் அவன் கோபத்தை அடக்கியபடி..

“இப்போ வர மறுக்கிறாங்க தானே.. ஏன் கட்டாயபடுத்தறீங்க.. விடுங்க அவங்களை” என்றான் நிரஞ்சன்..

“எழில், உன்னால வர்றவங்க போறவங்க எல்லாம் கேள்வி கேட்கறாங்க பாரு. வண்டில ஏறு.. அப்புறமாக பேசிக்கலாம்” என்றான் தணிந்த குரலில்..

அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தாலும், தலையை மட்டும் முடியாது என்று பலமாக ஆட்டினாள்..

அதில் பொறுமை இழந்தவன் தன் நண்பர்களை கார் கதவை திறக்க சொல்லி, அவளை பலவந்தமாக உள்ளே தள்ள முயற்சித்தான்..

நொடிப்பொழுதில் நிரஞ்சன் அந்த பெண்ணின் கைப்பற்றி இழுத்து தன் அருகில் அணைத்தவாறு நிறுத்தி கொண்டான்..

அவன் அப்படி செய்வான் என்று யாருமே எதிர்பார்க்காததால் திகைத்து நின்றனர்.. அந்த பெண் தன் முழுபலத்தையும் அந்த இளைஞனிடம் தன் எதிர்ப்பை காட்டி கொண்டிருந்ததால், நிரஞ்சன் இழுத்ததும் அவன் மேல் அப்படியே சாய்ந்து விட்டாள்..

எல்லாரையும் நோக்கி சொடுக்கிட்டான் நிரஞ்சன்.. ஐந்து நிமிடம் உங்களுக்கு அவகாசம் தரேன்.. நீங்க மூன்று பேரும் இந்த காரும் இங்கே இருக்க கூடாது..என்றான் அதிகாரமான குரலில்..

அவனின் தோரணையான உருவத்திலும் குரலிலும் சற்றே அவர்கள் பின்னடைந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. ஒருவேளை போலீசாக இருப்பானோ என்று அவர்களுக்கு தோன்றியது

அந்த இளைஞன், “எழில் நீ என்னை அசிங்கபடுத்திட்டு இருக்கேனு புரியுதா? நீயும் நானும் செய்த முடிவு தானே..இப்போ என்னவோ நான் கடத்திட்டு போறது போல டிராமா போட்டிட்டு இருக்க?” என்றான் கோபமான குரலில்

அவள் பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு தன் கைகளை மட்டும் கூப்பினாள்..

இனி அவளிடம் பேசி பயனில்லை என்று தோன்றியதோ என்னவோ.. அவன் தன் நண்பர்களிடம் கண்களால் கிளம்பலாம் என்று சைகை செய்து விட்டு காரில் ஏறினான்.. அவர்கள் மூவரும் காரில் ஏறி சென்றனர்.. அந்த இளைஞன் அவளை ஐன்னல் வழியாக குரூரத்துடன் பார்த்து கொண்டே சென்றான்..

அந்த பெண்ணோ அதை உணராமல் இன்னமும் நிரஞ்சன் மேல் சாய்ந்து தலை கவிழ்ந்து நின்றிருந்தாள்..

“அவங்க போய்ட்டாங்க” என்றான் மெல்லிய குரலில்

அவளுக்கு அதில் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.. அவள் தோளை தன் இருகைகளாலும் பற்றி லேசாக உலுக்கினான்.. அதில் சுய உணர்வு பெற்றவள் போல பதறி அவனிடமிருந்து விலகி நின்றாள்..

அவனை பார்த்து பேந்த பேந்த விழித்தாள்.. உடல் இன்னமும் நடுங்கி கொண்டு தான் இருந்தது..

“ரிலாக்ஸ், ஒண்ணும் பிரச்சனை இல்லை…பதட்டபடாதீங்க” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே அன்னம்மாள் அவர்கள் அருகே வந்தாள்..

“பயப்படாதே கண்ணு. டாக்டர் சார் ரொம்ப நல்லவர்.. நீ முதல்ல என் கூட வந்து சாப்பிடு” என்று அவளை அழைத்து கொண்டு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து தட்டில் இட்லி வைத்து கொடுத்தாள்..

அவள் வேண்டாம் என்று மறுக்கவும், “எம்மா நேரமா அங்கே நின்னுகினு இருந்தே.. எப்போ சாப்பிட்டயோ.. சும்மா சாப்பிடுமா, கூச்சப்படாதே” என்று அந்த தட்டை அவள் கைகளில் திணித்தாள்..

அவளுக்கும் பசி போல, மீண்டும் மறுக்காமல் சாப்பிட தொடங்கினாள்.. அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நிரஞ்சனும் அன்னம்மாளும் அமைதியாக நின்றிருந்தினர்..

அதற்குள் மணி பதினொன்றை கடந்திருக்க காவல் துறை காவலர் அவர்கள் அருகே வந்தார்..

“என்ன அன்னம்மா, இன்னும் இன்னைக்கு கடையை சாத்தலையா, பத்து மணியோட கிளம்பணும்னு தெரியாதா” என்றார்

“ஐயா, இது நம்ம டாக்டரு, அந்தம்மா அவங்க சொந்தம்.. கிளம்பும் போது பசினு வந்துட்டாங்க..அது தான் மனசு கேக்காம சாப்பிட கொடுத்தேன்..இதோ இப்ப கிளம்பிடுறேன்ய்யா..” என்றாள் அன்னம்மா பதிவிசாக

அதன் பின் அவர் நிரஞ்சனிடம் பொதுவாக சில நிமிடங்கள் பேசி விட்டு கிளம்பினார்..

“நீ எங்க போகணும்னு சொன்னால், டாக்டர் கூட்டிட்டு போய் விட்டுடுவாரு.. இந்த நேரத்தில் ஆட்டோ டாக்சி எல்லாம் சரியாக இருக்காது” என்றாள்..

அவள் ஒரு நிமிடம் நிரஞ்சனை மருண்ட பார்வை பார்த்து விட்டு, மெல்ல தன் செவ்விதழை திறந்து பேசினாள்..

“நா நான் உங்க கூடவே வரட்டுமா அக்கா… நாளைக்கு காலைல நான் கிளம்பிடுவேன்” என்றாள் சற்று தயங்கிய குரலில்..

குரலின் இனிமையை ரசித்தவனுக்கு, அவள் தன்னுடன் வர மறுப்பது புரிய சற்று கடுப்பாகவே இருந்தது..

அதற்குள் அன்னம்மாவோ.. “இல்ல கண்ணு, எங்க வீடு சின்ன குடிசை, என் மாமன் மீன் புடிக்க போயிட்டு லேட்டா குடிச்சிட்டு வரும்.. அந்த குடிகாரன பார்த்தா நீ இன்னும் பயந்துடுவ.. இந்த சாரை எனக்கு ரொம்ப வருஷமாக தெரியும்.. எங்கே போகணும்னு சொல்லு.. அவரு உன்னை பத்திரமாக கொண்டு போய் விடுவாரு” என்றாள்

அந்த பெண் பலமாக யோசிப்பது நிரஞ்சனுக்கு சற்று அவமானமாக தோன்ற, “சரி அன்னம்மா, அவங்க எங்கே போகணும்னு சொல்றாங்களோ, அனுப்பி வைச்சிடு.. எதுக்கும் இந்த பணத்தை செலவுக்கு வைச்சிக்கோ.. நான் கிளம்புறேன், ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு என்று கார் சாவியை சுழற்றி கொண்டு தன் வெண்ணிற ஆடி காரை நோக்கி சென்றான்..

“கண்ணு, நான் தான் சொல்றேன் இல்ல…இப்போ ரொம்ப நேரமாயிடுச்சு.. உன்னை யாரை நம்பியும் அனுப்ப முடியாது.. எந்த பொண்ணையும் விட மாட்டானுங்க.. நீ வேற இம்புட்டு அழகா இருக்க.. அவர் கூட போ தாயீ.. நல்ல மனுசன்.. அவர் தானே உன்னை காப்பாத்துனாரு..

என் புருஷன் சரியில்லமா..இல்லைனா நானே உன்னை கூட்டிட்டு போயிடுவேன்” என்றாள் அன்னம்மா..

இப்போது அந்த பெண் சம்மதமாக தலையை அசைக்கவும்..”டாக்டரு” என்று கூவினாள் அன்னம்மா.. இந்த பொண்ணை கொஞ்சம் அவள் சொல்ற இடத்தில வுட்டுட்டு போயிடு.. உனக்கு புண்ணியமா போவும்” என்றாள்..

“வர சொல்லு அன்னம்மா” என்றபடி காரில் ஏறினான்..

அவள் வந்து பின் இருக்கையில் அமர போக, “யாராவது பார்த்தால் ஒரு பெண்ணை டாக்டர் எங்கேயோ கூட்டிட்டு போறார்னு சொல்வாங்க.. முன் சீட்டில் உட்காருங்க.. “ என்றான்..

அவளும் பதில் சொல்லாமல் முன் இருக்கையில் அமர்ந்தாள்.. பின் அன்னம்மா அவளிடம், “கண்ணு நீ மறுபடியும் ஒரு நாள் இங்கினயே வந்து என்னான்ட பேசிட்டு போ.. நீ எப்படி இருக்கனு நானும் தெரிஞ்சப்பேன் இல்ல” என்றாள்..

“சரி” என்பது போல ஒரு தலையசைப்பு மட்டும் அவளிடம்..

காரை செலுத்திக் கொண்டே நிரஞ்சன் அவள் மேல் பார்வையை செலுத்தினான்..

தலை கேசம் கலைந்திருந்தது.. அழுததில் கண்கள், மூக்கு, முகம் எல்லாம் மிளகாய் பழம் போல சிவந்திருந்தது..ஒரு சிறு ஒப்பனையும் அவள் முகத்தில் இல்லை.. ஆனாலும் அழகாக இருந்தாள். இயல்பாகவே செர்ரி பழம் போல சிவந்திருந்த உதடுகள் என்று அவனின் அளவீட்டை மேற்கொண்டு செல்லாமல் கடிவாளம் இட்டு தன் பார்வையை பாதையில் செலுத்தினான்.

“எங்கே போகணும்” என்றான்.. அவள் ஏதோ யோசனையில் இருந்தாள்..இவன் கேட்டது அவள் காதில் விழவில்லை போல..

“ஹலோ, எங்கே போகணும்னு கேட்டேன்” என்றான் சத்தமாக..

அதில் அவள் உடல் அதிர்ந்து குலுங்கியது.. பதட்டமாக அவனை பார்த்தாள்.. கண்கள் படபடத்தது..

“ரிலாக்ஸ், ஏன் இவ்வளவு பதட்டம்? எங்கே போகணும்னு தானே கேட்டேன்.. சொன்னால் தானே அந்த பாதையை நோக்கி செல்ல முடியும்” என்றான் தணிவான குரலில்..

“அதுதான் தெரியலை” என்றாள் மொட்டையாக..

(தொடரும்)
 
வாழ்த்துகள் சிஸ்,தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. 😍😍😍
 

Mathykarthy

Well-known member
சூப்பர் ஸ்டார்ட் 😍😍😍😍😍

எழில் ஏன் ஓடி வந்துட்டு இப்போ பேக் அடிக்கிறா 🤔

டாக்டர் சூப்பர் 🥰
 
Top