எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 1 - கதை திரி

Status
Not open for further replies.

NNK-105

Moderator
முன்னுரை

அடுத்து அடுத்து நடக்கும் மரணங்கள். அவை கொலையா? அல்லது இயற்கை மரணமா எனக் கண்டுபிடிக்கையில் ஒவ்வொரு புள்ளியாகச் சேர்ந்து அதிபயங்கர கோலமாக வெளிச்சத்துக்கு வரும் சில கசப்பான உண்மைகள்.

நாயகன் ஆதி

நாயகி அபூர்வா

இவர்களுடன் நல்லவர்களும்

நல்லவர் அல்லாதவர்களும்

படித்து மகிழுங்கள் ரத்த ரங்கோலிரத்த ரங்கோலி 1

காலையில் சசிரேகா தன் வீட்டின் முன் அரிசி மாவு கூழில் கோலம் போடத் தொடங்கினாள். கூழ் இருந்த பாத்திரத்தின் கூர்முனை அவள் இடது கைவிரலைப் பதம் பார்க்கவும் லேசாய் ரத்தம் சொட்டியது. எத்தனை வருடங்களாக இந்த பாத்திரத்தைப் பயன்படுத்துகிறாள். இப்படி ஒரு நாளும் ஆனதில்லை என ஒரு நொடி நினைத்து குழம்பினாள்.

இன்னமும் காயாத கோலக் கோடுகளில் ரத்தம் ஒன்றிரண்டு சொட்டு விழவே கோலம் பார்க்க ரத்த ரங்கோலியாய் காட்சியளித்தது. அதைக் கண்டு அதிர்ந்தவள் கோலத்தை அழித்துவிட்டு விறுவிறுவென வேறு சின்னதாகக் கோலம் போட்டாள்.

மனதைப் பிசைந்தது … அபசகுனமாய்பட்டது. விரல் ரத்தத்தைத் துடைத்து பேன்டெய்ட் போட்டாள். அவளின் ஒரு வயது மகள் அழவே. குழந்தையை கவனிக்க சென்றாள். அப்படியே கணவன் கைலாஷை தட்டி எழுப்பினாள்.

கைலாஷ் ஐ.டி. நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறான் ஆதலால் அவனுக்கும் அவன் போனுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. போன் அலறியது.

பெரிதாக என்ன விஷயம் இருக்கப் போகிறது? என நிதானமாகக் காலை கடன்களை முடித்து போனை எடுக்கச் சென்றான் அதற்குள் செல்போன் அடங்கிப் போனது. அவன் லேண்ட் லைன் போன் அடித்தது “ப்ச்” என்ற முணுப்புடன் போனை எடுத்தான். கூடவே “சசி காபி” என்று சொன்னான்.

போனின் ஐடி காலரில் பெயரைப் பார்த்தபடியே கைலாஷ் “சொல்லு பவன்” என போனை காதுக்குக் கொடுத்து விசாரித்தான்.

மறுமுனையில் “டேய் போன் ஏன்டா எடுக்கலை?” என வள்ளென விழுந்தான் பவன் குமார் என்னும் பவன். கைலாசின் நண்பர்களில் ஒருவன்.

“காலங் காத்தால கத்தாதடா …இப்ப என்னாச்சு?” சுவாரசியம் இன்றி ஒலித்தது கைலாஷ் தொனி கொட்டாவியுடன்.


“மணி அங்கிள் இறந்துட்டார்” தேங்காய் உடைப்பது போல செய்தியை உடைத்தான் கூடவே “வாட்சப்ல பார்” என்றான்.

அவசரமாக வாட்சப்பை திறந்து பார்க்க இரவு பன்னிரண்டு மணி முதல் நிறைய போன் கால்களும் மெசேஜ்களும் குவிந்து கிடந்தன.

மனதை எதோ சொல்ல முடியாத ஒன்று அழுத்தக் கண்ணீர் திரையிட்டது. மறுபுறம் அமைதியானதால் பவன் “கைலாஷ்” எனக் குரல் கொடுக்க

“எப்படிடா?” எனக் கரகரத்த குரலில் கண்களை மெச்சுக்குக் கொடுத்தபடி கைலாஷ் வினவினான்.

“நேத்து ராத்திரி பதினோரு மணிவாக்குல ஹார்ட் அட்டாக். உடனே டாக்டரும் பாத்திருக்காங்க. ஆனா அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி” பவன் நடந்ததைச் சொல்லி முடித்தான்.

“எனக்கு ஏன்டா போன் பண்ணலை?”

“டேய் அப்படியே அரஞ்சேனா தெரியும். ராத்திரி முழுக்க உனக்கு போன் செஞ்சி செஞ்சி அலுத்து போயிட்டோம். சசி போன் நாட் ரீச்சபள்னு வருது. உன் அப்பாக்கிட்ட இதை சொல்ல முடியாது . கோகிலா இங்க இல்லை…”

“சாரிடா ஆபீஸ்ல கொஞ்சம் பிரச்சனை அதனால வீட்டுக்கு வந்ததும் ஸ்லீபிங் டேப்லெட் போட்டு படுத்துட்டேன். சசி போனை குழந்தை கீழ போட்டுட்டா அது சரியா வேலை செய்யல” மேலும் பேச முடியாமல் நாதழுதழுத்தது. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

கைலாஷ் மனைவி சசி “என்ன?” என்பதாய் புருவத்தை உயர்த்தியபடி காபியை நீட்ட

கைலாஷ் போனை அவளிடம் நீட்டி காபியை வாங்கி தளர்வாய் அமர்ந்துவிட்டான். அவன் மனக் கண்ணில் ஆதியின் அப்பா மணிவண்ணனின் சிரித்த முகம் அச்சில் வார்க்கப்பட்டதை போல அழுத்தமாய் நிலைநின்றது.

அவருடன் பேசி சிரித்த உரையாடிய பொன்னான தருணங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாய் ஊர்வலம் போயின. அவை இனி கடந்தகாலம் என்னும் இலக்கணத்தைச் சேர்ந்துவிட்டது.

சசி “என்ன சொல்றீங்க பவன்? நிஜமாவா?” என அதிர்வுடன் கேட்டவை அவன் காதை எட்டவில்லை.

ஆறிப்போன காபியை முன்னிருந்த மேசையில் வைத்தான். கைலாஷ் செல்லுமிடம் புரிந்தவளாக “நாங்க இப்பவே கிளம்பி வரோம்” என போனை வைத்தாள்.

கைலாஷ் மற்றொரு அறை கதவைத் திறக்க அவன் அப்பா பூமிநாதன் சாய்வான நாற்காலியில் அமர்ந்து அவரின் அன்றாட பழக்கமான நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார்.

பூமிநாதன் அறுபத்து நான்கு வயது தலையில் கருப்பு முடி ஒன்றுகூட இல்லை முன் சொட்டை. அதிகாலையில் சீக்கிரம் எழுந்து நடைப் பயிற்சி சென்று வருவார். தன் ஆரோக்கியத்தை நன்கு கவனிப்பார். என்ன ஆரோக்கியமாக இருந்தாலும் ஒருமுறை ஹார்ட்அட்டாக் எட்டிப் பார்த்திருக்கிறது. அவரின் மனைவி சுவர்க்க வாசி ஆகிவிட்டார்.

அவரின் பால்ய சினேகிதன் மணிவண்ணன் இறந்துவிட்டார் என எப்படிச் சொல்வது என்னும் தயக்கம் கைலாஷை அழுத்தியது.

அவரின் அருகில் சென்று அமர்ந்தான். எப்பொழுதும் இந்நேரத்திற்குப் பரபரப்பாக இயங்கும் வீடு இன்று அமைதியாய் இருப்பதைக் கவனித்தார். என்னவோ சரியில்லை எனப் புரிந்தவராக மகனிடம் “என்ன கைலாஷ் ஆபீஸ் கிளம்பலையா?”எனக் கேட்கவும்

தயக்கத்துடன் “மணிவண்ணன் அங்கிள் நேத்து நைட் இறந்துட்டார்” என்றான். அத்துடன் பவன் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அப்பாவின் முகம் வெளிறிப் போனது. சட்டென மனம் அறுபட்டது போல ஓர் உணர்வு. முப்பது ஆண்டுகளுக்கு மேலான நட்பை நொடியில் இழந்துவிட்ட வலி. அதை தாங்க இயலாமல் அவர் கையில் வைத்திருந்த நாளிதழ் நழுவி விழப்போக அதைப் பிடித்து மடித்து அருகில் வைத்தான் கைலாஷ்.

“மணி வீட்டுக்குப் போகலாம்” என்றார். மெல்ல எழுந்து இரண்டடி எடுத்து வைத்தவர் தள்ளாடிவிழப் போக இருபக்கமும் மகனும் மருமகளும் பிடித்துக் கொண்டனர். கைலாஷ் அவருக்குச் சட்டை எடுத்துக் கொடுத்தான். அருகே இருந்தான்.

சசி குழந்தையை அருகிலிருந்த அவள் அக்கா வீட்டில் விட்டுவிட்டு வந்தாள். மூவரும் காரில் அமைதியாக சென்றனர்.

மாங்காட்டை நோக்கி கார் சென்றது. தனி வீடுகள் கொண்ட அமைதியான தெரு. நகரத்தின் போதைகளுக்கும் முன்னோரின் போதனைகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் நடு வர்க்கம்.

உற்றார் உறவினர் எனப் பலர் வந்துள்ளதை வீட்டின் முன்னே இருந்த பல ஜோடி செருப்புகள் காட்டியது. அதில் அடக்கம் செய்ய இருந்தவரின் செருப்பும் அடக்கமாக இருந்தது.

துக்க வீட்டிற்கே உண்டான அத்தனை அம்சமும் வீட்டில் நிறைந்திருந்தது. அழுகை, புலம்பல், கண்ணீர், இறுக்கம், சோகம், துக்கம் என பல கலவையான உணர்வுகள் அங்கே காணப்பட்டன.

மணிவண்ணன் உடல் ஃப்ரீசர் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. அதன் மேல் புத்தம் புதிதாய் பூத்த ரோஜா மாலை இருந்தன.

மணிவண்ணன் மனைவி பத்மாவதி இன்னமும் நடந்ததை ஏற்க முடியாமல் ஸ்தம்பித்த நிலையில் இருந்தார். அதை அவர் முகம் அப்பட்டமாய் காண்பித்தது.

அத்தனை நேரம் துக்கத்தை விழுங்கிய பூமிநாதனுக்கு தன் நண்பனின் பூத உடலைக் கண்டதும் தாங்க முடியாமல் அழுதுவிட்டார்.

“மணி .. மணி .. ஏன்டா இப்படி பண்ண? … எங்களை விட்டுடு போயிட்டயே” என அழுது புலம்பினார்.

அவரை நோக்கி அவரது இன்னொரு நண்பன் கார்மேகம் தள்ளாடியபடி வந்தார். யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் கலங்கி நின்றனர்.

அவர்களின் வயோதிகம் காரணமாகச் சிறியவர்கள் அவர்களைச் சமாதானம் செய்து தனியே அமர வைத்தனர். இருவரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டிருந்தனர்.

மணிவண்ணன், பூமிநாதன், கார்மேகம் மூவரும் இணைபிரியா நண்பர்கள். அவர்கள் தங்களின் இருபதுகளில் நண்பர்கள் ஆகினர். அது இன்றுவரை தொடர்கிறது. இவர்களுக்கு ஏட்டுப் படிப்பில் அத்தனையாய் நாட்டமில்லை. அதனால் வாழ்க்கையைப் படிக்கத் துவங்கினர்.

தொடக்கத்தில் பல தொழில்கள் செய்து அவைகளில் நட்டம் ஏற்பட்டது. இறுதியாக ஸ்கிராப் மேனேஜ்மெண்ட் என்னும் தொழில் அவர்களுக்கு கை கொடுத்தது. மிகப் பெரிய லாபம் இல்லை என்றாலும் சென்னையில் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. குழந்தைகள் படிப்பு மருத்துவம் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்குத் திணற வேண்டிய நிலைமை இல்லை.

மணிவண்ணன் மற்றும் பூமிநாதன் திருமணம் குழந்தைகள் என தங்கள் வாழ்வின் அடுத்த அடுத்த கட்டத்திற்குச் சென்றனர். ஆனால் கார்மேகம் மட்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு தேவை என்பதற்காக அவர் அனாதை சிறுவனைத் தத்தெடுத்து வளர்த்தார். அவன் தான் கைலாசிடம் போனில் பேசிய பவன்.

கார்மேகம் வாலிப வயதில் சரோஜா என்னும் பெண்ணை காதலித்தார். சரோஜாவும் காதலித்தாள். ஆனால் ஜாதி ஏழை போன்ற ஏற்ற தாழ்வால் அவர்கள் பிரிக்கப்பட்டனர்.

சரோஜாவிற்கு மற்றொருவருடன் திருமணம் நடந்தேறியது. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ஒரு விபத்தில் சரோஜாவும் அவள் கணவனும் இறந்துவிட்டனர். அப்போது குழந்தைக்கு ஆறு மாதம்.

உறவுகள் யாரும் குழந்தையின் பொறுப்பை ஏற்க மறுத்தது. அக்குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்தனர்.

கார்மேகம் தன் காதலி திருமணத்திற்குப் பிறகு அவள் பக்கம் செல்லவில்லை. அவர் வேறு திருமணமும் செய்து கொள்ளவில்லை. தன் காதலி அறியாமல் எப்பொழுதாவது மறைந்திருந்து அவளைக் காண்பார்.

அவளின் மகிழ்ச்சியும் நிம்மதியும்தான் அவருக்குத் தேவையாக இருந்தது. எங்கு இருந்தாலும் அவள் நலமாக இருக்க வேண்டினார்.

அவர்களின் குழந்தையைத்தான் கார்மேகம் தத்து எடுத்து வளர்க்கிறார். பவன் பத்து வயதை அடைந்ததும். அவனிடம் அனைத்து உண்மையும் கூறிவிட்டார்.

அவரின் மற்ற இரு நண்பர்களுக்கும் இவை அனைத்தும் தெரியும். மூவரின் நட்பைப் போல அவர்களின் வாரிசுகளும் தங்கள் நட்பைத் தொடர்ந்தனர்.

பூமிநாதன் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் கைலாஷ் கோகிலா மற்றும் சங்கீதா. சங்கீதா திருமணம் முடிந்து லண்டனில் குடும்பத்தோடு வசிக்கிறாள். கைலாஷ் நல்ல வேலை குடும்பம் எனத் தந்தையுடன் வசிக்கிறான். கோகிலா பேஷன் டிசைனிங் இறுதி ஆண்டு பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

மணிவண்ணன் பத்மாவதி தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அஷ்வின் மற்றும் ஆதி. அஸ்வினுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாம் மகனான ஆதி பக்கத்து வீட்டு அபூர்வாவைக் காதலிக்கிறான். அபூர்வா யார் கண்ணையும் உறுத்தாத வகையில் அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

ஆதி பயங்கரமான அப்பா செல்லம். அவனால் இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழுது அழுது அவன் கண்கள் சிவந்திருந்தன. அருகிலேயே அவன் காதலிக்கும் அபூர்வா இருக்கிறாள் என்னும் நினைவுகூட இல்லாமல் தேம்பி தேம்பி அழுதான்.

மணிவண்ணன் மகன் அஸ்வினுக்கு கைலாஷ் ஆறுதல் கூறினான். ஆனால் ஆதியை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

பித்துப் பிடித்தவன் போல தன் அப்பாவின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தான். “அப்பா … அப்பா” என அரற்றினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மணிவண்ணனின் உடல் அவர்கள் குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது.

மண் தன்னோடு மணிவண்ணனை ஆலிங்கனம் செய்தது.


தொடரும் …..
 
Last edited:
Status
Not open for further replies.
Top