எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உன்னை ஏற்றேன் - அத்தியாயம் 02

NNK-29

Moderator

அத்தியாயம் 2​

செல்வராணியும், தேவாவும் ‘எதற்கு? இப்பொழுது இந்த திருமணம் பேச்சு?’ என்றே கோமதியை பார்த்தனர்.​

அவர்களின் பார்வையை வைத்தே, “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது தேவா. எங்க சாருமதிக்கு நீ சரியா இருப்பன்னு தோணுச்சு. அது மட்டுமில்லை நீ அவளை நல்லா பார்த்துக்குவேன்னு உன்மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால, நான் தான் இந்த திருமணப்பேச்சை தொடங்கினேன்” என்றார் கோமதி.​

‘என்னை எத்தனை முறை இவர் பார்த்திருக்கிறார்? என்னை பிடித்து, என்னை நம்பி அவர்களின் பேத்தியை எனக்கு திருமணம் புரிய கேட்கிறார்களே?’ என வியந்தவனின் கண்களே அவனின் மனவோட்டதை காண்பித்தது.​

எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த கோமதி ஒருமுறை பார்த்தாலே மனிதர்களின் குணங்களை கண்டுபிடித்துவிடுவார். அப்படித்தான் தேவாவை பற்றிய அவரின் கணிப்பும் வந்தது.​

தேவாவின் எண்ணவோட்டத்தை சரியாக புரிந்த கோமதி சின்ன சிரிப்புடன், “உன்னை ரெண்டு மாசமா நாங்க பார்த்துட்டு இருக்கோம். நீ எவ்வளவு பொறுப்பா இருக்கன்னு நல்லாவே தெரியுது தேவா. நீ நல்லா யோசிச்சி, சாருக்கிட்ட பேசிட்டு கூட உன்னோட முடிவை சொல்லு. எதுவென்றாலும் எங்களுக்கு சம்மதம் தான். உங்களுக்கு செல்வராணி?” என்றார்.​

ஏற்கனவே செல்வராணியிடம் அவர்கள் பேசியிருந்தாலும், இப்பொழுது அவரின் விருப்பத்தை கேட்டார். “எனக்கு என்னோட பையன் விருப்பம் தான்ம்மா” செல்வராணி சொன்னார்.​

“எல்லாம் சரி பாட்டி. ஆனா... அரவிந்த்-வந்தனா கல்யாணம் முடிஞ்சதும் கூட நீங்க இதை பற்றி பேசியிருக்கலாமே? எதுக்கு இவ்வளவு அவசரம்?” என்று கேட்ட தேவா ஒரு நிமிடம் தயங்கி,​

“இதை கேட்க கூடாது தான். இருந்தாலும் கேட்கிறேன். ஒருவேளை எனக்கோ இல்லை உங்க பேத்திக்கோ இதுல விருப்பம் இல்லை என்றால்? வந்தனா-அரவிந்த் கல்யாணம்?” என கேள்வியுடன் நிறுத்தினான்.​

தேவாவின் பேச்சை கேட்ட அனைவரும் பதறிவிட்டனர். அரவிந்தன் வெளிப்படையாகவே தேவாவை முறைக்க தொடங்கிவிட்டான்.​

அவன் கேட்பதை பார்த்த சாருவின் தந்தை குமரேசன் பேச வாய் திறக்கும் முன், “தேவா என்ன பேசுற நீ?” என்று செல்வராணி அதட்டினார்.​

தேவாவிற்கும் இதை கேட்க விருப்பமில்லை தான். ஆனால் அவர்களின் பக்கம் பேச ஆளில்லையே! இவன் தானே முன்னின்று அனைத்தையும் பேச வேண்டும்.​

“நீ நினைக்கிற மாதிரி இல்லை தேவா. நான் இருக்கப்பவே என்னோட பேத்தி கல்யாணத்தை பார்த்திடனும்னு நினைக்கிறன். அவ்வளவு தான்!” என்றுவிட்டு,​

“இதுக்கும் அரவிந்தன் கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார் கோமதி.​

ஆறு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து வயது மற்றும் மூப்பின் காரணம் சற்று தளர்ந்தே காணப்பட்டார் கோமதி.​

“இப்படிலாம் பேசாதீங்க பாட்டி. உங்க பேரன், பேத்தி கல்யாணம் பார்த்துட்டு அவங்க வாரிசையும் நீங்களே வளர்ப்பீங்க” என அவரின் கையை பிடித்து நம்பிக்கை ஊட்டினான் தேவா.​

“அப்படின்னா... என்னோட பேத்தியை நீ...” என தொடங்கியவரிடம்,​

தன்மீது அத்துனை நம்பிக்கை வைத்தவரை ஏமாற்ற விரும்பாமல், “நாங்க பேசி பார்த்துட்டு சொல்லுறோம் பாட்டி” என முடித்துக்கொண்டான்.​

பின் பெரியவர்கள் அனைவரும் அரவிந்தன்-வந்தனாவின் திருமணத்தை பற்றி பேச தொடங்கிவிட்டனர்.​

தேவாவின் அருகில் வந்து அமர்ந்த அரவிந்த், “உங்க கல்யாணத்துக்கும் எங்க கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தேவா. நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க” என குரலில் அழுத்தத்தைகூட்டி சொன்னான்.​

அரவிந்தனுடைய அழுத்தத்தையும் உறுதியையும் பார்த்ததும் தான் தேவா தெளிந்தான்.​

தேவாவிற்கு ‘தன் திருமணத்தை குறித்த முடிவினால் வந்தனாவின் கல்யாணத்திற்கு எந்த பாதிப்பும் வராது!’ என்ற நினைப்பே நிம்மதியை தந்தது.​

நேற்று இரவில் இருந்து அவனை சூழ்ந்த குழப்ப மேகங்கள் மெல்ல விலகுவதை போல் உணர்ந்தான்.​

அரவிந்தே தொடர்ந்து, “சாருமதி ஒரு யூடியூப் சேனல் நடத்திட்டு இருக்கா தேவா. அவளுக்கும் ஒரு வருடமா வரன் பார்க்கிறோம். எதுவும் அமையல. அப்படி முடியுற மாதிரி வந்தாலும், அவளோட யூடியூப் சேனலை விட்டுட்டா மட்டும் தான் திருமணம்னு சொல்லுவாங்க. அதுல அவளுக்கும் விருப்பமில்லை. எங்களுக்கும் விருப்பமில்லை” என்றவன் தேவாவை ஏரிட்டான்.​

அவனே பேசி முடிக்கட்டும் என அமைதியாகவே தேவா அமர்ந்திருந்தான்.​

“நீங்க அவகிட்ட பேசி பார்த்துட்டு சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சா மட்டும் தான் உங்க கல்யாணம் நடக்கும்” என்ற அரவிந்த் சாருவின் எண்ணை தேவாவிற்கு கொடுத்தான்.​

சிறிது நேரத்தில் செல்வராணியும், தேவாவும் கிளம்பி வெளியே வந்தனர்.​

தேவா அவனின் காரை அடையும் பொழுது தான் வேலையில் இருந்து வந்த சாருமதி அவளின் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்தாள்.​

முதலில் அவர்கள் இருவரையும் பார்த்து திகைத்தவள், பின் மரியாதையுடன் அவர்களை வரவேற்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு அவளின் வீட்டை நோக்கி நடந்தாள்.​

உள்ளுணர்வின் தாக்கத்தால் நடந்து சென்றுக்கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள். அங்கே தேவா அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நொடி அந்த பார்வையின் காந்தத்தில் ஈர்க்க பட்டவள் வேகமாக வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.​

வீட்டிற்கு செல்லும் வழியில் செல்வராணி, “உனக்கு அந்த பெண்ணை பிடிச்சிருக்கா தேவா? வந்தனாக்காக நீ பார்க்க கூடாது. வாழ்க்கை முழுவதும் நீ தான் வாழ போற” என அவனின் விருப்பத்திற்கே முன்னுரிமை கொடுத்தார்.​

“தெரியலம்மா” என்றவன் வேறேதும் பேசவில்லை.​

“வந்தனாவுக்கு அவங்க நிச்சயத்தப்பவே ஐந்து சவரன்ல ஆரம் போட்டாங்க... இப்ப கல்யாணத்துக்கும் ஐந்து இல்ல ஏழு சவரன்ல தான் தாலி எடுப்பாங்க”​

அவரின் பேச்சுப்போகும் திசையை கண்டுக்கொண்டவன், “புரியுது ம்மா. நாமளும் அவங்களுக்கு நிகரா செய்யணும்னு சொல்லுறீங்க தான?” என்ற கேள்வியுடன் காரை செலுத்தினான்.​

“ஆமா தேவா...” என்றவர் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.​

சேர்த்துவைத்த சேமிப்பு அத்தனையும் மகளின் திருமணத்திற்கு எடுத்தாயிற்று! இப்பொழுது எண்ணி எண்ணி செலவு செய்யும் நிலையில் இருப்பதால் மகனுக்கு வந்த நல்ல வரனையும் யோசித்து செய்யவேண்டியதாக இருக்கிறதே! என்ற கவலை அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.​

வண்டியை ஓரமாக நிறுத்திய தேவா செல்வராணியின் கை பிடித்து, “அம்மா! காசு பற்றியெல்லாம் நீங்க யோசிக்காதீங்க. இப்ப புதுசா ஒரு கிளையன்ட் கிடைச்சிருக்காங்க. அந்த டீல் ஓகே ஆகிடுச்சினாலே போதும்” என அவரை சமாதானபடுத்தினான்.​

“அந்த பெண்ணை பார்த்தாலே நல்லவிதமா தெரியுது தேவா. நீயும் நல்ல முடிவா சொல்லு டா. உனக்கும் இருபத்தி ஒன்பது வயசாக போகுதுல?” என அவனின் கன்னத்தை வருடி சொன்னவர் மறைமுகமாக அவரின் முடிவையும் தெரிவித்துவிட்டார்.​

__________​

இரவில் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தாள் சாருமதி. ‘நாளை மாலை சந்திக்கலாம்’ என தேவா தான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.​

கொஞ்சநேரம் முன்பு தான் அரவிந்தன் அவளிடம் தேவாவின் கைபேசி எண்ணை கொடுத்துவிட்டு, வீட்டில் நடந்ததை தெரிவித்துவிட்டு சென்றான்.​

மனதில் தோன்றிய படபடப்புடன் தேவாவிற்கு எந்த பதிலும் அனுப்பாமல் இருந்தவள், சிறிது நேரம் கழித்து ‘ஓகே’ என்று மட்டும் அனுப்பிவைத்தாள்.​

சாருவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை படித்துவிட்டு அங்கு முகப்பில் தெரிந்த அவளின் புகைப்படத்தை பார்த்தான்.​

வந்தனாவின் நிச்சயத்தில் எடுத்த புகைப்படம் தான் அது. அன்று அவள் அணிந்திருந்த உடை அவனுக்கு நன்றாக நினைவிருந்ததே!​

அரவிந்தன்-வந்தனாவின் நிச்சயத்தின் பொழுது,​

தட்டுவரிசை வைக்க தட்டு குறைவாக உள்ளதால் செல்வராணி தேவாவிடம், “சம்பந்தி வீட்ல தட்டு இருந்தா வாங்கிட்டு வா” என அனுப்பிவைத்தார்.​

அவனும் ஜெயந்தியிடம் சென்று கேட்டான். ஜெயந்தியின் அருகில் இருந்த கோமதி, “உள்ள ரூம்ல சாருமதி இருப்பா தம்பி. அவகிட்ட கேளு எடுத்துக்கொடுப்பா” என்றதும் அவன் அகன்றுவிட்டான்.​

“என்ன அத்தை? தேவா என்னதான் நல்ல பையனா இருந்தாலும்… சாரு தனியா இருக்க அறைக்கு அனுப்பலாமா?” என அதிருப்தியுடன் கேட்டார் ஜெயந்தி.​

“அடியே ஜெயா! நான் உன் மாமியார் டி. உள்ள என்னோட தங்கச்சி காந்திமதி சாரு கூடத்தான் இருக்கா” என்றதும் ஜெயந்தி ஆசுவசாக உணர்ந்தார்.​

அறைக்கு சென்ற தேவா சாருமதியிடம் தட்டை வாங்கி திரும்பிவிட்டான். அங்கு அறையில் அமர்ந்திருந்த காந்திமதி,​

“யாரு சாரு இந்த பையன்? நல்லா வாட்டசாட்டமா இருக்கான்” பட்டென்று கேட்டார்.​

“வந்தனா அண்ணியோட அண்ணா பாட்டி” என்றவள் பூவை அவளின் தலையில் வைத்தாள்.​

“ஓ... உனக்கு முறைவரும் தான?” என கேலி பேசினார்.​

அவளும் அவரின் கேலி பேசிச்சில் சிரித்துக்கொண்டே, “ஐயோ! நான் அவரை சரியா பார்க்கலையே பாட்டி. இப்ப என்ன பண்ணுறது?” என கண்ணடித்து கிண்டலுடன் வருந்தும் குரலில் கேட்டாள்.​

“அதுக்கென்ன சாரு? அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கோ. அதுக்கு அப்புறம் பக்கத்துல இருந்து தினமும் நல்லா பாரு…” என காந்திமதியும் விடாமல் வம்பிழுத்தார்.​

அந்நேரம் கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் பார்த்தனர். தேவா தான் மறுபடியும் வந்திருந்தான். அதிகமாக இருந்த தட்டுகளை திருப்பிக்கொடுக்கவே வந்திருந்தான்.​

அவனிடம் இருந்து தட்டுகளை வாங்கிய சாருமதி, ‘அவன் கேட்டிருப்பானா?’ என அவனின் முகத்தையே குறுகுறுவென பார்த்தாள்.​

“தேங்க்ஸ்!” என கூறிய தேவா அந்த அறையில் இருந்து வந்ததும் மென்னகை புரிந்தான். ‘இதுபோல் கிண்டல் பேச்சுக்கள் உறவினர்களிடம் ஏற்படுவது சாதாரணம்’ என நினைத்த தேவா அவர்களின் பேச்சை அப்படியே விட்டுவிட்டான்.​

“நல்லவேளை அவங்க எதுவும் கேட்கலை பாட்டி. இல்லனா நம்மள பற்றி என்ன நினைச்சிருப்பாங்க?” என காந்திமதியிடம் சொல்லிவிட்டு அவருடன் நிச்சயத்தில் கலந்துகொள்ள சென்றாள்.​

இன்று அதை தேவா மட்டுமில்லாமல் சாருவும் நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டனர். அந்நிகழ்வு அவர்களின் நினைவில் நீங்காமல் இடம்பிடித்திருந்தது.​

முதன் முறை இருவருமே அவர்களின் உடன்பிறந்தவர்களின் திருமணம், அவர்களின் உறவுநிலை என அனைத்தையும் தள்ளிவைத்து அவர்களின் திருமணத்தை குறித்து மட்டும் இருவரும் சிந்திக்க தொடங்கினர்.​

_________​

மறுநாள் மாலை சாருமதிக்கு முன்பாகவே வந்து காத்துக்கொண்டிருந்தான் தேவா.​

நீலநிற சட்டை அணிந்திருந்தவன் அதனை கைமுட்டிவரை மடித்துவிட்டிருந்தான். இடது கையில் கருப்புநிற ஸ்மார்ட் வாட்சும், வலது கையில் வெள்ளியில் ஒரு காப்பும் அவனது ரோமம் அடர்ந்த கைக்கு பொருத்தமாக இருந்தது.​

பத்து நிமிடங்கள் கடந்து வந்த சாருமதி தோளில் ஒரு சின்ன பையை மட்டும் மாட்டியிருந்தாள். தூரத்திலே அவனை பார்த்துவிட்டவள் பார்வையாலே எடைபோட்டுக்கொண்டு அவனை நெருங்கினாள்.​

நிமிர்ந்து அவளை பார்த்தவன் சிரிக்க, இவளும் இளநகையுடன் அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.​

சிவப்பு நிற டாப்ஸ் அணிந்து கணுக்கால் வரை வெளிர்நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். முடியை இறுக்கி போனி டைல் போட்டிருந்தவளின் காதில் சின்ன கம்மலும் கழுத்தில் மெல்லிய செயினும் விற்றிருந்தது.​

“மதி! ரைட்?” என தேவா அவளின் பெயரை வினவ,​

‘பெயர் கூடவா தெரியாமல் வந்திருக்காங்க...’ என நினைத்தவள், “சாருமதி!” என திருத்தினாள்.​

“இட்ஸ் ஓகே மதி...” என தோளை குழுக்கியவனை பார்த்தவள், ‘டேய் தேவா. என்னோட பெயர் சாருமதி!’ என மனதிற்குள் புலம்பினாள்.​

“என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என மெனுவை பார்த்துக்கொண்டே கேட்டான்.​

“இல்லை எனக்கு எதுவும் வேணாம். ஏழு மணிக்கு டின்னர் சாப்பிடுவேன். சோ இப்ப எதுவும் வேணாம்”​

“ஆனா உன்னை பார்த்தால் டயர்டா இருக்க மாதிரி இருக்கே? காஃபி கூட வேணாமா?” என்றான் அவளை உற்றுப்பார்த்து.​

இன்று எப்பொழுதும் எடுக்கும் ஏரோபிக் வகுப்புகளை விட ஒரு செஷன் அதிகமாக சாருமதி எடுத்திருந்தாள். அதன் பலனாக சோர்வின் சாயல் அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.​

‘இதற்குமேலும் மறுத்தால் நன்றாக இருக்காது’ என மீண்டும் மனதிற்குள் நினைத்தவள், “எனக்கு மஷ்ரூம் சூப் சொல்லுங்க” என்றாள்.​

ஆர்டர் கொடுத்தவன், “வீட்ல நம்ம கல்யாணத்தை பற்றி தான் பேசுறாங்க. உனக்கு தெரியாம இருக்காது” என ஆரம்பித்தான்.​

“ம்ம்ம்...”​

“நீ யாரையாவது விரும்புறியா?” என பளிச்சென்று கேட்டான்.​

“அப்படி நான் விரும்பினா? எங்க வீட்டில் அதுக்கு தடை சொல்ல மாட்டாங்களே... சோ இப்பவரைக்கும் நான் யாரையும் விரும்பல” அசைட்டையாக சொன்னாள் சாரு.​

ஏனோ அந்த பதில் தேவாவிற்கு இதமாக இருந்தது. “ஹ்ம்ம்...” என்றவன் பணியாளர் கொண்டுவந்த சூப் மற்றும் காஃபியை வாங்கி வைத்தான்.​

சூப்பை தன்புறம் இழுத்த சாரு அதில் பெப்பர் பொடியை சிறிது தூவியபடியே, “நீங்க?” எனக் கேட்டாள்.​

“எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை” என்றவனை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.​

“ஸ்கூல், காலேஜ் அதுக்கு அப்புறம் ஆஃபிஸ்ன்னு அப்படியே போய்டுச்சி” என தோளை குலுக்கிக்கொண்டான்.​

அவனின் இந்த பதிலை கேட்ட சாருவிற்கு என்னவோ போல் ஆனது. அவன் கூறியதற்கு என்ன சொல்ல வேண்டும் என்று கூட தெரியாமல், “ஹ்ம்ம்...” என்றவள், இதழ் குவித்து அந்த சூப்பையும் ஊதினாள்.​

அவளின் செயல் ஒவ்வொன்றையும் ரசித்தபடியே காப்பியை அருந்திக்கொண்டிருந்தான் தேவா.​

இருவருக்கும் அவரவரின் படிப்பு, வேலை என்று பொதுவாக தெரியும். ‘பேசி பார்த்துட்டு சொல்லுங்கன்னா? இதுக்கு மேல வேற என்ன பேச வேண்டும்’ என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.​

அந்த அமைதியை கிழித்த தேவா, “எனக்கு ஓகே சாரு! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” பட்டென்று முடிவை சொல்லிவிட்டான்.​

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து பார்த்தவளிடம், “சூப் ஆறிட போகுது...” என எச்சரித்தான்.​

‘அதுக்குள்ள எப்படி ஓகே சொன்னாரு?’ என்ற சிந்தனையுடனே ஒரு ஒரு ஸ்பூனாக சூப்பை அள்ளி பருகியவளையே இமைக்காமல் தேவா பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதும் குடித்துவிட்டு தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாருமதி.​

“உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னா...? எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு!” என அவளின் கண்களை பார்த்துக்கொண்டே கூறினான் தேவேந்திரன்.​

அவனது பார்வையில் சிறிது தடுமாறினாலும், “என்னது?” என குரலுடன் சேர்த்து புருவத்தையும் உயர்த்தி கேட்டாள்.​

“எனக்கு ப்ரைவசி ரொம்ப முக்கியம்! சோ, கல்யாணத்துக்கு அப்புறம் இந்த கப்பில் வ்லாக்ஸ்! என்னோட வீட்டுக்காரர் கல்யாண நாளுக்கு இதை வாங்கி கொடுத்தாரு! பர்த்டேக்கு அதை வாங்கி கொடுத்தாரு! இது வாங்கினோம்! அது வாங்கினோம்! அதுவும் இந்த கடைல தான் வாங்கினோம்ன்னு நம்ம தனிப்பட்ட விஷயங்களை யூடியூப்ல போடக்கூடாது! நமக்குள்ள… ஐ மீன் நம்ம வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நம்முடைய தனிப்பட்ட நிகழ்வுகள். நமக்கான நிகழ்வுகள்! அதை ஊர் முழுக்க கடைபரப்புறதை நான் விரும்பமாட்டேன்!” என்று அழுத்தத்துடன் கூறினான்.​

அவன் சொல்ல சொல்ல இங்கு உலை போல் கொதிநிலையை அடைந்த சாருமதி, “நீங்க என்னோட சேனலை பார்த்திருக்கீங்களா?” என அடக்கப்பட்ட கோபத்துடன் ஒற்றை கேள்வி மட்டும் கேட்டாள்.​

‘சாருமதி யூடியூபில் சேனல் வைத்திருக்கிறாள்!’ என்ற தகவல் மட்டுமே அவனிடம் பகிரப்பட்டது. எந்த மாதிரி சேனல் என்று அவர்களும் கூறவில்லை. இவனும் கேட்டுக்கொள்ளவில்லை.​

அதற்குள் இவளிடம் அவனுக்கான நிபந்தனைகளை மட்டும் தங்குதடையின்றி தெரிவித்துவிட்டான்.​

அவளின் கேள்விக்கு, தேவா ‘இல்லை!’ என தலையை அசைத்தான்.​

“என்னோட சேனல் நேம் கூட தெரியாம கண்டிஷன் போடுறீங்களா?” என குரலை உயர்த்தாமல் நக்கலுடன் கேட்டவள், “அதை முதல்ல பார்த்துட்டு வந்து பேசுங்க...” என எரிச்சலுடன் கூறிவிட்டு எழுந்தாள்.​

பின் அவளின் பையை தோளில் மாட்டிக்கொண்டு “சூப்க்கான பில்லை நீங்களே கொடுத்திடுங்க” என கோபமாக உரைத்துவிட்டு சென்றாள்.​

செல்லும் அவளையும் அவளின் கோபத்தையும் ரசித்தபடியே அமர்ந்திருந்தான் தேவேந்திரன்.​

சாருவிற்கு கோபம் என்பதை விட வருத்தம் தான் மேலோங்கியது. ஏற்கனவே பார்த்த வரன்களும் யூடியூபை விட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள்.​

ஆனால் தேவா ஒருப்படி மேல் சென்று, நிபந்தனையுடன் யூடியூப் நடத்த சொன்னது அவளுக்கு எரிச்சலையே கொடுத்தது.​

‘எனக்கு பிடித்தத்தை… நான் செய்ய… இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா?’ என்ற எண்ணமே அவனிடம் காட்டமாக பேசவைத்தது.​

ஏனோ! முன்னே வந்த வரன்களை வேண்டாம் என்று சொன்னதைவிட தேவாவிடம் கடுமையாக பேசியது அவளின் மனதை பிசைந்தது.​

‘ஒருவேளை வந்தனா அண்ணியின் அண்ணன் என்பதால் இப்படி தோணுதோ?’ என்று அவளே அதற்கு அர்த்தமும் கற்பித்துக்கொண்டாள்.​

மாலையில் வீடு திரும்பிய சாருவிடம் கோமதி விசாரித்தார்.​

அவள் நடந்ததை கூற, “ஏண்டி! ஒரு சூப் குடிக்க தான் அங்க போனியா?” என பேத்தியை கடிந்தவர்,​

“உன்னோட அப்பா இப்ப என்கிட்ட வந்து கேட்டா என்ன சொல்லுறது?”​

“ஹ்ம்ம்… உன்னோட பையன் தான? ஒருவாரம் டைம் கேளு கிழவி”​

“ஏய் கிழவினு சொன்னா… குமட்டுலேயே குத்துறேன்” என்றவரின் பேச்சை அவள் காதில் கூட வாங்காமல் குளிக்க சென்றாள்.​

__________​

இரவில் படுக்கும் முன் யூடியூபை எடுத்த தேவா அதில் சாருமதி என தேடினான்.​

இவன் எதிர்பார்த்தது போல் எதுவும் வராததினால் சாரு என மீண்டும் தேட துவங்கினான்.​

வரிசையாக சாரு என்கிற பெயரில் உள்ள சேனல்கள் வர, அதில் சாருமதியின் படத்துடன் அவளின் ‘பிட் வித் சாரு!’ சேனலும் இருந்தது.​

உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டசத்தான உணவுமுறை மற்றும் எளிய உடற்பயிற்சி என்பதை பற்றிய சேனல் அது!​

சாருமதி ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை (Nutrition & Dietetics) பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவள். எனவே அதை சார்ந்த சேனலை நடத்திக்கொண்டிருக்கிறாள்.​

அவளின் சேனலுக்கு உள்ளே சென்றவன் அங்கு பின் செய்யப்பட்ட வீடியோ தான் அவனை வரவேற்றது. முகமுழுக்க மகிழ்ச்சியுடன் சில்வர் பிலே பட்டனை கையில் வைத்து சிரித்தபடி இருந்த சாருமதியின் வீடியோ தான் அது.​

‘பரவாயில்லையே நம்மாளு மூன்றரை லட்ச சப்ஸ்க்ரைபர்கள் வெச்சிருக்காளே..!’ என்ற வியப்புடன் ஒரு ஒரு விடியோவாக பார்க்க தொடங்கினான்.​

“அதுக்குள்ள நம்மாளா?” என்ற மனதின் கேள்வியை கிடப்பில் போட்டான்.​

சில விடியோக்களை தவிர்த்து, பலதை ஓடவிட்டு, சிலதை மீண்டும் மீண்டும் பார்த்து என ஒருமணிநேரம் அவளின் யூடியூப் சேனலை அலசி ஆராய்ந்தான். அனைத்தையும் பார்த்துவிட்டு இறுதியில் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்.​

உடனே சாருவிற்கு அழைத்தவன், “நாளைக்கும் அதே நேரம், அதே இடத்தில் மீட் பண்ணலாமா?” என்றான்.​

“ஓகே. நீங்க சேனலை பார்த்தீங்களா?” என்ற கேள்விக்கு,​

“யெஸ் பார்த்தேன்” என்றவனிடம்,​

“அப்படியே மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிட்டு பெல் பட்டனையும் க்ளிக் பண்ணிடுங்க…” என்று சிரிப்புடன் கூறிவிட்டு அலைபேசியை அணைத்தாள்.​

இங்கே தேவாவும் அவள் கூறியதை கேட்டு சிரிப்புடன் உறங்க சென்றான்.​

 
Last edited:
லைக் பட்டன்,பெல் பட்டனையும் க்ளிக் பண்ணகதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாளா 🤣🤣🤣
 

Mathykarthy

Well-known member
பாட்டிகிட்ட அவ்ளோ கேள்வி கேட்டுட்டு சூப் குடிச்சு முடிக்கிறதுக்குள்ள பேத்திகிட்ட ஓகே சொல்லிட்டான்... 🤪

கண்டிஷன் போட்டவனையே சப்ஸ்கிரைப் பண்ண வச்சுட்டா.... 😂😂😂

Good one ❤️
 

NNK-29

Moderator
அநியாயத்துக்கு யூடியூபரா இருக்காளே🤭🤭🤭!!!... க்யூட் மீட்!!... அடுத்த மீட்க்கு வெயிட்டிங்😍
என்ன பண்ண இப்படி மிரட்டி தான் subscribers increase பண்ண வேண்டியதா இருக்கு😅 நன்றி dear🥰
 

NNK-29

Moderator
லைக் பட்டன்,பெல் பட்டனையும் க்ளிக் பண்ணகதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாளா 🤣🤣🤣
அப்படி தான் போல😅நன்றி dear🥰
 

NNK-29

Moderator
பாட்டிகிட்ட அவ்ளோ கேள்வி கேட்டுட்டு சூப் குடிச்சு முடிக்கிறதுக்குள்ள பேத்திகிட்ட ஓகே சொல்லிட்டான்... 🤪

கண்டிஷன் போட்டவனையே சப்ஸ்கிரைப் பண்ண வச்சுட்டா.... 😂😂😂

Good one ❤️
😂😂😂 நன்றி dear❤️
 

santhinagaraj

Active member
அங்க அவ்ளோ கேள்வி கேட்டுட்டு இங்கு எப்படி ஒரு சூப் குடிச்சு முடிக்கறதுக்குள்ளவே ஓகே சொல்லிட்டான்.

சாரு போன் பண்ணி மீட் பண்ணலாம்னு கேட்டவன் கிட்ட இப்படி அநியாயத்தை youtubeரா பெல் பட்டன் கிளிக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணு ன்னு சொல்லற 😍😍
 

NNK-29

Moderator
அங்க அவ்ளோ கேள்வி கேட்டுட்டு இங்கு எப்படி ஒரு சூப் குடிச்சு முடிக்கறதுக்குள்ளவே ஓகே சொல்லிட்டான்.

சாரு போன் பண்ணி மீட் பண்ணலாம்னு கேட்டவன் கிட்ட இப்படி அநியாயத்தை youtubeரா பெல் பட்டன் கிளிக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணு ன்னு சொல்லற 😍😍
நன்றி dear😍😍😍
 
Top