எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 3

NNK-64

Moderator

அத்தியாயம் 3​

முருகேசன் அவர்கள் அருகே வந்தார். “இவளால எனக்கு என்னவெல்லாம் பிரச்சனை பாரு தம்பி. இப்போ அவன் கிட்ட வாங்கின பணத்தை திருப்பிக் கொடுக்கணும்.​

அதற்குள் எழிலழகி இடையிட்டாள், “நான் வேலைக்குப் போய் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துடறேன்” என்றாள் மெல்லிய குரலில்.​

முருகேசன் அவளைப் பார்த்து முறைத்தார். நிரஞ்சன் அருகில் இருக்கவும் எதையும் அவரால் பேச முடியவில்லை. அவன் வேறு போலீஸ் என்று பயமுறுத்தியிருந்ததால் “ரொம்ப நன்றி தம்பி, விடியறதுக்குள்ள நீங்கக் கூட்டிட்டு வந்து என்னோட மானத்தை காப்பாத்திட்டீங்க, இனி நாங்க போய்க்கறோம்” என்றார்.​

அவரிடமும் நிரஞ்சன் தன் கார்டை கொடுத்து எதாவது உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கேட்கும்படி சொல்லிவிட்டு கண்களால் எழிலழகியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.​

அதன்பிறகு நிரஞ்சனால் அவளைப் பார்க்க முடியவில்லை. அவனும் தன்னுடைய பொறுப்புகளில் முழ்கி போனான். அடுத்த மாதம் பெளர்ணமி அன்று பெசன்ட் நகருக்கு சென்று அன்னம்மாவிடம் பேசும் போது அவனுக்கு அவளைப் பற்றி நினைவு வந்தது.​

“டாக்டர் சார், அந்தப் பொண்ணு போன வாரம் வந்திருந்தாங்க. பேரு எழிலாமே. நன்றி சொல்லிட்டு உங்களையும் விசாரிச்சிட்டு போச்சு” என்றாள்.​

அன்னம்மாவிடம் விசாரிப்பதற்கு தனக்கே போன் செய்திருக்கலாமே என்று தோன்றியது. பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவன் அங்கிருந்து கிளம்பினான்.​

இன்று ஏனோ அவன் மனம் அழகியையே நினைத்துக் கொண்டிருந்தது. இப்போது எப்படி இருக்கிறாளோ என்று எண்ணியபடி காரில் தன் வீட்டிற்கு சென்றான். அவள் நினைவே மீண்டும் மீண்டும் வரவும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி விட்டான்.​

ஆனால் அடுத்த நாளே அவளிடம் இனி பேசவே கூடாது என்று முடிவு எடுக்க போகிறான் என்று அவன் அறிந்திருக்கவில்லை.​

முருகேசனின் முதல் மனைவி சித்ராவிற்கு பிறந்தவள் தான் எழிலழகி. சித்ரா மிகவும் அழகான பெண். முருகேசன் கரடுமுரடான தோற்றம் உடையவர், எப்போதும் மனைவிமேல் சந்தேகப்பட்டு அடித்து உதைத்துக் கொண்டே இருந்தார்.​

சித்ரா கணவனின் தாழ்வு மனப்பான்மையை உணர்ந்து கொண்டதால் சகித்து கொண்டு வாழத் தொடங்கினாள். அதன்பிறகு அவள் கர்ப்பம் ஆனதும் முருகேசன் நன்றாகவே அவளைப் பார்த்துக் கொண்டார்.​

குழந்தை பிறந்தபின் பார்க்க வந்தவர்கள், முருகேசனுக்கு போய் இவ்வளவு அழகான குழந்தையா என்று பரிகாசம் செய்து குழந்தைக்குக் கொஞ்சம் கூட முருகேசன் ஜாடையே இல்லை என்று சொல்லி விட்டுப் போனார்கள். அன்றிலிருந்து அவன் அந்தக் குழந்தை தனக்கு பிறந்ததே இல்லையென நினைக்கத் தொடங்கி விட்டான்.​

எழிலழகி பிறந்து ஒரு வருடத்திற்குள் முருகேசன் அடித்த அடிகளில் ஏற்கனவே உடல் மெலிந்து நோஞ்சானாக இருந்தவள், ஒரு நாள் முருகேசன் அவள் நெஞ்சில் உதைத்ததில் இறந்தே போனாள்.​

இதை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எழிலழகி வளர்ந்தபின் சொல்லியிருக்க, தந்தையை பார்க்கவே பயந்து போனாள். நியாயமாகத் தந்தையின் மேல் கோபப்படுவதற்கு பதில் அவரைப் பார்த்து நடுங்கி கொண்டே இருந்தாள்..​

பெயருக்கேற்றாற் எழிலழகி தன் அன்னையை போல மிகவும் அழகானவள். பளீரென்ற சிவந்த நிறம், மிக எளிமையான உடையிலும் பார்ப்பவரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகும் வசீகரமும் கொண்டவள்.​

முருகேசனுக்கு எப்போதும் எழிலழகியை பார்த்தால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்ற நினைப்பே வரும். அவளை எதாவது கொடுஞ் சொற்கள் சொல்லியோ, அடித்தோ தன் கோபத்தை போக்கி கொள்வார்.​

சிறு வயதிலிருந்தே அப்பாவின் உருட்டல் மிரட்டலில் வளர்ந்ததால் எதிர்த்துப் பேசவோ, அதிர்ந்து பேசவோ அவளுக்குத் தெரியாது.​

அதற்குப் பிறகு யமுனாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குச் சந்திரா என்ற ஒரு மகளும் சுரேஷ் என்று ஒரு மகனும் பிறந்தார்கள். யமுனா தோற்றத்தில் பெரிய உருவமாகவும் கருப்பாகவும் இருந்ததால், முருகேசன் அவள்மேல் தன் சந்தேக பார்வையை செலுத்தவில்லை.​

யமுனா எழிலழகியை சீராட்டவும் மாட்டார், அதே சமயம் கொடுமையும் படுத்த மாட்டார்.​

முருகேசன் எழில் மேல் பாசமாக இல்லா விட்டாலும், அவளை நன்றாகவே படிக்க வைத்தார். அவள் அழகிற்கு கட்டாயம் எந்த நகையும் போடாமல் மணம் செய்து கொள்ள பெரிய இடத்திலிருந்து சம்மந்தம் வரும். அதை வைத்துத் தன் வாழ்க்கையை செட்டில் செய்து கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்தார்.​

எழில் படித்து முடித்ததும் அந்த வயதான நபரை இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்ய வற்புறுத்தத் தொடங்கி விட்டார். ஆனால் முருகேசனிடம் இந்தத் திருமணம் முடியாது என்று உறுதியாக அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்கவே ராஜூவுடன் திருமணம் செய்து கொள்ள ஒத்து கொண்டாள்.​

நிரஞ்சன் அந்தப் பிரச்சனையிலிருந்து தன்னை காப்பாற்றியும் விட்டதால் இப்போது வேலைக்குச் செல்ல முடிவெடுத்திருந்தாள். எப்படியும் பணம் சம்பாரித்து கொடுத்தால் சரி என்று முருகேசனும் அமைதியாகி விட்டார்.​

அவளைவிடத் திறமைசாலிகளும் அனுபவசாலிகளும் இருக்கும்போது தனக்கு வேலை கிடைப்பது கடினம் என்று நினைத்திருக்க, அவளுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது.​

அது ஒரு ஐடி நிறுவனம், அங்கே வேலையில் சேர்ந்தாள். சம்பளமும் நன்றாகவே கிடைத்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் மேலாளர் ராஜரத்னம் அடிக்கடி அவளை அழைத்துப் பேசத் தொடங்கினார்.​

எழிலழகிக்கு அவரது நடவடிக்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் அதை யாருடனும் சொல்லத் தயங்கினாள்.​

“என்ன எழில் இந்த வார விடுமுறையில் என்ன திட்டம்? எங்காவது வெளியில் போகலாமா?” என்று ராஜரத்னம் கேட்கவும் அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்து நடுங்கியது..​

“ஏய், ஏன் பதட்ட படுகிறாய். என்று அவள் தோளைப் பிடித்த அந்த மனிதர் அவளின் வியர்வை துடைப்பது போல அவள்மேல் கை வைத்தார்.​

சட்டென அவள் விலக, அவள் கரம் பற்றியவர், “இங்க பாரு, உனக்குக் கோடிங்ல எந்த அறிவும் இல்லை, அப்பவும் நான் தான் உனக்குச் சிபாரிசு செய்து உன்னை வேலைக்கு எடுத்தேன், எதுக்கு? நீ இவ்ளோ அழகாயிருக்க, எனக்குக் கம்பெனி கொடுப்பனு தானே?​

இந்த வாரம் ஞாயிறு என்னோட கெஸ்ட் ஹவுஸிற்கு வரணும், இல்லைனா திங்கட் கிழமை உன்னை வேலையிலிருந்து எடுத்து விடுவேன்” என்று வெளிப்படையாகவே மிரட்டினார் ராஜரத்னம்​

அவரின் மிரட்டலில் மிரண்டுபோய் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். அருகில் இருந்த பெண் என்னவென்று கேட்க அவளிடம் சொல்லவும் கூசினாள். சேர்ந்து இரு வாரங்களே ஆகி இருக்க, அவள் யாரிடமும் பழகி இருக்கவில்லை.​

அப்படியே பழகி இருந்தாலும் சொல்லியிருப்பாளா என்றால் தெரியாது. வெளிப்படையாக மற்றவர்களிடம் பேசிப் பழக்கம் இல்லாததால் தனக்குள்ளே ஒடுங்கினாள்.​

அந்தவாரம் சனிக்கிழமை நெருங்கியதும் அவளுக்குப் படபடப்பாக இருந்தது. அந்த மனிதரோ அவளைப் பார்வையால் விழுங்கவே தொடங்கியிருந்தான்.​

ராஜரத்னம் அவளைப் பார்க்கும் போதெல்லாம் உடல் கூசி, சிறுத்து போனது போல் ஆகிவிடும். அப்படியே பூமிக்குள் புதைந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.​

அப்போது அனைவரும் மீட்டிங் ஹாலிற்கு சென்று கொண்டிருந்தனர், “நீ வரவில்லையா” என்று ஒருவன் கேட்கவும் அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது.​

மாதத்தில் ஒரு நாள் ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காகக் கலந்துரையாடல் கூட்டம் வைப்பது வழக்கம் என்று சொல்லி இருந்தனர்.​

இந்த வாரம் மன அழுத்தத்தை எப்படி தவிர்ப்பது, அதிலிருந்து எப்படி வெளிவருவது என்ற தலைப்பில் ஒரு மருத்துவர் பேசப் போவதாகச் சொல்லியிருந்தனர்.​

எழிலழகியும் அந்த மீட்டிங் அறைக்குள் சென்றாள். ஏற்கனவே அனைவரும் அமர்ந்திருக்க அவள் அமருவதற்கு அங்கே இருக்கையே இல்லை என்றதும் யாரையும் கேட்காமல் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள்.​

அப்போது நிரஞ்சன் அந்த அறைக்குள் நுழைந்தான், (சைக்காரிட்ஸ்ட்) மனநல மருத்துவராக இருக்கும் அவனையே அன்று பேச்சாளராக அழைத்திருந்தனர்.​

அங்கே நின்று கொண்டிருக்கும் எழிலழகியை பார்த்து வியந்தபடி தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் நின்றான்.​

அதற்குள் யாரோ அவளுக்கும் ஒரு இருக்கை கொண்டு வர அதில் அமர்ந்தாள். ஆனால் இருக்கைகள் மிக நெருக்கமாக இருந்தது. இருபுறமும் ஆண்கள் இருக்கவே, அவளுக்குச் சங்கடமாக இருந்தது.​

நிரஞ்சன் ஒருமுறை எழிலழகியை அழுத்தமாகப் பார்த்துவிட்டுத் தன் பேச்சைத் தொடங்கினான். அவளோ அவனைப் பார்க்கவே இல்லை, அவன் அவள் கருத்தில் பதியவில்லை. அருகில் இருப்பவன் அவனது தொடையால் அவள் தொடையில் தட்டினான்.​

இடப்பற்றாக்குறையால் நடந்திருக்கும் என்று எண்ணி தன்னையே சற்று குறுக்கி கொண்டு அமர்ந்தாள். அவளுக்கு எதிரில் இருப்பவனோ தன் இருகால்களால் அவளின் கால்களை இறுக்கினான். பக்கென்றது அவளுக்கு.​

அங்கிருக்கும் ஆண்களைப் பார்க்கவே மிகக் கொடுரமாகத் தெரிந்தது. இந்த உலகத்தில் எவனுமே ராமன் இல்லையா? இருபக்கமும் ஆண்கள் இருக்கவும் அவளால் எந்தப் பக்கமும் நகர முடியவில்லை.​

அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியாது என்று நினைத்தவள் சட்டென்று எழுந்து நின்றாள். நிரஞ்சன் என்ன என்று புருவம் உயர்த்தவும், “எக்ஸ்க்யூஸ் மீ” என்று வெளியே சென்று விட்டாள்.​

நிரஞ்சனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் எப்போது பேச ஆரம்பித்தாலும் அனைவரும் ஆர்வமாகக் கேட்பார்கள். ஏன் இவளுக்கு நான் பேசியது போர் அடித்ததா? அல்லது பிடிக்கவில்லையா என்று தோன்றியது. இருந்தாலும் தன் பேச்சைத் தொடர்ந்தான்.​

எழிலழகி தன் இருக்கையில் போய் அமர்ந்து தலையில் தன் இருகைகளையும் தாங்கிக் கொண்டு தொய்வாக அமர்ந்தாள். சில நிமிடங்கள் கடந்திருக்கும் அவள் தோளில் யாரோ கை வைக்கவும் திரும்பினாள்.​

“என்னாச்சு கண்ணு, உடம்பு சரியில்லையா? என் அறைக்கு வாயேன், உன் தலையை என் கையால பிடிச்சு விடுறேன்” என்று இளித்தார் ராஜரத்னம்​

“ச்சே” என்றிருந்தது.​

அந்த மனிதனோ அவள் தோளை இறுக்கமாக அழுத்தத் தொடங்க, இந்த ஹாலில் சிசிடிவி இல்லையா? அப்படியாவது இவனை யாரும் அடிக்க வரமாட்டார்களா? என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.​

அவள் பார்வையை உணர்ந்தவன்.”ஓ கேமரா இருக்கும்னு பயப்படுறியா? அதுவும் சரிதான். நாளைக்கு தான் நமக்கான நேரம் கிடைக்குமே. அங்கே பார்த்துக்கலாம். கண்டிப்பாக வந்துடுவ இல்ல” என்று சொல்லிவிட்டு அகன்றான் ராஜரத்னம்.​

அங்கே அமரவும் பிடிக்காமல் ஓய்வு அறைக்குச் சென்றாள். அங்கே யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு கதறி அழுதாள். சற்று நேரம் அங்கேயே இருந்து தன்னை ஆசுவாசப்படுத்தி முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.​

மீட்டிங் முடியும் தருவாயில் இருக்கும் போல, அனைவரும் பேசித் தேநீர் அருந்திக் கொண்டிருப்பது போலத் தோன்றவும் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு மின்தூக்கியினுள் நுழைந்தாள்.​

அங்கே ஏற்கனவே நிரஞ்சன் நின்றிருந்தான். அவள் அவனைக் கவனிக்காமல் திரும்பி நின்றிருந்தாள். கதவு மூடும் சமயம் அந்த மேனேஜர் ராஜரத்னம் உள்ளே வந்ததை பார்த்ததும் அவளுக்கு உதற தொடங்கி விட்டது.​

ராஜரத்னம் அவளைத் தனியாக அந்த மின்தூக்கியில் பார்த்தும் குஷியாகி உள்ளே வந்துவிட்டார், ஆனால் நிரஞ்சன் ஓரமாக நின்றிருப்பதை பார்த்துத் தன்னை சமநிலை படுத்தி கொண்டு அடுத்த தளத்திலேயே வெளியேறினார்.​

அவர் போனதை கூட உணராமல் சுவறை பார்த்தவாறு நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.​

நிரஞ்சன் மெதுவான குரலில் “அழகி” என்றழைத்தான். அவளிருந்த நிலையில் அவன் அழைத்தது அவள் கருத்தில் பதியவில்லை.​

ராஜரத்னம் தான் அழைக்கிறார் என்று பல்லைக் கடித்து கொண்டு திரும்பாமல் நின்றிருந்தாள்.​

இரண்டு முறை கூப்பிட்டும் திரும்பாமல் போனதால் அவள் தோள்மேல் மெதுவாகக் கைவைத்தான்.​

அவன் கை வைத்தது தான் தாமதம், “என்னை எதுவும் செய்திடாதீங்க, என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று கண்களை மூடியபடி கைகளைக் கூப்பி கதறினாள். அவள் உடல் பயத்தால் நடுங்கியது.​

பட்டென்று கைகளை எடுத்தான். நான் என்ன செய்தேன் என்று என்னிடம் இப்படி பயந்து நடுங்குகிறாள். அவளுக்கு நல்லது தானே செய்தோம். மீட்டிங்கிலும் கொஞ்சமும் மேனர்ஸ் இல்லாமல் வெளியே சென்று விட்டாள்.​

இப்போது தெரிந்த பெண்ணாயிற்றே விசாரிக்கலாம் என்று கூப்பிட்டால் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ நினைவில் இருக்கிறாள் போல என்று லேசாகத் தோளைத் தொட்டால் ‘என்னை எதுவும் செய்துடாதீங்க என்று கதறுகிறாளே. யாராவது இந்த நிமிடம் அவனைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?​

‘அவன் தான் அவளிடம் முறை தவறி நடந்ததாகச் சொல்லமாட்டார்களா?’ என்று கோபத்துடன் அவளைப் பார்த்தான். அவள் இன்னமும் அதே கோலத்தில் நின்றிருக்க அவளை வெறித்துப் பார்த்து விட்டு அடுத்து வந்த தளத்தில் கோபத்துடன் வெளியேறினான்.​

அவன் உள்ளம் கொதித்தது, இனி அவளைப் பார்த்தால் பேசவே கூடாது என்று நினைத்துக் கொண்டான்.​

மின்தூக்கி தரை தளத்தை அடைந்தும் எழிலழகி கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி அப்படியே நின்றிருக்க அவளை அங்கு நின்றிருந்தவர்கள் விசித்திரமாகப் பார்த்தனர்.​

(தொடரும்)​

 
அய்யோ போற இடம் எல்லாமே இப்படி பிரச்சினையாவே இருக்கே!!!... பாவம் இவ!!... இவன் வேற கோவப்படுறானே!!... அடுத்து என்ன ஆகப் போகுதோ!???
 

Advi

Well-known member
அச்சோ என்ன இவளுக்கு இப்படி நடக்குது😳😳😳😳😳

வேலை வேணாம்னு போலாம் இல்ல....

அதுவும் கஷ்டம் தான், அவ அப்பனே சரி இல்ல....

பாவம் என்ன தான் செய்வா?????

நிரு, நீயும் தப்பா நினைக்காதே, அவ பாவம் டா
 

NNK-64

Moderator
அச்சோ என்ன இவளுக்கு இப்படி நடக்குது😳😳😳😳😳

வேலை வேணாம்னு போலாம் இல்ல....

அதுவும் கஷ்டம் தான், அவ அப்பனே சரி இல்ல....

பாவம் என்ன தான் செய்வா?????

நிரு, நீயும் தப்பா நினைக்காதே, அவ பாவம் டா
Ama sis ❤️, thank you for your comment
 

santhinagaraj

Active member
அச்சோ பாவம் அழகி இவ ஏன் இப்படி இருக்கா 🙄🙄
டாக்டராவது ஏதாவது புரிந்து காப்பாத்துவார்னு நினைச்சா அவரும் கோபமாக போயிட்டாரு இப்ப அழகி என்ன பண்ணுவா
 

NNK-64

Moderator
அச்சோ பாவம் அழகி இவ ஏன் இப்படி இருக்கா 🙄🙄
டாக்டராவது ஏதாவது புரிந்து காப்பாத்துவார்னு நினைச்சா அவரும் கோபமாக போயிட்டாரு இப்ப அழகி என்ன பண்ணுவா
Yes, correct sis ❤️ அடுத்த எபி ல என்ன பண்ணுவானு பார்க்கலாம். கருத்துக்கு நன்றி தோழி 🙏🏻🫰💕
 

Mathykarthy

Well-known member
எழில் இப்படி பயந்துட்டு இருந்தா வாழவே விட மாட்டாங்க.... 🙁🙁🙁🙁 ஓட ஓட துரத்தத் தான் செய்வாங்க.... 🤢🤢🤢

நிரஞ்சன் என்ன நடந்ததுன்னு தெரியாம அவனும் கோபமா போறான்.... இவ சொல்லாம அவனுக்கு எப்படி தெரியும்..... 😣😣😣
 

NNK-64

Moderator
எழில் இப்படி பயந்துட்டு இருந்தா வாழவே விட மாட்டாங்க.... 🙁🙁🙁🙁 ஓட ஓட துரத்தத் தான் செய்வாங்க.... 🤢🤢🤢

நிரஞ்சன் என்ன நடந்ததுன்னு தெரியாம அவனும் கோபமா போறான்.... இவ சொல்லாம அவனுக்கு எப்படி தெரியும்..... 😣😣😣
நன்றி சகோ 🥰
 
Top