எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 6

NNK046

Moderator

அத்தியாயம் - 6​

காலையில் விட்ட தூக்கத்தை மதியம் தொடர்ந்து கொண்டிருந்தான் விஷ்ணு.​

" அண்ணா.. அண்ணா.. " மீனாவின் குரல் கேட்க மெல்ல கண் விழித்து பார்த்தான்.​

" தூங்கறீங்களா அண்ணா, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? " முகத்தை பாவமாக வைத்து அவள் கேட்க, ஏதோ காரணத்திற்காக தான் தங்கை தன்னை தேடி வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் இல்லை என தலையசைக்க. புன்னகை துள்ளலோடு பெட்டில் ஏறி அவன் அருகில் சம்மனமிட்டு அமர்ந்தவள்,​

" அண்ணா.. என் பிரண்ட் கீர்த்தி இருக்காள இன்னிக்கி அவ பர்த்டே, அதுனால பிரண்ட்ஸ் எல்லாம் சேந்து ஈவினிங் ஷோ படத்துக்கு போலாம்னு சொன்னாங்க. தீடீர்னு போட்ட பிளான் ண்ணா. டிக்கெட் கூட புக் பண்ணிட்டாங்க. அம்மாட்ட சொன்னா அம்மா கத்தறாங்கண்ணா. நீங்களே சொல்லுங்க படத்துக்கு போனா என்ன தப்பு!? "​

அவளை அமைதியாக பார்த்தான் விஷ்ணு.​

ஆக எல்லாம் முடிவு செய்து விட்டு கடைசியாக வந்து கூறியிருக்கிறாள். அம்மா மறுத்தவுடன் அண்ணனிடம் காரியம் சாதிக்க இங்கு வந்துவிட்டாள்.​

பத்தாம் வகுப்பு வரை கவர்மென்ட் ஸ்கூலில் தான் படித்தாள் மீனா. பொது தேர்வில் நல் மதிப்பெண் எடுத்ததால் ஸ்காலர்ஷிப் மூலம் இந்த வருடம் தான் தனியார் பள்ளியில் சேர்த்தி விட்டார்கள்.​

நான்கு மாதம் முன்பு தான் தனி போன் வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டாள். இந்த நவீன சமுதாயத்தின் அதி வேக வளர்ச்சியோட நாம் விருப்பப்பட்டாலும் விருப்பப்படாவிட்டாலும் சேர்ந்து பயணித்து தான் ஆக வேண்டும்.​

மீனாவிற்கு பள்ளி மாற்றம் புது வித அனுபவத்தை தந்தது.​

புதிதாக சிறகு முளைத்த கிளி அவள்..!​

இறகையும் வெட்டி விடாமல் அதே சமயம் தூர பறக்கவும் விடாமல் மிக நேர்த்தியாக கையாள வேண்டும். சற்று தடுமாறினாலும் பின் விளைவுகள் படு மோசமாகி விடும்.​

அண்ணனிடம் வந்தால் நடக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருப்பவளின் நம்பிக்கையை பொய்யாக்க அவன் விரும்பவில்லை. ஆனால் அதே சமயம் அம்மாவின் சொல்லையும் மீற கூடாது என்பதை அவளிற்கு சொல்லி தர வேண்டும் என எண்ணியவன்.​

" ஏன் அம்மா வேணானு சொன்னாங்க"​

" அது நான் தனியா போக கூடாதாம் சின்ன புள்ளயாம் நான். "​

" மீனா, அம்மா என்ன சொன்னாலும் உன் நல்லதுக்கு தான் சொல்லுவாங்கனு தெரியும் தானே!? " மெல்ல அவன் பேச்சை ஆரம்பிக்க சலித்து கொண்டாள் பெண்ணவள்.​

" ப்ச் போங்க அண்ணா நீங்களும் லெக்ச்சர் அடிக்க ஆரம்பிக்காதீங்க " என்றவள் எழுந்து செல்ல முற்ப்பட அவளை தடுத்தவன், " நான் சொல்லறது மொத முழுசா கேளுடா, அம்மா என்ன சொன்னாங்க? தனியா போக கூடாதுனு தானே சொன்னாங்க. நானே உன்ன தியேட்டர்ல ட்ராப் பண்ணிட்டு படம் முடிஞ்ச உடனே கூட்டிட்டு வரேன்னு அம்மாட்ட சொல்லு..!"​

அவன் கூற்றில் ஒரு நிமிடம் அகம் மகிழ்ந்தவள், " ஹை சூப்பர்..! ஆனா அதுக்கும் அம்மா வேணா சொல்லிட்டா? "​

" அது உன் சாமர்த்தியம் இவளோ தான் என்னால பண்ண முடியும். ஆனா ஒன்னு அம்மா பெர்மிஸ்ஸன் தராம நீ எங்கயும் போக கூடாது மீனா " என்றான் சிறு கண்டிப்புடன்.​

மீனா போய் மனோகரியிடம் விஷ்ணுவின் பெயரை சொல்லி கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக அனுமதியும் பெற்று கொண்டாள்.​

தியேட்டருக்கு கிளம்ப, அவளை முதலில் ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டி சென்றான் விஷ்ணு, " என்ன வேணும் சொல்லு " என்றான் மெனு கார்டை நீட்டி.​

அவனை ஆச்சிரியமாக பார்த்து கொண்டிருந்தாள் மீனா. ஏன் என்றால் அவன் கூட்டி வந்த கடை அப்படி. இது வரை ஐஸ்கிரீம் என்றால் ரோட்டில் விற்று செல்வது, கல்யாண வீடுகளில் சாப்பிடுவது அல்லது எப்பொழுதாவுது மனோகரி வாங்கி வரும் அருண் ஐஸ்கிரீம் பேமிலி பேக்.​

ஆனால் இங்கோ ஏ.சி போட்ட அறையில்​

வித விதமாக ஐஸ்கிரீம் மட்டுமே இருக்கும் தனி கடையை பார்க்க அவளிற்கு ஆச்சிரியமாக தான் இருந்தது.​

மெனு கார்ட்டை அலாசியவளின் கண்களில் சிக்கியது அந்த , 'சிஸ்லிங் ப்ரவுனி வித் வெண்ணிலா ஐஸ்கிரீம் ( sizzling brownie with vennila icecream)'அவள் தோழி அடிக்கடி சிலாக்கித்து சொல்லும் உணவு பண்டம். அதை ஆர்டர் செய்து விட்டு ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தாள், அமிர்தமாய் அவளிற்கு இனித்தது.​

" புடிச்சிருக்கா மீனா? "​

"ம்ம்ம்.. ரொம்ப..!"​

" ஐஸ்கிரீம் டேஸ்ட் புடிச்சிருக்கா, இல்ல இப்படி பெரிய ஏ.சி ரூம்ல உக்காந்து சாப்பிடறது புடிச்சிருக்கா, இல்ல இந்த மாறி அழகான கப்புல கொடுத்திருக்கறதுனால புடிச்சிருக்கா"​

" எல்லாமே சேந்து தான் புடிச்சிருக்கு..!"​

" அதே மாறி தான் நீ, நான், ஆயா, அம்மா எல்லாரும் சேந்து தான் ஒரு குடும்பம். அதுல்ல ஒருத்தர் இல்லைனாலும் நல்லா இருக்காது. நாங்க மூணு பேருமே உன்னோட சந்தோசத்துக்காக தான் ஓடுறோம் உனக்கு எந்த தேவையா இருந்தாலும் எங்க மூலமா தான் நீ நிறைவேத்திக்கனும்..! உன் பிரண்ட்ஸ் மூலமா இல்ல. "​

அவனை திகைப்போடு பார்த்தாள் மீனா.​

கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுது தான் அவர்கள் வீடு வறுமையில் இருந்து விடுப்பட்டு ஒரு நிலைக்கு முன்னேறி கொண்டிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் டி.வியே வாங்கி இருந்தார்கள். படம் என்றால் டி.வியில் வருவது தான்..! பெரிதாக படத்திற்கு என அடிக்கடி சென்றதில்லை. அவ்வப்பொழுது வேதா குடும்பத்துடன் சென்றிருக்கிறாள் அவ்வளவு தான்.​

தனக்கு பிடித்த நடிகர் படம் அதுவும் முதல் நாள் கூட்டத்தோடு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளின் தோழிகளின் பேச்சின் மூலம் துளிர் விட்டிருக்க, அந்த ஆசையை இன்று நிறைவேற்றிக்க பார்த்தாள்.​

" நேத்து நைட் நீ அம்மாட்ட சண்ட போட்டது எனக்கு தெரியும். உன் ஆசைய புரிஞ்சிக்கவே மாட்டேங்கறாங்க, உன்ன வீட்டிக்குள்ளயே அடச்சி வைக்க பாக்கறாங்கனு சத்தம் போட்டுட்டு இருந்த. எவளோ பெரிய வார்த்த தெரியுமா அது? இப்போ நாலு வருஷமா தான் அம்மா நைட் ஷிப்ட் வேலைக்கு போறத்தில்லை.. உனக்கே தெரியும் தானே? யாருக்காக அம்மா இவளோ கஷ்டப்படறாங்க சொல்லு? நீ ஆசைப்படுறத தப்புனு சொல்லல ஆனா நம்ம குடும்ப சூழலையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோனு தான் சொல்றேன். எல்லாரோட குடும்பமும் ஒரே மாறி இருக்கறதில்ல மீனா. தேவை இல்லாம உன் பிரண்ட்ஸோட உன்ன கம்பேர் பண்ணி உன்ன நீயே குழப்பிக்காத..! என்ஜாய்மென்ட்ஸ் எப்போ வேணா பண்ணிக்கலாம் ஆனா படிப்பு இப்போ விட்டா மறுபடியும் முடியாது..! இவளோ நாளா உன்ன குழந்தைனு தான் நெனச்சிட்டு இருந்தோம். ஆனா நீயு வளந்துட்ட உனக்கும் ஆசைகள் இருக்கும்னு யோசிக்கமா விட்டுட்டேன், என் தப்பு தான். உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு நான் இருக்கேன் பண்ண. ஆனா அம்மாவ மட்டும் நோகடிக்கற மாறி பேசாத டா அவங்க தாங்க மாட்டாங்க"​

கண்களில் நீர் கோர்த்தது மீனாவிற்கு தன்னை பற்றி மட்டும் சுயநலமாக யோசித்து விட்டோமோ என தோன்ற தலையை தாழ்த்தி கொண்டாள்.​

தியேட்டர் முன் அவளை இறக்கி விட்டவன். அவள் கையில் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை திணித்தான்.​

"உன் பிரண்ட் கிட்ட டிக்கேட்டுக்கு காசு கொடுத்துரு மிச்ச காச நீயே வெச்சிக்கோ " அவனின் வார்த்தைகள் சுறுக்கென்று நெஞ்சில் தைத்தது மீனாவிற்கு. இது பர்த்டே டிரீட் என்பதால் அவள் தோழி தான் முழு செலவையும் ஏற்று கொண்டாள். இன்று அவள் படத்திற்கு செல்ல மற்றோரு காரணமும் அது தான். இலவசமாக படம் பார்த்து வந்து விடலாமே என்ற எண்ணத்தில் தான்.​

தன் குடும்பம் தன் பணம் என இருக்க வேண்டும் என்று அவன் சொல்லாமல் சொன்ன விதம் அவள் தவறை சுட்டிக்காட்ட, " சாரிண்ணா..!" என்றாள் உடைந்த குரலில்.​

அவள் தலையை வருடி கொடுத்தவன்,​

" அதுலா ஒன்னும் இல்லம்மா போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா.. எத பத்தியும் யோசிக்காத இந்த மாறி வாய்ப்பு எல்லாம் இப்போ தான் கிடைக்கும். படம் முடிஞ்ச உடனே கூப்பிட்டு நா வரேன் " என்றவன் புன்னகையோடு அவளிடம் இருந்து விடை பெற்று கொண்டான்.​

படம் முடிந்து வீட்டிற்கு வந்த மீனா, முதல் வேளையாக தாயை கட்டி கொண்டு அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்டாள்.​

தந்தை ஸ்தானத்தில் இருந்து குடும்ப பாரத்தை தாங்கியவன், இப்பொழுது தாயாகவும் மாறி அறிவுரை வழங்கியது ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் மறு பக்கம் குற்ற உணர்ச்சி அவர் மனதை பிழிந்தது. ஒரு தாயாய் அவனிற்கு எந்த சேவையும் செய்ய முடியவில்லையே என்று..!​

மீனாவை வீட்டில் விட்டுவிட்டு வெளியே கிளம்பி கொண்டிருந்த விஷ்ணுவை தான் மனோகரி பார்த்து கொண்டிருந்தார். மறந்தும் அவன் பார்வை அவர் பக்கம் திரும்பவே இல்லை. வழக்கம் போல் கிடைக்கும் ஏமாற்றமாய் இருந்தாலும் இன்றும் மனம் வலித்தது.​

விஷ்ணு தங்கி இருக்கும் தெருவிற்கு அருகில் ஒரு பெரிய காலி கிரௌண்ட் இருக்கும். அக்கம் பக்கம் வாண்டுகள் அனைவரும் அங்கு தான் கிரிக்கெட் விளையாட வருவார்கள். கொஞ்சம் இருட்டு கட்ட ஆரம்பித்த பின் அங்கு யாரும் வர மாட்டார்கள். ஏன் என்றால் அங்கு தெரு விளக்கு கூட இருக்காது.​

ஆனால் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த இடம் அது தான். மனம் சஞ்சலம் கொள்ளும் பொழுதெல்லாம் அங்கு இருக்கும் வேப்பமரத்திற்கடியில் வந்து அமர்ந்து கொள்வான். அந்த குளுமை அவன் மனதை சற்று ஆசுவாசப்படுத்தும். இன்று காலையில் இருந்து நடந்ததை எல்லாம் அவன் மனம் அசைப்போட்டு கொண்டிருந்தது.​

அந்த அந்த வயதில் கிடைக்க வேண்டியது எல்லாம் அந்த அந்த வயதில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு. பசி போன பிறகு கிட்டும் அறுசுவை பண்டம் வீண் தான். மீனாவின் ஆசைகள் நியாயமானது. அது நிறைவேற்றும் பொறுப்பு தனக்குறியது..! அவளின் ஆசைகள் ஏக்கமாக மாறி விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.​

ஆனால் எப்படி யோசித்தாலும் எந்த ஆசையை நிறைவேற்ற வேண்டுமாலும் நமக்கு தேவை பணம் ஒன்று தான் என்ற உண்மை முகத்தில் அறைய சோர்ந்து போனான் விஷ்ணு..!​

இந்த ஒரு வருட காலமாக சொந்தமாக மெக்கானிக் ஷெட் போட்டு விடலாம் என்ற எண்ணம் அவனுள் இருந்தது. ஆனால் இத்தனை வருடங்களாக சிறுக சிறுக சேர்த்தியும் அவனிடம் வெறும் ஐந்து லட்சம் தான் இருந்தது. அது மட்டும் போதாது மேலும் கடன் தான் வாங்க வேண்டும், கடன் என்று வாங்கி விட்டால் மாதம் மாதம் வட்டி அவனை துரத்தும். இன்னும் ஒரு வருடத்தில் மீனா பள்ளி படிப்பை முடித்து விடுவாள் அவளை நல்ல கல்லூரியில் சேர்த்த வேண்டும் அதற்கும் பணம் வேண்டும்,​

இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டு அகல கால் வைக்கவும் பயமாக இருந்தது. திடீர் செலவுகள் என மருத்துவ செலவு வந்து விட்டால் யாரிடம் போய் நிற்பது . வேலைக்கு சென்றால் நம் சம்பளத்திற்கு மீறிய உழைப்பை வாங்கினாலும் மாத இறுதியில் பணம் நிச்சயம். ஆனால் சொந்த தொழில் ஆரம்பித்தால் அந்த உத்திரவாதம் இல்லையே..!?​

தலை வலித்தது விஷ்ணுவிற்கு. ஓடுகிறான் ஓடுகிறான், ஆனால் முடிவிலி போல் முடிவில்லாமல் இருக்கும் இந்த பாதையில் அவன் நிம்மதியை தொலைத்து பல வருடங்கள் ஆகி விட்டது..!​

அன்னை மடி தேடும் பிள்ளையாய் மரத்தில் சாய்ந்தமரத்தவனின் அருகில் ஆள் நடக்கும் ஆரவாரம் கேட்க நிமிர்ந்து பார்த்தான். வேதா தான் அவனை நோக்கி வந்துக்கொண்டிருத்தாள்.​

அவளை பார்த்தவுடன் அவன் அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்க வேகமாக அவன் அருகில் வந்தவள் அவனை எழ விடாமல் அவன் கையை இறுகப்பற்றி கொண்டாள்.​

அவளிடம் இருந்து கையை உருவியவன் அவளை முறைக்க அவனை விட அதிகமாய் முறைத்தவள்.​

" ஒரு முக்கியமான விஷயம் பேசனும் கொஞ்ச நேரம் அமைதியா இரு மாமா "​

அவள் சொல்லி ஐந்து நிமிடங்கள் மேல் ஆகி விட்டது. அவளும் ஒன்றும் பேசவில்லை அவனும் அதை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. இருவருமே அமைதி காக்க, அவனை மனதில் வறுத்து கொண்டிருந்தாள் வேதா.​

' ஊமையன், ஏதாவது கேக்கறானு பாரு..! கல்ல கரைச்சி குடிச்சவன் மாறியே உக்காந்திருக்கான். ம்ஹ்ம்.. இவன் தேற மாட்டான் நாம தான் எந்த முடிவுனாலும் எடுக்கனும் ' என எண்ணியவள் பேச ஆரம்பித்தாள்.​

" இப்போ தான் மீனாட்ட பேசிட்டு வந்தேன்.. "​

"...."​

" அவ ஆசை அவ வாழ்க்கைனு எல்லாம் சரியா யோசிக்கறியே மாமா எப்பயாவுது உன்ன பத்தி யோசிச்சு இருக்கியா? சின்ன வயசுல கஷ்டப்பட்ட ஒதுக்கிறேன். இப்பவும் தெரிஞ்சே ஏன் கஷ்டப்படுற? உன் கடமை தான் உன் குடும்பம் தான், நீ தான் பாக்கனும் நா வேணானு சொல்லல.. ஆனா கடமை வேற வாழ்கை வேற அத மொத புரிஞ்சிக்கோ மாமா. கடமை கடமைனு சொல்லி உன் வாழ்கைய விட்டுட்டு நின்னா உன்ன விட பெரிய ஏமாளி வேற யாரும் இருக்க மாட்டாங்க. மித்தவங்க சந்தோசம் பத்தி யோசிக்கற நீ என்னைக்காவுது உன் சந்தோசம் என்னனு யோசிச்சிருக்கியா?இல்ல உன் சந்தோசம் தான் என்னனு உனக்கு தெரியுமா? சொல்லு மாமா "​

சம்மந்தம் இல்லாமல் வந்து கேள்வி கேட்ப்பவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு.​

 

Advi

Well-known member
நல்லா எதார்த்தமாக கொண்டு போரிங்க ரைட்டர் ஜி, சூப்பர்🥰🥰🥰🥰
 
ரொம்ப அழகா அவளுக்கு புரிய வச்சுட்டாங்க!!... நிதர்சனத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க எழுத்தாளரே!!!.... வேற லெவல் எபி!!..
 

NNK046

Moderator
ரொம்ப அழகா அவளுக்கு புரிய வச்சுட்டாங்க!!... நிதர்சனத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க எழுத்தாளரே!!!.... வேற லெவல் எபி!!..
நன்றி டியர் 😍😍😍
 

Mathykarthy

Well-known member
விஷ்ணு ரொம்ப அழகா பக்குவமா மீனாக்கு புரிய வச்சான் 🤩
நைஸ் அப்டேட் 🥰
 
Top