எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக- அத்தியாயம் 4

NNK-64

Moderator

அத்தியாயம் 4​

சில வாரங்களுக்குப் பிறகு நிரஞ்சன் ஒரு பெரிய புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்றிருந்தான். அங்கிருந்த புத்தகங்களை அவன் பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம், பின்னாடி இருந்து யாரோ அழைப்பது போல இருக்கவும் திரும்பிப் பார்த்தான்.​

அங்கே எழிலழகி தான் முகத்தில் மெல்லிய புன்னகையுடன் நின்றிருந்தாள்.​

அவளைப் பார்த்ததும் அன்றைய நாள் நினைவில் வர, அவளிடம் எதுவும் பேசாமல் வேறு இடத்திற்கு சென்றான். அவளுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. உதவி செய்தவன் ஆயிற்றே அவன் அதை மறந்திருக்கலாம், ஆனால் அதை நான் தானே அவருக்கு நினைவு படுத்தி நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்,​

“சார், என்னை நினைவு இல்லையா? நான் தான் எழிலழகி. அன்று பெசன்ட் நகரில், என்று மேற்கொண்டு சொல்லப் போனவளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தான்.​

அவளை பார்க்காமல் புத்தகத்தில் தன் பார்வையை செலுத்தியபடி, “பெசண்ட் நகரில் பார்த்ததும் நினைவில் இருக்கு, அன்றைக்கு ஐடி நிறுவனத்தில் அவமானபடுத்தினாயே அதுவும் நினைவில் இருக்கு, இப்போ என்ன வேண்டும் உனக்கு?” என்றான் சுள்ளென்று.​

“என்ன? ஐடி நிறுவனத்தில் அவமானபடுத்தினேனா?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அன்றைய நாளை நினைவில் கொண்டு வந்தாள்.​

அன்று மீட்டிங்கில் அவன் பேச்சாளராக வந்தது நினைவில் வரவும், “சார் நான் உங்க பேச்சைக் கேட்க விரும்பம் இல்லாமல் எல்லாம் அந்த அறையிலிருந்து போகலை, எனக்கு அங்கே இருக்க முடியாத நிலை. உங்களை நான் சரியாகக் கூடக் கவனிக்கவில்லை” என்றாள் எழிலழகி.​

“நான் அதைச் சொல்லவில்லை, அதற்குப் பின் மின்தூக்கியில் நீ நடந்து கொண்டதை பற்றிச் சொல்கிறேன். உன்னைப் பத்திரமாக உன் அப்பாவிடம் ஒப்படைத்தும் உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா?​

உன்னை என்ன அந்த மின்தூக்கியில் வைத்தே பலாத்காரம் செய்து விடுவேனா என்ன?” என்றான் அழுத்தமான குரலில். அது அவளுக்கு மட்டும் கேட்குமளவிற்கு மெல்லிய குரலில் இருந்தாலும், அவன் கோபத்தின் அளவை அவளால் உணரமுடிந்தது. ஆனால்…​

“என்ன சார் சொல்றீங்க, அந்த மின்தூக்கியில் நீங்க இருந்தீங்களா? அந்த மேனேஜர் தானே இருந்தார், அவரிடம் தானே நான் அப்படி பேசினேன்” என்றாள் குழப்பமுடன்.​

நிரஞ்சன் நெற்றியில் புருவ முடிச்சுடன், “இங்கே அதிக நேரம் பேச வேண்டாம், வா அங்கே போகலாம்” என்று படிப்பதற்காக இருந்த ஒரு அறைக்கு அவளுடன் சென்றான்.​

“அன்றைக்கு நீ என்னை மின்தூக்கியில் பார்க்கவில்லையா?” என்று கேட்டான். அவள் இல்லை என்று தலையாட்டவும் “நான் உன்னைக் கூப்பிட்டு உன் தோளில் கை வைத்தேனே?” என்றான் புருவம் உயர்த்தி.​

“அது அந்த மேலாளர் ராஜரத்னம்னு நெனச்சேன்” என்றாள் கலங்கிய குரலில்.​

“என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்லு” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.​

அவள் அன்று காலை முதல் நடந்த விஷயத்தை அவனுக்குச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள். அவன் தாடைகள் இறுகியது. “அப்பவே அவன் கன்னத்தில் அறைய வேண்டியது தானே” என்றான் கோபமாக.​

“அவர் மேலாளர், நான் அப்போது தான் சேர்ந்திருந்த சாதாரண ஊழியர், நான் எப்படி அவரை அடிக்க முடியும்” என்றாள்.​

“யாரிடமாவது கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாயா? என்ன செய்தாய்?” என்றான் அவள்மேல் வந்த கோபத்தை அடக்கியபடி.​

“எனக்கு யார்கிட்ட சொல்றதுனு தெரியலை, யாரை நம்பறதுனும் தெரியலை. ஞாயிறன்று என் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீட்டில் இருந்தேன். மறுநாள் வழக்கம் போல வேலைக்குப் போனேன்.​

தொட்டதிற்கெல்லாம் எதாவது குறை சொல்லித் திட்டத் தொடங்கி விட்டார். அவர் கொடுத்த வேலையைச் செய்து முடித்து விட்டுத் தான் போனேன். ஆனால் அதற்கடுத்த நாள் அந்த ப்ரோகராம் ரன் ஆக வில்லை. எல்லார் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தி திட்டி விட்டார். அதனால்...” என்று அவள் சற்று நிறுத்தவும்​

“அதனால் நீ வேலையை விட்டு விட்டாய், சரியா?” என்றான் ஒரு மாதிரி குரலில்.​

கன்றிய முகத்துடன் ஆமாம் என்று அவள் தலையாட்டவும், “முட்டாள்! தவறு செய்தவன் அந்த மேலாளர், அவன் உன் மீது குற்றம் சுமத்தி வெளியே அனுப்பி இருக்கிறான். நீயும் வேலையை விட்டுட்டு வந்திருக்க. கிளம்பு என்னுடன்?” என்று எழுந்தான்​

“எங்கே” என்று அவள் புருவம் சுருக்கவும், பதில் சொல்லாமல் அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு முன்னே நடந்தான். அந்த பார்வை கேள்வி கேட்காமல் என்னுடன் வா என்பது போல உணர்த்தவும் எழிலும் அவன் பின்னே சென்று அவனுடன் காரில் ஏறினாள்.​

கார் அவள் வேலை செய்த நிறுவனத்தின் முன்னே நிற்கவும், “என்ன ரஞ்சன் சார் இங்கே வந்திருக்கீங்க, நான் தான் வேலையை விட்டு விட்டேனே, எந்த பிரச்சனையும் வேண்டாம், வாங்க போகலாம்” என்றவளை முறைத்தவன் அவள் கைப்பற்றி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்..​

ஏற்கனவே நிரஞ்சன் அங்கே அறிமுகமாகி இருந்ததால் யாரும் அவனை தடுக்கவில்லை.. எழிலழகியின் கைகளை தன் கைகளில் பற்றியபடி நேராக அந்த மேலாளரின் அறைக்குள் நுழைந்தான்.​

“வாங்க நிரஞ்சன்” என்று சிரித்தபடி வரவேற்றார் ராஜரத்னம். அவன் அருகில் இருக்கும் எழிலழகியை கண்டு குழம்பினார்..​

எழிலை முன்னாடி போக செய்து, “இப்போது இந்த பெண்ணிடம் என்ன வேண்டுமோ கேளுங்க” என்றான் அழுத்தத்துடன்​

“என்ன சொல்றீங்க நிரஞ்சன்? நான் என்ன கேட்க போறேன்?” என்று திணறினார்.​

தன் சட்டையை முழங்கை வரை மடித்து விட்டபடி அவரருகில் வந்தவன், தன் கைகளை மடக்கி அவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் “இன்னொரு ஆண் முன்னாடியே சொல்ல தயங்கற விஷயத்தை, தனியாக ஒரு பெண்ணிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால் என்னவேணாலும் பேசுவியா?” என்று தன் கைகளை எடுக்க ராஜரத்னத்தின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது.​

அவரின் கழுத்தை தன் ஒற்றை கையால் இறுக்கி பிடித்தவன் அவரை அப்படியே சுவற்றின் மேல் சாய்த்து தன் உயரத்திற்கு அவரை மேலே தூக்கினான்..​

நிரஞ்சனின் அதிரடி செயலில் அதிர்ச்சியில் நின்றிருந்த எழிலழகி அந்த மனிதர் மூச்சுக்காக திணறவும், சுயம் பெற்றவளாக நிரஞ்சனின் கைகளை பற்றி உலுக்கினாள்..​

“ரஞ்சன் சார் அவரை விடுங்க, எதாவது ஆகிட போகுது” என்று தன் முழுபலம் கொண்டு அவன் கைகளின் பிடியை தளர்த்த முயன்றாள். ஆனால் அவனின் உரமேறி இருந்த கைகளை அவளால் அசைக்கக்கூட முடியவில்லை..​

ராஜரத்னம் தன் இரு கைகளையும் கூப்பி மன்னிக்குமாறு சைகை செய்தப் பின்னரே தன் பிடியை தளர்த்தினான்..​

“நிரஞ்சன், எழில் இருவரும் என்னை மன்னிச்சுடுங்க. இனிமேல் இந்த மாதிரி நடக்காது. எழில் நீ இங்கேயே வேலை செய்யலாம், உனக்கு என்னால் எந்த தொந்தரவும் இருக்காது” என்றார்.​

நிரஞ்சன் திரும்பி எழிலழகியை பார்த்தான் அவள் மறுப்பாய் தலையசைக்கவும், தன் கைபேசியை எடுத்து யாரையோ அழைத்து பேசினான்.​

பின்பு தன் கைப்பேசியை ராஜரத்னத்திடம் நீட்டினான். அவர் குழப்பத்துடன் அதை தன் கையில் வாங்க மறுமுனையில் அந்த ஐடி நிறுவனத்தின் முதலாளி பேசினார்.​

“ச்சீ உன்னை நம்பி என் கம்பெனியை ஒப்படைத்தேன் பாரு. உன்னை வேலையிலிருந்து இப்போதே நீக்கி விட்டேன். இனி ஒரு நிமிடம் கூட நீ அங்கே இருக்க கூடாது, கிளம்பு” என்று கர்ஜித்தார்.​

அதிர்ச்சியுடன் கைப்பேசியை திருப்பி நிரஞ்சனிடம் கொடுத்தார் ராஜரத்னம். “என்ன பார்க்கற, செல்வநாயகம் அங்கிளோட மகன் ராகவ் என்னோட நண்பன் தான்” என்றான் நிரஞ்சன்.​

அவர் பதில் ஏதும் சொல்லாமல் தலையை கவிழ்ந்தபடி தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்..​

மீண்டும் செல்வநாயகத்தை கைப்பேசியில் அழைத்தவன், “அங்கிள், முதல்ல ‘பாலியல் துன்புறுத்தல் தீர்வு குழு’ (Anti Sexual Harrasment Committee and Redressal Committie) நிறுவி அதற்கு தகுந்த பெண் அதிகாரிகளையும் உங்கள் கம்பெனியின் பெண் ஊழியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள். அப்போது தான் பெண்கள் அவர்களோட பிரச்சனையை வெளியே சொல்ல முன் வருவாங்க. இது போன்ற தவறுகளையும் நம்மால் தடுக்கமுடியும்” என்றான் அழுத்தமான குரலில்.​

“கட்டாயம் இனி மாதம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் நிரு.. அந்த மேனேஜர் நம் கம்பெனியின் பெயரை கெடுப்பதற்குள் உன் கண்ணில் பட்டானே அதுவே சந்தோசம். அந்த பெண்ணிற்கு நம் கம்பெனியிலேயே தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் என்றால் வரச்சொல் நிரு” என்றார்..​

“சரி அங்கிள், நான் சொன்ன உடனே நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி” என்று கைப்பேசியை அணைத்தான்.​

அதன்பின் மீண்டும் அவளுடன் தன் காரில் ஏறி அந்த புத்தக நிலையத்திற்கு வண்டியை செலுத்தினான். அவன் முகம் இப்போதும் கடுமையாகவே இருக்கவும் அவனை ஆராய்ச்சியாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள் எழிலழகி​

அவள் குறுகுறுவென அவனையே பார்ப்பதை நிரஞ்சன் உணரவும், “என்ன அப்படி பார்க்கிற அழகி.. எதாச்சும் கேட்கணுமா?” என்றான்​

“நீங்க மனோதத்துவ மருத்துவர் தானே.. மருத்துவரென்றால் ரொம்ப அமைதியாகத்தானே இருப்பாங்க? ஆனால் நீங்க” என்று அவள் சற்று தடுமாறி நிறுத்தவும்.. “ம் மேலே சொல்லு ஒரு ரவுடி மாதிரி அந்த மேனேஜரை அடிச்சேனு சொல்ல வர்றியா?” என்றான் மென்மையாக புன்னகைத்தபடி​

அவள் ஆமாம் என்று தன் மெளனத்தையே அதற்கு பதிலாக தந்தாள்.​

“இவனை போல ஆட்களிடம் எல்லாம் இப்படி தான் நடந்துக்கணும். அப்போது தான் இன்னொருமுறை இப்படி நடக்க தோணாது.​

உன்னை போல பெண்கள் இருக்கும் வரை, அவனைபோன்ற ஆண்கள் அத்துமீற தான் செய்வாங்க” என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்.​

“என்ன சொல்றீங்க?, நீங்களும் என் அப்பா போல பேசறீங்க, அவர் கிட்ட சொன்னால் நீ அலங்காரம் பண்ணிட்டு அவன் முன்னாடி தளுக்கி மினுக்கி நின்றிருப்பனு அசிங்கமாகப் பேச ஆரம்பிச்சிடுவாரு, அதனால்தான் நான் யாரிடமும் சொல்வதே இல்லை. இப்போது நீங்களும் இப்படி பேசறீங்களே” என்றாள் ஆதங்கத்துடன்..​

அவள் கன்னங்களில் கண்ணீர் கோடுகளை கண்டவன், “அழகி… நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. முதலில் கண்களை துடை” என்றான் அவசரமாக.​

“பெண்கள் எந்த உடை உடுத்தினாலும் ஆண்களின் பார்வை அவர்களின் கண்ணிற்கு கீழே இறங்க கூடாது என்று நினைப்பவன் நான். நீ இந்தமாதிரி சூழ்நிலையில் எதிர்த்து போரடாமல் ஒரு கோழை போல வேலையை விட்டு வந்திருக்கிற பாரு. அதை தான் நான் சொன்னேன்” என்றான்​

“எதிர்த்து பேசியோ, அடம்பிடித்தோ வளருவதற்கான சூழ்நிலையோ, உரிமையோ என் வீட்டிலேயே எனக்கு கிடைக்கவில்லை. வீட்டிலேயே என்னால் பேச முடியாத போது என்னால் எப்படி வெளி உலகத்தில் பேசமுடியும். எனக்கு பெரிதாக நண்பர்களும் இல்லை. என் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள கூட யாருமில்லை” என்றாள் வருத்தமான குரலில்​

அப்படிபட்டவள் குறைந்தது அவனிடமாவது தன் உணர்வுகளையும், தன் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்கிறாளே என்று சற்று பெருமையாக உணர்ந்தவன் ஒரு கையால் காரை செலுத்திக் கொண்டே மறுகையால் அவள் கைகளை ஆதரவாக அழுத்தினான்.​

“பேரழகியாக இந்த சமூகத்தில் போராட முடியாது சகி, திமிரழகியாக மாறி எல்லாரையும் துணிவுடன் எதிர் கொள்ள பழகு, உன்னோடு நான் இருக்கிறேன்” என்றான் நிரஞ்சன்​

“எதற்கு என்னை எல்லாரும் திமிர் பிடித்தவள் என்று சொல்வதற்கா?” என்றாள் எழிலழகி மெலிதான புன்னகையுடன்.​

“நான் சொல்லும் திமிர், ஆணவ திமிர் இல்லை, கற்பை தற்காத்து கொள்ள எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டிய திமிர். இப்போது உனக்கு நடந்த பிரச்சனை உனக்கு மட்டும் நடந்ததுனு நினைக்கிறாயா? வெளியே வேலைக்கு என்று செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது.​

பலர் தங்களுடைய மிடுக்கான பேச்சிலும் அதிகார தோரணையுடன் சேர்ந்த நடவடிக்கையாலும் சுலபமாக எதிர்கொள்றாங்க. உன்னை போன்ற பயந்தவர்களை தான் இந்த மாதிரி ஆண்களுக்கு பலி ஆகிறாங்க.​

அதனால இந்த எழிலழகி திமிரழகியாக மாறணும், புரியுதா?” என்றான் கண்களை சிமிட்டி​

திமிரழகியாக மாறுவாளா இந்த எழிலழகி?​

(தொடரும்)​

 

Mathykarthy

Well-known member
நிரஞ்சன் சூப்பர் 👏👏👏👏👏 மேனேஜரை நல்லா கவனிச்சான் 😂😂😂
நிரஞ்சன் பேச்சு மாற்றம் கொடுக்குமா எழிலிடத்தில்... ☺️
 

NNK-64

Moderator
நிரஞ்சன் சூப்பர் 👏👏👏👏👏 மேனேஜரை நல்லா கவனிச்சான் 😂😂😂
நிரஞ்சன் பேச்சு மாற்றம் கொடுக்குமா எழிலிடத்தில்... ☺️
நன்றி சகோ 🥰
 
Top