எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 03

NNK-29

Moderator
💘உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💘 அத்தியாயம் 03
 

NNK-29

Moderator

அத்தியாயம் 3​

சூரியன் உச்சியில் இருந்த நேரத்திலும் பரதநாட்டியம், யோகாசனம், ஏரோபிக் நடனம், வெஸ்டர்ன் டான்ஸ் என பல கலைகளை பயிற்றுவிக்கும் நிறுவனம் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு தான் சாருமதியும் ஏரோபிக் நடனம் பயிற்றுவிக்கும் இன்ஸ்ட்ரக்டராக பணிபுரிகிறாள்.​

“எந்தா சாரு? என்ன யோசனை?” என உணவில் கவனமில்லாமல் சாப்பாட்டை அலந்துக்கொண்டிருந்தவளிடம் மலையாளம் கலந்த தமிழில் கேட்டாள் ஸ்வர்ணமுகி.​

ஸ்வர்ணமுகி, சாருமதி வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் பரதத்தை பயிற்றுவிக்கும் கேரளத்து பைங்கிளி.​

“எனக்கு கல்யாணம் பேசியிருக்காங்கன்னு சொல்லிருக்கேன்ல? அவரை பற்றி தான்…” என சாரு இழுக்க,​

“அவரை தான் நீ நேத்து பார்த்து பேசிட்டியே சாரு. ஆளு எப்படி?” என தோழியின் விருப்பத்தை அறிய முயன்றாள்.​

“ம்ம்ம். நல்லவரா தான் தெரியுது! ஆனா… ஏதோ குழப்பமாவே இருக்கு முகி”​

“உனக்கு பிடிக்கலைன்னா சட்டுனு சொல்லுற ஆளு நீ! நீயே இப்படி குழம்புறன்னா… உனக்கு இஷ்டம் போலயே சாரு?”​

அதை கேட்டவளுக்கு இனம்புரியாத உணர்வு தோன்ற, “நான் இன்னும் முடிவு பண்ணல முகி”​

“ஏதாவது நமக்கு பிடிக்கலைன்னா கூட சட்டுனு சொல்லிடுவோம் சாரு. ஆனா, பிடிக்கிறதை சொல்லுறதுக்கு தான் ரொம்பவே யோசிப்போம்”​

“பரவாலையே! தமிழ் நல்லா பேசுறியே!” என்று சாரு பேச்சினை மாற்றினாள்.​

“ஏய்! ஞான் ஸ்கூல், காலேஜ் எல்லாமே இங்கே தான் படிச்சேன். அப்பப்ப தான் மலையாளம் வரும்” என்ற ஸ்வர்ணமுகி உணவை முடித்துவிட்டு, “நல்ல முடிவா சொல்லு…” என தோழியின் தோளில் தட்டிவிட்டு அவளின் வேலையை பார்க்கச்சென்றாள்.​

__________​

அந்த மாலை நேர தென்றல் தேவாவையும் சாருவையும் மெல்ல தீண்டி சென்றுக்கொண்டிருந்தது.​

முன்தினம் சந்தித்த அதே இடத்தில் இருவரும் அமர்ந்திருந்தனர். இன்றும் அவளுக்கு தேவையானதை கேட்டு ஆர்டர் கொடுத்தவனிடம்,​

“இப்ப என்ன முடிவெடுத்திருக்கீங்க?” அவனை கூர்ந்துபார்த்து கேட்டாள்.​

“என்ன முடிவுன்னா?” என்று புருவத்தை உயர்த்தியவன், “அதே முடிவு தான்!” என அவளின் கண்ணைப்பார்த்து தீர்க்கமாக கூறினான்.​

புரியாது விழித்தவளை பார்த்தவனுக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “இங்க பாரு மதி. உன்னோட யூடியூப் பற்றி எதுவுமே தெரியாம பேசுனது தப்புதான்!” என தவறை ஒப்புக்கொண்டவனை இப்போது அதிசயித்து பார்த்தாள்.​

“உன்னோட சேனலை நேத்து தான் நான் பார்த்தேன் மதி. ரொம்ப உபயோகமானது! அதுல இருக்க ஒரு ஒரு வீடியோவுக்கும் நீ போட்டிருக்கிற உழைப்பு நல்லாவே தெரியுது!” என்றான் பாராட்டுடன்.​

உண்மைதானே! உணவு சம்பந்தப்பட்டது என்பதால் சாருமதி மிக கவனத்துடனே ஒரு ஒரு வீடியோவும் எடுத்துப்போடுவாள். ‘அதில் சொல்லப்படும் ஒவ்வொரு உணவுமுறையும் அவள் பின்பற்றி எந்த கெடுதலும் இல்லை!’ என்று தெரிந்த பின்பே மக்களிடம் கொண்டுசெல்வாள்.​

அவளின் உழைப்பிற்கான அங்கீகாரமாக தான் அவளுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்கள் கிடைத்திருக்கிறார்கள்​

இதுவரை பலபேர் அவளின் உணவுமுறையை பின்பற்றி பலனடைந்ததாக கூறியது அவளிற்கு மகிழ்ச்சியளித்ததைவிட இப்பொழுது தேவா கூறுவது சிறகில்லாமல் வானில் பறப்பதை போல் உணர்ந்தாள்.​

“அந்த சேனலில் உன்னோட தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லைன்னு பார்க்கிறப்பவே தெரிந்தது. சோ எனக்கு எந்த ப்ராப்லமும் இல்லை” என்று முடித்தவனை, ‘ஓ… நிதி ஆலோசகர் நம்ம சேனலை நல்லா அலசி பார்த்துட்டு தான் பேசுறார் போல…’ என நினைத்தவள் வேறேதும் பேசாமல் காஃபியை குடித்தாள்.​

“உனக்கு எப்படி இந்த ஏரோபிக் டான்ஸ், டயட்டீஷியன் இந்தமாதிரி துறைல இன்ட்ர்ஸ்ட் வந்தது?” என அவளைபற்றி அறிந்துக்கொள்ளும் ஆவலில் கேட்டான்.​

காஃபியை முழுவதுமாக குடித்து முடித்தவள், கைகளை நன்றாக மேசையில் ஊன்றி கதை சொல்ல தயாரானாள்.​

“சின்ன வயசுலயே அப்பா யோகா கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. விருப்பமில்லாம தான் போய்ட்டு இருந்தேன். அப்புறம் அதுவே பிடிச்சி போய்டுச்சி. அடுத்து, ஸ்கூல் முடியுறப்ப ஏரோபிக் கிளாஸ் ஜாயின் பண்ணேன். காலேஜ் முடிஞ்சதும் ஏரோபிக் இன்ஸ்ட்ரக்டரா போய்ட்டேன்” என தோளை குலுக்கிச்சொன்னவள்,​

“நான் டயட்டீஷியன்ல பிஜி படிச்சிருக்கேன். படிச்ச படிப்புக்கு உபயோகமா இருக்கணும்னு யூடியூப் சேனல் நடத்திட்டிருக்கேன்” என முடித்தாள்.​

அவளின் பேச்சை முழுதாக கேட்டவன் ‘அவள் சுயமாக இயங்க விரும்புகிறாள்!’ என புரிந்துக்கொண்டு, நேரடியாகவே “உனக்கு என்னை பிடிச்சிருக்கா மதி? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என கேட்டான்.​

அவளது லட்சியமான யூடியூப் சேனலிற்கு தடைக்கூறாமல் அவளின் வேலையை மதிப்பவன் மேல் அவளுக்கு தனி மரியாதையே முளைத்தது. ‘நிச்சயம் இவனுடன் தன் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என எண்ணியவள் சன்ன குரலில், “ஓகே!” என்றாள்.​

“எதுக்கு ஓகே?” என அவளை மேலும் சீண்டினான்.​

“உங்கள கல்யாணம் செய்துக்க ஓகே. போதுமா?” என சிரிப்புடன் கூறிவிட்டாள்.​

சொன்ன அவளுக்கும் கேட்ட அவனுக்கும் ஒரு புதுவித உணர்வு தாக்க, அந்நொடியை இருவரும் விரும்பியே கடந்தனர்.​

“ஓகே…” மீண்டும் சிரிப்புடன் தேவாவும் சொன்னான்.​

சிறிது தயங்கிய சாரு, “நீங்க இன்னும் என்னோட சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணலையே?” என விழியுயர்த்தி எதிர்பார்ப்புடன் கேட்டாள்.​

“உன்னோட மூன்றரை லட்ச சப்ஸ்க்ரைபர்களில் ஒருத்தரா இருக்க விரும்பவில்லை மதி. உனக்கே உனக்கான ஒருத்தனா இருக்கணும்னு நினைக்கிறேன்” என அவளின் கண்களை பார்த்துக்கூறினான்.​

அவனின் அந்த காந்த பார்வையின் கிடுக்குப்பிடியில் சிக்கிக்கொண்டவளின் இதயம் வேகமாக தன் இருப்பை உணர்த்த மெல்ல தன் விழியை தழைத்துக்கொண்டவளிடம் தலையசைத்து விடைபெற்றான் தேவா.​

‘இப்ப அவர் ப்ரபோஸ் பண்ணாரா? இது தான் ப்ரபோஸா? ச்ச இல்ல… சப்ஸ்க்ரைப் பண்ணாம இருக்குறதுக்கு காரணம் சொல்லிட்டு போறாரு…’ என்ற குழப்பத்திலே வண்டியோட்டி வீட்டிற்கு வந்தவளை குறுகுறுவென கோமதிப்பாட்டி பார்த்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.​

___________​

திருமணத்திற்கு சம்மதம் கூறிய தேவாவிடம் “உண்மை தானா தேவா? வந்தனாக்காக நீ சம்மதிக்கலையே?” உறுதிப்படுத்துக்கொள்ள செல்வராணி மீண்டும் கேட்டார்.​

“அம்மா! வந்தனாக்காக இல்லை. எனக்கு சாருமதியை கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம் போதுமா? எனக்கு மட்டுமில்லை சாருமதிக்கும் சம்மதம் தான்.” முகமுழுக்க மகிழ்வுடன் கூறிய மகனை பார்த்து அவரும் மகிழ்ச்சியடைந்தார்.​

“வாவ்! சூப்பர் அண்ணா. நான் இப்பவே அவர்கிட்ட இதை சொல்லுறேன்” என தமையனிடம் கூறிய வந்தனா ஃபோனை எடுக்க,​

“நீ மாப்பிள்ளை கிட்ட எதுவும் சொல்லாத டி. இதெல்லாம் நாங்க பெரியவங்க நேர்ல பேசிக்குவோம்” என்ற அன்னையின் பேச்சிற்கு உதட்டை சுழித்தவளிடம்,​

“அவங்க வீட்ல சாருமதி பேசிடுவா வந்தனா. நீ எதுவும் முன்னாடியே சொல்லாத” என்ற கண்டிப்புடன் தேவா சொன்னான்.​

“ஏன்? நான் அவர் கிட்ட சாருவை பத்தி சொன்னா என்ன?” என எகிறிக்கொண்டு வந்தவளிடம்,​

“வாயை அடக்கு வந்தனா. இப்ப அந்த பொண்ணு உனக்கு அண்ணியா வர போகிறவ. பெயர் சொல்லாம, மரியாதையோடு பேசி பழகு” என செல்வராணி முடித்ததும்,​

“அவங்கவங்க முடிவை அவங்கவங்க தான் வந்தனா சொல்லணும். அவங்க வீட்ல எப்ப சொல்லணும், எப்படி சொல்லணும்னு அவளுக்கு தான் தெரியும்” என்று தேவாவும் வந்தனாவிற்கு அறிவுரைகளை வாரி வழங்கினான்.​

இருவரும் பேசியதில் ‘என்னை விட நாளைக்கு வர போற மருமகளுக்கு இவ்வளவு முக்கியத்துவமா?’ என்ற உரிமையுணர்வு வந்தனாவிற்கு தானாகவே எழுந்தது.​

எந்த உறவாக இருந்தாலும் உரிமையுணர்வு என்பது ஒரு எல்லைவரைக்கும் மட்டுமே! வரைமுறையை கடந்தால் அந்த உரிமையுணர்வே உறவுகளிடம் பல சிக்கல்களை உருவாக்கிவிடும்.​

“சரிப்பா தேவா. நான் சம்பந்தி அம்மாவுக்கு போன் பண்ணி நாளைக்கு நாங்க வரோம்னு சொல்லிடுறேன்” என்றவரிடம் தலையசைத்து அறைக்குள் சென்றான்.​

சரியாக அந்நேரம் தேவாவிற்கு அழைத்த சாருமதி, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.​

“லைன்ல இருக்கியா மதி?”​

“ஹான் இருக்கேன். உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றாள் தயக்கத்துடன்.​

“சொல்லு”​

“அது… அரவிந்த அண்ணா கல்யாணமும் நம்ம கல்யாணமும் தனி தனியே நடக்கட்டும். ப்ளீஸ்…”​

‘என்ன? நாம சொல்ல வேண்டியதை இவ சொல்லிட்டு இருக்கா?’ என்று யோசித்தவன், “இவ்வளவு தான. ஓகே மதி” என்றதும் அங்கே சாருவிற்கு சற்று நிம்மதி தந்தது.​

“வேற எதுவும் சொல்லணுமா?” என்று கேட்டுவிட்டு, “நாங்க நாளைக்கு உங்க வீட்டுக்கு தான் வரப்போகிறோம்” என்றான் கூடுதல் தகவலாக.​

“இல்லை. வேறெதுவும் இல்லை”​

“இதை நீ ஈவ்னிங் நாம பார்த்தப்பவே சொல்லிருக்கலாமே?” யோசனையுடன் தேவா கேட்க,​

‘உன் விழிவீச்சினால் தான், சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்ல முடியவில்லை! என்றா சொல்ல முடியும்?’ என்று நினைத்தவள், “அப்ப மறந்துட்டேன். அதான் இப்ப சொல்ல ஃபோன் பண்ணேன். பை!” என்று படபடக்கும் இதயத்தோடு அலைபேசியை வைத்துவிட்டாள்.​

___________​

“மணி ரெண்டாகிடுச்சி ம்மா. இந்நேரம் வீடியோ அப்லோட் ஆகிருக்கும். நம்ம சேனல் வைங்க” என கத்தினாள் சாரு.​

“வைக்கிறேன் டி. அதுக்கு எதுக்கு இப்படி கத்துற?” என பதிலுக்கு தானும் கத்திய ஜெயந்தி அவர்களின் யூடியூப் சேனலை டிவியில் வைத்து தற்போது பதிவேற்றப்பட்ட காணொளியை ஓடவிட்டார்.​

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!​

நீங்க பார்த்துக்கிட்டு இருக்குறது, ‘ஃபிட் வித் சாரு!’​

நம்ம சேனலை பார்க்கிற எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்!​

இன்னைக்கு நம்ம வீடியோல என்ன பார்க்க போறோம்னா....?​

ஈஸியா... ஃபலோ பண்ண கூடிய சிம்பிளானா டயட் தான்!​

வாங்க நாம வீடியோக்குள்ள போகலாம்” என தொடங்கிய ஏழு நிமிட வீடியோ முடியும் பொழுது,​

“இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைச்சிங்கனா? லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.​

அண்ட் இதுவரைக்கும் நம்ம சேனலை யாராவது சப்ஸ்க்ரைப் பண்ணாம இருந்திங்கன்னா? மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணிட்டு பெல் பட்டனையும் கிளிக் பண்ணுங்க. அப்பதான் அடுத்து நான் போடுற வீடியோவோட நொடிபிகேஷன் உங்களுக்கு வரும்.​

இதேபோல் மற்றொரு வீடியோவில் உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது,​

சாரு!” என அந்த காணொளி முடிந்தது.​

யூடியூப் என்னும் பரந்து விரிந்த வானில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் யூடியூபர் என்ற நட்சத்திரங்களுள் ஒருத்தி தான் சாரு என்கிற சாருமதி!​

ஆனால் அந்த வீடியோவில் அவள் குறிப்பிட்ட விஷயங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு வீட்டின் கூடத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தட்டு நிறைய பிரியாணியும், எண்ணையில் பொறித்த சிக்கன், மீன் மற்றும் முட்டைகள் என கணக்கில்லாமல் உண்டுக் கொண்டிருந்தாள்.​

“பாட்டி! வடைக்கு ஊற வெச்சிட்டிங்க தான? அப்ப தான் ஈவ்னிங் வடை சுடுறப்ப சரியா இருக்கும். வடைக்கு தொட்டுக்க சட்னி போதும்” என தன் பாட்டியை கேட்டுக்கொண்டே உணவினை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தாள்.​

“இப்படி சாப்பிடாத சாரு. ஒரு மாசம் முழுக்க டயட் இருக்குற. அடுத்து ஒரு வாரத்துக்கு இப்படி எல்லாத்தையும் சாப்பிடுற? உடம்புக்கு எதாவது ஆகிட போகுது” என கடிந்துக்கொண்டார் ஜெயந்தி.​

“இதெல்லாம் சாப்பிட்டுட்டு ஒரு கிளாஸ் நிறைய சீரகம் போட்ட சுடுத்தண்ணி குடிச்சா சீக்கிரமா ஜீரணம் ஆகிடும் அம்மா” என்றவளை கடுப்புடன் பார்த்த அவளின் தந்தை,​

“கல்யாணத்தை பற்றி என்ன முடிவெடுத்திருக்க சாரு? ரெண்டு நாள்ல சொல்லுறேன்னு சொன்ன?” என கேட்டார்.​

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் உண்பதையே தீவிரமாக செய்துக்கொண்டிருந்த தன் பேத்தியை பார்த்த கோமதி ‘அவள் ஒரு முடிவெடுத்துவிட்டாள்!’ என்று உணர்ந்துக்கொண்டார்.​

அமைதியாக உண்டுமுடித்து கையை கழுவிவிட்டு அனைத்தையும் எடுத்துவைத்தாள் சாருமதி. பின் அவளின் பாட்டி கோமதியின் அருகில் அமர்ந்தவள், “எனக்கு ஓகே அப்பா” என்றாள் கணேசனை பார்த்து.​

“ஏன் சாரு? கேட்டாதான் உன்னோட முடிவை சொல்லுவியா?” என கணேசன் சத்தம்போட,​

“நீங்கக்கூட முடிவெடுத்துட்டு தானப்பா என்கிட்ட சொன்னீங்க…” என சாருவும் நொடித்துக்கொண்டாள்.​

“என் செல்லம்! எனக்கு அப்பவே தெரியும் சாரு உனக்கு தேவாவை பிடிக்கும்னு” என சாருவின் தாடையை பிடித்துகொஞ்சிய கோமதி,​

“டேய் கணேசா… அந்த காலண்டர் எடுத்துட்டு வா. நல்ல நாளா பார்த்து சின்னதா பூவைக்கிறதை ஏற்பாடு பண்ணிடலாம். அப்படியே அரவிந்த்-வந்தனா கல்யாணத்தோட இவங்களுடையதையும் முடிச்சிடலாம்” என பத்து வயது குறைந்தது போல் புத்துணர்வாய் கட்டளையிட்டார் கோமதி.​

‘அதை கேட்ட சாருவிற்கு உவப்பாக இல்லை! எங்கே? எதாவது கூறினால் அபாசகுணமா பேசாதன்னு சொல்லுவாங்களோ?’ என்றெண்ணி வாயை மூடிக்கொண்டாள்.​

“அம்மா! கொஞ்சம் பேசாம இருங்க” என கோமதியை அடக்கிய கணேசன்,​

“நீ உண்மையை தான் சொல்லுறியா சாரு? நேத்து கூட சம்பந்தி அம்மா ஃபோன் பண்ணி இன்னைக்கு வீட்டுக்கு வரதா தான் சொன்னாங்க. வேறெதுவும் சொல்லையே?” என மகளை சிந்தனையோடு பார்த்தார்.​

“நேர்ல வந்து பேசுவாங்க போலங்க” என்று ஜெயந்தி எடுத்து சொன்னார்.​

“ஆமாம்மா. நேர்ல பேசுனாதான சரியா இருக்கும். சாரும்மா நீ உள்ள போய் ரெடியாகு போ. டேய் அரவிந்த் நீ போய் அவங்களுக்கு ஸ்வீட் காரம்லாம் வாங்கிட்டு வா. ஜெயா அந்த வடைக்கு ஊற வெச்சிருக்கிற உளுந்து பத்தும்மான்னு பாரு” என அனைவருக்கும் வேலையை கொடுத்தார்.​

__________​

இங்கே தேவாவின் வீட்டிலும் அந்த விடியோவை பார்த்த செல்வராணி, “என்னடா? இந்த பொண்ணு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும், அதுவும் எப்ப சப்பிடணும்னு இவ்வளவு லிஸ்ட் போடுறா?” என்ற அன்னையின் கேள்வியில்,​

“அதுதான் ம்மா அவளோட வேலையே! டயட் உணவுமுறை பற்றி எடுத்து சொல்லுறது” என்றான் அன்னைக்கு விளக்கத்துடன்.​

“என்னவோ தேவா. நாளைக்கு நம்ம வீட்ல வந்து என்னலாம் பண்ண போறாளோ…” என்று செல்வராணி சிரிப்புடன் சொல்ல அதில் தேவாவும் இணைந்துக்கொண்டான்.​

இவர்களின் பேச்சை கண்டுகொள்ளாத வந்தனா அவளின் முகத்திற்கு அழகுசேர்த்துக் கொண்டிருந்தாள்.​

சரியாக மாலை ஆறு மணிக்குமேல் சாருமதியின் வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர். அனைவருக்கும் சாருமதி தான் காஃபியை கொடுத்தாள்.​

தேவாவிற்கு கொடுக்கும் பொழுது இருவரின் கண்களும் ஒருமுறை தீண்டி சென்றது. ஒருநொடி அவளை ரசித்து பார்த்த தேவா காஃபியை எடுத்துக்கொண்டான்.​

செல்வராணியே தேவாவின் விருப்பத்தை அனைவரிடமும் கூறினார்.​

“ரொம்ப சந்தோசம் செல்வராணி. அப்ப அரவிந்த்-வந்தனா கல்யாணத்தோடயே தேவா-சாரு கல்யாணமும் வெச்சிடலாமா?” என்று கோமதி செல்வராணியையும் தேவாவையும் பார்த்துக்கேட்டார்.​

காட்டான் சுடிதாரில் பதுமையாக கோமதியின் அருகில் அமர்ந்திருந்த சாரு உடனே தேவாவை தான் பார்த்தாள். ஆனால், தேவா பேத்தியை பார்க்காமல் பாட்டியினிடம்,​

“இல்லை பாட்டி. எங்க வீட்ல ஆண்பிள்ளைன்னு நான் மட்டும் தான் இருக்கேன். கல்யாண வேலையை நான் தான் முன்ன நின்னு பார்க்கணும். சொந்தக்காரங்க உதவுவாங்க தான். அதுக்காக அவங்களையே நம்ப முடியாதே! அதுனால ரெண்டு கல்யாணமும் தனி தனியா நடக்கட்டுமே…” என தன்மையாக கூறினான்.​

“நங்களாம் இருக்கோமே தம்பி. நாங்க பார்க்கமாட்டோமா என்ன?” என தேவாவின் பொறுப்பை மெச்சிக்கொண்டே குமரேசன் கேட்க,​

“இருந்தாலும் மாமா. என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கான வேலையை நான் முன்ன நின்னு பார்க்கணும்னு நினைக்கிறேன்”​

“சரிப்பா அவங்க கல்யாணம் முடிந்ததும் உங்களுக்கு நிச்சயம் வெச்சிடலாம். அதுக்கு அடுத்த மாசம் உங்க கல்யாணம் வெச்சிக்கலாமா?” என்று கோமதி சமாதானமாக கேட்க,​

தன் அன்னையை பார்த்து அவரின் ஒப்புதலுடன், “சரி பாட்டி” என்றான் தேவா.​

பின் அனைவரும் கூடி பேசி, அடுத்த வாரத்தில் அரவிந்த்-வந்தனா திருமணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் நகைகள் எடுக்க செல்வதாக திட்டமிட்டு விடைபெற்றனர்.​

மறுநாள் தேவாவிற்கு அழைத்த சாரு, “நீங்க ஏன்? என்கிட்ட முதலிலேயே சொல்லல?” என எடுத்ததும் கேட்டாள்.​

“என்ன சொல்லல?” என்றான் தேவா புரியாமல்,​

“நான் தான… கல்யாணத்தை தனியா வெக்கலாம்னு சொல்ல சொன்ன. ஆனா நீங்க அதை வேற விதமா சொன்னீங்கல அதான் என்கிட்ட அதை சொல்லவே இல்லையே?”​

“இங்க பாரு மதி. உங்க வீட்ல வந்து பேசிக்கலாம்னு தான் உன்கிட்ட எதுவும் சொல்லல. அண்ட் எனக்கும் அண்ணனா பொறுப்பு இருக்கே வந்தனா கல்யாணத்துல. நானும் மாப்பிள்ளையா உட்கார்ந்துட்டா அந்த வேலைய யாரு பார்ப்பா?” அவள் புரிந்துக்கொள்ள வேண்டும் என பொறுமையாகவே கூறினான்.​

“ஓ…”​

“எப்படியோ நீ நினைச்சது தான நடக்க போகுது. அப்புறம் என்ன?”​

“ஹ்ம்ம்…” என்று அமைதியானவள், “நீங்க இன்னும் என்னோட சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணல” என்றாள் குறையுடன்.​

“அது தோணுறப்ப பண்ணுறேன். எனக்கு இப்ப வேலை இருக்கு” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.​


தினமும் தேவாவிடம் பேசினாலும் சாருவின் மனதில் குடைந்துக்கொண்டிருந்த கேள்வியை அவளால் அவனிடம் கேட்க முடியவில்லை.​

அந்த கேட்கப்படாத கேள்விதான், பின்னொருநாள் இருவருக்கும் இடையில் பூதாகரமாக தோன்றபோகிறது என்பதை பேதை அறியவில்லை!​



 
Last edited:

Mathykarthy

Well-known member
ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டாங்க... 🤩

ரொம்ப தான் யூடியூபரா இருக்கா... 😂
அவன் எவ்ளோ பீலிங்கா பன்ச் எல்லாம் சொன்னான்...😍
அதை விட்டுட்டு... சப்ஸ்க்ரைப் பண்ணலைன்னு கேட்குறா 😏

வந்தனா இப்போவே நாத்தனாரா மாறிட்டா.. 🥶
 

santhinagaraj

Active member
தேவா எவ்வளவு பொறுப்பா பொறுமையா பேசிக்கிட்டு இருக்கான் ஆனாலும் இந்த சாறு ரொம்ப தான் youtube ரா இருக்கா இன்னுமும் சப்ஸ்க்ரைப் பண்ணலன்னு ரொம்ப தான் நொடிச்சுக்கறா 😂😂
 

NNK-29

Moderator
ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டாங்க... 🤩

ரொம்ப தான் யூடியூபரா இருக்கா... 😂
அவன் எவ்ளோ பீலிங்கா பன்ச் எல்லாம் சொன்னான்...😍
அதை விட்டுட்டு... சப்ஸ்க்ரைப் பண்ணலைன்னு கேட்குறா 😏

வந்தனா இப்போவே நாத்தனாரா மாறிட்டா.. 🥶
நன்றி dear❤️❤️❤️
 

NNK-29

Moderator
தேவா எவ்வளவு பொறுப்பா பொறுமையா பேசிக்கிட்டு இருக்கான் ஆனாலும் இந்த சாறு ரொம்ப தான் youtube ரா இருக்கா இன்னுமும் சப்ஸ்க்ரைப் பண்ணலன்னு ரொம்ப தான் நொடிச்சுக்கறா 😂😂
நன்றி dear❤️❤️❤️
 
Top